கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted December 10, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted December 10, 2018 திம்புப் பேச்சுவார்த்தை - (3) என்.கே. அஷோக்பரன் / 2018 டிசெம்பர் 10 திங்கட்கிழமை, பி.ப. 12:15 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 173) இரண்டாம் நாள் அமர்வுகள் எச்.டபிள்யூ. ஜெயவர்தன, இலங்கை அரசாங்கத்தின் தீர்வுத் திட்ட முன்மொழிவைச் சமர்ப்பித்ததுடன், பேச்சுவார்த்தையின் முதல்நாள் அமர்வுகள் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்திருந்தன. முதல்நாள் அமர்வுகள் பற்றி, இலங்கையின் ஊடகங்கள், குறிப்பாக அரச ஊடகங்கள் கருத்து வௌியிடும்போது, தமிழர் தரப்பைப் ‘பயங்கரவாதிகள்’ என்று விழித்திருந்தன. இரண்டாம் நாள் அமர்வுகள் ஆரம்பித்தபோது, குறித்த விடயம் தொடர்பில் தமிழர் தரப்பு, கடும் கண்டனத்தை வௌியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, குறித்த விடயத்தைத் திருத்திக்கொள்ள, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்திருந்தது. முதல் நாளில், எச்.டபிள்யூ. ஜெயவர்தன சமர்ப்பித்திருந்த அரசாங்கத்தின் தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில், பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளில் கலந்துரையாடப்பட்டது. 1984இல் நடந்த சர்வகட்சி மாநாட்டின் முடிவின் போது, ஜே.ஆர் ஜெயவர்தன சமர்ப்பித்திருந்த கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையாக மாநிலங்கள் வரையிலான ஐந்தடுக்குப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டத்தைத்தான், திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டிருந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையிலான குழு, இனப்பிரச்சினைக்கான தீர்வாக, திம்புவில் வைத்து மீண்டும் சமர்ப்பித்திருந்தது. 1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஒரு மாதகாலத்துக்குப் பின்னர், மீளக்கூடிய சர்வகட்சி மாநாட்டில், ஜே.ஆர் அரசாங்கத்தால் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையாக மாநிலங்களின் சபையை அமைப்பது வரை, கீழிருந்து மேலாக ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த முன்மொழிந்திருந்தது. படிநிலையின் அடித்தளத்தில், ஏறத்தாழ 4,500 கிராமோதய மண்டலங்கள் ஸ்தாபிக்கவும், அதற்கு அடுத்த தளத்தில், ஏறத்தாழ 250 அளவிலான உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகளாகப் பிரதேச சபைகளை ஸ்தாபிக்கவும், மூன்றாவது மட்டத்தில் ஏலவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் ஆனால், அதைவிடவும் சற்றே அதிகாரங்கள் கூடிய 25 மாவட்ட சபைகளை ஸ்தாபிக்கவும் முன்மொழியப்பட்டிருந்தது. இதற்கு மேலாக, நான்காவது மட்டத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணையவிரும்பும் பட்சத்தில், அவை இணைந்து மாகாண சபையொன்றை ஸ்தாபிக்கக் கூடியதாக முன்மொழியப்பட்டிருந்தது. அத்தகைய இணைவுக்கு, அம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினரின் ஒப்புதல் தேவை என்றும் முன்மொழியப்பட்டிருந்தது. இதைவிடவும், மாகாண சபையின் முதலமைச்சராக, மாகாண சபையின் ஆதரவைப் பெற்ற நபரை நியமிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு உரியதாக இருக்குமென்றும், மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களை, மாகாண சபை உறுப்பினர்களை மாகாண அல்லது மாவட்ட அமைச்சராக ஜனாதிபதி நியமிக்க முடியும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த மாவட்ட, மாகாண சபைகளுக்கான சட்டவாக்க அதிகாரம், நாடாளுமன்றத்துக்குக் கீழ்ப்பட்டதாகவும், இவை நிறைவேற்றும் சட்டங்களை, நாடாளுமன்றம் அங்கிகரிக்கும் பட்சத்தில்தான் அவை வலுவுடையதாக அமையும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது. மேலும் இந்த மாவட்ட, மாகாண சபைகளின் நிர்வாக அதிகாரத்தில் பல, மத்திய அமைச்சர்களால் தமது அதிகாரத்திலிருந்து ஒப்படைக்கப்படும் அதிகாரங்களாகவே முன்மொழியப்பட்டிருந்தன. மாவட்ட, மாகாண சபைகளுக்கென்று குறித்து ஒக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மிகக் குறைவானதாகவும், பெருமளவில் அர்த்தமற்ற அதிகாரங்களாகவுமே காணப்பட்டன என்பது, இங்கு கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகிறது. சுருங்கக்கூறின், இந்த மாவட்ட, மாகாண சபைகள் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பாக அல்லாமல், பெருப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்பாகக் கருதப்பட வேண்டியனவாகவே அமைந்திருந்தன. ஆகவே, நிர்வாக அதிகாரமும் மத்திய அமைச்சர்களின் அதிகாரத்துக்கு முற்றிலும் கீழ்ப்பட்டதாகவே அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையின் ஐந்தாவது தளத்தில், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையாக 75 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களின் சபை அமைக்கப்படுமென்றும், இதில் 25 மாவட்ட சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் இதைவிட, ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் தலா இருவர் என்ற அடிப்படையில், மொத்தம் 18 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் இவர்கள் அம்மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்ட சபைகளில் போதியளவு பிரதிநிதித்துவம் பெறாத சமூகங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் இதைவிட ஏழு பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது. குறித்த மாநிலங்களின் சபை, ஆலோசனை வழங்கும் சபையாகவே அமையும் என்பதுடன், சட்டவாக்கத்தைத் தாமதிக்கச் செய்யும் அதிகாரங்களைக் கொண்டிருக்காது என்றும் முன்மொழியப்பட்டிருந்தது. இது தமிழர் தரப்பை மேலும் விசனத்துக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியிருந்தது. அரசியல் தீர்வொன்று எட்டப்படுமானால் அதற்காக தனிநாடு என்ற தமது கோரிக்கையிலிருந்து இறங்கி வருதவதற்குத் தயாராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கூட, சர்வகட்சி மாநாட்டில் குறித்த முன்மொழிவுகளை, “அவை, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது” என்று கூறி நிராகரித்திருந்தது. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் தனிநாடு என்ற நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரத்தயாராக இல்லாத தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், இதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு, துளிகூட இருக்கவில்லை. அமிர்தலிங்கம் மிகத் தௌிவாக, தாம் இந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தைக் குழுவிடம் எடுத்துரைத்திருந்தார். “இந்த முன்மொழிவுகளைச் சர்வகட்சி மாநாட்டிலேயே, தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள். நீங்கள் முன்னேற்றகரமான முன்மொழிவுகளுடன் வாருங்கள்; அப்படிப் பொருத்தமான தீர்வு முன்மொழிவுடன் வரும்போது, தமிழ் மக்கள் உரிய பதிலைத் தருவார்கள்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, தமிழர் தரப்பை, மாற்று முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், இதை ஏற்கத் தமிழர் தரப்புத் தயாராக இருக்கவில்லை. அவர்களது நிலைப்பாடு, வேறானதாக அமைந்திருந்தது. அவர்கள் அதைத் திட்டவட்டமாக அரசாங்கத் தரப்புக்கு எடுத்துரைத்தார்கள். அதாவது, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குத் தமிழ் மக்கள் வழங்கிய மக்களாணை ஊடாக, தனிநாடொன்றை ஸ்தாபிப்பதற்கான மக்களாணையைத் தமிழ் மக்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆகவே, தனிநாடு என்பதுதான் தம்முடைய நிலைப்பாடு. அதற்கு மாறாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் சுயமரியாதையோடு வாழத்தக்க மாற்றுத் தீர்வொன்றை இலங்கை அரசாங்கம் வழங்குமானால், அதைக் கருத்தில்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக, அமிர்தலிங்கம் மிகத் தௌிவாக எடுத்துரைத்திருந்தார். இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள், இந்த இழுபறி நிலையிலேயே கழிந்திருந்தன. அரசாங்கத் தரப்பின் மீதும், திம்புப் பேச்சுவார்த்தைகள் சென்றுகொண்டிருக்கும் விதம் குறித்தும் தமிழர் தரப்பு, கடும் அதிருப்தியைக் கொண்டிருந்தது. அதை அவர்கள், இந்தியாவிடம் பதிவு செய்திருந்தார்கள். திம்புப் பேச்சுவார்த்தையின் போது, அரசாங்கம் மேம்பட்டதொரு முன்மொழிவைச் சமர்ப்பிப்பார்கள் என்று தமிழர் தரப்பு, குறிப்பாக அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்பார்த்திருந்தது. ஆனால், ஏற்கெனவே தாம் நிராகரித்த சர்வகட்சி மாநாட்டில், ஜே.ஆர் சமர்ப்பித்த அதே தீர்வையே, இலங்கை அரசாங்கம் மீண்டும் சமர்ப்பித்திருந்தமை, திம்புப் பேச்சுவார்த்தைகளைப் பயனற்றதாக மாற்றியிருந்ததாக அமிர்தலிங்கம் விவரித்தார். இந்தியாவுக்கும் இது தர்ம சங்கடமான நிலையொன்றைத் தோற்றுவித்திருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைகளைத் தமிழர் தரப்பு முறித்துக்கொள்வதை இந்தியா விரும்பவில்லை, ஆகவே, பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபடுமாறு, தமிழர் தரப்பை இந்தியா கேட்டுக்கொண்டது. மூன்றாம் நாள் அமர்வுகள் மூன்றாம் நாள் அமர்வுகள், புதிய அதிர்ச்சியொன்றோடு ஆரம்பமாகி இருந்தது. ஏற்கெனவே, குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில், எதிர்மறையான பிரசார அணுகுமுறையையே, இலங்கை அரசாங்கம் கையாண்டுகொண்டிருந்த நிலையில், குறித்த நாளில், இலங்கையில் வௌியான அரசுக்குச் சொந்தமான தேசிய நாளிதழ் ஒன்றில், ஜனாதிபதி ஜே.ஆரைக் கொல்வதற்கு, ஈழ மாணவர் புரட்சிகர இயக்கத்தை (ஈரோஸ்) சேர்ந்த இருவர், அவ்வமைப்பின் உயர்மட்டத் தலைவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்ததாகவும், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் வைத்து அவர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வௌியாகியிருந்தது. மூன்றாம் நாள் அமர்வுகள் ஆரம்பமாகிய போதே, ஈரோஸ் அமைப்பும், அதனோடு இணைந்து தமிழர் தரப்பின் ஏனைய அமைப்புகளும் குறித்த செய்தியை மறுத்ததுடன், குறித்த செய்தியானது ஜே.ஆரால் பரப்பப்படும் வதந்தி என்றும், தபாலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் இருவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, ஜனாதிபதி ஜே.ஆரைப் படுகொலை செய்ய வந்தவர்கள் என்ற கட்டுக்கதை அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்று, ஈரோஸ் அமைப்பு குறிப்பிட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு தரப்பின் பிழைகளை மறுதரப்பு சுட்டிக்காட்டுவதிலும், குற்றங்குறைகள் கூறுவதிலுமே கழிந்திருந்தது. குறிப்பாக, படுகொலை முயற்சிகள் தொடர்பாகவும், யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாகவும் இருதரப்பும் மறுதரப்பை, மாறி மாறிக் குற்றஞ்சுமத்தியது. பேச்சுவார்த்தைகள் என்பது, சமரசத்துக்கான களம்; ஆனால், அப்போதைய சூழலில் திம்புப் பேச்சுவார்த்தைகள் என்பது, சமரசத்துக்கான களமாக அல்லாது, குற்றங்குறை சாட்டுவதற்கான களமாகவே மாறியிருந்தன என்பது, மிக வருத்தத்துக்குரியது. மாறி மாறிக் குற்றஞ்சாட்டிய வாதப்பிரதிவாதங்கள் ஒருவாறு ஓயந்த பிறகு, “நாம் சமர்ப்பித்திருந்த தீர்வுத் திட்ட முன்மொழிவைச் செயலாற்றுவதற்கான அடிப்படையாகக் கொண்டு, குறித்த அதிகாரப் பகிர்வுக் கூறுகளுக்கான அதிகாரங்கள் பற்றி, நாம் கலந்துரையாடலாம்” என்று எச்.டபிள்யூ.ஜெயவர்தன முன்மொழிந்திருந்தார். அதாவது, ஜே.ஆர் முன்மொழிந்திருந்த ஐந்தடுக்குப் பொறிமுறையை மாற்றாது, அதற்குள்ளான கட்டமைப்புகளுக்கான அதிகாரங்கள் பற்றிப் பேசவே எச்.டபிள்யூ.ஜெயவர்தன தயாராக இருந்தார். தமிழர் தரப்பின் நிலைப்பாடு வேறாக இருந்தது. அவர்கள் குறித்த ஐந்தடுக்குப் பொறிமுறை சீராக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்கள். மத்திய அரசாங்கத்துக்கு முற்றிலும் கீழ்ப்பட்ட, மத்தியிலிருந்து ஒப்படைக்கப்படும் அதிகாரங்களை மட்டும் கொண்ட மாவட்ட, மாகாண சபைகள், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்காது என்ற நிலைப்பாட்டில், அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஏனென்றால், ஒப்படைக்கப்படும் அதிகாரங்கள் எப்போது வேண்டுமானாலும் மீளப்பெற்றுக்கொள்ளப்பட முடியும். மத்திய அரசாங்கத்துக்கு முற்றிலும் கீழாக வரும்போது, அவை உள்ளூராட்சி மன்றங்களையொத்த அமைப்புகளாகவே அமையுமே அன்றி, அதிகாரப் பகிர்வுக் கூறாக அமையாது. இது, தமிழ் மக்கள் கோரி நிற்கும் தனிநாட்டுக்கு ஏற்புடையதொரு மாற்றுத் தீர்வல்ல என்பது, தமிழர் தரப்பால் திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டு இருந்தது. தற்போது, திம்புப் பேச்சுவார்த்தைகளில் தேக்க நிலையொன்று உருவாகியிருந்தது. பேச்சுவார்த்தைகள், உடையும் தருவாயில், இதற்கு மேல் முன்னேறிச் செல்ல முடியாத நிலையை எட்டியிருந்தன. உடனடியாக இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது. இதன் காரணமாக, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி உடனடியாகத் திம்பு விரைந்தார். (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திம்புப்-பேச்சுவார்த்தை-3/91-226377 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted December 18, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted December 18, 2018 திம்பு பேச்சுவார்த்தை (4) என்.கே. அஷோக்பரன் / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, பி.ப. 10:10 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 174) திம்பு பேச்சுவார்த்தைகள் பற்றி முழுவிவரங்களையும் அறிந்துகொள்வதில் உள்ள முதல் சிக்கலானது, அது தொடர்பிலான தகவல்கள் பேச்சுவார்த்தை நடந்தபொழுதிலிருந்தே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தமைதான். உத்தியோகபூர்வ பதிவுகள் இல்லாத நிலையில் அதில் பங்குபற்றியவர்களது தனிப்பட்ட கருத்துகள், பங்குபற்றிய தரப்புகள் வௌியிட்ட சில ஆவணங்கள், அவற்றினடிப்படையில் பலரும் எழுதியுள்ள, பதிவுசெய்துள்ள விடயங்கள் என்பவற்றைக் கொண்டே திம்பு பேச்சுவார்த்தைகளைப் பற்றி நாம் ஆராயக்கூடியதாக உள்ளது. இந்தியாவின் மத்தியஸ்தம் எச்.டபிள்யு.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தை குழு சமர்ப்பித்திருந்த இலங்கை அரசாங்கத்தின் “ஐந்தடுக்குப் பொறிமுறை” தீர்வுத் திட்ட முன்மொழிவை தமிழர் தரப்பு நிராகரித்திருந்த நிலையில், பேச்சுவார்த்தை அமர்வுகளின் மூன்றாம் நாளில் இறுதியில் திம்பு பேச்சுவார்த்தை ஒரு தேக்க நிலையை எட்டியிருந்தது. ஆரம்பம் முதலே ஜே.ஆர். அரசாங்கத்தோடு பேசுவதில் பயனில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த தமிழர் தரப்பானது, ஜே.ஆர். அரசாங்கம் கடந்த வருடம் சர்வகட்சி மாநாட்டில் தமிழர் தரப்பினால் நிராகரிக்கப்பட்ட “ஐந்தடுக்குப் பொறிமுறை” தீர்வு முன்மொழிவு மீண்டும் திம்புவில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதற்கு மேல் திம்புவில் பேச்சுவார்த்தையைத் தொடரும் எண்ணத்தையும் இழந்திருந்தது. திம்பு பேச்சுவார்த்தை சாதகமாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இலங்கை அரசாங்கத் தரப்பை விட, தமிழர் தரப்பை விட, இந்தியாவுக்கே அதிகமாக இருந்தது. பேச்சுவார்த்தையின் மூன்றாம் நாள் இறுதியில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட இந்தியா, இந்தத் தேக்கநிலையைத் தாண்டி, பேச்சுவார்த்தைகளைத் தொடரச் செய்ய உடனடி நடவடிக்கையை முன்னெடுத்தது. இதற்காக இந்திய வௌியுறவுச் செயலர் றொமேஷ் பண்டாரி உடனடியாக திம்புவுக்கு வந்தார். திம்புவுக்கு வந்த பண்டாரி இருதரப்போடும் தனித்தனியான சந்திப்புகளை நடத்திப் பேசினார். எச்.டபிள்யு.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசாங்கத் தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவின் நிலைப்பாடானது, தாம் தம்முடைய இறுதித் தீர்வு முன்மொழிவை முன்வைத்துவிட்டோம், அதை தமிழர் தரப்பு ஏற்காது விட்டால், அவர்கள் தமது மாற்று முன்மொழிவை முன்வைக்கலாம். அவ்வாறு மாற்று முன்மொழிவொன்று முன்வைக்கப்படும் போது அதை நாம் பரிசீலிக்கலாம் என்பதாக அமைந்திருந்தது. மறுபுறத்தில் தமிழர் தரப்போ, தனிநாடு என்பதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து நாம் இறங்கிவர வேண்டுமானால் அதற்கு பொருத்தமானதொரு தீர்வு முன்மொழிவை அரசாங்கம்தான் முன்வைக்க வேண்டும். அவர்களது “ஐந்தடுக்கு பொறிமுறை” தீர்வு முன்மொழிவு தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை, ஆகவே பொருத்தமான மாற்றுத் தீர்வை அவர்கள்தான் முன்மொழிய வேண்டும் என்று கூறியது. இந்தத் தேக்க நிலைக்குத் தீர்வாக றொமேஷ் பண்டாரி இருதரப்புக்கும் ஒரு யோசனையைச் சொன்னார். தமிழர் தரப்பானது, அரசாங்கத்தரப்பு ஏலவே சமர்ப்பித்திருந்த தீர்வு முன்மொழிவை நிராகரிப்பதை ஓர் அறிக்கையாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்ட றொமேஷ் பண்டாரி, அரசாங்கத் தரப்பிடம், தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் இயங்கத்தக்கதொரு பொருத்தமான இன்னொரு தீர்வு முன்மொழிவை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். “ஐந்தடுக்கு பொறிமுறை” தீர்வை நிராகரித்த தமிழர் தரப்பு பேச்சுவார்த்தையின் நான்காம் நாள் அமர்வுகளின் போது தமிழர் தரப்பின் சார்பாக தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைந்து அரசாங்கம் சமர்ப்பித்திருந்த “ஐந்தடுக்குப் பொறிமுறை” தீர்வுத்திட்டத்தை நிராகரிக்கும் தமது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. திம்பு பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் இந்த இணைந்த அறிக்கையானது தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) சார்ள்ஸினால் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பதாக, அரசாங்கத்தின் “ஐந்தடுக்குப் பொறிமுறை” தீர்வு முன்மொழிவை நிராகரித்து கருத்துரைத்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், குறித்த தீர்வு யோசனையானது தமிழ் மக்களைக் கேவலப்படுத்துவதாக அமைகிறது என்று கடுந்தொனியில் பேசியிருந்தார். தாம் ஏற்கெனவே சர்வகட்சி மாநாட்டில் நிராகரித்திருந்த தீர்வை மீள்சுழற்சி செய்து திம்புவில் ஜே.ஆர். அரசாங்கம் சமர்ப்பித்திருந்ததில் அமிர்தலிங்கத்துக்கு நிறையவே கோபமும், விசனமும் ஏற்பட்டிருந்தது. குறித்த தீர்வு முன்மொழிவை நிராகரித்து அமைந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் இந்த இணைந்த பின்வருமாறு அமைந்திருந்தது: நாம் ஆயுதவழியை நாட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகும். ஏனெனில் மற்றைய வழிமுறைகளால் எல்லாம் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களை இணங்கச் செய்ய முடியவில்லை. மேலும் தேசிய அடக்குமுறை, அதிகரித்துவரும் அரச பயங்கரவாதம், மற்றும் எமது மக்களுக்கு எதிரான இன அழிப்பு ஆகிய நிலைகளுக்குக் கீழ் அடக்குமுறைக்குள்ளான தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழ அரசே தர்க்கரீதியில் ஏற்புடைய ஒரே கோரிக்கையாக அமைகிறது. அந்த தர்க்கரீதியிலான தீர்வை அடைவதற்கான வழிமுறைதான் எமது ஆயுதப் போராட்டம். எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கமானது மீண்டும் நல்லறிவு மற்றும் காரணகாரிய அறிவை மீளப் பெற்றுள்ளது என்பதற்கான யாதேனும் சமிக்ஞையை வழங்குமானால், எமது மக்களும் அமைதிவழித் தீர்வு முன்மொழிவொன்றை பரிசீலிக்க அதீத ஆர்வத்துடன் இருக்கிறார்கள், ஏனென்றால் தமிழ் மக்கள் அமைதியை விரும்பும் மக்களாவர். இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவாக இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தை குழுவினால் எம்முன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் முன்மொழிவுகளானவை இலங்கை அரசாங்கம் நல்லறிவையோ, காரண காரிய அறிவையோ மீளப்பெற்றுள்ளது என்பதற்கான எந்தவொரு சமிக்ஞையையும் தரவில்லை. முதலாவதாக அரசாங்கத் தரப்பு பேச்சுவார்த்தை குழுவின் தலைவரானவர் எம்முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த முன்மொழிவுகளானவை சர்வ கட்சி மாநாட்டின் இறுதியில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டின் அடிப்படையில் அமைந்தது என தௌிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். நாம் பின்வரும் காரணங்களுக்காக சர்வ கட்சி மாநாட்டை அங்கிகரிக்கப் போவதில்லை என்பதை மிகத் தௌிவாக எடுத்துரைக்க விரும்புகிறோம்: முதலாவதாக, சர்வக்கட்சி மாநாடு முடிவடைந்த உடனேயே தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி குறிப்பிட்டது போல, சர்வ கட்சி மாநாட்டு முன்மொழிவுகள் தமிழ் மக்களுக்கு ஏற்புடைய பிராந்திய தன்னாட்சி என்பதற்கு அருகில் கூட வரவில்லை. இரண்டாவதாக, விடுதலை இயக்கமான நாம், நவ-பாஸிச இலங்கை அரசானது சர்வ கட்சி மாநாட்டை தமிழ் தேசிய பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை முன்னெடுப்பதற்கான புகைத்திரையாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டினை முன்வைக்கிறோம். மேலும், எம்மன் இந்த மேசையில் முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவுகளானவை இலங்கை அரசாங்க ஈழ தேசியப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டுள்ளமைக்கான எந்த அறிகுறிகளையும், எந்தவிதத்திலும் சுட்டிநிற்கவில்லை. இதற்கான காரணங்களானவை: ஒன்று, குறித்த முன்மொழிவுக ளானவை தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை அங்கிகரிக்கவில்லை. மாறாக அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கூறாக மாவட்டத்தை அது எடுத்துக் கொள்கிறது. இது முற்றாக ஏற்புடையதல்ல. இரண்டு, குறித்த முன்மொழிவுகளானவை தீர்வுத் திட்டத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பை தவிர்ப்பதன் மூலம் தமிழ் மக்களினதோ, அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கவில்லை. அரசாங்கமானது வெறும் நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு மட்டுமான அரசியலமைப்பு திருத்தத்தினூடாக குறித்த முன்மொழிவுகளை அமுல்படுத்த எத்தனிப்பதன் மூலம் மக்களின் விருப்பை கருத்திற்கொள்ளாது விடுகிறது. இந்தச் செயற்பாட்டின் மூலம் இலங்கை அரசாங்கமானது தன்னுடைய அரசியலமைப்பு சர்வகாதிகாரத்த ன்மையை இலங்கை மக்கள் மீது திணிக்க எத்தனிக்கிறது. நாம் இதற்கு மேல் செல்ல விரும்பவில்லை. நாம் அழுத்திச் சொல்ல விரும்புவதெல்லாம், இந்தப் பிரச்சினைக்கான பகுத்தறிவு வாய்ந்த நியாயமான தீர்வொன்றை சமர்ப்பிக்கும் பொறுப்பு முற்றாக இலங்கை அரசிடமே இருக்கிறது, ஏனெனில் எம்மைப் பொறுத்தவரையில் இன்று ஏற்பட்டுள்ள நிலைக்கு அதுவே காரணம். சமாதானத்தின் பெயரால் இலங்கை அரசாங்கம் சார்பில் கலந்துகொண்டுள்ள பேச்சுவார்த்தை குழுவிடம் நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் நாம் கருத்திற்கொள்வதற்கு ஏற்புடைய தீர்வு முன்மொழிவோடு வாருங்கள் என்பதுதான். தோல்வியில் முடிந்த முதல்சுற்று தமிழர் தரப்பின் நிலைப்பாடு, குறிப்பாக தனிநாடு பற்றிய தம்முடைய நிலைப்பாட்டை மீள வலியுறுத்திக் கொண்டிருந்தமை, இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு விசனத்தை ஏற்படுத்தவதாக அமைந்தது என திம்பு பேச்சுவார்த்தைகளைப் பற்றிக் கருத்துரைக்கும் பலரும் குறிப்பிடுகிறார்கள். திம்பு பேச்சுவார்த்தையை தமிழர்களின் அபிலாஷைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் மீளுணர்த்தும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வது என்ற நிலைப்பாட்டை தமிழர் தரப்பு, குறிப்பாக தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் திம்பு பேச்சுவார்த்தைக்குச் செல்ல இந்தியா வற்புறுத்தி இணங்கச் செய்தபோதே எடுத்திருந்தன. அவற்றுக்கு ஜே.ஆர். அரசாங்கம் ஏற்புடைய தீர்வொன்றைத் தரும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லாத நிலையில், தமது நிலைப்பாட்டை வலியுறுத்தும் களமாக இதனைப் பயன்படுத்தியது தந்திரோபாய ரீதியில் புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் தமிழர் தரப்பின் இந்தப் போக்கு இந்தியாவுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியது. ஒரு கட்டத்தில் தமது அடிப்படை நிலைப்பாடுகளை மீளுரைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழு உறுப்பினர்களின் மேல் சினமடைந்த றொமேஷ் பண்டாரி, அவர்களை நோக்கி இந்தியர்களை முட்டாள்கள் என்று நினைத்தீர்களா? இதுபோன்ற பயனற்ற கலந்துரையாடல்களின் நேரத்தை வீணடிப்பதற்கு என்று கேட்டதாக திம்பு பேச்சுவார்த்தை பற்றி பதிவுசெய்த கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். தற்போது நடைபெற்று வந்த திம்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது என்பதை றொமேஷ் பண்டாரியும், இந்தியாவும் உணர்ந்திருந்தனர். ஆனால் இதனை முறியவிடாது தொடரச் செய்யவே பண்டாரி தமிழர் தரப்பை அரசாங்கத்தின் முன்மொழிவுகளை நிராகரித்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அரசாங்கத் தரப்பை தமிழர் தரப்பின் கோரிக்கையைப் பரிசீலித்து பொருத்தமானதொரு மாற்றுத் தீர்வை முன்வைக்கவும் யோசனை கூறியிருந்தார். இதன் மூலம் பேச்சுவார்த்தைகள் தோல்வி என்ற முட்டுக்கட்டையை எட்டாது, இரண்டாம் சுற்று ஒன்றில் மீண்டும் இருதரப்பினையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர முடியக்கூடிய வாய்ப்பை இந்தியா நம்பிக்கையுடன் பார்த்தது. ஆகவே அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அல்ல என்று ரீதியிலான விம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் அன்று இலங்கைக்காக இந்திய தூதுவர் ஜே.என்.டிக்ஷிட் தன்னுடைய நூலொன்றில் இது பற்றிக் குறிப்பிடும் போது இந்திய வௌியுறவு அமைச்சானது திம்பு பேச்சுவார்த்தையின் முதல் சுற்று தோல்வியில் முடிவடைந்ததாகவும், இது பற்றி ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, இலங்கை அரசாங்கத்தை சங்கடப்படுத்தாமல் கருத்துத்தெரிவிக்க தான் அறிவுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். 1985 ஜூலை 13ம் திகதி முதல் சுற்று திம்பு பேச்சுவார்த்தையின் இறுதி நாளாக அமைந்தது. இந்த நாளில் தமிழர் தரப்பு வரலாற்று முக்கியத்துவம் மிக்கேதார் அறிக்கையை வௌியிட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகள்தான் என்ன என்ற ஆண்டாண்டு காலமாக கேள்வி எழுப்பி வருபவர்களுக்கு இன்றும் கூட இரத்தினச்சுருக்கமான பதிலை வழங்கத்தக்கதொரு பெறுமதியான ஆவணமாக அவ்வறிக்கை அமைகிறது. (தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திம்பு-பேச்சுவார்த்தை-4/91-226754 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted December 24, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted December 24, 2018 திம்புக் கோட்பாடுகள் என்.கே. அஷோக்பரன் / 2018 டிசெம்பர் 24 திங்கட்கிழமை, மு.ப. 01:28 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 175) முதலாம் கட்டப் பேச்சுவார்த்தையின் இறுதி நாள் 1985 ஜூலை எட்டாம் திகதி, உத்தியோகபூர்வ வரவேற்புடனும் ஒன்பதாம் திகதி, முதலாவது அமர்வுகளுடனும் ஆரம்பமாகி, இடம்பெற்று வந்த திம்புப் பேச்சுவார்த்தையின் முதலாவது கட்டம், ஜூலை 13ஆம் திகதி, அதன் நிறைவு நாளை எட்டியிருந்தது. யதார்த்தமாகப் பார்த்தால், திம்புப் பேச்சுவார்த்தை தோல்வி கண்டிருந்தது என்பதுதான் உண்மை. இந்தப் பேச்சுவார்த்தையின் முதலாவதும் குறிப்பிடத்தக்கதுமான வெற்றி, ஆயுதம் தாங்கிய இயக்கங்களுடன் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்த இலங்கை அரசாங்கத்தை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுடன் பேசச் சம்மதிக்க வைத்ததாகும். அத்துடன், ஜே.ஆர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்து, ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேசச் செய்தமையாகும். மற்றப்படி, நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், எந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமோ, நன்மையோ விளையவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களில் முக்கியமானவற்றையும் உள்ளடக்கிய தமிழ்த் தரப்பு, ஜே.ஆர் அரசாங்கத்தின், ‘ஐந்தடுக்குப் பொறிமுறை’ தீர்வு முன்மொழிவு, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என்று நிராகரித்திருந்த நிலையில், ஜூலை 13ஆம் திகதி இறுதிநாள் அமர்வுகள் ஆரம்பமாகின. நிறைவேறாத வாக்குறுதி திம்புப் பேச்சுவார்த்தையின் முதல் நாள் அமர்வுகளின் போது, அரசாங்கத்தின் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்கள், தமிழ் மக்களை அடக்குமுறைக்குள்ளாக்கும் தமிழர் பகுதிகளில் ஊரடங்கு, வீதித்தடைகள், சோதனைகள், கைது செய்து தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் ஆகிய விடயங்களைத் தமிழர் தரப்புச் சுட்டிக்காட்டிய போது, அரசாங்கத் தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான எச்.டபிள்யூ. ஜெயவர்தன, “குறித்த விடயங்கள் பற்றி, ஜனாதிபதி ஜே.ஆரோடு பேசியபின், வடக்கு, கிழக்கு பகுதிகளில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு, நாளை விலக்கிக்கொள்ளப்படும்; தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,197 பேரில், 643 பேர் அடுத்த இரு தினங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள்” என்று அறிவித்திருந்தார். இது நடந்தது, 1985 ஜூலை ஒன்பதாம் திகதி. ஆயினும், ஜூலை 13ஆம் திகதி பேச்சுவார்த்தையின் இறுதி நாளிலும் கூட, பேச்சுவார்த்தையின் முதல்நாளில் எச்.டபிள்யூ. ஜெயவர்தன அளித்திருந்த மேற்கூறிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இதுகுறித்து விசனமும், அதிருப்தியும் அடைந்திருந்த தமிழர் தரப்பு, பேச்சுவார்த்தையின் இறுதி நாளில், குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைச் சுட்டிக்காட்டியதுடன், போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்கள் தொடர்வதையும் சுட்டிக்காட்டினர். இதற்குப் பதிலாக, அரசாங்கத் தரப்பானது, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்களைப் பட்டியலிட்டனர். கிட்டத்தட்டத் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களால் போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்பட்ட 73 சம்பவங்களை, அவர்கள் பட்டியல் இட்டிருந்தனர். இது, இறுதி நாளிலும் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக, நீயா? நானா? என்ற ரீதியிலான வாக்குவாதத்துக்கே வழிவகுத்தது. போர் நிறுத்த உடன்படிக்கை என்பதை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஐயக்கண்ணோட்டத்துடனேயே பார்த்தார்கள். பேச்சுவார்த்தை என்ற போர்வையில், போர் நிறுத்த ஒப்பந்தந்தைச் செய்துவிட்டு, தமது இராணுவக் கட்டமைப்பை விஸ்தரிக்கும் சூழ்ச்சியை, ஜே.ஆர் அரசாங்கம் மேற்கொள்கிறது என்பதே அவர்களது குற்றச்சாட்டாகும். தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தையை விரும்பாததற்கும் இது ஒரு முக்கிய காரணமாகும். தன்னுடைய இராணுவ பலத்தை அதிகரிக்கும் வரை, காலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாய மார்க்கமாகவே ஜே.ஆர் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைக் கையாண்டதேயன்றி, இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலானதொரு தீர்வைக் காணும் எண்ணம் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை என்பது, பல ஆய்வாளர்களது கருத்தாக உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. திம்புப் பிரகடனம் எது எவ்வாறாயினும், முதலாம் கட்டத் திம்புப் பேச்சுவார்த்தையின் இறுதிநாளில், தமிழர் தரப்புச் சமர்ப்பித்த பிரகடனம்தான், தோல்வியடைந்த திம்புப் பேச்சுவார்த்தை பற்றி, இன்றுவரை அதிகம் பேசப்படுவதற்கும், மேற்கோள் காட்டப்படுவதற்குமான முக்கிய காரணமாகும். தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன என்ற கேள்விக்கு, திம்புப் பேச்சுவார்த்தையின் இறுதி நாளில், தமிழர் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட திம்புப் பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி, இன்று ஒரு சொற்றொடரில் பதிலளிக்கத்தக்கதாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை, மிக இரத்தினச் சுருக்கமாக அந்த அறிக்கை வௌிப்படுத்தியிருந்தது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கை, பின்வரும் வகையில் அமைந்திருந்தது. திம்புக் கோட்பாடுகள் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான எந்தவோர் அர்த்தமுள்ள தீர்வும், பின்வரும் நான்கு உயர் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதுதான், எமது ஆய்ந்தறிந்த பார்வையாகும்: 1. இலங்கைத் தமிழர், ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல். 2. இலங்கைத் தமிழருக்கென்ற அடையாளம் காணப்பட்ட தாயகமொன்றின் இருப்பை அங்கிகரித்தல். 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல். 4. இலங்கையில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர்களதும் குடியுரிமையை, அடிப்படை உரிமைகளை அங்கிகரித்தல். மேற்குறித்த கோட்பாடுகளை உறுதிப்படுத்த, வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வகையான அரசாங்க முறைமைகளை வடிவமைத்துள்ளன. எமது மக்களின் இந்த அடிப்படை உரிமைகள், மீறப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, சுதந்திர தமிழ் அரசொன்றை நாம் கோரியும் அதற்காகப் போராடியும் கொண்டிருக்கின்றோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தைக் குழுவால் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகள், முற்றாகவே ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல. ஆகவே, 12 ஜூலை 1985 அன்று, நாம் வௌியிட்ட அறிக்கையில், நாம் குறிப்பிட்டுள்ளது போல, குறித்த முன்மொழிவுகளை நாம் நிராகரித்துள்ளோம். எவ்வாறாயினும், அமைதியை நாம் மிகவும் விரும்புவதன் காரணத்தால், மேற்சொன்ன கோட்பாடுகளின்படி அமையும் எந்தவொரு தீர்வு முன்மொழிவுகளையும் இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்குமானால், அதனைக் கருத்திற்கொள்ளத் தயாராக இருக்கிறோம். திம்புக் கோட்பாடுகளும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் மேற்கூறியவாறு அமைந்த, திம்புப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு விடயங்களும்தான், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை, இரத்தினச் சுருக்கமாகக் கூறும் திம்புக் கோட்பாடுகளாகும். இன்றுவரை, இலங்கைத் தமிழர் அரசியலில், தமிழ் மக்களின் அரசியல் மந்திரமாக ஒலித்துக்கொண்டிருக்கும் ‘தேசியம்’, ‘தாயகம்’, ‘சுயநிர்யணம்’ என்பவற்றைத் தமிழர் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இலங்கை அரசாங்கத்துக்கும் உலகத்துக்கும் தெட்டத்தௌிவாகத் திம்புப் பிரகடனத்தின் மூலம் எடுத்துரைத்திருந்தன. இது, மிகச் சுருக்கமாக அமைந்ததொரு பிரகடனமெனினும், அது கூறும் விடயங்கள், மிக ஆழமானதும், முக்கியத்துவம் வாய்ந்தவையுமாகும். இந்தக் கோட்பாடுகளைத் தீர ஆராய்வதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்ற கேள்விக்கான பதிலை, விவரமாக நாம் உணர்ந்துகொள்ளலாம். தமிழர்கள் பிரிவினைவாதிகள், தமிழர்கள் தனிநாடு கேட்கிறார்கள், தமிழர்கள் பயங்கரவாதவழியை நாடியவர்கள், தமிழர்கள் நாட்டைத் துண்டாடும் சமஷ்டியைக் கோருகிறார்கள் போன்ற, பேரினவாதப் பிரசாரங்கள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டும், மேற்கொள்ளப்பட்டுக் கொண்டும் இருக்கும் சூழலில், தமிழ் மக்களின் உண்மையான அரசியல் கோரிக்கை என்ன என்பதன் தௌிவு மிக அவசியமானது. இதைப் பற்றிய ஆழமான புரிதல், ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த தமிழருக்கும் கட்டாயம் இருக்கவேண்டும். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ற பேச்சு எழும்போதே, தனிநாடு, சமஷ்டி, 13+ போன்றவையே பொது எண்ணத்தில் தோன்றக் கூடிய விடயங்களாகும். ஆனால், இவற்றைத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்று கூறிவிட முடியாது. இவை தமிழ் மக்களுக்கு, அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உள்ள பல்வேறு வழிமுறைகளே அன்றி, இவைதாம் தமிழர்களின் அபிலாஷைகள் அல்ல. இந்த இடத்தில்தான் திம்புக் கோட்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டும் என்றோ, தமிழர்களது அபிலாஷை சமஷ்டிதான் என்றோ, யாராவது சொன்னால், அதனை மறுக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. ஏனென்றால், தமிழர்களது அபிலாஷை என்பது, தீர்வின் வடிவத்தைப் பற்றியதல்ல; அது தீர்வின் அடிப்படைகளைப் பற்றியது. அந்த அடிப்படைகளைத் தான் திம்புக் கோட்பாடுகள் இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சமஷ்டியோ, தனிநாடோ, வேறுவகையான அதிகாரப்பகிர்வோ என்பது பிரச்சினையல்ல; அதிகாரப்பகிர்வின் வடிவம் எவ்வாறு இருந்தாலும், அது தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் ஆகியவற்றைத் திருப்திசெய்வதாக அமையவேண்டும். இவற்றைத் திருப்தி செய்யும் தீர்வு, ஒற்றையாட்சிக்குள்ளானதாக இருந்தால் கூட, அதனைத் தமிழ் மக்கள் மறுக்கப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், இந்த அடிப்படை அபிலாஷைகளைத் திருப்தி செய்யாத அதிகாரப் பகிர்வுத் தீர்வை, அது பெயரளவில் சமஷ்டியாக அமைந்தாலும் கூட, அது தமிழ் மக்களை ஒருபோதும் திருப்தி செய்யாது. ஆகவே, முதலாம் கட்டத் திம்புப் பேச்சுவார்த்தையின் இறுதி நாளன்று, தமிழர் தரப்பு, தமக்கான தீர்வுக்கான வடிவத்தை முன்வைக்காது, தீர்வுக்கான அடிப்படைகளை முன்வைத்தமையானது மிகச்சிறந்ததொரு முன்னெடுப்பாகும். தீர்வுக்கான அடிப்படையாகத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்வைத்துவிட்டு, இவற்றைத் திருப்தி செய்யும் எந்தத் தீர்வையும் நாம் பரிசீலிக்கத் தயார் என்று, தீர்வுக்கான வடிவம் தொடர்பிலான முன்மொழிவுகளைச் செய்யும் செயற்பாட்டை, இலங்கை அரசாங்கத்தின் கையில் ஒப்படைத்தமையும் ஒரு வகையில் பார்த்தால், தந்திரோபாய ரீதியான காய்நகர்த்தலாகும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்பது, பல்வேறு தமிழ் அரசியல் தலைவர்களாலும் இன்று வரை அழுத்தமாகச் சொல்லப்பட்டு வரும் விடயமாகும். முன்பு, இதுபற்றிப் பலகாலம் கருத்துரைத்த அரசமைப்பியல் வல்லுநரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன, “இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக, அரசமைப்பொன்று வடிவமைக்கப்படும் போது, அதில் திம்புக் கோட்பாடுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த நிலைப்பாடு, இன்றும் தொடர்கிறதா என்பது கேள்விக்குறியே. மறுபுறத்தில் சில கருத்துரையாளர்கள், திம்புக் கோட்பாடுகள் என்பது, ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்ளான தீர்வுக்கு ஏதுவானதல்ல என்ற கருத்தையும் முன்வைப்பதை அவதானிக்கலாம். இது, தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற கருத்தியல்கள் தொடர்பிலான முழுமையான, மேம்படுத்தப்பட்ட புரிதல் இல்லாமையின் விளைவாகும். இரண்டாம் உலக யுத்தம், அதனைத் தொடர்ந்த கொலனித்துவ ஒழிப்புக் காலகட்டம், பனிப்போர்க் காலகட்டம் ஆகியவற்றினூடாக மேற்குறித்த, குறிப்பாக, தேசியம், சுயநிர்ணயம் ஆகிய கருத்தியல்கள் மிகுந்தளவில் மாற்றமடைந்துள்ளன. ஆகவே, திம்புக் கோட்பாடுகளை இன்றைய சூழலில் புரிந்துகொள்வதற்கு, அதுகூறும் விடயங்களை ஆழமாக ஆய்ந்தறிதல் அவசியமாகும். அப்படிச் செய்வதனூடாகத்தான், தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும். இக்கட்டுரைத் தொடரின் அடுத்துவரும் பாகங்கள், திம்பு கோட்பாடுகள் கூறும் விடயங்களை சற்று விளக்கமாக ஆராயும். (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திம்புக்-கோட்பாடுகள்/91-227017 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted December 31, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted December 31, 2018 தேசமும் தேசியமும் என்.கே. அஷோக்பரன் / 2018 டிசெம்பர் 31 திங்கட்கிழமை, மு.ப. 09:11 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 176) இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை, இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்த திம்புக் கோட்பாடுகளின் முதலாவது கோட்பாடானது, ‘இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்’ என்பதாகும். நாடு (Country), தேசம் (Nation), அரசு (State) ஆகிய சொற்கள் அன்றாட வாழ்வில், ஒத்த பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் தத்துவவியல், அரசறிவியல், சட்ட ரீதியாக அவை, வெவ்வேறு பொருளை உணர்த்தும் தொழில்நுட்பச் சொற்களாகும். ஆகவே, அந்தவகையில் நாடு, தேசம், அரசு என்பவை, ஒத்தபொருள் கொண்ட சொற்கள் அல்ல. அண்மைக்காலங்களில் இலங்கையில் ‘ஒரு நாடு, ஒரு தேசம்’ (one country, one nation) என்ற சொற்றொடர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமையையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையையும் நாம் அதிகமாகக் காணலாம். இது இலங்கை என்பது, ஒரே நாடு மட்டுமல்ல; ஒரே தேசமும் என்ற சிந்தனைப் பரப்புரையாகும். இதைப் பற்றி நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள, தேசம், தேசியம், தேசிய -அரசு ஆகிய விடயங்களைப் பற்றி, மேலோட்டமாகவேனும் அறிந்துகொள்ளுதல் அவசியமாகும். தேசம், தேசியம் தேசம், தேசியம் என்ற கருப்பொருட்களானவை, கடந்த இரண்டு நூற்றாண்டுகளிலேயே முக்கியத்துவம் பெற்ற அரசியல் கருப்பொருட்களாகின. தேசம், தேசியம் என்பதற்கு, குறித்ததொரு வரைவிலக்கணத்தை வழங்குவதென்பது, மிகக் கடினமானதொரு காரியமாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. இதற்கு முக்கிய காரணம் புலமைத்தளத்தில், குறித்த கருத்தியல் தொடர்பில் பல்வேறுபட்ட பார்வைகளும் வரைவிலக்கணங்களும் பதிவுசெய்யப்பட்டு வருவதாகும். இவ்வாறு, பல்வகைப்பட்டமையும் வரைவிலக்கணங்களை, புரிதலின் இலகுக்காகச் சுருக்கமாக வகைப்படுத்த வேண்டுமானால், நாம், தேசியம் என்ற கருப்பொருளை, புறநிலையில் அணுகும் வரைவிலக்கணங்கள், மற்றும் தேசம், தேசியம் என்ற கருப்பொருள்களை, அகநிலையில் அணுகும் வரைவிலக்கணங்கள் என்று வகைப்படுத்த முடியும். அது என்ன புறநிலையில் அணுகும் வரைவிலக்கணம்? தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் கொம்யூனிஸ சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்” என்று வரையறுக்கிறார். அதாவது, புறநிலையில் வைத்து ஆராயக்கூடிய விடயங்களான பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அம்சங்களை, ஒரு மக்கள் சமூகமானது, ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும் என்கிறார். மறுபுறத்தில், ஏனஸ்ட் றெனன் போன்ற அறிஞர்கள், தேசம் என்ற கருத்தியலை, அகநிலையில் அணுகும் வரைவிலக்கணங்களை முன்வைக்கிறார்கள். தேசம் என்ற கருத்தியலை வரையறுக்கும் ஏனஸ்ட் றெனன், “ஒரு தேசம் என்பது, ஒருவர் செய்த தியாகம், ஒருவர் மீண்டும் செய்வதற்குத் தயாராக இருக்கும் தியாகம் என்ற உணர்வின் பாலாக, கட்டமைந்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை எண்ணத்தில் கொள்கிறது; அது நிகழ்காலத்தில் தொடர்ந்து, பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான தௌிவான வகையில் வௌிப்படுத்தப்படும் அங்கிகாரம், விருப்பு ஆகிய உறுதியான செயற்பாடுகளினூடாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது, நித்திய பொதுவாக்கெடுப்பாகும்” என்கிறார். இந்தப் புறநிலை, அகநிலை வரைவிலக்கணங்கள் பற்றி, மிக எளிமையாக எடுத்துரைப்பதானால், புறநிலை வரைவிலக்கணங்களானவை, குறித்த அம்சங்களை ஒரு மக்கள் கூட்டம் கொண்டிருக்கும் போது, அது ஒரு தனித்த தேசமாகும் என்கிறது. இங்கு அந்த மக்கள் கூட்டத்தின் மனநிலை, அதாவது அகநிலை விடயங்கள் கருத்திலெடுத்துக் கொள்ளப்படவில்லை. அதாவது அந்த மக்கள், அகநிலையில் தம்மை ஒரு தேசமாகக் கருதிக்கொள்கிறார்களா இல்லையா என்பதைப் புறநிலை அணுகுமுறை கருத்திலெடுப்பதில்லை. மாறாக, அகநிலை வரைவிலக்கணங்கள், புறநிலை விடயங்களான பொது மொழி, பொதுப் பிரதேசம் உள்ளிட்டவற்றைக் கருத்திற்கொள்ளாது, ஒரு மக்கள் கூட்டத்தின் மனநிலையையே கருத்திலெடுக்கின்றன. அதாவது, ஒரு குறித்த மக்கள் கூட்டமானது, தம்மை ஒரு தனித்த தேசமாக உணர்கிறார்களா? அந்த உணர்வை அவர்கள் தொடர்ந்தும் கொண்டிருக்கிறார்களா? என்பதை மட்டுமே அகநிலை அணுகுமுறையாளர்கள் கருத்திற்கொள்கிறார்கள். நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக, ஒரே தேசமாக வாழ்ந்தீர்களா என்பது பற்றி அகநிலை அணுகுமுறையாளர்கள் அக்கறை கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், நிகழ்காலத்தில் ஒரு மக்கள் கூட்டம், தம்மை ஒரு தனித்த தேசமாக உணர்கிறதா என்பதுதான் முக்கியம். இந்தப் புறநிலை, அகநிலை அணுகுமுறைகளில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இது பற்றித் தேசம், தேசியம் ஆகியவை பற்றி, முக்கிய ஆய்வு நூலொன்றை எழுதியவரான அந்தனி டி ஸ்மித் கருத்துரைக்கையில், “முற்றிலும் புறநிலை அம்சங்களான மொழி, மதம், பிரதேசம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, தேசத்தை வரைவிலக்கணம் செய்வதானது, எப்போதுமே சில தேசங்களை உள்ளடக்க முடியாத நிலையை உருவாக்கும். அதேவேளை, அகநிலை வரைவிலக்கணங்கள் பொதுவாக, மிகமிக அதிகளவிலானவற்றை உள்ளடக்குவதாக அமையும்” என்கிறார். அதாவது, குறித்த புறநிலை அம்சங்கள் இருந்தால்தான் அது ஒரு தேசமாகக் கருதப்பட முடியும் என்று சொல்வதானது, அந்த அம்சங்களில் சில இல்லாத, ஆனால், தம்மை அகநிலையில் மிக உறுதியாக ஒரு தனித்த தேசமாகக் கருதிக் கொள்ளும் ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகக் கருதுவதற்கு இடமளியாது போகலாம். அதேவேளை, மறுபுறத்தில் அகநிலையை மட்டும் கருத்தில் கொண்டு, புறநிலை அம்சங்களைத் தவிர்த்தால், அது தேசம் என்ற கருத்தியலை அபத்தமானளவுக்கு மாற்றிவிடக்கூடும். ஏனெனில் எந்த அடிப்படைகளுமின்றி, தம்மைத் தேசம் என்று உணர்ந்துகொள்ளும் எல்லா மக்கள் சமூகத்தையும் தேசமாகக் கருதவேண்டிய அபத்த சூழல் உருவாகும். ஆகவே இந்தப் புறநிலை, அகநிலை அணுகுமுறைகளுக்கு இடையேயான ஒரு சமநிலை அடையப்பெறவேண்டும்; அதுவே தேசம், தேசியம் ஆகிய கருப்பொருட்களுக்கான நடைமுறையில் பொருத்தமான வரைவிலக்கணத்தை வழங்குவதாக அமையும். தேசம், அரசு, தேசிய - அரசு தேசம் என்பது அடிப்படையில் ஒரு மக்கள் சமூகமாகும். அரசு என்பது ஐந்து அடிப்படைக் கூறுகள் இணைந்து உருவாக்கியதொரு கருத்தியலாகும். குறித்ததோர் ஆட்புல எல்லை, குறித்த மக்கள் தொகை, இறைமை, அரசாங்கம், சர்வதேச அங்கிகாரம் ஆகிய ஐந்து அடிப்படைக் கூறுகளைக் கொண்டமைந்ததே ஓர் அரசாகும். ஆட்புல பிரதேசம் இல்லாத ஒரு மக்கள் கூட்டம், தமக்கான அரசாங்கத்தை உருவாக்கினாலும், ஆட்புல பிரதேசமொன்று இல்லாது, ஒருபோதும் அரசை ஸ்தாபிக்க முடியாது. அதேவேளை, தற்காலத்தில் சர்வதேச அங்கிகாரம் என்பதும் மிக முக்கியமானதாக அமைகிறது. இஸ்ரேலைச் சில நாடுகள், இன்று வரை ஒரு தனித்த அரசாக அங்கிகரிக்கவில்லை; அதேபோல, பலஸ்தீனத்தையும் சில நாடுகள், இன்றுவரை தனித்த அரசாக அங்கிகரிக்கவில்லை. நிற்க. ஓரரசுக்குள் ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம். உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தை எடுத்துக்கொண்டால், ஐக்கிய இராச்சியம் என்பது, ஆங்கிலேய தேசம், வெல்ஷ் தேசம், வட அயர்லாந்து தேசம், ஸ்கொட்லாந்து தேசம் என்ற நான்கு தேசங்களைக் கொண்ட அரசாகும். இதேவேளை, ஒரு தேசமானது பல்வேறு அரசுகளிலும் இடம்பெற முடியும். கொரிய தேசமானது வடகொரியா, தென்கொரியா ஆகிய தேசங்களில் வாழ்வதும், ரஷ்ய தேசம், ரஷ்யாவைத் தாண்டி முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த பல்வேறு அரசுகளிலும் வாழ்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதைவிட ஓர் அரசு, அந்த அரசுக்கேயுரிய ஒரு தனித்த தேசத்தை மட்டுமே கொண்டிருக்கவும் முடியும். இதைத்தான், ‘ஒரு நாடு, ஒரு தேசம்’ என்ற பரப்புரைச் சொற்றொடர், உணர்த்தி நிற்கிறது. இத்தகைய அரசுகள்தான் ‘தேசிய-அரசுகள்’ என்று விளிக்கப்படுகின்றன. தேசிய-அரசின் ஆரம்பமாக பிரெஞ்சுப் புரட்சி கருதப்படுகிறது. பிரெஞ்சுப் புரட்சி, மக்களாட்சி, குடியரசு, மதச்சார்பற்ற அரசு ஆகியவற்றை ஸ்தாபித்தனூடாக, ஐரோப்பிய அரசியல் மறுமலர்ச்சிக்கு மட்டுமல்லாது, நவீன தேசிய அரசுகளின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, பிராந்திய ரீதியில் வேறுபட்டிருந்த பிரான்ஸ் மக்களை ஒன்றுதிரட்டி, ஒரு தேசமாகக் கட்டமைக்கும் செயற்பாடுகள் பிரான்ஸ் அரசால் இரும்புக் கரம் கொண்டு முன்னெடுக்கப்பட்டன. மதச்சார்பற்ற அரசாக உருவான பிரான்ஸ் அரசு விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற மகுட வாக்கியங்களைக் கொண்டு, பிரான்ஸ் அரசில் வாழும் அனைத்து மக்களும் ‘பிரெஞ்ச்’ என்ற தேச அடையாளத்தைச் சுவீகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில், முழு அரசுக்கும் ஒரே கல்விமுறை; ஒரே மொழி என்பவற்றினூடாக, ஒரே தேசமாக பிரான்ஸ் கட்டியெழுப்பப்பட்டது. பிரெஞ்ச் புரட்சியின் சமகாலத்தில்தான் ஐக்கிய அமெரிக்காவின் உருவாக்கத்தையும் காணலாம். அமெரிக்காவும் பிரெஞ்ச் புரட்சியின் தாக்கத்தின் விளைவாக, அதனூடாகப் பிறந்த அம்சங்கள் பலவற்றைத் தன்னகத்தே சுவீகரித்துக்கொண்டது. அதில் அமெரிக்கா என்ற அரசுக்குள் அமெரிக்கா என்ற ஒரே தேசத்தைக் கட்டமைத்துக் கொண்டதும் முக்கியமானது. அது என்ன ஓர் அரசுக்குள், ஒரே தேசத்தைக் கட்டியெழுப்புவது? மிக எளிமையான உதாரணமொன்றைப் பார்ப்போமானால், பிரான்ஸ் தேசத்தில் வாழ்கின்ற ஒருவரிடம், அவரது அடையாளத்தை வினவினால், அவர் தன்னைப் “பிரெஞ்ச்” என்று அடையாளப்படுத்திக் கொள்வார். அதேபோலவே அமெரிக்கரும் தன்னை “அமெரிக்கன்” என்று அடையாளப்படுத்திக்கொள்வார். ஆனால், ஐக்கிய இராச்சியத்தில் வாழ்கிற ஒருவரிடம், நீங்கள், அவரது அடையாளத்தை வினவினால், அவர் ஸ்கொட்லாந்து தேசத்தை சார்ந்தவராக இருந்தால், தன்னை “ஸ்கொட்டிஷ்” என்று அடையாளப்படுத்திக் கொள்வார்; அவர் வேல்ஸ் தேசத்தைச் சார்ந்தவராக இருந்தால், தன்னை “வெல்ஷ்” என்று அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடும். ஆகவே பிரான்ஸ், அமெரிக்காவில் அரசும் தேசமும் ஒன்றாக இருப்பதையும் ஐக்கிய இராச்சியத்தில் அதுவேறு பட்டிருப்பதையும் காணலாம். அரசும் தேசமும் ஒன்றாக அமைவதையே நாம் ‘தேசியஅரசு’ என்கிறோம். அப்படியானால் இலங்கை, எத்தகைய அரசு, அது ஒரு ‘தேசிய அரசா? என்ற கேள்வி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேசமும்-தேசியமும்/91-227300 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted January 7, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted January 7, 2019 ஒரு நாடு, ஒரு தேசம் என்.கே. அஷோக்பரன் / 2019 ஜனவரி 07 திங்கட்கிழமை, மு.ப. 12:47 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 177) ‘தேசிய அரசாங்கத்தை’ உருவாக்குதல் மீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி பயன்படுத்தும் முக்கியமான சொற்றொடர்கள், “இலங்கை என்பது ஒரு நாடு; இலங்கை என்பது ஒரு தேசம்; நாம் அனைவரும் இலங்கையர்கள்” என்பதாகும். இதைவிடவும் பரவலாக, இலங்கை என்பது காலங்காலமாக ஒரு நாடு, ஒரு தேசம், ஓர் இறைமையாவே தொடர்ந்து இருந்து வருகிறது போன்ற கருத்துகள், தொடர்ந்தும் சிலரால் முன்வைக்கப்பட்டு வருவதையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆகவே, இவற்றைச் செவிமடுக்கும் போது, இலங்கை என்பது இன்றுள்ளதைப் போலவே, தீவு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு ‘தேசிய அரசாக’வே எப்போதும் இருந்துள்ளது என்ற விம்பம், தவிர்க்க முடியாது உருவாகிவிடுகிறது. ஆனால், வரலாற்று, மானுடவியல் ஆய்வுகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக இல்லை. தெற்காசியாவின் ‘பெரியண்ணன்’ ஆக இன்று, இந்தியா இருக்கிறது. இந்தியா என்பது ஒரு நாடாகவும் இந்தியா என்பது ஒரு தேசமாகவும் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், வரலாற்று ரீதியில் பார்த்தால், இன்றைய ‘இந்தியா’ என்பதே, பிரித்தானிய கொலனித்துவத்தின் உருவாக்கம்தான். இந்திய உபகண்டம், அதாவது பாரத கண்டம் ஒரு நாடாக, அதைவிட ஒரு தேசமாக இருந்ததில்லை. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தான், அதன் பெரும்பாலான பகுதிகள், பிரித்தானிய முடியின் கீழ், அதாவது ஓர் இறைமையின் கீழ் கொண்டுவரப்பட்டன. அந்தக் காலத்திலும் அது ஒரு தேசமாக இருந்தது என்று சொல்லமுடியாது. எவ்வாறு பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, பிரான்ஸ் என்ற ‘தேசிய அரசு’ கட்டியெழுப்பப்பட்டதோ, அதுபோலவே, இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து, இந்தியா என்ற ‘தேசிய அரசு’ கட்டியெழுப்பப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல், இராணுவக் கரம் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவை ஒன்றிணைத்த வரலாறு மறக்கப்பட முடியாதது. இவ்வாறு வலிந்துருவான இந்திய ‘தேசிய அரசு’ என்ற செயற்கை உருவாக்கத்தின் விளைவாக, ஏற்பட்ட பெரும்பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான், இந்தியாவில் இன்றுவரை தொடரும் காஷ்மீர் பிரச்சினை. இது காஷ்மீரில் மட்டுமல்ல, பஞ்சாப், வடகிழக்கு இந்தியா என, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பிரச்சினைகள் உண்டு. இந்திய ஒற்றைத் தேசிய அடையாளத்துக்கு எதிரான சவால்கள் இவை. இதற்குத் தமிழகம் கூட விதிவிலக்கல்ல. இந்தியாவைப் போலவே, இன்றுள்ள இலங்கை என்ற ‘தேசிய அரசு’ம் பிரித்தானிய கொலனித்துவத்தின் உருவாக்கம். இலங்கைத் தீவில் மேற்கத்தேய கொலனியாதிக்கம் போர்த்துக்கேயருடன் ஆரம்பமானது. போர்த்துக்கேயர் வந்தபோதும் சரி, அதன்பின்னர் ஒல்லாந்தர் வந்தபோதும் சரி, அதன்பின்னர் பிரித்தானியர் வந்தபோதும் சரி, இலங்கை என்பது இன்று உள்ளதைப்போல, ஒற்றையாட்சி அரசாங்கமாகவோ, அதாவது ஓர் இறைமைக்கு முற்றிலும் உட்பட்ட அரசாகவோ, இலங்கை மக்கள் அனைவரும் ஒரு தேசமாகவோ இருக்கவில்லை என்பதுதான் வரலாற்று, மானுடவியல் ஆய்வுகள் சுட்டி நிற்கும் உண்மையாகும். பிரித்தானியர் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இலங்கையின் கரையோரத்தைக் கைப்பற்றி, பின்னர் 1815இல் ஒப்பந்தம் போட்டு, கண்டி இராச்சியத்தையும் கைப்பற்றியபோதும், 1833 வரை அவற்றை வெவ்வேறாகவே ஆட்சி செய்துவந்தனர். 1833இல் கோல்ப்றூக்-கமரன் சீர்திருத்தங்களைத் தொடர்ந்துதான் கரையோரப் பகுதிகளும் கண்டி இராச்சியமும் ஒன்றிணைக்கப்பட்டன. இந்த ஒருங்கிணைப்புக்குப் பரிந்துரைத்த கோல்ப்றூக்-கமரன் குழுவானது, ‘இலங்கையிலுள்ள பல்வேறு மக்கள் குழுக்களிடையேயும் ஒருமித்த தன்மையை ஏற்படுத்துவதற்காகவே, இந்தப் பரிந்துரை செய்யப்படுகிறது’ எனக் குறிப்பிட்டது. மக்களிடையே, இத்தகைய ஒருமித்த தன்மையை ஏற்படுத்துதல் என்பது, ‘தேசிய-அரசு’க் கட்டமைப்பில் முக்கியமானதாகும். பிரான்ஸில் ‘தேசிய அரசு’ உருவாக்கப்பட்டபோது, மக்களிடையே ஒருமித்த தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையை இங்கு அடிக்கோடிட்டு நோக்கலாம். இதைத் தொடர்ந்து, பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் போது, ஆங்கில வழிக்கல்வி, பிரித்தானிய உயர்கல்வி பெற்ற உயர் குழாமைச் சார்ந்த இலங்கையின் சுதேசியத் தலைவர்கள், மேற்கத்தேய கல்வியினதும், பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தால், பிரபலமான ‘தேசிய அரசு’ சார்ந்த அரசியல் சிந்தனைகளின் தாக்கத்தாலும், ‘தேசிய அரசு’ என்ற அமைப்பின் மேல் ஆர்வம் கொண்டார்கள். இந்தப் புள்ளியிலிருந்து, இலங்கை என்ற தீவை முற்றிலும் உள்ளடக்கிய ‘சிலோன்’ (இலங்கை) என்ற ஓர் அரசையும் ‘சிலோனீஸ்’ (இலங்கையர்) என்ற ஒரு தேச அடையாளத்தையும் கொண்ட ‘தேசிய அரசைக்’ கட்டமைக்கும் வகையிலேயே அவர்களது செயற்பாடுகள் இருந்தன. ‘சிலோனீஸ்’ தேசமும் இன, மத தேசியவாதமும் உயர் குழாமினர் இடையே, ‘தேசிய அரசு’ என்ற சித்தாந்தம் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ‘ஓர் அரசு, ஒரு தேசம்’ என்ற ‘தேசிய அரசு’ச் சித்தாந்தம் என்பது, இலங்கையின் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில், அந்நியமானதொன்றாகவே இருந்தது என்பது தான் உண்மை. இதைப்பற்றி, தன்னுடைய ‘இலங்கையின் தேசியமும், அரசியல் முன்னேற்றங்களும்’ என்ற நூலில் கருத்துரைக்கும் சேர். ஐவர் ஜென்னிங்ஸ், ‘‘சிலோனீஸ்’ என்று எவரும் இருக்கவில்லை. பறங்கியர் இருந்தார்கள்; தாழ்நாட்டு மற்றும் கண்டிச் சிங்களவர், தமிழர், இந்தியர், சோனகர், மலாயர் ஆகியோர் இருந்தார்கள். இவர்கள் எவ்வகையிலும் அரசியற்குழுக்கள் அல்ல; இவர்கள் சமூகக் குழுக்களும் அல்ல; ஏனெனில், சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான். சோனகர்களையும் மலாயர்களையும் ஒன்றிணைத்தது இஸ்லாம்தான். ஆகவே, ‘சிலோனீஸ்’ என்ற மக்கள் கூட்ட அடையாளம் என்பது, இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓர் அடையாளம்தான் என்று சொன்னால், அது மிகைப்படுத்தலல்ல’ என்று குறிப்பிடுகிறார். இலங்கையைப் பற்றி புரிந்துகொள்வதற்கு, இலங்கை மக்கள் பற்றிய இந்த அவதானம் மிக முக்கியமானது. ஆகவே, ‘இலங்கை தேசம்’ என்ற கட்டுமானம், பிரித்தானிய கொலனித்துவத்துக்குப் பின்னரான, இலங்கையின் சுதேசிய உயர்குழாம் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டதொன்றாகவே காணப்படுகிறது. மறுபுறத்தில், 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும், இன-மத தேசியவாதத்தின் எழுச்சியையும் காணக்கூடியதாக இருக்கிறது. பிரித்தானிய கொலனித்துவக்கால, இன-மத தேசியவாத எழுச்சியைப் பற்றிப் பேசும்போது, இரண்டு பெயர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது, அநகாரிக தர்மபால. மற்றையவர், ஆறுமுக நாவலர். 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், சிங்கள-பௌத்த மறுமலர்ச்சியையும் சிங்கள-பௌத்த இன-மத தேசியவாத எழுச்சித் தீயையும் பற்றவைத்தவர் அநகாரிக தர்மபால ஆவார். அநகாரிக தர்மபால முன்னெடுத்த, சிங்கள-பௌத்த மறுமலர்ச்சியை, ‘புரட்டஸ்தாந்து பௌத்த’ எழுச்சி என்று, கணநாத் ஒபேசேகர, றிச்சட் கொம்பறிச் ஆகியோர் எழுதிய, ‘இலங்கையில் பௌத்தம்’ பற்றிய மானுடவியல் ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார்கள். அநகாரிக தர்மபாலவின் இந்தச் சிங்கள-பௌத்த மறுமலர்ச்சிதான், இன்றைய சிங்கள-பௌத்த இன மத தேசியவாதத்தின் ஆரம்பப்புள்ளி எனலாம். அநகாரிக தர்மபாலவின் சமகாலத்தவராகவும் சைவத் தமிழ் மறுமலர்ச்சியின் பிதாமகராகவும் ஆறுமுகநாவலரைப் பலரும் குறிப்பிட்டாலும், அநகாரிக தர்மபாலவுக்கும் ஆறுமுகநாவலருக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறையவே உண்டு. ஆறுமுகநாவலரின் சுதேசிய மறுமலர்ச்சியானது, ‘யாழ் சைவத் தமிழ் வேளாள’ என்ற, பிரதேச மத இன சாதிய அடிப்படையிலான எழுச்சியாக அமைந்ததே அன்றி, சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் போல, அரசியல் ரீதியிலான, தமிழ்த் தேசியவாதத்துக்கு அடிப்படையாக அமையவில்லை என்று, டக்மா ஹெல்மன் இராஜநாயகம், தனது ஆய்வில் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாகவே இருக்கிறது. அநகாரிக தர்மபாலவினதும், ஆறுமுகநாவலரினதும் செயற்பாடுகள் அடிப்படையில், கிறிஸ்தவ மிஷனரி எதிர்ப்பு, சுதேசிய மத எழுச்சி என்ற அடிப்படைகளில் ஒன்றிணைந்திருந்தாலும், அநகாரிக தர்மபாலவின் புரட்டஸ்தாந்து பௌத்த எழுச்சி, சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு அடிப்படையாக இருந்ததைப் போல, ஆறுமுகநாவலரின் சுதேசிய எழுச்சி, தமிழ்த் தேசியவாதத்துக்கு அடிப்படையாக அமைந்தது என்று கூறமுடியாது. அது, பிராந்திய, சாதியச் சாயங்கொண்ட தமிழ்ச் சைவ மறுமலர்ச்சிக்கே வழிவகுத்ததன்றி, அதைத் தாண்டி, சிங்கள பௌத்த தேசியவாதத்தை உருவாக்கியதில், அநகாரிக தர்மபாலவின் செயற்பாடுகளுக்கு உள்ளது போன்ற அரசியல் முக்கியத்துவம், தமிழ்த் தேசியவாதத்தைக் கட்டியெழுப்புவதில் ஆறுமுகநாவலரின் செயற்பாடுகளுக்கு இல்லை என்பதே நிதர்சனம். கொலனித்துவக் காலத்துக்கு முன்னர், இலங்கைத் தீவானது, நவீன அரசு, தேச சித்தாந்தங்களின்படியான ஒற்றைத் தேசமாகவோ, ஒற்றை அரசாகவோ கட்டமைக்கப்பட்டிராத பல்வேறு அடிப்படைகளில், சிறு குழுக்களாக ஒன்றிணைந்திருந்த மக்கள் கூட்டத்தையே கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக, சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என்று, இன்று அடையாளப்படுத்தப்படுவோர், சாதி அடிப்படையிலான மக்கள் கூட்டங்களாகவே இணைந்திருந்தனர் என்பது சில மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். பொதுவாக, சமகாலத்தில் சிங்களம், சிங்களவர்கள், சிங்கள தேசம் போன்ற சொற்பிரயோகங்களையும் இவை அனைத்தும் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது என்ற கருத்துகளையும் அடிக்கடி, குறிப்பாகப் பேரினவாத அரசியல் மேடைகளில் கேட்கக்கூடியதாக உள்ளது. ஆனால், அநகாரிக தர்மபாலவுக்கு முன்னரான ‘சிங்கள அடையாளம்’ நவீன கால இனம், தேசம் ஆகிய சித்தாந்தங்களுள் பொருந்தக் கூடிய அடையளம் அல்ல என்பதுதான் லெஸ்லி குணவர்த்தன, ஜோன் டி றொஜேர்ஸ், ஸ்ரான்லி ஜெயராஜா தம்பையா உள்ளிட்ட மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். வரலாற்றுக் காலத்தில் சிங்களவர்கள் என்று விளிக்கப்பட்டவர்களுக்கும், இன்று சிங்கள தேசமாகக் கருதப்படுபவர்களும் ஒரு கூட்டம் அல்ல என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. அநாகரிக தர்மபாலவுக்குப் பின்னரான சிங்கள தேசம் என்பது, ‘சிங்கள பௌத்த’ தேசமாகவே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு சிங்களமும் பௌத்தமும் அவ்வாறு ஒன்றித்திருந்ததொன்றல்ல என்று வரலாற்றாய்வாளர் கே.எம். டி சில்வா சுட்டிக் காட்டுகிறார். ஆரம்பகாலங்களில், எல்லாச் சிங்களவர்களும் பௌத்தர்கள் அல்ல; அதேவேளை, பல தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள் என்பது கே.எம். டி சில்வாவின் கருத்தாகும். இலங்கையைப் பொறுத்தவரையில், பிரித்தானிய கொலனித்துவக் காலத்தில், இலங்கையை ‘சிலோனீஸ்’ என்ற ஒரு தேசத்தைக் கொண்ட ‘தேசிய அரசாக’ கட்டமைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் நிறையவே இருந்தன. பெரும்பாலான உயர் குழாம் தலைவர்களும் அதையே விரும்பி இருந்தார்கள். ஆனால், அந்த உயர் குழாம் தலைவர்களின் நிலைப்பாட்டுக்கும் நாட்டு மக்களின் யதார்த்தத்துக்கும் நிறையவே இடைவெளி இருந்தது. அந்த இடைவௌியும் மறுபுறத்தில் ஏற்பட்ட பேரினவாத இன மத தேசியவாத எழுச்சியும்தான் ‘இலங்கையர்’ என்ற ஒற்றைத் தேசிய அரசுக்குப் பதிலாக, ஒரு பெரும்பான்மை இன, மத தேசத்தையும் அந்தப் பெரும்பான்மை இன மத தேச மேலாதிக்கத்தின் விளைவாக, அதற்கு எதிரான சிறுபான்மை இன மத தேசம், தேசியத்தின் எழுச்சியையும் உருவாக்கியது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒரு-நாடு-ஒரு-தேசம்/91-227552 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted January 14, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted January 14, 2019 ‘சிங்கள - பௌத்த’ தேசம் என்.கே. அஷோக்பரன் / 2019 ஜனவரி 14 திங்கட்கிழமை, மு.ப. 01:37 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 178) ‘சிங்கள-பௌத்த’ தேசத்தின் பிறப்பு இது ‘சிங்கள-பௌத்த’ நாடு (அல்லது தேசம்) என்ற பேரினவாதக் கருத்தை, இலங்கையில் கேட்பது புதுமையானதொரு விடயமல்ல. ஆனால் அந்தக் கருத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் நியாயங்கள்தான் கேள்விக்குரியவை ஆகின்றன. இது, ‘சிங்கள-பௌத்த’ நாடு என்ற கற்பிதத்துக்கான நியாயம், புனைகதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகிறது. ஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு மேற்பட்ட, ‘சிங்கள-பௌத்த’ நாடு இது என்ற கற்பிதம், இந்தப் புனைகதை வரலாற்றிலிருந்தே பிறக்கிறது. ஆனால், இந்த இணைந்த ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்துக்கு, 2000 வருடத்துக்கு மேற்பட்ட கால வரலாறு கிடையாது என்பதுதான், கே.எம். டி சில்வா போன்ற வரலாற்றாய்வாளர்களின் கருத்தாக உள்ளது. புரட்டஸ்தாந்து பௌத்தம் இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ அடையாளம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அநகாரிக தர்மபாலவுடன் எழுந்த ‘புரட்டஸ்தாந்து - பௌத்த’ எழுச்சியோடு உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதுதான், கணநாத் ஒபேசேகர, ரிச்சட் கொம்ப்றிச், ஸ்ரான்லி ஜே தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களின் கருத்து. ஆகவே, வரலாற்றுக் காலத்தில் இருந்த மக்கள் கூட்டங்களின் அடையாளங்களுக்கும் இன்றிருக்கும் ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்துக்கும் நேரடித் தொடர்புகள் இல்லை. மேலும், அநகாரிக தர்மபாலவின் காலத்துக்கு முன்பிருந்த மக்கள் கூட்ட அடையாளங்கள், ஐரோப்பியப் பாணியிலான இனம், தேசம் ஆகிய அடையாளங்களுக்கொப்பான அடையாளங்களாக அமையவில்லை என்று, ஆய்வுக்கட்டுரையொன்றில் ஜோன் டி றொஜேர்ஸ், தௌிவாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ தேசிய அடையாளமானது, அநகாரிக தர்மபாலவின் காலத்துக்குப் பின்னர் உருவான, ஐரோப்பிய பாணியிலான ‘இன-மத தேசிய’ அடையாளமாகும். ஒருபுறத்தில், பிரித்தானிய கொலனித்துவ இலங்கையின் சுதேசிய உயர் குழாம் தலைவர்கள், பிரெஞ்சுப் புரட்சியில் பிறந்த ‘தேசிய-அரசு’ என்ற மேற்கத்தையே கட்டமைப்பையொத்த, ‘சிலோனிஸ்’ என்ற தேசத்தையும் தேசிய-அரசையும் கட்டமைக்க எத்தனித்துக்கொண்டிருந்த வேளை, மறுபுறத்தில் அநகாரிக தர்மபாலவும் அவரது வழி ஒழுகியவர்களும் ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசக் கட்டமைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வித்யாலங்கார பிரிவேன இதில், அநகாரிக தர்மபாலவைத் தொடர்ந்து, அவர் பற்றவைத்த தீப்பந்தம், வித்யாலங்கார பிரிவேனவைச் சேர்ந்த பௌத்த துறவிகளால் முன்கொண்டு செல்லப்பட்டது. வித்யாலங்கார பிரிவேனவைப் பொறுத்தவரை, அது பௌத்த சித்தாந்தங்களைப் பின்பற்றுவதைவிட, பௌத்த மதத்தைப் பாதுகாப்பதிலும் பரப்புரை செய்வதிலும் அக்கறைகொண்டதாக இருந்தது என, இலங்கையில் பௌத்தம் பற்றிய தனது ஆய்வு நூலொன்றில், எச்.எல்.செனவிரட்ன குறிப்பிடுகிறார். அநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து-பௌத்தத்தை’ அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்களுள் முக்கியமானவர் வித்யாலங்கார பிரிவேனவைச் சேர்ந்த பௌத்த பிக்குவான வல்பொல ராஹூல தேரர். 19ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால ஆரம்பித்த வைத்த ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசியத்தை, 20ஆம் நூற்றாண்டில் வளர்த்தெடுத்தவர்களுள் வல்பொல ராஹூல மிக முக்கியமானவராவார். அவரோடு, சிவில் சமூகத்தைச் சேர்ந்த எல்.எச்.மெத்தானந்த, ஜி.பி.மலலசேகர ஆகிய இலங்கை பௌத்த கொங்கிரஸைச் சார்ந்தவர்களின் செயற்பாடுகளும் “சிங்கள-பௌத்த” “இன-மத” தேசத்தைக் கட்டியெழுப்பியதில் மிகவும் முக்கியமானவை. அநகாரிக தர்மபால முதல் வள்பொல ராஹூல, எல்.எச்.மெத்தானந்த, ஜி.பி.மலலசேகர என, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி ஆகிய காலகட்டங்களில் ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பொதுமக்களிடையே விதைக்கப்படத் தொடங்கியிருந்தாலும், அதற்கான அரசியல் முக்கியத்துவம் பெரிதும் கிடைக்கவில்லை. சாதிவாரியாகவே கட்டமைக்கப்பட்டிருந்த இலங்கைச் சமூகங்கள் இதற்கு, அன்றைய மக்கள் முழுமையாக இந்த ஐரோப்பிய பாணியிலான ‘இன-மத’ தேசிய அடையாளத்துக்கு உட்பட்டவர்களாக இருக்கவில்லை என்பதும், இந்த ‘இன-மத’ தேசிய அடையாளங்களின் அடிப்படையில், சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருக்கவில்லை என்பதும், மாறாக இலங்கைச் சமூகங்களானவை, பெருமளவில் சாதிவாரியாகவே கட்டமைக்கப்பட்டிருந்தன என்பதும் மிக முக்கியமான காரணங்களாகும். இதனால்தான், இலங்கை மக்கள் பற்றிய தனது அவதானத்தைப் பதிவு செய்த, சேர் ஐவர் ஜென்னிங்ஸ், ‘சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான்’ என்று, தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும், அன்றைய அரசியல் தலைமைகள் பலரும், மதத்தை அரசியலிலிருந்து விலத்தி வைக்கும் திண்ணத்திலிருந்தமையும் ‘இன-மத’ தேசியம் உடனடியாகத் தலையெடுக்காமைக்கு, இன்னொரு குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கலாம். அரசையும் மதத்தையும் வேறுபடுத்தும் புரட்சியில், உலகம் இரத்த வௌ்ளத்தில் ஆழ்ந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியின் முக்கிய அடைவாக, பொதுவாக நாம் ஜனநாயகத்தைப் பார்க்கிறோம். ஆனால், பிரெஞ்சுப் புரட்சியின் மிக முக்கியமான அடைவுகளில் ஒன்று, அரசையும் மதத்தையும் வேறுபடுத்தியமையாகும். வரலாற்றில் இருண்ட கண்டமாக அறியப்பட்ட ஐரோப்பாவின் எழுச்சியானது, ஐரோப்பிய அறிவொளிக்காலத்துடன் ஆரம்பமாகிறது. ஐரோப்பிய அறிவொளிக்காலத்தின் முக்கிய அடைவுகளில் ஒன்றுதான், பிரெஞ்சுப் புரட்சியும் அதன் வாயிலாக, மதத்தை அரசு என்ற கட்டமைப்பிலிருந்து பிரித்ததுமாகும். கொலனித்துவ இலங்கையில், ஐரோப்பியக் கல்வி பெற்றிருந்த உயர்குழாம் தலைவர்களிடையே, இந்த ஐரோப்பியத் தாக்கத்தின் விளைவாக, மதச்சார்பற்ற சிவில் கட்டமைப்பிலான ‘தேசிய-அரசை’ ஸ்தாபிக்கும் எண்ணமே, முக்கியத்துவம் வாய்ந்திருக்கலாம். இதற்கு உதாரணமாக, இலங்கையின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்ற சேர் ஜோன் கொத்தலாவல சொன்னதாக, பிரட்மன் வீரக்கோன், தனது நூலொன்றில் பதிவுசெய்யும் விடயத்தைக் கருதலாம். பௌத்த துறவிகள் அரசியலில், குறிப்பாக வீதிக்கிறங்கி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதைச் சினத்துடன் கண்டித்த சேர் ஜோன் கொத்தலாவல, “பௌத்த ஒழுக்கங்களை மீறி, எந்தத் துறவியாவது அரசியலில் ஈடுபட்டால், அவர்களது தலையில் தார் அடிப்பேன்” என்று கூறியிருந்ததாக பிரட்மன் வீரக்கோன் பதிவுசெய்கிறார். மதத்தை அரசியலிலிருந்து தள்ளிவைத்த அன்றைய தலைவர்கள் இது அன்றைய தலைவர்களின் பெரும்பாலானவர்கள், மதத்தை அரசியலிலிருந்து தள்ளிவைக்கவே விரும்பியருந்ததை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், மதமும் அரசியலும் கலக்கும் போது, அதில் பிறக்கக்கூடிய ஆபத்தை அவர்கள் உணர்ந்திருக்கலாம். மறுபுறத்தில், முக்கியத்துவம் பெற்றிருந்த இடதுசாரித் தலைவர்களும் மதச்சார்பற்றவர்களாகவே இருந்தார்கள். 1920களில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றுத் திரும்பியிருந்த பண்டாரநாயக்க கூட, சமஷ்டி அடிப்படையிலான ‘தேசிய-அரசை’ ஸ்தாபிக்கும் முன்மொழிவுகளை முன்வைத்திருந்தார். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கொலனித்துவ இலங்கையின் சுதேசிய உயர்குழாம், அரசியலில் மதத்தின் பங்கு, குறிப்பாக, ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசியவாதத்தின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி முதல், அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பௌத்த துறவிகள் இருந்தாலும், அவர்களால் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தைப் பெறமுடியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், பொது மக்களிடையே அவர்களது செல்வாக்கு மெதுவாக அதிகரித்து வந்தது. தேசங்கள் என்பது, கட்டமைக்கப்படுவதுதான். ஒற்றைத் தேசமாக பிரான்ஸ் தேசம் கட்டியெழுப்பப்படக் கூடியதாக இருந்ததால், நிச்சயமாக அதுபோலவே, ‘இன-மத’ தேசங்களும் கட்டியெழுப்பப்பட முடியும். குறிப்பாக, அதற்கான அரசியல் தேவை ஏற்படும் போது, அது இன்னும் வீரியமாகக் கட்டியெழுப்பப்படும். 1928இல் பிரித்தானியாவில் சகலருக்குமான வாக்குரிமை (universal franchise) அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை, மக்கள் தொகையில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே அனுபவித்து வந்த வரப்பிரசாதமாக இருந்த வாக்குரிமை, 1928இல் அனைத்து பிரித்தானியர்களுக்கும் வழங்கப்பட்டது. இதைத் தொடந்து, இலங்கையில் 1931இல் டொனமூர் அரசமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, சகலருக்குமான வாக்குரிமை முதன்முறையாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சகலருக்குமான வாக்குரிமை அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பில், இடதுசாரித் தலைவர்கள் தவிர்ந்த இலங்கையின் உயர்குழாம் தலைவர்கள் பலரும், தமது அதிருப்தியை, டொனமூர் குழுவிடம் பதிவு செய்திருந்தார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. அனைவருக்குமான வாக்குரிமை, பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வெறும் மூன்று ஆண்டுகளிலேயே, இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டமையானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமாகும். சகலருக்குமான வாக்குரிமை என்பது இலங்கையின் ஜனநாயக வளர்ச்சிப்பாதையின் முக்கிய மைல்கல் என்பதுடன், இலங்கை அரசியல் போக்கை மாற்றிப்போட்டதொரு நடவடிக்கை என்று சொன்னால் அது மிகையல்ல. அனைவருக்கும் வாக்குரிமை அனைவருக்கும் வாக்குரிமை என்பது, தேர்தல் ஜனநாயக அரசியலையும் அதன் அமைப்பையும் போக்கையும் மாற்றியது. வாக்காளர்களின் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகரித்தது; அதன்படி வாக்குவங்கி அரசியலும் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. இந்த மாற்றம்தான, இலங்கையின் ‘இன-மத’ தேசியம் அரசியல் மய்யவோட்டத்தில் இடம்பிடிக்க அடிப்படையாக அமைந்தது என்பதை மறுக்கமுடியாது. ‘சிலோனிஸ்’ என்ற சிவில் தேசிய அடையாளமென்பது, சுதேசிய உயர்குழாம் தலைவர்களின் நிகழ்ச்சி நிரலாகவே இருந்ததேயன்றி, அது இந்தத் தீவின் அடித்தட்டு மக்களிடையே, பலமாகக் கொண்டு போய்ச் சேர்க்கப்படவில்லை. அதாவது, இது சமூகம், அதிகார மட்டத்தில், மேலிருந்து கீழான போக்கைக் கொண்டிருந்தது. மறுபுறத்தில், அரசியல் ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த பௌத்த துறவிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசியவாதமானது சமூக மட்டத்தின் அடித்தளத்திலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை வழங்கப்பட்டபோது, அது இந்தத் தீவின் அதிகாரச் சமநிலையை மாற்றியமைத்தது. பிரித்தானியர்களின் இந்தச் செயற்பாடுகளுக்குள், அவர்களது பிரித்தாளும் தந்திரம் இருந்தது என்பது, பொதுவாக முன்வைக்கப்படும் கருத்தாகும். எது எவ்வாறாயினும், இந்த அதிகாரப் பல சமநிலை மாற்றத்தில், தங்களைத் தக்கவைத்துக் கொள்ள உயர் குழாம் தலைவர்கள், தங்களது உயர் பீடங்களிலிருந்து இறங்கி வர நிர்ப்பந்திக்கப்பட்டனர். அது அவர்களது அரசியல் போக்கையும் மாற்றியமைப்பதாகவே அமைந்தது. இதைத் தொடர்ந்துதான் சுதேசிய மொழிக்கு முன்னுரிமை (டொனமூர் அரசுச் சபையில், சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கும் முன்மொழிவை, ஜே.ஆர்.ஜெயவர்தன முன்வைத்தமை), இலவசக் கல்வி, சமூக நலத்திட்டங்கள் என்ற பாணியிலான அரசியல் முன்னிலை பெறத் தொடங்கியது. ஐரோப்பிய ஆடைகளில் இருந்த தலைவர்கள் சிலர், சுதேசிய ஆடைகளுக்கு மாறினார்கள். பண்டாரநாயக்கவின் ஆட்சியைப் பிடிக்கும் கனவு இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சுதந்திர (டொமினியன்) இலங்கையின் பிரதான கட்சியான ஐ.தே.கட்சியிலிருந்து பிரிந்து, மாற்றுக்கட்சியை ஆரம்பித்து, ஆட்சியைப் பிடிக்கும் கனவுடன் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, தனது புதிய பயணத்தைத் தொடங்கினார். இது 1920களில் சமஷ்டி கோரிய பண்டாரநாயக்கவிலிருந்து பெரிதும் வேறுபட்ட பண்டாரநாயக்க தோற்றம்பெற்றார். ஆட்சிபீடமேறப் பெரும்பான்மையினரின் வாக்குகள் தேவை. இலங்கையில் எண்ணிக்கை ரீதியான பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சார்ந்த சிங்களவர்களாக இருந்தார்கள். அநகாரிக தர்மபாலவில் தொடங்கிய ‘சிங்கள-பௌத்த’ தேசிய எழுச்சிக்கு அதுவரை கிடைக்காத அரசியல் முக்கியத்துவத்தை, முதன்முறையாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க வழங்கினார். “பஞ்சமாபலவேகய” (ஐம்பெருஞ்சக்திகள்) ஊடாக பௌத்த பிக்குகளை நேரடியாக அரசியல் களத்துக்குள் நுழைத்தார். ‘சிங்கள-பௌத்த’ தேசியம், இலங்கையின் அரசியலின் முன்னரங்குக்குக் கொண்டுவரப்பட்டது. பண்டாரநாயக்கவின் வெற்றி, ‘சிங்கள-பௌத்த’ தேசியத்தின் வெற்றியானது. அத்தோடு, ‘சிலோனிஸ்’ என்ற சிவில் தேசத்தைக் கட்டியெழுப்பும் கனவு கரைந்துபோனது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிங்கள-பௌத்த-தேசம்/91-227944 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted January 20, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20, 2019 ஆரிய மாயை என்.கே. அஷோக்பரன் / 2019 ஜனவரி 21 திங்கட்கிழமை, மு.ப. 01:25 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 179) அநகாரிக தர்மபாலவுக்குப் பின்னர் தோன்றிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாளம், மய்யநிலை அரசியலுக்குள் நுழைய, நீண்ட காலம் கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில், இலங்கை அரசியலில் செல்வாக்கு நிலையிலிருந்த உயர்குழாம் அரசியல் தலைமைகளுக்கு, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாள அரசியலில், பெரும் ஈர்ப்பு இருக்கவில்லை என்பதுடன், அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்கவில்லை. ஏனெனில், 1931இற்கு முற்பட்ட அரசியலில், இந்நாட்டின் பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்தவோ, அவர்களது விருப்பை வெற்றிகொள்ளவோ வேண்டிய அவசியம், அரசியல் தலைமைகளுக்கு இருக்கவில்லை. இதற்கு அர்த்தம், அன்றைய சூழலில் இன, மதப் பிரச்சினைகள் இருக்கவில்லை என்பதல்ல. பல சமூகங்கள் வாழும் எந்தச் சூழலிலும் இன, மத, அடையாள வேறுபாடுகள் சார்ந்த பிரச்சினைகள் இருப்பது, தவிர்க்க முடியாதது. இந்த இன, மத, சமூக வேறுபாடுகளை, கொலனித்துவ ஆட்சியாளர்கள் தமக்குச் சாதகமாகத் தமது பிரித்தாளும் தந்திரத்துக்கு ஏதுவாகக் கையாண்டார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை, ஆனால், அன்றைய சூழலில், அரசியல் மய்யவோட்டத்தில் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அரசியல் இருக்கவில்லை. டொனமூர் அரசியலமைப்பு 1931ஆம் ஆண்டு, சர்வசன வாக்குரிமையை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன், இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதை நாம் அவதானிக்கலாம். மாற்றுத்தலைமைகளாக முயன்று கொண்டிருந்தவர்கள், மக்கள் ஆதரவைத் திரட்ட, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாளத்தை முன்னிறுத்தத் தொடங்கினார்கள். இதில், ஏ.ஈ.குணசிங்ஹ போன்ற இடதுசாரிகள் குறிப்பிடத்தக்கவர்கள். மக்களாதரவைத் தக்க வைப்பதற்காக, முன்னர், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் பேசாத தலைமைகளும், அதை நோக்கி நகரத் தொடங்கின. புனைகதை வரலாற்றிலிருந்து, ‘சிங்கள-பௌத்த’ தேசியம், தனக்கான வேர்களைப் பெற்றுக்கொள்கிறது. அந்தப் புனைகதை வரலாறு, மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டு, போசிக்கப்பட்டு, காலவோட்டத்தில் மெதுவாக வளர்த்தெடுக்கப்பட்டது. ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் மய்யக்கருவை, சில வரிகளில் இரத்தினச் சுருக்கமாகச் சொல்வதானால், 1939இல் அன்றைய விவசாய அமைச்சராக இருந்த, இலங்கையின் ‘தேசபிதா’ என்று, இன்று பிரபலமாக வர்ணிக்கப்படும் டீ.எஸ்.சேனநாயக்க ஆற்றிய உரையொன்றிலிருந்து மேற்கோள் காட்டலாம். “நாம் ஒரே இரத்தம்; நாம் ஒரே தேசம். நாம் தான் தெரிவு செய்யப்பட்ட மக்கள். தன்னுடைய மதம் 5,500 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று புத்தர் சொன்னார். அதன் அர்த்தம், அந்த மதத்தின் பாதுகாவலர்களான நாம் அவ்வளவு காலம் நிலைத்திருப்போம்” இது, டீ.எஸ்.சேனநாயக்க 1939இல் ஆற்றிய பகட்டாரவாரப் பேச்சு. இதுதான், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் சுருக்கம். சிங்களவர்களே, பௌத்தத்தைப் பாதுகாக்க, புத்தரால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இலங்கை என்பது சிங்களவர்களுக்குரித்துடைய நாடு. ஆகவே, ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைப் பாதுகாப்பதே, சிங்கள-பௌத்தர்களுடைய கடமை. தன்னுடை ஆய்வுக்கட்டுரையொன்றில், இந்தச் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை ஹிட்லரின் ‘ஆரிய’ தூய்மைவாதத்துடன் ஒப்பிடும் குமாரி ஜெயவர்தன, ஹிட்லர், தான் ஆரியர்கள் என்று வரையறுத்தவர்களைப் பாதுகாக்கவும், ஆரியர்களின் தூய்மையைப் பேணவும் முயன்றதைப் போலவே, ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைப் பாதுகாக்கக் கூடிய தலைமையை, ‘சிங்கள-பௌத்த’ தேசியம் வேண்டியதாகக் கருத்துரைக்கிறார். 1930களில், ஹிட்லரின் பெயர் உலகளவில் பிரபல்யமடைந்தபோது, இலங்கையின் பகட்டாரவார இடதுசாரிகளால், ஹிட்லர் ஓர் ஆதர்ஷ புருஷராகக் காண்பிக்கப்பட்டமை, குறிப்பிடத்தக்கதொரு நகைமுரண். குறிப்பாக ஹிட்லருடைய ‘ஆரிய’த் தூய்மைவாதம், ஏ.ஈ.குணசிங்ஹ போன்ற இடதுசாரித் தலைமைகளால், பல இடங்களிலும் மேற்கோள் காட்டிப் பேசப்பட்டது. 1936இல் ஒரு கூட்டத்தில் பேசிய ஏ.ஈ.குணசிங்ஹ, “சிங்களப் பெண்கள், மலையாளிகளின் வலையில் விழுதல், இலங்கைக்கே பெரும் இழுக்காகும். சிங்களப் பெண்கள் மலையாளிகளை மணம் முடிக்கக் கூடாது” என்று பேசியிருந்தார். இடதுசாரிப் பத்திரிகையான ‘வீரய’வில் 1936இல் வௌியாகியிருந்த கட்டுரையொன்று, ஆரியர்கள், ஆரியரல்லாதோர் இடையேயான திருமணத்துக்கு எதிரான அறைகூவலாக வௌிவந்திருந்தது. அது, ஆரியர்களின் மேன்நிலையை, ஹிட்லரை உதாரணமாகக் காட்டி உரைத்திருந்தது. ஜேர்மனியின் தலைவரான ஹிட்லர், “ஆரிய இரத்தம் அல்லாதோரிடமிருந்து நாம், தலைமைத்துவத்தை எதிர்பார்க்க முடியாது” என்று கூறியிருந்தார். ஆகவே, அவருடைய நாட்டில் அவர், ஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதோருக்கும் இடையிலான திருமண உறவைத் தடைசெய்திருந்தார். மேலும், இளம் ஆரியப் பெண்கள், ஆரியரல்லாதோர் வீடுகளில் பணிபுரிவதையும் ஹிட்லர், முற்றாகத் தடைசெய்திருந்தார். பேர்ஷியா உள்ளிட்ட நாடுகளிலும், அந்நியர்களைத் திருமணம் செய்வதானது தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்தினதும் நோக்கம் தூய ஆரிய இனத்தை உருவாக்குதலாகும் என்று, ‘வீரய’வில் வௌியாகிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்களவர்களை, ஆரியர்களாகக் கருதும் வரலாற்று, விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் ஏதுமற்ற கூற்றுகள் கோயபெல்ஸின் ‘பெரும்பொய்’ தந்திரோபாயத்தையொத்த, அதாவது, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பெரியளவில் சொல்வதனூடாக, அதை மெய்யாக் கருதச் செய்தலின் ஊடாக, மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கை ஆழமாக விதைக்கப்பட்டது. இதற்கு, எந்த அடிப்படையும் இல்லை. ‘ஜெர்மனிய ஆரியர்’ எனத் தம்மைக் கருதிக்கொள்வோரும், ‘பேர்ஷிய ஆரியர்’ எனத் தம்மைக் கருதிக்கொள்வோரும், ‘சிங்கள ஆரியர்’ என தம்மைக் கருதிக்கொள்வோரும், ஒரே இனமாக இருக்க முடியாது என்பது, வெற்றுப் பார்வைக்கே வெட்டவௌிச்சமானது. எனினும், அதை மரபணு ஆய்வு மிகத்தௌிவாக எடுத்துரைக்கும். ஹிட்லரின் எழுச்சியை, தமக்குச் சாதமாகப் பயன்படுத்த நினைத்த, பகட்டாரவார அரசியல்தலைமைகள் சில, ஹிட்லர் முன்னிறுத்திய பகட்டாரவார பரப்புரையை, இங்கு கையாண்டிருந்தன என்பதைத்தாண்டி, ‘சிங்கள ஆரிய’ உரிமைக்கோரலுக்கு, வேறு வலிதான அர்த்தங்கள் ஏதுமில்லை. ஹிட்லரின் வீழ்ச்சியோடு, ஹிட்லரை மேற்கோள்காட்டும் போக்கும் ஓய்ந்துபோனது. ஆனால், ஹிட்லரின் ஆரியத் தூய்மைவாதமும் இனவெறியும் யூதர்களை எவ்வாறு அடக்குமுறைக்கும், பெரும் இன அழிப்புக்கும் (Holocaust) உள்ளாக்கியது என்பது, இங்கு குறிப்பிட்டு உற்றுநோக்கப்பட வேண்டியதொன்றாகிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், கருவுற்ற ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் பற்றித் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் கருத்துரைக்கும் குமாரி ஜெயவர்தன, சிங்கள-பௌத்த தேசியவாதத்தை பாஸிசத்துடன் ஒப்பிடுகிறார். 19ஆம் நுற்றாண்டு, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களில், சிறு முதலாளித்துவ சிங்களவர்களால், ‘சிங்கள-பௌத்த’ பிரக்ஞையானது, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிடும் குமாரி ஜெயவர்தன, இந்தத் தத்துவமானது 1930களில் சிங்கள உழைக்கும் வர்க்கத்திடமும் பரவியது என்கிறார். மேலும், ‘1930களில் கையாளப்பட்ட வலிமைமிகு பிரசாரமானது, சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற, சிங்களவர்களே பௌத்தத்தைப் பாதுகாக்கத் தெரிவுசெய்யப்பட்ட இனம் என்ற, அவர்களது இனத்தூய்மை, அவர்களே இந்த மண்ணுக்கு உரித்துடைய மண்ணின் மைந்தர்கள் என்ற, நம்பிக்கைகளை மீளவிதைத்ததுடன், சிங்களவரல்லாத, பௌத்தரல்லாத அந்நியர்கள் மீதான கண்டனமும் அவர்களுக்கெதிரான புனிதப் போருக்கான தேவை தொடர்பிலான சமிக்ஞைகளும் தோன்றின. இந்தச் சிங்கள-பௌத்த மேலாதிக்க சிந்தனையும், சிங்கள மக்கள் அந்நியர்களால் ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள்; சிங்கள மக்களின் தொழிலையும் வணிகத்தையும் அந்நியர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்ற தர்மபாலவின் பழைய போர்ச்சூளுரையும் இந்தக் காலப்பகுதியில் உழைக்கும் வர்க்கத்தின் பத்திரிகைகளால் மிக வலிமையாக முன்னிறுத்தப்பட்டது. இடதுசாரிகளின் பொதுக் கூட்டங்களிலும், ஏன், மே தினக் கூட்டங்களிலும் கூட, வர்க்கப் பிரச்சினைகளான சம்பளம், வேலைத் தள நிலைமைகள் என்பவற்றை மேவி, சிறுபான்மையினருக்கு எதிரான பிரசாரங்கள் முன்னிலை பெற்றன. இந்தக் காலப்பகுதியில், தொழிலாளர்களிடம் தொடர்ந்து, அவர்கள் சிங்கள-பௌத்தர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் வர்க்கத்திடையே சிங்கள-பௌத்த பிரக்ஞையை வளர்ப்பதற்காகத் தொழிற்சங்கங்கள் வெசாக், சிங்கள புதுவருடம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுத்தன. அதுமட்டுமல்லாது, சிங்களவர்களின் ஆரிய வேர்கள் தொடர்பான பிரசாரம் மீட்டெடுக்கப்பட்டதுடன், ஐரோப்பாவில் எழுச்சிபெற்ற பாஸிச அலை, சிங்கள - ஆரிய பிரசாரத்துக்குப் புத்துயிர் அளித்தது. உழைக்கும் வர்க்கமானது, ஆரம்பகால போராட்ட நடவடிக்கைகளால் கட்டியெழுப்பப்பட்ட வர்க்க ஒற்றுமையை மறந்து, இதுபோன்ற சித்தாந்தங்களை ஏற்று, மாறியமையானது இன்றைய காலத்துக்கும் முக்கியத்துவமுள்ள ஒரு விடயமாகும். இது, சகல வர்க்க மக்களிடையேயுமுள்ள சிங்கள-பௌத்த அடையாளப் பிரக்ஞையினது வலிமையைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. இந்தப் பிரக்ஞையானது, சில காலப்பகுதியில் அடங்கியிருந்தாலும், மிக இலகுவாக எழுச்சிபெறச் செய்யப்படக்கூடியது. குறிப்பாக, அவர்களது பிழைப்பு சவாலுக்கு உட்படுத்தப்படும் போது, இது மிக இலகுவாக எழுச்சிபெறச் செய்யப்பட்டு விடுகிறது’ என்று, குமாரி ஜெயவர்தன தனது ஆய்வுக் கட்டுரையில் விவரிக்கிறார். தேசியவாதம் என்பது, ஒரு குழுப் பிரக்ஞை. ஒரு குறித்த மக்கள் கூட்டம், தம்மை ஒரு மக்கள் குழுவாகவோ, சமூகமாகவோ உணர்வதில் பிழையில்லை. அதைத் தடுக்கவோ, தடை செய்யவோ முடியாது. அதற்கான தேவையுமில்லை. சிங்களவர்கள், சிங்களப் பௌத்தர்கள், தம்மை ஒரு தனித்த தன்மைகளுடைய மக்கள் கூட்டமாகவோ, சமூகமாகவோ கருதுவது பற்றி, விமர்சிக்கவும் முடியாது. ஆனால், அந்தத் தேசியவாதக் குழு உணர்வானது, மற்றவர்களை எதிரிகளாக, அந்நியர்களாகப் பார்க்கும் நிலையைத் தோற்றுவித்து, அவர்களுக்கெதிரான வெறுப்புணர்வு, கண்டனவுணர்வு, அடக்குமுறை, வன்முறை என்பவற்றைத் தோற்றுவிக்கும் போது, அந்தத் தேசியவாதம், பேரினவாதமாக மாற்றம் பெறுகிறது. ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பது, அதன் கூறுகளால் வலிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, ‘சிங்கள-பௌத்தர்’ அல்லாதோர் மீதான எதிர்ப்புணர்வு, வெறுப்புணர்வு, காழ்ப்புணர்ச்சி, வன்முறை என்பவற்றால் வலிமைப்படுத்தப்பட்டதுதான், பெரும் சோகத்துக்கும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரியது. 20ஆம் நூற்றாண்டில், ஹிட்லரின் வழியிலான இனத் தூய்மைவாதத் தேசியத்தை ஒத்த பாதையில், ‘சிங்கள-பௌத்த’ தேசியத்தை முன்னிறுத்தி, இலங்கை நகர்ந்தமையானது, இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் நிலையை மோசமாக்கியது. இது, சிறுபான்மையினங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேனும், தமக்கான தனி அடையாளங்களைப் பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டன. ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை எதிர்கொள்ள, அதற்கு மாற்றானதொரு தேசியவாதத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் சிறுபான்மை இனங்களுக்கு, குறிப்பாக இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஏற்பட்டது. இதைத்தான் ஏ.ஜே.வில்சன் ‘தற்காப்புத் தேசியவாதம்’ என்கிறார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், கருவுற்று உதித்த ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்திலிருந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, 20ஆம் நூற்றாண்டின் மய்யப் பகுதியில், தற்காப்புத் தேசியவாதமாகத் ‘தமிழ்த் தேசியம்’ இலங்கையின் பிறப்பெடுத்தது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆரிய-மாயை/91-228297 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted January 29, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted January 29, 2019 சாதியும் தேசியமும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஜனவரி 28 திங்கட்கிழமை, பி.ப. 04:35 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 180) சேர் ஐவர் ஜென்னிங்கஸ், இலங்கையின் மக்கள் கூட்டம் பற்றிய தன்னுடைய அவதானத்தைப் பதிவு செய்கையில், சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான் என்கிறார். அதாவது, ‘நாம் சிங்களவர்’, ‘நாம் தமிழர்’ என்ற இன அல்லது தேச பிரக்ஞை உருவாக அல்லது உருவாக்கப்பட முன்பு, இலங்கையின் மக்கள் கூட்டம் இன, தேச ரீதியில் கட்டமைந்ததை விட, சாதி ரீதியில்தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது. சிங்களவர்கள் தொடர்பில் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலும் இதுவே நிதர்சனமாகும். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தமட்டில், குறிப்பாக யாழ்ப்பாணத்தை மய்யமாகக்கொண்ட தமிழர்களைப் பொறுத்தமட்டில், சாதிச் செல்வாக்கு என்பது, 20ஆம் நூற்றாண்டின் மய்யப்பகுதியைத் தாண்டியும் மிகவும் செல்வாக்குமிக்க ஒன்றாகவே இருந்து வந்தது. இன்றும் சமூக மட்டத்தில், அதன் செல்வாக்குக் குறையவில்லை என்று சொல்பவர்களும் உளர். சாதி ஏற்றத்தாழ்வுகள், மனித குலத்தின் மிகப்பெரும் சாபக்கேடுகளில் ஒன்று என்பது மறுக்கமுடியாத உண்மை. நாகரிக வளர்ச்சியில், சாதிக்கொடுமைகளைப் பற்றிய புதுப் பிரக்ஞை, அண்மைய தசாப்தங்களில் ஏற்பட்டதன் காரணத்தால், சாதிகள் பற்றி வௌிப்படையாகப் பேசப்படுவதில்லை. இதனால் சாதியோ, சாதிக்கட்டமைப்போ மறைந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. சமூக வாழ்க்கையில், அதன் வகிபாகம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ்த் தேசம் கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றை, முழுமையாக உணர்ந்து கொள்வதற்குத் தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்பை ஓரளவேனும் புரிந்துகொள்ளுதல் அவசியமாகும். குறிப்பாக, இலங்கைத் தமிழரிடையேயான சாதிக் கட்டமைப்பு, சாதிச் செல்வாக்கு பற்றிய புரிதல் தவிர்க்கமுடியாததாகும். சாதி என்பது, இந்தியச் சூழலமைவில் வர்ணாச்சிரம தர்மத்திலிருந்து பிறக்கிறது என்பது, பலரும் சுட்டிக்காட்டும் கருத்தாகும். பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற வர்ணாச்சிரம அடிப்படையிலிருந்தே, இந்தியச் சாதிக் கட்டமைப்பும் படிநிலைகளும் உருவாயின. பிராமணன், சாதிக் கட்டமைப்பின் உயர் ஆதிக்க நிலையிலுள்ள சாதிக்கட்டமைப்பே, இந்திய சாதிக்கட்டமைப்பாகும். இதன் விளைவாக எழுந்த பிராமணிய ஆதிக்கமும் அதற்கெதிரான எழுச்சியும் தென்னிந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில், திராவிட இயக்கத்தையும் திராவிட தேசியத்தையும் தோற்றுவித்தது. ‘திராவிடம்’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டாலும், இந்த எழுச்சி, தமிழகத்தில் தமிழரிடையே ஏற்பட்ட எழுச்சியாகும். இந்த எழுச்சியின் அடிப்படையும் நோக்கமும், பிராமண எதிர்ப்பாகும். இந்த எழுச்சியின் விளைவாக, சாதிப்படிநிலையின் உச்சத்திலிருந்து பிராமணர்களின் ஆதிக்கம் நீக்கப்பட்டு, படிநிலையில் இடைச்சாதிகளாகக் கருதப்பட்டவற்றின் ஆதிக்கம் மேலோங்கியது. ‘சாதி வேண்டாம்’ என்ற குரலுடன், திராவிட தேசியம் கருவுற்றிருந்தாலும், அதனால், சாதிப் படிநிலையின் ஆதிக்கத்தை மாற்ற முடிந்ததே ஒழிய, சாதியையும் சாதி வேறுபாட்டையும் மாற்றிவிட முடியவில்லை. தமிழ்நாட்டின் சாதிக்கட்டமைப்புக்கும் படிநிலைக்கும் இலங்கைத் தமிழர்களின் சாதிக்கட்டமைப்புக்கும் படிநிலைக்கும் அடிப்படையில் பெரும் வேறுபாடு உண்டு. இந்தியாவில் உள்ளது போன்ற பிராமணிய ஆதிக்கம், இலங்கைச் சாதிக்கட்டமைப்பில் கிடையாது. இலங்கைத் தமிழர்களின் சாதிக்கட்டமைப்பையும் படிநிலையையும் பொறுத்தவரையில், வௌ்ளாளர்கள் (வேளாளர்கள்) எனப்படுவோரே, சாதிப்படிநிலையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இதில் தமிழர்கள், சிங்களவரிடையேயும் ஒற்றுமைகள் உண்டு எனலாம். தமிழர்களில் வௌ்ளாளர்களைப் போல, சிங்களவர்களிடையே ‘கொவிகம’ சாதி கருதப்படுகிறது. இந்த இரு சாதிகளும், விவசாய நிலங்களை உடைமையாகக் கொண்ட சாதிகள். அநகாரிக தர்மபால, ‘சிங்கள - பௌத்த’ தேசியத்தை விதைக்கும் போது, சாதிகளைக் கடந்த இன-மத தேசியமாகவே அதைக் கட்டமைத்திருந்தார். ஆனால், அநகாரிக தர்மபாலவின் சமகால எதிரிணையாகக் கருதப்படும் ஆறுமுகநாவலரின் சுதேசிய மறுமலர்ச்சி, ‘யாழ்ப்பாணத் தமிழ், சைவ, வௌ்ளாள’ மறுமலர்ச்சியாக அமைந்திருந்தது என்று, டக்மா ஹெல்மன் இராஜநாயகம் சுட்டிக்காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கது. மிஷனரி ஆதிக்கத்தின் கீழாக, கொலனித்துவத்துக்கு எதிரான சுதேசிய மறுமலர்ச்சி எழுச்சியின் போதுகூட, சிங்களவர்கள் சாதிகளைத் தாண்டியதொரு ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்கிய போதும் கூட, இலங்கைத் தமிழர்களிடையேயான சாதிப் பிரக்ஞை கைவிடப்படவில்லை. மேலும், இந்திய வர்ணாச்சிரம படிநிலைக்கொப்பாக, இலங்கைத் தமிழரிடையேயான சாதிக்கட்டமைப்பு அமையவில்லை என்பது தென்னிந்திய, இலங்கைத் தமிழரிடையேயான பெரும் வேறுபாடுகளில் ஒன்று. அதற்காக, இலங்கைத் தமிழ்ச் சமூக வாழ்க்கையில், பிராமணர்களின் வகிபாகம் ஒன்றுமில்லை என்றும் கூறிவிட முடியாது. கோவில்கள் பெரும்பாலும் வௌ்ளாளர்களுக்குச் சொந்தமாக இருந்தாலும், கோவில் பூசைகள் வைதீக மரபின்படி, பிராமணர்களாளேயே முன்னெடுக்கப்பட்டன. வழிபாட்டு முறைகளுள் பிராமண ஆதிக்கத்தை, வௌ்ளாளர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் அல்லது அனுமதித்தார்கள் எனலாம். இந்த இடத்தில், இன்னும் இரண்டு விடயங்கள் கவனிக்கத் தக்கவை. இந்திய வர்ணாச்சிரம தர்ம அடிப்படைகளினூடாக நோக்கினால் ‘யாழ்ப்பாண, தமிழ், சைவ, வௌ்ளாளர்கள்’, சூத்திரர்களாகவே கருதப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, பிராமணர்களையும் விட, வௌ்ளாளர்களே ஆதிக்கம் மிக்க, சாதிப் படிநிலையில் உயர்ந்த சாதிகளாகக் கருதப்படுகிறார்கள். இதை ஒரு முரண்பாடாகக் கருதிய ஆறுமுகநாவலர், ‘யாழ்ப்பாண, தமிழ், சைவ, வௌ்ளாளர்களை’ சற்சூத்திரர்கள் என்ற இன்னொரு விசேட பிரிவாக வகைப்படுத்துகிறார். மேலும், இலங்கைத் தமிழர், குறிப்பாக யாழ்ப்பாணத்தவர் ‘இந்து’ என்ற அடையாளத்தை விட, ‘சைவம்’ என்ற அடையாளத்தையே முன்னிறுத்துகிறார்கள். இலங்கையின் பாடசாலைக் கல்வியில், சமயபாடம் என்பது, கட்டாய பாடங்களில் ஒன்று ஆகும். அதில் கற்பிக்கப்படுவது கூட, ‘இந்து சமயம்’ அல்ல; மாறாக, ‘சைவ சமயம்’ ஆகும். இவை ஒவ்வொன்றும் இந்திய வர்ணாச்சிரமக் கட்டமைப்பிலிருந்து, தம்மை வேறுபடுத்தி அடையாளப்படுத்த, இலங்கைத் தமிழர் எடுத்துக்கொண்ட முயற்சிகளாகக் கூடக் கருதலாம். உண்மையில், ஆறுமுகநாவலர் அறிமுகப்படுத்திய ‘சற்சூத்திர’ அடையாளம் அவசியமற்றது. ஏனெனில், இலங்கைத் தமிழர் என்ற சமூகம், இந்திய வர்ணாச்சிரம பிராமணிய சாதிக்கட்டமைப்பின் அடிப்படையில் கட்டமைந்த சமூகம் அல்ல. ஆகவே, அதை வர்ணாச்சிரமக் கண் கொண்டு பார்த்திருந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நிற்க! தமிழ்த் தேசியம் என்பது, ஏ.ஜே. வில்சன் குறிப்பிட்டது போல, ‘சிங்கள பௌத்த தேசியவாதத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்பட்ட, தற்காப்புத் தேசியவாதம்’ என்றால், அதற்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இடையேயான சாதி ஆதிக்கத்துக்கும் என்ன தொடர்பு? இந்த விடயத்தில்தான், மானுடவியல் ஆய்வாளர் ப்றையன் ஃபஃபன்பேகரின் ஆய்வுக் கருத்தொன்று முக்கியமானதாகிறது. 1960களில் சாதிப்பாகுப்பாட்டுக்கு எதிரான பெரும் எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்தது. குறிப்பாகக் கோவில்களுக்குள் நுழைவதற்குக் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடைக்கெதிராக, மக்கள் எழுச்சி ஏற்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில், வௌியான புள்ளிவிவரமொன்று, யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்த ஏறத்தாழ 1,309 கோவில்களில், வெறும் 17 சதவீதமான கோவில்களே, அனைவரும் செல்லத்தக்க திறந்த அனுமதியுடைய கோவில்களாக இருந்தன. இந்தச் சாதியப் பாகுபாட்டை எதிர்த்து, கோவில் நுழைவுப் போராட்டங்கள், யாழ்ப்பாண மாவட்டமெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்தன. கோவிலுக்குள் நுழைதல், கோவில் தேர்த்திருவிழாவின் போது, தேர் வடத்தைத் தாமும் பிடித்தல் என வௌ்ளாளர் ஆதிக்கத்துக்கு எதிராகச் சிறுபான்மைச் சாதியினர் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். இந்தக் கோவில் நுழைவுப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வு, 1968இல் இடம்பெற்ற மாவிட்டபுரம் கோவில் நுழைவுப் போராட்டம் ஆகும். இதில், ‘கணித மேதை’, ‘அடங்காத் தமிழன்’ சீ. சுந்தரலிங்கம் முன்னின்று, தாழ்த்தப்பட்ட மக்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்திருந்தமை மிகவும் முக்கியமாகிறது. இவர் சாதிவெறியரல்லர்; மாறாக, சா.ஜே.வே. செல்வநாயகத்தை எதிர்த்துத் தேர்தலில் நின்ற அவர், ‘வேலா’, ‘சிலுவையா’ என்ற மதமய்யத் தேர்தல் பிரசாரத்தின் காரணமாகத்தான், குறித்த கோவில் நுழைவுப் போராட்டத்தை எதிர்த்திருந்தார் என்று, ஒரு தரப்பு நியாயம் சொல்கிறது. இருந்தபோதிலும், இந்தக் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் வௌ்ளாளர் சாதி ஆதிக்கத்தையும் அவற்றுக்கும் தமிழ்த் தேசியத்தின் உருவாக்கத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி, ப்றையன் ஃபஃபன்பேகர் தரும் ஆய்வுப் பார்வை, ஆழமான சிந்தனைக்கு உரியது. சிறுபான்மைச் சாதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களின் இந்தக் கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கு, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்ல, தெற்கின் ஆதிக்க கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவும் இருந்தது. இந்தக் கோவில் நுழைவுப் போராட்டங்களை எதிர்த்த ஆதிக்க சாதியினர், குறிப்பாக வௌ்ளாளர்கள், யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையினர் ஆகிறார்கள். அதேவேளை, தமிழ்த் தேசியத்துக்கானதும், தமிழ்த் தேசமும் தமிழருக்கென்று தனி அரசு ஒன்றும் அமைய வேண்டும் என்ற குரலும் இதே ஆதிக்க வௌ்ளாளர்களிடமிருந்தே வந்ததையும் அவதானிக்கலாம். தமிழருக்குத் தனிநாடுதான் தீர்வு என்று முதன்முதலில் பகிரங்கமாகச் சொன்னவர்களுள் ‘அடங்காத்தமிழன்’ சீ.சுந்தரலிங்கமும் ஒருவர். இவற்றைத் தனது ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டும் ப்றையன் ஃபஃபன்பேகர், வடக்கில் தனிநாட்டுக்கான கோரிக்கை, ஆதிக்கசாதி வௌ்ளாளர்கள் இடமிருந்து வந்தமையானது, அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையினர்களான அவர்களது நலன்களைப் பாதுகாப்பதற்கும், தக்கவைப்பதற்குமே என்று கருத்துரைக்கிறார். அவர் மேலும் கருத்துரைக்கையில், தமிழர்களிடையே சிறுபான்மைச்சாதிகளிடம் ஏற்பட்ட எழுச்சியைத் தணிக்க, ‘சிங்கள-பௌத்த’ தேசியத்திலிருந்தும், அதன்வாயிலான பேரினவாதத்திலிருந்தும் தம்மைத் தற்காத்துக்கொள்ள, தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய ‘தமிழ்த் தேசியம்’ என்ற கட்டமைப்புப் பயன்பட்டதாகவும் அவர் கருத்துரைக்கிறார். இதனால், தமிழ் மக்களிடையேயான உள்ளார்ந்த பிளவுகள் சரிசெய்யப்படாமலேயே, வௌியிலுள்ள ஒரு பிரச்சினை, பொதுப்பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டு, அதற்காக உள்ளக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது, வௌியகப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக, உள்ளக ஒற்றுமையை வலுப்படுத்தும் தந்திரோபாயம் கையாளப்பட்டது என்பதுதான் ஃபஃபன்பேகரின் வாதமாக இருக்கிறது. ப்றையன் ஃபஃபன்பேகரின் இந்தக் கருத்தைச் சுட்டிக்காட்டுவதால், இலங்கையின் தமிழ்த் தேசியம் என்பதே, வௌ்ளாளர்களின் ஆதிக்கத்துக்கானது என்ற கருத்தை ஆமோதிப்பதாகக் கருதப்படக்கூடாது. அது உண்மையுமல்ல. ஆனால், தமிழ்த் தேசியத்தின் பிறப்புக்கான பல்வேறு காரணங்களில், வௌ்ளாளர்களின் ஆதிக்க நலனும் ஒரு பங்குவகித்திருக்கிறது என்பதும் தமிழ்த் தேசியத்தின் பிறப்பை ஆராயும் போது, கருத்திக்கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகிறது. இலங்கையின் தமிழ்த் தேசியத்தின் ஆரம்பங்கள் தொடர்பில், ப்றையன் ஃபஃபன்பேகரின் ஆய்வுக் கருத்தில் சில நியாயங்கள் இருந்தாலும், இலங்கையில் தமிழ்த்தேசியம், அதன் பின்னர் வடிவமைந்த விதம், பயணித்த பாதை வேறானதாக அமைந்தது. அது, ஆதிக்க சாதிக் கட்டமைப்பிலும் கணிசமான அதிர்வுகளையும் தற்காலிக மாற்றங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, ஆயுத இயக்கங்களின் வருகையும் எழுச்சியும் இந்த மாற்றத்தின் முக்கிய காரணங்களாயின. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாதியும்-தேசியமும்/91-228671 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted February 4, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted February 4, 2019 சிவில் தேசியமும் இனமத தேசியமும் என்.கே. அஷோக்பரன் / 2019 பெப்ரவரி 04 திங்கட்கிழமை, மு.ப. 03:24 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 181) “இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்” என்பது, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை எடுத்துரைக்கும் திம்புக் கோட்பாடுகளின் முதலாவது கோட்பாடாகும். இலங்கையில் தமிழர்கள் தனித்தேசமா என்பது, மிகுந்த வாதப்பிரதிவாதத்துக்கு உரியதொரு விடயமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, பெரும்பான்மைச் சிங்கள மக்களிடம், தமிழர்கள் தனித்ததொரு தேசம் என்ற கருத்தியலுக்கான ஆதரவு, மிகக் குறைவாகவே உள்ளது. அத்துடன், அதை அவர்கள் மறுதலித்து வருவதையும் நாம் அவதானிக்கலாம். இலங்கை என்பது ஒரு நாடு, ஒரு தேசம். அதற்குள் வாழும் சிறுபான்மை இனங்களில் தமிழர்களும் ஒருசாரார் என்பது, பெரும்பான்மைச் சிங்கள மக்களின் நிலைப்பாடாகும். மறுபுறத்தில், ‘கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’, ‘ஆண்டகுடி’ என்ற, ‘உயர்வு நவிற்சி வழி மனநிலை’ தமிழ் மக்களிடம் பகட்டாரவாரப் பிரசாரப் போக்கால் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. புறநிலை நின்று நோக்கின், இந்த இரு எல்லைகளும் பிரச்சினைக்குரியவை. தமிழர்களின் தனித்த தேச உரிமை கோரலையும் தாயகத்துக்கான உரிமை கோரலையும் நிராகரிக்கும் காமினி ஈரியகொல்ல போன்றோர், அதனை நியாயப்படுத்த வரலாற்றைப் பயன்படுத்துகிறார்கள். இன்று தம்மைத் தனித்ததொரு தேசமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘இலங்கைத் தமிழர்’ எனப்படுவோர், வரலாற்றுக் காலத்திலிருந்து இன்றுவரை, தம்மை ஒரு தேசமாகக் கருதி இயங்கியமைக்கான, திருப்திகரமான சான்றுகள் இல்லை என்பது, இலங்கைத் தமிழர் ஒரு தேசம் அல்ல என்று வாதிடுபவர்களின் கருத்தாகும். புறநிலை நின்று அணுகினால், இவர்களது வாதம் ஒருவகையில் சரியாகத் தோன்றலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இன்று நடைமுறையிலுள்ள ‘தேசம்’, ‘தேசியம்’ என்ற கருத்தியல், கடந்த இரண்டரை நூற்றாண்டுகளில் மேற்கில் உருப்பெற்று, வளர்ச்சி அடைந்ததொன்றாகும். இந்த ஒப்பீட்டளவில், நவீனமான சித்தாந்தக் கண்கொண்டு, அதற்குக் காலத்தால் முற்பட்டதொரு சமூக முறையை ஆராய்வதன் பொருத்தப்பாடுகள் கேள்விக்குரியவையாகும். மறுபுறத்தில், இலங்கைத் தமிழர் ஒரு தேசமல்ல என்பதற்கான அதேவாதங்கள், வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கையும் ஒரு தேசமல்ல, தேசமாக இருந்ததில்லை என்ற வாதத்துக்கும் பொருத்தமாகவே அமையும். இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலத்திலிருந்து இராச்சியங்கள், இன்றைய நவீனகால அரசு, தேசம், தேசியம் ஆகிய கருத்தியல்களுக்கு இயைபுடையவையாக இருக்கவில்லை, மாறாக அவை, ‘அண்ட ஆட்சியமைப்பு’களாக (galactic polities) இருந்தன என்ற, மானுடவியல் ஆய்வாளர் ஸ்ரான்லி ஜே தம்மையாவின் கருத்து இங்கு குறிப்பிட்டு நோக்க வேண்டிய, முக்கியத்துவத்தைப் பெறுகிறது. துட்டகைமுனு, இலங்கைத் தீவை ஆட்சிக் குடை ஒன்றின் கீழ் கொண்டுவந்தான் என்ற புனைகதை வரலாற்றின் கூற்றானது, அந்தக் குடையொன்றின் கீழான ஆட்சி, இன்றைய காலகட்டத்தின் நவீன மேற்கத்தேயப் பாணியிலான ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்கு நிகரானது என்ற எடுகோள் தவறானதாகும். இரண்டும் சமதளத்தில் ஒப்புநோக்கப்படக் கூடியவை அல்ல. அதனால்தான், ஸ்ரான்லி ஜே தம்பையாவின் ‘அண்ட ஆட்சியமைப்பு’கள் என்ற கருத்தியல், வரலாற்றுக் கால இலங்கைக்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது. மேலும், ‘தேசியம்’ பற்றிய முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான அன்டனி டி ஸ்மித் குறிப்பிடுவது போல, தேசங்கள் என்பவை மனிதனால் கட்டமைக்கப்படுபவை ஆகும். பிரஞ்சுப் புரட்சிக்கு முன்பு, பிரான்ஸ் தேசமென்று ஒன்று கிடையாது. அமெரிக்க விடுதலைக்கு முன்பு, அமெரிக்க தேசமொன்று கிடையாது. அவை, அந்தந்த மக்கள் கூட்டத்தால், அவர்களிடையே உருவாக்கப்பட்டவை. பிரான்ஸ், அமெரிக்க அரசுகளின் பிறப்போடு, அந்த அரசுகளுக்குரிய சிவில் தேசமாக, முறையே பிரான்ஸ் தேசமும், அமெரிக்க தேசமும் உருவாகின. ஆனால், இது தொடர்பில், இன்னொரு தவறான புரிதலும் எழக்கூடும். பிரான்ஸ், அமெரிக்கா என்பவை ஓர் அரசு; மேலும் அந்தவோர் அரசு, ஒரு சிவில் தேசமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசொன்றுக்குள் ஒரு தேசம்தான் இருக்க முடியும் என்ற கருத்து, இதிலிருந்து பிறப்பதை அவதானிக்கலாம். ஆனால், இதில் இரண்டு முக்கிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, பிரான்ஸ், அமெரிக்க தேசங்கள் என்பவை, சிவில் தேசங்கள். அவை இன, மத, சாதி, வர்க்க அடிப்படையில் கட்டமைந்த தேசங்கள் அல்ல; மாறாக, தாராளவாத ஜனநாயக அடிப்படையிலான இன, மத, சாதி, வர்க்க வரையறைகளற்ற சிவில் தேசங்கள். அடுத்ததாக, ஓர் அரசுக்குள் ஒரு தேசம்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இரண்டாவது, இரண்டுக்கு மேற்பட்ட தேசங்கள், ஓர் அரசுக்குள் இருக்க முடியாது என்ற வாதத்தில் உண்மையில்லை. இதற்கு மிகப்பெரிய உதாரணம், ஐக்கிய இராச்சியமாகும். ஆங்கிலேய, ஸ்கொட்லாந்து, வெல்ஷ், அயர்லாந்து ஆகிய தேசங்களை உள்ளடக்கியதே இன்றைய ஐக்கிய இராச்சியம் எனும் ஒற்றையாட்சி அரசாகும். மேலும், இங்கு குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு மிக முக்கியமான விடயம், பிரான்ஸ், அமெரிக்கா போன்று, சிவில் தேசமொன்றைக் கட்டியெழுப்பும் எண்ணமும் முயற்சியுமே கொலனித்துவ இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்தமையையும் நாம் அவதானிக்கலாம். அது ‘இலங்கை’ (சிலோனிஸ்) தேசம் என்ற அடிப்படையில் பிரான்ஸ், அமெரிக்கா போன்ற இன, மத, சாதி, வர்க்க வரையறைகளைக் கடந்த, இந்தத் தீவில் வாழும் யாவரையும் அரவணைக்கும் தேசமாகக் கட்டியெழுப்பும் முயற்சி அது. ஆனால், அது வெற்றியளிக்கவில்லை என்பதுதான் இலங்கையின் துரதிர்ஷ்டம். இந்த இடத்தில், ‘தமிழர்கள் ஒரு தேசமல்ல’ என்று கருத்துரைப்போர் சொல்கின்ற இன்னொரு காரணமான, 1950களுக்கு அதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்துக்கு முன்னரான தமிழ்த் தலைமைகள், ‘தமிழர் ஒரு தனித்த தேசம்’ என்ற கருத்தை முன்வைக்கவில்லை. மாறாக, அவர்கள், தம்மைச் சிறுபான்மையினராகப் பார்த்தார்கள் என்பதுடன், சிறுபான்மையினருக்கான பாதுகாப்பையே வேண்டினார்கள். ஆகவே, தமிழர்கள், சிறுபான்மை இனக்கூட்டமேயன்றி, ஒரு தனித்த தேசம் அல்ல என்ற வாதம், உற்றுநோக்கப்பட வேண்டியது. இதில் 1950களுக்கு முன்னதான, தமிழ்த் தலைமைகள், தமிழர் ஒரு தனித்த தேசம் என்று கோரவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த பின்னர், சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் ஈழத்தமிழரின் அடையாளப் பிரக்ஞையின் அவசியம் பற்றிப் பேசினாரேயன்றி, தனித்த தேசம் என்ற கருத்தை முன்வைக்கவில்லை. 50:50 கேட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலம் கூட, சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக 50:50 கேட்டாரேயன்றி, தமிழர் தனித்த தேசம் என்ற கருத்தை முன்வைக்கவில்லை. இது உண்மை. ஆனால் இதைப் புரிந்துகொள்ள, இதன் சூழலமைவும் இதற்குப் பின்னரிருந்த காரண காரியங்களையும் கருத்தில் கொள்ளுதல் அவசியமாகும். அன்றைய தலைமைகள், இலங்கைத் தீவில் மேற்கத்தேய பாணியிலான ‘சிவில் தேசியமாக’ சிலோனிஸ் தேசமொன்றை கட்டமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால், மேற்கின் தேசிய சித்தாந்தங்களுக்கு இயைபடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டிருந்த இலங்கைத் தீவில், அதைச் சாத்தியப்படுத்துவது இலகுவாக இருக்கவில்லை. மேலும், இலங்கையில் ‘சிலோனிஸ்’ சிவில் தேச முயற்சிக்குத் தடையாக, பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களிடம் ‘சிங்கள-பௌத்த’ இனமத தேசியவாதம் உருவாகிக் கொண்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழத்தொடங்கிய இந்தப் பெரும்பான்மை இனமதப் பிரக்ஞை, இலங்கையில் சிவில் தேசமொன்று கட்டமைக்கப்படுவதற்கு எதிரான பெருஞ்சவாலாக மாறிக்கொண்டிருந்தது. ஆகவே, ஜீ.ஜீ. பொன்னம்பலம் 50:50 கேட்டதானது, இலங்கை என்ற சிவில் தேசம் வெற்றிகரமானதாக இயங்கவேண்டுமானதாக இருந்தால், இலங்கை அரசாங்கமானது, எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மை கொள்ளத்தக்க வாய்ப்புடைய, பெரும்பான்மை இனமத தேசியத்தின் பிடியில் சிக்கிவிடக்கூடாது; அதைத் தடுக்கவே, அவர் 50:50 கோரியிருந்தார். சேர். பொன்னம்பலம் இராமநாதன் முதல், ஜீ.ஜீ.பொன்னம்பலம் வரை, இலங்கை ‘சிலோனிஸ்’ எனும் சிவில் தேசத்தை கட்டமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தனர் என்பதுதான் நிதர்சனம். ஆனால், 1950களில் அநகாரிக தர்மபாலவிலிருந்து தோன்றி வளர்ந்து வந்த ‘சிங்களபௌத்த’ இனமத தேசியத்துக்கு எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க அரசியல் முன்னணியில் இடமளித்ததுடன், ‘சிலோனிஸ்’ எனும் சிவில் தேசக் கனவு கலையத் தொடங்கியது. அதன் சவப்பெட்டியின் மீதான, இறுதி ஆணியாக 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடனான இலங்கை ‘ஸ்ரீ லங்கா’ என்ற குடியரசின் பிறப்பு அமைந்தது. சிலோனும் ஸ்ரீ லங்காவும் தமிழில் இலங்கை என்றே தொடர்ந்து அழைக்கப்பட்டாலும், இரண்டுக்குமான வேறுபாடு இதுதான். ‘சிலோன்’ என்பது கொலனித்துவப் பெயர்; பிரித்தானியப் பேரரசின் அடிமைப் பெயர் என்று, சுதேச எண்ணம் கொண்டவர்கள் சொல்லவதுண்டு. ஆனால், சிலோன் என்பது, மேற்கத்தேய பாணியிலான சிவில் தேசமொன்றைக் கட்டமைக்கும் கனவுப் பெயர் என்பதும் நிதர்சனமானதே. அது, இந்தத் தீவில் வாழும் மக்கள் கூட்டம் அனைவரையும் அவர்களது இன, மத, மொழி, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, சிவில் தேசமாக ஒன்றிணைக்கும் கனவு. மேற்கத்தேயப் பாணியில், பிரான்ஸ் தேசத்தைப் போன்று, அமெரிக்க தேசத்தைப் போன்று, ‘சிலோனிஸ்’ தேசத்தை வடிவமைக்கும் கனவு அது. ஆனால், எழுச்சி கண்ட பெரும்பான்மை இனமத தேசியவாதத்தின் விளைவால் அந்தக் கனவு கலைந்தது. அந்தப் பெரும்பான்மை இனமத தேசியம், சிறுபான்மையினருக்கு எதிரான கட்டமைவாகவும் பெருந்திரள்வாதப் போக்குடைய பாதையில் பயணித்ததன் விளைவாக, பெரும்பான்மை இனமத தேசியவாதத்தின் மேலாதிக்கத்தை, அடக்குமுறையை எதிர்கொள்வதற்குச் சிறுபான்மை மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள், ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுவதைப் போன்று, ‘தற்காப்புத் தேசியவாதத்தை’க் கையிலெடுத்தார்கள். 20ஆம் நூற்றாண்டின் மய்யப்பகுதியில் இந்தத் ‘தற்காப்புத் தேசியவாதத்தின்’ பிறப்பை நாம் அவதானிக்கலாம். ஆகவே, எப்படி ‘சிங்கள பௌத்த’ தேசியவாதம் என்பது 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உருவான தேசியவாதமோ, அதைப்போன்று, தமிழ்த் தேசியம் என்பது, அந்தச் ‘சிங்கள பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதத்தில் இருந்தும், அதன் மேலாதிக்கம், அடக்குமுறை என்பவற்றில் இருந்துமான தற்பாதுகாப்புக்காக 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் உருவானது. ஆகவே, இன்றுள்ளதைப் போன்ற ‘சிங்கள பௌத்த’ தேசம் என்பது, வரலாற்றுக் காலத்திலிருந்து, விஜயனின் வருகையிலிருந்து, அநுராதபுர, பொலநறுவைக் காலத்திலிருந்து இருப்பது என்பதும், ‘தமிழ்த் தேசம்’ என்பது கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றியது என்பதும் ஏற்புடைய கருத்துகள் அல்ல. இந்தத் தீவில், மக்கள் கூட்டம் 19ஆம் நூற்றாண்டுவரை, தன்னை சமகாலத்தில் அடையாளம் காண்பது போன்ற தேசங்களாக, அடையாளம் கண்டு கொண்டதில்லை என்பதுதான் மானுடவியல், வரலாற்று ஆய்வுகள் வௌிக்காட்டி நிற்கும் உண்மை. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிவில்-தேசியமும்-இனமத-தேசியமும்/91-228977 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted February 11, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted February 11, 2019 வேற்றுமையில் ஒற்றுமை என்.கே. அஷோக்பரன் / 2019 பெப்ரவரி 11 திங்கட்கிழமை, மு.ப. 01:02 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -182) “சிங்கள-பௌத்த” பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது. அதனால்தான், ஏ.ஜே. வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள். “தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர். சாதிகள் சேர்க்கையாக, சாதி ரீதியாகக் கட்டமைந்திருந்த தமிழ் மக்களிடையே, ‘தமிழர்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்ய பேரினவாதத் தேசியம் முயன்றதன் எதிர்விளைவாக, அதே தமிழர் என்ற தேசிய அடையாளத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒன்றிணைந்தமையை நாம் காணலாம். இது, தமிழரிடையேயான சாதி ஆதிக்கக் கட்டமைப்பிலும் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தமையை நாம் மறுக்க முடியாது. இதுபற்றி, ‘இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல்’ என்ற ஆய்வில், அம்பலவாணர் சிவராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இலங்கைத் தமிழர்களின் அரசியல், யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலிருந்து குறிப்பிட்ட குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளதெனக் காண்கிறோம். அதாவது, சாதியில் உயர்ந்த வேளாளர்களே அரசியல் ரீதியில் பிரதானமான பதவிகளை வகித்து வந்துள்ளார்கள். இந்நிலை போர்த்துக்கேயர், டச்சுக்காரர் ஆட்சிக்காலப் பகுதிகளிலும் தொடர்ந்தது. பிரித்தானியர் ஆட்சியின்போது, இது மிகவும் தெளிவாகியது. இலங்கைத் தமிழர்களுக்குள்ளே யாழ்ப்பாணத் தமிழர்களும் அவர்களிலும் வேளாளர் சாதியமைப்பைச் சேர்ந்த, நிலவுடைமை, ஆங்கிலக் கல்வி என்பவற்றைப் பெற்றுக்கொண்டவர்களே அரசியலிலும் ஆக்கிரமிப்புச் செலுத்த முடிந்தது........ மிகவும் அண்மைக்காலம் வரை அதாவது தமிழ்த் தீவிரவாதக் குழுக்கள், இலங்கைத் தமிழர் அரசியலைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்வரை வேளாள உயர்ந்தோர் குழாமே, இலங்கைத் தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் அரசியலை, ஆக்கிரமித்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது”. தமிழ்த் தேசியம், இலங்கைத் தீவின் அரசியலில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் என்ற இனக்கூட்டத்தின் கட்டமைப்பிலும் போக்கிலும் சிந்தையிலும் கூட, மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. சாதி ரீதியின அடையாளத்தை மேவி, இனத் தேசிய அடையாளம் முன்னிறுத்தப்பட்டது. ‘தேசியம்’ (Nationality) என்ன என்ற வினாவுக்கு ‘இலங்கைத் தமிழர்’ என்று குறிப்பிடும் போக்கு வலுத்தது. பிறப்புச் சான்றிதழில் ‘சாதி’ என்று வழங்கப்பட்ட இடத்திலும் ‘இலங்கைத் தமிழர்’ அல்லர் ‘தமிழர்’ என்று பதியப்படுவதையும் நாம் அவதானிக்கலாம். இவற்றால் எல்லாம், சாதிகளின் சேர்க்கை என்ற நிலையிலிருந்து, இலங்கைத் தமிழர், முழுமையான இனத் தேசமாக கட்டமைந்து விட்டார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால், ‘தமிழர்’ என்ற சமூகம் கட்டமைந்த விதம், தமிழ்த் தேசியத்தின் எழுச்சியோடு, கணிசமாக மாறியது என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியம் என்பது, ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராகத் தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த எதிர்வினைப் பாதை. பெரும்பான்மை இன-மத தேசிய எழுச்சியை, அதற்கு எதிரானதொரு தற்பாதுகாப்புத் தேசிய எழுச்சியைத் தவிர, தமிழ் மக்கள் வெவ்வேறு வகைகளில் எதிர்கொண்டிருக்க முடியும். வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும். 1976 இல் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ வரை, தமிழ்த் தலைமைகள் சிவில் தேச அடிப்படைகளுக்குள், சிறுபான்மைப் பாதுகாப்புக்காகப் பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வையே கோரியிருந்தார்கள். ஆகவே, தமிழ்த் தேசியம், அதன் பாலான தனியரசு என்பவை, மற்றைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி காணாததனாலேதான் தமிழ்த் தலைமைகளால் முழுமையாகச் சுவீகரிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை, அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியம், தனியரசு என்ற ரீதியில் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள் என்றால், அந்த மறுதாக்கத்தை உருவாக்கிய முதற்தாக்கம்தான், அந்த மறுதாக்கம் பிறப்பதற்கான காரணம். தாராளவாத கொள்கையாளர்களுக்கு, தமிழ்த் தேசியம் ஒவ்வாமை மிக்கதொன்றாக இருப்பது, புரிந்துகொள்ளத்தக்கதே. சிவில் தேசக்கட்டமைப்பை விரும்பும் தாராளவாதிகளுக்கு, இனத் தேசியம் என்ற கருத்தியல் கசப்பானதுதான். ஆனால், தமிழ் இனத்தேசியத்தை விமர்சிப்பவர்கள், அதே பேரார்வ உணர்வுடன், சிங்கள-பௌத்த, இன-மத தேசியத்தைக் கேள்விக்குட்படுத்தாது விடுவது, அவர்களது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. மறுபுறத்தில், சிந்தாந்த ரீதியலாக மேற்கத்தேய தாராளவாதிகளின் சிவில் தேச கருத்தியலுடன், இலங்கையின் இனம் மற்றும் இன-மத தேசக் கருத்தியல்கள் ஒத்தமையாததனால், தாராளவாதிகள் கருத்தியல் ரீதியில் இந்தத் தேசியங்களை நிராகரிக்கிறார்கள். ஆனால், இந்த இடத்தில் றாம்சே மயர், வோக்கர் கோனர் கூறும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகிறது. சுருங்கக் கூறுவதானால், தேசம் என்பது ஓர் உணர்வாகும். இறுதியாக நாம், ஒரு தேசத்தின் உறுப்பினர்களானவர்கள் உணர்ச்சிப்பெருக்குடனும் ஏகமனதாகவும் தம்மை ஒரு தேசமாக நம்புவதனால், நாம் அதைத் தேசமென்று கருதமுடியும் என்று, றாம்சே மயர் கருத்துரைக்கிறார். கருத்தியல் வாதப்பிரதிவாதங்களைத் தாண்டிய இந்தக் கருத்தை, ஆமோதிக்கும் வோக்கர் கோனர், அது எவ்வாறானது என்பதை விட, மக்கள் அதை எவ்வாறு நம்புகிறார்கள் என்பதே, இறுதியில் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள். “தமிழர்கள் ஓர் இனமாகவே இருக்கவில்லை. தமிழர்கள் பிராந்திய ரீதியில், பிரதேச ரீதியில், சாதி ரீதியில் பிரிவடைந்திருந்தார்கள். அவர்கள் வரலாற்றில் ஒருபோதும் தேசமாக இருக்கவில்லை. தமிழர்கள் என்பவர்கள், வந்தேறு குடிகள்” இப்படி எத்தனை வாதங்களை முன்வைத்தாலும், இன்றைய சூழலில், தமிழ் மக்கள் உணர்ச்சிப்பெருக்குடனும், ஏகமனதாகவும் தம்மை ஒரு தனித் தேசமாக உணர்கிறார்கள் என்றால், எந்தக் கருத்தியல்வாதமும் வரலாற்று வாதமும் எந்தத் தத்துவார்த்த நிலைப்பாடும், அந்த உணர்வை மாற்றிவிடாது. ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதிகளும் மேற்கத்தேய லிபரல் தாராளவாதிகளும் வேறுபட்ட, தத்தமது கருத்தியல் காரணங்களுக்காகத் தமிழ்த் தேசத்தை, அதன் இருப்பை நிராகரிக்கிறார்கள் என்பதால், தமிழ் மக்கள் உணர்ச்சிப்பெருக்குடனும், ஏகமனதாகவும் தம்மை, ஒரு தேசமாகக் கருதும் நிதர்சனம் மாறிவிடப்போவதில்லை. தமிழ்த் தேசத்தையும் தேசியத்தையும் உணர்ந்துகொள்ள, இந்தப் புரிதல் அவசியமானது. 1956இலிருந்து, தமிழ்மக்கள் ஏகோபித்து, தமிழ்த் தேசியத்துக்கான தமது அங்கிகாரத்தையும் மக்களாணையையும் வழங்கிவந்திருக்கிறார்கள். இது, ஆறு தசாப்த காலத்துக்கும் மேலான தமிழ் மக்களின் மக்கள் விருப்பத்தைப் பறைசாற்றி நிற்கிறது. கருத்தியல் வாதங்களால், இந்த யதார்த்தத்தை, மறுத்துவிட முடியாது. இதனால்தான், திம்புக் கோட்பாடுகளின் முதல் கோட்பாடான ‘இலங்கைத் தமிழர், ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்’ என்பது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் முதன்மை மிக்கதாக இருக்கிறது. இன்றும், இலங்கை அரசியலில் ‘இலங்கை’ எனும் சிவில் தேசிய அரசைக் கட்டமைக்கும் கனவைச் சிலர் முன்வைத்தே வருகிறார்கள். ‘நாம் யாவரும் இலங்கையர்’, ‘ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்’ போன்ற, பகட்டாரவாரப் பேச்சுகள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. குறிப்பாக, மீளிணக்கப்பாடு தொடர்பான தளங்களில், இந்தப் பேச்சு அதிகம் ஒலிக்கும். ‘இலங்கை’ எனும் சிவில் தேசிய அரசைக் கட்டமைக்கும் கனவொன்றும் புதியதல்ல என்பதை, இந்தத் தொடரில் நாம் தௌிவாகப் பார்த்திருந்தோம். 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலும் இலங்கையிலிருந்த உயர்குழாம் அரசியல் தலைமைகளின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. ஆனால், பெரும்பான்மை இன-மத தேசியமும் அதற்கு எதிரான சிறுபான்மையினரின் தற்பாதுகாப்பு இனத் தேசியமும் பல தசாப்தங்களாக வேறூன்றிய அரசில், மீண்டும் சிவில் தேசியத்தை, பகட்டாரவாரப் பேச்சும் பிரசாரமும் மட்டும் உருவாக்கிவிடாது. மக்கள் தம்மை ஒரு தேசமாக உணராதவரை, அத்தகையதொரு தேசமொன்று உருவாகாது. சமகாலச்சூழலில் இலங்கை இன-மத, இனத் தேசியங்களிலிருந்து மீண்டும் தன்னை ஒரு சிவில் தேசமாக் கட்டமைவதற்கான அரசியல் தேவையோ, பிரக்ஞையோ காணப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. மாறாக, தாராளவாதிகளின் கவலைக்கு மத்தியில் இன-மத, இனத்தேசியம் இன்னும் வலுத்துக்கொண்டே இருப்பதைத் தான் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இங்கு, ‘ஒற்றுமை’ என்பதைவிட, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான், நடைமுறைக்குப் பொருத்தமான தீர்வை நோக்கிய அணுகுமுறையாக இருக்கும். அதாவது, மக்கள் தமக்கிடையேயான வேற்றுமைகளை மறுத்து, மேம்போக்கான ஒற்றுமையைச் சமைக்க முயற்சிப்பதைவிட, அந்த வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, அங்கிகரித்து, வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதுதான் நடைமுறைச்சாத்தியமானதும், உசிதமானதுமான அணுகுமுறையாகும். இந்த இடத்தில், சாதாரண மக்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும், ஜனநாயகம் என்பது, அந்த ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் வாழும், பெரும்பான்மை மக்கள் விருப்பத்தில் தங்கியதல்லவா? அப்படியானால், இலங்கையின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி, இலங்கை அரசு இயங்குவதில் என்ன தவறு? சாதாரண மக்களிடமிருந்து, இது அப்பாவித்தனமான கேள்வியாகவும் அரசியல் சந்தர்ப்பவாதிகளிடம் இது வஞ்சகத்தனமாக வாதமாகவும் முன்வைக்கப்படுகிறது. ஜனநாயகம் இயங்குவதற்கும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஜனநாயகத் தேர்தல் முறையில், பெரும்பான்மையோரது ஆதரவைப் பெற்றவர்கள் வெற்றி பெறுவதும், சட்டவாக்கத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற சட்டங்கள் நிறைவேற்றப்படுவதும் உண்மை. ஆனால், ஜனநாயகத்தின் அடிப்படை என்பது, மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி என்பதேயன்றி, பெரும்பான்மையினரால், பெரும்பான்மையினருக்காக நடத்தப்படும் பெரும்பான்மையினராட்சி என்பதல்ல. பெரும்பான்மைப் பலம் இருப்பதால், அந்தப் பலம் கொண்டு, விரும்பிய அனைத்தையும் நடத்திவிடுவது ஜனநாயகம் அல்ல; அது பெரும்பான்மையினரின் வல்லாட்சி. இறைமை, இலங்கை மக்களிடம் இருக்கிறது என்று இலங்கையின் அரசமைப்பு உரைக்கிறது. தேசிய-அரசுக் கட்டமைப்பிலுருவான இலங்கையின் அரசமைப்பு, இலங்கை மக்களால் ஆக்கியளிக்கப்பட்டதாக உரைக்கிறது. அப்படியானால், இங்கு இலங்கை மக்கள் எனப்படுவோர், பெரும்பான்மை மக்கள் மட்டும்தானா, அல்லது இங்குள்ள அனைவருமா என்ற கேள்வி எழுவதும் தவிர்க்கமுடியாதது. இந்த இடத்தில்தான், தேசிய-அரசுக் கருத்தியலுக்கும், இலங்கையின் உண்மையான ஆட்சியமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளை, நாம் அவதானிக்கலாம். இலங்கையில், ஒரு ‘மக்கள்’தான் இருக்கிறார்கள் என்ற எடுகோளில்தான், இலங்கை அரசும், இலங்கை அரசமைப்பும் கட்டமைகிறது. ஆனால், யதார்த்தத்தில் ஒருமையான ‘மக்கள்’ (People) என்பதைவிட, பன்மையான ‘மக்கள்கள்’ (Peoples) இருக்கிறார்கள் என்பதுதான் முரண்பாட்டின் முதலிடம். அது என்ன ‘மக்கள்கள்’? இந்தக் கேள்வி மிக முக்கியமானது. குறிப்பாக, ‘சுயநிர்ணய உரிமை’ தொடர்பில், ‘மக்கள்கள்’ என்ற பதத்தை விளங்கிக்கொள்ளுதல் அத்தியாவசியமானது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வேற்றுமையில்-ஒற்றுமை/91-229344 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted February 17, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted February 17, 2019 சுயநிர்ணய உரிமை என்.கே. அஷோக்பரன் / 2019 பெப்ரவரி 18 திங்கட்கிழமை, மு.ப. 12:46 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 183) இலங்கைத் தமிழர்களை, ஒரு தேசமாக அங்கிகரித்தல் என்பதைத் தொடர்ந்து, அடுத்த மிக முக்கியத்துவம் வாய்ந்த திம்புக் கோட்பாடாக அமைவது, ‘தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல்’ என்பதாகும். சுயநிர்ணய உரிமை என்பது, வெளி வற்புறுத்தல்கள் இன்றி, ஒருவர், தனது செயற்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள், தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு, தமது தற்போதைய நாட்டில் இருந்து, விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே சுயநிர்ணய உரிமையாகும். அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், ஐக்கிய அமெரிக்க, பிரான்ஸ் அரசமைப்புகள் ஆகியவை, சுயநிர்ணய உரிமைக் கருத்தியலின் ஆரம்பமாக, பலராலும் கருதப்படுகின்றன. ஆயினும், நவீனகால சுயநிர்ணய உரிமைக் கருத்தியலானது, அமெரிக்க ஜனாதிபதி வூட்றோ வில்சன், 1918இல் ஆற்றிய ‘பதின்னான்கு புள்ளி’ உரையிலிருந்து உதித்ததாகப் பலரும் மேற்கோள் காட்டுகிறார்கள். ‘ஆள்வதற்கான சட்டபூர்வ அதிகாரமானது, ஆளப்படுபவர்களின் அனுமதியிலிருந்து பிறக்க வேண்டும்’ என்ற வூட்றோ வில்சனின் கருத்தே, நவீன சுயநிர்ணய உரிமைக் கருத்தியலின் கருவாகக் கருதப்படுகிறது. முதலாவது, உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் சுயநிர்ணய கருத்தியல் அடிப்படைகளின் படி, பல புதிய அரசுகள் பிறந்தன. அவற்றின் பிறப்பானது, எதேச்சாதிகாரமான முறையில் உருவானதேயன்றி, சுயநிர்ணயம் என்பது சர்வதேச அங்கிகாரம் பெற்றதொரு பொதுவுரிமையாகக் கருதப்படவில்லை. அத்துடன், அத்தகைய பரந்துபட்ட உரிமையேதும் சர்வதேசச் சட்டத்தின் ஒரு பகுதியாக, உடனடியாக அங்கம் பெறவில்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டபோது, 1945ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் 1(2) மற்றும் 55(c) சரத்துகளானவை, மக்களின் சமவுரிமை, சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தேசங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தன. ‘இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னரான, ‘கொலனித்துவ விலக்க’ (decolonisation) காலகட்டத்தில் கொலனித்துவ விலக்கத்துக்கான அடிப்படையாக, கொலனித்துவத்துக்கு உட்பட்ட நாடுகளிலுள்ள மக்களின் சுயநிர்ணயம் கருதப்பட்டது. ஆயினும், அச்சுயநிர்ணயம் அந்நாடுகளிலுள்ள சிறுபான்மையினருக்கோ, மக்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கோ உரியதோர் உரிமையாகக் கருதப்படவில்லை’ என அரசும் சுயநிர்ணய உரிமையும் என்ற தன்னுடைய நூலில் டேவிட் ரயிக் கருத்துரைக்கிறார். கொலனித்துவ விலக்கத்தில், சுயநிர்ணயம் என்ற கருத்தியல் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், அது கொலனித்துவ நீக்கத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றாக இருந்தது என்பதுடன், பரந்துபட்டதோர் உரிமையாகக் கருதப்படவில்லை என்பதும் முக்கியமானது. இந்த நிலை 1966இல் சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றின் உருவாக்கத்துடன் மாற்றமடைகிறது. சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, ‘சகல மக்களும் சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வுரிமையின் பாலாக, அவர்கள் சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையைத் தீர்மானிப்பதுடன், சுதந்திரமாகத் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை முன்னெடுக்கிறார்கள்’ என்று வழங்கியது. இவ்வொப்பந்தங்களின் இந்தச் சரத்துகளின் ஊடாக, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையானது’ நேர்மறையானதோர் உரிமையாகச் சர்வதேச அங்கிகாரம் பெற்றது. சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR), ‘மக்களின் சுயநிர்ணய’ உரிமையை அங்கிகரித்திருந்தாலும், குறித்த உரிமை தொடர்பிலான பொருள்கோடல்களில் சிக்கல்கள் நிறையவே இருந்தன. குறிப்பாக, ‘மக்கள்’ என்ற பதம் பற்றியும் ‘தமது அரசியல் நிலையைத் தீர்மானித்தல்’ என்ற சொற்றொடர் தொடர்பிலான பொருள்கோடல்கள் சிக்கல்கள், வாதப்பிரதிவாதங்களுக்கு வழிவகுத்தன. இந்தச் சிக்கல்கள் தொடர்ந்த நிலையில், குறித்த சுயநிர்ணய உரிமையின் பயன்பாட்டைக் கொலனித்துவ நீக்கத்துக்கு மட்டுமாக மட்டுப்படுத்தும் பொருள்கோடல் மட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ‘நட்பான உறவுகள்’ பிரகடனம் (Friendly Relations Declaration) என்றறியப்படும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 1970ஆம் ஆண்டின் 26/25(XXV) பிரகடனமானது, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையானது, எந்தவகையிலும் சுதந்திரமும் இறைமையுமுள்ள சமவுரிமையையும் இன, சமய, நிறப் பாகுபாடுகள் எதுவுமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாங்கத்தை கொண்டுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு, அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதிப்பதாக பொருள்கொள்ளப்படாது’ என்று தீர்மானித்தது. இந்தத் தீர்மானமானது, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையின்’ பயன்பாட்டை மிகக்குறுகியதான ஒன்றாக்கியது. அதாவது, நடைமுறை ரீதியில் பார்த்தால், கொலனியாதிக்கம், அந்நியப் படையெடுப்பு ஆகியவற்றுக்கு உட்பட்டிருக்கும் மக்களுக்கு மட்டுமே உரியதானதாக, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையை’ குறித்த ‘நட்பான உறவுகள்’ பிரகடனம் சுருக்கியிருந்தது. ஆகவே, கொலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று, புதிய ‘தேசிய அரசு’களாக ஸ்தாபனம் பெற்றிருந்த அரசுகளுக்குள் இருந்த வேறுபட்ட மக்கள் கூட்டங்களுக்கு, சுயநிர்யண உரிமை உரித்தானதாகக் கருதப்படவில்லை. இதற்கு, அந்தத் தேசிய அரசுகளின் ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது முக்கிய காரணமாக அமைந்தது. சுதந்திரமும் இறைமையுமுள்ள அரசொன்றுக்குள் வாழும் வேறுபட்ட மக்கள் கூட்டங்களுக்கு, சுயநிர்ணய உரிமை உரித்தானது என்று கருதப்பட்டால், அவை தன்விருப்பத்தின் அடிப்படையில் மட்டும், குறித்த அரசிலிருந்து பிரிந்து, தனித்த அரசை ஸ்தாபிக்கும் விருப்பம் கொண்டால், அது குறித்த அரசுகளின் ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதாக அமையும் என்ற அச்சம் காரணமாக,‘மக்களின் சுயநிர்ணய உரிமையானது’ மேற்குறித்த, மிகக்குறுகிய முறையில் பொருள்கோடல் செய்யப்பட்டது. சுயநிர்ணய உரிமையின் இந்தப் பொருள்கோடல் மட்டுப்படுத்தலானது, சுயநிர்ணய உரிமையின் இரு வகைகளை உருவாக்கியது. முதலாவது, ‘உள்ளகச் சுயநிர்ணயம்’ என்றும், மற்றையது ‘வௌியகச் சுயநிர்ணயம்’ என்றும் வழங்கப்பட்டது. 1998இல், ‘க்யூபெக் குறிப்புரை’ தொடர்பான கனடிய மீயுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ‘சர்வதேசச் சட்டங்களின் அங்கிகரிக்கப்பட்ட மூலங்களானவை, சுயநிர்ணய உரிமையானது, உள்ளக சுயநிர்ணயத்தினூடாகவே நிறைவேற்றப்படுகிறது என்று நிறுவுகின்றன. அதாவது, மக்கள் கூட்டமொன்றின் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசார அபிவிருத்திக்கான முன்னகர்வுகள், ஏலவேயுள்ள அரசொன்றின் கட்டமைப்புக்குள்ளாகவே நிறைவேற்றப்படுகிறது என்று நிறுவுகின்றன’. வௌியகச் சுயநிர்ணயத்துக்கான உரிமையானது, மிகப்பாரதூரமான சந்தர்ப்பங்களில் மட்டும், அதுவும் கூட மிகக் கவனமாக வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே எழும். ஆகவே, அரசொன்றுக்குள் வாழ்கின்ற அனைத்து மக்கள் கூட்டங்களுக்கும், அந்த அரசுக் கட்டமைப்புக்குள்ளான சுயநிர்ணய உரிமையுண்டு. இதுவே உள்ளக சுயநிர்ணயம் எனப்படுகிறது. உள்ளகச் சுயநிர்ணய உரிமையானது, அந்த அரசுக் கட்டமைப்பைத் தகர்த்து, புதியதோர் அரசை ஸ்தாபிக்கத்தக்கதோர் உரிமையல்ல. அத்தகையதோர் உரிமைதான் வௌியகச் சுயநிர்ணயமாகும். இது மிகக் குறைந்த, வரையறுத்த சந்தர்ப்பங்களிலேயே ஏற்றுக்கொள்ளக்கூடியதோர் உரிமையாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, அரசானது அதற்குள்ளான ஒரு குறித்த மக்கள் கூட்டத்தின் மீது, திட்டமிட்டு இன அழிப்பை மேற்கொள்ளும் போது, குறித்த மக்கள் கூட்டம், வௌியகச் சுயநிர்ணய உரிமையின் மூலம் பிரிவினை கோருவது நியாயமானதாகக் கருதப்படும். ஆனால், பொதுவாக சுயநிர்ணய உரிமை எனும் போது, இன்றைய சூழலில், அது உள்ளகச் சுயநிர்ணய உரிமையையே சுட்டி நிற்கிறது என்பதுதான் நிதர்சனம். இது பற்றி, தன்னுடைய ‘மக்களின் சுயநிர்ணயம் - ஒரு சட்டரீதியான மறுவாசிப்பு’ என்ற நூலில் கருத்துரைக்கும் அன்ரோனியோ கஸீஸ், ‘மக்களின் உள்ளகச் சுயநிர்ணயம் (அதாவது தமது அரசியல், பொருளாதார ஆட்சிக் கிரமத்தை உண்மையாகவும் சுதந்திரமாகவும் தீர்மானிப்பதற்கான உரிமை) என்பதே, தொடர்ச்சியான உரிமையாகும் என்றும், மக்களின் வௌியகச் சுயநிர்ணயம் (அதாவது பிரிவினை, அரசொன்றிலிருந்து பிரிந்து, தனியரசொன்றை ஸ்தாபித்தல்) என்பது, கொலனித்துவ விலக்க சந்தர்ப்பங்களுக்கும் பாரதூரமான மனித உரிமை மீறல் முன்னெடுக்கப்படும் மிகச் சொற்பமான சந்தர்ப்பங்களில் அதனைச் சரி செய்வதற்கும் மட்டுமே உரியதாகும்’ என்று கருத்துரைக்கிறார். ‘உள்ளகச் சுயநிர்ணயம்’ என்ற கருத்தியலானது, ஆரம்பகாலத்தில் சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினைக்கான வித்து என்றும், அது இறைமையுள்ள சுதந்திர அரசொன்றின் ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டை என்றமைந்த கருத்தை மாற்றியமைப்பதாக அமைந்தது. ‘வௌியகச் சுயநிர்ணயம்’ என்பது, பிரிவினையை மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே ஒதுக்கியதன் மூலம், இறைமையுள்ள, சுதந்திர அரசின் ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கின்ற அதேவேளையில், மக்களின் சுயநிர்ணய உரிமையையும் உறுதிப்படுத்த முடியும் என்ற ஏதுநிலையை, உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருத்தியல் உருவாக்கியது. இது சுயநிர்ணய உரிமையுள்ள மக்கள் எல்லாச் சந்தர்ப்பத்திலும் பிரிவினையை நாடமுடியாது என்ற நிலையை உருவாக்கினாலும், ஏலவேயுள்ள அரசுக் கட்டமைப்புகள் அவர்கள் கொண்டிருந்த தமக்கான அரசியல், பொருளாதாரம், சமூக, கலாசார ஆட்சிக் கிரமத்தைத் தீர்மானிக்கும் உரிமையைப் பறைசாற்றியது. அந்த உரிமையை, ஒரு குறித்த மக்கள் கூட்டத்துக்கு எந்த அரசும் மறுக்க முடியாது. சுயநிர்ணய உரிமையின் தன்மை இவ்வாறானதாக இருக்க, சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவை வழங்குவதன்படி சுயநிர்ணய உரிமையானது அரசுகளுக்கு, தேசங்களுக்கு, இனக்குழுக்களுக்கு, தனிமனிதர்களுக்கு உரியதல்ல; மாறாக மக்களுக்கு உரியது. அப்படியானால் ‘மக்கள்’ என்பவர்கள் யார் என்பதற்கான வரைவிலக்கணம் இங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகிறது. இது தொடர்பில், ‘தன்னாட்சி அரசாங்கம் தொடர்பான அணுகுமுறை’ பற்றிய நூலில் கருத்துரைத்த சேர் ஐவர் ஜென்னிங்கஸ், ‘மேலோட்டமாகப் பார்க்கும் போது மக்களே தீர்மானிக்கட்டும் என்று வழங்கும் சுயநிர்ணய உரிமை நியாயமானது. ஆனால், இதிலுள்ள அபத்தம் யாதெனில், மக்கள் என்பவர்கள் யார் என்று தீர்மானிக்கும் வரை, மக்கள் தீர்மானிக்க முடியாது என்பதாகும்’, என்று குறிப்பிடுகிறார். சுயநிர்ணய உரிமையின் தன்மை இவ்வாறானதாக இருக்க, சர்வதேச பொருளாதாரம், சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றில் குறிப்பிடப்படும் ‘மக்கள்’ என்ற பதத்துக்கான வரைவிலக்கணம், மிக நீண்டகாலமாகத் தொக்கு நிலையிலேயே தொடர்ந்தது. அதற்கான பதில் 1990இல் கிடைத்தது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுயநிர்ணய-உரிமை/91-229708 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted February 25, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted February 25, 2019 மக்களும் சுயநிர்ணயமும் என்.கே. அஷோக்பரன் / 2019 பெப்ரவரி 25 திங்கட்கிழமை, மு.ப. 12:54 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 184) சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, ‘சகல மக்களும் சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வுரிமையின் பாலாக, அவர்கள் சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையைத் தீர்மானிப்பதுடன், சுதந்திரமாகத் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை முன்னெடுக்கிறார்கள்’ என்று வழங்கியது. ஆனால், இதிலுள்ள ‘மக்கள்’ என்ற பதத்தின் அர்த்தம், நீண்டகாலமாகவே தொக்கி நிற்குமொன்றாகத் தொடர்ந்து வந்தது. சுயநிர்ணய உரிமையைக் கொலனித்துவ விலக்கத்துக்கு என மட்டுப்படுத்தப்பட்டதோர் உரிமையாக, மேற்குலகு நோக்கியதன் விளைவாக, ‘மக்கள்’ என்ற பதத்தை, நவீன அரசுக் கட்டமைப்பின் அடிப்படையில், அணுகும் போக்கே, அதுவரை கடைப்பிடிக்கப்பட்டது. உதாரணமாக, ஓர் இறைமையுள்ள சுதந்திர அரசாங்கத்துக்கு உட்பட்ட மக்கள் அனைவரும், ஒரு மக்களாகக் கருதப்பட்டனர். ஆகவே, அவர்களது சுயநிர்ணய உரிமையானது, அந்நிய ஆதிக்கத்திலிருந்து அவர்களுக்குச் சுதந்திரத்தை அளிக்கத்தக்கதாக இருந்தாலும், அவர்களுக்கு உள்ளிருந்த சிறுபான்மையினர், தம்மைத் தனித்ததொரு மக்களாகக் கருதமுடியாததாக, அந்த அணுகுமுறை அமைந்திருந்தது. இது, ‘மக்கள்’ என்ற பதத்துக்கான போதுமான பொருள்கோடலாக இருக்கவில்லை என்பது, நீண்டகாலமாகத் தொடர்ந்து வந்ததொரு குறையாகும். 1990ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) மக்களின் உரிமைகள் பற்றிய கருத்தியல் கற்கைகள் தொடர்பிலான தௌிவுறுத்தல்களுக்காகச் சர்வதேச நிபுணர்களின் சந்திப்பை நடத்தியிருந்தது. அந்தச் சந்திப்பின் அறிக்கையானது, ‘மக்கள்’ என்ற பதத்தைப் பின்வருமாறு வரையறுத்தது. ‘மக்கள் எனப்படுவோர், பின்வரும் பொதுவான அம்சங்கள் சிலவற்றை, எல்லாவற்றையும் அனுபவிக்கும் தனிப்பட்ட மனிதர்களைக் கொண்ட குழு ஆகும். (அ) பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம். (ஆ) இனம் (race or ethnicity) என்றதோர் அடையாளத்தைக் கொண்டிருத்தல். (இ) கலாசார ஒருமைத் தன்மை. (ஈ) மொழி ஒற்றுமை. (உ) மதம், கருத்தியல் இணைப்பு. (ஊ) ஆட்புல இணைப்பு. (எ) பொதுவான பொருளாதார வாழ்க்கை. மற்றும், குறித்த குழுவானது, ஒரு குறித்த எண்ணிக்கையைக் கொண்டதாக அமைய வேண்டும். எனினும், அவ்வெண்ணிக்கை பெரியதாக இருக்கத் தேவையில்லை. ஆயினும், இது ஒரு மாநிலத்துக்கு உள்ளான தனிநபர்களின் ஒன்றியத்தை விடப் பெரியதாக இருக்க வேண்டும்; குறித்த குழுவுக்குத் தாம், ஒரு மக்கள் என்று, அடையாளப்படுத்தும் விருப்பு இருக்க வேண்டும்; அல்லது, தாம் ஒரு மக்கள் என்ற பிரக்ஞை இருக்க வேண்டும். மற்றும், குறித்த குழுவானது, அதன் பொதுவான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதற்கான, தமது அடையாளத்தை, வௌிப்படுத்தவதற்கான நிறுவனங்களை, வேறு வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது, மேற்குறிப்பிட்ட பட்டியிலுள்ள அம்சங்களில் சிலவற்றையேனும் கொண்டிருக்கும் தனிமனிதர்களின் குழுவானது, அந்தக் குழு சாதாரண ஒரு சங்கத்தைவிட, அதிக மக்கள் தொகையைக் கொண்டிருப்பதுடன், அந்த மனிதர்களின் குழு, தம்மைத் தனித்ததொரு மக்களாக அடையாளப்படுத்தும் விருப்பையும் அந்த அடையாளம் தொடர்பான பிரக்ஞையையும் கொண்டிருப்பதுடன், அதற்கான நிறுவனங்கள், அதனை வௌிப்படுத்துவதற்கான வேறு வழிமுறைகளைக் கொண்டிருந்தால், அந்தத் தனிமனிதர்களின் குழு, தனித்ததொரு ‘மக்கள்’ என்று கருதப்படும். ஆகவே, அத்தகையதொரு தனிமனிதர்களின் குழு, ‘மக்கள்’ என்று அமையும் போது, சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தின்படி, சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்கிறார்கள். யுனெஸ்கோவின் மேற்குறித்த மக்களின் உரிமைகள் பற்றிய கருத்தியல் கற்கைகள் தொடர்பிலான தௌிவுறுத்தல்களுக்காக, சர்வதேச நிபுணர்களின் சந்திப்பில் உதித்த வரைவிலக்கணத்தின்படி, சட்டரீதியாகப் பார்த்தால், ஒரு சிறுபான்மை இனம், ஒரு தனித்த மக்கள் கூட்டமாக ஆக முடியாததற்கான காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என, தன்னுடைய ‘சிறுபான்மைக் குழுக்கள், தன்னாட்சி, சுயநிர்ணயம்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் ஜேன் றைட் கருத்துரைக்கிறார். ஆயினும், சிறுபான்மைக் குழுவொன்றைத் தனித்ததொரு மக்களாக மேற்குறித்த வகையில் அங்கிகரிப்பதில் சுதந்திரம், இறைமையுள்ள பல்வேறு அரசாங்கங்களும் காட்டும் தயக்கத்துக்கான காரணத்தையும் அவர் குறிப்பிட மறக்கவில்லை. சுயநிர்ணய உரிமையானது அதன் வௌியக அடிப்படையில், அதாவது, அரசொன்றிலிருந்து பிரிந்து, தனியரசொன்றை ஸ்தாபித்தல் பிரிவினை எனக் கருதப்படும் போது, இறைமையுள்ளதொரு சுதந்திர அரசின் ஆட்புல ஒருமைப்பாட்டையும் அரசியல் ஒற்றுமையையும் சிதைத்து, பிரிவினைக்கு வழிவகுக்குமொன்றாக கருதப்படுவதால்தான், சிறுபான்மை இனங்களைத் தனித்த மக்களாக அங்கிகரிப்பதற்கு அரசுகள் பின்நிற்கின்றன. ‘மக்கள்’ என்பதற்கான மேற்குறித்த பதத்தின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களை அணுகினால், அந்தப் பட்டியலிலுள்ள பல அம்சங்களை, ‘இலங்கைத் தமிழர்கள்’ திருப்தி செய்வதை அவதானிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இலங்கைத் தமிழர்கள்’ தம்மைத் தனித்துவமான மக்களாக அடையாளப்படுத்தும் விருப்பத்தைக் கொண்டிருப்பதுடன், அந்தப் பிரக்ஞை அவர்களிடம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது. அவ்வகையில் பார்க்கும் போது, ‘இலங்கைத் தமிழர்கள்’ என்பவர்கள், தனித்ததொரு மக்கள் கூட்டமாகிறார்கள்; ஆகவே அவர்கள், சுயநிர்ணய உரிமையுடையவர்கள் ஆகிறார்கள். ஆனால், இதை அங்கிகரிப்பதற்கு, இலங்கையிலுள்ள பெரும்பான்மை மக்களோ, இலங்கை அரசாங்கமோ, தயாராக இல்லாததற்கு வௌியகச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான பிரிவினை அச்சம் பிரதான காரணமாகும். இதனால்தான், கருத்தியல் ரீதியாகக் கூட, தமிழர்களை, இலங்கைத் தீவில் வாழ்ந்து வருகின்ற சிறுபான்மை இனம் என்றே ஏற்றுக்கொள்கிறார்களே அன்றி, அவர்களைத் தனித்ததொரு மக்களாகவோ, தேசமாகவோ அங்கிகரிப்பதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை. மறுபுறத்தில், ‘இலங்கைத் தமிழர்கள்’ தனித்த மக்களே அல்ல என்பதற்கான வாதங்களையும் சிலர் முன்வைக்கிறார்கள். அந்த வாதத்தில் மேவி நிற்கும் பொருள் தவறென்றாலும், அதில் அவர்கள் மேற்கோள் காட்டும் தரவுகள் சில உண்மையானவை என்பதையும் மறுக்க முடியாது. உதாரணமாக, இன்று ‘இலங்கைத் தமிழர்கள்’ என்ற வரைவிலக்கணம், பெருமளவுக்கு வடக்கு, கிழக்கு என்ற இரு மாகாணங்களையும் தாயகமாகக் கொண்ட தமிழர்களைக் குறிக்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், ‘இலங்கைத் தமிழர்கள்’ என்று இன்று கருதப்படுவோர், வேறுபட்ட பிராந்தியங்களில், வேறுபட்ட சமூகக் கட்டமைப்பையும் சமூக வழமைகளையும் கொண்டிருந்தனர் என்பது தௌிவாகும். ‘இலங்கைத் தமிழர்களின் தேச வழமைகள், சமூக வழமைகள்” பற்றிய தன்னுடைய ஆய்வில், தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன், யாழ்ப்பாணத் தமிழர்கள், புத்தளம்-கற்பிட்டித் தமிழர்கள், திருகோணமலைத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள் ஆகியோர் வேறுபட்ட தேசவழமைகளைக் கொண்டிருந்தமையைக் கோடிட்டுக் காட்டுகிறார். அவற்றிடையேயான ஒற்றுமைகள் சிலவற்றை அடையாளம் காணக் கூடியதாக இருப்பினும், இன்றைய, இலங்கைத் தமிழர்கள் என்போர், வரலாற்றுக் காலத்திலும் இதே ஒருமைத் தன்மையான அடையாளப் பிரக்ஞையைக் கொண்டிருக்கவில்லை என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இன்றைய சூழலில், ‘இலங்கைத் தமிழர்கள்’ ஒரு மக்கள் கூட்டமல்ல என்று நிறுவுவதற்கு, மேற்குறித்த நியாயம் பொருத்தமானதல்ல. ஏனெனில், ஏறத்தாழ கடந்த ஆறரை தசாப்த காலமாக, இலங்கைத் தமிழர்கள் தாம் ஒரு தனித்த மக்கள் கூட்டம், தனித்த தேசம் என்பதைத் தொடர்ந்து தேர்தல்களில், தாம் ஏகோபித்து வழங்கிய மக்களாணை மூலம் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஆகவே, தம்மை மிகத் தௌிவாகத் தனித்ததொரு மக்கள் கூட்டமாக உணர்கின்ற, அந்தப் பிரக்ஞையோடு, தொடர்ந்து இயங்குகின்ற, அதற்கான சமூக, அரசியல் நிறுவனங்களையும் கட்டமைப்புகளையும் கொண்டுள்ள, மொழி, இன ரீதியாக இணைந்துள்ள, கருத்தியல் ரீதியான ஒருமைப்பாடுடைய, தமக்கான ஆட்புல எல்லைகளைத் தௌிவாக வரையறுத்துள்ள, பொதுவான பொருளாதார வாழ்க்கையைக் கொண்ட, ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் ஒரு தனித்த மக்கள் கூட்டத்தை, மக்கள் கூட்டம் இல்லை என்று, வெறுமனே சில வரலாற்று வாதங்களை முன்வைத்து மட்டும் நிராகரித்துவிட முடியாது. மேலும், இலங்கைத் தமிழர்களை ஒரு மக்கள் கூட்டமாக நிறுவுவதில் உள்ள அதேவரலாற்று ரீதியான தடைகள், சிங்களவர்களை ஒரு மக்கள் கூட்டமாக நிறுவுவதிலும் இருப்பதை அவதானிக்கலாம். இன்றுள்ள, ‘சிங்கள பௌத்த அடையாளப் பிரக்ஞையானது, முன்பு மிக விரிவாகப் பார்த்ததன்படி, அநகாரிக தர்மபாலவுக்குப் பின்னரான, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், உருவாகியதோர் அடையாளமாகும். அதற்கு முன்னர் அவ்வாறானதொரு பிரக்ஞை இருக்கவில்லை. ஆனால், இலங்கை என்ற நவீன தேசிய அரசு கட்டமைப்புக்குள் ‘சிங்கள பௌத்தர்கள்’ பெரும்பான்மை எண்ணிக்கையைக் கொண்டிருப்பதால், தம்மைத் தனி மக்களாக நிறுவ வேண்டிய தேவை அவர்களுக்கு எழவில்லை. மாறாகத் தாராளவாத ஜனநாயக முகமூடிக்குள், ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற ‘தேசிய அரசு’ என்ற அடிப்படைகளுக்குள் ஒளிந்துகொண்டே, தம்முடைய பெரும்பான்மை எண்ணிக்கைப் பலத்தால் தமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களால் முடிகிறது. அதாவது, வௌிப்பார்வைக்கு தாராளவாத ஜனநாயகத்தைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு, தம்முடைய ‘இனமத’ பெரும்பான்மைத் தேசியவாதத்தை, அந்த முகமூடிக்குள் முன்னெடுக்கிறது. இங்கு சிறுபான்மை இனங்கள், அந்தப் பெரும்பான்மை ‘இனமத’ தேசியத்தை எதிர்த்துத் தம்முடைய தேசியத்தை முன்னெடுக்கும் போது, தாராளவாத ஜனநாயக விழுமியங்களைப் பெரும்பான்மை, ‘இனம், மதம், தேசம் என்பவற்றைக் கையிலெடுத்துக் கொண்டு, சிறுபான்மையினரை இனவாதிகளாகச் சித்திரிக்கிறது. இது இலங்கையின் மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளிலும் காணப்படும் ஒரு நிலையாகும். இத்தகைய அரசுகள், சிறுபான்மையினரின் சுயநிர்யண உரிமையைப் பிரிவினைக்கான முதற்படியாகப் பார்க்கின்றன. ஆகவே, தமது ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக, அதைக் கடுமையாக எதிர்க்கின்றன. சுயநிர்ணய உரிமை என்பது, பிரிவினைக்கான வடிகால் என்பது சுயநிர்ணய உரிமை தொடர்பிலான பிழையானதொரு புரிதலாகும். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், 20ஆம் நூற்றாண்டில் பல புதிய அரசுகள் தோன்றியிருக்கின்றன. ஆனால், அதன் காரணமாக மட்டும், சுயநிர்ணய உரிமையைப் பிரிவினைக்கானதோர் அடிப்படையாகக் கருதிவிட முடியாது. அப்படியானால், இதற்கான தீர்வுதான் என்ன? நாம் முன்னர் பார்த்தது போலவே, உள்ளக சுயநிர்ணயம் என்பது, இந்தப் பிரிவினை அச்சத்தை இல்லாது செய்யும் ஒன்றாக அமைகிறது. அதாவது, சுயநிர்ணய உரிமையுள்ள மக்கள், சாதாரண நிலைகளின் கீழ் பிரிந்து செல்லும் உரிமை அன்றி, தமது அரசியல், பொருளாதார ஆட்சிக்கிரமத்தை உண்மையாகவும் சுதந்திரமாகவும் தீர்மானிப்பதற்கான உரிமையே உள்ளக சுயநிர்ணய உரிமையாகக் கருதப்படுகிறது. அப்படியானால், இலங்கையில் தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை, அங்கிகரிக்கப்பட்டிருக்கிறதா? (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மக்களும்-சுயநிர்ணயமும்/91-229967 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted March 4, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted March 4, 2019 இலங்கையில் சுயநிர்ணயம் என்.கே. அஷோக்பரன் / 2019 மார்ச் 04 திங்கட்கிழமை, மு.ப. 12:29 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 185) ஏகத்துவமும் த்வைதமும் சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, ‘சகல மக்களுக்கும்’ உரியதாக உரைக்கும் சுயநிர்ணய உரிமை, இலங்கைக்கும் பொருந்துமா என்பது, இங்கு எழக்கூடிய முக்கியமான கேள்வியாகும். 1980 ஜுன் 11ஆம் திகதி, சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டிலும் இலங்கை கையெழுத்திட்டு, குறித்த இரண்டு உடன்படிக்கைகளிலும் அங்கத்துவம் பெற்றுக்கொண்டது. ஆனால், உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதால் மட்டும், குறித்த உடன்படிக்கையின் சரத்துகள், நேரடியாக இலங்கையில் செல்லுபடி உடையதாகாது. இதற்குக் காரணம், இலங்கை ஒரு ‘த்வைத’ (dualist) அரசாகும். சர்வதேச சட்டங்களின் நேரடிச் செல்லுபடித் தன்மையைப் பொறுத்து, அரசுகள் ஏகத்துவ (monist) அரசுகள், த்வைத (dualist) அரசுகள் என்று, இருவகைப்படுத்தப்படுகின்றன. ஏகத்துவவாதிகள் உள்நாட்டு, சர்வதேச சட்டங்களை ஒருமைத் தன்மையோடு அணுகுகிறார்கள். அதாவது, ஏகத்துவ நாடுகளில், உள்நாட்டுச் சட்டங்கள் எவ்வாறு நேரடியாக, உள்நாட்டில் அமுல்படுத்தப்படுகிறதோ, அதேபோன்றே, சர்வதேசச் சட்டங்களும் அதாவது, குறித்த அரசாங்கங்கள் பங்குதாரராகியுள்ள சர்வதேச உடன்படிக்கைகள், பாரம்பரிய சர்வதேசச் சட்டங்கள் என்பனவெல்லாம் நேரடியாக உள்நாட்டில் அமுலாகும். சுருங்கக் கூறின், உள்நாட்டுச் சட்டங்களுக்கு ஒப்பானதாக, சர்வதேசச் சட்டங்களும் ஏகத்துவ அரசுகளில், நேரடி வலுவுடையதாக அமைகின்றன. ஆகவே, சர்வதேசச் சட்டங்களை உள்நாட்டில் வலுவுடையதாக்கவும் நடைமுறைப்படுத்தவும் மீண்டும் உள்நாட்டில் தனித்துச் சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை. ஆயினும், சில ஏகத்துவ அரசுகளில் சர்வதேச உடன்படிக்கைகள், பாரம்பரிய சர்வதேசச் சட்டங்கள் ஆகியவை, நேரடியாக அமுலாவது தொடர்பில் வேறுபாடுகள் உண்டு, இவை, பகுதியளவு ஏகத்துவ அரசுகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, த்வைதவாதிகள் உள்நாட்டுச் சட்டங்களையும் சர்வதேச சட்டங்களையும் வெவ்வேறானதாகப் பார்க்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில், சர்வதேசச் சட்டங்கள் என்பது, உள்நாட்டில் நேரடியாக வலுப்பெறாது என்பதுடன், சர்வதேசச் சட்டங்கள் உள்நாட்டுக்குப் பெயர்க்கப்பட வேண்டும். அதாவது, குறித்த சர்வதேசச் சட்டமொன்று, உள்நாட்டில் வலுப்பெற, அந்தப் பெயர்ப்பைச் செய்யும் உள்நாட்டுச் சட்டமொன்று, இயற்றப்பட வேண்டும். இந்தப் பெயர்ப்பு, இடம்பெறாத வரை, சர்வதேசச் சட்டங்கள் உள்நாட்டில் சட்டமென்ற அந்தஸ்தைப் பெறாது. அப்படி, உள்நாட்டில் சட்டமென்ற அந்தஸ்தைப் பெறாத சர்வதேசச் சட்டத்தை, உள்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதோடு, அந்தச் சர்வதேசச் சட்டத்துக்கு முரணான உள்நாட்டுச் சட்டங்கள் தொடர்ந்தும் வலுவிலிருக்கும். ஆகவே, சர்வதேச உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டதன் மூலம், ஒரு த்வைத அரசானது குறித்த சர்வதேசச் சட்டத்தைச் சுவீகரித்திருந்தாலும், அதை உள்நாட்டுக்குப் பெயர்ப்புச் செய்யாதவரை, அது உள்நாட்டில் வலுப்பெறாது என்பதுடன், அந்தச் சர்வதேசச் சட்டத்துக்கு முரணாகவுள்ள உள்நாட்டுச் சட்டங்கள், தொடர்ந்தும் வலுவிலிருக்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில், குறித்த அந்த அரசாங்கமானது, குறித்த சர்வதேசச் சட்டத்தை, மீறுவதாகவே கருதப்படும். இலங்கையும் சுயநிர்ணய உரிமையும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த பெரும்பாலான நாடுகள், ஏகத்துவ அரசுகளாக இருப்பதை நாம் அவதானிக்கும் அதேவேளை, ஐக்கிய இராச்சியம், ‘த்வைத’ அரசுக்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தைப் போலவே, இலங்கையும் ஒரு ‘த்வைத’ அரசாகும். ஆகவே, மேற்குறித்த இரண்டு ஒப்பந்தங்களிலும் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டிருந்தாலும், அதிலுள்ள அனைத்துச் சரத்துகளும் உள்நாட்டுச் சட்டங்கள் மூலம், உள்நாட்டுக்குப் பெயர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, குறித்த உடன்படிக்கைகள் உள்நாட்டில் வலுவுடையதாகும். இலங்கை அரசானது, 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்பானது, மேற்குறித்த இரு உடன்படிக்கைகளும் வழங்கும் உரிமைகளின் பெரும்பான்மையானவற்றை, உள்நாட்டுக்குப் பெயர்த்துள்ளதாக உரைத்தது. ஆயினும், சில உரிமைகள் உள்நாட்டுக்குப் பெயர்க்கப்படவில்லை என்ற பெரும் வாதம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்தது. இதில், குறித்த உடன்படிக்கைகள் இரண்டினதும் 1(1) சரத்தானது, ‘சகல மக்களுக்கும்’ உரியதென வழங்கும், சுயநிர்ணய உரிமை மிக முக்கியமானது. இலங்கையின் அரசமைப்பில் வழங்கப்பட்டிராத, சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கையிலுள்ள உரிமைகளை, உள்நாட்டில் பெயர்க்கும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட 2007ஆம் ஆண்டின், 56ஆம் இலக்கச் சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கைச் சட்டம் இயற்றப்பட்டபோதும் கூட, சுயநிர்ணய உரிமை அதில் அங்கம் வகிக்கவில்லை. இதற்குக் காரணம், சுயநிர்ணய உரிமை என்பது, அதன் ஆரம்பகால கொலனித்துவ விலக்கக் காலகட்டப் பொருள்கோடலுடன் அணுகப்பட்டமையே ஆகும். குறித்த, சர்வதேசக் குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கைச் சட்டம் தொடர்பில், உயர்நீதிமன்றத்தில் உள்ள, கலந்தாய்வு நீதியாதிக்கத்தின் படி, உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி குறித்துரைத்த வினாக்களுக்கு, 2008 மார்ச் 17ஆம் திகதி தீர்மானமளித்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வானது, சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை வழங்கும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது. ‘...சுயநிர்ணய உரிமையானது, மனித உரிமைகள் செயற்குழுவால் நிறுவப்பட்டுள்ளதன்படி, சட்டவாக்கத்தினூடாக நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. இந்த நிலைப்பாடானது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானம் 2625(XXV)இல் உள்ளடங்கியுள்ள சர்வதேசச் சட்டத்தின் கொள்கைப் பிரகடனத்தின் படி, மேலும் உறுதி செய்யப்படுகிறது...’ அரசமைப்பின் மூன்றாவது சரத்தின்படி, ‘இலங்கைக் குடியரசில், இறைமை மக்களுக்கு உரியதாகவும் பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும்’ என்பது, இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டியதாக இருக்கிறது. ஆகவே இறைமையானது, முழு மக்கள் மீதும் சாற்றப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு குழு, முழு மக்களில் ஒரு பகுதி, தனித்த சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று தர்க்கிக்க முடியாது. ஆகவே, 2008இல் இலங்கையின் உயர்நீதிமன்றமானது, ஏறத்தாழ 30 ஆண்டுகள் பழைமையான, ‘நட்பான உறவுகள்’ பிரகடனம் (Friendly Relations Declaration) என்றறியப்படும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின், 1970ஆம் ஆண்டின் 2625(XXV) இலக்கத் தீர்மானத்தின்படி, மக்களின் சுயநிர்ணய உரிமையானது, எந்தவகையிலும் சுதந்திரமும் இறைமையுமுள்ள சமவுரிமையையும் இன, சமய, நிறப் பாகுபாடுகள் எதுவுமின்றி, அனைத்து மக்களுக்குமான அரசாங்கத்தைக் கொண்டுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு, அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதிப்பதாகப் பொருள்கொள்ளப்படாது என்ற சுருங்கிய, கொலனித்துவ விலக்க காலகட்டத்துக்குரிய பொருள்கோடலை அங்கிகரித்து ஏற்றிருந்தது. இது சுயநிர்ணய உரிமை தொடர்பில், 1970 பிரகடனத்துக்குப் பிறகு, உலக அளவில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்திற்கொள்ளாது விட்டிருந்தமை, மிகவும் வருத்தத்துக்கு உரியதாகும். இந்தப் பொருள்கோடலின் அர்த்தம் யாதெனில், இலங்கையில் பன்மையான மக்கள் இல்லை, ‘இலங்கையர்’ என்ற ஒரு மக்கள்தான் இருக்கிறார்கள், அந்த, ‘இலங்கையர்’ முழுமைக்கும் சுயநிர்ணய உரிமையுண்டு. ஆனால், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள், தனித்த ‘மக்கள்’ அல்ல; ஆகவே, அவர்கள் தனித்துச் சுயநிர்ணய உரிமையைக் கோர முடியாது என்பதாகும். சுயநிர்ணய உரிமை தொடர்பில், சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) என்பது, ‘மக்கள்’ (People) என்ற ஒருமைச் சொல்லை அல்லாது, ‘மக்கள்’ (Peoples) என்ற தொழில்நுட்ப ரீதியிலான பன்மைச் சொல்லையே பயன்படுத்தியிருந்தது.(தமிழில், ‘மக்கள்’ என்ற சொல், ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவானதாகவே கையாளப்படுகிறது) இந்த விடயம் கூட, குறித்த தீர்மானத்தில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆகவே, தமிழ் மக்கள் 1950களிலிருந்து தொடர்ந்து கோரி வரும், தமது சுயநிர்ணய உரிமைக்கான அங்கிகாரம் என்பது, தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட, தமிழரசுக் கட்சியினருக்கு எதிராக, சந்திரசோம என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு, இலங்கையின் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைகிறது. இந்த வழக்கில், தமிழரசுக் கட்சியானது இலங்கையின் ஆட்புல எல்லைக்குள், தனி அரசொன்றை ஸ்தாபிக்கும் நோக்கத்தைக் கொண்ட கட்சி என்று சாற்றுமாறு, அரசமைப்பின் ஆறாவது திருத்தத்தின் கீழான 157A(4) சரத்தின் கீழ், மனுதாரரான சந்திரசோம என்பவர் உயர்நீதிமன்றத்தைக் கோரியிருந்தார். தமிழரசுக் கட்சி இலங்கையின் ஆட்புல எல்லைக்குள், தனிஅரசை ஸ்தாபிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதா, இல்லையா என்ற தீர்ப்பின் ஆய்வில், சுயநிர்ணய உரிமை பற்றிய விடயமும் இடம்பெற்றிருந்தது. அன்றைய பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப் தலைமையில், மூன்று நீதியரசர்களின் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப்பால் வழங்கப்பட்டிருந்தது. தன்னுடைய தீர்ப்பில், மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் மேம்படுத்தப்பட்டதோர் அபிப்பிராயத்தை வௌிப்படுத்தியிருந்தார். ‘க்யுபெக்’ பிரிவினை தொடர்பிலான, கனடிய உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “மக்களானவர்கள், ஏலவே உள்ள அரசுக் கட்டமைப்புக்குள் தமக்கான சுயநிர்ணயத்தை பெற்றுக்கொள்ளவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது” என்பதையும் “தனது ஆட்புல எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும் சமத்துவம், எதுவித பாகுபாடுகளுமின்றிப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்தைக் கொண்டதும், தன்னுடைய உள்ளக ஏற்பாடுகளில் சுயநிர்ணயக் கோட்பாட்டைக் கொண்டமைந்ததுமான ஓர் அரசானது, சர்வதேசச் சட்டத்தின் கீழ், தன்னுடைய ஆட்புல ஒருமைப்பாட்டைத் தொடர்ந்து பேண உரித்துடையது என்பதுடன், அந்த ஆட்புல உரிமைப்பாட்டை, ஏனைய அரசுகள் அங்கிகரிக்க வேண்டிய உரித்தையும் உடையது” என்பவற்றை மேற்கோள் காட்டிய அவர், சர்வதேச நீதிமன்றத்தின் கொசோவோ தொடர்பிலான தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த உள்ளக, வௌியகச் சுயநிர்ணயங்கள் இடையேயான வேறுபாடுகளையும் அத்தீர்ப்பில் நீதிபதி ட்ரின்டேட் வழங்கியிருந்து, தனித்த அபிப்பிராயத்தில், சுயநிர்ணய உரிமை என்பது, கொலனித்துவ நீக்க காலத்துக்கு மட்டுமானது அல்ல என்ற விடயத்தையும் மேற்கோள் காட்டியிருந்தார். இவற்றை மேற்கோள் காட்டிய, பிரதம நீதியரசர் டெப், சுயநிர்ணய உரிமைக்கு உள்ளகப் பரிமாணம் ஒன்று உண்டு என்றும், அது ஒரு நாட்டுக்குள், அந்நாட்டிலுள்ள மக்களால் கையாளப்படமுடியும் என்றும், அவ்வாறு சுயநிர்ணய உரிமையானது, ஏலவேயுள்ளதோர் அரசின் ஆட்புல எல்லைக்குள் பயன்படுத்தப்படும் போது, அத்தகைய சுயநிர்ணயக் கோரிக்கையானது தனி அரசொன்றை ஸ்தாபிக்கும், பிரிவினைக் கோரிக்கையை விளைவிக்காது என்று உரைத்திருந்தார். 2018இல் வந்த இந்தத் தீர்ப்பு, மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு தீர்ப்பாகும். இதன் மூலம், இலங்கையின் உயர் நீதிமன்றமானது, முதன்முறையாக, உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், உள்ளகச் சுயநிர்ணயமானது, அரசொன்றின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் முரணானது அல்ல என்பதையும் வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையில்-சுயநிர்ணயம்/91-230305 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted March 12, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted March 12, 2019 தாயகம் என்.கே. அஷோக்பரன் / 2019 மார்ச் 12 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:37 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 186) திம்புக்கோட்பாடுகளில் தாயகம் திம்புக் கோட்பாடுகளில், இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்; தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல் ஆகிய இரண்டுடன் இணைந்தொன்றாக அமையும் திம்புக் கோட்பாடு, இலங்கைத் தமிழருக்கென்ற அடையாளம் காணப்பட்ட தாயகமொன்றின் இருப்பை அங்கிகரித்தல் என்பதாகும். அரசியல் களத்திலும் அன்றாட வாழ்விலும், இம்மூன்று கோட்பாடுகளும், சுருக்கமாக “தேசியம், சுயநிர்ணயம், தாயகம்” என்று அடையாளப்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கலாம். தமிழ் மக்களை ஒரு தேசமாக நிறுவுதல், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை ஆகியவற்றை விடவும், கோட்பாட்டு ரீதியாக மிகச் சவாலானதொன்றாக அமைவது, இலங்கைத் தமிழருக்கென அடையாளம் காணப்பட்ட தாயகமொன்றின் இருப்பை அங்கிகரித்தல் என்ற “தாயகம்” கோரிக்கையாகும். இந்தச் சிக்கலை விளங்குவதற்கான வசதியின் நிமித்தமாக, தத்துவார்த்த ரீதியிலான சிக்கல், வரலாற்று ரீதியிலான சிக்கல் என்ற இரு படிகளில் அணுகுதல் உசிதமாக இருக்கும். ஆனால் அதற்கு முன்பதாக, “தாயகம்” என்பதன் தத்துவார்த்தப் பொருளை விளங்கிக்கொள்ள முயற்சித்தல் அவசியமாகிறது. மண்ணும் மக்களும் “மண்” என்பது வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, மனித வாழ்வில் மிக முக்கிய அங்கமாக இருந்துவருகிறது. மஹாபாரதப் போரை “மண்ணுக்கான” போர் என்று பலரும் விளிப்பார்கள். தமக்கே சொந்தம் என்று, தாம் கருதும் மண்ணின் மீதான தம்முடைய உரித்தை நிலைநாட்டுவதற்காக, மனிதர்களின் இரத்தம் இந்த மண்ணில் ஆறாகப் பாய்ந்திருக்கிறது. மனிதக் குழுக்கள் தாம் வாழும் இடத்தின் மீது அதீத பற்றை, காலங்காலமாக வளர்த்து வந்துள்ளனர். காலங்காலமாக, பரம்பரைகள் பல கடந்து, குறித்த மனிதக் குழுக்கள் தாம் வாழ்ந்துவரும் “மண்ணை” தாய்மண் (motherland), தந்தையர்மண் (fatherland) என்று விளித்து வருகின்றமையை உலகெங்கும் நாம் காணலாம். அத்தகைய உறவுமுறையொன்றை மண்ணுடன் ஏற்படுத்துவதன் வாயிலாகவும் தம்மை குறித்த மண்ணின் பிள்ளைகளாக உருவகப்படுத்துவதன் வாயிலாகவும் அந்த மண்ணின் மீது அவர்களுக்கென்று பிரத்தியேக உரிமையை மீளுணர்த்துகிறார்கள். அதாவது, தம்மைத் தவிர ஏனையயோரை, அம்மண்ணின் உரித்திலிருந்து விலக்கிவைக்கும் எண்ணம் தாய்மண், தந்தைமண் என்கிற விளிப்பின் அடிநாதமாக அமைகிறது. உலகம் முழுக்கவே தாய்மண் அல்லது தந்தைமண்ணைப் புகழும் பாடல்களும் உணர்ச்சிவேகக் கவிகளும், வரலாறெங்கும் நிறைந்திருப்பதைக் காணலாம். “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்று சுப்ரமணிய பாரதி பாடியதைப் போல, ஸ்கொட்லாந்தின் புகழ்பூத்த கவிஞன் சேர். வோல்டர் ஸ்கொட், “இது எனக்குச் சொந்தமான பாரம்பரிய மண் என்று ஒரு போதும் சொல்லாதவன், மூச்சிருப்பினும் மரித்துப்போன ஆன்மாவைக் கொண்டவன்” என்று பாடுகிறார். மண்ணின் மீதான இந்தக் காதலுக்கு, உலகின் எந்த மனிதக் கூட்டமும் விதிவிலக்கல்ல என்பதுதான் நிதர்சனம். தன்னைத் தனித்ததொரு மக்கள் கூட்டமாக அடையாளப்படுத்தும் ஒரு மண்ணில், பாரம்பரியமாக வாழையடி வாழையாக வாழ்ந்துவரும் மக்கள் கூட்டம், குறித்த அந்த மண்ணின் மீது கோரும் தார்மீக உரிமையிலிருந்துதான் “தாயகம்” என்ற கோட்பாடு பிறக்கிறது. ஆகவே, “தாயகம்” என்பது ஒரு மனிதக்குழு சார்ந்த ஆட்சி எல்லை சார்ந்த கோட்பாடாக அமைகிறது. ஒரு வரையறுத்த பிரதேசத்தின் மீது குறித்த மனிதக் குழுவொன்று நீண்ட வரலாற்றையும் ஆழ்ந்த கலாசார தொடர்பையும் கொண்டிருக்கும் போது, அந்த வரையறுத்த பிரதேசமானது குறித்த மனிதக் குழுவின் “தாயகமாக” உணரப்படுகிறது. பொதுவாக, குறித்த ஓர் இனம் அல்லது தேச அடையாளம் உருவாகிய மண், குறித்த இனத்தின் அல்லது தேசத்தின் “தாயகமாக” உணரப்படும். குறிப்பாக ஒரு குறித்த மண்ணிற்கேயுரிய பாரம்பரிய மக்கள் கூட்டங்கள் குறித்த நிலப்பரப்பை, தம்முடைய “தாயகமாக” அல்லது “பாரம்பரிய மண்ணாக” அடையாளப்படுத்துவதை, பல்வேறு அரசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில், பல்வேறு பழங்குடி இனங்களும் காலங்காலமாக வாழ்ந்துவரும் நிலப்பகுதி, அவற்றின் பாரம்பரியப் பிரதேசமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. தமிழர்த் தாயகம் இலங்கைத் தீவில், தமிழ் மக்களின் “தாயகம்” கோரிக்கை, வரலாற்று மற்றும் தத்துவார்த்தச் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. குறித்த சிக்கல்கள் தொடர்பில் ஆழ்ந்து ஆராய்வதற்கு முன்னதாக, தமிழர்கள் தமது தாயகமாக வரையறுக்கும் பிரதேசம் எது, தமிழர்கள் அதனை எந்த அடிப்படையில் உரிமை கோருகிறார்கள் என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடுதல் முக்கியமாகிறது. பண்டா-செல்வா காலம் முதல், “தமிழர் பிரதேசங்களுக்கான” அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்பட்டும் உடன்பாடுகள் எட்டப்பட்டும், அவை பின்னர் தோல்வியடைந்ததுமாக வரலாற்றை நாம் காணலாம். ஆனால் “தமிழர் பிரதேசங்கள்” என்பதற்கான மிகத் தெளிவான வரையறையொன்று வழங்கப்படவில்லை. ஆனால் அது, தமிழர்கள் காலங்காலமாகப் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் என்ற இயல்பான புரிதலின் அடிப்படையிலானது என்பதையும் இங்கு மறுக்கமுடியாது. “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்” தமிழருக்கான தனிநாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பினும், அந்த நாட்டின் எல்லைகள் தெளிவுற வரையறுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாக இருக்கிறது. அவ்வாறு குறிப்பிடப்படாததால் மட்டும், அவ்வாறான தமிழர்த் தாயகம் என்று ஒன்றில்லை என்று எழுந்தமானமாக அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட முடியாது. ஏனென்றால், வரையறுத்த எல்லைகள் வெளிப்படையாகச் சொல்லப்படாவிடினும், அது தொடர்பான ஆழமான புரிதல் தமிழ் மக்களிடையே தொடர்ந்து இருந்து வருவதையும் மறுத்துவிட முடியாது. தாம், பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக ஆண்டு அனுபவித்துவரும் மண், பிரதேசமே தம்முடைய தாயகம் என்பது அவர்களின் ஆழமான புரிதலின் அடிப்படை. அவ்வாறு காலங்காலமாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் பிரதேசம் எது என்ற கேள்விக்கான பதிலில் தான் தமிழர் தாயகத்தின் வரையறுத்த எல்லைகளை நாம் இனங்காண முடியும். ஆனால், அது அவ்வளவு இலகுவானதல்ல. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் “வட்டுக்கோட்டைத் தீர்மானத்துடன்” உருப்பெறத் தொடங்கிய தமிழீழக் கனவுக்கு, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் உயிர்கொடுக்கத் தொடங்கியபோது, தமிழீழத்தின் வரையறுத்த எல்லையை அவர்கள் நிர்ணயிக்க எத்தனித்தார்கள். அதன்படி, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும், வடமேல் மாகாணத்தின் புத்தளம் வரையிலானதுமான விஸ்தீரணம் கொண்ட பகுதி பொதுவில் தமிழர்களின் தாயாகமாகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் முன்னிறுத்தப்பட்டது. இந்தப் பகுதியானது, இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இதில் 1981 சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாணம் (97%), கிளிநொச்சி (97%), முல்லைத்தீவு (89.8%), மன்னார் (63.7%), வவுனியா (76.2%), மட்டக்களப்பு (72%) ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரும்பான்மையான அளவில் இலங்கைத் தமிழர்களைக் கொண்டிருந்ததுடன், அம்பாறை (20%) திருக்கோணமலை (36.4%) சிறுபான்மை அளவில் இலங்கைத் தமிழர்களையும், புத்தளம் (6.8%) மிகச் சொற்பளவான இலங்கைத் தமிழர்களையும் கொண்டமைந்தது. இதில் அம்பாறை, புத்தளம் மாவட்டங்களில் மட்டும் தமிழர்களை விட, சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ சம அளவிலும் காணப்பட்டது. தமிழர் பிரதேசங்கள் என்று வரும் போது, “யாழ்ப்பாணம்” தமிழர்களுடையது என்பது தொடர்பில் ஒரு சில பேரினவாதப் போக்குடைய விமர்சகர்களைத் தவிர வலுவான எதிர்ப்பைப் பலரும் முன்வைப்பதில்லை. ஆனால் அதனைத் தாண்டிய பிரதேசங்களை தமிழர் “தாயகமாக” அடையாளம் காணப்படுவதைக் குறிப்பாகச் சிங்கள மக்களும், சிங்கள அரசியல் தலைமைகளும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த இடத்தில் தான் வரலாற்றுச் சிக்கலும் தத்துவார்த்தச் சிக்கலும் உருப்பெறத் தொடங்குகிறது. தமிழர்களின் தாயகக் கோரிக்கையை கேள்விக்குட்படுத்தும் காமினி ஈரியகொள்ள, தன்னுடைய குறுநூலொன்றில் பாரம்பரிய தாயகக் கோரிக்கைகள் ஆபத்தானதும், அபத்தமானதுமாகும் என்று குறிப்பிடுவதுடன், வரலாற்று ரீதியாக தமிழர்களின் தாயகக் கோரிக்கை அடிப்படை அற்றது என்ற பகட்டாரவார வாதத்தையும் முன்வைக்கிறார். தமிழர்களின் தாயக உரிமைகோரல் வரலாற்று ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற வாதத்தை கே.எம்.டீ. சில்வா, ஜீ.எச்.பீரிஸ் உள்ளிட்ட ஆய்வாளர்களும் முன்வைக்கிறார்கள். எதனால் இந்த வரலாற்றுச் சிக்கல்? இந்த வரலாற்றுச் சிக்கல், “இலங்கைத் தமிழர்கள்” யார் என்ற கேள்வியில் தொடங்குகிறது. இலங்கைத் தமிழர்கள் எனப்படுவோர் வரலாற்றுக் காலத்துக்கு முன்னிருந்து இலங்கைத் தீவில் வாழ்ந்து வருபவர்கள் என்பது ஒரு துருவத்திலும், தமிழர்கள், அந்நிய படையெடுப்புகளின் போதும், பின்னர் மேற்கத்தேய அந்நியர்களில் ஆதிக்கத்தின் போதும் இலங்கையில் வந்து குடியேறிய வந்தேறு குடிகள் என்பது மறு துருவத்திலும், இடை நடுவே தமிழர்கள் இடைக்காலங்களில் மலபாரிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்ற கருத்தும் இந்த வாதங்களில் வெவ்வேறான, ஒன்றிற்கொன்று எதிர்முரணான நிலைப்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. இதில் தமிழர்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து இந்த மண்ணில் வாழ்ந்து வருபவர்கள் என்ற கருத்து, இந்த மண் மீதான தமிழர்களின் உரிமையை வலுச்சேர்ப்பதாகவும், தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பது இந்த மண் மீதான தமிழர்களின் உரிமைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதாகவும் அமையும் நோக்கத்தின் பின்புலத்திலேயே குறித்த வாதங்கள் முன்வைக்கப்படுவதும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. மறுபுறத்தில் மேற்கத்தேய ஆதிக்கத்துக்கு முன்னதான இலங்கை இராச்சியங்களின் அடிப்படையில் தமிழர்களின் தாயகக் கோரிக்கையை அணுகும் போக்கைச் சில ஆய்வாளர்கள் கைக்கொள்வதையும் நாம் அவதானிக்கலாம். யாழ்ப்பாணம் தமிழர்களின் தாயகம் என்ற கோரிக்கை வலுவாக மறுக்கப்படாமைக்கு இந்த அணுகுமுறை ஒரு முக்கிய காரணம் எனலாம். ஏனெனில், யாழ்ப்பாண இராச்சியமானது தமிழர் இராச்சியம் என்பதை பெரும்பாலும் எவரும் மறுப்பதில்லை. ஆனால், திருக்கோணமலையோ வன்னியோ, மட்டக்களப்போ, மன்னாரோ, புத்தளமோ நேரடியாக யாழ்ப்பாண இராச்சியத்தின் பகுதிகளாக இருந்தவை அல்ல. அதிலும் வன்னிப்பகுதி பெரும்பாலும் ரஜரட்ட இராச்சியத்துக்கு உட்பட்டதாக இருந்ததாகவும், மேலும் வன்னிக் குடித்தலைவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் வன்னி மீதான ஆதிக்க முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்ததாகவும், அதைவிடவும் மட்டக்களப்பானது ஆரம்பகாலத்தில் றுஹுணு இராச்சியத்துக்கு உட்பட்டதாகவும், பின்னர் கண்டி இராச்சியத்துக்கு உரியதாக இருந்ததாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுவதை இவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். ஆனால், இந்த வாதத்துக்குள் ஒரு முக்கிய உட்பொருள் ஒளிந்துள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தாலும், ரஜரட்ட இராச்சியத்துக்கு உட்பட்டதாக வன்னி இராச்சியம் இருந்திருந்தாலும், வன்னி மண், அந்த மண்ணுக்குரிய தமிழர்களான வன்னித் தலைவர்களாலேயே ஆளப்பட்டது. அதுபோலவே மட்டக்களப்பானது றுஹுணு, பிற்காலத்தில் கண்டி இராச்சியத்துக்கு உட்பட்டதாகக் கருதப்பட்டாலும், அது நேரடியாக குறித்த இராச்சியங்களால் ஆளப்படவில்லை. மாறாக அம்மண்ணிற்குரிய தமிழ்த் தலைவர்களால் (குறிப்பாக முக்குவத் தலைமைகளால்) ஆளப்பட்டது. ஆகவே குறித்த நிலப்பரப்பு, குறித்த நிலப்பரப்பில் காலங்காலமாக வாழ்ந்துவந்த, குறித்த நிலப்பரப்புக்கு உரிய மக்களால் ஆளப்பட்டது என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாது. (அடுத்த திங்கட் கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தாயகம்/91-230629 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted March 19, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted March 19, 2019 தமிழர் தாயகம் என்.கே. அஷோக்பரன் / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:03 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 187) வரலாற்று முரண்கள் வடக்கு, கிழக்குத் தமிழர்களின், ‘தாயகம்’ என்ற கோரிக்கையை, வரலாற்று ரீதியாக மறுப்பவர்கள், அந்தப் பிரதேசம், வரலாற்று ரீதியாகத் தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல என்பதை, வரலாற்றுச் சான்றுகள் சிலவற்றை முன்னிறுத்தி, நிறுவ எத்தனிப்பதை அவதானிக்கலாம். வன்னிப் பகுதியானது, இராஜரட்ட இராசதானிக்கு உட்பட்டதாக இருந்தது; மட்டக்களப்பானது, ஆரம்ப காலத்தில் ருகுணு இராச்சியத்துக்கு உட்பட்டதாகவும் பின்னர், கண்டி இராச்சியத்துக்கு உரியதாகவும் இருந்தது என்று நிறுவுவதன் ஊடாக, தமிழர் தாயகக் கோரிக்கையை, நிராகரிக்கும் தமது வாதத்தை, அவர்கள் முன்னெடுக்கிறார்கள். மறுபுறத்தில், அநகாரிக தர்மபாலவுடன் தோன்றிய, ‘புரட்டஸ்தாந்து பௌத்தம்’, இன்று ‘சிங்கள பௌத்தம்’ எனப் பேரினவாதமாகவும் பெருந்தேசியவாதமாகவும் கூர்ப்பும் கூர்மையும் அடைந்துள்ள நிலையில், தமிழர்களின் தாயகக் கோரிக்கையை, வரலாற்று ஆதாரங்கள் ஊடாகத் தகர்க்க முனையும் முயற்சியின் இன்னோர் அத்தியாயமாக, பௌத்த வரலாற்றுச் சின்னங்களும் சிதைவுகளும் பயன்படுத்தப்படுகின்றன. வடக்கு, கிழக்கில் காணப்படும் மிகப்பழைய பௌத்த ஸ்தலங்கள், சிதைவுகள், சின்னங்கள் என்பவை, ‘அது, சிங்களவர்களின் பூமியாக இருந்தது; வந்தேறு குடிகளான தமிழர்கள், அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்தார்கள். ஆகவே அவை, தமிழர்களின் பிரதேசங்கள் அல்ல; மாறாக அவை, தமிழர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட, சிங்களவர்களின் பிரதேசம்’ என்றவாறான, அடிப்படை ஆதாரங்கள் அற்ற, மேம்போக்கானதும் வெறுப்பும் துவேசமும் நிறைந்ததுமான வாதத்தை, சில பேரினவாதிகள் முன்வைப்பதை நாம் அவதானிக்கலாம். இந்த இடத்தில்தான், நாம் ‘சிங்களவர்கள், ‘சிங்களப் பௌத்தர்கள்’ என்ற அடையாளச் சிக்கலை, மீண்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. பௌத்த சின்னங்கள் இருப்பதால் மட்டும், ஒரு பிரதேசம் சிங்களவர்களுக்கு உரியது என்று வாதிடுவதானது, ‘வரலாற்றுக் காலத்திலிருந்தே, சிங்களவர்கள் அனைவரும் பௌத்தர்கள்; பௌத்தர்கள் அனைவரும் சிங்களவர்கள்’ என்ற அடிப்படையற்ற எடுகோளின்படியான வாதமாகும். இந்த எடுகோள், வரலாற்று ரீதியிலும் மானுடவியல் ரீதியிலும் தவறானது என கே.எம்.டீ. சில்வா, எச்.எல். செனவிரத்ன, ஸ்ரான்லி ஜே. தம்பையா, கணநாத் ஒபேசேகர, றிச்சட் கொம்ப்றிச் போன்ற ஆய்வாளர்கள், மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ‘சிங்கள பௌத்தர்கள்’ என்ற கணநாத் ஒபேசேகர மற்றும் றிச்சட் கொம்ப்றிச் சுட்டிக்காட்டும், ‘புரட்டஸ்தாந்து பௌத்தம்’ என்ற அடையாளமானது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அநகாரிக தர்மபாலவின் பௌத்த மறுமலர்ச்சிச் செயற்பாடுகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அடையாளமாகும். ஆகவே, இன்றுள்ளதைப் போல, ‘சிங்களவர்கள் அனைவரும் பௌத்தர்கள்; பௌத்தர்கள் அனைவரும் சிங்களவர்கள்’ என்ற சிங்கள பௌத்தம் இணைந்த அடையாளம், வரலாற்றுக் காலத்தில் இருக்கவில்லை. அப்படியானால், வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த வரலாற்று அடையாளங்கள், என்ன சொல்கின்றன என்ற கேள்விக்கான பதில், நேர்மையானதும் சுதந்திரமானதுமான வரலாற்று ஆய்விலேயே தங்கியிருக்கிறது. ஆனால், அது தொடர்பில், தர்க்க ரீதியாக ஏற்புடைய, சில ஊகங்களை நாம் நோக்கலாம். தமிழும் பௌத்தமும் வட பாரதக் கண்டத்தில் தோன்றிப் பரவிய பௌத்தமானது, தென் இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு எப்போது வந்தது என்ற கேள்விக்கு, பொதுவாக கடைச்சங்க காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலமான 2ஆம், 3ஆம் நூற்றாண்டு காலத்தில் வந்திருக்கக்கூடும் என்று, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். இதற்கு, அக்காலப்பகுதியில் எழுதப்பட்ட நூல்களிலுள்ள, பௌத்த தத்துவ ஆதிக்கம், முக்கியமாகக் கருதப்படுகிறது. குறிப்பாகச் சங்கம் மருவிய காலப் பகுதிக்குரிய நூல்களில், பௌத்த ஆதிக்கம் சில இடங்களில் மேலோங்கி இருப்பதையும் அவதானிக்கலாம். ஆயினும், அக்காலத்துக்கு முன்னதாகவே சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய பெருங்காப்பிய நூல்களும் தமிழர்களிடையே இருந்த பௌத்த செல்வாக்கை எடுத்துரைப்பதாக அமைந்தமையையும் இங்கு கோடிட்டுக் காட்டுதல் அவசியமாகும். ஆனாலும், தமிழகத்தில் பௌத்தத்தின் பரவுகையை அறிவதற்கு, பௌத்தம் எப்போது தமிழகத்துக்கு வந்தது என்பதைக் குறித்தறிவதற்கு, இலக்கியச் சான்றுகள் மட்டும் போதுமானதல்ல; மாறாகப் புறச்சான்றுகளையும் கருத்தில் கொள்ளுதல் அவசியமாகும். அந்தவகையில், புறச்சான்றுகளை கருத்தில் கொண்டால், கி.மு 258இற்குரிய அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டொன்று இவ்வாறு கூறுகிறது: ‘தர்ம விஜயம் எனும் வெற்றியே, மாட்சி மிக்க அரசரால் (அசோகச் சக்கரவர்த்தியால்) முதற்றரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி, இந்த இராச்சியத்திலும் இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனைத் தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்தத் தர்ம விஜயம் அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது’ என்கிறது. அதாவது, தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தர்ம விஜயத்தை, அதாவது பௌத்த தருமத்தைப் போதித்து, அதைப் பரவச்செய்வதில், அசோகர் வெற்றி கண்டார் என்று இந்தச் சாசனம் உரைக்கிறது. அசோகர் இலங்கையில் பௌத்தத்தைப் பரப்பியதை, இலங்கை வரலாறு தௌிவாகவே ஏற்றுக்கொள்கிறது. அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மஹிந்தரின் வருகையோடு (இவரை அசோகரின் தம்பி என்று சில இந்திய நூல்கள் குறிப்பிடுகின்றன), அவர் அன்றைய அநுராதபுர இராச்சிய மன்னன் தேவநம்பியதீசனுக்கு, பௌத்தத்தைப் போதித்து, அவனைப் பௌத்தனாக்கியதோடு, இலங்கையின் பௌத்த வரலாறு ஆரம்பிக்கிறது. விஜயனில் தொடங்கிய, சிங்கள வரலாற்றுடன், பௌத்தம் இந்தப் புள்ளியில்தான் இணைவு பெறுகிறது. இதற்கிடையேயான காலம், சமய நம்பிக்கைகள், வழக்காறுகள் பற்றி, இலங்கை வரலாறு கருத்திற்கொள்ளத் தவறுகிறது; அல்லது அக்கறைப்படவில்லை என்றுதான் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், இவை இங்கு அவசியமில்லை. அசோகர் காலத்தில், இலங்கை வரை பௌத்தம் வந்திருக்கிறது என்று சொன்னால், இடைநடுவில் தென்னிந்தியா கைவிடப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிது. அப்படியானால், இலங்கை நூல்கள் கூட, தென்னிந்தியாவில் பௌத்தம் பற்றி, தமிழ் பௌத்தம் பற்றி ஏன் குறிப்பிடுவதில்லை? இதற்குப் பழங்கால இந்தியா என்ற வரலாற்று நூலில், வின்ஸன்ட் ஸ்மித் கூறும் தர்க்கம் ஏற்புடையதாகத் தெரிகிறது. தென்னிந்திய மன்னர்களுக்கும் இலங்கை இராச்சியங்களின் மன்னர்களுக்கும் இடையில், வரலாற்று ரீதியாகச் சில உறவுகள் இருந்ததுபோல, நிறையப் பகைகளும் இருந்தன. குறிப்பாகத் தென்னிந்திய ஆக்கிரமிப்பு முயற்சிகளால் ஏற்பட்ட அச்சமும் பகையும் இருந்தன. இந்தப் பகைகளின் காரணமாக, தென்னிந்தியாவைப் பற்றி குறிப்பிடுவதையே, இலங்கை நூல்கள் தவிர்த்து இருக்கலாம் என்று வின்ஸன்ட் ஸ்மித் ஊகிக்கிறார். எது எவ்வாறாயினும், கடைச்சங்க காலத்தின் பின்னரும், சங்கம் மருவிய காலத்திலும் தென்னிந்தியாவின் தமிழகத்தில், பௌத்தம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. சாதி பேதமற்ற சமத்துவம், கல்விச்சாலைகள் அமைத்து அனைவருக்கும் அறக்கல்வி, அனைவருக்கும் மருத்துவ உதவி என்று பௌத்தத்தை வடஇந்தியாவிலிருந்து அனைத்துத் திசைகளுக்கும் கொண்டு சேர்த்த பௌத்த துறவிகளின் பணிகள் பௌத்தத்தின் செல்வாக்கை, அது சென்ற இடங்களில் எல்லாம் வேரூன்றச் செய்தன. யோசித்துப் பார்த்தால், உலகின் முதல் ‘மறுபிரவேச மதம்’ (evangelical religion) பௌத்தம்தான். கல்வி, மருத்துவம், சமூக இணைப்பு ஆகியவற்றின் ஊடாக, அது உலகெங்கும் பரப்பப்பட்டது. கி.பி 2ஆம், 3ஆம் நூற்றாண்டு முதல், 4ஆம், 5ஆம் நூற்றாண்டு வரை, தென்னிந்தியாவில் பௌத்தத்தின் பொற்காலமாகும். அதன்பின்னர், ஜைன (சமண) மதம் பௌத்தத்தின் செல்வாக்கைக் குன்றச் செய்து, தலையெடுத்ததுடன், அதன் பின்னர் ஏறத்தாழ நான்கு, ஐந்து நூற்றாண்டுகள் கடந்த பின்னர் சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்று, ஜைன (சமண) மதத்தின் செல்வாக்கைக் குறைத்தன. ஆகவே 2ஆம் நூற்றாண்டுக்கும் 5ஆம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் தென்னிந்தியாவில், தமிழகத்தில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது வரலாற்று ரீதியிலான உண்மை. அதாவது, தமிழ் பௌத்தம், காஞ்சிபுரத்திலும் அதை அண்டிய பல பிரதேசங்களிலும் தென்தமிழகத்திலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கின்றன. ஆகவே, தமிழகத்துக்கு மிக அண்டிய பிரதேசங்களான, இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய பகுதிகளில் இந்தத் ‘தமிழ் பௌத்தம்’ பரவி இருப்பதற்கான வாய்ப்புகளே மிக அதிகம். ஆகவே, அண்மையில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜவரோதயம் சம்பந்தன், “வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த எச்சங்கள், தமிழ் பௌத்தர்களுக்கு உரியன” என்ற தொனியின் தர்க்க வலு, இங்கு கோடிட்டுக்காட்டப்பட வேண்டியதாகிறது. இலங்கை வரலாற்றில், மீள மீள வலியுறுத்தப்பட வேண்டிய பொருளாகவும் இது அமைகிறது. ஆகவே, வடக்கு, கிழக்கில் பௌத்த எச்சங்களும் அடையாளங்களும் காணப்படுவதால், அது சிங்கள பௌத்தர்களின் மண் என்று வாதிடுவது, அபத்தமேயன்றி வேறில்லை. தாராளவாதிகளின் மறுப்பு ‘தமிழர் தாயகம்’ தொடர்பில் பேரினவாதிகள், இனத்தேசியவாதிகள் கூறும் கருத்துகள் இவ்வாறு அமைகையில், மறுபுறத்தில் மேற்கத்தேய தாராளவாத கருத்தியலாளர்களுக்கும் தமிழர்களின் தாயகக் கோரிக்கை, ஏற்புடையதாக இல்லை. தத்துவ ரீதியாகத் தாராளவாதிகள், தமிழர்களின் தாயகக் கோரிக்கையை மறுக்கிறார்கள். தாராளவாதிகளுக்கு இனத்தேசியம் என்பது ஏற்புடையதொரு தத்துவமல்ல. அவர்கள், சிவில் தேசியத்தையே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, எந்த இனம் சார்ந்த தேசியக் கோரிக்கையும் அதன் பாலான இனரீதியான சுயநிர்ணயம், தாயகக் கோரிக்கைகள் ஆகியவற்றை, இனத்தேசியத்தை நிராகரிக்கும் அதே அடிப்படைகளில், அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆனால், இலங்கையின் தாராளவாத ஜனநாயகத்தில் உள்ள, சிக்கல் யாதெனில், சிங்கள பௌத்த தேசியவாதமானது, ஜனநாயகக் கட்டமைப்பில் அதற்கிருக்கும் பெரும்பான்மை எண்ணிக்கைப் பலத்தின் காரணமாக, மிக இலகுவாகத் தாராளவாத ஜனநாயக முகமூடிக்குள் தன்னை மறைத்துக் கொண்டு, தன்னுடைய பேரினவாதத் தேசிய நலனைத் தாராளவாத ஜனநாயக முகமூடியின் பின்னால் நின்றே சாதித்துக் கொள்கிறது. இதற்கு முக்கிய உதாரணமாகவும் தமிழ் மக்கள் ‘தாயகம்’ என்ற கோரிக்கையை, வலுவாக முன்வைக்கவும் காரணமாக அமைந்தது, திட்டமிட்ட குடியேற்றங்களாகும். நிலத்தை அபிவிருத்தி செய்தல் என்ற பெயரில், சிறுபான்மை இனமொன்றின் இருப்பையும் அடையாளத்தையும் சவாலுக்கு உட்படுத்தியதொரு விடயம்தான் இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்கள். அதனால்தான், பண்டா-செல்வா காலத்திலும், தமிழ் மக்கள் இதைச் சுட்டிக்காட்டிக் கடுமையாக எதிர்த்தார்கள். இன்று ரணில்-சம்பந்தன் காலத்திலும், தமிழ் மக்கள் இன்னும் வலுவாக இதை எதிர்த்து வருகிறார்கள். தமிழர்களின் ‘தாயகம்’ என்ற கோரிக்கை, வெறும் இனத்தேசிய பகட்டாரவாரம் அல்ல; மாறாக, நடைமுறை ரீதியில் எழுந்துள்ள பெரும் சவாலுக்கு எதிரான மாற்று மருந்து. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-தாயகம்/91-230924 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted March 25, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted March 25, 2019 தாயகமும் குடியேற்றமும் என்.கே. அஷோக்பரன் / 2019 மார்ச் 25 திங்கட்கிழமை, மு.ப. 08:36 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 188) தமிழர் தாயகமாக, தமிழர்கள் இன்று கோரும் நிலப்பரப்பானது, வரலாற்றுக் காலம் முதல், தமிழர்களின் ஒற்றைத் தனி இராச்சியமாக இருந்ததா என்ற கேள்வியைத் தாண்டி, அங்கு வாழ்ந்த மக்கள், அங்கு நிலை பெற்றிருந்த கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் என்பன, பொதுவாகத் தமிழ் சார்ந்ததாகவும் சிங்களம் சாராததாகவும் இருந்ததா என்ற கேள்வியும் அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், தமது வாழ்வை, தமது சுய வேர்களின் அடிப்படையில், தமக்கே உரிய நம்பிக்கைகளின் அடிப்படையில், தமது விருப்பப்படி கொண்டு நடத்தினார்களா ஆகிய கேள்விகள் முக்கியமானவை ஆகும். வெறுமனே, நடைமுறை ரீதியில் ஒரு நிலப்பரப்பு, இன்னோர் இராச்சியத்துக்குக் கீழ்பட்டதாக இருந்தது என்ற காரணம் மட்டும், அந்நிலப்பரப்பு வேறுபட்ட மக்களுக்குரிய தாயகமாக இருக்கவில்லை என்ற மறுப்பை, நியாயப்படுத்திவிடாது. இலங்கையில் தமிழர்களின் தாயகக் கோரிக்கை என்பது, பெரும்பான்மை ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாதத்திடமிருந்து, தன்னைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்காக உருப்பெற்ற, தமிழ்த் தேசியத்தின் முக்கியமானதோர் அங்கமாகவே நோக்கப்பட வேண்டும். மேற்கத்தேய கொலனித்துவ காலத்தில், வன்னிப் பிரதேசமென்பது, பெருமளவுக்குக் காடாகிப் போயிருந்த பிரதேசம். ஆனால், வன்னி மண்ணுக்கும் பெரும் வரலாறு உண்டு என்பது வரலாற்று, தொல்லியல் சான்றுகளின் அடிப்படைகளில் தெரியவருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வேறுபட்டதும் மிகத்தொன்மையான வரலாறும், பண்பாடும் கொண்டதாக வன்னி காணப்பட்டதுடன், வன்னி மண்ணில் தமிழர்களே வாழ்ந்ததற்கான சான்றாதாரங்களும் மேலோங்கிக் கிடைக்கின்றன. யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு என வாழ்ந்த தமிழர்களிடையேயான வாழ்வியல், கலாசாரம், பண்பாட்டு வேறுபாடுகளைத் தெரிந்தெடுத்துச் சுட்டிக்காட்டி, இவர்கள் வேறுபட்ட மக்கள், தம்மை வேறுவேறாக அடையாளப்படுத்திக் கொண்ட மக்கள், வேறுபட்ட வாழ்வியலைக் கொண்ட மக்கள், வேறுபட்ட அரசியலைக் கொண்ட மக்கள்; ஆகவே ஒட்டுமொத்தமாக, அந்தப் பிரதேசம் அனைத்தும், ஒன்றாக ஒரே மக்களுக்கு உரிய தாயகமாக அடையாளப்படுத்த முடியாது என்று, தமிழர் தாயகக் கோரிக்கையை நிராகரிக்கும் சிலர், வாதிடுவார்கள். அவர்கள் குறிப்பிடுவதில், இலங்கைத் தமிழர்கள், வரலாற்றுக் காலத்தில் தம்மை ஒரே மக்களாக, ஒரே தேசமாக உணரவில்லை; அடையாளப்படுத்தவில்லை என்பது உண்மை. ஆனால், அதே தர்க்க நியாயம், சிங்கள மக்கள் தொடர்பிலும் பொருத்தமாகிறது. வரலாற்றுக் காலத்திலிருந்து, இன்று ‘சிங்களவர்களாக’ பொது அடையாளத்தைச் சுவீகரித்துக் கொண்டவர்கள் யாவரும், தம்மை ஒரே மக்களாகவும் ஒரே தேசமாகவும் உணர்ந்து கொண்டவர்கள் இல்லை. இந்தத் தீவுக்குள் வேறுபட்ட சிங்கள இராச்சியங்கள் இருந்தன. அம்மக்கள் தம்மை, மற்றைய இராச்சியத்திலிருந்து வேறானவர்களாகவே கருதிக்கொண்டார்கள். கண்டிய, கீழ்நாட்டு சிங்களவர்கள் இடையேயான வேறுபாடு, சமூக அளவில் இன்றும் உண்டு. அதேவேளை, இலங்கையில் தம்மை வேறாக அடையாளப்படுத்தி, இலங்கையில் சமஷ்டி ஆட்சியையும் தமக்கான தனி சமஷ்டி அலகையும் முதன்முதலாகக் கேட்டவர்கள் கண்டிய சிங்களவர்கள் என்பதும் இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது. ஆகவே, வரலாற்றுக் காலத்தில் காணப்படாத ஒரு பொதுவான, ‘சிங்கள-பௌத்த’ அடையாளம் என்பது, எப்படி 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அநகாரிக தர்மபாலவின் மறுமலர்ச்சி முயற்சிகளுடன் உருப்பெற்றதோ, அதைப்போலவே, அந்தச் சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதத்தின் எழுச்சியிலிருந்து, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, 20ஆம் நூற்றாண்டின் மத்தியில், தமிழ்த்தேசியம் உருவானது. ஆகவே, ‘வரலாற்று ரீதியாகத் தமிழர்கள், ஒரு மக்கள் அல்ல’ என்ற வாதத்தை, மேற்கூறிய தர்க்கத்தின்படி எவரேனும் முன்வைப்பார்களேயானால், அதே வரலாற்று ரீதியான தர்க்கத்தின் படி, சிங்களவர்களும் ஒரு மக்கள் அல்ல; அவ்வளவு ஏன், தாராளவாதிகள் கட்டியெழுப்ப விரும்பும் ‘இலங்கையர் யாவரும் ஒரு மக்கள்’ என்ற சிவில் தேசிய அடையாளமும் வரலாற்று ரீதியில் ஒரு போதும் இருந்திராத ஒன்றாகும். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில், ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாதத்தின் எழுச்சி வரை, தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றைப் பற்றி, உயிர்ப்பான வகையில் சிந்திக்கவோ, அக்கறைப்படவோ வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. ஏனெனில், அவர்களது வாழ்வை, அவர்கள் வாழ்ந்த மண்ணில், அவர்களது விருப்பப்படி கொண்டு நடத்தக் கூடியதாக இருந்தது. ஒரு மனிதனின் சுதந்திரம் பறிக்கப்படும் வரை அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் வரை, அவன் சுதந்திரத்துக்காகப் போராட வேண்டிய தேவை இராது; அதைப் பற்றிய பேச்சுக்குமான அவசியமிராது. அதற்காக, அவன் அதுவரை சுதந்திரம் பற்றிப் பேசாததால் மட்டுமே, அவன் சுதந்திர எண்ணம் கொண்டவனாக இருக்கவில்லை என்று குறிப்பிடுவது எவ்வளவு அபத்தமோ, அதைப் போலத்தான், தமிழ் மக்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து தேசியம், சுயநிர்ணயம், தாயகம் பற்றி உணரவில்லை, பேசவில்லை, அக்கறைப்படவில்லை என்று குறிப்பிடுவதும் ஆகும். இந்த வகையில், தமிழர்களின் தாயகக் கோரிக்கை என்பது, ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாதத்தால், அவர்களது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதொரு மாற்று மருந்தாக, உணர்வுபெற்றதொரு கோரிக்கையாகும். இந்த உணர்வெழுச்சிக்கு முக்கிய காரணம், திட்டமிட்ட குடியேற்றம். இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு என்பது, சுதந்திரத்துக்கு முன்னதான சில நூற்றாண்டுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசம். வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, வடமத்தியிலும் தமிழர்களே பெருமளவு வாழ்ந்து வந்தார்கள். 1930களில் புனித நகராக அநுராதபுரம் பிரகடனம் செய்யப்படும் வரை, அநுராதபுரத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே வாழ்ந்து வந்தார்கள் என, எச்.எல். செனவிரத்ன தொகுத்த ஆய்வு நூலொன்றில், எலிஸபெத் நிஸான் குறிப்பிடுகிறார். ஆனால், 20ஆம் நூற்றாண்டிலிருந்து, அதிலும் குறிப்பாகச் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து, திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம், தெற்கிலிருந்து சிங்கள மக்கள் வடக்கு, கிழக்கில் குடியேற்றப்பட்டதன் மூலம், அப்பிரதேசத்தின் குடிப்பரம்பல் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டது. இந்தத் திட்டமிட்ட குடியேற்றத்தை, தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் தொடர்ச்சியாகப் பல தசாப்தங்களாக எதிர்த்து வருகின்றனர். இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களிலிருந்தும், அதனால் தமிழர் மிகப் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் குடிப்பரம்பல் சிதைப்பிலிருந்தும் பாதுகாப்பதற்காகவும் தமிழர் தாயகம் என்ற கோரிக்கை முக்கியம் பெறுகிறது. தமிழர் தாயகம், என்பதை பிரிவினைக்கானதும் தனிநாட்டுக்கானதுமான ஒன்றாகப் பேரினவாதிகள் உருவகப்படுத்துவது, பொதுவாக கேட்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ‘தாயகம்’ என்பது, அப்பிரதேசத்துக்கு உரியவர்கள் அல்லாதோர், அங்கு பிரவேசிக்க முடியாதென்றோ, அங்கு இடம்பெயர்ந்து வாழமுடியாதென்றோ அர்த்தம் கற்பிப்பது அபத்தமானதாகும். வடக்கு, கிழக்கைச் சார்ந்த தமிழர்கள், எவ்வாறு கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இலங்கைத் தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்களோ, அதைப் போலவே இலங்கையிலுள்ள அனைவரும், வடக்கு, கிழக்குக்கும் பல்வேறு காரணங்களுக்காகவும் இடம்பெயர்ந்து வாழும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி, வடக்கு, கிழக்கில் தமது சுயவிருப்பின் பேரில் வந்து குடியமர்வதை எந்தத் தமிழனும், குறிப்பாக வடக்கு, கிழக்கைத் தாயகமாகக் கொண்டவர்களும் ஒருபோதும் மறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு, தனது அரச வளங்களைப் பயன்படுத்தி, அபிவிருத்தி என்ற பெயரில் திட்டமிட்டு, வடக்கு, கிழக்கில் குடியேற்றங்களைச் செய்வதைத்தான் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள். இதனால்தான், ‘வடக்கு, கிழக்கு எமது தாயகம்’ என்ற குரல், மேலும் மேலும் வலுப்பெறுகிறது. தாராளவாதிகள், இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களை, அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடு என்று நியாயப்படுத்தக் கூடும். அது அவ்வாறாயின், வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி செய்யப்படாத நிலப்பகுதியில், குடியேற்றங்களை ஏற்படுத்தி, அப்பகுதியை அபிவிருத்தி செய்ய விரும்பினால், இலங்கைத் தீவின் இன்னொரு எல்லையிலிருந்து மக்களைக் கொண்டு வந்து வடக்கு, கிழக்கில் புதிதாக அபிவிருத்தி செய்யும் பிரதேசத்தில் குடியேற்றுவதை விட, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கே, குறிப்பாக, அதனை அண்டிய சனநெரிசல் கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கே உரிய சலுகைகளை வழங்கி, அவர்களை வடக்கு, கிழக்கில் புதிதாக அபிவிருத்தி செய்ய விளையும் பிரதேசங்களில் குடியேற்றலாம். அவ்வாறு செய்யும் போது, குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைச் சிதைக்காது, அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும். உண்மையான தாராளவாத அரச இயந்திரமொன்று, இதனைத் தான் செய்யும். ஆனால் தாராளவாத முகமூடிக்குள் ஒழிந்துகொண்டுள்ள பெரும்பான்மை இனமதத் தேசியவாத அரசாங்கமானது, தாராளவாத முகமூடியைத் தனது பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு முன்னகர்த்துவதற்கே பயன்படுத்திக் கொள்ளும். இந்தச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளுதல் மிக முக்கியமானதாகும். ஓர் இறைமையுள்ள அரசாங்கத்துக்குள் குறித்ததொரு மக்கள் கூட்டத்துக்கான தாயகத்தை அங்கிகரித்தல் என்பது, தாராளவாத அரசுகளில் இடம்பெறாததொன்றல்ல. அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தொன்றுதொட்டு குறித்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக, ஒரு மக்கள்கூட்டம் வாழ்ந்து வரும் பகுதி, அம்மக்களினுடைய ‘தாயகமாக’ அங்கிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, ‘தாயகம்’ என்ற அங்கிகாரமென்பது தாரளவாதத்துக்கு அந்நியமானதொன்றல்ல; அது தாராளவாதத்தின் எல்லைகளை விரிவடையச் செய்யுமேயன்றி, அதனை தகர்ப்பதாக அமையாது. தாராளவாதிகள், இனத் தேசியத்தை எதிர்க்கிறார்கள். அதனால் அவர்கள் தமிழ்த் தேசியத்தையும் அதன்பாலான தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தையும் எதிர்க்கிறார்கள் என்று கூறுவார்களேயானால், அவர்கள் இங்கு முக்கியமானதொரு விடயத்தைக் கவனத்தில் கொள்ளத் தயங்குகிறார்கள். தமிழ்த் தேசியம் என்பது, தானாக உருவானதொன்றல்ல; அது பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்திலிருந்து, அத் தேசியவாதத்தின் அடக்குமுறைக்குள்ளான ஒரு மக்கள் கூட்டம், தன்னைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்காக, சுவீகரித்துக் கொண்ட தற்காப்புத் தேசியம் ஆகும். ஆகவே, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தையும் அதிலிருந்து தன்னைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்காக உருவான தமிழ்த் தேசியவாதத்தையும் தாராளவாதிகள் ஒரே தட்டில் அணுகுதல் என்பது, ஏற்புடையதொன்றல்ல. சிங்கள-பௌத்த தேசியவாதம் இல்லாது போகும் போதும், தமிழ்த் தேசியவாதத்துக்கான தேவையும் இல்லாது போகும். ஆகவே, அடக்குமுறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் குரலாக, தமிழ்த் தேசியத்தை நோக்கினால், அது இனத் தேசியவாதமல்ல; மாறாக இனமத பேரினவாதத் தேசியவாதத்திலிருந்து தன்னைத் தற்பாதுகாத்துக்கொள்ள, ஒரு மக்கள் கூட்டம் உருவாக்கிய தற்காப்புத் தேசியவாதம் என்பதைத் தாராளவாதிகள் புரிந்துகொள்ளலாம். அவ்வகையில் நோக்கினால், இலங்கைத் தமிழர்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அபிலாஷைகள், தாராளவாதத்துக்கு நேரடியாக ஏற்புடையதல்ல; எனினும், தாராளவாதத்தின் சாரத்துக்கு முற்று முழுதாக முரணானதும் அல்ல. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தாயகமும்-குடியேற்றமும்/91-231245 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted April 1, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted April 1, 2019 சிங்களவரும் தமிழரும் அரசியலும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 08:23 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 189) இலங்கைத் ‘தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன’ என்ற இந்தத் தேடலுக்கான பதிலாக, ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்பவை, திம்புக் கோட்பாடுகளினூடாக முன்னிறுத்தப்பட்டன. ஆனால், ‘தேசியம்’, ‘தாயகம்’, ‘சுயநிர்ணயம்’ என்ற கோட்பாடுகள், மேலோட்டமாகப் புரிந்துகொள்ளப்பட முடியாதவை. அத்துடன் அவை, மிக ஆழமானதும் சிக்கலானவையும் ஆகும். அரசறிவியல் தத்துவார்த்த மற்றும் சட்டப் பார்வையில், பல்வேறுபட்ட சிந்தனைகளுக்கும் பொருள்கோடலுக்கும் உட்பட்டவை என்பதையும் கடந்த சில வாரத் தேடலில், நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்ற அரசியல் அபிலாஷைகளும் அந்த அபிலாஷைகளை அடையப் பெறுவதற்கான கோரிக்கைகளும் முயற்சிகளும் பிரயத்தனங்களும் புதுமையானவையோ, தவறானவையோ, அபத்தமானவையோ, அர்த்தமற்றவையோ அல்ல. ‘மனிதன் ஓர் அரசியல் விலங்கு’ என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டொட்டிலின் ‘அரசியல்’ என்ற நூல் குறிப்பிடுகிறது. ஆகவே, அந்த அரசியல் விலங்கு, அரசியல் அபிலாஷைகளை அடையப் பெறுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதை, உலக வரலாற்றை அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். அதிலும், தான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக உணரும் ஒரு மக்கள் தொகுதி, அந்த அடக்குமுறையைத் தகர்த்தெறிய, எத்தகைய எல்லைக்கும் செல்லும். உலக வரலாற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும், இந்த உணர்வுக்குச் சான்று பகரும். இந்த மனிதத் தொகுதிகளின் சுதந்திர தாகத்தை, 1320இல் ஸ்கொட்லாந்தின் விடுதலைப் பிரகடனமான ‘ஆப்ரோத் பிரகடனம்’ பின்வருமாறு உரைக்கிறது: ‘எம்மில் ஒரு நூறு பேரேனும் உயிரோடு உள்ளவரை, நாம் எந்த நிலையிலும், ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவரப்பட மாட்டோம். உண்மை யாதெனில், நாம் புகழுக்காகவோ, செல்வத்துக்காகவோ, பெருமைக்காகவோ போராடவில்லை; நாம் சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம்; அதற்காக மட்டுமே போராடுகிறோம். எந்த நேர்மையான மனிதனும் தன்னுயிரை விட்டுக் கொடுப்பானேயன்றி, சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டான்’. ஆகவே, தன்னுடைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாத்துக்கொள்ள, வரலாற்றுக் காலம் முதல், மனிதன் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவனாக இருந்தான். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கான முதற்படி, இலங்கையின் இன முரண்பாடு, இனப்பிரச்சினையாகி, போராட்டமாகி, யுத்தமாகியதன் காரணத்தை, நாம் ஒதுக்கீடுகளின்றிப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தீவு, நாடு, அரசு, தேசம் பற்றி, இந்த நாட்டின் இரண்டு மக்கள் தொகுதிகளிடையே வித்தியாசமான புரிதல் இருப்பதை, அந்த யதார்த்தத்தை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்களவர்கள் (சிங்கள- பௌத்தர்கள்), இந்த நாடு பற்றிக் கொண்டுள்ள புரிதலுக்கும், தமிழர்கள், இந்த நாடு பற்றிக் கொண்டுள்ள புரிதலுக்கும் இடையில் வேறுபாடும், இடைவௌியும் இருக்கிறது. இந்த வேறுபாடும், இடைவௌியும்தான் இனப்பிரச்சினையின் அடிப்படை. இந்த இடைவௌியையும் வேறுபாட்டையும் பற்றி ஆராய முன்பதாக, இன்னோர் அடிப்படை விடயத்தை, நாம் தௌிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்களின், ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை’ மறுப்போர், அடிப்படையில் ‘இலங்கைத் தமிழர்’ என்ற ஒரு மக்கள் தொகுதி அடையாளத்தை, கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். ஆகவே, இது தொடர்பில் அடிப்படைத் தௌிவு மிக அவசியமானதாகும். ‘இலங்கைத் தமிழர்’ என்ற மக்கள் தொகுதி அடையாளம் பற்றி, ‘இலங்கைத் தமிழர் யார், எவர்?’ என்ற தன்னுடைய குறுநூலொன்றில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, இலங்கைத் தமிழரை, அரசியல் ஒருமைத் தன்மையுள்ள குழு என்று அடையாளம் காண்பதுடன், பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ‘இலங்கைத் தமிழர் என்ற எண்ணக்கருவுக்குள் காணப்பட்ட (இப்பொழுது பெரிதும் அருகிவிட்டதெனினும் ஓரளவு தொடர்ந்து) காணப்படுகின்ற, பன்முகப்பாட்டை, நன்கு உணர்ந்து கொள்ளல் அவசியமாகும். இலங்கைத் தமிழர் என்ற அரசியல் யதார்த்தம், புலப்படவேண்டுமெனில், இந்த அக வேறுபாடுகள் பற்றிய தெளிவும் புரிந்துணர்வும் அவசியமாகும். இலங்கை என்னும் புவியியல் அலகு, இந்திய உபகண்டத்தோடு ஒப்புநோக்கும்பொழுது, மிகச்சிறிய தீவாகும். எனினும், இதனுடைய புவியியல், வரலாறு ஆகியன காரணமாக, மிக அண்மைக்காலம் வரை, பிரதேச நிலைப்பட்ட ஒரு பன்முகப்பாடு நிலவி வந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளல் வேண்டும். அத்துடன், இலங்கைத் தமிழர் என்பது, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களையே, பிரதானமாகக் கருதும் (கருதவேண்டும்) என்ற மனப்பாங்கை விடுத்து, பிரதேச வேறுபாடுகளை அங்கிகரித்து, பன்மைப்பாட்டுக்குள் ஒற்றுமை காணும் மனப்பாங்கை வளர்த்தல் வேண்டும்’ என்று அவர் உரைக்கிறார். தன்னை ஒரு தனித்துவமான, அடையாளம் கொண்ட சமூகமாக, ஒருமைப்படுத்தப்பட்ட ஓர் அடையாளத்தின் கீழ், ஒன்று திரண்டுள்ள ஒரு மக்கள் தொகுதியை, வெறும் தொழில்நுட்பக் காரணங்களைச் சுட்டி, அந்த அடையாளத்தின் வலுவைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஆகவே, ‘சிங்கள- பௌத்தம்’ என்பது, எவ்வாறு அரசியல், சமூக ரீதியில் ஒரு வலுவுள்ள மக்கள் தொகுதி அடையாளமோ, அதைப் போலவே, ‘இலங்கைத் தமிழர்’ என்பதும் அரசியல் சமூக ரீதியில், ஒரு வலுவுள்ள மக்கள் தொகுதிக்குரிய அடையாளம். இதை மறுப்பதில், எதுவித நியாயங்களும் இல்லை. ஆகவே, இலங்கை என்ற இந்தத் தீவில், குறைந்தபட்சம் ‘சிங்கள -பௌத்தம்’ மற்றும் ‘இலங்கை தமிழர்’ என்ற இரண்டு அரசியல், சமூக ரீதியில் கட்டமைந்த மக்கள் தொகுதிகள் இருக்கின்றன. இந்த இரண்டு மக்கள் தொகுதிகளும் இணக்கப்பாட்டுடனும் சமாதானத்துடனும் நட்புறவுடனும் அனுசரணையுடனும் இந்தத் தீவில் வாழவேண்டும் என்பதுதான், உயர் இலட்சிய நோக்காக இருக்க முடியும். ஆனால், இந்த இரண்டு மக்கள் தொகுதிகளும் இந்தத் தீவின் அரசியல் ரீதியான கட்டமைவு பற்றிய வேறுபட்ட, சிலவேளைகளில் ஒன்றுக்கொன்று முரணான அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. 1997ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி, ‘மாவீரர் தின’ உரையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “சிங்களத் தேசம், இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகில் புதைந்துபோய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது, தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும், சிங்கள இனத்துக்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையில், சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து, சிங்களத் தேசம் விடுபடப் போவதில்லை. இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால், இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவரால் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத்தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ்மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது. சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியல் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்துபோகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது. தென்னிலங்கை அரசியல் களத்தில், அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.” 2007ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி, தான் நிகழ்த்திய ‘மாவீரர் தின’ உரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “தமிழரின் தேசியப் பிரச்சினையை, நீதியான முறையில் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியல் கட்சியிடமும் இல்லையென்பது, கடந்த 60 ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும், தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கிகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும், கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசாங்கத்தின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இதன்மூலம், சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும், அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து தீர்வை யாரும் எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று”. ஒரு தசாப்தகால இடைவௌியில் நிகழ்த்தப்பட்ட இந்த இரு உரைகளிலும், இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதிலும், இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதிலும் உள்ள முக்கிய சிக்கலொன்றைப் பறை சாற்றி நிற்கிறது. அதாவது, சிங்கள-பௌத்த மக்கள் தொகுதியின் அரசியல் அபிலாஷைகளும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் இடையிலான இடைவௌி, முரண்பாடுகள், ஏற்பிலாத்தன்மை என்பவை, சுருக்கமாகக் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன. இந்த இடைவௌி, முரண்பாடுகள், ஏற்பிலாத்தன்மையால் விளைந்த இனப்பிரச்சினையானது, பெரும்பான்மை எண்ணிக்கைப் பலம் கொண்ட மக்கள் கூட்டம், தாராளவாத ஜனநாயக அரசியல் கட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததும், அதன் விளைவாகப் பெரும்பான்மை எண்ணிக்கை பலமற்றிருந்த மற்றைய மக்கள் தொகுதியானது அரசியல், சமூக அடக்குமுறைக்கு உள்ளானதும், அந்த அடக்குமுறைத் தளையைக் களைய, அந்த மக்கள் தொகுதி, அரசியல் ரீதியிலான பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டதும், அது பலனளிக்காத போது ஆயுத வழியை நாடியதும், அந்த ஆயுதவழியும் தோற்கடிக்கப்பட்டதும் சுதந்திர இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றுச் சுருக்கமாகும். ஆனாலும் அன்றும், இன்றும் இந்தப் பிரச்சினையின் மூலம் மாறவில்லை. அப்படியானால், ஒன்றுக்கொன்று வித்தியாசமான, முரண்பட்ட, ஏற்பிலாத் தன்மையுடைய அரசியல் அபிலாஷைகளைக் கொண்ட இரண்டு மக்கள் தொகுதிகளிடையே மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவது எப்படி? அது சாத்தியமா? பிரிவினைதான் ஒரே வழியா? தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை அடைந்துகொள்ள, பிரிவினையும் தனிநாடும்தான் ஒரே வழியா? இலங்கை என்ற ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்பவை பூர்த்திசெய்யப்பட முடியுமா? என்ற கேள்விகளுக்கான பதில், இந்தத் தொடரின் தேடலைப் பூர்த்தி செய்வதாக அமையும். (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிங்களவரும்-தமிழரும்-அரசியலும்/91-231560 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted April 8, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted April 8, 2019 எது தீர்வு? என்.கே. அஷோக்பரன் / 2019 ஏப்ரல் 08 திங்கட்கிழமை, பி.ப. 12:39 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 190) இலங்கையில் தீர்க்கப்பட வேண்டியதோர் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை, சில வில்லங்கத் தனமான அரசியல் செய்வோரைத் தவிர, மற்றைய அனைவரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள். குறைந்த பட்சம், இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களிடையே இன முரண்பாடுள்ளது என்பதையும் அது தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள். ஆனால், அந்தப் பிரச்சினை தொடர்பான வரையறைகள் தொடர்பிலும், தீர்வுக்கான அடிப்படைகள் தொடர்பிலும், அனைத்துத் தரப்பினரிடையேயும் தரப்பினுள்ளேயும் நிறைந்த கருத்து நிலைப்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் பேரனும், தமிழ்த் தேசியத்துக்காகச் சர்வதேசமெங்கும் குரல்கொடுத்த குமார் பொன்னம்பலத்தின் மகனும், தீவிரத் தமிழ்த் தேசியவாதிகள் என்று பொதுவாகச் சுட்டி நோக்கப்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அண்மையில் அரசியல் மாநாடொன்றில் உரையாற்றியபோது, ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பில், பின்வரும் கருத்தை வௌிப்படுத்தி இருந்தார். “போர் முடிவடைந்ததற்குப் பிற்பாடு, தமிழ்த் தேசம் தன்னுடைய இருப்புக்காகக் போராடிக் கொண்டிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து, கடந்த ஒன்பது வருடங்களாகத் தமிழ்த் தேசத்தினுடைய இருப்பை, இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் முதலிலே, தமிழர் ஒரு தேசமாக இருப்பதைக் கைவிட வேண்டுமென்பது தான், அவர்களுடைய முக்கியமான குறிக்கோள். தமிழர் தொடர்ந்தும் ஒரு தேசமாகச் சிந்திக்கின்ற வரைக்கும், எங்களுக்கென்று தனித்துவம் பேசும் இனமாக, நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். தமிழ் மக்களை ஏமாற்றி, இன்னுமொருமுறை ஒற்றையாட்சி அரசமைப்பை எம்மீது திணிப்பதற்கும் கடந்த முறைகளை விட, இந்த முறை வித்தியாசமாகத் தமிழ் மக்களுடைய முழுமையான ஆதரவோடு, அந்த ஒற்றையாட்சியை நாலாவது முறையாக, நிறைவேற்றுவதற்கு முடிவெடுத்து இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம். கடந்த 70 வருடங்களாக, மூன்று அரசமைப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.அந்த மூன்றும், ஒற்றையாட்சி அரசமைப்பாகத் தான் அமைந்திருந்தன. அவற்றைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருந்தார்கள்.ஆனால், இந்தமுறை எம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், தமிழ்ச் சரித்திரத்திலேயே முதற்தடவையாக அதே ஒற்றையாட்சி அரசமைப்பை, நாம் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றார்கள். கடந்த மூன்று அரசமைப்பையும் ஒற்றையாட்சி அரசமைப்பாக நிறைவேற்றிய காரணத்தாலேயே தமிழ்த் தரப்புகள் நிராகரித்தன.ஆனால், இந்த நான்காவது ஒற்றையாட்சி அரசமைப்பை ஆதரிக்கிறதற்கான முயற்சிகளை, எம்மவர்களாலே மேற்கொள்ளப்படுகின்றது. மூன்று முறை நிராகரித்து, நான்காவது முறை நாங்களாகவே விரும்பி அதை ஆதரித்தால், அதற்குப் பிற்பாடு, நாட்டில் இனப்பிரச்சினை இருக்கிறதென்ற பேச்சுக்கே இடமிருக்காது. இதுதான் இன்றைக்கு இருக்கக் கூடிய ஆபத்து. அந்த நிலையிலேயே வரப்போகின்ற புதிய அரசமைப்புக்கான முயற்சியைத் தமிழ்த் தேசம் ஒருமித்து, அதனை முழுமையாக அடியோடு நிராகரிக்க வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள், தங்கள் உயிரைத் தியாகம் செய்தது, எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. அந்த உயிர்கள் வீண்போக முடியாது. ஆகவே, அந்த ஒற்றையாட்சி அரசமைப்பை நிராகரிக்க வேண்டுமென்பது தான் எங்கள் கடமை. அதுதான் எமக்கிருக்கும் பிரதான கடமை” என்று அவர் அறுதியாகக் கருத்துரைத்திருந்தார். மறுபுறத்தில், 2018 டிசம்பர் 12ஆம் திகதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றபின் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்; அத்துடன் புதிய அரசமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில், ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து 2018 டிசம்பர் 18ஆம் திகதி, காலிமுகத்திடலில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவர், “ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில், இந்த நாட்டில் நல்லிணக்கம், அரசியல் தீர்வு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும் ஒற்றையாட்சியின் கீழ் தான் ஏற்படுத்துவோம். அதிலிருந்து விலகவும் மாட்டோம்” என்று மீள வலியுறுத்தியிருந்தார். 2018 ஒக்டோபர் 31ஆம் திகதி, சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, “நான் இருக்கும் வரை, வடக்கு-கிழக்கை இணைக்க விட மாட்டேன்; சமஷ்டித் தீர்வையும் அளிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டதாக, பல்வேறு செய்திச் சேவைகளும் அறிக்கையிட்டிருந்தன. மேலும் கடந்தவாரம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், “பிரிக்கப்படாது ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வொன்றைக் காண்பதற்குத் தயார் என அறிவித்து, அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான நிலையில் எமக்குத் தீர்வொன்றை வழங்க நீங்கள் தயாரில்லை. தமிழர்கள் இரண்டாவது பிரஜைகளாக வாழ்வதற்கு விரும்பவில்லை. தேசிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்காது, இரண்டாவது பிரஜைகளாக வாழ்வேண்டிய நிலை ஏற்பட்டால், தமிழர்களுக்கான இறைமையைப் புதுப்பித்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று உரையாற்றியிருந்தார். 2009இலேயே, “இலங்கையில் சமஷ்டித் தீர்வுக்கு இடமில்லை” என, மிகவும் திட்டவட்டமாக, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்திருந்தார். அந்த நிலைப்பாடு, மேலும் தீவிரமாகியுள்ளதேயன்றி, இன்று வரை மாறியதற்கான அறிகுறிகள் இல்லை. ஆகவே வேறுபட்ட அரசியல் முகாமைச் சேர்ந்தவர்கள் பலரும், இனப்பிரச்சினை விவகாரத்திலும், அதற்கான தீர்வு தொடர்பிலும் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதை, நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதில் தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில், இந்த எதிரிடையான அரசியல் முகாம்களை, தீவிரத் தமிழ்த் தேசியவாத முகாம் என்றும், மிதவாத தமிழ்த் தேசியவாத முகாம் என்றும் அடையாளப்படுத்தலாம். மறுபுறத்தில், சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் முகாமைப் பொறுத்தவரையில், அடிப்படையில் பிரிபடாத ஒற்றையாட்சிக்குள் (அதாவது சமஷ்டியோ, தனிநாடோ) தீர்வு என்பதில் அனைத்துத் தரப்பும் ஒன்றித்து நிற்பதை அவதானிக்கலாம். அவர்களிடையேயான வேறுபாடென்பது, பிரிபடாத ஒற்றையாட்சிக்குள் என்ன அளவிலான அதிகாரப் பகிர்வு என்பதில் இருக்கலாமேயன்றி, அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. இந்தத் தீவிரத் தமிழ்த் தேசியவாதம் என்று அடையாளம் காணப்படுவோரின் ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்பெற முடியாது என்ற நிலைப்பாடானது, மிதவாதத் தமிழ்த் தேசியவாதிகள் என்று அடையாளம் காணப்படுவோரின் சமகாலத்தில் எழுந்துள்ள இணக்க அல்லது யதார்த்த அரசியல் எனும், சமரச அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரிடையாகவும், ஒற்றையாட்சிக்குள்தான் எந்தத் தீர்வும் என்கிற சிங்கள-பௌத்த பெரும்பான்மை அரசியலின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகவும் பார்க்கப்பட வேண்டும். இந்தக் கருத்தியல் நிலைப்பாட்டு முரண்பாடானது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஏற்றதொரு தீர்வைக் காண்பதிலுள்ள அடிப்படைப் பிரச்சினைகளில் முதன்மையானதாகும். ஆனால், இந்த ஒற்றையாட்சி பற்றிய தேடலுக்கு முன்பதாக, நாம் மிக அடிப்படையானதொரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ளுதல் அவசியம். இந்தத் தொடரினூடாக, சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றினூடாக, நாம் அடையாளம் கண்டுகொண்டதன் படி, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் என்பது, இரத்தினச் சுருக்கமாகத் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற மூன்றும் எனலாம். இவை இலட்சியப் பொருட்கள். ஆகவே ஒற்றையாட்சியோ, சமஷ்டியாட்சியோ, தனிநாடோ என்பதெல்லாம் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் அல்ல; மாறாக, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான பல்வேறுபட்ட வழிமுறைகளில் அவையும் உள்ளடங்கும். ஆனால், அரசியல் முன்னரங்கில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகள் பற்றிய கலந்துரையாடல் வெறும் ஒற்றையாட்சி, சமஷ்டி, தனிநாடு என்ற அடையாளக் கருத்தியல்களுள் அடக்கப்பட்டுவிடுவதானது, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கு, ஏதுவான புத்தாக்க வழிமுறைகளுக்கான கதவை அடைத்துவிடுவதாகவே அமைந்துவிடும் என்ற கவலையும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டியதாகிறது. அது என்ன, புத்தாக்க வழிமுறை என்ற கேள்வி, இங்கு எழலாம். ஒற்றையாட்சி, சமஷ்டி, தனிநாடு என்ற கருத்தியல்கள், பொதுவாக நாம் கருதுவது போல, மிக எளிமையானதும், ஸ்தூலமானதும், ஸ்திரமானதுமான பொருளுடையவையல்ல. அரசியல் வரலாற்றில், சமஷ்டி என்பதே, ஓர் அதிகாரப் பகிர்வுப் புத்தாக்க முயற்சியின் குழந்தைதான். மனிதக் கூட்டங்கள், தமது தேவைக்கேற்றபடி தம்மைத் தாம் ஆளும் கட்டமைப்புகளையும் காலத்துக்குக் காலம் வடிவமைத்து வந்துள்ளன. இன்று சமஷ்டியாட்சி நாடுகள் என்று பட்டியலிட்டு நாம் நோக்கினாலும், அதில் அனைத்து சமஷ்டியும் ஒரே மாதிரியானதல்ல என்பதை நாம் தெட்டத் தௌிவாக நோக்கலாம். அதேபோல், ஒற்றையாட்சி நாடுகள் என்ற பட்டியலை நோக்கினாலும், அதில் சில ஒற்றையாட்சி நாடுகளில், சில சமஷ்டியாட்சி நாடுகளைவிடப் பிராந்தியங்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதிகளவிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கலாம். ஆகவே, ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற சொற்கள் மாத்திரம் ஓர் அரசின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளப் போதுமானவையல்ல. ஆனால் அதற்காக இந்தச் சொற்களால் பயனில்லை என்றும், முற்று முழுதாகச் சொற்களின் அடையாள வலுவை நிராகரித்து விடவும் முடியாது. ஒற்றையாட்சி, சமஷ்டி ஆகியவற்றுக்கு இடையான வேறுபாடு பற்றி, சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்பில் கருத்துரைத்த பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப், “அரசுகள் ஒற்றையாட்சி, சமஷ்டியாட்சி என்று பெயரிடுதலானது சிலவேளைகளில் தவறானதாக அமைந்துவிடும். சமஷ்டியரசின் தன்மைகளையும் அம்சங்களையும் கொண்ட ஒற்றையாட்சி அரசுகள் இருக்கலாம்; அதுபோல் மாறியும் அமையலாம். ஒற்றையாட்சி அரசுக்கு உள்ளான அலகுகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதனை சமஷ்டி என்று கருத முடியும்; அதுபோலவே சமஷ்டி அரசில் மத்தி பலம் வாய்ந்ததாகவும், மத்தியில் பலம் குவிக்கப்பட்டுமிருந்தால், அதனை ஒற்றையாட்சி அரசாகக் கருதலாம். ஆகவே, இறைமையைக் பகிர்தல், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்பவை ஒற்றையாட்சி அரசுக்குள், சமஷ்டி முறை அரசாங்கத்தை ஸ்தாபிக்க வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற பெயர் எல்லைகளைத்தாண்டிய தீர்வொன்றைக் காண்பதற்கு, இந்தத் தீர்ப்பில் ஒரு பிள்ளையார் சுழி காணப்படுகிறது. இது தமிழ் மக்களுக்கு சாதகமாகவும் அமையலாம். அல்லது சிங்கள-பௌத்த தலைமைகள் சாணக்கியமாக நடந்துகொண்டால், இது தமிழ் மக்களுக்குப் பாதகமாகவும் அமையலாம். (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எது-தீர்வு/91-231822 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted April 22, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted April 22, 2019 சாத்தியமான தீர்வு என்.கே. அஷோக்பரன் / 2019 ஏப்ரல் 22 திங்கட்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 192) தமிழர் அரசியல் வரலாற்றை நோக்கினால், தமிழ் மக்களின் ஆரம்பகால அரசியல் கோரிக்கைகள் சமஷ்டியாகவோ, பிரிவினையாகவோ, பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வாகவோ இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு ஆரம்பத்திலிருந்த அச்சம் என்பது, எண்ணிக்கை ரீதியிலான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த சிங்கள பௌத்தர்கள், பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் முறையை ஒத்த ஆட்சிமுறையொன்றின் கீழ், எண்ணிக்கை ரீதியான சிறுபான்மையினரை, அவர்களின் உரிமையை, அடக்கியாளத்தக்க பலத்தைப் பெறுவார்கள். அதனைச் சமன் செய்வதே, சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கைத் தமிழ்த் தலைமைகளின் கோரிக்கையாக இருந்தது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் முன்வைத்த 50:50 என்பதன் உட்பொருள் இதுதான். பிரித்தானியர் 50:50ஐ நிராகரித்ததன் காரணம், அது வெஸ்ட்மினிஸ்டர் அடிப்படைகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதுடன், ஏலவே நிறுவப்பட்டுள்ள எண்ணிக்கை, பெரும்பான்மையின் அடிப்படையில் கொண்டு நடத்தப்படும் ஜனநாயகக் கட்டமைப்புக்கு, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் இந்தக் கோரிக்கை முரணாக இருந்தது. ஆனாலும், இங்கு இன்னொரு விடயமும் கட்டாயம் குறிப்பிடப்பட்டேயாக வேண்டியதாகவுள்ளது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகள், சிறுபான்மையினர் எதிர்நோக்கும் அச்சம், சவால் பற்றிக் குறிப்பிட்டவற்றை சோல்பரி ஆணைக்குழு முற்றாக மறுக்கவில்லை. அதனால் தான், ‘ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, மதத்துக்கோ பாதகமாக அமையும் சட்டத்தை, நாடாளுமன்றத்தால் இயற்றமுடியாது’ என்ற மட்டுப்பாட்டை, 29c சரத்தினூடாக சோல்பரி அரசமைப்பின் ஓர் அங்கமாக்கியது. ஆனால், சட்டம் என்பது, வெறும் கறுப்பெழுத்துகளில் பதிவுசெய்யப்படுவதால் மட்டுமே, நடைமுறைக்கு வந்துவிடாது. 29c நடைமுறையில் இருக்கும்போதுதான், குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. 29c நடைமுறையில் இருக்கும்போதுதான், தனிச்சிங்களச் சட்டம் எனும் தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான, பாதகமான சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாக்க, வெறும் சட்டப்பாதுகாப்புகள் போதவில்லை. இந்த இடத்தில்தான் பிரித்தானியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒரு முக்கிய வித்தியாசத்தை, நாம் உணரக்கூடியதாக உள்ளது. பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் முறை, பிரித்தானியாவுக்கு வெற்றியளித்ததன் முக்கிய காரணங்களில் ஒன்று, அங்கு கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் கலாசாரம் ஆகும். பிரித்தானிய ஜனநாயகம் என்பது, சர்வாதிகார முடியாட்சியலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்கள் காலப்போக்கில் குறைக்கப்பட்டு, சர்வாதிகார முடியாட்சியானது வெறும் சடங்கு ரீதியான, அரசமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியாக மாற்றப்பட்டு, ஜனநாயகமாகப் பரிணாமம் கண்டது. ஆகவே, வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சி முறை என்பது, ஓரிரவில் உருவான, அறிமுகப்படுத்தப்பட்ட முறையல்ல. அது அம்மக்களால், காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டு, மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள், அவர்களுக்கு ஆக்கியளித்துக் கொண்டதொரு முறையாகும். இதனாலோ என்னவோ, எழுதப்படாத அரசமைப்பாக இருந்தாலும், அதாவது பெருமளவுக்கு வழக்காறுகளிலும், மரபுகளிலும் தங்கிய அரசமைப்பாக இருந்தாலும், பிரித்தானியாவில் அந்த வழக்காறுகளும் மரபுகளும் உயரிய மாண்புகளுடன் பின்பற்றப்படுகின்றன. ஆனால், இலங்கையின் நிலை வேறு; ‘பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் ஜனநாயகம்’ என்பது, அது அறிமுகப்படுத்தப்பட்டபோது, இலங்கைக்கு மிக அந்நியமானதொரு கோட்பாடாகவே இருந்தது. இந்த இடத்தில் சிலர், ஆரம்பகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும், ஊர்மக்கள் கூடி முடிவெடுத்தல் போன்ற ஜனநாயக அம்சங்கள் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டலாம். ஆனால் அவை, வெஸ்ட்மினிஸ்டர் ஜனநாயக முறைபோன்று, முதிர்ச்சி அடைந்ததொரு முற்றுமுழுதான ஜனநாயகக் கட்டமைப்பல்ல. ஆகவே, வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சிமுறையின் அடிப்படையிலான ஆட்சிமுறையொன்று, இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதென்பது, இந்த மண்ணுக்கு அந்நியமானதொரு மரத்தை, இந்த மண்ணில் கொண்டுவந்து, நாட்டியமைக்கு ஒப்பானதொரு செயற்பாடாகும். ஆகவே, அந்த மரம், அது உருப்பெற்ற அந்நிய மண்ணில் எவ்வாறு வளர்ந்ததோ, அவ்வாறே இங்கும் வளரும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுதான் பிரித்தானிய ஆட்சியாளர்கள் விட்ட முக்கிய தவறுகளுள் ஒன்று. வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சிமுறையை, அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னராக, அதற்கேற்றாற்போலதானதோர் அரசியல் கலாசாரம், கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய கலாசாரம் கட்டியெழுப்பப்படாத பட்சத்தில், அந்த முறை, இந்த மண்ணில் வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் இல்லை. வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சிமுறையும் மஹாவம்சக் கனவும் ஒன்றோடொன்று இயைபுறாதவை என்பதோடு, ஒன்றுக்கு ஒன்று, முற்றிலும் முரணானவை. ஆகவே வெஸ்ட்மினிஸ்டர் முறையின் கீழ், ஜனநாயகப் பலமானது, எண்ணிக்கை ரீதியில் பெரும்பான்மையானதோர் இனத்திடம் வழங்கப்பட்டபோது, அதன் பின்னர், அரசியல் முன்னரங்கில் எழுச்சி கண்ட அந்தப் பெரும்பான்மை இனத்தின் இனமத தேசியவாதமானது, மஹாவம்சக் கனவை அந்தப் பெரும்பான்மை மக்களிடம் விதைத்தது. அதன் விளைவாக, வெஸ்ட்மினிஸ்டர், ஜனநாயகத்தின் உட்பொருள் சிதைவுறத் தொடங்கியது. இதன் முதல் கட்டம்தான், 1972இல் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு ஆகும். இது சர்வாதிகாரத்தை, சட்டவாக்க சபையிடம் குவித்ததுடன், சிறுபான்மையினருக்கு இருந்த அரசமைப்பு ரீதியான பாதுகாப்புகளையும் இல்லாதொழித்து, சிங்கள மொழியை, ஒரே உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்ததுடன், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கியும் பிரகடனம் செய்தது. இதன் அடுத்த கட்டம், 1978இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு ஆகும். இது நிறைவேற்று அதிகாரங்களை, ஜனாதிபதி என்ற தனிநபரின் மீது குவித்தது. அதாவது நவீன துட்டகைமுனுவாக, ‘ஜனாதிபதி’ என்ற பதவி, முழு நாட்டையும் தனது நிறைவேற்று அதிகார ஆட்சியின் கீழ், ஆளும் கட்டமைப்பு ஜனாதிபதியை ‘அதிஉத்தம’ போன்ற வார்த்தைகளால் கௌரவிக்கும், ஆரம்பகால இலங்கை மன்னர்கள் நடந்ததாகச் சொல்லப்படும் முறைகளில், ஜனாதிபதிகள் நடந்துகொள்வதும், தனிநபரிடமான அதிகாரக் குவிப்பும் ஆகிய எல்லாம், இலங்கையானது வெஸ்ட்மினிஸ்டர் முறையிலிருந்து விலகித் தனது, மஹாவம்சக் கனவுப் பாதையில் பயணித்தது; பயணிக்கிறது. மஹாவம்சக் கனவு என்பதன் சுருக்கமானது, இலங்கைத் தீவானது சிங்கள-பௌத்தர்களுக்கு உரித்தான, ஒரே இறைமைக்கு உட்பட்ட நாடு என்பதுதான். துட்டகைமுனு ஆதர்சிக்கப்படுவதற்கு இதுவே காரணம். மஹாவம்சக் கனவுக்குள் சிறுபான்மையினரின் நிலை என்பது நிச்சயமாக இரண்டாந்தரமானதுதான். ஏனென்றால், அதற்குள் அவர்கள், அவர்களுக்குரிய சுயநிர்ணயத்துடனும், சுயமரியாதையுடனும் அரவணைக்கப்பட இடம் அரிது. இலங்கைத் தீவுக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமின்றி, சந்தேகமின்றி, நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்று சொல்லும் தலைவர்கள் கூட, இது அனைவருக்குமான நாடு என்று வௌிப்படையாகவும் வீரியத்துடனும் சொல்வதைத் தவிர்ப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே உள்ளது. மறுபுறத்தில், அவ்வாறு சொல்லத்துணியும், நவீன மேலைத்தேய தாராளவாத ஜனநாயகத்தைச் சுவீகரிக்கும் சிங்கள-பௌத்த தலைவர்கள் கூட, துரோகிகளாகப் பெருந்தேசியவாதிகளால் அடையாளப்படுத்தப்படுவதையும் நாம் அவதானிக்கலாம். ஆகவே, இந்த மஹாவம்சக் கனவுக்குள் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது சாத்தியக் குறைவானதொரு கனவேயாகும். இந்தப் பின்புலத்தில்தான், நாம் சமஷ்டியா, ஒற்றையாட்சியா என்ற விவாதத்தையும் கருத்திலெடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இது வெறும் சொற்றொடர்களுக்கிடையிலான பிரச்சினை என்ற கருத்து, பகுத்தறியப்பட வேண்டியதொரு கருத்தாகிறது. ‘சமஷ்டி’ என்ற சொல்தான் பிரச்சினை; அதனைத் தவிர்த்துவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள முடியும் என்று கூறுபவர்களின் கருத்து, கேட்பதற்கு இனியதாக இருப்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. எதுவுமற்றதோர் அரசியல் முட்டுக்கட்டை நிலையில் நின்று பார்க்கும் போது, இந்தக் கருத்து, புதுநம்பிக்கையை விதைப்பதாக இருக்கிறது. ஆனால், இது வெற்று நம்பிக்கையா, இல்லையா என்பதை, நாம் ஆராய வேண்டியதாக இருக்கிறது. இலங்கை அரசமைப்புக்கு, அதன் அடிப்படைகளை மாற்றும் திருத்தமொன்றைச் செய்வதாலோ, அல்லது புதிய அரசமைப்பொன்றை முற்றாக அறிமுகப்படுத்துவதாலோ, சர்வசன வாக்கெடுப்பொன்றினூடாக மக்களின் ஒப்புதல் அவசியமாகிறது. ஜே.ஆர். ஜெயவர்தன, தன்னுடைய நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலத்தை நீட்டிப்பதற்காக, சர்வசன வாக்கெடுப்புக்கு சென்றதன் பின்னர், இதுவரை வேறொரு சந்தர்ப்பத்திலும் சர்வசன வாக்கெடுப்பு என்பது நடத்தப்படவே இல்லை. சில சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவை உயர் நீதிமன்றத்தின் முன்னர் சவாலுக்குட்படுத்தப்பட்டு, குறித்த சட்டமூலங்களை நிறைவேற்ற சர்வசன வாக்கெடுப்பினூடான ஒப்புதல் அவசியம் என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், ஒன்றில் சர்வசன வாக்கெடுப்புக்கான அவசியத்தை ஏற்படுத்திய சரத்துகள் நீக்கப்பட்டதன் பின்னர் நிறைவேற்றப்பட்டோ, அல்லது குறித்த சட்டமூலங்கள் முற்றாக கைவிடப்பட்டோதான் இருக்கின்றனவேயன்றி, எந்த அரசாங்கமும் சர்வசன வாக்கெடுப்புக்குச் சென்றதில்லை. ஆகவே, இனப்பிரச்சினைத் தீர்வொன்று, அது ‘சமஷ்டி’ என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு அமைந்தாலும், அர்த்தமுள்ள தீர்வாக அது அமையுமானால், நிச்சயமாகத் தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பில் அடிப்படையான பல மாற்றங்களைச் செய்தே தீரும்; அத்தகைய மாற்றங்கள், நிச்சயம் சர்வசன வாக்கெடுப்பைக் கோரும்; அவ்வாறான சூழலில், இலங்கையில் ஆட்சியிலிருக்கும் எந்த அரசாங்கமாவது அத்தகையதொரு சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்லத் தயாரா என்பது, இங்கு மிக முக்கியமாக எழும் நடைமுறைக் கேள்வி ஆகும். சமஷ்டி என்ற வார்த்தையைத் தவிர்த்துவிட்டால், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை, பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்களா என்பதும் அத்தோடு இணைந்துவரும் மிக முக்கியமான நடைமுறைக்கேள்வியாகும். குறைந்த பட்சம், இந்த இரண்டு கேள்விகளுக்கும் “ஆம்” என்பது பதிலாக இருக்கும் போதினில் மட்டும்தான், சொற்றொடர்களைத் தாண்டிய தீர்வு என்பது, நடைமுறைச்சாத்தியமான நம்பிக்கையாக அமையும். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில், பெரும்பான்மைச் சிங்கள மக்களுடைய கரிசனையானது, சமஷ்டிதான் என்ற எடுகோளின் அடிப்படையில் பார்த்தால், சமஷ்டி என்ற வார்த்தை நீக்கமானது, நிச்சயம் பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திருப்தி செய்யும் எனும் முடிவுக்கு நாம் வரலாம். ஆனால், சிங்கள மக்களுடைய அரசியல் அபிலாஷைகளானவை, மஹாவம்சக் கனவின் படியானது என்றால், வெறும் சமஷ்டி என்ற வார்த்தை நீக்கம், அவர்களைத் திருப்தி செய்யும் என்று சொல்லிவிட முடியாது. ஒருவகையில், சிந்தித்துப் பார்த்தால் 13ஆம் சீர்திருத்தத்தின் தோல்வி என்பதும் இந்தஇடத்தில்தான் தொடங்குகிறது. கறுப்பெழுத்துகளில் பதியப்பட்டுள்ள சட்டம், எவ்வாறு இருந்தாலும், அந்தச் சட்டத்தின் ‘ஆன்மா’ எவ்வளவு தூரம் மதிக்கப்படுகிறது, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான், ஒரு சட்டத்தின் சாதகங்கள் தங்கியுள்ளன. ஆகவே, தனித்த தத்துவார்த்த அல்லது கோட்பாட்டு ரீதியிலான அணுகுமுறை, இங்கு அர்த்தமற்றதாகவே முடியும்; மாறாக நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதற்குரிய உபாயங்களை முன்னெடுப்பதன் வாயிலாக மட்டுமே, நாம் தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவல்ல, இனப்பிரச்சினைக்கான அர்த்தமுள்ள தீர்வை நோக்கிப் பயணிக்கலாம். அதற்கான வழிவகைகள் பற்றிச் சிந்தித்தலும் இங்கு முக்கியமாகிறது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாத்தியமான-தீர்வு/91-232180 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted April 29, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted April 29, 2019 ஒற்றையாட்சியும் சாணக்கியமும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஏப்ரல் 29 திங்கட்கிழமை, மு.ப. 01:29 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 193) பல தசாப்தங்களாக, நம்பிக்கைத் துரோகத்தையும் தொடர் ஏமாற்றங்களையும் சந்தித்து வந்த ஒரு மக்கள் கூட்டம், நல்லெண்ணத்துடன் எழக்கூடிய முயற்சிகளையும்கூட, ஐயக்கண் கொண்டே நோக்குவதென்பது இயல்பானது; யதார்த்தமானது. அதில் எந்தத் தவறும் உள்ளதென்று, எவரும் எழுந்தமானமாகச் சுட்டிக்காட்டிவிட முடியாது. அது அந்த ஏமாற்றமும், நம்பிக்கைத் துரோகமும் நிறைந்த வரலாறு தந்த ஆறாத வடுவின் விளைவால் எழும் நம்பிக்கையீனம். அந்த நம்பிக்கையீனத்தை, ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. அதற்கு மிகுந்த நல்லெண்ணமும், இடைவிடாத முயற்சியும் தேவை. மாறி மாறி வந்த பெரும்பான்மையின சிங்கள-பௌத்த அரசாங்கத் தரப்புகள், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று சொல்லும் போது, அதிலுள்ள தொழில்நுட்பங்கள், கருத்தியல்கள் அன்றி, நாம் கேட்பதை அரசாங்கம் ஒருபோதும் தரத்தயாராகவில்லை என்ற செய்தியே, தமிழ் மக்களைச் சென்றடைகிறது என்பது, இங்கு கவனித்து நோக்கப்பட வேண்டியது. மறுபுறத்தில், தமிழர் தரப்பு, சமஷ்டி ஆட்சியைக் கோரும் போது, அதிலுள்ள தொழில்நுட்பங்கள் கருத்தியல் அன்றி, தமிழர்கள் பிரிவினை கோருகிறார்கள் என்ற கருத்துத்தான், பெரும்பான்மைச் சிங்கள மக்களிடையே கொண்டு சேர்க்கப்படுகிறது. ‘ஒற்றையாட்சி’, ‘சமஷ்டி’ என்ற இந்த ஆழமான கருத்தியல்களின் மிக மேலோட்டமான, பாமரத்தனமான புரிதலுடன், இவை வெகுசனத்திடம் கொண்டு சேர்க்கப்படுவதாலும், சில சமயங்களில் திட்டமிட்ட இனவாத, நாசகாரப் பிரசார தந்திரோபாய உத்தியாக, இத்தகைய தவறான பொருள்கோடல்கள் கையாளப்படுவதாலும், பெரும்பான்மைச் சிங்கள மக்களிடையே, ‘சமஷ்டி’ என்பது ஒரு ஆபத்தான வார்த்தையாகவும் தமிழ் மக்களிடையே ‘ஒற்றையாட்சி’ என்பது தம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கியாளும் அரசுக்கட்டமைப்பாகவும், அதனால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாகவும் உணரச் செய்கிறது. இந்தப் புரிதல் மற்றும் பொருள்கோடல் சிக்கலுக்குள் உட்பட்டு, இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடலானது, ஒற்றையாட்சி எதிர் சமஷ்டி என்ற அர்த்தமற்றதொரு சுழலுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். இந்தச் சுழலைத் தக்கவைப்பதில் சந்தர்ப்பவாத, இனவாத, மற்றும் இன-மய்ய அரசியலினதும், அரசியல்வாதிகளினதும் பங்கானது மிக முக்கியமானதாகும். தொழில்நுட்பவியல் ரீதியான விடயங்களை வெகுசனங்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் போது, அதனை எளிமையாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்த எளிமைப்படுத்தலானது சந்தர்ப்பவாத அரசியலின் பிடிக்குள் சிக்கிக்கொண்டால், அது அதன் உண்மை அர்த்தத்துக்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலின் நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாக அமையத்தக்கதொரு திரிபுபடுத்தப்பட்ட பொருளையே வெகுசனங்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது. சமஷ்டிக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள கதி இதுதான்! ‘சமஷ்டி’ என்றால் தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்தல் என்ற சிங்கள-பௌத்த பேரினவாத அரசியலின் விசமப் பிரசாரமானது, கோயபெல்ஸின் ‘பெரும் பொய்’ என்ற பிரசாரத் தந்திரோபாயத்தின்படி, இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மக்களின் மனதில் ஆழமாகப் பதியப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், சமஷ்டிக்கு சிங்கள-பௌத்த பேரினவாதம் வழங்கியுள்ள ‘பிரிவினை’ என்ற பொருள்கோடலானது, சமஷ்டியின் உண்மை அர்த்தத்தை மறைக்கிறது என்பதை விட, சமஷ்டியின் நோக்கத்துக்கு முற்றுமுழுதும் எதிரானதோர் அர்த்தத்தை வழங்குகிறது. ‘சமஷ்டி’ என்பதை ஓர் அரசானது, தனியரசுகளாகப் பிரிந்துபோகாது, அவை தம்மிடையே இறைமையையும், அதிகாரத்தையும் பகிர்வதனூடாக ஓர் அரசாகத் தொடர்வதற்கானதோர் உத்தி. ஆகவே, சமஷ்டி என்பது ஒற்றுமைக்கான வழியே தவிர, பிரவினைக்கானது அல்ல. ஆனால், இலங்கையின் பெரும்பான்மையின அரசியலினால் முன்னெடுக்கப்பட்ட விசமத்தனமான பிரசாரமானது, ‘சமஷ்டி’ என்பது பிரிவினைக்கானது என்ற தவறான புரிதலைப் பெரும்பான்மை மக்களிடையே, குறிப்பாக சிங்கள மக்களிடையே உருவாக்கி விட்டது. ஆகவே, தமிழ் மக்கள் சமஷ்டி கோரும் போதெல்லாம், அது சிங்கள மக்களிடையே, தமிழ் மக்கள் பிரிவினை கோருவதாகத்தான் சென்றடைகிறது. மறுபுறத்தில், தமிழ் அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாததொரு தீயசொல்லாக, ‘ஒற்றையாட்சி’ ஆகிவிட்டது. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது, தீர்வே கிடையாது; அதனை ஏற்கவும் முடியாது என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கங்கணங்கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதனாலேயே சமரசத் தீர்வு காண விளையும் மிதவாத தமிழ் அரசியல் தலைமைகளும், தம்முடைய வாக்குவங்கி அரசியலைக் காப்பாற்றிக்கொள்ள, சில மாற்று உபாயங்களைக் கையாள வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதன் ஒரு பரிமாணமாகவே ‘ஒன்றுபட்ட இலங்கை’ என்ற சொற்றொடரை, புதிய அரசமைப்புக்கான முன்மொழிவில் கையாண்டிருந்தமையைக் காணலாம். இதனைச் சமஷ்டி கோரும் தமிழ் அரசியல் தலைமைகள் கடுமையாக விமர்சித்ததுடன், முற்றாக நிராகரித்தும் இருந்தன. உண்மையில் இங்கு, ஒற்றையாட்சி என்ற சொல்லோ, சமஷ்டியாட்சி என்ற சொல்லோ, எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை. அரசறிவியலும் சட்டமும் அறிந்த யாவருக்கும் இது புரியும். இலங்கையைச் சமஷ்டி அரசாக, அரசமைப்பில் குறிப்பிட்டுவிட்டு, அதிகாரங்களை மத்தியில் குவித்துவிட்டால், சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும், அது தீர்வு கோரும் தமிழ் மக்களுக்கு எந்தவிதப் பயனையும் தராது. சிங்களப் பேரினவாத அரசியல் தலைமைகள், மிகுந்த சாணக்கியத்துடன் செயற்பட்டிருக்குமானால், அவர்கள் தமிழர்களுக்கு சமஷ்டியை வழங்கியும், வழங்காமலும் இருந்திருக்க முடியும். இலங்கையை சமஷ்டி அரசு என்று பிரகடனப்படுத்திவிட்டு, மறுபுறத்தில், மத்தியில் அதிகாரக் குவிப்பை மேற்கொள்ளத்தக்கதொரு கட்டமைப்பை, அவர்கள் முன்மொழியலாம். இதன் மூலம், தாம் பிரிவினையைத் தடுக்கத்தக்க சமஷ்டித் தீர்வுக்குத் தயார் என்ற உயர் நிலைப்பாட்டையும் அவர்கள் உலகத்துக்கு முன்னால் சமர்ப்பித்திருக்கலாம். இத்தகைய தீர்வை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. வெறும் பெயரளவு சமஷ்டி, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது. இதுதான், தமிழர்களுக்கு சமஷ்டி வேண்டும் என்று, மேலோட்டமாகச் சொல்வதிலுள்ள சிக்கல் ஆகும். ஆனால், சிங்களப் பேரினவாத அரசியல் தலைமைகளுக்கு, இந்தச் சாணக்கியம் இருக்கவில்லை. அவர்கள் தம்முடைய இனவாத வாக்கு வங்கிக்குத் தீனியாகத் தமிழர் எதிர்ப்பையும் சமஷ்டி எதிர்ப்பையும் முன்வைக்கவும், பயன்படுத்தவும் விரும்புகிறார்களேயன்றி, சாணக்கியத்தனமாக, தூரநோக்கத்துடன் தம்முடைய நலன்களைப் பாதுகாக்கத்தக்க வாய்ப்பொன்றை நழுவவிட்டிருக்கிறார்கள். சர்வதேச அரசியலும், பூகோள அரசியலும், அரசியல் சாணக்கியமும் நிறைந்த சிங்கள அரசியல் தலைமைகளால் கூட, இதனைச் செய்ய முடியாதிருப்பதற்கு, பேரினவாத உணர்ச்சியும், சிங்கள-பௌத்த பேரினவாத பகட்டாரவார அரசியல் தலைமைகளின் மக்கள் செல்வாக்கும், ஆதிக்கமும் முக்கிய காரணங்களாகும். ஆகவே தான், சாணக்கியத் தனமான சிங்களத் தலைமைகள் இத்தகைய சாணக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, பேரினவாத சிங்களத் தலைமைகளே அதற்கு முதல் முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகிறார்கள். இதில் அந்தப் பேரினவாத சிங்கள அரசியல் தலைமைகளுக்குப் புரியாத விடயம், அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் நலன் சார்ந்துதான் செயற்படுகிறார்கள் என்பது. சமஷ்டியின் நிலைவரம் இத்தகையதாக இருக்கையில், மறுபுறத்தில் ஒற்றையாட்சிதான் வேண்டும் எனும் சிங்கள-பௌத்த தலைமைகளின் விடாப்பிடித்தனத்தை சாணக்கியமாகவும், தந்திரோபாய ரீதியிலும் கையாள்வதில் தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து தவறி வருகின்றன என்பதுதான் கவலைக்குரிய விடயம். ‘ஒற்றையாட்சி’ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணமும், அது சுட்டும் கோட்பா ட்டின் பொருளும் காலவோட்டத்தில் பரந்துபட்ட மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இலங்கையின் ‘ஒற்றையாட்சி’ பற்றிய புரிதலானது, துட்டகைமுனு முழுத் தீவையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்ததன் பாலான புரிதல் என்று சில ஆய்வாளர்கள், மானுடவியல் மற்றும் வரலாற்றியல் சான்றுகளைச் சுட்டிக் குறிப்பிடுவர். ஆனால், அவர்களே மஹாவம்சம் சுட்டும் அத்தகைய ஒற்றையாட்சிக் கோட்பாடும், நவீன மேற்கத்தேய ஒற்றையாட்சிக் கோட்பாடு ஒன்றல்ல என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்கள். இன்றைய இலங்கையின் ஒற்றையாட்சிக் கோட்பாடென்பது, சிங்கள-பௌத்த தலைமைகள் எத்தனை பிரயத்தனப்பட்டு துட்டகைமுனு கால ஒற்றையாட்சியுடன் ஒப்பிட விளைந்தாலும், பிரித்தானிய ‘வெஸ்ட்மினிஸ்டர்’ முறையை ஒத்த ஒற்றையாட்சியாகும். சுதந்திர இலங்கைக்கு சோல்பரி அரசமைப்புத் தந்த பிரித்தானியாவை ஒத்த ஆட்சிமுறை இது. ஆகவே, இலங்கையின் ஒற்றையாட்சியை துட்டகைமுனுவின் ஒற்றையாட்சியுடன் ஒப்பிடுவதானது அர்த்தமற்றது. மாறாக, பிரித்தானிய ஒற்றையாட்சி முறையுடன் ஒப்பு நோக்குவதே சாலவும் பொருத்தமானது. பிரித்தானியா (முழுமையான பிரித்தானியாவும் வட அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியம்) என்பது ஒரு முடியின் இறைமைக்குட்பட்ட அரசாகும். ஐக்கிய இராச்சியம் என்பது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளைக் கொண்டது. அது ஓர் ஒற்றையாட்சி அரசாகவே தன்னை அடையாளப்படுத்துகிறது. ஒட்டுமொத்த அரசும் ‘வெஸ்ட்மினிஸ்டர்’ நாடாளுமன்றத்தின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால், அதன் சமகாலக் கட்டமைப்பை உற்று நோக்கினால், மத்தியிலுள்ள ‘வெஸ்ட்மினிஸ்டர்’ நாடாளுமன்றமானது தன்னுடைய அதிகாரங்களை வேல்ஸ் சட்டசபை, ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம், வடஅயர்லாந்து நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் பகிர்ந்தும், பரவலாக்கியும் உள்ளதை அவதானிக்கலாம். குறிப்பாக, ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்துக்கு நிதி அதிகாரங்கள் உள்ளிட்ட பரந்துபட்ட அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் அவதானிக்கலாம். இந்த இடத்தில்தான் சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்பில், பிரதம நீதியரசர் ப்ரயசத் டெப் குறிப்பிட்ட “இறைமையைக் பகிர்தல், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்பவை ஒற்றையாட்சி அரசுக்குள் சமஷ்டி முறை அரசா ங்கத்தை ஸ்தாபிக்க வழிவகுக்கும் என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்த் தலைமைகள், ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற சொல்விளையா ட்டுகளைக் கடந்து சிந்திக்குமானால், சிங்கள-பௌத்த தலைமைகளின் விடாப்பிடியான ஒற்றையாட்சி என்ற சொற்றொடரை ஏற்றுக்கொண்டே அதற்குள்ளாகவே தமிழ் மக்கள் வேண்டும் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்ளச் சாணக்கியமாக எத்தனிக்கலாம். ஆனால், சிங்களத் தலைமைகளுக்குள் உள்ளது போலவே, சாணக்கியமான தமிழ்த் தலைமைகள் இதனை முயலும் போது, தீவிர தேசியவாதத் தமிழ்த் தலைமைகள் அதனைச் சரணாகதி அரசியலாக உருவகப்படுத்தி, தமிழ் மக்களிடையே அத்தகைய முயற்சிகளுக்கான ஆதரவைக் குறைத்து விடுகிறார்கள். இந்த இடத்தில், இன்னொரு கேள்வி கட்டாயம் எழும். சிங்கள-பௌத்த பேரினவாத தலைமைகளின் தேவை என்பது, வெறும் ஒற்றையாட்சி என்ற சொல்தானா? பிரித்தானியாவைப் போல, ஒற்றையாட்சிக்குள் மிகப்பரந்துபட்டதோர் அதிகாரப் பகிர்வை, கிட்டத்தட்ட சமஷ்டியை ஒத்த அதிகாரப் பகிர்வைத் தர அவர்கள் தயாரா? இந்தக் கேள்விக்கான பதில் முக்கியமானது, ஆனால் இந்தப் பதில்தான் சாணக்கியமான தமிழ்த் தலைமைகளின் நிலையை இன்னும் சிக்கலுக்குள் தள்ளுவதாகவும், தீவிர தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் நிலைப்பாட்டை இன்னும் வலுப்படுத்தவதாகவும் அமைகிறது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒற்றையாட்சியும்-சாணக்கியமும்/91-232514 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,247 Posted May 7, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted May 7, 2019 இனப்பிரச்சினையும் தீர்வும் என்.கே. அஷோக்பரன் / 2019 மே 07 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:53 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 194) எந்தவோர் பிரச்சினைக்கும், சிக்கலுக்குமான தீர்வை, அந்தப் பிரச்சினையின் இரு முரண்பட்ட எல்லைகளில் தேடுவதைவிட, அதன் நடுப்பகுதியிலான ஒரு சமரசமே, இருதரப்புக்கும் உகந்ததொன்றாக அமையும். இது சமரசத்தின் அடிப்படையிலான அணுகுமுறையாகும். இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படையை, நாம் உற்று அவதானித்தால், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளான ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்பதற்கும், பெரும்பான்மைப் பலம் கொண்ட சிங்கள-பௌத்தர்களின் அரசியல் அடிப்படையாக மாறிப்போயுள்ள, ‘மஹாவம்சக் கனவுக்கும்’ இடையிலான இடைவௌியில் இலங்கையின் இனப்பிரச்சினை உருப்பெற்றுள்ளதை அவதானிக்கலாம். இலங்கை என்பது, அதாவது இந்தத் தீவு மொத்தமும் ‘சிங்கள-பௌத்த’ நாடு என்பதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை, கடந்த கால வரலாறு தௌிவாக உணர்த்தி நிற்கிறது. அதேவேளை, இலங்கையில் தமிழர்கள் என்போர் தனித்த தேசம் என்பதையும், இலங்கையின் குறித்ததொரு பகுதி, தமிழ் மக்களின் தாயகம் என்பதையும், அத்தகைய தமிழர்கள், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் ஆகிறார்கள் என்பதையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் வரலாறு தெட்டத்தௌிவாக வௌிக்காட்டி நிற்கிறது. இதில் தமிழ் மக்கள், இது ‘சிங்கள-பௌத்த’ நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாமைக்கான காரணம், அவ்வாறு, அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழ் மக்கள் தம்முடைய தாய்மண்ணிலேயே, இரண்டாந்தரப் பிரஜைகள் என்பதை ஏற்றுக்கொண்டதற்குச் சமனாக அது அமைந்துவிடும் என்பதுதான். இது என்னுடைய வீடு; இங்கு நீ வாழலாம். இங்கு நீ வாழ்ந்தாலும், இந்த வீடு என்னுடையது மட்டும்தான் என்பதைப் போன்றதே, இந்தச் ‘சிங்கள-பௌத்த’ நாடு என்ற கருத்தும். மறுபுறத்தில், தமிழ் மக்களின் ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை’ ஏற்றுக்கொள்ள, சிங்கள மக்கள் காட்டும் தயக்கத்தின் அடிப்படையாக, நாம் இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம். முதலாவது, தமிழ் மக்களது ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயமானது’, ‘மஹாவம்சக் கனவோடு’ ஒத்துப்போகாது. அதாவது, ‘மஹாவம்சக் கனவின்’ தாற்பரியம் என்பது, ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் ‘சிங்கள-பௌத்த’ இறைமையின் கீழ் கொண்டுவரப்படுதல் எனும் எண்ணப்பாடாகும். உண்மை வரலாற்றில், இது ஒருபோதும் நடந்திராதது என்பதை, பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இங்கு சிலர் இடைமறித்து, துட்டகைமுனு, பராக்கிரமபாகுவை உதாரணம் காட்டலாம். துட்டகைமுனுவின் காலத்திலும் சரி, பராக்கிரமபாகுவின் காலத்திலும் சரி மேற்கத்தேய அடிப்படையிலான நவீன இறைமைக் கோட்பாட்டின் படி, இலங்கை ஒரே இறைமையின் கீழ் இருந்தது என்று சொல்லமுடியாது. நவீன அரசாங்கங்களின் கட்டமைப்புக்கும், வரலாற்றில் அமைந்த முடியாட்சி அரசுகளின் கட்டமைப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதனை இந்தத் தொடரின் முன்னைய பகுதிகளில் சற்று விளக்கமாக பார்த்திருந்தோம். ஆகவே, ‘மஹாவம்சக் கனவை’ நவீன அரசாங்கக் கட்டமைப்பின் மேல்வைத்து, இலங்கையை ‘சிங்கள பௌத்த’ ஒற்றையாட்சி அரசாகக் கட்டமைக்க விளைவதானது, இலங்கையின் இயல்பான அரசியல் கட்டமைப்புக்கு முரணானதாகவே அமையும். ‘சிங்கள பௌத்த’ தேசியவாதத்தின் சிக்கல், இந்த இடத்தில்தான் தொடங்குகிறது. இரண்டாவது, தமிழ் மக்களின் ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்ற கோரிக்கையானது, நிச்சயமாகப் பிரிவினைக்கே வழிவகுக்கும் என்ற தவறான புரிதல், மிக ஆழமாகச் ‘சிங்கள-பௌத்த’ மக்களிடையே, அவர்களது அரசியல் தலைமைகளால் விதைக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு அளிக்கப்படும் எந்தத் தீர்வும், நாட்டைத் துண்டாடிவிடும் என்ற ‘பேயை’க் காட்டி, பேரினவாதத் தலைமைகள், சிங்கள மக்களின் மனங்களில், அதன் மீதான ஆழமான நம்பிக்கையை விதைத்துவிட்டார்கள். ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத அரசியல் நிலைப்பாட்டை, நாம் அவதானித்தால், அதில் ஆகக் குறைந்தது, இரண்டு வகையான அரசியலைக் காணலாம். ஒன்று, மிக நேரடியானது. “இலங்கை என்பது, சிங்கள-பௌத்த நாடு; இதை ஏற்றுக்கொண்டு, இங்கு சிறுபான்மையினர் வாழலாம்” என்ற ‘வழவழா கொழகொழா’ எதுவுமற்ற, மிக நேரடியான, ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதத் தேசியவாத நிலைப்பாடு. இதைச் சமகாலத்தில் அதீத வலதுசாரிகள் என்று பெயரிடுகிறார்கள். எல்லா நாடுகளிலும் இதுபோன்ற, அதீத வலதுசாரிகள் இருக்கவே செய்கிறார்கள்; இருக்கவே செய்வார்கள். ஆனால் பெரும்பாலும் நேரடி அரசியற்பலம் என்பது இவர்களிடம் இருப்பதில்லை. இவர்கள், பலமான அழுத்தக்குழுக்களாகவே தொடர்வார்களேயன்றி, நேரடிப் பலத்தைப் பெறுவது என்பது அரிதிலும், அரிது. ஆனால், இரண்டாவது வகையொன்று இருக்கிறது. இவர்கள், “இலங்கை என்பது பல்லினம் வாழும் நாடு” என்பதையே தமது பதாகையாகக் கொண்டிருப்பார்கள், அடிப்படையில் மேற்கத்தேய தாராளவாதத்தின் தன்மைகளைத் தமது பதாகையில் கொண்டிருப்பார்கள். “அனைவரும் சமம், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமில்லை” என்ற மேற்கத்தேய தாராளவாதக் கருத்துகள், அவர்கள் பேச்சில் நிறைந்திருக்கும். இத்தகையவர்களே, மிகப்பெரும்பான்மையான அளவில் நேரடி அரசியற்பலத்தைப் பெற்று, ஆட்சி நடத்துபவர்களாக இருக்கிறார்கள். அப்படியானால் என்ன பிரச்சினை? இங்கு பிரச்சினை என்பது, ‘முரண்பாட்டுப் போலித்தனத்தில்’ (hypocrisy) இருந்துதான் எழுகிறது. இந்தத் தாராளவாதக் கருத்துகளை வௌியிடும் தலைமைகளின் பேச்சுக்கும் நடத்தைக்கும் இடையிலான இடைவௌிதான், அந்த முரண்பாட்டுப் போலித்தனம். சர்வதேசத்தில் தன்னை மிகப்பெரிய தாராளவாதியாக முன்னிறுத்திய ஜே.ஆர், தன்னை ‘மஹாவம்சக் கனவின்’ படி, தன்னை அடுத்த துட்டகைமுனுவாகவும் காட்டிக்கொள்ள எத்தனித்தார். இந்தத் தன்மைய ஜே.ஆரிடம் மட்டுமல்ல, அவருக்குக்கு முன்னிருந்த சில தலைமைகளிடமும், அவருக்குப் பின்வந்த அனைத்துத் தலைமைகளிடமும் வேறுபட்ட அளவுகளில் காணக்கூடியதாகவே இருந்தது. தன்னிடமிருந்த 5/6 பலத்தைக் கொண்டு, ஜே.ஆர் ஒரு சிவில் தேச அரசாங்கத்தை, இனம், மதம் சாராத அரசாங்கத்தைக் கட்டமைத்திருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை. சிங்கப்பூரில் லீ க்வான் யூ சாதித்ததை, இலங்கையில் செய்யும் துணிவு, இலங்கையின் எந்தத் தலைமைக்கும் இருக்கவில்லை என்பது, ஒவ்வோர் இலங்கையரும் வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இவை இவ்வாறு இருக்கும் பட்சத்தில், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, உண்மையில் சாத்தியமா என்ற கேள்வி எழுவது, தவிர்க்க முடியாததாக இருக்கிறது. உலகிலுள்ள இன மதப் பிரச்சினைகளோடு ஒப்பிடும் போது, இலங்கையின் இனப்பிரச்சினை என்பது, தத்துவார்த்த ரீதியில் தீர்ப்பதற்கு சிக்கலானதொரு பிரச்சினையே இல்லை. இலங்கையின் இனப்பிரச்சினையானது, குறைந்தது இரண்டு, அதிகபட்சம் மூன்று மக்கள் குழுக்களிடையேயான, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் மூலம், இலகுவில் தீர்த்துவிடக் கூடிய ஒன்று. உலகின் சில நாடுகளில் இருபது, முப்பது, ஏன் அதற்கும் மேற்பட்டளவு மக்கள் குழுக்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றோடெல்லாம் ஒப்பிடும் போது, இலங்கையின் இனப்பிரச்சினையென்பது, தீர்ப்பதற்கு இயலாததொன்றல்ல, ஆனால், இங்கு காணப்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைவதுதான், இன்றுவரை சவாலானதொன்றாகத் தொடர்கிறது. இங்கு முதன்மையானதும், பிரதானமானதுமான நடைமுறைச் சவாலாக இருப்பது, தீர்வு ஒன்றைக் காண்பதற்கான அரசியல் மூலதனம், அரசியல்வாதிகளிடம் இல்லாதிருப்பதேயாகும். ‘இனப்பிரச்சினையில் குளிர்காய்தல்’ என்ற சொற்பிரயோகத்தை, நாம் பலமுறை கேள்விப்பட்டுள்ளோம். இருதரப்பு அரசியல்வாதிகளும், தம்முடைய அரசியலை, இனமுரண்பாட்டை முன்னிறுத்தி, தத்தம் இன நலன்களின் அடிப்படையில், இன ரீதியாகப் பிளவுற்றுள்ள வாக்கு வங்கிகளிடம், வாக்கு வேட்டை நடத்தும் அரசியலை முன்னெடுப்பதால், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதைவிட, அதன் ஏதோ ஒரு வகையான தொடர்ச்சியே, அவர்களின் வாக்கு வங்கி அரசியலுக்குச் சாதகமாக அமைகிறது. ஆகவே, இனமய்ய அரசியலைக் கடப்பதில் அரசியல்தலைமைகள் தயக்கத்தை வௌிப்படுத்துவதாக நாம் உணர்ந்தால், அதற்கு இதுவே காரணம். ஒவ்வொரு தரப்பின் இனமய்ய மற்றும் இனவாத அரசியல், மறுதரப்பின் இனமய்ய மற்றும் இனவாத அரசியலுக்கு உரமாக மாறுகிறது. காலப்போக்கில் இதுவே பெரும் இனமய்ய இனவாத விஷச்சுழலாக உருவாகிவிடுகிறது. இதை ஓரிடத்திலேனும் தகர்க்க வேண்டிய தேவை உணரப்பட்டாலும், அதைச் செய்யத்தயாராகவுள்ள, தீர்க்கமான தலைமைகள் இங்கு இல்லை. ‘சமஷ்டி’ என்ற வார்த்தையையே உச்சரிக்கத் தயங்கும் தலைமைகளால், மக்களின் மனங்களில் சமஷ்டி மீதும் அதிகாரப் பகிர்வு மீதும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகத்தவறானதும், அடிப்படையிலேயே பிழையானதுமான அபிப்பிராயத்தை மாற்றிவிட முடியாது. தாராளவாத முகமாக, ‘மஹாவம்சக் கனவின்’ முகமா என்று முடிவு செய்யமுடியாதபடி, முகமூடிகளை மாற்றி மாற்றி மாட்டிக்கொள்ளும் தலைமைகளால், ஒரு போதும் அர்த்தமுள்ள தீர்வொன்றை அடையப் பெறமுடியாது. ஆகவே, இந்த நடைமுறைச் சிக்கலைக் கடக்கும் போது மட்டும்தான், இனப்பிரச்சினைக்கானதொரு தீர்வு என்பது சாத்தியமாகும். அப்படியானால், அத்தகைய தீர்வின் வடிவம் எதுவாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழும். தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் என்பது, தீர்வின் வடிவம் சார்ந்ததல்ல; அது தீர்வின் அடிப்படை சார்ந்தது. ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்ற தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைத் தரவல்ல, எந்தத் தீர்வு வடிவமும் தமிழர்களுக்கு ஏற்புடையதாகவே அமையும். ஆனால், அது வெறும் பெயரளவிலான, சாக்குப்போக்கான தீர்வாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதுதான், தமிழ் மக்களின் முக்கிய கரிசனை. நாம், முன்னர் இந்தத் தொடரில் அவதானித்தததைப் போலவே, ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்ற அடிப்படை அபிலாஷைகளை, ‘சமஷ்டி’ என்ற கட்டமைப்பினூடாக வழங்க முடியும். ஆனால், அது மட்டுமே ஒரேயொரு பொருத்தமான தீர்வு வடிவமல்ல. ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்பவற்றை ‘ஒற்றையாட்சி’க் கட்டமைப்புக்குள்ளும் வழங்க முடியும். அதற்கான முன்னுதாரணங்களும் உண்டு என்பதை நாம் கண்டுகொண்டோம். மேலும், சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற பாரம்பரிய வகைப்படுத்தலைத் தாண்டியும் புத்தாக்க சிந்தனைகளூடாகவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள முடியும். ‘பன்மைத் தேசியம்’ என்ற சித்தாந்தம் கூட, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாகும். இலங்கையைப் ‘பன்மைத் தேசிய அரசாக’ அரசமைப்பு ரீதியாகக் கட்டமைப்பதன் வாயிலாக, இலங்கையிலுள்ள பல்வேறுபட்ட தேசங்களும் அரசமைப்பு ரீதியிலான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதோடு, அதன்பாலான அதிகாரப்பகிர்வு, சுயநிர்ணயம் என்பவற்றையும் அடைந்துகொள்ள முடியும். இதை ஓர் அரசாங்கத்துக்குள் பிரிவினையைத் தவிர்த்து, அடைந்துகொள்ள முடியும். இது ஒரு மாற்று உதாரணம் மட்டுமே; இதைப் போன்ற பல்வேறு புத்தாக்க வடிவங்களை நாம் கைக்கொள்ளலாம். ஆனால், இங்கு சிக்கல் என்பது, தீர்வின் வடிவத்தில் இல்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு சிக்கல் என்பது, தீர்வை ஏற்படுத்துவதற்கான நடைமுறை அரசியலின் விருப்பில் தங்கியிருக்கிறது. அது, நடைமுறை அரசியலில் மக்கள் விருப்பத்தைக் கட்டமைப்பதனூடாக மட்டுமே அடையப்பெற முடியுமேயன்றி,மந்திரத்தால் தீர்வெனும் மாங்கனியைப் பெற்றுவிட முடியாது என்பதுதான் கவலைக்குரிய யதார்த்தம். (முற்றும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனப்பிரச்சினையும்-தீர்வும்/91-232799 Quote Link to post Share on other sites
Kasen 0 Posted October 23, 2020 Share Posted October 23, 2020 தமிழர் சுயாட்சிக் கழகத்தின் கட்சி யாப்பு கொள்கைகள் இருந்தால் அனுப்ப முடியுமா Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.