Jump to content

யாழ்ப்பாணமும் கூகிள் செய்மதியும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

j-1.jpg

விடியக்காலமையும் அதுவுமாய்...காகமொன்று மாறி மாறிக் கத்திக்கொண்டிருந்தது!

சனிக்கிழமையாவது கொஞ்சம் கண்ணயருவம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச காகம் விடுகுதில்லை என்று அலுத்துக் கொண்டார் அம்பலவாணர்! சனிக்கிழமை ஓய்வெடுக்கிற அளவுக்கு அம்பலத்தார் ஒண்டும் பெரிசா வெட்டிப் புடுங்கிறதில்லை எண்டாலும் மகளின்ர மூண்டு  பேரப்பெடியளும் அவரைப் போட்டுப் படுத்திற பாடு கொஞ்ச நஞ்சமில்லை! இண்டைக்கு மகள் லீவில நிப்பாள்! அதால அவருக்குக் கொஞ்சம்ஓய்வு கிடைக்கிற நாள் தான் இந்தச் சனிக்கிழமை! அம்பலத்தாரின்ர மனுசியும் மற்ற மகளின்ர பிள்ளைப்பெறு பாக்கவெண்டு அவுஸ்திரேலியாவுக்குப் போனது… போனது தான்! மருமகன் வலு கெட்டிக்காரன்! என்னவோ பூந்து விளையாடி மனுசியை டெம்பறரி  விசாவில அங்க நிக்க வைச்சிட்டான்! அம்பலத்தார் தான் தனிச்சுப் போனார்! ஆணாய்ப் பிறந்தால்.. இந்தப் பிள்ளைப் பேறு பாக்கிறதெண்டு சொல்லி விசா எடுத்துப் போகேலாது எண்டு தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டார்! எல்லா விசயத்திலும் ஈக்குவாலிட்டி பாக்கிற வெள்ளைக்காரன் இந்த விசயத்தில மட்டும் அசைய மாட்டதெண்டிறான் எண்டு நினைத்துக் கொண்டார்!

சரளமாக நகர்ந்து கொண்டிருந்த நினைவோட்டத்தைக் காகத்தின் சத்தம் மீண்டும் குழப்பியது! காகமும் வேண்டுமென்றே செய்வது போல… திறந்திருந்த ஜன்னல் அருகில் இருந்த வேலியிலிருந்து கத்தியது!

முருகா...இண்டைக்கு என்னவோ ஒரு அசமந்தம் நடக்கப்போகுது என்று நினைத்தவராக நல்லூர் முருகனை உதவிக்குக் கூப்பிட்டார்!

நல்லூர் மணி அடிக்கிற சத்தம் கேட்கத் தொடங்க...அவரது ரெலிபோன் மணியும் கிணுகிணுத்தது! முருகா...முருகா..என்ற படி  போனை எடுத்து ‘ஹலோ ஆர் பேசுறது?’ என்றார்!

அண்ணை சுகமாய் இருக்கிறீங்களே…? அவரது தங்கச்சி தான் லண்டனிலிருந்து அழைத்திருந்தாள்! கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவராக ...சுகத்திற்கு என்ன குறைச்சல்...நீ எப்படி என்று கேட்டார்! அண்ணை, நேரடியாக விசயத்துக்கு வாறன் அண்ணை! இப்ப எங்கட வளவையும் வீட்டையும் வானத்திலையிருந்து பாக்கிற மாதிரிப் பார்க்கலாம் அண்ணை! இண்டைக்குப் பார்த்தன்...வலு சந்தோசமாயிருக்கு!

சரி...சரி ...இப்ப சண்டையில்லாத படியால வடிவாத் தானே இருக்கும்! வேற மச்சான் எப்படி இருக்கிறார்? மருமக்கள்…. அம்பலத்தார் தொடர்ந்தார்!

அவர் தான் இப்ப எடுக்கச் சொன்னவர்! அவரும் வீட்டைப் பாத்தவர்! குண்டு விழுந்த வீடு மாதிரியே தெரியேல்லை! தென்னை மரங்களும் கொஞ்சம் உயர்ந்து போனாலும் கொத்துக் கொத்தாய் காய்ச்சிருக்கிறதைப் பாக்க ஆசையைக் கிடக்குது எண்டு சொல்லுறார்!

அது சரி… பெடியள் .. வீட்டுச் சொந்தக்காரர் வெளிநாட்டிலை எண்டு சொல்லி...வீட்டைத் தங்கட தேவைக்கு வேணுமெண்டு கேக்க/….நான் தானே எல்லா இடமும் திரிஞ்சு.. கடைசியாய்ப் பெரியவினின்ர மாமாவைப் பிடிச்சு ஒரு மாதிரி வீட்டை மீட்டனான்! உனக்கு நினைவிருக்கே தங்கச்சி!

ஓமண்ணை..நான் அதை எல்லாம் மறப்பனே …!

நீ மறக்க மாட்டாய் தானே தங்கச்சி… கூடப் பிறந்தனி எல்லே..! அதோட இந்த வீட்டைச் சீதனமாய் உனக்குத் தர முந்தி..இதைக் கட்ட எவ்வளவு காசை நான் கொட்டியிருப்பன் தங்கச்சி..!

உண்மை தானண்ணை! இண்டைக்கு இந்த வீட்டைக் கூகிள்ல பாத்த மனுசன் ..என்னப்பா.. எங்களுக்கும் வயது போகுது..பிள்ளையளும் வளந்திட்டுது தானே.. ஊரில இப்ப பிரச்சனைகள் இல்லாத படியால்.. ஓய்வெடுத்த பிறகு ஊரில போய் இருப்பமா எண்டு கேட்டிது !

சரி..சரி … வாங்கோவன் உங்கட வீடு தானே.. கொஞ்ச நாளைக்கு  வந்து நின்டிட்டுப் போறதில எங்களுக்குச் சந்தோசம் தானே!

கொஞ்ச நாளில்லை அண்ணை… இஞ்ச குளிருக்கை வயசு போகப் போக நிண்டு பிடிக்கேலாது போல கிடக்கண்ணை! அது தான் அங்க வந்து நிரந்தரமாய் இருக்கலாம் எண்டு யோசிக்கிறம்!

நீ தானே தங்கச்சி...சொன்னனி…! நாங்கள் எங்கை இனி அந்தப பக்கம் வரப்போறம்… பிள்ளையள் எல்லாம் இங்கத்தைப் பழக்க வழக்கத்தில வளந்ததுகள்.. அங்க வந்து இருக்க மாட்டுதுகள்..நீங்கள் தானே வீட்டை இவ்வளவு காலமும் பாத்தனீங்கள்..அப்படியே அங்கயே இருந்து உங்களுக்குப் பிறகு ..உங்கட மகளுக்கு எங்கட அன்பளிப்பாய் குடுத்து விடுங்கோ எண்டு சொன்னனீ...மறந்திட்டியா?

அமபல்த்தார் அழுது விடுவார் போல இருந்தார்!

உண்மை தான் அண்ணை… இப்ப நிலவரம் கொஞ்சம் மாறிப் போச்சு… அது தான்….!

சரி… சரி… பிறகு எடுக்கிறன்   என்று கூறிப் போனைத் துண்டித்து விட்டாள்  தங்கச்சி…!

இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.. அம்பலத்தார்!

இதுக்குத் தான் அந்தக் கண்டறியாத காகம் காதுக்குள்ளை வந்து கத்தினதாக்கும் என்று நினைத்த படி…. முருகா என்றார்!

இவள் சொன்னதை நம்பிக் கையில இருந்த காசையும் போட்டு...சுத்து மதில் எல்லாம் கட்டி… தென்னம் பிள்ளையளையும் வச்சு வளர்த்து விட்டது பிழையாய்ப் போச்சுது.. என்று தன்னைத் தானே நொந்து கொண்டார்!

சரி… கோயிலுக்காவது போயிற்று வருவம் எண்டு நினைச்சப் படி...மகளை எழுப்பாமல்.. ஒரு காக்காக் குளியலுடன்..நாலு முழமொன்றைச் சுத்தியபடி,,சைக்கிளில் ஏறிக் கோவிலை நோக்கி உழக்கினார்!

விதானையாரும் கிட்டத் தட்ட என்ர நிலை தான்…! அவரிட்டை...ஏதும் வெளி நாட்டுக்காரர் திரும்பவும் வந்து வீட்டைத் திரும்பிக் கேட்கிறதைத் தடுக்க ...ஏதாவது வழியிருக்கா எண்டு கேட்க வேண்டும் என்று நினைத்தார்!

கொஞ்ச நேரத்திலேயே..தங்கச்சி அந்நியமாகிப் போனது அவருக்கே ஆச்சரியாக இருந்தது! அவையிட்ட என்ன காசா இல்லை...வேணுமெண்டால் ஒரு வீட்டை வாங்கிறது தானே.. என்றும் மறுத்தான் போடிற தனது மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டார்!

கோவில் வாசலிலேயே விதானையைக் கண்டதும்...முருகா...நீ கண் கண்ட தெய்வம் தானப்பா...என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்!

இவரைக் கண்டதும் விதானையாரும் இவரிடம் ஓடி வந்தார்!

அம்பலம்..ஒரு பிரச்சனை..என்றவர் ...ராத்திரி ஒரு போன் கோல் வந்தது! அது தான் கொஞ்சம் குழப்பமாய்க் கிடக்கு என்றவரின் முகம் பேயறைந்தவரின் முகம் போலக் காணப்பட்டது!

நானிருக்கிற வீட்டுக்காரன் என்னிட்டை வாடகை வாங்கிறதில்லை எண்டு தெரியும் தானே! நல்ல மனுசன்! போன வருசம் கிணத்தையும் வடிவாய்க் கட்டித் தண்ணித் தாங்கியையும்  கட்டச்சொல்லி இரண்டு லட்சம் ரூபா அனுப்பியிருந்தவன் ! நானும் என்ர பெடிச்சியைக் கலியாணம் கட்டி வெளியால அனுப்பினனான் எல்லோ .! போய்ச் சேர்ந்த உடனை ..அவரிட்டைச் சொல்லி அனுப்பி விடுகிறன் எண்டு சொன்னவள்.. போன போக்குத் தான்.! ஒண்டையும் காணேல்லை! நான் எப்படிப் போய் மருமகனிட்டைக் காசை அனுப்பச் சொல்லிக் கேக்கிறது..அனுப்பிற நேரம் அனுப்பட்டும் எண்டு விட்டிட்டன்!

சரி ...அதுக்கு இப்ப என்ன..விதானை?

பிரச்சனை என்னவெண்டால்.. பெடியன் காசை அனுப்ப.. கிணத்தையும் ..ராங்கையும் கொஞ்ச நாளால கட்டுவம் எண்டு.. வீட்டுக்காரன் அனுப்பின காசில கையை வச்சிட்டன்!

வீட்டுக்காரன் இப்ப.. கூகிளிலை வீட்டைப் பாத்திட்டு… என்ன விதானை கட்டின கிணத்தையும்,,, ராங்கையும் காணேல்லை.. ஒரு வேளை மரங்கள் மறைக்குதோ...எண்டு கேக்கிறான்!

படிச்ச பெடியன் எல்லோ...கொஞ்சம் கௌரவமாய்க் கேட்கிறான் போல கிடக்கு!

எனக்கெண்டால் பகிடியும் விளங்கேல்லை….வெற்றியும் விளங்கேல்லை  என்று கூறியபடி...நீ என்னவோ கேக்க வேணுமெண்ட மாதிரிக் கிடந்தது..என்ன பிரச்சனை என்று  கேட்டார் விதானையார்!

அது கிடக்கட்டும்… கூகிள் பிரச்சனை தான் எனக்கும் என்ற படி… முருகா என்று கோவில் மூலஸ்தானத்தை நோக்கித் திரும்பினார்..அம்பலத்தார்!

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள்லில பார்த்துக் கதைவழிப் படுவினம் என்று காகத்துக்கு எப்படித் தெரிந்தது. நம்ம காகங்கள் இப்பவும் தமது வயர்லெஸ் பவரை தக்க வைச்சுக் கொண்டிருக்கு...! ம்... காகமா ,கொக்கா...!!

விதானைமார்தான் இன்னும் மாறவேயில்லை....!  tw_blush:

கதைக்கு நன்றி புங்கை...! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புங்கையூரன் said:

உண்மை தானண்ணை! இண்டைக்கு இந்த வீட்டைக் கூகிள்ல பாத்த மனுசன் ..என்னப்பா.. எங்களுக்கும் வயது போகுது..பிள்ளையளும் வளந்திட்டுது தானே.. ஊரில இப்ப பிரச்சனைகள் இல்லாத படியால்.. ஓய்வெடுத்த பிறகு ஊரில போய் இருப்பமா எண்டு கேட்டிது !

கொஞ்ச நாளில்லை அண்ணை… இஞ்ச குளிருக்கை வயசு போகப் போக நிண்டு பிடிக்கேலாது போல கிடக்கண்ணை! அது தான் அங்க வந்து நிரந்தரமாய் இருக்கலாம் எண்டு யோசிக்கிறம்!

உது இப்ப லண்டனில..  ஊரைவிட்டு போரைச் சாட்டி ஓடியாந்து.. அசைலம் அடிச்சு சிற்றிசன் சிப்பும் வைச்சிருக்கிறவை.. அவையை கலியாணம் முடிச்சு வந்தவையிட...  நவீன உளறல்களில்.. முதன்மையானது.

தமிழன் சமூகம் திருந்தாது.... ஆனால் எந்த சூழலிலும்.. தக்கன.. பிழைச்சுக்கும்.tw_blush:

கதை அல்ல.. காதுக்கெட்டியவரை இது நிஜம். பகிர்விற்கு நன்றி... புங்கை அண்ணா. உங்கட ஆக்கம் என்றால் வாழ்த்துக்கள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்காரர் கன பேர் இப்பிடி ஊரோட வரப்போறம் என்று  சொல்லி, வீட்டை, அங்க இருந்து பார்த்து, காபந்து பண்ணிண சொந்தக்கார இன சனங்களை கிளப்பி, காதும், காதும் வைச்சமாதிரி, வித்துப் போட்டு, விசா அலுவலா கொழும்பு போட்டோடி வாறம் என்று காசோட பறந்திடுகினம்.

தேசவழமை சட்டப்படி, முதலில் வாங்கக் கூடிய நிலையில் உள்ள உறவினருக்கு தான், முதலில் வாங்கும் உரிமை உள்ளது என்பதனையும், அவர்கள் தம்மால் வாங்க வசதி இல்லை என்று தெரிவித்தால் மட்டுமே, வெளியாருக்கு விக்க முடியும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

இல்லாவிடில் விற்பனை, ரத்தாகும். வாங்கியவர், காசு கேட்டு, போனைப் போடுவார். அலுப்பு.

வழக்கு வம்பு என்று உறவினர்கள் போகாவிடில் அல்லது அவர்களுக்கு கொஞ்சம் காசைக் காட்டினால், ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் புங்கையூரான். நல்லநகைச்சுவையாக ஆனால் உண்மையை எழுதியுள்ளீர்கள். 

கடந்தவாரம் எனது மனைவிக்கு விடயத்தைக் காட்டினேன். அப்போது அவ சொன்ன விடயம் இனிநம்பிப் பணமனுப்பலாம் ஏனென்றால் பேக்காட்டேலாது என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

நம்பலாமா தாத்தா நெறைய பூமிக்கு உறுதி போட்ட ஆட்கள் பழைய ஆட்கள் ??

கதை ம் நிஜத்தை கொண்டு வந்து சென்று விட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

-----

பிரச்சனை என்னவெண்டால்.. பெடியன் காசை அனுப்ப.. கிணத்தையும் ..ராங்கையும் கொஞ்ச நாளால கட்டுவம் எண்டு.. வீட்டுக்காரன் அனுப்பின காசில கையை வச்சிட்டன்!

வீட்டுக்காரன் இப்ப.. கூகிளிலை வீட்டைப் பாத்திட்டு… என்ன விதானை கட்டின கிணத்தையும்,,, ராங்கையும் காணேல்லை.. ஒரு வேளை மரங்கள் மறைக்குதோ...எண்டு கேக்கிறான்!

படிச்ச பெடியன் எல்லோ...கொஞ்சம் கௌரவமாய்க் கேட்கிறான் போல கிடக்கு!

------

நகைச்சுவை கலந்த, உண்மைக் கதை என்றாலும், போரின் போது... அந்தச் சொத்துக்களை பாதுகாத்தவர்களின் நிலைமை சோகமானது. அழகாக கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை  புங்கை.

15 hours ago, suvy said:

கூகிள்லில பார்த்துக் கதைவழிப் படுவினம் என்று காகத்துக்கு எப்படித் தெரிந்தது. நம்ம காகங்கள் இப்பவும் தமது வயர்லெஸ் பவரை தக்க வைச்சுக் கொண்டிருக்கு...! ம்... காகமா ,கொக்கா...!!

விதானைமார்தான் இன்னும் மாறவேயில்லை....!  tw_blush:

கதைக்கு நன்றி புங்கை...! 

காகம் கத்துவதை வைத்தே.... முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் ஆக்கள் எல்லோ நாங்கள். Bild in Originalgröße anzeigentw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

குசா வெளிநாட்டு சிற்றிசன் எடுக்க முதல் நீங்கள் வாங்கியிருந்தால் / உங்களது பெயருக்கு உறுதி எழுதப்பட்டிருந்தால் பிரச்சனை இல்லை. ( உபயம் - சும்) 

 

Link to comment
Share on other sites

புங்கை அண்ணா,

 

தொழிநுட்பத்தை, எங்கள் சமுதாயம் பயன்படுத்தும் முறையை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் அண்ணா. இந்த கதைக்குள் இரண்டு கதை இருக்கிறது. ஒன்று அம்பலவாணர் ஐயாவுடையது, மற்றையது விதானையாருடையது. இரண்டுக்கும் காரணம் ஒன்று தான்.  

இது இன்று அங்கு உருவாகி வரும் சமூக பிரச்சனையின் இரு வேறு முகங்கள். ஒன்றில்  ஏமாற்றப்பட்டவர் தாயகத்திலும் , மற்றதில் புலம்பெயர் தேசத்திலும் இருக்கிறார்கள். அங்கு தான் உங்கள் கதையின் நடுநிலைமை நிற்கிறது. ஆனால் "ஹேராம்" படம் போல 90 வீதமான கதை எதை சொல்லுதோ நாங்கள் அதை மட்டுமே உள்வாங்கி கொள்கிறோம். இதில் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர் மீது தான் எங்களுக்கு கோபம் வருகிறது, அது தான் இங்கு யதார்த்தமாகிறது.

மேலும் மேலும் நீங்கள் எழுத வேண்டும். உங்களுக்கு என்று ஒரு கதை சொல்லும் பாணியை வைத்திருக்கிறீங்கள். அதில் உங்கள் அனுபவம் 100 வீதம் இருக்கிறது . நாங்கள் பார்த்த இடத்தை கூட நீங்கள் வர்ணிக்கும் விதத்தில் தெரிகிறது நீங்கள் தாயகத்தை எவ்வளல்வு ஆத்மார்த்தமாக நேசிக்கிறீங்கள் என்பது. தாயகம் என்பது வெறும் மண் மட்டுமல்ல. அங்கு வாழும் குயில் கிளியில் இருந்து, தென்னை மரங்கள், கிளுவைகள், கிணத்தடி, "தாயக நிலவு" (நிலவு வெளிநாட்டில் இருந்தாலும்- எங்களூர் நிலவு ஒரு அழகு தான்) எல்லாமே சேர்ந்து தான் தாயகம். இது உங்கள் கதைகளில் "தெறி"க்கின்றன.   

உங்கள் எழுத்துகள் ஒரு நாள் எங்களை எல்லாம் "தாயகத்துக்கு புலம்பெயர" வைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குறிப்பு : இன்னும் கூகுள் வீதி பார்வை live ஆக விடவில்லை என்பது ஒரு ஆறுதல். ஆக குறைந்தது ஒரு வருடம் பின்னோக்கிய(பழைய) படங்களையே அது வெளியிட்டுள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பகலவன் said:

குறிப்பு : இன்னும் கூகுள் வீதி பார்வை live ஆக விடவில்லை என்பது ஒரு ஆறுதல். ஆக குறைந்தது ஒரு வருடம் பின்னோக்கிய(பழைய) படங்களையே அது வெளியிட்டுள்ளது. 

 

ஓம்........லைவ்விலை ஒண்டுமில்லை நல்ல காலம்.  அந்த வசதியுமிருந்திருந்தால் கிணறு,ராங்கியை கூகுள்ளை தேடின சனம்.........கிணத்தடியிலை இப்ப ஆர் குளிச்சுக்கொண்டு நிக்கினம் எண்டதையும் தேட வெளிக்கிடுவினம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர், 

பத்தாம் வட்டாரம் எல்லாம், கூகிள் கமரா சுழலுதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

புங்கையர், 

பத்தாம் வட்டாரம் எல்லாம், கூகிள் கமரா சுழலுதா?

யோவ்.... நாதமுனி,  வாயை.... வைச்சிட்டு சும்மாரும்யா....
வட்டாரக் கதை கிழப்பி, சிங்களவனை விட... தமிழனை பிரிக்கும் வேலை செய்யாதீர்.
நல்லவற்றை... நல்லவர்கள், அமைதியாக செய்து கொண்டு உள்ளார்கள்.  
(புங்குடு தீவு மக்கள்..... ஏன்? வட்டாரத்தில் பிரிந்து நிற்கிறார்கள், அது... புலம் பெயர் நாட்டிலும் தொடர்வது ஏன்? எனற ஆதங்கத்தில் எழுந்த கேள்வி.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

யோவ்.... நாதமுனி,  வாயை.... வைச்சிட்டு சும்மாரும்யா....
வட்டாரக் கதை கிழப்பி, சிங்களவனை விட... தமிழனை பிரிக்கும் வேலை செய்யாதீர்.
நல்லவற்றை... நல்லவர்கள், அமைதியாக செய்து கொண்டு உள்ளார்கள்.  
(புங்குடு தீவு மக்கள்..... ஏன்? வட்டாரத்தில் பிரிந்து நிற்கிறார்கள், அது... புலம் பெயர் நாட்டிலும் தொடர்வது ஏன்? எனற ஆதங்கத்தில் எழுந்த கேள்வி.)

ஒய் சிறியர்,

உது, நானும் புங்கையரும் வேற ஒரு திரியில தொடங்கி, இங்கின இழுக்கிற பகிடி...

ஐயோ, ஐயோ... பதற வேண்டாம் ஐயா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

ஒய் சிறியர்,

உது, நானும் புங்கையரும் வேற ஒரு திரியில தொடங்கி, இங்கின இழுக்கிற பகிடி...

ஐயோ, ஐயோ... பதற வேண்டாம் ஐயா. :grin:

மிகவும் வருத்தமாக இருக்குது, நாதமுனி. 
எல்லோரும், பயங்கர.... திறமை சாலிகள். 14.gif
விசுகருடன், அண்மையில் சந்தித்த போதும்.... 
எல்லோரிடனும் அந்த, ஏக்கம் இருந்தது. Smileys

இவங்கள்... கதிர்காமக் கந்தனுக்கு,  கோவணம்  கட்டி விட்டதை... 
அந்த, முருகன்... இன்னும் மறக்கவில்லைப் போல் உள்ளது. lol26.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஓம்........லைவ்விலை ஒண்டுமில்லை நல்ல காலம்.  அந்த வசதியுமிருந்திருந்தால் கிணறு,ராங்கியை கூகுள்ளை தேடின சனம்.........கிணத்தடியிலை இப்ப ஆர் குளிச்சுக்கொண்டு நிக்கினம் எண்டதையும் தேட வெளிக்கிடுவினம்.:cool:

'மாமியார் தலையில கையும், கூகிள் காமராவில கண்ணும்' எண்டு பிறகு பழமொழியும் மாறும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை புங்கையரின் கதையை விட மக்காள் எல்லாருக்குரும் கூகிள் வீதி பார்வை படம் தான் பிரச்சனை போல் தொியுது. :)அது நல்லாத்தானே இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை புங்கையரின் கதையை விட மக்காள் எல்லாருக்குரும் கூகிள் வீதி பார்வை படம் தான் பிரச்சனை போல் தொியுது. :)அது நல்லாத்தானே இருக்குது.

சத்தியமாய்.... இன்னும், யாழ் கூகிள் படத்தை இன்னும் பார்க்க... மனதில் தெம்பு வரவில்லை. 
பழைய நினைவுகளுடன்.... வாழ்க்கையை நகர்த்துவது, நல்லது என்றே கருதுகின்றேன். 11.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர் என்னோட பிரச்சனையை உங்களுக்கு சொல்லாமலேயே எப்படி உங்களால் முடிந்தது என்று எண்ணி தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

குசா வெளிநாட்டு சிற்றிசன் எடுக்க முதல் நீங்கள் வாங்கியிருந்தால் / உங்களது பெயருக்கு உறுதி எழுதப்பட்டிருந்தால் பிரச்சனை இல்லை. ( உபயம் - சும்) 

 

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை, விசாரித்து சொல்கிறேன்.

7 minutes ago, குமாரசாமி said:

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,நீங்கள் ஊரில போய் இருக்கப் போறீங்களா?...இல்லையென்டால் அங்கே இல்லாத ஆட்களுக்கு எழுதிக் கொடுக்கலாம் தானே!.இந்த தங்கச்சியையும் மனசில வையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

 

10 hours ago, ரதி said:

அண்ணா,நீங்கள் ஊரில போய் இருக்கப் போறீங்களா?...இல்லையென்டால் அங்கே இல்லாத ஆட்களுக்கு எழுதிக் கொடுக்கலாம் தானே!.இந்த தங்கச்சியையும் மனசில வையுங்கோ

பாதை இல்லாத காணிகள் இருந்தால் எழுதிக் குடுங்கோ, தங்கச்சி ஹெலில போய் இறங்கட்டும்.  வழக்குச் சிலவும் தலை இடியும் குறையும்....!  tw_blush:

எங்களிடம் அப்படி ஒரு  காணி இருந்து அறாவிலைக்கு முன் வீட்டுக் காறனுக்கே குடுக்க வேண்டியதாப் போட்டுது....!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் இந்த கோவில்காரனையும் ஒருக்கா பாருங்கோ.....உங்களது கதையை முதலே படித்துவிட்டேன் இன்றுதான் இந்த செல்பியை கண்டுபிடித்தேன்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நடைமுறை யதார்த்தத்தைச் சொல்கின்றது. 

பகலவன் சொன்னமாதிரி கூகிள் ஒரு வருடத்திற்கு முந்தைய பாதைப் படத்தைத்தான் காட்டுகின்றது. ஊரில் முன்னர் போய் வந்த ஒழுங்கைகளையெல்லாம் கூகிள் உதவியோடு நானும் போய்வந்தேன். இனி ஊருக்குப் போய்த்தான் பார்க்க என்ன இருக்கின்றது!

இதுதான் ஒழுங்கையெல்லாம் போயிருக்கின்றது!

Google%25252520Amazonia%252525201%252525

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.