Jump to content

கவிதைகள்


Recommended Posts

குட்டி மகளின் ஓவியத்தில்…
10.jpg
இரண்டு நேர் கோடு மேலே முக்கோணம்
குட்டியூண்டு வீடு எங்கள் வீடாம்
மென் நடைபோகிறேன்
உடன் என் குட்டிப் பெண்
வீட்டருகே பச்சைப் புல் வெளியில்

ஆடா மானா தெரியவில்லை
அதைத் தாண்டியதும்
குச்சி குச்சியாய் நீண்டிருந்தன
தைலக் காடாம் அது
அதை ஒட்டிய பாதையில்
தைல வாசத்தோடு நடக்கிறேன்
சட்டென பாதை முடிவது தெரியாமல்

வெண்ணிலாவுக்குள் இறங்கிவிட்டேன்
வேலைப் பரபரப்பில்
செஞ்சூரியனை முதுகில் கட்டி
ஓடிக்கொண்டே இருக்காமல்
என் குட்டி மகளின் ஓவியத்தில்
அவளோடு சேர்ந்து உறைந்தேகிடக்கலாம்

- நாகராஜ சுப்ரமணி

மரணப் பெருவெடிப்பு

திடுக்கிட்டு சுற்றிலும் பார்த்துத் தடுமாறி
பின் சுதாரித்து சிதறிய இடம் பார்த்து
இழப்பை உணர்ந்து
திரண்டு வந்த கண்ணீரை விழிகளில் தேக்கி

தொண்டையில் வெறுமை விழுங்கி
ஒற்றைப் பெருமூச்சுடன்
விம்மிச் சிணுங்கி சமாதானமாகி
வேறு விளையாட்டுகளில்
கரைந்துபோகிறது குழந்தை
ஒரு பலூனின் மரணப் பெருவெடிப்பில்

www.kungumam.co.

Link to comment
Share on other sites

 • Replies 212
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கவிதைகளும் மயிலிறகால் மனதை வருடுகின்றன......!  tw_blush:

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

மரக்குதிரை - கவிதை

 

74p1.jpg

றுத்த காய்களுடன் ஆடத்தலைப்பட்டவன்
குதிரையை முடுக்கிவிட்டான்
ஓங்காராமாய் கனைக்க முற்பட்ட அதன் மூச்சில்
நெகிழியின் வீச்சமிருந்தது
ஆங்கில எல் வடிவில் நாற்புறமும் சுழன்றாடிய
அதன் குளம்பசைவில்
சிதறியது மேசை மீதிருந்த தேநீர்
மூன்று வெள்ளை சிப்பாய்களையும்
ஒரு மந்திரியையும் காவு வாங்கிப் பின் G4ல் ஓய்வெடுத்தது
சுற்றி இருந்த வெள்ளைநிறக் குதிரையோ யானையையோ கண்டு அது அச்சப்படவில்லை
H5 கறுத்த சிப்பாயும் F6ல் தன் இணைப்புரவியும் காவலிருக்க
படுகளத்தில் வேடிக்கை பார்த்தபடி நிற்ககூசி
ஆடுபவனை நோட்டமிட்டது
தன் லகானை சொடுக்கி E5க்கோ F2க்கோ
தன்னைக் கொண்டு செல்ல இறைஞ்சியது
கறுத்த ராணியை முன்னகர்த்தி அவள் வெளுத்த யானையால் வெட்டுண்டபோது
அவனின் முட்டாள்தனத்தால் அதிர்ந்துபோனது
போர்த்தந்திரம் அறியாப் பேதையை
நம்பிக் களம் புகுந்ததாய் புலம்பிற்று
எஞ்சிய கறுஞ்சிப்பாய்களும் மந்திரியும் யானையும்
சிவந்த ராணியால் கொல்லப்பட்டு
தான் மட்டும் இறுதிவரை வெட்டுப்படாமல் இருப்பது குறித்து வெட்கம் கொண்டது
கறுத்த ராஜா செக்மேட் செய்யப்பட்ட கணத்தில்
கழிவிரக்கத்தால் தலைகுனிந்த புரவி
மீண்டும் அவன் விளையாட்டைத் துவக்கியபோது
பெயரிடப்படாத ஒரு போர்க்களத்தில் பிடறி சிலும்ப B8ல் நின்றிருந்தது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

அவளைத் தவிர

 

இரவை உறங்க வைத்து விட்டு
விடியும் வரை
கொட்டக் கொட்ட விழித்திருக்கும்
கொடுமையான பொழுதுகளைப்
பற்றிப் பேசத் தொடங்கி
புலம்பலையடைந்து
விம்மலை கடக்கும் போது
சின்னதாய் வெடித்து
கொஞ்சமாய் அழுது
ரகசியமாய் கண்களைத்
துடைத்து விட்டு
தொண்டையை செருமிக்கொண்டு
யாரும் பார்த்து விட்டார்களோ
என்ற பதற்றத்தில்
சுற்றும் முற்றும் தலையைச்
சுழற்றிப் பார்க்கிறாள்
அங்கே யாருமில்லை
அவளைத் தவிர.
20.jpg
இவ்விரண்டு காட்சிகளில்
ஏதோ ஒன்று
கனவென்பது மட்டும்
எல்லோருக்கும் தெரிகிறது
தெள்ளத் தெளிவாக
அது எதுவென்றுதான்
யாருக்கும் தெரியவில்லை
அவளைத் தவிர!

கடலின் கரை விளிம்பில்
அலைகளின் விரல்
தொட முடியாத
பொன்னிற மணற்பரப்பில்
வெண்ணிலா வெளிச்சத்தில்
தன்னந்தனிமையில் அமர்ந்து
தரையை மெழுகி எதையோ எழுதி
அழித்தபடி தனக்குத்தானே
குலுங்கிச் சிரித்தவள்
சட்டென்று சுதாரித்து
யாரும் பார்த்து விட்டார்களோ
என்ற வெட்கத்தில்
சுற்றும் முற்றும் தலையை
சுழற்றிப் பார்க்கிறாள்
அங்கேயும் யாருமில்லை
அவளைத் தவிர.

www.kungumam.co.

Link to comment
Share on other sites

பிழை பிரசங்கம்

 

கவிதைகள்: யுகபாரதி - ஓவியங்கள்: செந்தில்

 

p242a.jpg

யாரிடமிருந்தோ
கடத்தப்பட்ட கனவுகளில்
டாக்டராகவோ இன்ஜினீயராகவோ
வக்கீலாகவோ வந்துகொண்டிருக்கிறேன்
அதற்கும் மேலும்கூட
வரவும் வாழவும் சம்மதமே
கனவுகளில் என்னவாக
வரவேண்டுமெனத் தீர்மானிப்பவர்கள்
தங்களுக்குத் தெரிந்த அல்லது
தங்களால் முடியாத
கனவுகளை மட்டுமே தொடர்ந்து
கடத்துகிறார்கள். இன்னமுமே
கைகூடுவதுதான் கனவுகளென்று
சொல்லிக்கொண்டிருப்பீர்களா
தூங்கவிடாமல்.


p242b.jpg

ன்றொரு
கதையெழுதலாம் என்றிருந்தேன்  p270i7.jpg
இப்படியெல்லாம்
நினைப்பது சகஜம்தான்
போனவாரமும்
அதற்கு முந்திய வாரமும்கூட.
கதையென்பது எண்ணத்திலிருக்கிறது
கதாபாத்திரங்களுக்கான
பெயர்களும் தோன்றாமலில்லை
இராசேந்திரசோழனின் வனமயிலை
ராப்பிச்சைக்காரனின் துந்தனாவை
எப்படியாவது கொண்டுவருவேன்
என் கதையிலும்
எவருக்குமே தெரியாமல்
அலைக்கழிக்கும் அக்கதை
எதை எதையோ சொல்லப்போகிறது
இவ்வாறாக அவ்வப்போது
பெருங்கதைக்குப் பிரியப்பட்டு
வெறுங்கதையாவதுதான்
பொழுதுகளோ என்னவோ.


p242d.jpg

சொத்து சேர்த்துவைக்கவில்லையென
அப்பாமீது கோபம்தான்.
அம்மாமீது மட்டும் என்ன
இவரைப்போய் கட்டிக்கொண்டாயேயென்று
எத்தனையோ முறை கோபித்திருக்கிறேன்
சொல்லப்போனால்
என் கோபங்களை அவள்
ஒரு பொருட்டாகவே கருதாததெண்ணியும்
ஒருமுறை கோபித்திருக்கிறேன்
கோபித்துக்கொண்டு எங்கேயாவது
போகப்போகிறேன் என
அடங்காமல் நான் விடும் சவுடாலை
அவள் சட்டை செய்ததேயில்லை
ஆதூரமான அன்பை
கோபமாக வெளிப்படுத்துகையிலும்
அதே கோபத்தை அன்பாக
ஆக்கித் தருபவளே
தாயென்று அறிவானோ
தற்குறி.


p242c.jpg

று என்பது
எண்ணாகவும் நீர்ப்பரப்பாகவும்
இருக்கிறது
ஒரு சொல்லுக்குப் பலவும்
பல சொல்லுக்கு ஒன்றும்
அர்த்தமாக்கப்பட்டிருப்பது
அதிசயங்களில் வராது
அவமானம் தோல்வி
தற்கொலை என்பதற்கு
வேறு ஏதாவது சொல்லிருக்கிறதா
ஆறு எனும் சொல்லுக்கு
இன்னுமொரு அர்த்தம்
அமைதியாகு என்பதே
இப்போது புரிகிறது
அவமானம் தோல்வி
தற்கொலை என்பதும்
அமைதியாவதற்கு ஏற்பட்ட
வழிகள்தான் இல்லையா.


p242e.jpg

க்கள் நம்புகிறார்கள்
யாரோ தம்மை ஆள்வதாக
ஆள்பவர்களும் அறிந்ததுதான்
யார் யாரோ அவர்களையும்
ஆளத் துடிப்பதை
அதிகார வரம்புக்குட்பட்ட
ஆளுகைக்கு தயாராகவேயிருக்கிறார்கள்
ஒவ்வொருவரும்
ஒரே ஒரு பிரச்சனை
தன்னை ஆள்வது யாரென
தெரிந்துவிடக்கூடாது
மனிதர்கள் மிருகங்களையும்
மிருகங்கள் மனிதர்களையும்
ஆளத் தொடங்கிய விநாடியில்
தங்களை தாங்களே
நாடு கடத்திக்கொண்டுவிட்டன
அறங்கள்.


p242f.jpg

த்தனையோ பெண்கள்
சொல்ல நினைத்து
சொல்ல முடியாது போனதுதானே
காதல் எனும் சொல்
எப்போதோ சொல்லியிருக்கலாம்
எப்படியாவது சொல்லியிருக்கலாம்
காதலைத்தான் சொல்லவில்லை
காதலித்ததையாவது சொல்லலாமே
சொல்லாதபோதும் காதலுண்டென
அறிந்தேவைத்திருக்கிறார்கள்
அத்தனை ஆண்களும்
இத்தனை காலங்களுக்குப் பிறகும்
யாரிடம் யார் காதலைச் சொன்னாலும்
கொலைசெய்யப்படுவது உறுதியெனில்
இதற்குமேலும் இந்தக் கவிதையில்
என்ன இருக்கிறது சொல்ல.


p242g.jpg

ழ்ந்த அன்பில்லாமல்
வாய்வராது செளக்கியம் கேட்க
ஒருவர் செளக்கியம் பற்றி
அறிந்துகொள்வதில்தான்
அன்பிருக்கிறதா என்றால் பதிலில்லை
அன்பென்றால் அன்புதானே
அதிலென்ன ஆழ்ந்த, ஆழமில்லாத.


p242h.jpg

வாய்ப்பை பயன்படுத்தும்
வாய்ப்புள்ளவர் எத்தனைபேர்
சடுதியில் கிடைத்துவிடுவதை
ஏனோ தவிர்க்கிறோம் சவடாலுடன்.
வைத்திருந்ததை விட்டுவிட்டு
வெளவாலாக தொங்கிக்கொண்டிருக்கிறோம்
வசதிக்கும் வாய்ப்புக்கும்
வானம் ஒருநாளும் சொன்னதில்லை
பெரிதாகிப்போன வெளவாலே
தானுமென்று
தொங்கிக்கிடப்பதே வாழ்வானால்
வேறு வேறில்லையே
வானமும் வெளவாலும்.


p242i.jpg

முன்பு போலில்லை நீ
முன்பு போல் என்ன உண்டு?
சென்ற ஞாயிற்றுக்கிழமை ஏற்றிய
அதே விளக்குதான்
ஆனாலும் வெளிச்சம் புதிதில்லையா
ஏன் எப்போதும் யோசிக்கிறாய்
முன்பைப் பற்றி
உன்னை பொறுத்தவரை
பிரியங்களென்பவை
பின்நோக்கிப் போவதா
முடிவில் ஒன்று சொல்லலாம்
முன்பு போல் நீயுமிராதே
முகத்தைத் திருப்பிக்கொண்டு.


p242k.jpg

டைசியாக
அமெரிக்கா மீது ஆத்திரப்பட்டது
சதாமாகயிருக்கலாம்
சந்தேகத்துக்கு இடமில்லாமல்
பாலஸ்தீனத்து குடிமகனும்
பங்களாதேஷ் போராளியும்கூட
அதே விதமான ஆத்திரத்தைக்
கொண்டிருக்கலாம்
எதிரிகளை வீழ்த்துவதே
போரின் தர்மமும் தந்திரமும்
என்ன கொடுமையெனில்
எளிய ஒருவனை வீழ்த்தி
எதிரியாக்குகிறது வல்லாதிக்கம்
ஆமாம் ஆமாம் ஆத்திரமென்பது
திடீரென்று வருவதல்ல
திட்டமிட்டு வருவது  

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

பரம்பு மலை

 

214p1.jpg

து
ஒண்ணுமில்லை
புல்மேய்கிறது
கன்னுக்குட்டி


 

214p3.jpg

ரணாலயம்
வரும் பறவைகள்
ஓர்மை கொண்டிருக்கும்
தூரம் இடம் காலம்


214p2.jpg

வேட்டையாடப்படும்
மான்
வேட்டையாடப்
படும் மிறாA24.jpg
வேட்டை
யாடப்படும் முயல்
வேட்டை
ஆடப்படும் புலி
வேறு வேறு
வேட்டையாளர்கள்


214p4.jpg

ன்றைக்குப் பார்த்தமாதிரியா
இருக்கிறது காவிரி
எப்படி மாறிவிட்டது
அப்பொழுது கண்ட பட்டணம்
இன்னும்
செவ்வியல் கவிதை!


214p5.jpg

குளம்பூரா
வெள்ளரிக்காய்
வயல் முழுக்க
பயற்றங்காய்
கோடைக்காலம் நெடுகவும்
கோயில் கொடைகள்தாம்


214p6.jpg

ன்னைப்போலத்தான்
நிகழ்கிறது
தன்போக்கில்தான்
நேர்கிறது
நாந்தானென்றால்
நல்ல வேடிக்கை


214p7.jpg

விதையைக் காண்பதே
அபூர்வமாயிருக்கிறது விக்கி
அதன் இயல்பே
அப்படித்தான் பூர்ணா


214p8.jpg

கிடைத்ததே
போதும் தங்கம்
குறையென்ன
நேர்ந்தது தங்கம்
கொண்டு
வந்ததென்ன தங்கம்

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 

126p1.jpg

தூரக்கடல் அகதிமுகம்

இறந்தகால நிலம் ஒரு மீனின் கனவில் கடலாகிறது
ஆகாயம் கீழிறங்கி
பள்ளத்தாக்குகளை கர்ப்பவயிறாக்கி
கால்களும் தலைகளுமாய் அமிழ்ந்த மணலை
கொஞ்சூண்டு மழை கடலாக்கியது.
புதிதாய் நீராடிய மணல்நிலம்
பசிக்கு இறந்தமீனை சிறுகுடலாக்கியது.
வயதான
பறவைமுட்டைகள்
புதுக்கடலில் விழுந்ததும் இறக்கையாய் அடித்தது.
சூரியன்சூடிய வெள்ளொளிகள்
கடலுக்கு நாடோடிச்சுடர்கள்.
முளைத்த கடலில் அணையாச்சுடர் ஆகாயத்தைப் பரப்பியது
ஒரு மீனின் முள்ளில் மோதியதால்
இறந்த சுடரொளிகளை சாயங்காலம்
எனச்சொன்னது
கர்ப்பத்துக் குஞ்சுமீன்கள்.
வலைக்காரன் வானவில் கொண்டுவருகிறான்
சல்லடை தைத்த வலையோட்டைகள்
சாயங்காலக் கடலில் மிதந்துமூழ்கியதும்
முத்தமிடத் துடிக்கும் மீன்கள் அனைத்தையும்
துடிக்கத்துடிக்க வலையாக்கினான்
அனாதையான கடற்கரையை
ஆரவாரம் செய்கிறது மீன்களின் இறுதிமூச்சு.
நீரின் அழுகை கேட்டு எழுந்த குழிநண்டுகள்
கடல்காரனின் கால்களை
கடித்துக்கடித்து அழுதுதீர்த்தன.
இரவுநீரில் இருளாகிய உப்புகள்
வருத்தத்தில் கடலை விட்டு நடந்துபோயின.
கடல் கடல் கடல் என
ஒரு பறவையின் அழுகுரல்
தூரத்துக்கடலில் அலைஅலையாய்த் தெரியும்
இருள்போர்த்திய ஓர் அகதிப்பறவை அது.

-அதிரூபன்

பொன் சாம்பல் நிறத்தும்பி

கோதுமைநிற வயல்பரப்பில் முதல் சூர்யகிரகண ஔி மிளிர்கின்றன
பொன் சாம்பல் நிறத்தும்பி
ஆகாசம் அசைத்து தாழ இறங்கி அதன் வாழ்நிலமீது
அமர்கின்றது
குடிலிலிருந்து குதித்த அணில்
விழுந்த சிவந்த கனியுருளைகளிலொன்றை
குஞ்சுக்  கைகளில் பொதித்துப்போகின்றது
பசிய காலையில்
பிஸ்கட்டின் வாசனை உறிஞ்சி
தூளியிலிருந்து பூமி குதித்த சிறுமியின் கண்களில் ஓராரண்யப்பசி
வயிறுதடவி கோதுமை மணியை ஒவ்வொன்றாய் பொறுக்கியெடுத்து சிறுநாவுரச அண்ணம்தொட்டு
அவள் விழுங்கியபோது
புறஊதாநிறமி இரைப்பைவரை
ஊறி இறங்கியது
பின் தாகக்குடல் நனைக்க நீலம்பூத்த தன்னுடலை இழுத்துக்கொண்டு
கடல்குடிக்க நிலம் குலுங்க தூரம் ஓடியவளின் கால்சிலம்பின் மணி குலுங்க
எறும்புகளின் வரிசை கலைந்து கூடிப்போகின்றன
மிகுதிப்பட்ட வெளியெங்கிலும் பேரொழுங்கின் அமைதி சலம்ப
காற்றூதிய கனத்த சங்குமீன்கள் ஈரமணலில் ஊர்ந்து நகர்கின்றன
சமுத்திர நீலத்தை வெண்மையாக்கிய குமிழ்களுக்குள் நுழைந்த வெளியில்
தாடையிடுக்கில் வழிந்த அவள் வயதேறிய ரத்தச்சொட்டுகள்
தானியவயலெங்கிலும் சிவந்து காணக்கிடத்தின
அந்தி மெல்ல அமிழ்ந்து
ஆழ்ந்த அமைதிக்கு முன்பான இருள்
ஔிச்சத்தில் பண்டைய மனுசிபிண்டம் மேலும் கறுத்து நிசப்தம்கூடிய பார்வையில்
அவள் திரும்பி நோக்கியபோது
காலத்தின் இருப்பை
ஓவியச் சட்டகத்திற்குள்
கடுஞ்சிவப்பு வண்ணத்தைக் கொண்டு அவளாடை மல்லிகைப்பூக்களுக்குள் பூசிக்கொண்டிருந்தேன்

-அனாமிகா

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சென்னையின் குடிசாலைத் தாமரைகள்

 

கவிதை: வெய்யில் - ஓவியம்: செந்தில்

 

* மெரினாவிற்கு காவல் நிற்கிறது
ஒற்றைப்பனை
கண்ணகி சிலைக்குச் சற்று பின்னே.
வாசனையெழ
அலைகுடிகளின் அடுப்புகள் புகைகின்றன
அதன் தூரில்
வித்தைக் குரங்குகளின் இடுப்புக்கயிறு
முடிச்சிடப்பட்டிருக்கிறது.
ஈனவே ஈனாத ஆண் பனையது- ஆனாலும்
பார்க்க சில நேரம்
கொற்றவையைப்போல
கொல்கவி ஔவையைப்போல
இருட்டுகிற நேரத்தில்
அறஉணர்ச்சியின் கறுத்த செங்குத்து வடிவம்போல.

76p1.jpg

* திருவல்லிக்கேணி தெருக்களெங்கும்
பெருகியோடுகிற ரத்தம்.
என் முதுகெலும்பில் அச்சம் இறங்குகிறது.
36 கீறல்கள் விழுந்த தேச வரைபடமல்லவோ நமது
இங்கே என்ன நடக்கிறது.
குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டுத் தோல்களை
நாய்கள் நுகர்கின்றன – ஓ...
மதியச் சாப்பாட்டுக்கு அழைக்கும்
சந்தோச ரத்தவாடையே நெஞ்சில் பால்வார்த்தாய்.
உலகவங்கி குறித்து ஒன்றும் அறியாத மூதாட்டி
பள்ளிவாசலுக்கு எதிரே
செம்மறி வியாபாரிகளிடம் அருகம்புல் விற்கிறாள்
புல்லின் பசுமைதான் இந்த நகரம்
அப்படித்தானே?


* குடிசாலையில் திருநங்கைகளிடம் ஆசி பெறுகிறேன்.
பீகாரிச் சிறுவன் தன் சிறிய விரல்களால்A23.jpg
அவித்த முட்டையைக் கீறி
ஒரு தாமரையை மலர்த்தி டேபிளில் வைத்தான்.
அதன்மீது தூவுகிற மிளகுத்தூள் குறித்து
இந்நேரம் சிந்திப்பது உகந்ததல்ல.
இங்கேதான் ஏதோவொரு மேன்ஷன் மூலையில்
என் எதிர்காலம் குந்தியிருக்கிறது.
சுன்னத் செய்யப்பட்ட சிறுவனின் கோவணம்
வெண்மையாய் அழகாய் சுற்றப்பட்டிருக்கிறது
அவன் வெடித்து அழுகிறான்
என் ஆதார் அட்டை புகைப்படத்தின் கண்களால்.


* ப்-வேக்குள் இருவர் வாய்முத்தத்திலிருக்கிறார்கள்.
மனம் பிறழ்ந்தவன்
தன் நிழலைத் தேடி வெளியே வருகிறான்.
அங்கொரு மின்சாரக் கம்பத்தின் அருகேதான்
சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறேன்.
சென்னை வெயில் நீதிமானைப் போன்றது - வாழ்க அது
இலங்கைக்குக் கூலிகளாய்ப் போனவர்களைப்போல
மூன்று மாதங்களுக்கு முன்பு
இந்த வங்கி வாசலில் வரிசைகட்டி நின்றவர்களில்
நீங்களும் ஒருவர்தானே
அப்போது எல்.ஐ.சி கட்டடத்திற்கு மேலேறி
தற்கொலைக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன் நான்.
ரயில்பாதைக்கான பாதாள வேலையில்
புழுதியெழுந்துகொண்டிருந்தது மேல்நோக்கி
சரி பாதாள ரயில்கள் வரட்டுமே
ஜோராக அதில் பாய்ந்துகொள்ளலாம்தானே
எல்லாம் ஒரு நம்பிக்கைதானே!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

 
E_1508042069.jpeg
 

கண்ணா நீ எங்கே?

கோகுலக் கண்ணா
நீ நரகாசுரனை
வதம் செய்து விட்டதாய்
தீபாவளி கொண்டாடுகிறோம் நாங்கள்!

உன்னால் வதம் செய்யப்பட வேண்டிய
நரகாசுரர்களோ இன்னும் நிறைய...
மரங்களை, வனங்களை
பிறர் மனங்களை கொன்றவர்கள்!

ஜாதி, மத
அரசியல் கொலையாளர்கள்
பெண்களுக்கு எதிரான
வன்கொடுமையாளர்கள்...

தெய்வம் நீ
அசுரனைக் கொன்றாய்
இங்கே...
மிருகங்களைப் போல்
மனிதனை மனிதனே
வேட்டையாடுகிறான்!

பணத்தை சுவாசித்து
வாழப் பழகிவிட்ட மனிதன்
செய்யத் தகாதவற்றையும்
செய்யத் துணிந்து விடுகிறான்!

வாழ வைத்து வாழு என்று
வரையறுத்து
அழித்து வாழ்ந்து
முரண்பட்டுப் போகிறான்!

மனிதம் இருப்பதால் தானே
மனிதன் என்று பெயர் - இந்த
இரண்டின் கலவையை எப்படி அழைப்பது?

நல்லவர்களை வாழ்விக்க
கெட்டவர்களை அழித்தாய் நீ...
இன்று தீயவை வளர்ந்தோங்கி
நல்லவை அழிகிறது!

நீ வெண்ணெய் திருடி விளையாடினாய்...
எங்களவர்கள்
பிறர் வாழ்க்கையைத் திருடி
அரை நிர்வாணமாய்
அலைய விடுகின்றனர்!

பேராசை வரம் பெற்ற அசுரர்கள்...
வாழும் போதே நரகம் காட்டும்
பெருநோய் சாபக்கேடு...
இது நிதர்சன உண்மை!

ஒன்றின் அழிவில் தான்
இன்னொன்றின் வளர்ச்சி
இது விதி...
அழிவின் விளிம்பில்
மனிதன் நின்று கொண்டிருக்கிறான்
கண்ணா... நீ எங்கே?
எஸ்.செல்வம்,
அருப்புக்கோட்டை

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

தாவோ

கவிதை: போகன் - படங்கள்: ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்

 

நான் எவற்றைப் பற்றியெல்லாம் எழுதாமல் இருக்கிறேன் என்றொரு கேள்வி இருக்கிறது
நான் ஒரு ஊருக்கு திடீரென்று சவப்பெட்டிகள் அதிகமாக வருவது பற்றி எழுதாமல் இருக்கிறேன்
எனது வெள்ளெழுத்துக் கண்ணாடியின் சக்தியை சோதிக்கச் சென்ற மருத்துவமனையின் மறுபுறம் குழந்தைகள் இறந்துபோவது பற்றி எழுதாமல் இருக்கிறேன்
அவர்களுக்கு சுவாசிக்கப் போதுமான அளவு காற்று இருந்ததா என்றும்...

நான் தொலைக்காட்சிப்பெட்டிகள் மூலமாக நஞ்சூட்டப்பட்டு இறந்த மனிதர்கள் பற்றியும், அறிந்திருந்தும் எழுதியதில்லை
மிக அச்சுறுத்தும் விதமாகத் திறந்துகொண்டு வீடுகளுக்கு வெளியே நிற்கும் அந்த பிரமாண்ட மிருகங்களின் அலுமினியவாய்களைப் பற்றியும்
நான் பெண்களின் உடல்துண்டங்கள் ஒவ்வொரு இணைய இணைப்பிலும் இலவசமாகக் கிடைப்பது பற்றியும் எழுதவில்லை

108p1.jpg

நான் சிறிய அநீதிகளைப் பற்றியே எழுதினேன் என்பார்கள்
அவற்றுக்கே எனக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
அவை பெரிய அநீதிகளை மறைக்க அனுப்பப்பட்டவை என்று
எனக்குத் தெரிந்திருந்தும்...
நான் அந்தச் சிறிய காயங்களை உரத்த நிறங்களால் அலங்கரித்து
உங்களுக்கு அளித்தேன்.

என் கவிதைகளை சிலர் சிறுமிகளை வன்புணர்ந்து கொல்வதற்கு முன்பு உச்சரித்தார்கள் என்று சொல்லப்படுவதுண்டு

ஆனால் நான் ஒரு கட்டுப்பாடிழந்த கடவுள்
எனது சுக்கிலம் எங்கெல்லாமோ சென்று வீழ்கிறது A6.jpg
நான் என் கவிதைகள் எங்கு செல்கின்றன என்று கவனிப்பதில்லை
யார் யார் அவற்றை உபயோகப்படுத்துகிறார்கள் என்பதையும்...

நான் எவற்றையெல்லாம் கவனிக்க முடியும்?
நான் கவிஞன்
நான் தீர்க்கதரிசிக்கும் அவனது கடவுளுக்கும் அவனது சாத்தானுக்கும் பாதி தூரத்தில் இருப்பவன்
எனது அங்கியின் நுனியை யார் யார் தொடுகிறார்கள் என்று என்னால் கட்டுப்படுத்தமுடியாது
என்னை யார் யார் தொழுகிறார்கள் என்பது என் பிடியில் இல்லை
நான் எங்கெல்லாம் இருக்கிறேன் என்று ஒரு தகவலும் இல்லை.

உண்மையில் நீங்களும் நானும் பெரியதொரு மரத்தின் அடியில் இருக்கிறோம்
அதன் ஒரு நுனி இறந்துகொண்டிருக்கிறது
இலை இலையாய் மரம் இறந்து உதிர்ந்து என் தலை மேல் விழுகிறது
அதன் நிழல் வரிவரியாய்க் குறைந்துவருகிறது
நான் மட்டுமே அதனை அறிந்தவனாய் இருக்கிறேன்

உண்மையில் எனது ஒவ்வோர் அடியும் திரும்பிப் போவதாய் இருக்கிறது
நான் அதற்காகவே இந்த நீண்ட சாலையில் வந்தேன்
நான் வேறு எதையும் இங்கு செய்யமுடியாது என்பது எப்போதோ எனக்குச்  சொல்லப்பட்டுவிட்டது

ஆனாலும் நான் எழுதினேன்
எதையும் மாற்றாத சிறிய வரிகளை

இவ்விதமாக
நான் உங்களையும் என்னையும் கொல்கிறவர்களின் பாடகனாக மிக நீண்ட காலம் இருந்துவிட்டேன்.
அவர்கள் என் பாடல்கள் மூலமாக எனக்கான தண்டனையை எழுதினார்கள்,
உங்களுக்கான தண்டனைகளையும்.

ஆனாலும் நான் கவனிக்கிறேன்.
அவர்கள் என் பார்வையை முழுவதுமாய்ப் பிடுங்கிக்கொள்ளவில்லை
அது அவர்களது தண்டனையின் ஒருபகுதியாகும்.
நான் பார்த்தேன்.
பச்சிளங்குழந்தைகள் உயிரோடு பிடுங்கப்பட்டு உண்ணப்படுவதை
வளரிளம் பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பொசுக்கிக்கொள்வதை
தூக்குக்கயிறுகளின் நிழல்கள் வளர்ந்து ஒரு தேசத்தையே மூடிவிடுவதை
பூமியின் ஆழத்திலிருந்து அதன் உயிர்முட்டைகள் எடுக்கப்பட்டுக் கருக்கப்படுவதை

108p2.jpg

ஆனால் நான் என்னுடைய எல்லா வார்த்தைகளையும் எப்போதும் மழுங்காத ஒரு வாளின் கூரியநுனிகளுக்கு முன்பு மண்டியிடவைத்துவிட்டேன்
என் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு அவற்றைக் கொன்றுவிட்டேன்
பிறந்ததிலிருந்து என் மண்டை ஓட்டுக்குள் இருந்த தீ இவ்வாறாக
ஒருமுறை அலறலுடன் சுழன்று எழுந்து உயர்ந்து அணைந்தது

இப்போது நான் எந்த மாதிரியான கவிஞன்
அல்லது பாடகன் அல்லது மனிதன்
என்றொரு கேள்வியும் இருக்கிறதுதான்
முன்பே சொன்னதுதான், நான் எப்போதும் உதறிச் செல்கிறவனாகவே இருந்திருக்கிறேன்
எனது முதுகுத்தண்டு திரவத்துக்குள் எப்போது இந்தப் புழுக்கள் நுழைந்தன என்பது பற்றி எனக்குத் தெரியாது
அவை என்னை உயிரோடு வைத்திருக்கின்றனவா உயிரோடு தின்கின்றனவா என்பது பற்றியும் எனக்குத் தெரியாது   

நான் உங்களை உங்கள் சவக்குழிகளுக்குத் துரத்திவரவில்லை என்பதே என்னால் உங்களுக்குச் செய்யமுடிந்தது
நான் உங்கள்மேல் ஓங்கிய கொடுவாளாய் ஒருபோதும் இருக்கமாட்டேன்
என்பது மட்டுமே என்னால் இனி உங்களுக்குக் கொடுக்க முடிந்தது

இதோ நான் உங்கள் சாலைகளில்
தூர தேசங்களிலிருந்து நோய்தாக்கிய நாய்களைப் போல நீங்கள் துரத்தப்பட்டு ஓடிவரும் இந்தச் சாலைகளில்
துரோகத்தின் அடக்குமுறையின் பேராசையின் பயத்தின் குரோதத்தின் நீண்ட மரங்கள் வளர்ந்த இந்தச் சாலைகளில்
உங்களுக்கு எதிர்த்திசைகளில் நடக்கிறேன்

இங்கே வேட்டையாடப்படுகிறவரும் உங்களை வேட்டையிடுகிறவரும் ஒரே திசையில் குருதித்துளிகள் துள்ளி வீழ ஓடி முடிந்ததும் சூழும் அமைதியைக் கவனிக்கிறேன்
ஒரு கனத்த மழை பூமிக்கு வரும் முன்பு ஏற்படுத்திக்கொள்வது போல  இருண்ட அமைதி.
புவியின் அத்தனை உயிரினங்களும் தங்கள் நகங்களை மடக்கிக்கொண்டு அந்த அமைதியைச் செவிமடுக்கின்றன
எங்கிருந்தோ அதனை அருந்த வருவதுபோல
தாவித்தாவி சில பட்டாம்பூச்சிகள் வருகின்றன
நான் அவற்றை என் தோள்மீது அமர்த்திக்கொண்டு
முடிவேயில்லாது நீண்ட இருண்ட ஒரு பெரிய குமிழியிட்டு நொதிக்கும் கருப்பைக்குழிக்குள்
சென்று அமிழ்கிறேன்

ஒரே ஒரு செய்தியை மட்டும் உங்களுக்கு விட்டுவிட்டு

‘அமைதியடையுங்கள்
நானே உங்கள் உலகத்தின் கடைசிக்கவி’

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளைத் துளையிட்டு உள்நின்று சுடர்விடும் உணர்ச்சி மிகு கவிதை....!

Link to comment
Share on other sites

போர்க்களம்

வீதி வழியே சென்ற பைத்தியம்
தன் கையில் நீண்ட இறகொன்றை வைத்திருந்தான்.
இறகால் உன்னைக் குத்திக் கொன்றுவிடுவேன் என்று
எதிரே வருபவர்களை மிரட்டிக்கொண்டிருந்தான்.
வெயிலில் அவன் சாணை தீட்ட சாணை தீட்ட
மிகக் கூர்மையாகப் பளபளத்தது அந்த இறகு.
உண்மையில் இத்தனை மென்மையான வாளால்
கொலை செய்வதானால்
கொலை படுவதுகூட சுகந்தான் இல்லையா?
உயிர் போகாமல் கொலை செய்வது
காமத்தில் மட்டும்தான் சாத்தியம்.
போர்க்களத்தில் இல்லையே!
எங்கே என்னைக் குத்திக் கொல் பார்ப்போம் என்று
மார்பை விடைத்துக்கொண்டு நிற்கிறான் ஒரு துக்கிரி.
பைத்தியத்தின் கைகள் நடுங்குகின்றன.
அவனறியாமல் வாளைக் கீழே நழுவ விடுகிறான்.
காற்றில் மிதந்து மிதந்து இறங்கி வரும்
சமாதானத்தை ஏந்திக்கொள்ள
பூமி அவ்வளவு ஆசையாகக் காத்திருக்கிறது.

- கார்த்திக் திலகன்

56p1.jpg

படிமம் 

அதோ ஒரு கல்
யுகம் யுகமாய் நதிக்கரையில்
அவ்வப்போது நீருடன் சல்லாபித்த ஒன்று.
கல்லினுள் நீரின் சலனங்கள்
நீரிலும் கல்லினது.
பாசி படர்ந்தாலும் கல் அதுவே
வற்றிச் சுருங்கினாலும் நதியே
பாசி என்பதோர் படிமம்

- தேவசீமா

இயந்திரப் பிடியில் சிக்கிய நூல் 

பன்னிரண்டு வருடங்கள்
புத்தகப்பை சுமந்த அவளின் முதுகுத்தண்டுக்கு
இனி பணியில்லை....

மதிய உணவுக்கூடையைக் கையிலெடுத்து
நூற்பாலை வாசனையை
நுகரச் சொன்னது
தந்தையின் திடீர் மரணம்.

ஒற்றை நூலென  உருமாறிவருகிறாள்
இரைச்சல் குவியும் இரவு ஷிப்ட்டினால்.

குடும்பத்தில் விழுந்த
ஓசோன் ஓட்டையை அடைக்கத்
திராணியற்றவள்மீது
மற்றுமொரு இடியாய்
நாள்தோறும்
ஆடையை ஊடுருவக் காத்திருக்கும்
எண்ணற்ற புற ஊதாக்கதிர்கள்.

சகித்துக்கொண்டு போவதன்றி
வேறென்ன வழியிருக்கிறது
எவரும் கண்டுகொள்ளாத
இயந்திரத்தில் சிக்கிய இத்துப்போன நூலுக்கு?

பணிமுடிந்து வெளியேறுகையில்
உதறிச்செல்லும்
தூசிகளைப் போல்
உதற மட்டுமே முடிகிறது
அன்றைய நாளின் அவமானங்களை.

- அயன் கேசவன்

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

உயிர்மரம்

வானத்தின் மதகுகள்
திறந்துகொண்டன.
நீ வேண்டாத என் பிரியமாய்
தன்னை இறுகப் பூட்டியிருந்தது நிலம்.
பச்சையம் நிறைந்த இலையை,
நரம்புகளில் பாயும்
உயிர் வளியை,
பெரும் விருப்போடு
கைகளில் சுமக்கிறேன்.
இலைகளில் மறைந்திருக்கும்
வனத்தின் தண்மையாய்
சொல் இறங்குகிறது.
பட்சிகள் ரீங்கரிக்கும்
குரல்களில் வழிகிறது
தாங்கள் குடியேற இயலாத
ஆதிக்கூட்டின் பாடல்.
இந்த உலகைத் தன்
பசும் நீரினால்
களங்கமற்றதாக்குகிறது
உயிர் வரி தரித்த மரம்

- ரோஸ்லின்

84p1.jpg

தனிமையின் நினைவு

வெயிலோடு நட்பு பாராட்டி
தனது சுமையைக் குறைத்து
இலவம் பஞ்சுபோல
இலகுவாகிறது
துணிகள் காயப்போடும் அசை.

பிங்க் நிறச் சுடிதாரின்
ஸ்பரிசம் பற்றிக்
காற்றோடு கதையளக்கிறது.

சட்டென்று பெய்த மழையில்
மழை முத்துக்களை
முத்துமணி மாலையாக
அணிந்துகொள்கிறது.

சிட்டுக்குருவிகளின் கால்களை
இறுகப்பிடித்து
அவைகளின் மழைப் பாடல்களை
மனங்குளிரக் கேட்கிறது.

- முத்துக்குமார் இருளப்பன்

கடலை வியாபாரி

ஒரு நிலக்கடலையை உடைத்துப்
பார்த்தேன்
அதனுள்ளே இரண்டு குழந்தைகள்
எடுத்துப் பார்க்கையில் ஆண்களாகவும்
நிலம் புகுந்ததும் பெண்களாகவும் தெரிகின்றன
அதன் ஈர மண் கலந்த வேர்முடிச்சில்
நான் 2080 ஆண்டில் இறந்து மக்கிய வாசம்
என்னிடம் இருந்து
ஒரு காட்டு விலங்கின் நெடி பரவுகிறது
அது உங்கள் மூக்கைப் பொறுத்து
என்னைக்
கிளறிய கொம்பில் மண்ணுள்ள மானாகவோ
கிழங்கு அதக்கிய காட்டுப் பன்றியாகவோ
புலால் நிணம் நாறும் குள்ளநரியாகவோ
உணர்நீட்சியாகக் காது உயர்த்தும் முயலாகவோ
சீதைக்கு எத்தனை கோடுகள் என்று கேட்கும் அணிலாகவோ
வடக்கு பார்த்தால் மனித இரத்தமா
என்று கேட்கும் யானையாகவோ
பல் நீண்ட வெள்ளெலியாகவோ
உணரச் செய்யும்
அதனாலென்ன
கூவிக்கூவித் தின்னக் கொடுத்து
உங்களை எண்ணெய் பிழியும் இயந்திரமாக மாற்றும்
வறுகடலை வியாபாரியாகி
உங்கள் தெருவில் வருகிறேன்.


- பூவிதழ் உமேஷ் 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிலக்கடலையை உடைத்துப்
பார்த்தேன்
அதனுள்ளே இரண்டு குழந்தைகள்
எடுத்துப் பார்க்கையில் ஆண்களாகவும்
நிலம் புகுந்ததும் பெண்களாகவும் தெரிகின்றன

நல்லதொரு அவதானிப்பு.....!

நானெல்லாம் நிலக்கடலையை உடைத்தால் உடனே அது ஆணுமின்றி பெண்ணுமின்றி அடிவயிற்றில் அரை பட்டுப் போகும். பூவிதழ் உமேஷிடம் அது வார்த்தையில் கருக்கொண்டு கவிதையாய் பிரசவமாகி விட்டது....!    

Link to comment
Share on other sites

முகமற்ற காற்றாடிகளின் டார்வின் கோட்பாடு - விஷ்ணுகுமார்

p80a.jpg

படிநிலை :1
ஒரே நேரத்தில்
தன் மூன்று கைகளையும் சுழற்றியபடி
புதிது புதிதான திசைகளை
அழைத்துக்கொண்டிருக்கிறது
மின்னாலைக் காற்றாடிகள்

படிநிலை: 2
அதிலொரு சோம்பேறி
தன் கைகளை முக்கால்வாசியோடு மட்டும்
நிறுத்திக்கொண்டு
மேலும் இடைஞ்சலாக இருப்பதாய்
தன் மூன்றாம் கையை தனியே கழற்றியெறிந்தது

படிநிலை: 3
அப்போது மற்ற முகமற்ற காற்றாடிகள்
முதன்முதலாய்
கிண்டல்செய்து சிரிப்பதற்கு
வாய் எங்கிருக்கிறதென
தேடிக்கொண்டிருந்தன

படிநிலை: 4
சோம்பேறியோ
நாள்போக்கில்
மனிதன் ஒருவன் கைவீசி நடப்பதைப்போல
தன்னிரு றெக்கைகளை
அரைவட்ட அளவுக்குப் பாதியாக
சுழற்றிப்பார்க்க
தன்னையறியாமல் வேலியை பிய்த்தெறிந்து நடக்கத்தொடங்கியது

இதில் தர்மசங்கடம் என்னவெனில்
இதுவரை புதிது புதிதாக திசைகளில் சு(ழ)ற்றிப் பழகிய காற்றாடி
தனது முதலடியை எந்த திசையில் வைத்தது தெரியுமா?

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் பிரமாதம். முழுவதும் படித்து முடிக்கவில்லை. பகிர்வுக்க நன்றி. தொடருங்கள்

Link to comment
Share on other sites

On 23.10.2017 at 11:47 AM, suvy said:

ஒரு நிலக்கடலையை உடைத்துப்
பார்த்தேன்
அதனுள்ளே இரண்டு குழந்தைகள்
எடுத்துப் பார்க்கையில் ஆண்களாகவும்
நிலம் புகுந்ததும் பெண்களாகவும் தெரிகின்றன

நல்லதொரு அவதானிப்பு.....!

நானெல்லாம் நிலக்கடலையை உடைத்தால் உடனே அது ஆணுமின்றி பெண்ணுமின்றி அடிவயிற்றில் அரை பட்டுப் போகும். பூவிதழ் உமேஷிடம் அது வார்த்தையில் கருக்கொண்டு கவிதையாய் பிரசவமாகி விட்டது....!    

 

வரவுக்கும் உங்கள் கருத்துகளுக்கும் நன்றி சுவி அண்ணா.

இங்கு மாத்திரம் அல்ல நீங்கள் ஏனைய பகுதிகளிலும் உங்கள் கருத்தை பதிந்து ஊக்குவிக்கும் ஒருவர்.

On 26.10.2017 at 10:14 PM, Kavallur Kanmani said:

கவிதைகள் பிரமாதம். முழுவதும் படித்து முடிக்கவில்லை. பகிர்வுக்க நன்றி. தொடருங்கள்

நன்றி கண்மணி அக்கா. நேரம் உள்ளபோது தொடர்ந்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

Link to comment
Share on other sites

விடியல்

“மனிதா மனிதா இனி உன்
விழிகள் சிவந்தால்
உலகம் விடியும்”
என்ற பாடலுடன் வீதி நாடகம் முடித்து
அதிகாலையில்
வெறுங்கையுடன்தான்
வீடு திரும்புவார் அப்பா;
நாங்கள் பெரும்பாலும்
தூங்கிக்கொண்டிருப்போம்;
பேசி வைத்தாற்போலவே
அம்மா தன் வளையலை
வேண்டா வெறுப்பாய்
கழட்டித்தருவாள்;
அடகுவைத்து
கொஞ்சம் பணம் கொண்டு வருவார்;
உற்சாகமாய் பாட்டுப்பாடி எழுப்பி
எங்களைக்  குளிப்பாட்டி
பள்ளிக்கு வந்து ஃபீஸ் கட்டி
மதியம் மூசுண்டை  வாங்கித்தின்ன ஜோபியில்
காசு திணித்தும் போவார்;
அப்பாவின் கண்கள் கடைசிவரை
சிவந்தேயிருந்தது ;
அதில் எங்களுக்கான ஒரு விடியல்தான்
நான் இங்கு குறிப்பிட்டிருப்பது!

- கோ.ஶ்ரீதரன்

600p1.jpg

கண்ணாடிச்சில்லு

கைதவறி உடைந்துவிட்டது
பெருக்கினாலும் முழுவதுமாக சுத்தமாகாது எனத் தெரிகிறது
சனியன் சில்லு சில்லாய் உடைந்திருக்கிறது
சர்க்கரையின் துகள்களைப் போல
தரையில் பரவியிருக்கிறது.
துடைத்தே ஆக வேண்டும்
பசுஞ்சாணமிருந்தால் துடைத்தெடுக்கலாம் என்பாள் அம்மா
எங்கே செல்வது பசுவிற்கும் சாணத்திற்கும்
ஈரத்துணியால் ஏலுமென பொறுமையாய் திரட்டுகிறேன்
எனினும்
வழியத்தான் செய்கிறது உன் வியர்வை வாசமொத்த குருதி

- தேவசீமாமனப்பூட்டைத் திறக்கும் சாவி

மறைந்திருந்த வடுக்களை
மறுபடியும் கிளறி புண்ணாக்கிவிடுகிறது
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
அசாதாரணமாக நிகழ்ந்துவிட்ட
பிரிவின் நிமித்தம்
பாராதிருந்த நண்பனின் சந்திப்பு.

சுழித்தோடும் ஆற்றின்
சுழலொன்றில் சிக்கிக்கொண்ட துரும்பென
வெளியேற இயலாமல்
திணறித் தவிக்கின்றன குவியலாய்
தொண்டைக்குள் வார்த்தைகள்.

வலைக்குள் சிக்கினாலும்
வாழ்தல் வேண்டி துள்ளலோடு
தப்பிக்க முயலும் மீனாக
மனக்கசப்பிலிருந்து விடுபட்டுவிட
இதழோரம் அரும்பத் துடிக்கிறது ஆவலோடு
பழைய சிநேகப் புன்னகை.

பால் கிரண நிலவை
பார்வையிலிருந்து மறைக்கும்
மேகத்திரையை லாகவமாய் விலக்கும்
அரூபக் காற்றென
பூசலைத் துடைக்கத் துவங்குகிறது
முகிழ்க்கும் மெல்லிய விசும்பல்.

துருவேறிய மனப்பூட்டைத் திறக்கும்
சாவியாய் வழிகிறது
கனத்த மௌனம் சுமந்த கண்ணீர்.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:

 

வரவுக்கும் உங்கள் கருத்துகளுக்கும் நன்றி சுவி அண்ணா.

இங்கு மாத்திரம் அல்ல நீங்கள் ஏனைய பகுதிகளிலும் உங்கள் கருத்தை பதிந்து ஊக்குவிக்கும் ஒருவர்.

 

தேக்கு வித்தால் சோக்காய்  இருக்கும் 

பாக்கு வித்தால் பக்காவாய் இருக்கும் --- இருந்தும் 

ஊக்கு விக்கிறேன் கொள்வோரை நாடி .......!  tw_blush:

Link to comment
Share on other sites

குப்பையைக் கிளறாதீர்

 

p78a.jpg

ண்டிகைகள் மீது
கேள்வியெழுப்பலாகாது
கொண்டாட்டம் முக்கியமல்லவா

இன்று நேரத்திலேயே
எழுந்துகொண்டீர்கள்
நல்லது

தேய்த்துக் குளிக்க நல்லெண்ணெய்
பதஞ்சலியிலா
வாங்கியிருக்கிறீர்கள்
சிகைக்காய்..?

தலையில் எண்ணெய்
வைத்துக்கொண்டீர்களா
அளவாய் நீர்விட்டு
சிகைக்காய் தூளைக் p78b.jpg
கட்டிப்படாது மசியுங்கள்
ரெண்டும் கொஞ்சம் ஊறட்டுமே

அதுவரை நேரத்தை வீணடிக்கலாமா
தித்திப்பு நாள்களின் ஒவ்வொரு
துளியும் முக்கியம்
அளவில் பெரிய
சரஸ்வதி வெடியைப் பிரியுங்கள்
அவள் மூக்கைக் கிள்ளுங்கள்
பத்தியை நீட்டிப் பத்தவையுங்கள்
டமா...ர்
வாசல் முழுக்கக் காகிதத்துண்டுகள்
ஒன்று உங்கள் கன்னத்தில் தெறிக்கிறது
அதில் அனிதாவின் பாதி முகம்
மீதி முகமும்
அந்தக் குவியலில்தானிருக்கிறது
தயைகூர்ந்து கிளறாதீர்
கவுரி லங்கேஷ்
மாட்டிறைச்சிக்காய் அடித்துக் கொல்லப்பட்டவன்
பணமதிப்பு நீக்க நீள்வரிசை
விவசாயிகள் தற்கொலை
ஜி.எஸ்.டி என
ஒவ்வொன்றும் கசப்பின் துண்டுகளாயிருக்கலாம்

இந்தக் குப்பைநினைவுகளைப்
பெருக்கித்தள்ளத்தான்
சொச் பாரத் அழைக்கிறது

போதும்
கண்ணில் எண்ணெய் வேறு இறங்கிவிட்டது
போங்கள் போய்
தலைமுழுகி வாருங்கள்
கேசமாவது பிசுக்கற்று இருக்கட்டும்.  

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள்

அப்பா இருந்தபோது
பெரிய சட்டைக்காலர்
காற்றிலே படபடக்க வேகமாய்
ஓட்டிக்களித்த
நீல நிற லாம்பரடா இன்று
நகரத் திராணியற்று
அப்பா வைத்துவிட்டுச் சென்ற
பாதாம் மர நிழலில் நிற்கின்றது
காக்கைகள் கொத்தியது போக
மிச்சமிருக்கும்
ரெக்சின் இருக்கையின் மேல்
காய்ந்த அல்லது பழுத்த
பாதாம் இலைகள் சிறு
சப்தத்துடன் விழுகின்றன,
அப்பாவின் அந்திமத்தை
நினைவுறுத்தியபடி
தினமொருமுறை துளசியை
வலம் வரும் சாக்கில்
அம்மா அதனருகில் வருகிறாள்
அதன் பின்னிருக்கையின் மேல்
விரல் தாளமிட்டபடி
நான் பிறந்தபோது வெளிவந்த
`பாபி’ படப் பாடலொன்றை
முக மலர்ச்சியோடு
முணுமுணுக்கிறாள்;
தினமும் இதே பாதாம் மரத்தடியில்
அவ்விரு கதாபாத்திரங்களும்
மெள்ள உயிர்த்தெழுகின்றன
ராஜ் என்கிற யுவனாக
கோபாலனும்
லாம்பரடா பின்னிருக்கையில் அவனைக்
கட்டிக்கொண்டு மகிழும்
யுவதி பாபியாக வேதவல்லியும்...

- கோ.ஸ்ரீதரன்

p50a.jpg

பறவை

நின்று கடக்கும்
ரயில் நிலையங்களில் மட்டும்
கொஞ்ச தூரம் ரயிலில்
பயணித்துக்கொள்கின்றன
பறவைகள்.

- திரு வெங்கட்

முத்தங்களைக் கக்கிய பொழுதுகள்

முத்தங்களைக் கக்கிய
கைப்பேசியில் நானூறு முறை பேசியாயிற்று
அவரவர் அரைநிர்வாணங்களை
வாட்ஸ்அப்பில் பகிர்ந்தும் ஆயிற்று
ஃபேஸ்புக்கில் பதிவான உளறல் மொழிகள்
உலகம் முழுவதையும் வலம் வருகிறது
கனவுகள் துகள் துகளாய்ச் சிதறிப் பரவ
ஆடையற்ற உடலோடு
அறையின் மூலையினின்று
தனித்துப் பரவும் கண்ணீரின் கோடுகள்
இரவுக்குள் தோன்றி பகலுக்குள் மறைந்துவிடும்
காமம் என்ற சொல்லை நாகரிகக் குறைவு என்று
பேசாது ஒழித்து
காதல் என்ற சொல்லை வன்மமாக்கிய பிறகு
நேசம் என்ற சொல்லைச் சொல்ல
யாருக்குத்தான் வாய் கூசுகிறது?

- விகடபாரதி

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

பனியிரவுப் பொழுதுகள் -

கவிதை: அய்யப்ப மாதவன்

 

சுருண்ட நாயின் மீது அதிகாலைப் பனித்தெருவின் விதும்பல்
மழை வருவது போன்ற சோம்பிய விடியலொளி
கூடவே தீர்ந்துவிடாத பயமுறுத்தும் இருள்
சலசலப்பு எழுந்துவிடாத வீடுகள்
உரையாடலற்றவேளை அது
கசிந்தது அமைதி
தேயிலை மணம்
இறக்கைகளை விரித்தது புலர்காலை
நிர்மலமாய் நீலவானம்
ஆழ்ந்த பச்சையுடுத்திய பெயரறியா மரம்
அற்புத அழகில் சில காலம்
கசடுகளில்லாத பயணம்
குறுக்கீடுகளில்லாத தூயமனம்
இரவைப் பிரியும் ஒளியில் ரகசிய சூக்குமங்கள்
இதயத்தைத் தள்ளின பாழுமுலகில்
உடலில் மிருக அம்சங்கள் பெருகச் சுழன்றது
நீளும் குரங்குவால்
அடுத்தவன் ரணமானான்
அடுத்தவன் கற்களை எறிந்தான்
காயங்கள்
தேகம் மூளை தேய்ந்து
பனியிரவின் தொடக்கத்தில்
மறுபடி தூக்கம்
மறையும் நஞ்சுப்பகல்
குளிர் கொட்டிய தடுப்புச்சுவரினுள் விறைத்துப்போய்
ஏதுமறியாததுபோல் இறந்து கிடந்தேன்.

p62a.jpg

என் எந்தப் பொழுதும் உன் பொழுதுதான்
வீர்யமிழந்து வரும் பனிக்காலத்தில் அரும்பும்
இளவேனில் பருவத்தில்
விலகும் குளிராய் நீயிருக்கிறாய்
ஆனால் நீ பனிப்பொழுதாய்
இருக்கவே விழைகிறேன்
குளிராய்த் தங்குகிற வேளை உதிக்கும் பரிதியில்
எல்லையற்ற சுகமடைவேன்
குளிர் கட்டிகள் நிரம்பிய காற்றில்
நீ தாக்குகிறவேளை
நடுநடுங்கி உன் முகத்தில்
விழிக்கத் தலைப்படுகிறேன்
நீயோ எங்கோ என் எண்ணமின்றி
வேறெதையோ
செய்துகொண்டிருப்பாய்
போலும்
நான் நீயாகிய என்னை நீ புரியவே இல்லை
என்பதில் எவ்வளவு துயருறுகிறேன்
கணம் கணமாய் உன்னில்
உறைகிறேன் என்பதை அறியாத
போதும்
எந்தப் பொழுதும் உன் பொழுதென்பதை
நீ உணர்ந்திருக்கவில்லை
ஆயினும் என்னை நீ நினையாத போதும்
உன்னை நினைப்பதை
நிறுத்திவிடப்போவதில்லை
ஏனெனில் உன் மீதான உன்மத்தை
எல்லையற்றுப்
பெருக்கிக்கொண்டுவிட்டேன்
அதோ பனி பெய்கிறது நீ குளிர்கிறாய் என்னில்

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

தொட்டில் மீன்கள்

ஏன் இப்போது
பார்த்துக்கொள்கிறோம்
அடிக்கடி திசைமாறும்
பார்வைகள் கண்ணீரை
மறைப்பதற்கு மட்டுமல்ல
அடித்து அடித்து
கூடுதலாய் சூடேற்றுகிறது
ஒரு குளிர்காற்று
கண்ணாடி தொட்டி மீன்கள்
யாருக்கு சொந்தம்?
ஓரிரு வார்த்தைகள் எனதருகில்
அதோ அத்தெருவில்
நாய் குரைக்கத் துவங்கிவிட்டது.
 

- ப.காளிமுத்து


4.jpg

பறவையான சிறகு

தரை நோக்கித் தாழ வீழ்ந்த ஓர் இறகு
குழந்தையின் உள்ள(ம்)ங் கைபட்டதும் உயிர்பெற்றது
மெல்ல ஊதுகிறது குழந்தை
மேனியெங்கும் புதுமூச்சுக் காற்றில் படபடக்க
பறவையாகிப் பறக்கிறது சிறகு
மீண்டும் மீண்டும் குவித்த உதடுகளைக் குறி பார்த்து இறங்குகிறது
அப்படியே விட்டு விடுங்கள் அக்குழந்தையை
நமக்கான அவசரத்துக்குள் வராமல் இருக்கட்டும்
கோழியை இறகாக்கத் தெரியாத பருவம்
ஓர் இறகை உயிராக்கி மகிழ்கிறது.

kungumam.co

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

ஆடி அமாவாசை

மரித்துப்போன மூதாதையர்களுக்கு
சாப்பாடு கொண்டுசென்றேன்
மொட்டை மாடிக்கு,
மூதாதையர்கள் காக்கை வடிவிலே
வருவார்களாமே...
கரன்ட் கம்பியில்
கால் பதித்து ஏகப்பட்ட காக்கைகள்,
அப்பா காக்கை எது
அம்மா காக்கை எது
தாத்தா பாட்டி காக்கை எது
தெரியவில்லை எனக்கு.
இலையுடன் சாப்பாட்டை
கட்டைச் சுவரில் வைத்தேன்,
தாவி வந்தன காக்கைகள்,
வந்ததுமே அப்பளத்தைக்
கவ்விச் சென்றது ஒரு காக்கை,
அது அப்பாதான்...
முருங்கைக்காய் கொத்திய காக்கை தாத்தா,
பாயசத்தை மட்டுமே
பதம்பார்த்த காக்கை
அம்மாவாக இருக்கும்.
அம்மாவுக்குப் பாயசம் அவ்வளவு பிடிக்கும்,
சோற்றை மட்டுமே
சாப்பிட்ட காக்கை நிச்சயம் பாட்டிதான்,
சுற்றி நின்று வேடிக்கை
பார்த்தன மற்ற காக்கைகள்,
அவை சாப்பிட வரவே இல்லை,
ஒருவேளை எங்களுக்கு
வேண்டாதவர்களாக இருக்கலாம்,
படியில் இறங்கி
வீட்டினுள் நுழையும்போது
“அம்மா தாயே சோறு போடுங்கம்மா”
சிறுமியின் குரல்,
இவள் எனக்கு யாராக இருப்பாள்?

- பட்டுக்கோட்டை பாலு

p26a.jpg

வயல்

ஆரம்பத்தில்
தண்ணீர் நிறைய இருந்தது.
பக்கத்திலேயே ஆறு ஓடுவதால்
மழைக்காலங்களில்
மாட்டை ஓட்டியே
கிணற்றிலிருந்து
நீர் இறைத்து விடுவோம்.
மோட்டார் வந்ததற்குப் பின்புதான்
நீர்மட்டம்
வெகுவாய்க் குறைந்துபோனது.
மழையும் சரிவர பெய்வதில்லை.
பல வருடங்களாக நெல்தான்
போட்டுக்கொண்டிருந்தோம்.
தண்ணீர் அதிகம் உறிஞ்சுவதால்
அடுத்து மரவள்ளி போட்டோம்.
இடையிடையே சிலதடவை
எள் போட்டோம்.
மல்லாட்டை போட்டோம்.
பின் சுத்தமாய்
நீர் பொய்த்துவிட்டதால்
கம்பு போட்டோம்.
ஒருதடவை சவுக்கு போட்டோம்.
கரடாகவே கிடந்தது சிலவருடம்.
போனமாதம்தான்
பிளாட் போட்டோம்.

- எஸ்.நடராஜன்.

தொலைந்த நகரம்

தொலைந்த நகரம் என்பது
அடர்ந்த வனத்தின் நடுவே இருக்கலாம்
ஆழ் கடலில் புதையுண்டு இருக்கலாம்
ஆகாயத்தின் மேல் மிதந்துகொண்டிருக்கலாம்
என நீங்கள் நினைத்துக்கொள்கிறீர்கள்...
உங்களது சொந்த நகரம்
நரகமாகும் போது,
அதைத் துறந்து நீங்கள் நுழையும்
புது நகரம் தொலைந்த நகரமாகிறது
ஆம்! நீங்கள் தொலைந்த நகரம்.

- ஹரிகரன்

நேசம்

உனக்கும் எனக்குமான நேசமென்பது
பெருவெளிகள் கடந்த நிசப்தம்!
செயலூக்கக் காட்சி தாகங்களின் ஆதிக்கங்கள்!
ஆன்மா இசைக்கும் கருவி!
எத்தனிக்கும் நினைவுகளின் சாட்சி மிகைகள்!
விண்ணை இடம்பெயர்த்தும் பெரும் மலைகள்!
உணர்வுகள் சூடேறும் தனிமையின் ஆழம்!
நிச்சலனம் சிறு அமைதி பழகிவிட்ட கணம்!
போர்முரசு பெரும் ஒலியின் சிறுதுணிவு!
காத்திருந்த அன்பின் பெரும் வசவு!
குழந்தை குதூகலிக்கும் இனிப்புத் துண்டங்கள்!
எல்லா திசையிலும் அதிசயம் நிகழ்த்தும் மாயவித்தை!
கரும்வானத்தின் பெரும் மழையின் சிறுதூறல்!
சேற்றுச் செந்தாமரையின் அன்றலர்ந்த வனப்பு!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

பிரம்ம ராட்சசர்களின் ஆணை

காலங்காலமாகத் துணிகளை
அழுக்கு போக அடித்துத் துவைத்து
மடித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்
அழுக்காக்கி, துவைத்து, மடிப்பது
தொடர்ந்துகொண்டிருக்கிறது
அதிகார ஆதிக்க அழுக்கும்
சாதிய அசிங்கமும்
நிலைத்த வடிவம் போலாகிவிட்ட
வெளுக்காத மனசு அப்படியே இருக்கிறது
யுகம் யுகமாய்
அழுக்கும் கறையும் அசிங்கமும்
சீருடை என ஆகிவிட்ட சமூகத்தில்
இரட்டைக் குவளையில் ஒன்றுதான்
மிரட்டும் தொனியில் நீட்டப்படுகிறது
இரட்டைப் பணமற்ற ஒற்றைப் பணம் கேட்கும்
கல்லாக்களில் அமர்ந்திருக்கும்
பிரம்ம ராட்சசர்களின் ஆணைப்படி.

- விகடபாரதி

p26a.jpg

இரவை உசுப்பும் மீன்கள்

இந்த அடர் இருளை என்ன செய்யவென்று கேட்கும் நண்பனுக்கு விடையளிக்கத் தெரியாமல் அவனது மதுக்குடுவையில் பின்னிரவை நிரப்புகிறேன்
உணவுக்குழாயில் பயணிக்கும் இரவைக் கிழிக்கிறது கோடை மின்னல் கீற்று
இடியின் அகோர ஓசையில்
விழிக்கும் யாவும்
குடைக் காளானின் கீழ் தஞ்சமடைகின்றன
சைவப் பட்சிணிகளுக்குக் காளானையும்
அசைவப் பிரியர்களுக்கு மாமிசத்தையும் படைக்கிறேன்
சாராயமும் சுருட்டும் போதாத சுடலைமாடன் கோயில் வாசல் தாண்டி வரும் வேளையில்
நிலவொளியில் எட்டுக்கட்டை பேட்டரியின் துணையுடன்
எட்டடி வாளுடன் மீன் வேட்டைக்காக கெண்டைக்காலளவு நீரோட்டத்தில் நடக்கிறேன்
இரவு
மச்சங்களில் துயில்கின்றன
மீன்கள் இரவை உசுப்புகின்றன
இரவும்
மச்சமும் ஒன்றுதானென்பேன் ஆழ்கடலின் அடியாழத்தில்.

- கடங்கநேரியான்

நட்சத்திரங்கள்

அண்ணாந்து நட்சத்திரங்களை தினமும்
பார்க்கும் அந்தச் சிறுவன்
திராட்சையைப் பார்த்த அந்த நரியைப்
போலதான் தோற்றமளிக்கிறான்
அவனுக்கு ஆசை அந்த
நட்சத்திரங்கள்மீதும் இல்லை
திராட்சைகள்மீதும் இல்லை
குண்டு வெடித்த போது
துண்டான விரல்களால்
 நிலவைப் போலக் காட்சியளிக்கிறது
விரல்கள் இல்லா அவனது
இடதுபுற உள்ளங்கை...
அன்று குண்டுகள் வானிலிருந்து
விழுந்ததை நினைவுபடுத்துகிறது
இப்பொழுது தூறும் மழை
வால்நட்சத்திரம் போல
வெகுதூரம் கடந்துவந்தவன்...
புது நகரத்தில் அவனைச் சந்தித்தேன்,
அருகே அமர்ந்தேன்...
“அழகாக இருக்கிறது அல்லவா
நட்சத்திரங்கள்?” என்றான்
நான் பதிலுக்கு “ம்ம்ம்” என்றேன் சந்தேகமாக.
கருமேகம் வானை மறைக்க
யாருக்குத் தெரியும் நட்சத்திரம்..?
மின்னலொன்று வேர்போல்
வானில் படர்ந்தது
கண்கள் கூச, மூடிக்கொண்டேன்...
அவன் கண்களை மூடப்போவதில்லை
என எனக்கு முன்பே தெரியும்
அவனது
பார்வையைப் பறித்த குண்டு வெடிப்பின்
ஒளியைவிடவா இந்த மின்னல் பெரிது?
அவன் கண்கள் மீண்டும் அண்ணாந்து
மேலே பார்க்கிறது.
மழை கொஞ்சமாய் வேகமெடுக்கிறது
விழும் மழைத்துளிகள் தெருவிளக்கின் வெளிச்சத்தைப் பிரதிபலித்து
அரங்கேறியது
நட்சத்திரப் பொழிவு.
அவன் மீண்டும் அதே கேள்வி கேட்டான்
“அழகாக இருக்கிறது அல்லவா நட்சத்திரங்கள்?”
“ஆம்... மிகவும் அருமையாக... எங்கும்...”

- ஹரிகரன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.