Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"போரும் சமாதானமும்"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்"

தமிழீழ விடுதலைப் போர்பற்றிய அற்புதப் படப்பிடிப்பு! - பேரா. அய்யாசாமி

நன்றி : தென்செய்தி

கடந்த ஆண்டில் நான் படித்த நூல்களில் என்னைக் கவர்ந்தது எது என்று கேட்டால் அன்றன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்று தயங்காமல் விடை கூறுவேன். இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை தமிழர்கள் நடத்தி வரும் உரிமைப் போராட்டங்களை எடுத்துக்கூறி அவை வெற்றி பெறாமல் போனதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறார் பாலசிங்கம். இவற்றை யெல்லாம் சர்வதேச அரசியல்வாதிகளுக்குத் தெரிவிப்பதற்காக முதலில் ஆங்கிலத்தில் எழுதி, பின்னர் அவரே அதனைத் தமிழாக்கியிருக்கிறார்.

சிங்களவர்கள் திருப்பித் திருப்பிக் கூறுவதைப்போல் தமிழர்கள் கள்ளத் தோணிகளல்லர், வந்தேறிகளல்லர், தொன்று தொட்டு இலங்கைத் தீவையே தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வரும் இனத்தவர் என்பதை" சிங்களவர் எழுதியதும் இன்றுவரை இலங்கையின் தொடக்கக் கால வரலாற்றைப் பற்றிய ஆவணமாகவும் கற்றறிந்தவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதுமான மகாசாசனத்தைக் கொண்டே நிரூபிக்கிறார். ஆங்கிலேயர்கள் வரும் வரை இலங்கை பல நாடுகளாகவும் மாநிலங்களாகவும் பிரிந்தே இருந்திருக்கிறது, தமிழர்களும், சிங்களவர்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள். இலங்கையை தமிழ் மன்னர்கள் தொடர்ந்து ஆண்டு வந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் அந்நாட்டைத் தமிழ் மன்னர்களிடமிருந்து கைப்பற்றினார்கள் என்பது வரலாறு.

இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு தமிழர்கள் கோரியதெல்லாம் சம உரிமைதான் கூட்டாட்சி வேண்டுமென்றுதான் கேட்டார்கள். ஆனால் அவர்களின் இந்த நியாயமான கோரிக்கையைக் கூட அடுத்தடுத்து வந்த சிங்களப் பேரினவாத அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தந்தை செல்வாவின் அறவழிப் போராட்டம் எந்தப் பயனும் அளிக்கவில்லை. அவருடைய தலைமையில் தமிழர்கள் நடத்திய காந்தியவழிப் போராட்டங்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டன. இறுதியாக 1972-ல் கூட்டாட்சி வேண்டி மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார் செல்வா. போராட்ட வீரர்களை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல் தமிழர்களின் வீடுகளில் புகுந்து அவர்களின் உடைமைகளையும் மாதர்களின் கற்பையும் சூறையாடி ஆண், பெண், சிறார் உள்பட எண்ணற்ற தமிழர்களை வதைத்துக் கொன்றது இலங்கை இராணுவம். வேறு வழியே இல்லாமல்தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார் பாலசிங்கம்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதனை நன்றாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் நுட்பமான இராசதந்திரத்துடனும் தொலைநோக்குடனும் இந்தப் பிரச்சினையைக் கையாண்டார். ஆசியப் பிராந்தியத்தின் அமைதி குலையாமல் பாதுகாப்பதே அவரின் குறிக் கோளாக இருந்தது. ஒரு பக்கம் தமிழ்ப் போராளிகளுக்கு டேராடூன் போர்ப்படைப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளித்துக்கொண்டே மறுபுறம் தமிழரின் உரிமையை மதித்து நடக்குமாறு இலங்கையின் அன்றைய குடியரசுத்தலைவர் ஜெயவர்த்தனேயை வலியுறுத்தினார்.

இந்திரா காந்தியின் அகால மரணம் இலங்கைத் தமிழர் நலனுக்குப் பேரிடியாக ஆயிற்று. அடுத்துப் பிரதமரான ராஜிவ் காந்தியைக் கைக்குள் போட்டுக்கொள்ள உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஜெயவர்த்தனே. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டி ராஜிவ் காந்தி மேற்கொண்ட திம்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கி எல்லா நிகழ்ச்சிகளையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் பாலசிங்கம்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு அங்கே சிறைவைக்கப்பட்டார்கள். ஒப்பந்தத்தின் பிரிவுகளைப் பிரபாகரனிடம் காட்டி அதில் கையெழுத்திடச் சொன்னார் ராஜிவ் காந்தி. அது இலங்கைத் தமிழர் நலனையே பணயம் வைப்பதாக இருந்ததால் பிரபாகரன் கையெழுத்திட மறுத்துவிட்டார். ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆரை டெல்லிக்கு வரவழைத்து அவர் மூலமாகப் பிரபாகரனை இணங்க வைக்க முயன்றார். ஆனால் பிரபாகரன் தனது நிலையைத் தெளிவாக்கியபோது எம்.ஜி.ஆர். அதனைப் புரிந்துகொண்டு சென்னை திரும்பிவிட்டார். பிரபாகரனின் சம்மதம் இல்லாமலே இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இருப்பினும் தமிழர் நலன் காப்பதற்காக அதையும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முன்வந்தார் பிரபாகரன். இந்தியப் படை இலங்கைக்கு வந்தபோது வீரர்களுக்கு மாலையிட்டு வரவேற்றார்கள் தமிழர்கள். தங்களுக்கு விடிவு வந்துவிட்டதென்று முழுதாக நம்பினார்கள்.

ஜெயவர்த்தனேயின் தந்திரமும் சூழ்ச்சியும் தங்கள் நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று அப்போது அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சாமாத்தியமாகக் காய்களை நகர்த்தித் தமிழ்ப் போராளிகளும் இந்திய இராணுவமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தி விட்டார் அவர். சிங்கள இராணுவம் பாசறையில் ?ஓய்வெடுத்திருக்க தமிழ்ப் போராளிகளைச் சந்திக்கும் பணியை இந்திய இராணுவம் ஏற்றுக்கொண்டது.

ஒரு காரணமும் இல்லாமல் நிகழ்ந்துபட்ட இதனை நிறுத்துவதற்குப் பிரபாகரன் தக்க முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்குமிடையே எந்த விதமான விரோதமும் இல்லாதபோது இரு படைகளும் ஒன்றோடொன்று மோதி அழியும் நிலையைத் தவிர்ப்பதற்காக ராஜிவ் காந்திக்கு ஒன்றல்ல, மூன்று கடிதங்கள் எழுதினார். கல்லையும் கரைக்கும் கடிதங்கள் அவை. ஆனால் அதற்கு ராஜீவ் தரப்பிலிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை. ராஜிவ் காந்தியின் ஆலோசகர்கள் எந்தச் சமரசமும் ஏற்படாமல் தடுத்துவிட்டார்கள்.

ஜெயவர்த்தனேயின் சூழ்ச்சி ஒரு புறமும் அதிகாரிகளின் தவறான ஆலோசனைகள் மறுபுறமாக ராஜீவ் காந்தியை நடக்கக் கூடாத பாதையில் இட்டுச் சென்று வரலாற்றின் அவலமானதொரு நிகழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் நடந்த போர்களைப் பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறார் பாலசிங்கம். அவற்றில் குற்பிடத் தக்கவை இரண்டு. ஒன்று, யானை இறவுப் போர், அரியதான இந்தப் பகுதியில் இலங்கையின் அதிகாரப்பூர்வமான படையுடன் மோதி விடுதலைப் புலிகள் பெற்ற வெற்றி உலகிலுள்ள போர் நுணுக்கம் தெரிந்தவர்களை அசர வைத்தது. மற்றது, வன்னிப் போர். பதினெட்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போர் உலக வரலாற்றிலேயே நீண்ட காலம் நடைபெற்ற போர் என்ற பெருமையைப் பெறுகிறது. சளைக்காமல் போராடி வன்னிப் பகுதியை மீட்டுத் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள் விடுதலைப் புலிகள். அந்த நாள்களில் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழர்களுக்குச் செய்த உதவிகளை நன்றியுடன் நினைவு கூர்கிறார் பாலசிங்கம்.

நார்வேயின் உதவியால் சமாதானப் பேச்சுகள் தொடங்கியபோது அவற்றை முழுமனத்துடன் வரவேற்றார்கள் விடுதலைப் புலிகள். ஆனால் சிங்கள அரசாங்கம் அதே உற்சாகத்துடன் பேச்சுவாத்தைகளில் கலந்து கொள்ளவில்லை. தகுதி வாய்ந்த பிரதிநிதிகளை அனுப்பாமலும் தற்காலிக ஒப்பந்தங்களை நிறைவேற்றாமலும் காலம் கடத்துகிறது. புலிகள் சமாதானத்தை விரும்பவில்லை என்ற பொய்யான. பரப்புரையை முறியடிக்கும் விதத்தில் அவர்கள் சிங்கள அரசிடம் தந்துள்ள கூட்டாட்சித் திட்டத்தை நூலின் பின்னிணைப்பாகத் தந்துள்ளார்.

ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியரைப் போல சற்றே எட்ட நின்று நடந்த நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்துள்ளார் பாலசிங்கம்.

தன்னுடைய கருத்தை எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஒவ்வொரு உண்மைக்கும் தக்க ஆதாரங்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் இடையிலே ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான காரணங்களுக்கு இநதியப் படைத் தளபதிகளும் தூதுவரும் எழுதிய நூல்களை ஆதாரமாகக் காட்டியிரு:ககிறார். அந்த விதத்தில் ஒரு தலை சிறந்த ஆவணமாகத் திகழ்கிறது "போரும் சமாதானமும்".

ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு விருந்து. நீங்கள் அதை எதிர்ப்பவர்களானால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். பாலசிங்கத்தின் இந்த நூலை ஒரு முறை படித்துவிட்டு அதன்பிறகு நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.

வெளியீடு :

Fairmax Publishing Ltd. PO Box 2454,

Mitcham, CR4 1WB, England.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.