Jump to content

பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள்.

Friday, 02 February 2007

லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரை, ஒரு வீட்டில் சில நாட்கள் பூட்டி வைத்து, அவர்கள் பேசிப் பழகுவதை ஒளிபரப்புவார்களாம். அதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே நடத்தினால், பிரபலங்கள் எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு கற்பனை. ஒரு பங்களாவில் கருணாநிதி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் உள்ளே வைத்து பூட்டப்படுகிறார்கள். அவர்கள் பேசிப் பழகும் நேரடி ஒளிபரப்பு இதோ:

கருணாநிதி: இந்த மர்ம பங்களா போயஸ் தோட்டத்திலுள்ள ஒரு ஆடம்பர பங்களாவை எனக்கு நினைவூட்டுகிறது.

ஜெயலலிதா: போதும் ஃபிளாஷ்பேக்கை நிறுத்துங்க. இந்த நிகழ்ச்சியே நீங்க செய்த சதிதானே?

வைகோ: சரியா சொன்னீங்கம்மா. நம்மளை இங்கே பூட்டி வைச்சிட்டு, தாயகத்தைக் கைப்பற்ற சதி நடக்குது. அந்த இரண்டு கோமாளிகளின் கனவு பலிக்காது.

கருணாநிதி: கோமாளிகளா... யார் அது?

வைகோ: அடடா, இவருக்கு ஒண்ணுமே தெரியாதாமாம்.. எல்.ஜி.., செஞ்சி இந்தத் துரோகிகளாவது யார்னு தெரியுமா?

கருணாநிதி: தெரியாமல் இருக்குமா? எல்.ஜி. என்பது கூட்டுப் பெருங்காயம்.. செஞ்சி என்பது ராஜா தேசிங்கு கோட்டை இருக்கும் இடம்.. இவை எப்படி உங்களுக்குத் துரோகம் செய்ய முடியும்? புரியவில்லையே, முன்னாள் போர்வாளே?

வைகோ: (பற்களை நற நறவென்று கடித்தபடி) எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உங்களை அப்படியே.. (திடீரென்று முகபாவம் மாறி அழுகிறார்) அய்யோ! அநியாயம் பண்றாங்களே! ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தறாங்களே! அம்மாவும் ஒண்ணும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே?

விஜயகாந்த்: பக்கத்துல ஏதோ புல்டோஸர் வண்டிச்சத்தம் கேக்குது. அநேகமா டி.ஆர். பாலுதான் ஓட்டிட்டுப் போகிறார்னு நினைக்கிறேன். ஹ... மண்டபத்தைத் தானே இடிப்பாரு? மக்களோட மனக்கோட்டையை எப்படி இடிப்பாரு? ஹ.. எல்லா பக்கமும் ஊழல்னு சொல்றேன்.. உங்க பொன்னான ஓட்டை எனக்கே போடணும்னு ஆணித்தரமா கேக்கறேன்.

ஜெ: ஹலோ, இப்ப என்ன தேர்தலா நடக்குது? இன்னும் தெளியலை போலிருக்கு. டிரங்கர்ட் ஃபெல்லோ...

விஜய: தமிழ்நாட்டை சுரண்டினது போதும்.. இப்ப என்னை இங்கே பூட்டி வைச்சுட்டா, என் கட்சியைக் கலைச்சிடலாம்னு கனவு காணாதீங்க. ஆனானப் பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிங்களோட கொடுஞ்சிறைகள்லேர்ந்தே தப்பிச்சவன் நானு.. ஹ... ஞாபகம் வெச்சுக்குங்க.. ரமணா படம் பாத்திருக்கீங்களா? ஹ.. அதுதான் நடக்கப் போகுது..

ராமதாஸ்: இந்த சினிமாவால தான் நாடே குட்டிச் சுவராகுது... ஒரு நாளைக்கு ஒரு ஷோதான் காட்டணும். படத்துல ஹீரோவே இருக்கக் கூடாது... தம்பி திருமா மட்டும் வேணா, ஹீரோவா நடிக்கலாம். சினிமாவுல எவனாவது சிகரெட் பிடிச்சா தொலைஞ்சீங்க.

கருணா: மருத்துவர் கோபமா இருக்காரு. என்ன வேணும் கேளுங்க, தர்றேன் டாக்டர்...

ராம: பின்ன என்ன தலைவரே, பச்சைத் துரோகம் செஞ்சா கோபம் வருமா வராதா?

கருணா: பச்சைத் துரோகமா? யார் செஞ்சது? ‘பச்சைத் துரோகம்’னு 1962_ல அண்ணா தலைமையில வாணியம்பாடியில நாடகம் ஒண்ணு போட்டிருக்கேன். அதைச் சொல்றீங்களா?

விஜய: வெறும் நாடகம்னு சொல்லாதீங்க.. கபட நாடகம்னு சொல்லுங்க... ஹ... அதுதான் உங்களுக்குக் கைவந்த கலையாச்சே...

கருணா: ‘கபட’ என்றொரு வார்த்தையையே தமிழிலிருந்து அழித்திட வேண்டும் என்று நினைப்பவன் இந்தக் கருணாநிதி...

வைகோ: (கண்களைக் கசக்கியபடி) இவரு எப்பவும் இப்படித்தாங்க... ஒண்ணுமே தெரியாத மாதிரிதான் பேசுவாரு... ஆனா எல்லாத்தையும் செய்யிறது இவருதான்..என் கட்சியைக் கூட உடைக்கப் பார்த்தாரு... பூ... பூ.. (அழுகிறார்)

ஜெ: ஷ்ஷ§... இந்த மாதிரியெல்லாம் அழுது கலாட்டா பண்ணக் கூடாது..என் கட்சியை விட்டு, கூட்டணியை விட்டு எத்தனையோ பேரு போறானுங்க.. அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்பட்டிருக்கேனா... போனா போறாங்க... வந்தாவர்றாங்க...

ராம: யார் வேணா வரட்டும், போகட்டும்.. ஆனா எவனும் ராத்திரி எட்டு மணிக்கு மேல ரோட்டுல திரியக் கூடாது.

வைகோ: இந்த பங்களா ரொம்ப நல்லா இருக்கு.. துரோகிகள் கிட்டே பொதுக்குழு உறுப்பினர்கள் போகாம இருக்க உள்ளே வைச்சுப் பூட்டிடலாம்.. விஷயம் வெளியே தெரியாது.

ஜெய: இந்த பங்களா விலைக்கு வருமா? சசியை விட்டுப் பேசச் சொல்லணும்.

கருணா: விலைக்கு வாங்கினால் சட்டம் அதன் கடமையைச் செய்யும்..

விஜய: சட்டம் தன் கடமையைச் செஞ்சா, தெய்வம் நின்னு கொல்லும்.

ஜெய: என்ன இந்தாளு.. எதிர்க்கட்சித் தலைவர் நானா, இவரா? ரொம்ப அதிகமா பேசிக்கிட்டே போறாரு? சினிமாவுல தான் அதிகமா பேசறாருன்னு பார்த்தா, அரசியல்லயும் டூ மச்சாப் பேசறாரு..

வைகோ: இந்தக் கருத்தைச் சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்கம்மா. நீங்க பேசாம இருக்கிறதுனாலத்தான் இவரை மாதிரி ஆளுங்களெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி சக்கைப் போடு போடுறாரு பாருங்க. எனக்கே இவருகிட்டே கூட்டணி மாறிடலாமான்னு உணர்ச்சிவசப்படத் தோணுது..

ஜெ: ஓஹோ, என்கிட்டே பேச இவ்வளவு தைரியம் வந்திடுச்சா? மறுபடியும் உள்ளே வைச்சாத்தான் சரிப்படுவாரு போலிருக்கு. சீக்கிரம் கூட்டணியிலேர்ந்து அனுப்பிட வேண்டியதுதான்..

வைகோ: ( அழுதபடி ) என்னை மன்னிச்சிடுங்கம்மா..

ராம: சரி..சரி.. எல்லாரும் அவங்க அவங்க ரூமுக்குக் கிளம்புங்க. மணி எட்டு ஆகப் போகுது. எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணிடணும். ஃபேன் போடக்கூடாது. சினிமா பாட்டை யாரும் முணுமுணுக்கக் கூடாது..பாத்ரூம் போகக் கூட யாரும் அறையை விட்டு வெளியே வரக் கூடாது. வந்தா அடி பின்னிடுவேன்.. எல்லோரும் அவரவர் அறைக்குத் திரும்புகிறார்கள்.

ராம: (கலைஞரிடம் ) என்ன, ஏதோ யோசனையில நிக்கறீங்க?

கருணா: உங்க கட்சியிலேர்ந்து சில பேர் உங்களை எதிர்த்து வெளியே வர்றா மாதிரி ஒரு சின்ன கனவு வந்தது. அதான்...

ராமதாஸ் ‘அய்யய்யோ’ என்று கத்தியபடியே ஓடுகிறார்.

குமுதம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நாம கற்பனை பண்ணாததெல்லாம் நடக்குமிடம் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.