Jump to content

தமிழ்நாட்டிற்கு வெளியிலிருக்கும் தமிழ் எழுத்தாளனுக்கு எழுத ஏராளமான கதைகளிருக்கின்றன!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிற்கு வெளியிலிருக்கும் தமிழ் எழுத்தாளனுக்கு எழுத ஏராளமான கதைகளிருக்கின்றன!

Lakshmi 1

லக்ஷ்மி சரவணக்குமார்: தற்போது தமிழில் இயங்கிவரும் குறிப்பிடத்தகுந்த இளம்படைப்பாளிகளில் ஒருவர். நீல நதி (2009), யாக்கை (2010), வசுந்தரா என்னும் நீலவர்ண பறவை (2011), மச்சம் (2012), மயான காண்டம்  (2015), யானை (2015) தேர்ந்தெடுத்த கதைகள் ஆகியவை இதுவரை வெளியான சிறுகதைத் தொகுப்புகள். 2013 ல் வெளியான மோக்லியைத் தொலைத்த சிறுத்தை– இவருடைய கவிதைத் தொகுப்பு. உப்புநாய்கள் (2011), கானகன் (2014), நீலப்படம் (2015) ஆகியவை இவர் எழுதிய நாவல்கள். திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டே இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். உப்புநாய்கள் நாவலுக்காக 2012 ஆம் ஆண்டு சுஜாதா விருது பெற்றவர். தற்போது கானகன் நாவலுக்காக யுவபுரஸ்கார் விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

வல்லினம்: யுவபுரஸ்கார் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். விருது என்றாலே சர்ச்சை என்றாகிவிட்ட தமிழ் இலகியச்சூழலில் இவ்விருதினை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்? விருது அறிவிக்கப்பட்ட பிறகு அதிகம் கவனம் பெற்றுவிட்டதாக நினைக்கிறீர்களா?

மூன்றாண்டுகளுக்கு முன்பு உப்புநாய்கள் இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டபோது கிடைத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும். அரிதாகத்தான் சரியானவர்களுக்கு விருதுகள்  போய்ச் சேர்கின்றன. கடந்த வருடம் சாகித்ய அகதெமி நிகழ்த்திய ஒரு கூட்டத்தில் இதற்கு முன்பு யுவபுரஸ்கார் வாங்கியிருக்கும் எழுத்தாளர் அபிலாஷ் தனது உரையில் எனக்கு கொடுக்கப்படுவதற்கும் முன்பாக இவ்விருது லக்ஷ்மி சரவணகுமாருக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார். அவருக்கு நான் கசப்பான வார்த்தைகளையே பதிலாகச் சொன்னேன். ஆனாலும் நான் தொடர்ந்து எழுதுகிற காலத்திலேயே எனக்கு கொடுக்கப்பட்டிருப்பதில் ஆறுதலாக இருக்கிறது. 2007 ல் என்னோடு எழுத வந்த பலர் இப்பொழுது எழுதாத நிலையில் பத்துப் புத்தகங்கள் எழுதிய பின்னும் துவக்கத்திலிருந்த அதே உற்சாகத்துடன் நான் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். மேலும் இந்த விருது கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே என் எழுத்துக்கான பெரிய கவனம் இருந்தபடிதான் இருக்கிறது. இப்பொழுது கூதலாக சிலரைச் சென்றடைய உதவியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

வல்லினம்: க்ளாசிக்குகள் மற்றும் சமகாலத்திலுள்ள மூத்த எழுத்தாளர்கள் குறித்து எப்போதும் இருவேறு வகையான பார்வைகள் இருந்துவருகிறது. இளையோர் அவற்றை/அவர்களை வாசிப்பது தேவை/தேவையில்லை என. உங்களைப் பொறுத்தவரையில் அதுகுறித்த கருத்து என்ன?

ஒரு எழுத்தாளன் தனது மொழியின் முன்னோடிகளிடமிருந்துதான் உருவாகிறான். பா.சிங்காரம், கி.ரா, கு.அழகிரிசாமி, கு.ப.ரா, தி.ஜா, தஞ்சை ப்ரகாஷ், ராஜேந்திர சோழன், ப்ரேம் ரமேஷ், கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ரா என முந்தைய தலைமுறையில் சிறுகதையில் அனேக சாதனைகள் நிகழ்த்தியவர்கள் ஏராளம். தொடர்ந்து கதைகள் எழுதுவதற்கு எனக்கு இவர்களே தூண்டுதலாக இருக்கிறார்கள். ப்ரேம் ரமேஷின் குருவிக்கார சீமாட்டி உள்ளிட்ட சில கதைகளைப் போல் தமிழில் அடுத்துவந்த யாரும் முயற்சித்துப் பார்க்கக்கூட இல்லை. கோணங்கியின் மொழியை உள்வாங்கிக் கொண்ட இளம் தலைமுறையினரை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்களை எல்லாம் வாசிக்காமல் ஒருவன் இங்கு எழுத்தாளனாக முடியாது. ‘சிறகு முளைத்தது’ என்னும் குறுநாவலை ராஜேந்திர சோழன் எழுதி இருபத்தைந்து ஆண்டுகளாகிப் போனது, இன்னும் இருபது வருடங்களுக்குப்பின் வாசித்தாலும் அந்தக் கதை புதிதாகவே இருக்கும். எழுத்தாளனாய் இருப்பதென்பது ஒரு வாழ்க்கை முறை. பொழுதுபோக்காக இலக்கியத்திற்குள் வரும் ஒருவர் அதில் நீண்ட காலம் இயங்கமுடியாது. கடந்த சிலவருடங்களில் எழுத வந்த அனேகர் புத்தகம் போடுவதற்கான வித்தைகளைக் கற்றவர்களாக இருக்கிறார்களே ஒழிய எழுத்தாளனாக தன்னை அடையாளப்படுத்தும் அக்கறையில்லை. அதனால் அவர்கள் அதிகம் வாசிப்பதில்லை.

வல்லினம்: இன்றைக்கு நிறைய கவிதைகள் வருகின்றன. எனக்கு நினைவிருக்கிற வரையில் நீங்கள் கவிதைகள் குறித்துப் பேசியதில்லை. சமகாலக் கவிதைகள் குறித்த பார்வை என்ன?

நான் கடந்த வருடம் வரையிலும் தொடர்ந்து கவிதைகள் குறித்து உரையாடி வந்திருக்கிறேன். நிறைய கவிதைத் தொகுப்புகளுக்கு விமர்சனமும் எழுதியிருக்கிறேன். ’மோக்லியைத் தொலைத்த சிறுத்தை’ எனது கவிதை தொகுப்பு. துரதிர்ஷ்டவசமாய் இங்கு பெரும்பாலான கவிதைகள் எனக்கு ஏமாற்றமாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மைகளை நான் வெளிப்படையாக பேச நேர்வதும் அதற்காக நேரடியாக என் மீது தாக்குதல் நடப்பதும் கசப்புகளை ஏற்படுத்தி விட்டது. என்னைப் பொது இடத்தில் ஒரு கவிஞர் அடித்தபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த கவிஞர்களின் எண்ணிக்கை இருபத்தைந்திற்கு குறையாது. ஆனாலும் இப்பொழுது வரையிலும் நான் வாசித்ததில் விருப்பமான கவிதைகள் குறித்து பேசியபடிதான் இருக்கிறேன். சமகாலத்தில் ஸ்ரீநேசன், ரியாஸ் குரானா, நேசமித்ரன் ஆகியோரின் கவிதைகள் குறித்து நண்பர்களுடன் நீண்ட உரையாடல்கள் செய்வதுண்டு.

வல்லினம்: நகரம், அதுசார்ந்த நெருக்கடிகள்தான் உங்கள் எழுத்துகளில் அதிகமாகத் தென்படுகிறது, கிராமத்து வாழ்வு என்பது ஏன் அதிகம் பதிவாகவில்லை? அப்படி ஒன்று அமையவில்லையா?

எனது சிறுகதைகளில் நிறைய கிராமத்து வாழ்வை ஒட்டிய கதைகளை எழுதியிருக்கிறேன். கானகன் நாவலே பழங்குடி மக்களின் வாழ்வை முழுமையாக பிரதிபலித்த ஒன்றுதான். என் வாழ்க்கைச்சூழல் அதிகமும் சிறு மற்றும் பெரு நகரங்களை சார்ந்தே அமைந்து விட்டதால் நகரத்தின் கதைகளை எழுதுவது எனக்குள் இயல்பாக நடக்கிறது. நகரமயமாக்கலால் சிதைக்கப்பட்ட கிராமங்களின் கதைகளை எழுத வேண்டிய தேவை அனேகமாய் நம்முன் இருக்கிறது. ஆனால் அந்தப் பின்புலங்களிலிருந்து புதிதாக எழுத வந்திருப்பவர்கள் யாரெனத் தேடினால் ஒருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

வல்லினம்: பெருமாள் முருகன் சர்ச்சையின்போது சாதியமைப்புகள் படைப்பாளியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நினைப்பது குறித்து எல்லோரும் வருத்தம் தெரிவித்தார்கள். இன்றைய நவீன இலக்கியச் சூழலில் படைப்பாளிகளுக்குள் சாதிய உணர்வு மறைந்துவிட்டதா?

சில வருடங்களுக்கு முன் வட மாவட்ட எழுத்தாளர்கள் சிலர் டாக்டர்.ராமதாஸ் கட்சியின் இலக்கிய அணியில் இயங்கியது பலரும் அறிந்த ஒன்றே. பிற்பாடு அந்த அணி கலைந்து போனது தனிக்கதை. தமிழ் எழுத்தாளர்களுக்குள் இன்றும் பிராமண, பிள்ளைமார் சாதி அரசியல் இறுக்கமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக பிள்ளைமார் சாதி அரசியல். பல இடங்களில் இது குறித்து நான் கடுமையாகவே விமர்சனங்களை வைத்ததுண்டு. தங்கள் எழுத்துக்களில் மறைத்துக் கொண்டாலும் பலரும் வாழ்க்கை முறையில் சாதியைத் தாண்டி வந்திருக்கவில்லை.

வல்லினம்: தலித்தியப் படைப்புகள், பெண்ணியப் படைப்புகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்டவர்கள் எழுதுவதே சரியென ஒரு கருத்து உண்டு. அது குறித்த உங்களது பார்வை என்ன?

ஒரு எழுத்தாளன் எல்லோரின் வலியையும் உள்வாங்கிக் கொள்ள முடிகிறவனாக இருக்க வேண்டும்தான்.Lakshmi 2 ஆனால் நான் அவர்களை எழுதியே தீருவேன் என்கிற அதீத அக்கறையில் அரைகுறையாகவோ அல்லது புரிதலில்லாமலோ எழுதிவிடவே ஏராளமான சாத்தியங்களுண்டு. ஒரு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் ஜெயமோகனின் நூறு நாற்காலிகள். அந்தக் கதையில் படித்து கலெக்டராகிவிடும் ஒரு  ஒடுக்கப்பட்ட மனிதனின் தாய் அவர் கலெக்டராக இல்லாமல் தனது சாதியில் மற்றவர்கள் இருப்பது போலவே இருக்கவே விரும்புகிறாள் எனச் சொல்லப்படுகிறது. எந்த ஒரு தாயும் தன் மகன் வளர்ந்த நிலையில் இருப்பதையே விரும்புவாள். அதுவுமில்லாமல் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து அதிகாரத்திற்கு  வரும் ஒருவரின் மீதான கசப்பான பார்வையே அந்தக் கதை முழுக்கத் தொடர்ந்து வருகிறது, கவனமாகப் பார்த்தால் அந்தப் பார்வை எழுத்தாளனுடையதாக இருக்கக் கூடுமோ என்றுதான் சந்தேகம் வரும். இது குறித்து யாரும் எந்த விவாதங்களையும் எழுப்பிவிடக் கூடாதென்பதற்காக புத்திசாலித்தனமாக ஜெ.மோ அதை உண்மை மனிதர்களின் கதையென அடையாளமிடுகிறார். இந்தப் போக்குதான் ஆபத்தானது. ஒரு எழுத்தாளன் கூடுமான வரையில் நியாயம் செய்ய முடிகிற பட்சத்தில் எதைக் குறித்து வேண்டுமானாலும் எழுதலாம். அல்லது அமைதியாக இருந்துவிடுதல் நலம்.

வல்லினம்: எது நாவல் என்கிற விஷயத்தில் பல்வேறு கருத்துகள் உண்டு. உப்புநாய்கள், கானகன் ஆகியவை நாவலா, நெடுங்கதைகளா?

நாவல் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறான போக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கி, தல்ஸ்தாய் போன்றோரின் நாவல்களை இந்தத் தலைமுறை வாசகன் அவ்வளவும் போதனைகளென அவற்றின் நீண்ட உரையாடல்கள் மற்றும் விவரனைகளைக் கொண்டு விலக்கிவிடுகிறான். ஆனால் இன்றும் அந்நாவல்கள் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. வாழ்வின் சில முக்கியத் தருணங்களுக்குள் பயணிக்க முடிகிற ஒரு பிரதியை குறைந்தபட்சம் நான் நாவலாக கொள்கிறேன். பக்க அளவுகளைக் கொண்டோ நாவலில் பேசப்படும் காலத்தைக் கொண்டோ வகைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட யுலிஸிஸ் மகத்தான நாவலில்லையா? ஜாக் லண்டனின் Call for the wild, இத்தாலிய நாவலான Silk, யசுனாரி கவபத்தாவின் Sleeping beauty இவையெல்லாம் அடக்கமாக சொல்லப்பட்ட சிறந்த நாவல்கள்தாம். தமிழில் ‘கடல் புறத்தில்’ அதற்குச் சிறந்த உதாரணம். அவ்வகையில் கானகனும், உப்பு நாய்களும் நாவல்கள்தான். ஆனால் நீலப்படம் நெடுங்கதையே. சொல்லப்போனால் அதை நூறு பக்கங்களுக்குள் எழுதிவிடவே விரும்பினேன். சுவாரஸ்யத்திற்காகவும் தகவல்களுக்காகவும் கூடுதலாகச் சிலபக்கங்கள் தேவைப்பட்டதால் அதைத் தவிர்க்க முடியவில்லை.

வல்லினம்: திரைத்துறைக்கும் இலக்கியத்துக்கும் இடையே தொடர்புகள் அதிகரித்துவிட்டன. இலக்கியவாதிகள் நிறையபேர் அத்துறையில் இருக்கின்றனர், நீங்கள் உள்பட. என்றாலும் ஒரு புத்தக வெளியீட்டுக்கு நடிக நடிகையர்களை, எழுத்து குறித்து அதிகம் அல்லது ஒன்றுமே அறியாதவர்களை பரபரப்புக்காகவும் கவன ஈர்ப்புக்காகவும் மட்டுமே அழைப்பது சரியா? திரைத்துறையில் பங்களிப்பதுதான் எழுதுவதின் ஆகப்பெரிய சாதனையாக இப்போது பலரால் கருதப்படுகிறது. காத்திரமாக, கராறாக எழுதி, பேசி, வாசித்துக் கொண்டிருந்தவர்கள் கூட சினிமா என்றதும் விட்டுத்தரத் தயாராகிறார்கள். இந்த மனோபாவம் எழுத்தாளன், எழுத்து என்பதற்கு நேர்கிற அவமானம் என்கிற கருத்து குறித்து என்ன சொல்வீர்கள்?

உலகின் பல்வேறு மொழிகளில் எழுத்தாளர்கள் திரைக்கலைஞர்களோடு இணைந்து பணியாற்றுகிறார்கள். ஏன் நமக்கு வெகு அருகில் மலையாளத்திலும் கூட உண்டு. தமிழில் மட்டும் எழுத்தாளன் சினிமாவிற்குப் போனால் ஏன் அது அவமானமாகிவிடுகிறது? சினிமா இன்னொரு வகையான கலைப்படைப்பு, அதில் ஒரு எழுத்தாளனால் பங்களிக்க முடியுமென்றால் நல்லதுதானே. தொடர்ந்து தமிழ் சினிமாக்களின் மீது வைக்கப்படும் கதையின்மை மீதான குற்றச்சாட்டுகள் குறைய  வாய்ப்புக் கிட்டலாம் இல்லையா? ஆனால் புத்தக வெளியீடுகளுக்கு திரைத்துறையினரை அழைத்து வருவது குறித்து எனக்குச் சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு. பெரும்பாலான வெளியீடுகளுக்கு நடிகர் நடிகையரை அழைத்து வரச்சொல்லித் தூண்டுவது பதிப்பகத்தார். அதேசமயம் நடிகர் நடிகையர் யாருக்கும் வாசிப்பு பழக்கமே இல்லையென இலக்கியவாதிகள் நம்புவதும் மேம்போக்கானது. தமிழ் சினிமாவை நாம் விமர்சிப்பதை விடவும் காத்திரமாக தமிழ் இலக்கியத்தை வாசித்து விமர்சிக்கும் திரைத்துறையினரும் இங்கு இருக்கிறார்கள். இலக்கியமோ சினிமாவோ உங்களால் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ திறமையாக இயங்க முடியுமென்றால் வேலை செய்வதில் எந்தத் தவறுமில்லை. ஊர்ப்பக்கம் இன்னும் சில இலக்கியவாதிகள் வட்டிக்கு விடும் தொழில் செய்கிறார்கள். அதை விடவா சினிமா அவமானம்?

வல்லினம்: உங்கள் படைப்புகளில் ஏன் ஒரு ’திரைக்கதைத் தன்மை’ உள்ளது?

உலகம் முழுக்கவே பிரபலமான நாவல்கள் திரைப்பிரதியின் தன்மையைக் கொண்டவையாகத்தான் இருக்கின்றன. நாம் அதிகம் கொண்டாடும் அனேக லத்தீன் அமெரிக்க நாவல்களில் திரைப் பிரதிகளுக்கான தன்மை மிகுந்த கிடப்பதாலேயே பெரும்பாலான நாவல்கள் படமாக்கப்படவும் செய்கின்றன. மிகவும் தீவிரமான நாவல்களாக பார்க்கப்படும் Name of the rose, Petro paroma நாவல்களே கூட படமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் லோசாவின் நாவல்கள். எனக்கு என் நாவல்களை வெவ்வேறு வடிவங்களில் பார்க்கும் விருப்பமிருக்கிறது. அடிப்படையில் நானொரு கதைசொல்லி. சொற்களால் மட்டுமேயல்லாமல் காட்சிப்பூர்வமாகவும் அதைச்சொல்ல சாத்தியம் ஏற்படுமானால் என்னளவில் என் நாவலுக்குக் கிடைத்த வெற்றியாகவே அதைப் பார்க்கிறேன்.

வல்லினம்: அரசியலற்ற அழகியல் எழுத்தை எவ்வாறு அணுகுவீர்கள்?

எழுத்தென்பதே அரசியல் செயல்பாடுதான். மிகப்பெரிய அரசியல் மாற்றங்களுக்கான விதைகளாய் கலைவடிவங்கள் எல்லாக் காலங்களிலும் இருந்தபடிதான் இருக்கின்றன. நான் எந்த அரசியல் பிரக்ஞையுமில்லாதவன் என்று சொல்கிறவர்களிடம் மிக மோசமான அரசியலுண்டு. அவர்கள் அநீதிகளை வேடிக்கை பார்க்கப் பழகியவர்கள். ஒரு சமூகத்தின் மிகச் சிக்கலானவர்கள் சர்வ நிச்சயமாய் இவர்களாகத்தான் இருக்க முடியும். மொழி ஒருவனுக்கு வசப்படுவது அதன் வழியாய் சமூகத்தோடு உரையாடத்தான், ஒதுங்கி நிற்கவல்ல. நான் எதிர்க்கும் கருத்தை உறுதியாக நம்புகிறவர்களின் மீதுகூட எனக்கு பெரும் மரியாதை உண்டு. ஏனெனில் அவர்களுக்கென ஒரு அரசியலுண்டு. நினைவுகளின் நமைச்சலை எழுத ஒருவன் இலக்கியவாதியாய் இருக்கவேண்டியதில்லை, கவனித்துப் பார்க்கையில் தமிழில் எழுதுகிற அனேகர் இன்னுமே கூட நமைச்சலைத்தான் எழுதுகிறார்கள்.

வல்லினம்: ஒரு குறிப்பிட்ட படைப்பை படைப்பாளி அவ்வாறு குறிப்பிடவில்லை என்றபோதும் அப்படைப்பை இசங்களுக்குள் அடைக்கும் விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எந்தவொரு படைப்பையும் கோட்பாட்டு ரீதியாய் வகைப்படுத்துதலில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு கோட்பாட்டையோ அல்லது கொள்கையையோ வலிந்து எழுத வேண்டுமென்பதற்காகவென்றே ஒரு பிரதியை எழுத முடியாது. ஒரு கோட்பாட்டை முழுமையாக உள்வாங்கிய பின் ஒரு எழுத்தாளனுக்குள் நிகழும் அகவயமான மாற்றங்களே அவனது படைப்புகளிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் ஒரு வாசகனின் பார்வையில் இதெல்லாம் தேவையென்றால் அவர்கள் அதற்கு எதிர் மனநிலையில்தான் இருக்கிறார்கள். சராசரி மனிதர்களின் பார்வையை எப்போதும் எனது பிரதிக்கான முக்கிய எதிர்வினையாகக் கொள்வேன். ஏனெனில் என் எழுத்து அவர்களின் உலகைப் பற்றியது, அவர்களுக்கானது. என் தேவை அவர்களிடம் ஒன்றைப் பகிர்ந்து கொள்வதுதான் கோட்பாட்டு வகுப்பெடுப்பது அல்ல. மேலும் என்னால் விமர்சகர்களுக்காக எழுத முடியாது.

வல்லினம்:  சமகால இலக்கியச்சூழலில் குழுக்கள் அமைத்து தங்களுக்குள் பாராட்டிக் கொள்கிறார்கள். கூட்டங்கள் நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதுகுறித்து…

Lakshmi 3எந்த காலத்தில்தான் குழுக்கள் இல்லை. ஆனாலும் இந்தக் குழுக்கள் ஒரு இலக்கியவாதியை அவன் வாழும் காலத்திலேயே காப்பாற்றத் தவறிவிடுகிறது. சி.மணி எந்தக் குழுவில் இருந்தார். அவர் கவிதைகளை இன்றும் நாம் கொண்டாடிக் கொண்டுதானிருக்கிறோம். சுந்தரராமசாமி ப்ரமிள் குறித்து எழுதிய நினைவோடையை வாசிக்கும் ஒருவன் ப்ரமிளை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கி விடக் கூடும். அதே போல் தான் அவர் ஜி.நாகராஜன் குறித்து எழுதியதும். ஆனால் இவர்கள் இரண்டு பேரையும் தூக்கி நிறுத்த எந்தக் குழுக்களும் தேவைப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு பெரிய பத்திரிக்கை தொடர்ந்து சு.ராவின் மறைவுக்குப் பின்னும் அவரை முன்னிறுத்தியும் அவரை வேகமாக வாசகன் மறந்து போனதுதான் யதார்த்தம். ஆக பணமிருப்பவர்கள் குழுக்கள் அமைக்கட்டும், கூட்டம் போடட்டும். செலவு செய்ய அவர்களுக்கு அதுவொரு வழி அவ்வளவுதான். செரித்தபின் அவர்கள் தங்கள் வேலைகளைக் கவனிக்கப் போய்விடுவார்கள். ஒரு நல்ல கலைஞன் ஜிப்ஸியைப் போல் எப்போதும் தனது காகித மூட்டைகளோடு அலாதியாக பயணித்தபடி தான் இருப்பான்.

வல்லினம்: படைப்பாளி அல்லாதவன் விமர்சிக்கக் கூடாது என்பது சரியா? வாசிப்பவனாக விமர்சிக்க உரிமை உண்டுதானே?

உள்நோக்கமற்ற எல்லா விமர்சனங்களையும் ஒரு எழுத்தாளன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வாசகனின் சொற்களில் அக்கறை கொள்ளாமல் என்ன பெரிய படைப்பாளி. ஆனால் சமயங்களில் உள்நோக்கங்களோடு வைக்கப்படும் விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. நீங்களே குறிப்பிட்டதுபோல் குழுவாத அரசியலின் காரணமாய் வைக்கப்படும் விமர்சனங்களின் மீது எனக்கு மரியாதைகள் இல்லை. அவற்றை புறக்கணிப்பதையே நானும் விரும்புவேன். நீ எழுதுவதில் துளியும் உடன்பாடில்லையென என் புத்தகத்தை கிழித்துப் போடுகிறவனுடன் அன்று முழுக்க மதுவருந்த சந்தோசமாய் சம்மதிப்பேன். நீயெல்லாம் எதுக்கு எழுதற என்கிற அதிகார கேள்விகளுக்கு என்னிடம் பதில்களில்லை. புன்னகையைத் தவிர.

வல்லினம்: இணையப் பொதுவெளியில் திடுக்கிடும்படியான வசைகளைப் பயன்படுத்தி எழுதுவது பின்நவீனத்தில் சேர்கிறதா என்ன?

சோஷியல் நெட்வொர்க்கை தொடர்ந்து சில மணி நேரங்கள் பார்க்கும் ஒருவனின் மனநிலை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் புதிய வன்முறைகளை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கத் துவங்கிவிட்டது. அப்படி எதும் நிகழாத போது இவர்களிடமிருந்து சொற்கள் அணுகுண்டுகளாய் தெறிக்கின்றன. கலகம் அல்லது எதிர் அரசியல் என்பதை மலினப்படுத்தியதில் சோஷியல் நெட்வொர்க்கிற்கு மகத்தான பங்குண்டு. அறிவியல் நமக்களித்த பெரும்பாலான கண்டுபிடிப்புகளும் அதன் நோக்கத்திற்கல்லாமல் பெரும்பாலும் விரோதமாகவே பயன்படுத்தப்பட்டுத்தான் வந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அதனால் அதீத வன்முறைக்குள்ளாக்கப்படுவது கலை வடிவங்கள் தான்.

வல்லினம்: மலேசியப் படைப்புகளை வாசித்திருக்கிறீர்களா?

உண்மையைச் சொல்லப் போனால் சமீபமாகத்தான் மலேசிய படைப்புகளோடு எனக்கு அறிமுகம். மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் தமிழ்நாட்டில் இன்னும் பரவலாக்கப்படவில்லை என்பது நீங்கள் அறிந்ததுதானே. அதிர்ஷ்டவசமாக இணையத்தின் வழி இப்போது நிறைய வாசிக்க முடிகிறது. நண்பர் கங்காதுரையின் வாயிலாகத்தான் தயாஜி, நவீன், சண்முக சிவாவின் எழுத்துக்கள் எனக்கு பரிச்சயமாகின. நவீனின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன், கதைகளையும். தயாவிடம் ஒரு நல்ல நாவல் எழுதுவதற்கான கூறுகளைக் கவனிக்க முடிகிறது. அவரால் சிரமமில்லாமல் கதை சொல்ல முடிகிறது. சா.கந்தசாமி தொகுத்த அயல்நாட்டுத் தமிழ் சிறுகதைகள் என்னும் தொகுப்பிலிருந்த சண்முக சிவாவின் கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. தொகுப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் எழுதும் எழுத்தாளர்களை விட மலேசியாவில் கட்டுப்பாடுகள் நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது. சாருவின் ஸீரோ டிகிரியோ, என்னுடைய உப்பு நாய்கள் மாதிரியான ஒரு நாவலையோ அங்கிருக்கும் ஒருவர் எழுதினால் அவருக்கு என்ன மாதிரியான சிக்கல்களெல்லாம் வருமென்பதை அச்சத்துடன் பார்க்கிறேன். இவர்களோடு கே.பாலமுருகன், யோகி, என இன்னும் சிலரின் எழுத்துக்களையும் இணையத்தின் வழியாக வாசிக்கிறேன். முன்பு மலையகத் தமிழ் கதைகள் என்ற தொகுப்பின் வழியாக சில கதைகளை வாசித்ததுண்டு. என்னளவில் தமிழ்நாட்டிலிருக்கும் ஒருவனை விட தமிழ்நாட்டிற்கு வெளியிலிருக்கும் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கே எழுத ஏராளமான கதைகளிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டு குமாஸ்தா எழுத்தாளர்களின் பாதிப்பு அவர்களைத் தொற்றிக்கொள்ளக் கூடாதேயென அச்சப்படுகிறேன்.

வல்லினம்: பெரும்பாலான இலங்கைப் படைப்புகள் அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டை முன்வைப்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்தான். அந்த வகையில் இணக்கமான அரசியலில் தங்களைக் கவர்ந்தவர்கள் யார்? சமீபத்தில் ஷோபா சக்தியின் நூலை விமர்சித்திருந்தீர்கள் என்று ஞாபகம்.

ஷோபா மிகச்சிறந்த கதைசொல்லி என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. நான் முரண்படுவது அவரது அரசியலில்தான். எல்லோரும் எல்லோருடைய அரசியலுடனும் உடன்பட வேண்டுமென எந்தக் கட்டாயங்களும் இல்லை. எனக்கொரு அரசியல் இருக்கிறது. நான் அதுகுறித்து தொடர்ந்து வாசிக்கிறேன். விவாதிக்கிறேன். உரையாடுவதன் வழியாக புதிய செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன். அதே சமயம் இலங்கையில் எழுதப்படும் எல்லோரையும் முழுமையாக வாசிக்க முயற்சிக்கிறேன். அந்த முழுமை மட்டுமே உண்மைக்கு அருகில் அழைத்துப் போகுமெனத் தோன்றுகிறது. ஆனால் அப்படி எல்லாவற்றையும் தேடிப்பிடித்து வாசிப்பது சிரமமும் கூட. தன்னை ஈழத்து எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் என் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார்கள். இலங்கை எழுத்தாளன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறவர்கள் எனது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். புதிய அரசியல் மாற்றங்கள் எல்லோரையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்க முடியுமென நம்புகிறேன். அந்த வகையில் நான் ஈடுபாட்டோடு வாசிப்பவர்களில் முன்னோடிகளான மு.தளையசிங்கம், வில்வரத்தினம், கே.டானியல்,பிரமிள் துவங்கி சேரன், தமிழ்நதி, குணா.கவியழகன், தீபச்செல்வன், ஷோபா, ரியாஸ் குறானா, ஃபைசல், அனார், அகரமுதல்வனென  இந்த வரிசை இன்னும் பெரிது.

வல்லினம்: உங்களைப் பற்றித் தெரியாத மலேசிய வல்லினம் வாசகர்களுக்காக உங்களைப்பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்கள்.

மதுரைக்கு அருகில் திருமங்கலம் சொந்த ஊர். பள்ளிக்கல்வியைக் கூட முடிக்கவில்லை. சிறிய வயதிலேயே அப்பா ஒரு கொலைவழக்கில் சிறை சென்றுவிட்டதால் குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய பொறுப்பு. ஆக, விவரம் தெரிந்த வயதிலேயே வேலைக்குப் போகத் துவங்கிவிட்டேன். இடதுசாரி இயக்கத் தோழர்களின் நட்பின் வழியாகவே இலக்கிய பரிச்சயம். ஆனாலும் இருபத்தி ஐந்து வயது வரையிலும் நானொரு நாடோடி. எப்படியும் வாழ்ந்துவிட வேண்டுமென்கிற பிடிப்பைத் தவிர எழுத நேர்ந்ததற்கான பெரிய காரணங்களைச் சொல்லிவிட முடியாது. சினிமாவில் இரண்டு படங்களில் இணை இயக்குநராக வேலை செய்துவிட்டு தற்சமயம் தனியாகப் படம் இயக்குவதற்கான வேலைகளில் இருக்கிறேன். அதற்கு முன்னால் பார்த்த வேலைகள் முப்பதிற்குக் குறையாது. வழிப்பறி செய்யப் பழகவில்லை, மற்றபடி என் உப்புநாய்களின் சம்பத் எண்பது சதவிகிதம் நானேதான். கடந்த காலத்தின் எல்லாத் துயரையும் மாற்றிய இரண்டு விஷயங்களில் முதலாவது இலக்கியம். இரண்டாவது தீரத்தீரக் காதலித்து மணந்து கொண்ட மனைவி கார்கி. இப்படியானதொரு ஆசிர்வாதத்திற்காகத்தான் இத்தனை காலம் அலைக்கழிக்கப்பட்டனோ?

 

http://vallinam.com.my/version2/?p=2971

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.