Jump to content

ஸ்டீயரிங் வீல்


Recommended Posts

ஸ்டீயரிங் வீல்

சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

ந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை p90b.jpgவைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும்.  வேடிக்கை... அதற்கும் ஓர் ஆன்மா உண்டு; உணர்வு நிலை உண்டு என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அவள் சோர்ந்திருந்தால், அது வண்டியையும் தொற்றிக்கொள்ளும். லேசில் கிளம்பாது. ஆனால் கிளம்பிவிட்டால்,  பாதி வழியில் என்றும் நின்றது இல்லை. சரியாக அவள் வீட்டை அடையும் வரை காத்திருக்கும். பிறகு ஆளைவிடு என்பதுபோல பெருமூச்சு விட்டு நின்றுகொள்ளும். அவள் மெக்கானிக் டேவிட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பு வாள். டேவிட் எப்பவுமே கைபேசியை மௌனத்தில்தான் வைத்திருப்பான். மெசேஜ் ஒன்றைத்தான் கவனிப்பான். முணுமுணுத்துக் கொண்டே சரிசெய்ய வருவான்.

`குப்பையிலே போடவேண்டிய வண்டியை எத்தனை நாள்தான் வெச்சிருப்ப?’ என்று அதட்டுவான்.

அவள், அவனுக்குப் பதில் சொல்வதே இல்லை.  `இந்த வண்டிக்கு ஆன்மா உண்டு’ என்று சொன்னால், அவன் சிரிப்பான். நினைவுகளைச் சுமக்கும் வண்டி... நல்லதும் கெட்டதுமான நினைவுகளை. அதனுள் அமர்ந்தால் ஒரு தோழனுடன் அமர்ந்திருப்பதுபோல இருக்கும். அவளது அந்தரங்கங்களை உணர்ந்த தோழன்  என்றால், டேவிட்டுக்குப் புரியாது. அந்த ஸ்டீயரிங் வீலில் முகத்தைக் கவிழ்த்து அவள்விட்ட கண்ணீர் யாருக்கும் தெரியாது. இதயம் விண்டு விடுவதுபோல கேவிக்கேவி அதைப் பிடித்து அழுத அழுகை, அவளுக்கு எங்கும் கிடைக்காத வடிகால். அதன் மௌனம், ஒரு நண்பனின் அரவணைப்புபோல.

இன்று ஸ்டீயரிங் வீலைப் பற்றியதும் என்னென்னவோ நினைவுக்கு வந்தன. ஏன் என்று புரியவில்லை. வண்டியில் கடிகார முள்ளும் தேதியும் தெரிந்தன. ஓ... அதுதான். மனசு மெலிதாகக் குலுங்கிற்று. உள்ளங்கையும் நெற்றியும் சூடேறி வியர்த்தன. அந்த நினைவு படுத்தலின் தாக்கம் இன்னும் அச்சுறுத்திற்று. ஆரம்ப காலத்தில் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அது எதிரில் நின்று வாட்டும். தெரிந்த - தெரியாத முகங்களும், புலம்பல்களின் ஒலியும் அதில் தொனித்த கோபமும் சாபமும் சோகமும்... ஆ அந்தக் கோபம்தான் அனைத்துலகக் கோபம்போல  தாங்க முடியாததாக இருந்தது; அவளை மிரளவைத்தது. உலகமே திரண்டு `இவள்தான்... இவள்தான்...’ என்று குற்றம்சாட்டுவதுபோல இருந்தது. அவர்களுக்குத் தெரியாது, அந்தக் கூட்டத்தில் அவளும் ஒருத்தி என்று. அதில் தனிமைப்பட்டு, குன்றிக்குறுகி, அவமானப்பட்டு, கழிவிரக்கப்பட்டு... `எப்படி, ஏன்?’ என்கிற  கேள்வி களும், `நடந்ததில் என் பங்கு என்ன?’ என்கிற குற்றஉணர்வும் அவளைச் சாட்டையாக விளாசியதை அவர்கள் உணர மாட்டார்கள்.

இப்போது எல்லாமே பழைய கதை. பாதையை மாற்றிக்கொள்ளவைத்த கதை. அதில் இந்த வண்டிக்கு முக்கிய பங்கு உண்டு. கையைப் பிடித்து அழைத்துச்சென்ற வழிகாட்டியைப் போல. வண்டிக்கு அவள் பெயர்கூட வைத்தி ருந்தாள். டாலி. `ஏன் அந்தப் பெயர் வந்தது?’ என்று அவள் யோசிக்கவில்லை.

`நான் என் வண்டிக்கு `டாலி’னு பேர் வெச்சிருக்கேன்.’

‘அது என் பொம்மை.’

p90a.jpg

‘என் வண்டி, எனக்கு பொம்மை கண்ணு.’

‘கூடாது!’

அவளுக்குச் சிரிப்பு வந்தது அந்த மூர்க்கத்தைக் கண்டு. மூன்று வயசு. சிரிப்பு வராமல் என்ன செய்யும்? அவள் அழைப்பதை மாற்றவில்லை. டாலி... இது என் டாலி.  தப்பாயிற்றா... எங்கிருந்து ஆரம்பித்தது அது? எது தப்பு... எது சரி? யார் விளக்கம் தருவார்கள்?

வண்டி தன்னிச்சையாகச் சென்றது. அவள் அந்தப் பாதையில் பரிதவித்தபடி சென்றாள்.

`எனக்குப் புரியலே டாலி... எப்படி அவ்வளவு அறிவுகெட்டவளாக இருந்தேன்?’

`அறிவு போதாது மாகி... சூட்சுமம் வேணும். நமக்கு அது இல்லே’ என்றார் ஜார்ஜ். 

`அன்னிக்கு உலகம் இருண்டுபோச்சுனுதான் எனக்குத் தெரியும்.  நான் நல்லவள் டாலி.  எந்தத் தப்புதண்டாவுக்கும் போனது இல்லை.  ஞாயிறு தப்பாமல் சர்ச்சுக்குப் போவேன்... இப்பவும் பாவ மன்னிப்பு கேட்க.  ஆனால், எதற்கு மன்னிப்பு கேட்கணும்னுகூட எனக்குத் தெரியலை. குரல் நடுங்குது. அழுகை வருது... ஆமாம் இப்பவும்.'

“மார்கீடா... மார்கீடா...’’

மார்கரீட்டா திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள்.  லாரா கைகொட்டிச் சிரித்தாள். உன்னை எழுப் பிட்டேன் என்பதுபோல. இன்னும் ஸ்டீயரிங் வீலைப் பிடித்திருந்ததுபோன்ற உணர்வு இருந்தது. இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து அழுந்தத் தேய்த்துக்கொண்டாள். லாராவின் கடைவாயில் எச்சில் ஒழுகிற்று. மார்கரீட்டா மெள்ள எழுந்து, டிஷ்யூ பேப்பரை எடுத்து, அவள் வாயைத் துடைத்தாள். லாரா அவளுடைய கன்னத்தைத் தொட்டாள்.

`‘என்ன பேபி?’’

`‘ஆர் யூ ஓகே?’’ - லாராவின் சொற்கள் குழறின. மார்கரீட்டாவுக்கு மட்டுமே அவள் பேசுவது புரியும்.

‘`எனக்கு ஒண்ணுமில்லை பேபி. மார்கீடா கிழவில? தூக்கம் வருது கண்ட நேரத்திலே.’’

‘`மார்கீடா... கிழவில.’’

மார்கரீட்டாவுக்கு சிரிப்பு வந்தது.

`‘தாங்க்யூ பேபி... டீ சாப்பிட்டு பார்க்குக்குப் போகலாமா?’’

லாரா சந்தோஷத்துடன் சிரித்தாள்... ‘`போலாம்’’.

 மார்கரீட்டா சமையலறைக்குச் சென்று,  தேநீர் தயாரித்து, இரண்டு கோப்பைகளில் ஊற்றி, லாராவுக்குப் பிடித்த குக்கீஸை ஒரு கிண்ணத்தில் வைத்து, லாராவின் சக்கர நாற்காலிக்கு முன்னிருந்த மேஜையில் வைத்தாள். குக்கீஸை விண்டு லாராவின் கையைப் பிடித்து அவளது வாயில் ஊட்டினாள். பிறகு தேநீரைப் புகட்டினாள். இடையில் தனது தேநீரைக் குடித்தவண்ணம் இருந்தபோது எதிர்பாராமல் லாரா  அவளுடைய புறங்கையில் முத்தமிட்டு ‘லவ் யூ’ என்றாள்.

மார்கரீட்டாவுக்குத் தேகம் எங்கும் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. லாரா இப்போது எல்லாம் அடிக்கடி அதைச் சொல்கிறாள். எங்கே கற்றாள்? தன்னிச்சையான உணர்வின் வெளிப்பாடு. எப்படி வந்தது?
‘`ஐ லவ் யூ டூ லாரா...”

லாராவின் நெற்றியில் முத்தமிட்டபோதுஅவள் மீண்டும் சொன்னாள்... ``ஐ லவ் யூ.’’

நான் உன்னை நேசிப்பதற்கும் நீ என்னை நேசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதுபோல.

குக்கீஸைத் தின்று முடித்ததும், `‘பார்க்... பார்க்...’’ என லாரா சத்தமிட்டாள். மார்கரீட்டா அவசரமாக கோப்பைகளை சமையலறைக்குக் கொண்டுபோய் கழுவி வைத்து, லாராவுக்கு மேல் அங்கியையும் தலைக்குத் தொப்பியையும் அணிவித்து, ‘`இப்பப் போகலாம்’’ என்று சிரித்தாள்.

லாராவுக்கு வெளியில் செல்வது பிடிக்கும். அதுவும் அந்தப் பூங்காவுக்கு. இன்று நல்ல வேளையாக பளீரென்று வெய்யில் அடித்தது.  செர்ரிபிளாஸம் பூக்கும் காலம். இரண்டு மூன்று மரங்கள் இலை தெரியாமல் பூக்குடையாக நின்றன. பூங்காவுக்குள் நுழைந்ததும் பூக்களைக் கண்டோ என்னவோ லாரா கைகொட்டிச் சிரித்தாள்.

வழக்கமாக நடை பயில வருபவர்கள் அவர்களைக் கண்டு ‘ஹை’ என்று கையசைத்தபடி நடையைத் தொடர்ந்தார்கள். லாரா பதிலுக்குக் கையசைத்தாள். சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வழக்கம்போல் மார்கரீட்டா நடந்தாள்.

15 வருஷத்துக்கும் மேற்பட்ட நடை. எல்லாச் செடிகளுக்கும் அவளும் லாராவும் பரிச்சயம். இந்த இடைப்பட்ட காலத்தில் இப்போது சிலபேர் இல்லை. இருப்பவர்களுக்கு அவளும் லாராவும் பார்க்கின் ஓர் அங்கம்போல. ஒருநாள் வராமல் போனாலும் ‘ஏன் வரவில்லை?’ என்று கேட்கும் அளவுக்கு. ஆரம்பத்தில் தெரிந்த சந்தேகமும் வியப்பும் எப்போது காணாமல்போனது என்று நினைவில்லை. முன்பு புன்னகைக்கத் தயங்கிய வர்கள் இப்போது தோழமையுடன் சிரிக்கிறார்கள். சீதோஷ்ணத்தைப் பற்றியாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகிறார்கள் அல்லது லாராவைப் பற்றி...

 நடப்பது  இன்று சற்று சிரமமாக இருந்தது.  என்னென்னவோ நினைவுகளின் பாரம் முதுகை அழுத்துவதுபோல் இருந்தது.  சிறிது நடந்த பிறகு தென்பட்ட பெஞ்சுக்கு அருகில் நிறுத்தி `‘லாரா... இங்கே உட்கார்ந்துக்கலாமா? எனக்கு இன்னிக்குக் களைப்பா இருக்கு’’ என்றாள் மார்கரீட்டா.

லாரா எதுவும் சொல்லாமல் தலையை அசைத்தாள்.  மார்கரீட்டாவுக்குப் படுக்கலாம் போல இருந்தது. பெஞ்சில் தலையைச் சாய்த்து, கண்களை மூடிக்கொண்டாள். பார்க்குக்கு வந்தால் தேமே என்று தன்னைச் சுற்றிப்பார்த்தபடி அமர்ந்திருப்பாள் லாரா.

கண்களை மூடியதுமே தூக்கம் வரும்போல அசத்திற்று மார்கரீட்டாவுக்கு. நேற்று இரவு சரியாகத் தூங்காததன் விளைவு.

நேற்று இரவு தொலைக்காட்சியைப் பார்த்தி ருக்கக் கூடாது. திகில் மூட்டுவதற்கே அப்படிப் பட்ட செய்திகள் வருவதுபோல நெஞ்சு நடுங்கிற்று. நடந்தது எங்கேயோ தொலைவில் கலிஃபோர்னி யாவில் ஓர் இடத்தில். ஆனால், பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல இருந்தது. ஒரே ஓலம்... காயமடைந்தவர்களின் அலறல். போலீஸ் தூக்கிச் செல்லும் சடலங்கள். சிறுவர்கள், மீசை முளைக்காத பாலகர்கள், முலை கிளம்பாத சிறுமிகள். யாரோ இரண்டுபேர், கணவனும் மனைவியுமாகச் செய்த தாக்குதலாம். அவர்களும் பிணங்களாக. கூட்டம் விக்கித்து நிற்பது துல்லியமாகத் தெரிகிறது. மார்கரீட்டாவுக்கு விழி பிதுங்கி, மனசு பதைத்து இதயம் வெகுவேகமாக அடித்துக் கொள்கிறது.

`எப்படி... எப்படி... இப்படிச் செய்ய மனசு வந்தது? தேசத்துரோகமா... நம்பிக்கைத்துரோகமா... மனநோயா... மதவெறியா?’ அடுக்கடுக்காகக் கேள்விகள். தொலைக்காட்சித் திரைக்குள் மாகியும் இருந்தாள். கேள்வி கேட்கிறாள்...

`ஏன்... எதற்கு?’

மூடிய நிலையிலேயே மார்கரீட்டாவுக்குக் கண்களில் நீர் நிறைந்தது. அந்தக் குழந்தைகள்... அந்தப் பெற்றோர்கள்... எப்படித் தாங்குவார்கள்? உடல் தளர்ந்து, மனசு கழன்று, எங்கோ நழுவிக் கொண்டு போயிற்று... பாதாளத்தை நோக்கி. இருண்ட சந்துகளையும் பொந்துகளையும் கடந்து...  ‘மாம்... மாம்!’

பாதாளக் குகையின் சுவர்களில் பட்டுப் பட்டுத் தாவி முன்னும் பின்னும் ஒலி தாக்கிற்று. அவள் பீதியுடன்  ஓட ஆரம்பித்தாள். `வேண்டாம் போயிடு... போயிடு. உன்னை எனக்குத் தெரியாது. என்னைக் கூப்பிடாதே. போயிடு’ - அவள் ஓட ஓட குரல் துரத்திற்று. ‘மாம்... மாம்...’ படையாகக் குழந்தைகளின் குரல்கள்... `உன் மேல தப்பு. கொலை செஞ்சது நீ. பிடியுங்கள்... மாகியைப் பிடியுங்கள்.’
அவள் பதற்றத்துடன் தன்னைச் சுற்றிப் பார்த்தாள். அவளுக்குப் பரிச்சயமான இடமாக இல்லை இது. அவள் வளர்த்த செடிகளைக் காணோம். ரோஜாக்கள் இல்லை. வண்ணம் இல்லை... இருட்டும் வெறுமையும். அவளைச் சுற்றிக் கும்பல். விநோதமான வெறுப்பு உமிழும் பார்வைகள். கூச்சத்தில் முகத்தை ஒளித்துக் கொள்ள தவித்தபோது, ஜார்ஜ் அவளை அணைத்துக்கொண்டார். அவள் இதயம் விண்டுவிடுவதுபோல அழுதாள்.

`எப்படி... ஏன்... என்ன தப்பு செஞ்சேன்?’ ஜார்ஜ் முதுகைத் தட்டியவண்ணம் இருந்தார்.

`தெரியலை மாகி... எனக்கும் புரியலை’’ - அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.

``மார்கீட்டா... மார்கீட்டா...’’

அவள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். கன்னங்கள் ஈரமாகியிருந்தன. லாரா அவளையே பார்த்தவண்ணம் இருந்தாள். கையை நீட்டி, `‘அழாதே’’ என்றாள்.

மார்கரீட்டா உணர்ச்சிவசப்பட்டு லாராவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

`‘என்னை மன்னிப்பியா லாரா?’’

லாரா வெள்ளையாகச் சிரித்தாள். பிறகு குழப்பத்துடன் பார்த்தாள்.

‘`எனக்குத் தெரியாது’’ என்றாள். `‘அழாதே...’’ தன் கையில் வைத்திருந்த டிஷ்யூ காகிதத்தினால் மார்கரீட்டாவின் முகத்தைத் துடைத்தாள்.

மார்கரீட்டா சுயநினைவுக்கு வந்தவளாக, `‘ஸாரி பேபி’’ என்றாள்.

எத்தனை முட்டாள் நான்?

‘எனக்குத் தெரியாது...’ - லாரா புரிந்து சொன்னாளா... புரியாமல் சொன்னாளா?

அந்த எண்ணத்தை அப்புறப்படுத்துவதுபோல மார்கரீட்டா தலையை அசைத்துக்கொண்டாள். `வேண்டாம்... எனக்குப் புத்தி பேதலித்துப்போச்சு’ என்றாள் தனக்குள்.

பார்க்கில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. நாய்களுடன் வருபவர்களும் அலுவல கத்தில் இருந்து திரும்பி நடைபழக வந்தவர் களுமாக ஜனசந்தடி அதிகரித்துவிட்டது. லாராவுக்குக் கூட்டத்தைக் கண்டால், கலவரம் ஏற்படும்.

`‘வீட்டுக்குப் போகலாம் லாரா’’ என்று மார்கரீட்டா எழுந்தாள்.

லாரா எதுவுமே சொல்லவில்லை. வீடு போய்ச் சேரும் வரை மௌனமாக அவள் இருப்பது கண்டு யோசனை ஏற்பட்டது மார்கரீட்டாவுக்கு. 

`இவளைக் குழப்பிவிட்டேனா என்ன? நான் சரியான முட்டாள்...’

வீட்டுக்குள் நுழைந்தபோது டாரத்தியும் ஜானும் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தார்கள்.

டாரத்தி வழக்கம்போல் `‘ஹை... மார்கரீட்டா. பார்க் நடை எப்படி இருந்தது?’’ என்றாள் .

பிறகு லாராவைப் பார்த்து ‘`ஹை பேபி!’’ என்றாள்.

லாரா `‘ஹை’’ என்றாள் சுரத்தே இல்லாமல்.

பிறகு மெள்ள வார்த்தைகள் கோத்து ‘`மார்கீட்டா அழுதா’’ என்றாள்.

மார்கரீட்டாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

`‘ஓ நோ’’ என்று அவள் பதில் சொல்ல யத்தனிக்கையில், `‘யெஸ்... யெஸ்...’’ என்றாள் லாரா சத்தமாக.

டாரத்தி வியப்புடன் அவர்களையே சற்று நேரம் பார்த்தாள். பிறகு பெருமூச்சுடன் மார்கரீட்டாவின் அருகில் வந்து, `‘பரவாயில்லை விடு. எனக்குப் புரிகிறது’’ என்றாள் மெள்ள.

மார்கரீட்டா தன்னைச் சமாளித்துக்கொண்டு `‘ஸாரி லாரா... இனிமே அழ மாட்டேன். நல்ல பெண்ணா இருப்பேன்’’ என்று லேசாகச் சிரித்தாள். லாராவின் முகத்தில் இருந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்தது.
‘`தேநீர் தயாராயிருக்கு மாகி. குடிக்கலாம் வா’’ என்று டாரத்தி அழைத்ததும், லாராவுக்காக ஒரு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் போட்டுவிட்டு மார்கரீட்டா வந்து அமர்ந்தாள்.

“ஸாரி டாரத்தி’’ என்றாள்.

``பார்க்கிலே பெஞ்சிலே உட்கார்ந்து தூங்கிட்டேன். கெட்ட கனா. நேத்து டி.வி செய்தி கேட்டிருக்கக் கூடாது. கனாவிலேயே அழுதேன் போலிருக்கு.’’

``நீ எதுவும் சொல்லத் தேவையில்லை’’ என்றாள் டாரத்தி.

இருவரும் சற்று நேரம் தமக்குள் மூழ்கிய யோசனையுடன் தேநீர் பருகியபடி இருந்தார்கள்.

``மாகி... உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். லாரா இந்த அளவுக்குத் தேறுவானு நானும் ஜானும் நினைக்கவே இல்லை. நீ தேவதை மாதிரி வந்தே!’’

மார்கரீட்டா சரேலென்று நிமிர்ந்தாள்.

‘`வேண்டாம் டாரத்தி... எதுவும் சொல்லாதே தயவுசெய்து.’’

டாரத்தி அவளைக் கூர்ந்து பார்த்தாள். ``லாராவுக்கு சூட்சுமம் உண்டு தெரியுமோ? நம்ம மனநிலையை எப்படியோ புரிஞ்சுக்கிற சக்தி அவளுக்கு இருக்கு.’’

p90c.jpg

மார்கரீட்டா வெகுநேரம் எதுவும் சொல்லவில்லை. தேநீர் கோப்பையைக் கழுவி வைத்து, லாராவைக் கழிவறைக்கு அழைத்துச் சென்று உள்ளாடையை மாற்றி, இரவுக்கான ஆடையை அணிவித்து, படுக்கையில் படுக்க வைத்தாள். அவள் கிளம்பும்போது லாரா அவள் கையைப் பிடித்தாள்.

``நீ நல்ல பெண்ணா?’’ என்றாள்.

இன்று காரணம் புரியாமல் அடிவயிறு துவண்டது.

``தெரியலை லாரா...’’ என்றாள் மெள்ளப் புன்னகைத்து. பிறகு, ‘`நல்ல பெண்ணுனுதான் நினைக்கிறேன்.’’

‘`அப்ப அழாதே...’’

மார்கரீட்டா அவளது கையைப் பற்றி முத்தமிட்டாள்.

``மாட்டேன்... அழமாட்டேன்.’’

லாரா எதுவும் பதில் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

``எனக்குத் தூங்கணும்’’ என்று முணுமுணுத்தாள்.

மார்கரீட்டா மெள்ளக் கதவை லேசாகச் சாத்திவிட்டு வெளியே வந்தாள். டாரத்தி யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டி ருந்தாள். குரலில் படபடப்பு தெறித்தது.கலிஃபோர்னியா குண்டுவெடிப்பு விஷயம். மாகி கையசைத்து `போய்வருகிறேன்’ என்று சைகை காட்டிக் கிளம்பினாள்.

வண்டியில் ஏறி அமர்ந்ததும் டாரத்தியின் உணர்ச்சிவசப்பட்ட  முகம் நினைவில் நின்றது. மீண்டும் அடிவயிற்றைப் பீதி கப்பென்று பிடித்துக்கொண்டது. கடவுளே ஏன் இப்படி பூதங்கள் துரத்துகின்றன... என்ன ஆகிவிட்டது மனிதர்களுக்கு... என்ன தேவை அவர்களுக்கு? எங்கேயோ கோளாறு இருப்பதாகத் தோன்றிற்று. என்ன அது என்று புரியவில்லை. அவள் செல்லும் சர்ச்சில் இருக்கும் பாதிரிகளுக்குத் தெரியவில்லை.  `யாருக்கும் இப்போது நம்பிக்கை இல்லை’ மார்கரீட்டா என்றார் ரெவெரண்ட் ஜோசஃப் முன்பு... அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பு. நல்லவேளை இன்று அவர் உயிரோடு இல்லை. நேற்றைய சரமாரி குண்டுவெடிப்புக்கு, அதுவும் கேளிக்கைக்காக வந்திருந்த 15 அப்பாவி உயிர்கள் இரையானதற்கு மதவெறியர்கள் காரணம் என்றார்கள். மதமோ, பித்தோ,  அதற்குப் பின்னால் இருப்பது ஒரு வெறி. கோபம். கோபத்தின் காரணம் புரியவில்லை. மனுஷனின் இயல்பு மாறிப் போச்சா, பிறக்கும்போதே கோபத்துடன் பிறக்கி றோமா  அல்லது அது பின்னால் பதியும் படிமங்களா, எதை சமாதானப்படுத்தத் துடிக்கிறது அந்த வெறி? அதற்கு மன்னிப்பு உண்டா?

‘எனக்குத் தெரியாது’ - லாரா புரிந்து சொன்னாளா... புரியாமல் சொன்னாளா?

டாரத்தியின் முகம் மீண்டும் நினைவுக்கு வந்தது. அவள் முகத்தில் தெரிந்த கோபம். அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இன்றுதான் டாரத்தி உண்மையாகத் தெரிந்தாள்.

15 ஆண்டு பழக்கத்தில் இன்று புதிதாக அதை மார்கரீட்டா உணர்ந்தாள். அது ஆச்சர்யமான சமாதானத்தை ஏற்படுத்தியது. எந்தத் துணிவில் அவளைப் பார்க்கப்போனோம் என்று இன்று நினைத்துப்பார்க்கும்போது, ஆச்சர்யமாக இருந்தது.

 அன்று அவள் வழக்கமாகச் செல்லும் ரொட்டிக் கடையில் கூட்டம் இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்டிருந்த நிகழ்வுகளில் அவளுக்கு 10 வயது கூடிவிட்டிருந்ததாகச் சோர்வு அழுத்திற்று. அங்கு ஓரமாக இருந்த பெஞ்சில் அவள் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

``பாவம் டாரத்தி.  டாக்டர் சொல்லிட்டாராம்... `பெண்ணுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும்’னு. `வீட்டிலேயே இனிமேல் பார்த்துக்குங்க’ என்று சொல்கிறாராம். ஜானும் அவளும்  வேலைக்குப் போகணும். இல்லைன்னா மருத்துவச் செலவை எப்படிச் சமாளிக்கிறது? செவிலியை வைக்கிறதும் பெரிய செலவு. எத்தனை கஷ்டம் பாரு! ரொம்பச் சந்தோஷமான குடும்பம். இப்படி எல்லாம் நடக்கும்னு யார் நினைச்சது?’’

``நமக்குத் தெரிஞ்சது டாரத்தியைப் பத்தி.’’

``இந்தக் குழந்தைதான் அடிபட்டும் பிழைச்சுது. மத்ததெல்லாம்...’’

மார்கரீட்டா ரொட்டியை வாங்கிக்கொண்டு வண்டிக்குள் அமர்ந்தாள். ஸ்டீயரிங் வீலில் முகத்தைப் புதைத்துக்கொண்டபோது மார்பு குலுங்கிக் கண்ணீர் வந்தது. `ஜார்ஜ் பணி செய்யும் இடத்துக்குச் செல்லலாமா?’ என யோசித்தாள். அவருக்கு அது பிடிக்காது.

`என்ன செய்யட்டும் டாலி?’

டாலி பதில் சொல்லவில்லை. ஒரு பெருமூச்சுவிட்டபடி அவள் வண்டியைக் கிளப்பினாள். அந்தப் பெண்களின் பேச்சு சுழன்று சுழன்று அடித்தது. வண்டி தன்போக்கில் சென்றது.  ஒருவழியாக நின்றபோது அவள் திடுக்கிட்டாள். எங்கே வந்து நிற்கிறோம் ? இப்போது நினைவுக்கு வந்தது... ஜார்ஜ் ஒருமுறை இந்த வீட்டைக் காண்பித்தார்.

ஜார்ஜ் அன்று பெரும் கலக்கத்தில் இருந்தார். ``வேண்டாம்... வேண்டாம். நம்மை அவர்கள் பார்ப்பதற்கு முன் போயிடலாம்...’’

பித்து பிடித்ததுபோல அவளும் ஜார்ஜும் மருத்துவமனையில் விசாரித்தார்கள்...

``எப்படி இருக்கிறாள் அந்தப் பெண்?’’

பிரமை பிடித்திருந்தது இப்போது. போகலாமா கூடாதா என்கிற கேள்வி எழவில்லை. அவள் அந்த வாசற்கதவை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினாள்.

இரண்டு முறை அழுத்திய பிறகு டாரத்தி கதவைத் திறந்தாள். அவளைக் கண்டு லேசாக அதிர்ந்தது தெரிந்தது. அவள் பேசுவதற்கு முன்னர் மார்கரீட்டா அவசரமாகச் சொன்னாள்.
‘`தயவுசெய்து என்னைப் `போ’ என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு உதவ எனக்கு வாய்ப்பு அளியுங்கள். லாராவை நான் பார்த்துக்கொள்வேன். செவிலியாக நான் பணியாற்றி இருக்கிறேன்.’’

டாரத்தி திடுக்கிட்டாற்போல் இருந்தது.

“ ஆனால்...”

“எனக்கு ஊதியம் வேண்டாம். தயவுசெய்து என்னை நம்புங்கள். சர்ச்சில் ரெவெரண்ட் ஜோசஃபிடம் வேண்டுமானால் என்னைப் பற்றி கேளுங்கள். பிறகு எனக்கு நீங்கள் போன் செய்யுங்கள்.”
அவளுடன் சேர்ந்து ஜார்ஜும் காத்திருந்தார். போனில் வரும் அழைப்புக்காக... இரண்டு நாட்கள் கழித்து வந்தது.

வண்டியின் கடிகாரம் ஏழு மணி ஓசை எழுப்பியது. `டாலி... இதோ கிளம்பலாம்’ என்றாள் அது கேட்டு பதில் சொல்வதுபோல. வண்டி தன்னைப்போல் ஓடியது. தானாகவே வீட்டின் முன் நின்றது. அவள் தன்னுள் மூழ்கிய யோசனையுடன்  காரேஜ் பொத்தானை அமுக்கி நுழைந்து, பிறகு மூடி  காரைப் பூட்டி வீட்டுக்குள் நுழைந்தாள். இன்று தொலைக்காட்சி பக்கமே போகக் கூடாது என்கிற வைராக்கியத்துடன் தனது எளிய சாப்பாட்டை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சூடாக்கிச் சாப்பிட்டுவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படுக்கச் சென்றாள். புத்தகத்தில் கண்கள் பதியவே இல்லை. மனசு தட்டாமாலையாகச் சுழன்றது. இன்று மிகப் பெரிய தனிமை உணர்வு அவளை ஆட்கொண்டது.  ஐந்து வருஷங்களுக்கு முன்னர் எந்த முகாந்திரமும் இல்லாமல் இறந்துபோன ஜார்ஜின் நினைவு அலைக்கழித்தது. அந்த மாதிரி ஒரு முடிவு வந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதற்கு முன் மனத்தில் இருக்கும் பாரத்தை இறக்க வேண்டும்.

தூக்கமும் விழிப்புமாக, கனவும் நனவுமாக நகர்ந்த தூக்கம் அதிகாலையில் முழுவதுமாக விழித்துக்கொண்டது. டாரத்தியின் கைபேசி எண் ஒலித்தது.

‘`லாராவுக்கு ராத்திரியில் இருந்து ஜுரம் மாகி. மருத்துவமனையிலே சேர்க்கவேண்டியதா போச்சு.” - டாரத்தி முடிப்பதற்கு முன் அவள் சொன்னாள்.

`‘இப்பவே வர்றேன்’’ - பதற்றத்துடன் தயாராகிப் புறப்பட்டாள்.

`என்ன ஆகிவிட்டது லாராவுக்கு? நேற்றுகூட நன்றாக இருந்தாளே? டாலி வம்பு செய்யாமல் அவளை மருத்துவமனை வாசலில் கொண்டு நிறுத்திற்று.

லாரா கண் மூடிப் படுத்திருந்தாள். பிராணவாயுக் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. மார்கரீட்டாவைக் கண்டதும் டாரத்தியின்  முகத்தில் நிம்மதி தெரிந்தது.

`‘திடீரென்று மூச்சுத்திணறல் மாதிரி இருந்தது. இங்க வரவேண்டியதாயிட்டது.”

‘`நல்ல காரியம் செய்தீர்கள். நீங்க ரெண்டு பேரும் போய் ஓய்வெடுத்து அப்புறம் வாங்க. நான் இங்கேயே இருப்பேன். கவலைப்படாதே டாரத்தி’’ என்றாள் மார்கரீட்டா.

‘`தாங்க்யூ மாகி. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே...’’

‘`உஷ்... கிளம்பு.’’

லாரா கண் விழிக்காமல் படுத்திருந்ததைப் பார்த்துக் கலக்கமாக இருந்தது. தன்னிச்சையாக தலை அசைந்த வண்ணம் இருந்தது. 21 வயது நங்கை. ஐந்து வயது மூளை வளர்ச்சியில் தேங்கிவிட்ட குழந்தை.
அவளுடைய லாரா. 15 ஆண்டு காலமாக அவளது பராமரிப்பில் பிழைத்து மீண்ட லாரா.மூளை ஐந்து வயதில் நின்றாலும், உடலின் பருவ மாறுதலுக்கு உள்ளானதை உணராத யுவதி. நம் மனநிலையைப் புரிந்துகொள்ளும் சூட்சுமம் அவளுக்கு உண்டு என்கிறாள் டாரத்தி.  உண்மையா?

மருத்துவர்கள் ஏதோ பரிசோதனை செய்தவண்ணம் இருந்தார்கள். அவள் திரும்பத் திரும்ப அவர்களைக் கேட்டாள்.

‘சரியாகிவிடுவாளா?’

அவர்கள் பதில் சொல்லவில்லை. இரவு அவள் மருத்துவரின் அனுமதியுடன் லாரா இருந்த அறையிலேயே தங்கினாள்.

ஒரே ஒரு பிரார்த்தனையுடன் லாராவின் கையை வருடியபடி அவள் இருந்தாள். எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் . லாராவுக்கு உள்ளுணர்வு இருக்குமா?

லாரா... லாரா...  அவள் லாராவின் கையைப் பிடித்தபடி உடல் குனிந்து  முகத்தை கட்டிலின் விளிம்பில் கவிழ்த்துக்கொண்டாள்.

கவிழ்ந்த இருளில் காலை நேரம் தெரிந்தது. டாம் எதிரில் நின்றான்.

‘`பை மாம்!’’

அவனுடைய முத்தம் இன்னும் நினைவிருக்கிறது. மென்மையான உதடுகள்.

p90d.jpgஅவன் எங்கோ கிளம்பிப்போனான். அவன் முதுகைப் பார்த்து ‘பை’ என்றாள் பதிலுக்கு. ஜார்ஜ் பணிக்குச் சென்றதும் அவளும் தான் வேலைபார்க்கும் கடைக்குக் கிளம்பினாள்.  செல்லும் வழியில் ஒரு பள்ளி. கலகலவென்று உற்சாகமாகக் காட்சி அளிக்கும். வெள்ளையும் நீலமுமான சீருடையில் சிறுவர்கள் சிறுமியர்கள். முன்பு டாம் படித்த பள்ளி. அதைத் தாண்டும்போது எல்லாம் மனசில் ஒரு மகிழ்ச்சி பூக்கும். இன்று காட்சி வேறாக இருந்தது. கும்பலும் வாகன நெரிசலுமாக இருந்தது. பிறகுதான் போலீஸ் தலைகள் தெரிந்தன. பல பெற்றோர்கள் கவலையுடன் நின்றிருந்தார்கள். ஓலங்கள் கேட்டன. ஒருவரை ஒருவர் அணைத்து அழுதபடி, சில இளம் பெண்கள் நின்றிருந்தார்கள். அவள் பீதியுடன் வண்டியை ஓரமாக நிறுத்தினாள். கண்ணாடியை இறக்கி ‘என்ன இங்கே?’ என்றாள் அங்கு நின்றிருந்த பெண்மணியிடம்.

‘`யாரோ ஒரு கிறுக்கன் ஸ்கூலுக்குள்ளே நுழைஞ்சு சரமாரியா சுட்டிருக்கான்.’’

‘`கடவுளே... அவன் பிடிபட்டானா?’’

`‘செத்துட்டான். போலீஸ் பிடிச்சு சுட்டது.’’

‘`கடவுளே!’’

‘`பாவி... எத்தனை குழந்தைகள், நானே எட்டு சடலத்தை எண்ணினேன். மூணு மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். அதுவும் பிழைக்குமோ என்னவோ...’’

ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்த உடல்கள். நீலச் சீருடை சிவப்பேறி...

மார்கரீட்டா லாராவின் கையைப் பிடித்தபடி விசித்து விசித்து அழுதாள். `லாரா நீ ஒருத்திதான் பிழைச்சே. ஆனால் குண்டடி பட்டதிலே மூளையைத் தாக்கிவிட்டது’.

லாராவின் கையைப் பிடித்த விரல்கள் நடுங்கின.

லாரா அந்தச் சண்டாளன் என் மகன்.  டாம். சாதுவா இருந்தவன். அவனுக்குள்ள ஒரு பூதம் இருந்தது எனக்கு சத்தியமாத் தெரியாது.  எனக்கு ஒண்ணுமே புரியல்லே. அவனைப் பெத்தவ. எங்கே தவறினேன்னு தெரியல்லே. ஸாரி... ஸாரி.

காலையில் கண் விழித்தபோது  லாரா அவளையே பார்த்தபடி இருந்தது இனம்புரியாத நெகிழ்ச்சியை அளித்தது. அவள் கையைப் பற்றி, ‘`எப்படி இருக்கே பேபி?’’ என்றாள்.
லாரா அவளைக் கூர்ந்துபார்த்து, ‘`அழாதே’’ என்றாள்.

‘`இல்ல... அழலே...’’ .

‘`லவ் யூ மாகீட்டா’’ என்றாள் லாரா.

நான் சொன்னது காதில் விழுந்ததா? புரிந்து சொல்கிறாளா புரியாமல் சொல்கிறாளா?

தெரியவில்லை. ஆனால் மனசில் பாரம் குறைந்திருந்தது.

அன்று வீட்டுக்்குக் கிளம்பும்போது ஸ்டீயரிங் வீல் கைகளில் மிக லகுவாக இருந்தது. தன்னிச்சை யாக அது நகர்ந்தபோது, அது கையோடு வந்ததை உணர்வதற்கு அவளுக்கு அவகாசம் கிடைக்காமல்போனது. விவரம் அறிந்து விரைந்த மெக்கானிக் டேவிட் தலையை அசைத்து முணு முணுத்தான்... `` `குப்பையிலே போடவேண்டிய வண்டி’ என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.’’

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.