Jump to content

முள்ளி வாய்க்கால் - வன்னியில் இருந்து இரண்டு கவிதைகள். -


Recommended Posts

அன்று எங்களை 1983 கலவரமும் தமிழர் போராட்டங்களும் உலுப்பியதுபோல   கோபம் கொள்ள வைத்ததுபோல இன்று கலைஞர்களை, குறிப்பாகச் சமகாலக் கவிஞர்களை முளிவாய்க்கால் உறங்கவிடாமல் கோபத்தில் கொதிக்கவும் சபிக்கவும் வைக்கிறது.    எமது வன்னி மண்ணின் இரட்டையர்களான கருணாகரனும் தீபச்செல்வனும் எழுதிய இரண்டு கவிதைகளை அதன் பொருத்தப்பாடு கருதிப் பதிவு செய்கிறேன்.

முள்ளிவாய்க்கால் 2017

- கருணாகரன் ( Sivarasa Karunagaran )
--------------------------------------------

இரத்தமும் உயிரும் உறைந்து
அனலடிக்கும் இந்த மணல் வெளியில்
நேற்றும் பட்டி பூத்திருந்தது
இன்றும் பூத்திருக்கிறது
நாளையும் பூக்கும்

நேற்றைய பட்டிப் பூக்கள் தனித்திருந்தன.

இன்று 
வெள்ளை உடைகளில் விருந்தாளிகள் வந்தனர்.
சுடர்களை ஏற்றினர். 
பட்டிப் பூக்களை மேவி 
எடுத்து வந்த பூக்களைப் பரப்பினர்
துயரும் அழுகையும் மீட்கப்பட்டது

மண்ணடுக்குகளில் 
துயரில் 
ஆழப் புதைந்துறங்கிய மனிதர்கள் 
மெல்லக் கண் திறந்து
நேற்றைய நாளை நினைவு கூர்ந்தனர்
அப்படியே
இன்றைய நாளைப் பார்த்தனர்.

எரியும் சுடர்
பலியிடப்பட்டோரையெல்லாம் 
பெருகியோடும் கண்ணீரில் பிரதிபலித்தது

பொழுதகல
துயர் விழாவின் காட்சிகளெல்லாம் மெல்ல மாறின

ஏற்றிய சுடர்கள் அணைய முன்
பரப்பிய மலர்கள் வாடமுன்
எல்லோரும் திரும்பிச் சென்றனர்.

மண்ணடுக்குகளில் விழிதிறந்த மனிதர்கள்
மறுபடியும் தனித்தனர்
பட்டிப் பூக்களும் தனித்தன

நாளையும் தனித்தே பூக்கும் பட்டி

2

முள்ளிவாய்க்கால் பரணி,

தீபச்செல்வன்
01
கால்கள் எதுவுமற்ற என் மகள்
தன் கால்களைக் குறித்து
ஒருநாள் கேட்கையில்
நான் என்ன சொல்வேன்?

அவர்கள் கூறினர்
யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென
ஒருவரும் கொல்லப்படவில்லையென
யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென

அவர்கள் கூறினர்
ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென
யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென

பின்னர் கூறினர் 
போராளிகளே மக்களைக் கொன்றனரென
பின்னர் கூறினர் 
படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென

இறுதியில் சொல்லினர்
யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென

எமை மீட்கும் யுத்தமென்றனர்
மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? 
மனிதாபிமான யுத்தமென்றனர்
பீரங்கியின் சுடுகுழலில் மனிதாபிமானமுண்டா?

நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்து
மேலும் அதை தொடர்ந்து
எல்லாவற்றையும் மறப்போமென்றனர்
எதையும் பகிராமல் 
ஒருதாய் பிள்ளையென்றனர்

தாயற்ற என் மகளுக்கு
இதையெல்லாம் எப்படி விளக்குவேன்?

பழி வாங்கும் ஜனங்களென்றனர் ஒருபோது
மன்னிக்கத் தெரியாத ஜனங்களென்றனர் இன்னொருபோது

திரும்பாத இழப்பை
வெற்றி என்போரே!
என் மகளைக் குறித்து
நான் கண்ணீர் மல்குதல்தான்
பழிவாங்குதலா?

02
எனதாசை மகளே!
இம்மாபெரும் காயத்தை எப்படி ஆற்றுவோம்?
இம் மாபெரும் இழப்பை எப்படி நிரப்புவோம்?

காயங்களை மூடும்
இழப்புக்களை மறைக்கும்
தந்திரம் மிக்க வார்த்தை 
என்னிடமில்லை

மீளப் பெறமுடியாத கால்களை மறந்து
கால்களை பறித்த வெற்றியை
கொண்டாடச் சொல்லினர்

அவர்களோ போருக்கு காரணம் சொல்லினர்
நாமோ அழிக்கப்பட்டதின் நியாயத்தை வேண்டினோம்
மகளே! போரிடம் என்ன நியாயம் இருக்கும்?

அது நம் குழந்தைகளை கருவிலே நசித்தது
அப்பாவிகளின்மீது குண்டுகளைப் பொழிந்தது
நிலத்துடன் லட்சம் மனிதர்களை 
தின்று செரித்தது

எலும்புக்கூடுகளினிடையே
நிணங்களினிடையே
குருதியினிடையே
கொடி உலுப்பி மகிழ்ந்தது

அவர்கள் சொல்லுவதைப் போல
அந்தக் கணங்களை மறந்துவிட முடியுமோ?
அவர்கள் சொல்வதைப்போல
அந்தக் கணங்களை மன்னிக்க முடியுமோ?

திட்டமிட்டு செய்யப்பட்டவைகள்
மறக்கக்கூடியவை அல்லவே
வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டவைகள் 
மனிக்கக்கூடியவை அல்லவே

03
ஆட்களற்ற வீடுகளைக் குறித்தும்
வீடுகளற்ற நிலங்களைக் குறித்தும்
புகைப்படங்களில் இருக்கும் 
இல்லாதவர்களைக் குறித்தும்
பெயர் பட்டியல்களில் மாத்திரம் இருப்பவர்களைக் குறித்தும்
என் அன்பு மகளே என்னிடம் கேட்காதே?

இரத்தமும் சதைகளும் படிந்த
பழைய பத்திரிகைகளை
நீ விரித்துப் பார்க்காதபடி
மறைவாகவே வைத்துள்ளேன்

04
யுத்த வெற்றியின் பாடலில் மயங்கியபடி
எல்லாவற்றையுமே மறக்கும்படி சொல்லினர்
என் பிஞ்சுக் குழந்தை கால்களற்று நிற்கிறாள்
என் கால்களுக்கு என்ன ஆனது?
ஏன் என் கால்களை எறிகணைகள் தின்றனவென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?

என் தாயிற்கும்
என் ஐந்து சகோதரர்களுக்கும் என்ன ஆகிற்று?
நம் பதுங்கு குழியில் யார் குண்டு வீசினரென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?

மாபெரும் இனக்கொலையை ருசிக்கும்
பற்கள் நிரம்பிய கொடியை
என் மகளுக்கு பரிசளிக்கும் 
இந்த நாட்களில் தொடங்குமொரு காலம் 
எப்படியானதாய் இருக்கும்?

மேலுமொரு காயம் வேண்டாம் மகளே
மேலும் பலர் இல்லாதுபோக வேண்டாம் மகளே

05
நாம் கேட்பதெல்லாம்
உயிருக்கு உயிரல்ல
கொல்லப்பட்டவர்களை 
நினைவுகூரும் உரிமையை
மாண்டுபோனவர்களின் கல்லறைகளை
அழுது கண்ணீர் விடும் விடுதலையை

நாம் கேட்பதெல்லாம்
குருதிக்குக் குருதியல்ல
அழிக்கப்பட்டவர்களுக்கு நீதியை

நாம் கேட்பதெல்லாம்
பழிக்குப் பழியல்ல
இன்னொரு இனக்கொலையற்ற அமைதிநிலத்தை

நாம் கேட்பதெல்லாம்
எவருடைய உரிமையையுமல்ல
எம்முடைய உரிமையை

எனதருமை மகளே!
நாம் கேட்பதெல்லாம் 
நீதியின் உண்மையை
உண்மையின் நீதியை

உண்மைகளை நம் சடலங்ளைப் போலப் புதைத்து
இடுகாடுகளாக்கப்பட்ட நம் மண்மீது
எளிய நம் சனங்களின் குருதியினால் 
பொய்யை புனைந்தெழுதிய அவர்களின் வீர வரலாறு
அழிக்கப்பட்டவர்களை உறங்கவிடாது


ஏனெனில் அவர்களின் போர்
சூழ்ச்சிகளினால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
அநீதிகளால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
விதிகளை மீறியது

05
எனதருமை மகளே!
நம்முடைய நிலத்தை அபகரிக்கவும்
தம்முடைய அதிகாரத்தை பரப்புவும்
நம்முடைய அரசை கலைக்கவும்
தம்முடைய வேர்களைப் பதிக்கவும்
நம்மை பூண்டோடு துடைக்கவும்
உனது கால்களை பிடுங்கி
உன் தாயையும்
ஐந்து சகோதரர்களையும் கொன்றனரென அறிகையில்
இந்த உலகத்தை குறித்து நீ என்ன நினைப்பாய்?

 

 

Link to comment
Share on other sites

நாம் கேட்பதெல்லாம்
குருதிக்குக் குருதியல்ல
அழிக்கப்பட்டவர்களுக்கு நீதியை

நாம் கேட்பதெல்லாம்
பழிக்குப் பழியல்ல
இன்னொரு இனக்கொலையற்ற அமைதிநிலத்தை

நாம் கேட்பதெல்லாம்
எவருடைய உரிமையையுமல்ல
எம்முடைய உரிமையை
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.