Sign in to follow this  
நவீனன்

கவிதைகள்

Recommended Posts

பலா

மாமரக் கூந்தலில் மலர்களைக் கண்டவுடன்
பாட்டி கூறத் தொடங்குவாள்,
‘மா பெருகினால் புளி குறையும்
புளி குறைந்தால் மா நிறையும்
இந்த வருஷம் பலா எப்படியோ ?’
வீட்டுக்கும் கொல்லைக்கும் நடக்கும்போதெல்லாம்
அம்மா ஏசுகிறாள்
இனிப்பில்லா பலா மரத்தைப்பார்த்து,
‘ஒரு மூட்டை சர்க்கரையை வேரில் கொட்டிப்பாரேன்’
நமட்டுச் சிரிப்போடு நகரும் அப்பா.
‘பிஞ்ச செருப்பக் கட்டித் தொங்கவிடலாம்
ரோஷம் வந்து நல்லதா காய்க்கும்’
இது தாத்தா.
இந்த வருஷம் நல்லாயில்லேன்னா வெட்டிடலாம்
இதுகளையே சாப்பிட்டு அலுத்து
கொடுக்காப்புளி கனவோடு நான்.

- செ.பராந்தகன்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

38p1_1526881860.jpg

விடுபட்டவரின் வார்த்தைகள்

இந்த வார்த்தைகள்
உங்களை விடுவித்து விட்டால்
அதற்கு யாரும் பொறுப்பு கிடையாது
விடுபடுவது அவரவர் விருப்பம்
வார்த்தைகள் சாவியைத் தருகின்றன
பூட்டுகள் உங்களிடம் இருக்கின்றன
திறந்து விடுபடுவதும்
விடுபடாமல் இருப்பதும்
அவரவர் பிரச்சனை
திறந்த பூட்டுகளைத் தூக்கி எறிவதைத் தவிர
வேறு என்ன வழி இருக்க முடியும்?
பூட்டுகள் அவரவர் வசமே இருக்க வேண்டும் என்றால்
திறக்காதீர்கள்
விடுபட்டபின் அங்கே எதுவுமில்லை
பூட்டுகளோடு இருக்கும்போதோ
அவரவர்க்கென்று ஒரு சிறை இருக்கிறது
விடுபட்டவரின் வார்த்தைகளை
எப்போதும் கவனமாகப் பரிசீலியுங்கள்

 - விகடபாரதி

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

தொலைந்துபோன கதை...

நினைக்கும்போதெல்லாம்
ஊறிய கதைகளை
கூறிக்கொண்டிருந்தார்கள்
தாத்தா பாட்டிகள்..
தங்களுக்குத் தெரிந்த
ஒன்றிரண்டு கதைகளைக்
கேட்கும்போதெல்லாம்
திரும்ப திரும்ப சொல்லித்
திருப்திகொண்டார்கள்
அம்மா அப்பாக்கள்.
கதைகளைத் தொலைத்துவிட்ட நாம்தான்
குழந்தைகளைப் போட்டு
நச்சரித்துக்கொண்டிருக்கிறோம்..
‘ரைம்ஸ் சொல்லு..
பாட்டுப் பாடு’ என.

 - சாமி கிரிஷ்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

தோராயமான பிறந்தநாள்

வெவரம் வந்ததுக்கப்புறம்
‘என் பொறந்த நாளு எப்போ?’னு
அம்மாகிட்ட கேட்டதுக்கு
‘உன் பொறந்த நாள
உங்கப்பன்தான்
எழுதி எரவானத்துல
சொருகி வெச்சாரு’ன்னு
அப்பனைக் கைகாட்ட,
அப்பாவோ
‘இல்லடா அது
தொலைஞ்சுபோச்சு’னு சொல்ல
ஆத்திரத்தில அப்பாவ
எதிரியாகவும்
கொலைக் குற்றவாளியாகவுமே
பார்த்துக்கொண்டிருந்தேன்...
அவரது உருவப்படத்தில்
தோற்றமும் மறைவும் எழுதும்போது
தோற்றத்திற்கான தேதியைத்
தோராயமாக நானே தீர்மானிக்கும்வரை...

-திரு வெங்கட்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

முன்னாள் காதலன்

 

கவிதை: லீனா மணிமேகலை - ஓவியம்: செந்தில்

 

ப்படிப் போகிறது
உன் காதல் வாழ்வு
என்ற என் கேள்விக்கு
மையமாக முறுவலித்தான்
என் முன்னாள் காதலன்
உனக்கு? என்று திருப்பிக் கேட்ட அவனுக்கு
“நிறைவு” என்று அவன் கண்கள்
துணுக்குறுவதைப் பார்க்கும் வரை
சொல்லிவிட்டு
இனி எஞ்சிய வாழ்வை ஓட்டிவிடலாம் என்றேன் .

இரண்டு கோப்பை பியர்
உள்ளே இறங்கியிருந்தது.

அவளுக்குமுன் குடிக்க முடியாது என்றான்
உடம்புக்கு நல்லதுதானே என்றேன்
புகைப்பதையும் விட்டுவிட்டேன் என்றான் 
அவளுக்கு ஆஸ்துமா என்று கேள்விப்பட்டேன் என்றேன்

98p1_1527501976.jpg

உன் ரசம் சாப்பிட்டு நாளாச்சு என
அவன் தொடங்கிய வாக்கியத்தை
நீ பாடும் பாட்டெல்லாம்
அப்பப்ப ஞாபகம் வரும் என முடித்து வைத்தேன்

பிறகு மௌனம்
தனித் தனியான எங்கள் மௌனத்தில்
ஒன்றிணைந்த நினைவுகளின் இரைச்சல்

உன் இன்ஸ்டாகிராமில்
நீ வளர்க்கும் பூனையைச் சந்தித்தேன் 
அரைப் புன்னகையுடன் சொன்னான்
உனக்குப் பிடித்த ரோஸ் செம்பருத்தி பூத்தது
பதிவு போட்டேன், மனசில்லை, நீக்கிட்டேன் 
தலை நிமிராமல் சொன்னேன்.

கோபத்தில் ஒருநாள்
அனுப்பிக்கொண்ட குறுஞ்செய்திகளை
ஒன்றுவிடாமல்
அழித்துவிட்டதாகச் சொன்னபோது
அவன் நெற்றி சுருங்கியது
எழுதிக்கொண்ட ஆயிரத்து சொச்சம்
மெயில்களையும் கடவுச்சொல் போட்ட கோப்பில்
சேமித்துவைத்திருக்கிறேன் 
தோன்றும்போது ரகசியமாக வாசிப்பேன்
என்றபோது
கடித்துத் துப்ப நகம் இல்லாமல்
விரலில் ரத்தம் கசிந்தது

கலவி, காபி என அன்றாடங்களில்
வாய் வரை வந்துவிடும் பெயரை
எச்சில்கூட்டி விழுங்குவது போன்ற
சங்கடங்களை இருவருமே பேசிக்கொள்ளவில்லை

மகிழ்ச்சியா இருக்கியா
ஒரே குரலில் ஒரே நேரத்தில்
கேட்டுக்கொண்ட போது
உணவும் மதுவும் மாலையும்
செறித்து உடல்கள் வியர்த்துவிட்டன

அவன் கைப்பேசியில் இருபது ‘மிஸ்டு கால்ஸ்’
என் கைப்பேசியில் பத்தொன்பது
‘நோட்டிபிகேஷன்ஸ்’

என் முன்பற்களுக்கு நடுவே இடைவெளி
அதிகமாயிருப்பதாய் அவனும்
அவன் மூக்கு முடியில் நரை
விழுந்திருப்பதாய் நானும்
சுட்டிக்காட்டி, சிரித்துக்கொண்டே
விடைபெற்றோம்

பிரிவு வந்தால்
கடலுக்குள் கைகோத்து நடந்துபோய்ச் சாவோம்
என்று சொல்லிக்கொண்டவர்கள் 
காலத்திற்குள் கைவிலக்கி நடந்துபோய்
அவரவர் வாழ்வுக்குத் திரும்பினோம்.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

வினைப்பயன்

மேகங்களைத் துடைத்து
நீலம்பூத்து நிற்கிறது வானம்
நெகிழிக் கழிவுகளால்
சுருண்டு கிடக்கிறது
மணல் சுரண்டிய ஆறு
வற்றிய ஏரியில்
காய்ந்து மிதக்கிறது
மீன்களின் கனவுகள்
கால்வாயில் நீர் தேடி ஓடி
சுடுமண்ணைக் குடித்து
காய்ந்த சருகுகளைத்
தழைக்கவிடுகிறது
கோரைப்புற்கள்
வளைக்குள் வாழும்
எலிகளும் நண்டுகளும்
கொறித்துக்கொண்டிருக்கின்றன
கோரப்பசிகளை
விட்டேத்தியாக களத்துமேட்டில்
நிற்கும் ஒற்றை வேம்பு
காற்றில் சலசலக்கிறது
பறவைகளில்லாப் பெருந்துயரை
உழவுத்தடம் மறைந்த
கொடும்பாலையாகத் திரிந்த
மருதமண்ணில்
உறிஞ்சும் சீற்றத்தோடு
இறங்குகிறது எரிவாயு வாகனம்
ஏதோ ஒரு காலத்தில்
உழுது தேய்ந்த மாட்டின் லாடம்
பதம்பார்க்க
நிலைகுலைந்த வாகனத்தின்
சக்கரத்திலிருந்து
பெரும் வெடிச்சத்தத்துடன்
வெளியேறியது
நஞ்சுண்டு செத்த
உழவனின் ஏக்கப் பெருமூச்சு.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

கோடையின் நெடுந்துயர்

தூரத்தில் அகவும்
மயிலின் பசியிலிருந்து
விரக்தியோடு விடிகிறது
கோடையின் ஒரு பகல்
விளைநிலங்களில் இடப்பட்ட
காய்ந்த வரட்டிகளில்
கோவர்த்தன மலையென
பதுங்கி வாழ்கின்றன எறும்புகள்
கருவேலமரத்தின்
முள் நுனிகளிலிருந்துதான்
வெயில் பரவுகிறதென்ற
சந்தேகம் எனக்கு என்றும் உண்டு
வரப்பில் தனித்துக்கிடக்கும்
வயல் நண்டின் ஒற்றைக் கால்
மூன்று ஆண்டுகளுக்கு
முற்பட்டதாக இருக்கலாம்
பசுமையே இல்லையென்று
அப்படியொன்றும் சொல்லிவிட முடியாது
நேற்றைய மண்டகப்படிதாரர்கள்
அம்பாளுக்கு அணிவித்தது
பச்சை வண்ணப் பட்டுதான்.


- யாழிசை மணிவண்ணன்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

வெயிலோடும் நிழலோடும்...

என் விரல்களின் மீது ஊர்ந்துகொண்டிருந்த
ஒரு வரியை எடுத்து வெயிலில் போட்டிருக்கிறேன்
இன்னொரு வரியை எடுத்து
மர நிழலில் போட்டிருக்கிறேன்

வெயிலில் போடப்பட்ட வரி
என் மீது சாபங்களை எழுதிக்கொண்டிருக்கிறது
நிழலில் போடப்பட்ட வரி
என் மீது ஆசீர்வாதங்களை எழுதிக்கொண்டிருக்கிறது

நிழலில் போடப்பட்ட வரி
நிழல் முழுவதையும் மெள்ள மெள்ள ஆக்கிரமித்து
தனதென்று பிரகடனப்படுத்திக்கொண்டு
மற்ற யாரையும் நிழலுக்குள் அனுமதிக்க மறுக்கிறது

வெயிலில் போடப்பட்ட வரி
எங்கெங்கோ ஒதுங்க வழி பார்த்து முடியாமல்
கறுத்துப்போய்
வெயிலோடு சிநேகமாகிவிட்டது
இப்போது எல்லா வெயிலையும்
அது தனதென்றே எழுதப் பழகிக்கொண்டது

நிழலில் பழகிய வரி
நிழல்களைத் தேடிக்கொண்டேயிருக்கிறது
நிழல்களைத் திருடுபவர்கள் வரும்போதெல்லாம்
ஓர் அழுகுரலோடு
இன்னொரு நிழலைத் தேடி ஓடுகிறது

வெயிலில் போடப்பட்ட வரியின் வாழ்வு
சகஜமாகிவிட்டது
நிழலில் போடப்பட்ட வரியோ
இன்னமும் நிலையாகாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறது

- சௌவி

74p1_1528272323.jpg

அரைவட்டக் கிளிஞ்சல்

கடல் பார்க்கப் போயிருந்த சிறுமி
கரையில் அமர்ந்து
கைகளால் மணலை அளந்தபோது
விரல்களில் சிக்கிய
பழுப்பு நிற
அரைவட்டக் கிளிஞ்சல் ஒன்றை
நெடுநேரம் உள்ளங்கையில் வைத்து
அழகு பார்த்துப் பின்
எதையோ நினைத்தவளாய்க்
கடலில் வீசியெறிந்து திரும்பினாள்
தேடும் அலைகளின்
தேவையைத் தீர்த்துவைத்த நிம்மதியில்!

- தி.சிவசங்கரி

 பயணம்

பிரார்த்தனையின் நெடிய கணங்களில்
உக்கிரம்மிகுந்த
சன்னதப் பெண்ணாக
சுடர்க் கூந்தல் விரித்து
ஆடத் துவங்குகிறது தீபம்.
காற்றின் திசைக்கெல்லாம் திரும்பி
படபடக்கிறது.
எரிந்தடங்கும் இறுதிக்கணத்தில்
வேண்டுதல்களின் பட்டியலைச்
சேகரித்துக்கொண்டு
கடவுளிடம் பயணப்படுகிறது.

- தமிழ்த்தென்றல்

கொள்கை முரண்...

எப்போதும்
ஜீவகாருண்யம் குறித்தே
பேசித் திரியும் அந்த அன்பர்,
குறைந்தபட்சம்
தன் வீட்டு சுற்றுச்சுவரில்
பதித்திருக்கும்
கூரிய பாட்டில்
சில்லுகளையேனும் தவிர்த்திருக்கலாம்.
வந்தமரத் துடிக்கும்
சிறு பறவைகளுக்காக..!

- வே.முத்துக்குமார்

https://www.vikatan.com/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆதி நிறம்!

நேற்று சில நட்சத்திரங்களைக்
கடந்து செல்லக் கிடைத்தது
கடந்து செல்லும்போது
சில மலைகளையும்
சில மேகங்களையும்
கடந்து செல்லவேண்டியிருந்தது
யார் யாரோ யோசிக்கலாம்
இப்படிக் கடந்து செல்லும்போது
நான் யாரென!
நான் பறவை என்பதா
நான் காற்று என்பதா

ஆழத்தின் அறிதலை
மனப்பேழை நிரப்பி
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
சில நேரம்
குகை ஒன்றுக்குள்
ஓவியமாய் இருக்கிறேன்
சில நேரம்
ஆதி நிறத்தின்
வண்ணமாய் இருக்கிறேன்
சில நேரம்
சலனங்களைப் பருகிய
பெருங்கடலாய் இருக்கிறேன்
நான் யார் என்பதை
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
உங்களது ஒவ்வொரு முடிவிலும்
காலத்தையும் வாழ்வையும்
கடந்து செல்கிறேன் நான்.


- சாமி கிரிஷ்

20p1_1528708191.jpg

வேண்டுதல்

மேற்கூரையில் அமர்ந்து
விடியலைக் கூவியெழுப்பும் சேவல்
குப்பைமேடு கிளறி
ஒழுங்கீனம் செய்கிறது
குடிசைக்குள் ஊடுருவும்
ஊர்வன ஜந்துக்களை
விரட்டிக் கொல்கிறது
மும்மாரி பொழிந்து
பட்டி பெருக
அம்மனுக்குத் தாத்தா நேர்ந்துவிட்ட
சேவல் அது.
மழை இல்லாமல்
விளைநிலங்கள் வெடிப்பதைக்
காணச் சகிக்காமல்
மாரடைப்பில் உயிர்நீத்தார் தாத்தா
வீட்டின் தாழ்வாரத்தில் செருகிய
சேவல் இறகு மட்டும் மிச்சமாய்...


- முகில் முருகேசன் 

அஃறிணை அறிதல்!

தேடிப் பிடித்த கறுப்புக் கோழியைத்
தூக்கிப் பார்த்து
மீண்டும் கூட்டுக்குள் விட்டுத் துழாவும் கையில்
செம்மண் நிறக் கோழி மாட்டுகிறது.

படபடக்கும் பக்கத்துக் கோழிகளின் சத்தம்
கம்பிகள் அடைத்த போர்க்களத்தை
நினைவூட்டுகிறது.
 
எடை போதாது
என உணர்ந்த கை
அதை விடுத்து
வேறு கோழி தேடுகிறது

இம்முறை கரும்பச்சை சிக்குகிறது.
அதீத எடை என யோசிக்கும் கை
யோசித்து நிற்கிறது
மீண்டும் துழாவும் அனுபவத்தில்
கச்சிதமாக சாம்பல் நிறக் கோழி மாட்டுகிறது

ஒன்று மாட்டும்போது மற்றவை
`கொக்க... கொக்க.. கொக்க... கொக்க...’ எனப்
பதறியடித்துக் கூட்டுக்குள்
மூலை தேடி ஒளியும் காட்சி
மரணம் பதைபதைக்கும் ரணம்!

மாட்டியதைக்
கதறக் கதற வெளியே எடுத்துக்
கூட்டை அடைத்த பிறகு
கூட்டுக்குள் கப் சிப்!

இப்போது கையில் அகப்பட்டிருப்பது
கோழியின் றெக்கையா,  என் றெக்கையா
என எழுந்த சந்தேகத்தில்
கோழியோடு சேர்ந்து
நானும் அலறுகிறேன்


- கவிஜி

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

கலாய் கவிதைகள்!

 
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

 

26p1_1529315843.jpg

`காலா?’
என்று கேட்டேன்
‘ ஆமா கால்!’ என்றார்
எந்தக் கால் 
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை!

- பிரேம்


26p2_1529315868.jpg

மரிக்கொழுந்து வாசம் வந்ததுமே
பாயசத்தைக் கொட்டியிருக்கலாம்
பாசம் நாக்கை மறைச்சிடுச்சு
நாட்டாமைக்கு!

- அம்பிகா


26p3_1529315888.jpg

ட்ரம்பும் கிம்முமே ஒண்ணாகிட்டாங்க.
நாம எப்போ பேரன்பே..?

- லவ் குரு


26p4_1529315900.jpg

பயணங்கள் முடிவதில்லை
என்பது போய்
பயணங்களில் முடிவதில்லை
என்றாகிவிட்டது
உடல்நிலை...!

- சஞ்சீவி பாரதி


26p5_1529315918.jpg

காதல் கவிதை
எழுதி அனுப்பினால்
கலாய் கவிதையாகப்
படித்துச் சிரிக்கிறாள்!

- எம்.விக்னேஷ்


26p6_1529315932.jpg

பெண்ணின் மனதைவிட
புரிந்துகொள்ளக் கடினம்
எல் போர்டு போட்டு
வண்டி ஓட்டுபவர் மனது.

- யாரோ


26p7_1529315945.jpg

காதலியின் கல்யாணத்துக்குப்
போட்டுச் செல்லும் ஆடை
மாடியில் காய்கிறது.
வெளியே அடைமழை!

- சமர்


26p8_1529315967.jpg

ஒன் சைடு பேப்பர்
ஒன் சைடு லவ்
இவற்றுக்குப் பின்னால்
இடம் காலி இருக்கிறது!

- எம்.விக்னேஷ்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

கருணை கசியும் கொலை

 
கவிதை: மனுஷ்ய புத்திரன் - ஓவியங்கள்: செந்தில்

 

‘என் மகனை
கருணைக்கொலை செய்துவிடுங்கள்'
என்று மன்றாடுகிறாள்
அற்புதம் அம்மாள்.

`என் மகனைத்
தூக்கு மேடையிலிருந்து
காப்பாற்றுங்கள்' என்று
மன்றாடிய
அதே அற்புதம் அம்மாள்.
இப்போது
‘என் மகனைக் கொன்றுவிடுங்கள்’
என்று கேட்கிறாள்

அற்புதம் அம்மாள்
தன் மகனுக்கு
அப்போது கேட்டது விடுதலை
இப்போது கேட்பதும் விடுதலை

64p1_1529390469.jpg

ஓர் அநீதியிலிருந்து விடுதலை
ஒரு காணச்சகியாத அவலத்திலிருந்து விடுதலை
ஓர் ஆறாத்துயரத்திலிருந்து விடுதலை
அடிவயிற்றில் பற்றி எரியும் நெருப்பிலிருந்து விடுதலை
மீளமுடியாத கொடுங்கனவிலிருந்து விடுதலை
துடைத்துத் தீராத கண்ணீரிலிருந்து விடுதலை

மரணத்தைவிடவும்
கொடிய மரணங்கள் இருக்கின்றன
தண்டனைகளை விடவும்
கொடிய தண்டனைகள் இருக்கின்றன
ஒருவனைக் கொல்லவேண்டும் என்பதில்லை
ஆனால் அழிக்கலாம்
நிதானமாக
எந்தக் குழப்பமும் இல்லாமல்

சட்டத்தின் சிலந்தி வலைக்குள்
தன் மகனை ஒப்புக்கொடுத்தாள்
அற்புதம் அம்மாள்.
நீதியின் புதிர்ப் பாதைகளுக்குள்
அவளுக்கு வழி தவறிவிட்டது
எங்கும் போய்ச் சேராத கருணையின் இருட்டில்
மீட்சியின் திசைகள்
அவளுக்குப் புலப்படவில்லை
இருபத்தேழு வருடங்களாக
வீடு திரும்பாத மகனுக்காக
சிறிய மெழுகுவத்திகளின் துணையுடன்
காத்திருக்கிறாள் அற்புதம் அம்மாள்.
அவள் மகனுக்குப் பின்
நிறையபேர் குற்றம் சாட்டப்பட்டார்கள்
நிறையபேர் விடுதலையானார்கள்
நிறையபேருக்கு
நிறைய கருணை கிடைத்தது
மனிதர்களைக் கொன்றவர்கள்
மானைக்கொன்றவர்கள்
ஆயுதங்களை விநியோகித்தவர்கள்
கலவரங்களில் கர்ப்பத்திலிருந்த
சிசுவைக் கீறியவர்கள்
வெடிகுண்டுகளைப் பற்றவைத்தவர்கள்
துப்பாக்கி ஏந்திய சன்னியாசிகள்
என இந்த தேசத்தில்
அனைவர்மீதும்
கருணை வெள்ளமாக ஓடியது.

64p2_1529390574.jpg

அற்புதம் அம்மாள் மகன்
நீதியின் புதைசேற்றில்
சிக்கிக்கொண்டுவிட்டான்
கொஞ்சம் கொஞ்சமாக
அவனது தலை வரை மூழ்கிவிட்டான்
அந்தக் காட்சியை
அற்புதம் அம்மாளோடு சேர்ந்து
நாமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

அற்புதம் அம்மாளுக்கு வயதாகிவிட்டது
அற்புதம் அம்மாளின் மகனுக்கும் வயதாகிவிட்டது
27 ஆண்டுகளில் இந்தியா எவ்வளவோ மாறிவிட்டது
ஸ்மார்ட் போன்கள்
அதிவேக இணையத் தொடர்புகள்
சமூக வலைதளங்கள்
24 மணி நேர தொலைக்காட்சிகள்
டிஜிட்டல் பணம்
பழைய ஆட்சிகள் போய்
புதிய ஆட்சிகள் வந்தன
பழைய தலைவர்கள் போய்
புதிய தலைவர்கள் வந்தார்கள்
பழைய தலைமுறைகள் கடந்து
புதிய தலைமுறைகள் வந்துவிட்டன
அற்புதம் அம்மாளின் மகனுக்கு
இதெல்லாம் எதுவும் தெரியாது
`நான் எதற்காக
இவ்வளவு காலம் இங்கே அடைக்கப்பட்டிருக்கிறேன்' என்ற
ஒரே கேள்வியை
அவன் இருபத்தேழு வருடங்களாக
சிந்தித்துக்கொண்டிருக்கிறான்.

64p3_1529390555.jpg

ஒன்பது வோல்ட் பேட்டரி
எதற்கு வாங்கப்பட்டது என
அவனுக்குத் தெரியாது
என்பதை நிரூபிக்க
ஏராளமான ஆவணங்கள்
இந்த இருபத்தேழு ஆண்டுகளில்
சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன
அவை நீதியரசர்களின் கழிவறையில்
குடியரசுத்தலைவர்களின் கழிவறையில்
டிஷ்யூ காகிதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

‘என் மகனைத்  தூக்குமேடையிலிருந்து காப்பாற்றுங்கள்' என்று கேட்ட
அதே அற்புதம் அம்மாள்தான் கேட்கிறாள்
`என் மகனைக்கொன்றுவிடுங்கள்' என்று.
நம்முடையதைப் போன்ற
ஒரு கொடுமையான காலம்
இனி வரப்போவதில்லை.

அற்புதம் அம்மாளின் மகனைக்
கருணைக்கொலை செய்துவிடுங்கள்
அது ஒரு நியாயமான தீர்வு
உங்கள் போலி நீதியைக் காப்பாற்ற
உங்கள் போலி மனசாட்சியைக் காப்பாற்ற
அதுதான் மிஞ்சியிருக்கும் ஒரே வழி

அற்புதம் அம்மாள்
தன் மகனுக்கு
அப்போது கேட்டது விடுதலை
இப்போது கேட்பதும் விடுதலை
அப்போது கேட்டதும் கருணை
இப்போது கேட்பதும் கருணை

உங்களுக்குத் தேவையான கொலையும்
அற்புதம் அம்மாளுக்குத் தேவையான கருணையும்
ஒரே நேரத்தில் நிகழும் அற்புதத் தருணம் இது.
அற்புதம் அம்மாளின் மகனைக்
கருணைக்கொலை செய்துவிடுங்கள்.

https://www.vikatan.com

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

சொல்வனம்

 
ஓவியங்கள்: செந்தில்

 

20p1_1529314166.jpg

அரூப ஊஞ்சல்

சடை சடையாய் விழுதுகள் தொங்க
ஆலமரங்கள் எதிர்ப்படும் சாலைகளில்
பயணிக்க நேரும்போதெல்லாம்
என்னிடமிருந்து கழன்றுகொள்ளும்
இளவயதுக் குறும்புக்காரி
அரூபமாய்த் தன் தோழிகளையும்
வரவழைத்துக்கொண்டு
ஊஞ்சலாடத் தொடங்கிவிடுவாள்.
குட்டிக்குட்டி விழுதுகளாய்
ரெட்டைஜடை அசைந்திட
முன்னும் பின்னுமாய்க் காற்றில்
மிதக்கத் தொடங்கிவிடுவோம்.
பறவைகளின் ஒலியொத்த
எங்களின் குதூகலக் குரல்கள்
வெளியெங்கும் எழும்பி நிறையும்.
இதற்கு முன் இவ்வாறு
ஆடியவர்களின் மாய பிம்பங்கள்
மனக்கண்ணில் மங்கலாய்த் தெரியும்.
இப்போதெல்லாம்
சாலை விரிவாக்கத்தில் சாய்க்கப்பட்ட
மரங்களைப் போலவே
அரூப ஊஞ்சல் ஆசையையும்
வேரோடு பிடுங்கியெறிந்து செல்லப்
பழகிக்கொள்கிறாள்.

- தி.சிவசங்கரி


20p2_1529314183.jpg

அவள்

கையளவு வானம் பூத்திருக்கும்
குளத்தங்கரையில்
புறாவின் சிறகு உலர்த்திய நீர்த்துளி
விழுவதில் துளிர்க்கிறது
மகிழ்நிலாவின் முகம்
அவள் தவளைக் கல்லெறிந்த
இந்தக் குளத்தில்
மீன்கள் அப்போதுபோலவே
இப்போதும் துள்ளிக் குதிக்கின்றன
கொக்குகளும் தட்டான்களும் வந்தமர்கின்றன
அடிவயிற்றிலிருந்து
மேலெழும்பும் குமிழ்களைப்போலோர்
உணர்வினைத் தரும் சின்னஞ்சிறு குமிழ்கள்
நீரின் ஆழத்திலிருந்து மேற்பரப்பில் வந்து
வெடிக்கின்றன
தலை கோதும் அவளின் ஸ்பரிசங்களும்
மூக்கை இழுத்து சேட்டைசெய்யும்
குறும்புத்தனமும்
ஒவ்வோர் இதயத்துடிப்பிற்கு இடையிலும்
வந்து வந்து போகின்றன
ஒரு பெருங்காட்டினை உள்ளடக்கிய
படர்மரத்தை நெடுஞ்சாலை
அமைக்கும் சாக்கில் பிடுங்கியெறிவதுபோல்
சாலையோரம் நின்றிருந்தவளை
அந்த அகோர வாகனம்
நசுக்கித் தூக்கி வீசிய இடத்தில்
துளிவிழுந்தெழும்
சிற்றலை எனக் குமுறுகிறது நெஞ்சம்.

  - கிருபா


20p3_1529314200.jpg

ஞாபகத் துயர்

யானைகளை மட்டும் விட்டுவிடுமா?
இந்த ஆற்றில்தான்
அதன் அந்திக் குளியல்

இந்தப் படித்துறைகள்தான்
அதன் புத்துணர்வு முகாம்கள்

பார்த்தேயிராத பகவானுக்காய்க்
குடத்தில்  சுமக்கையில்
இதன் பெயரே தீர்த்தங்கள்!

ஹோஸ் பைப் நீராடலும் 
ஷவர் குளியல் அபத்தங்களும்  
நீச்சல்குள அனுபவங்களும்
வாய்க்கப்பெற்ற
பரிதாபமான நவயுக யானையொன்று

வறண்டுபோன ஆற்றின்
மணலை அள்ளித்
தலையில் போட்டுக்கொண்டு 
நினைவின் நதியில் நீராடும்போது

பாழாய்ப்போன பழமொழி சொல்லும்
பைத்தியங்கள், அந்தப் பக்கமாய் வராதீர்கள்!

- ரா.பிரசன்னா


20p4_1529314217.jpg

ஊடலின் முடிவு

ஒரு சிறு சண்டைக்குப் பிறகான
கட்டாய இருசக்கரப் பயணம்...

இருபக்கம் கால்கள்
போட்டமரும் வழக்கம் மாறி
ஒரு பக்கமாய் அமர்கிறாய்...

வழக்கமான தோள் பிடியின்றி
கம்பிகளைக் கெட்டியாய்ப்
பிடித்துக்கொள்கிறாய்...
இருவருக்குமிடையேயான
இருக்கையின் இடைவெளியில்
ஒரு சிட்டுக்குருவி பறந்து போகிறது...

பக்கவாட்டுக் கண்ணாடியை
உன் முகம் பார்க்கத் திருப்பினால்
அதைப் பார்த்து நீ திரும்பிக்கொள்கிறாய்.

வாகன இரைச்சல்கள் மத்தியில்
உன் மெளனங்களை
உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கின்றன
என் காதுகள்.

திடீரெனக் குறுக்கே ஓடிவரும்
நாயைக் கண்டு அனிச்சையாய்
``பார்த்துங்க” என்ற உன் ஒற்றைச் சொல்
உடைத்தெறிந்துவிடுகிறது
மொத்த ஊடலையும்...

மெள்ள மீண்டெழுகிறது
மொத்த நேசமும்!

- பிரபுசங்கர்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

தேநீர் உரையாடல்

 
விஷ்ணுபுரம் சரவணன் - ஓவியம்: வேலு

 

தேநீர் நிரம்பிய காகிதக் கோப்பையோடு
பேருந்தில் ஏறியவள் என்னருகே அமர்ந்தாள்
யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல்
மனநல மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்
சட்டென்று மாறிய என் முகக்குறிப்புகளைக் கண்டு மெள்ள நகைத்தாள்

குளிரள்ளி வந்த கடுங்காற்றிலும்
ஒரு துளியும் தேநீர் சிந்திவிடாது
லாகவமாகக் கோப்பையை ஏந்தியிருந்தாள்

சிறுதூறலுடன் வானம் பேசத்தொடங்கியதும்
கோப்பையில் உதடுகளை அழுந்தப் பதித்து, சத்தத்துடன் தேநீரை உறிஞ்சினாள்
அவளின் கருவிழிப்படலத்தில் மென்மஞ்சள் பூக்கள் மிதந்தன

20p1_1529994812.jpg

துளிகளைப் பேருந்தினுள் அனுப்பும் மழையின் வித்தையை ரசித்தவள்
ஜன்னல் வழியே கோப்பையை நீட்டி
நிரப்பிக்கொண்டாள்
மீண்டும் பருகினாள்... பருகினாள்... பருகினாள்...

முகப்புக் கண்ணாடியின் வைப்பரில் அலையலையாய் நெளியும் மழைநீரை,
‘புணரத் தவிக்கும் பாம்புகள்’ என முணுமுணுத்தாள்

‘மருத்துவமனையில் எனக்குத் தரும் மாத்திரை நீலக்கலரில் இருக்கும் தெரியுமா?'
என்று கேட்டு, என் பதிலுக்காகக் காத்திருந்தாள்
நான் ‘தெரியாது' என்பதாகத் தலையாட்டினேன்.

‘நீலக்கலர்... பாம்பு நஞ்சின் நிறம்' என்றவள்
‘பாம்பின் விஷத்தை நீ பார்த்திருக்கிறாயா?' என்றாள்
நான் ‘இல்லை' என்றதும்
‘நானும் பார்த்ததில்லை' என்றாள் சிரிப்பொன்றுடன்

காதுகளை நீவிவிட்டுக்கொண்டாள்
கூதிர்கால மழையின் முழுக்குளுமையை ஏந்திக்கொள்ள

`நிர்வாணமாகத் தெருவில் நடப்பதைப் போலக் கனவு கண்டிருக்கிறாயா? என்றாள்
அவசரமாக ‘இல்லவே இல்லை' என்றேன்.
‘நன்கு யோசித்துச் சொல்' எனச் சொல்லி, கோப்பையின் ஆழத்தில் கிடந்த தேநீரை உறிஞ்சினாள்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து, `ஒருமுறை கனவில் அப்படி வந்தது' என்றேன்.
‘நல்ல சகுனம்தான்' என்றவாறே கோப்பையைத் தலைகீழாகத் திருப்பினாள்.
கடைசிச் சொட்டு தேநீர் கீழே சொட்டியது

தலையை உலுக்கிவிட்டு எழுந்து நின்றாள்
அந்த இடம் பேருந்து நிறுத்தம் இல்லை; ஓட்டுநர் திரும்பியும் பார்க்கவில்லை
ஆயினும்
அவள் எழுந்ததும் பேருந்தை நிறுத்தியிருந்தார்

அவள் நிதானமாக இறங்கி, சாலையோரம் அமர்ந்தாள்
நான் அவளைப் பார்த்தேன்
ஈறு தெரியச் சிரித்தவளின் கையிலிருந்த கோப்பையில்
தேநீர் நிரம்பியிருந்தது.

https://www.vikatan.com/

Share this post


Link to post
Share on other sites

அரூப செவிகள்

கடந்து போவோர் பற்றிய
அசூயை சிறிதும் இன்றி
அவன் ராஜாங்கத்துப் பேரரசனாய்
எதிர்ப்பார் எதிரே இல்லாமலேயே
வாள்வீச்சுகளென வார்த்தைகளை வீசிக்கொண்டிருக்கிறான்
மனம் பிறழ்ந்தவன்.
அப்போதெல்லாம் அரூபமாய்
பெரிய செவிகளிரண்டை
முளைக்க வைத்து
மிரட்சியோடு அவன் எதிரில்
தவறாமல் நிற்கிறது இப்பிரபஞ்சம்.

- எஸ்.ஜெயகாந்தி

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

மழைக்கு மூடும் வாசல் கதவு

பெருமழை நாளின் இரவில்
சூட்டுக் கொப்புளங்கள்
பூத்து வெடித்து அடங்கிக்
கலங்கிச் சேறாய் வீதியில் நகர்வதை
தாழ்வாரத்தில் அமர்ந்து
கண்டுகொண்டிருந்தாள் கிழவி.

ஒரு மின்னல் இறங்கி
வீதியில் நதி பிரவாகிக்கும்
பிரம்மையைத் தூவி மறைகிறது.

அடுத்தொரு பேரிடித் தொடர்
செவி மூடாது
உடல் நடுங்காது
ஒழுகிச் சொட்டும் நீரை
ஏந்துவதா விடுவதா
எனத் தீர்மானம் செய்ய ஏதுவாய்.

வெட்டுகிறது ஒரு
மின்னல் கொடி.

மழைக்கு மூடும் வாசல் கதவு
அத்தெருவில் இன்னும்
இல்லவே இல்லை.

- கோகுலா

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

தனிமை

விரித்த விழிகளுடன்
தெறித்த அருவாளுடன்
பத்தடிக்கு அமர்ந்திருக்கிறார்
அய்யனார்  

இன்னதென்று அறிந்தோ
அறியாமலோ கிச்சு கிச்சு மூட்டிக்
கொண்டிருக்கிறது
வழி மாறி மேலேறிய
கட்டெறும்பு ஒன்று

கூச்சம் தாங்காமல்
சுற்றும் முற்றும் பார்த்தபடி
வாய்விட்டு சிரிக்கத்
தொடங்குகிறார் அய்யனார்

மெள்ள கை நழுவிய
அருவாளைக் கண்டுகொள்ளாத
கால நேரம் அது  

காற்றோடு கலக்கத்
துவங்குகிறது
அரை நூற்றாண்டு தனிமை

அருவாள் இல்லாமல் சிரிக்கும்
அய்யனாரை
யாராவது கண்டால்
கண்டும் காணாமல் கடந்துவிடுங்கள்..!

- கவிஜி


பயணம்

கிராமத்தின் அதிகாலையைச் சுமந்தபடி
பர்ஃப்யூம் மணக்கும் நகரத்தின்
குகை வாயில் நுழைந்து கொண்டிருக்கிறேன்
திரும்புவதற்கு கருக்கல் ஆகலாம்
அல்லது முன்னிரவின் பிற்பாடு ஆகலாம்
ஆக வேண்டிய காரியத்தின் மீது காட்டிலும்
திரும்ப வேண்டியதன் மீதே
கவனம் அதிகம் பெறுகிற
இப்பயணம்
வழக்கம்போல் பத்தோடு பதினொண்ணு.


- கோவிந்த் பகவான்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

திருமணக் கனவுகள்

திருமணக் கனவுகளை
தூக்கிச் செல்கிறாள்
கன்னி ஒருத்தி
கனவுகள் அவளைப்போல
கருப்பும் வெள்ளையுமாகவே
இருந்தன
கலர் கனவுகள் காண
வழியில்லை அவளுக்கு
சில கனவுகள்
அவளுள் மலர்ந்ததுண்டு
அக்கனவை கலராக்க
காலம் கைகூடவில்லை
இறுதியில் கனவை
வந்த விலைக்கு
விற்றுவிட்டு
தலைச்சாயம்
பூசிக்கொள்கிறாள்.
 

- திருமதி பிரியா

8.jpg
நடை

நிதானமாய்
நடைபோடும்
தாத்தாவின்
பின்னங்கையிலிருந்து...
அவரை இழுத்து நடக்கும்
பேரனின் முன்னங்கால் வரை
தொடர்ந்து பயணிக்கிறது
தலைமுறை இடைவெளி!

http://www.kungumam.co.in/

Share this post


Link to post
Share on other sites

20p4_1530531639.jpg

பிரியாணிக்குள்ளிருந்து ஃபோர்க்

அந்த உயர்தர அசைவ உணவகத்தில்
ஃபோர்க் ஒன்றினால்
பசியைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கென
பிரியாணிக்குள்
தன் மடி உயிர்ப்பந்துடன்
அடக்கமாகியிருக்கும் கோழியின்
விசுவாசம் தேவைப்படுகிறது
எல்லோருக்கும்...
அதை நடிப்பால் தர இயலாதவை
பிரியாணிக்குள் புதைவதில்
என்ன ஏமாற்றம் இருக்க முடியும்?


 - ராம்பிரசாத்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

20p1_1530531600.jpg

நட்சத்திரத்தில் உறங்கிய பறவை

பறந்துவிடுவதற்கான முன் ஆயத்தம்
சிறகைத் தூசி தட்டி நிமிர்ந்து
சோம்பல் முறித்து எழுகிறது பறவை.
வானின் நீண்டவெளியில்
பூமியின் தூரத்தை மிஞ்சிய
அந்தப் பறவை
ஒரு சொல்லொன்றை ஆகாயத்திலிருந்து
உதிர்த்துவிடுகிறது.
அது மேகங்களில் மறைந்து
தாமதமாகக் கீழிறங்குகிறது.
பெருமலைகளில் மோதுண்டும்
பெருமரங்களில் மோதுண்டும்
நதிகளில் விழுந்து  நனைந்தும்
பூமிக்கு இறங்குகிறது.
அது உதிர்த்த சொல்லில் வடிந்த
குருதித் துளிகளின் தடயம்
கம்பளிப்பூச்சி வரைந்த கோடுகளைப்போல
ஓவியமானது.
தாமதத்தின் வெறுப்பை, பறவை
ஒரு சகாராவின் சூட்டைச் சுமக்கச் சொல்லி
அந்தச் சொல்லுக்குக் கட்டளையிடுகிறது.
மறுத்துவிடுகிற சொல்லை
ஆகாயத்துக்குப் புறப்படச் சொல்கிறது.
சொல் கடந்த தூரத்தைப் பறவை ஒத்திருந்தது.
இரவு, சொல்லையும் பறவையையும்
பிடித்துக்கொள்கிறது.
நட்சத்திரம் உறங்க அழைக்கிறது.
பறவை, சொல்லோடு தஞ்சம் புகுந்துகொள்கிறது
இப்போது பறவை தன் தூக்கத்தில்
அந்தச் சொல்லைப் பிரதி செய்கிறது
இயலாமையென!


- ஜே.பிரோஸ்கான்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites
 
 
E_1530856014.jpeg
 

பெண்ணின் பெருந்துயர்!

உறக்கத்தில் ஆழ்ந்திருந்த
யசோதரையை தவிக்க விட்டு
நள்ளிரவில் ஓடி
ஞானம் பெற்றான் புத்தன்!

எவரோ சொன்ன அவச்சொல்லுக்காய்
சீதையை நெருப்பில் இறக்கி
தன்னை
துாய்மைப்படுத்திக் கொண்டான் ராமன்!

இந்திரனின் பொய் கூவலுக்கு ஏமாந்து
நடு இரவில் குளிக்கப்போன கவுதம முனி
அகலிகையை கல்லாய் சபித்து
கவுரவம் காத்துக் கொண்டான்!

தனித்து இயங்கி
தன்னை விடவும்
உயர்ந்து விடக் கூடாதென்ற
உள்ளரசியலில் தான்
உமைக்கு இடபாகம் கொடுத்திருக்க வேண்டும்
சிவன்!

கஸ்துாரிபாயின்
தியாகமும் உழைப்புமின்றி
தேசத்தின் தந்தையாய்
உயர்ந்திருக்க முடியாது காந்தியால்!

சரித்திரம் புராணம் எதுவானாலும்
ஆணின் அத்தனை உயர்வுகளுக்கும்
பின்புலமாக இருந்திருக்கிறாள் பெண்
பெண்ணின் அத்தனைப்
பெருந்துயரங்களுக்கும்
காரணமாக இருந்திருக்கிறான், ஆண்!

http://www.dinamalar.com

Share this post


Link to post
Share on other sites

20p2_1530531611.jpg

வால் நீண்ட கதை

அவனது தற்கொலைக்குப் பிறகாக
முளைத்த கதைக்கு
கால்கள் மட்டுமல்ல
நீண்ட வாலும் இருந்தது
நள்ளிரவுத் தற்கொலைக்கு
முந்தைய சாயங்காலத்தில்
அவன் நீலநிறச் சட்டை அணிந்திருந்ததாக
அவள் சொன்னாள்
நீண்டநேரம் மொட்டைமாடியில்
நின்றுகொண்டு
வானத்தையே வெறித்துப்
பார்த்துக்கொண்டிருந்ததாக
இன்னொருத்தி சொன்னாள்
எப்போதும்போல் இல்லாமல்
அன்றைக்கு அவனது முகம்
பிரகாசமாக இருந்ததாக
விளக்குச்சரம் போட்டவள் சொன்னாள்
ஓரிரு தினங்களுக்கு முன்
அவ்வீட்டிற்கு சற்றும் சம்பந்தமில்லாத
ஒரு பெண்ணின் நிழல்
சமையலறை ஜன்னலில் தெரிந்ததாக
பின் வீட்டு டீச்சர் சொன்னபோதே
அக்கதையின் வால்
காலப் புதரின் பொந்துக்குள்
தன்னை இழுத்துக்கொள்ளத்
தொடங்கியிருந்தது


- வே.முத்துக்குமார்

20p3_1530531626.jpg

பிறக்காத மனிதர்களின் உரையாடல்

நான் மேகங்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறேன்
என்னையும் ஒரு வாசகனையும்
ஓர் இடத்தில் சந்திக்கவைக்கிறது
அங்கு மிக அருகில் பயணம் செய்யும் காற்று
நாங்கள் சந்தித்துக்கொண்டோம்
உரையாடல் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது
அதன் ஒலி ஒரு முத்தத்தைவிட மென்மையானது
சூரியன் வழக்கத்தை மீறி
குளிர்மையை அங்கு பரப்பியது
அது இரண்டு தேநீர்க் குவளையின்
வெப்பத்தைவிடக் குறைவானது
எமது தலைகளுக்கு மேலாக
வானம் சற்று நகரத் தொடங்கியது
அது மரபணுவில்
பின்னோக்கிச் செல்வதைப்போல் இருந்தது
இப்போது ஆதிக்குச் சென்றுவிட்டோம்
எனக்கும் வாசகனுக்கும்
தனித்தனிப் பாதைகள்
பூமியில் இன்னும் நாங்கள் பிறக்கவே இல்லை.


- ஏ.நஸ்புள்ளாஹ்

https://www.vikatan.com/

Share this post


Link to post
Share on other sites

இருத்தல்

 

எப்படி எல்லாம் தற்கொலை
செய்து கொள்ளலாம் என்பதை
அவன் பட்டியலிட்டான்
கயிற்றில் தொங்கலாம்
தண்டவாளங்களின்
நடுவில் நடந்து போய்
ரயில் மோதிச் சிதறலாம்
விஷமாத்திரைகள்
7.jpg
விழுங்கலாம்
கை நரம்புகள் அறுத்து
மரணம் வடிய முடியலாம்
மலை மீதிருந்து குதிக்கலாம்
கடல் இறங்கிக்
கரை மிதக்கலாம்
உண்ணா நோன்பிருந்து
மரணம் புசித்துப் போகலாம்
உடலில் எண்ணெய் ஊற்றித்
தீக்குச்சி உரசிப்
பற்றவைத்துக்கொள்ளலாம்...
இப்படி வரிசைப்படுத்தினான்
ஒருகணம் வாழ்ந்து
பார்த்துவிட வேண்டும் என
பொறிதட்ட வரிசை
இப்படி மாறியது
கயிற்றில் குழந்தை
போல் கொடிகளைக் கட்டி
வீட்டை அலங்கரித்தான்
போகும் ரயிலுக்குக்
கை அசைத்துவிட்டு
தண்டவாளத்தை முத்தமிட்டான்
விஷமாத்திரைகள் என்று
தாளில் எழுதி
ரப்பரால் அழித்து
ஊதித்தள்ளினான்
ஒரு கையில் பறவையும்
மறு கையில் வானமுமாக
பச்சைகுத்திக் கொண்டான்
மலை மீது ஏறி
காட்சிகள் பார்த்து
கண்களுக்குள் சேமித்தான்
வானத்துக்கும் அவனுக்கும்
இடையில் போன பறவையை
எட்டிப் பிடிக்கப் பார்த்தான்
நீச்சல் கற்றுக்கொண்டு
நீந்தி நீந்திக் கடலோடு
உரையாடினான்
அலைகளோடு அலையானான்
எல்லா இடங்களிலும்
எல்லா வகை உணவுகளையும்
ரசித்து ருசித்துச் சாப்பிட்டான்
எண்ணெய் ஊற்றித்
தீக்குச்சி உரசி
அழகான விளக்கேற்றி
எழுத அருகில்
சில தாள்களை வைத்தான்
அசையும் சுடரின்
தாளலயத்துக்கேற்ப
இருத்தல் பற்றி
எழுதத் தொடங்கினான்
 

- ராஜா சந்திரசேகர்

http://www.kungumam.co.in

Share this post


Link to post
Share on other sites

தலை புதைந்த கவிதை

விதைக்கான வார்த்தைகளைக்
கோர்க்கத் தொடங்கியபோது
தம்மைச் சுற்றி வரையப்படலாம்
எனச் சில சித்திரங்களைக்
கற்பனை செய்தன வார்த்தைகள்
சோளக்கொல்லை பொம்மையின் நினைவு
சோர்வு தந்தாலும்
அக்காக் குருவி படிமம் கவிதைக்குள் வந்தால்
அமர்ந்துகொள்ள இருந்து தொலையட்டுமென
சமாதானமாயின
பாம்புகள் படங்களாகவோ வரிகளிலோ
குறியீடுகளாக வந்த
குற்றஉணர்வுக் காலங்கள் மலையேறிவிட்டதால்
பயமில்லை என ஆசுவாசம்கொண்டன
பாவைக்கூத்துச் சித்திரங்கள்
பாவைகளாகவே இருந்தால் பரவாயில்லை
வாய் திறந்தே சொல்லிக்கொண்டன
வரிசையில் நின்று கூட்டிசையாய்
கையெழுத்து மட்டும் போதாமல்
படமும் வேண்டுமெனக்
கவிஞனோ ஆசிரியரோ ஆசைப்பட்டால்
நெருப்புக்கோழி படம் நிச்சயம்
என்று தலை புதைந்துகொண்டது
மண்ணுக்குள் கவிதை.

p30a_1530197352.jpg

பொறுப்புத் துறப்பு

யா
ரோ மூலிகை தேடி வந்தவன்
தன் கண்களையும்
முகர்ந்து பார்த்து எமாந்த
பெருமூச்சுகளையும்
புதரருகே விட்டுப் போயிருக்கிறான்
வண்டுகளை இரையெடுக்க வந்த
பச்சைப் பாம்பு
பெருமூச்சின் சீற்றமுணர்ந்து
மிரட்சியுடன் விலகி
மரக் கிளைகளில் ஏறுகிறது
தங்கள் வேனிற்கால
முட்டைகளை நினைத்து
காகங்கள் பயத்தோடு
புதிய கூடுகளைச் சுற்றி வந்து கரைகிறது
அதில் முட்டையிட்டிருக்கும் குயில்
வேம்பின் பச்சை இருளில்
ராகத்தோடு இசைத்துக்கொண்டிருக்கிறது
தன் பொறுப்புத் துறப்பை.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

உப்புக்குறவரின் துப்பாக்கி விசைப்பல்

 
கவிதை: வெய்யில் - ஓவியம்: செந்தில்

 

1
குடை ரிப்பேர்... குடை ரிப்பேர் என்று பாடிக்கொண்டு வந்தவருக்கு
இந்தக் கோடையின் முதல் மாதுளைச் சாற்றைப் பருகத் தந்தோம்
என் தந்தையின் பழுதுற்ற உயிர்மையை அவர் செப்பனிடத் தொடங்கினார்
அம்மா அவருக்கு ஒத்தாசையாக அருகிலேயே இருந்தாள்
அவளது வியர்வை அவ்வளவு மர்மமான வாசனைகொண்டிருந்தது
அக்காவும் நானும் ரிப்பேர்காரரின் பையிலிருந்த
சுத்தியலைக்கொண்டு எங்கள் உச்சந்தலையை
விளையாட்டாகத் திறந்தோம்
வீட்டைச் சுற்றி மழை பக்கவாட்டில் பெய்தது அன்று.


2
உப்புக்குறவர் ஒருவர்
பாலைப் பெரும்பொழுதில் ஊருக்கு வந்தார்
அவரது குடிசையை கழுதைகளை பிள்ளைகளை சாக்குகளை
எஃகுப் பாதையில் ஓர் ஊர்தி எடுத்துச் சென்றுவிட்டதாகக் கலங்கினார்
அதன் கூவல்
அவரது மூப்பனின் சாவுக்கேவலை ஒத்திருந்தது
நம்மால் என்ன முடியும்?
கொஞ்சம் ஆறுதல்சொல்லி
குறிபார்த்து அவர் துப்பாக்கி பழக
எங்கள் பிள்ளைகளின் தலைகளை அனுப்பிவைத்தோம்
பூச்சூடி.

20p1_1531136972.jpg

3
செத்த நாய் ஒன்று துரத்துகிறது
என்னைப் புதை என்னைப் புதை என்று.
அடியாழத்தில் ராஜபல்லக்கை
சிதைத்துக்கொண்டிருக்கின்றன யாழல்கள்.
அகழாய்வில் கிடைத்த எலும்புகளை
எப்படிச் சித்ரவதை செய்வதென்று
அரசுக்குத் தெரியவில்லை
மண் தனக்குள் நினைத்துக்கொண்டது,
“வரலாற்று ரகசியங்கள் பாஸ்பரஸைப் போன்றவை!”


4
ஆயிரங்கண் பானையை வனைந்துகொண்டிருக்கிறார் குயவர்
மறைந்திருந்து பார்க்கிறாள் அம்மன்.
மனைவியின் பழுதுற்ற கண்களை
நேர்ச்சைக் காசுகளோடு அவர் முடிந்துவைத்திருக்கும்
விளக்குமாடத்தையே சுற்றி சுற்றி வருகிறதொரு தாய்வண்டு.


5
ஓர் நுண்ணுயிரி
விரும்பியபடியே
யானையைத் தன் உணவுமேசைக்கு வரவழைத்துப் புசிக்கிறது.
அதில் எந்த மர்மமும் இல்லை என்கிறது விதி.
பற்களை இழுத்துச் செல்லும் எறும்புகள் கோக்கின்றன
மதயானையின் புன்னகையை.

20p2_1531136995.jpg

6
மேன்ஷன் அறை எண் 208-ல்
மான்குட்டி உறங்கிக்கொண்டிருக்கிறது
அழைப்புமணியை நகங்களால் பிராண்டும் புலிக்கு
காலம், ‘நண்பன்’ என்று பெயர்வைக்கிறது
உலகின் கருணையைச் செரிக்க இயலாது
டீக்கடையை நோக்கித் தன் இரைப்பையை ஏந்திப் போகிறான்
சர்க்கஸ் வீரன்.


7
எந்த நூற்றாண்டிலிருந்தோ கசியும் ரத்தம்
தலைமாட்டை நனைக்கிறது
எனது சிறிய கழனியை
ஒரு மண்புழுவின் வயிற்றில் பத்திரம்வைத்திருக்கிறேன்
நடுகல்லைப் பின்னிக்கிடக்கிறது கருஞ்சாரை
நேர்ச்சைக் கிடாய் அந்தியை வெறித்து நிற்கிறது
நம் குறுவாள் வரலாற்றில் தொலைந்துபோனது.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

சிங்கார் சாந்து

இன்னமும்
கட கடயா
அலஞ்சுகிட்டிருக்கன்

ஐடெக்ஸ் மை டப்பா ஒண்ணு
கரும்பச்சக் கண்ணாடி வளையல் ஒரு டசன்
ஜாதிமல்லி அஞ்சு மொழம்
வசந்தபவன்ல
நெய் மைசூர்பா கால் கிலோ

ஃப்ரேம்ல இருந்து ஒதுங்கிடுச்சின்னு
‘கண்ணா ஆப்டிக்கல்ஸ்’ல கொடுத்திருந்த
ரெட்டை லென்ஸ் கண்ணாடியும்
வாங்கியாச்சு

பாக்கு கலர்
சிங்கார் சாந்து மட்டும்
எங்கயும் கிடைக்கவேயில்ல
கடசியா
`ராஜா நாவல்டீஸ்’ல ஒரு எட்டு
பார்த்துடலாம்னு போனா
`அதலாம் ஓடறதில்லப்பா.
இப்பலாம் யாரு வெக்கிறாங்க?’னு
சொல்லிட்டாங்க

94p1_1531137227.jpg

படயல் போட்டு
கல்பூரம் ஏத்த
குச்சிய ஒரசினா
ஒண்ணுகூடப் பத்தல
நெல்லு வெளக்குல இருந்து
ஒருவழியா கல்பூரம் ஏத்தியாச்சு

தேங்காய ஒடச்சா
மூலியாப்போச்சு
`அது ஒண்ணும் இல்லடா...
முருகல் காய்’னு
பெரியம்மா தேத்திவிட்டாங்க

ஆனா,
எனக்குத்தானே தெரியும்
எத்தன தடவ கொட்டு வாங்கியிருக்கன்

மன்னிச்சுடுமா
அடுத்தமுற எப்படியாவது
சிங்கார் சாந்து வாங்கியாந்துர்றேன்னு
நெடுஞ்சாண்கிடையா விழுந்தா
போட்டாவுக்குப் பின்னாடி இருந்து
உத்தரவு குடுக்கிறாங்க.

- இயற்கைசிவம்


பிறழ்வு

மனம் பிறழ்ந்த
அந்த முதிர் வயதுக்காரி
உடலெல்லாம் வாய் இருப்பதுபோல்
நினைத்துக்கொண்டு
யார் கடந்து போகையிலும்
உமிழ்வாள்.
எனக்குத்தான்
குழந்தை கக்குவதைப்போலிருக்கும்.

 - தோழன் பிரபா


ஒவ்வொரு முறையும்

உன் ஆடைகளைத்
துவைக்கும்போதும்
வேறோர் உலகத்திற்குச்
சென்றுவிடுகிறேன் நான்...

யாருமற்ற அப்பொழுதுகளில்
உன்னாடைகளில் உள்ள
வியர்வை நெடியும்
சிகரெட் துகள்களும்
மது வாசனையும்
போதுமானதாக இருக்கின்றன
உன் இருப்பைக் காட்டிக்கொள்ள...

நீ வைத்த சூடுகள்
நீ பேசிய கடுஞ்சொற்கள்
நீ செய்த உதாசீனங்கள்
நீ பார்த்த ஏளனப்பார்வைகள்
நீ அடித்த அடிகள்
என ஒவ்வொன்றும்
ஒவ்வோர் ஆடையாக
உருமாறுகிறது...

உன்னை நீரில் பிழிந்து
அமிலக்கட்டியில் கரைத்து
கல்லில் அடித்துத்
துவைத்தெடுப்பதாய்
கற்பனை செய்து
உன்னாடைகளைத் துவைக்கிறேன்
அகம் நிறைந்த சந்தோஷத்தில்...

துவைத்து முடித்துக்
கொடியில் காயவைக்கும்போது
லேசாகி வெளுத்துவிடுகிறது
உன் ஆடைகளும்
என் மனதும்!

- பிரபு சங்கர்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this