Jump to content

விளைச்சலைத் தேடும் கட்டாந் தரைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

delfini-e-balene-sri-lanka-2.jpg

அனுராதபுரப் புகையிரத நிலையத்தில் ஒரு பெருமூச்சோடு தனது பயணத்தின் பாதி தூரம் கடந்த நிம்மதிய்டன்  தன்னைச் சற்று ஆசுவாசப் படுத்தியது அன்றைய யாழ்தேவி! தனது பயணத்தின் பாதித் தூரம் கடந்த நிம்மதியுடன் வாசுகியும் தனது பயணப் பொதியைத் தோளில் தொங்கவிட்ட படியே யாழ்தேவியை விட்டு இறங்கினாள்! ஏழு வருடங்களுக்கு முன்னர் அங்கு ரீச்சர் வாசுகியாக இறங்கும் போதிருந்த பயமும், தயக்கமும் அவளிடமிருந்து விடை பெற்று நீண்ட காலம் போய் விட்டது போல இருந்தது!  வழக்கமாக அவளுடன் கூடவே பயணிக்கும் மாம்பழம், பலாப்பழம், நல்லெண்ணெய், பனங்கிழங்கு, முருங்கைக்காய் போன்றவையும் அவளுடன் இன்று பயணிக்கவில்லை!

 

பாரதி கண்ட புதுமை பெண்ணைப் போன்ற மனநிலையில் அனுராதபுரம் பஸ் நிலையத்தை நோக்கி அவளது கால்கள் நடந்து கொண்டிருந்தன! முன்பெல்லாம் நேரே புகையிரத நிலையத்திலிருந்து, பஸ் நிலையத்துக்கு ஓடியே போயிருப்பாள்! இருட்ட முன்னர் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று பயம் மட்டுமே மனது முழுவதும் நிறைந்திருக்கும்! இப்போதெல்லாம் அவசரம் அவளுடன் படணிப்பதில்லை! நிறைய நேரம் இருந்தது போல இருக்கவே அவசரமில்லாமல் அனுராதபுரத்தின் புனித நகர்ப் பகுதிக்குள்ளால் நடந்து செல்ல எண்ணினாள்!

 

ருவான் வெலிசாய விகாரையின் சுற்றுக் மதில்களை அலங்கரிக்கும் யானைகளையும், புனித வெள்ளரச மரத்தையும், தூப ராப விகாரையின் அழிவையும் ஒரு வெளிநாட்டுப் பயணியைப் போல... எந்த விதப் பற்றோ அல்லது வெறுப்போ இல்லாத நிலையில் அவளால் ரசிக்க முடிந்தது! வழியில் சந்தித்த பிக்கு அவளை ஏற இறங்கப் பார்த்ததை அவள் கடைக் கண்ணால் கவனித்தாலும், அதைக் கவனிக்காதது போல நடந்து கொண்டிருந்தாள்! அருகில் வந்த பிக்கு, அழகிய தமிழில் வணக்கம் என்றார்! பதிலுக்கு வணக்கம் சொள்ளவளிடம், வெளி நாடா என்று கேட்டார்! இல்லை என்று கூறியவள், தனது பயணத்தின் இடையில் கிடைத்த அவகாசத்தில் விகாரைகளைப் பார்த்து விட்டு போக நினைத்ததாகக் கூறி விட்டுத் தொடர்ந்து நடந்தாள்! அவள் கனகாலத்தின் பின்னர் வந்திருக்கிறாள் என்பதை அந்த பிக்கு மணந்திருக்க வேண்டும்! பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம்  என்று கனக்க விளங்கப்  படுத்தியதிலிருந்து  எதோ மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டாலும் அதனை அவள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை! வரிடமிருந்து பலவந்தமாகத் தன்னைப் பிடுங்கிக் கொண்டவள் பழைய பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்!

 

அவளுக்கு எப்போதுமே பிடித்த அனுராதபுரத்திலிருந்து புத்தளம் செல்லும் பஸ் பாதையில் பயணம் செய்யப் போகின்றோம் என்ற எண்ணமே அவளுக்குள் ஒரு புத்துணர்வை ஊட்டியிருக்க வேண்டும்! இரண்டு பக்கமும் ஓங்கி வளர்ந்த மரங்கள் வீதிக்குக் குடை பிடிப்பது போல ஒரு அலங்கார வளைவு மாதிரி வீதியைப் பல இடங்களில் மூடியிருக்கும்! அத்துடன் சாதாரண சிங்கள மக்களின் காட்டுத் தடிகளால் கட்டப் பட்டு மண்ணுருண்டை கொண்டு வடிவமைக்கப் பட்ட வீடுகளும், செவ்விளனி மரங்களின் வரிசைகளும், இடைக்கிடை வந்து போகும்! இடையிடையே பிணங்கள் எரிந்து வெறும் சாம்பல் மட்டுமே பூத்துக் கிடக்கும் சுடலைகளும் மாறி மாறி வந்து போகும்! அவற்றின் அருகே கட்டப் பட்டிருக்கும் வெள்ளைக் கொடிகள் அவற்றை அடையாளம் காட்டும்! இடைக்கிடையே தோன்றி மறையும் பெரிய ஈரப்பலா மரங்களை விட வேறு எதுவும் புதிதாக மாறி விடவில்லை என்பதையும் அவதானித்தாள்! அந்தப் பஸ்சுக்குள் பயணிக்கும் போது.. வழக்கமாகத் தமிழர்கள் சிலரும் பயணிப்பதுண்டு! ஆனால் இன்று அவ்வாறு ஒருவரையும் அவளால் காண முடியவில்லை! வழக்கம் போல முஸ்லிம் வியாபாரிகள் பயணித்தாலும் அவர்கள் சிங்களத்திலேயே தங்களுக்குள் உரையாடிய படி இருந்தார்கள்!

பஸ் புத்தளத்தை அடைந்ததும் ..புத்தளம் கூட அவ்வளவு மாறி விடவில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்! பசி வயிற்றைக் கிள்ளியது போலிருக்க ஒரு சாப்பாட்டுக் கடையினுள் போய் அமர்ந்தவள் சாப்பாடு ஓடர் பண்ணும் போது ஒரு 'குருமா' வும் ஓடர் பண்ணவும் சாப்பாடு ஓடர் எடுத்தவன் அவளை மேலும் கீழும் சில முறை பார்த்தது அவளுக்கு ஒரு மாதிரியிருந்தது! அவள் நோர்வேயில் இருக்கும் போது அவளது வேலையே,,மீன்களைக் கீறிச் சுத்தப்படுத்துவதும்..அவற்றை தரம் பிரிப்பதும் தான்! எனவே மீன் சாப்பிடுவதை அவள் அவ்வளவு விரும்புவதில்லை! இங்கே யாருக்காக அவள் வேடம் போட வேண்டும் என நினைத்தவள் கடைப் பையனின் பார்வையை முற்றாக அலட்சியப் படுத்தினாள்! சாப்பாடு வந்தது அதை அவள் சாப்பிட்டு முடிக்கும் வரையும் அவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த கடை முதலாளி அவளிடம் வந்து, இப்பெல்லாம் ரொம்ப மாறிட்டீங்க ரீச்சர் என்றவனை அண்ணார்ந்து பார்த்தவளின் முகத்தில் புன்முறுவல் பூத்தது! எந்த விதக் குற்றவுணர்வும் இல்லாதவளாக...அனஸ்..எப்படியிருக்கிறீங்க என்று அவள் கேட்கவும் அவள் தன்னை அடையாளம் கண்டுகொண்டதைக் கண்டு அனஸுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! ரீச்சர் கல்பிட்டிக்குத் தானே போறீங்க...நானும் இண்டைக்குக் கடை பூட்டினப் பிறகு அங்க தான் போகப் போறன்! நீங்கள் என்னுடனேயே வரலாம் ரீச்சர் என்று கூறியவன் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை! அவன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் பெற்றோருடன் தான் தங்கியிருப்பதாகவும், அவள் ஸ்கூட்டரில் தன்னுடனேயே வரலாம் என்று கூறவும் அவளால் மறுக்க முடியவில்லை! அவளது முந்தைய குவாட்டர்சில் இருந்து அவனது வீடு வெகு தூரத்தில் இல்லை என்பதால் அவனது பெற்றோருடனும் அவளுக்குப் பழக்கம் உண்டு!

பாலாவி தாண்டியபோது.. வீதியின் இருமருங்கிலும் தென்னை மரங்கள் தோன்றத் தொடங்கின! கல்பிட்டியை நோக்கிச் செல்லச் செல்ல அவற்றின் அடர்த்தி அதிகரித்த படியே சென்றது! யாழ்ப்பாணத் தென்னை மரங்களைப் போல இல்லாது, இந்தத் தென்னை மரங்களில் திட்டுத் திட்டாக ஒரு விதமான் ஒட்டுண்ணித் தாவரம் வேர்களைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கும்! அத்துடன் ஒரு பெரிய வகை வண்டுகளும் அந்தத் தென்னைகளில் வசிப்பதுண்டு! கழுதைகள் கத்தும் போது அந்த வண்டுகள் விழுந்து விடும் என்று ஊரவர்கள் கூறுவார்கள்! வீதியோரங்களில் மணல் மேடுகளில் படர்ந்திருந்த கசுக்கொட்டை மரங்களும், அவற்றின் கீழே வெய்யிலுக்காகப் படுத்திருந்த பூ ஆமைகளும், கடலின் மணமும் கல்பிட்டி அண்மித்து விட்டதற்குக் கட்டியம் கூறின!

இது வரை மௌனமாக ஸ்கூட்டரை ஒட்டிக்கொண்டு வந்த அனஸ்.. ஜெயனுதீன் மாஸ்ரரின்ர வாப்பா போன வருஷம் மௌத்தாயிட்டங்க என்று மெதுவாகக் கூறினான்! அப்படியா என்று கூறியவள் நல்ல மனிசன் என்று மட்டும் கூறினாள்!

அவருக்கு இன்னமும் ‘நிக்காஜ்' சரி வரல்ல..அதே மாசுக்கருவாட்டைத் தான் இன்னும் சமையலுக்குப் பாவிக்கிறாங்க.. என்று கூறிச் சிரித்தான்! மாஸ்ரர் பாவம் என்று கூறியவன்… ரீச்சர் என்ன மாதிரி என்று கேட்டான்! ரீச்சரும் பாவம் என்று அவனது பாணியிலேய பதிலளித்தவள்,  கும்ப்பாக் கிழவன் எப்படி என்று விசாரித்தாள்! இருக்காரு என்று ஒரு உணர்வையும் காட்டாது பதில் வந்தது! மாஸ்ரர் ஒரு மாசிக்கருவாட்டுத் துண்டு ஒன்றை ஒரு கம்பியில் கொழுவி வைத்திருப்பார்! பின்னர் சமைக்கும் ஒவ்வொரு கறிகளுக்குள்ளும் அந்த மாசிக்கருவாட்டை கொஞ்ச நேரம் இறக்கி ஊற விடுவார்! பின்னர் கொஞ்ச நேரத்தில் அதை வெளியே எடுத்து அடுத்த நாள் சமையலுக்காக அதை பத்திரப் படுத்தி விடுவார்!

ஜெய்னுதீன் மாஸ்ரும், அவளும் ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படிப்பித்தவர்கள் தான்! அவளுக்கும், அவருக்கும் இடையில் ஒரு விதமான காதல் மாதிரி ஒன்று ஏற்பட்டது என்னவோ உண்மை தான்! பெண்ணென்றும் பார்க்காது..சம்பிரதாயங்களையும் மறந்து,, நேரடியாகவே தனது காதலை அவரிடம் அவள் கூறியதும் உண்மை தான்! கற்பிட்டி ஒல்லாந்தர் கோட்டையின் திறை சேரியின் இறுகப் பூட்டப் பட்ட இரும்புக் கதவுகளைப் போல, அவரது முகம் எந்த விதமான உணர்சிகளையும் பிரதி பலிக்கவில்லை! பரவாயில்ல்லை மாஸ்ரர் என்றவள்,, மறந்திடுங்கோ மாஸ்ரர் என்ற படி அவ்விடத்தை விட்டு அகன்றதும் நினைவுக்கு வந்தது! ஒன்றுமில்லை ரீச்சர்...மார்க்கம் என்று அவர் கூறியது மட்டும் மெதுவாக அவளுக்குக் கேட்டது போல இருந்தது!

அதன் பின்னர் விடுமுறைக்காக வீட்டுக்கப் போனவளின் வாழ்க்கை திசை மாறிப் போனதுடன் அனைத்துத் தொடர்புகளுமே விடு பட்டுப் போயின!

மறு நாள் கண் விழித்தவள் அனஸின் அம்மா வட்டிலப்பம் செய்து கொண்டிருப்பதை அவதானித்தாள்! உங்களுக்கு இது இப்பவும் பிடிக்கும் தானே ரீச்சர் என்று அவர் கேட்கவும்.. நான் நானாகத் தான் இருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறியவள் இரண்டு ஐயாயிரம் ரூபாய் நோட்டுக்களை அவரிடம் கொடுத்தாள்! அனஸின் தாய் மவன் என்ன சொல்லுவானோ என்று தயங்கிய மாதிரிக் கிடந்தது! நான் உங்கள் மகள் மாதிரி என்று கூறியவள் அந்தப் பணத்தை அவளது கைக்குள் வலிந்து திணித்தபடியே ‘கும்ப்பாக் கிழவனின்; வீட்டுக்குக் கூட்டிப் போகும் படி கேட்டாள்!  

அவள் குடிசையை அண்மித்த போது கும்பாவின் நாய் குரைத்ததைக் கேட்ட கும்பா நொண்டியபடி வெளியே வந்தான்!

வாசுகியைக் கண்டதும் அவனது முகம் மலர்ந்தது! எனக்குத் தெரியும் பிள்ளை நீ என்னை மறக்க மாட்டாய் என்று கூரியவனிடம் காலுக்கு என்ன நடந்தது என்று விசாரித்தாள்! அது ஒரு திருக்கை வெட்டிப்போட்டுது என்று சொன்னவன்.. அதெல்லாம் மாறியிடும் பிள்ளை.. எப்படி வெளிநாட்டு வாழ்க்கை? என்ற படியே கதையின் திசையை மாற்றினான்!

கும்பா மீன் பிடிக்கிறது உனக்குத் தொழில்...அந்த மீனை வெட்டிறது எனக்குத் தொழில்..அவ்வளவு தான் வித்தியாசம் என்றாள்! அப்படியெண்டால் நீ படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கேல்லையா பிள்ளை என்று கேட்டவனின் முகத்தில் ஒரு ஆதங்கம் தோன்றி மறைந்தது! அங்கு அவள் வாழ்ந்த காலத்தில் கும்பா அவளின் தந்தையைப் போலவே எல்லா உதவிகளையும் செய்திருந்தான்! நான் ஒருத்தருக்கும் ஒரு சாமானும் வாங்கேல்லை கும்பா! ஆனால் உனக்கு மட்டும் தான் ஒரேயொரு சாமான் வாங்கினனான் என்ற படி,, ஒரு வெளிநாட்டு விஸ்கிப் போத்தலொன்றை அவனிடம் கொடுக்க,,அவன் கண்களில் தோன்றிய பிரகாசம் நீண்ட நேரமாக மறையவேயில்லை!

கும்பாவிடம் விடை பெற்றுத் திரும்புகையில்,,அவளும் ஜெய்னுதீன் மாஸ்ரரும் மாலை நேரங்களில் சந்தித்துப் பேசும் சிறிய குடிசைப் பள்ளிவாசல் குறுக்கிடவும் அனஸின் அம்மாவே..மகள் அங்க போவம் என்று கூறினாள்! கூடப் பிறந்த சொந்தங்கள் எல்லாமே கொஞ்சம் விலகிச் செல்லுற மாதிரிப் பழகிற போது.. ஒரு குறுகிய காலம் மட்டும் தன்னுடன் பழகியவர்களால் மட்டும் எவ்வாறு எனது விருப்பங்களையும் எதிர் பார்ப்புகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது என்பதை அவளால் இறுதிவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை!

அந்த குடிசைப் பள்ளிவாசலுக்குள் ஒரு விதமான எண்ணெய்த் தன்மையான மணலைப் போட்டிருந்தார்கள்! அதனுள் கால்கள் புதையும் போது இனந்தெரியாத ஒரு உணர்வில் மனம் சாந்தமடைவதை அவள் உணர்ந்திருந்தாள்! அதனுள் யாரோ ஒரு முஸ்லிம் பெரியவரின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக மாஸ்ரர் கூறியது அவள் நினைவுக்கு வந்தது! இறுதியில் நீங்கள் கூட உருவ வழிபாடு செய்கின்றீர்கள் என்று அவள் அவருடன் வாக்குவாதப் பட்டதும் அவள் நினைவுக்கு வந்தது!

அன்றைய மாலையில்.. அவள் வரவைக் கேள்விபட்ட ஜெயனுதீன் மாஸ்ரர் அவளைத் தேடி வந்தார்! அவரை எதிர்பாராமல் கண்டதும் அவளது இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது! சிறிது நேரத்தில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவளிடம்...ரீச்சருக்கு விருப்பமெண்டால் மாஸ்ரரோட வெளிய நடந்து போயிற்று வாங்கோ என்றாள் அனஸின் அம்மா!

சிறிது நேரம் சேர்ந்து நடந்தவர்கள் பழைய நினைவுகளை மட்டும் பகிர்ந்து கொண்டார்கள்!

வீட்டை அண்மித்ததும் மெல்ல இருளத் துவங்கியது!

திடீரென ரீச்சர் உங்கட கழுத்தில தாலியைக் காணவில்லையே என்று ஜெயனுதீன் மாஸ்ரர் கேட்கவும் ,நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று கூறினாள்!

ஏன் என்று மாஸ்ரர் கேட்கவும் எனக்கு அதில் இப்போது ஆர்வமில்லை என்று கூறியவள் எனக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றும் கூறினாள்! இரண்டு அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதைத் தான் வாசுகி அவ்வாறு குறிப்பிட்டிருந்தாள்!

ரீச்சர் நீங்கள் விரும்பினால் என்று ஜெய்னுதீன் மாஸ்ரர் கூறவும்,,தனது விரல்களால் சைகை காட்டி அவரது வசனத்தை இடை நடுவில் நிறுத்தியவள்....அன்றைக்கும், இன்றைக்கும் எனக்கு உள்ள வித்தியாசம் பணம் மட்டும் தானே மாஸ்ரர்? வேறு எதுவும் மாறி விடவில்லையே? மார்க்கம் இப்போது எங்கே போய் விட்டது மாஸ்ரர் என்று கேட்ட படி வீட்டின் பின் புறமிருந்த முருங்கை மரத்தின் கீழ் பார்வையைச் செலுத்தினாள்!

முன்பே புதைக்கப் பட்ட நண்டுக் கோதுகள் நிலவு வெளிச்சத்தில் பளபளத்தது அவளுக்குத் தெரிந்தது! காற்று மணல்களை அகற்றியிருக்க வேண்டும்!

வணக்கம் மாஸ்ரர் ....நண்பர்களாகவே இருப்போம் என்று கூறிய படி விடை பெற்று நடந்தாள்!

மாஸ்ரர் வாசலில் உறைந்து போய் நின்றது.அவளது கடைக்கண்ணில் விம்பமாகிப் பிரதிபலித்தது!

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

புங்கை அண்ணா பச்சை முடிந்துவிட்டது. உங்களுக்குள் ஆயிரம் செங்கை ஆழியான்கள் புதைந்து இருக்கிறார்கள். வாசிக்கும்போதே காட்சி கண்ணுக்குள் விரியவைக்க உங்களால் எப்போதுமே முடியும் என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறீர்கள்.

எனக்கு இலங்கையில் பிடித்தமான இடங்களில் அனுராதபுரமும் ஒன்று. பழையநகரும், கதிரேசன் கோவிலும், ஸ்டார் லோட்ஜும் கண்களில் வந்து போயின. நான் மனசு குழப்பமான நாட்களில் புகையிரத பாதையில் நடப்பதை விரும்புவேன். 

நீங்கள் தொடர்ந்து எழுதவேணும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைக்கும், இன்றைக்கும் எனக்கு உள்ள வித்தியாசம் பணம் மட்டும் தானே மாஸ்ரர்? வேறு எதுவும் மாறி விடவில்லையே?

 

புங்கை கலக்கிட்டீங்கள்.....அந்தமாதிரி ஒரு சிறுகதை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையென்றால் இப்படி இருக்க வேணும். அயர்ச்சியின்றி வாசிக்க முடிந்தது. அனுராதபுரம்... திகிலைத் தொன்டைக்குள் வைத்துக் கொண்டு புண்ணகையைத் தந்து வாழும் புராதனம்....! tw_blush:

நன்றி புங்கை....!

Link to comment
Share on other sites

புங்கை அண்ணை, விடியக்காலத்தால எல்லாப்பச்சையையும் முடித்து விட்டேன். மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். இரண்டு தேரை அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள். அதே சமயம் ஒரு தேரர்ரயும் வறுத்து எடுத்துவிட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத இடங்களையெல்லாம் நேரே பார்த்தமாதிரி கதையில் விபரிப்பு இருந்தது. ஆனால் மாஸ்ரர் பணத்திற்காக மார்க்கத்தை தளர்த்தியதற்கான காரணம் கதையில் தெளிவாக வரவில்லை. அனுபவங்கள் கூட உலகத்தின் மீதான பார்வையும் விசாலமாகலாம் அல்லவா. முந்தைய சிந்தனைகள் காலாவாதியாகவும் கூடும்!

Link to comment
Share on other sites

12 hours ago, புங்கையூரன் said:

 

 

முன்பே புதைக்கப் பட்ட நண்டுக் கோதுகள் நிலவு வெளிச்சத்தில் பளபளத்தது அவளுக்குத் தெரிந்தது! காற்று மணல்களை அகற்றியிருக்க வேண்டும்!

 

இதற்கான அர்த்தம் புதைந்த காதல் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறது என்று எடுத்து கொள்ளலாம் தானே, காலமும் அனுபவமும் பக்குவமும்  சில தடைகளை அகற்றி இருக்கின்றன என்றும் எடுக்கலாம் இல்லையா.

 

புதைக்கப்பட்ட நண்டு கோதுகள் - மறைந்த காதல்

பளபளத்தது - துளிர் விட்டது

காற்று - காலம் + அனுபவம் + பக்குவம் 

மணல் - தடைகள்/திரைகள்/மார்க்கம் 

புங்கை அண்ணா , 

மாஸ்ரர் அவள் நினைவாக நிக்காஜ் செய்யாமல் இருந்தது கூட அவளது காதல் காரணமாக இருக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன அல்லவா.?

அவளது திருமண நிலை தெரியாத மாஸ்ரரினால் அவளது பொருளாதார நிலைமையை எப்படி தெரிந்திருக்க முடியும்.

கிருபனின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2016 at 9:34 PM, பகலவன் said:

புங்கை அண்ணா பச்சை முடிந்துவிட்டது. உங்களுக்குள் ஆயிரம் செங்கை ஆழியான்கள் புதைந்து இருக்கிறார்கள். வாசிக்கும்போதே காட்சி கண்ணுக்குள் விரியவைக்க உங்களால் எப்போதுமே முடியும் என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறீர்கள்.

எனக்கு இலங்கையில் பிடித்தமான இடங்களில் அனுராதபுரமும் ஒன்று. பழையநகரும், கதிரேசன் கோவிலும், ஸ்டார் லோட்ஜும் கண்களில் வந்து போயின. நான் மனசு குழப்பமான நாட்களில் புகையிரத பாதையில் நடப்பதை விரும்புவேன். 

நீங்கள் தொடர்ந்து எழுதவேணும்.  

அபச்சாரம்...அபச்சாரம்!!!

வருகைக்கு நன்றி..பகலவன்!

கலாநிதி குணராசா (செங்கை ஆழியான்) அவர்கள் எனது தந்தையாரின் புவியியல் பேராசிரியராக இருந்தவர்! எனது இளமைக்காலத்தில் நெடுந்தீவின் கழிகளில் (மழைக் காலத்தில் மழைநீர் தங்கும் நீர் நிலைகள்)ஆசை தீர நீந்தியிருக்கிறேன்! அவர் கூறும் கூழைக்கடாக்கள் எனும் பெலிக்கன் பறவைகள் அந்த நீர் நிலைகளை நோக்கித் தான் வலசைக் காலத்தில் வருபவை ! எருக்கிழறிப் பறவைகளையும், தாராக்களையும் எனது தந்தையாரின் ஆசிரிய நண்பர்கள் வேட்டையாடி வீட்டுக்குக் கொண்டு வருவதுமுண்டு! இந்தக் கழிகளில் விளையும் றால்கள் ஐந்து, ஆறு அங்குலங்களுக்கு மேல் நீளமானவை! இதை ஏன் எழுதுகின்றேன் என்றால்,, இவ்வளவுக்கு நெடுந்தீவில் வாழ்ந்த அனுபவங்கள் இருந்தும்...செங்கை ஆழியானின் வாடைக்காற்றை வாசித்த பின்னர் தான் நெடுந்தீவின் உண்மையான பரிமாணம் எனக்குத் தெரிந்தது!

அவருடன் இந்தக் கற்றுக்குட்டியை கொண்டு போய்..ஒப்பிட்டதைத் தான் அபச்சாரம் என்று குருப்பிட்டேன்!

நிச்சயமாகத் தொடர்ந்து எழுதுவேன்! எனக்கும் அனுராதபுரத்தின் புனித நகர்ப்பகுதியில் நடந்து திரிவது பிடிக்கும்! குறிப்பாக எல்லாளனின் நினைவுத்தூபி உள்ள இடத்துக்கு வரும் போது நினைவுகள் பின்னோக்கிச் செல்லும்! துட்ட காமினியின் தாயான விகாரமாதேவிக்கு எல்லாளன் மீது காதல் ஏற்பட்டதாகவும் எல்லாளன் அதை நிராகரித்த படியால் தான்... துட்டகாமினியை தமிழர்கலில் வெறுப்பு ஏற்படும் படி அவள் வளர்த்தெடுத்தாள் என்றும் ஒரு கதை உண்டு! இதை எனக்குச் சொன்னவர் ஒரு புத்த பிக்கு! எல்லாளன் விகாரமாதேவியை மணந்திருந்தால்... இலங்கையின் சரித்திரமே மாறிப்போயிருக்கும்!

அதிகமாக அலம்புகிறேன் போல உள்ளது...நன்றி!

On 3/30/2016 at 9:54 PM, putthan said:

 

 

புங்கை கலக்கிட்டீங்கள்.....அந்தமாதிரி ஒரு சிறுகதை.....

வணக்கம் புத்தன்! பணம் தான் ஜெயனுதீன் மாஸ்ரரின் மனமாற்றத்துக்குக் காரணம் என்பதை... இந்தக் கதையில் தெளிவாக வெளிக்காட்ட இயலவில்லை! பின்னால்..கிருபனும் பகலவனும் கூட இந்தச் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்! அவர்களுக்குப் பதிலிடும் போது கொஞ்சம் விளக்கமாக விபரிக்கிறேன்!

வரவுக்கு நன்றி புத்தன்!

Link to comment
Share on other sites

மிக அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். 

ஒரே ஒரு ஆதங்கம். கதையின் 80 வீதம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மனதில் பதிந்திருந்ததை சுதந்திரமாக அவிழ்த்து விட்டபடி வந்தவர், திடீரென்று ஏதோ ஒரு பெட்டகத்திற்குள் வலுக்கட்டாயமாகப் புகுந்து 'உள்ளேன் ஐயா' என்பதாகக் கட்டுப்பட்டது கதையின் வீரியத்தைக் குறைத்ததாகப் படுகிறது. 

'கும்பாவிடம் விடைபெற்றுத்திரும்புகையில்...' என்றாரம்பிக்கும் இடத்தில் இருந்து கதையின் இறுதிவரை உள்ளபகுதியை அழித்துவிட்டு, மீண்டும் கதையைத் எழுதத் தொடங்கிய மனநிலைக்கு மீண்டு ஒரு முடிவை நீங்கள் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. வாசகர்கள் செல்லாத ஒரு இடத்தை வாசகர்களிற்குப் பரிட்சயப்படுத்துவதற்காக மிக நிதானமாக நீங்கள் ஆரம்ப காட்சிகளை நகர்த்தியமை தவிர்க்க முடியாதது தான். எனினும் உங்களின் ஆழுமையான எழுத்தால் வாசகர்களை அந்தக் களத்திற்கு இட்டுச் சென்று விட்டீர்கள். எனவே முடிவு இனி இந்தக் காட்சிகள் உங்களிற்குள் பதிந்திருந்து உங்களிற்குள் கிழப்பும் பிரளயத்தை, தாண்டவத்தை கட்டின்றி, வாசகரை மறந்து உங்களிற்காக மட்டும் கட்டற்ற பிரவாகமாக நீங்கள் இறுதிப் பந்திகளில் மீள எழுதவேண்டும். வட்டிலாப்பத்தைக், காதலை, தென்னையில் ஒட்டியிருந்த தாவரத்தை, அதற்குள் ஒளித்திருந்த வண்டுகளைக், கழுதையினை, கடலை, கடலிற்குள் கும்பானை, கட்டுமரத்தை, மாசிக்கருவாடு நாக்கைத் தொடும் தருணத்தை, மாசிக்கருவாடூடான உருவகத்தால் ஜெயனுதீன் சார்ந்த இழமையின் அனைத்துக் கிளர்க்சிகளையுமாக பிரளயமாய்க் கொட்டித்தீர்த்து, அந்தச் சுழற்சியில் வாசகரைச் சிக்கிச் சின்னாபின்னமாகச் செய்து தனது இழமையினைப் பதிந்து விட்டு வாசுகி நோர்வே மீண்டால் போதும். முடிவென்று எதனையும் வலுக்கட்டாயமாகக் காட்டவேண்டியமை தேவையே இல்லை என்பது தாழ்மையான கருத்து.

எழுதுங்கள்....நிச்சயம் இன்னமும் பலபடி அருமையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாந்தரைகள் கருவுள்ள காத்திரமான கதை.

On 30.3.2016 at 0:54 PM, putthan said:

புங்கை கலக்கிட்டீங்கள்.....அந்தமாதிரி ஒரு சிறுகதை.....

ஒரு எழுத்தாளனை பார்த்து இன்னொரு எழுத்தாளன் சொல்லுற கருத்தே உது? ஒரு இரண்டு பந்தி எழுதி விளாசித்தள்ளிருக்க வேண்டாம்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2016 at 10:11 PM, Surveyor said:

புங்கை அண்ணை, விடியக்காலத்தால எல்லாப்பச்சையையும் முடித்து விட்டேன். மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். இரண்டு தேரை அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள். அதே சமயம் ஒரு தேரர்ரயும் வறுத்து எடுத்துவிட்டீர்கள். 

வரவிற்கும் கருத்துக்கும் நன்றி, சேர்வயர்!

தேரர் தானாக வந்து தாச்சிக்குள் விழுந்து போனார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2016 at 10:14 PM, கிருபன் said:

தெரியாத இடங்களையெல்லாம் நேரே பார்த்தமாதிரி கதையில் விபரிப்பு இருந்தது. ஆனால் மாஸ்ரர் பணத்திற்காக மார்க்கத்தை தளர்த்தியதற்கான காரணம் கதையில் தெளிவாக வரவில்லை. அனுபவங்கள் கூட உலகத்தின் மீதான பார்வையும் விசாலமாகலாம் அல்லவா. முந்தைய சிந்தனைகள் காலாவாதியாகவும் கூடும்!

 

On 3/30/2016 at 10:33 PM, பகலவன் said:

இதற்கான அர்த்தம் புதைந்த காதல் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறது என்று எடுத்து கொள்ளலாம் தானே, காலமும் அனுபவமும் பக்குவமும்  சில தடைகளை அகற்றி இருக்கின்றன என்றும் எடுக்கலாம் இல்லையா.

 

புதைக்கப்பட்ட நண்டு கோதுகள் - மறைந்த காதல்

பளபளத்தது - துளிர் விட்டது

காற்று - காலம் + அனுபவம் + பக்குவம் 

மணல் - தடைகள்/திரைகள்/மார்க்கம் 

புங்கை அண்ணா , 

மாஸ்ரர் அவள் நினைவாக நிக்காஜ் செய்யாமல் இருந்தது கூட அவளது காதல் காரணமாக இருக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன அல்லவா.?

அவளது திருமண நிலை தெரியாத மாஸ்ரரினால் அவளது பொருளாதார நிலைமையை எப்படி தெரிந்திருக்க முடியும்.

கிருபனின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.

 

கிருபனுக்கும், பகலவனுக்கும் நன்றிகளும், வணக்கங்களும்!

உங்கள் இருவரதும் வாதங்களும் நியாயமானதே எனினும், கனம் கோட்டார் அவர்கள் எனது பக்கத்து நியாயங்களையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்!

முதலாவது..இந்தக் கதையை யாழ் மகளின் பதினெட்டாவது பிறந்த தினத்தில் வெளியிட வேண்டிய அவசரத்தின் எழுதி முடிக்க வேண்டியிருந்தது! வழக்கமாக சுமே போன்றவர்கள் பலர் கவிதை எழுதி வாழ்த்துவார்கள்! இந்த முறை எல்லாரும் தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டிருந்தது ஒரு மாதிரி இருந்தது! அதனால் அவசரப்பட்டுக் கதையை முடிக்க வேண்டி இருந்தது!

இரண்டாவதாக வாசுகியும் ஒரு சாதாரணப் பெண் தான் என்பதை நான் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்! தனது காதல் நிராகரிக்கப் பட்டதை எல்லாப் பெண்களையும் போல அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! புலத்து வாழ்க்கையில் காதல் மட்டுமல்ல அவளது சொந்தங்களும் கூடத் தொலைந்து போயிருந்தன! அதையும் தெளிவாகக் காட்டத் தவறி விட்டேன்! எனினும் அவளுக்குள் ஒரு நப்பாசை அவள் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது! அதற்காகத் தான் அவள் கற்பிட்டிக்கு வந்தாள்!

எனினும் முருங்கை மரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த நண்டுக் கோதுகள்..அங்கே 'மார்க்கம்' புதைக்கப்பட்டிருந்ததை அவளுக்குக் கூறிக்கொண்டிருந்தன! அதை விளக்கத் தவறியது எனது தவறு தான்!

மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரு முஸ்லிம்..நண்டு சாப்பிடுவதை 'ஹலால்' என்று ஏற்றுக்கொள்வதில்லை!

அந்த நண்டுக் கோதுகளைக் கண்ட பின்னரே..மார்க்கம் என்பது மாஸ்ரர்  கூறிய வெறும் சாட்டுத் தான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்! அதனால் தான் மாஸ்ரரின் மன மாற்றம் வெறும் பணத்துக்காகவே என்ற முடிவுக்கு அவளால் தீர்க்கமாக வர முடிந்தது!

ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க...

http://www.islamic-laws.com/halalharamfooddrinks.htm

Link to comment
Share on other sites

நன்றி புங்கை அண்ணா உங்கள் விளக்கத்துக்கு. நீங்கள் இன்னும் சில படிகள்  மேலே இருக்கிறீர்கள். உங்களை விளங்கி கொள்ளவே இன்னும் சில கதைகள் தேவைபடலாம்.

எனவே தொடர்ந்து எழுதி உங்களை எங்களுக்கு புரியவையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை நன்றக நாகர்த்தியுள்ளீர்கள் புங்கை, கண் முன்னே காட்சிகள் விரிகின்றது

18 hours ago, பகலவன் said:

நன்றி புங்கை அண்ணா உங்கள் விளக்கத்துக்கு. நீங்கள் இன்னும் சில படிகள்  மேலே இருக்கிறீர்கள். உங்களை விளங்கி கொள்ளவே இன்னும் சில கதைகள் தேவைபடலாம்.

எனவே தொடர்ந்து எழுதி உங்களை எங்களுக்கு புரியவையுங்கள்.

நீங்களும்தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.