Jump to content

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தொடர்பாக…


Recommended Posts

Charuonline

பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை.  காரணம், நமக்கு ஹலோ சொல்வதற்குக் கூட தகுதி இல்லாத மொண்ணைகளோடு நாம் சரிக்கு சரியாக விவாதிப்பது பன்றிகளோடு மல்யுத்தம் செய்வதற்குச் சமம்.  இருந்தாலும் கலந்து கொள்வதற்குக் காரணம், நம்முடைய கருத்து லட்சக் கணக்கான பேரைச் சென்றடைய ஒரு வாய்ப்பு இருக்கிறதே என்பதுதான்.  புகழ் ஆசை கிடையாது.  எனக்குப் புகழ் பிடிக்காது.  புகழால் ஒரு காப்பி கூட இலவசமாகக் கிடைக்காது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாததன் இன்னொரு முக்கிய காரணம், ஐந்து மணி நேரம் வெட்டியாகப் போய் விடும்.  அந்த ஐந்து மணி நேரத்தில் எவ்வளவோ படிக்கலாம்; எழுதலாம்.  நேற்று நியூஸ் 7 சேனலில் ஜக்கி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்த போது சம்மதம் தெரிவித்தேன்.  நிகழ்ச்சி இரவு 9 முதல் 10 வரை.  என் வீடு மைலாப்பூரில் இருக்கிறது.  நியூஸ் 7 சேனல் ஜெமினி மேம்பாலத்தைத் தாண்டியவுடன் வருகிறது.  இங்கிருந்து செல்ல அதிக பட்சம் 15 நிமிடம் ஆகும்.  டிரைவர் ஆறரை மணிக்கு வந்தார்.  நிகழ்ச்சிக்கு எட்டே முக்கால் மணிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தேன்.  எட்டேகாலுக்குக் கிளம்பினால் சாலை நெருக்கடி இருந்தாலும் கூட எட்டே முக்காலுக்குப் போய் விடலாம்.  ஆனால் டிரைவர் ஆறரைக்கே வந்து விட்டதால் எட்டு மணிக்குக் கிளம்பலாம்; நீங்கள் போய் காப்பி கீப்பி சாப்பிட்டு விட்டு வாருங்கள் என்றேன்.  இல்லை சார், ஏழரைக்குக் கிளம்பலாம் என்றார் டிரைவர்.  சரி, ஏழே முக்காலுக்குக் கிளம்பலாம் என்றேன்.

ஏழே முக்காலுக்குக் கிளம்பினேன்.  சரியாக நியூஸ் 7 அலுவலகத்தில் நுழைந்த போது எட்டு மணி.  டிரைவரிடம் பொறுமையாக என் அதிருப்தியை வெளிப்படுத்தினேன்.  டிரைவர் என்றால் சாலையில் காரை செலுத்துவது மட்டுமல்ல.  கொஞ்சம் புத்தியையும் பயன்படுத்த வேண்டும் என்றேன்.  நான் திரும்பத் திரும்பச் சொல்லியும் என்னை இப்படி எட்டு மணிக்கே ஏன் இழுத்துக் கொண்டு வந்தீர்கள்?  இனிமேல் பக்கத்தில் இருப்பவர்களிடம் இப்படிச் செய்யாதீர்கள் என்றேன்.  அவருக்கு நான் சொல்வது புரிந்தே இருக்காது.  தப்பு என் மீது.

நேற்று நான் ஒரு முக்கியமான கட்டுரையை எழுதி முடிக்க வேண்டியிருந்தது.  ஆனால் எட்டு மணியிலிருந்து ஒன்பது வரை நியூஸ் 7 சேனல் அறையில் தேமே என்று மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.  வீட்டுக்கு வந்த போது பத்தேகால்.  எழுதி முடிக்க வேண்டிய கட்டுரையை எழுதி முடித்த போது இரவு பனிரண்டரை.  பத்தரைக்கு உறங்கச் சென்று அதிகாலை நான்கு மணிக்கு எழும் பழக்கமுள்ள நான் இன்று எழுந்து கொள்ளும் போதே ஏழரை.  காலை நேர நடைப் பயிற்சி கோய்ந்தா.  மாலையில் நடந்தால் ஆஞ்ஜைனா பிரச்சினை வரும்.  அதாவது, நெஞ்சு வலிக்கும்.

இவ்வளவுக்கும் ஒரு பைசா கிடையாது.  தொலைக்காட்சி சேனல்களிலேயே புதிய தலைமுறையில் மட்டும்தான் 1000 ரூ. கொடுப்பார்கள்.  மற்ற சேனல்களில் ஓசி பஜனைதான்.  சென்ற வாரமும் இப்படி ஒருநாள் கடும் வேலைப் பளுக்கு மத்தியில் தந்தி சேனலிலிருந்து அழைப்பு.  வருகிறேன், பணம் கொடுப்பீர்களா என்று கேட்டேன்.  பணம் கொடுக்கும் வழக்கம் இல்லையே சார் என்றார் அழைத்த பெண்.  அப்படியானால் வர இயலாது; எனக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது.  வந்தால் ஐந்து மணி நேரம் போய் விடும்.  தந்தி டிவி என் வீட்டிலிருந்து ரொம்ப தூரம் இருக்கிறது.  பணம் கொடுத்தால் யோசிக்கலாம் என்றேன்.  கேட்டு சொல்கிறேன் சார் என்றார்.  ஐந்து நிமிடத்தில் போன் வந்தது.  ”அடுத்த முறை தருவதாகச் சொல்கிறார்கள் சார்.”  இதுவே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்றால், சரி வருகிறேன் என்று சொல்லியிருப்பேன்.  தண்ணி அடிப்பதை நிறுத்தியதிலிருந்து புத்தி கூராகி விட்டது.  தந்திரம் சேர்ந்து விட்டது.  குயுக்தி புகுந்து விட்டது.  கொஞ்சம் கெட்டவனாகி விட்டது போல் உணர்கிறேன்.  தண்ணி அடித்துக் கொண்டிருந்த போது இது எதுவும் இல்லாமல் வெகுளியாக இருந்தேன்.  பரவாயில்லை; இதற்காகவெல்லாம் தண்ணி அடிக்க முடியாது.  காரியம் முக்கியம்.  வேலை முக்கியம்.  எக்கச்சக்கமான பணிகள் கிடக்கின்றன.  அந்தப் பெண்ணிடம் ”அப்படியானால் அடுத்த முறை வருகிறேன் மேடம்” என்று சொல்லி விட்டேன்.

இனிமேல் தந்தி டிவியிலிருந்து ஃபோன் வராது.

நியூஸ் 7 மற்றும் இன்னோரன்ன தொலைக்காட்சி சேனல் நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்.  இனிமேல் பணம் கொடுக்க முடியாது என்றால் என்னை அழைக்காதீர்கள்.  எங்கேயும் எனக்கு யாரும் எந்தப் பொருளும் ஓசியில் தர மறுக்கிறார்கள்.  எனவே நீங்களும் என் நேரத்தை ஓசியில் கேட்காதீர்கள்.  சினிமாக்காரர்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.  எழுத்தாளர்களுக்குக் கிடைப்பதோ பிச்சைக் காசு.  அந்தப் பிச்சைக் காசு கூட கட்டுரை வெளிவந்து மூன்று மாதம் கழித்தே வந்து சேர்கிறது.  தடம் இதழில் மனுஷ்ய புத்திரன் பற்றி கட்டுரை எழுதி இரண்டு மாதத்துக்கு மேல் ஆகிறது.  இன்னும் ஒரு பைசா வரவில்லை.  விகடனே நடத்தினாலும் இலக்கியப் பத்திரிகை ஆயிற்றே,  பணம் வராது என்றுதான் நினைக்கிறேன்.  வந்தாலும் 500 ரூபாய் வரும், இன்னும் ரெண்டு மாதம் கழித்து.  விகடன் நண்பர்கள் கோவிக்கக் கூடாது.  நீங்கள் மாதாமாதம் ஊதியம் பெற்றுக் கொண்டுதானே வேலை செய்கிறீர்கள்?  அப்புறம் ஏன் எழுத்தாளன் மட்டும் சோற்றுக்கு நக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

எனக்கு வீடு கட்டப் பணம் தேவையில்லை.  என் உழைப்புக்கு, என் நேரத்துக்கான குறைந்த பட்ச ஊதியம் கொடுங்கள் என்றே கேட்கிறேன்.  நேற்று மூன்று மணி நேரம் விரயம்.  இரவுச் சாப்பாடும் சாப்பிடவில்லை.  இதற்கெல்லாம் 5000 ரூபாய் கொடுக்க வேண்டாமா?  அஞ்சு ரூபா கூட கிடையாது.  தெரிந்து தானே போகிறாய் என்று நீங்கள் கேட்கலாம்.  இனி போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.   ப்ளாக்கி, ப்ரௌனி, வொய்ட்டி, டைகர் என்ற நான்கு தெரு நாய்களுக்கு தினந்தோறும் காலை மாலை இரண்டு வேளையும் உணவிடுகிறேன்.  இது தவிர முப்பது காகங்கள்.  மேலும், பப்பு, ஸோரோ.  இதெல்லாம் போக, இப்போது சிண்ட்டூ என்ற சின்னூண்டு பூனைக் குட்டியும் எங்கள் ஃபாமிலியில் சேர்ந்துள்ளது.  நானாகப் போய் பிடிக்கவில்லை.  என்னிடம் வந்து சேர்கின்றன.  அன்புக்காகவும் உணவுக்காகவும்.  சந்தேகம் இருந்தால் ஃப்ரான்சிஸ் கிருபாவைக் கேட்டுப் பாருங்கள்.  டிஸ்கவரி புக் பேலஸுக்குப் போகும் போதெல்லாம் என்னிடம் பிஸ்கட்டுக்கு ஓடி வந்து விடும் ஒரு கறுப்பு நாய்.  இன்னொரு கொடுமை, ப்ளாக்கி, ப்ரௌனி, வொய்ட்டி, டைகர் நான்கும் பெடிக்ரி போட்டால்தான் சாப்பிடுகின்றன.  சோறோ பிஸ்கட்டோ கொடுத்தால் சீ போ என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுகின்றன.  மறுநாள் வரை பட்டினியோடு வயிறு ஒட்ட ஒட்ட வந்து என்னை emotional blackmail பண்ணுகின்றன.  இதற்கெல்லாம்தான் எனக்குப் பணம் தேவைப்படுகிறது.  அதனால்தான் இனிமேல் தொலைக்காட்சி சேனல் நண்பர்கள் இலவச சேவைக்கு என்னை அழைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

http://charuonline.com/blog/?p=4877

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.