Jump to content

“திணை” செப்டம்பர் 2016 இதழில் எனது கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“திணை” செப்டம்பர் 2016 இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். யாழ் தோழர்களின் வாசிப்பும், கருத்துகளும் கவிதைத் தளத்தில் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கின்றன.

ஸ்டிக்கர்
--------------- 
மாபெரும் தீர்க்கதரிசிகள்
மறைந்துவிட்டார்களென்று 
நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் கண்முன் உலவும்
தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்!
இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள்
வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை.
நவீன உலகுக்கேற்ப நீதிகளை
மறைபொருளாக வழங்குகிறார்கள்.
மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும்
இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர்
குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும்.
குறைந்தபட்சம் கோபத்தில்
கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும்.
சிகரெட் பெட்டிகளின் மீது 
நீங்கள் ஒட்டி வைக்கும் உங்கள்
குழந்தைகளின் ஸ்டிக்கர்
கொஞ்சமேனும் புகைப்பழக்கத்தைக் குறைக்கும்
தலை நசுங்கிய ஒருவனின் படத்தை
ஸ்பீடா மீட்டரில் ஒட்டிக்கொள்வது
சாலையில் கவனமாக இருக்கவைக்கும்.
சக்தி மிக்க கடவுள்களின் ஸ்டிக்கர்களை 
முதியவர்கள் மீது நிரந்தரமாக ஒட்டிவிடுவது
பூஜையறையில் இடம் கிடைக்கும்வரை
புழக்கடையிலாவது இருப்பை உறுதி செய்யும்!

சூத்திரனின் பிறப்பு
-----------------------------------------
வழக்கம் போல் நகர் உலாச் சென்ற கடவுள் 
ஒரு வேசியின் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார் 
ஏதுமறியா வேசிக்கு 
வந்திருப்பது கடவுளென்று தெரியாவிட்டாலும் 
யாவுமறிந்த கடவுளுக்கு 
அவள் வேசியென்பது தெரிந்தே இருந்தது.
உள்ளே அழைத்தாள் வேசி. 
இல்லை, நான் அதற்காக வரவில்லை”,
கடவுள் தயங்கினார்.
வேசி சிரித்தாள்,
நேற்றும்தான் ஒருவன் 
கவிதை எழுதத்தான் வந்தேன் என்று 
காகிதம் பேனாவோடு வந்தான் 
காகிதத்தில் ஒரு வரியும் எழுதவில்லை 
காலையில் தான் போனான்என்றாள். 
நான் அப்.....“ கடவுள் திக்கினார்.
அதற்கு மேல் கடவுளைப் பேசவிடவில்லை வேசி. 
ஆட்கொல்லி ஆண்டவன் 
ஆட்கொள்வதற்கு 
வேசிகள் ஒன்றும் விலக்கல்லவே!
சூத்திரனின் பிறப்பை 
வேதங்கள் அறிவித்தன, 
பிரபஞ்சம் கொண்டாடியது!

இறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
-----------------------------------------------------------------------------
சிறுநீர் கழிக்கும் பீங்கான் தொட்டியில்
சிற்றெறும்பைக் கண்டதும்
சட்டென்று அடக்கி
அப்படியே நகர்ந்தேன்
அடுத்த பீங்கானுக்கு,
அப்படியே அடுத்ததற்கு
ஞாயிற்றுக்கிழமைகளில்
பலியிடும் நாட்டுக்கோழிகளை
இப்படியாகத்தான்
சமன் செய்துகொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, வந்தியதேவன் said:

வாழ்த்துகள் சேயோன்

நன்றி தோழர்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.