நவீனன் பதியப்பட்டது August 27, 2017 Share பதியப்பட்டது August 27, 2017 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்- சர்ச்சையை தோற்றுவித்துள்ள கருத்துக்கள்- அங்கம் 01 ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு மேமாதத்தில் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என மக்களால் அடையாளம் காணப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். இன்றும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் இலட்சியத்திலிருந்து வழி தவறி செல்வதாக குற்றம் சாட்டுபவர்கள் பலர். எதிர்க்கட்சி தலைவர் பதவி, நாடாளுமன்ற குழுக்களின் பிரதிதலைவர் பதவி என சில பதவிகளை பெற்றுக்கொண்டு சுயநலமாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுபவர்களும் பலர். தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் இன்று தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே துரும்பு, அவர்களினால் தான் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என நம்புபவர்களும் உள்ளனர். இது தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமாதான காலத்தில் 2004ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலேயே அவர்கள் முதல் தடவையாக போட்டியிட்டனர் என சொல்பவர்களும் உண்டு. விடுதலைப்புலிகளின் பணிப்புரைக்கமைய ஊடகவியலாளர் சிவராம் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என சொல்பவர்களும் உண்டு. கடந்த வருடம் இலங்கையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு செவ்வி வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசவரோதயம் சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதன் பின்னணியில் விடுதலைப்புலிகள் இருந்தார்களா என தனக்கு தெரியாது என தெரிவித்திருந்தார். அண்மையில் சட்டத்தரணி நல்லையா குமரகுருபரன் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் என சொல்வது தவறு என தெரிவித்திருந்தார். ஆரம்பகாலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளராக நல்லையா குமரகுருபரனே இருந்தார். கடந்த வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் கிழக்கில் தான் இடம்பெற்றது, அதன் பின்னணியில் கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் இருந்தனர் என தெரிவித்திருந்தார். வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு கூட்டத்தில் பேசும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள சில தமிழ் பிரமுகவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. அதில் முக்கியமாக இருந்தவர் முன்னர் யு.என்.டி.பியில் வேலை செய்த நிமலன் கார்த்திகேயன் என தெரிவித்திருந்தார். வடமாகாணசபையின் ஆலோசகராக ஒஸ்ரேலியாவில் இருக்கும் நிமலன் கார்த்திகேயனை நியமிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிபார்சு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்புக்கள் வந்த போது நிமலன் கார்த்திகேயன் பற்றி குறிப்பிடும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ஒருவராக இருந்தவர் என சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டுவரை இருந்த செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கடந்த தேர்தல் பிரசார மேடையில் பேசும் போது தமிழீழ தேசிய தலைவரால் 2004ஆம் ஆண்டு வன்னியில் வைத்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வழி தவறி செல்வதாக குற்றம் சாட்டியிருந்தார். தமிழர்கள் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளிலும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் இலட்சியத்தை கைவிட்டு சுயநலத்துடன் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி பல முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஐரோப்பா, ஒஸ்ரேலியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த எதிர்ப்புக்களுக்கு பிரதான காரணம், தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் இலட்சியத்திலிருந்து விலகி செல்கிறது என்ற குற்றச்சாட்டாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரகத்தி ஆனந்தசங்கரி அடிக்கடி எழுதும் கடிதங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கி விட்டு விடுதலைப்புலிகளின் உதவியுடன் தமிழரசுக்கட்சி உட்புகுந்து கொண்டது என குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது? அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? அதற்கான சூழல் உருவானது எப்படி? தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவான போது இருந்த நிலை, இன்றிருக்கும் நிலை என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னணியில் மட்டக்களப்பில் இயங்கி வந்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பங்காளி கட்சி ஒன்றின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்த கருத்திலிருந்து இதனை ஆரம்பிக்கலாம் என எண்ணுகிறேன். பத்திரிகையாளர்களை கொண்ட ஒரு சங்கத்தினால் அரசியல் கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் சக்தி உண்டா, என்ற கேள்விகளும் பலருக்கும் எழலாம். எனவே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் அதன் பின்னணிகள் பற்றி அறிந்து கொண்டால் மேலே எழுப்பபடும் கேள்விக்கு விடை கிடைக்கலாம். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலங்கையில் அக்காலத்தில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்ற அமைப்பே இருந்தது. அந்த அமைப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் பற்றி அக்கறைப்பட்டது கிடையாது. 1980களில் தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் ஆரம்பமாகியிருந்தது. இது பற்றி கொழும்பில் உள்ள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் அக்கறைப்பட்டது கிடையாது. தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு தமிழ் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்து அப்போது மட்டக்களப்பில் இருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இக்காலத்தை போல நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் அப்போது இருக்கவில்லை. ஆளுக்கொரு இணையத்தளங்களும் இருக்கவில்லை. அக்காலப்பகுதியில் வீரகேசரி, தினகரன், தினபதி ஆகிய தமிழ் பத்திரிகைகள் கொழும்பிலிருந்தும் ஈழநாடு யாழ்ப்பாணத்திலிருந்தும் வெளிவந்தன. சண், டெயிலி நியூஸ், ஐலண்ட் ஆகிய ஆங்கில பத்திரிகைகள் வெளிவந்தன. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வானொலி சேவைகள் மட்டுமே இருந்தன. 1981ஆம் ஆண்டு ரூபாவாஹினி தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. தனியார் வானொலிகளோ தொலைக்காட்சிகளோ இருந்ததில்லை. மிக சொற்பமான செய்தியாளர்களே இருந்தனர். மாவட்ட செய்தியாளர் அலுவலக செய்தியாளர் உதவி ஆசிரியர் என்ற நிலைகளை அடைவதற்கு பல படிகளை தாண்டவேண்டியிருந்தது. ஒரு பிராந்திய செய்தியாளரின் செய்தி பிரசுரமாகிறது என்றால் பல நக்கீரர்களின் கைகளை தாண்டியே அச்சுக்கு செல்லும். இந்நிலையில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரையும் இணைத்து கிழக்கு மாகாணத்திற்கான சங்கம் ஒன்றை உருவாக்குவது என மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் இணக்கம் காணப்பட்டது. அப்போது தமிழ் பத்திரிகையாளர்கள் முஸ்லீம் பத்திரிகையாளர்கள் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தமிழ் பத்திரிகையாளர்கள் என்ற வட்டத்திற்குள்ளேயே அடங்கியிருந்தனர். இதற்கான முயற்சியில் அப்போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளராக இருந்த செல்லையா நாகராசா ஈடுபட்டார். (அவர் இப்போது சட்டத்தரணியாக ஒஸ்ரேலியாவில் வசித்து வருகிறார்) கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் அங்குரார்ப்பண கூட்டம் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மண்டபத்தில் 1981ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்றது. அதன் தலைவராக பி.ஜோசப் தெரிவு செய்யப்பட்டார், தினபதி சண் பத்திரிகைகளின் மட்டக்களப்பு செய்தியாளராக இருந்த இவர் அந்நாட்களில் சுகுணம் ஜோசப் என அறியப்பட்டவர். அக்காலத்தில் சுகுணம் அவர்களும் தனது கணவருடன் இணைந்து பத்திரிகையாளராக பணியாற்றினார். பின்னர் 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டுவரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். செயலாளராக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன செய்தியாளர் செல்லையா நாகராசா தெரிவு செய்யப்பட்டார். இவர் இலங்கை வானொலியின் செய்திவாசிப்பாளராகவும் இருந்தார். 1980காலப்பகுதியில் இவரின் குரலை பலரும் கேட்டிருப்பார்கள். பொருளாளராக லேக்கவுஸ் பத்திரிகையாளர் அந்தோனிப்பிள்ளை தெரிவு செய்யப்பட்டார். உபதலைவராக திருகோணமலை வீரகேசரி செய்தியாளர் இரத்தினலிங்கம் தெரிவு செய்யப்பட்டார். அக்காலப்பகுதியில் தினபதி பத்திரிகை தமது செய்தியாளர்களை பத்திரிகையாளர் சங்கங்களில் இணைவதற்கு அனுமதிப்பதில்லை. பத்திரிகையாளர் சங்கங்களில் இணைந்தால் தமது பத்திரிகையிலிருந்து நீக்கிவிடுவோம் என தினபதி பத்திரிகை நிர்வாகம் எச்சரித்திருந்தது. ஆனால் ஜோசப் அவர்கள் இந்த எச்சரிக்கையை மீறியே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரானார். ஏனைய பத்திரிகையாளர்களை போல ஜோசப் அவர்களில் இலகுவில் கைவைக்க முடியாது என்பது தினபதி நிர்வாகத்திற்கு தெரியும். ஜோசப் 1983ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போனவர்களுக்காக பல்வேறு பணிகளை ஆற்றினார். இதன் மூலம் அவர் மட்டக்களப்பு மக்களின் நன்மதிப்பை பெற்றார். 1983ஆம் ஆண்டின் பின் மட்டக்களப்பில் படையினரால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ மக்கள் பிரதிநிதிகள் யாரும் இருக்கவில்லை. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த செ. இராசதுரையும் கல்குடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தேவநாயகமும் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்தனர். இதனால் படையினரின் கைதுகள் படுகொலைகள் பற்றி அவர்கள் கவனம் எடுப்பது கிடையாது. மட்டக்களப்பு நகரில் இருந்த ஜோசப் அவர்களிடமே மக்கள் சென்று முறையிட்டனர். அவர் அப்போது அரசியல்வாதி கிடையாது. எனினும் பத்திரிகையாளர் என்ற ரீதியில் தனக்கு இருந்த அறிமுகங்களை வைத்து பொலிஸாரிடமும் இராணுவ அதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டு சிலரை விடுவித்தார். சமகாலத்தில் மட்டக்களப்பில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆவணங்களை திரட்டி சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனித உரிமை அமைப்புக்களுக்கு வழங்கினார். ஜோசப் அவர்கள் 1990ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் செழியன் பேரின்பநாயகம் தலைவராக தெரிவானார். செயலாளராக நான் தெரிவு செய்யப்பட்டேன். முகமட் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார். 1991ஆம் ஆண்டின் பின்னர் நடேசன் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1990களின் பின் கடத்தல்கள் படுகொலைகள் அதிகரித்த காலத்தில் மட்டக்களப்பு சமாதான குழுவின் செயலாளராகவும் செழியன் பேரின்பநாயகம் பணியாற்றினார். மிகவும் நெருக்கடியான காலத்தில் மட்டக்களப்பில் செழியன் பேரின்பநாயகத்தின் பணி மக்களால் போற்றப்பட்டது. மட்டக்களப்பு கத்தோலிக்க கழக மண்டபத்தில் சமாதான குழுவின் செயலகத்தின் அலுவலகம் இருந்தது. ஆயர் இல்லத்தின் உதவியுடன் அது இயங்கி வந்தது. காணாமல் போனவர்களின் உறவினர்களால் அந்த அலுவலகம் எப்போதும் நிறைந்திருக்கும். 1993ஆம் ஆண்டு செழியன் பேரின்பநாயகம் மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு மேயராக தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர் ஏ.எல்.எம்.சலீம் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். நான் தொடர்ந்து செயலாளராக தெரிவு செய்யப்பட்டேன், நடேசன் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார். 1999ஆம் ஆண்டு அச்சங்கத்தின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டேன், செயலாளராக சண்.தவராசாவும் உபதலைவர்களாக நடேசன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும், பொருளாளராக அரியநேத்திரனும் தெரிவு செய்யப்பட்டனர். ஆலோசகர்களாக கோபு ஐயாவும் ( எஸ்.எம்.கோபாலரத்தினம்) சிவராமும் தெரிவு செய்யப்பட்டனர். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஜோசப் பரராசசிங்கம், செழியன் பேரின்பநாயகம், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் என மக்கள் பிரதிநிதிகளையும் உருவாக்கியிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்குள் மட்டுமன்றி அரசியல் கருத்தரங்குகளையும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடத்த தொடங்கியது. மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் முக்கிய உறுப்பினராக இருந்தது. மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாதாந்தம் கருத்தரங்குகளை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடத்தியது. மனித உரிமை விடயங்கள், பயங்கரவாத தடைச்சட்டம், உட்பட மாதாந்தம் கருத்தரங்குகளை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடத்தியது. இதற்கு கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உட்பட கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலை நிர்வாகம் ஆகியன கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு பெருமளவு ஒத்துழைப்புக்களை வழங்கினர். மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலை நிர்வாகம் மாதாந்தம் கருத்தரங்குகள் கலந்துரையாடல்களை நடத்த மண்டபத்தை ஒதுக்கி தந்தது. மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஆயர் இல்லத்தின் கீழ் இயங்கிய எகெட், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், சரீரம் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவிகளை வழங்கின. கிழக்கு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட தலைவர் சட்டத்தரணி தமிழ்மாறன், கொழும்பில் உள்ள மனித உரிமைகள் இல்ல பணிப்பாளர் கந்தசாமி மற்றும் ஊடகவியலாளர் எஸ்ஜே.திசநாயகம், மற்றும் சட்டத்தரணிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்குகளுக்கு வளவாளர்களாக வருகை தந்தனர். விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் நடைபெறும் சமகாலத்தில் சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளக் கூடிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைமை ஒன்று இருக்க வேண்டும் என்பது இந்த கருத்தரங்குகளில் வலியுறுத்தப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களையே சர்வதேசம் அங்கீகரிக்கும். எனவே உறுதியான தமிழ் அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என்ற எண்ணக்கரு உருவானது. இந்நிலையில் இந்த பணிகளை தனியே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் முன்னெடுப்பதை விட கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகிய அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து மக்களை அரசியல் மயப்படுத்துவது தமிழ் அரசியல் தலைமை ஒன்றை உருவாக்குவது போன்ற பணிகளை முன்னெடுக்கலாம் என எண்ணி ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கில் மட்டக்களப்பு கத்தோலிக்க கழக மண்டபத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். அந்த கூட்டத்தில் பலரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டது. அதன் இணைப்பாளர்களாக கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலாளர் தம்பையாவும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க செயலாளர் சண்.தவராசாவும் நியமிக்கப்பட்டனர். ( 2004ஆம் ஆண்டு மேமாதம் கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்பீட தலைவர் தம்பையா சுட்டுக்கொல்லப்பட்டார்.) கிழக்கு மாகாணத்தில் தேர்தல்களில் முஸ்லீம்கள் தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டும் அளவிற்கு தமிழ் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை, எனவே இது தொடர்பான விழிப்புணர்வு வேலைகளை கிராமமட்டத்தில் செய்வதென முடிவு எடுக்கப்பட்டது. வாழைச்சேனை தொடக்கம் கல்லாறு வரை கருத்தரங்குள் நடத்தப்பட்டது. மக்களை அரசியல்மயப்படுத்தும் கருத்தரங்குகளில் சிவராம், நடேசன், ஜெயானந்தமூர்த்தி, தவராசா, கிழக்கு பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி கெனடி விஜயரத்தினம், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன், ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர். எனினும் சில நெருக்கடிகள் காரணமாக தமிழர் மறுமலர்ச்சி கழகம் இயங்க முடியாமல் போனது. இராணுவ நெருக்கடிகள் நிறைந்த காலம். இராணுவ புலனாய்வு பிரிவு முனாஸ், புளொட் மோகன் என மட்டக்களப்பு நகரில் அச்சுறுத்தல் நிறைந்த காலம். இத்தகைய அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் அவதானித்து வந்தனர். எனினும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்தியதுடன் தமிழ் அரசியல் தலைமை ஒன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மாவை சேனாதிராசா, ஜோசப் பரராசசிங்கம், சந்திரநேரு, செல்வம் அடைக்கலநாதன் உட்பட பலரும் இந்த கருத்தரங்குகளில் பங்கு பற்றினர். இந்நிலையில் தான் 2000ஆம் ஆண்டு நடந்த தேர்தல் அதிர்ச்சியான முடிவுகளை தந்தது. இரா.துரைரத்தினம். ( தொடரும் ) https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted August 29, 2017 தொடங்கியவர் Share Posted August 29, 2017 கோவிலை இடித்த ஹிஸ்புல்லாவை வெல்ல வைத்த தமிழர்கள் – தமிழ் கூட்டமைப்பு தோற்றம் – அங்கம் 02 யுத்தம் மிக உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 2000ஆம் ஆண்டு தேர்தல் கூட மிக நெருக்கடியான காலகட்டத்தில் தான் நடைபெற்றது. 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் கட்சிகள் போட்டியிடுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. இதனால் யாழ்ப்பாணம், தேர்தல் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, வன்னி ஆகிய மாவட்டங்களில் மட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது. 1994ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேச மக்களை வாக்களிக்க விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணியையும் போட்டியிட அனுமதிக்கவில்லை. இதன் விளைவு யாழ். மாவட்டத்தில் 2.3வீத வாக்கான 10.748 வாக்குகளை மட்டும் பெற்று 9 ஆசனங்களை ஈ.பி.டி.பி பெற்றுக்கொண்டது. 5இலட்சத்து 96ஆயிரத்து 366வாக்காளர்களை கொண்ட யாழ். மாவட்டத்தில் 10ஆயிரத்து 748வாக்குகளை மட்டும் பெற்ற ஈ.பி.டி.பி 9ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்தில் ஆகக்கூடிய ஆசனங்களை பெற்ற தமிழ் கட்சியாக திகழ்ந்தது. யாழ். மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கையின் படி முஸ்லீம்களால் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாது. ஆனால் ஈ.பி.டி.பியில் 341 விருப்புவாக்குகளை மட்டும் பெற்று கபூர் ஜபறுல்லா என்ற முஸ்லீம் உறுப்பினர் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி 2098வாக்குகளை பெற்று அக்கட்சியை சேர்ந்த எம்.இலியாஸ் 1575 விருப்புவாக்குகளுடன் யாழ். நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இலங்கையில் 341 விருப்புவாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட வரலாறு 1994ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்திலேயே இடம்பெற்றது. யாழ். மாவட்டத்தில் இரு முஸ்லீம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டதும் அவ்வாண்டில் தான். 1994ஆம் ஆண்டு தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழ். மாவட்டத்தில் 263வாக்குகளை மட்டுமே பெற்றது. தேர்தல் பகிஷ்கரிப்பு என்பது பொது எதிரிக்கு சாதகமாக அமையும் என்பதற்கு 1994ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் ஒரு சான்றாகும். மக்கள் மத்தியில் யார் என்று தெரியாமல் இருந்த ஈ.பி.டி.பிக்கு 9 ஆசனங்களை பெற்றுக்கொடுத்து நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகளில் ஆகக்கூடிய ஆசனங்களை இந்த தேர்தல் பகிஷ்கரிப்பு பெற்றுக்கொடுத்தது. ஈ.பி.டி.பி 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலமாக யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பியை தோற்கடிக்க முடியாத சக்தியாக வளர வைத்தது. 1994ஆம் ஆண்டு தேர்தல் பகிஷ்கரிப்பின்றி தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளை போட்டியிட அனுமதித்திருந்தால் தமிழ் மக்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால் இன்று ஈ.பி.டி.பி என்ற கட்சி இருந்திருக்காது. இன்று என்னதான் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டாலும் ஈ.பி.டி.பியை யாழ். மாவட்டத்திலிருந்து அகற்ற முடியாது என்பதற்கு 2004ஆம் ஆண்டு தேர்தல் ஒரு உதாரணமாகும். 2004ஆம் ஆண்டு யாழ். மற்றும் வன்னி மக்கள் அனைவரும் எழுச்சியுடன் வாக்களித்தனர். அப்படி இருந்தும் யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டது. யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பியை ஒரு சக்தியாக வளர்த்தெடுத்த பெருமை விடுதலைப்புலிகளையே சாரும். வன்னி மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வவுனியா நகரத்தில் இருந்த மக்கள் மட்டுமே வாக்களித்தனர். பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 25வீதமான மக்கள் மட்டுமே 1994ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தனர். அத்தேர்தலில் புளொட்டும், ரெலோவும் சேர்ந்து புளொட்டின் நக்கூர சின்னத்தில் போட்டியிட்டன. அக்கட்சி 11567 வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை பெற்றுக்கொண்டது. 1994ஆம் ஆண்டு தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டது. அருணாசலம் தங்கத்துரை கூடிய விருப்பு வாக்கு பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சம்பந்தன் தோல்வியடைந்திருந்தார். பின்னர் தங்கத்துரையை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்ற பின்னர் சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினரானார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாநகர முதல்வர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், பொன். சிவபாலன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.தங்கத்துரை ஆகியோர் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு சூழலிலேயே 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுக்கு மட்டுமல்ல, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஆயுதம் ஏந்தாத ஜனநாயக ரீதியான கட்சிகளுக்கு கூட விடுதலைப்புலிகளினால் அச்சுறுத்தல் இருந்த காலப்பகுதி அது. 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னர் மட்டக்களப்பில் மற்றொரு துயரச்சம்பவமும் நடைபெற்றது. 10.09.2000 அன்று முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக இருந்த செழியன் பேரின்பநாயகம் பாண்டிருப்பில் வைத்து விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 1993ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டுவரை மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக இருந்த செழியன் பேரின்பநாயகம் 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டிருந்தார். அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முதல்நாள் செப்டம்பர் 9ஆம் திகதி அன்று மட்டக்களப்பு வீரகேசரி அலுவலகத்திற்கு முன்னால் செழியன் பேரின்பநாயகம் என்னை சந்தித்தார். தான் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட இருப்பதாகவும், அது பற்றி விடுதலைப்புலிகளிடம் தான் கேட்டிருப்பதாகவும் அதுபற்றி பேசுவதற்கு வருமாறு தன்னை அவர்கள் அழைத்திருப்பதாகவும் நாளை விடுதலைப்புலிகளை சந்திக்க செல்கிறேன் என செழியன் பேரின்பநாயகம் என்னிடம் கூறினார். மறுநாள் நண்பர் சலீம் கல்முனையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பாண்டிருப்பில் வீடு ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. அதில் செழியன் பேரின்பநாயகம் சுடப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள் என பதற்றத்துடன் கூறினார். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்க்குமாறு சலீமிடம் கூறிவிட்டு அவரின் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்தேன். சற்று நேரத்தில் சலீம் தொடர்பு கொண்டு பாண்டிருப்பில் ஒரு வீட்டில் செழியன் பேரின்பநாயகமும் அந்த வீட்டுக்காரரும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதை நேரில் பார்த்து உறுதிப்படுத்தினார். பேசுவதற்காக வந்த விடுதலைப்புலிகள் இருவர் இவர்களை சுட்டதாக விசாரணையில் தெரியவந்தது. தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறியிருந்தால் செழியன் பேரின்பநாயகம் ஒதுங்கியிருப்பார். வீணாக அப்பாவி ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. செழியன் பேரின்பநாயகம் மட்டக்களப்பின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவர். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். வடகிழக்கில் தமிழ் வேட்பாளர்கள் உயிர் அச்சுறுத்தலின் மத்தியிலேயே 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டனர். இராணுவ நெருக்குவாரம், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்கள் என பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் நடைபெற்ற 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கு பாதகமாகவே அமைந்திருந்தது. பாராளுமன்றத்தினால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என விடுதலைப்புலிகள் கருதினாலும் பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவது தமிழர்களுக்கு பாதிப்பாகவே அமைந்திருந்தது. அம்பாறை மட்டக்களப்பு திருகோணதலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதற்கு பதிலான தெரிவு செய்யப்படுபவர்கள் முஸ்லீம்களும் சிங்களவர்களும் ஆகும். அவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி உட்பட தமக்கு வரும் நிதிகள் அபிவிருத்தி திட்டங்களை தங்கள் பகுதிகளுக்கே ஒதுக்குவார்கள். இதனால் தமிழ் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும். அது மட்டுமல்ல தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்படுவதற்கும் இந்த பதவிகளை அவர்கள் பயன்படுத்தி கொண்டனர். வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் தலைநகர் திருகோணமலை என பெருமையாக பேசுகிறோம். ஆனால் 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நான்கு உறுப்பினர்கள் தெரிவாகும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை. 2000ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் சனத்தொகையின் படி தமிழர்கள் 36வீதமும், முஸ்லீம்கள் 29வீதமும், சிங்களவர்கள் 33வீதமும் காணப்படுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழர்களால் ஒரு பிரதிநிதியை கூட தெரிவு செய்ய முடியாமல் போனது. 2000ஆம் ஆண்டு தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 29வீதமுள்ள முஸ்லீம்கள் இரு பிரதிநிதிகளையும் 33வீதமுள்ள சிங்களவர்கள் இரு பிரதிநிதிகளையும் பெற்றுக்கொண்டனர். திட்டமிட்ட குடியேற்றம், தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டமை, தமிழ் மக்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வம் இன்மை, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூதூர் வெருகல் போன்ற இடங்களில் இருந்த தமிழ் மக்கள் வாக்களிக்க முடியாமை போன்ற காரணங்களால் தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் ஒரு பிரதிநிதியை கூட தமிழர்களால் பெற முடியாமல் போய்விட்டது. திருகோணமலை மாவட்டத்தில் 200வருடங்களில் சனத்தொகையில் தமிழர்களின் விகிதாசாரம் எவ்வாறு வீழ்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை 1881ஆம் ஆண்டு தொடக்கம் இறுதியாக 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் வரை பார்த்தால் எவ்வாறு தமிழர்களின் சனத்தொகை விகிதம் வீழ்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை உணரமுடியும். 1881ஆம் ஆண்டில் தமிழர்கள் 64.5வீதமும் முஸ்லீம்கள் 25.5வீதமும் சிங்களவர்கள் 4வீதமாகவும் இருந்தார்கள். நூறு வருடங்களின் பின்னர் 1981ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தமிழர்களின் சனத்தொகை வீதம் பாரியளவில் வீழ்ச்சியடைந்த அதேசமயம் முஸ்லீம் மற்றும் சிங்களவர்களின் சனத்தொகை வீதம் அதிகரித்திருந்தது. 64வீதமாக இருந்த தமிழர்கள் 36வீதமாக வீழ்ச்சியடைந்தார்கள், 4வீதமாக இருந்த சிங்களவர்கள் 33.5வீதமாக உயர்ந்தார்கள், 25வீதமாக இருந்த முஸ்லீம்கள் 29வீதமாக உயர்ந்தார்கள். 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்கள் 40வீதமாக உயர்ந்துள்ளனர். தமிழர்கள் 32வீதமாக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2000ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் தமிழர்களின் தலைநகர் திருகோணமலை என சொல்ல முடியுமா என உறுத்தும் அளவிற்கு பெரும் பாதகமாக அமைந்தது. தமிழ் கட்சிகள் பிளவு பட்டு நின்றதும், தமிழ் வேட்பாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி போன்ற கட்சிகளில் போட்டியிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்ததுதும் தமிழ் பிரதிநிதி ஒன்றை திருகோணமலை மாவட்டத்தில் பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ரெலோ, மற்றும் தமிழ் சுயேச்சைக்குழுக்கள் என்பன மொத்தமாக 24ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தன. ஐக்கிய தேசியக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளில் போட்டியிட்ட தமிழர்கள் சுமார் 10ஆயிரம் வாக்குகளை அக்கட்சிகளுக்கு பெற்றுக்கொடுத்திருந்தனர். தமிழ் வாக்குகள் சிதையாமல் இருந்திருந்தால் திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கும். ஆறு ஆசனங்களை கொண்ட வன்னி மாவட்டத்தில் ரெலோ 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி நான்கு ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி மூன்று ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஒரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. யாழ். மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றாலும் தெரிவு செய்யப்படுபவர்கள் தமிழர்கள் தான், ஆனால் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு முஸ்லீம்கள் அல்லது சிங்களவர்களே தெரிவு செய்யப்படும் வாய்ப்பு காணப்படுகிறது. யாழ். மாவட்டத்தில் சிங்கள பேரினவாத கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி கால் பதிக்க முடியாத நிலை காணப்பட்டது. 2000ஆம் ஆண்டு நீண்டகாலத்திற்கு பின்னர் தமிழ் மக்களை மிகவும் அடக்கி ஒடுக்கிய ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். 1952ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த தம்பிஐயா அல்பேர்ட் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 48வருடங்களின் பின்னர் யாழ். மாவட்டத்தில் தமிழர்கள் மிகக்கொடூரமான போரை புரிந்த ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து யாழ்;. மாவட்ட தமிழ் மக்கள் ஒரு பிரதிநிதியை தெரிவு செய்தனர். தமிழ் மக்களின் அறிவு பொக்கிசமான யாழ்.நூலகத்தை எரித்து தமிழ் நிலங்களை ஆக்கிரமித்து இலட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த, 1977, 1981, 1983 என தமிழ் மக்கள் மீது இனஅழிப்பை செய்த, ஐக்கிய தேசியக்கட்சிக்கு நன்றி செலுத்துமுகமாக யாழ். மாவட்ட தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்து ஒரு பிரதிநிதியை தெரிவு செய்தனர். வன்னி திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஐக்கிய தேசியக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய தமிழினத்தை அழித்த கட்சிகளுக்கு வாக்களிப்பதை தவிர்த்து வருகின்றனர். அம்மாவட்டங்களில் பேரினவாத கட்சிகளில் தமிழர்கள் போட்டியிட்டாலும் அவர்களை நிராகரித்து வருகின்றனர். ஆனால் தமிழ் உணர்வு மிக்க யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சி போன்ற பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. 2000ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழ் பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடைந்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ஈ.பி.ஆர்.எல்.எவ், என தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றன. ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, மற்றும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷின் தேசிய ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய கட்சிகளில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டதாலும் தமிழ் வாக்குகள் பிரிக்கப்பட்டது. இதனால் 5 ஆசனங்களை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 உறுப்பினர்களை மட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றுக்கொண்டது 76வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பிரதிநிதிகளை மட்டும் பெற்றுக்கொண்டனர். 24வீதமுடைய முஸ்லீம் மக்கள் இரு பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டனர். 1977ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தாலும் கிழக்கு மாகாணத்தில் புரிந்துணர்வு அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் போட்டியிடுவது கிடையாது. 1965ஆம் ஆண்டு மூதூர், கல்குடா, மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி போட்டியிட்டது. இதனால் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கும் அபாயம் காணப்பட்டதால் கிழக்கில் போட்டியிடுவதை அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தவிர்த்துக்கொண்டது. ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இறந்த பின்னர் 2000ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும் வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் போட்டியிட்டது. கிழக்கில் அவர்களால் வெற்றி பெற முடியாது என தெரிந்திருந்தும் அத்தவறை அவர்கள் செய்தனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களின் வாக்களிப்பு வீதத்திற்கும் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் காணப்படும். முஸ்லீம் கிராமங்களில் 99வீதமான வாக்குபதிவு இருக்கும், தமிழ் கிராமங்களில் 35வீதத்திற்கு மேல் வாக்களிப்பு வீதம் செல்வது கிடையாது. குறிப்பாக படித்த தமிழ் மக்கள் என்று சொல்பவர்கள் வாக்களிக்க செல்வதில்லை. உதாரணமாக மட்டக்களப்பு நகரில் புளியந்தீவில் உள்ளவர்கள் படித்த மேல் மட்டத்தவர்கள் என கூறுவார்கள். ஆனால் அங்குள்ளவர்களில் 25வீதத்திற்கு குறைவானவர்களே வாக்களிப்பார்கள். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களிலேயே முஸ்லீம் மக்கள் வாழ்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சனத்தொகை வீதத்தின் படி ஒரு முஸ்லீம் உறுப்பினர் தான் தெரிவாக முடியும். ஆனால் இம்முறை அவர்கள் மூவரை தெரிவு செய்திருக்கின்றனர். காத்தான்குடியை சேர்ந்த ஹிஸ்புல்லாவும், ஏறாவூரைச்சேர்ந்த அலிசாகிர் மௌலானவும், ஓட்டமாவடியை சேர்ந்த அமீர்அலியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றனர். இந்த சாதுரியமும் விவேகமும் சாணக்கியமும் முஸ்லீம் அரசியல்வாதிகளிடம் தான் உண்டு. கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு தமிழ் வேட்பாளரும் ஒரு முஸ்லீம் வாக்கையும் பெற முடியாது. தேர்தல் பிரசாரம் என காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி என முஸ்லீம் கிராமங்களுக்குள் கால் வைக்க முடியாது. முஸ்லீம் கிராமங்களுக்கு அயலில் கூட எட்டிப்பார்க்க முடியாது. ஆனால் மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா, அமீர்அலி, அலிசாகிர் மௌலானா ஆகியோர் வெற்றி பெறுவது தமிழர்களின் வாக்குகளினாலேயே. ஓட்டமாவடியில் உள்ள காளிஅம்மன் சைவ கோவிலை இடித்து அந்த காணியை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற அதிகாரத்தை வைத்து கையகப்படுத்தி அதை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு கொடுத்து அதில் இறைச்சி கடை உட்பட சந்தை கட்டிடத்தை அமைத்தது நானே என வெளிப்படையாக சொன்ன ஹிஸ்புல்லாவுக்கு இம்முறையும் தமிழ் கிராமங்கள் பலவற்றில் ஆயிரக்கணக்கான வாக்குகள் கிடைத்தன. 2000ஆம் ஆண்டு தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கு தமிழ் கிராமங்களிலிருந்து 5ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. கிழக்கு மாகாணத்தில் 39.05வீத தமிழர்களும், 36.05வீத முஸ்லீம்களும், 23 வீத சிங்களவர்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். 2000ஆம் ஆண்டு தேர்தலில் 36வீத மக்களை கொண்ட முஸ்லீம்கள் 7 பிரதிநிதிகளையும் தேசிய பட்டியல் மூலம் 5க்கும் மேற்பட்டவர்களையும் தெரிவு செய்தனர். 23வீத மக்களை கொண்ட சிங்களவர்கள் 5 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டனர். ஆனால் கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருந்த போதிலும் இரு தமிழ் உறுப்பினர்கள் மட்டுமே தமிழ் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தெரிவு செய்ய முடிந்தது. அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணி இரு பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டது. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் யாரும் தெரிவு செய்யப்படவில்லை, இந்த அதிர்ச்சியான முடிவு வந்த வேளையில் தான் மட்டக்களப்பு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய மற்றொரு சம்பவமும் நடைபெற்றது. (தொடரும் ) (இரா.துரைரத்தினம்) https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted September 1, 2017 தொடங்கியவர் Share Posted September 1, 2017 தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைய மறுத்த தமிழர் விடுதலை கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரசும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 03 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடந்த பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் கட்சியை சேர்ந்தவர்களாக இரு உறுப்பினர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து எவரும் தெரிவு செய்யப்படவில்லை. 5 உறுப்பினர்களை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். நிமலன் சௌந்தரநாயகம் 15687 விருப்பு வாக்குகளையும் ஜோசப் பரராசசிங்கம் 12,867 விருப்பு வாக்குகளையும் பெற்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர். 800 வாக்குகளை தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் பெற்றிருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு ஆசனம் தான் கிடைத்திருக்கும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை சிங்கள முஸ்லீம் இனங்களுக்கு பறிகொடுத்திருந்த வேளையில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான நிமலன் சௌந்தரநாயகம் பொதுத்தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் முடிவடைவதற்கு முதல் 07.11.2000 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கையின் வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து பதவியை ஏற்குமுன் சுட்டுக்கொல்லப்பட்டவர் நிமலன் சௌந்தரநாயகம் தான். நிமலன் சௌந்தநாயகம் தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினராக மட்டக்களப்பில் காசி ஆனந்தன், வேணுதாஸ், ஆகியோருடன் இணைந்து செயல்பட்டவர். நிமலன் சௌந்தநாயகம் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். மூன்று மொழிகளிலும் நன்கு பரிச்சயம் கொண்டவர். தமிழ் பற்றும் துணிச்சலும் கொண்ட ஒருவரை மட்டக்களப்பு மக்கள் 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமது பிரதிநிதியாக தெரிவு செய்த போதிலும் ஒரு மாதகாலத்திற்குள் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றனர். நிமலன் சௌந்தநாயகம் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர். நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கொழும்பு சென்று சத்தியபிரமாணம் செய்வதற்கு முதல் விடுதலைப்புலிகள் சந்திக்க வருமாறு அவரை அழைத்திருந்தனர். சம்பவதினம் காலையில் தனது உதவியாளருடன் நிமலன் சௌந்தநாயகம் கரடியனாற்றுக்கு சென்று அப்போது அரசியல் பொறுப்பாளராக இருந்த விசுவை சந்தித்தார். அன்று மதியம் விசு உட்பட முக்கிய தளபதிகளுடன் உணவையும் உண்டார். மதிய உணவின் பின்னர் புறப்படும் போது நிமலன் சௌந்தரநாயகத்திற்கு புதிய ஹெல்மெட் ஒன்றையும் விசு அன்பளிப்பாக வழங்கினார். மோட்டார் சைக்கிளில் செங்கலடி கறுப்பு பாலத்தை கடந்து செங்கலடி நகருக்கு வந்த நிமலன் சௌந்தரநாயகம் செங்கலடி சந்தியில் தனது நண்பர்கள் சிலரை சந்தித்து பேசும் போது கரடியனாற்றிற்கு சென்று விடுதலைப்புலிகளை சந்தித்துவிட்டு வருவதாகவும் விசு தனக்கு புதிய ஹெல்மெட் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார் என்றும் மகிழ்ச்சியோடு கூறினார். அதன் பின்னர் செங்கலடியிலிருந்து வாழைச்சேனைக்கு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது மாலை 6மணியளவில் கிரானில் வைத்து நிமலன் சௌந்தரநாயகம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் வருகைக்காக காத்திருந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கைத்துப்பாக்கியால் அவரை சுட்டு விட்டு தப்பி சென்றார். இச்சம்பவம் கிரான் கூட்டுறவு சங்க கடைக்கு எதிரிலேயே நடைபெற்றது. பொதுமக்கள் பலர் அக்கடையில் நின்றுள்ளனர்;. கிரானில் உள்ள மக்களுக்கு மிகவும் பரிச்சயமான விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரே நிமலன் சௌந்தரநாயகத்தை சுட்டுக்கொன்றார் என்பது அப்பகுதி மக்களுக்கு தெரியும். விடுதலைப்புலிகளின் பிஸ்ரர் குழுவை சேர்ந்த ஒருவராலேயே நிமலன் சுட்டுக்கொல்லப்பட்டார். பெடியள் நிமலன் சௌந்தரநாயகத்தை சுட்டுவிட்டார்கள் என அப்பகுதி மக்கள் பேசிக்கொண்டனர். நிமலன் சௌந்தரநாயகத்தை கரடியனாற்றிற்கு அழைத்த விடுதலைப்புலிகள் நாடாளுமன்றத்திற்கு சத்திய பிரமாணம் செய்ய செல்லும் போது உதவியாளராக அல்லது சாரதியாக தங்களின் தற்கொலை போராளி ஒருவரை அழைத்து செல்ல வேண்டும் என கோரியதாகவும், அதற்கு நிமலன் சௌந்தரநாயகம் மறுத்ததாலேயே அவர் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. நிமலன் சௌந்தரநாயகத்தின் படுகொலையை கண்டித்து தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது ஒரு முட்டாள்தனமான கொலை என்றும் அமைதியான அரசியல் தீர்வை நாடி செல்லும் ஜனநாயக ரீதியான அரசியல் தலைவரை, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை படுகொலை செய்யும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்திருந்ததுத கிழக்கில் தெரிவு செய்யப்பட்டது இரு உறுப்பினர்கள் தான். அதிலும் ஒருவரை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்று விட்டனர். ஆளுமை மிக்க இளம் அரசியல் தலைவர் ஒருவரை மட்டக்களப்பு மக்கள் இழந்தனர். இப்படுகொலை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்திருந்தது. நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் அஞ்சலி நிகழ்விலும் இறுதிச்சடங்கிலும் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் ஆனந்தசங்கரி, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசிங்கம் உட்பட தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இன்று நிமலன் சௌந்தரநாயகம் உயிருடன் இருந்திருந்தால் கிழக்கு மாகாணத்தில் சிறந்த தமிழ் அரசியல் தலைவராக திகழ்ந்திருப்பார். எனினும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கி குண்டிலிருந்து தப்பியிருந்தாலும் ரவிராஜ் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டது போல நிமலன் சௌந்தரநாயகம் மீது அரச பயங்கரவாதத்தின் குண்டு பாய்ந்திருக்கும். தமிழ் இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களுக்கும் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் நிலவிய காலம் அது . இவ்வாறான சம்பவங்கள் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு பெரும் தடையாக அமைந்திருந்தது. 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னரே தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வம் அடைக்கலநாதனுடன் இந்த பேச்சுகள் நடைபெற்றன. இராணுவத்துடன் இணைந்து ஆயுதக்குழுவாக செயல்படுவதில்லை என்ற இணக்கத்திற்கு ரெலோ வந்திருந்தது . அவ்வேளையில் தான் ரெலோவின் மட்டக்களப்பு அமைப்பாளராக இருந்த றொபேர்ட் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை நவரத்தினராசா 07.06.2000 அன்று விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் கட்சிகளை இணைத்து பலமான ஓருத அமைப்பை உருவாக்குவதற்கு தாம் இணங்கியிருக்கும் இவ்வேளையில் இத்தகைய கொலைகளால் இவை பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்று தாம் கவலை அடைவதாக றொபேட்டின் மரணசடங்கிற்கு கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த ரெலோவின் தலைவர் சிறிகாந்தா கூறினார். 2000ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து 9ஆவது நாள் 19.10.2000 அன்று சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்டது. அதில் வடக்கு புனர்வாழ்வு, வடக்கு கிழக்கு தமிழ் விவகார அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவி ஏற்றுக்கொண்டார். வடக்கு புனர்வாழ்வு அமைச்சு அன்றைய தினமே துரிதமாக செயற்பட ஆரம்பித்தது. அன்றிரவு ( 19.10.2000 ) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசன் சுட்டுக்கொல்லப்பட்டார். நிமலராசனின் கொலையுடன் வடக்கின் புனர்வாழ்வு ஆரம்பமானது. நிமலராசனின் படுகொலை தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருந்தது. என்னதான் அச்சுறுத்தல் இருந்தாலும் ஊடகவியலாளர்களில் கைவைக்க மாட்டார்கள் என்ற எமது நம்பிக்கை நிமலராசனின் படுகொலை மூலம் தகர்த்தெறியப்பட்டது. நிமலராசனுக்கு அஞ்சலி செலுத்தி மட்டக்களப்பு நகரில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் பதாகைகளை கட்டியிருந்தது. மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக இருந்த நவநீதன் பதாகைகளை கட்டுவதற்கு அனுமதி தந்ததுடன் தனது ஊழியர்கள் மூலம் கட்டுவதற்கும் உதவினார். நவநீதன் துணிச்சல் மிக்க அதிகாரி. மட்டக்களப்பில் இருந்த பத்திரிகையாளர்களின் மிக நெருங்கிய நண்பர். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கி வந்தார். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்திற்கு சொந்தமாக அலுவலகம் மற்றும் மண்டபம் உட்பட கட்டிடங்களை அமைப்பதற்கு மட்டக்களப்பு நகரில் காணி ஒன்றையும் வழங்கியிருந்தார். அந்த காணியில் திட்டமிட்டபடி கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தால் இலங்கையில் சொந்தமாக கட்டிடத்தை கொண்ட பத்திரிகையாளர் சங்கமாக கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் திகழ்ந்திருக்கும். நிமலராசனின் படுகொலையை கண்டித்து 27.10.2000 அன்று வடக்கு கிழக்கில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மறுநாள் சனிக்கிழமை ஊடகவியலாளர் நிமலராசனுக்கான அஞ்சலி கூட்டம் ஒன்றை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடத்தியது. இக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. சிவராம் உட்பட பலர் உரையாற்றினர். சிவராமின் உரை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மட்டுமன்றி தமிழ் மக்கள் மத்தியில் உறுதியான தமிழ் அரசியல் தலைமை ஒன்றின் அவசியம் பற்றியும் அமைந்திருந்தது. வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்கள் அரசிற்கு தலையாட்டும் பொம்மைகளாக இல்லாமல் தமிழர் உரிமைகளை மீட்பதற்காக சர்வதேச ரீதியில் செயற்பட கூடியவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றியும் ஆராயப்பட்டன. தமிழ் மக்கள் மத்தியில் வாக்களிப்பில் ஆர்வம் இல்லாமை, அரசியல் விழிப்புணர்வு இன்மை, தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமை, போன்ற காரணிகளே தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது என்ற கருத்தே அக்கூட்டத்தில் மேலோங்கியிருந்தது. அந்த கூட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக ஆங்கிலதுறை விரிவுரையாளர் கெனடி விஜயரத்தினமும் வந்திருந்தார். அதன் பின்னரே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்துடனும் சிவராமுடனும் கெனடிக்கு நெருக்கம் ஆரம்பமானது. அன்று மாலை சிவராம், நடேசன், உட்பட பத்திரிகையாளர்கள் ஒரு இடத்தில் சந்தித்து பேசினோம். அதில் கெனடியும் கலந்து கொண்டார். அக்காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இரு பிரிவுகளாக இயங்கின. வரதராசபெருமாள் தலைமையில் ஒரு பிரிவும், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஒரு பிரிவும் இயங்கி வந்தன. வரதராசபெருமாள் தலைமையிலான குழுவின் கீழேயே மட்டக்களப்பில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இயங்கியது. இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ராசிக்குழுவும் வரதராசபெருமாள் அணியின் கீழேயே செயல்பட்டது. இராணுவ துணைக்குழுக்களாக இயங்க கூடாது என்ற நிபந்தனையை சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் ஏற்றுக்கொண்டது. இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ராசிக்குழு போன்ற துணை இராணுவக்குழுக்களுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆயுதக்குழுக்களாக தாம் செயற்படவில்லை என ரெலோ அறிவித்த பின்னும் மட்டக்களப்பு ஆரையம்பதி விசேட அதிரடிப்படையின் முகாமில் ரெலோ வரதன் குழு ஆயுதங்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். மட்டக்களப்புக்கு வருகை தந்த ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் இந்த விடயத்தை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கெனடி விஜயரத்தினம், சிவராம் ஆகியோர் மட்டக்களப்பு நகரில் இருந்த கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் நடந்த சந்திப்பில் வலியுறுத்தினர். வரதன் குழுவை தாம் தமது கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகவும் அக்குழுவுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் ரெலோ தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தமிழ் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இயங்குவது என்பதில் ரெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவை வழங்கினர். 1993ஆம் ஆண்டு நடந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் மற்றும் 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஆகியவற்றில் ரெலோவும் புளொட்டும் இணைந்து போட்டியிட்டன. 1994ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வன்னி மாவட்டத்தில் மட்டும் புளொட்டும் ரெலோவும் இணைந்து கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஏனைய மாவட்டங்களில் மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தனர். 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ரெலோ தனியாக போட்டியிட்டிருந்தது. வன்னியை தவிர ரெலோவுக்கு வேறு மாவட்டங்களில் சொற்பவாக்குகளே கிடைத்திருந்தன. 1994ஆம் ஆண்டு, 2000ஆம் ஆண்டு தேர்தல்களில் ஈ,பி.ஆர்.எல்.எவ் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களில் போட்டியிட்ட போதிலும் படுதோல்விகளையே சந்தித்திருந்தது. 1994ஆம் ஆண்டு தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழ். மாவட்டத்தில் 263 வாக்குகளையும், வன்னியில் 3465 வாக்குகளையும் மட்டக்களப்பில் 4802 வாக்குகளையும் திருகோணமலையில் 881 வாக்குகளையும் மட்டுமே பெற்றிருந்தனர். 2000ஆம் ஆண்டில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இரண்டாக பிளவு பட்டிருந்தது. 2000ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி சுயேச்சையாகவும் வரதர் அணி புளொட் கட்சியுடனும் இணைந்து போட்டியிட்டன. இதில் மிக சொற்பமான வாக்குகளை மட்டுமே இரு அணிகளும் பெற்றிருந்தன. மிகவும் செல்வாக்கிழந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் ஒரு பிரிவான சுரேஷ் அணி தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைவதற்கு ஆர்வம் கொண்டிருந்தது. எப்படியாவது தம்மை அக்கூட்டில் இணைத்து விட வேண்டும் என்ற ஆர்வத்திலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் செயற்பட்டார். ஆனால் மட்டக்களப்பிலிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் வரதர் அணியுடன் செயற்பட்டதால் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு அப்போது மட்டக்களப்பில் எந்த ஆதரவு தளமும் இருக்கவில்லை. ரெலோவும், ஈ.பி.ஆர்.எவ்.எவ் சுரேஷ் அணியும் தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைவதற்கு மிக ஆர்வமாக இருந்த அதேவேளை தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஆகியன ஆயுதக்குழுக்களாக இயங்கிய ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தயங்கின. துமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் ஜோசப் பரரராசிங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். – தொடரும். ( இரா.துரைரத்தினம் ) (தொடரும் ) https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted September 6, 2017 தொடங்கியவர் Share Posted September 6, 2017 சந்திரிக்காவை காப்பாற்ற தமிழர் கூட்டணி தலைவர்கள் செய்த மோசடி -தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 04 ஆயுதக்குழுக்களுடன் தேர்தலில் போட்டியிட்டு சூடுகண்ட பூனையாக தாம் இருப்பதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவராக இருந்த ஜோசப் பரராசசிங்கம் அச்சம் தெரிவித்தார். ஆரம்பத்தில் தமிழ் இயக்கங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள ஜோசப் பரராசசிங்கம் போன்றவர்கள் கடும் எதிர்ப்பை காட்டி வந்தனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து 1989ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் அக்கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எவ்.எவ், ரெலோ, ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய இயக்கங்கள் போட்டியிட்டன. தலைமை வேட்பாளர்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்தவர்களே போட்டியிட்டனர். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அ.அமிர்தலிங்கம் தலைமை வேட்பாளராக போட்டியிட்டார். அத்தேர்தல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெரும் சோதனையாகவும் வீழ்ச்சியாகவும் அமைந்தது. யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மூவரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள். மட்டக்களப்பில் ரெலோ உறுப்பினர் ஒருவரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் இருவரும் தெரிவாகினர். அம்பாறையில் ரெலோ உறுப்பினர் தெரிவானார். வன்னியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் இருவர் தெரிவாகினர். பழம் பெரும் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து ஒருவர் கூட தெரிவாகவில்லை. தமிழ் இயக்கங்கள் கள்ளவாக்கை போட்டு தம்மை தோற்கடித்து விட்டன என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தேர்தல் முடிந்த பின்னர் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். இனிமேல் தமிழ் இயக்கங்களுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்திருந்தது. இந்த கசப்பான அனுபவத்தால் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற இயக்கங்களுடன் இணைந்து தேர்தல் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தயக்கம் காட்டினர். அக்காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இரு அணிகளாகவே செயல்பட்டன. ஒரு அணி ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருக்கமாக செயற்பட்டது. மற்ற அணி விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டது. ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருக்கமான அணியில் ஆனந்தசங்கரி, சம்பந்தன், நீலன் திருச்செல்வம் ஆகியோர் இருந்தனர். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அணியில் ஜோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா, போன்றவர்கள் இருந்தனர். ஜனாதிபதி சந்திரிக்கா தமிழர்களுக்கு உரிமையை வழங்கி பிரச்சினையை தீர்த்து வைப்பார் என சம்பந்தன் அணியினர் கூறிவந்தனர். சந்திரிக்கா அம்மையானர் ஒரு பொதியை வைத்திருக்கிறார். அதன் மூலம் தீர்வு நிட்சயம் கிடைக்கும் என சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் தரப்பினர் நம்பினர். சந்திரிக்காவின் பொதியை தயாரித்தவர் நீலன் திருச்செல்வம் தான் என அக்காலப்பகுதியில் பேச்சு அடிப்பட்டது. சந்திரிக்காவுக்கு நெருக்கமாக செயற்பட்ட அணி சந்திரிக்காவுக்காக கள்ள கையெழுத்து இட்டு அறிக்கை வெளியிட்ட சம்பவம் இந்த இரு அணிகளுக்கிடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. கள்ள கையெழுத்து விவகாரம் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச்சபை கூட்டத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. சமாதானபுறா வேசம் போட்டு தமிழர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா ஜனாதிபதியாகிய கையோடு தன்னுடைய சுயரூபத்தை காட்டத்தொடங்கினார் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 1999 ஆம் ஆண்டு காலப்பகுதி. கொழும்பில் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்ட போது விடுதலைப்புலிகள் கொழும்பை தாக்கும் திட்டம் இருப்பதாக தகவல் கூறப்பட்டது. புலிகள் கொழும்பை தாக்கினால் தமிழர்களை நானே தலைமை தாங்கி தாக்குவேன் என கொழும்பில் பிரமுகர்களுடனான சந்திப்பின் போது சந்திரிக்கா எச்சரித்தார். சண்டேலீடர் பத்திரிகையில் குமார் பொன்னம்பலம் இதை ஆதாரத்துடன் வெளியிட்டார். நாட்டின் ஜனாதிபதி அந்த நாட்டில் இருக்கும் இன்னொரு இனத்தை நானே தலைமை தாங்கி கொலை செய்வேன் என கூறுவது எவ்வளவு பாரதூரமான விடயம். வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், இராஜதந்திரிகள் மட்டத்திலும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. சந்திரிக்காவின் இப்பேச்சு தமிழர்கள் மட்டத்திலும் பெரும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குமார் பொன்னம்பலம் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் ஜனாதிபதி சந்திரிக்காவை மிகக்கடுமையாக சாடிவந்தார். அந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தமிழர்களை கொல்வேன் என சந்திரிக்கா அம்மையார் சொல்லவில்லை என்றும் அவர் தமிழர்களை நியாயமாக நடத்தும் ஒரு தலைவர் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை சகல ஊடகங்களுக்கும் அனுப்பபட்டிருந்தது. நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என சந்திரிக்கா கூறினாரா இல்லையா என தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எப்படி தெரியும்? தமிழர் விடுதலைக்கூட்டணி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, அப்படியானால் ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை விட்டது? தமிழர் விடுதலைக்கூட்டணி ஏன் இதில் மூக்கை நுழைத்து கொண்டது? சந்திரிக்காவுக்கு மிக நெருக்கமானவர்கள் என கருதப்படும் சிலர் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றிலேயே நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என சந்திரிக்கா கூறியதாக சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் தமிழர்கள் என்று சொல்லப்போனால் இலங்கை வங்கியின் தலைவராக இருந்த ராஜன் மட்டுமே அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். சந்திக்கா பேசிய விடயம் எப்படி வெளியில் போனது? தமிழர் என்ற காரணத்தால் ராஜன் மீது சந்திரிக்காவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இலங்கை வங்கி தலைவர் பதவியிலிருந்து ராஜன் தூக்கி எறியப்பட்டார். இந்த விடயத்தை ராஜன் தனக்கு சொல்லவில்லை என்றும் வேறு ஒருவர் மூலமே ஆதாரத்துடன் பெற்றதாக குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். சந்திரிக்காவை காப்பாற்றும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்ட அறிக்கை கூட கள்ள கையொப்பம் இட்டு மோசடியான முறையிலேயே வெளியிடப்பட்டிருந்தது. நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என தான் கூறியது எப்படியோ அம்பலமாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தார் சந்திரிக்கா, தனது ஆலோசகரான நீலன் திருச்செல்வத்தை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார் சந்திரிக்கா, அங்கு சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் தாங்கள் அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக உறுதியளித்து விட்டு வந்தார். அக்காலப்பகுதியில் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகிய மூவர் மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்தனர். அந்த நேரத்தில் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்தார். தலைவர் சிவசிதம்பரம் சுகயீனமுற்றிருந்தால் தலைவருக்குரிய பணிகளை ஆனந்தசங்கரியே செய்து வந்தார். அப்போது கட்சியின் செயலாளராக இருந்த சம்பந்தன் கொழும்பில் இருக்கவில்லை. கட்சியின் செயலாளரே அனைத்து அறிக்கைகளிலும் கையொப்பம் இடவேண்டும். சந்திரிக்கா அம்மையாரின் களங்கத்தை போக்க நீலன் திருச்செல்வம் அறிக்கையை தயாரித்தார். அறிக்கையின் கீழ் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் என சம்பந்தனின் கையொப்பமும் இடப்பட்டது. சம்பந்தன் என கள்ள கையொப்பத்தை வைத்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம் தான். நீலன் திருச்செல்வத்தின் அலுவலகத்திலிருந்தே சகல பத்திரிகைகளுக்கும் தொலைநகல் மூலம் அறிக்கை அனுப்பட்டது. சண்டேலீடர் பத்திரிகைக்கும் ஒரு பிரதி அனுப்பட்டது. சண்டேலீடர் அலுவலகத்தில் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவும் குமார் பொன்னம்பலமும் பேசிக்கொண்டிருந்த போதே தொலைநகல் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கை அங்கு வந்து சேர்ந்தது. அந்த அறிக்கையை லசந்த விக்கிரசிங்க குமார் பொன்னம்பலத்திடம் காட்டினார். குமார் பொன்னம்பலம் நெருங்கிய நண்பர் என்பதால் மட்டுமல்ல நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என்ற சந்திரிக்காவின் சர்ச்சைக்குரிய விடயத்தை சண்டே லீடரில் எழுதிவருபவர் என்ற ரீதியிலும் லசந்த அந்த அறிக்கையை குமாரிடம் காட்டினார். அறிக்கையை பார்த்தவுடன் குமார் உடனடியாக சொன்னார். இதில் பெரிய மோசடி இருக்கிறது. இது சம்பந்தனின் கையொப்பம் இல்லை. நீலன் தான் ஆர்.சம்பந்தன் என்று கையொப்பம் வைத்திருக்கிறார் என்றார் குமார் பொன்னம்பலம். சண்டே லீடர் பத்திரிகையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டதுடன் இந்த கையெழுத்து மோசடி பற்றியும் குமார் பொன்னம்பலம் விலாவாரியாக எழுதினார். ஒருவரின் கையெழுத்தை இன்னொருவர் வைப்பது கிரிமினல் குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். சம்பந்தனின் உண்மையான கையொப்பம், நீலன் திருச்செல்வம் இட்ட கையெழுத்து எப்படி இந்த கள்ள கையொப்பத்திற்கு பொருந்துகிறது என்பதை படங்களுடனும் ஆதாரங்களுடனும் சண்டே லீடர் வெளியிட்டது. அக்காலப்பகுதியில் நான் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். சில வருடங்களுக்கு முதல் விடிவானம் பத்திரிகை உரிமையாளர் மனோ இராசசிங்கம் குமார் பொன்னம்பலத்துடன் தொலைபேசியில் அறிமுகம் செய்து வைத்தார். மனோ இராசசிங்கத்தின் மனைவி சாந்தி சச்சிதானந்தம் ஒருநாள் என்னை கொழும்பில் வைத்து குமார் பொன்னம்பலத்திற்கு நேரில் அறிமுகப்படுத்தி வைத்தார். சாந்தி குமார் பொன்னம்பலத்தின் உறவினரும் கூட. 1991ஆம் ஆண்டு யூன் 12ஆம் திகதி இடம்பெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மட்டக்களப்பில் நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக குமார் பொன்னம்பலம் சமூகமளித்தார். மட்டக்களப்பில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுடனேயே தங்கியிருந்தார். அப்போது குமார் பொன்னம்பலத்தை நேரில் சந்தித்த போதிலும் நெருக்கமான தொடர்பு கிடையாது. விடிவானம் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்திலேயே குமார் பொன்னம்பலத்துடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. மட்டக்களப்பில் நடைபெறும் கடத்தல்கள், கைதுகள், கொலைகள் பற்றிய விபரங்களை பெறுவதற்காக என்னுடன் குமார் பொன்னம்பலம் அடிக்கடி தொடர்பு கொள்வார். அந்த தொடர்பினால் விடிவானம் பத்திரிகைக்கும் தான் வெளியிடும் அறிக்கைகள் கட்டுரைகளை குமார் அனுப்புவார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கள்ள கையொப்ப அறிக்கை விவகாரத்தையும் குமார் பொன்னம்பலம் சகல ஆதாரங்களுடன் அனுப்பியிருந்தார். அதனை விடிவானம் பத்திரிகையில் பிரசுரித்தோம். கள்ள கையெழுத்து விவகாரம் அம்பலமானதை அடுத்து சம்பந்தன் ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் சொல்லித்தான் நீலன் திருச்செல்வம் என்னுடைய கையெழுத்தை வைத்தார் என்று. சட்டம் தெரிந்தவர்கள், மெத்தபடித்தவர்களின் இந்த முட்டாள் தனங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என மௌனமாக இருந்தனர் தமிழ் மக்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் மத்தியில் நீலன் திருச்செல்வம், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றவர்களின் நடவடிக்கைகள், சர்வாதிகாரப்போக்குகள், தன்னிச்சையான முடிவுகள் பற்றி கடும் அதிருப்தியும் ஆட்சேபனையும் எழுந்தன. அடுத்த வாரம் கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை காரியாலயத்தில் நிறைவேற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. காரசாரமான விவாதங்கள் நடந்தன. சந்திரிக்காவுக்காக வக்காலத்து வாங்கியது தேவையற்ற செயல். தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை செய்திருக்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் உட்பட சிலர் கூறினர். சந்திரிக்கா அப்படி கூறினாரா இல்லையா என ஆரூடம் கூறுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு என்ன தேவை இருக்கிறது என அவர்கள் கேள்வி எழுப்பினர். நீலன், சம்பந்தன், ஆனந்தசங்கரி மீது கண்டனங்கள் எழுந்தன. கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது. அன்று மாலை நீலன், சம்பந்தன், ஆனந்தசங்கரி ஆகியோர் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்தனர். நீண்டநேரம் பேசினர். என்ன பேசினர் என்பது யாருக்கும் தெரியாது. மகிந்த ராசபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது கட்சிக்கு தெரியாமல் தனியாக சம்பந்தன் சந்தித்து வந்தார். அது போல சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியாமல் சந்திப்பது வழமை. தங்களுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என ஜனாதிபதி சந்திரிக்காவிடம் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகியோர் முறைப்பாடு செய்ததை அடுத்து மூவருக்கும் குண்டு துளைக்காத கார்கள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் வழங்கப்பட்டது. ஆனந்தசங்கரி, சம்பந்தன் ஆகியோருக்கு கொழும்பில் பாதுகாப்புடன் கூடிய வீடுகளும் ஜனாதிபதி சந்திரிக்காவினால் வழங்கப்பட்டது. அந்த வீடுகளிலேயே சம்பந்தன், ஆனந்தசங்கரி ஆகியோர் இப்போதும் இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் நடைபெற்று சிறிது காலத்தில் 29.07.1999 அன்று கொழும்பில் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலில் நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டார். இந்நிலையில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றிய பேச்சுக்கள் ஜோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா ஆகியோருடனேயே நடந்தப்பட்டது. ( தொடரும் ) – இரா.துரைரத்தினம். https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted September 11, 2017 தொடங்கியவர் Share Posted September 11, 2017 இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதே இலாபமாக புளொட் இயக்கம் கருதியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 05 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 05 வடக்கு கிழக்கை தளமாக கொண்ட தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின் வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு ஆகிய பகுதிகளை தளமாக கொண்ட தமிழ் கட்சிகள் சில விடயங்களில் இணைந்து செயல்பட ஆரம்பித்தன. 2000ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி ரெலோவின் கொழும்பு அலுவலகத்தில் தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒரு கூட்டம் ரெலோவின் தலைவர் என்.சிறிகாந்தா தலைமையில் நடைபெற்றது. போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேசத்தை கோருவதே இக்கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. இக்கூட்டத்தில் ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஷ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஷ், தேசிய தொழிலாளர் ஸ்தாபனம், அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஷ், ஆகிய எட்டுக்கட்சிகள் கலந்து கொண்டன. சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ளவில்லை என்றும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தாமும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஈ.பி.டி.பியும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்தம் ஒன்றை செய்வதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழ் கட்சிகள் வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து வலியுறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பிந்துனுவெல படுகொலை, கோபாலபுரம், மிருசுவில் படுகொலைகளுக்கு நீதி விசாரணை நடத்துமாறு சர்வதேச நாடுகளிடம் கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இக்கட்சிகளின் குழுக்கள் சில தூதுவர்களையும் சந்தித்திருந்தார்கள். இதன் பின்னர் வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு ஆகிய இடங்களில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பாலியல் பலாத்காரங்களை கண்டித்தும் இத்தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்னாரில் 22வயதுடைய நந்தகுமார் விஜயகலா, சின்னத்தம்பி சிவமணி ஆகிய இரு இளம்பெண்களை கைது செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவர்களை 2001 மார்ச் 19ஆம் திகதி அன்று இரவு 10மணியளவில் சித்திரவதை செய்ததுடன் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்தார். இது தொடர்பாக தமிழ் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக சட்டவைத்திய அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று மன்னார் சட்டவைத்திய அதிகாரி ஜி.சோமசேகரம் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இந்த பாலியல் பலாத்காரத்தை கண்டித்து இதற்கு நீதி வேண்டி கொழும்பில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதே போன்று கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து 2001 ஏப்ரல் 10ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஷ் கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் 11 தமிழ் கட்சிகள் கலந்து கொண்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் கட்சி தலைவர் ஆறுமுகம் தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் உட்பட மலையக கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழ் கட்சிகள் பொதுவான சில விடயங்களை கூட்டாக இணைந்து கையாண்டன. ஆனால் ஒரே கொள்கையின் கீழ் இணைந்து செயல்படுவதற்கோ அல்லது தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கோ தயாராக இருக்கவில்லை. இந்நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்ற போது அதில் புளொட் என்ற சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ விடுதலைக்கழகத்தை சேர்த்துக் கொள்வதா என்ற கேள்வி எழுந்தது. 1999ஆம் ஆண்டுகளின் பின்னர் ரெலோவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதை நிறுத்தியிருந்தன. அவ்வாறு இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய நபர்களையும் தமது கட்சிகளிலிருந்து வெளியேற்றியிருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எவ் ராசி குழுவுக்கும் தமக்கும் தொடர்பு கிடையாது என ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி அறிவித்தது. அது போல விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து செயல்பட்ட ரெலோ வரதன் குழு உட்பட சில நபர்களை ரெலோ தமது கட்சியிலிருந்து நீக்கியிருந்தது. ஆனால் புளொட் தொடர்ந்து இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது. பாரிய மனித உரிமை மீறல், மற்றும் படுகொலை குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வடகிழக்கில் காணாமல் போனோர் ( ஓய்வுபெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ) ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகளில் சுமத்தப்பட்டிருந்தன. 1990 யூன் மாதம் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவம் மட்டக்களப்பு நகர் உட்பட எழுவான்கரை பகுதிகளை கைப்பற்றிய பின்னர் புளொட் இயக்கம் இராணுவத்துடன் இணைந்து மிகப்பெரிய கூட்டுப்படுகொலைகளை நடத்தியதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, உட்பட மட்டக்களப்பில் நடைபெற்ற பெரும்பாலான படுகொலைகளில் புளொட் மோகன் தலைமையிலான குழுவினருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக நீதியரசர் பாலகிட்ணர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். 1990களின் பின்னர் மட்டக்களப்பு பிரதேசத்தில் மக்களை அச்சத்தில் வைத்திருப்பதற்காக இராணுவமும் புளொட் மோகன் தலைமையிலான குழுவினரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் மிகக்கொடூரமான படுகொலைகளை செய்து வந்தனர். மட்டக்களப்பு புளியந்தீவையும் தாண்டவன்வெளியையும் இணைக்கும் புதுப்பாலத்தில் வைத்து நண்பகலுக்கு பின்னர் கைது செய்யும் அப்பாவி பொதுமக்களை ரயரை கழுத்தில் போட்டு உயிருடன் எரிப்பார்கள். சில சடலங்கள் குற்றுயிராக கிடக்கும். யாரும் அந்த இடத்திற்கு சென்று அவற்றை மீட்க முடியாது. நண்பகலுக்கு பின்னர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதில்லை. அவ்வாறான பயங்கரமான சூழல் நிலவிய வேளையில் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த முனாஸ், புளொட் மோகன் போன்றோர் வகைதொகை இன்றி மக்களை கொன்று குவித்து வந்தனர். அக்காலப்பகுதியில் தினசரி இரண்டு மூன்று சடலங்கள் புதுப்பாலத்தடியில் அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்படும். மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் புளொட் இயக்க அலுவலகமும், சிறைச்சாலையை அண்டிய கட்டிடத்தில் புளொட் மோகன், முனாஸ் ஆகியோரின் சித்திரவதை முகாமும் இருந்தது. இந்த இடங்களை தாண்டி செல்வது என்பது அபாயகரமான பயணமாக இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாதையால் செல்வதை தவிர்த்து வந்தனர். சித்திரவதை செய்து படுகொலை செய்வதில் புளொட் இயக்கம் முன்னணியில் இருந்தது. தங்களை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டும், தமக்கு பயந்து அடிபணிந்து மக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக மிகக்கொடூரமான படுகொலைகளை புளொட் செய்தது. மட்டக்களப்பில் புளொட் மோகன், வவுனியாவில் மாணிக்கதாசன், என மக்களை அச்சமூட்டும் நபர்கள் புளொட் இயக்கத்தில் இருந்தனர். உதாரணமாக படுவான்கரை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு வரும் பொதுமக்கள் புளொட் மோகனின் கைகளில் அகப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்துடன் பதட்டத்துடன் இருப்பார்கள். படுவான்கரை பகுதியில் உள்ள ஏழைத்தொழிலாளர்கள் விறகு வெட்டிக்கொண்டு வந்து மட்டக்களப்பு நகரில் விற்றுவிட்டு செல்வார்கள், புளொட் இயக்கத்தினர் அவர்களிடம் இருக்கும் 300 அல்லது 400ரூபாய்களை பறித்து விட்டு அவர்களை படுகொலை செய்த சம்பவங்கள் பல உண்டு. விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளை பார்க்க செல்லும் அவர்களின் பெற்றோர் உறவினர்களையும் செங்கலடி கறுப்பு பாலம், வவுணதீவு ஆகிய இடங்களில் மறைந்திருக்கும் புளொட் இயக்கத்தினர் அவர்களை பிடித்து சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவங்கள் ஏராளம். ஆரம்பகாலத்தில் தமிழ் இளைஞர் பேரவையிலும் பின்னர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகவும் இருந்த வேணுதாஸ் 1990களில் யுத்தம் ஆரம்பமாகியவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சென்று தங்கியிருந்தார். அவரின் மனைவி ஜமுனா ( மக்கள் வங்கியில் வேலை செய்தவர் ) கணவனை பார்ப்பதற்காக செங்கலடி கறுப்பு பாலம் ஊடாக சென்ற போது புளொட் மோகன் தலைமையிலான குழுவினர் அவரையும் இன்னொரு பெண்ணையும் பிடித்து சென்றனர். இரு பிள்ளைகளின் தாயான வேணுதாஸ் ஜமுனாவை மிக கொடூரமாக சித்திரவதை செய்த பின் சடலத்தை பொதுமக்கள் பார்க்க கூடியவாறு வீதி ஒரத்தில் வீசியிருந்தனர். பின்னர் வேணுதாசையும் புளொட் மோகன் குழுவினர் சுட்டுக்கொன்றனர். அவர்களின் இரு பிள்ளைகளும் தாய் தந்தையை இழந்து அனாதைகளாக்கப்பட்டனர். இப்படி பல சம்பவங்கள் உண்டு. 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். நகரில் புளொட் இயக்கம் செய்த கோரமான ஒரு படுகொலை அந்த இயக்கம் மீது யாழ். மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. யாழ். நகரில் புடவைக்கடை ஒன்றில் வேலை செய்த கரவெட்டியை சேர்ந்த 23வயதுடைய இராசரத்தினம் இராஜேஸ்வரன் என்ற இளைஞரை 1999 பெப்ரவரி 20ஆம் திகதி வல்லை இராணுவ சோதனை சாவடியில் சோதனையை முடித்துக்கொண்டு செல்லும் போது புளொட் இயக்கத்தினர் கடத்தி சென்றனர். நெல்லியடியில் உள்ள புளொட் இயக்க முகாமில் வைத்து இரு தினங்களாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் 1999 பெப்ரவரி 22ஆம் திகதி இரவு அவரின் தலையை வெட்டி வாளில் எடுத்து சென்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி சந்தியில் போட்டனர். வைத்தியசாலை வீதி கஸ்தூரியார் வீதி சந்தியில் தலையை புளொட் இயக்கத்தினர் வைத்திருந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன் புளொட் இயக்கம் மீது மக்களுக்கு வெறுப்பும் ஏற்பட்டிருந்தது. இச்சம்பவம் பற்றி யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் புளொட் இயக்கம் இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதால் கொலையாளிகள் மீது எந்த சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. புளொட் இயக்கத்தின் யாழ்ப்பாண பொறுப்பாளராக இருந்த சதீஸ் என்று அழைக்கப்படும் தில்லைநாதன் சந்திரமோகன் யாழ். நகரப்பகுதியில் வைத்து 1999 ஜனவரி 24 அன்று விடுதலைப்புலிகளின் பிஸ்ரல் குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டார். புளொட் இராணுவ பொறுப்பாளர் மாணிக்கதாசன் 1999 செப்டம்பர் 02 திகதி வவுனியாவில் வைத்து குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டார் என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த புளொட் மோகன் 2004 யூலை 31ஆம் திகதி கொழும்பில் வைத்து பிஸ்ரல் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். புளொட் இயக்கம் தொடர்ந்து இராணுவத்தினருடன் சேர்ந்து பொதுமக்களை படுகொலை செய்து வந்ததால் புளொட் இயக்கத்தை தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைந்து கொள்வதற்கு பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்கள் விடுதலைப்புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடன் தொடர்பை பேணி வந்தாலும் புளொட் இயக்கத்துடன் தொடர்பை பேணாது விலகியே இருந்தனர். தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சிவராமும் புளொட் இயக்கத்தை இதில் சேர்க்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை. 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டக்களப்புக்கு வந்திருந்த சித்தார்த்தனை வைத்தியசாலை வீதியில் இருந்த புளொட் அலுவலகத்தில் நடேசனும் நானும் ( இன்னும் ஒருவர் உதயகுமாராக இருக்கலாம் ) சந்தித்தோம். தமிழ் கட்சியின் கூட்டில் இணைவதற்கு தனக்கு சம்மதம் தான், ஆனால் தங்களது உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதையே விரும்புகின்றனர். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என சொன்னார். தமிழ் கட்சிகள் இணைந்து அது பலமான தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக உருவாகும் என அந்நேரம் சித்தார்த்தன் போன்றவர்கள் நம்பவில்லை. இராணுவத்துடன் சேர்ந்து இருப்பதே இலாபம் என கருதினர். விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக ஏனைய தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொண்ட போதிலும் யுத்தம் முடியும் வரை புளொட் இயக்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி யுத்தம் வரை விடுதலைப்புலிகளை முற்றாக அழிப்பதில் இராணுவத்துடன் புளொட் இயக்கம் சேர்ந்து இயங்கியது. யுத்தத்தை வெற்றி கொள்வதில் புளொட் இயக்கம் வழங்கிய பங்களிப்பு பற்றி யுத்தத்தை வழிநடத்திய அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்சவும் பல தடவை சுட்டிக்காட்டியிருக்கிறார். யுத்த வெற்றி பற்றி கோத்தா வோர் ( GOTAS WAR ) என்ற புத்தகத்தை சந்திரபிறேமா என்பவர் எழுதி 2002 மே 14ஆம் திகதி கொழும்பில் வெளியிட்டார். அந்த விழாவில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராசபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். அதில் புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்து கொண்டார். யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு புளொட் வழங்கிய ஒத்துழைப்புக்கு அதில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்த வெற்றி விழாவாக நடைபெற்ற அந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் அரசியல்வாதி சித்தார்த்தன் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அளவிற்கு புளொட் இயக்கம் யுத்தம் முடியும் வரை இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கியது. தமிழ் கட்சிகளின் கூட்டில் புளொட் இயக்கத்தை சேர்ப்பதற்கு பொது அமைப்புக்கள் மட்டுமன்றி மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகளும் விரும்பவில்லை. 2001 பெப்ரவரி மாதத்தில் முக்கியமான சந்திப்புகள் நடைபெற்றன. கீரிகளும் பாம்புகளுமாக இருந்தவர்கள் சந்தித்து கொண்ட சம்பவங்கள் அவை. ( தொடரும் ) ( இரா.துரைரத்தினம் ) https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted September 26, 2017 தொடங்கியவர் Share Posted September 26, 2017 1986ஆம் ஆண்டின் பின் பரம எதிரிகளாக செயல்பட்ட விடுதலைப்புலிகளை சந்தித்த ரெலோ தலைவர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 06 தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என செயற்பட்ட சிவராம் விடுதலைப்புலிகளை சந்திக்கும் போதெல்லாம் இது தொடர்பாக வலியுறுத்தி வந்தார். இந்த வேளையில் சிவராமின் அரசியல் வாழ்க்கை பற்றியும் பிற்காலத்தில் அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள உறவு பற்றி கூறுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சிவராம் ஆரம்பகாலத்தில் ஒரு இலக்கியவாதியாகவே அறிமுகமானார். 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பில் அப்போது பிரபலமாக இருந்த இலக்கிய அமைப்பான வாசகர் வட்டத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகவே நான் முதலில் சிவராமை சந்தித்தேன். மட்டக்களப்பில் மட்டுமல்ல வடகிழக்கில் இலக்கிய புரட்சி ஒன்றை ஆரோக்கியமான இலக்கிய விமர்சனங்களை செய்யும் அமைப்பான மட்டக்களப்பு வாசகர் வட்டத்தை மறைந்த ஆனந்தனும் சிவராமுமே உருவாக்கினர். ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் புகழ்ச்சிதான் விமர்சனம் என்ற நிலையை மாற்றி சரியான திறனாய்வை முன்வைத்து இலக்கிய புரட்சி ஒன்றை செய்த அமைப்பாக வாசகர் வட்டத்தை வழிநடத்திய பெருமை சிவராமையும் ஆனந்தனையுமே சாரும். அந்த இருவரும் இன்று எம்மிடம் இல்லை. இருவருமே கொடிய துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகிவிட்டனர். சிவராமை பலரும் அரசியல் ஆய்வாளராகத்தான் அறிந்திருக்கிறார்கள். அவருக்கு அரசியலை விட தமிழ் இலக்கியத்திலும் ஆழமான பார்வை இருந்து வந்தது. மட்டக்களப்பு மக்கள் அவரின் இலக்கிய பேச்சை கேட்பதற்கென்று பெருந்தொகையானோர் கூடுவதுண்டு. மட்டக்களப்பில் மிகப்பிரபல்யம் வாய்ந்த தர்மரத்தினம் வன்னியனார் குடும்பத்தில் பிறந்த சிவராம் சிறுவயதில் மிகுந்த செல்வசெழிப்பில் வாழ்ந்தவர். அவரது பாட்டனார் தர்மரத்தினம் வன்னியனார் செனட்டராக இருந்தவர். ஆரையம்பதியிலிருந்து அக்கரைப்பற்று ஒலுவில் என பல பிரதேசங்களில் அவர்களுக்கு இருந்த காணி பூமியை கணக்கு பார்த்தால் இன்னும் பத்து தலைமுறைக்கு காணும் என சொல்வார்கள். ஆனால் அவற்றை எல்லாம் துறந்து ஒரு ஒட்டாண்டியாக வாழ்ந்தவர்தான் சிவராம். சிவராமின் பாட்டனாருக்கு படுவான்கரை பகுதியிலும் காணி இருந்ததை ஒரு சந்தர்ப்பத்தில் அறிந்து கொண்டேன். 2000ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் தரவையில் நடந்த மாவீரர் நாளுக்கு செல்வதற்காக அம்பிலாந்துறை துறையூடாக நானும் சிவராமும், மனோ இராசசிங்கமும், ( தினக்கதிர் பத்திரிகை நிறுவன உரிமையாளர்) கலாநிதி சி.ராகுராமும் ( தற்போது கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக தொடர்பாடல் கற்கைகள் துறையின் தலைவராக இருப்பவர் ) சென்றோம். அப்போது துறையடி சோதனை சாவடியில் இருந்த விசேட அதிரடிப்படையினர் சிவராமை தடுத்து விசாரித்தனர். சிவராமின் அடையாள அட்டையில் வதிவிடம் கொழும்பு என இருந்தது. தனக்கு படுவான்கரையில் வயல் இருப்பதாகவும் அதனை பார்ப்பதற்காக செல்வதாகவும் சிவராம் கூறினார். அப்படியானால் அங்கு வயல் இருப்பதற்கான ஆதாரத்தை பட்டிப்பளை பிரதேச செயலாளரிடமிருந்து பெற்று வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் படுவான்கரைக்கு செல்ல அனுமதித்தனர். கொக்கட்டிச்சோலைக்கு சென்று அங்கிருந்து தரவையில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுக்கு சென்றோம். அன்றிரவு நாங்கள் நால்வரும் குடும்பிமலை அடிவாரத்தில் அடர்ந்த காட்டின் மத்தியில் இருந்த விடுதலைப்புலிகளின் பண்ணையிலேயே தங்கினோம். அந்த முகாமுக்கு விசு பொறுப்பாக இருந்தார். மறுநாள் காலையில் பண்ணையில் ஆட்டிறச்சி கறியுடன் சாப்பாடு. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சிவராம் சொன்னான். நல்லா சாப்பிடுங்கடா, எஸ்.ரி.எவ் அடிக்கும் போது எல்.ரி.ரி.ஈ என்ன சாப்பாடு தந்தாங்கள் என கேட்டு கேட்டு அடிப்பாங்கள், அப்ப எல்லாம் வெளியில வரும் என சொல்லி சிரித்தான். அடுத்த நாள் பட்டிப்பளை பிரதேச செயலாளராக இருந்த உதயகுமாரிடம் சிவராமுக்கு பட்டிப்பளையில் காணி இருந்ததற்கான ஆதார கடிதம் வாங்கி கொண்டே திரும்பினோம். சிவராமுக்கு படுவான்கரைப்பகுதியிலும் காணிகள் இருந்ததை அப்போது தான் நாம் அறிந்து கொண்டோம். 1982ஆம் ஆண்டளவில் சிவராம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி சென்ற பின் விடுமுறை நாட்களில் மட்டும் மட்டக்களப்பில் காணமுடிந்தது. சிவராம் ஆரம்பகாலத்தில் இலக்கியதுறையிலும் தமிழ் இலக்கணத்தை கற்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டார். தற்கால இலக்கியங்களை மட்டமல்ல பழம்தமிழ் இலக்கியங்களை கற்பதில் கூட மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார். வடமொழியை சேர்க்காது தமிழை எழுத வேண்டும் என்பதில் கண்டிப்பான போக்கை கொண்டவர் சிவராம். 1983களின் பின் சிவராமுக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. பின்னர் சிவராம் புளொட் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக கேள்விப்பட்டேன். அப்போது நல்ல இலக்கிய விமர்சகனை இழந்து விட்டோமே என்ற ஆதங்கம் என்மனதில் எழுந்தது. அதன் பின் சுமார் ஆறு வருடங்கள் கழித்து யாழ்ப்பாணத்தில் சிவராமை சந்தித்தேன். அப்போது நான் முரசொலி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்ற வேளையில் முரசொலி அலுவலகத்திற்கு வந்த சிவராம் தான் யாழ்ப்பாணத்தில் புளொட் அரசியல் பிரிவின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடுவதாக கூறினார். அப்போது சிவராம் புளொட் இயக்கத்தின் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளராக இருந்தார். சிவராமின் தந்தை வழி மட்டக்களப்பாக இருந்தாலும் அவரின் தாய் வழி பருத்தித்துறையை சேர்ந்தவர்களாகும். பருத்தித்துறை கொட்டடி அம்மன் கோவில் தமது தாய்வழி பாட்டனாரின் கோவில் என சொல்லிக்கொள்வார். 1989ஆம் ஆண்டு தேர்தலின் பின் சிவராம் புளொட் அரசியல் பிரிவிலிருந்து விலகிவிட்டதாக கேள்விப்பட்டேன். மீண்டும் 1991ல் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்களின் வீட்டில் சிவராமை எதிர்பாராத விதமாக சந்தித்தேன் எஸ்ஆராக அல்ல தராக்கியாக…. ஒரு இலக்கியகாரனாக…. போராளியாக…. அரசியல்வாதியாக…. நான் சந்தித்த சிவராமை இப்போது ஊடகத்துறை நண்பனாக பார்த்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி. அதன் பின்னர் நாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். 1994ஆம் ஆண்டு கிளாலி ஊடாக பி.பி.சி தமிழ் சேவையின் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் சிவராமை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சென்றார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களை சந்தித்தார். அது தான் சிவராமுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான முதல் சந்திப்பாகும். யாழ்ப்பாணத்திற்கு சென்ற போது கொஞ்சம் பயத்துடன் தான் சென்றேன். ஆனந்தி அக்கா பயப்படாத வா என அழைத்ததால் தான் சென்றேன். அங்கு சென்ற பின்னர் விடுதலைப்புலிகள் பற்றி தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாக சிவராம் கூறினார். யாழ்ப்பாணத்திற்கு சென்று விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டு மட்டக்களப்புக்கு வந்த சிவராமில் ஒரு உற்சாகம் தெரிந்தது. ஆயுதப்போராட்டத்தின் மூலமே தமிழர்களுக்கான சுதந்திர நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையோடு புளொட் இயக்கத்திற்கு சென்று ஆயுதப்பயிற்சி பெற்ற போதும் பின்னர் அந்த இயக்கத்தில் நம்பிக்கை இழந்து அதிலிருந்து விலகி ஊடகவியலாளராக பயணித்துக்கொண்டிருந்த சிவராம் மீண்டும் ஆயுதப்போராட்டத்தின் நம்பிக்கை கொண்டவராக காணப்பட்டார். அதுவரை காலமும் ஐலண்ட் பத்திரிகையில் எழுதி வந்த சிவராம் பின்னர் அப்பத்திரிகையில் எழுதுவதை நிறுத்தி சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கும் மிற்வீக் மிரருக்கும் எழுத ஆரம்பித்திருந்தார். அதன் பின் ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய அவரின் கட்டுரைகளுக்கும் பின்னர் சண்டே ரைம்ஸ், மிக்வீக்மிரர் பத்திரிகைளில் எழுதிய கட்டுரைகளில் மாறுதல்கள் தெரிந்தன. அப்போது மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம் வாரப்பத்திரிகைகளின் ஆசிரியராக நான் இருந்தபோது சிவராம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்தால் அப்பத்திரிகை அலுவலகத்திலேயே அதிக நேரத்தை கழிப்பார். மட்டக்களப்புக்கு வரும் ஒவ்வொரு தடவையும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான படுவான்கரைக்கு சிவராமும் நானும் செல்வது வழக்கமாகும். அரசியல் பிரிவை சேர்ந்த கரிகாலன், விசு, துரை மற்றும் புலனாய்வு பிரிவை சேர்ந்த சங்கர், அற்புதன் என அனைவருடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தார். சில வேளைகளில் நாங்கள் படுவான்கரைக்கு செல்லும் போது இராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்டதும் உண்டு. அக்காலப்பகுதியில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் சிவராமிடம் இருக்கவில்லை. 1994ஆம் ஆண்டுகளின் பின் மட்டக்களப்பில் ஊடகத்துறையில் ஒரு மாற்றம் ஏற்பட்ட காலம் என்றும் சொல்லலாம். அந்த மாற்றத்திற்கு காரணமானவர்களில் சிவராமும் ஒருவர். ஊடகவியலாளர்களுக்கான ஒரு அமைப்பாக மட்டும் செயற்பட்டு வந்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை மட்டக்களப்பின் அரசியல் சமூக விடயங்கள் பக்கம் திசை திருப்பியவர் சிவராமாகும். ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அடிக்கடி கூறிவந்தார். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தொடர்ச்சியாக அரசியல் கருத்தரங்குகளை நடத்துவதற்கு உற்சாகம் கொடுத்து வந்தார். மட்டக்களப்பில் வாசகர் வட்டம் எவ்வாறு இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்ததோ அதேபோல சிவராமின் பங்களிப்புடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் குறிப்பிட்ட அளவு அரசியல் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதில் முக்கிய பங்குவகித்தது எனலாம். 1998ஆம் ஆண்டில் வீரகேசரி ஊடகவியலாளர்களான மாணிக்கவாசகம், ஸ்ரீகஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது அவர்களின் விடுதலைக்காக சட்டநடவடிக்கை எடுப்பது உட்பட அவர்களின் விடுதலைக்காக தமிழ் ஊடகவியலாளர்கள் தேசிய மட்டத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. அதனைத்தொடர்ந்து இலங்கை முழுவதிலும் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்தில் கூட சிவராமே முக்கியமாக இருந்தார். தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வந்த சிவராம் 2000ஆம் ஆண்டில் நவக்கிரகங்களாக இருந்த தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்குவதில் சிவராமே மூலகர்த்தாவாக இருந்தார். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் அவருக்கு பக்கபலமாக இருந்து பயணித்தாலும் கடினமான அந்த பயணத்தின் சாரதியாக இருந்தவர் சிவராம் தான். ஆங்கில ஊடகத்துறையின் மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு சுமார் பல ஆண்டுகளாக ஆங்கிலப்பத்திரிகையில் எழுதி வந்தாலும் பிற்காலத்தில் ஆங்கிலப்பத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்திக்கொண்டார். எவ்வளவுதான் தமிழ் மக்களின் பக்க நியாயத்தன்மைகளை தென்னிலங்கை சிங்களவர்களுக்கு சொல்லி வந்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற சலிப்பின் காரணமாகவே தான் ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு எழுதுவதை நிறுத்தி விட்டு தனது மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் பத்திரிகைகளில் எழுத தொடங்கியிருப்பதாக இறுதிக்காலத்தில் சிவராம் சொல்லியிருந்தார். மட்டக்களப்பில் மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டும் அவர்கள் மத்தியில் தமது விடுதலைபற்றிய சரியான பார்வை இருக்க வேண்டும் என்பதில் சிவராம் உறுதியாக இருந்தார். இந்த விடயத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் வாளைச்சேனை முதல் கல்லாறுவரை 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் கருத்தரங்களை நடத்தி வந்தது. இந்த கருத்தரங்குகளில் என்னுடன் நடேசன், தவராசா, ஜெயானந்தமூர்த்தி, தம்பையா, கெனடி, செல்வேந்திரன், ஆகியோருடன் அனைத்து கருத்தரங்களிலும் சிவராமும் கலந்து கொண்டார். பகுத்தறிவு கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த சிவராம் எந்த ஒரு இனமும் விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் அந்த இனம் அரசியல் தெளிவுள்ள சமூகமாக உறுதியான அரசியல் தலைமையை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவராக திகழ்ந்தார். தென் கரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மார்க் விதாகர் கூறியிருப்பது போல சிவராமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பல உண்டு. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் சமகாலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய தமிழ் இயக்கங்களுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளையும் களையும் நோக்குடன் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க தலைவர்களை அழைத்து சென்று விடுதலைப்புலிகளின் தலைவர்களை சந்திக்க வைப்பதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டன. இக்காலப்பகுதியில் வன்னிப்பகுதியில் கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அத்துடன் சமாதான ஒப்பந்தத்திற்கு முதல் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் சிவராமுக்கோ அல்லது மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளருக்கோ வன்னிக்கு செல்வதற்கோ அல்லது தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கோ முடியாமல் இருந்தது. விடுதலைப்புலிகளுடனான எமது அனைத்து தொடர்புகளும் மட்டக்களப்பு படுவான்கரைப்பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளுடனேயே இருந்தது. விடுதலைப்புலிகளுடனான சந்திப்புக்கள் அதற்கான நாட்கள் பற்றி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் பொருளாளராக இருந்த அரியநேத்திரன் ( பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ) ஊடாகவே மேற்கொள்வது வழக்கம். அரியநேத்திரன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான அம்பிலாந்துறையை சேர்ந்தவர். இதனால் அவர் படுவான்கரைக்கு சென்று வருவது வழமை. இதனால் சில வேளைகளில் அறிக்கைகள் செய்திகள் தகவல்கள் கூட அரியநேத்திரனிடமே அரசியல் பிரிவினர் கொடுத்து விடுவது வழக்கமாகும். முதலில் ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த செல்வம் அடைக்கலநாதனை அழைத்து செல்வதென முடிவு செய்யப்பட்டது. 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி ரெலோவின் தலைவர் சிறிசபாரத்தினம் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் ரெலோவும் விடுதலைப்புலிகளும் பரம எதிரிகளாக செயல்பட்டனர். ஒருவரை ஒருவர் அழிப்பதில் கங்கணம் கட்டி செயல்பட்டு வந்தனர். 1987ஆம் ஆண்டின் பின்னர் இந்திய இராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட ரெலோ இயக்கம் இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினருடன் நெருக்கமாக செயற்பட்டனர். விடுதலைப்புலிகளை அழிப்பதில் இராணுவத்திற்கு உதவி வந்தனர். 1998ஆம் ஆண்டுகளின் பின்னர் ரெலோ சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்குவதை குறைத்து கொண்டனர். ஆனால் மட்டக்களப்பில் குறிப்பாக ஆரையம்பதியில் விசேட அதிரடிப்படையினருடன் ரெலோ இயக்கம் சேர்ந்து இயங்கி வந்தது. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதில்லை என்ற முடிவுக்கு ரெலோ வந்த பின்னர் 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின் விடுதலைப்புலிகளை ரெலோ இயக்க தலைவர் சந்தித்த முக்கிய நிகழ்வு 2001ஆம் ஆண்டு இடம்பெற்றது. கீரியும் பாம்புமாக இருந்த விடுதலைப்புலிகளும் ரெலோவும் 15 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் சந்தித்து கொண்டனர். அச்சந்திப்பு பற்றி அடுத்த வாரம் பார்ப்போம் ( தொடரும் ) https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted October 5, 2017 தொடங்கியவர் Share Posted October 5, 2017 ரெலோவின் மனமாற்றத்தை வரவேற்ற விடுதலைப்புலிகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 07. விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் எனப்படும் ரெலோவுக்கும் இடையே 1986 ஏப்ரல் 26ல் இடம்பெற்ற மோதலை அடுத்து ரெலோ இயக்கம் இந்திய இராணுவத்துடனும் அதன் பின்னர் இலங்கை இராணுவத்துடனும் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்பட்டது. செங்கலடியில் கறுப்பு பாலத்தில் இருந்த இராணுவத்துடன் வேட்டோ குழுவும், மட்டக்களப்பில் இராணுவத்தினருடன் அன்வர் தலைமையிலான குழுவும் ஆரையம்பதியில் விசேட அதிரடிப்படையினருடன் வரதன் குழுவும் சேர்ந்து மிக மோசமான மனித உரிமை மீறல்களை செய்து வந்தனர். செங்கலடியில் வேட்டோ என்றால் பொதுசனம் கதி கலங்கும். கொலை பாலியல் பலாத்காரம், என அத்தனை கொடுஞ்செயல்களையும் வேட்டோ தலைமையிலான குழு செய்து வந்தது. அது போல ஆரையம்பதியில் வரதன் குழு கடத்தல், கொலை, பாலியல் பலாத்காரம் என மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்தனர். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவை வழங்குபவர்களை தேடி அழிப்பதில் ரெலோ இயக்கத்தினர் தீவிரமாக செயல்பட்டனர். 1998ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி ஆரையம்பதி காளிகோவிலுக்குள் வைத்து பூசகர் எஸ்.நவரத்தினம் ரெலோ உறுப்பினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மாவீரர் நாளுக்கு பூசை செய்தார் என குற்றம் சாட்டி இவர் கொல்லப்பட்டார். இப்படி அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளும் ரெலோ மீது தாக்குதல்களை நடத்தி வந்தனர். ரெலோ உறுப்பினர்கள் , ரெலோவுக்கு ஆதரவு வழங்குபவர்கள் என பலரும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவின் பிஸ்ரர் குழுவை சேர்ந்த யோகராசாவின் கைளிலிருந்து இவர்கள் தப்ப முடியாதிருந்தது ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். செங்கலடியில் வேட்டோ, மட்டக்களப்பில் றொபேட், காத்தான்குடியில் அன்வர் என ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகினர். ஆனால் 2000ஆம் ஆண்டுக்கு பின் ரெலோவின் போக்கில் மாறுதல்கள் ஏற்பட்டன. வவுனியா மன்னார் பிரதேசங்களில் இராணுவத்துடன் சேர்ந்து இயக்குவதை நிறுத்தியிருந்தனர். மட்டக்களப்பிலும் விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து இயங்கிய வரதன் குழுவையும் ரெலோ தலைமை தமது இயக்கத்திலிருந்து நீக்கியிருந்தது அதன் பின்னரும் வரதன் குழு கொலைகளில் ஈடுபட்டு வந்தது . விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டி மட்டக்களப்பு காப்புறுதி நிறுவன ஊழியரான பரமேஸ்வரன் யோகேந்திரன் என்பவரை 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி வரதன் குழு சுட்டது . கோமா நிலையில் இருந்த நிலையில் 45ஆம் நாள் கொழும்பு வைத்தியசாலையில் யோகேந்திரன் உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக வரதன் என அழைக்கப்படும் சீனித்தம்பி ரஞ்சன் உட்பட 6 பேர் 2000ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதன் பின்னர் இவர்களின் கைஓய்ந்து விட்டது 1998ஆம் ஆண்டிலிருந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வம் அடைக்கலநாதன் அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களித்து வந்தார். 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வன்னி மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட ரெலோ இயக்கம் போர் நிறுத்தத்தை செய்து விடுதலைப்புலிகளுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. விடுதலைப்புலிகளை தமது பரம எதிரிகளாக பார்த்து வந்த ரெலோ இயக்கத்திடம் ஏற்பட்ட புதிய மாற்றத்தால் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ரெலோ இயக்கம் மூன்று ஆசனங்களை கைப்பற்றி இருந்தது. கூட்டு அரசாங்கத்தை அமைக்க வருமாறு ரெலோவுக்கு அப்போதைய சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் 2000.10.18 அன்று கூடிய போது அதில் உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் போரை நிறுத்தி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வன்னிக்கான பொருளாதார தடை நீக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார். தமிழ் மக்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணிவிடாதீர்கள், அவர்கள் விழிப்புடன் தான் இருக்கிறார்கள். அவர்களின் கோபம் உங்களை ஒருநாள் எரித்து விடும் என்றும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். தமது அரசுக்கு ஆதரவளிக்க மறுத்த ரெலோ மீது சந்திரிக்கா அரசாங்கம் பழிவாங்க ஆரம்பித்தது. 2000. ஓக்டோபர் 19ஆம் நாள் அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மன்னார், மற்றும் வவுனியா நகரங்களில் இருந்த ரெலோ அலுவலகங்களில் தேடுதல்களை நடத்தினர். ரெலோ இயக்கத்திடம் இருக்கும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மறுநாள் மட்டக்களப்பு நகரில் இருந்த அலுவலகத்திலும் இராணுவத்தினர் தேடுதல் நடத்தினர். இந்நிலையில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடத்தி வந்த அரசியல் கருத்தரங்குகளில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டார். தமிழ் கட்சிகளை இணைத்து பலமான அரசியல் தலைமை உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் இணைந்து செயல்பட்டார். இதனால் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்திற்கும் ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தமிழ் கட்சிகளை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் இணைந்து கொண்டது ரெலோ இயக்கம் தான். இதன் பின்னர் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஆகிய கட்சிகள் இணைந்து கொண்டன. ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுதலைப்புலிகளை சந்தித்து பேசுவதற்கும் விரும்பம் கொண்டிருந்தார். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தால் வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைமையை சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைமைகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2000.பெப்ரவரி 24ஆம் திகதி மட்டக்களப்பு பட்டிருப்பு பாலம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் மட்டக்களப்பு பொறுப்பாளரும் அக்கட்சியின் செயலாளருமான இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர் கொக்கட்டிச்சோலைக்கு சென்றனர். இவர்களை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் பொருளாளராக இருந்த பா.அரியநேத்திரன் அழைத்து சென்றார். இவர்களுடன் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கெனடி விஜயரத்தினமும் சென்றிருந்தார். மெய்காப்பாளர்கள் ( பொலிஸார் ) இருவரையும் பட்டிருப்பு பொலிஸ் நிலையத்தில் விட்டுவிட்டு மெய்காப்பாளர்கள் இன்றியே செல்வம் அடைக்கலநாதன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றார். 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின் சுமார் 15 ஆண்டுகளின் பின்னர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு ரெலோ தலைவர்கள் சென்றனர். மட்டக்களப்பு பத்திரிகையாளர்கள் மண்முனைதுறை ஊடாக மோட்டார் சைக்கிளில் கொக்கட்டிச்சோலையை சென்றடைந்தனர். கொக்கட்டிச்சோலையில் உள்ள விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்பகுதியில் பெருந்தொகையான விடுதலைப்புலிகள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் மட்டக்களப்பு பொறுப்பாளர் பிரசன்னா ஆகியோரை விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலன் வரவேற்றார். இந்த சந்திப்பில் பொருண்மியப்பொறுப்பாளராக இருந்த விசு, புலனாய்வு பொறுப்பாளராக இருந்த ரமணன், மற்றும் தளபதி ரமேஸ், ராபட் உட்பட முக்கிய தளபதிகள் பலரும் கலந்து கொண்டனர். ரெலோவிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தாம் வரவேற்பதாகவும் தமிழ் தேசியத்திற்காக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை தாம் வரவேற்பதாகவும் உங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்போம் என கரிகாலன் இந்த சந்திப்பில் தெரிவித்தார். தமிழ் தேசிய விடுதலைப் போராட்;டத்திற்கு ஒத்துழைப்பாக செயற்படுங்கள் என்றும் கரிகாலன் ரெலோ தரப்பினருக்கு ஆலோசனை கூறினார். இந்த சந்திப்பு பற்றி அண்ணனுக்கும் ( தலைவர் பிரபாகரன் ) அம்மானுக்கும் ( பொட்டம்மானுக்கும் ) அறிவிப்போம் என கரிகாலன் தெரிவித்தார். செல்வம் அடைக்கலநாதன் எதிர்பார்க்காத அளவிற்கு விடுதலைப்புலிகளின் உபசரிப்பு காணப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குழுவினருக்கு கொக்கட்டிச்சோலையில் உள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு அலுவலகத்தில் வைத்து மதிய உணவு வழங்கப்பட்டது. அன்று சிவராம் உட்பட கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் கொக்கட்டிச்சோலைக்கு சென்றிருந்த போதிலும் இச்சந்திப்பு பற்றி செய்திகள் எதனையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. இவ்வாறான சந்திப்புக்களுக்கு எதிர்காலத்தில் இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இத்தகைய சந்திப்புக்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதை மட்டக்களப்பில் உள்ள பத்திரிகையாளர்கள் தவிர்த்து வந்தனர். இதேவேளை வடகிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமகாலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக படையினர் மேற்கொள்ளும் அடக்குமுறைகள் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் அதனை நிறுத்துமாறு கோரியும் கொழும்பில் தமிழ் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தன. 2001.ஏப்ரல் 10ஆம் திகதி 11 தமிழ் கட்சிகள் இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இதில் மலையகத்தில் உள்ள கட்சிகளும் வடகிழக்கில் உள்ள ( ஈ.பி.டி.பி தவிர்ந்த ) தமிழ் கட்சிகளும் கலந்து கொண்டன. இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கொக்கட்டிச்சோலைக்கு அழைத்து செல்லப்பட்டார். 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை தடை செய்தனர். அப்போது விடுதலைப்புலிகளுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. அன்றிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமும் விடுதலைப்புலிகளும் பரம எதிரிகளாக செயல்பட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து விடுதலைப்புலிகளை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இந்திய இராணுவ காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புத்திஜீவிகள் பொதுமக்கள் என பலரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் பழிவாங்கப்பட்டனர். மண்டையன் குழு என்ற பெயரில் இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் ஆயுதக்குழு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களை தேடி தேடி அழித்தது. முக்கியமாக மட்டக்களப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு உபதலைவரும் தமிழ் தேசப்பற்றாளராகவும் திகழ்ந்த வணசிங்கா 1989ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியில் அவர் வீட்டில் இருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். வந்தாறுமூலையில் பிறந்த வணசிங்க அவர்கள் 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்த வணசிங்க அவர்கள் இலங்கையில் உள்ள தமிழ் ஆசிரியர்களின் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் உரியவராக திகழ்ந்தார். அநீதியும் உரிமை மீறலும் எங்கு நடக்கிறதோ அங்கு சென்று அவற்றைத் தட்டிக்கேட்டு நியாயம் தேடும் ஒரு தலைவனாக அவர் விளங்கினார். இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இவரை படுகொலை செய்தது. அது போல 1988ஆம் ஆண்டு யூன் 6ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவருமான வணபிதா சந்திரா பெர்னாண்டோ அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேவாலயத்திற்குள் வைத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் 1989 பெப்ரவரி மாதம் பருத்தித்துறை பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவானந்தசுந்தரம் அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் வல்லைவெளியில் வைத்து சுட்டுக்கொன்றனர். அரியாலையில் கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு பருத்தித்துறை நோக்கி சென்ற போது இந்திய இராணுவ சோதனை சாவடியை கடந்து சில விநாடிகளில் அங்கு நின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகள் இடைக்கால சபை தலைவராக பெயரிடப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். பத்மநாதன், சிவஞானம், சிவானந்தசுந்தரம் ஆகியோரின் பெயர்களை விடுதலைப்புலிகள் பெயரிட்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று குற்றம் சாட்டியே இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்த படுகொலைகளில் முரசொலி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த திருச்செல்வத்தின் மகன் அகிலன் என்ற மாணவனை சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் முக்கியமானதாகும். 1989ஆம் ஆண்டு மே மாதம் முற்பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கொக்கோ கோலா போத்தல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அச்செய்தி முரசொலி பத்திரிகையில் மட்டுமே வெளியாகியது. இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கோலா போத்தல் மீட்கப்பட்டது. அந்த இளைஞர் சில தினங்களுக்கு முதல் சிலரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார் என இறுதியில் எழுதப்பட்டிருந்தது. அந்த இளைஞரை கடத்தியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் என பின்னர் பலருக்கும் தெரியவந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை சுட்டுக்கொல்வதற்கு திட்டமிட்டனர். முரசொலி பத்திரிகை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்து வந்த படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி வந்தது. முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தையும் கடத்தி கொலை செய்வதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் திட்டமிட்டது. எஸ்.திருச்செல்வம் அவர்களைக் கடத்துவதற்காக அவருடைய வீட்டுக்கு ஈ.பி.ஆர்.எல்;.எவ் இயக்கத்தினர் 1989 மே 11 ஆம் நாள் சென்ற போது திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் தப்பியோடிவிட்டார். அதனால் அங்கிருந்த அவரது மகன் அகிலனை மண்டையன் குழுவினர் கடத்திச் சென்றனர். திருச்செல்வம் தங்களிடம் வந்தால் மகனை விடுவிப்போம் என்று எச்சரித்துச் சென்றனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் மண்டையன் குழு அகிலனை படுமோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கியது. அகிலனின் மலவாசலினூடாக சோடாப் போத்தலை செலுத்தினார்கள். அவருடைய நகங்களைப் பிடுங்கினார்கள். மறுநாள் அகிலன் பிணமாக வீதியில் வீசப்பட்டார். இது யாழ்ப்பாண மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. கல்லூரியின் மிகத் திறமையான மாணவனான அகிலன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் அகிலன் நான்கு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தார். தான் கல்வி கற்ற கல்லூரியின் கிரிக்கட் குழுவின் தலைவனாகவும் அகிலன் விளங்கினான். மாணவன் அகிலன் திருச்செல்வனின் கொலை ஒரு போதுமே நியாயப்படுத்தப்பட முடியாத படுகொலை. தகப்பனுக்காக ஒருபோதுமே மகனைக் கடத்திப் படுகொலை செய்தது யாராகவிருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படுகொலை. விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என கூறிக்கொண்டு அப்பாவி பொதுமக்களையும் அழித்தார்கள். இந்திய இராணுவம் வெளியேறிய போது அவர்களுடன் கப்பல் ஏறிய ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் பிரேமதாஸாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் இலங்கை திரும்பினர். சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கினர். மட்டக்களப்பில் ராசிக் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் இராணுவத்தினருடன் சேர்ந்து விடுதலைப்புலிகள் மீதும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் வரதர் அணி என்றும் சுரேஷ் அணி என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இரண்டாக பிளவு பட்டது. சுரேஷ் அணி இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்குவதை நிறுத்தி கொண்டனர். இராணுவத்தினருடன் இயங்கும் ராசிக் குழுவுக்கும் தமக்கும் தொடர்பு கிடையாது என சுரேஷ் அணி அறிவித்திருந்தது. 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் தமிழ் கட்சிகள் நடத்திய ஜனநாயக ரீதியான போராட்டங்களில் சுரேஷ் அணியும் இணைந்து கொண்டது. வடகிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்ற போது அதில் தாமும் இணைந்து கொள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் சுரேஷ் அணி தலைவராக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் விருப்பம் தெரிவித்திருந்தார். அவரையும் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு அழைத்து சென்று சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுரேஷ் பிரேமச்சந்திரனை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் பொருளாளர் அரியநேத்திரன் பட்டிருப்பு பாலம் ஊடாக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். 1986ஆம் ஆண்டு டிசம்பவர் மாதத்தின் பின் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் ஒருவர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி சென்றார். ஏனைய மட்டக்களப்பு பத்திரிகையாளர்கள் மண்முனை துறை ஊடாக கொக்கட்டிச்சோலையை சென்றடைந்தனர். அங்கு சென்ற போது சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஏனையோரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியான சம்பவம் ஒன்றை கண்டனர். ( தொடரும்) https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted October 6, 2017 தொடங்கியவர் Share Posted October 6, 2017 விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதில் முரண்பட்டுக்கொண்ட தமிழ் கட்சிகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 08 இந்திய இராணுவ காலத்தில் விடுதலைப்புலிகளுடன் மோதிய தமிழ் இயக்கங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே முதன்மையானதாகும். எனினும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி, வரதர் அணி என இரண்டாக பிரிந்த பின்னர் சுரேஷ் அணி சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதை நிறுத்தியதை அடுத்து விடுதலைப்புலிகளின் தாக்குதல் சுரேஷ் அணியின் பக்கம் திரும்பவில்லை. இந்நிலையிலேயே தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைந்து கொள்ள விரும்பம் கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் கொக்கட்டிச்சோலையில் உள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் கரிகாலனை சந்திக்க சென்றார். கொக்கட்டிச்சோலை பொதுமக்கள் குடியிருப்பை அண்டி அரசியல் பிரிவு அலுவலகம் இருப்பதால் அங்கு சீருடையில் போராளிகள் பொறுப்பாளர்கள் தளபதிகள் நிற்பது குறைவு. ஆனால் அன்று அரசியல் பிரிவு அலுவலகத்தை அண்டிய பகுதியில் சீருடையில் பெருந்தொகையான போராளிகள் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்தனர். தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவரும் முழுமையான சீருடையில் ( இராணுவ உடையில் ) காணப்பட்டனர். மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் சுரேஷ் பிரேமச்சந்திரனை சந்தித்தார். இந்த சந்திப்பில் தளபதிகள், மற்றும் பொறுப்பாளர்களும் பிரசன்னமாகி இருந்தனர். மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் சிலரும் அங்கு சென்றிருந்தனர். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரும் புலனாய்வு பிரிவினருமே இச்சந்திப்பு தொடர்பான படங்களை எடுத்தனர். மட்டக்களப்பு ஊடகவியாளர்கள் இச்சந்திப்பு தொடர்பான செய்திகளை தமது ஊடகங்களுக்கு அனுப்பவில்லை. ஆனால் சந்திப்பு நடைபெற்று அடுத்து ஞாயிறு சண்டை ரைம்ஸ் பத்திரிகையில் முன்பக்கத்தில் கரிகாலன் சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தித்த படம் வெளியாகியிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும், எல்.ரி.ரி.ஈ மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளரும் சந்திப்பு என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. அந்த சந்திப்பை விடுதலைப்புலிகள் மட்டுமே படம் பிடித்தனர். எனவே அவர்கள் ஊடாகவே அப்படம் சண்டேரைம்ஸ் பத்திரிகைக்கு சென்றிருக்கலாம். அதனை தொடர்ந்து கொழும்பில் உள்ள சிங்கள ஆங்கில தமிழ் பத்திரிகைகள் அந்த படத்தை பிரசுரித்திருந்தன. எதிரும் புதிருமாக மோதிக்கொண்டிருந்தவர்கள் சந்தித்து கொண்டது தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு கூட ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தை இந்திய பத்திரிகைகளும் பிரசுரித்திருந்தன. இதற்கு முன்னர் செல்வம் அடைக்கலநாதனுடனான சந்திப்பை வெளிப்படுத்தாத விடுதலைப்புலிகள் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சந்திப்பை ஏன் வெளிப்படுத்தினர் என்பது புதிராகவே இருந்தது. இதை தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் தலைவர் அ.விநாயகமூர்த்தி 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். மட்டக்களப்பு ஆஞசநேயர் மரக்காலை உரிமையாளர் சண்முகம் மீது விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் சண்முகத்திற்காக சட்டத்தரணி விநாயகமூர்த்தி ஆஜராகி இருந்தார். அவர் அப்போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நீதிமன்றத்தில் சந்தித்த விநாயகமூர்த்தி அவர்கள் அன்று மாலை தான் தங்கியிருக்கும் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள வீட்டிற்கு வருமாறு கூறியிருந்தார். நானும் நடேசனும் சென்றிருந்தோம். பொதுவான அரசியல் விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த பின் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பலமான அரசியல் தலைமையாக இயங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் 2000ஆம் ஆண்டு தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றதால் ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றியும் பேசினோம். ஆனால் இதுபற்றி தன்னால் ஒரு முடிவும் சொல்ல முடியாது, கட்சி உறுப்பினர்களுடன் பேசியே இதுபற்றி முடிவை சொல்ல முடியும் என கூறியிருந்தார். இதேவேளை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் அரசியல் கருத்தரங்குகளை நடத்தி வந்தது. உலக பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு 2001 மே 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை மண்டபத்தில் கருத்தரங்கு ஒன்றினை நடத்தியது. எனது தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அப்போது இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த பி.மாணிக்கவாசகம், டி.சிவராம், சண்டேலீடர் பத்திரிகையை சேர்ந்த ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகம், சட்டத்தரணி பி.பிறேம்நாத் ஆகியோர் உரையாற்றினர். இதனை தொடர்ந்து 2001 செப்டம்பர் 22ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாவை சேனாதிராசாவை அழைத்திருந்தோம். மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண்.தவராசா தலைமை தாங்கினார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம், பொன். செல்வராசா உட்பட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கு முடிந்த பின் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் வகுப்பறை ஒன்றில் மாவை சேனாதிராசா, ஜோசப் பரராசசிங்கம், செல்வராசா ஆகியோருடனான சந்திப்பு இடம்பெற்றது. இதில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டனர். இதில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் நடக்க இருக்கும் தேர்தலில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஏற்படும் பின்னடைவுகள் பற்றியும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு கூறப்பட்டது. தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைந்து கொள்வதில் பிரச்சினை இல்லை, ஆனால் தமிழ் இயக்கங்கள் மீது மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். அவர்களுடன் நாங்கள் சேர்ந்தால் எப்படி மக்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என ஜோசப் பரராசசிங்கம் தெரிவித்தார். தமிழ் இயக்கங்கள் செய்த படுகொலைகளை எப்படி தமிழ் மக்கள் மறப்பார்கள். அப்படி பட்டவர்களுடன் நாங்கள் எப்படி சேர்வது என ஜோசப் பரராசசிங்கம் கூறினார். இதனால் கோபமடைந்த சிவராம் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். தொடர்ந்து நடந்த உரையாடலில் மாவை சேனாதிராசா எதிர்காலத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். இந்த விடயத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபையில் பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்றும் கூறினார். இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற பேச்சு கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்திருந்தது. 2001 ஒக்டோபர் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி தலைவர் அ.விநாயகமூர்த்தி, செயலாளர் ந.குமரகுருபரன் ஆகியோரை கொழும்பில் குமார் பொன்னம்பலத்தின் வீட்டில் சிவராம், கெனடி விஜயரத்தினம், ஜே.எஸ்.திசநாயகம், எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். திருமதி குமார் பொன்னம்பலம் அவ்வீட்டில் இருந்த போதிலும் அப்பேச்சுகளில் கலந்து கொள்ளவில்லை. இச்சந்திப்பில் கலந்து கொண்ட கெனடி விஜயரத்தினம் பின்வருமாறு கூறுகிறார்… தமிழ் கட்சிகள் ஒரே அணியில் போட்டியிட்டாலும் தமது கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று நிபந்தனையை விநாயகமூர்த்தி முன்வைத்தார். தமது கட்சியே மூத்த கட்சி என்றும் ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகியன பிற்பட்ட காலத்தில் வந்த இளைய கட்சிகள் என்றும் எனவே மூத்த கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியே தமிழ் கட்சிகளுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் தமது கட்சியின் கீழ் தமது கட்சி சின்னத்திலேயே அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இது எப்படி சாத்தியமாகும், கிழக்கில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஒரு போதும் வெற்றி பெற்றதும் கிடையாது, வடக்கிலேயே தேர்தல்களில் போட்டியிட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் இது நியாயமற்ற கோரிக்கை என சிவராமும் ஏனையவர்களும் கூறினர். இதன் பின்னர் அப்படியானால் யாழ். மாவட்டத்தில் தமது கட்சி சின்னத்தில் தமிழ் கட்சிகள் போட்டியிடலாம், ஏனைய மாவட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடலாம். இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் தமது கட்சி யாழ்ப்பாணத்தில் தனித்து போட்டியிடும் என விநாயகமூர்த்தி கூறினார். இந்நிலையில் சிவராமுக்கும் விநாயகமூர்த்திக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபமடைந்த சிவராமும், திசநாயகமும் எழுந்து சென்று வெளியில் பேசிக்கொண்டிருந்தனர். விநாயகமூர்த்தி அடிக்கடி எழுந்து சென்று உள்ளே இருந்த திருமதி குமார் பொன்னம்பலத்திடம் பேசிவிட்டு வந்தார். தமிழ் கட்சிகளை இணைப்பது உறுதியாகி விட்டது. நீங்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும் என நான் ( கெனடி) கூறியபோது விநாயகமூர்த்தி பதற்றம் அடைந்தவராக காணப்பட்டார். நாங்களும் எழுந்து வந்து விட்டோம் என கெனடி கூறினார். ஆனால் குமரகுருபரன் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் திம்பு கோட்பாடு, தன்னாட்சி என்பவற்றோடு விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தாம் வலியுறுத்திய போது கோபமடைந்த சிவராம் எழுந்து சென்று விட்டார் என தெரிவித்திருந்தார். ஆனால் இரு தினங்கள் கழித்து தாம் யாழ்ப்பாணத்தில் தனித்தே போட்டியிடப் போவதாக வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அ.விநாயகமூர்த்தி அறிவித்தார். இதனால் தமிழ் கட்சிகள் ஒரே அணியில் இணையும் முயற்சிகளில் இழுபறிகள் தொடர்ந்தன. இவ்வேளையில் கொழும்பில் உள்ள தமிழ் பிரமுகர்களும் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் தமது ஒத்துழைப்புக்களை வழங்கினர். நான்கு கட்சிகளையும் அழைத்து பேசுவதற்காக கொழும்பு பம்பலப்பட்டி சரஸ்வதி மண்டபத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கொழும்பில் உள்ள தமிழ் பிரமுகர்கள் தான் இதனை ஏற்பாடு செய்தனர். இக்கூட்டத்தில் கொழும்பு இந்துமா மன்றத்தலைவர் கைலாசபிள்ளை, கந்தையா நீலகண்டன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்திற்கான கொழும்பு அலுவலக திட்ட உத்தியோகத்தராக இருந்த நிமலன் கார்த்திகேயன், தில்லைக்கூத்தன், ஜெயபாலசிங்கம், வடிவேற்கரசன், ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ( சுரேஷ் அணி ) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திலேயே நான்கு கட்சிகளுக்கிடையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது, தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், பற்றி ஆராயப்பட்டது. தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள், தாயகக்கோட்பாடு, விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் வலியுறுத்தியது. தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள், தாயகக்கோட்பாடு என்பனவற்றை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்ந்துக் கொண்டாலும் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சிலர் வாதிட்டனர். இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்த ஆனந்தசங்கரி முக்கியமானவர். விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றால் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் யார், அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையா என்ற கேள்வியை எழுப்பினார். அவர் இன்றுவரை அக்கொள்கையிலிருந்து மாறவில்லை. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதற்கு ரெலோ தலைவர் என்.சிறிகாந்தாவும் எதிர்ப்பு தெரிவித்தார். நான்கு கட்சிகளும் இணைந்து ஒரு கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வதா அல்லது நான்கு கட்சிகளும் கூட்டாக இயங்குவதென ஒப்பந்தம் செய்து அதனை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பதா என்ற விவாதமும் இடம்பெற்றது. 1976ல் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி என்ற புதிய கட்சியை ஸ்தாபித்து அதனை ஒரு கட்சியாக பதிவு செய்ததால் அக்கட்சியில் ஏற்கனவே இருந்த தமிழரசுக்கட்சி உட்பட ஏனைய கட்சிகள் செயலிழந்து போயின. அதுபோல புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டால் இதில் இணையும் கட்சிகள் எதிர்காலத்தில் செயலிழந்து மறைந்து போய்விடும். ஓவ்வொரு கட்சிக்கும் உறுப்பினர்கள் தொண்டர்கள் இருப்பார்கள். எனவே நான்கு கட்சிகளும் தங்கள் தங்கள் கட்சிகளின் தனித்துவங்களை பேணி அக்கட்சிகளை தொடர்ந்து நடத்தலாம். தேர்தல் உட்பட பொது விடயங்களில் ஒன்றாக செயல்படலாம் என்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. தனியான ஒரு கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதில்லை என்றும் நான்கு கட்சிகளின் கூட்டாக இயங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இறுதியில் நான்கு கட்சிகளும் ஒப்பந்தம் செய்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பது என முடிவாகியது. ஆனால் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் உறுதியாக இருந்தது. ஏனைய கட்சிகள் அதனை எதிர்த்து வந்தன. இது பெரும் பிரச்சினையாக காணப்பட்டது. இந்த பிரச்சினைக்கு மாற்று யோசனை ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன் முன்வைத்தார். ( தொடரும் ) https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted October 24, 2017 தொடங்கியவர் Share Posted October 24, 2017 கொழும்பில் நான்கு தமிழ் கட்சிகள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 09 பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக கொள்ளுப்பிட்டியில் உள்ள தொழிலதிபர் எஸ்.வடிவேற்கரசன் அவர்களின் வீட்டில் சந்திப்புக்கள் நடைபெற்றன. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும், அவ்வாறு கூறிப்பிட தேவையில்லை என ஏனைய கட்சிகளும் முரண்பட்டுக் கொண்டிருந்தன. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக வடிவேற்கரசனின் வீட்டிற்கும் குமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கும் தான் மாறி மாறி ஓடித்திரிந்ததாக அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இறுதியாக விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என குறிப்பிடாவிட்டாலும் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அமைப்பு என குறிப்பிடலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன் ஆலோசனை கூறினார். இந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு 2001ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயம் சேர்க்கப்படவில்லை ( ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2004ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயம் சேர்க்கப்பட்டிருந்தது. இது பற்றி பின்னர் பார்ப்போம்) இந்த பிரச்சினைகளை தீர்த்து தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதில் கணிசமான பங்களிப்பை செய்த தொழிலதிபர் எஸ்.வடிவேற்கரசன் பற்றியும் குறிப்பிடவேண்டும். இவரின் தந்தை தொண்டமானாற்றை சேர்ந்த சேகரம்பிள்ளை ஆகும். இலங்கையில் உள்ள தமிழ் வர்த்தகர்களில் முக்கியமானவராக இவர் திகழ்ந்தார். யாழ்ப்பாணம் கொழும்பு என பல இடங்களில் சேகரம் அன்சன்ஸ் என்ற பெயரில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தன. கொழும்பில் உள்ள தமிழ் வர்த்தகர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல்களுக்காக பெருந்தொகை பணங்களை வழங்கி வந்த போதிலும் சேகரம்பிள்ளை தமிழரசுக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார். தமிழரசுக்கட்சி, அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தொடர்ச்சியாக தேர்தல்களுக்கு பணம் வழங்கி வந்தார். அவரைப்போலவே வடிவேற்கரசனும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவை வழங்கி வந்தார். எஸ்.வடிவேற்கரசன் அவர்களே இலங்கையில் சுமிற்றோமோ ரயர் இறக்குமதியாளரும் ஏக விநியோகத்தருமாகும். தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பலமான அரசியல் தலைமையாக திகழ வேண்டும் என்பதில் தொழிலதிபர் எஸ்.வடிவேற்கரசனும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு வாரகாலமாக கொழும்பில் நடந்த சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகளை அடுத்து 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி சனிக்கிழமை நான்கு தமிழ் கட்சிகளுக்கிடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கொள்ளுப்பிட்டியில் உள்ள தொழிலதிபர் எஸ்.வடிவேற்கரசன் அவர்களின் வீட்டில் வைத்து செய்து கொள்ளப்பட்டது. நான்கு கட்சிகளும் இணைந்து ஒரே கொள்கையின் அடிப்படையில் செயல்படுவது என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதென்றும், நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பாக செயல்படுவது என எடுக்கப்பட்ட முடிவையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தேர்தல் ஆணையாளருக்கு நான்கு கட்சி செயலாளர்களும் இணைந்து அறிவிப்பதென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரே கொள்கையின் கீழ் செயல்படும் அதேவேளை தங்கள் தங்கள் கட்சிகளின் தனித்துவங்களையும் தொடர்ந்து பேணுவது என்றும் இக்கட்சிகள் இணங்கி கொண்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் ந.குமரகுருபரன், ரெலோ கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் எஸ்.வடிவேற்கரசன், நிமலன் கார்த்திகேயன், கந்தையா நீலகண்டன் உட்பட கொழும்பு தமிழ் பிரமுகவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். நான்கு கட்சிகளும் இணைந்து செயற்படுவது என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னம் தமது பொதுசின்னமாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணையாளருக்கு இந்நான்கு கட்சிகளின் செயலாளர்களும் கூட்டாக அறிவித்திருந்தன. தமிழ் பிரதேசங்களில் பொருளாதார தடையை நீக்க வேண்டும், யுத்த நிறுத்தம் செய்து நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகளுடன் பேச வேண்டும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என ஆட்சிக்கு வரும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே புரிந்துணர்வு உடன்படிக்கையின் முக்கிய விடயம் என ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நெற் இணையத்தில் 2001.ஒக்டோபர் 20ஆம் திகதி பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. Tamil parties sign MOU Leaders of the Tamil parties’ alliance Saturday signed a Memorandum of Understanding (MOU) to contest the forthcoming general election under one symbol. Mr.R.Sampanthan on behalf of Tamil United Liberation Front (TULF), Mr.N.Kumarakuruparan on behalf of All Ceylon Tamil Congress (ACTC), Mr.N.Sri Kantha on behalf of Tamil Eelam Liberation Organization (TELO) and Mr.Suresh Premachandran of behalf of Eelam Peoples’ Revolutionary Liberation Front (EPRLF-Suresh wing) have signed the MOU. “The primary objective of the MOU is to exert pressure on any main political party that comes to power at the forthcoming general election to declare a ceasefire, lifting the economic embargo on Tamil areas particularly areas which do not come under the state armed forces, to lift the ban on the Liberation Tigers of Tamil Eelam and to enter into talks with the LTTE to arive at an acceptable political solution to the Tamil national question through Norwegian initiative”, a spokesman of the alliance said. He added that the Tamil parties’ alliance would direct its parliamentary strength after the general election to achieve its objective contained in the MOU. The leaders of four Tamil parties’ alliance Saturday met at the residence of a neutral person and signed the MOU. இதனை தொடர்ந்து வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுவை தாக்கல் செய்தது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சிகளுக்கு இருக்கும் வாக்கு வங்கியை பொறுத்து வேட்பாளர் எண்ணிக்கை ஒவ்வொரு கட்சிக்கும் நிர்ணயிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இந்த வேட்பாளர் தெரிவில் தலையீடு செய்யவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் அதன் உதயசூரியன் சின்னத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் மட்டும் வேட்பாளர்களை நியமித்தது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ் வேட்பாளர்களை நியமிக்கவில்லை. 2001 ஒக்டோபர் 26ஆம் திகதி திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி ஆகிய மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. திருகோணமலையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன் அவர்களை தலைமை வேட்பாளராக கொண்டு 7பேர் போட்டியிட்டனர். இதில் 5 வேட்பாளர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்தவர்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் மற்றும் ரெலோ ஆகியன தலா ஒவ்வொரு வேட்பாளரை நியமித்திருந்தன. ரெலோவின் தலைவர் என்.சிறிகாந்தா திருகோணமலையில் போட்டியிட்டார். யோசப் பரராசசிங்கம் அவர்களை தலைமை வேட்பாளராக கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் 5 வேட்பாளர்களும், ரெலோவின் சார்பில் இந்திரகுமார் பிரசன்னாவும், த.தங்கவடிவேலுவும் போட்டியிட்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சார்பில் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ( வெள்ளிமலை ) போட்டியிட்டார். வன்னி மாவட்டத்தில் ரெலோவை சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன் தலைமை வேட்பாளராக போட்டியிட்டார். 9 வேட்பாளர்களில் 4பேர் ரெலோவை சேர்ந்தவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சார்பில் தலா ஒரு வேட்பாளர் போட்டியிட்டனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த அ.சந்திரநேரு தலைமையில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி 9 வேட்பாளர்களையும், ரெலோ ஒரு வேட்பாளரையும் நியமித்திருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் அம்மாவட்டத்தில் வேட்பாளர்களை நியமிக்கவில்லை. யாழ். மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் வி.ஆனந்தசங்கரி தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் மாவை சேனாதிராசா, ரவிராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சார்பில் அதன் தலைவர் அ.விநாயகமூர்த்தியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் போட்டியிட்டனர். ரெலோ சார்பில் சிவாஜிலிங்கமும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனும் போட்டியிட்டனர். 2001ல் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளின் போது விடுதலைப்புலிகளுக்கு பங்கு இருக்கவில்லை, அவர்கள் இதில் தலையிடவும் இல்லை, ஆனால் 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னரே விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நல்லையா குமரகுருபரன் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். 2001ஆம் ஆண்டு தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து விடுதலைப்புலிகள் அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தேர்தல் முடியும் வரை ஆதரவை வெளிப்படுத்தவில்லை என்றும் நல்லையா குமரகுருபரன் சுட்டிக்காட்டியிருந்தார். ஆதரித்து அறிக்கை விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியை பெறாவிட்டால் அது தமக்கு பாதகமாக அமைந்து விடும் என்ற காரணத்தினால் தான் விடுதலைப்புலிகள் ஆதரித்து அறிக்கை வெளியிடாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் இணைந்து ஒரே அணியில் போட்டியிட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் கொடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் விஞ்ஞாபனம் 2001.நவம்பர் 12ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு கொலிடே இன் ஹொட்டலில் வைத்து வெளியிடப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் வி.ஆனந்தசங்கரி, செயலாளர் ஆர்.சம்பந்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் ந.குமரகுருபரன் ஆகியோர் இதனை வெளியிட்டு வைத்தனர். அதில் போரை நிறுத்தி நோர்வே அனுசரணையுடன் அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இலங்கை தமிழர்கள் இந்நாட்டில் தனித்துவமான தேசிய இனம், தமிழர் தாயகம் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை, ஏனைய இனங்களுக்கு இருக்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும் என்ற விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. உடனடியாக வடகிழக்கு மாகாணத்தில் அமுலில் உள்ள பொருளாதார தடையை நீக்க வேண்டும், பயணகட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், போரை உடனடியாக நிறுத்தி சர்வதேச மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் அரசும் விடுதலைப்புலிகளும் பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் முதன் முறையாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கொக்கட்டிச்சோலைக்கும் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரசாரம் செய்தனர். ( தொடரும் ) https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 17, 2017 தொடங்கியவர் Share Posted November 17, 2017 இனப்பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால் பாராளுமன்றம் வரமாட்டோம் என சபதம் எடுத்த சம்பந்தன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 10. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிக்கள் மட்டத்திலும் வரவேற்பை பெற்றிருந்தது. தமிழர் ஒரு தேசிய இனம், அவர்களின் தாயக பிராந்திய ஒருமைப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும், தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை, ஏனைய இனங்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும் என்ற நான்கு விடயங்களை வலியுறுத்தியிருந்த இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தமிழர் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தடை நீக்கப்பட வேண்டும் என்றும் போர் நிறுத்தம் செய்யப்பட்டு விடுதலைப்புலிகளுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிந்தது. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் வலியுறுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பின்னர் ஏனைய கட்சிகளோடு இணங்கி தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்திருந்தது. இந்த தேர்தல் விஞ்ஞாபனம் 2001 நவம்பர் 12ஆம் திகதி தமிழ்நெற் இணையத்தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டது. அதனை இப்போதும் பார்வையிடலாம். நவம்பர் 13ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையிலும் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக வெளியிடப்பட்டது. நான்கு கட்சிகள் சேர்ந்து அமைத்திருக்கும் இந்த கூட்டணிக்கான மக்கள் அங்கீகாரத்திற்கான தேர்தலாகவும் இதை தாம் பார்ப்பதாக தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். இந்த கூட்டணி பற்றி தமிழ் ஆங்கில பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டன. வடக்கு கிழக்கில் வாக்காளர் மத்தியில் இக்கூட்டணி பாரிய தாக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பும் வலுவடைய ஆரம்பித்தது. எதிரும் புதிருமான செயற்பட்டு வந்த தமிழ் கட்சிகள் ஒரே அணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்தது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கொடுத்திருந்தது. வேட்புமனு தாக்கல் செய்த பின் நவம்பர் 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் சமூகமளித்திருந்தனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட தலைமை வேட்பாளர் ஆர்.சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் சில வாக்குறுதிகளை வழங்கினார். விடுதலைப்புலிகள் மீது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என்றும் தமிழ் மக்களின் விடுதலையை நோக்கிய இலட்சியத்தை அடைவதற்காக தொடர்ந்து போராடும் என்றும் உறுதியளித்தார். திருகோணமலை சிவன் கோவிலடியில் நடந்த இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரெலோ தலைவர் என்.சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் உரையாற்றினர். அதேபோன்று நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூதூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் சம்பந்தன் உரையாற்றும் போது இத்தேர்தல் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பாக இருக்கும் என தெரிவித்தார். நான்கு தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவது ஈ.பி.டி.பிக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதான ஈ.பி.டி.பியினரின் முதலாவது தாக்குதல் பொத்துவில் பகுதியில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெற்றது. நவம்பர் 22ஆம் திகதி கல்முனையில் ஈ.பி.டி.பியினர் நடத்திய தாக்குதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 ஆதரவாளர்கள் காயமடைந்தனர். அதேபோன்று நவம்பர் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் தீவுப்பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பியினர் பாரிய தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர். 1994ஆம் ஆண்டு தொடக்கம் யாழ். மாவட்டத்தில் தனிகாட்டு ராஜாக்களாக அராஜகம் புரிந்த ஈ.பி.டி.பிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரவு பெரும் அச்சத்தை கொடுத்தது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் ஈ.பி.டி.பி நடத்தி வந்தது. சந்திரிக்கா அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்ததால் அரச பலத்தையும் இராணுவ ஆதரவு பலத்தையும் வைத்து கொண்டு ஈ.பி.டி.பி எப்படியாவது யாழ்ப்பாணத்தில் தாம் வெற்றி பெற வேண்டும் என செயற்பட்டு கொண்டிருந்தனர். நவம்பர் 19ஆம் திகதி மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கொக்கட்டிச்சோலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான செல்வேந்திரன் ( தமிழர் விடுதலைக் கூட்டணி ) இந்திரகுமார் பிரசன்னா ( ரெலோ) ஆகிய இருவரும் சென்று சிறிய பிரசார கூட்டங்களை நடத்தினர். நீண்டகாலத்திற்கு ( 1977க்கு) பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடந்த முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இதுவாகும். இதன் பின்னர் டிசம்பர் முதலாம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் ஜோசப் பரராசசிங்கம் தலைமையில் கொக்கட்டிச்சோலைக்கு சென்று ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் பொது கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜோசப் பரராசசிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலை பெறுவார்கள் என்றும் இல்லையேல் விடுதலை என்பது எட்டாக்கனிதான் என தெரிவித்தார். இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் டிசம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலடியிலும் திருகோணமலை சிவன் கோவிலடியிலும் மட்டக்களப்பு காந்திசிலை மைதானத்திலும் நடைபெற்றது. ஈ.பி.டி.பியினரின் தாக்குதலில் படுகாயமடைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மாவை சேனாதிராசா கட்டுக்களுடன் சக்கரநாற்காலியில் யாழ்ப்பாணத்தில் நடந்த இறுதி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்;. ஈ.பி.டி.பியினரின் அராஜகத்தை அடக்குவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளம் வேட்பாளராக அறிமுகமான கஜேந்திரகுமார், ரவிராஜ் ஆகியோரும் இந்த இறுதி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். டிசம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பரபரப்பான சூழலில் நடைபெற்றது. மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்த மக்கள் சோதனை சாவடிகளில் வைத்து திருப்பி அனுப்பபட்டனர். அதுபோன்று மன்னாரிலும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்த மக்கள் திருப்பி அனுப்பபட்டனர். யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆறு ஆசனங்களை கைப்பற்றியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி விருப்பு வாக்கில் முதலாம் இடத்திற்கு வந்திருந்தார். அதனை தொடர்ந்து மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.ரவிராஜ், அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி, சிவாஜிலிங்கம் ஆகியோர் விருப்பு வாக்கு அடிப்படையில் வெற்றி பெற்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் அரசியலுக்கு வந்து மிகக்குறுகிய காலத்தில் விருப்பு வாக்கில் மூன்றாம் இடத்திற்கு வந்து வெற்றி பெற்றார். வன்னியில் செல்வம் அடைக்கலநாதனும், ராஜகுகனேஸ்வரனும், சிவசக்தி ஆனந்தனும் வெற்றி பெற்றனர். திருகோணமலையில் ஆர்.சம்பந்தன் வெற்றி பெற்றார். மட்டக்களப்பில் மூவர் வெற்றி பெற்றனர். தங்கவடிவேல் விருப்பு வாக்கில் முதலாம் இடத்திற்கு வந்திருந்தார். இரண்டாம் இடத்தில் ஞா.கிருஷ்ணபிள்ளையும், மூன்றாம் இடத்தில் ஜோசப் பரராசசிங்கமும் வந்திருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் சந்திரநேரு அரியநாயகம் வெற்றி பெற்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் மொத்தமாக 14 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தையும் பெற்று மொத்தம் 15 ஆசனங்களை பெற்றிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி 6 உறுப்பினர்களையும், ரெலோ 4 உறுப்பினர்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் 3 உறுப்பினர்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒரு உறுப்பினரையும் பெற்றுக்கொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் வேட்பாளர் வன்னி மாவட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் வெற்றிபெற வில்லை. 1977ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி அதிக ஆசனங்களை பெற்றது 2001 டிசம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆகும். 1989ஆம் ஆண்டு ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட போது வடக்கு கிழக்கில் மொத்தம் 9 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்தது. அதில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ உறுப்பினர்கள் தான். தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த ஒருவர் கூட வெற்றிபெற வில்லை. 1989ஆம் ஆண்டிலும் தமிழ் கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டாலும் இதனை பலமான கூட்டாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இந்தியாவினால் சேர்த்து வைக்கப்பட்ட செயற்கையான ஒரு கூட்டாகவே மக்கள் அதனை பார்த்தனர். தேர்தல் முடிந்த கையோடு இந்த கூட்டில் இருந்த நான்கு கட்சிகளும் பிரிந்து விட்டன. 1977ஆம் ஆண்டு தமிழீழ கோரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட போது வடக்கு கிழக்கில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அது எழுச்சியுடன் நடைபெற்ற தேர்தலாகும். அதன் பின்னர் 1989, 1994, 2000 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கவில்லை, 1977ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கொள்கை ஒன்றை முன்வைத்து நடந்த தேர்தலாக 2001ஆம் ஆண்டு தேர்தலை பார்க்க முடியும். கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களிலும் இத்தேர்தல் முடிவுகள் கவனத்தை ஈர்த்திருந்தன. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டிருந்தன. இதனைத்தொடர்ந்து டிசம்பர் 12ஆம் திகதி ( 12.12.2001) அன்று கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.ஆனந்தசங்கரியும் ஆர்.சம்பந்தனும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபாலகிருணஷ்ண காந்தியை சந்தித்து பேசினர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் முதலாவது கூட்டம் டிசம்பர் 18ஆம் திகதி கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைக்காரியாலயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் வி.ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற குழுத்தலைவராக ஆர்.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தேர்தல் முடிந்த பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்டு வரும் உண்மைக்கு புறம்பான தகவல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் இந்த நான்கு கட்சிகள் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அவர்களால் ஒற்றுமையாக இயங்க முடியாது என்றும் விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டு தனித்தனியாக இயங்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும் சில ஆங்கில பத்திரிகைகள் உட்பட கொழும்பு பத்திரிகைகள் விசமத்தனமாக பிரசாரங்களை செய்து வந்தன. இந்த பிரசாரங்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களில் உறுதியோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்றும் தமக்குள் எந்த பிளவும் கிடையாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 12ஆவது பாராளுமன்றம் 2001.டிசம்பர் 19ஆம் திகதி கூடிய போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் முக்கிய சபதம் ஒன்றை எடுத்தார். இந்த பாராளுமன்ற தொடர் முடிவடைவதற்குள் தமிழ் மக்கள் மரியாதையுடன் வாழக்கூடிய நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் அடுத்த பாராளுமன்றத்திற்கு வரமாட்டோம் என தெரிவித்தார். சம்பந்தனின் பாராளுமன்ற உரையை ஆங்கில ஊடகம் ஒன்று இவ்வாறு வெளியிட்டது. No self respecting Tamil would enter the next parliament if a just and permanent solution is not found to the Tamil national question by this parliament,” declared Mr. R. Sampanthan, MP, the parliamentary group leader of the Tamil National Alliance (TNA), speaking at the inaugural ceremony of the 12th parliament ( Wednesday. 19.12.2001) தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை தீர்க்க ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தனின் இந்த உரை மறுநாள் அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாக வெளிவந்தது. ( தொடரும் ) https://thinakkathir.com Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted December 18, 2017 தொடங்கியவர் Share Posted December 18, 2017 விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தால் தமது கட்சியின் தனித்துவம் கெட்டுவிடும் என அஞ்சிய ஆனந்தசங்கரி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 11. பொதுஜன ஐக்கிய முன்னணி தலைவி சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதி ஜனாதிபதியாக இருந்த வேளையில் ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்று பாராளுமன்றத்திற்கு தலைமை தாங்கினார். ஜனாதிபதி ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் பிரதமர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கும் சூழல் இதற்கு முதல் 1994ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது அப்போது ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்த வேளையில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவி சந்திரிக்கா குமாரதுங்க பிரதமராக பதவி ஏற்றார். 1999ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இறுதி பிரசார கூட்டத்தில் சந்திரிக்கா குமாரதுங்க மீது விடுதலைப்புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை அவர் தீவிரப்படுத்தியிருந்தார். 2001 டிசம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை அடுத்து ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு தமது நல்லெண்ணத்தை காட்டும் வகையில் விடுதலைப்புலிகள் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் நாள் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்தனர். கிறிஸ்மஸ், மற்றும் தைப்பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் நாள் தொடக்கம் ஜனவரி 24ஆம் நாள் வரையான ஒரு மாத கால போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். இதனை ஏற்று ரணில் தலைமையிலான அரசாங்கமும் டிசம்பர் 21ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப்புலிகள் வெளியிட்ட ஒரு மாதகால போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு அரசாங்கமும் ஒரு மாதகாலத்திற்கு யுத்த நிறுத்தத்தை செய்வதாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் 2001 டிசம்பர் 21ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் என்.குமரகுருபரன், ரெலோவின் தலைவர் என். சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்தனர். இந்த கோரிக்கையை ஆதரித்து வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு பிரதமர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். நோர்வே தரப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த சமாதான முயற்சி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி பதவி ஏற்றுக்கொண்டதும் முன்னேற்றம் அடைந்திருந்தது. 2002 ஜனவரி 10ஆம் திகதி நோர்வே அரசாங்க பிரதிநிதிகளான பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெசன் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹைம் ஆகியோர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சமாதான முயற்சிகள் பற்றி பேசினர். அன்றைய தினம் மாலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை நோர்வே உயர்மட்ட குழு சந்தித்தது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.ஆனந்தசங்கரி, ஜோசப் பரராசசிங்கம், ஏ.விநாயகமூர்த்தி, கஜேந்;திரகுமார் பொன்னம்பலம், சிவசக்தி ஆனந்தன், தங்கவடிவேல், ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையாக சர்வதேச நாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர். போர் நிறுத்தம் ஏற்பட்டது வடக்கு கிழக்கு மக்களிடையே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. கூடவே பொங்குதமிழ் போன்ற எழுச்சி நிகழ்ச்சிகளும் வடக்கு கிழக்கில் ஆரம்பமாகியது. பொங்குதமிழ் என்ற எழுச்சி பேரணி யாழ். பல்கலைக்கழக சமூகத்தினால் 2002 ஜனவரி 17ஆம் நாள் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவராக இருந்த செல்வராசா கஜேந்திரன் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தார். இது யாழ்ப்பாணத்தில் பெரும் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. இந்த பொங்குதமிழ் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ஆனந்தசங்கரி, யாழ். மாநகர முதல்வர் செல்லன் கந்தையன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட சூழலில் நிரந்தர போர் நிறுத்ததிற்கான ஏற்பாடுகளும், சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளையும் நோர்வே தரப்பு மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது. கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை அலுவலகத்தில் எம்.சிவசிதம்பரம் தலைமையில் 2002 ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற மத்திய குழு கூட்டத்;தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி சமாதான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அன்றைய தினம் விடுதலைப்புலிகள் மேலும் ஒரு மாதகாலத்திற்கு போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். போர் நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுக்களுக்கான முயற்சிகளின் ஒரு கட்டமாக 2002.பெப்ரவரி 15ஆம் திகதி ஏ9 பாதை திறக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைகளை அடுத்து இப்பாதை மக்கள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது. இப்பாதை திறந்தது வன்னியிலிருந்த மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. போர் இல்லாத சூழல் வடகிழக்கில் மக்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்தை தொடர்ந்து மட்டக்களப்பிலும் பெப்ரவரி 20ஆம் திகதி பொங்குதமிழ் நடத்தப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் பொது அமைப்புக்களும் இணைந்து இந்த பொங்குதமிழ் எழுச்சியை மட்டக்களப்பு இந்துகல்லூரி மைதானத்தில் நடத்தினர். நிரந்தர போர் நிறுத்தம் விடுதலைப்புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தை, தமிழ் மக்களின் அபிலாஜைகளை நிறைவேற்றுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த பொங்குதமிழ் நிகழ்வில் முதல் தடவையாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்து கொண்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், தங்கவடிவேல், கிருஷ்ணபிள்ளை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் என பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர். நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த சமாதான புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. பெப்ரவரி 21ஆம் திகதி நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் கிளிநொச்சியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பம் இட்டார். பெப்ரவரி 22ஆம் திகதி வவுனியாவுக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். நிரந்தர போர் நிறுத்தத்தை நோர்வே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. நிரந்தர போர் நிறுத்தம், மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை அடுத்து வடக்கு கிழக்கில் எழுச்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2002 மார்ச் முதலாம் திகதி வவுனியாவில் பிரமாண்டமான முறையில் பொங்குதமிழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை தாக்கியவாறு ஊர்வலங்கள் நடத்தப்பட்டது. வவுனியாவில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஆர்.யோகராஜன், வன்னி புனர்வாழ்வு அமைச்சர் நூர்டீன் மன்சூர் உட்பட அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர். மார்ச் 19ஆம் திகதி திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் தலைமையில் மாபெரும் பொங்குதமிழ் எழுச்சி பேரணியும் கூட்டமும் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அங்கு பொங்குதமிழ் பிரகடனத்தை ஏற்று சத்திய பிரமாணமும் செய்து கொண்டனர். பொங்கு தமிழ் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்ட முக்கிய விடயம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் என்பதாகும். நான்கு கட்சிகளும்; சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒப்பந்தம் செய்த போதும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என சேர்ப்பதற்கு மறுத்த தமிழ் கட்சிகள் பொங்குதமிழ் பிரகடனத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். திருகோணமலையில் பொங்குதமிழ் பேரணிக்காக வீதி எங்கும் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. திருகோணமலை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் கொடிகளையும் புத்த பிக்கு ஒருவர் தலைமையிலான சிங்கள குழு அறுத்து எறிந்திருந்தது. இதனால் திருகோணமலையில் பதற்றம் உருவாகியிருந்தது. தமிழ் இளைஞர்கள் கோபம் அடைந்தவர்களாக கொந்தளித்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் இளைஞர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் அவர்கள் கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார். திருகோணமலையில் தனியே தமிழர்கள் மட்டும் வாழவில்லை, ஏனைய இனத்தவர்களும் வாழ்கிறார்கள். அவர்களுடன் மோதல்களை ஏற்படுத்தாது சமாதானமாகவும் நிதானமாகவும் செயல்படுவதே திருகோணமலையில் அனைத்து இனங்களுக்கும் பாதுகாப்பு என தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது செயல்பட்ட பிக்கு தலைமையிலான சிங்கள குழுவின் செயலுக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மெல்ல மெல்ல தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுமைக்குள் செல்ல ஆரம்பித்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ கட்டுப்பாட்டிற்கு வந்து தமது அரசியல் பிரிவு அலுவலகங்களையும் அமைத்து கொண்டனர். ஏப்ரல் 4ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்கள் கையொப்பம் இட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். வன்னிக்கு வந்து தம்மை சந்திக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் கட்சி தலைவர் ஆறுமுகம் தொண்டமான், மலையக மக்கள் முன்னணித்தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்று 2002 ஏப்ரல் 8ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோன்று சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அழைப்பு கிடைத்ததும் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆனந்தசங்கரி சில அச்சங்களை வெளியிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துவமான ஒரு கட்சி. விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் இக்கட்சியில் அதிகரித்து வருவதால் கட்சியின் தனித்துவம் பாதிக்கப்பட்டு விடுமோ என தான் அஞ்சுவதாக தெரிவித்தார். வன்னிக்கு செல்வதற்கும் ஆனந்தசங்கரி தயக்கம் காட்டியிருந்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உபதலைவர்களில் ஒருவரான ஜோசப் பரராசசிங்கம் போன்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் வன்னிக்கு செல்ல சம்மதித்தார். ( தொடரும் ) https://thinakkathir.com Link to comment Share on other sites
Recommended Posts