• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

மதுரையின் வளர்ச்சி..

Recommended Posts

Io6e3BY.jpg


''இனிய முரண் ஏதாவது...?''


"மதுரையில் பெருமுயற்சிக்குப் பிறகு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு 'மதுரை மீனாட்சி அம்மன் பெயரை வைக்க வேண்டும்’ என ஒரு சாராரும் 'பாண்டிய மன்னனின் பெயரைச் சூட்ட வேண்டும்’ என்று இன்னொரு சாராரும் வாதிட்டனர். ஆனால், காமராஜர் அதனை மறுத்து 'அது மதுரைப் பல்கலைக்கழகம் என்றே இருக்கட்டும். மதுரை என்றாலே எல்லோருக்கும் தெரியும்’ எனப் பெயர் சூட்டினார். பக்தவத்சலமும் அதை ஆமோதித்தார்.

ஆனால், மதுரைப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது என்ன பெயர் தெரியுமா? 'மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்’. யார் பெயரையும் சூட்ட வேண்டாம் எனச் சொன்ன காமராஜர் பெயரே மதுரைப் பல்கலைக்கழகத்துக்குச் சூட்டப்பட்டது இனிய முரண்தானே?''

-விகடன் இதழில் வெளியான துணுக்கு.

Share this post


Link to post
Share on other sites

மானம் காத்த மதுரை

Tamil_News_large_1052316.jpg

 

நதிக்கரை நாகரிகங்கள் தோன்றிய காலம் முதல் நைல் நதி நாகரிகம், சிந்துநதி நாகரிகம் என உலகம் முழுதும் இருக்கக்கூடியதைப் போன்று, 2000ம் ஆண்டு பழமையான, இன்றும் உயிரோடு இயங்கிக் கொண்டிருப்பது மதுரை, அதன் வைகை நதிக்கரையில் தான்.சில ஊர்கள் காலவரலாற்றில் மறைந்துவிட்டன. பெரிய நகரங்கள் இடம்பெயர்ந்து விட்டன. புராண, வரலாற்று, இலக்கியக் காலம் துவங்கி இன்று வரை திரைத்துறையா... பேச்சுத்துறையா.... எந்தத் துறையிலும் கலை, இலக்கியம் சார்ந்த விஷயங்களில் முன்னோடியாக இருப்பது, மதுரையின் வேர்கள் தான்.மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு. கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், மருதை, மதிரை, மதுரை... சொல்லிக் கொண்டே போகலாம். மதுரையின் பெயர்க்காரணங்களை கல்வெட்டு, புராண, இலக்கிய காலம் தொட்டு ஆதாரமாகச் சொல்லமுடியும்.கல்வெட்டுச் சான்று: தொல்லியல் துறை அறிஞர் வேதாச்சலம் கூற்றுப்படி கல்வெட்டுக்களில் 'மதிரை' என்று தான் கூறப்படுகிறது. அழகர்கோவிலில் உள்ள கல்வெட்டிலும், திண்டுக்கல் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி (சித்தர்கள் நத்தம்) கல்வெட்டிலும் 'மதிரை' என்றே குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் பாண்டிய நாடு மதுரைக் காண்டம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் கிராமப்புறங்களில் சொல்வழக்கில் உள்ள சொல் என்ன தெரியுமா? 'நாங்க மருதக்காரங்க' தான்.

 

இலக்கியத்திலும் எடுத்துக்காட்டு:

பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியை, இரண்டாம் நூற்றாண்டில் மாங்குடி மருதனார் எழுதினார். இந்தக்காலத்தில் நூல் வெளியீட்டு விழா நடத்துவது போல, அந்தக்காலத்தில் நூல் அரங்கேற்ற விழா நடத்தப்பட்டது. அரங்கம் ஏற்றுக்கொண்டால் தான் நூலாக வெளியிடமுடியும். அத்தகைய சிறப்புமிக்க மதுரைக்காஞ்சியை மாங்குடி மருதனார், திருவோண நன்னாளில் அரங்கேற்றம் செய்தது மதுரையில் தான்.மதுரைக்காஞ்சியில் மதுரையின் இரவும், பகலுமான முழுநாள் நிகழ்வை நேர்முக வர்ணனையாக கூறியிருப்பார் மாங்குடி மருதனார். தூங்காநகரம் என்ற பெயர் தானாக வந்ததில்லை. அங்காடிகள் என்றால் கடைகள்; அல் என்றால் இரவு. மதுரைக்காஞ்சியில் 'அல்லங்காடி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.புராணமும் புகழ்பாடும்: சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 60 விளையாடல்கள் நிகழ்த்திய இடம் மதுரை தான். வீதிகள் தோறும் திருவிளையாடல் நடந்ததாக கூறப்படுகிறது. ஆதரவற்ற கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து, மன்னனிடம் பிரம்படி பட்ட சிவபெருமானின் திருவிளையாடல் நடந்ததும் இங்கு தான். மதுரை மக்களுக்காக சிவபெருமானே பிரம்படி பட்டதாக கூறுவதுண்டு. திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய், கூடல் காண்டம் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


ஏடு நின்ற வரலாறு:

ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் மேலோங்கி நின்றது. சைவ சமயத்தை நிலைநாட்ட வந்த திருஞானசம்பந்தர், சமணர்களோடு போராடி, அனல்வாதம், புனல்வாதம் செய்தது மதுரையில் தான். எந்தசமயம் உயர்ந்தது என்பதை நிறுவ, தங்கள் மதத்தின் பெருமைகளை திருஞானசம்பந்தரும், சமணர்களும் ஏடுகளில் எழுதி வைகையாற்றில் இட்டனர். ஞானசம்பந்தரின் ஏடு வைகையாற்றில் எதிரேறிச் சென்று சோழவந்தான் அருகே திருவேடகம் என்ற ஊரைச் சேர்ந்தது. அந்த ஊர் இன்றும் திருவேடகம் என்றழைக்கப்படுகிறது. சமணர்களின் ஏடு நீரின் வழியே சென்று திருப்பாச்சேத்தியில் சேர்ந்தது என்பர். ஆற்றோடு போன இடம் திருப்பாச்சேத்தி. அதாவது பாட்டு போய் சேர்ந்த இடம் என்று பொருள்.இப்போதும் நம் வீட்டு திருமணப் பத்திரிகைகளில் 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்...' என்ற பாடலை, அச்சிடுவதுண்டு. ஆலவாய் அண்ணலும், அங்கையர்க்கண்ணி குடியிருக்கின்ற, மதுரை மீனாட்சி கோயிலில் வைத்து, திருஞானசம்பந்தர் இப்பாடலை பாடினார். எத்தனை நூற்றாண்டுகளை கடந்து, இந்த உறவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சைவம் மட்டுமல்ல... வைணவத்தில் பெரியாழ்வார் பொற்கிழி பெற்ற இடம் மதுரை. திருவில்லிபுத்தூரில் வடபத்திர சாயியாக காட்சி தரும் பெருமாள், பெரியாழ்வார் கனவில் வந்து, பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரை சென்று, 'எது மெய்ப்பொருள் என நிலைநிறுத்துவாயாக' என்று சொன்னாராம். மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், பெரியாழ்வார் அப்பாடலை பாடிய போது, 'பொற்கிழி' வளைந்து கொடுத்து, 'இதுதான் உண்மையான மெய்ப்பொருள்' என்று காட்டியதாம். அதைத்தான் மெய்காட்டும் பொட்டல் என்றழைத்தனர். இப்போது மேங்காட்டு பொட்டல் என்றழைக்கப்படுகிறது, என்கின்றனர்.

 

தரையில் கை வை:

புராணரீதியாக சொன்னால், தடாதகை பிராட்டியாகிய அன்னை மீனாட்சியை மணமுடித்த சொக்கநாதர், தான் உருவாக்கிய குண்டோதரனுக்கு உணவளிக்கச் சொல்வார். ஆனால் அவனது உணவுப்பசியை தீர்க்கமுடியாமல், அன்னை தவிக்கும் போது, குண்டோதரனை 'தரையில் கை வை' என்றாராம். பொங்கிப் பாய்ந்தது வைகை. குண்டோதரனின் தாகம் தீர்க்க உருவான வைகை நதிக்கு, வேறெந்த நதிக்கும் இல்லாத பெருமையும் உண்டு.''நாரியிடப்பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று...வாரியிடைப்புகுதாயே வையையே!'' என்று, தனிப்பாடல் கூறுகிறது. இந்தப் பாடலின் அர்த்தம் நம் மதுரையைப் பற்றிய, வைகையைப் பற்றிய பிரமிப்பை ஏற்படுத்தும். தேவர்களும், அசுரர்களும் வாசுகி என்ற பாம்பைக் கொண்டு, பாற்கடலை கடைந்தார்களாம். அப்போது வெளிவந்த நஞ்சைக் கண்டு தேவர்கள் பயந்தோடினர். தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கி விட்டு, அந்த நஞ்சை சிவபெருமானே உண்டாராம். 'சிவனுக்கே நஞ்சு கொடுத்தது கடல் தான். எனவே, எந்தக் காலத்திலும் நான் கடலோடு கலக்க மாட்டேன்' என்றதாம், வைகை நதி. தமிழகத்தில் கடலில் கலக்காத ஒரே நதி வைகை தான். வெள்ளம் பெருகினாலும், வைகை நதி ராமநாதபுரம் கண்மாயில் தான் கடைசியாக கலக்கிறது. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட மானமிகுந்த மதுரையின் புண்ணியநதியாம் வைகையில், இப்போது சாக்கடை கலந்து சங்கடம் தருவது வேதனை கதை.


மதுரையின் பெருமை:

2000ம் ஆண்டுக்கு முந்தைய புலவர்கள் வாழ்ந்த இடம் மதுரை தான். மணிமேகலை நூலை எழுதிய மதுரை கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் மதுரைக்காரர் தான். கூலவாணிகம் என்றால் நவதானியம் என்று அர்த்தம். இப்போதும் கீழமாசி வீதிப் பகுதிகளில் நவதானியம் விற்கப்படுகிறது. மதுரையில் இளநாகனார் போன்ற புலவர்கள் வாழ்ந்தனர். கர்நாடக இசையுலகில் அசைக்கமுடியாத இடம் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தான். தூத்துக்குடியில் பிறந்து புதுச்சேரியில் இறந்த, நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், நாடகம் வளர்த்தது மதுரையில் தான். நாடகக்கலை வளர்த்த மதுரையில் (தமுக்கம் மைதானம்) அவருக்கு சிலை உள்ளது. பாடலுக்கு மணி ஐயர், மதுரை சோமு, நாதஸ்வரத்திற்கு சேதுராமன், பொன்னுசாமி... இவர்களின் பெருமையும் மதுரையைச் சார்ந்தது தான்.மதுரையில் தான் நான்காம் தமிழ்ச்சங்கத்தை பாண்டித்துரை தேவர் உருவாக்கினார். மீனாட்சியம்மன் கோயில் கட்டிய வரலாற்றை எடுத்துக் கூறும் 'கோயில் திருப்பணி மாலை' என்ற நூலை, பின்னாளில் பாண்டித்துரை தேவர் பதிப்பித்தார். இப்போதும் தமிழ்ச்சங்க ரோட்டில் சங்கம் தமிழ்ச்சங்கமாக, செந்தமிழ்க் கல்லூரியாக உள்ளது. தமிழின்பால் கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றிக் கொண்ட பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரி, மதுரைக் கல்லூரிப் பள்ளியில் படித்தவர் தான்.


சினிமாவுக்கு முன்னோடி:

மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பாரதியார் பணியாற்றிய போது, 'தனிமை இரக்கம்' என்ற அவரது கவிதை, விவேகபானு பத்திரிகைக்காக மதுரையில் இருந்து தான் அச்சேறியது. தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ், 1931ல் வெளிவந்தது. தமிழ் சினிமாவிற்கு பாட்டெழுதிய முதல் மதுரைக்காரர், மதுரகவி பாஸ்கரதாஸ். கோயில், இலக்கியம், இசை, நாடகம், பாட்டு... எல்லாமே மதுரையைச் சுற்றி தான். மதுரைக்காரன் என்று சொல்வதில் பெருமையில்லை. மதுரையின் பெருமையை உணர்ந்து, மதுரையின் பெருமைக்கு காரணமான வைகை நதியின் அருமை உணர்ந்து செயல்படுபவர்கள் தான், உண்மையான மதுரைக்காரர்கள். இதுதான் மதுரைக்கு பெருமை.


பைய... பைய...:

இன்னமும் மதுரைக்காரர்களின் பேச்சில் 'பைய' என்ற வார்த்தை இடம்பெறுவதுண்டு. யாராவது வேகமாக ஓடினாலோ, நடந்தாலோ, தடுக்கி விழுந்தாலோ, 'பைய... பார்த்து போ' என்பார்கள். இந்த வார்த்தையை ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர் பயன்படுத்தியிருக்கிறார். ஏடுகளின் பெருமையில் திருஞானசம்பந்தரிடம் தோற்றுப் போன சமணர்கள், அவர் மதுரையில் தங்கியிருந்த மடத்திற்கு தீவைக்கின்றனர். 'மன்னனின் ஆதரவு இருப்பது தானே, இந்த நெருப்பிற்கு காரணம். இந்த நெருப்பின் வேகம் மன்னனைச் சென்று சேர வேண்டுமென நினைக்கிறார், திருஞானசம்பந்தர். 'பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே' என்று பாடுகிறார். சமணர்கள் மடத்திற்கு வைத்த நெருப்பு, மெல்லச் சென்று பாண்டியனைச் சேரட்டும் என்பதாக அர்த்தம். மதுரை 'தூங்காநகரம்' மட்டுமல்ல... சொற்களால் சாகாநகரம் என்பதும் உண்மை தான்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1052316

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this