Jump to content

இறைமை இயற்கை


Recommended Posts

 இறைமை இயற்கை

புதிய தொடர்:

 

 
 
 
iyarkai_3167822f.jpg
 
 
 

இறைமை என்பது கரை காண முடியாத கடல். முடிவில்லாத பாடல்.

இறைத் தவம் என்பது காலத்தை மறந்து அல்லது காலத்தைக் கடந்து காத்திருப்பது அல்ல; காலங்கள் அற்ற காலத்தில் உலாவுவது.

அத்தகைய இறைமையை இடைவெளியில்லாத, இறுகத் தழுவிய நெருக்கத்தில் புரிந்துகொள்ள வேண்டுமானால், பாலோடு தேனாக, காற்றொடு மணமாக ஒன்றுகலக்க வேண்டுமானால், இயற் கையைப் புரிந்துகொள்வதும் இயற்கையோடு கரைந்து கலந்துபோவதும் அவசியம்.

ஏனென்றால், இறையும் இயற்கையும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும், ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவை அவை.

இறை என்பது இயற்கையின் தாய். இயற்கை என்பது இறையின் வடிவங்களுள் ஒன்று.

கடலின் அலைகளை இறையின் பாடலாகவும், எல்லையில்லாத பெருவானத்தை இறையின் மனதாகவும், எரிதழலை இறையின் குணமாகவும் பார்ப்பது, என்னைப் பொறுத்தவரை கவித்துவச் சிந்தனை அல்ல. இறையை நேருக்கு நேராகச் சந்திக்கும் பாதையின் முதல் தடம் அது.

இறையை மறந்துவிட்டு இயற்கையை சிலாகிப்பதும், இயற்கையை தவிர்த்துவிட்டு இறையைத் துதிப்பதும், முற்றுபெறாத பயணமாகவே இருக்கக்கூடும்.

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இயற்கையை நேசிக்கும் மனம், இறைமை குடியிருக்கும் கோயில். இறைமையில் தோய்ந்து கிடக்கும் மனம், இயற்கையின் வழிபாட்டு மன்றம்.

தமிழ்நாட்டு மரபில் தழைத்த சைவமும் வைணவமும், இறையும் இயற்கையும் வேறு வேறல்ல என்கிற மெய்யியல் புரிதலில் நின்று இரண்டையும் ஒன்றெனக்கொண்டே வணங்கினார்கள்; வாழ்த்தினார்கள்.

மண்ணில் திண்மை வைத்தோன்

இறைவனையும் இயற்கையையும் ஒன்றாகக் கலந்து, அணுவைப்போல நுட்பமாகவும், அண்டத்தைப் போல விரிவாகவும் வரித்துக் கொண்டவர் வாதவூரர் மாணிக்கவாசகர்.

‘மதியில் தண்மை வைத்தோன் திண்டிறல்

தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்

வானிற் கலப்பு வைத்தோன் மேதகு

காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்

நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட

மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று

எனைப்பல கோடி எனைப்பல பிறவும்

அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன்…’

என்று அவர் திருவண்டப் பகுதியில் இயற்கையின் படைப்பில் இறைவனின் ஆட்சியை விவரிக்கிறார்.

நிலவில் குளிர்ச்சியை வைத்தவன், பேராற்றல் மிக்க கதிரவ நெருப்பில் வெப்பத்தை உண்டாக்கியவன், இவற்றை எக்காலத்திலும் மெய்யாக நிற்கும் விண்ணில் கலந்திருக்கச் செய்தவன், காற்றுக்கு வேகத்தையும், நிழல் விளங்கும் நீரில் இனிய சுவையையும் வைத்தவன் இறைவன். அவன் படைத்த எண்ணற்ற படைப்புகளையும் தன்மீது தாங்கும் நிலத்திற்கு வல்லமையைப் படைத்த இறைவன், அதில் மீண்டும் மீண்டும் பிறந்தழியும் பலகோடி உயிர்களையும் அதனதன் இடத்தில் பொருத்தமாக அடைத்தான் என்பது இந்தப் பாடலின் பொருள்.

திருவண்டப் பகுதி என்பதே இறைவனின் படைப்பில் மேன்மை பொருந்திய ஐம்பெருங் கூறுகளான பஞ்சபூதங்களை வியந்து போற்றுவதுதான். பஞ்சபூதங்கள் எனப்படும் வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் ஆகிய அந்த ஐவர் இல்லாமல், இறை எதையும் படைப்பதில்லை என்கிற கருத்தில் மாணிக்கவாசகரும் திருமூலரும் அழுந்த நின்றவர்கள் ஆவர்.

பொய்கையாழ்வாரின் புளகாங்கிதம்

அதேபோல, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை நாளும் துதிக்கும் வைணவ மறையோ, ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை பல இடங்களில் அழியாத எழுத்துக்களில் சொல்லிச் செல்கிறது.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் திருவந்தாதியில்,

‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன் மாலை

இடராழி நீங்குகவே என்று’

பொய்கையாழ்வார் புளகாங்கிதம் அடைகிறார்.

இந்த பூமியே அகல் விளக்காகவும், அதில் சூழ்ந்துள்ள கடல் நீரே நெய்யாகவும், எழுகின்ற கதிரவனே சுடராகவும் இருக்க, எம்பெருமானின் திருவடிகளில் இப்பாமாலையைச் சூட்டுகிறேன் என்று, இயற்கையின் மீதான கற்பனைச் சிகரத்தில் ஏறி நிற்கிறார் பொய்கையாழ்வார்.

உலகமே குடிநீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இக்காலத்தில், நீரைப் போற்றும் பிரபந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் தவித்த வாய்க்கு அமுதத்தை ஊட்டக் கூடியவை.

ஐந்து வாயில்கள்

வெளி முதலாக, நிலம் ஈறாக, ஆட்சி செய்யும் ஐம்பூதங்கள் இல்லாமல், இந்த உலகத்தில் ஓரணுவும் அசைவதில்லை. ஒரு கருவானது உருக்கொண்டு, மண்ணில் தோன்றி, வாழ்ந்து, மறைந்து, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறும்வரைக்கும் அதன் பயணத்தில் ஐம்பூதங்கள் உடன்வருகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலுக்கு அரசனாக விளங்கும் இறைவன், தொழிலுக்கு ஒன்றாக இந்த ஐம்பூதங்களையே ஊர்தியாகக் கொண்டு உலவுகிறான்.

மனித உடம்புக்கு ஒன்பது வாயில்கள். இயற்கையின் உடம்புக்கு ஐந்து வாயில்கள். வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் என்று மெய்யியல் புரிதலில் வரிசைப்படுத்தப்படும் ஐம்பூத வாயில்களிலும் நுழைந்து, இயற்கை என்னும் அன்னையின் மடியில் தவழ்ந்தபடி, இறைப் பேராற்றலின் தரிசனத்தை அனுபவிப்போம். புரிசடையோனும், பொன்னாழி வண்ணனும் பூதங்கள் ஐந்தில் பொருந்தக் காண்போம்.

(அடுத்த வாரம்: ‘நிலம்’ பூதம்…)

http://tamil.thehindu.com/society/spirituality/புதிய-தொடர்-இறைமை-இயற்கை/article9711612.ece

Link to post
Share on other sites

இறைமை இயற்கை 02: கல்லாகிக் களராகிக் கானுமாகி

 

nature_3170070f.jpg
 
 
 

இறைவனைப் போலவே அந்தமும் ஆதியும் இல்லாத அண்டத்தின் கூறுகளை வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் என்று வரிசைப்படுத்துகிறது தொல்காப்பியத்தின் அண்டவியல் கோட்பாடு. தொல்காப்பியருக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து, ‘திருத்தாண்டகம்’ வாசிக்க வந்த திருநாவுக்கரசர், ஐம்பூதங்களை இறை வழியில் நின்று எடுத்தியம்புகிறார்.

எப்போதும் இருக்கக்கூடிய நிலமாகவும், தணிக்கும் நீராகவும், எரியும் தீயாகவும், வீசும் காற்றாகவும், விரியும் வானாகவும் இறைவனே இருக்கிறான் என்கிறது நாவுக்கரசர் தேவாரம். அத்துடன், ஒவ்வொரு பூதத்திலும் இறைவனின் தன்மை எப்படி நிறைந்திருக்கிறது என்பதையும் அவர் விவரிக்கிறார்.

‘கல்லாகிக் களராகிக் கானு மாகி’ என்று தொடங்கி, ‘நிமிர்ந்தடிகள் நின்றவாறே’ என்று முடியும் நெடிய பாடலில், நிலத்தில் என்னென்ன வகையிலெல்லாம் இறைவன் குடிகொண்டிருக்கிறான் எனப் பட்டியலிடுகிறார்.

மலையாகவும், களர் நிலமாகவும், காடாகவும், புல்லாகவும், புதராகவும், பூடு (சிறிய வகைச் செடி) ஆகவும், மக்கள் வசிக்கின்ற நகரமாகவும், அந்த நகரத்தின் பல்வேறு செயல்பாடுகளாகவும், அந்த நகரத்தின் அழிவாகவும் இறைவனே இருக்கிறான் என்பது நாவுக்கரசரின் திருவாக்கு.

மலைகளைப் பார்க்கும் போதெல்லாம், அவை என் கண்களுக்குக் கற்களாகத் தெரிவதில்லை. மலைகளை எழுந்து நிற்கும் இறை என்றே நினைத்துக் கொள்கிறேன்.

மலைகளின் உயரமே மனிதர்களுக்கு ஒரு செய்திதான். மலைகளில் ஏற வேண்டுமானால் குனிந்து நடக்க வேண்டும். மலைகளில் இருந்து கீழே இறங்க நினைத்தால், நிமிர்ந்து நடக்க வேண்டும். இறையை அடைய வேண்டுமானால், உள்ளத்தில் பணிவு முக்கியம் என்பதையும், ஆணவம் மிகுந்தால் தாழ்வு நிச்சயம் என்பதையும் மலைகளின் உயரங்கள் பறைசாற்றுகின்றன.

புவிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். மலைகளுக்கு அவை கூடுதலாகவே உண்டு. மலைகள் பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்துத் தன்னகத்தே வைத்துக் கொண்டு, அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வல்லவை. மலைகள் பேராற்றலின் சேமிப்புக் கிடங்குகள். மலைகள், அன்னையின் மடிகள்; இறையாற்றலைத் தேடும் உயிர்களையெல்லாம் அவை அரவணைக்கின்றன.

தமிழ்நாட்டின் சதுரகிரி, வெள்ளியங்கிரி, பருவதமலை, பழநிமலை, மருதமலையில் தொடங்கி, உத்தராகண்டின் இமயமலையில் உறைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத் வரைக்கும் மலைக் கோயில்கள் மகத்துவம் மிக்கவையாக இருப்பதன் பின்னால், மலைகளின் ஈர்ப்பு விசையும் வெளிப்படுத்தும் விசையும் இருக்கின்றன.

இறையோடு உரையாட மலைகள்

தமிழ்நாட்டுச் சித்தர்களில் பலரும் இறையோடு உரையாட மலைகளையே தேர்ந்தெடுத்தனர். அகத்தியர் பொதிகை மலையிலும், பாம்பாட்டிச் சித்தர் மருதமலையிலும், போகர் பழநிமலையிலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், ராமதேவர் அழகர்மலையிலும், குதம்பைச் சித்தர் திருக்கழுக்குன்றத்திலும், இடைக்காடர் திருவண்ணாமலையிலும் தவமியற்றியவர்கள் ஆவர். மலைகள், நிலமகளின் மார்புகள்; இறைத்தாகம் கொண்ட உயிர்களுக்கெல்லாம் அவை ஆற்றல் நிறைந்த அமுதத்தை ஊட்டும் என்பதை சித்தர்கள் நன்கறிந்தவர்கள்.

தமிழ்ச் சித்தர்கள் மட்டுமல்லர், இஸ்ரேலின் இயேசுநாதரும் தன் பயணத்தை மலையில் இருந்தே தொடங்கி, இறுதியில் உலகம் முழுமைக்குமாய் ஆனவர். யோர்தான் நதியில் இறங்கி திருமுழுக்கைப் பெற்றுக்கொண்ட பின், இன்றைய வடக்கு இஸ்ரேலின் மலைப்பாங்கான பகுதிக்குச் சென்று அங்கிருந்து மலைப் பிரசங்கத்தை மேற்கொண்டார். அவரது போதனைகளிலேயே மிகப் பெரியதாகவும், மிகச் சிறந்ததாகவும் போற்றப்படுவது மலைப் பிரசங்கம். மனித இனம் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கான பாதையை, போதிப்பதற்கான பயணத்தை அவர் மலையில் இருந்து தொடங்கினார். அந்த வகையில் பார்த்தால், மலையில் இருந்து தொடங்கும் பாதை வாழ்க்கையில் ஒருபோதும் கீழிறங்குவதில்லை; மேல் நோக்கியே செல்கிறது.

மலைகளின் ஈர்க்கும் ஆற்றலையும், வெளிப்படுத்தும் ஆற்றலையும் கருத்தில் கொண்டுதான், கோயில்களின் மூலவர் திருமேனிகளைக் கருங்கற்களில் செதுக்கச் சொன்னார்கள் ஐந்திறம் படித்த ஆசான்கள் (ஐந்திறம் என்பது மயமாமுனியால் எழுதப்பட்ட கட்டடக் கலை நூல்).

கற்சிலைகள் ஏன்?

அருவ சிவ வடிவமாக இருந்தாலும், பாற்கடல் பரந்தாமனாக இருந்தாலும், அபிராமி அம்மையாக இருந்தாலும், பூமாதேவித் தாயாராக இருந்தாலும் அவர்களைக் கற்களில் செதுக்கிக் கோயில் வைத்தார்கள். இந்தக் கற்றளிகள், மனிதர்களின் எண்ண ஆற்றலை ஈர்த்துக்கொண்டு, தன்னகத்தே ‘சேமித்து’ வைத்திருக்கும் இறையாற்றலை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அருளிச் செய்யும் என்பதே இதன் பின்னாலிருக்கும் கருதுகோள்.

ராஜகோபுரத்தில் தொடங்கி, விமானம், திருச்சுற்று மாளிகை வரைக்கும் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்கள்கூட உண்டு. ஆனால், கருங்கல்லில் செதுக்கப்பட்டால்தான் அது மூலவர் சிலை. வழிபாட்டில் கற்சிலைகளுக்கு இறைவனுக்கு நிகரான இடமுண்டு. எனவே, கோயில்களில் உள்ள ஒவ்வொரு சிலையும் மலைகளின் குழந்தைகள்; இறை ஆற்றலின் துண்டுகள்.

அரங்கனின் மீது அழியாக் காதல் கொண்டிருந்த ஆண்டாள்,

‘நடையொன்றில்லா உலகத்து நந்தகோபன் மகனென்னும்

கொடிய கடிய திருமாலால் குளப்புக்கூறு கொளப்பட்டு…’

என்று திருமாலின் இதயத்தைக் கல் நெஞ்சம் என்கிறார் ஆண்டாள். (நாச்சியார் திருமொழி).

இறைவன் தன்னைக் காணாமல் இருக்கிறான் என்பதற்காக மட்டும் இறைவனின் நெஞ்சத்தைக் ‘கல்’ என்று சொல்லவில்லை; ஆற்றலை ஈர்க்கும் கல்லாக இருந்து, தனது நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவனும், ஆற்றலை வெளிப்படுத்தும் மலையாக இருந்து தனக்கு அருள் மழை பொழிபவனும் அவனே என்கிறார் ஆண்டாள்.

இன்றைக்கும் உலகம் முழுக்கப் பல்வேறு காரணங்களால் மலைகள் சிதைக்கப்படுகின்றன. மனிதப் பயன்பாட்டுக்காக இறையின் வடிவமான மலைகளைச் சிதைக்கலாம் என்பது ஊழிச் சிந்தனை.

திருமூலர் சொல்வது போல,

‘கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்

திருவருங் கோவென் றிகல இறைவன்…’ (திருமந்திரம் – பிரளயம்)

ஊழியின்போது, பல்வேறு கரிய மலைகளையும் மூழ்கடிக்கும் வெள்ளம் மேலெழும் என்றால், மனிதர்களின் ஊழிச் சிந்தனையை மூழ்கடிக்கும் இறையருள் வெள்ளம் எழத்தான் வேண்டும்.

***

நிலத்தைப் போலவே தழுவக் குழைந்த நாதராய் விளங்கும் காஞ்சிபுரம், திருக்கச்சியேகம்பர நாதரையும், அந்தியில் நிலம் தனது உடற்சூட்டைத் தணித்துக் கொள்வதுபோல, திருவந்திக்காலப் பூசையின்போது சிறப்பு செய்யும் திருவாரூர் தியாகேசரையும் அடுத்த வாரம் தரிசிப்போம்.

(அடுத்த வாரம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/இறைமை-இயற்கை-02-கல்லாகிக்-களராகிக்-கானுமாகி/article9716876.ece

Link to post
Share on other sites

இறைமை இயற்கை 03: அன்பில் குறை வைக்காத நிலம்

08chsrs_bootham2_3172551f.jpg
 
 
 

வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் என்ற ஐம்பூத வரிசையில் நிலம் கடைசியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணில் பிறந்த எதுவும் கடைசியாக நிலத்தை அடைந்தே தீர வேண்டும் என்பதன் அடையாளமாகவே நிலம் கடைசியாக வைக்கப்பட்டுள்ளது.

நிலத்தின் சிறப்புகளில் ஒன்று, காத்திருப்பது. நமது காலுக்குக் கீழே உள்ள நிலமானது இன்று நேற்றல்ல, பல கோடி ஆண்டுகளாக அங்கேயே காத்திருக்கிறது – நமக்காகவும், நம்மைப் போன்ற பிற உயிர்களுக்காகவும்.

நிலம் காத்திருக்கிறது என்றால், அது இயங்குகிறது என்று பொருள். கோடி கோடி ஆண்டுகளாக இயங்கிய நிலம், இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம் தேவையானவற்றைத் தனக்குள் புதைத்தபடியே இறுகிக் கிடக்கிறது.

இறைவனின் இயக்கத்தைக் காலம் என்றழைக்கலாம்; நிலத்தின் இயக்கத்தை வலிமை என்றழைக்கலாம். நிலம் எவ்வளவு இயங்குகிறதோ, அவ்வளவு வலிமை பெறும்.

வலிமை என்பது இறுகிக் கிடப்பது மட்டுமல்ல; அவ்வப்போது இளகி நிற்பதும்தான். இளகுதலும் இறுகுதலும் இறையின் மனம்; நிலத்தின் குணம்.

தழுவக் குழைந்த நாதர்

முன்னொரு காலத்தில், வட தமிழ்நாட்டைச் செழுமைப்படுத்திவந்த கம்பையாற்றின் கரையில் மண்ணால் செய்யப்பட்ட ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் திருமேனி அழகைக் கண்டு வியந்த ஓர் இளம்பெண், நாள்தோறும் அந்தச் சிவலிங்கத்துக்குப் பூஜைகள் செய்துவந்தாள். அந்த லிங்கத்துக்கும் அவளது அழகைக் கண்டு மையல் உண்டாயிற்று. ஒருநாள் அவள் பூஜையில் ஈடுபட்டிருந்தபோது, சிவம் கண் அசைக்க, கம்பை மாநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அதைக் கண்டு அலறிய அவள், வெள்ளம் தன்னை இழுத்துச் சென்றிடாதவாறு பற்றிக்கொள்ள அருகில் எதுவும் இல்லாததால், அந்தச் சிவலிங்கத்தையே இறுகத் தழுவிக்கொண்டாள்.

வெள்ளம் குறைந்த பிறகு, அச்சம் தணிந்த பிறகு, அவள் கைகளை விலக்கினாள். அவள் இறுகத் தழுவியதால், மண்ணாலான அந்தச் சிவலிங்கத்தில் அவளது வளைத் தடமும் முலைத் தடமும் பதிந்திருக்கக் கண்டாள். நாணத்தால் குழைந்து, பின் மீண்டும் தழுவி இறைவனோடு ஒன்றுகலந்தாள். அவளே காஞ்சிபுரத்தின் ஏலவார்குழலி அம்மை. அந்தச் சிவலிங்கமே தழுவக் குழைந்த நாதர் எனப்படும் கச்சியேகம்ப நாதர். ஐம்பூதக் கோயில்களில் நிலத்துக்கான கோயிலாகிய காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் திருத்தல வரலாறு இது.

நிலம் எவ்வளவு திண்மையாக இருந்தாலும், மனித மனம் அன்பு செய்தால், அது குழைந்துவிடும் என்பதையே இந்த ‘தழுவக் குழைந்த நாதர்’ வரலாறு பறைசாற்றுகிறது.

தாங்கும் நிலம்

நிலமே பொறுமையின் எல்லை. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல…’ என்றார் திருவள்ளுவர். இறையின் குணமும் அதுதான்.

‘கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்

கெல்லையி லாத இலயமுண்டாம’ (திருமந்திரம் - பொறையுடைமை)

- என்று திருமூலர் இறைவனின் எல்லையில்லாத பொறுமையை வர்ணிக்கிறார். பொறுமை மட்டுமல்ல. நிலத்தின் ஒவ்வொரு இயல்பிலும் இறைமையைக் காண முடியும்.

நிலம் தன்னகத்தே கொட்டப்படும் எதையும் உட்கொண்டு செரித்து, ஒரு புதிய ஆற்றலாக வெளிப்படுத்தவல்லது. மண்ணுக்கடியில் விதையை வைத்தால் அது மரமாகும். குப்பைகளைக் கொட்டினால் அவை உரமாகும். மனிதர்களின் மீதான நிலத்தின் அன்பில் துளியும் குறைவில்லை. மனிதர்கள் இப்போது நிலத்தில் மிக அதிகமாக நெகிழியைக் கொட்டுகிறார்கள்.

பல கோடி ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட நிலத்தடி நீரை, சில பத்தாண்டுகளில் உறிஞ்சி தீர்த்துவிட்டார்கள். ஆனால், மனிதர்களின் மீதான நிலத்தின் அன்பினாலேயே நிலம் அவற்றை ஏற்றுக்கொள்கிறது; மனிதர்களால் தனக்கு ஏற்படும் துன்பங்களை அது பொறுத்துக்கொள்கிறது. எனவேதான், நிலத்தை அன்னை என்கிறோம்; திருமகளைப் பூமாதேவி என்கிறோம்.

பகல் முழுக்கத் தனக்குள் வாங்கிய கதிரவனின் வெப்பத்தை, ஒவ்வொரு அந்தியிலும் நிலம் தணித்துக்கொள்கிறது. நிலம் அப்படிச் செய்யாவிட்டால், மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் இரவில் இளைப்பாற முடியாது. நிலத்தின் இந்தப் பேரன்புக்கு நன்றி சொல்லிச் சிறப்பு செய்வதுதான், திருவாரூரின் தியாகராஜருக்குச் செய்யப்படும் திருவந்திக்காப்பு (மாலை 6 மணி) பூஜை. (ஐம்பூதத் தலங்களில் நிலத்துக்கான மற்றொரு தலம் திருவாரூர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது).

கழிவகற்றிப் புதுப்பிக்கும்

நிலத்தின் இறைமையைப் புரிந்துகொள்ள அண்டத்திலிருந்து பிண்டத்துக்குத் திரும்புவோம். உடலின் உள்ளுறுப்புகளில் மண்ணீரல் என்று ஒன்று உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால், முதிர்ந்த ரத்தச் சிவப்பணுக்களை அழித்து, புதிய அணுக்களையும் நிணநீரையும் உற்பத்தி செய்வதே மண்ணீரலின் பணி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், அண்டத்தில் நிலத்தின் பணி என்னவோ, அதைப் பிண்டத்தில் செய்வதே மண்ணீரல். எனவேதான், அதற்கு மண்ணீரல் (மண்+ஈரல்) என்று பெயர்.

மனிதர்களின் எண்ணங்களையும், செயல்களையும் உண்டாக்குவதிலும் வழிநடத்துவதிலும் மண்ணீரலுக்குப் பெரும்பங்கு உண்டு. பிரபஞ்சத்தின் செயல்பாடுகளை உண்டாக்குவதிலும் வழிநடத்துவதிலும் மண் பூதத்துக்குப் பெரும்பங்கு உண்டு.

திருமூலர் சொல்வதுபோல,

‘அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே

அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்…’

வயிறும் நிலமும் மனிதர்களால் நிரப்பித் தீர்க்க முடியாத பள்ளங்கள். அவற்றை நிரப்பி தூர்க்கும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமானால், இறையிடம் சரணடைய வேண்டும்.

(அடுத்த வாரம்: ‘நீர்’ பூதம்)

http://tamil.thehindu.com/society/spirituality/இறைமை-இயற்கை-03-அன்பில்-குறை-வைக்காத-நிலம்/article9721877.ece?widget-art=four-all

Link to post
Share on other sites
 • 2 weeks later...

இறைமை இயற்கை 04: உண்மை உணர்த்திய கருங்கொண்டல்காரன்

 

 
 
படங்கள் : பால் கிரிகோரி
படங்கள் : பால் கிரிகோரி
 
 

உலகு சூழ் ஆழிக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. ‘இந்த உலகத்தின் நீர்நிலைகளிலேயே கடலாகிய நானே பெரியவன்’ என்பதுதான் அது. தனது உடல் எவ்வளவு பெரியது எனக் கடல் கர்வம் கொண்டது. தனது மடியில்தான் எத்தனை எத்தனை உயிர்கள் வாழ்கின்றன என்கிற எண்ணம், கடலுக்குச் செருக்காக மாறியது. இதைக் கடல் வெளிப்படையாக அறிவித்தபோது, நதிகளுக்குக் கோபம் வந்துவிட்டது.

பல நூறு மைல்களுக்கு அப்பால், எங்கோ வழியும் நீரை நாங்கள் உன்னிடம் கொண்டுவந்து கொட்டாவிட்டால், உனக்கு எங்கிருந்து கிடைக்கும் பெருமை? உனக்கு ஏது செல்வம் என்று கடலிடம் நதிகளெல்லாம் சண்டைக்கு வந்துவிட்டன.

இதைத் தூரத்திலிருந்து கவனித்த சிற்றாறுகள், ஓடைகள், கால்வாய்கள் போன்றவை உடனடியாக ஒன்று கூடின. நதிகளின் கடமை, நாட்டுக்கு வளம் சேர்ப்பது. எங்களைப் போன்ற சிற்றாறுகளும் ஓடைகளும் கால்வாய்களும் இல்லாமல் நதிகள் எப்படி நாட்டுக்கு நல்லது செய்துவிட முடியும் என அவை உரிமைக்குரல் எழுப்பின. அந்தக் குரலின் ஒலி கேட்டுக் கூடிய குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் போன்றவையும் சிற்றாறுகளின் கூட்டணியில் சேர்ந்துகொண்டன.

அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது. அது அருவியின் குரல். அருவி சொன்னது, மலைகளில் இருக்கும் வெள்ள நீரை நதிகளிடம் கொண்டுவந்து சேர்ப்பதே நாங்கள்தான். நீருக்கு ஏது வீழ்ச்சி? மேலிருந்து கொட்டும் நீரில் எத்தனை வேகத்தை எடுத்துவருகிறோம்? அது நீருக்கு நேரும் எழுச்சி! எனவே, நாங்களே பெரியவர்கள் என்றது அருவி.

நீர் பஞ்சாயத்து

நீர் சண்டை, நெடுஞ்சண்டை ஆனது. பரம்பொருளின் ஆலமர மண்டபத்தில் நீர் நிறைந்த சொம்புடன் கூடியது பஞ்சாயத்து.

‘நீருக்கு நிலைகளாய் இருக்கும் எங்களில் யார் பெரியவர் என்பதில் சச்சரவு. எனவே, எங்களது சண்டையை நீர்தான் தீர்க்க வேண்டும்’ என்று இறைவனிடம் முறையிட்டது கடல். மற்ற நீராதாரங்களும் அதை ஆமோதித்தன.

இறைவன் கேட்டார், ‘இது தொடர்பாக உங்களில் ஒருவனாகிய வான் மழையின் கருத்தைக் கேட்டீர்களா?’

‘இல்லை’ என்றது கடல். இறைவன் சொன்னார், வான் மழையின் கருத்தை அறியாமல், இந்த வழக்கு நீதி பெறாது. நான் வேறு ஒரு பணிக்காக வான் மழையை வேற்றுலகுக்கு அனுப்பியிருக்கிறேன். அது வருவதற்குச் சில ஆண்டுகள் ஆகும். அதுவரைக்கும் எல்லோரும் இங்கேயே காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு, அவர் புறப்பட்டார்.

நம்மில் பெரியவன்

கடல் முதலாக, அருவி ஈறாக அனைத்தும் காத்திருந்தன. ஆனால், கருங்கொண்டல்காரன் மட்டும் வரவே இல்லை. ஆண்டுகள் கடந்தன, அருவியின் தண்ணீர் குறையத் தொடங்கியது; நதிகள் வற்றத் தொடங்கின; சிற்றாறுகளும் ஓடைகளும் ஏரிகளும் கால்வாய்களும் குளங்களும் குட்டைகளும் காயத் தொடங்கின. கடலின் உடல் மெலிந்தது.

அப்போதுதான் அனைத்தும் உணர்ந்தன, நம்மிலும் பெரியவன் வான் மழைதான் என்பதை.

இறைவனின் படைப்பில் எது சிறந்தது என்ற கேள்வியே இழிவானது. மண்ணில் நீர் வளத்தைப் பெருக்கும் அனைத்து நீராதாரங்களுமே சிறந்தவைதான். ஆனால், வான் மழை சிறப்பிலும் சிறப்பானது. ஏனென்றால், இறைவனின் படைத்தல் தொழிலும் அழித்தல் தொழிலும் மழையின் மூலமாகவே நடக்கிறது.

மிஞ்சியிருக்கும் தூய்மை

நீருக்கு நிலைகளாக விளங்கும் அனைத்தையும் மனிதர்களால் மாசுபடுத்த முடியும். குளங்களில் வீடு கட்ட, ஏரிகளை வீட்டு மனைகளாக்க, நதிகளின் மடிகளில் சேர்ந்திருக்கும் மணலைத் திருட, அருவிகளின் பாதைகளில் விடுதிகள் கட்ட, உச்சகட்டமாகக் கடலின் கருவறைக்குள் அணுக்கழிவுகளைக் கொட்ட மனிதர்களால் முடியும். ஆனால், மழை என்பது பொழியும்வரை, அதைத் தொடும் அதிகாரம் மனிதர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால்தான் மழை இன்னும் மிச்சமிருக்கிறது, இறைவனின் உள்ளத்தைப் போலவே தூய்மையானதாக.

இந்த உலகத்தில் மேலானது என எதை வேண்டுமானாலும் நாம் நினைத்துக்கொள்ளலாம். வான் மழை மட்டும் பொய்த்துப் போனால், எந்த மேலானதும் கீழானது ஆகிவிடும். ஏனென்றால், இயற்கையின் வான் மழை என்பது இறைவனின் அருள் மழை.

தானச் சிறப்பு

கடவுள் வாழ்த்துக்கு அடுத்த இடத்தில் வான் சிறப்பை வைத்து, மழையின் மாண்பைச் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர். அந்த அதிகாரத்தின் பத்துக் குறள்களும் வான் மழையின் அதிகாரத்தைப் பறைசாற்றுபவை. திருமூலரோ, தானச் சிறப்புக்கு முந்தைய இடத்தில் வானச் சிறப்பை வைக்கிறார்.

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி

உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்

நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்

கரையில்லை எந்தை கழுமணி யாறே

(திருமந்திரம் – வானச் சிறப்பு – பாடல் 2)

வான் மழையைப்போல் பொழிகிறது, நம் தந்தையாகிய இறைவனின் அருள் மழை. அருவியைப் போல ஓங்கி விழும் அந்த அருட் புனலுக்குக் கரையுமில்லை, அதில் நுரையுமில்லை, மாசுமில்லை என்கிறார் திருமூலர்.

மனதில் எழுதுவோம்

இனி பெய்யும் ஒவ்வொரு மழைத் துளியும் மனிதர்களுக்கு உயிர்த் துளிகள். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வாசகத்தைப் பேருந்துகளில் எழுதுவதை நிறுத்திவிட்டு, மனிதர்கள் தங்களுடைய மனங்களில் எழுத வேண்டிய காலம் வந்துவிட்டது. இறைவனிடம் காட்டும் அன்பை நீரிடமும் நீர்நிலைகளிடமும் காட்ட வேண்டியது அவசியம்.

நீரைத் துதிப்பதும், நீர்நிலைகளைக் காப்பதும் பிறவிக்குப் பெருமை சேர்க்கும் திருப்பணி அல்ல; எதிர்கால மனித சமூகம் பிழைத்திருப்பதற்கான முதல் கடமை!

நீரைக் கல்லாக மாற்றிய சைவமும் நீரை விளக்காக ஏற்றிய வைணவமும் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/society/spirituality/இறைமை-இயற்கை-04-உண்மை-உணர்த்திய-கருங்கொண்டல்காரன்/article9726795.ece

Link to post
Share on other sites

இறைமை இயற்கை 05: கடலின் பேரன்பும் பெருங்கோபமும்

 

 
ஒளிப்படம் பால் கிரிகோரி
ஒளிப்படம் பால் கிரிகோரி
 
 

கடல் என்பது இன்பத்தின் அடையாளம். பரந்தாமன் இன்பத்தின் கடவுள் என்றால், அவன் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடல், இன்பத்தின் ஊற்று. கடல் என்பது கடமைகளுக்கும் உரிமைகளுக்கும் இடையில் தேங்கி நிற்கும் செயல் வடிவம். ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று யாராவது கேட்டால், ‘கடல்’ போல இருக்க வேண்டும் என்றே சொல்லலாம்.

ஏனென்றால், நம்முடைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எதுவெல்லாம் பெரியதோ, அதையெல்லாம் கடலோடு ஒப்பிடுவது மனிதர்களின் பழக்கம். ஞானக்கடல், குணக்கடல், அருட்கடல், அறிவுக்கடல் என்று மனிதர்களுக்கு பெரிதாகத் தெரிவதை எல்லாம் கடல் என்கிறார்கள். உதாரணம் சொல்வதற்குக் கடலைவிடப் பெரியது உலகத்தில் உண்டு. ஆனால், கடலை உதாரணம் சொல்வதில் ஆழ்ந்த பொருள் உள்ளது.

தனி உலகம்

வள்ளுவர் பிறவியைப் பெருங்கடல் என்றார். மனிதப் பிறவி என்பது பெருங்கடலின் குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் மறைபொருள். பெருங்கடலில் நீந்திக் கரை சேர்வது மனிதர்களால் இயலாதது. ஆனால், இறைவனடி சேர்ந்தவர்கள், பிறவிப் பெருங்கடலில் நீந்திக் கரைசேர்வார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு.

கடலுக்கு அடியில் நதிகள் ஓடுகின்றன; மலைகள் நிற்கின்றன. மீன்கள், ஆமைகள், திமிங்கிலங்கள், நண்டினங்கள், புழுக்கள், அட்டைகள் என்று எண்ணற்ற உயிரினங்கள் கடல் தாயின் மடியில் உயிர் வாழ்கின்றன. ஐம்பூதங்களால் ஆன அனைத்தும் உயிரினங்கள் என்றால், கடலுக்கு அடியில் இருக்கும் பாறைகளும் மணற்குவியலும் சேற்றாறுகளும் எரிமலைகளும்கூட உயிரினங்கள்தான். கடல் என்பது ஒரு குட்டிப் பிரபஞ்சம். எனவேதான் கடல் எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது – தனது உடலால் அல்ல, மனத்தால்.

அமைதியும் சீற்றமும்

கடலைப்போல மனிதர்கள் இருக்க வேண்டும் என்றால், முதலில் கடலைப் போன்ற பரந்த மனம் மனிதர்களுக்கு இருக்க வேண்டும். தன்னைச் சார்ந்திருக்கும் அல்லது சாராதிருக்கும் அனைத்து உயிரினங்களின் மீதும் மனிதர்களுக்கு அன்பு வேண்டும். கடல் இயங்கிக்கொண்டே இருக்கிறது – மனிதர்களும் அப்படி இயங்கப் பிறந்தவர்களே. கடலின் ஆழ்மனதைப் போலவே மனிதர்களின் ஆழ்மனமும் அமைதியில் துயில் கொள்ள வேண்டும்.

கடலின் மனம் அமைதியாக இருக்கும்போது, மனிதர்கள் வாழும் பூமியும் அமைதியாக இருக்கிறது. மனிதச் சமூகத்தின் கூட்டுமனம் அமைதியாக இருக்கும்போது கடலும் அமைதியாக இருக்கும். ஏனென்றால், இரண்டும் வேறு வேறு அல்ல. புயலை கடல் மனதின் கோபம் என்று சொன்னால், கோபத்தை மனித மனதின் புயல் என்று சொல்ல வேண்டும். கடற் சீற்றம் என்பது பூமிக்கு நன்மை தருவதற்காகவே உருவாவது. மனிதர்களின் சீற்றமும் அறச் சீற்றமாக, நன்மை பயக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் கடல் நமக்குச் சொல்லும் செய்தி.

கடல் போன்ற மனம்

கடலின் குணம் இறைவனின் குணம். கடல் தன்னகத்தே கொண்டிருக்கும் செல்வங்களால் தன்னிறைவு கொண்டது. புறத்திலிருந்து வரும் எதையும் அது மீண்டும் கரைக்கே வீசியெறியும். தன்னிடம் கலக்கும் நதி நீரையும் அது மீண்டும் மனிதர்களுக்கு மேகம் வழியாகத் திருப்பிக் கொடுக்கிறது. கடலின் இந்த அவா அறுத்தலும் ஈகையும் மனிதர்களும் கைக்கொள்ள வேண்டிய கடமைகள்.

‘ஆண்டநீ அருள்இலை ஆனால்

வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்’

(திருவாசகம் – வாழாப்பத்து: பாடல் 1)

என்று மாணிக்கவாசகர், இந்த உலகத்தைக் கடல் சூழ்ந்த உலகம் என்கிறார்.

‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

என்று பொய்கையாழ்வார், கடலை நெய்யாக ஊற்றி, மாலனுக்கு விளக்கேற்றுவேன் என்கிறார்.

இரண்டு ஆசான்களுமே ‘வார்கடல்’ என்ற வார்த்தையால், கடல் போன்ற மனத்தைக் கொண்டிருப்பதையே குறிப்பிடுகிறார்கள் என்று கொள்ளலாம்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை

கடலை எப்படிப் பார்க்கிறோம் என்பது பார்ப்பவர்களின் பிரச்சினை. ஆனால், கடல் எப்போதும் கடலாகவே இருக்கிறது. கடலில் கச்சா எண்ணெயைக் கொட்டுவதாலும், அணுக்கழிவுகளைக் கொட்டுவதாலும், மனிதர்களின் மிகை நுகர்வுக்குக் கடல் நீரையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பதாலும் கடலுக்கு ஒன்றும் இழப்பில்லை. ஒரே ஒரு சீற்றத்தால், அது தன்னைச் சீரமைத்துக் கொண்டுவிடும். வரலாற்றில் இப்படி எத்தனையோ சீற்றங்களைக் கடல் கொண்டிருக்கிறது; இந்த பூமியும் அதைக் கண்டிருக்கிறது.

எனவேதான் கடலின் தலைவனான நீர் பூதத்தை நம்முடைய சமயங்கள் போற்றிப் புகழ்ந்தன. அதனால்தான் இந்தப் பூவுலகு மட்டுமல்ல, இறைவனுக்குச் செய்யும் பூசைகளையும் நீர் இன்றி அமையாது என்று வகுத்தனர்.

‘தொழுது மாமலர் நீர்சுடர் தூபம் கொண்டு

எழுது மென்னும் இது மிகை யாதலின்’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம் - நம்மாழ்வார் திருமொழி)

என்ற பாடலில், மலரைக் கொண்டு பூசிப்பதோடு, நீரைக்கொண்டு விளக்கேற்றுவேன் என்று இறைவனிடம் சொல்கிறார். உனக்கே இது மிகையாகத் தெரிந்தாலும் நான் அப்படிச் செய்வேன் என்று சொல்லியிருப்பது இறைவனின் மீது நம்மாழ்வார்கொண்ட பேரன்பின் வெளிப்பாடு.

ஐம்பூதத் தலங்களில் நீருக்கானது திருவானைக்கா. அகிலம் ஆண்ட நாயகியின் தலைமைச் செயலகம் இது. இங்கு அவள் நீரை லிங்கமாக ஆக்கி இறைவனை வழிபட்டாள் என்பது தலவரலாறு. நதியையே முடியில் சூடியவன் இறைவன். அவனை உள்ளங்கை அளவு நீரால் உருவம் செய்து வழிபட்டது, நீரின் மீது அகிலாண்ட நாயகி கொண்டிருந்த பேரன்பின் வெளிப்பாடு.

http://tamil.thehindu.com/society/spirituality/இறைமை-இயற்கை-05-கடலின்-பேரன்பும்-பெருங்கோபமும்/article9732041.ece

Link to post
Share on other sites

இறைமை இயற்கை 06: பெய்யெனப் பெய்யுமா அன்பு மழை?

 

 
படம்: பால் கிரிகோரி
படம்: பால் கிரிகோரி
 
 

நீரை இறைவனின் வடிவமாக நினைத்து, நீர்நிலைகளைப் போற்றுவதன் மூலம் இறைவனின் மீதான பேரன்பை வெளிப்படுத்தி, சைவமும் வைணவமும் பேரின்பம் கண்டன.

‘ஆர்வுற்ற என்னை யொழிய என்னின் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்’ என்கிறார் நம்மாழ்வார் (நாலாயிர திவ் யப் பிரபந்தம் – திருவாய்மொழி).

இறைவனைக் கண்டால் அவனை அப்படியே விழுங்கிவிடவே நினைத்திருந்தேன். ஆனால், அவன் எனக்கு முன்பே, தனது அன்பால் என்னை நீராக மாற்றி, அப்படியே முழுவதுமாக அள்ளிப் பருகிவிட்டான் என்று தனது இறைக் காதலை வெளிப்படுத்துகிறார் அவர்.

மாணிக்கவாசகரோ, இறைவன் திருவருள் மழையைப் பொழியக் கூடியவன் என்பதால், அவனை ‘மேகன்’ என்றே அழைக்கிறார். இந்த உலகியல் வாழ்க்கை என்னும் நீர் வேட்கை நீங்க வேண்டுமானால், தவம் என்கிற பெரிய வாயைக் கொண்டு நீரைப் பருக வேண்டும். அப்படியும் உலகியல் வாழ்க்கை என்கிற தாகம் தணியாவிட்டால், இறைவனை வேண்டுவோம். அவன் வானப் பேராற்றின் வெள்ளத்தைப் பாயச் செய்து, பேரின்பப் பெருநீர்ச் சுழிகளை ஏற்படுத்திப் பற்று என்கிற பெருங்கரையை அசைத்து இடித்திடுவான் என்பது மாணிக்கவாசகரின் இறையனுபவம் (திருவாசகம் – திருவண்டப் பகுதி – பாடல் வரிகள் 80 – 95).

நரம்புகள் நலமா?

ஈசனின் ஐந்து தொழில்களில் படைத்தல் தொழிலும் அழித்தல் தொழிலும் நீரின் மூலமாகவே நடக்கின்றன. இந்த உலகம் ஊழியால் அழியும்போது எழும் கடல் அலைகளில் சிக்கித் தவிப்போரிடம் ஈசன், ‘அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே’ என்கிறார் திருமூலர் (திருமந்திரம் – இரண்டாம் தந்திரம் – பிரளயம் - பாடல் 2).

சித்த மருத்துவக் கோட்பாடுகளின்படி, மனித உடலில் நீருக்கான உறுப்புகள் – (ஆண்களுக்கு) விந்துப்பையும் சிறுநீரகமும்; (பெண்களுக்கு) கருப்பையும் சிறுநீரகமும். இவற்றில் முதலாவது, படைத்தலுக்கானது; இரண்டாவது அழித்தலுக்கானது. இந்த இரண்டிலிருந்தும் தொடங்குகிற ஓர் உடம்பின் பயணம், இறுதிவரைக்கும் நீராலேயே அமைகிறது.

மனித உடலில் ஓடும் ரத்தத்தில் நீரும் காற்றுமே பெருமளவில் அடங்கி இருக்கின்றன. மற்ற பூதங்கள் அதில் ஒடுங்கி இருக்கின்றன. ‘அண்டமே பிண்டம்’ என்கிற திருமூலரின் தத்துவப்படி பார்த்தால், ரத்தம் ஓடும் நரம்புகளைப் பிண்டத்தின் நதிகள் என்று சொல்லலாம். அதேபோல, நீரோடும் நதிகளை அண்டத்தின் நரம்புகள் என்று சொல்லலாம்.

உள்ளத்தால் உணர்வோமா?

இப்படிப் பூமியின் நரம்புகளாக ஓடும் ஆறுகளை மனிதர்கள் பராமரிக்கும் விதம் வருந்தத்தக்கது. மணலை அள்ளி அள்ளியே ஆறுகளின் மடியில், பூமிக்குச் சவக்குழி தோண்டுவது, கழிவைக் கொட்டுவது, அதன் பாதைகளை ஆக்கிரமிப்பது, நீர்ப்பாதைகள் தூர்ந்துபோனால் நமக்கென்ன எனக் கண்டுகொள்ளாமல் இருப்பது… இப்படி ஆறுகளுக்கு மனிதர்கள் செய்யும் தீங்குகள் மன்னிக்க முடியாதவை.

உடலின் நரம்புகள் அடைபட்டால், உடம்பை விட்டு உயிர் நீங்கும். பூமியின் நரம்புகள் அடைபட்டால், பூமியை விட்டு மனிதர்கள் நீங்குவார்கள். மனிதர்கள் நலமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், உடலால் மட்டுமல்லாமல், உள்ளத்தாலும் நீரைச் சார்ந்து இருக்க வேண்டும்.

உருகும் உள்ளம்

இளகுதல் என்றால் நீர் மிகுதல் என்று பொருள். எந்த ஒரு பொருளும் இளகிவிட்டது என்று சொன்னால், அதில் நீர் மிகுந்து அதன் கெட்டித்தன்மை மாறிவிட்டது என்று அர்த்தம். மனிதர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்களின் உள்ளத்தில் அன்பு என்கிற நீர் பெருக்கெடுக்க வேண்டும். கருணை கொண்டு வாழ வேண்டுமானால், நெஞ்சில் ‘ஈரம்’ கசிய வேண்டும். மனிதர்கள் இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், உடலிலும் உள்ளத்திலும் நீர் வற்றாமல் இருக்க வேண்டும்.

‘நீரா யலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே’

என்று திருக்குடந்தை ஆராவமுதனை நோக்கி நம்மாழ்வார் பாடுகிறார். என்னை நீராக மாற்றி, நான் கரைந்து போகும்படி என்னை உருக்குகின்ற இறைவனே என்று உள்ளம் உருகிக் கண் கசிகிறார்.

சக உயிர்களுக்காக உள்ளம் உருகுவது இறைவன் கொடுத்த பெருங்குணம்; சக உயிர்களுக்காக உள்ளம் உருகுவது இறைவனுக்குச் செய்யும் பெருந்தொண்டு.

எதை வைக்கப் போகிறோம்?

‘கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார்’

என்று ஐந்து ஆறுகள் வந்து கலக்கும் (தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு) ஐயாறப்பருக்குத் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகம் பாடியுள்ளார். காவிரி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டியாறு என ஐந்து ஆறுகளுக்குத் தலைவனாக இருக்கும் ஐயாறப்பனை ‘கங்கைச் சடையன்’ என்கிறார் நாவுக்கரசர்.

ஆணவம், பெருமை, கோபம், வெறுப்பு, பொறாமை என வேறு எந்தக் குணத்தையும் மனிதர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாமல், அன்பைத் தூக்கித் தலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே கங்கை என்கிற குறியீட்டுக்குள் அடைக்கிறார் நாவுக்கரசர்.

உள்ளம் உருகும் அளவுக்கு, மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும் அளவுக்கு, அன்பைத் தூக்கித் தலையில் வைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருமே ‘கங்கைச் சடையர்தான்’.

(அடுத்த வாரம்: இறையன்பின் வெப்பம் உணர்வோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/இறைமை-இயற்கை-06-பெய்யெனப்-பெய்யுமா-அன்பு-மழை/article9740063.ece?widget-art=four-all

Link to post
Share on other sites

இறைமை இயற்கை 07: இரையாகும் வெப்பம், இறையான வெப்பம்

 

 
படம்: வி. பால் கிரிகோரி
படம்: வி. பால் கிரிகோரி படம்: வி. பால் கிரிகோரி
 
 

தீ,நெருப்பு, கனல், தணல், சுடர், தழல் போன்றவை எல்லாம் ஒரே தன்மையைக் கொண்ட வேறு வேறு பெயர்கள்; வெப்பம் என்பது அதன் குணம். எண்ணற்றப் பெயர்களைக்கொண்ட இறைவன், இறைத்தன்மை என்கிற குணத்தைக் கொண்டிருப்பதைப் போன்றது இது.

இறைவன் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறான். அதுவே பிரபஞ்சம் எனப்படுகிறது. பிரபஞ்சம் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவே காலம் (Time) எனப்படுகிறது. காலம் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவே வாழ்க்கை.

ஓர் உடம்பானது இந்தப் புவியில் பிறப்பதும், அது வளர்வதும், பிறகு மூப்படைந்து, கடைசியில் இறந்து போவதும் காலத்தின் இயக்கத்தால் விளைகிறது. ஐம்பூதங்களில் நெருப்பும் இப்படியான இயக்கத்தைக் கொண்டதுதான். நேற்றைக்கு இருந்த நெருப்பு இன்றைக்கு இருப்பதில்லை; இன்றைக்கு இருந்த நெருப்பு நாளைக்கு இருக்காது.

நேற்று – இன்று – நாளை என்றுகூட பார்க்கத் தேவையில்லை. கடந்த நொடியில் எரிந்த நெருப்புக்கும், இந்த நொடியில் எரியும் நெருப்புக்குமே வேறுபாடுகள் உண்டு. இரண்டும் வெளிப்படுத்திய வெப்பத்தின் தன்மையில் வேறுபாடுகள் உண்டு. இத்தகைய நொடிக் கணக்குகள் எல்லாமே மனிதர்களுக்கானவை; மனிதர்கள் வகுத்தவை. நெருப்பின் காலக் கணக்கே வேறு. அது இறைவனின் காலக் கணக்கோடு இணைந்தது.

வெப்பமாய், தட்பமாய்

சைவ சித்தாந்தமானது, சிவனை ஒளியின் வடிவமாய், தீயின் வெம்மையாய் அதிகம் உணர்ந்திருக்கிறது.

‘வெய்யாய் தணியாய் இயமான

னாம்விமலா’

(திருவாசகம் – சிவபுராணம்)

என்று வெப்பமாகவும், தட்பமாகவும் விளங்குகிறவன் இறைவன் என்கிறார் மாணிக்கவாசகர். வெப்பம் – தட்பம் இரண்டுமே இறையின் குணம் என்பது அவரது அனுபவம். முந்தைய நொடியில் வெப்பமாய் இருந்தது, அடுத்த நொடியில் தட்பமாய் மாற்றுவதும், அடுத்த நொடியில் தட்பமாய் இருப்பதை இன்னொரு நொடியில் வெப்பமாய் மாற்றுவதும் நெருப்பின் இயல்புகள்.

‘தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ

செல்வமே சிவபெரு மானே

(திருவாசகம் – பிடித்த பத்து)

என்கிற வரிகளின் மூலம், சிவபெருமான் ஒளிதரும் மெல்லிய விளக்காகவும் எரிவான்; சுடர் விட்டெரியும் பெருந் தீயாகவும் வளர்வான் என்கிறார் அவர்.

அழியாத ஆனந்தம்

வீடுபேற்றின் சுகத்தைக் கூறும் அதே ‘பிடித்த பத்து’ எழுசீர் விருத்தத்தில், தன்னுடைய உடம்பை உருக்கி இளைக்க வைத்தவனும், தன்னுடைய உள்ளத்தின் ஒளியைப் பெருக்க வைத்தவனும் சிவனே என்கிறார் மாணிக்கவாசகர்.

‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய’

(திருவாசகம் – பிடித்த பத்து)

என்கிற வரிகள், பன்னடுக்குப் (Multiple Layer) பொருள் பொதிந்தவை.

ஒரு பொருள் உருக வேண்டுமானால், அதில் வெப்பம் பெருக வேண்டும். ஒரு பனிக்கட்டி உருக வேண்டுமானால், அதன் சூழலில் வெப்பம் மிகுந்திருக்க வேண்டும். வெப்பத்தோடு சேரும் வெண்ணெயே உருகி நெய்யாக மாறுகிறது. அதிகரிக்கும் உலக வெப்பம், துருவப் பனியை உருக்குகிறது.

மாணிக்கவாசகர் ‘ஊனினை உருக்கி’ என்கிறார். ஊன் என்றால் உடம்பு. உள்சூடு மிகுந்த உடம்பு இளைக்கவே செய்யும். இறையனுபவம் என்பதே அகத்தில் ஒளிகூட்டி, வெப்பத்தை வளர்க்கும் ஒரு செயல்தான். எனவே மாணிக்கவாசகரின் ஊன் உருகியதில் ஆச்சரியமில்லை தானே. இப்படி உடம்பு இளைக்குமளவுக்கு உள்ளொளியாகிய வெப்பத்தைப் பெருக்குவதே, அழியாத ஆனந்தத்தை தரும் என்பது அவரது திருவாக்கு.

உலகு கடந்தவன்

திருமூலரோ, இன்னும் ஒருபடி மேலே சென்று, எல்லாவிதமான ஒளிகளுக்கும் மேலான ஒளி சிவனே என்று வியக்க வைக்கிறார்.

‘ஒண்சுட ரானை உலப்பிலி நாதனைஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற

கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்

தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.’

(திருமந்திரம் – அக்கினி காரியம் – பாடல்: 8)

எல்லா ஒளிகளுக்கும் மேலான ஒளியாய் இருப்பவனும், இறப்பில்லாத முதல்வனுமான இறைவன் என் உள்ளத்தில் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் என்றால், தனது மூன்று கண்களையும் மூன்று சுடர்களாகக்கொண்டு, ஏழு உலகங்களையும் கடந்து நிற்கின்றான். அத்துடன், சுடர்விட்டு எரியும் பல வேள்விகளுக்கும் தலைவனாக இருக்கிறான் என்கிறார் திருமூலர்.

பாவம் பொசுக்க...

திருப்பாவை பாடிய ஆண்டாளோ, இறைவனை ‘யமுனை நதிக்கரையில் பிறந்த அணி‘விளக்கே’ என்று நகைமுரண் (நீர்+நெருப்பு) காட்டுகிறார்.

ஆயர் குலத்து விளக்காக விளங்கும் தாமோதரனை வாயாரப் பாடி, மனதாரச் சிந்தித்தால், முன் செய்த பாவங்களும், இன்னும் செய்ய இருக்கின்ற பாவங்களும் நெருப்பில் இட்ட பஞ்சுபோல பொசுங்கிப் போகும் என்பது ஆண்டாளின் அருட்சிந்தனை.

அந்த வரிகள்:

‘வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பிலோர் எம்பாவாய்’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம் - திருப்பாவை – பாடல்: 5)

தீயை ஒரு காதலியாக, உயிர்த் தோழனாக, இறைத் தூதனாக வரித்துக்கொண்டு எழுதி மகிழ்ந்தவர் பாரதியார். நெருப்பு குறித்த தனது கவிதையில்,

‘நீ சுடுகின்றாய்; நீ வருத்தந் தருகின்றாய்; விடாய் தருகின்றாய்; சோர்வு தருகின்றாய்; பசி தருகின்றாய். இவை இனியன.’

(வசனக் கவிதைகள் – ஞாயிறு: 4)

நிச்சயமாக வெப்பம் இல்லாமல் பசியும் இல்லை. வெப்பம் இல்லாமல் செரிமானமும் இல்லை. இவை இரண்டும் இல்லாமல் வாழ்க்கையே இல்லை.

ஏனென்றால் வெப்பமே இரையாகிறது. வெப்பமே இறையுமாகிறது!

http://tamil.thehindu.com/society/spirituality/இறைமை-இயற்கை-07-இரையாகும்-வெப்பம்-இறையான-வெப்பம்/article9750239.ece?widget-art=four-all

Link to post
Share on other sites

இறைமை இயற்கை 08: புதியன பிறக்கச் செய்யும் நெருப்பு

 

 
பால் கிரகோரி
பால் கிரகோரி
 
 

தீ என்றால் தீவிரம்; நெருப்பு என்றால் நேர்மை; கனல் என்றால் கண்டிப்பு; தணல் என்றால் தண்டிப்பு. இவை அனைத்தும் கவித்துவமான உவமைகள் அல்ல; வெப்பத்தின் இயல்பே இப்படித்தான்.

வெப்பம் ஒரு கடமை தவறாத போர் வீரன். சிறு பொறியாக இருந்தாலும், மிகப்பெரிய நெருப்புக் கோளமாக இருந்தாலும், தான் எடுத்துக்கொண்ட பணியைச் செய்து முடிப்பதில் வெப்பத்துக்கு நிகர் வேறில்லை.

கோடி கோடி ஆண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது கதிரவ விளக்கு. அதைப் பிரபஞ்சத்தின் இதயம் என்று சொல்லலாம். பிறப்பு முதல் இறப்புவரை துடித்துக்கொண்டே இருக்கும் இதயத்தை மனித உடம்பின் கதிரவன் என்று சொல்லலாம்.

ஏனென்றால், மனித உடம்பின் வெப்பநிலையைப் பராமரிப்பதில் இதயத்துக்குப் பெரும் பங்குண்டு. பிரபஞ்சத்தின் வெப்பநிலையைத் தக்க வைப்பதில் கதிரவனுக்குப் பெரும் பங்குண்டு.

கடமை தவறக் கூடாது

‘மாதிவர் பாகன் மறைபயின்ற

வாசகன் மாமலர் மேயசோதி’

(திருவாசகம் – திருவார்த்தை: பாடல் 1)

- என்று ஈசனை இதயத்தில் வைக்கிறார் மாணிக்கவாசகர். ‘பெண்ணின் இட பாகத்தில் இருப்பவன், மறைகளைச் சொன்னவன், மலர் போன்ற இதயத்தில் வீற்றிருக்கும் ஒளி விளக்கானவன்’ என்பது இதன் பொருள்.

உடம்புக்குள் உறைந்திருக்கும் இதயமோ அல்லது பிரபஞ்சத்தில் உறைந்திருக்கும் கதிரவனோ, ஒரு கணம் கூட தனது கடமையிலிருந்து தவறினாலும் நிலைமை என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். வெப்பம் கடமை தவறாது இருப்பதனால்தான், இந்த உலகம் நிலைமை தவறாது இருக்கிறது.

பொய் சொன்னால் கோயில் இல்லை

ஐம்பூதத் தலங்களில் நெருப்புக்கான தலம், திருவண்ணாமலை. அதன் தல புராணம் சொல்லும் செய்தி, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் ஒளி விளக்காக இருக்கக்கூடியது.

முன்பொரு நாளில், பிரம்மனுக்கும் திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்கிற கேள்வி எழுந்து, வாக்குவாதமாக மாறியது. இந்த சச்சரவு ஈசனிடம் வந்தது. ஈசன், ‘யார் ஒருவர் எனது முடியையும் அடியையும் பார்த்து வருகிறார்களோ அவரே பெரியவர்’ என்று கூறிவிட்டு, வானுக்கும் மண்ணுக்குமாய் ஒளிப் பிழம்பாக, எரிதழலாக எழுந்து நின்றான்.

ஈசனின் திருவடியைக் காண வராக அவதாரம் எடுத்து திருமாலும், தலைமுடியைக் காண அன்னப்பறவை அவதாரம் எடுத்து பிரம்மனும் புறப்பட்டுப் போனார்கள். ஈசனின் திருவடியைக் காண முடியாது திருமால் திரும்பிவர, பிரம்மனோ ஈசனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவைக் கொண்டுவந்து கொடுத்து, தலைமுடியைக் கண்டுவிட்டதாகப் பொய் சொன்னான். அதைத் தாழம்பூவும் ஆமோதித்தது. இதைக் கேட்டு சினம் கொண்ட ஈசன், பொய் சொன்ன பாவத்துக்காக பிரம்மனுக்கு மண்ணுலகில் கோயில் இல்லை எனவும், தாழம்பூவுக்கு சிவபூசையில் இடமில்லை எனவும் தீர்ப்பிட்டான்.

நெருப்பு என்றால் நேர்மை. நெருப்புக்குப் பொய் ஆகாது. பொய் என்கிற நூலினால் பூக்களைக் கட்டலாம்; ஆனால், உண்மையைக் கட்டி வைக்க முடியாது என்பதே திருவண்ணாமலையின் தல புராணம் சொல்லும் செய்தி.

விழித்துக்கொள்வோம்

திருவண்ணாமலையில் இருந்தபடி, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்தும் விடியலைப் பற்றியவை. அதன் ஒவ்வொரு பாடலிலும் ‘தோழிகளே எழுந்திருங்கள்; பொழுது விடியப் போகிறது’ என்று சொல்லி இறைவன் இருக்கும் திசை நோக்கி பூபாளம் பாடுகிறார் மாணிக்கவாசகர். ‘இறைவனை அறியாமல், அஞ்ஞானம் என்கிற உறக்கத்தில் இருப்பவர்களே! இறையனுபூதி என்கிற கதிரவ ஒளி வந்துவிட்டது, விழித்துக் கொள்ளுங்கள்!’ என்பதே அவற்றுக்கான பொருள்.

இறைவனின் தோற்றம் ஒளியைப் போன்றது, இறைவனின் குணம் வெப்பத்தைப் போன்றது என்பதில் சைவமும் வைணவமும் வேறுபட்டு நிற்கவில்லை.

நேர்மை நெருப்பு

‘அனைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி…’

(திருமந்திரம் – அக்கினி காரியம் – பாடல்: 3)

- என்பது திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு மந்திரம். இந்தப் பாடலின் மூலம் அந்தணர் வளர்க்கின்ற தீயினுள் தீயாக இருக்கக்கூடிய இறைவனே உயிர்களுக்குத் துணையாக இருப்பவன் என்கிறார் திருமூலர்.

‘சூழ்ந்ததனில் பெரிய பரநன் மலர்ச் சோதீயோ

சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம் – திருவாய்மொழி – பாடல் 10)

- என்கிறார் நம்மாழ்வார். ஒளி வடிவான இறைவன் ஒரு மலரைப் போல பூத்திருக்கிறான்; இன்ப வடிவான ஞானம் ஒரு சுடரைப் போல ஒளிவிடுகிறது என்பது நம்மாழ்வாரின் இறையனுபவம்.

ஆகவே, மனிதர்கள் நெருப்பைப் போல நேர்மையாளர்களாக இருக்க வேண்டும். மனிதர்கள் நெருப்பைப் போல கடமை தவறாதவர்களாக இருக்க வேண்டும். மனிதர்கள் நெருப்பைப் போல ஓயாது உழைப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆக்கமே தரும்

நெருப்பைப் போல இருப்பது என்பது அழிவு குணம் அல்ல. அது ஆக்கத்துக்கான குணம். ஏனென்றால், வெப்பம் எப்போதும் ஆக்கத்தையே தரும். வெப்பத்தால் ஒன்று அழிகிறது என்றால், இன்னொன்று பிறக்கிறது என்று பொருள்.

கோடையில் கொளுத்தும் வெப்பமே, மழைக் காலத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சூழலில் அதிகரிக்கும் வெப்பமே சலனமாக மாறி மழையாகப் பொழிகிறது. காய்ச்சலின்போது உடம்பில் அதிகரிக்கும் வெப்பமே, ஊறு செய்யும் நுண்ணுயிரிகளை அழித்து, உடம்பில் ஆற்றலைப் பெருக்குகிறது. வெப்பத்தால் எது அழிந்தாலும், இன்னொன்று பிறக்கப் போகிறது என்று அர்த்தம். இத்தகைய வெப்பத்தைத் தணியாமல் காக்க வேண்டுமானால், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உண்மை என்கிற விளக்கு எரிந்துகொண்டே இருக்க வேண்டும்.

கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகள் யாவும் இறைவனின் முகத்தைப் பார்ப்பதற்காக ஏற்றப்படுபவை அல்ல; இறைவனுக்கு எதிரில் நிற்பவர்கள் தங்களின் அகத்தைப் பார்ப்பதற்காக ஏற்றப்படுபவை.

http://tamil.thehindu.com/society/spirituality/இறைமை-இயற்கை-08-புதியன-பிறக்கச்-செய்யும்-நெருப்பு/article9762233.ece

Link to post
Share on other sites
 • 3 weeks later...

இறைமை இயற்கை: உயிர் வளர்க்கும் காற்று

 

 
27CHVANKalanidhi09

நிலையாமை என்கிற ஒற்றைக் காலில் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது. இந்த உலகத்தில் எவையெல்லாம் நிலையில்லையோ அவையெல்லாம் அமரத்துவம் எய்துகின்றன.

உடல் நிலையில்லாதது; அது இறப்புக்குப் பிறகு ஐம்பூதங்களில் உறைகிறது. செல்வம் நிலையில்லாதது; அது வந்த வழியே திரும்பிச் செல்லக்கூடியது. செயல்களின் விளைவுகள் நிலையில்லாதவை; அவை புகழ் என்ற மாலையைச் சுமந்து காலத்தில் நிற்கவல்லவை.

இந்த வாழ்க்கையின் சிறப்பே நிலையாமைதான். பிறப்பது யாவும் மறைந்தே தீரும் என்பதால்தான், இடைப்பட்ட காலம் இன்பமாக இருக்கிறது. நிலையாமை மட்டும் இல்லாவிட்டால், மனிதர்களுக்குக் காலங்கள் இல்லை; கவலைகள் இல்லை; தேடல் இல்லை; தினசரி வாழ்க்கையும் இல்லை.

இப்படி மனித வாழ்க்கைக்கு நிலையாமையை ஏற்படுத்தித் தரும் இறைவனே நிலைத்த புகழைக் கொண்டவன். அவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பவன். எனவேதான் ‘மெய்யா விமலா’ என்று இறைவனை அழைத்து, அவனது அமரத்துவத்தைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர் (திருவாசகம் – திருவண்டப் பகுதி)

 

நிலையாமையும் இயக்கமும்

காற்று என்பது நிலையாமையின் சின்னம். காற்று எங்கும் நிலைப்பதில்லை. ஓர் இடத்தில் காற்று நிலைத்தால், அது வெளிப்பட்டே ஆக வேண்டும். ஒரு பலூனுக்குள் நிலைத்திருக்கும் காற்று, அதிலிருந்து அமைதியாக வெளியேறும் அல்லது வெடித்துச் சிதறும். கடல் பரப்பில் காற்று நிலைத்தால் புயல் உருவாகும்; மண்ணுக்குள் காற்று நிலைத்தால் எரிமலை வெடிக்கும். ஓர் உடம்பில் காற்று நிலைத்தால், நோய் தோன்றும். ஒட்டுமொத்தமாகப் பூமியில் காற்று நிலைத்தால் ஊழி வெடிக்கும்.

காற்று என்பது நிலையாமையின் சின்னம் மட்டுமல்ல; அது இயக்கத்தின் அடையாளமும்கூட. இந்த உலகத்தில் காற்று சுழன்றுகொண்டே இருக்கிறது என்றால், பூமி இயங்கிக்கொண்டே இருக்கிறது என்று பொருள். ஓர் உடம்பில் காற்று சுழன்றுகொண்டே இருக்கிறது என்றால், அந்த உடம்பில் உயிர் இருக்கிறது என்று பொருள். உயிரற்ற ஓர் உடம்பில் இருந்து முதலில் வெளியேறுவது காற்றுதான். காற்று முற்றிலுமாக வெளியேறிவிட்டால், அங்கு உயிர் இருப்பதில்லை.

 

காற்றின்றி உயிரில்லை

ஒரு நலமான மனிதர் உணவு உட்கொள்ளாமல், சில வாரங்கள் வாழ முடியும்; தண்ணீர் அருந்தாமல் சில நாட்கள் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் சில மணித் துளிகள்கூட உயிர் வாழ முடியாது. காற்று அவ்வளவு அத்தியாவசியமானது. மனிதர்கள் காற்றின் மீது ஆதிக்கம் செலுத்தலாம். மற்ற பூதங்களைப் போல மாசுபடுத்தலாம். ஆனால், இறுதி அதிகாரம் என்பது காற்றிடம்தான் இருக்கிறது.

இப்படி அதிகாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், நிலையாமையில் நிலைத்திருப்பதும், இயங்கிக்கொண்டே இருப்பதும் இறையின் குணமேயன்றி வேறில்லை.

‘காயமே இது பொய்யடா – வெறும்

காற்றடைத்த பையடா’ என்பது

சித்தர் பாடல்.

பை போன்ற உடலில் காற்று நிரம்பி இருந்தால்தான் அது ‘மெய்’. இல்லாவிட்டால், அது பொய் (பிணம்) என்கிற நிலையாமையைப் பாட நினைத்த சித்தர், காலத்தில் ‘நிலைத்து’ விட்டார்.

 

வழிபடுகிறோம்

ஐம்பூதங்களில் திளைக்கத் திளைக்க ஊறிக் கிடந்த பாரதியார், காற்றுடன் உரையாடுகிறார். அவரிடம் காற்றுத் தேவன், ‘என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் பிராணன்.’ என்று சொல்கிறான்.

பிறகு அவர் எழுதுகிறார்: ‘காற்றுத் தேவனை வணங்குவோம். அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. காற்று வருகின்றான். அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து, நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருவான். அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம்.’ (வசனக் கவிதைகள்: காற்று – 8 (சுருக்கம்)

 

எல்லாம் கடத்துபவன்

காற்று என்பவன் ஒரு கடத்தல்காரன். நாம் இறைவனுக்கு ஏற்றும் விளக்கிலிருந்து ஒளியைக் கடத்துகிறான். நாம் இறைவனுக்குச் சூடும் மலர்களிலிருந்து வாசத்தைக் கடத்துகிறான். நாம் இறைவனுக்கு ஓதும் திருமுறைகளிலிருந்து மொழியைக் கடத்துகிறான். நாம் இறைவனுக்கு ஊதும் வாத்தியங்களிலிருந்து இசையைக் கடத்துகிறான். நாம் இறைவனின் மீது கொண்டிருக்கும் காதலிலிருந்து பத்திமையைக் கடத்துகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, மேலிருந்து பிரபஞ்ச ஆற்றலைக் கடத்தி வந்து ஒவ்வோர் உயிருக்கும் அமுதத்தைப் பொழிகிறான்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த, இன்றியமையாத, மாற்று கண்டறிய முடியாத காற்றை நாம் எப்படிக் கையாளுகிறோம்?

 

யுக முடிவு

தொழிற்சாலைகளைப் பெருக்கினோம்; வாகனங்களைப் பெருக்கினோம்; ரசாயனங்களைப் பெருக்கினோம்; குப்பைகளைக் கொளுத்தினோம்; வளர்ச்சியின் சிகரத்தில் நின்று நமக்கு நாமே மகுடம் சூட்டிக்கொண்டோம்.

ஆனால், காற்று நலமாக இருக்கிறதா, என்பதைப் பற்றி நமக்கு உணர்வே இல்லை. காற்று மாசு என்பது ஆபத்தான நிலைக்கு உயர்ந்துவிட்டது என்பதைப் பற்றி நமக்குக் கவலையே இல்லை. காற்று நலமாக இருந்தால்தான், நம்முடைய வாழ்வு நலமாக இருக்கும் என்கிற சிந்தனைகூட இல்லை. இந்தியாவின் தலைநகரமே முகமூடி அணிந்து சாலையில் நடந்து போனதைப் பார்த்த பிறகும்கூட, நமக்குக் காற்று மாசு குறித்த கவனம் பிறக்கவில்லை.

காற்றை நாம் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்தால், பாரதியார் சொல்வதுபோல, இந்த உலகம் என்கிற பந்தலின் கயிறுகளைக் காற்று அசைத்திடுவான். யுக முடிவு செய்திடுவான். அப்போது ஈசன் வெறியிலே இருப்பான்.

http://tamil.thehindu.com/society/spirituality/article19363584.ece

Link to post
Share on other sites

இறைமை இயற்கை 10: காற்றை வென்றால், உலகை வெல்லலாம்

 

 
03CHVANKalanidhi10jpg

ம்பூத வரிசையில் காற்றுக்குத் தனிச் சிறப்பு உண்டு. நிலம், நீர், நெருப்பு போன்ற பூதங்களை மனிதர்கள் கண்களால் காண முடியும். வெளி என்கிற தலைமை பூதத்தைக்கூட மனித அறிவுக்கு உட்பட்டு கண்களால் கண்டுணர முடியும். ஆனால், காற்றை உணரத்தான் முடியுமே தவிர, கண்களால் காண முடியாது. இது இறையின் குணங்களில் முக்கியமான ஒன்று.

இறைவனின் மீது பத்திமை (பக்தி உணர்வு) கொண்டு அவனைத் தேடுவோர் அனைவரும் இறைவனை உணர முடியும். ஏதாவது ஒரு வகையில், ஒரு வடிவத்தில், ஓர் உருவத்தில் தன்னை உணரும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தருவான். ஆனால், இறைவனைக் கண்களால் காணக்கூடிய திருக்காட்சி என்பது எல்லோருக்குமானது அல்ல.

 

இறையை உணர…

யாரெல்லாம் காற்றின் தொழிலை உணர்கிறார்களோ, அவர்களெல்லாம் இறைவனை உணர முடியும். ஏனென்றால், உடலுக்குள் உயிராகவும், உயிருக்குள் இறையாகவும் உறைந்திருப்பது காற்றேயாகும்.

திருமந்திரத்தில்,

‘பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்

தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்

மேவிய சீவனில் மெல்லநீள வாயுவுங்

கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே’

(திருமந்திரம் – கர்ப்பக்கிரியை – பாடல்: 5) என்கிறார் திருமூலர்.

பூவின் வாசத்தை காற்று உலகுக்குக் அறிவிப்பதுபோல, உயிரின் இயக்கத்தையும் அது உலகுக்கு அறிவிக்கிறது. அந்த அறிவிப்பானது இறைவனின் விருப்பத்தின் பேரிலேயே நடக்கிறது என்கிறார் திருமூலர்.

 

இயக்கத்தின் வெளிப்பாடு

இயக்கத்தை உணர்த்துவது மட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் ஒன்றைக் கட்டுடைப்பதும், அதன் மூலம் புதிய ஒன்றை நிலைநிறுத்துவதும் காற்றின் குணம். காற்று ஒன்றை அசைக்கிறதென்றால், அது அடுத்த நிலையை எட்டுகிறது என்று பொருள். இதனைப் பாரதியார் அழகாக எடுத்துரைக்கிறார்:

‘நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை, நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம் – இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே, வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதிகொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம்.’ (வசன கவிதைகள்: காற்று – 9, சுருக்கம்).

இந்தப் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காற்று வீசியடிக்கிறது என்றால், அங்கு நிலவும் பருவநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று பொருள். ஒரு மழை பெய்து முடித்த பிறகும், ஒரு புயல் வீசி முடித்த பிறகும், ஒரு சூறாவளி கடந்து போன பிறகும் அங்கு நிலவும் காற்றின் தன்மையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர முடியும்.

 

மரபை மாற்றிய வரலாறு

ஐம்பூதத் தலங்களில் காற்றுக்கானது (ஆந்திர மாநிலத்தில் உள்ள) திருக்காளத்தி. சைவ சமயத்தின் திருத்தொண்டர்களில் கண்ணப்ப நாயனார் வாழ்ந்த நிலம். அவரது வரலாறு, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த இறைப் பூசை மரபைக் கட்டுடைத்த வரலாறு.

பொன்முகலி ஆற்றங்கரையில் வேட்டையில் ஈடுபட்டிருந்த வேடரான கண்ணப்பனார், ஈசனின் ஈர்ப்பால், மலையின் மீதிருக்கும் சிவலிங்கத்தை அடைகிறார். ஈசனின் மீதான அவரது அன்பு அளப்பரியதாக மாறுகிறது. பசியோடிருக்கும் ஈசனுக்கு, தான் வேட்டையில் வீழ்த்திய பன்றியைச் சமைத்து, ஊனமுது படைக்கிறார்.

அதுவரைக்கும் சைவ உணவையே படைத்து, ஈசனுக்கு ஆகமப் பூசை செய்துவரும் சிவக்கோசரியாருக்கு இச்செயல் சினத்தை ஏற்படுத்துகிறது. நாள்தோறும் கண்ணப்பனார் இப்படிச் செய்வதைக் கண்டு, ஈசனிடம் முறையிடுகிறார் சிவக்கோசரியார். இப்படி ஊனமுது படைக்கும் ஒருவனை உன்னருளாலே ஒழித்தல் வேண்டும் என்கிறார் அவர்.

ஆனால், ஈசனோ மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறான். அந்த மகிழ்ச்சி வழிய சிவக்கோசரியாரிடம் இப்படிச் சொல்கிறான்: “அவன் அன்பன். அவனது வடிவெல்லாம் நம் மீதான அன்பேயாகும். அவனது அறிவெல்லாம் நம்மையறியும் அறிவேயாகும். அவனுடைய செயல்களெல்லாம் நமக்கு இனியவையாகும். எனவே கவலையொழிக’’ என்று கண்ணப்பரின் அன்பை மெச்சுகிறான் ஈசன்.

கண்ணப்பனாரின் அன்பை உலகுக்கு உணர்த்த இதுவும் போதாதென்று, கண்ணப்பனார் கண்களைப் பிடுங்கித் தனக்குச் சூட்டும் படியாக ஒரு திருவிளையாடலையும் அரங்கேற்றுகிறான் ஈசன்.

 

கட்டுடைக்கும் காற்று

சைவ உணவு சிறந்ததா? அசைவ உணவு சிறந்ததா என்பது இப்போதும் விவாதத்துக்குரிய பொருளாக இருக்கிறது. ஆனால், சைவமோ, அசைவமோ… படைப்பவரின் மனதில் மிகுந்திருக்கும் அன்புதான் முக்கியம்; அன்புக்குப் பிறகுதான் அனைத்தும் என்கிற கருத்தை உணர்த்துகிறது கண்ணப்ப நாயனாரின் வரலாறு.

அத்தகைய அன்பையும், அன்பின்பாற்பட்ட கட்டுடைத்தலுமே காற்றின் இயல்பு. எனவேதான் மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தும் வித்தைகளைச் சொல்லித் தரும் திருமூலர், மனித மனத்தின் இருவேறு குணங்களை மூச்சுக் காற்றோடு ஒப்பிடுகிறார்.

‘ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள

வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை

கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படுந் தானே’

(திருமந்திரம் – பிராணாயாமம் – பாடல்: 2)

 

மாண்புடன் வாழ

நம்முடைய மூச்சுக் காற்றில் உள்மூச்சு, வெளிமூச்சு என இருவகை மூச்சுகள் உள்ளன. உள்மூச்சு என்பது உயிர் வளியைச் சுமந்து செல்வது; வெளிமூச்சு என்பது கரியமிலக் காற்றைச் சுமந்து செல்வது. இவற்றைப் போலவே மனித மனங்களில் நல்லவை, தீயவை என இரண்டு குணங்களும் இரண்டு குதிரைகளைப் போல எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்தக் குதிரைகளுக்குக் கடிவாளம் இட்டு, அடக்கியாள்பவர் ஒருவரும் இல்லை. ஈசனின் அருள் கிடைக்கப்பெற்றால், இந்தக் குதிரைகளை அடக்கியாளும் தந்திரத்தைக் கற்க முடியும் என்பது இதன் பொருள்.

இதையே ஒருவரியில் சொல்வதானால், காற்றை (மூச்சை) வென்றவர், மனதை வெல்கிறார், மனதை வென்றவர், வாழ்வை வெல்கிறார்.

‘காற்றைப் புகழ முடியாது; அவன் புகழ் தீராது’ என்பது பாரதியாரின் வாக்கு.

காற்றைப் புகழக்கூட வேண்டியதில்லை. மாசுபடுத்தாது இருந்தாலே போதும்; மனித இனம் மாண்புடன் வாழும்.

http://tamil.thehindu.com/society/spirituality/article19408800.ece

Link to post
Share on other sites

இறைமை இயற்கை 11: வெளியில் இருப்பவன் வெளியாகவும் இருப்பவன்

 

 
10CHVANKalanidhi11jpg

றைவனை நோக்கிய பயணத்தில் ஒரு மைல் கல்லைப் போலக் கடந்துபோகும் கேள்வி, ‘இறைவன் எங்கிருக்கிறார்?’ என்பது.

இறைவன் கோயில்களில் இருக்கிறாரா? கோயில்களில்தான் என்றால் கருவறையிலா? உற்சவர் சன்னிதியிலா? கொடிமரத்திலா? இறைவன் கோயில்களில் இருக்கிறார் என்பதால்தான் நாள்தோறும் கோயில்களுக்குச் சென்று அவரைக் காண்கிறோமா? கோயில்களிலிருந்து நாம் புறப்பட்ட பிறகு, அவர் நம்மோடு உடன் வருகிறாரா? நம்மோடு வீட்டுக்குள் நுழையும் அவர், நேராக வீட்டுப் பூசையறைக்குச் சென்று அமர்ந்துகொள்கிறாரா? குழந்தைகள் தூங்கிய பிறகு பெற்றோர்கள் முத்தமிட்டுக்கொள்வதைப் போல, நாம் தூங்கிய பிறகு இறைவன் தன் தேவியைத் தேடி மீண்டும் கோயிலுக்கே சென்றுவிடுவாரா?

திருவிழாக் காலங்களில் பவனிவரும் அலங்காரச் சப்பரங்களில் அவர் வீற்றிருக்கிறாரா? பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளைப் போன்ற குதூகலத்தோடு மாட வீதிகளில் அவர் வலம் வருவாரா? ஏற்றப்படும் விளக்குகளில் எரிதழலாகவும், சூட்டப்படும் மலர்களின் நறுமணமாகவும் அவர் கலந்திருக்கிறாரா?

ஆல மரங்களுக்குக் கீழே அடுக்கப்பட்ட கற்களில், வேப்ப மரங்களில் பூசப்பட்ட மஞ்சள் குங்கும பொட்டுகளில், புற்றுகளின் அருகில் பாம்புகளுக்கு வைக்கப்படும் முட்டைகளில்,

பால் பாக்கெட்டுகளில், தெருக்குத்து வீடுகளின் சுற்றுச்சுவர் மாடங்களில், கல்லாப்பெட்டிக்குப் பின்புறம் மாட்டப்பட்ட பெரிய புகைப்படங்களில், பணப் பைகளில் (பர்ஸ்) செருகப்பட்ட சிறு புகைப்படங்களில், மஞ்சளும் வியர்வைப் பிசுக்கும் படிந்த பெண்களின் தாலிக் கயிறுகளில், லாரி சக்கரத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சையில், ஓட்டுநர்களின் நெற்றிக்கு நேரே ஏற்றப்படும் ஊதுபத்திகளில், வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கும் கிழிக்கப்படாத நாள்காட்டிகளில், திருப்பப்படாத மாதக்காட்டிகளில் இப்படி இன்னும் பல இடங்களில் இறைவன் இருக்கிறாரா, இல்லையா?

 

வெளியில் இருப்பவன்

வானத்து விண்மீன் கூட்டங்களைப் போல, கேள்விகள் எண்ணிலடங்காதவை. இறைவனைக் குறித்து இந்த வகையில் எழுப்பப்படும் எல்லாக் கேள்விகளின் மீதும் ஒளி கூட்டிப் பாதை காட்டுகிறது ஐம்பூதக் கோட்பாடு.

வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் ஆகிய ஐம்பூத வரிசையில் வெளிதான் தலைமை பூதம். மற்ற நான்கும் இறைவனின் அங்கங்கள் என்றால், வெளிதான் இறைவனின் மனம். மற்ற நான்கும் இறைவனின் கருவிகள் என்றால், வெளிதான் இறைவன்.

இறைவன் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று பக்தப் பிரகலாதனும் லவ-குசனும் வசனங்கள் பேசும் கோயில் திருவிழா திரைப்படங்களைப் பள்ளிப் பிராயத்தில் பலரும் பார்த்திருப்போம். தூணும் துரும்பும் ‘வெளி’யில் இருப்பவை. வெளியில் இருக்கும் அனைத்திலும் இறைவன் இருக்கிறான்; அந்த வெளியாகவும் அவனே இருக்கிறான்.

 

அண்டத்தைப் போல, அணுவைப் போல

இறைவன் வெளியாகவே இருக்கிறான் என்பதை மாணிக்கவாசகர் மூன்றே வார்த்தைகளில் இப்படி விவரிக்கிறார்:

‘வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’

(திருவாசகம் – சிவபுராணம்)

இறைவன் உயர்ந்தும் ஆழ்ந்தும் அகன்றும் நுட்பமாகவும் இருக்கிறான் என்பது இதன் நேரிடையான பொருள். ஒரு முரண்தொகை கவிதையாக இருக்கும் இந்த மூன்று வார்த்தைகளே இறைவனின் பல்வேறு குணங்களை மறைமுகமாக வெளிப்படுத்தி விடுகின்றன.

‘விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க’

(திருவாசகம் – திருவண்டப்பகுதி)

என்று இன்னொரு பாடலில் இறைவனை வர்ணிக்கிறார் மாணிக்கவாசகர்.

அண்டத்தைப் போல முழுதாய் விரியக்கூடியவனும் அவனே, அணுவைப் போலத் தனக்குள் சுருங்கக்கூடியவனும் அவனே என்பது இதன் பொருள்.

 

பேரண்ட வடிவினன்

ஆயர்களின் வெண்ணெய்த் தாழியை உருட்டி விளையாடிய கண்ணன், வாமனனாய் உருப்பெருகி நெடுவான் நீளத்தை அளந்த கதையை விவரிக்கும் திருமங்கையாழ்வார், ‘நீண்டான் குறளாய் நெடுவான் அளவும்’ (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – பெரிய திருமொழி – பாடல் 5) என்கிறார்.

அவரே மற்றொரு பாடலில்,

‘மண் நாடும் விண் நாடும்

வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்

உண்ணாத பெரு வெள்ளம்

உண்ணாமல் தான்விழுங்கி உய்யக் கொண்ட

கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம் -

பெரிய திருமொழி – பாடல் 7) என்கிறார்.

 

மண்ணுலகம், விண்ணுலகம் என அனைத்தையும் விழுங்கிக் காக்கக்கூடிய கண்ணாளன் பேரண்ட வடிவினனாக இல்லாமல், வேறு எப்படி இருக்க முடியும்?

 

சக்தியே வெளி

பாரதியார் ‘வெளி’ என்று தனியாக எழுதவில்லை. அவர் ‘சக்தி’ என்று எழுதியவை வெளிக்குப் பொருந்துகின்றன. சக்தியே வெளியாக இருக்கிறாள் என்பது பாரதியாரின் இறையனுபவம்.

‘சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர். சக்தி அநந்தம். எல்லையற்றது. முடிவற்றது. அசையாமையில் அசைவு காட்டுவது.’

(வசன கவிதைகள் – சக்தி 1) என்கிறார் பாரதியார்.

சக்தி தேவியின் பேருடலே ஒரு குளமாக இருக்கிறது. அதில் கதிரவன் ஒரு மலரைப் போலப் பூத்திருக்கிறான். அவள் எல்லையற்றிருக்கிறாள்; முடிவற்றிருக்கிறாள்; அசையாதிருந்து அசைவுகளை ஏற்படுத்துகிறாள் என்று பிரபஞ்சத்தைப் பெண்ணாகப் பார்க்கிறது பாரதியாரின் பித்து மனம்.

 

அசைகின்ற கோயில்

மனித மனம் என்பதே ஒரு பிரபஞ்சம்தான். அதில் முழுக்க முழுக்க இறைவன் நிறைந்து இருக்கிறான்.

அசையாக் கோயிலில் (கட்டப்பட்ட கோயில்கள்) இருக்கும் இறைவனை நாடுவதைவிடவும், அசைகின்ற கோயிலில் (மனித மனம்) இருக்கும் இறைவனைத் தேடுவோம் என்பது திருமூலரின் திருவாக்கு.

‘படமாடக் கோயிற் பகவற்கொ றீயின்

நடமாடக் கோயில் நம்பற்கங் காகா

நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்

படமாடக் கோயிற் பகவற்க தாமே’

(திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – பாடல் 1).

வெளியிலிருந்து வந்த இறைவன் (மனதிற்கு) உள்ளே உறைபவன் என்கிறார் அவர். இறைவனை (மனதுக்கு) உள்ளே நிறுத்துபவர்கள், வெளியைப் (வீடுபேறு) பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

http://tamil.thehindu.com

Link to post
Share on other sites
 • 2 weeks later...

இறைமை இயற்கை 12: அனைத்தையும் மலரச் செய்யும் வெளி

 

 
17CHVANKalanidhi12jpg

Kalanidhi12   -  படங்கள்: வி. பால் கிரிகோரி

ம்பூதத் தலங்களில் வெளிக்கானது, தில்லை என்கிற சிதம்பரம். ‘சித்’ என்றால் மனம். ‘அம்பரம்’ என்றால் பெருவெளி. மனமென்ற பெருவெளியில் இறைவனை நிறுத்துவதையே ‘சிதம்பரம்’ என்கிற கருத்து உணர்த்துகிறது. சிதம்பர ரகசியம் என்பது ‘ஏதுமில்லாதது’. ஏதுமில்லாத இடத்தில் (பெருவெளியில்) எல்லாம் இருக்கிறது என்பதையே சிதம்பர ரகசியம் உணர்த்துகிறது. ‘ஏதுமில்லாத’ வெளியில் அவன் மறைந்திருக்கிறான். ஏதுமில்லாமையை அவன் தரித்திருக்கிறான்.

 

மறைபொருள்

இறைவனை ‘மறையுமாய் மறையின் பொருளுமாய்’ வந்தவன் (திருவாசகம் – கோயில் திருப்பதிகம் – பாடல் 5) என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். மறைகளை ஓதியதோடு அவற்றின் அர்த்தங்களாகவும் இருப்பவன் இறைவன் என்பது இதன் நேரிடையான பொருள். சிதம்பரனாய் மறைந்திருந்து திருவிளையாடல்களைச் செய்பவன் இறைவனே என்பது இதன் ‘மறை’பொருள்.

வெளி என்பது விரிந்துகொண்டே இருக்கக்கூடியது. இதை ‘அகல்விசும்பு’ என்ற வார்த்தையால் குறிக்கிறார் திருவள்ளுவர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி (திருக்குறள் – நீத்தார் பெருமை – குறள் 25) என்ற குறளில், அகல்விசும்பு என்பது முக்காலத்திலும் விரிந்துகொண்டே இருப்பதைக் குறிக்கிறது.

இதையே மாணிக்கவாசகர் ‘விரிபொழில்’ என்று குறிப்பிடுகிறார். பொழில் என்றால் பொழிதல். விரியக்கூடிய இடத்திலிருந்தபடி அருள் மழையைப் பொழிபவன் இறைவன் என்கிறார் அவர்.

வெளியைப் போலவே மனித மனமும் விரிந்துகொண்டே இருக்கக்கூடியதுதான். மனித மனத்தால் காலத்தைக் கடந்தும் இடத்தைக் கடந்து பயணிக்க இயலும்.

 

இறை குடியிருக்கும் வீடு

சுந்தரர் தனது திருமணத்தைத் தடுத்து நிறுத்திய ஈசனைப் ‘பித்தன்’ என ஏசினார் என்பதையும்; பிறகு உண்மையை உணர்ந்த பிறகு ‘பித்தா பிறைசூடி’ என வாழ்த்தினார் என்பதையும் படிக்கும்போது, நம்முடைய மனம் சுந்தரரின் காலத்துக்குச் சென்றுவிடுகிறது. சுந்தரருக்கும் ஈசனுக்குமான இந்த ‘வழக்கு’ விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் நடந்தது என்பதை அறியும்போது நம்முடைய மனம் அத்தலத்துக்குச் சென்று ‘வழக்கு விசாரணை’யில் அமர்ந்துவிடுகிறது. எனவே, மனதுக்கு காலமும் இடமும் ஒரு தடையல்ல. அது வேண்டியபடி பயணம் செய்யக்கூடியது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

மனதைப் போலவே வெளியிலும் காலமும் இடமும் இல்லை. பூமிக்கு வெளியில் சென்றுவிட்டால் திசைகள் இல்லை; தொலைவுகள் இல்லை. அண்மையும் இல்லை; சேய்மையும் இல்லை. எனவே, மனமும் வெளியும் வெவ்வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். மனித மனம் என்பது இறை குடியிருக்கும் வீடு. இறையின் மனம் என்பது மனிதர்கள் குடியிருக்கும் வீடு.

 

வீடு நோக்கிய பயணம்

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே’

என்பது திருமூலரின் திருவாக்கு.

ஈசனை உணர்ந்து ஞானம் முதிரப் பெற்றவர்களுக்காக எழுதப்பட்ட பாடல் இது. பத்திமை (பக்தி உணர்வு) உணர்வில் இறையோடு கலக்கும்போது, உயிரே சிவலிங்கமாகவும், வாயே கோபுர வாசலாகவும், ஐம்புலன்களே கோயிலுக்கு ஒளிதரும் விளக்குகளாகவும் மாறிவிடுகின்றன. உடம்பு ஆலயமாகவும் மனம் பெருங்கோயிலாகவும் மாறும்போது, பேரண்டப் பெருவெளியே நாம் போய்ச் சேர வேண்டிய வீடு என்பதை உணர முடியும். இதுதான் ‘வீடு பேறு’ எனப்படுகிறது.

நம் காலத்தின் மெய்யறிவாளராக மதிக்கப்பட வேண்டியவர் கவிஞர் அப்துல் ரகுமான். அவரது இரண்டு வரிகள் இந்தக் கருத்தின் மீது ஒளி கூட்டுகிறது.

‘வீட்டை விட்டுப் புறப்படுவதல்ல, வீட்டை நோக்கிப் புறப்படுவதே உண்மையான பயணம். நாம் ‘வெளி’யில் இருக்கிறோம். எனவே, நம் பயணம் வீடு நோக்கியதாக இருக்க வேண்டும்’ (இது சிறகுகளின் நேரம் – பாகம் 2) என்கிறார் அவர்.

ஐம்பூதங்களில் தலைமை பூதமாக இருக்கும் வெளிதான் மற்ற நான்கு பூதங்களையும் கட்டுப்படுத்துகிறது. காற்றில் தோன்றும் வெப்பமும் கடலில் தோன்றும் புயலும் நிலத்தில் தோன்றும் வெடிப்பும் வெளியால் தீர்மானிக்கப்படுபவை.

 

மனதால் விளைவது வாழ்க்கை

ஐம்பூதங்களில் தலைமை பூதமாக இருக்கும் வெளிதான் மற்ற நான்கு பூதங்களையும் கட்டுப்படுத்துகிறது. காற்றில் தோன்றும் வெப்பமும் கடலில் தோன்றும் புயலும் நிலத்தில் தோன்றும் வெடிப்பும் வெளியால் தீர்மானிக்கப்படுபவை. நிலத்தில் பொழியும் மழையும் பூமியில் தோன்றும் மலர்ச்சியும் மனிதரில் தோன்றும் மகிழ்ச்சியும் வெளியால் அருளப்படுபவை.

அதைப் போலவே மனித உயிருக்குத் தலைமை வகிக்கும் மனம்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மகிழ்ச்சி – துன்பம், நோய் – நலம், உறவுகள் – பிரிவுகள், செல்வம் – வறுமை, பிறப்பு – இறப்பு என அனைத்திலும் மனம் பங்காற்றுகிறது.

இதைத்தான் மாணிக்கவாசகர்,

‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு

ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே

சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும்

வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே’

என்று பாடுகிறார்.

மனமே, நீ வாழ்வதுபோல் நினைத்து வாழாது இருக்கின்றாயே. நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழிபடுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன் என்பது இதன் பொருள்.

எல்லா மனதுக்குமான ஒரு பாடலைத் தன்னுடைய மனதுக்குச் சொல்லிக்கொள்கிறார் மாணிக்கவாசகர்.

இறைமை என்பது மனதில் நிறைவது. வாழ்க்கை என்பது மனதால் விளைவது.

(அடுத்த வாரம் நிறைவுறும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19502701.ece

Link to post
Share on other sites

இறைமை இயற்கை 13: எங்கே வாழ்கிறான் இறைவன்?

 

 
24CHVANKalanidhi1301jpg

படம்: வி.பால் கிரிகோரி   -  படம்: வி.பால் கிரிகோரி

றைவனைப் பார்த்தே தீர வேண்டுமென்று அடம்பிடித்த இளைஞன் ஒருவனைத் துறவி ஒருவர் ஓர் அடர்ந்த காட்டுக்குள் அனுப்பிவைத்தார். அவர் சொன்ன பாதையில் சென்ற இளைஞன், அடுத்த நாள் காலையில் மற்றொரு பாதையின் வழியே வெளியே வந்தான். அவனிடம் துறவி, “காட்டில் இறைவனைக் கண்டாயா?” என்றார். மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட அவன், அவர்மீது கோபப் பார்வை வீசியபடியே, “இல்லை” என்றான். “அப்படியானால், காட்டுக்குள் என்ன நடந்தது என்று சொல்” என்றார்.

இளைஞன் சொல்ல ஆரம்பித்தான். “காட்டுக்குள் நுழைந்து கொஞ்ச தூரம் சென்றதுமே பெரிய பெரிய மாமரங்கள் வரவேற்றன. அவற்றில் நறுமணம் கமழும் மாங்கனிகள் காய்த்துக் குலுங்கின. அடுத்ததாகப் பலா மரங்கள் மிகுந்த பகுதி. அங்கே குரங்குகள் உடைத்துப் போட்ட பலாப் பழங்கள் சிதறிக் கிடந்து வாசத்தைப் பரப்பிக்கொண்டிருந்தன. அடுத்ததாக வாழை மரக் காட்டில் பழுத்த வாழைத் தார்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. எனக்கு பசி அதிகரிக்கத் தொடங்கியது. நாவில் எச்சில் ஊறத் தொடங்கியது. முடிந்தவரையில் அவற்றைப் பறித்துச் சாப்பிட்டேன்.

பிறகு கொஞ்ச தூரம் நடந்தேன். அங்கே ஒரு புலி என்னைத் துரத்த ஆரம்பித்துவிட்டது. அதனிடமிருந்து தப்பி ஓடும்போது எதிரே ஒரு வேடன் வந்தான். அவன் அம்பைப் பயன்படுத்தாமல், கவன் கல்லைக்கொண்டு தாக்கி அந்தப் புலியை விரட்டிவிட்டான்.

புலியிடமிருந்து தப்பித்தாலும் சோர்வு என்னைச் சூழ்ந்துகொண்டது. பொழுது போய் இருட்டிவிட்டதால், பாதை வேறு சரியாகத் தெரியவில்லை. இறைவனைப் பார்த்தே ஆக வேண்டுமென்ற முனைப்பில் இருந்த நான், எப்படியாவது இந்தக் காட்டைவிட்டு வெளியேறினால் போதும் என நினைக்க ஆரம்பித்து, கண்ணுக்குத் தெரிந்த பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

அப்போது ஒரு சிறிய காட்டுக் கோயில் தெரிந்தது. அதன் வாயிலில் யாரோ தலைவாழை இலை விரித்து உணவு படைத்திருந்தார்கள். அதைச் சாப்பிட்டுவிட்டு, சோர்வு மிகுதியால், அந்தக் கோயிலிலேயே படுத்து உறங்கிவிட்டேன். காலையில் எழுந்து வெளியே வந்தேன்” என்று சொல்லி முடித்தான் அந்த இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த துறவி, “உன்னைப் போல யாரும் இறைவனை இத்தனை முறை கண்டிருக்க முடியாது” என்று சொன்னார். இளைஞனுக்கு வியப்பு. அவர் தொடர்ந்தார். “ஈசனின் ஐந்து தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவை. நீ காட்டுக்குள் சென்றபோது உனக்காக அவன் முக்கனிகளைப் படைத்திருந்தான்; அவற்றை உண்பதற்காக உன் வயிற்றில் பசியையும் படைத்தான். அது படைத்தல் தொழில்.

இந்தக் காட்டில் என்னைத் தவிர வேறு மனிதர் இல்லை. புலி உன்னைத் துரத்தியபோது எதிர்ப்பட்ட வேடன், ஈசனே. அது காத்தல் தொழில். உனக்குச் சோர்வு மேலிட்டபோது, இறைவனைக் காணாவிட்டாலும் பரவாயில்லை, காட்டைவிட்டு வெளியேறினால் போதும் என்று நினைத்தாய் அல்லவா? ஈசன் உன் ஆணவத்தை அழித்தான். அது அழித்தல் தொழில். காட்டுக் கோயிலின் படையலை உண்டுவிட்டு, அங்கேயே உறங்கினாய் அல்லவா? அப்போது ஈசன் அங்குதான் இருந்தான். ஆனால், நீ அவனை உணரவில்லை. அது மறைத்தல் தொழில். இவை எல்லாவற்றையும் இப்போது என் மூலமாக உனக்கு உணர்த்தி இருக்கிறான் அல்லவா? அது அருளல் தொழில்.

இறைவன் அனுபவங்களில் வாழ்கிறான். அனுபவங்களின் மூலமாகவே பாடம் நடத்துகிறான். உனக்கு நேரும் அனுபவங்கள் இன்பத்தையோ துன்பத்தையோ பெருமிதத்தையோ அவமானத்தையோ தரலாம். அந்த அனுபவங்களை நீ வாழ்நாள் முழுக்க தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை. ஆனால், அனுபவங்கள் தந்த பாடங்களை விட்டுவிடாதே. ஏனென்றால், அதுவே தந்தையாகிய இறைவனின் வழிநடத்தல்கள்” என்று சொல்லி முடித்தார். அந்த இளைஞனுக்கு ஒரு புதிய பாதை திறந்தது.

 

மகத்துவம் புரிந்தது

கடந்த கோடையில் வறட்சி என்ற அனுபவத்தைப் பருவநிலை நமக்குக் கொடுத்தது. இப்போது நாம் மழையை நேசிக்கத் தொடங்கிவிட்டோம். நதிகளில் நீண்ட காலமாகத் தண்ணீர் வரவில்லை. நமது வயல்கள் வறண்டு, விவசாயம் பொய்த்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆற்று மணல் கொள்ளை போவது குறித்து இப்போது நமக்கு கவனம் பிறக்கிறது. குளிரில் நடுங்கிய மலைப் பகுதிகள் எல்லாம் இப்போது வியர்க்கத் தொடங்கிவிட்டன. மலைகளைச் சிதைத்தது போதுமென்று மனப்பக்குவம் அடைகிறோம். பூமிக்குள் எண்ணெயும் தண்ணீரும் கலந்த பிறகு, இனி குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காது என்று தெரிந்த பிறகு மண்ணைக் காப்பதன் மகத்துவத்தைப் புரிந்துகொள்கிறோம்.

 

அனுபவ வார்த்தைகள்

‘நெறியில்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்

சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்’

(திருவாசகம்)

- என்று மாணிக்கவாசகர் அச்சோ பதிகம் வாசிக்கிறார். ‘அச்சோ பதிகம்’ என்பதே அனுபவத்தின் கூற்றுதான். தவறான செயல்களையே சரியென நினைத்திருந்த என்னை, தீவினைகள் சேராமல் அருள் புரிந்தாய் என்கிறார் அவர்.

‘சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து

தீர்த்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

- என்று நம்மாழ்வார் திருவாய்மொழி சூட்டுகிறார். பாவம், புண்ணியம் எனும் இருவகை வினைப்பலன்களையும் ஒழித்து, பற்றுகளை நீக்கி, தன்னிடம் மனதை ஒப்படைக்கும்படி இறைவன் உயிர்களைத் திருத்துகிறான் என்கிறார் நம்மாழ்வார். இவை அனுபவத்தின் சொற்களன்றி வேறில்லை.

 

பாடம் உணர்வோமா?

வெளி, வெப்பம், காற்று, நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்களும் தங்களது இருப்பை உணர்த்தும்படியான அனுபவங்களை வறட்சி, பஞ்சம், நோய்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றின் வாயிலாக மனிதர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. அந்த அனுபவங்களின் பாடங்களை உணர்ந்து, பெற்றோரின் சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகளாக மனிதர்கள் வாழ வேண்டும் என்பதையே இறைவன் விரும்புகிறான். இல்லாவிட்டால், வேறு வழியின்றி அவன் ‘வீடு திருத்துவான்; வீட்டைப் பிரித்துக் கட்டுவான்!’

(நிறைந்தது) |

http://tamil.thehindu.com/society/spirituality/article19544350.ece

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • போட்டி அரசியலால் புதையும் சமூகம் – துரைசாமி நடராஜா  22 Views பெருந்தோட்டத் தொழிற்றுறையின் சமகால போக்குகள் திருப்தி தராத நிலையில், தோட்டங்களின் இருப்பு மற்றும் இம்மக்களின் அடையாளம் குறித்து அச்சமான சூழ்நிலை இப்போது மேலெழுந்திருக்கின்றது. இத்துறையைக் கொண்டு நடாத்துவதில் நிறுவனத்தினர் வெளிப்படுத்தும் பிடிவாத மற்றும் பொருத்தமற்ற கையாளுகைகள் தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன. இதேவேளை மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளின், இம்மக்கள் குறித்த பாராமுகமும், இம்மக்களின் எழுச்சி குறித்த சிந்தனைகளை மழுங்கடித்திருக்கின்றன. இந்நிலையில், அரசியல் தொழிற்சங்க மாயைகளில் இருந்து விடுபட்டு கல்விமையச் சமூகமாக மலையக சமூகம் உருவெடுக்கும் பட்சத்திலேயே பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.                    ஒரு சமூகத்தின் பல்துறை மேலெழும்புகை என்பது அவ்வளவு இலகுவாக சாத்தியப்படக் கூடிய ஒரு விடயமல்ல. சமூகம் சார்ந்த பல்வேறு தரப்பினர்களினதும் அர்ப்பணிப்பு, விட்டுக் கொடுப்பு, ஆக்கபூர்வமான செயற்பாடுகள், முன்னெடுப்புக்கள் என்பன இந்நிலையை அடைவதற்கு வலு சேர்ப்பதாக உள்ளன. மலையக சமூகத்தைப் பொறுத்தவரையில், இது சற்று அதிகமாகவே தேவைப்படுகின்றது. சுமார் 200 வருடகால வரலாற்றைக் கொண்ட இச்சமூகம் வரலாறு குறித்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர, வாழ்க்கை நிலைமைகளில் பெருமைப்பட முடியவில்லை. ஏனைய சமூகங்களின் வாழ்க்கை நிலைமைகளுடன் ஒப்பிடுமிடத்து இச்சமூகத்தில் வாழ்க்கை நிலைமைகள் மிகவும் பின்னடைவு கண்டுள்ளன என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமில்லை. வாக்குறுதிகளை வழங்கி இம்மக்களின் மனதை நிரப்புவதற்கு முயலும் ஆட்சியாளர்களும், மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளும் இம்மக்களின் நிலைமை உணர்ந்து அவர்களுக்கு சேவையாற்றுவதாக இல்லை. போட்டி அரசியலால் ஒரு சமூகம் புதைந்து கொண்டிருக்கின்றது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் போன்று இச்சமூகத்தைச் சேர்ந்த சிலரே இச்சமூகத்தின் பின்னடைவுகளுக்கு உந்துசக்தியாக இருந்து வருகின்றமை வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு விடயமாகும்.   மலையக மக்கள் இன்னும் பல்துறை சார்ந்த அபிவிருத்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருமித்த பயணம் அவசியமாகவுள்ளபோதும், நிலைமைகள் அவ்வாறு காணப்படவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் இழுபறியாகி வருகின்ற நிலையில், உரிய சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க திராணியற்றவர்களாக மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் மாறி இருக்கின்றார்கள். ஊடக அறிக்கைகளில் உயிர் வாழும் இவர்களில் பலர் சமூகத்தின் புல்லுருவிகளாக இருப்பது பலர் அறிந்த உண்மையாகும். சம்பள நிர்ணய சபையின் மூலமாக ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு, தொழிலாளர்களின் ஏனைய உரிமைகளை ஏப்பமிடுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சில மலையக அரசியல்வாதிகள் இன்னும் பிள்ளைப் பூச்சியாகவே இருந்து வருகின்றனர். இது இச்சமூகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரும் அநீதியாகும். பாமர மக்கள் என்பதால் பல வழிகளிலும் இவர்கள் ஏமாற்றப்படுவது எவ்விதத்திலும் நியாயமல்ல. நிறுவனங்களின் சமகால இழுபறி நிலையினால் பெருந்தோட்டங்கள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு கைமாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக தெரிய வருகின்றது. அத்தகைய ஒரு நிலை ஏற்படுமானால், ஆயிரம் ரூபாய் கிடைக்கலாம். ஆயினும் எதிர்காலத்தில் தோட்டங்களில் மனிதவள மழுங்கடிப்பு ஏற்படக் கூடுமென்றும், தொழில்நுட்ப விருத்தி மற்றும் இலாபத்தை மையப்படுத்திய காய்நகர்த்தல்கள் என்பவற்றின் காரணமாக தொழிலாளர் உரிமைகள் மேலும் பாதிப்படையலாமென்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களின் இருப்பும், தொழிலாளர்களின் சமூக அடையாளங்களும் மென்மேலும் கேள்விக்குறியாகலாம். எனவேதான் தோட்டங்கள் நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பதே தொழிலாளர்களுக்கு நன்மை விளைவிப்பதாக அமையுமென்று பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ் போன்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  அரசாங்கம் சிலவேளை தோட்டங்களை பொறுப்பேற்குமாக இருந்தால், தொழிலாளர்களின் நிலைமைகள் மேலும் மோசமடையலாம். அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல வருமானக்குறைவால் மேலெழுந்துள்ள பசி, பட்டினி என்பவற்றின் மத்தியில் இம்மக்களின் சமூக வாழ்க்கையும் கேள்விக்குறியாகி வருகின்றது. கம்பனிகளின் பொறுப்பில் சமகாலத்தில் தோட்டங்கள் இருப்பதால் வெளியாரின் ஊடுருவல் குறைவாக உள்ளது. எனினும் இந்நிலை மாற்றமடையுமிடத்து வெளியாரின் ஊடுருவல் அதிகரிக்கும்; அதேவேளை தோட்டங்களை காடுகளாக்கி, நிலங்களை வெளியாருக்குப் பகிர்ந்தளிக்கும் அரசின் நீண்டகால கனவும் நனவாகும். இத்தனை இருந்தும் மலையக அரசியல்வாதிகள் சிலர் இன்னும் பொறுப்பில்லாத நிலையிலேயே இருந்து வருகின்றமையையும் கூறியாக வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது வெறுமனே சம்பளத்துடன் மட்டுமே முற்றுப் பெறவில்லை. இன்னும் பல பிரச்சினைகளும் அவர்களிடையே தொக்கி நிற்கின்றன. குடியிருப்பு, சமூக வாழ்க்கை, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள், தொழில் வாய்ப்பு என இன்னோரன்ன பிரச்சனைகளும் இதில் உள்ளடக்குகின்றன. ஒரு மனிதனின் அபிவிருத்தியைத் தீர்மானிப்பதில் வீடு மற்றும் அவன் வாழுகின்ற சூழல் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றன. இந்த நிலையில், மலையக மக்களின் வீட்டுச் சூழல் பல்துறை அபிவிருத்திக்கு ஏற்புடையதாக இல்லை. ஒற்றை லயன் குடியிருப்பு, இரட்டை லயன் குடியிருப்பு, தற்காலிக குடிசைகள் என்று இம்மக்களின் குடியிருப்பு நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அங்குமிங்குமாக சில தனி வீடுகள் அள்ளித் தெளித்தது போல் காணப்படுகின்றன. இவையும் இம்மக்களின் தனி வீட்டுக் கனவை உரியவாறு நனவாக்குவதாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சமகால வீடமைப்பு இழுபறிகளுக்கு மத்தியில் தனிவீட்டுக் கனவை நனவாக்குவதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லக் கூடும் என்று கருதப்படுகின்றது. இதேவேளை முறையான வீடமைப்பு திட்டமிடல் கொள்கை ஒன்று மலையக அரசியல்வாதிகளிடையே காணப்படவில்லை. அவ்வப்போது கூட்டத்தோடு கோவிந்தா போடும் நிலைமைகளே காணப்படுகின்றன. இந்நிலை மாற்றப்பட்டு தனியான வீடமைப்பு குறித்த திட்டமிடல் கொள்கை ஒன்றினை உருவாக்கி, இதனை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியல் தொழிற்சங்க வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளுக்கு அப்பால் இவ்வாறு  ஐக்கியத்துடனான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஒவ்வொரு சமூகத்தினரும் இன்று தமது அடையாளத்தினையும், இருப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். தமது நிகழ்காலமும், எதிர்காலமும் இவற்றிலேயே தங்கி இருக்கின்றது என்பதனை இவர்கள் தெளிவாக உணர்ந்து, அதனை அடைந்து கொள்வதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். மலையக சமூகத்தினர் இதனை ஒரு முன்மாதிரியாக கொள்ள வேண்டும். மக்களை இவ்விடயத்தில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை அரசியல் தொழிற்சங்கவாதிகளுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும் இருக்கின்றது. ஒரு சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது தொழில் இல்லாத ஒருவருக்கு தொழில் வழங்கும் ஒரு செயற்பாடு அல்ல. அல்லது வெறுமனே நாற்காலிகளைச் சூடேற்றுகின்ற ஒரு சம்பிரதாயமும் அல்ல. அர்த்தபுஷ்டியான தமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளால் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு வலு சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மலையக அரசியல்வாதிக்கும் இருக்கின்றது. இதிலிருந்தும் இவர்கள் விலகிச் செல்ல முற்படுதல் கூடாது. நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளி மக்களின் அடையாளங்கள் இன்று தடமிழந்திருக்கின்றன. காலி, மாத்தறை, களுத்துறை போன்ற பல இடங்களில் வசிக்கின்ற இந்திய வம்சாவளி மக்கள் பெயரளவில் மட்டுமே தமிழர்களாக இருந்து வருகின்றனர். சிந்தனைகள், செயற்பாடுகள், கலாசார விழுமிய பின்பற்றுதல்கள் உள்ளிட்ட பல விடயங்களிலும் பெரும்பான்மை கலாசாரத்தின் கையாளுகையே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப்  போக்கு மிகவும் ஆபத்தானதாகும். பெரும்பான்மை இனவாதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடுவதாக இத்தகைய நடவடிக்கைகள் அமைந்து விடுகின்றன. மீன் தானாகவே வந்து வலையில் மாட்டிக் கொள்வதற்கு ஒப்பாக, நாம் நாமாகவே முன்வந்து எமது கலாசார விழுமியங்களை தாரை வார்த்து வருவது புத்திசாலிகளின் செயற்பாடு ஆகாது. எனவே இவ்விடயத்தில் மலையகத்தவர் ஒவ்வொருவரும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒவ்வொரு தரப்பினரும் தனது வகிபாகத்தினை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டியதும் மிகவும் அவசியமாகின்றது. மலையக மக்கள் எதிர்நோக்கும் இன்னோரன்ன பிரச்சனைகள், இவை தீர்க்கப்படாத நிலையில் தொடரும் இழுபறிகள், இவர்களின் வாழ்க்கை முறை, தொடர்ச்சியான போராட்ட வாழ்க்கை, திருப்தியற்ற வெளிப்பாடுகள் எனப்பலவற்றையும் மையப்படுத்தி நோக்குகையில், இந்நிலைக்கு சாபக்கேடு காரணமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இதயம் கனக்கின்றது. எனினும் இவைகளைப் புறந்தள்ளி சோக வரலாற்றை சுகமான வரலாறாக மாற்றியமைக்க வேண்டிய முக்கிய தேவை காணப்படுகின்றது. எமது துன்பங்களுக்கு அடுத்தவரைக் குறை கூறி பயனில்லை. அரசியல்வாதிகளையும், தொழிற்சங்கவாதிகளையும் நம்பி நம்பி ஏமாந்தது தான் மிச்சமே தவிர உருப்படியான செயற்பாடுகள் இவர்களால் எதுவும் இடம்பெற்றதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டி இருக்கின்றது. இந்நிலையில் அரசியல் தொழிற்சங்க மாயைகளில் இருந்து விடுபட்டு கல்விமையச் சமூகமாக மலையக சமூகம் உருவெடுக்க வேண்டும். இதன் மூலம் விடை கிடைக்காத பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். வீட்டுக்கு ஒருவரெனில் கல்விகற்றால் அந்த விதியொன்றே போதும்; தலைவிதியை மாற்ற என்ற உண்மையை மலையக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.ilakku.org/?p=43597
  • கொழும்பில் பயணப் பையினுள் சடலத்தை வைத்துச் சென்ற சந்தேகநபர் விஷமருந்தி தற்கொலை! கொழும்பு – டேம் வீதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டைப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் 52 வயதுடைய புத்தளம்  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த நபர் விஷமருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதேநேரம், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று முன்தினம் பகல் கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலம் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டமை தெரியவந்தது. பயணப் பையை வைத்துச் சென்ற நபர் ஹங்வெல்ல பகுதியிலிருந்து 143 பேருந்தில் அதனை எடுத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சந்தேகநபர் பயணித்த பேருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதையடுத்து, குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின்போதே இந்த தகவல் கிடைக்கப்  பெற்றதாக அவர் கூறினார். இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் வௌியாகியுள்ள காணொளியின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் காணுவோர், பொலிஸாருக்கு தகவல்களை வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, பயணப் பையினுள் சடலத்தை வைத்துச் சென்றார் என சந்தேகிக்கப்படும் குறித்த நபர் விஷமருந்தி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொழும்பில்-பயணப்-பையினுள/
  • வவுனியாவில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்! வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிசூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும் வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சேமமடு பகுதியைச் சேர்ந்த பிரசாத், சஜீவன் ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட மரம் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/வவுனியாவில்-இராணுவத்தின/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.