Jump to content

விநோத உலகம் சிவப்புக் கடற்கரை!


Recommended Posts

விநோத உலகம்  சிவப்புக் கடற்கரை!

 
image-717651.png
உலகின் மிக அழகான, கண்கவர் கடற்கரை எது தெரியுமா? சீனாவின் பன்ஜின் கடற்கரைதான்! கண்களுக்கு எட்டிய தூரம் வரை சிவப்புக் கம்பளத்தால் போர்த்தப்பட்டிருப்பதுபோல இந்தக் கடற்கரை காட்சியளிக்கும்! இதற்குக் காரணம், கடற்கரை முழுவதும் வளர்ந்திருக்கும் சிவப்புக் கடற்பாசிகள். பன்ஜின் நகரில் 'லியாவோஹி' ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கழிமுகம் உள்ளது. தண்ணீருடன் கூடிய சதுப்பு நிலப் பகுதியாக இது இருக்கிறது. ஜனவரி முதல் மார்ச் வரை மற்ற கடற்கரைகள் போலவே காட்சியளிக்கும். ஏப்ரல் இறுதியில் வசந்த காலத்தில் பச்சை வண்ணத்தில் கடற்பாசிகள் முளைக்கின்றன. 3 மாதங்களுக்குப் பிறகு, கோடைக்காலத்தில் பாசிகள் அடர் சிவப்பு வண்ணமாக மாறிவிடுகின்றன. ஆகஸ்ட் முதல் அக்டோபர்வரை உலகின் அழகிய கடற்கரையாகக் காட்சியளிக்கிறது! நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடற்பாசிகள் இளஞ்சிவப்பு நிறத்தை அடைகின்றன. குளிர் காலத்தில் கடற்பாசிகள் காய்ந்துவிடுகின்றன. 3 மாதங்களில் மீண்டும் கடற்பாசிகள் புதிதாக உருவாகிவிடுகின்றன. இயற்கையிலேயே கடற்பாசி சிவப்பாக மாறிவிடுவதாகச் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வேறு சில ஆய்வாளர்கள் இந்தக் கடற்கரை மண்ணிலுள்ள உப்பும் காரத்தன்மையுமே சிவப்பு நிறத்தைத் தருகிறது என்கிறார்கள். பன்ஜின் சிவப்புக் கடற்கரை 51 சதுர மைல் தூரத்துக்குப் பரவியிருக்கிறது. இந்தத் தனித்துவம் மிக்க அழகிய கடற்கரையை அரசாங்கம் மிகக் கவனமாகப் பாதுகாக்கிறது. அதனால் மிகக் குறைவான இடத்தை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். சீனாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் வருகிறார்கள். சூழலுக்குத் தீங்கிழைக்காமல் பார்ப்பதற்காக 6,500 அடி நீளத்துக்கு மரப்பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாலத்தின் மீது நடந்து சென்று சிவப்புக் கடற்கரையை ரசிக்கலாம். புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். சில இடங்களில் சிவப்புப் பாசிகளுக்கு இடையே தண்ணீர் ஓடுகிறது. அங்கே படகுச் சவாரியும் நடைபெறுகிறது.
சிவப்புக் கடற்கரை நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு அடைக்கலமும் அளிக்கிறது. இங்கே 400 வகையான விலங்குகள் வசிக்கின்றன. 250 வகை பறவைகள் வாழ்கின்றன. கிழக்கு ஆசியாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள், சிவப்புக் கடற்கரையில் தங்கி, குடும்பம் நடத்துகின்றன. முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குடும்பத்துடன் கிளம்புகின்றன. இங்கே பறவைகளுக்குத் தேவையான மீன், புழு, பூச்சிகள் போன்ற உணவுகளுக்குப் பஞ்சமில்லை. இந்தச் சிறப்புமிக்க சிவப்புக் கடற்கரை மனிதர்களின் நடவடிக்கைகளால் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. இந்தப் பகுதியில் சீனாவின் மிகப் பெரிய எண்ணெய்க் கிடங்கு, கடல் உணவுத் தொழிற்சாலைகள் போன்றவை இருந்தன. அவற்றின் கழிவுகள் கலந்ததால் சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 1988-ம் ஆண்டு சிவப்புக் கடற்கரையின் மகத்துவம் உணர்ந்து, சுற்றுச்சூழலைக் காக்கும் விதமாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். அதிகாலை சூரிய உதயத்தின்போதும் மாலை சூரியன் மறையும்போதும் சிவப்புக் கடற்கரை அற்புதமான அனுபவங்களைத் தரும். உலகின் அபூர்வக் கடற்கரையான பன்ஜின் சிவப்புக் கடற்கரை மனிதர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத இடங்களில் ஒன்று!
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.