Jump to content

கவிதைகள்


Recommended Posts

அன்பின் நடவு

நடவுக்குப் பயிரைக் கட்டி
லாவகமாய் வீசுகிறார்
குருவுணித் தாத்தா.
அவர் கணித்த இடத்தில்
மிகச்சரியாக விழுகிறது நாத்துக்கட்டு.
நாற்றை
சீரான லயத்தில் தொடர்ந்து
அள்ளி முடிகிறாள்
செல்லக்கா பாட்டி.
உழைத்துக் களைத்த மரங்களிரண்டும்
நடவு வயலின் நடுவே
இளைப்பாறுகின்றன.
தாத்தாவின்
சேற்றுப்புண்ணுக்கு
யாரும் பார்க்காத நேரம்
சேற்றைக் குழப்பிப் பத்திடுகிறாள்.
‘போ கழுத’  என்றபடி
கொண்டையைப் பிடித்து இழுக்கும் தாத்தாவை
உதறியபடி வெட்கச் சிரிப்போடு மீறுகிறாள் பாட்டி.
நாளை பயிராகும்
வயலில்
இன்றே தொடங்குகிறது
அன்பின் நடவு.

- ந.சிவநேசன்

p26a.jpg

பயணிக்கும் பல்லவி

ஈருருளிப் பயணங்களில்
வேறு வழியற்று
‘முன்னிருக்கையை’
விட்டுக்கொடுத்துத்
தகப்பன் தாய்க்கு
நடுவில் நசுங்கியமர்ந்து தலையை நீட்டி
வேடிக்கை பார்த்துத்
தானும் மகிழும்
தலைப் பிள்ளைகள் பற்றித் தனியாய்
கவிதையென
எழுத
என்ன இருக்கிறது.

- ஆதர்ஷ் ஜி

கண்திறக்கும் கடவுள்

கண்மூடிய பிரார்த்தனை நேரங்களில்
ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்க்கும்
குழந்தைமூலம்
எல்லோரையும்
பார்த்து ஆசீர்வதித்துச்
செல்கிறார் கடவுள்.

- ஆதர்ஷ் ஜி

போக்குவரத்து மாற்றம்

இவ்விரவில்
பனியின் கனமேறி
தண்டவாளத்தில்
தலைவைத்துப் படுத்திருக்கும்
கழுத்து நீண்ட மஞ்சள் பூவிற்காக
இன்று மட்டும் நிறுத்திவையுங்கள்
ரயில் போக்குவரத்தை.

- சௌவி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனசை மலர வைக்கிறது ஒவ்வொரு கவிதைப்பூக்களும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

 
 
 

1.jpg
பிரிவின் கோரிக்கை


உறவின் பிரிவும்
அழுகையும் வலியும்
புதிதல்ல எனக்கு
எதிர்மறைக் கருத்துகள்
அவரவர் சுதந்திரம்
அன்பு தேய்ந்த வார்த்தைகள்
தேங்கி நிற்கும் வாழ்க்கை
இத்தருணத்தில் இப்படியே
நீ வெளியேறுவதில்
வருத்தம் ஏதுமில்லை எனக்கு
முன்பாக நீ காதல் சொன்ன
நொடிமுதல் தொலைந்துபோன
என் நண்பனை மீட்டுக்கொடு போதும்.
 

- மு.வித்யா


ரயில் ஸ்நேகம்

நீ யாரோ நான் யாரோ
ஆனாலும் பூத்தது
ஒரு மலர் நம்மிடையே
எல்லோரும் இறங்கிச் சென்றபின்
மணித்துளிகள் நாட்களாகி
நாட்கள் வருடங்களாகிவிட்டன
இன்னமும் அங்கேயே
நிற்கிறது நம் அன்பு
இதே வழித்தடத்தில்
அதே ரயில்
இனி எத்தனை முறை
வந்தாலும்
அந்த ரயிலாகப்
போவதில்லை எப்போதும்.
 
- ஷசாந்தன்

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

காலத்தை வெளியேற்று

மூதாதையர் பயன்படுத்திய
மணல்கடிகாரம் ஒன்று
எனக்குக் கிடைத்திருக்கிறது.
கடற்கரை மணலில் விளையாடிய
என் குழந்தை கண்டெடுத்ததுதான் அது.
அப்போது நான் கடலையோ அலைகளையோ
மேற்கிலிருந்து விழுந்த சூரியனையோ
முத்தமிட்டுக்கொள்ளும் காதலர்களையோ
வெட்டுப்பட்டுக்கிடந்த காலிஃபிளவர்களையோ
ரத்தச்சிவப்பில் வறுபடக் காத்திருந்த மீன்களையோ
பஞ்சுமிட்டாய் தின்ற முதியவரையோ
போராட்டக்காலத்தில் பெரிதும் விற்று
இப்போது எளிதாய்க்கிடக்கும்
நியான் ஒளிரும் காளைமாட்டுக் கொம்புகளையோ
கவனிக்கவில்லை.
ஆம், நான் கடலையோ அலைகளையோ
கவனிக்கவில்லை.
குழந்தையிடமிருந்த கடிகாரத்தில்
மணல்துகள்கள் கீழிறங்கிக்கொண்டிருந்தன.
காலிக்குடுவையாக்கி
விளையாடக்கொடுக்கலாமா
என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

p80a.jpg

நமது அலுவலகம் வாட்ஸ்-அப்பில் இயங்குகிறது

எட்டாவது மாடியிலிருந்து விழுந்த இளைஞனை
மூன்றாவது மாடியிலிருந்த நான்
தாங்கிப்பிடித்திருக்கலாம்தான்.
அதற்குள் உள்ளறையில் அலைபேசிக்கு
வாட்ஸ்-அப் செய்தி வந்துவிட்டது.
மேலாளரின் செய்திதான்.
நேற்றைய பணித்தாமதத்திற்கான காரணம் கேட்கிறார்.
வெளியே தலைமோதிச் சிதறும் ஓசை கேட்கிறது.
இல்லை, நேரமில்லை.
இன்று விடுப்பு எடுக்க முடியாது.
அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங்.

நமது அலுவலகம் வாட்ஸ்-அப்பில் இயங்குகிறது.
முதலில் ஒரு குழுதான் இருந்தது.
பிறகு புற்றுநோய்ச் செல்களைப்போல்
பல்கிப்பெருகிவிட்டது.
சில குழுக்களில் அட்மினாய்...
சில குழுக்களில் நிர்வகிக்கப்படுபவனாய்...
நேரம் இரவை நெருங்கிவிட்டது.
அலுவலகத்திலிருக்கிறேன்.
பசலை படர்ந்து நழுவிய வளையல்களைக்
கோப ஸ்மைலிகளாய் அனுப்புகிறாள் மனைவி.
பதிலுக்கு ஹார்ட்டின்களை அனுப்பவேண்டியதுதான்.
மகனுக்கு எரேசர் வாங்கிவர வேண்டுமாம்.
வீடு செல்லும் நேரம்
கடைகள் இருக்க வாய்ப்பில்லை.
இல்லை, எரேசர் கொண்டு
அவன் இனி எதையும் அழிக்கமுடியாது,
நானும்கூட.

மணி 12-ஐ நெருங்குகிறது.
குழுத்தலைவரின் பிறந்தநாள்.
கேக் மற்றும் பூங்கொத்து எமோஜிகளை
வாட்ஸ்-அப்பில் அனுப்பவேண்டியதுதான்.

நமது அலுவலகம் வாட்ஸ்-அப்பில் இயங்குகிறது.
நமது குடும்பம் வாட்ஸ்-அப்பில் இயங்குகிறது.
சொல்ல மறந்துவிட்டேன்
நமது அரசு
ட்விட்டரில் இயங்குகிறது.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

பூனைக்குட்டி - கவிதை

கவிதை: கோகுலா, ஓவியம்: செல்வம் பழனி

 

வனொரு
பூனைக்குட்டி வரைந்தான்
என்னிடம் பூனைகள்
இருக்கிறது என்றேன்

அவனொரு
கடவுள் சிலை வடித்தான்
நான் என்னை வணங்குவது
இல்லை என்றேன்

அவனோர் ஓரங்க நாடகம்
நடித்தான்
நானொரு
கதைசொல்லி என்றேன்

p71a_1512540888.jpg

 

அவனொரு
காதல் கவிதை சொன்னான்
எனக்கொரு
கள்ளக்காதலும் இருந்தது என்றேன்

அவன் தீட்சை பெற்றவன்
என்றான்
எனக்கும்
மதுப்பழக்கம் உண்டு என்றேன்
அவன் காறி உமிழ்ந்தான்
நான்
உமிழ்நீர் என்றேன்

அவன் பூனைக்குட்டியைக்
கக்கத்திலும்
கடவுளைக் கைகளிலும்
தூக்கிக்கொண்டு நடந்தபடி
காதலோடு ஞானத்தைத் தேடிக்கொண்டு
போகிறான்.

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 
E_1511844656.jpeg
 

வாழ்வின் வசந்தம்!

* சின்னச் சின்ன
வீம்புகள் வாழ்வில்
வரவே செய்யும்!

* வீம்புகள் என்றும்
நிலையானதல்ல..
விட்டுக் கொடுத்தல்
வீம்புகளை வீழ்த்தும்
சக்தி கொண்டது!

* சின்னச் சின்ன
சண்டைகள் வாழ்வில்
வரவே செய்யும்!
* சண்டைகள் என்றும்
நிலையானதல்ல...
அனுசரித்துப் போதல்
சண்டைகளை
சமாதானமாக்கி விடும்
சக்தி கொண்டது!

* சின்னச் சின்ன
தர்க்கங்கள் வழ்வில்
வரவே செய்யும்!

* தர்க்கங்கள் என்றும்
நிலையானதல்ல...
மவுனித்திருத்தல்
தர்க்கங்களை
தவிடு பொடியாக்கி விடும்
சக்தி கொண்டது!

* பூனைகள் வாழும்
வீடுகளில் தான்
எலிகளும்
வாழ்கின்றன!

* காலங்காலமாக
தொடரும் வாழ்வின்
இச்சூட்சுமத்தை
புரிந்து கொண்டாலே
போதும்
வாழ்வில் எல்லா நாட்களும்
வசந்தம் தான்!

 

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

வெறுப்பை பாவித்தல் 

இந்த வெறுப்பை நான் 
ஒரு காதலிபோல் நேசித்தேன்
தொட்டிச் செடி போல் வளர்த்தேன்
நாணயங்கள் போல் 
வழியெங்கும் செலவழித்தேன்
சமயங்களில் வெறுப்பின் நகங்கள்
குளிக்கும்போது என் உடலையே கீறின
சிறிய பறவைகளுக்கு 
தானியம் வீசுவதாய் 
அதை உணர்ந்தேன்
விருந்து மேசையில் 
என்னையே போல்
கோபமாய் இரைந்தது
நண்பனை விட்டுக்கொடுக்காதவனாக 
நடந்துகொண்டேன்
5.jpg
என் இதயம் போலவே
ஒருத்தியை முத்தமிட முயன்றது
நான் அவளை 
சமாதானப்படுத்தினேன்
கொடும்பகை அழிப்பது போல
நண்பனையே கொன்றது
அதற்கான தர்க்கங்களை 
உருவாக்கினேன்
ஒரு சவப்பெட்டிக்காரனிடம்
தன்னை
என் பெயர் சொல்லி 
அறிமுகம் செய்தபோதுதான் 
மெல்ல அதிர்ந்தேன்
 

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

 
E_1512720290.jpeg

 

உய்த்தலென்பது யாதெனில்...

நீ யாரையும் பார்த்து
இயங்க வேண்டாம்...
உன் செயல் திறனே
உன்னை செதுக்கட்டும்!

அடுத்தவரின்
அழுத்து விசையில் உழல
நீயொன்றும்,
இயந்திர மனிதனல்ல
மந்திர மனிதன்!

உன்னால் இயலும் என்பதே
உன் இயக்கத்திற்கான விதி!

மர உச்சியில் வீற்றிருக்கும்
பழங்கள் கூட
உன் கண்ணடிபட்டு
விழுவதில்லை
உன் கல்லடிபட்டே
விழுகிறது!

வாழ்க்கை உனக்கு
வசமாவதும்
அதுவே உனக்கு
விஷமாவதும்
உன் கைகளில் தான் இருக்கிறது!

உனக்குப் பிடித்த
அந்த ஒரே விஷயத்தை
திரும்பத் திரும்ப செய்
அதையே
விரும்பி செய்
வெற்றியடைவாய்!

உய்த்தல் என்பது யாதெனில்...
எப்போதும் அது
கண்ணாமூச்சி விளையாடியே
பழக்கப்பட்டது...
அதை உன் சுய
வட்டத்திற்குள் அடக்க
அதிரடி செயலுாக்கம் தேவை!

இவ்வுலகத்தை
கால்பந்து மைதானமாய்
நினைத்துக் கொள்...
உன் அருகே வரும்
'பந்து' என்கிற அந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
அதை வளைக்குள்
திணிக்க போராடு!

அழகான ரோஜாதான்...
ஏனோ, தானோவென்று
பறித்தால்
அதன் முட்கள் உன் விரலை
பதம் பார்த்து விடும்...

எதையும் நுணுக்கமாகவும்,
சற்று தெளிவாகவும் செய்தால்
உன் கழுத்துப் பூமாலையே
உன்னை மலர் துாவி வரவேற்கும்!

மொத்தத்தில் நீ
விழுவதும், விளைவதும்
உன் முயற்சியில் தான்
இருக்கிறது!

அதிரை.இளையசாகுல்,
முத்துப்பேட்டை.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகழகான கவிதைகள்... அழகழகான பல மலர்கள் வைத்து கட்டிய மாலைகள் போல....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழதான கவிதைகள். ஆனாலும் முழுவதையும் ஆறஅமர இருந்து படித்துச் சுவைக்கத்தான் நேரம் போதாமல் இருக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுதுகளில் படிப்பேன். பகிர்வுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

உயிர்

சாமியானா நிழல்முளைத்த இருக்கைகள்
உரைக்கிறது அடுக்கு வீட்டின் இரங்கற்செய்தி
யாரென்றறியவும் புதுக்கதைகள் தேடியும்
எட்டிப் பார்க்கிறது அண்டை குழுக்கள்
சாமந்தியும் முல்லையுமாய்
மரியாதை செய்து திரும்புகின்றனர் சிலர்
நின்று பேசிய வாலிபமும்
அரசியல் பேசிய நரைகளும் கலைகின்றன
அரை மணியில் புதுநிழல் கிடைத்த களிப்பில்
நிம்மதித் துயில்கொள்கின்றன தெருநாய்கள்
முப்பொழுது காத்திருக்கின்றனர்
கடல் தாண்டிய மகனுக்கோ மகளுக்கோ
வெறுமை சுமைதாளாமல் பந்தலும் தளர
மகிழுந்தில் புறப்படுகிறது இறுதி ஊர்வலம்
உயிரில்லா சாவு.

- ம.திலீபன்

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு!

முறுக்கு மீசை வில்லன்களால்
தூக்கிவரப்பட்ட
நாயகிகளாய்த் தவிக்கிறது வாழ்வு.
கற்பு பற்றிய பயமெல்லாம் இல்லை
மெய்ப்பொருள் தேடும் வாழ்வில்
பொய்ப்பொருள் பதற்றம் எதற்கு?

ஜன்னல்களை உடைத்துக்கொண்டோ
உத்தரத்தைப் பெயர்த்துக்கொண்டோ
பூமியைப் பிளந்துகொண்டோ வரப்போகும் 
ஹீரோக்களுக்காகக் காத்திருக்கும்போதுதான் ஒன்று புரிகிறது
நேரம் செல்லச் செல்ல
இந்த ஹீரோக்களுக்கான விக்கை சரிசெய்வதற்குள்
வில்லன்களையே நாம் ரசித்துவிடுவோம்போல!

- ரா.பிரசன்னா

p56a_1513144745.jpg

டி-1 காவல்நிலையத்தின் சுவரோரம்!

`டி-1’ என்று மட்டுமல்ல
எல்லாக் காவல்நிலைய வளாகங்களிலும்
ஏறக்குறைய இப்படித்தான்
நீங்களும் பார்த்திருப்பீர்கள்!
வரிசையாகவும் வரிசைகளற்றும்
வீசப்பட்டவைபோல
விழுந்து கிடக்கும்,
விபத்துக்குள்ளான
விதவிதமான ஈருருளிகளை!
வண்ணமிழந்து
ஓட்டை உடைசல்களாக
உருக்குலைந்து கிடக்கும்
அவைமீது
யாரும் பார்க்காத வேளையில்
இயற்கை உபாதையைத்
தணித்துச் செல்பவர்களைக்
குறை சொல்வதற்கில்லை.
ஆனால் ஒன்று,
வண்டிகள்மீது ஒட்டப்பட்டுள்ள
வாசகங்களை மட்டும்
குனிந்து படித்துவிடாதீர்கள்.
பிறகு `அப்பாவின் பரிசு’,
`குடும்பமே என் உலகம்’
என்பது போன்ற வாசகங்களைப்
படிக்க நேர்ந்து
நெஞ்சைப் பிசையும் வலியை
தாங்கிக்கொள்ளவேண்டியிருக்கும்.
முடிந்தால்,
நீங்கள் ஒரு வண்டியை இயக்கி ஓடவைத்து 
மெதுவாய் அதனிடம்
கேட்டுப்பாருங்கள்,
தான் உயிர்பெற்ற நன்றியோடு,
தாங்கிச் சென்ற மனிதர்களின்
கனவுகளையும் 
உங்கள் காதில் சொல்லலாம்
ஒருவேளை!

- ஆதர்ஷ்ஜி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

பரிதாபத்தின் கைகள்

 

கனவுகளில் துரத்துகிறது
மருத்துவமனை வீச்சம்
நினைவடுக்குகளில் சுழல்கிறது
உன் உயிரின் ஓலம்
எனை நோக்கி நீளும்
மரண பயம் கொண்ட
பரிதாபத்தின் கைகள்
குற்றவுணர்வின் நிழலாய்
24.jpg
அழுத்துகிறது குரல்வளையை
திமிறிக் கலைந்து
எழுகையில் சூழ்கிறது
நீயற்ற வெறுமை
மனதின் இடுக்குகளில்
பெரு மூச்சொன்றை உதிர்த்தபடி
வெட்கம் கொண்டலைகிறது
என் இயலாமை.
 

- ஸ்ரீதேவி மோகன்

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

 
 
E_1513313224.jpeg
 

விளம்பரம்....

பத்திரிகைகளில் செய்திகளை விட
பக்கம் பக்கமாய் விளம்பரங்கள்
கண்களை கவர்கின்றன
பண்டிகைக் காலங்களில்...

கட்டழகு கன்னியரின்
வண்ண வண்ண உடைகளில்
பட்டுப் புடவை
விளம்பரங்கள்...

கவர்ச்சிப் பெண்களின்
கழுத்து நிறைய
வித விதமாய்
அலங்கார நகை
விளம்பரங்கள்...

ஐநுாறு ரூபாயில் இருந்து
ஐம்பதாயிரம் ரூபாய் வரை
கலர் கலரான கைபேசி
விளம்பரங்கள்...

வீட்டுப் பொருட்கள்
அலங்காரப் பொருட்கள்
கம்ப்யூட்டர், ஐ பேட், 'டிவி'
ஐ போன் விளம்பரங்கள்...

பளபளக்கும் புது மாடல்
சொகுசு கார்கள்
இரு சக்கர வாகனங்களின்
அணிவகுப்பு விளம்பரங்கள்...

சென்னையிலிருந்து
குமரி வரை மனை மற்றும்
அடுக்குமாடி குடியிருப்பு
விளம்பரங்கள்...

எதை எப்போது...
எப்படி வாங்குவது?
புரியாமல் தவிக்கின்றனர்
ஓசி பேப்பரை படித்துக்
கொண்டிருப்போர்!
'சொல்கேளான்'

ஏ.வி.கிரி, சென்னை.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

கங்கு

சுருட்டு பிடித்தபடி,
தோட்டத்தில் விளைந்த பழங்களை
எங்கள் வீட்டுக்குச் சுமந்து வரும்
கிராமத்துத் தாத்தனும்
விபத்தில் இறந்துபோனான்.

புகைபிடித்தபடி,
தெருவோரம் வரிசையாக
அமர்ந்து நாங்கள் சைக்கிள் பழகுவதை வேடிக்கை பார்க்கும்,
துரட்டி அடுப்பில் சமையல் மணக்கும் நகரியத்தின் வீடுகளும்
புகைப்பழக்கத்தை எப்போதோ விட்டுவிட்டன.
பால்யமும் மகிழ்ச்சியும் இரு தண்டவாளங்களாகக் கிடக்க,
களைப்பு தெரியாமல் புகைபிடித்துக்கொண்டே ஓடிய நீராவி இன்ஜின்கள்கூட எங்கோ ஓடி மறைந்துவிட்டன.

புகைபிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு என்கிற போதனை
அதன் இரும்பு இதயத்தை
உருக்கியிருக்கலாம்.
ஆனாலும் ஓயாமல் கனிகிறதே
யாருடைய சிகரெட்டின் கங்கு இந்தச் சூரியன்?
ஆழமாய் உள்ளிழுத்து -
மேகமாய்ப் புகைவிட்டு -
வானத்தை அழகாக்கும் அந்த
செயின் ஸ்மோக்கர் யாரென்று தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

- கார்த்திக் திலகன்

p96a_1513665536.jpg

அடையாளம்

கடலில் பிடிபட்ட
பெருமீனின்
வயிற்றுக்குள்ளிருந்து
கிடைத்தது
காணாமல்போன மீனவனின்
ஆதார் அட்டை!

- பழ.அசோக்குமார்

பறவை

இந்த நதியைக் கடப்பது
எப்படி என்று யோசித்துக்கொண்டே
நின்றிருந்தேன்...
சட்டென்று எனைக்
கடந்து சென்றது
பறவை..

- கிருத்திகா தாஸ்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

‘ச்ச்சொத்’ எனும் சொல்லை
கண்டறிந்ததிலிருந்து தொடங்கிற்று அக்குழந்தையின் நாள்!

செல்லம் கொஞ்சும் பொம்மையின்
முகத்தருகே சொல்கிறது அச்சொல்லை
முட முடவென விடைக்கின்றன பொம்மையின் காதுமடல்கள்

சிறுபொழுதைக் கழிக்க
யானையில்* உறங்க வைக்க முயலுகையில்
குழந்தையின் தொப்புள் வரை வந்துவந்து சென்ற
கூரைப் பொத்தல் சூரிய வட்டத்திடம்
தன் மென்னுதடுகளின் அசைவின் நுண்ணோசையில் பகிர்கிறது அச்சொல்லை
கூடவே
தான் கண் விழிக்கும் வரை அச்சொல்லைப் பாதுக்காக்கக்கோரியும்

p42a_1513586671.jpg

சிரிப்பும் சுளிப்பும் அழுகைக்கான முன் நொடியும் என
பாவனைகள் முடிந்து
கண்விழித்து
வலப்புறத்தில் தலை சாய்த்து இடப்புற மூலையில்
தாயையும் அச்சொல்லையும் தேட
இரண்டும் இல்லை

சிணுங்கலொலி கேட்டு
அம்மா வந்துவிட
வீடெங்கும் தேடியும் சூரியப் பொட்டைக் காணவில்லை
அதனோடு அச்சொல்லையும்

பொம்மை
‘ட்ட்ட்டொட்’ எனக் கற்றுக்கொடுக்க
அச்சொல்லோடு மீண்டும் தொடங்குகிறது
குழந்தையின் சூரியன் மறைந்த பொழுது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பீத்தோவனை வேண்டும் பியானோ - கவிதைகள்

கவிதை: சபிதா

 

னது வீட்டில்
ஒரு பியானோ
இருக்கிறது.
வெள்ளைக்காரனுக்குச் சாமரம் வீசிய
முதுகு வளைந்த
மூதாதையனுக்குப் பரிசாகத் தரப்பட்டது.

தரித்திரங்களின்போது
விலைக்கும் அடமானத்திற்கும்
தங்கமும் வெள்ளியும்
பித்தளையும் இரும்பும்
வெளியேறிய பின்னும்
தங்கிவிட்டது அப்பெரிய
பியானோ மட்டும்.

எனது வீட்டில்,
ஓர் உடைந்த நாற்காலி இருக்கிறது,
ஒரு பழுதுபட்ட வானொலி இருக்கிறது,
துருப்பிடித்த இரும்புப் பெட்டியொன்று இருக்கிறது,
தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்கின்றன,
வெங்கலத்தில் ஒரு அண்டா இருக்கிறது,
எனச் சொல்லுவதை விடவும்
ஒரு பியானோ இருக்கிறது என்பதை
மதிப்பாய்ச் சொல்லிவிட முடிகிறது.

சின்னஞ் சிறு அறையில்
கால்களை முடக்கி உறங்கும்
மாத இறுதியைக் கண்டு அஞ்சும் 
நண்பர்களிடத்தில்
எனது பெருமிதம் வெளிப்பட்டுவிடாமல் 
மறைமுகமாகச் சொல்லியாகிவிட்டது.
ஒரு பியானோ இருக்குமளவிலான
எனது வீடு
அவர்களை
வியக்கச் செய்யும் என்பது
பேருவகை கொள்ளச்செய்கிறது.

p68a_1513596907.jpg

இசைக்கோவையைக்
கற்றுவிடும் முனைப்பில் தோற்று,
எனது ரீங்கார முனகல்
விரல்களின் வழியே
இனிய இசையாக
ஒலிக்காமல் போனதில்
விருப்பத்திற்குரிய பெண்ணின் காதல் பார்வை
கிட்டாமலே போய்விடும்
அபாயம் அச்சுறுத்திக்கொண்டேயிருக்கிறது

புறவாசலிலிருந்து உள்ளறைக்குச்
செல்லும் வழியில்,
உலர்த்திய துணியை
அதன்மீது பரப்பி வைக்கும்
வீட்டுப் பெண்களிடம்
சினம் கொள்ளவியலாது,
இசைக்கத் தெரியாத ஒருவன்
எதற்கு உரிமை கொண்டாட வேண்டுமெனக்
கேட்டுத்தொலைப்பார்கள்

ஒரு பியானோ என்னைக்
கனவானைப் போல உணரச் செய்கிறது.
கலைஞனுக்குரிய கர்வத்தை
இரவலாகத்  தந்திருக்கிறது.
பியானோ இருக்கும் வீடு எனுமொரு
அடையாள விலாசத்தைத்
தந்திருக்கிறது.

வசீகரமான  மௌனத்தைச்
சுமந்துகொண்டு நின்றாலும்
தூசு தட்டுகையில் 
தகுதியான விரல்களால்
மீட்டப்படாத துக்கத்தில்
வெள்ளை கறுப்புக் கட்டைகளிலிருந்து
அபஸ்வரமாக எழும்
கேவலிலிருந்து தப்புவது
கண்ணியின் மீது
காலை வைப்பதுபோலிருக்கிறது
என்பது ஒன்றுதான்
பெருங்குறை

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

துளிர்ப்பு

தன்னை எரித்து மின்மினிப் பூச்சிபோல்
வெளிச்சப் புள்ளியாக
சுற்றிச் சுற்றி வருகிறது
கவனிக்கப்படாத ஓர் ஊமை அன்பு.
வெறுமை நிரம்பப் போகிற வாழ்வில்,
வேகமாக ஓடிக் களைத்து,
எல்லா அன்றாடக் கசடுகளும்
ஒழிந்த ஒரு நாளில்...
அந்த மினுங்கலின் பிரமாண்டம் உணர்வாய்.
அந்த உள்ளுறைத் தீயின்
பரிசுத்தத்துக்கு ஏங்கி
கண்ணீர் துளிப்பாய்.

- ஸ்ரீவி சிவா

p88b_1514290512.jpg

கருக்கல் கவிதை

இரவெல்லாம் கடவுளோடு
விளையாடிக் களைத்து
கோணல் மாணலாய்
உறங்கிக்கொண்டிருக்கும்
குழந்தைகள்தான்
விடியலில் விழிக்கும்
அம்மாக்கள் படிக்கும்
அன்றைய முதல்கவிதை.

- திரு வெங்கட்

பாசிப் பறவை

மழைக்குப் பின்
நெருப்பில்லாமல் புகைகிறது
வைக்கோல் போர்.
தன்னிச்சையாய் இடமாறுகிறது
நத்தை.
கூரையிடுக்கிலிருந்து புறப்பட்டது
கறுப்புத் தொடர்வண்டியென
அட்டைப்பூச்சி.
கட்டுத்தரையிலிருந்து
கரைந்தோடிய சாணத்தால்
தெருவோரம் புதிதாய் முளைத்தது
வயற்காடு.
நிறைந்த குளத்தில்
மூழ்கியெழுந்த வெண் நாரை
தூரிகையில்லாமல் பச்சைநிறத்தில்.
குளத்தில் கிடந்த பாசியோ
நாரையின் உதவியால்
சிறகு முளைத்த பறவையென.

- தமிழ் தென்றல்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இலையின் கதை - கவிதைகள்

கவிதை: ஏ.நஸ்புள்ளாஹ்

 

p99a_1514296797.jpg

கரத்தின் தெருக்களில்
அலைந்து திரிந்த இலை ஒன்றை
வீட்டுக்கு எடுத்து வந்து
அதனை
முன்னர் இருந்த இலைபோலவே
ஒழுங்குபடுத்தினேன்
இலை பெருநகரங்களைப் படித்திருந்தது
இலையைப் பலரும் ஒரு கெட்ட வார்த்தையைப்போல்
அங்கும் இங்குமாகக் காற்றில் அலையவிட்டிருந்தார்கள்
அதன்படி
இலை புதிதுபுதிதாய்
காற்றில் அலைய வேண்டியிருந்தது
இலை காற்றில் அலைவதென்பது
சுதந்திரமான வாழ்க்கையல்ல
நிலமற்ற வெளியில் அலைதல்.
கொஞ்சம் மரத்தை
அண்ணாந்து பாருங்கள்
பறவைகள் அங்குதான் வசிக்கின்றன
கொஞ்சம் மரத்தில் தலை வைத்து
தூங்கிப் பாருங்கள்
யார் யாரோ
உங்களை புத்தனாக்கிச் செல்வார்கள்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

கடலும் சிறுவனும் - கவிதை

கவிதை: கனிமொழி.ஜி

 

p131aa_1514359519.jpg

நெரிசல் விலகி நெடுநேரம் நடந்த ஈரப் பாதையில்
ஒரு ஜோடி காலடித் தடங்கள் மட்டுமே என் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன...

அவற்றிலும் சில கடலுக்குள் இறங்கியிருந்தன…

அது தவிர அங்கே ஏதுமில்லை

அலையொதுக்கிய மலர்ச்சரமோ
நெகிழிப் பையோ
ஒற்றைக் காலணியோ, உடைந்த கட்டுமரமோ ஏதுமில்லை….
ததும்பிக்கொண்டிருந்த கடலைத் தவிர...

வட்டமாய் சிவந்த கதிர்  இன்னும் சற்று நேரத்தில் கடலைக் கைவிட்டு மேலெழும் உத்தேசத்திலிருந்தது…

மெல்லிய சிறு தளிரைப்போல காலையில் இவ்வளவு நெருக்கத்தில் நான் இதற்குமுன் கடலைக் கண்டதேயில்லை…

கடல், மணலில் தனியே ஒரு சிறுவனைப் போல விளையாடிக்கொண்டிருந்தது

இங்கேயிருக்கும் கடல் பற்றி
யாருக்கும் தெரியவில்லை
அதன் இருத்தலை எவரிடமும் தெரிவிக்க இயலவில்லை

இரு கைகளைக் குவித்து அள்ளிக்கொண்டபோது விரலிடுக்கில் இறங்கி மீண்டும் அது ஓடிவிட்டது

இந்தத் தளும்பலை இங்கேயே
விட்டுவிட்டு வர மனமில்லை
இந்தக் கடலுக்கு சாட்சியாய் நான் இங்கேயே அமர்ந்திருக்கிறேன்..

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

தலையாய பிரச்னை - கவிதை

 

கவிதை: யுகபாரதி, ஓவியங்கள்: மருது

 

p66a_1514715936.jpg

லைவிரித்தாடுகிறது
தலைவர் யார் என்கிற பிரச்னை
ஒரே நாளில் தங்கள்
உபாதைகளைப் போக்கக்கூடிய
ஓரிரு நாளில் தங்கள்
உயரங்களைக் காட்டக்கூடிய
ஒரே ஒரு தலைவருக்காக
காத்துக்கிடக்கிறார்கள் மக்கள்
அவரிடம் அது இருக்கிறது
இவரிடம் இது இருக்கிறது எனப்
பேசிக்கொண்டிருக்கும் அவர்கள்
பேச மட்டுமே தெரிந்த ஒருவரை
பேசக்கூடத் தெரியாத மற்றொருவரை
எடைபோட எண்ணுகிறார்கள்
தேர்தல் தராசில், அவர்கள்
உற்பத்தி செய்திருக்கும் நாற்காலியில்
உட்காரும் தகுதியுடைய
ஒருவரை வைத்து
கொல்லவும் தொடங்கியிருக்கிறார்கள்
ஏற்கெனவே இருந்த
எல்லாத் தலைவர்களையும்.

p66b_1514716007.jpg

வரைவிட இவரும்
இவரைவிட அவரும்
மேலென்று மெல்லுகிறார்கள் வாயை
யார் என்கிற குழப்பத்தைவிட
யாரைவிட என்கிற குழப்பமே மிகுதி
இத்தனை கோடிப்பேர்
இத்தனை இத்தனை கட்சிகள்
ஒருவருமே இல்லையா
தலைவருக்கான தகுதியுடன்?
ஏழைகளும் ஏமாளிகளும்
நிறைந்த நாட்டில்
போராளிகளில் ஒருவர்கூட
பூக்கவில்லையா தலைவனாக
ஒப்பீடுகளில் நொறுங்கும் ஓர் இனம்
தனக்குரிய தலைவனை
தேடிக்கொண்டிருக்கிறது
யாருடைய சாயலிலோ.

p62c_1514715965.jpg

வீதியிலிறங்கிப் போராட
விழுந்துவிடாமல் முன்னேற
தலைவனே இல்லை என்பவர்கள்
தயாரித்து வைத்திருக்கிறார்கள்
கிரீடங்களையும் மாடங்களையும்
தங்களில் ஒருவனுமே
தலைவனில்லை எனும் அவர்கள்
ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்
ஏலமிடும் தரகனின் வருகைக்காக
அவர்கள் காத்திருப்பில்
நொண்டிக் குதிரைகள்
முண்டியடிக்கின்றன வண்டியிழுக்க
ஆனால் அவர்களோ
தங்கள் பொதிகளைச் சுமக்கத் தேடுகிறார்கள்
பொருத்தமான கழுதையை
இனிமேல்தான் ஒரு தலைவன்
வருவாரென்றால் என்ன செய்யலாம்
இப்போதுள்ள தலைவர்களை?

p66c_1514716036.jpg

காலியான கூடாரத்தின் கடைசி மனிதன்
அதிர்ந்த குரலில் அறிவித்துக்கொள்கிறான்
தானே தலைவனென்று
வழிமொழிய ஆளில்லாத அவன்
வாய்க்கு வந்ததையெல்லாம்
வாரி இறைக்கிறான் நம்பிக்கையுடன்
அறத்தைக் கொன்றுவிட்டு
ஆளத் துடிக்கும் அவனுக்கு
வந்து வந்து குவிகின்றன வாய்ப்புகள்
எள்ளி நகையாடுகிறான் எதிரிகளை
முட்டாள்தனமான முன் அனுபவங்களை
கடைவிரிக்கிறான் காத்திரமாக
தானே நாடென்றும்
தனக்கே நாடென்றும் சொல்லும் அவன்
விளங்கிவைத்திருக்கிறான்
வியாபார அரசியலை
உண்டியல் குலுக்கி உருவான தலைவர்கள்
ஓரத்தில் நிற்கிறார்கள்
பணம் தின்னும் கழுகாக மாறிவிட்ட
ஜனங்களைப் பார்த்தபடி.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

விசாரணை -

கவிதை: ஜெ.ஃபிரான்சிஸ் கிருபா, ஓவியம்: ரமணன்

 

காட்சிப் பசியில் கண்கள்
வயிறு காய்ந்து கிடக்கையில் - அதன்
கனவுப் பசியில் யாரோ - அவன்
குடலைக் கொடியென உருவி
மாலையாகப் பின்னிக்கொண்டிருக்கிறார்கள்
எங்கோ மறைந்திருந்தபடி.

உடல் என்னுடையதுதான் என்று
ஒப்புக்கொண்ட பிறகும்
சடலத்தை அவனிடம் ஒப்படைக்க மறுக்கும்
தடயவியல் நிபுணர்கள்
அவர்தம் தாடைகளைத் தாறுமாறாகச் சொறிந்தபடி
ஆய்வு செய்கிறார்கள் வேறு வேறு கோணத்தில்.

அநாதையாகிப்போன ஆசைகள்
நிராசைகளை விட்டு வெளியேறும் இச்சையோடு
வேறு களம் தேடி
அடியெடுத்து வைக்கும்போதெல்லாம்
தடுத்து நிறுத்திவைக்கப்படுகின்றன
குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளும் பொருட்டு.

நேரம் காலம் மறந்த இதயத்தில்
உறைந்துபோன ஒரு கடிகாரத்தை
துடித்தோடும்படி மிரட்டுகிறார்கள்
அதட்டுகிறார்கள் அதிகாரத் தோரணையோடு

மிரள்கிறது அது.

p98a_1514877699.jpg

வெளி சாட்சிகளையும் அழைத்து வந்து
சடலத்தை சோதிக்கச் செய்கிறார்கள்
நாசித் துவாரங்களுக்கு மிக அருகே
புறங்கையை நீட்டியும்
நாடித் துடிப்புகளில் ஓடிய குருதியாறுகளை
மணிக்கட்டில் மறித்தும்
பரிசோதிக்கும் சாட்சிகளில்
கடன் கொடுத்தவர்களில் சிலர்
உயிர் இருக்கிறதென்று வாதாடுகிறார்கள்
அவனிடம் கடன் வாங்கியவர்களில் சிலர்
இறந்துவிட்டானென்று போராடுகிறார்கள்
ஒரு முடிவுக்கு வர முடியாத உயிரியல் நிபுணர்கள்
ஆளுக்கொரு `கட்டஞ்சாயா' ஆர்டர் செய்கிறார்கள்
புகைக் குச்சிகளை
குதத்தில் செருகிப் பற்றவைத்துப் புகைத்தபடி
ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்துபோகிறார்கள்

இறந்தவன் உயிர்த்தெழுந்து
நான் இறந்துவிட்டேனென்று
ஒப்புதல் வாக்குமூலம் வழங்காத வரையில்
அதிகாரிகள்
விட்டுவிடப்போவதில்லை
இந்த விசாரணையை
என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது
இறந்து மட்டும் போனவனுக்கு!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நீலியின் காதல் - த.ஜீவலட்சுமி

 

p121a_1514542784.jpg

ளமைத்தீர் திறம் ஓங்குமோர் கூதிர்
எரிதழலின் நிறைநெருப்பு
நின்றெரிய நின்றெரிய
நீலம்பாரிக்கும் நீள் இரவு
நீர்வார் நிகர்மலர் ஏந்திய
நின்றன் நெற்றிச் சுடரதில்
மாசாத்துவான் மகனின் சாயல்
நானோ மடலேறும் மங்கை
கருங்கோல் குறிஞ்சி
காந்தளெனத் தகிப்பு
பசித்ததோர் புல்லினம்
பாய்ந்த வனத்தீ
கனத்த கலனில்
மிக்கும் பெருஞ்சுவாலை
பாய்ந்தழியத் துடிக்கும் பாதரசத் தவிப்பு
நாவில் பெருஞ்சுனை
நினைவிற் அடர்வனம்
ஒற்றைக் கடலில்
ஓராயிரம் பரிதி
நீலியின் காதல்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இன்று என் பெயர் ஆரஞ்சு ட்ரீ

ன் அலைபேசியில்
தினமும் ஒரு பெயர் எனக்கு
இன்று ஆரஞ்சு ட்ரீ
நேற்று நான் ப்ளூ ரோஸ்
அதற்கு முந்தைய நாள் பர்ப்பிள் பேரட்
இதுவரை பதினேழு பெயராக
உனது அலைபேசியில் மாறியிருக்கிறேன்
ஒரு சிறிய வீட்டில்
பெரிய பொருளை
ஒளித்துவைப்பதுபோல் இருக்கிறது ஒரு பெயரை
ஒளித்துவைப்பது
வங்கிக் கணக்கின் கடவுச்சொல் மாற்றத்தைவிட
மிகவும் கடினமாக இருக்கிறது
இந்தப் பெயர் மாற்றம்
சில சமயம் அந்தப் பெயர் யாருடையது என்றும் தடுமாறுகிறாய்
நான் உனக்கு யார் என்று தடுமாறுவதுபோலவே

தினமும் அதிகாலையில்
எனக்கு ஒரு புதிய பெயரிடுவது
என்னைப் புதிதாகப் பிறக்கச் செய்யும் தருணம் என்று நம்புகிறாய்
புதிய பெயரில் என்னை அழைக்கும்போது
புதிய பெண்ணோடு பேசுவதுபோலவே இருக்கிறது உனக்கு
புதிய பெயரில் எனது பெயர்
அலைபேசியில் ஒளிரும்போது
பழைய துயரங்கள் அழிந்துவிடுகின்றன

இந்தப் பெயர்தானே நாம்
இந்தப் பெயர்தானே நம் உடல்
இந்தப் பெயர்தானே நம் இதயத்தின் ரகசியம்
நம் வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியாது
ஆனால், நம் பெயர்களைச் சுலபமாக
மாற்றிவிடலாம்தானே
பெயர்களாலான உலகத்தில்
பெயர்களை மாற்றும்போது
இந்த உலகமும் மாறிவிடுகிறது.

P106A_1514540995.jpg

நமது வழிகள்

நீ இருப்பது
தெய்வங்கள் குடியிருக்கும்
கோயில் பிரகாரத்தில் என்றாலும்
எப்போதும் நீ இருக்க விரும்புவது
அங்கே இருளில்
திசையறியாமல் பறந்தலையும்
ஒரு வெளவாலாகத்தான்

நான் வசிப்பதோ
பிணங்கள் எரியும்
சுடுகாட்டு மரங்களின்
இரவுகளில்
இருந்தும் இந்த உலகம்
ஓர் ஆந்தையாக வாழும்
என் கண்களுக்கு
அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அச்சமற்று அமர்ந்திருக்கிறேன்
பிடிமானமற்ற எந்தக் கிளையிலும்.

செல்வி ராமச்சந்திரன் கவிதைகள்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

புல்லாங்குழலும் புளியங்காயும்

கவிதை: தோழன் பிரபா

 

p37a_1516182479.jpg

ரித்தடத்தில்
தனியே நின்றுகொண்டிருக்கும்
புளியமரத்திடம்
ஊர்க்கதை
பேசும்போது வேறெல்லாம்
காதாக்கி கேட்டுக்கொள்ளும்...
உற்சாகத்தில் காற்றில் அதன் கைகளை
ஆட்டி ஆட்டிக் கதையை
ஆமோதிக்கும்...
வேகமாகக் காற்று அடிக்கும்போது
புல்லாங்குழலைப் போன்ற இசையை
எழுப்பிக் கூடடையும்
பறவைகளைத் தூங்கவைக்கும்...
யார் தங்க வந்தாலும் யாரென்று
இந்த மரம் புருவத்தை நெறித்து
பார்த்ததில்லை.....
இதெல்லாம் போனவருடம் வரைதான்....
அவனும் அவளும்
புளிய மரத்தில் தொங்கி
மரத்தை ஊரை விட்டு
ஒதுக்கி வைத்த பின்பு யாருக்கும்
தெரியாமல் முடியுடன்
அடிக்கப்படும்  ஆணியிடமும்
அவ்வப்போது தொங்கும்
சடலத்திடமும்
சொல்வதில்லை
நடு சாமத்தில் வந்து புளியங்காய்
பொறுக்கிப்போகும்
இரண்டு ஊராரைப்பற்றி.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பக்கத்தில் கடவுள்!

வே
று வேலையாக வந்ததால்
கோயிலுக்குள் செல்லாமல்
வாசலில் நின்று
முகப்புச் சிற்பங்களை
பார்த்துக்கொண்டிருந்தேன்
பக்கத்தில் நிழலாட திரும்பினால்
அங்கே கடவுள்
நான் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால்
அவர் அதன் விரிசல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்
ஆசி பெறலாம் எனக்  கால்களைத்  தேடினேன்
“இங்கேயே இருந்து 
செருப்புகளைப்  பார்த்துக்கொள்’’
என உள்ளே சென்றுவிட்டார்
மெல்ல எட்டிப்பார்த்தேன்
“ஹலோ, இலவச தரிசனம் அந்தப் பக்கம்’’
என யாரோ வழிகாட்டினார்கள் கடவுளுக்கு

 -ரா.பிரசன்னா

p80_1516185907.jpg

காரணம்

றுக்கெனக் கடிக்கிறதென்றும்
கூசும்படி ஏறுகிறதென்றும்
இரக்கமற்று நசுக்கிவிடத் துணியும்
எறும்புகளின் மீதான வன்முறைக்கு
பெரிதாக என்ன காரணம்
இருந்துவிடப்போகிறது...
அவை எளிது என்பதன்றி.

- கண்ணன்

குருவிக்கூடுகள்

நீ
ங்கள் பயன்படுத்தி எஞ்சி
எறிந்த மின்சார ஒயரின்
சிறு துண்டு
ஆடு தின்று முடித்து
மிச்சம் கிடந்த
காய்ந்த சில புற்கள்
மரம் வேண்டாமென
உதிர்த்துவிட்ட
வறண்டுபோன குச்சிகளென
கூட்டு முயற்சியால்
ஆனதுதான் என் கூடு.
கவலையாய் இருக்கிறது
உங்கள் கண்ணில் படாமல்
இருக்க வேண்டுமென்று.
தேவையற்றதென நீங்கள்
கலைத்துவிடவும் கூடும்.

- சாமி கிரிஷ்

மாநகரப் பட்டாம்பூச்சிகள்

ட்டடங்களில் மோதி
சிறகுடைத்துக்கொள்வது
சகஜமாகவே உள்ளது
மாநகரப் பட்டாம்பூச்சிகளுக்கு.
டீசல் புகையில்
திக்குமுக்காடி
அரை மயக்கத்தில் அமர்ந்திருக்கின்றன
மாநகரத்தின்
மூத்திரச் சந்தில்.
வாகனங்களின் ஹாரன் சத்தத்தில்
திடுக்கிட்டு உதிர்க்கின்றன
வண்ணங்களை.
அப்பார்ட்மென்ட்டுக்குள் போகும்
பட்டாம்பூச்சிகள்
மூச்சுத்திணறலுடன்
திரும்புகின்றன
பால்கனியில் வைக்கப்பட்டுள்ள
நெகிழிப் பூக்களின்
ரசாயன நெடியேறி.
பட்டாம்பூச்சிகள்
பட்டாம்பூச்சிகளாக வாழ்வதில்லை
மாநகரத்தில்.

-பிரபு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.