Jump to content

வாழ்த்துகள் வாழ்த்துக்கள் எது சரி.


Recommended Posts

பண்டிகைக் காலமான இப்போது என்ர மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கான பதில் இது.

 

வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி?

 
ஆன்மீக கட்டுரைகள் நன்றாக உள்ளன ..  நல்  வாழ்த்துகள் என ஒரு நண்பர் மெயில் அனுப்பினார்.. இன்னொருவரோ, இல்லாத கடவுளைப் பற்றி எழுத கூடாது என்ற அறிவு வர வாழ்த்துக்கள் என இன்னொருவர் மெயில் அனுப்ப்பினார்.
 
ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.
 
இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?
 
இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
 
உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.
 
இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..
 
நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு
 
எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?
 
இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.
 
 1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..
 
உதாரணம்.. மாடு , ஆடு ....    இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..
 
2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..
 
பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது  ) 
 
2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..
 
செலவு, வரவு-  செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்
 
 
3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..
 
வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று )
 
கணக்கு - கணக்குகள்  
 
நாக்கு - நாக்குகள்
 
 
வாத்து- வாத்துகள்
 
 வாழ்த்து  - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு )
 
உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.
 
தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்
 
 
அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.
 
வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம் 
 
சரியா?
 
வாழ்த்துகள் சொன்ன , வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என்நன்றிக்களை    நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன்
 
Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி ஜீவன். நீண்ட காலமாக நான் தடுமாறிக் கொண்டு இருந்த விடையம் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாழ்த்துகள் சொற்றாடல் சம்பந்தமாக சீமானின் "வாழ்த்துக்கள்" திரைப்பட வெளியீட்டு விழாவில் கலைஞர் கருணாநிதி முரண்பட்டதாக ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சார், இலக்கணப்படி சரியாயினும், இலக்கணப்படி பன்மை வடிவமே தவறென நிறுவ இயலும்.

வாழ்த்து, நன்றி, வணக்கம் போன்றவை அகஞ்சார்ந்த செயல்கள் அல்லது உணர்வுகள் இவற்றிற்கு இலக்கண வழக்கில் பன்மை கிடையா. 

பொங்கல் வாழ்த்துகள் என்று எழுதுவது தவறு. பொங்கல் வாழ்த்து என்றே வரும்.

Link to comment
Share on other sites

47 minutes ago, வாலி said:

வாழ்த்து, நன்றி, வணக்கம் போன்றவை அகஞ்சார்ந்த செயல்கள் அல்லது உணர்வுகள் இவற்றிற்கு இலக்கண வழக்கில் பன்மை கிடையா. 

உண்மைதான்.

யாருமே வணக்கங்கள் என்று சொல்வதில்லை. நன்றிகள் என்றும் சொல்வதில்லை. ஏன் வாழ்த்துகள்?

இங்கு ஒரு தமிழ் பண்டிதர் இருப்பதை மறந்துவிட்டேன். நான் ஒரு தமிழ் பண்டிதரின் மருமகன் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மைதான்.

யாருமே வணக்கங்கள் என்று சொல்வதில்லை. நன்றிகள் என்றும் சொல்வதில்லை. ஏன் வாழ்த்துகள்?

இங்கு ஒரு தமிழ் பண்டிதர் இருப்பதை மறந்துவிட்டேன். நான் ஒரு தமிழ் பண்டிதரின் மருமகன் மட்டுமே.

பண்டிதர் என்பது தவறு ஜீவன் ஸார், நான் எனது மொழியை நேசிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

இங்கும் மரியாதைப் பன்மை பிரச்சனையாகவிருந்தால் பண்டி என்று எழுதலாமா? என்ன பிழையென்று சொல்லவும்.

Link to comment
Share on other sites

பண்டிதர் என்பது தவறு ஜீவன் ஸார், நான் எனது மொழியை நேசிக்கின்றேன்.

அடபாவி உங்களை பண்டிதர் என்று அழைத்ததுதான் பிழையா. நானும் ஏதோ பண்டிதர் என்ற சொல்லே பிழையென்று ஊர், உலகம் முழுக்க தேடிற்றன்.

 

 

இந்த வாலி என்னைக் குழப்பினதில ஒரு கட்டுரை வாசிக்க முடிந்தது. பிடித்திருந்தது - பகிர்கின்றேன்.

நீ என்ன பெரிய்ய பருப்பா.. ??

 
அக்காலத்தில் மெத்த படித்தவர்களையும், மேன்மையான பொறுப்புகளில் இருப்பவர்களையும் பண்டிதர் என்று அழைப்பது வழக்கம். அந்த ஊரில் வசித்து வந்த பொன் பொருளுடைய சீமான் ஒருவருக்கு தன்னையும் எல்லோரும் பண்டிதர் என்று அழைக்கவேண்டும் என்ற ஆசை. ஆனால் அவர் படிக்காதவர், அதனால் எந்தவித பெரிய பொறுப்புள்ள பதவிகளிலும் அமர வாய்ப்பு இல்லாதவாரக இருந்தார். ஆனாலும் அவரின் பண்டிதர் ஆசை விடவில்லை.
 
ஒருநாள் இவர் பீர்பாலிடம் கேட்டார்," எல்லோரும் உங்களை பண்டிதர் என்று அழைக்கிறார்கள், உங்களைவிட செல்வந்தனான என்னை யாரும் அப்படி அழைப்பதில்லை.. நானும் பண்டிதர் என எல்லோராலும் அழைக்கப்படவேண்டும்; அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.
 
இவருக்கு பண்டிதர் என்பதன் பொருள் சொல்லி தெளிய  வைக்க முடியாது என்று புரிந்து கொண்ட பீர்பால் அவரை வேறு விதமாக கை ஆண்டார்.
அவரிடம் பீர்பால்," சரி, நாளை முதல் உங்களை எல்லோரும் பண்டிதர் என கூப்பிட நான் ஏற்பாடு செய்கிறேன், ஆனால் நாளை ஒருநாள் மட்டும் உங்களை பண்டிதர் என்று யாரேனும் கூப்பிட்டால் நீங்கள் கோபப்பட வேண்டும்" என்று கட்டளை இட்டு அனுப்பி வைத்தார்.
 
பின்பு அருகில் விளையாடி கொண்டிருத்த சிறுவர்களை அழைத்து, இப்படி சொன்னார்,"சிறுவர்களே, அதோ போகின்றாரே.. அந்த செல்வந்தரை மட்டும் யாரும் பண்டிதர் என அழைத்து விடவேண்டாம், அப்புறம் அவ்வளவு தான், அவருக்கு கடும் கோபம் வந்து விடும்.. மறுபடியும் கூறுகிறேன் யாரும் அவரை பண்டிதர் என அழைக்கக் கூடாது"
 
செல்வந்தர் செல்வதையே உற்றுப்பாந்த்துக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன்," பண்டிதரே!! ஏய்  பண்டிதரே!! " எனக் கத்திவிட்டு ஒளிந்து கொண்டான். கடும் கோபமான தோரணையில் அவர்களை திரும்பிப் பார்த்த செல்வந்தர்," யாரடா என்னை பண்டிதர் என அழைத்தது?? யாரவது அப்படி கூப்பிட்டால் நடப்பதே வேறு" என்று கோபித்துவிட்டு நடையைக் கட்டினார்.
 
சிறுவர்களும் விளையாட்டாக பண்டிதர் பண்டிதர் என்று மறுநாள் முழுவதும் கேலி செய்வதும், செல்வந்தர் கோபப்படுவதும் - என்று முழு நாள் வேடிக்கை பார்த்த மக்கள் அவர்களும் பண்டிதர் என்றே அழைக்கத்தொடங்கினர். இப்போது செல்வந்தர் எதிர்ப்பார்த்தப் படி ஊரே அவரை பண்டிதர் என அழைத்துக்கொண்டிருந்தது. 
 
ஆனால் இந்த அர்த்தத்தில் தான் எல்லோரும் தன்னை அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரா அந்த செல்வந்தர் ?
 
ஒரு சொல்லில்லோ அல்லது பெயரிலோ மட்டும் அதன் அர்த்தம் அடங்கிவிடுவதில்லை, வெறும் அகராதியில் இருக்கும் அர்த்தம் மட்டும் ஒரு சொல்லுக்கு மதிப்பு சேர்த்துவிடாது. அந்த சொல்லை மக்கள் தங்களுக்குள் எப்படி கையாளுகின்றனர், பொதுவாழ்வில் அந்த சொல் அல்லது பெயருக்கு மக்கள் மத்தியில் உள்ள மதிப்பு என்ன என்பதே அவசியம். இல்லாவிட்டால் செல்வந்தர், பண்டிதர் ஆனா கதை போல் ஆகிவிடும்.
 
தமிழை வளர்ப்பவர்கள், ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படகிறார்கள்.. ஆனால் அவர்கள் உழைப்பு பலன் பெறுகிறதா என்றால் சுத்தமாக இல்லை. மக்கள் எதனை கொண்டாடுகிறார்களோ அதுவே நிலைத்து நிற்கும்.

இன்று அப்பாடாக்கர், அகாதுகா, டுபாக்கூர் - இவற்றைக் கூட சிறிதும் கூச்சம்இன்றி பொது இடங்களில் பேசும் நாம், தூயத்  தமிழை பேச மலைக்கின்றோம்.  
 
புதிது புதிதாக தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டாம், தூயத் தமிழை உபயோகப்படுத்தக் கூட வேண்டாம். ஆனால்  நாம் அறிந்தோ அறியாமலோ நம் மொழிக்கு வேறொரு தீங்கை  இழைத்துக் கொண்டிருக்கிறோம்.
பண்டிதர் பொருள் மலிய செய்ததை போல், நம்மால் இன்று பல பெயர்கள், சொற்கள்  - தவறான அர்த்தம் கற்ப்பிக்கப்பட்டு பொதுவிடங்களில் பேசக் கூடாத  கெட்ட வார்த்தைகளாக மாறி போக செய்து கொண்டிருக்கிறோம்.

இப்படி சிக்கி சின்னபின்னமான ஒரு சொல்  "பருப்பு".
 
இன்று சினிமாவில் யாரேனும் உபயோகித்தால் கூட MUTE செய்து விடுகின்ற அளவிற்கு மிகவும் மட்டமான வார்த்தையாக மாறிவிட்டது. ( இப்படி மாற்றியதே சினிமா தான் என்று நினைக்கிறேன் ) ஆனால் யோசித்துப்பார்த்தால் சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த சொல்லுக்கான  அர்த்தம் இப்படி இல்லை என்றே நினைக்கிறேன், குறுகிய காலத்தில் கெட்ட வார்த்தையாகிவிட்ட ஒரு சொல்.
 
சில நாள் முன் சென்னையில் ஒரு ஹோட்டல் சர்வர், பருப்பு என்பதற்கு பதில் டால் என்றது ஹிந்தியில் சொன்னார். அவரிடம், " ஏன் எல்லாத்தையும் தமிழ்ல சொல்றீங்க.. பருப்புன்னு தமிழ்ல சொல்ல வேண்டியதுதான " என கேட்டதற்கு சின்னதாக சிரித்துவிட்டு போனார். பருப்பு என்று சொல்ல கூச்சப்பட்டது சிரிப்பில் தெரிந்தது.
 
நாம் புதிதாக தமிழ் சொல்லை கண்டுபிடித்து, வழக்கத்தில் புகுத்தி பல வருடங்கள் இருக்கும், ஆனால் ஏற்கனவே வழக்கத்தில் உள்ள சொற்களை மதிப்பு குறைக்க செய்தது பல. சர்க்கரை என்றால் திருநெல்வேலி பக்கம் கேட்ட வார்த்தையாம் ??? எப்படி இருக்கிறது .
 
இப்படி நாம் நமக்குள்ளேயே வழக்கமான வார்த்தைகளின் மதிப்புகளை தரம் குறைய செய்ததன் உச்சம், சில ஆண்டுகளுக்கு முன் அரசே புதிதாக மாற்று வார்த்தைகளை அறிமுகம் செய்ததது.
 
உடல் ஊனமுற்றோரை - மாற்று திறனாளிகள் என்றும், அலிகளை - அரவாணிகள் என்றும் தற்போது திருநங்கைகள் என்றும் - புதிய வார்த்தைகள் அறியப்பட்டு வருகின்றன.
 
உடல் ஊனமுற்றோர்களும், அரவாணிகளும் இந்த புதிய வார்த்தைகளால், தன்னம்பிக்கை பெற்றுள்ளனர் என்பது மிக்க மிக்க மகிழ்ச்சியே !!
ஆனால் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு நிகரான உரிமையும், மதிப்பும் எதிர்பார்க்கும் இவர்களுக்கு - புதிய வார்த்தைகள் தான் நிரந்தர தீர்வா ??
 
மாற்றுதிறனாளிகள் , திருநங்கைகள் - இந்த வார்த்தைகளும் காலப் போக்கில் " பருப்பு " போல் மாறிவிட்டால் ?? அதற்குப்பின் வேறொரு வார்த்தை கண்டுபிடிப்போமா நாம் ??

புதிய சொற்கள் அறிமுகப்படுத்தியது, ஏதோ பழைய சொற்கள் மலிந்த பொருள்  கொண்டதுப் போல் செய்துவிட்டதை போன்ற ஒரு உணர்வு.
 
சில நாட்கள் முன் RAA - ONE படத்தில் பாடல் வெளியீடு விழா என்று நினைக்கிறேன், சாருக்கான் DUFF AND DUMB என்று உபயோகப்படுத்தியதற்கு ஒரு பெண் உணர்ச்சிவசப்பட்டு பேசினார் என செய்தி படித்தேன்.

அவருக்கு ஷாருக்கான் பதில் அளிக்கையில், "தான் ஒன்றும் தவறாக கூறியதாக நினைக்கவில்லை, DUFF AND DUMB ஐ, பின்பு எப்படி சொல்வது ?" - என்றதற்கு, அந்த பெண் " MUTE " என்று பயன் படுத்தலாமே என கூறினாராம். இது பகுத்தறிவா ?? விதண்டாவாதமா ?? அறியாமையா ?
 
உண்மையில் ஷாருக் கான் மேல் தவறா ?? 
 
கூன், குருடு என்று அவ்வை பாட்டியே இந்த வார்த்தைகளை பயன்ப்படுத்த வில்லையா?? கண் தெரியாதவரை குருடன் என்றும், காரது கேளாதவரை செவிடன், பேச முடியாதவரை ஊமை - என்றும் அறிவதில் என்ன தவறு?? அப்படிப்பட்டவர்களை அவர்களின் இயற்பெயர் சொல்லி கூப்பிடாமல், புனைப்பெயராக அழைப்பதுதான் தவறு.
 
வார்த்தைகளின் தரம் தாழ்த்தி உபயோகப்படுத்துவது நம் தவறு, புதிய சொற்களை தேடாமல் உள்ள அர்த்தத்தை உள்ளபடியே கையாண்டு , பொருளை கெடுக்காமல் இருந்தாலே போதும். இலவசத்திற்கு - விலையில்லா என்று மாற்று வார்த்தை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்காது.

இப்படியே போனால், இருக்கும் காய்கறிகள், பழங்கள் - இரட்டை அர்த்தம் கற்ப்பிக்கப்பட்டு உண்மையான அர்த்தம் காணாமல் போய்விடும்.
 
நாற்றம் - வாசனை  என்று பொருள்

துர்நாற்றம் - கெட்ட வாசனை   

நன்றி. (தற்போது வரை நன்றி நல்ல வார்த்தை என்றே நினைக்கிறேன்

http://arokara.blogspot.com/2011/11/blog-post_660.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் என்பது சரியே...!

நான் முன்பு வரவேற்புத் திரியில் வாழ்த்துகள் என்றே எழுதி இருக்கின்றேன், ஆயினும் வாழ்த்துக்கள் என்று எழுதும் போது இருக்கும் உணர்வு (இறுக்கி அணைப்பதுபோல்) அதில் கொஞ்சம் குறைவுதான், அதனால் வாழ்த்துக்கள் என்றே எழுதி வருகின்றேன்...!

 

ரவீந்திரநாத் தாகூர் அவரது மேலான படைப்பான கீதாஞ்சலியை எழுதிவிட்டு தனது ஆசிரியரிடம் காண்பிக்கின்றார். அப்போது அவர் இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கின்றது அவற்றைத் திருத்திவிடு என்று சொல்கிறார். தாகூரும் அப்படியே திருத்திவிட்டுப் பார்த்தால் அது அவ்வளவு நன்றாக வரவில்லை. அப்போது வேறொரு ஆசிரியர் அங்கு வர அவரிடம் இரண்டு பிரதிகளையும் காட்டுகின்றார் . அவரும் அதை படித்துப் பார்த்து விட்டு இது இலக்கணத்துடன் இருக்கின்றது ஆனால் ஜீவன் இல்லை, நீ முதல் எழுதிய பிரதியில் இலக்கணப் பிழைகள் இருந்தாலும் இதுதான் காட்டாறு மாதிரி கரை புரண்டு ஓடுகின்றது, இதில் தான் ஜீவன் இருக்கின்றது என்கிறார்.

 எப்போதோ படித்ததில் பிடித்தது...!  :)

Link to comment
Share on other sites

9 minutes ago, suvy said:

வாழ்த்துகள் என்பது சரியே...!

நான் முன்பு வரவேற்புத் திரியில் வாழ்த்துகள் என்றே எழுதி இருக்கின்றேன், ஆயினும் வாழ்த்துக்கள் என்று எழுதும் போது இருக்கும் உணர்வு (இறுக்கி அணைப்பதுபோல்) அதில் கொஞ்சம் குறைவுதான், அதனால் வாழ்த்துக்கள் என்றே எழுதி வருகின்றேன்...!

 

ரவீந்திரநாத் தாகூர் அவரது மேலான படைப்பான கீதாஞ்சலியை எழுதிவிட்டு தனது ஆசிரியரிடம் காண்பிக்கின்றார். அப்போது அவர் இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கின்றது அவற்றைத் திருத்திவிடு என்று சொல்கிறார். தாகூரும் அப்படியே திருத்திவிட்டுப் பார்த்தால் அது அவ்வளவு நன்றாக வரவில்லை. அப்போது வேறொரு ஆசிரியர் அங்கு வர அவரிடம் இரண்டு பிரதிகளையும் காட்டுகின்றார் . அவரும் அதை படித்துப் பார்த்து விட்டு இது இலக்கணத்துடன் இருக்கின்றது ஆனால் ஜீவன் இல்லை, நீ முதல் எழுதிய பிரதியில் இலக்கணப் பிழைகள் இருந்தாலும் இதுதான் காட்டாறு மாதிரி கரை புரண்டு ஓடுகின்றது, இதில் தான் ஜீவன் இருக்கின்றது என்கிறார்.

 எப்போதோ படித்ததில் பிடித்தது...!  :)

"என்ன ஆச்சு. இண்டைக்கு முழுக்க பச்சை போடவே முடியல்ல."

இங்கு இலக்கணப்பிழை உள்ளது. ஆனால் எழுத்து மனதுக்கு நெருக்கமா உள்ளது. மொழி என்பது கருத்துக்களை பரிமாறவே. ஆனாலும் இலக்கணப்படி எது சரி, எது பிழை என்பதையும் தெரிந்து கொள்வோமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக ஜீவன்....! தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆண்டாள் நாச்சியார் கூட திருப்பாவையில் "கற்பூரம் நாறுமோ , கமலப் பூ நாறுமோ" என்று பாடியிருக்கின்றார். அப்போதெல்லாம் நாற்றம் என்பது நறுமணம் என்றுதான் இருந்தது.

அதிகம் ஏன் தென்னிலங்கையில் "புக்கை , பொச்சு" என்ற சொற்களைப் பாவித்தால் கேலி செய்வார்கள்...!  :)

Link to comment
Share on other sites

7 minutes ago, suvy said:

ஆண்டாள் நாச்சியார் கூட திருப்பாவையில் "கற்பூரம் நாறுமோ , கமலப் பூ நாறுமோ" என்று பாடியிருக்கின்றார். அப்போதெல்லாம் நாற்றம் என்பது நறுமணம் என்றுதான் இருந்தது.

சத்தியமா எனக்கு ஆண்டாள் நாச்சியாரையும் தெரியாது திருப்பாவையையும் தெரியாது. ஆனால் கள உறவுகளின் தமிழறிவு பொறாமைப்பட வைக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கோதை ஆண்டாள் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள். திரு வரங்கனுக்குச் சாற்றும் மாலையை முதலில் தான் சூடி பின் அரங்கனுக்குச் சூட்டியவர். திருப்பாவை உட்பட பல பாசுரங்கள் இயற்றிப் பாடியவர். பண்ணிரு ஆழ்வார்களில் ஒரு ஆழ்வாராக இருப்பவர். இறுதியில் அரங்கனையே மணமுடித்து அவன் பாதத்தில் ஐக்கியமானவர்...! (திருமால் பெருமை படம் பார்த்தால் புரியும்).

சரி பெரியாழ்வார் யாரென்டு கேட்டால் அழுதுடுவேன்...!  :)

Link to comment
Share on other sites

14 minutes ago, suvy said:

திரு வரங்கனுக்குச் சாற்றும் மாலையை முதலில் தான் சூடி பின் அரங்கனுக்குச் சூட்டியவர்.

இது தெரியும்

15 minutes ago, suvy said:

சரி பெரியாழ்வார் யாரென்டு கேட்டால் அழுதுடுவேன்...!  :)

ராகுவோ சனியோ ஏதோ ஒண்டு கிட்டடியில் இடம் பெயர்ந்தது எனக்கு நல்ல காலமாம். இல்லாட்டி இப்படி அழுவன் என்று பயமுறுத்தாமல் கடியனை அவிட்டு விட்டிருப்பாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஜீவன் சிவா said:

இது தெரியும்

ராகுவோ சனியோ ஏதோ ஒண்டு கிட்டடியில் இடம் பெயர்ந்தது எனக்கு நல்ல காலமாம். இல்லாட்டி இப்படி அழுவன் என்று பயமுறுத்தாமல் கடியனை அவிட்டு விட்டிருப்பாங்கள்.

உங்களுக்கு விசயம் தெரியாதா....! கடியன்ர கதை முடிஞ்சுது, அன்டைக்கு பாயில படுத்த பரிமளம் இன்னும் சோறு தண்ணி இல்லாமல் கிடக்கு...!

அஞ்சரனும் , கு. சாவும் சேர்ந்து அலுவலை முடிச்சுட்டினம்...!

நெடுக மூஞ்சிய நீட்டிக் கொண்டிருக்காமல் பக்கத்தைப் பார்க்கவும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனுக்கு இனிய பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
எனக்கு என்னவோ இரண்டாவது தான் பிடித்திருக்குது

Link to comment
Share on other sites

18 hours ago, suvy said:

நான் முன்பு வரவேற்புத் திரியில் வாழ்த்துகள் என்றே எழுதி இருக்கின்றேன், ஆயினும் வாழ்த்துக்கள் என்று எழுதும் போது இருக்கும் உணர்வு (இறுக்கி அணைப்பதுபோல்) அதில் கொஞ்சம் குறைவுதான், அதனால் வாழ்த்துக்கள் என்றே எழுதி வருகின்றேன்...!

உண்மை சுவி.

16 hours ago, ரதி said:

இனிய பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

16 hours ago, தமிழரசு said:

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்திசாலித்தனமா தப்பீட்டாங்க.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மை சுவி.

அடப்பாவி... உதைக் கொஞ்சம் முதலே சொல்லியிருக்கக் கூடாதா...., சின்னப்புவின்ர பிறந்தநாளுக்கு வாழ்த்து என்று போட்டு உல்டா பண்ணி விட்டிட்டன்....!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்துக்கள் / வாழ்த்துகள் - எது சரி?

மு.கு:
"வாழ்த்து-க்கள்" என்பது தவறா?

அப்படீன்னா, அதைத் தொல்காப்பியர் / நச்சினார்க்கினியர் போன்ற தமிழ் இலக்கணத் தந்தையர் பயன்படுத்துவாங்களோ?
இது இணையத்தில் அரையும்-கொறையுமாச் செய்யப்பட்ட "மிகைத் திருத்தம்"!

* சரியான ஒன்றைத் தவறென்று ஆக்கி..
* இதற்காக, "டுமீல்/ டுமீலன்" ன்னு, தமிழ் உணர்வாளர்களை இளக்காரம் பேசி..
* "மொதல்ல டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறமா டுமீல் கோஷம் போடப் போவலாம்" -ன்னு எள்ளி..
* "ஓ இது தவறோ?" -ன்னு நம்மையே திகைக்க வைத்து..

கவுண்டர் பாணியில் சொல்லுறதுன்னா:
"டேய்... ஒங்க சிகைத் திருத்தம் பண்ணுங்கடா!
ஏன்டா மிகைத் திருத்தம் பண்றீங்க"?:)

Twitter-இல், இப்ப = Twitlonger/ பஞ்சாயத்து Season!:) Season சிறப்பு நிகழ்ச்சியாக.. ஒரு கதை போல் பார்க்கும் முயற்சி! ஆர-அமரப் படிங்க!:)

* வாழ்த்துக்களா? வாழ்த்துகளா??
* எழுத்துக்களா? எழுத்துகளா??
= எந்தப் பாண்டியன் பறை அறிவிச்சி, எந்த நக்கீரன் வந்து, தாடியைத் தடவப் போறானோ?:)

90 நாள் அஞ்ஞாதவாசம்!
இப்போதைக்கு என் நெலமை = கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு:)

தமிழின் பால் மாறா ஆர்வமுள்ள நண்பன் பலராமன் (@balaramanl)...எப்படியோ #365paa வில் என் அஞ்ஞாதவாசத்தை மோப்பம் பிடிச்சிட்டான்!:)
அவன் கேட்டுக் கொண்டதால், என் பல்வேறு யோசனைக்கு நடுவே.....Figure இல்லா ஆப்பிரிக்க விமானத்தி்ல்.. இப் பதிவை எழுதிக் கொண்டு வருகிறேன்:)

பொதுவா, இணையத்தில் எது ஒன்னும் பரவும்! அதுவும் ட்விட்டர் வேகம், சுனாமி வேகம்!

* சில்க் ஸ்மிதாவின் ஆவி, வித்யா பாலனை மன்னிக்குமா? என்ற "அறிவியல்" ஆகட்டும்....
* அன்னக் கிளியா? சின்னச் சின்ன ஆசையா? போன்ற Debate ஆகட்டும்....
140-இல் நடக்குறாப்பல, வேறெங்கும் நடத்த முடியாது!:)

தமிழும்... இதுக்கு விதிவிலக்கு அல்ல!

எழுத்துப் பிழைகளை... ஒரு பள்ளிக் கட்டுரையில் கண்டுபுடிக்கறதை விட, 140இல் கண்டுபுடிப்பது எளிது! பளிச்-ன்னு பல் இளிப்பாள்:))
அவளை "Correct" செய்ய சில ட்வீட்டர்களும் ரொம்ப ஆர்வமா முனைவார்கள்!:)


ஆனா... ஆனா...

ஒட்டடை அடிக்கிறேன் பேர்வழி ன்னு,
வீட்டின் உயர்ந்த பொருட்களையும் உடைத்து விடுகிறார்கள்!
அப்படி ஆனதே....வாழ்த்துக்கள் "தவறு" என்ற பரவல்!

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியானதையும், தவறு-ன்னு அடிச்சித் "திருத்துவது";

பிரபலமானவர்கள் சொல்வதால், இது பரவியும் விடுகிறது!
இழப்பு = தமிழ் மொழியியலுக்கு :(

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு!
= இனி, எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், தரவு (ஆதாரம்) கேளுங்க:)

பலரும் "அபிப்ராயம்" சொல்லுறாங்களே தவிர, தரவு காட்டுவதில்லை!
மொழி இயல் = ஒருவரின் நம்பிக்கையோ/ புராணக் கதையோ அல்ல, அப்படியே ஏத்துக்கிட்டு போவதற்கு!
என் ஆளுங்க நான் சொல்லுறதை ஏத்துக்கட்டும், உன் ஆளுங்க நீ சொல்வதை ஏத்துக்கட்டும் -ன்னு "தனிமனித ஜல்லி" அடிக்க முடியாது:)

அறிவியலைப் போலவே = மொழியியல்!
அதனால்.. சத்யராஜ் style இல்... தரவு தரவு!:)
Coming to Matter,
வாழ்த்துக்கள் vs வாழ்த்துகள்; Jollyஆ, கதை போலப் பார்க்கலாமா?

திருக்குறளில் "கடவுள் வாழ்த்து" ன்னு தான் இருக்கும்! -"கள்/ க்கள்" இருக்காது! => கள்-ளுண்ணாமை! :))
* வாழ்த்து = ஒருமை!
* -கள் (அ) -க்கள், விகுதி சேர்த்தால் வருவது = பன்மை!

சொன்னா நம்ப மாட்டீங்க! சங்க காலத்தில் இது = அஃறிணைக்குத் தான் பயன்படுத்துறது வழக்கம்;
யானைகள் - பூனைகள் | ஆனா உயர்திணை? தோழியர் - பாவையர்

தோழிகள் -ன்னு அப்பறமாத் தான் வந்துச்சி:)
இன்னிக்கி... எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் ன்னு...சகலருக்கும் பயன்படுத்தறோம்:))

ஒருமையைப் -> பன்மை ஆக்கத், தொல்காப்பியர் ஒரு formula சொல்றாரு! = "விகுதி செய்யவும்"
* ஆட-வன் = ஆட-வர்
* பெண் = பெண்-டிர்
* சான்-றோன் = சான்-றோர்

அர், இர், ஓர் = எல்லாமே பன்மை விகுதி! ஆனா கவனிச்சிப் பாருங்க; எல்லாமே உயர் திணை தான்!
* யானை = யானை-யோர் ன்னு சொல்லுறதில்ல!:)
* யானை = யானை-கள்!

=> So... அஃறிணைப் பன்மை விகுதி = கள்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
கொள்வழி உடைய பல அறி சொற்கே (தொல் - சொல்லதிகாரம்)

கள்ளொடு சிவணும் = சிவன் கள்ளு குடிச்சாரு ன்னு, Type Typeஆ, அர்த்தம் பண்ணப்படாது:)
பாவம் சிவபெருமான்! கருணையே உருவானவரு!  அவரு விடம் தான் குடிச்சாரு! கள் அல்ல!
சிவ"ன்" = அவருக்குக் கண்ணு வேணும் ன்னா மூனா இருக்கலாம், ஆனா சுழி ரெண்டு தான்:)

இங்கே "சிவணும்" ன்னா "சேரும்" -ன்னு பொருள்!
கள்ளொடு சிவணும் = -"கள்" என்ற விகுதியோடு சேரும்!

இன்னொரு technique-உம் சொல்லிக் குடுக்குறாரு, நம்ம தொல்சு!:)
கலந்தன கண்ணே! கழன்றன வளையே
கலந்தது -ன்னு சொல்லாம... கலந்தன = பன்மை! கலந்தன கண்ணே!

இப்படி, வினை முற்றை வைத்தும், ஒருமையா, பன்மையா ன்னு கண்டு புடிச்சீறலாம்!
தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே (தொல் - சொல்லதிகாரம்)

ஆனா, இந்தக் "-கள்" மூலமா, ஒரு பெரிய பிரச்சனை வந்துருச்சி!
= படிச்ச மனுசன், ரொம்ப மரியாதை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டான்!:)

சில "நித்ய" ஆதீனங்கள்..."யாம் அறிவோம்!" ன்னு சொல்றாங்களே;  அது போல வச்சிக்குங்களேன்;
அதென்னடா யாம் அறிவோம்? "நான் அறிவேன்"-ன்னு சொன்னா என்னவாம்?

ஒருமை = ஒரு மாதிரியா இருக்காம்!
பன்மை தான் = மரியாதையா இருக்காம்:)

* அரசன் = மரியாதைக் குறைச்சல்!
* அரசர் = மரியாதையா இருக்கு!:)

ஆனா, அர் = பன்மை விகுதி ஆச்சே??? | ஆட-வன் = ஆட-வர்;
பன்மையைக் கொண்டு போய், மரியாதைக்கு வச்சிட்டோம்-ன்னா.... பன்மைக்கு என்னா பண்ணுறதாம்?

=> விகுதியோடு-விகுதி சேர் => அரசு + (அர் + கள்)

-கள் (எ) அஃறிணை விகுதியை,
மரியாதைப் பன்மை காரணமாக,
உயர் திணைக்கும் வைக்கலாம் -ன்னு மாற்று ஏற்பாட்டைச் செஞ்சாரு!

* மன்னன் - மன்னர் = ஒருமை
* மன்னர் - மன்னர்கள் = பன்மை

அரசு-அர்-கள் = This is like double plural:)
ஆங்கிலத்தில், King - Kings! அவ்ளோ தான்; மருவாதை தெரியாத பயலுவ!:)

திராவிட மொழிகளில் தான் "மரியாதைப் பன்மை" ன்னு நினைக்கிறேன்!
தெலுங்கில்:
* ஒருமை = கிருஷ்ண தேவ ராஜு, கிருஷ்ண தேவ ராஜூலு!
* பன்மை = ஆந்திர தேச ராஜுலு

நாய் = குக்க; நாய்கள் = குக்கலு!
ட்வீட்டர் = ட்வீட்டர்லு :))
மரியாதை குடுக்குறா மாதிரிக் குடுத்து, அஃறிணை ஆக்கீறலாம் போல இருக்கே:)

சரி, Matter க்கு வருவோம்; "-கள்" எப்படி "-க்கள்" ஆச்சு???

தொல்காப்பியத்துல சொன்னதே தான்!.. "கள்/ க்கள்" = ஒற்று இரண்டாகும்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
அளபிற் குற்றுயிர் இரண்டு ஒற்றாகும்

இப்படி இரண்டு ஒற்று மிகுவதைப், பல இடங்களில் காணலாம்!
* ஆ = ஆ-க்கள்
* மா = மா-க்கள்
ஊர்க் குறு மா-க்கள் வெண் கோடு கழாஅலின் (புறநானூறு)

இலக்கண ஆசிரியர்கள், -க்கள் சரளமாகப் பயன்படுத்துவர்;
Ex: "லள -க்கள்   திரிந்த  னண -க்களுக்கு முன்னின்ற மகரம் குறுகும்"

முன் சொன்ன கதை தான்! "மரியாதைப் பன்மைத்" தாக்கத்தால், ரெண்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
= பூ= பூக்கள் & குரு = குருக்கள்

ஓக்கேடா இரவி... புரிஞ்சிருச்சி! -கள், -க்கள் = ரெண்டுமே பலவின்பால் விகுதி! ஒத்துக்கறோம்;
ஆனா.. என் கேள்வி என்ன-ன்னா:
எதை, எங்கே பயன்படுத்தறது? அதை இன்னும் நீ சொல்லலீயே?

குரு=குருக்கள் போல, வீடு=வீடுக்கள் -ன்னு எழுதலாமா?:))

Ha ha ha! இங்க தான் "டண்-டணக்கா" இருக்கு!:)

குரு = குருக்கள்! ஆனா...வீடு = வீடுக்கள் அல்ல!
Fan = Fans! ஆனா Man = Mans ன்னு கேட்போமா?:) Man = Men!

இதுக்குப் பேரு தான் = மரபியல்! (சொல்லதிகார - விளி மரபு)

புழுக்கள், பசுக்கள், குருக்கள்
புழு-கள், பசு-கள், குரு-கள்-ன்னு சொல்லிப் பாருங்க! எப்படி இருக்கு? :)

புழு-க்-கள் = புழுவின் கள் = Chinese Soup-ன்னு... சில குசும்பு புடிச்ச இலவச நாத்தனார்கள் அர்த்தம் பண்ணிக்கலாம்:)
எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து; டுமீலன்ஸ் & குடிப்பழக்கம் always go together -ன்னு கெக்கலிப்பாய்ங்க!:(

ஆனா...."எழுத்து-க்கள்" ன்னு எழுதற "டுமீலன்ஸ்" யாரு யாரு?
= தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்
= இளம்பூரணர்
= மணக்குடவர்
= ஈழத்தின் சைவத் தமிழறிஞர், ஆறுமுக நாவலர்
= All of the Above 'முட்டாள்-ஸ்":(

உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் ன்னு சொல்லுவாய்ங்க! அவரின் தமிழ் அறிவு, எந்த Tweeter க்கும் இளைச்சது கிடையாது!

நீங்களே கீழே வாசிச்சிப் பாருங்க...
எத்தனை முறை..."எழுத்து-க்கள், "எழுத்து-க்கள்" ன்னு... பயன்படுத்தறாரு?

 

பாத்தீங்கல்ல? ஆனானப்பட்ட தொல்காப்பிய ஆசிரியர், இலக்கணப் பிழை பண்ணிட்டாரா? :)
முழு உரையும் இங்கிட்டு போய் படிச்சிக்கோங்க!
= http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=1&pno=1

இப்போ சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்?
= நச்சினார்க்கினியர் எழுத்துக்கள் -ன்னு எழுதியது தவறா?????

சரிப்பா... ஒரு சாதாரணச் சொல்லு; இதுல ஏன் இம்புட்டு உறுதி காட்டுற?

ஏன்னா, இதை வச்சியே, #TNFisherman இல், தமிழ் உணர்வாளர்களை, "டுமீல்" ன்னு ட்விட்டரில் இளக்காரம் பேசியதால்..
#MullaPeriyar என்ற ஆங்கில வழக்கை வச்சி, பெரியார் என்ன முல்லா-வா? -ன்னு எள்ளி ஏசியதால்..

மொதல்ல டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறமா டுமீல் கோஷம் போடப் போவலாம்"
= இப்படிப் பேசிய "பண்டிதாள்", இப்போ எங்கே போய் மூஞ்சியை வச்சிப்பாங்க?
= நச்சினார்க்கினியர் பேச்சுக்கு, எதிர்ப்பேச்சு பேசச் சொல்லுங்க, பார்ப்போம்!

மத்தபடி... இதை, இம்புட்டு வளர்க்க நான் எண்ணியதே இல்லை;
இளக்காரக் கீச்சுகளின் போதும் அமைதி காத்தேன்; இன்றே வெடித்தேன்;
மொழியின் மான உணர்ச்சி = அதுக்காகத் தான்!

தமிழ் மொழி, எக்காரணம் கொண்டும், தன்னிடம் உள்ள நல்ல சொற்களை இழந்து விடக் கூடாது!!
இது தொல்காப்பியர் தொட்டு வந்த மரபியல்!
அதை over night -இல் tweet போட்டு, வீசீற முடியாது! = இதுவே மொழியியலார் ஆதங்கம்!

மத்தபடி, கற்றது கை மண்ணளவு! = திருத்திக் கொள்ள வெட்கப்படவே மாட்டேன்;
அப்படித் தான் அன்னிக்கு, @naanraman என்பவர் செய்வினை/ செயப்பாட்டு வினை -ன்னு கேட்ட கேள்விக்கு, நானும் @nchokkan சாரும் ஆடிப்போனோம்;

@naanraman யாரு-ன்னே தெரியாது! அவர் சுட்டிக் காட்டியதை ஏத்துக்கிட்டு, மன்னிப்பும் கேட்டு, தன்வினை - பிறவினை -ன்னு மாற்றி இட்டேன்!

“மொழி மரபியலை” நம் Ego -வுக்கு அணுகாமல்....
தமிழைத் தமிழாக அணுகிப் பார்த்தா, இது புலப்படும்!
------------

இன்னோன்னும் சொல்லணும்!
மொதல்ல, எழுத்து-க்கள் இலக்கணப்படியே தவறு -ன்னு சொன்னவங்க..
இப்போ Tune ஐ மாத்தி....., "அனர்த்தம்" வந்துறப்படாதே -ன்னு கவலைப் படுறாங்களாம்:)

எழுத்து-க்-"கள்" = "போதை" தரும் எழுத்து!
அப்படீன்னா Fruits = பழங்-கள்? = பழமையான கள்? 10 year Wine:)
இனி பழங்-கள் ன்னு யாரும் எழுதாதேள்; "பழம்ஸ்" ன்னு எழுதுங்கோ?:)

* வாழ்த்து + க் + கள் = "குவார்ட்டரோடு" கூடிய வாழ்த்து;
* அப்போ, வாழ்த் + "துகள்"? = வாழ்க்கையே தூள் தூளாப் போவட்டும்?

= இப்படி நல்ல தமிழ்ச் சொல்லையெல்லாம், நாக்கால வெட்டி வெட்டிக் கெக்கலிப்பது = மட்டமான மனப்பான்மை:(

"காய் தொங்குது" = பலான அர்த்தமெல்லாம் சொல்ல முடியும்:)
அதுக்காக, "காய்" என்பதை மொழியில் இருந்தே துரத்திடுவோமா என்ன?

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சங்கேத மொழி இருக்கும்!
* கல்லூரி மாணவர்கள் ’பாஷை’
* டீக்கடை ’பாஷை’
* அவாள் ’பாஷை’
* சென்னை”பாஷை’ ன்னு நிறைய...

கல்லூரிப் பசங்க, "காய்" ன்னா... நமுட்டுச் சிரிப்பு... சிரிக்கத் தான் செய்வாங்க:) அதுக்காக, மொழியை விட்டே துரத்தீற முடியாது!
------------

சிறு, நீர்த் துளி உன் மேல் பட்டது
= இந்தக் காலத்தில் இப்படிச் சேர்த்துச் சொன்னா, எல்லாருக்குமே நெருடும்:))
ஏன்னா சிறு-நீர் universal ஆக ஒன்றைக் குறிக்கத் துவங்கி விட்டது!
கொஞ்சம் நீர் துளி உன் மேல் பட்டது -ன்னு மாத்திச் சொல்லலாம்;

ஆனா,காய் என்பதோ / எழுத்துக்கள் என்பதோ, universalஆக ஒன்றைக் குறிக்கவில்லை!  
= பொதுப் புழக்கத்தில் இருக்கு! இப்படிப் பரவலாக இருக்கும் சொல்லைக் காணாமப் போவ.. நாமே வழி செய்யலாமா?:((
------------

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
= சரியாக இருக்கும் ஒன்றைத்... தவறு -ன்னு "திருத்துவது"

யாதும் ஊரே, யாவரும் கே"ளீ"ர் ன்னு எழுதினா....
அப்போ... கே"ளி"ர் = உறவினர் ன்னு திருத்துங்க!
ஆனா, வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள் என்பதை அல்ல!

* தொல்காப்பியர் - நச்சினார்க்கினியர் பலுக்கல்,
* ஈழத்து அறிஞர் பலுக்கல்
* இன்றைய இராம.கி ஐயா வரை பயன்படுத்துவது...
* அதை "மிகைத் திருத்தம்" பண்ணித் துரத்திடாதீங்க!
= தமிழுக்காக, உங்களிடம் என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!


Okay!
எழுத்துக்கள் சரியே = தொல்காப்பிய ஆசிரியர்கள் மூலம் பார்த்து விட்டோம்!

இன்னோன்னும் சொல்லிடறேன்:
வாழ்த்துக்கள் கட்சிக்காரவுங்க, -"க்கள்" என்பதற்கு, குற்றியலுகர விதியை ஆதாரமாக் காட்டுவாங்க! ஆனா அதுவும் தவறே:)
நாம தான் எந்தக் கட்சியிலும் நிக்குற சுபாவம் இல்லீயே:) தமிழைத் தமிழாய் அணுகவே பிடிக்கும்!

குற்றியலுகரப் புணர்ச்சி:
பிடித்து + கொள் = பிடித்துக் கொள்! =>ஒற்று மிகும்!
இதே போல வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள் ன்னு எடுத்துக்கக் கூடாது!

ஏன்னா இவ்விதி, ரெண்டு "சொற்களுக்கு" இடையே தான்!
* "-கள்" = சொல்லு அல்ல!
* "-கள்" = விகுதி! அது வரு"மொழி" அன்று!
So, முன்பு சொன்ன விகுதியின் விதியைத் தான் எடுத்துக்கணும்! குற்றியலுகர விதியை அல்ல!
------------

எங்கே -கள் போடுறது? எங்கே -க்கள் போடுறது?
= சுருக்கமாப் படம் போட்டுச் சொல்லட்டுமா?
= விரிவா நூலகத்தில் பாத்துக்கிடலாம்!
Here u go = http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=84

A Ready Reckoner Picture is following after Examples :))

1) "க்" மிகலாம்...

* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே
=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே

* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
=> கொலுசுகள், மிராசுகள்

வாழ்த்து: த் வல்லின ஒற்று => மிகலாம் = வாழ்த்துக்கள்!
இரும்பு:   ம் வல்லின ஒற்று அல்ல => மிகாது = இரும்புகள்!
கொலுசு:  ஒற்றே இல்ல => கொலுசு-க்கள் ன்னு மிகாது! = கொலுசுகள்!

(மூவெழுத்துக்கும் அதிகமான  "உ"கரச் சொற்கள்... வல்லின ஒற்றோடு வரும் போது மட்டுமே மிகும்)
------------

2) "க்" மிகணும்

* ஈரெழுத்துச் சொற்கள்.. குறிலா வந்தா = மிகணும்!
=> பசு-க்கள், அணு-க்கள், தெரு-க்கள்

* ஈரெழுத்துச் சொற்கள்.. நெடிலா வந்தா = மிகாது!
=> வீடு-கள், மாடு-கள், ஓடு-கள்

இப்போ புரியுதா? குரு-க்கள் = சரி! வீடு-க்கள் = தவறு:)

* ஓரெழுத்துச் சொற்கள் = மிகணும்!
=> பூ-க்கள், மா-க்கள், ஈ-க்கள்
(ஐகார-ஒளகாரக் குறுக்கம் அற்றவை: கை = கைகள் தான்! கைக்கள் அல்ல!)
------------

3) "க்" மிகவே கூடாது


ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ...."வு" வரும் போது மட்டும், மிகவே கூடாது!
=> ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்
------------

அவ்ளோ தானுங்க! இதுக்கா Twitter-இல் வாய்க்கா வரப்புத் தகராறு?:)


வாழ்த்து-க்கள் ன்னு முன்னாடி எழுதிக்கிட்டு இருந்தவங்க...
என்னமோ ஏதோ? ன்னு பயந்து போயி, மதம் மாத்திக்கிட்டவங்க,
பழையபடி, வாழ்த்து-க்கள் ன்னே எழுதலாம்:))
பாவ மன்னிப்பு கேக்க வேணாம்! ஏன்னா, நீங்க எந்தத் தப்பும் செய்யலை!:)


    ................ இணையத்தில் கிடைத்து  நம்மளாலை முடிந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து-க்கள் ன்னு முன்னாடி எழுதிக்கிட்டு இருந்தவங்க...
என்னமோ ஏதோ? ன்னு பயந்து போயி, மதம் மாத்திக்கிட்டவங்க,
பழையபடி, வாழ்த்து-க்கள் ன்னே எழுதலாம்:))
பாவ மன்னிப்பு கேக்க வேணாம்! ஏன்னா, நீங்க எந்தத் தப்பும் செய்யலை!:)

 

ஹா....ஹா....ஹா .... எனக்காகத்தான் இவ்வளவுமா  வாத்தியார்..., அப்படியே புல்லரிக்குது...!  :)

Link to comment
Share on other sites

23 minutes ago, suvy said:

வாழ்த்து-க்கள் ன்னு முன்னாடி எழுதிக்கிட்டு இருந்தவங்க...
என்னமோ ஏதோ? ன்னு பயந்து போயி, மதம் மாத்திக்கிட்டவங்க,
பழையபடி, வாழ்த்து-க்கள் ன்னே எழுதலாம்:))
பாவ மன்னிப்பு கேக்க வேணாம்! ஏன்னா, நீங்க எந்தத் தப்பும் செய்யலை!:)

 

ஹா....ஹா....ஹா .... எனக்காகத்தான் இவ்வளவுமா  வாத்தியார்..., அப்படியே புல்லரிக்குது...!  :)

நான் இனிமேல் வாழ்த்.... யாருக்குமே சொல்ல மாட்டன். சரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது....!

பகீரதன் கங்கையைப் பூமிக்கு இழுத்து வந்ததுபோல் உங்களுக்காகத்தான்  மிஸ்டர் அகத்தியர், தொல்காப்பியர், நச்சினார்க் கினியர், நாவலர் எல்லோரும் இரம்பை,ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஜோடி நம்பர்களில் யாரையும் எலிமிநேட் பண்ணாமல் அவசரமாக வாத்தியாருடன் வந்து விளக்கவுரை தந்திருக்கின்றார்கள்....! :grin:

Link to comment
Share on other sites

  • 3 years later...

வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி ?

வாழ்த்துக்கள்’ என்று பலரும் எழுதுவதைச் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி காணக்கிடைக்கிறது. இது தொடர்பில் பலர் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதையும் உணரமுடிகிறது.

தமிழகத்துக் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில் அருமையாக விளக்கியிருக்கிறார்.

அவரது விளக்கம் தொடர்கிறது.

வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி ?

கள்’ விகுதிக்கு வலிமிகும் மற்றும் மிகா இடங்கள்பற்றி இலக்கண விதிகள் என்று எதுவுமில்லை. ஆனால், வழியொற்றிய மரபின்படி பின்பற்றப்பட வேண்டிய விதி தெளிவாக இருக்கிறது.

1. ஒரு சொல் - ஓரெழுத்து ஒருமொழி (பூ, பா, ஈ) என்ற வகையில் தனி நெடிலாக இருந்தால் கள்’ விகுதிக்கு வலிமிகும். பூக்கள், பாக்கள், ஈக்கள்.

2. நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். புறாக்கள், விழாக்கள், பலாக்கள்.

3. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் உகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். அணுக்கள், பருக்கள், குழுக்கள். வடுக்கள்.

4. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் இகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகுவதில்லை. மொழிகள், வழிகள், படிகள்.

5. மூன்று அடுத்தடுத்த குறில் எழுத்துகளால் ஆகிய சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகாது. அழகுகள், செலவுகள், உருமிகள், அரிசிகள்.

6. கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குற்றியலுகரங்கள். இவற்றில் க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என்று முடியும் சொற்களில் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள். ங்கு, ஞ்சு, ந்து, ம்பு என்று முடியும் சொற்களில் அவை மென் தொடர்க் குற்றியலுகரங்கள். பொதுவாக, வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் (படித்துச் சொல்). மென் தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது (பணிந்து செல்). இந்த விதியைப் பின்பற்றுபவர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு நியாயம் சொல்வார்கள். பரிமேலழகர் தம் உரையில் ‘எழுத்துக்கள்’ என்றே எழுதியிருக்கிறார் என்பர். இந்த இடையூறான போக்கால்தான் வாழ்த்துக்கள் என்றெழுதுவது வழக்கானது. கள் என்பது பன்மை கருதி வந்த, தனிப்பொருளற்ற விகுதி (இடைநிலை என்பாரும் உளர்) என்பதால், அதற்குச் சொற்களுக்குக் கற்பிக்கின்ற வலிமிகும் விதி பொருந்தித் தோன்றாது என்பதே ஏற்புடையதாகும். ஆகவே, வாழ்த்துகள் என்றெழுதுவதே சரி.

7. ஆட்கள், நாட்கள் என்றெழுதுகிறார்கள். ஆனால், தோள்கள் கோள்கள் என்று இன்னோரிடத்தில் புணர்த்தாமல் எழுதுகிறார்கள். தோட்கள், கோட்கள் என்றெழுதுவதே இல்லை. ஆள்கள், நாள்கள், தோள்கள், கோள்கள் என்றெழுதுவதே சரியாகும்.

8. அதே சமயம் முட்கள், புற்கள், சொற்கள் என்று முள், புல், சொல் போன்ற சொற்களில் கள்’விகுதி சேர்த்துப் புணர்த்தி எழுதுவது தொன்று தொட்டு வழக்காகியுள்ளது.

9. தனி நெடிலால் ஆகிய ஓரெழுத்து ஒருமொழியிலும், நெடிலில் முடியும் சொற்களிலும் கள்’விகுதியோடு வலிமிகும் என்று முதல் பத்தியில் படித்தீர்கள் அல்லவா, ஐகாரத்தில் முடியும் சொற்களில் (ஔகாரத்தையும் சேர்க்கலாம், அதில் சொற்கள் இல்லை) வலிமிகுவதில்லை. கைகள், பைகள், பண்டிகைகள், தேவதைகள். இலக்கணத்தில் ஐகாரக் குறுக்கங்கள் என்று சொல்வார்கள். அதுவும் குற்றியலுகரம் போன்ற ஒன்று.

10. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பது மொத்த விதி அல்லவா, அதிலும் விதிவிலக்காக ‘பந்துக்கள் (உறவுகள்), இந்துக்கள்’ என்றெழுதுவது ஏற்புடையதாயிருக்கிறது.

கள்’ விகுதி தொடர்பாக எழும் எல்லா ஐயங்களையும் மேலே விரிவாகத் தொகுத்துள்ளேன். கள்’ விகுதியை முன்னிட்டு எழும் வலிமிகும் வலிமிகா இடங்கள் குறித்த ஐயங்களுக்கு நடைமுறைத் தெளிவைப் பின்பற்றுங்கள்.

வாழ்த்துகள்!

(நன்றி கவிஞர் Magudeswaran Govindarajan)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.