Jump to content

கவிதைகள்


Recommended Posts

பறவையின் வானம்

சி
றகசையும் நொடிப்பொழுதில்
உயரமற்றுப் போகிறது
பறவையின் வானம்

- அதியன் ஆறுமுகம்


ஒரு குழந்தையின் டைரி...

வீ
ட்டில் பதார்த்தங்கள் செய்தால்
நண்பர்களுக்கென்றும்
பள்ளியில் மதிய உணவு முட்டையைத் தம்பிக்கென்றும்
எடுத்து வைத்துக்கொள்ளும் குழந்தை,
வழிகளில் நல்ல வாளிப்பான பிரம்பு கிடைத்தால் மட்டும்
‘இது ஆசிரியருக்கென’ எடுத்து பத்திரப்படுத்துகிறது...

- சாமி கிரிஷ்


எதிரலை

ள் செல்லும் அலையைத்
துரத்திக் கொண்டு
ஓடும் குழந்தை திரும்பிக்
கரை பார்க்கிறது
இப்போது கடலின் முறை

 - மகேஷ் சிபி


தேவையானதாகி

தை
க்கச் சொல்லியும்
தைக்காமல் விட்ட
சட்டையின் பட்டன்...
லைட்டரில்
மீதமிருக்கும் திரவம்...
பிடிக்காத சேனல்...
உடைந்துபோன ரிமோட்டில்
சுற்றப்பட்ட ரப்பர்பேண்ட்...
டெலிபோன் டைரியில்
கிறுக்கப்பட்ட எழுத்துகள்...
உப்பில் அரிந்து போடப்பட்டு
பூசனம் பிடித்திருக்கும் மாங்காய்...
காலுடைந்த நாற்காலி
விழாமலிருக்க எட்டாக மடித்து
முட்டுக்கொடுக்கப்பட்ட நாளிதழ்...
இப்படி தேவையில்லாமல்போன
ஏதோ ஒன்றுகூட
தேவையான பொருளாகிவிடுகிறது
இறந்தவரின் நினைவுகளால்...

- கௌந்தி மு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply

கொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை

 

p83a_1535355176.jpg

கொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் குறுக்கே
ஒரு காட்டுக் கனகாம்பரம் மலர்ந்து தேனரும்புகிறது
அவ்விரவில்தான் கணவான்களுக்கு வண்ண மதுக்குவளைகள் நீட்டப்படுகின்றன
தேனையொத்த நிற அழகிகள் மிகைப்பூச்சுடன் ஜொலிக்கிறார்கள்
ஒப்பந்தங்கள் எளிதாகக் கையெழுத்தாகின்றன
கொழுத்த பண்டங்கள் தொலைக்காட்சியில் உருண்டோடுகின்றன
நகரத்தின் கடிகாரங்கள் சீராக அடுக்கப்பட்டிருக்கின்றன
அவ்விரவில்தான் கிரிக்கெட் பார்த்த களைப்பில்
பல கோடிப்பேர் தேசியப்பெருமிதத்துடன் தூங்கிப்போகிறார்கள்
வீரர்கள் கனவில்வந்து வாஞ்சையுடன் எதையோ பரிந்துரைக்கிறார்கள்
அவ்விரவில்தான் அவன் காதலைச் சொல்ல
நூறாயிரம் ரோஜாக்களை வளைகுடாவிலிருந்து வருவித்திருக்கிறான்
ஆனந்தம் தொண்டையடைக்க கண்ணீர் சிந்துகிறாள் காதலி
அவ்விரவில்தான் மந்திரிகள் இறக்குமதி ஊர்திகளுக்குச்
செலுத்தவேண்டிய வரிகளை எண்ணி அங்கலாய்க்கிறார்கள்
ஆடிட்டர்களை அழைக்க எண்களை அவ்வளவு நாசூக்காக அழுத்துகிறார்கள்.
அவ்விரவில்தான் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை சைகைகாட்டி
அழைத்தமைக்காகப் பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள்
குடும்பஸ்தர்கள் கடன்சுமை தாளாமல் குழந்தைகளுடன்
விஷமருந்தி நுரைதள்ளக் கிடக்கிறார்கள்
அவ்விரவில்தான் குழந்தையின் பாலுக்காகப்
படுக்கைக்குத் தயாராகிறாள் ஒரு தாய்
நடைபாதைகளில் படுத்தவாறே அடுத்த நாளுக்கான போராட்டவடிவம் பற்றி
விவாதிக்கிறார்கள் விவசாயப் பிரதிநிதிகள்
அவ்விரவில்தான் அத்துணை ஒரு உன்னதமான வண்ணத்தில்
காட்டுக்கனகாம்பரம் மலர்ந்து காற்றில் தள்ளாடுகிறது
நிர்வாணம் அப்படி ஒரு பரிபூரண நிர்வாணத்தால் மூடப்படுகிறது.

சச்சின் - ஓவியம்: ரமணன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மழைக்கால நினைவுகள்

நீ
ண்ட இடைவெளிக்குப் பிறகான
மழை வலுத்திருந்த நாளொன்றில்
ஊருக்குள் நுழைகிறீர்கள்
வழக்கமான மேகங்கள் ஏதுமின்றி
வானம் வெளிறியிருந்தது
பெருநிலத்தின் இயல்பால் எழுந்த வாசம்
தொப்புள்கொடி அறுத்த கிழவியின்
முகத்தை நினைவுறுத்துகிறது
தெருமுனைத் தொடக்கத்தில் கடந்து சென்ற
நடுத்தர வயதுடைய பெண்ணுக்கு 
உங்களது பள்ளிக்கூட சிநேகிதியின்
சாயல் வாய்க்கப்பெற்றிருக்கிறது
அவளுடைய பெயர் நினைவிடுக்குகளில்
சிக்கிக்கொண்டு வெளிவர மறுக்கிறது
என்றோ ஒரு காலத்தில் ஊஞ்சலாடிய
நைலான் கயிறு தொங்கிக்கொண்டிருக்கிற
பூவரசமர வீட்டின் முன்பு
இப்போது நிற்கிறீர்கள்
முற்றத்துத் தூணின் பின்பக்கப் பழுப்புச்சுவரில்
தயிர்க்காரி தடவிச் சென்ற கோடுகளை 
எண்ணத்தொடங்குகிறீர்கள்
அக்கணத்தில் அவ்வீட்டின் உள்ளிருந்து
பேரிசையாக ஒலிக்கத் தொடங்கிய
தந்திக்கருவியின் இசை
உங்கள் காதுகளின் நுண்ணரம்புகளைத் தீண்ட
இழப்பின் சுவையறிந்து தேம்பத் தொடங்குகிறீர்கள்
காற்றில் கலந்த பேரோசையென
உங்கள் தேம்பல்  மெள்ளக் கரைகிறது
அத்தந்தியிசையில்!

- வே.முத்துக்குமார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

ஆடி மாதம்

மு
னியாண்டவருக்குக் கொடை,
நீண்ட அரிவாளில் நின்று
குறிசொல்லும் சாமியாடி,
முனியாண்டவரின் கண்களோடு பொருந்திப்போகும்
இவரின் கண்கள் மருள் வந்தபோது
கறிச்சோறு சாப்பிடும்முன்
சாமிக் குத்தம் குறை அறிய
உன்னிப்பாகும் ஊர்க்கூட்டம்
சாராய நெடி விலகாமல் விலகின
சொந்தங்கள்-
பின்னர் தன்னந்தனியே
ஒரு வருடம் முழுவதும் முனியாண்டவர்.

- செ.பரந்தாமன்

p66a_1535439900.jpg

கந்துவட்டிக்கு அடைத்த உயிர்க்கடன்

கு
ருணையென இறைந்து கிடக்கின்றன
மனத்தட்டில் துயரப்பருக்கைகள்
புல் வரப்பில் திருவடி நகர்த்தி
வயலைச் சுற்றி வருகிறார் அப்பா.
முகத்தில் அப்படியொரு
பரிதவிப்பின் ரணக்கொப்புளக் களை
சென்ற வெள்ளாமையே மாற்றம் தாளாமல்
கந்துவட்டிக்கு உயிர்க்கடனடைத்து
பரலோகம் போன பரமசிவம் மாமாவிற்கு
வயல் வடிக்கும் கண்ணீர்த் துளிகளாய்
தலைகவிழ்ந்து நிற்கின்றன நெல்மணிகள்.
பின்புறமாய் விரல்கள் கோத்து
ஆழ்யோசனையில் பழனம் வெறிக்கும்
அப்பாவின் கைகளைப் பார்க்கையில்
மரணித்த விவசாயி கழுத்தில் அணிவித்த
மாலையைப்போலவே இருந்தது.

- மீனா சுந்தர்



உயிர்க்கவசம்...

ப்பா அம்மா மகளென
மூன்று பேர் செல்லும்
இருசக்கர வாகனப் பயணங்களில்
இருக்கும் ஒரேயொரு தலைக்கவசத்தை
நடுவில் அமர்ந்திருக்கும்
மகளுக்கு அணிவித்துப்
பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது
நடுத்தர குடும்பத்துப் பாசம்.

- சாமி கிரிஷ்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மனதின் நதி

 
அகமது ஃபைசல் (இலங்கை), ஓவியங்கள் : மணிவண்ணன்

 

தவுகளையும்
ஜன்னல்களையும் வாங்கிக்கொண்டு போகிறது காற்று.
வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறேன்.

ரு மழையை மூன்றாகப் பிரித்து
சகோதரர்களுக்குப் பங்கிட்டுவிட்டேன்.
நான் இப்போது வறண்ட நிலம்.

தாகத்தோடு சில பறவைகளும் விலங்குகளும் என்னில் அமரும்.

நான் இப்போது தாகத்துடன்.
பறவைகளோடு பறவையாக, விலங்குகளோடு விலங்காக.

றக்கத்தின் வாலை கண்களால் பிடிக்கவே முடியவில்லை நழுவிக்கொண்டேயிருக்கிறது.
தலையைப் பார்க்கவே முடியவில்லை ஆடிக்கொண்டேயிருக்கிறது.

p48a_1535697493.jpg

வமானப்பட்டாலும் கூடவே வருகின்ற நிழல்,
அழும்போது என்னைப்போன்று அழுவதில்லை.
ஏனென்றால், என்னைத் தவிர அதற்கு வேறு யாரும் சொந்தமில்லை.

ருள்பறவை
இடைவிடாது பொரித்த குஞ்சுகள்.
இரவென்பது.

ஆங்காங்கே சில
தீ மூட்டித் தன்னை மாய்த்துக்கொள்ளும்.
விளக்கென்பது.

த்தங்களுக்கு
வெளியே நிற்கக் கொஞ்சமும்
தைரியமில்லை.
காதுகளுக்குள் ஓடி ஔிந்துகொள்கின்றன.

குறைந்த சத்தம்
இரகசியம்.
போட்டிக்குக் கத்துகின்றன
நாய்கள். அல்ல
காதுகளைப் பொத்திக்கொண்டு
செல்லும் நாய்களை, விடிய விடிய கடித்துக்கொண்டிருக்கிறது இரவு.

சிரிக்கத் தெரியாத கண்ணாடி கொஞ்சம் உடைந்திருக்கிறது விதவை.

p48_1535697510.jpg

நுழைவாயில் கேற் கம்பியில்
ஒரு மழைத் துளி
பெய்வதை மறந்து நிற்கிறது.
பெய்யச் சொல்லி
இன்னுமொரு கம்பியைப் பக்கத்தில் வைத்துப் பிடித்தேன்
அவள் கேற்றைத் தள்ளித் திறந்து
மழையைக் கொன்றுவிட்டாள்.

ன்னை மிக நீண்ட பாதையால் அழைத்துச் செல்கிறது அந்தப் பட்டம் பறக்க முடியாத இடத்தில் வைத்து நான் பறக்க வேண்டும்.

ஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலும் மலரும் பேரமைதியும்
கலைந்துபோயின. அவளும் பிள்ளைகளும் கலையாது தங்கியிருப்பர் அந்தக் கூட்டில்.

கண்ணீர்
மனதின் நதி.
கவலையுடன் போட்டியிட்டு
ஓடும் பாயும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஒரு காலத்தில்

ரு காலத்தில்
எங்களிடம் கொஞ்சம் புத்தகங்கள் இருந்தன
தூசிப்புகை கண்ணீரில் கலக்க
நள்ளிரவொன்றில் சாம்பலாக்கினோம்.
எங்களிடம் காலத்தைச் சேமித்த
சில புகைப்படங்கள் இருந்தன
பொலித்தீன் பைகளிற் சுற்றி
பெருமரங்களினடியில் புதைத்தோம்
ஊழியில் மரங்கள் சாய்ந்தன
காலமே காலத்தைத் தின்றது
கொல்லப்படுவதற்கு முன் சொல்லப்படுவதற்கென
எங்களிடம் சில வார்த்தைகள் இருந்தன
மேலும் சில காலம் உயிர்வாழ்தலின் பொருட்டு
அவற்றின் கழுத்தை நாங்களே நெரித்துக் கொன்றோம்
ஒரு காலத்தில்
எங்களோடு சில மனிதர்கள் இருந்தார்கள்
அகாலத்தில் சாக்குருவி கூக்குரலிட
அவர்களை ரகசியமாய்ப் புதைத்து
அழுது மீண்டோம்.
‘எங்கள் நாடு ஒரு ஜனநாயக நாடு’
இரவு கவிந்துவிட்ட விறாந்தையில் இருந்து
பிள்ளைகள் மெதுவாகத்தான் படிக்கிறார்கள்.

p101a_1535698406.jpg


குற்றவுணர்வு

ருதிரியாய்ப் பிளந்து தர்க்கமிடும் சர்ச்சைப் பாம்பின்
நடு அண்ணத்தில் நின்று திகைக்கிறது
எனது குற்றவுணர்வு.
தவறிழைக்காமலே
கண்ணீரின் முன் தலைகவிழ்ந்து நிற்கிறது
நள்ளிரவில் ஒலிக்கும் வரண்ட இருமலில்
முதுகு குலுங்குகிறது
குழந்தை விழுந்து மூக்குடைத்துக்கொண்ட தரையில்
தன்னால் சிந்தப்படாத தண்ணீரைத் தேடுகிறது
பூட்டப்பட்ட அறைக்குள் நானிருந்தாலும்
என் பிரதிநிழலாய் எப்போதும்
கூடத்தினுள் நின்றுகொண்டிருக்கிறது
பிச்சைக்காரர்களின் விழிகளைத் தவிர்த்து
சில்லறைகளாகவும்
தெருநாய்களுக்குப் பிஸ்கெட்டாகவும்
சுடுவெயிலில் படுத்திருக்கும் முதியவளின் அருகில்
அவளறியாது விட்டுச்செல்லும் செருப்பாகவும்
விழும் குற்றவுணர்வே!
உன்னைக் கொல்வதென்றால்
புத்தகங்களுக்கு முந்தைய பிராயத்திற்குப்
பின்னகர வேண்டும்!

p101b_1535698426.jpg


வீட்டிலிருந்து தப்பித்தல்

வீட்டிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட பெண்
தான் வந்தடைந்த தனி வீட்டின்
சுவர்க்கடிகாரத்தைக் கழற்றி மறைத்துவைக்கிறாள்
நாட்காட்டியின் தாள்களை
கொத்தாகக் கிழித்தெறிகிறாள்
அலைபேசியை அணைத்துவைத்த பின்
காலத்துறப்பின் களிப்பேறி மினுங்கும் முகத்தை
கண்ணாடியில் பார்க்கிறாள்.
இனி அவளது
பொழுதுகளுக்கும்
உணவுவேளைகளுக்கும் பெயர்களில்லை
நண்பர்களாலோ எதிரிகளாலோ தட்டப்படாத கதவில்
படியும் காலத்தின் தூசியைக் குறித்தொரு
விசனமுங் கொள்ள வேண்டியதில்லை
இறுக்கமானதும் அவசியமற்றுப் போனதுமான
உள்ளாடைகளைக் கழற்றி எறிந்ததுபோல
கற்பிக்கப்பட்ட ஒழுங்கனைத்தையும்
கழற்றி சுழற்றி வீசுகிறாள்
அவை மேலே மேலே செல்கின்றன
பூமிக்குத் திரும்பவே மனமற்ற
ஒரு பறவையைப் போல.

p101c_1535698442.jpg


இன்னும் வெகுதூரம்

நீண்ட நாட்களின் பின் சந்திக்கிறோம்
உன் கண்களிலிருந்த மான்குட்டி வெளியேறிவிட்டது
கனவுகளின் ஒளி அவிந்த விழிகளில்
கடலாழத்தின் இருள்.
நீர்மை வற்றி
சம்பிரதாயத்திற்குக்கூட புன்னகைக்க முடியாமற்போய்விட்ட உன்னுதடுகள்!
புரிகிறது
அவமானங்களின் கருந்துளைகளுள் இறங்கிவிட்டிருக்கிறாய்
ஆயினும்
சிரிக்கப் பயிற்சி எடு
இந்த வாழ்வு மரணத்திற்கு நிகரானது என்றாலுங்கூட
நாம் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்!

- தமிழ்நதி,

ஓவியங்கள் : வேலு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p36d_1536074200.jpg

ரு சிலிண்டர் அன்பு!

முகவரி தேடியலையும் வெளியூர்க்காரரை
அழைத்துப்போய் இடம்சேர்க்கும்
நகரத்து இளைஞனும்,
பின்கேட்கும் ஒலிப்பான்களைப்
பொருட்படுத்தாமல் பிரேக்கை அழுத்திமிதித்துக்
குழந்தைகளிடம் சாலையைக்
கடக்கச் சொல்கிற ஆட்டோக்காரரும்,
யாரோ கலங்கும் பொழுதுகளில்
எங்கோ ஈரம் கசியவிடும் மனிதர்களும்
அவரவர் இடத்திலிருந்து
அன்பு செய்கிறார்கள்.
இவர்களையெல்லாம் வேடிக்கை பார்க்கிற
ஃபர்ஸ்ட் பர்சன் சிங்குலருக்கு
ஏனோ மாதக்கடைசி தாண்டும்
எரிவாயு சிலிண்டர் மீது
எல்லையற்ற அன்பு பிறக்கிறது.
இவ்வன்பினுள்ளும் முந்தையவைபோலவே
ஒரு கடல் விரிகிறது!

 - விக்னேஷ் சி செல்வராஜ்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

p36a_1536074042.jpg

பேச்சியின் கேள்விகள்

எங்கடா என் பலி
எனக் கேட்டபோது
வெட்டிய பன்றியின்
வெதுவெதுப்பான
ரத்தத்தைக் கொடுத்தார்கள்.

எங்கடா என் படையல்
எனக் கேட்டபோது
மிலிட்டரி ரம்மையும்
முக்கூடல் சுருட்டையும் வக்கணையாய்க் காட்டினார்கள்.

எங்கடா என் மரியாதை
எனக் கேட்டபோது
சம்பங்கி மாலைகளை
சரஞ்சரமாய்ச் சாத்தினார்கள்

எங்கடா என் பயிர்கள்
எனக் கேட்டபோது தூங்கிப்போயிருந்த பிள்ளைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.

சந்தோசமடா சந்தோசம்
வேட்டைக்குப் போகவேணும் எங்கடா என் வனம்...
 
கேட்டபோது
கதறியழத் தொடங்கினாள் கருவறையில் இருந்த
காட்டுப்பேச்சி.

- கண்மணிராசா


p36b_1536074064.jpg

காவல் பூட்டு

சேமித்துக்கொள்ள
காங்கிரீட் தளத்தில் பதித்த
தடங்களில் என்ன இருக்கிறது
பூட்ஸுக்குள் கால்கள் முடங்கும் வாழ்வு
தனிமை நிரம்பிய அறைகளில்
பழுதாகித் தொங்கும் விளக்குகள்
மீன்குழம்பின் வாசனையற்றுப்போன
சமையலறைக்கு அதன் பின் வராதுபோன பூனையால்
அடுப்பில் பூனை படுத்திருக்கும் என்று
சொல்ல முடியாத வேதனை
செத்தால் நாற்றம் வெளிப் போகும் வரை
உறங்கிக் கிடக்கலாம் உள்ளுக்குள்
பூட்டுகள் காவலுக்குத் தொங்கிக்கொண்டிருக்கும்

- விகடபாரதி


p36c_1536074180.jpg

எம்ஜிஆருக்காக அழும் டிஎம்எஸ்!

நிலா உடன் வரும் நடுநிசிப் பயணத்தில்
இயர் போனின் வழி செவிகளுக்குள் கசிகிறது
`ஓடும் மேகங்களே...' என
`ஆயிரத்தில் ஒருவன்' எம்ஜிஆருக்காக
டிஎம்எஸ் சோகக் குரல் தந்த பாடல்.
கடந்துபோகும் மேகங்களினிடையே
கள்ளன்-போலீஸ் விளையாடும் பாவனையில்
ஒளிந்து வெளிப்பட்டு
புன்னகையோடு வருகிறது நிலா.
கண்ணெதிரே விரிந்திருக்கும் கரிய வானத்தில்
கைதட்டி உற்சாகமூட்டும்
மழலைகளின் வடிவமாய்
கண்சிமிட்டிக் குதூகலிக்கின்றன விண்மீன்கள்.
`நான் காற்று வாங்கப்போனேன்...' என
`கலங்கரை விளக்கு' எம்ஜிஆருக்காக டிஎம்எஸ்
அடுத்து குரல்கொடுக்கத் தொடங்கியிருக்க
இப்போது நிலாவோடு சில மேகங்களும்
கேட்டபடியே உடன் வருகின்றன.
டிஎம்எஸ் குரல்வழி தொடரும்
எம்ஜிஆர் சோகப்பாடல்களில்
இறுதிப் பாடல் நிறைவடையும் தருவாயில்
வலிதாளாத மேகங்கள் ஒன்றுதிரண்டு
அடக்க முடியாமல்
அடை மழையென அழத்தொடங்க
தெறிக்கும் துளிகளில் கலந்து விழுகின்றன
விம்மும் நிலாவும் விண்மீன்களும்
கைகளால் முகம் பொத்தி
வடிக்கும் கண்ணீரும்!

- பாப்பனப்பட்டு .வ.முருகன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p40a_1536666986.jpg

ஒற்றை நட்சத்திரம்

நம் நிமிடங்களின் வர்ணத்தூரிகைகளை எடுத்து
தனித்திருக்கும் இந்த நிமிடங்களின் மீது
வர்ணங்களைப் பூசுகிறேன்
இந்த நிமிடங்கள் அந்த நம் நிமிடங்களாகி
ஒருவருக்கொருவர் எதிரில் அமர்ந்து
பேசத் தொடங்குகிறோம்

குடையற்ற மழைக்காலச் சாலையை
அறைக்குள் அழைத்துவருகிறேன்
மழை கண்டதும் நீ என் கையைப் பிடித்தபடி
ஆடத் தொடங்குகிறாய்
நானும் உன்னோடு சேர்ந்து ஆடத் தொடங்குகிறேன்

சுவரில் ஒரு பேருந்தை வரைந்து
பயணமொன்றைத் தொடங்குகிறேன் உன்னோடு
ஜன்னலோர இருக்கை வேண்டுமென அமர்ந்த நீ
என் இடது தோள் சாய்ந்து உறங்கத் தொடங்குகிறாய்
பறந்து பறந்து என் முகத்தை இசைக்க ஆரம்பிக்கின்றன
உன் கூந்தல் இழைகள்

அறையின் தரையில் பூக்களை நட்டு
பூங்கா ஒன்றை சிருஷ்டிக்கிறேன்
அதே கல்லிருக்கையில் அமர்ந்தபடி
பொய்க்கோபம் காட்டுகிறாய்,
ஏன் இவ்வளவு தாமதமென?

அறையில் தண்ணீரை நிரப்பி அரபிக்கடலாக்குகிறேன்
நம் இருவருக்கு மட்டுமென வரும் படகொன்று
நம்மை ஏற்றிப்போகிறது கடலுக்குள்ளே
சற்றைக்கெல்லாம் வானமும் கடலும் ஒன்றாக
நாம் ஒற்றை நட்சத்திரமாகிறோம்!

- சௌவி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

துணை - கவிதை

 
இளம்பிறை

 

28p1_1535782308.jpg

சுமையற்று வைத்திருக்கவே விரும்புகிறேன்
எனது தோல் பையை
எப்போதும்.

குறிப்பேடுகள், மதிய உணவு,
தண்ணீர் பாட்டில், திறவுகோல் கொத்துகள்,
கைபேசி இப்படியாகக்
கனத்துப்போய் காலையிலேயே
அழுத்தத் தொடங்கிவிடுகிறதென் தோளினை...

மாலையில்
காய்கறி, பால், தின்பண்டமென
இன்னும் கூடுதல் சுமையுடன்
மனதைப்போலவே...

வீடு சேர்ந்ததும்
ஓய்வு கேட்டு மன்றாடும் உடலை
துக்கத்திற்குச் செல்லவும் அனுமதிக்காத
கருணையற்ற முதலாளியாக
வீட்டுப்பணி செய்ய
பணிக்கிறது மனசு.

இடையில்
கொட்டாவியுடன் வரும் உறக்கமோ
`நான் வரும்போது
நீ தூங்குவதில்லை' எனக்
கோபித்தபடி போய்விடுகிறது.

விழித்திருக்கிறேன்
றெக்கைகளில் பாறாங்கற்கள் கட்டப்பட்ட
பறவைகளின் கனவு
இன்றைக்கும் வரக்கூடும்
என்ற அச்சத்துடன்.

இளையராஜாவின்
இசைச் சிறகோடு
பறந்து களிக்கும் பழக்கத்துணையால்
இன்றைய நள்ளிரவிலும்
வெடிக்காமல் இருக்கிறது
என் இதயம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வெறுமை

காலை 5 மணிக்கே
அடிக்கும் அலாரம் இனி அடிக்காது
சாப்பிட வரும்போது
இரண்டு தட்டுகளை அம்மா
சுமக்க வேண்டாம்
பிரத்தேயமாக அவனுக்காக மட்டுமே
வாங்கிவரும் மினி ஜாங்கிரி,
இனி அப்பா வாங்கத் தேவையில்லை
சோப், ஷாம்பூ, பேஸ்ட் என எல்லாம்
ஒரு தனி கவரில் போட்டு வைத்துவிடலாம்
உடம்பு துடைத்துவிட்டு சோபாவின்
மீது அலங்கோலமாய் வீசப்பட்டிருக்கும்
துண்டுக்கு வேலையிருக்காது
அவனைக் கண்டாலே ஓடி ஒளியும்
பக்கத்து வீட்டு டாமி நாய்
தைரியமாக உலா வரலாம்
காலை குளித்தவுடன் அவன் அடிக்கும்
சென்ட் அலுங்காமல் குலுங்காமல் அலமாரியே கதியேன இருக்கும்
வாசலில் விடப்பட்டு இருக்கும்
ஆறு ஜோடி செருப்புகளும்
ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கும்
நிமிடத்துக்கு ஒருமுறை
இசையருவிக்கும் சன் மியூசிக்குக்கும்
தாவிக்கொண்டே இருக்கும் டிவி
மாற்றுப் பொத்தானை யாராவது
அழுத்தும் வரை சன் டிவி-யிலே கிடக்கும்
காதலியின் ஞாபகத்தைவிட
கனக்கிறது
வெளியூருக்கு வேலைக்குப் போன
தம்பியின் ஞாபகம்!

- கலசப்பாக்கம் சீனு

 


யானைக்காடு

குழைத்து
உறவு சேர்த்த களிமண்ணில்
யானை செய்தாள் சின்ன மகள்.
 
தும்பிக்கை அளவும்
காதுகளின் அழகும்
காடுகளில் பயணிக்கவைத்தன.
 
ஆணா பெண்ணா என
சந்தேகம் கேட்க,
திடுக்கிட்டவள்
உருவத்தைக் கலைக்கிறாள்.

பிறிதொரு நாளில்
மழையில் கரைந்து
மண் இடம் மாறி
காட்டை அடைகிறது.

கூட்டமாய் வந்த
யானைகளில்
குட்டியானை
அந்த மண்ணை நுகர்ந்து
பிளிறுகிறது.

குட்டியானையின்
கால்களில் அப்பிய மண்
காடெங்கும் பரவி
யானைகளை உண்டாக்கியது.

நேற்று முதல்
அந்தக் காட்டை
எல்லோரும் அழைக்கிறார்கள்
`யானைக்காடு’ என்று.

- செஞ்சி தமிழினியன்

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

அறியாமை

ஆறு மாதங்கள் கழித்து
ஊருக்குப் போவதற்கு
பேருந்து நிறுத்தத்தில்
நெடுநேரமாய்க்
காத்திருக்கும்
தேநீர்க்கடைச்
சிறுவன் மீது
எச்சமிட்டுச்
செல்லும் பறவை
அறிந்திருக்க
வாய்ப்பில்லை
அவனுக்கு
இன்னொரு நல்ல
சட்டை இல்லை என்பதை.

- சௌவி
3.jpg
புகையும் துக்கம்

தேசியக்கவியின்
பெயர்கொண்ட தெருவில்
மெதுவாகச் செல்லும்
நீல நிற ஆம்னியில்
வயோதிகரின் சடலம்
மாலைகளோடு ஊர்கிறது
வண்டியின் பின்னால்
நான்கைந்து
இரு சக்கர வாகனங்களில்
இருவர் மூவர் என
ஆழ்ந்த மௌனங்களுடன்
பின்தொடர்கிறார்கள்
யாருடைய முகங்களிலும்
சிறு துக்கமோ வருத்தமோ
எட்டிப்பார்க்கும்
கண்ணீரோ துளியுமில்லை
உருளும் இருசக்கர
வாகனங்களின்
புகைபோக்கியில்
ஊமையாய் கசிந்து
கொண்டிருக்கிறது
முகமறியா கேவல் ஒன்று.

- வலங்கைமான் நூர்தீன்

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14222&id1=68&issue=20180921

Link to comment
Share on other sites

சொல்வனம்

 
ஓவியங்கள்: செந்தில்

 

p20a_1537287167.jpg

கோல விடியல்

சாலையில் விரைந்துகொண்டிருக்கும் வாகனங்களைத்
துரத்திக்கொண்டிருக்கும் நாய்க்கு
இப்போதைக்கு எந்த இலக்குமில்லை
விரையும் வாகனங்களைத் தவிர

யாரோவால் நடப்பட்டு
யாரோவால் தண்ணீர் பாய்ச்சப்பட்டு
யாரோவால் அறுக்கப்பட்டு
யாரோவால் பாரமேற்றி அனுப்பப்பட்ட வைக்கோலொன்று
எடுப்பதற்கு யார் ஒருவரும் இல்லாமல்
தனியே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது சாலையில்

கடையில் வடை வாங்கி
தினம்தோறும் ஒரு துண்டை விண்டு வீசும்
பரோபகாரிக்காக
வாகனங்கள் எழுப்பிப்போகும் தூசுகளுக்கிடையே
காத்திருக்கிறது காகமொன்று

இன்னும் திறக்கப்படாத கடைகளின் கதவுகளில்
ஒட்டியிருக்கும் மண்ணில்
ஒட்டிக்கொண்டிருக்கும் பழைய பாதங்கள்
புதிதாய் மாறிக்கொண்டேயிருக்கும்
பழைய வீதியில் இறங்கி நடக்கின்றன

ஆரம்பித்துவிட்ட வாகன இரைச்சல்களுக்கு நடுவிலும்
கிளம்பி அடங்கும் தூசுகளுக்கு நடுவிலும்
அவ்வளவு தெளிவாய் அழகாய் மலரும் கோலமொன்று
தன் வெள்ளை மொழிகளால் ஏற்றுகிறது
விடியலொன்றை அத்தனை மனங்களிலும்

- சௌவி


p20b_1537287184.jpg

டயறியிலிருந்து...

வாசித்த சொற்கள் சிலவற்றை
எனது டயறியின் மய்யப் பகுதியில்
மூடிவைக்கிறேன்

நான் டயறியைத் திறந்து பார்க்கும்
மற்றொரு நாளில்
அவை வளர்ந்து
ஒரு பூனைக்குட்டியாகவோ
ஓர் அணில்பிள்ளையாகவோ
என்னைச் சந்திக்க வேண்டும் என்பது
எனது மனதின் இயங்குதல்

அதை
ஒருநாள் திறந்து பார்க்க
டயறியிலிருந்து
வினோத மிருகம் ஒன்று வெளியேறியது

பிறகு
அந்த மிருகம்
எனக்குள் வளர்ந்த
பூனைக்குட்டியையும்
அணில்பிள்ளையையும்
தின்னத் தொடங்கியது.

வழமைபோல் வாசித்துவிட்டு
இக்கவிதையையும் மறந்துவிடுங்கள்.

- ஏ.நஸ்புள்ளாஹ்


p20c_1537287203.jpg

மேசை மூங்கில்

நீண்ட விடுப்பில் சென்று திரும்பிய ஒருநாள்
அலுவல மேசையின் நிறம் மாறியிருந்தது
மென்சிவப்பிலிருந்து
அடர்நீலத்தைப்  போர்த்தியிருந்தன
பொய்ச்சுவர்களும் தடுப்புகளும்.
மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கான ரசீதுகளை
சரிபார்த்தபடி வாங்கிச் செல்கிறாள்
மனிதவள  அலுவலர் ஒருத்தி...
இயந்திரப் புன்னகையோடு.
போலியான நல விசாரிப்புகளை எதிர்கொண்டு
நாடகமொன்றை ஒவ்வொருவருக்கும் அரங்கேற்றிய பின்
கணினியை மெதுவாய் உயிர்ப்பிக்கிறேன்... மெல்லிய சிணுங்கலோடு
விழி திறக்க... மின்னஞ்சல் விசாரிப்புகள்... சாவிலிருந்து மீண்டதைப் பற்றி... சிலருக்கு அது தத்தமது முன்னெச்சரிக்கைகள்.
பலருக்கு... அதுவும் ஓர் அலுவலகக் கடன்!
இப்போதுதான் கவனிக்கிறேன்... மேசையில்
சிறிய கண்ணாடிப்பேழையில் வைத்திருந்த
சீன மூங்கில் செடியைக் காணவில்லை!
மீளவே போவதில்லை எனக் கணித்தார்களோ..?

- அனலோன்


p20d_1537287222.jpg

ஒரு மீன்

வீட்டைக் காலிசெய்கிறார்கள்
கடைசியாக மீன்களைப் பையில் பிடித்துக்கொண்டு
கடலைக் கவிழ்க்கிறார்கள்
திகைப்பினிடையே
ஒரு வார்த்தை வரவில்லை
வாய் மட்டும் அசைந்தபடியிருக்கிறது
ஒரு மீனுக்கு.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.