யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

பாரிவேந்தரான பச்சமுத்துவும், ஆயிரம் கோடியும், அவர் கைதான கதையும் ஒரே பார்வையில்....

Recommended Posts

பாரிவேந்தரான பச்சமுத்துவும், ஆயிரம் கோடியும், அவர் கைதான கதையும் ஒரே பார்வையில்....

26 ஆகஸ்ட் 2016
Bookmark and Share
 

 

பாரிவேந்தரான பச்சமுத்துவும், ஆயிரம் கோடியும், அவர் கைதான கதையும் ஒரே பார்வையில்....


மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி 102 மாணவர்களிடம் ரூ72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரை சென்னை பொலீசார் திடீரென இன்று கைது செய்தனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மதனிடம் பணம் கொடுத்ததாகவும், தங்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் பச்சமுத்து வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே மதனை கண்டு பிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதனை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். மேலும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவதாகத்தான் மதன் பணம் பெற்றுள்ளார் என்று 102 புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அண்மையில் நடந்த விசாரணையில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பச்சமுத்துவிடமும் விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பச்சமுத்துவுக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்பேரில் சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று மாலை பச்சமுத்து வந்தார். அவரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 15 மணிநேரங்களுக்கு மேலாக நடந்த விசாரணையின் முடிவில் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு பொலீசார் தெரிவித்துள்ளனர்.


பச்சமுத்துவுக்கு மருத்துவ பரிசோதனை... விரைவில் சைதை கோர்ட்டில் ஆஜர்

மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்துவுக்கு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 102 மாணவர்களிடம் மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி ரூ72 கோடி மோசடி செய்தார் பச்சமுத்து என்பது வழக்கு. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த பச்சமுத்து இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்ட உடனே தமக்கு உடல்நிலை சரியில்லை என பொலீசிடம் பச்சமுத்து கூறினார். இதனால் அவர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை முடிவில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பச்சமுத்து ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனால் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் கூடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பச்சமுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவை தாக்கல் செய்யவும் பொலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மோடியின் செல்ல பிள்ளையாக இருந்தும் பச்சமுத்து கைதானது எப்படி?


மோடியின் செல்ல பிள்ளை என்று அழைக்கப்படும் அளவுக்கு மத்திய அரசோடு நல்லிணக்கத்தோடு இருக்கும் பச்சமுத்து எப்படி கைது செய்யப்பட்டார் என்பது பலருக்கும் ஆச்சரியமே. 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பச்சமுத்துவின் ஐக்கிய ஜனநாயக கட்சி. அக்கட்சியால் வெல்ல முடியவில்லை என்றாலும் தனது ஊடக ஆதரவை பிரசார நேரத்தில் காண்பித்தார் பச்சமுத்து.


மோடியின் பதவியேற்பு விழாவிலும் பச்சமுத்து பங்கேற்றார். இதன்பிறகும், அவரது செய்தி ஊடகத்தில் பாஜக பிரமுகர்கள் விவாத நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பிடித்தனர். அதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த பிற ஊடகங்களும், பாஜகவினருக்கு முக்கியத்துவம் கொடுக்க பிள்ளையார் சுழி போட்டது பச்சமுத்துவின் ஊடகம். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் பேட்டிகளை லைவாக ஒளிபரப்பவும் ஆரம்பித்தது அவரது ஊடகம். முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தால் தமிழிசையிடம் கருத்து கேட்கவும் தவறுவதில்லை. இந்நிலையில்தான், தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு வந்தது. பாஜகவுடன் எந்த பெரிய கட்சியும் இம்முறை கூட்டணி வைக்கவில்லை. ஆனால் பச்சமுத்து பாஜகவுடன்தான் கூட்டணி வைத்தார். இரு திராவிட கட்சிகளும் சரியில்லை என்றும் பிரசாரத்தில் கூறினார். இம்முறையும் அவரது கட்சி தோற்றபோதிலும், பாஜகவுடனான உறவு தொடர்ந்தது. தொடர்கிறது. மதன் விவகாரத்தில் தன்னை கைது செய்யாமல் இருக்க மத்திய அரசின் உறவு உதவும் என்றே பச்சமுத்து நினைத்திருப்பார். ஆனால் கோர்ட் தலையீடு விவகாரத்தை வேறு மாதிரி கொண்டு சென்றுவிட்டது. மதனை கண்டு பிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவதாகத்தான் மதன் பணம் பெற்றுள்ளார் என்று 102 புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அண்மையில் நடந்த விசாரணையில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பச்சமுத்துவிடமும் விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பச்சமுத்துவுக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்பேரில் சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று மாலை பச்சமுத்து வந்தார். அவரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். இதன்பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரையில், பச்சமுத்துவை கைது செய்யாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது காவல்துறை. காரணம், பாஜக மற்றும் மாநில அரசுடன் இணக்கமாக சென்றதுதான் என கூறப்படுகிறது. நீதிமன்றம் தலையிட்ட பிறகு வேறு வழியின்றி இப்போது பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.10,000 கோடி பச்சமுத்து மீது 3 செக்ஷன்களில் வழக்கு!
எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய கல்விக் குழுமமாக உயர்ந்து நிற்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம். கல்வி மட்டுமல்லாமல், அரசியல், ஊடகம் என பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளவர் பச்சமுத்து.

கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடி அளவுக்கு அவரது நிறுவனங்களுக்கு சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் பச்சமுத்து. அவர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரைக் கைது செய்த நடவடிக்கை கூட உயர்நீதிமன்றத்தின் தொடர் கண்டிப்பு மற்றும் கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடர்ந்தே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதன் காணாமல் போன விவகாரத்தில் இவர் மீதும் சர்ச்சைகள் வெடித்தன, புகார்கள் கிளம்பின. இந்தநிலையில் பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


இருமுகனாக வலம்.. அங்கிட்டு பச்சமுத்து...

மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக ரூ72 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்து அரசியலுக்காக 'பாரிவேந்தர்' என்ற பெயருடன் வலம்வந்தவர்... சாதாரண ஆசிரியராக வாழ்க்கையைத் தொடர்ந்து பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகள் குவித்தவர் பச்சமுத்து. பொறியியல், மருத்துவ கல்லூரிகளின் சீட்டுகளை வெளிமாநில மாணவர்களுக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் புகார் உண்டு.

ஏரிகள், புறம்போக்கு நிலங்களை முறைகேடு வளைத்து கல்வி நிறுவனங்களை பச்சமுத்து கட்டியுள்ளார் என்பதும் குற்றச்சாட்டு. பொதுவாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவராக 'பச்சமுத்து' என்ற பெயரை மட்டும்தான் பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் தம்முடைய இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் என சொல்லும்போது "பாரிவேந்தர்" என்ற மற்றொரு பெயரை பயன்படுத்தி வந்தார். எஸ்.ஆர்.எம். குழும ஊடகங்களிலும் "பாரிவேந்தர்' என்ற டீசண்ட் பெயரைத்தான் பயன்படுத்தினார். பார்க்கவ குல ஜாதி சங்கத்தை நடத்தியபோதும் 'பாரிவேந்தராக'வே தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். இப்படி பொதுவாழ்க்கையில் "இருமுகனாக" வலம் வந்த பச்சமுத்து தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியர் பச்சமுத்து   கல்வித்தந்தை பாரிவேந்தர் ஆனார்!


பள்ளியில் கணித ஆசிரியராக பணியைத் தொடங்கிய பச்சமுத்து இன்றைக்கு கல்வித்தந்தை பாரிவேந்தராக உயர்ந்து நிற்கிறார்.தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். வளாகம் , ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது. 10000 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரான பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் 72.50 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1969ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி பள்ளி இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி கொள்ளை நிறுவனமாக வளர்ந்தது எப்படி? நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி எஸ்ஆர்எம் நர்சிங் கல்லூரி எஸ்ஆர்எம் பிசியோதெரபி எஸ்ஆர்எம் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ் எஸ்ஆர்எம் பாலிடெக்னிக் கல்லூரி ஈஸ்வரி பொறியியல் கல்லூரி எஸ்ஆர்எம் பல்மருத்துவ கல்லூரி எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து. இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. ஊடகத்துறையில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. புதுயுகம், வேந்தர் டிவி ஆகிய பொழுதுபோக்கு சேனலும் நடத்தி வருகிறார். எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் 80% மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது அதன் இணையதளம். நிகர் நிலைப் பல்கலைக் கழகமான எஸ்ஆர்எம் தனது கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுத் தேர்வை தானே நடத்துகிறது. அதில் அவர்களே உருவாக்கும் தர வரிசைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தரவரிசை எண்ணைப் பொறுத்து நன்கொடை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. யாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்குவது என்பதை பச்சமுத்து குடும்பத்தினர் மட்டுமே தீர்மானிக்கின்றனர். எஸ்ஆர்எம்மில் குறைந்த செலவில் இடம் வாங்கித் தருவதாக வாக்களிக்கும் தரகர்கள் பல வட இந்திய நகரங்களில் முளைத்திருக்கின்றனர். மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர்.


20,000 கோடி ரூபா கருப்பு பணம்- பச்சமுத்து மீது ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகளின் பட்டியல்:-

மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி ரூ72 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்து மீது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிபிஐ விசாரணை கோரியிருந்தார். வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரம் விஸ்வரூபமாக வெடித்து விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாமக நிறுவனர் அதிரடியாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்திருந்தார்.

அதில், வேந்தர் மூவீஸ் மதன் மருத்துவக்கல்லூரி இடங்களுக்காக 100க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பணம் வசூலித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் என்னிடம் முறையிட்டனர். மதன் வாங்கிய பணத்தை பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக சொல்லியுள்ளார். இதன் அடிப்படையில் பச்சமுத்து, மதன்மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி இடங்களை மதனுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு பின்னர் அது விற்கப்பட்டு அதன் மூலம் பணம் பச்சமுத்துவிடம் கொடுத்துள்ளதாக மதன் சொல்கிறார். ஆனால் பச்சமுத்து தனக்கும் மதனுக்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் எஸ்ஆர்எம் பல்கலைகழகம் சார்பில் சென்னை வளசரவக்கம் போலீசில் கொடுத்துள்ள புகாரில் மதன் ரூ.200 கோடி பணத்துடன் தலைமறைவாகிவிட்டார் என கூறியுள்ளனர். தொடர்பே இல்லாத ஒருவரிடம் ரூ 200 கோடி பணம் எப்படி சென்றது.? இந்த பணம் மருத்துவக்கல்ல்லுரிக்கு எப்படி வந்தது? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம், திருச்சி மற்றும் சென்னை மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு இடங்கள், பல்மருத்துவ இடங்கள், பொறியியல் படிப்புக்கான இடங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் விற்பனை செய்வதன் மூலமாக மதன், எஸ்.ஆர்.எம் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.250 கோடி வரை பணம் கொடுத்து வந்துள்ளார். பணவிவகாரம் தொடர்பாக பச்சமுத்து, மதன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் மதன் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. தலைமறைவாக உள்ள மதன் டெல்லி போலீசாரிடம் சிக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என ஆண்டுக்கு ஒன்று என கல்வி நிறுவனங்களை தொடங்கி 20 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை தொடங்க அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது? எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் ரூ. 20ஆயிரம் கோடிக்கு மேல் கருப்பு பணம் இருக்கிறது. கருப்பு பணத்தில்தான் அந்த நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் மற்ற நிறுவனங்கள், 500 சொகுசு பேருந்துகள், மருத்துவமனை, ஓட்டல், தொலைகாட்சி, வார, மாத இதழ்கள் போன்ற 100க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளது. அவற்றின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என தெரியவில்லை. எனவே 20 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும். இது குறித்து மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்தவேண்டும். மருத்துவ படிப்பிற்கான இடங்களை விதிமுறைகளை மீறி விற்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ குழு, பல்கலைகழக மானிய குழு விசாரணை நடத்த மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் முதன்மை வளாகம் 250 ஏக்கர், டெல்லியில் 25 ஏக்கர், ஹரியானாவில் 55 ஏக்கர், சிக்கிமில் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அவற்றில் ஏரி புறம்போக்கு இடங்களை வளைத்து எஸ்ஆர்எம் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் இவ்வாறு ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.


இதற்கு பதிலடியாக பச்சமுத்து, தாம் நேர்மையாக சம்பாதித்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் பாமகவுக்கு எதிரான ஊடகமாக புதிய தலைமுறை டிவி மாறியது. தற்போது ராமதாஸ் கூறியபடி மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி ரூ72 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது பாமக வட்டாரங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.நன்றி - Onindia

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135282/language/ta-IN/article.aspx

Share this post


Link to post
Share on other sites

புலிப்பார்வை  என்னும்  அழகிய  ஈழ  சினிமா  படத்தை  கொடுத்தவர்  கைதாகி  உள்ளார்  அவருக்கு  ஆதரவாக  சீமான்  நாம்  தமிழர்   கட்சி  இன்னும்  போராடாமல்  இருப்பது  மனவருத்தம்  அளிக்கிறது .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு