Jump to content

படையல் - சிறுகதை


Recommended Posts

படையல் - சிறுகதை

லக்‌ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: மருது

 

p120a.jpg

ரண்டு மாதங்களுக்கு முன்பே, ஒவ்வா மலையை ஒட்டியிருந்த குடிசைகளை `காலி செய்ய வேண்டும்’ என முரட்டு ஆட்கள் சிலர் சொல்லிவிட்டுப் போனார்கள். இத்தனை வருடங்களாக இல்லாமல், புதிதாக வந்த தொல்லையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியவில்லை.

வெறும் மலை... புல் பூண்டுகூட இல்லாத வறண்ட மலை. நாக்கு தள்ள ஒன்றரை மைல் மலை ஏறினால், சின்னதாக ஒரு குட்டை உண்டு. எத்தனை வெயிலிலும் நீர் வற்றாது. மலை அடிவாரத்தில் பெரிய குளம். நான்கு திசைகளிலும் பருத்த ஆலமரங்களை, காவலுக்கு நிறுத்திய கம்பீரமான குளம். அதன் மேற்கு எல்லையில் பல தசம வருடங்களுக்கு முன்பாக, வெட்ட வெளியில் ஊர்க் காவலுக்கு நின்றிருந்த அய்யனார்சாமி கோயிலுக்கு, ஒரு கூரை போட்ட பிறகு சுற்றுவட்டாரத்தில் அதுவரை இல்லாத மவுசு. கெடாவெட்டு, காதுகுத்து என கோயில் அமைப்புக்கு ஏற்றாற்போல் பலிகொடுப்பது கூடிப்போனது.

அய்யனாரும் லேசுப்பட்டவர் அல்ல. துடியான சாமி. கீழவளவில் இருந்து இடது  பக்கமாகப் பிரியும் மண் சாலையில் இருக்கும் ஆறேழு கிராமங்களுக்கு அருள் தருவது இவர்தான். நல்லது கெட்டது என எல்லாவற்றுக்கும் அய்யனாரிடம் வந்து ஒரு வாக்கு கேட்காமல், எந்த முடிவையும் யாரும் எடுப்பது இல்லை. அய்யனாருக்குப் புதிதாக இன்னொரு குதிரை வாங்கலாம் என, ஊர்க்காரர்களில் சிலர் சொன்னபோதுகூட இறுதி முடிவை அவரேதான் எடுத்தார். அவருக்குத் தெரியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும் என.

கோயிலை ஒட்டியவாக்கில் முதலில் குடிவந்தது பூசாரியின் குடும்பம்தான். பிற்பாடு காட்டுக் காவலுக்காக வந்துபோன காவக்காரர்களும் அங்கயே குடிசையைப் போட்டுக்கொண்டார்கள். மலையின் நாலாபக்கமும் போக்குவரத்துக்கு எளிது என்பதால், கூலி வேலைக்குப் போகிறவர்களுக்கு மலை அடிவாரம் ஏதுவான இடமாகிப்போனது. பத்தும் இருபதுமாகச் சேர்ந்து சில மாதங்களிலேயே, இருநூற்றுக்குப் பக்கமாக குடும்பங்கள் அங்கு குடித்தனமாக வந்துசேர்ந்தனர். இன்ன சாதி, இன்ன சாமி என எந்த வேற்றுமையும் இல்லாமல், எல்லோருமே அன்னாடங்கஞ்சிக்கு உழைத்தாக வேண்டிய எளிய சனங்கள். வந்துசேர்ந்த இடத்தில் எல்லோரையும் ஒரு சொந்தமாக மாற்றியது,  அய்யனார் கோயிலும் பூசாரி மகன் கட்டையனும்தான்.

மலை அடிவாரம் ஊராக மாறி, மினி பஸ்ஸும் வந்துபோகத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், பெரும்பணக்காரர்கள் சிலர் இந்த இடத்தை எல்லாம் வாங்கிவிட்டதாகப் பேச்சு எழுந்தது. அத்தனை பேரும்  நகர்ந்துசெல்ல இடம் இல்லாமல், அச்சு முறிந்த வண்டியாகத்  தவித்துக்கிடந்தனர். அப்படியே போனாலும் பிழைக்க வழி? நினைத்த மாத்திரத்தில் பிடுங்கி எடுத்து, வேற்று மண்ணில் நட்டுவைத்தால், எந்தச் செடி முட்டி வளரும். `ஊருனா வெறும் ஊருதானா? மனுஷரும் மண்ணும் சாமியுமா சேர்ந்து வாழப்பழகியாச்சு அத்துட்டுப்போறதுன்னா, உசுர அறுத்து எறியறாப்ல இல்லையா?’ - மருகாத சனம் இல்லை ஊருக்குள். மலை மேல் ஊர்க்காரர்களைத் தவிர்த்து வேற்று ஆட்கள் சிலர் அவ்வப்போது வந்து போவது உண்டு.

`இந்தப் பக்கம் என்ன சோலின்னு அடிக்கடி வர்றீகண்ணே?’ என அவர்களிடம் விசாரித்தால், `மேல சமணப்படுகை இருக்குல்ல... அதைப் பத்தி படிக்க வந்துட்டுப்போறோம்’ என்பார்கள். அதும் ஏதோ சாமிதான்போல என, ஊர்க்காரர்கள் ஒன்றும் நினைத்துக்கொள்வது இல்லை. இன்று இந்த மக்களை இங்கு இருந்து துரத்தியடிக்க நோட்டீஸ் வந்தபோது, ‘மலையைக் காப்போம்’ எனப் பெருங்கூட்டமாக முதலில் வந்து நின்றது அவர்கள்தான். எல்லோருக்கும் ஆச்சர்யம்.

‘என்ன இருக்குன்னு இந்த மலையை ஆளாளுக்கு சுத்திவர்றாய்ங்க?’

`பொதையல் கிதையல் கிடக்குமோ?’

ஊர்க்காரர்களுக்கு ஆளுக்கு ஒரு சந்தேகம்; பேச்சு. யாரும் பொதுவில் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த வாத்தியார்மார், பத்திரிகை ஆட்கள் சத்தம் எல்லாம் ஒன்றும் எடுபட்டதாக இல்லை. முதலாளி போலீஸை ஏவ, இரவோடு  இரவாக ஊர் ஆம்பளைகள் எல்லோரையும் ஸ்டேஷனுக்கு அள்ளிக்கொண்டுபோனார்கள். சரிபாதி ஆட்கள் மீது கேஸும் போட்டார்கள். பாதிப்பேருக்குத் தங்களின் மீது கேஸ் இருப்பதுகூடத் தெரியாது. ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போகும்போது எல்லாம் கட்டாயம் பிரம்படி உண்டு. பேச்சுவார்த்தை எல்லாம் அப்படித்தான் நடக்கும். பிறகு பேப்பரில் கையெழுத்து வாங்கி அனுப்புவார்கள். இப்படியாக அய்யனாரைத் தவிர, அத்தனை ஆம்பளைகளும் முதுகுக்குக் கீழ் உடல் வீங்கி, வலி தாங்க மாட்டாமல், கையெழுத்துப் போட்டுவிட்டு வந்ததுதான் மிச்சம்.

`போறதுதான் போறோம்... ரெண்டு மாத்தைல* அய்யனார் சாமி திருவிழா இருக்குங்க. அதை முடிச்சுட்டுப் போறோம்’ என ஊர் ஆட்கள் கெஞ்சிக் கேட்டதற்கு, முதலாளிகளும் ஒப்புக்கொண்டனர்.
நாலு மைல் தாண்டி கருவக்காட்டுக்குள் எல்லோருக்கும் புதிதாகக் குடிசைபோட ஏற்பாடானபோதுதான், ஒவ்வா மலையில் கிரானைட் குவாரி வரப்போவதாகப் பேசிக்கொண்டார்கள். 

ரின் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் பொதுவான ஆள் துரை. அவன் வயது இன்னதுதான் என்பதோ, அவனுக்குப் பெயர் பாண்டித் துரை என்பதோ பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், கல்யாண வீடு, துஷ்டி வீடு எல்லாவற்றிலும் முழுமனதோடு பங்கெடுத்து ஆட்டம்போடுவான். கட்டையாக சற்று வெளுத்த மூஞ்சிக்காரனான அவனுக்கு கல்யாணம் நடந்திருக்கவில்லை. `பிழைச்சுக் கட்டும்’ என அவனைப் பொருட்படுத்தி அவனது ஐயா, பூசாரித்தனமும் சொல்லித் தந்திருக்கவில்லை. அவர் பூசை செய்யும்போது சலிக்காமல் வாசலில் நின்று மணி அடிப்பான். அவனுக்கும் கோயிலுக்கும் உறவு அவ்வளவுதான். மூளை வளர்ச்சி குறைவான ஆள். ஆனால், அசாத்தியமான சூட்டிகை. முப்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் மேலூருக்குப் போவதானால்கூட நடந்தே போய் வருவான். வேறு எந்த வாகனத்திலும் அவன் ஏறி, யாரும் பார்த்தது இல்லை. வண்டியில் ஏற்றிக்கொள்ளக் கூப்பிட்டால்கூட `போலாம். ரைட்... ரைட்...’ என விசிலடித்து பாதை காட்டுவான். உருப்படியாகத் தெரிந்தது ஆட்டம் மட்டும்தான். அப்படி ஆடுவதற்காகவே தான் உயிரோடு இருப்பதாக அவனுக்கும் நினைப்பு. அவன் ஆட்டம் எல்லா தாளங்களுக்கும் பொருந்தும். சமயங்களில் மேளக்காரன், அவனது ஆட்டத்துக்குத் தகுந்தாற்போல் தாளத்தை மாற்றிக்கொள்வதும் நடக்கும். எத்தனை வேகமாக ஆடினாலும், லுங்கி அவிழாது. ஆடி முடிக்கும்போதே சோடா அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கவனித்துத் திரும்பும் கண்கள். ஆட்டத்தை நிறுத்தாமலேயே சோடாவை எடுத்து ஒரே மடக்கில் குடிப்பவன், `தொரைக்கு துட்டு குடுக்குறவங்க குடுக்கலாம்யா…’ என ஊர்க்காரர்களைப் பார்த்து,  காலால் அழகாக ஒரு வட்டமடித்து, நடுவில் வந்து நின்று கேட்பான். எதிரில் இருக்கும் ஊர்ப்பெருசுகளில் சிலர், `என்னடா கட்டையா எம்புட்டு வேணும்?’ -மேளம் ஒரு பக்கம் அந்த கேள்விக்கு சுதி கூட்டும்.

“ஆயிரத்தி ஒண்ணு, ஐந்நூத்தி ஒண்ணுன்னு நீ குடுத்து நாளைக்குக் கஞ்சிக்கு வந்து நின்னா கெழவி என்னய வெளக்கமாத்தால அடிக்கவா? ஒரு அம்பத்தொண்ண வைய்யி…’ - மூச்சு இறைக்கக் கேட்பான். பத்தும் இருபதுமாக, வேகமாக ரூபாய்த் தாள்கள் அவன் முன்னால் வந்து விழும். அவசரப்படாமல் பொறுக்கிக் கொண்டு இன்னொரு சுற்று ஆடிவிட்டு, இருட்டோடு இருட்டாக பிராந்தி வாங்க ஓடுவான். எந்த நேரம் கேட்டாலும், பச்சை பாட்டில் பிராந்தி கொடுக்க, மணி கடை இருக்கிறது.

அவன் குடிக்கச் சலிப்பது இல்லை. நாளுக்கு இவ்வளவுதான் என்ற அளவுகள் ஆகாது. காரியம் இல்லாத நாட்களில் குடிக்க ஒன்றும் கிடைக்காது என்பதால், கிடைக்கிற நாளில் மாதம் முழுவதுக்குமாகச் சேர்த்து குடித்து விடுவான்.  சோற்றுக்குக் கவலை இல்லை.

`எப்பத்தா... வவுறு பசிக்கிது. கம்மங்கஞ்சி இருந்தாலும் பரவாயில்ல. கும்பால ஊத்திக் கொண்டாங்க’ - வாசலில் நின்று உரிமையோடு அவன் கேட்டால், மறுக்கிறவர் ஒருவரும் ஊரில் இல்லை. ஊரில் கோயிலுக்கு எனத் தனியாக மாடு வளர்க்கவேண்டிய தேவையை அவன் உருவாக்கியிருக்கவில்லை.

குவாரிக்காரர்கள் கீழவளவு மெயின் ரோட்டில் இருந்து மலை வரைக்குமாக, வண்டி வண்டியாக கிராவல் அடித்து, புதிதாக மண்சாலை அமைத்தனர். ஆள் போக்குவரத்துக்கு ஏதுவாக இருந்த தற்காலிகச் சாலையில், லாரிகள் போய்வந்து பழகிப்போன இடமாகியது. அய்யனார் கோயில் இறக்கம் வரையிலும், ஆட்கள்  வாரத்தில் நான்கு நாட்கள் அளப்பதும் குறிப்பதுமாக இருந்தனர். பேன்ட் சட்டை போட்ட எல்லோருமே முதலாளிதானோ என நினைக்கும்படி, அத்தனை பேரிடமும் ஒரு துரைத்தனம் தெரிந்தது. இந்தக் குடிசை சனங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பது இல்லை.

கட்டையனுக்குச் சோடியான ஆள் செல்லாண்டி பெருசுதான். ஊர்க்கதை பேசி ஓயாத வாய். நடுச்சாமத்தில்கூட கூதலுக்குப் போர்வையைச் சுற்றிக்கொண்டு, அரைத் தூக்கத்தில் இருக்கும் யாரிடமாவது வம்பளந்து கொண்டிருப்பார். சாலை போடத் தொடங்கிய நாளில் இருந்து, குவாரி ஆட்களிடம் வாயைக் கொடுப்பது இவர்கள் இரண்டு பேரும்தான்.

``ஏய்யா... இங்க இருந்து கல்லை வெட்டி எங்க எடுத்துட்டுப் போவீக... மேலூருக்கா மதுரைக்கா?” - குவாரி ஆட்கள் சிரிப்பார்கள்.

“மதுரைக்கும் மேலூருக்கும் தூக்கிட்டுப்போக இது என்ன பிஸ்கட்டா... கிரானைட்டுய்யா. எல்லாம் கப்பல்ல வெளிநாட்டுக்குப் போகுது” -செல்லாண்டிக்கு முதலில் இது விளங்கவில்லை. விளக்கம் கேட்கலாம் என்றால், விவரம் சொல்லும் அளவுக்கு பாண்டித்துரைக்குக் கூறும் இல்லை.

“அதெப்படிய்யா பொருள் நம்மூட்டுது. திங்கிறது வெளிநாட்டுக்காரனா? எவனோ திங்கிறதுக்கா எங்களை அன்னக்காவடியா துரத்துறீங்க?” எனப் பாவமாகக் கேட்டார் செல்லாண்டி.

இன்ஜினீயர் ஒருவன், “என்ன செய்றது நோட்டு நோட்டா துட்டு குடுக்குறாய்ங்கள்ல” எனப் பக்குவமாகச் சொல்லிப் புரியவைத்தார்.

ட்டையனுக்கு லாரி டிரைவர்களோடு நல்ல பழக்கமாகிப்போக அவர்கள் வாங்கித்தரும் பிராந்தியையும் குடிக்கப் பழகினான். அவன் அரைகுறைப் பேச்சும் சத்தமும்தான், இரவுகளில் அந்த டிரைவர்களுக்கும் குவாரி ஊழியர்களுக்கும் அலாதியான பொழுதுபோக்கு.

இருந்திருந்தாற்போல் ஊர்க்காரர்களுக்கு பூசாரியின் மீதும் கட்டையனின் மீதும் வெறுப்பு. பூசாரி மூஞ்சியைப் பார்க்கப் பிடிக்காமல் போனாலும், சாமியைப் பழித்துக்கொள்ள முடியாது என்பதால், அரைமனதாகவே எல்லோரும் வந்து போனார்கள். யாருக்கும் பிரார்த்தனைகள் இல்லை. கோரிக்கைகள் இல்லாதபோது, சாமியின் நினைப்பு ஏது? ஆனாலும் அய்யனாரின் நிலைமை சற்றுக் கவலைக்கு உரியதாக இருந்ததால், தங்கள் பிரார்த்தனைகளை வீணாக்க ஒருவரும் விரும்பவில்லை.

`இத்தனை காலம் இந்த இடத்தில் ஒரு நிழல் தந்தவர்’ என்ற நினைப்பு மட்டும் ஆட்களைப் பிடித்துவைத்தது. பெரிய பெரிய இயந்திரங்கள் அந்த மலையை அண்டி வந்து நின்றபோது, ஆகாசத்தில் இருந்து ஆயிரம் கொம்புகளோடு எல்லா அரக்கர்களும் இறங்கிவந்து சண்டைக்குக் கூப்பிட்டதுபோல் இருந்தது ஊர்க்காரர்களுக்கு. ஆதிக்காலம் தொட்டு மனுஷனும் சாமியும் இயந்திரத்துக்குத்தான் அஞ்சி வாழ்ந்திருக் கிறார்கள். கண்களுக்கு எட்டின தூரத்துக்கு விரிந்துகிடக்கும் மலையை, தின்றுசெரிக்கும் பெரும் பசியோடு வந்துநின்ற இயந்திரங்கள், இன்னும் கூடுதலாக வந்து சேரும் முன் திருவிழாவை முடித்துவிட்டு புதிய இடத்துக்கு ஓடிவிட ஆட்கள் முடிவெடுத்தனர்.

p120b.jpg

ஊருக்குப் பொதுவாக காவக்காரர் குடும்பம்தான் முன்னால் நின்று, தலைக்கு இவ்வளவு என வரி போட்டு, புதிய இடத்தில் தேவையான வசதிகளைச் செய்ய, வேலை செய்தது. என்ன நினைத்தார்களோ பூசாரியிடம் மட்டும் எந்த வரியையும் யாரும் கேட்கவில்லை. பூசாரிக்கு உடம்பு எல்லாம் பதறி, கடப்பக் கல்லை முழுங்கியதுபோல் நழுக்கு என்றிருந்தது. `சொல்லாமக்கொள்ளாம ஒதுக்கி, அநாதையாக்கிட்டாய்ங்களே...’ என தனக்குள்ளாகவே புலம்பியவர், ஒருநாள் மாலை காவக்காரரைப் பார்க்கப் போனார்.

``எல்லாரும் ஆளும் பேருமா பேசி குடிசை போட, தண்ணிக் குழாய் போடனு வேலையை ஆரம்பிச்சுட்டீங்க. என்கிட்ட ஒருத்தரும் வரியும் கேக்கலை. கூட்டிப்போறதாவும் சொல்லலை. இத்தனை காலம் இந்தச் சனத்தை நம்பியே, நானும் எம் புள்ளையும் வாழ்ந்துட்டோம். நட்டாத்துல விட்டுட்டுப் போறீகளே…” - பூசாரி கண்கலங்கி மருகினார்.

“நான் என்ன சாமி செய்யட்டும். உங்க கூட்டு அப்பிடி. உன் புள்ள முழு நேரமும் குவாரி ஆளுங்களோடுதான் சுத்திட்டிருக்கான். காசு பணம்கூட உங்ககிட்ட நல்லா புழங்குறதா கேள்வி. உங்களுக்கு என்ன தலையெழுத்தா... எங்களோடு வந்து சீப்பட்டு நிக்கணும்னு?”- சாவகாசமாக வெற்றிலையை மடித்து வாயில் அதக்கியபடியே முகம் கொடுக்காமல் பேசினார் காவக்காரர்.

“நான் எந்தக் காசைக் கண்டேன் தம்பி. அந்தப் பயலைத்தான் உங்களுக்குத் தெரியுமே. `ஏண்ணே’னு சொன்னா `போண்ணே’னு நிப்பான். என்ன கூறு இருக்கு அவனுக்கு. ஊரே சேர்ந்து வளர்த்த பிள்ளை அது. ஒரு நல்ல நாள் கெட்ட நாள்னாகூட, உங்களை அண்டியேதான் அந்தப் பய வளர்ந்தான். இப்ப போயி புதுசா பாக்குறீங்க. அவன் வேத்து ஆளுகளோடு பேசுறது பிடிக்கலைன்னா, கூப்பிட்டு வெச்சு நாலு போடு போடுங்க. அதை விட்டுட்டு இப்படி மொத்தமா ஒதுக்கிவெச்சா எப்படிப்பா?” -கையெடுத்துக் கும்பிட்ட பூசாரியைப் பார்க்க பாவமாக இருந்தது.

எச்சிலைக் கூட்டி தூரமாகத் துப்பிய பின் காவக்காரர் நிதானமாக அவர் கைகளைப் பிடித்து, “ஏதோ புத்தி கெட்டுப்போய் ஊர்க்காரய்ங்க யோசிச்சிட்டாய்ங்க. நான் சொல்லிவைக்கிறேன் நீங்க கலங்காமப் போங்க. அந்தப் பயலை நான் பாத்துப் பேசிக்கிறேன்” -நன்றி சொல்லக்கூடத் தெம்பு இல்லாமல் பூசாரி வீடு வந்துசேர்ந்தார்.

லையின் சரி பாதி எல்லையில் எங்கு எல்லாம் முதலில் உடைக்க வேண்டும் என இப்போதே அடையாளக் குறிகளைத் தயாராகக் குறித்துவைத்திருந்தனர். புள்ளிகளும் கோடுகளுமாக அது ஒரு விநோத ஓவியம். மலைக்குச் செல்லும் பாதையில் சின்னப் பாறை ஒன்று உண்டு. அதை சிலர் சாமியாகக் கும்பிடுவதும் உண்டு. காவல் சாமி. அந்தப் பாறையைத் தாண்டும்போது யாரும் காலில் செருப்பு போடுவது இல்லை. அதன் தெற்கு எல்லையில்தான் தொல்லியல் துறை ஒரு பழைய பலகை வைத்திருந்தார்கள்... `சமணப் படுகைக்குச் செல்லும் வழி’ என. குவாரி வேலைகள் தொடங்கப்போவதற்கான முதல் அறிவிப்பைத் தெரிவிப்பதுபோல, ஒரு ராட்சச பொக்லைன் முதலாவதாகத் தூக்கியது அந்த அறிவிப்புப் பலகையைத்தான். நிறம் உதிர்ந்துபோன அந்த மஞ்சள் நிற அடையாளக் கல், சுக்கு நூறாகி குப்பையில் விழுந்தது. வந்தவர்கள் அப்படியே விட்டுப்போக வேண்டாம் என, பாறையின் இரண்டு எல்லைகளை வொயரால் இணைத்து வெடிமருந்துகளை வைத்தனர். பத்து நிமிடங்களுக்குப் பின்னர் சுற்றுவட்டாரப் பகுதியே அலற, ஒரு பெரிய வெடிச் சத்தம். ஊரில் இருந்த பொண்டுபிள்ளைகள் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்தபோது, பாறை துண்டுதுண்டான கற்களாகிச் சிதறிக்கிடந்தது.

ஒருவரும் மூச்சுவிடவில்லை. அச்சத்தில் உடல் ஸ்தம்பிக்க நொறுங்கிய பாறைத் துண்டுகளாகத் தங்களை நினைத்துக்கொண்டனர். வரப்போவது வெறும் குவாரி அல்ல. பணவெறிகொண்ட ராட்சசப் பேய். போதும் என்பதை ஒருநாளும் அறிந்திராத அந்தப் பேயின் வேட்கைக்கு எதுவும் பொருட்டு அல்ல. கலைந்துபோன ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரும் வயிறெரிந்து சாபம் விட்டனர். சிலர் யாரும் பார்க்காதபடி மண்ணை வாரித் தூற்றினர். அவர்களால் முடிந்த எதிர்ப்பு அவ்வளவுதான்.

முன்பு போல நினைத்த நேரத்தில் யார் வீட்டிலும் நின்று, கட்டையனால் சாப்பாடு கேட்க முடியவில்லை. அவனைப் பார்த்தாலே எல்லோருக்கும் வேப்பங்காயாகக் கசந்தது.

“எத்தா... இம்புட்டுக் கஞ்சியிருந்தா ஊத்திக் குடு பசிக்கிது” -கடும் பசியோடு கேட்டாலுமேகூட ஊர்ப்பொம்பளைகள், “போடா... இப்பத்தான் குடுத்துவெச்சவனாட்டம் வந்துட்ட. அதான் அந்தக் குவாரிக்காரய்ங்களோட பொறுக்கித் திங்கிறல. அங்க போ…” எனத் துரத்தினர்.

என்ன ஆச்சு இந்தச் சனத்துக்கு? அவன் இன்னும் செத்த நேரம் வாசலில் நின்று காகமாகக் கரைந்தால், வாசலுக்கு வந்து அந்தப் பெண், வாயில் வந்த கெட்ட வார்த்தையால் எல்லாம் திட்டித் துரத்துவாள். இவனுக்கு ஆத்திரம் வரும்போது கூடவே அழுகையும் வந்துவிடும்.

``போடி நெல்லிக்கா மூஞ்சி. உனக்குப் பசிச்சா தெரியும். எப்படிப் பசிக்கிது தெரியுமா?” என ஆவேசமாகக் கத்திவிட்டு, தெருவில் இருக்கும், எல்லோருக்கும் கேட்கும்படியாக ஒப்பாரி வைப்பான்.

முன்பு எல்லாம் இவன் அழுவதை விளையாட்டாகப் பார்த்து, பின்பு சிரித்தபடியே ஆளுக்கு ஒரு கும்பா சோறுகொடுத்த ஊர் இல்லை இது. பசியோடு ஒதுக்கிவைக்கப்பட்ட இந்த இனம்புரியாத வலியும் அவனை வதைக்க, வீட்டுக்குப் போனான். அய்யா வைக்கும் கஞ்சியில் உப்பு சப்பு இருக்காது. ஊர்க்கஞ்சி அப்படி அல்ல. அது கொடுக்கிறவர்களின் மனசு ருசி. சோறு கேட்டு வரும் எல்லோரையும் சொந்தப்பிள்ளையாகப் பார்க்கும் மனசு. பேருக்கு ஊர்க்காரர்கள் பூசாரியோடு பேசினார்களே தவிர, முன்பு இருந்த ஒட்டு இல்லை.

சோறு கேட்டுக் கிடைக்காமல் பசியோடு வீடு வரை அலறி வந்தவனை, காதும் காதுமாக அறைந்த அவனது ஐயா, “இனி யார் உனக்குக் கஞ்சி ஊத்துவானு வீடுவீடாப் போயி தானம் கேட்டு வர்ற. நாம வாழத் தகுதியில்லாத புழுவுடா. மனுஷன், சகமனுஷன் மேல கோவத்த காட்ட முடியாதப்ப எல்லாம், மிச்சம்மீதியா எஞ்சிக்கிடக்கிற புழுப்பூச்சிங்க மேலதான் காட்டுவான். நாம அதை எல்லாம் பார்க்கணும்னு விதிச்சிருக்கான் அந்த அய்யனாரு. வா... என்ன மிஞ்சிக் கெடக்கோ குடிப்போம். இனி உனக்கு ஊர்க் கஞ்சியும் இல்ல... ஊரும் இல்ல” - நிறைய நீச்சத் தண்ணீரும் கொஞ்சம் பருக்கையும் இருந்த கும்பாவை அவனிடம் நீட்டினார். அழுது மூக்கொழுகி, அகோரமான முகத்தைத் துடைத்துக் கொள்ளாமலேயே கும்பாவை மொத்தமாகத் தூக்கிக் கஞ்சியைக் குடித்தான்.

“அந்தக் குவாரிக்காரய்ங்க சகவாசம் வேணாம்டா தொர. இன்னும் கொஞ்ச நாள்… பேசாம ஊரோடு ஊரா நாமளும் போயிருவோம். ஊர்ப் பகை வேணாம்ப்பா” - தனக்கே ஆறுதல் சொல்லிக்கொள்வதுபோல் சொல்லிக் கொண்டார். வாயைத் துடைத்தபடியே அவர் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டினான்.

ட்டையன், அய்யனார் கோயிலடியை விட்டு எங்கும் போவது இல்லை. எதையோ பறிகொடுத்தவன்போல் மலைப்பக்கமாகப் போகாமல் கிடந்தவனுக்கு, செல்லாண்டி பெருசுதான் இரக்கப்பட்டு ஒருநாள் பிராந்தி வாங்கிக் கொடுத்தார். அவன் வேண்டாம் எனத் தலையாட்டினான்.

“ஏலேய் கிறுக்கா... மத்தவனுக்குத்தான்டா
நீ வேண்டாதவன் எனக்குமா? எடுத்துக் குடி…”

அவன் தீர்மானமாக மறுத்துவிட்டான். அவருக்கு மனசு ஆறவில்லை. பசியால் அழவிட்டு ஒரு சின்னக் குழந்தையைத் துன்புறுத்தியிருக்கும் ஊர்க்காரர்களை நினைத்து வயிறு எரிந்தது. போய் சண்டை கட்டலாம் என்றால், யாரிடமும் மல்லுக்கட்டும் திராணி இல்லை. எதுவுமே பேசாவிட்டாலும் ஆறுதலுக்காக மட்டுமேனும் அவனோடு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க நினைத்தார். அவன் கோயில் வாசலில் இருந்த ரெட்டைக் குதிரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கோயிலில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதன் அடையாளங்கள் ஒருபுறம் தெரிய, இன்னொரு புறம் சுக்கல் சுக்கலாக மலையை உடைத்து, வெட்டி எடுக்க, அகோரப் பசியுடன் குவாரி இயந்திரங்கள் காத்துக்கொண்டிருந்தன. முதலாளிக்கு மதுரையைச் சுற்றி மட்டும் ஏழு எட்டு இடங்களில் இதுபோல் பெரிய குவாரிகள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள்.

`எத்தனை ஊர் குடியைக் கெடுத்துட்டு இங்க வந்திருக்கானுகளோ?’ எனப் பெருசு பொதுவாக முனகிக்கொண்டார். அவர்களைக் கடந்துபோன ஒரு லாரிக்காரன், இரண்டு முறை ஹார்ன் அடித்தான். கட்டையன் அந்தப் பக்கமாகத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

p120c.jpg

புதுக்குடியிருப்பில் குடிசைகள் தயாராகி நின்றன. வெட்டி எறியப்பட்ட கருவமரங்களை அள்ளிக்கொண்டுபோக வந்திருந்த லாரிகளோடு, அடுப்புக் கரிக்காக மரத்தை எடுக்கவந்த ஏஜென்ட்கள் வெட்டுக்கூலி கொடுத்தனர். கண்களுக்கு எட்டிய தூரம் வரையிலும், நீண்ட பொட்டல் காட்டில் இந்தச் சனம் என்ன செய்யப்போகிறது? சின்ன ஒரு கண்மாய் பக்கத்தில் இருந்ததோடு, குடிதண்ணீருக்காக ஊர்க்காரர்கள் சேர்ந்து, ஒரு கிணறு வெட்டியிருந்தனர். ஆட்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு முன்பாக, ஆடு மாடுகளும் நாய்களும் இடம் மாறியிருந்தன. கொஞ்சமும் பச்சையற்ற வெளியில் எதை மேய்வது எனத் தெரியாமல் மாடுகள் கலங்கி நின்றன. சரியான மேச்சல் இல்லாத அவற்றின் மடி இறங்கிப்போயிருந்ததோடு, கண்களில் பல நாள் பசி தேங்கி, சோர்ந்துபோயிருந்தன. பசியைச் சொல்லத் தெரியாத வாயில்லா ஜீவன்களின் ஓலம், நள்ளிரவில் அரவமற்ற புதிய குடியிருப்பில் எதிரொலித்தது. ஒரு பக்கம் அய்யனார் கோயிலில் திருவிழா வேலைகள் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்த ஊருக்கு என மண் சாலை போடும் வேலையும் நடந்தது. ஊர் முழுசும் இடம் மாறிப்போனதும், தனியாகக்கிடந்து இந்தச் சாமி மட்டும் என்ன செய்யப்போகிறது என ஒவ்வொருவருக்கும் ஏக்கம். இந்தப் பழைய அய்யனாரை மாற்ற முடியுமா, சாமி திசை மிரண்டுபோனால், எந்த வகையில் மீட்பது... ஒருவருக்கும் விளங்கவில்லை.

ழக்கமான ஆரவாரங்கள் இல்லாமல் திருவிழா தொடங்கியபோது, சுத்துப்பட்டு ஊர்க்காரர்கள் எப்போதும்போல் உற்சாகமாக வந்து சேர்ந்துகொண்டனர். திருவிழா முடிந்து மூன்றாவது நாளில் எல்லா ஊர்க்காரர்களும் வந்து பலிகொடுப்பது வழக்கம். ஆடுகள் மட்டுமே பலிகொடுக்கப்படும். இந்தக் கோயிலுக்கு என்றே நேர்ந்துவிடப்படும் ஆடுகளுக்கு, ஒரு தன்மை உண்டு. முழுக்க கறுப்பாக காதுகளில் வளையமிடப்பட்டு நேர்ந்துவிடப்படும். ஆடுகள், வெட்டப்படுவதற்கு முந்தின நாள் வரையிலும் எந்த ஊரில் எந்த வயலில் வேண்டுமானாலும் மேயலாம். சரியாக வெட்டப்படுவதற்கு முந்தின நாள், ஊர் ஆட்கள் தேடித்தேடி ஆடுகளைக் கொண்டுவந்து சேர்ப்பார்கள். எப்படியும் முன்னூறு ஆடுகளுக்குக் குறையாமல் இருக்கும். கோயிலில் வெட்டும் கெடாக்கறி தின்பதற்காகவே, ருசி கண்டு வரும் சனம். கோயில் சோற்றுக்கு எனத் தனித்துக்கிடக்கும் ருசி. எவ்வளவு தின்றாலும் சலிக்காது. திருவிழா தொடங்கியதில் இருந்து பூசாரிக்கும் பழைய மரியாதை கிடைத்தது.

கட்டையன்தான் யாரிடமும் அண்டாமல் ஒதுங்கியே இருந்தான். சிலர் அவனிடம் தாமாகவே வந்து பேச முற்பட்டாலும், அவன் விலகி ஓடிவிடுவான். காலையிலேயே குளத்தில் இறங்கி, குளித்துவிட்டு வந்துவிட்டால் பிறகு கோயில்தான் கதி. யார் வந்து சாமி கும்பிட்டாலும் அவர்களின் பிரார்த்தனைக்காக மணியடிப்பான். சிலர் `அஞ்சோ பத்தோ’ அவன் கையில் கொடுக்கிறபோது மறுக்காமல் வாங்கிக்கொண்டான். இதற்கு முன்னால் கோயில் காரியத்துக்கு என, அவன் யாரிடமும் கை நீட்டி காசு வாங்கியது இல்லை. மத்த சமாசாரங்களுக்கு வாங்கும் காசில்தான் அவன் செலவுகள். இப்போது யாரிடமும் ஊர்க்கஞ்சியோ, ஊர்க்காசோ வாங்குவது இல்லை.

திருவிழாவின் முதல் நாள் காலை பால்குடமும் மாலையில் முளைப்பாரியும் எடுத்துவருகையில், இதற்கு முன்பு இல்லாத கூட்டம். ஒருவேளை இந்தக் கோயிலில் நடக்கும் கடைசித் திருவிழாவாக இருக்கலாம் என எல்லோருக்கும் கவலை. நான்கு நாட்களுக்கு முன்பாகத்தான் புதுக்குடியிருப்பில் ஊருக்கு மையமாக, குவாரிக்காரர்கள் ஒரு பெரிய மேடையை அமைத்துக் கொடுத்தார்கள். காரணம் தெரியாமல் மலங்க மலங்கப் பார்த்த ஊர்க்காரர்களிடம், “எல்லாம் உங்களுக்காக வேண்டிதான். ஆளுக வந்துட்டீக சரி... சாமியைத் தனியாவா விட்டுட்டு வர முடியும்? அதான் முதலாளி இங்கேயே கோயிலுக்கும் ஒரு வழி பண்ணியிருக்காரு…” என மேடை அமைத்துக் கொடுத்தவர்கள் பெருமையாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். ஆக துரத்தியடிக்கப்படுவது ஊர்ச்சனம் மட்டும் அல்ல என்பது, தாமதமாகத்தான் எல்லோருக்கும் புரிந்தது.

அய்யனார் கோயிலை நோக்கி தீச்சட்டி எடுத்தபடி, மனிதக்கூட்டம் ஊர்வலம் போகவிருப்பதை இரண்டு செட் மேளமும் பெரியகுளத்து உருமியும் முறுக்கி முறுக்கி உசுப்பேற்றிக்கொண்டிருந்தன. சட்டி எடுக்கிறவர் வேடிக்கை பார்க்கிறவர் என்ற பேதம் எல்லாம் இல்லாமல், எல்லோருக்கும் சாமி இறங்கி ஆடிக்கொண்டிருந்தனர். வெக்கையில் மனிதர்கள் வியர்வையால் நனைந்து குளித்திருக்க, எல்லோரின் கண்களும் கட்டையனைத் தேடின. திருவிழா முடிந்தால் நாளை பலி. கெடாக்கறி தின்பதில் சலிக்காதவன். தின்றுதின்றே எல்லோருக்கும் பிடித்தமான வனாகிப்போன முரட்டு உருவம் அவன். தனியாக இலை போட்டுச் சாப்பிட்டாலும், சாப்பிடும் ஊர்க்காரர்களிடம் ஆளுக்கு ஓர் உருண்டையாக வாங்கித் தின்றால்தான் அவனுக்குப் பசியாறும். இப்போது எல்லோரிடமும் கோபித்துக்கொண்டு அவன் எங்கு போயிருப்பான்? யாரும் சொல்லிக்கொள் ளாமலேயே சிலர் அவனைத் தேடினார்கள். எங்கு தேடியும் அவனைக் காண முடியவில்லை.

செல்லாண்டிதான் பொதுவாகச் சொன்னார்... “ஊர்க்கார வெங்காயங்களுக்கு எவன்கிட்ட வீரத்தைக் காட்டணும்னு தெரியாம, அவனுக்குப் போடுற சோத்துல காட்டுனீங்க. இப்ப `அவன் எங்கே போனான்?’னு தேடுனா மட்டும் சரியாப்போச்சா. உங்க மூஞ்சில எல்லாம் முழிக்கக் கூடாதுனுதான்டா பத்து நாளா பொலம்பிக்கிட்டிருந்தான்’’ - பொதுவாக ஆட்களைப் பார்த்துக் காறித்துப்பிவிட்டுப் போனார். எல்லோரும் முகம் செத்துப்போய்க்கிடந்தார்கள். நல்ல காரியம் நடக்கிற நேரத்தில் இது என்ன சங்கடம் என காவக்காரருக்கு வருத்தம். பூசாரிதான் தயங்கித் தயங்கி வந்து சொன்னார்.

“நேத்து ரவையில இருந்தே பயலைக் காணாம்யா. நானும் யார்கிட்ட சொல்லனு தெரியாம தவிச்சுக்கிடந்தேன். நீங்கதான் என்னன்னு பார்க்கணும்” - அவருக்கு நா தழுதழுத்தது. காவக்காரருக்கு எதுவோ போலாகிவிட இரண்டு பேரைக் கூப்பிட்டு கட்டையனைத் தேடச் சொன்னார்.

``யாரையும் கோவிச்சுக்கிட்டு ஊரைவிட்டுப் போற பய இல்ல தம்பி அவன். மேலூரைத் தாண்டிப்போனா, தெற்கு, வடக்கு தெரியாது. கொஞ்சம் தேடிப்பிடிச்சுக் கூட்டிட்டு வந்துடுங்க’’ - அத்தனை கூட்டத்திலும் பூசாரி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டார்.

ஆட்கள் கொஞ்சம் பேர் திசைக்கு ஒருவராகத் தேடிச் சென்றார்கள். ஒரு பக்கம் திருவிழாவும் சுனக்கம் இல்லாமல் நடந்து முடிந்தது. விடிய விடியத் தேடியும் கட்டையன் போன தடம் ஒருவருக்கும் தெரியவில்லை. p120d.jpg

விடிந்து கெடாவெட்டும் முடிந்து படையல் தயாராகிக்கொண்டிருந்தது. மணக்க மணக்க வெள்ளாட்டங்கறி கொதிக்க, எட்டு ஊர் சனமும் சாரிசாரியாகக் கோயிலடியில் வந்து கூடினார்கள். எத்தனை பேர் வந்தாலும் ஒரே பந்தியில் படையல் சோற்றைப் பரிமாற வேண்டும் என்பது விதி. இன்னும் வெயில் ஏறவில்லை. வந்த ஆட்கள் அப்படி அப்படியே வரிசையில் உட்கார, ஊர் ஆம்பளைகள் பரிமாறத் தயாரானார்கள். விருந்து முடியும் முன்பு, எங்கு இருந்தாவது கட்டையன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை எல்லோருக்கும். சுடச்சுடச் சோறு இலைகளில் விழுந்து கொண்டிருக்க, கட்டையனைத் தேடிப்போன எல்லோரும் திரும்பிவிட்டார்கள். யாரிடமும் எந்தத் தகவலும் இல்லை. ஒரே ஒருவன் மட்டும் காவக்காரரைத் தனியாகக் கூப்பிட்டுக் காதில் சொன்னான்...

“எண்ணே... மலை மேல சுனைக்குப் பக்கத்தில, குவாரிக்காரனுக முந்தாநாள் ராத்திரி சாமப்பூசை ஏதோ பண்ணியிருப்பானுகபோல. எலுமிச்சம் பழம், குங்குமம், மனுச மண்டை ஓடு, கால் எலும்புனு பார்க்கவே பயங்கரமா கிடந்துச்சு” - காவக்காரர் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, “சரி அதை என்னன்னு அப்புறம் பார்த்துக்கலாம். அங்க பந்தியில பரிமாற ஆள் பத்தலை. நீ போயி என்னன்னு பாரு”- அவசரமாக அவனை அனுப்பிவைத்தார்.

தனித்துவிடப்பட்டு நின்றிருந்த அய்யனார் சாமி, அந்த இரவு என்ன நடந்தது என்ற எல்லா உண்மைகளையும் தெரிந்திருந்ததால், சங்கடத்தோடு கண்களை மூடிக்கொண்டார்!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.