Jump to content

விபஸ்ஸனா தியான முறை


Recommended Posts

திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்னே நகரில் ஆற்றிய உரையிலிருந்து...

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஏனெனில், இவற்றுக்குதான் நம் வாழ்வில் குறைபாடு உள்ளது. நாம் அனைவரும் அவ்வப்பொழுது மனக்கலக்கம், எரிச்சல், இணக்கமின்மை, துயரம் ஆகியவற்றை அனுபவிக்கிறோம். அவ்வாறு நாம் நிலையின்றி தவிக்கும்பொழுது, நாம் படும் துயரத்தை நம்மிடம் மட்டும் வைத்துக்கொள்ளாது அவற்றைப் பரப்பவும் செய்கிறோம். துயரப்படுபவரை சுற்றி எங்கும் சமநிலையின்மை சூழ்கிறது. அவரைச் சுற்றி இருப்பவர்களும் கலக்கம் அடைகிறார்கள்; சினம் அடைகிறார்கள். கண்டிப்பாக இது வாழ்வதற்கான சரியான முறை அன்று.

ஒருவர் தனக்குள்ளே மன அமைதியுடன் வாழ வேண்டும்; மற்றவரோடும் இணங்கி வாழ வேண்டும். என்ன இருந்தாலும் மனிதன் ஒரு சமூக வாழ்வினன். அவன் சமுதாயத்தில் வாழவேண்டி உள்ளது; பலருடன் பலவிதமாக தொடர்பு கொள்ள வேண்டி உள்ளது. இவ்வாறு இருக்கையில், நாம் நம் உள்ளேயும் நம்மைச் சுற்றியும் எங்ஙனம் அமைதி காத்து அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வழி செய்வது?

ஒருவர் தம் மனக்கலக்கத்திலிருந்து வெளிவர வேண்டும் என்றால் முதலில் அந்த கலக்கத்திற்கான அடிப்படை காரணத்தை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால், ஒருவர் மனதில் எப்பொழுதெல்லாம் தீய எண்ணங்கள் அல்லது எதிர்மறை கருத்துகள் தோன்றுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவர் கலக்கம் அடைகிறார் என்பது புரியும். அமைதியும் தீய எதிர்மறை எண்ணங்களும் மனதினுள் ஒன்றாக உறைய வாய்ப்பே இல்லை.

ஒருவர் மனதில் எதிர்மறை எண்ணங்கள் எப்போது உருவாகின்றன? மீண்டும் ஆராய்ந்தால் இதுவும் தெளிவாகிறது. நமக்குப் பிடிக்காத வகையில் ஏதாவது நிகழ்ந்தால் அல்லது நமக்குப் பிடிக்காத வகையில் எவரேனும் நடந்துகொண்டால் நாம் மகிழ்ச்சியை இழக்கிறோம். நாம் வேண்டுவது நடக்காவிட்டாலும், நமக்கு வேண்டாதது எதுவும் நடந்தாலும் மனம் இறுக்கம் அடைகிறது. நம்முள்ளே நாம் பல முடிச்சுகள் போட்டுக்கொள்கிறோம். இம்மாதிரி வேண்டுவன நிகழாமல் போவதும், வேண்டாதன நிகழ்வதும் நம் வாழ்வில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. நாமும் சுலபத்தில் அவிழ்க்க இயலாத முடிச்சுகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏற்றிக்கொண்டே போகின்றோம். நம் மனமும் உடலும் முழுவதுமாக இறுக்கத்தாலும் எதிர்மறை உணர்வுகளாலும் நிறைகின்றன. நம் வாழ்க்கை துன்பமயமாகிறது.

இந்த பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நாம் விரும்பியபடியே அனைத்தும் நடக்கவும், நாம் விரும்பாதது எதுவும் நடக்காமல் இருக்கவும் ஏதாவது ஏற்பாடு செய்வது ஒரு தீர்வு. ஆனால், அவ்வாறு இருக்கவேண்டுமானால் ஒன்று நம்மிடம் ஏதாவது அதிசய சக்தி இருக்கவேண்டும்; அல்லது அத்தகைய சக்தி கொண்ட ஒருவர் நாம் வேண்டும் பொழுதெல்லாம் நம் உதவிக்கு வரவேண்டும்! அது இயலாத செயல். 'நான் விரும்பியதெல்லாம் நிறைவேறும்; நான் வேண்டுவன எல்லாம் நிகழும்; எனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது' என்று சொல்லிக்கொள்ளக்கூடியவர் இந்த உலகிலேயே யாரும் கிடையாது. நம் விருப்பத்திற்கு மாறான விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. எனவே, நாம் நமக்கு பிடிக்காதன நிகழும்போது கண்மூடித்தனமாக எதிர்மறை பின்வினைகள் ஏற்படுத்தாமல் இருப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. மன இறுக்கத்தைத் தவிர்ப்பது எப்படி? மன அமைதியுடனும் நல்லிணக்கத்தினுடனும் வாழ்வது எப்படி?

இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் இருந்த ஞானிகள் மனிதனின் இந்த துயரப்படும் நிலையை ஆராய்ந்து அதைத் தவிர்க்க ஒரு வழிவகை கூறியிருக்கிறார்கள்: ஒருவர் விரும்பத்தகாதது ஏதும் நடந்து அவர் மனதில் சினம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏதும் தோன்ற ஆரம்பித்தால், உடனே அவர் தம் கவனத்தை வேறு ஏதாவது ஒன்றின் மீது செலுத்த வேண்டும். உதாரணமாக, எழுந்து சென்று கொஞ்சம் நீர் அருந்தலாம். அல்லது மனதிற்குள் ஒன்று-இரண்டு-மூன்று-நான்கு என்று எண்ண ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ, ஏதேனும் ஒரு மந்திரத்தையோ, தங்கள் இஷ்ட தெய்வம் அல்லது தங்களுக்கு பிடித்த புனிதர் ஒருவரின் பெயரையோ திரும்பத் திரும்பக் கூறலாம். மனம் திசைத் திரும்பி எதிர்மறை எண்ணங்களிலிருந்து கொஞ்சம் வெளிவரும். ஓரளவு சினம் தணியும்.

இந்த முறை அனைவர்க்கும் உதவியது; நன்றே செயல்பட்டது. இன்றும் செயல்படுகிறது. ஆனால் இந்த முறை மனதின் மேல் மட்டத்திலேயே செயல்படுகிறது. சொல்லப்போனால் மனதைத் திசைத் திருப்புவதால் எதிர்மறை உணர்ச்சிகள் ஆழ்மனதை நோக்கி அழுத்தப்படுகின்றன. அங்கே சினம் பல்கிப் பெருகுகிறது. மேலோட்டமாக அமைதி நிலவினாலும் மனதின் ஆழத்தில் அடக்கப்பட்ட உணர்ச்சிகள் ஒரு எரிமலையென கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்த எரிமலை வெடித்துச் சிதறுவது தவிர்க்கமுடியாதது.

பேருண்மைகளைத் தேடிச் சென்ற வேறு சில ஞானிகள் இன்னும் முன்னேறி, தம் உள்ளத்தின் உள்ளே மனம்-பொருள் பற்றிய சத்தியங்களை அனுபவித்து உணர்ந்து, மனதைத் திசைத் திருப்புவது சரியான முறை அன்று என்பதைக் கண்டறிந்தனர். அது பிரச்சினையைக் கண்டு ஓடி ஒளிவதைப் போன்றது. தப்பித்துச் செல்வதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுவதில்லை. அவற்றை எதிர்கொண்டு சந்திக்க வேண்டும். மனதில் ஏதேனும் எதிர்மறை எண்ணம் தோன்றினால் அதைக் கூர்ந்து கவனியுங்கள். ஒருவர் தம் மன-மாசுகளை கவனிக்க ஆரம்பித்த உடனேயே அவை தம் ஆற்றலை இழக்க ஆரம்பிக்கின்றன. அவை கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ந்து சருகாகி பின் வேரோடு சாய்கின்றன.

இது ஒரு நல்ல தீர்வு. மனதை கட்டியும் போடாமல், அதைத் தன் போக்கில் அலையவும் விடாமல், இடைப்பட்ட இந்த கவனிக்கும் முறையே சிறந்த பலன் அளிக்க வல்லது. எதிர்மறை உணர்வுகளை ஆழ்மனதில் தேக்கி வைப்பதால் அவை அழிந்து போவதில்லை. அவ்வுணர்வுகளைச் சொற்கள் மூலமோ செயல் மூலமோ வெளியேற்றினாலோ, அவை மேலும் தீமையே விளைவிக்கின்றன. ஆனால் அவற்றை வெறுமனே கவனித்து வந்தால் அவை வெளியேறி அழிந்து போகின்றன; நாம் அவற்றின் தளையிலிருந்து மீள்கிறோம்.

இது ஒரு அருமையான தீர்வாகவே தோன்றுகிறது; என்றாலும், அன்றாட வாழ்வில் இது பயன்படுமா? சாதாரண மனிதர்களால் இவ்வாறு எதிர்மறை உணர்வுகளை எதிர்கொள்ள இயலுமா? சினம் எழும்போது, நாம் அதை அறியும் முன்னரே அது நம்மை ஆட்கொள்கிறது. சினத்தின் வசப்பட்டு நாம் நமக்குள்ளும், பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை சொல்லாலோ, உடலாலோ இழைத்துவிடுகிறோம். பின்னர், சினம் தணிந்த பின், அதற்காக அழுது, வேதனைப்பட்டு, பிறரிடமோ, கடவுளிடமோ மன்னிப்புக் கேட்கிறோம். இவ்வாறு தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாலும், அடுத்த முறை அதே போன்றதொரு நிலை வரும்போது மீண்டும் அதைப்போன்றே சினத்துடன் செயல்படுகிறோம். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதெல்லாம் வீணாகின்றனவேயன்றி நம் உதவிக்கு வருவதில்லை.

எதிர்மறை எண்ணங்கள் எப்போது ஆரம்பம் ஆகின்றன என்பதை அறிந்துகொள்வதே நமக்குக் கடினமாக உள்ளது. அது நம் உள்மனதின் ஆழத்தில் ஆரம்பம் ஆகிறது. மனதின் மேல் மட்டத்தை எட்டும்போது, அது மிகுந்த ஆற்றல் பெற்றதாகி நாம் கவனிக்கும் முன்னர் நம்மை வீழ்த்திவிடுகின்றன.

பின், எப்போது சினம் ஆரம்பித்தாலும் 'ஐயா, இதோ உங்களுக்கு கோபம் வருகிறது' என்று நமக்கு அதை சுட்டிக்காட்ட ஒரு தனிச்செயலாளர் வைத்துக்கொள்ள வேண்டும்! எப்போது வேண்டுமானாலும் சினம் துவங்கலாம் ஆகையால் நாள் முழுதும் வேலையைப் பகிர்ந்துகொள்ள மூன்று செயலாளர்கள் தேவைப்படலாம். அப்படியே மூவர் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அதில் ஒருவர் சினம் எழுவதை சுட்டிக்காட்டும்போது என்ன நடக்கும்? முதலில் அவரையே நாம் தாக்கி, 'எனக்கே புத்திமதி கூறவா உன்னை சம்பளம் கொடுத்து அமர்த்தியுள்ளேன்?' என்று கோபமாகக் கத்துவோம். சினம் நம்மை ஆட்கொண்டுள்ளபோது எந்த அறிவுரையும் நமக்கு பயனளிக்காது.

அவ்வாறு நமக்கு அவர்மேல் கோபம் வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் 'மிக்க நன்றி. இப்போது நான் அந்த கோபத்தை கவனிக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டு அமர்ந்தாலும் கவனிப்பது இயலுமா என்ன? கண்ணை மூடிய உடனேயே யார் அல்லது எதனால் அந்த சினம் எழுந்ததோ அந்த நபர் அல்லது நிகழ்ச்சி நம் மனக்கண்முன் தோன்றும். அப்போது நாம் அந்த சினத்தை அப்படியே கவனிப்பதில்லை; அந்த உணர்ச்சி தோன்றக் காரணமான வெளிப்பாடுகளையே கவனிக்கிறோம். இதனால் சினம் இன்னும் பெருகுமே தவிர அதற்கு தீர்வாக அமையாது. வெறும் உணர்ச்சிகளையோ, வெறும் எதிர்மறை எண்ணங்களையோ அவற்றைத் தோற்றுவித்த வெளிப்பாடுகளை அப்புறப்படுத்தித் தனியாக கவனித்தல் மிகவும் கடினம்.

எனினும், பேருண்மையைக் கண்டறிந்த ஒருவர் உண்மையிலேயே பயனளிக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். மனதில் எதிர்மறை உணர்வு தோன்றும் போதெல்லாம் உடலளவில் இரு மாறுதல்கள் நிகழ்வதை அவர் கண்டார். முதலில் நம் மூச்சுக்காற்றின் போக்கில் மாறுதல் ஏற்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போதெல்லாம் மூச்சு சற்றே மென்மை இழந்து கனமாகிறது. இதை கவனித்தல் சுலபம். இன்னும் ஆழ்ந்து நோக்கினால், உடலுக்குள் ஏதோ ஒரு விதமான வேதியல் மாற்றம் தொடங்குவதை உடலின் மீது தோன்றும் மெல்லிய உணர்ச்சிகளைக்கொண்டு அறியலாம். ஒவ்வொரு எதிர்மறை உணர்வும் ஏதேனும் ஒரு விதமான உணர்ச்சியை உடலின் ஏதோ ஒரு பகுதியில் கண்டிப்பாகத் தோற்றுவிக்கும்.

இது ஒரு நடைமுறைத் தீர்வு. சாதாரண மனிதர்களால் மனதின் மாசுகளை -- பயம், சினம், பேராசை போன்ற உணர்வுகளை -- உள்ளதை உள்ளவாறே வெறுமனே கவனித்தல் இயலாது. ஆனால், மன மாசுகளுடன் சம்பந்தப்பட்ட மூச்சுக்காற்றின் போக்கினையும், உடல்மீது தோன்றும் சிறு உணர்ச்சிகளையும் சரியான பயிற்சியால் யாவரும் கவனிக்க இயலும்.

மூச்சும், உடல் உணர்ச்சியும் இரு வகைகளில் பயனளிக்கும். முதலாவதாக, அவை நம் தனிச்செயலாளர்களாக செயல்படும். உள்ளத்தில் எதிர்மறை எண்ணம் ஏதும் தோன்றும்போதே மூச்சு தன்னிலை மாறி, 'இங்கே கவனி, ஏதோ தவறு நடக்கிறது' என்று நமக்குச் சுட்டிக்காட்டும். மூச்சின்மீது கோபம்கொண்டு நாம் அதை தாக்க முடியாது; அது சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைப்போன்றே, உடல் உணர்ச்சிகளும் ஏதேனும் தவறு நடக்கையில் நமக்கு எடுத்துச்சொல்லும். முன்னெச்சரிக்கை வந்தவுடனே நாம் மூச்சையும் உடல் உணர்ச்சியையும் கவனிக்க ஆரம்பித்தால் விரைவிலேயே அந்த எதிர்மறை எண்ணம் மறைந்துவிடும்.

இந்த மனம்-உடல் தொடர்பு இரு பக்கங்கள் கொண்ட ஒரு நாணயத்தைப் போன்றது. மனதில் எழும் எண்ணங்களும், உணர்வுகளும் ஒரு புறம். மூச்சுக்காற்றும், உடலில் புலனாகும் உணர்ச்சிகளும் மறுபுறம். மனதில் தோன்றும் எந்த ஒரு எண்ணமும், எதிர்மறை உணர்வும் அதே நொடியில் மூச்சுக்காற்றிலும் உடலின் மீது உணர்ச்சிகளாகவும் வெளிப்படுகிறது. எனவே, மூச்சையும் உடல் உணர்ச்சிகளையும் கவனிப்பது மனதின் எதிர்மறை எண்ணங்களைக் கவனிப்பதே ஆகும். இவ்வாறு நாம் பிரச்சினையிலிருந்து ஓடி ஒளியாமல் அவற்றை எதிர்கொண்டு சந்திக்கும்போது, எதிர்மறை எண்ணங்கள் வலிமை இழக்கின்றன. முன்போல் அவற்றால் நம்மை ஆட்கொண்டு வீழ்த்த இயலாது. தொடர்ந்து முயற்சி செய்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் முற்றிலுமாய் மறைந்துபோய், நம்முள்ளே அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுகிறது.

இவ்வாறு இந்த சுய-கவனிப்பு முறை நமக்கு உள்ளும் புறமும் உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகின்றன. இதற்கு முன் நாம் கண்களைத் திறந்து மட்டுமே நோக்கி வந்தோம். அதனால் நம்முள் இருக்கும் உண்மை நமக்குப் புலப்படவில்லை. நம் துன்பங்களின் காரணங்களை நாம் வெளியிலேயே தேடி வந்தோம். நாம் எப்போதும் வெளிப்புற உண்மைகளின் மீதே பழி சுமத்தி அவற்றையே மாற்ற முயன்று வந்துள்ளோம். நம் உள்ளே உறையும் உண்மைகளைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவில்லை. நம் துன்பத்துக்கான காரணங்கள் நம் உடலில் தோன்றும் அனுபவிக்கத்தக்க அல்லது அவ்வாறற்ற உணர்ச்சிகளுக்கு நாம் கண்மூடித்தனமாகத் தோற்றுவிக்கும் எதிர்வினைகளே ஆகும் என்பது நமக்குப் புரிந்திருக்கவில்லை.

பயிற்சி பெற்ற பின், நாணயத்தின் மறுபுறத்தை நம்மால் பார்க்க இயலுகிறது. மூச்சின் போக்கினையும் நம் உள்ளே நடப்பதையும் ஒரே சமயத்தில் கவனிக்க முடிகிறது. மூச்சோ, உடல் உணர்ச்சியோ எதுவாயினும் மனதின் தன்னிலை இழக்காமல் அதை வெறுமனே கவனிக்கக் கற்றுக்கொள்கிறோம். எதிர்வினைகளை தோற்றுவிக்காமல் இருந்து, நம் துன்பம் பல்கிப் பெருகாமல் அவை வெளிப்பட்டு மறைந்து போகச் செய்கிறோம்.

எவ்வளவுக்கு எவ்வளவு இந்த தியான முறையைப் பயிற்சி செய்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக ஒருவர் தம் துன்பங்களிலிருந்து வெளிவர இயலும். கொஞ்சம், கொஞ்சமாக மனம் மாசுகளிலிருந்து விடுபட்டுத் தூய்மையடைகிறது. தூய உள்ளம் எப்போதும் சுயநலமற்ற அன்பினால் நிறைந்து விளங்குகிறது; பிறரின் குறைபாடுகள் மற்றும் துன்பங்களின்பால் பரிவிரக்கம் கொண்டு நிலவுகிறது; பிறரது வெற்றியையும் சந்தோஷத்தையும் கண்டு மகிழ்ச்சியால் நிறைகிறது; எந்த கட்டத்திலும் தடுமாறாமல் சமநோக்குடன் விளங்குகிறது.

ஒருவர் இந்த நிலையை அடைந்தவுடன், அவர் வாழ்க்கையின் வடிவம் முற்றிலுமாக மாற ஆரம்பிக்கிறது. பிறரது அமைதியையும் மகிழ்ச்சியையும் குலைக்கும் எந்தவொரு செயலையும் பேச்சாலோ உடலாலோ அவரால் இழைக்க இயலாது. மாறாக, நிலைப்பட்ட அவர் மனம் தனக்குள்ளே அமைதியடைவதுடன் பிறரும் அமைதியடைய உதவுகிறது. அவரைச்சுற்றி எங்கும் அமைதியும் நல்லிணக்கமும் சூழ்ந்து சுற்றியுள்ளோர் மீதும் நல்பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தன்னுள்ளே எது தோன்றினாலும் தன்னிலை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதால் ஒருவர் வெளிவாழ்விலும் சந்திக்க நேரும் எதையும் விருப்பு-வெறுப்பு அகற்றி உணர்ச்சிவசப்படாமல் கவனிக்க இயலுகிறது. என்றாலும், இது பிரச்சினைகளிலிருந்து தப்பித்து ஓடுவதோ அல்லது அவற்றின் மேல் ஈடுபாடு இன்றி இருப்பதோ ஆகாது. விபஸ்ஸனா தியானம் செய்யும் ஒருவர் பிறரது துன்பத்தை மிகுதியாகவே உணர்கிறார். என்றாலும் அவர் கலக்கமுறாமல் அத்துன்பத்தைத் தணிக்க தன்னால் இயன்றது அனைத்தையும் மனப்போராட்டம் எதுவுமின்றி பேரன்போடும், பரிவிரக்கத்தோடும், சமநோக்கோடும் செய்கிறார். முழு உறுதியுடன், பிறருக்கு உதவி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் அதே சமயம் அவர் தன் மனதின் சமநிலை இழந்துவிடாமல் இருக்கக் கற்றுக்கொள்கிறார். இம்முறையில் அவர் தானும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்; பிறரின் அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் உழைக்கிறார்.

இதுதான் புத்தர் கற்பித்த 'வாழும் கலை' ஆகும். அவர் எந்த மதத்தையும் நிறுவவில்லை. எந்த சித்தாந்தத்தையும் போதிக்கவில்லை. எந்த ஒரு மூடநம்பிக்கையையோ, கண்மூடித்தனமான வழிபாட்டு முறைகளையோ பின்பற்றும்படி அவர் சீடர்களுக்கு அறிவுறுத்தவில்லை. மாறாக, நம்முள்ளே இயல்பாக நடப்பதை உள்ளதை உள்ளவாறே கவனித்து இயற்கையின் பேருண்மைகளை புரிந்துகொள்ளவே அவர் கற்றுத் தந்தார். அறியாமையால்தான் நாம் நமக்கும் பிறருக்கும் துன்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறோம். உள்ளதை உள்ளபடி பார்க்கும் ஞானம் நம்முள்ளே உதித்துவிட்டால் நாம் இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டுவிடலாம். கண்மூடித்தனமாக எதிர்வினைகளை தோற்றுவிப்பதை நிறுத்திவிட்டால், நாம் உண்மையான செயல் வீரர் ஆகலாம். உண்மைகளை அறிந்து புரிந்துகொள்ளும் சமநிலை தவறா மனத்திலிருந்து தோன்றும் செயல்கள் யாவும் புதுமைச்செறிவுடன் தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் நல்ல செயல்களாகவே இருக்கும்.

ஒவ்வொரு ஞானியும் அறிவுறுத்தியதைப் போன்று, நம்மை நாம் அறிந்துகொள்வதே தலையாய தேவை ஆகும். கொள்கைகளும், விளக்கங்களும் நிறைந்த அறிவு மட்டத்தில் மட்டும் நம்மை அறிந்துகொள்வது போதாது. அல்லது, நாம் படித்த அல்லது கேள்விப்பட்டவற்றை அப்படியே நம்பும் உணர்ச்சிப்பூர்வமான பக்தி மட்டத்தில் நம்மை நாமே அறிந்துகொள்வோம் என்றும் பொருள்கொள்ளக் கூடாது. இவ்வாறு தோன்றும் ஞானத்தோடு நில்லாமல் ஒருவர் மனம்-உடல் ரீதியிலான உண்மைகளை நேரடியாக அனுபவித்து உணர வேண்டும். அது மட்டுமே நாம் நம் துன்பங்களிலிருந்தும், மன மாசுகளிலிருந்தும் விடுபட உதவும்.

இவ்வாறு, நமக்கே உரித்தான உண்மைகளை சுய-கவன முறை மூலம் நேரடியாக உணர்வதே 'விபஸ்ஸனா' தியான முறையாகும். புத்தர் காலத்தில் இந்தியாவில் வழங்கி வந்த மொழியில் 'பஸ்ஸனா' என்றால் சாதாரண முறையில் திறந்த கண்களோடு பார்ப்பதைக் குறிக்கும். 'விபஸ்ஸனா' என்றால் எதையும் அவற்றின் வெளித்தோற்றத்தைக் கொண்டு பார்க்காமல், உள்ளதை உள்ளவாறே பார்த்தல் என்று பொருள்படும். வெளிப்படும் உண்மைகளில் தொடங்கி மனம்-உடல் வடிவத்தின் இறுதி உண்மையை அடையும்வரை ஒருவர் உள்ளத்தை ஊடுருவிச் செல்ல வேண்டும். இந்த பேருண்மையை அனுபவித்த உடனேயே ஒருவர் கண்மூடித்தனமாக எதிர்மறை எண்ணங்கள் தோற்றுவிப்பதை நிறுத்திவிடுகிறார். அதுவரை சேர்ந்திருந்த மன மாசுகள் இயல்பாகவே அழிந்து போகின்றன. ஒருவர் தம் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று பெருமகிழ்ச்சியை அனுபவிக்கிறார்.

விபஸ்ஸனா தியான முகாம்களில் மூன்று நிலையினாலான பயிற்சி அளிக்கப்படுகிறது. முதன்மையாக, ஒருவர் பிறரது அமைதியையோ இணக்கத்தையோ குலைக்கும் எதையும் சொல்லாலோ செயலாலோ விளைவிக்கக்கூடாது. மனதின் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுதலை பெற பயிற்சி பெறும் சமயம், அதே தீய எண்ணங்களை மேலும் பெருக்கிக் கொள்வது ஆகாது. எனவே, ஒழுக்க நெறியே இந்த பயிற்சியின் முதல் படி. 'எந்த உயிரையும் கொல்லமாட்டேன், எதையும் திருடமாட்டேன், தவறான பாலியல் தொடர்புகளில் ஈடுபடமாட்டேன், பொய் உரைக்கமாட்டேன், போதை தரும் எந்த பொருளையும் உட்கொள்ளமாட்டேன்' என்று பயிற்சி பெறுவோர் உறுதி அளிக்கவேண்டும். தீய செயல்களை நிறுத்தி விடுவதால் பயிற்சியைத் தொடங்கப் போதுமான அளவிற்கு மனம் அமைதியுறுகிறது.

மூச்சின் மீது கவனத்தை நிறுத்தி அலைபாயும் மனதை சற்றே வசப்படுத்துவது அடுத்த கட்ட நடவடிக்கை ஆகும். ஒருவர் தன்னால் இயன்ற வரை தன் முழு கவனத்தையும் தன் மூச்சின் மேல் நிறுத்த முயல்கிறார். இது மூச்சைக் கட்டுப்படுத்தும் பயிற்சி அன்று. மாறாக, இயல்பாகவே உட்சென்று வெளிவரும் மூச்சை கூர்ந்து கவனிக்கும் முறையே ஆகும். இவ்வாறு பயிற்சி செய்யும்போது, மனம் பெரிதும் அமைதியுற்று, தீவிர எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளிவருகிறது. அதே சமயம் ஒருவர் மனதை ஒருநிலைப்படுத்தி அதை கூரியதாய், ஊடுருவ வல்லதாய் ஆக்குகிறார்.

ஒழுக்க நெறியும், மனக்கட்டுப்பாடும் தம்மில் தாமே தேவையானதும் மிக்க பயனளிப்பதும் ஆகும். ஆனால் அதோடு நின்றுவிட்டால் அவை சுய-அடக்குமுறை ஆகிவிடும். ஒருவர் தம் இயல்பை புரிந்துகொண்டு எதிர்மறை எண்ணங்களை நீக்கி மனதை தூய்மைப்படுத்துவதே மூன்றாவது நிலை ஆகும். மனம்-உடல் ஆகியவற்றில் தொடர்ந்து நிகழும் மாற்றங்கள் நம் உடல் உணர்ச்சிகளாக வெளிப்படுவதை விருப்பு-வெறுப்பின்றி முறைப்படி கவனித்து, அதன் மூலம் ஒருவர் தனக்கே உரிய இயல்பைப் புரிந்து கொள்வதே இந்த விபஸ்ஸனா முறை. சுய-கவனத்தின் மூலம் சுய-தூய்மையாக்கம் என்பதே புத்தரின் போதனைகளின் சாரம்.

இந்தப் பயிற்சியை யாவரும் செய்யலாம். துயரத்தில் உழல்வது என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு நோய். இதற்கான மருந்தும் எந்த இனப்பிரிவையும் சாராது பொதுவானதாகவே இருக்க வேண்டும். ஒருவர் சினம் கொள்ளும்பொழுது அது புத்த மதத்தினரின் சினமாகவோ, இந்து மதத்தினரின் சினமாகவோ, கிறித்துவ மதத்தின் சினமாகவோ இருப்பதில்லை. உணர்ச்சிகளுக்கு மதம் கிடையாது. ஒருவர் கலக்கமுறும்போது அந்த கலக்கம் கிறித்துவ, இந்து, புத்த மதம் எதையும் சார்ந்த்தாக இருக்காது. நோய் பொதுவானதாக இருக்கையில் அதை தீர்க்கும் மருந்தும் பொதுவானதாகவே இருக்க வேண்டும்.

விபஸ்ஸனா அத்தகைய ஒரு அருமருந்து. பிறரின் அமைதியையும், இணக்கத்தையும் மதிக்கும் ஒரு நெறியை எவரும் எதிர்க்கமாட்டர். மனக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வதை யாரும் எதிர்க்க முடியாது. ஒருவர் தம் மன மாசுகளை நீக்கும் வண்ணம் தமக்கே உரித்தான இயல்பை புரிந்து கொள்வதை யார்தான் எதிர்க்கக்கூடும்? விபஸ்ஸனா உலகனைத்திற்கும் பொதுவான ஒரு வழி.

உள்ளே உறையும் உண்மைகளை உணர்வது என்பது ஒருவர் தம்மைத் தாமே நேரிடையாக அனுபவித்து அறிதல் ஆகும். பயிற்சி செய்யச் செய்ய ஒருவர் தம் மன- மாசுகளிலிருந்து வெளிவருகிறார். மொத்தமான, வெளிப்படையான, வெற்று உண்மையிலிருந்து ஒருவர் மனம்-பொருள் இணையின் இறுதி பேருண்மை வரை ஊடுருவுகிறார். பின் அதையும் கடந்து, மனம்-பொருள் ஆகியவற்றைத் தாண்டி, காலம்-இடம் ஆகியவையும் கடந்து அனைத்து மாசுகள், எதிர்மறை எண்ணங்கள், துயரங்கள் எல்லாவற்றிலிருந்தும் முற்றிலுமாக விடுதலை அடைந்து மோட்சத்தை எட்டுகிறார். அந்த நிலையை என்ன பெயரிட்டு அழைக்கிறோம் என்பது முக்கியமல்ல; அதுவே அனைவரின் இறுதி இலக்கு ஆகும்.

நீங்கள் அனைவரும் அந்த பேருண்மையை அனுபவிப்பீர்களாக! அனைத்து மக்களும் தம் மன- மாசுகளிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுபடுவார்களாக! அனைவரும் உண்மையான மகிழ்ச்சியையும், நிஜமான அமைதியையும், நல்லிணக்கத்தையும் அனுபவிப்பீர்களாக!

அனைத்து உயிரினமும் மகிழ்வுடன் இருக்கட்டும்!

http://www.tamil.dhamma.org/Art of Living.htm

விபஸ்ஸனா என்றால் என்ன?

விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும். தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனதைத் தூய்மையடையச் செய்யும் படிப்படியான செயல்முறை இது.

விபஸ்ஸனா இந்திய நாட்டின் தொன்றுதொட்ட தியான வழிமுறைகளில் ஒன்று ஆகும். விபஸ்ஸனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் இந்த முறையை மீண்டும் கண்டறிந்து, இதை உலகத்தின் அனைத்து பிணிகளையும் நீக்கும் அருமருந்தெனவும், இதுவே வாழும் கலை எனவும் போதித்தார்.

இந்த தியான முறை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, பிரிவையோ சார்ந்திராதது. உள்ளத்தின் மாசுகளை அறவே நீக்கி, மோட்சப் பெருநிலை அடைவதே இந்த தியான முறையின் உயரிய குறிக்கோள். உடல் நோய்களை நீக்குவதோடு நில்லாமல் மனிதர்களின் துன்பங்களை அறவே நீக்கி பூரண சுகம் அளிப்பதே இதன் நோக்கம்.

இது உடம்பிற்கும் மனதிற்கும் உள்ள ஆழமான தொடர்பை மையமாகக்கொண்டு செயல்படுகிறது. உடலையும் மனதையும் தொடர்ந்து இணைக்கக்கூடியவை உடலில் தோன்றும் உணர்ச்சிகள். உடலை உயிருள்ளதாக அறியவைப்பதும் உடலில் தோன்றும் உணர்ச்சிகள்தான். அதனால் உடல் உணர்ச்சிகளை நெறிமுறையோடு கவனிப்பதன் மூலம் உடலிற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை நேரடியாக அறியமுடிகிறது. தன்னைத்தானே கவனித்து, தன்னைத்தான் ஆராய்ந்து மனதிற்கும் உடலிற்கும் உள்ள பொதுவான வேரை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணம் மனதின் மாசுகளைக் கரைக்கிறது. அன்பும் கருணையும் நிறைந்த மனநிலையை ஏற்படுத்துகிறது.

ஒருவரின் எண்ணங்கள், மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் சீர்தூக்கி ஆராயும் குணம் எவ்வாறு அறிவியற்பூர்வமான விதிகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பது இந்த தியான பயிற்சி மூலம் தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. ஒருவர் எவ்வாறு மேம்படுகிறார் அல்லது பின்நோக்கிச் செல்கிறார், எவ்வாறு ஒருவர் துன்பங்களை ஏற்படுத்துகிறார் அல்லது துன்பங்களிலிருந்து விடுபடுகிறார் ஆகியவற்றின் இயல்பு நேரடி அனுபவத்தின் மூலம் புலனாகிறது. இந்த தியான பயிற்சி மூலம் வாழ்க்கையில் கூடுதலான பிரக்ஞை, மாயையின்மை, சுய-கட்டுப்பாடு மற்றும் அமைதி ஆகியவை வாய்க்கின்றன.

 

மேலே செல்க

இவை அல்ல விபஸ்ஸனா

  • இது கண்மூடித்தனமான ஒரு சடங்கோ, வழக்கோ அல்ல
  • இது அறிவை வளர்க்கும் ஓர் ஆட்டமோ, தத்துவ விளையாட்டோ அல்ல
  • இது ஓய்வு எடுக்கவும், விடுமுறையைக் கழிக்கவும், பலரைச் சந்தித்து பழகவும் ஏற்பட்ட ஒரு வாய்ப்பு அல்ல.
  • இது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து ஓட ஒரு வழியும் அல்ல

மேலே செல்க

இதுதான் விபஸ்ஸனா

  • இது மனத்துயர்களை வேரோடு அழிக்கும் ஒரு வழிமுறை ஆகும்
  • இது சமுதாயத்திற்கு நற்பணிகள் ஆற்ற உதவும் வாழும் கலை ஆகும்
  • இது வாழ்வின் இன்னல்களை அமைதியுடனும் சமநோக்குடனும் எதிர்கொள்ளும் வண்ணம் மனதைத் தூய்மைப்படுத்தும் முறை ஆகும்

மேலே செல்க

பாரம்பரியம்

விபஸ்ஸனா புத்தபெருமான் காலத்திலிருந்து தொடங்கி இடையீடின்றி வழிவழியாக ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு இன்று வரை நிலைத்துள்ளது.

இதன் தற்போதைய ஆசிரியர் திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்களின் மூதாதையர்கள் இந்தியர்களாக இருந்த போதிலும், இவர் மியன்மார் (பர்மா) நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு இருக்கையில் அவர், உயர் அரசாங்க அதிகாரியாக பதவி வகித்து வந்த சயாக்யி ஊ பா கின் அவரிடம் விபஸ்ஸனா பயிலும் நல்வாய்ப்பைப் பெற்றார். தம் ஆசிரியரிடம் பதினான்கு ஆண்டு காலம் பயின்ற பின், 1969 ஆண்டு முதல் அவர் இந்தியாவில் தங்கி விபஸ்ஸனா பயிற்றுவித்து வருகிறார். கீழை மற்றும் மேலை நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இன-மத பாகுபாடின்றி அவரிடம் பயின்று வந்துள்ளனர். விபஸ்ஸனா பயில பெருமளவில் மக்கள் ஆர்வம் காட்டுவதை அறிந்து அவர் 1982 முதல் தனக்கு உதவியாக துணை-ஆசிரியர்களையும் நியமித்து வந்துள்ளார்.

மேலே செல்க

குறிக்கோள்

விபஸ்ஸனா தன்னைத் தானே ஆராய்வதின் மூலம் மனத்தூய்மை அடைய ஒரு வழி. ஒருவர் முதலில் தம் மூச்சுக்காற்றின் மீது கவனம் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்துகிறார். பின் கூர்மையடைந்த மனதுடன் தன் உடல் மற்றும் உள்ளத்தில் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைக் கவனித்து, அதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிகிறார். இவ்வாறு பேருண்மையை நேரடியாக உணர்ந்தறிவதில் மனம் தூய்மை அடைகிறது.

மனமாசுகளிலிருந்து முழு விடுதலை அடைதலும், அகத்தெளிவு பெறுதலும் விபஸ்ஸனா தியான முறையின் உயரிய குறிக்கோள்கள் ஆகும். உடற்பிணிகளை நீக்குவது இதன் நோக்கமல்ல. ஆயினும் மனம் தூய்மை அடைவதன் பயனாக மனநிலை சம்பந்தப்பட்ட பல நோய்கள் குணமடைகின்றன. சொல்லப்போனால், விபஸ்ஸனா மனத்துயர் எழக் காரணமான விருப்பு, வெறுப்பு, அறியாமை என்ற மூன்றையுமே அழிக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் இந்தத் தியான முறை அன்றாட வாழ்வில் ஏற்படும் மன-இறுக்கத்தைத் தளர்த்துகிறது. விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க சந்தர்ப்பங்களை சந்திக்க நேரும்போது சமநிலை இழக்கும் மனதின் பழைய பழக்கத்தினால் விளைந்த முடிச்சுகளை இது அவிழ்க்கிறது.

மேலே செல்க

யார் பயிலலாம்?

தன்னைத் தானே ஆராய்வதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிந்து மனத்தூய்மை அடைவதே 'விபஸ்ஸனா' முறையாகும். இந்த பாதை முழுக்க முழுக்க அனைவருக்கும் பொதுவானது. யாவருக்கும் பொதுவான நோய்களுக்கு யாவருக்கும் பொதுவான மருந்தாக அமைவது. இது எந்த ஒரு மதத்தையோ, இனப்பிரிவையோ சாராதது. எனவே, இன-குல-மத வித்தியாசங்கள் இன்றி யாவரும் எங்கும் எப்போதும் இதைப் பயிற்சி செய்யலாம். அனைவர்க்கும் இது சம அளவில் பயனளிக்க வல்லது.

இந்த தியான முறையை புத்தர் தோற்றுவித்திருந்தாலும், இதை புத்த மதத்தினர் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற விதி எதுவும் கிடையாது. மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக மக்கள் யாவரும் ஒரே வகையான பிரச்சினைகளை எதிர்கொள்வதால், அப்பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் முறையும் அனைவர்க்கும் பொதுவானதாகவே இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டே இந்த தியான முறை செயல்படுகிறது. பல மதங்களை சேர்ந்த பலதரப்பட்ட மக்கள் விபஸ்ஸனா முறையின் பயன்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும் இந்த தியான முறைக்கும், தம் தொழில் அல்லது சமய நம்பிக்கைகளுக்கும் முரண்பாடு ஏதும் உள்ளதாக கண்டதே இல்லை.

அக-ஆராய்வின் மூலம் மனதை தூய்மைப்படுத்தும் இந்த முறை சுலபமானது அன்று. பயிற்சி பெறுபவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். அவரவர் தம் சொந்த முயற்சியினால் தமக்கே உரிய இயல்புகளை புரிந்துகொள்ள வேண்டி இருக்கும். வேறு யாரும் அவர்களுக்காக இதை செய்ய முடியாது. ஒழுக்க நெறியைக் கடைபிடித்து, மிகுந்த ஈடுபாட்டுடன் முயற்சி செய்ய வல்லவர்களுக்கே இந்த முறை ஒவ்வும்.

விபஸ்ஸனா தியான முறை தம் மனம் சார்ந்த குறைபாடுகளை குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையுடன் சில தீவிர மன-நோயாளிகள் இந்தப் பயிற்சி பெற வந்துவிடுகின்றனர். நிலைப்பட்டு பிறருடன் பழக இயலாமை மற்றும் பல்வேறு குணப்படுத்தும் முறைகளை பின்பற்றியதாலான விளைவுகள் ஆகியவை இத்தகைய நோயாளிகள் பயனடைவதைக் கடினமாக்குகின்றன. சிலருக்கு பத்து நாட்கள் பயிற்சியை முடிப்பதுகூட கடினமாக உள்ளது. நாங்கள் தொழில் அடிப்படையில் இன்றி, தாங்களாகவே முன்வந்து சேவை புரிபவர்களைக் கொண்டே பயிற்சி முகாம்களை நடத்துவதால் இத்தகைய பின்னணி கொண்ட பிணியாளர்களை முறைப்படி கவனித்துக் கொள்வது இயலாததாகிறது. விபஸ்ஸனா தியான முறை பெரும்பாலானவர்களுக்கு நற்பயன் விளைவிக்கக் கூடியதே ஆயினும், அது மருத்துவ அல்லது மனச் சிகிச்சைக்கு மாற்றாக அமையாது. எனவே, நாங்கள் தீவிர மன-நோயாளிகளுக்கு இந்த முறையை அறிவுறுத்துவதில்லை.

மேலே செல்க

பயிற்சி முறை

இந்த தியான முறை பத்து-நாள் பயிற்சி முகாம்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அது சமயம் பயிற்சி பெறுவோர் பயிற்சி பெறும் இடத்திலேயே தங்கியிருந்து, பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்க நெறியை தவறாது பின்பற்றி, தியான முறையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, முறையாகவும், தேவையான அளவும் பயிற்சி செய்ய பத்து நாட்களுக்குள்ளேயே நற்பலன்களை அனுபவிக்க ஆரம்பிப்பர்.

பயிற்சி பெறுவோர் ஈடுபாட்டுடன் கடுமையாய் பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். மூன்று நிலைகளை கொண்டது இந்த பயிற்சி. 'சீல', அதாவது நன்னடத்தை, என்பதே இந்த முறையின் அடித்தளம் ஆகும். சீலத்தின் அடிப்படையில் எழும் மன-ஒருநிலைப்பாட்டிற்கு 'சமாதி' என்று பெயர். அக-ஆராய்வினால் விளையும் ஞானத்திற்கு 'பஞ்ஞ' என்று பெயர். இந்த ஞானத்தின் மூலமே ஒருவர் மனத்தூய்மை அடைகிறார்.

முதன்மையாக, பயிற்சி நடக்கும் பத்து நாட்களும் எந்த உயிரையும் கொல்லுவது, எந்த பொருளையும் திருடுவது, பாலியல் உறவுகள் கொள்வது, தவறாக பேசுவது மற்றும் போதை ஊட்டும் பொருட்களை உட்கொள்வது ஆகிய செயல்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இந்த எளிய அறநெறி, உள்ளத்தை அமைதிபடுத்தப் பெரிதும் உதவுகிறது. இல்லையேல், தெளிவாகத் தன்னைத் தான் கவனிக்க இயலாது மனம் அலைபாய்ந்துகொண்டு இருக்கும்.

ஒருவர் இடைவிடாது தன் மூச்சுக்காற்றின் போக்கின் மீது தன் முழு கவனத்தையும் நிலைநிறுத்தி, அதில் இயல்பாக நிகழும் பல மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் தன் மனதின் மேல் உள்ள கட்டுப்பாட்டை ஓரளவு வளர்த்து கொள்வது இரண்டாம் நிலை.

நான்காம் நாள் வருவதற்குள் மனம் பெரிதும் அமைதி பெற்று, கூர்மையுற்று விபஸ்ஸனா பயிற்சி தொடங்கத் தேவையான திறனை அடைகிறது. உடலெங்கும் புலனாகும் உணர்ச்சிகளை உணர்ந்தறிந்து, அதன் தன்மைகளைப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஏற்படுத்தாது, சமநோக்கை வளர்த்துக்கொள்வதே இந்த பயிற்சி.

இறுதியாக, கடைசி நாள் அன்று, பத்து நாட்களில் பெருகிய மனத்தூய்மையை அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வண்ணம் அனைவரிடமும் நல்லுறவு வளர்க்கும் 'பேரன்பு தியான முறை' பயிற்சியுடன் முகாம்கள் நிறைவடையும்.

மூச்சு மற்றும் உடலோடு இணைந்த உணர்ச்சிகளை கவனிக்கும் செயல்முறை பற்றிய சிறு விடியோ படம் (5.7 மெகா பைட்டுகள்) 'க்விக்டைம் மூவி ப்ளேயர்' துணைகொண்டு காணலாம். இம்முழுபயிற்சியும் உண்மையிலேயே மனதிற்கு தரப்படும் பயிற்சியாகும். நாம் உடல் நலம் பெற உடற்பயிற்சி செய்வதைப்போன்றே, மனநலம் பெற செய்யும் பயிற்சியே விபஸ்ஸனா தியான முறை ஆகும்.

மேலே செல்க

நிதியளித்தல்

விபஸ்ஸனா பயிற்சி பெற எந்த விதமான கட்டணமும் கிடையாது. உணவும், இருப்பிடமும் கூட இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. விபஸ்ஸனா முறையின் பாரம்பரியப்படி பயிற்சி முகாம்கள் நன்கொடைகளை மட்டும் கொண்டு நடத்தப்படுகின்றன. திரு சத்திய நாராயண் கோயன்கா அவரிடமோ அல்லது அவர்தம் உதவி ஆசிரியரிடமோ ஒரு முறையாவது பத்து-நாள் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து மட்டுமே நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முதன் முறையாக பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் ஒருவர், முகாமின் கடைசி நாள் அன்றோ, அதன் பின்னரோ நன்கொடை வழங்கலாம்.

இந்த முறையில், பயிற்சியின் பயனை தாமே சொந்தமாக உணர்ந்தவர்களே மேலும் பயிற்சி முகாம்கள் நடக்க வழிவகுக்கிறார்கள். தாம் பெற்ற பயனை பிறருக்கும் அளிக்கும் வகையில் மனமுவந்து தம்மால் இயன்றதைக் கொடுக்கலாம். முதல் முறையாக பயிற்சி பெறுபவர்கள், பயிற்சியின் முடிவிலோ அல்லது அதன்பிறகு எப்பொழுதுமோ நன்கொடை வழங்கலாம்.

இவ்வாறு வரும் நன்கொடைகள் மட்டுமே உலகம் முழுவதும் இந்த பாரம்பரியத்தின் கீழ் நடக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான ஒரே வருவாய். செல்வந்தர்களான எந்த நிறுவனமோ தனிப்பட்டவரோ இந்த பயிற்சி முகாம்களுக்கு உபயம் செய்வதில்லை. மேலும், இதன் ஆசிரியரோ நிர்வாகிகளோ எந்தவிதமான சம்பளமும் பெற்றுக்கொள்வதில்லை. இவ்வாறாக, விபஸ்ஸனா நோக்கத் தூய்மையுடன் பொருள் ஈட்டும் குறிக்கோள் எதுவும் இன்றி பரவி வருகிறது.

நன்கொடை பெரியதாகினும், சிறியதாகினும், 'எனக்கு முன்னால் பயிற்சி பெற்றவர்களின் வள்ளன்மையினாலேயே நான் பயிற்சி பெறுவது சாத்தியமாயிற்று; எனக்குப் பின்னால் பலரும் இந்த தியான முறையின் பயன்களைத் அனுபவிக்க நானும் இனிவரும் பயிற்சி முகாம்கள் நடத்தும் பொருட்டு ஏதாவது வழங்குகிறேன்' என்கிற பிறருக்கு உதவும் நல்லெண்ணத்தோடே அளிக்கப்படவேண்டும்.

மேலே செல்க

http://www.tamil.dhamma.org/About Vipassana.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.