Recommended Posts

வார்த்தைகள் யாவும்
வலுவிழந்து போகின்றன
கார்த்திகை வானம் போல
மனம் கனத்துக் கிடக்கின்றது
நேற்று வரை எம்மோடு இருந்த நீ
இல்லை என்ற சொற்கேட்டு
இடி விழுந்த கோபுரம் போல
இதயம் நொருங்கிக் கிடக்கின்றது
ஆற்றல் மிகுந்த பேராசானே! நீ
ஆக்கி வைத்த இலக்கியங்கள்
இன்னும் நூறு தலைமுறைக்கு
ஈழத் தமிழர் கதை சொல்லி வாழும்
பழகிட இனித்திடும் வெல்லமே
பார்வையாலே பேசும் பெருமகனே
ஈழத்தமிழர் பெயர் சொல்லி எவர்
இரந்து கேட்டாலும் இல்லை எனாமல் 
நிறைந்து வளங்கும் வள்ளலே
உன்னால் உயர்ந்தவர் பலர் - எம்
உள்ளத்தில் என்றும் நீ 
இருப்பாய் பெரும் கனலாய்
வருகின்ற எம் படைப்புக்களின்
இனியும் நீ வாழ்ந்து கொண்டேய் இருப்பாய்...

#ஈழத்துப்பித்தன்

 

2002 காலப்பகுதிகளில் நாம் யாழ் களத்தில் நுழைந்த போது எம்மை தட்டிக் கொடுத்து வயது இடைவெளி பாராது சக நண்பனாய் எம்மோடு பழகியவரும் பல்துறைக் கலைஞனுமான "இராஜன் முருகவேள்" (சோழியான்) அவர்களின் நினைவு சுமந்து...

 • Like 7

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By அருள்மொழிவர்மன்
   இயற்கையின் இனிமையைத் தொலைத்து‌
   மழலையின் சிரிப்பை மறந்து‌‌‌‌
   நண்பனின் நகைச்சுவையைப் பிரிந்து‌‌‌
   பெற்றோரின் பேணலைப் புறக்கணித்து‌‌
   இரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து
   பணப்பேயின் பிடரியைத் தொடர்ந்து
   பின் பலிகடாவாகி‌
   சர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும்‌‌‌
   இயந்திரமாய் திரியும் இவ்வாழ்க்கையில்‌‌
   சுவரில்லா சித்திரமாய்‌‌
   நரக‌ வாசம் செய்யும் நகரவாசிகளே !!!‌‌‌‌‌‌
  • By அருள்மொழிவர்மன்
   இரவில் இன்பம் தரும் உன் விரல்கள்
   பகலில் விலகிப் போக
   வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு
   மறுஇரவு முழுநிலவாகுமோ!
  • By சண்டமாருதன்
   வேலாயுததத்தின் வீடு.
    வீட்டை சுற்றி  பலா கமுகு பப்பாசி என மரங்கள் சூழ்ந்து சோலையாய் இருக்கின்றது,பின் பக்கம் மாதுளையும் தேசிமரமும், மரத்துக்கடியில் அடுப்பெரித்த சாம்பலை வேரை கரையான் அரிக்கமல் கொட்டிவிடுவது வழக்கம். மத்தியாண வெக்கைக்கு  வீட்டு நாய்களும் படுத்திருக்கும்  கோழிகளும் சாம்பல் அவ்வப்போது சம்பல் குளிக்கும். 
   முன்பக்கம்  சுவர் நீட்டுக்கும் நந்தியாவட்டையும்       பக்கவாட்டில் குரோட்டன்களும் நாலுமணிப்பூச் செடிகளும் எப்போதும் செழிப்பாக இருக்கும் . வீட்டுக்கு ஈசான மூலையில் கிணற்றில் இருந்து குளிக்கும் தண்ணி சுவரோர பூச்செடிகளை எப்போதும் பசுமையாக வைத்திருக்கின்றது.. வீட்டு வாசலுக்கு இரண்டுபக்கமும்  திண்ணைகள் மத்தியாணத்திலும் குழுமையாக இருக்கும்.. திண்ணைக்கு நேர முன்னுக்கு பலாமரம்  முற்றத்தை நிழலாக வைத்திருக்கும்.
   வேலாயுதத்துக்கு ஒரு பொடியன் பதினொரு வயதிலிருக்கின்றான். வைரவநாதன். வீட்டுப்பெயர் நாதன். நாதனின் நண்பன் அடுத்ததெருவில் இருக்கும் சிவன் என்கின்ற சிவனேசன்.
   சிவன் அன்று பள்ளியால் வந்ததும்  கழுசானைக் கழட்டி ஒருகாலை வெளியே எடுத்து அடுத்தகாலால் தூக்கி எத்திவிட்டான் கழுசான் கணக்காக உடுப்பு போடும் கொடியில்    விழுந்தது. அனேகமாக ஒற்றைக் காலால் எத்திவிடும் கழுசான்கள் சரியான இடத்தில் விழும்.  அன்றும் அப்படிஎத்திவிட்டு வீட்டுக்கு போடும் கழுசானை மாற்றிக்கொண்டு குசினிக்குள் போய் அம்மா போட்டு மூடிவைத்த சாப்பட்டை அவசரமாக விழுங்கிவிட்டு நாதன் வீடு நோக்கி விழையாட வெளிக்கிட்டான்.
    வழமையாக நாதன் வீட்டை போனதும்   திண்ணையில் கொஞ்ச நேரம் இருந்து வைரவநாதன் வந்ததும் அவனோடு போய் பிள்ளையார் கோயில் மரத்தடியில் விழையாடுவார்கள். அன்று படலையை துறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் திண்ணையில் வேலாயுதம்  கையில் உழவுமாட்டுக்கு அடிக்கும் துவரம் கேட்டியுடன் உரத்த குரலில் கததுகின்றார். முன்னால் ஊமையன் பிலாமரத்தடியில் நீ அடித்தாலும் பரவாயில்லை என்று ஏட்டிக்கு போட்டியாக கத்துகின்றான். 
   ஊமையனின் குரல் ஆ.. ஊ. என்று மட்டுமே வரும் முகபாவனைகளும் கை அசைவுகளும் பதில் வார்த்தைகளை விட ஆவேசமாக இருக்கின்றது.. கடும் காற்றில் கமுக மரங்களின் அசைவுகள்   முறிந்துவிடும போல் இருக்கும் ஆனால் முறியாததை காற்று நின்ற பின்தான் உணரமுடியும். அதுபோல் ஊமையன் சொல்வது இரவு நித்திரைக்கு பாயில் படுக்கும் போது ஒருவேளை உணரமுடியும்.
   வேலாயுதத்துக்கு பின்னால் அவரின் மனிசி தெய்வானையக்க வாசல் கதவு நிலைக்கு முண்டுகொடுத்துக்கொண்டு நிற்கின்றா.  வழமையாக அந்நேரத்துக்கு தேசிமரத்தடியில்  படுத்திருக்கும் நாய்  ஊமையனுக்கு அருகில் நின்று புரியாத புதிராக வேலாயுதத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றது. 
   படலையை துறந்துகொண்டு போன சிவன்   வீடடு படலைக்கும் முற்றத்துக்கும் இடையில் நின்ற செவ்வரத்தம் பூ மரத்தோடு நின்றுவிட்டான்..வேலாயுதத்தை பார்க்க அவனுக்கும் பயமாய் தான் இருந்தது.. துவரம் கேட்டியால் தனக்கும் அடித்துவிடுவாரோ என்ற பீதி சம்மந்தமில்லாமல் வந்தது.
   ஊமையனுக்கு வயது 45 க்கு மேலிருக்கும். அவருடைய குடும்பம் எங்கிருக்கின்றது என்று யாருக்கும் தெரியாது. நாலுவருடத்திற்கு முன்பு எங்கிருந்து வந்தார் என்றும் தெரியாது. ஊரில் முக்கால்வாசிப்பேர் அவர் பால் அன்பாகவே இருப்பார்கள்.ஒருவித இரக்கத்துடன் கூடிய அன்பு. பக்கத்தில் பிள்ளையார் கோயிலில் பொங்கினாலும் சரி, அயல் வீடுகளில் அந்தியோட்டி  துவசம் பாறணை என்றாலும் அயலவர்கள் கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பார்கள். தோட்க் காவலில் நின்றால் சிலர் சைக்கிளில் சாப்பாடு கொண்டுபோய் கொடுப்பார்கள்.
   தெய்வானையக்க சற்று உரத்த குரலில்          அவன்தான்    நாலுவருசமா இங்க தோடடக் காவிலில் நிக்கிறானே அவன்ர சம்பளததை கொடுத்துவிடுங்கோவன். இந்த பாவம் எல்லாத்தையும் எங்கபோய் கழுவிறது....
   வேலாயுதம் அண்ணை இப்படி இருந்து ஒருபோதும் பார்த்ததில்லை.  ஊமையன் எங்கள் ஊருக்கு வந்ததில் இருந்து அவருக்கு சாப்பாடு கொடுத்து உதவ பலர் இருந்தாலும் இருப்பிடம் வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை. வேலாயுதமண்ணை முன்வந்தார். தன் கூடவே வைத்திருந்தார். கழிவாற்றங்கரையில் உள்ள அவரது தோட்டக் கொட்டிலில் தங்கவைத்து தோட்டக் காவலுக்கும் வைத்துக்கொண்டார். அவர் வீட்டில் உள்ளவர்கள் என்ன உண்டு குடிக்கின்றார்களோ அதையே ஊமையனுக்கும் கொடுத்தார்..
   என்ன நடந்திருக்கும்...? சிவன குழம்பியபடியே அவனுள் பல கேள்விகள்.. 
    ஊமையனுக்கு மலேரியா வரும்போதெல்லாம் சைக்கிளில் பின்னுக்கு ஏத்திக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு மருந்தெடுக்க பலமுறை போனதை பார்த்திருக்கின்றான்..
   ஒருமுறை பிள்ளையார் கோயிலடியில்        கிளித்தட்டு விழையாடிய பொடியள் ஊமையனோடு சேட்டை விட்டு ஊமையன் குழம்பியடித்தபோது அந்த இடத்தால் வந்த வேலாயுதமண்ணை கோபத்துடன் உறுமினார்..
   யாராவது ஊமையனோடு சொறிராத்தினால் துவரங்கேட்டியல் விளாசுவன்....
   அதற்கு பிறகு ஒருவரும் சொறிச்சேட்டை செய்வதில்லை.
   என்னமோ பெரிய பிரச்சனை.. நாதன் வெளியில் வந்தால் தான் அறியலாம் அவன் என்னும் குசினிக்குள்ள தின்னுறான் போல கிடக்கு.. திண்ணையை கடக்க சிவனுக்கு தைரியம் இல்லை.
   முதல்ல இந்த கம்ப அங்கால வையுங்கோ..தெய்வானையக்க துவரம்கேட்டியை இழுத்து கதவுக்கு பின்னால் வைத்துவிட்டா
   அப்பாடா என்று சிவனுக்கு கொஞ்சம் நிம்மதி..
   கொஞ்ச நேரம் கழித்து நாதன் வண்டியை தடவிக்கொண்டு வெளிய வந்தான்.
   அம்மா கோயிலடிக்கு போட்டு வாறன் என்று பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்..
   போறவளியில் சிவன் கேட்டான் .. என்ன பிரச்சனை?
   ஊமையன் வேணுமென்று தோட்டத்து கண்டாயத்தை திறந்து விட்டுட்டான்.  இரவு மாடு பாய்ஞ்சு எல்லாத்தையும் சுத்தமா துடைச்சு மேஞ்சுட்டுது.. அப்பா வேலையை விட்டு போக சொல்லிட்டார் அவன் காசு கேட்டுக்கெண்டு நிக்கின்றன்.
   குடுக்க வேண்டியதுதானே ?
   பயிர் அழிஞ்சதுக்கு சம்பளக்காசு தான் மிச்சம் எண்டுறார் அப்பா..
   ஏன் வேணுமெண்டு துறந்து விட்டவர்? யார் கண்டு பிடிச்சது ?
   சிங்கமண்ணை கருக்கல்ல வயலுக்கு போகேக்க மாட்ட உள்ள விட்டு கண்டாயத்த சாத்தியிருந்தத பார்த்து ஊமையன எழுப்பி மாட்ட விரட்டினதெண்டு மூர்த்தியண்ணைக்கு சொன்னவராம்.
   அப்படி இருக்காது என்றான் சிவன்
   டேய் எனக்கும் ஊமையனை பாரக்க பாவமாய் இருக்கு ஒண்டு சொல்லவா ? யாரெட்டையும் சொல்லாத
   ம்..
   இரவு சாப்பாடு கொடுத்திட்டு வரேக்க நான்தான் கண்டாயத் தடியை கொழுவ மறந்துட்டன்..
   டேய்...
   ஓமெடா ...... உமையன் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள இரண்டு மாடுகள் உள்ள போட்டுது.. சாப்பிட்டு கொஞ்ச நேரத்தால ஊமையன் படுக்க போகேக்க கண்டாயத்த பாத்து மாடு உள்ளுக்கு இருக்கிறது தெரியாம சாத்தி விட்டான்..
   நீதான் மறந்திட்ட எண்டுறது அவருக்கு தெரியுமே !
   ஓம் ஆனா சொல்ல மாட்டார்.. அப்பா என்க்கு துவரம்கேட்டியால அடிச்சுப்போடுவார் என்று ஊமையனுக்கு பயம்..
   டேய் பாவமெடா  பேசாம சொல்லிவிடடா..
   அடிச்சே சாக்காட்டிபோடுவார்..
   நீ இந்த பத்தேக்க ஒளிஞ்சிரு நான் தண்ணி குடிக்கிறது போல போய் கொம்மாட்ட சொல்லுறன்.. கொப்பற்ர கோவம் போனதும் பொழுதுபடேக்க வீட்ட போவம்.. எங்கட அப்பாவ கூட்டிக்கொண்டு போவம்...
   ஒருமாதிரி சம்மதித்தான் நாதன்
   சிவன் பயத்துடன் நாதன் வீட்டை போனான்
    தெய்வானையக்க தண்ணி வேணும்
   குசினிக்க கிடக்கு எடுத்துக் குடி..
   தெய்வானையக்காவை குசினிப்பக்கம் வர வைக்கோலாது போல கிடக்கே !
   கையெல்லாம் மண்.. வாத்து தாங்கோ..
   தெய்வானையக்க பின்பக்கம் போக அவ பின்னாலயே போய் குசினிக் கதவடியில் வைத்து நாதன் சொன்னதை சொன்னான் சிவன்
   எங்க அந்த கழுசடை ?
   பயத்தில எங்கட வீட்டை போறான் இரவு வாறானாம்
   சொன்னது தான் சிவன் முன்பக்கமாக போகாமல் பின்பக்கம் வேலிக்குள்ளால பூந்து கோயில் நோக்கி விரைந்தான்..
   சிவனும் நாதனும்  பத்தைக்குள்ள மறைந்திருந்து தகப்பன் துவரம் கேட்டியுடன் வருகின்றாரா என்று பதபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்...
   ஏன்டா கொம்மா சொல்லியிருப்பாவே.. என்னும் கொப்பர காணேல்ல
   அதுதாண்டா நானும் யோசிக்கிறன்..
   ஒரு மணித்தியலத்தின் பின் படலையை திறந்துகொண்டு வேலாயுதத்தின் சைக்கிள் வயல்பக்கம் புறப்பட்டது.. பின்னால  ஊமையன் இரண்டு கைகளையும் கரியரில் இறுக்க பிடித்தபடி இருந்தார் ...
   ஊமையனும் தகப்பனும் சமாதானமாகினது பெரும் நிம்மதியாய் இருந்தாலும் இரவு என்ன பூசை நடக்கும் என்ற பீதி நின்றபாடில்லை..
   டேய் கொம்மாட்ட முதல் போவம்.. என்று பிள்ளையார் கோயிலடி பத்தையை விட்டு தெய்வானையக்காவிடம் நாதனை இழுத்துக்கொண்டு போனான் சிவன்..
   தெய்வானையக்க அடுப்பு ஊதுற குழலால குசினிக்குள்ள புகைக்கிற அடுப்பை ஊதிக்கொண்டிருந்தா..
   நீ குசினிக்குள்ள போடா என்றான்..
   நாதன் திண்ணையோட நின்றுவிட்டான்.. முதல் ஒருக்கா பயித்தங்கொடியை பாரடா என்று நாதனிடம் சொல்லிவிட்டு உரமெடுக்க போய்வாறதுக்குள்ள ஆற்றங்கரை கூழா மரத்தில் ஏறி குழம்பழம் தின்ன குரங்குகள் பயித்ததங்கொடிகளை மொட்டை அடிச்சுபோட்டுது. அண்டைக்கு தகப்பன் துவரங்கேட்டியால் இழுத்த குறி என்னும் குண்டியில இருக்கு.  குறுக்க வந்த தெய்வானையக்காவுக்கும் முதுகில ஒண்டு விழுந்தது. 
   நாதன் தகப்பன் வாறாரோ என்று படலையும் பார்த்தபடி திரும்ப அகப்பைக் காம்போடு தாய் குசினிக்குள்ளால வாரவோ எண்டு இரண்டுபக்கமும் மாறிமாறி பார்த்து முழுசிக்கொண்டிருந்தது சிவனுக்கு பாவமாக இருந்தது. 
   பொழுதுபட்டுவிட்டது. இனி சிவனும் நிக்கேலாது..  நாதனை விட்டு போறது பாவமாக இருந்தது. இருந்தாலும் ஒன்றும் செய்யேலாது.. 
   நான் போறன்டா என்றுவிட்டு சிவன் வெளிக்கிட்டான். படலைதாண்டி சொட்டு தூரத்தில் நாதன் அம்மா அம்மா என்று குழறுவது கேட்டது.. இனி செய்யமாட்டன் அம்மா என்று குழறுவது கேட்டது.. 
   விடிய நாதன் பம்மிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிட்டு வந்து சிவன் வீட்டு படலையடியில் சிவனுக்கு காத்துக்கொண்டிருந்தான்..
   சிவனின் தகப்பன் சிற்றம்பலத்தார் ஆத்திப் பட்டைகளை காலில் உழக்கி கையால் ஆத்திநாரை உரித்துக்கொண்டிருந்தார்.. நாதனைக் கண்டதும் 
   என்னடா இரவு நல்ல பூசைபோல கிடக்கு.. நாதன் முழுசிக்கொண்டு நிண்டான்
   ஏண்டா கொப்பன் கஸ்டப்பட்டு பயிக்கொடி வளர்த்தா அதன மாட்டுக்கும் குரங்குக்கும் தின்னக் குடுத்தா என்னத்த உருப்படுறது ?  அத்தோட சிற்றம்பலத்தார் உரித்த ஆத்தி நாரை எடுத்துககொண்டு பின்பக்கம் போய்விட்டார்..
   சிவனும் நாதனும் பள்ளிக்கூடத்துக்கு நடந்துகொண்டே
   ஏன்டா காலம கோயில்கு போய் வாறியோ? திருநூறு எல்லம் வைச்சிருக்கு
   இல்லடா அம்மா பூசிவிட்டா..
   ஏன்டா கொப்பரும் அடிச்சவரோ ?
   இல்லை.. அம்மா அடிச்சதோட அழுகொண்டு சாப்பிடாம நித்திரயாபோனன்.. அப்பா ஆத்திரத்தோட தான் வந்தவர் ஆனா அம்மா அடிச்சு ஆழுதுகொண்டு படுத்திட்டதால அப்பா இரவு பத்துமணிபோல எழுப்பி சாப்பிட வைச்சார்.. ஒண்டும் சொல்லேல்ல.. 
   ம்.. என்றான் சிவன் எதிர்பார்த்தது போல.. 
  • By புங்கையூரன்
   கண் தெரியும்  தூரம் வரை…..
   காலம் தின்று..துப்பிய ….,
   எச்சங்களின் மிச்சங்களாய்….,
   செத்துப் போன வீடுகளின்,
   எலும்புக் கூடுகள் !

    
   வெறுமைகளை மட்டுமே…,
   வெளியே காட்டிய படி…,
   உண்மைகளை ஆழப் புதைத்து..,
   கண் மூடித் துயில்கின்ற…..,
   வரலாறுகளின்  சுவடுகள் !
    
   அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்..,
   ஆளப் புதைந்திருக்கும் …..,
   வைரவ சூலம் மட்டும்….,
   எத்தனை வடை மாலைகளையும்,
   எத்தனை தேசிகாய்களையும்,….,
   தன் மீது சுமந்திருக்கும் ?
    
   அந்தக் கருக்குவாச்சி மரம்,
   எத்தனை காதலர்களின்,
   இரவு நேரச் சந்திப்புக்களை…,
   விரக தாபங்கள் சிந்தும்,
   கற்பூர சத்தியங்களை….,
   தன்னுள் புதைத்திருக்கும் ?
    
   காவோலைச் சேலை இழந்து….,
   கதியால் கரங்களால் …,
   தங்கள் மானம் காத்து..,
   காவிளாய்ச் செடிகளின் விரிப்பில்,
   மறைந்து கிடக்கிறதே நிலம் !
    
   ஒரு காலத்தில்,,
   கரும் பேட்டுக் குஞ்சுகளாய்…,
   வரம்புகளில் மரக்கறிகளும்,
   வளவு நிறைந்த மிளகாய் மரங்களுமாய்.,
   நான் செய்த தோட்டம் !
    
   நத்தை பொறுக்கும் செண்பகங்களும்….,
   மிளகாய் கடிக்கும் கிளிகளுமாய் …,
   கல கலத்த தோட்டம்….!
    
   எனது மகன் …,
   உழக்கிய துலா கூட….,
   இன்னும் நிமிர்ந்தே நிற்கிறது !
    
   மகன் கனடாவிலும்,,,.
   மகள் ஜெர்மனியிலும…..!
    
   பிள்ளைப்பெறு …..,
   பாக்கப் போன மனுசியும்,
   பிள்ளையள் பாவம் எண்டு….
   அங்கையே நிண்டுட்டுது !
    
   அக்கினி சாட்சியான.....,
   வசிட்டர் வடக்கிலும்,
   அருந்ததி தெற்கிலுமாய்....,
   ஆரிட்டைப் போய் அழுகிறது ?
    
   உனக்கென்னப்பா பிரச்சனை எண்டு....,
   ஊரே பொறாமைப்  படுகுது !
    
   எனக்கென்ன குறைச்சல் ?
   ஆஸ்பத்திரி மாதிரி..,
   எல்லா மருந்துகளும்...,
   அலுமாரிக்குள்ள அடுக்கி இருக்கு !
   ஆரோ ஒருத்தி வந்து..,
   அடிக்கடி  சமைப்பாள் !,
    
   பொறுங்கோ….வாறன் !
   வல்லுவத்துக்குள்ள போன் சிணுங்குது !
    
   ஒரு பேரனோட இங்கிலிசும்…,
   மற்றப் பேரனோட ஜெர்மனும்..,
   தமிழில கதைக்க வேணும் !
    
   எனக்கென்ன குறைச்சல் ?
    
  • By புங்கையூரன்
   சிறகு முளைக்கும் முன்னரே...,
   இறக்கை விரிக்க வைத்த நாள்!
    
   பொத்திப் பொத்திப்..,
   பிள்ளை வளர்த்தவர்கள்...,
   பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் !
    
   எங்கு போனாலும் பரவாயில்லை..,
   இங்கு மட்டும் வேண்டாம்  ராசாக்கள் ...!
   எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் !
    
   நாங்கள் உயிரோடு இருந்தால்....
   நாளைக்கு எங்களுக்கு...,
   கொள்ளி போட வந்து விடுங்கள்!
    
   காணியை விற்றார்கள்,
   கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்!
   கைகளில் கிடந்ததை விற்றார்கள்!
   காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்!
    
   நாளைய நம்பிக்கைகளை,
   எஜன்சிகளிடம் கையளித்தார்கள்!
    
   உலகப் படத்தையே காணாதவர்கள்..,
   சில நாட்களுக்குள்...,
   உலகம் முழுவதையுமே..,
   உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!
    
   இன்றோ....,
   கோவில்கள், கும்மாளங்கள்,
   கும்பாபிஷேகங்கள்,,,,,,
   கறிப் பாட்டிகள்...,சாறிப் பாட்டிகள்,
   கொண்டாட்டங்கள்....எனக்,
   கொடி கட்டிப் பறக்கிறார்கள்!
    
   இடைக்கிடை....,
   சந்திப்புகளின் போது...,
   பியருக்குக் சொட்டைத் தீனியாய்..,
   பாரைக் கருவாட்டுப் பொரியலாய்,
   கருவேப்பிலைக் கொத்தாய்,
   கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய்,
   யாழ்ப்பாண நினைவுகள்...,
   அவர்களுடன் வாழ்கின்றன!
    
   கொஞ்சம் போரடித்தால்....,
   ஊர்ப்பக்கம் ஒரு முறை..,
   எட்டிப்பார்த்து......,
   சோர்ந்து போன ஈகோக்களைக்,
   கொஞ்சம் நிமிர்த்திய திருப்தியுடன்..,
   நீட்டிய வால்களை ...,
   மீண்டும் சுருட்டிக் கொள்வார்கள்!
    
   பீஜித் தீவில் ...,
   மொரிசியஸ் தீவில்...,
   தென்னாபிரிக்காவில்...,
   மலேசியாவில்...சிங்கப்பூரில்,
   தமிழர்கள் வாழ்வது போல...,
   அமெரிக்காவில்....கனடாவில்...,
   இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,
   தமிழர்கள் வாழ்வார்கள்!..
    
    
  • By புங்கையூரன்
   என் முதலாவது காதலியே...!
   உன்னை நெஞ்சோடு…,
   இறுக்கமாக அணைத்த நாள்,
   இன்னும் நினைவிருக்கின்றது!
    
   நீ…,!
   எனக்கு மட்டுமே என்று..,
   பிரத்தியேகமாக...
   படைக்கப் பட்டவள்!
    
   உனது அறிமுகப் பக்கத்தில்,
   எனது விம்பத்தையே தாங்குகிறாயே!
   இதை விடவும்…,,
   எனக்கென்ன வேண்டும்?
   உனது நிறம் கறுப்புத் தான்!
   அதுக்காக….,
   அந்தக் கோபாலனே கறுப்புத் தானே!
   அதுவே உனது தனித்துவமல்லவா?
    
   உன்னைப்  பற்றி…,
   எனக்கு எப்பவுமே பெருமை தான்!
   ஏன் தெரியுமா?
   ஜனநாயகமும்...சோசலிசமும்,
   உடன் பிறந்த குழந்தைள் போல..
   உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!,
   உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது?
    
   என்னவளே...!
   தோற்றத்தில்…,
   நீ கொஞ்சம் பெரிசு தான்!
   அதுவும் நல்லது தானே!
   அதிலும்,,,
   ஒரு வசதி தெரியுமா?
   எந்த தேசத்தின் பணமானாலும்,
   உனது ஆடைகளுக்குள் இரகசியமாக,
   மறைத்து விடலாமே!
    
   உன்னை அடைவதற்கு..,
   நான் பட்ட பாடு…,
   உன்னைத் தொடுவதற்கு,
   நான் கடந்த தடைகள்,
   அப்பப்பா..!
   இப்போது நினைத்தாலும்,
   இதயத்தில் இலேசாக  வலிக்கிறதே!
   விதானையிடம் கூட…,
   கையெழுத்துக்கு அலைந்தேன்!
   விதானையின் விடுப்புக்களுக்கு…,
   விடை சொல்லிக் களைத்தேன்!
   பாம்புகள் போல நீண்ட வரிசைகளில்,
   பல பகல் பொழுதுகள்..,,
   பைத்தியக் காரனாய்க்காத்திருந்தேன்!
    
   நாளைக்கு வந்திருவாள் என்றார்கள்,
   நாலு நாட்கள் எடுத்தது!
    
   சில வேளைகளில்..,
   உனது அழகிய மேனியில்..
   அன்னியர்கள் சிலர்,
   ஓங்கிக் குத்துவார்கள்!
   அந்த வேளைகளில்..,
   உன்னை விடவும்,
   எனக்குத் தான் வலிக்கும்!
    
   ஒரு நாள்…,
   உன்னை அந்நியர்களின் வீட்டில்,
   அனாதரவாய்க் கை விட்டேன்!
   எனக்கு மட்டும்,விருப்பமென்று நினைத்தாயா?
   உன்னை விட்டுத் தான் ஆக வேண்டும்!
    
   எனக்கோ,
   இரவு முழுவதும் தூக்கமேயில்லை!
   எப்போது விடியும் என்ற ஏக்கத்தில்..,
   இமைகளை மூட முடியவில்லை!
    
   விடிந்ததும்..,
   ஓடோடி வந்தேன் உன்னிடம்!
    
   உன்னைக் காணவில்லை என்றார்கள்!
   இதயத்தின் துடிப்பே,,,.
   அடங்கிப் போன உணர்வு!
    
   இரண்டு நாட்களின் பின்னர்..,
   அந்த உத்தியோகத்தரின்,
   'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,,
   உனது சக தோழிகளுடன்..,
   நாலாவது காலாகி.....
   நீ  மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்!
    
   அப்போதும் கூடப் பார்..!
   உனது கறுப்பு நிறம் தான்…,
   உன்னை மீட்டுத் தந்தது!
    
   பத்து வருடங்களின் பின்னர்…,
    
   இன்னொரு காதலி வந்தாள்!
    
   நீ எனது முதல் காதலியல்லவா?
   உன்னையும் வைத்துக் கொள்ளத் தான் ஆசை!
   கெஞ்சிக் கேட்டும் பார்த்தேன்!
   வஞ்சகர்கள் அவர்கள்!
   இரண்டு லட்சம் கேட்டார்கள்!
    
   இரண்டு லட்சத்தை..,
   எங்கே தேடுவேன்!
    
   அந்த இரண்டு லட்சம் உனக்கல்லவாம்!
   என் சொந்தங்கள் மீது,,,,
   எரி குண்டுகள் போடவாம்!
    
   ஒரு நிமிடம் தான் சிந்தித்தேன்!
   உனது முகம் வாடியது தெரிந்தது!
   இறுக்கமாய் மனதை வரித்து,
   உன்னிடம் சொன்னேன்…!
    
   சரி தான் …. போடி!
    
   (உருவகக் கவிதை)

  • By seyon yazhvaendhan
   ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான  எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
    
   நகரத்தின் புதிய தந்தை


    
   எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து

   நாற்காலியைக் கைப்பற்றிய

   நகரத்தின் புதிய தந்தைக்கு

   அவர் பராமரிக்கவேண்டிய

   பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது.

   சாதுவானவர்கள், அடங்காதவர்கள்,

   ஊதாரிகள், அயோக்கியர்களென

   அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது.

   அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார்.

   ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார்.

   சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார்.

   அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார்

   நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி

   ஒருவரும் வாய்திறக்கவில்லை

   -சேயோன் யாழ்வேந்தன்
    
   (ஆனந்த விகடன் 15.2.17)
    
    
    
    
    
   (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை.  யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
    
   (அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
    
    
    
  • By Mayuran
   பொய்த்துத்தான் போகாயோ
   *******************************
   சத்தம் இன்றி - பெரும்
   யுத்தம் இன்றி
   சலசலப்பு ஏதுமின்றி
   சிணுங்கி வழிகிறாள்
   சிலநாளாய் வானமகள்
   முன்பெல்லாம்
   அவள் வரவு கண்டு
   ஆனந்தித்த பொழுதுகள் 
   அளவுக்குள் அடக்க முடியாதவை
   மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி
   மமதையிலே திழைத்திருக்கும்
   மண் மணம் நாசி ஊடு புகுந்து
   மண்ணில் வாழ்ந்த நாளை
   மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும்
   ஊர் போய் வந்த பின்னர்
   உறவுகள் நிலை கண்ட பின்னர்
   பெய்யெனப் பெய்யும் மழை
   பிய்ந்த கூரை வழி வழிந்து
   நிறைவில்லா வீடுகளை
   நிறைத்து நின்றதனை கண்டதனால்
   நீ எம்மவர் நிலை மாறுமட்டும்
   பொய்த்துத்தான் போகாயோ எனும்
   பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்...
   #ஈழத்துப்பித்தன்
   01.02.2016
   http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_20.html
    
  • By Mayuran
   சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்)  பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு.

   முள்ளிவாய்க்கால் பேராவலம்
   முடிவில்லா ஓர் அவலம்
   பன் நாட்டுப்படை புகுந்து
   பல்லாயிரம் உயிர் தின்று
   சொல்லாத கதை கோடி
   சுமந்து கிடக்கும் மண்ணது
   வில்லாண்ட இனம் ஒன்று
   வீறுகொண்டு போர் கண்டு
   விடுதலைக்காய் வேள்வியொன்றை
   விருப்புடனே நடத்தியதையை
   கண் காணச் சகிக்காத
   காடையர்கள் கூட்டிணைவில்
   இனம் ஒன்று அழிந்ததுவே
   ஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமே
   பல தேசம் வாழ்ந்தோம்
   பார் எங்கும வீதி வழி குவிந்தோம்
   பலனேதும் கிடைக்காமல்
   பரிதவித்து பைத்தியமானோம்
   இனப்படுகொலை ஒன்றை
   இரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறி
   இந்தியப் பெருங்கடலும் செந்நிறமாக
   இடி வீழ்ந்துபோல் கிடந்தோமே
   இமை மூட மறந்தோமே
   ஆண்டுகள் ஏழு
   அனல் இடை கரைந்து
   அரவணைக்க ஆரும் இன்றி
   அரற்றிக் கிடக்கிறோம் நாம்

   எங்கள் இரத்த உறவுகளே!
   ஆறாக உங்கள் இரத்தம்
   அலை புரண்டு ஓடி
   ந்ந்திக் கடல்
   செங்கடல் ஆனபோதும்
   அகிலம் முழுதும்
   பரந்து கிடந்த எம்மால்
   எதுவுமே செய்ய
   முடியவில்லையே
   என்ற குற்ற உணர்வும்
   இயலாமையும்
   கண்களைக்குளமாக்க
   உங்களை இழந்த நினைவுகளோடு....
   எங்கள் உரிமையை வென்று
   உலக அரங்கில்
   எமக்கான நீதியைப்பெற
   அணிதிரள்வோம்
   அலை அலையாய்....
   ஓரணியில்..

   #ஈழத்துப்பித்தன்
   02.05.2016
    
   http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_13.html