Jump to content

கல்லறை வரை சுமந்து செல்லும் ரகசியங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Indian+Village+Women+Pouring+water+from+

அன்றைய பொழுது வழமை போலவே விடிந்தது!  பிள்ளைகள் இன்னும் நித்திரையால் எழும்பவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட வாசுகி மனுசன் இன்னும் கிடக்கிறாரா என்று விறாந்தையை எட்டிப்பார்த்தாள்! அவர் குப்புறப்படுத்தபடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்! அவரது சாரம் இடுப்பில் பத்திரமாக இருந்ததைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள்!

பிள்ளைகள் நித்திரையால் எழும்ப முன்னம் அவள் செய்ய வேண்டிய தினசரிக் கடமைகளில் இதுவும் ஒன்றாகிப் போனது!

மனுஷன் எழும்பிறதுக்கு முந்திக் கோயிலடிக்குப் போய்த் தண்ணி அள்ளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்த படியே, வாசலில் நின்ற வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியை லாவகமாக ஒடித்து..வாய்க்குள் வைத்துக் கடித்தபடியே, குடத்தை எடுத்து இடுப்பில் அணைத்த படி கோயிலடியை நோக்கி நடந்தாள்! அவளது உலகமெல்லாம் அந்தக் கோயிலடியும். அதையொட்டிய கடற்கரையும் அந்தக் கோயிலடிக் கிணறும் தான்! அங்கு வரும் பெண்கள் தான் அவள் வாசிக்கும் செய்தித் தாள்கள்! அன்றைக்கு முதல் நாள், ஊரில் நடந்த அவ்வளவும் அவள் தண்ணீர் அள்ளிக்கொண்டு வீட்டுக்கு வரும் போது அவளுக்குத் தெரிந்திருக்கும்! அத்துடன் அன்றைக்கு வாங்க வேண்டிய மீன், மரக்கறி, அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் எங்கெங்கு மலிவாய்க் கிடைக்கும் எனற விபரங்களும் அவளுக்குத் தெரிந்திருக்கும்! அன்றைக்குக் கடல் வத்தா அல்லது நுவைப்பா என்பதையும் அவதானித்து வைத்திருப்பாள்! இவ்வளவையும் தவிர வேறு எதுவுமே அவளுக்கு இப்போது தேவைப்படுவதில்லை!

தண்ணீரைச் சுமந்து கொண்டு வரும்போது.. குடத்தினுள் தண்ணீர் ஏற்படுத்தும் சத்தம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்!

;கிளக்'...’கிளக்’ என்ற அந்த ஓசை ஒரு பிரபஞ்சத்தின் அசைவைப் போல..அவளுள் புதைந்து போக.. ஒரு முனிவனின் ஒரு நிலைப்பட்ட மனதைப் போல..அவள் மனம் அந்த ஓசையுடன் ஒன்றிப்போயிருக்கும்!  வீட்டை நோக்கிக் கால்கள் தாங்களாகவே நடந்து கொண்டிருந்தன! அவள் சிறுமியாக இருந்த காலத்தில், தண்ணீர் வண்டில் மாடுகள்..தண்ணீர் ஏற்றிய வண்டிலை இழுத்துக் கொண்டு, நடத்துனர் இல்லாமலே அவற்றின் வீட்டை நோக்கி நடந்து போவதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறாள்! இப்போது தானும் அந்த வண்டில் மாடுகளைப் போன்று ஆகிவிட்டதை எண்ணி அவளுக்கே சிரிப்பு வந்தது! அவள் வரும் பாதையில் இருக்கின்ற காவோலை வேலி வரும்போது மட்டும் அவளது தொண்டைக் குழிக்குள் எதுவோ அடைப்பது போல இருக்கும்! அன்றைக்கும் அவள் அவ்வாறே உணர்ந்தாள்! போதாக் குறைக்கு வேலிக்குள் நத்தையைத் தேடிக்கொண்டிருந்த செண்பகம் ஒன்று அவள் வருவதைக் கண்டு...க்கும்,,,க்கும் என்று எதையோ சொல்ல முயற்சிப்பது போல அவளுக்குத் தெரிந்தது!

அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தவள் குசினி அடுப்பில் கேத்திலை வைத்துத் தேயிலையைப் போட்டுக் கொஞ்ச நேரம் ஊற விடவும் குழந்தைகள் எழும்பி விட்டன! அவர்களுக்குத் தேனீரைக் கொடுத்தவள்..இன்னும் கணவன் எழும்பாததைக் கண்டு தானும் தேனீரைப் பருகத் தொடங்கினாள்!

தேனீரை வாயில் வைக்கக் கூட இல்லை..அப்போது..’அடியேய்..வள்ளுவனின்ர மனிசி வாசுகியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறியா? உனக்கும் பேர் வாசுகி தானே..என்று தொடங்கவும் இண்டைக்கு விடிஞ்ச மாதிரித் தான் எனத் தனக்குள் நினைத்துக் கொண்டவள், ஒரு கோப்பையில் தேனீரை ஊத்திக்கொண்டு போய்க் கணவனுக்கு அருகில் வைத்தாள்! மிச்சத்தை எல்லாம் அவள் காதில் வாங்கிக் கொள்ளதிருக்கத் தன்னைப் பழக்கப் படுத்தி..நீண்ட நாட்களாகி விட்டன!

கலியாணமான புதுசில் எல்லோரையும் போல அவளிடமும் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன என்பது என்னவோ உண்மை தான்! கொழும்பில ஒரு கடையில மனுஷன் வேலை செய்ததும் அவளுக்குத் தெரியும்! எல்லோரையும் போலத் தனக்கும் கொழும்பு வாழ்க்கை வரப்போகுது எண்டு அவள் ஆசைப்பட்ட காலமும் இருந்தது! கலியாணம் கட்டிக் கொஞ்ச நாளைக்கு அவரிடமிருந்து ஒவ்வொரு மாசமும் மணி ஓடர் ஒழுங்காக வந்தது தான்! அந்தக் காசைச் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மகாராணியைப் போல அவள் உணர்ந்திருக்கிறாள்! அவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது என்று அவளுக்கு ஒருவரும் சொல்லவுமில்லை! அவளும் யாரையும் கேட்டதும் இல்லை! ஊருக்குள்ள எல்லாமே ஒரு ‘புரிந்துணர்வு' அடிப்படியில தான் நடப்பது வழக்கம்! குடி மட்டும் தான் என்றாலும் அவள் பொறுத்துக் கொண்டு தான் இருப்பாள்! ஆனால்.. அவனது நடிப்புத் தான் அவளுக்கு அதிகம் ஆத்திரம் ஊட்டியது!

ஒரு நாள் இப்படித் தான்,,ஒரு இரவு அவள் கடலுக்குப் பந்தம் கொண்டு போயிருந்தாள்! அனேகமாக..இரவில் பெண்கள் கடலுக்குப் போவது வழக்கமில்லை எனினும், சில பெண்கள் தலைப்பாகை கட்டிய படி கடலுக்குப் போவதுண்டு! அண்டைக்கு அமாவாசை இரவாக இருந்த படியால் நிறையத் திரளி மீன்களும், முரல் மீன்களும் அவளிடம் பிடிபட்டன!

மனுஷன் கொழும்பாலை அண்டைக்குக் காலமை தான் வந்திருக்குது எண்டு நினைச்சு மீன் குழம்பும், பொரிச்ச மீனுமாக மனுசனுக்குச் சாப்பாட்டைக் கொடுத்தாள்! அவள் குசினிக்குள் மீண்டும் சென்ற போது..மனுஷன் என்னவோ புறு ப்றுத்தது போல கிடந்தது! என்னவென்று அவளுக்கு வடிவாகக் கேட்கவில்லை! கொழும்பால வந்து நேர தாய் வீட்டுக்குப் போய், அந்கிருந்து தான் வீட்டுக்கு வந்திருந்தார்! தாய் தான் ஏதாவது வத்தி கொழுத்தி வைச்சிருப்பா..என்று தனக்குள் நினைத்தவள், கலீரென்ற சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள்! அவளது ஒரே சொத்தான மாக் கோப்பை முத்தத்தில் சிதறிக்கிடக்க, கொட்டிக்கிடந்த பருக்கைகளைப் பொறுக்கக் காகங்கள் போட்டி போட்ட படி இருந்தன! மனுஷன் படலைக்குள்ளால வீதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை அவள் கண்டாள்! மனுஷன் ஊருக்குள்ள போய்த் தன்னைப் பரிசு கெடுக்கப் போகுது எண்டு தனக்குள் நினைத்துக்கொண்டவள்...முந்தானையால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்!

கொஞ்ச நேரத்தால யாரோ ஓடிவந்து ‘எடியே வாசுகி.. உன்ர மனுஷன் மருந்து குடிச்சிட்டானாம்.. ஓடி வாடி என்று சொல்லவும் பதறிப் போய் அவளது கைகள், கால்கள் எல்லாம் தாங்களாக நடுங்கத் தொடங்க.. அவள் சனங்கள் ஓடிய திசையில் ஓடத் தொடங்கினாள்! பிள்ளைகள் அழுவதைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை! யாரோ குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்தது மட்டும் அவளுக்கு நினைவில் இருந்தது!

பனை வடலிகளுக்கிடையில் அவன் வளர்த்தப் பட்டிருந்தான்! வாயிலிருந்து நுரை மாதிரி எதுவோ வந்து கொண்டிருந்தது! அவளைக் கிட்ட விடாதையுங்கோ என்ற படி தாய்க்காரி..மார்பிலும் தலையிலும் மாறி..மாறி அடித்த படி அழுது கொண்டிருந்தாள்! அவளுக்கு..அவள் செய்த குற்றம் தான் என்ன என்று தெரியவேயில்லை! ஐயோ..அவரை ஆஸ்பத்திருக்காவது கொண்டு போங்கோ..நான் கிட்ட வரயில்லை என்று சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தாள்! அதெல்லாம் வேண்டாம் என்று தாய்க்காரி சொல்ல.. அவளுக்குப் பளீரென மூளையில் எங்கோ ஒரு பொறி தட்டிய மாதிரி இருந்தது! அவன் அருகில் ஒரு அலுமினியப் பொலிடோல் போத்தில் கிடந்தது! மருந்தை அந்தக் காவோலை வேலிக்குள்ள முந்தியே மறைச்சு வைச்சிருந்தவனாம் எண்டு,, ஊர்ப் பெருசு ஒண்டு ,,இன்னொரு ஊர்ப் பெருசுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்ததையும் அவள் கவனித்திருந்தாள்!

கொஞ்ச நேரத்தில ‘நிரம்பவும்' சத்தியெடுத்த பிறகு...மனுஷன் கண் திறந்ததைக் கண்ட பிறகு தான்.. அவளுக்குக் கொஞ்சம் மூச்சு வந்தது! பின்னர் கொஞ்ச நாளால மனுஷன் கொழும்புக்குப் போக அவளது இயல்பு வாழ்க்கை அவளுக்குத் திரும்பக் கிடைத்த மாதிரி இருந்தது!

இதே போல மனுஷன் கோப்பை எறிவதும்,,,மருந்து குடிக்கிறதும் ஒவ்வொரு முறை கொழும்பால வாற போதும் நடக்கத் தொடங்க..அவளுக்குள் இருந்த யாரோ விழித்துக் கொண்ட மாதிரி இருந்தது! ஊரவர்கள் ஒரு புழுவைப் பார்ப்பது போல அவளைப் பார்ப்பதாக அவள் உணர்ந்தாள்!

இந்த வருஷம் சித்திரைத் திருவிழாவுக்கு மனுஷன் ஊருக்கு வருவாராம் என்று தாய்க் காரி சொல்லவும்.. அவர் எனக்குக் கணவராக இருக்கிறாரா...அல்லது தாய்க்குப் பிள்ளையாக இருக்கிறாரா அல்லது அவரது குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கிறாரா என்று அவளால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை!

வழக்கம் போலக் கோவில் திருவிழா முடிந்த கையோடு கோப்பை பறந்தது! இப்போதெல்லாம் மாக் கோப்பை உபயோகிப்பதை அவள் முற்றாகவே நிறுத்தியிருந்தாள்! வெறும் அலுமினியக் கோப்பை மட்டும் முத்தத்தில் அநாதரவாகக் கிடந்தது!

மனுஷன் மருந்து குடிசிட்டானாம்.. என்று பக்கத்து வீட்டு அக்கா சொல்ல அவளும் ஓடிப்போனாள்! ஆனால் ,,அவளது ஓட்டத்தில் இந்த முறை வேகம் இருக்கவில்லை! ஒரு ‘உறுதி' இருந்தது! ஏதோ ஒன்றுக்கு முடிவு கட்டி விட்டது போல ஒரு ‘திருப்தி' அவள் மனசு நிறைய நிறைந்திருந்தது!

அதே வடலிகளுக்கிடையில் ,,அவளது கணவன் வளர்த்தப் பட்டிருந்தான்! அதே வெள்ளை நிற ,முரை வாயிலிருந்து வழிந்து கொண்டிருந்தது! அதே பொலிடோல் போத்தில் அவனருகில் கிடந்தது! அவன் ‘புழுவாக; நெளிந்து கொண்டிருந்தான்! ஐயோ… என்ர பிள்ளையை ஆஸ்பத்திரிக்கு உடனே கொண்டு போங்கோ! என்று தாய்க்காரி அலறிக்கொண்டிருந்தாள்! போத்திலுக்க ஆரோ பொலிடோலை ஊத்தி வைச்சிட்டினம் போல கிடக்குது! பிள்ளையின்ர வாயெல்லாம் மருந்து மணக்குது,,,ஐயோ… ஐயோ ..என்ர ராசா,,என்ன விட்டிட்டுப் போயிராதை அப்பு..என்று தாய்க்காரி உண்மையாகவே அழுது கொண்டிருந்தாள்! முதலில் அசட்டை செய்த பெரிசுகளும் ..ஒரு காரைப் பிடிச்சு.. அவனை ஆஸ்பத்திருக்குக் கொண்டு போக..அவனும் ஒரு மாதிரி உயிர் தப்பியிருந்தான்!

அதன் பிறகு அவன்.. தாய் வீட்டுக்குப் போவதேயில்லை! சில வேளைகளில் குடித்தாலும்..நள்ளிரவு என்றாலும் வீட்டு விறாந்தைக்கே வந்து விடுகிறான்! பொலிடோல் குடிக்கிற ‘விளையாட்டு' அறவே நின்று போயிருந்தது!

அடியே.. வாசுகி...ஆரு அவனுக்கு ‘மருந்து' வைச்சிருப்பினம் எண்டு நீ நினைக்கிறாய்? என்று பக்கத்து வீட்டு அக்கா அவளிடம் விடுப்பு விசாரித்தாள்! அக்கா ..ஆர் வைச்சதேண்டு தெரிஞ்சால் ..வைச்சவரின்ர குடலை இந்த வாசுகி உருவி எடுத்திருவாள் எண்டு உனக்குத் தெரியாதா? என்று கணவனுக்குக் கேட்கும்படியாகவே உரத்துப் பதில் சொன்னாள்...வாசுகி!

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசுகி வள்ளுவரின் மனைவி மட்டுமல்ல , பாற்கடலைக் கடையும்போது  விசத்தைக் கக்கியதும் வாசுகிதான்....!

நல்ல கதை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசுகி கல்லறை வரை ரகசியத்தை சுமக்க போர என்று சொல்லுறீயள்.....பகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை, கதையை விட அந்தப் படம் சுப்பராய் இருக்குது...உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு யாரோ நடந்திருக்குது போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் அவசரப்பட்டு முடிச்சுட்டீங்களோ என்று நினைக்கத் தோணுது புங்கையண்ணா...வாசுகிக்கு நாளடைவில் எல்லாம் பழக்கபட்டு விட்டது போலும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா ஒரு கதை எழுதுங்கோ என்று நெடுக்ஸ் கேட்டமாதிரி ஒரு கனவு வந்ததுtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2016 at 7:13 AM, suvy said:

வாசுகி வள்ளுவரின் மனைவி மட்டுமல்ல , பாற்கடலைக் கடையும்போது  விசத்தைக் கக்கியதும் வாசுகிதான்....!

நல்ல கதை...!

வாசுகியைப் பற்றி இன்னுமொரு கதையும் எழுத நினைச்சனான்!

அது சிவனுக்கே.. நிலாக் காட்டின மாதிரிக் கதை!

உங்கட கருத்துக்குப் பிறகு எழ்துவதை  மறு பரிசீலனை செய்கிறேன்!

கருத்துக்கு நன்றி..சுவியர்!

 

On 3/19/2016 at 3:03 PM, putthan said:

வாசுகி கல்லறை வரை ரகசியத்தை சுமக்க போர என்று சொல்லுறீயள்.....பகிர்வுக்கு நன்றிகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...புத்தன்!

இரகசியங்களை சுமக்கப் போறா என்று வந்திருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

புங்கை அண்ணா, 

இந்த கிணத்தடியை பார்க்கும்போது, கப்பூது கிராமத்திலே இருந்து வல்லைக்குள்ளாலே வந்து கிராய் - இமையாணன் வீதியிலே மிதக்கும்போது, கிராய் பிள்ளையார் கோவிலை (சிவசிதம்பரத்தின்டை கோவில் என்றும் சொல்லுவார்கள்) ஒட்டி இருக்கிற கிணறு மாதிரி தெரிகிறது. 

உங்கள் கதைகள் மீண்டும் எங்களை "அந்த" காலத்துக்கே கொண்டு செல்வதில் தவறுவதில்லை. நன்றி அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் எழுதுங்கோ புங்கை....! உங்கள் எழுத்துநடை ரசிக்கும் படியும், வசீகரமாயும் இருக்கு....! இன்று பங்குனி 2ம் திங்கள் ....!

"கள் போதி மனதை மயக்கும் கடவுள் போதை மனதைத் தெளிவாக்கும்...! என்று கலண்டரில் போட்டிருக்கு...!  ஏதோ ஒரு போதையைப் போட்டுத் தாக்குங்கோ.... !!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2016 at 7:40 AM, ரதி said:

புங்கை, கதையை விட அந்தப் படம் சுப்பராய் இருக்குது...உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு யாரோ நடந்திருக்குது போல

நன்றி..ரதி!

உங்கள் கருத்துக்கள் எப்போதும் ஊக்கமளிப்பவையாக இருக்கும்! நன்றி!

நீண்ட காலங்களின் முன்பு.. மிளகாய்த் தோட்டங்களிலும், போயிலைத் தோட்டங்களிலும் 'பொலிடோல்' என்ற கிருமிநாசினி உபயோகிப்பார்கள்! வெறும் போத்தல்களை வேலிகளில் தான் சொருகி வைப்பார்கள்! அதை வைத்துத்தான் ஒருவர் பெரிய விளையாட்டெல்லாம் காட்டினார்! அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான் எழுதினேன்!

பின்வரும் படத்தில் உள்ள மாதிரி அலுமினியப் போத்தில்களாக அவை இருக்கும்!

aluminium-bottles-for-pesticides-900084.

On 3/19/2016 at 8:55 AM, யாயினி said:

இறுதியில் அவசரப்பட்டு முடிச்சுட்டீங்களோ என்று நினைக்கத் தோணுது புங்கையண்ணா...வாசுகிக்கு நாளடைவில் எல்லாம் பழக்கபட்டு விட்டது போலும்......

கொஞ்சம் அவரப்பட்டுத் தான் முடித்தேன், யாயினி!

ஏனெனில் கதைகளை அதிகம் நீட்டினால் யாழ் கள வாசகர்கள்.. வாசிக்கவே மாட்டார்கள்!

அதனால் சில வேளைகளில் ..சுருக்கமாக முடிக்க வேண்டியிருக்கின்றது!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி...யாயினி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொலிடோலை குடித்து எத்தனை பேர் இறந்துவிட்டார்கள் ஊரில். 

நல்ல கதை, தொடர்ந்து எழுதுங்கள். 

5 hours ago, புங்கையூரன் said:

 

கொஞ்சம் அவரப்பட்டுத் தான் முடித்தேன், யாயினி!

ஏனெனில் கதைகளை அதிகம் நீட்டினால் யாழ் கள வாசகர்கள்.. வாசிக்கவே மாட்டார்கள்!

அதனால் சில வேளைகளில் ..சுருக்கமாக முடிக்க வேண்டியிருக்கின்றது!

 

யார் சொன்னார்கள், வாசிக்க பலர் உள்ளார்கள் மெகா தொடர் எழுதினாலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2016 at 6:21 PM, கிருபன் said:

புங்கை அண்ணா ஒரு கதை எழுதுங்கோ என்று நெடுக்ஸ் கேட்டமாதிரி ஒரு கனவு வந்ததுtw_blush:

நன்றி...கிருபன்!

நல்ல வேளை நெடுக்கர் இதுவரை இந்தப் பக்கம் வராததால் தப்பியுள்ளேன் என்று நினைக்கிறேன்!

On 3/21/2016 at 7:25 PM, பகலவன் said:

புங்கை அண்ணா, 

இந்த கிணத்தடியை பார்க்கும்போது, கப்பூது கிராமத்திலே இருந்து வல்லைக்குள்ளாலே வந்து கிராய் - இமையாணன் வீதியிலே மிதக்கும்போது, கிராய் பிள்ளையார் கோவிலை (சிவசிதம்பரத்தின்டை கோவில் என்றும் சொல்லுவார்கள்) ஒட்டி இருக்கிற கிணறு மாதிரி தெரிகிறது. 

உங்கள் கதைகள் மீண்டும் எங்களை "அந்த" காலத்துக்கே கொண்டு செல்வதில் தவறுவதில்லை. நன்றி அண்ணா. 

பகலவன், ஒரு வாசகனின் கருத்துக்களே... (அவை எந்த வடிவில் வந்தாலும்) ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் அதி உச்சமான ஊக்குவிப்பாகும்!

உங்கள் கருத்துகள் மேலும் எழுதவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன!

உங்கள் அனுபவப் பகிர்வுகளை...அவற்றுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைத் தன்மைக்காகவே தேடித் தேடி வாசிப்பேன்!

நீங்கள் கூறிய கிராய் கிராமத்துக்குப் போனது நினைவிருக்கிறது!

உங்கள் கருத்து ஒரு கேள்வியையும் தோற்றுவித்து விட்டது!

'கிராய்' என்ற வார்த்தையில் தோற்றம் எப்போது ஏற்பட்டது?

புங்குடு தீவிலும் பெரிய கிராய் , சின்னக்கிராய் என்று இரு பிரிவுகள் இருக்கின்றன!

நான் கிராய் என்றால் 'கழி' (மழைக்காலங்களில் தண்ணீர் தங்கி நிற்கும் பள்ளங்கள்) என்று இதுவரை நினைத்திருந்தேன்!

உங்கள் கருத்தை வாசித்த பின்னர் கிராய் என்பது 'ஊர்' என்று பொருள் தருமோ தெரியாது!

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அல்லது யாரவது மொழி வல்லுனர்கள் விளக்கம் தருவீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.