Jump to content

நாவல் விமர்சனம் : சிவகாமியின் சபதம் - கல்கி


Recommended Posts

சிவகாமியின் சபதம்

Sivagamiyin-Sabatham.jpg

“கல்கி” என்றாலே அனைவருக்கும் “பொன்னியின் செல்வன்” தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குத் தன்னுடைய மந்திர எழுத்துக்களால் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார்.

“பொன்னியின் செல்வன்” விமர்சனம் எழுதிய போது அனைவரும் “சிவகாமியின் சபதம்” படிங்க அதுவும் இதே போல அசத்தலான நாவல் என்று கூறினார்கள். “பொன்னியின் செல்வன்” நாவல் அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் மிகச் சுவாரசியமான நாவலே!

அதில் சோழர் பெருமை பற்றி என்றால் இதில் பல்லவர்கள் பற்றி. இரண்டுமே வெவ்வேறு களம் ஆனால், இரண்டிலுமே நாம் சம்பந்தப்பட்டு இதில் ஒரு அங்கமாக மாறி விடுவோம். அதாவது நாம் சோழ, பல்லவ குடிமக்களாகவே மாறி விடுவோம்.

பரஞ்சோதி

பரஞ்சோதி என்ற சாதாரண நபர் ஆரம்பத்தில் நாவலை துவக்கி வைத்து, சேனாதிபதியாகி நாவலின் இறுதி வரை வருகிறார். இவர் கதாப்பாத்திரம் குறித்து ஒரு சந்தேகம் உள்ளது.

எட்டு மாதத்தில் படைத்தலைவராகப் பொறுப்பேற்பதாக வருகிறது. இது எப்படி நடந்தது என்பதற்கான விளக்கமில்லை. போரில் சண்டையில் வெற்றி பெற்றார் என்று மட்டும் கூறப்படுகிறது ஆனால், என்ன செய்தார்? எப்படி இப்பதவி உடனே கொடுக்கப்பட்டது என்பதற்கான விளக்கமில்லை.

ஆயனர்

தலைமை சிற்பியான ஆயனர் மற்றும் மகேந்திர சக்கரவர்த்தி இருவரும் சிற்பங்கள் குறித்துப் பேசிக்கொண்டு இருப்பார்கள். அப்போது காலம் உள்ளவரை இந்தச் சிற்பங்களால் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று அரசர் கூறுவார்.

அதற்கு ஆயனர், “உலகம் சிலைகளை வடித்தவர்களை விட அதை உருவாக்க காரணமாக இருந்த அரசரை மட்டுமே நினைவு கூறும். எனவே, உங்கள் புகழ் எப்போதுமே சரித்திரத்தில் நிலைத்து இருக்கும்” என்பார்.

இவர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. மகாபலிபுரம் சென்றால், நாம் பல்லவ காலத்தையும் அரசர்களையும் தான் நினைவு கூறுகிறோம். தாஜ்மஹாலை கட்டிய கொத்தனாரை நமக்குத் தெரியாது ஆனால், ஷாஜஹான் பற்றித் தான் உலகம் பேசுகிறது.

ஆயனருக்கு கல்லை பார்த்தாலே அதில் சிற்பம் வடிக்க முடியுமா? என்ற தான் எண்ணம் மேலோங்கும். அவருக்குச் சிந்தனைகள் முழுக்கச் சிற்பம் மட்டுமே!

இவருக்கு மகாபலிபுரத்தில் மண்டபம் இருப்பதாகக் கூறினார்கள். அடுத்த முறை செல்லும் போது பார்க்க வேண்டும்.

நாம் வரலாறுகளில் படித்த “அஜந்தா” ஓவியங்கள் குறித்து நாவலில் வருகிறது. அது குறித்த தகவல்களும் இவரின் ஆர்வமும் நமக்கும் ஆர்வத்தைக் கொடுக்கும்.

புலிகேசி

புலிகேசி தன்னுடைய சிறு வயதில் சித்தப்பாவிடம் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் மனதளவில் இரக்கத்தைத் தொலைத்து இருப்பார். எனவே, புலிகேசியைப் பொறுத்தவரை பாவம் புண்ணியம் இரக்கம் எதுவுமே அவரது அகராதியில் கிடையாது.

கல்கி, புலிகேசியை வர்ணிக்கும் போது நமக்கே பயமாக இருக்கும்.

எந்தப் போர் நெறிமுறைகளையும் பின்பற்றாமல் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது, பெண்களைக் கடத்துவது என்று ஒரு அரக்கன் போலவே இருப்பார். இவருடைய படை பலம் மிரட்டலாக இருக்கும்.

உடன் இருப்பவர்கள் தளபதி முதல் அனைவரும் நடுங்கி கொண்டு இருப்பார்கள்.

காஞ்சியை ரணகளமாக்கி செல்லும் போது படிக்கும் நமக்கே திகிலாக இருக்கும். யானைக்கு மதம் பிடித்தால் என்ன ஆகுமோ அந்த நிலையில் புலிகேசி இருப்பார். இந்த நேரத்தில் தான் மகேந்திர சக்கரவர்த்தி புலிகேசியை குறைத்து எடை போட்டு  விடுவார்.

சிவகாமி

தலைப்பு “சிவகாமியின் சபதம்” என்று இருப்பதால், சிவகாமி என்ன சபதம் இட்டார்? எதற்காகச் சபதம் இட்டார்? என்று சபதம் இடும் வரை நமக்கு ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

மிகப்பெரிய அரசர்கள் எல்லாம் இருக்கும் நாவலில் ஒரு பெண்ணின் பெயரில் தலைப்பு இருப்பதால், என்ன நடக்கும்? சிவகாமி என்ன செய்வார்? தற்போது சபதம் விடுவாரா? இனிமேலா? என்று ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

சில நேரங்களில் சபதம் போடுற மாதிரி சம்பவமே ஒன்றையுமே காணோமே! எப்ப சபதம் போடுவார்? என்று நினைக்கத் தோன்றுகிறது ? .

இந்தச் சிவகாமி ஒரு கற்பனை கதாப்பாத்திரம் என்று சொன்னால் மட்டுமே நம்மால் நம்ப முடியும். அந்த அளவுக்கு உயிரோட்டமுள்ள கதாப்பாத்திரம். அழகு, நடனத் திறமை என்று நாவல் நெடுக நம்மை அசரடிக்கிறார்.

எனக்குச் சிவகாமியின் கதாப்பாத்திரம் “பொன்னியின் செல்வன்” பூங்குழலியின் கதாப்பாத்திர குணத்தை நினைவு படுத்தியது. உங்களில் யாருக்காவது இப்படித் தோன்றியதா?

பூங்குழலி என்ன நேரத்தில் என்ன நினைப்பார் என்றே தெரியாது. திடீர் என்று கோபப்படுவார், சமானதானமடைவார், முடிவை மாற்றிக் கொள்வார். அதே போலச் சிவகாமியும் எந்த நேரத்தில் என்ன நினைப்பார் என்றே கருத முடியாதபடி உள்ள கதாப்பாத்திரம்.

தற்காலிக சூழ்நிலைக்கு ஏற்ப முடிவை மாற்றிக்கொண்டே இருப்பார். பின்னர் வருத்தப்படுவார்.

மகேந்திர சக்கரவர்த்தி

துவக்கத்தில் மிகவும் புத்திசாலியாகவும் திறமையானவராகவும் வரும் மகேந்திர சக்கரவர்த்தி இறுதியில் அவர் திட்டங்கள் தோல்வி அடைவது போலவும், அவரது இறுதி வாழ்க்கை வெற்றிகரமாக இல்லாதது போலவும் ஆனது ஏமாற்றமாக இருந்தது.

நம்மைப் பொறுத்தவரை நாயகன் என்பவன் என்றுமே தோற்கக் கூடாது. எத்தனை அடி வாங்கினாலும் இறுதியில் திருப்பிக் கொடுத்து பட்டையைக் கிளப்ப வேண்டும் என்ற எண்ணமே இதற்குக் காரணம்.

நம் விருப்பம் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் ஆனால், நிதர்சனம் வேறு.

மாமல்லர்

Sivagamiyin-Sabatham-1.jpg

மாமல்லர் சிறு வயதிலேயே (17-18) போரில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருப்பார். இளங்கன்று பயமறியாது என்பது போல எப்போதுமே போர் / வெற்றி என்பது மட்டுமே அவர் முழக்கமாக இருக்கும். அவரைப் பொறுத்தவரை சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

Image Credit – http://sivagamiyin-sabadham.blogspot.in/

வாதாபியின் படையெடுக்கும் காட்சிகள், வாதாபியில் சிவகாமியிடம் நிலையை எடுத்துக் கூறியும் அவர் வர மறுக்க, அதனால் அவர் கோபமடைந்து வெறுத்துப் பேசும் வசனங்கள் மிக இயல்பாக இருக்கும்.

வாதாபியில் எதிரிப் படையினர் சரணடைவதற்கு முன்னர் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் தாக்க வேண்டும் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்பது இவர் விருப்பமாக இருப்பதே இவரின் அடிதடிக்கு உதாரணம்.

காதலராக இருக்கும் போது துள்ளலுடனும் அதே சமயம் நாட்டின் சக்கரவர்த்தியாக மாறியதும் அதற்குத் தகுந்த முதிர்ச்சியுடன் நடந்து கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

போர்க்களம்

பொன்னியின் செல்வன் நாவலை விடப் போர்க்களம் இதில் மிரட்டலாக உள்ளது. போர்க்களம் பற்றிய வர்ணனையை படிக்க வேண்டும் என்றால் சிவகாமியின் சபதம் அவசியம் படிக்கலாம்.

இதில் வரும் படைகளின் எண்ணிக்கையைப் படித்தால் எனக்குத் தலை கிறுகிறுக்கிறது.

15,000 யானைகள், 10,000 குதிரைகள், ஐந்து லட்சம் காலாட்படை என்று இருந்தால், எப்படி இருக்கும்? சும்மா ஒரு கற்பனையை ஓட்டிப் பாருங்கள். உங்களுக்குக் கிர்ர்னு இருக்கும்.

ஒரு சாலையில் 100 யானைகள் வந்தால் எப்படி இருக்கும்? இதுவே அடி வயிற்றை எல்லாம் கலக்கி விடும். 15,000 யானைகள் நடந்து வந்தால் / ஓடி வந்தால் நிலைமையை நினைத்துப் பாருங்கள். யம்மாடி! பூமியே அதிர்ந்து விடும் என்பது இது தான்.

படை வரும் வழியெல்லாம் சர்வ நாசம். மேற்கூறிய படை புலிகேசியின் படை!

உணவு

இவ்வ்வ்ளோ யானைகள், குதிரைகள், காலாட்படைகளுக்கு உணவு எப்படிச் சமாளிப்பார்கள். இது குறித்து எதோ வந்து இருக்கிறது ஆனால், இது எப்படிச் சாத்தியம் என்று என்னால் திருப்தியாக உணரும்படியான பதில் இல்லை.

யானை உணவு

ஆறு மரக்கால் அரிசி, ஒன்பது தார் வாழைப்பழம், இருபத்தைந்து தேங்காய், ஒரு ஆலமரத்தில் பாதி இவ்வளவையும் சாப்பிட்ட பிறகும் யானையின் பசி அடங்காது.

என்று கூறப்பட்டுள்ளது. தற்போது உங்க சிந்தனையை 15,000 யானைகளுக்கு மட்டும் தட்டி விடுங்க.. என்ன தலை சுத்துதா? ? இதே தான் எனக்கும்.

எப்படி இவ்வளவு யானைகளுக்கு, குதிரைகளுக்கு, காலாட்படைகளுக்கு உணவு அளிப்பது? நடைமுறையில் எப்படிச் சாத்தியம்?

நான் கூறுவது இவை அனைத்தும் நாட்டில் இருந்தால் வேறு விசயம் ஆனால், இவை அனைத்தும் வடபெண்ணைக் கரையில் ஆறு மாதமாகப் படையெடுப்புக்காகக் காத்திருக்கும்.

அதாவது அவர்கள் சொந்த நாட்டை விட்டு விலகி அடுத்த நாட்டின் மீது படையெடுக்கத் தயாராக வேறு இடத்தில் தற்காலிகமாக இருக்கும் இடம்.

எப்படி உணவை திரட்டுவது?

ஐந்து லட்சம் பேருக்கு அரண்மனையில் உணவு சமைப்பது என்றால் பெரிய விசயம் இல்லை ஆனால், இவ்வளவு பேருக்கும் வெளியே முற்றுகை இட்டுள்ள இடத்தில் கொடுப்பது என்றால்…?!

எப்படிச் சமைப்பது? அவ்வளவு காய்கறிகளுக்கு எங்கே செல்வது? வழியில் ஆறு இல்லையென்றால் எப்படிக் குளிப்பார்கள்? எவ்வளவு உணவு பொருட்களைத் தூக்கி வருவது?

எதோ 1000 பேருக்கு என்றால் பரவாயில்லை இத்தனை லட்சம் பேருக்கு விலங்குகளுக்கு எப்படிக் கொடுப்பது? பல நூறு கிலோ மீட்டர் இது போல வருவது என்றால் எப்படிச் சமாளிக்கிறார்கள்?

என்ன முயன்றும் என்னால், ஒரு சரியான பதிலை ஊகிக்க முடியவில்லை. எனக்குத் தலை தான் வலித்தது. உங்களில் யாருக்காவது பதில் தெரிந்தால், இதைத் தயவு செய்து விளக்கவும்.

புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்து (மேற்கூறிய படைகள் தான்) முற்றுகையிடுவார். கோட்டை கதவுகள் மூடப்பட்டு மிகப் பலப்படுத்தப்பட்டு இருக்கும். எனவே என்ன முயன்றும் கோட்டையைத் தகர்க்க முடியாது. இதனால், காலம் விரையம் ஆகிக் கொண்டே இருக்கும்.

இதனால் உணவுப் பொருட்கள் தீர்ந்து இரண்டு லட்சம் வீரர்கள், யானைகள் பசியால் இறந்து விடுவார்கள்.

இது போல அல்லது இதை விட மிகப்பெரிய படையைத் திரட்டி பல்லவர்கள் புலிகேசியின் (வாதாபி) மீது படையெடுப்பார்கள். அது எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். யோசித்தாலே நாம் களைப்படைந்து விடுவோம் ? .

சிற்பக்கலையில் இருந்த கவனம் நாட்டின் பாதுகாப்பில் இல்லை

மகேந்திர சக்கரவர்த்திச் சிற்பக்கலையை வளர்க்க காட்டிய ஆர்வத்தில் நாட்டின் பாதுகாப்பைப் பற்றி மறந்து இருப்பார். ஏன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்? ஏன் உயிர் பலியை ஏற்படுத்த வேண்டும்? என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருந்தது அவருக்கே பிரச்சனையாக முடியும்.

கண்ணன் & கமலி

மகேந்திர சக்கரவர்த்தியின் மகன் மாமல்லரின் தேரோட்டி கண்ணன். இவருடைய மனைவி கமலி. இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைக் கேட்டால், எனக்குப் பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் மனதில் வந்து செல்கிறார்கள் ? .

மனோரமா மற்றும் இன்னொரு கதாப்பாத்திரம் அவர் பெயர் நினைவில் இல்லை. இவர்களைப் போலவே கண்ணன் கமலி பேசுவது இருக்கும்.

கோட்டை அகழி

காஞ்சிக்கு கோட்டையைச் சுற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லருக்குப் படைத் தலைவர் பரஞ்சோதி விளக்கும் இடம் மிரட்டலாக இருக்கும். அகழியில் முதலை, ரகசிய இடத்தில் சாதனங்கள், யானை மோதினால் அதைக் காயப்படுத்த இயந்திரங்கள் என்று ஏராளம் இருக்கும்.

வாதாபி படையினர் யானைக்குச் சாராயம் கொடுத்து வெறியாக்கி மோத விடுவார்கள் ? .

நாகதந்தி

இதில் நாகதந்தி என்பவர் புத்த பிட்சுவாக வருகிறார். படு பயங்கரமான வார்த்தை ஜாலக்காரர். இவர் கூறுவதை எதிரில் உள்ள நபர் நம்பவும் முடியாது நம்பாமலும் இருக்க முடியாது. ஜெகஜால கில்லாடி.

இவரிடம் சிவகாமி மாட்டிக்கொண்டு நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் பரிதாபமாக இருப்பார். விடாது கருப்பு போல இறுதிவரை தொடர்ந்து வருவார்.

நாகதந்தியை “நீங்க நல்லவரா? கெட்டவரா?” என்று கேட்டால், “தெரியலையேப்பா!” என்று தான் கூறுவாரோ! ?

சத்ருக்னன் / குண்டோதரன்

அரசர்கள், சாம்ராஜ்யம், போர் என்றால் யார் இருக்கிறார்களோ இல்லையோ ஒற்றர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். உள்நாடு, பகை நாடு என்று எங்கும் வியாபித்து இருப்பார்கள். இவர்கள் இல்லாமல் எந்த ஒரு போரும் வெற்றிகரமாக நடைபெற முடியாது.

மகேந்திர சக்கரவர்த்தி மற்றும் மாமல்லருக்கு போர் காலங்களில் தகவல் சேகரித்துத் தருவது, நெருக்கடி காலங்களில் மாற்று வழிகளைக் கூறுவது என்று இவர்களின் முக்கியத்துவம் நிறைந்து காணப்படும்.

பல காட்சிகளில் இவர்கள் செய்வது திகில் படம் பார்ப்பது போலவே பரபரப்பாக இருக்கும்.

இதில் சத்ருக்னன் தலைமை ஒற்றனாகவும் குண்டோதரன் சத்ருக்னனின் சிஷ்யனாகவும் இருப்பான். குண்டோதரன் சுவாரசியமான கதாப்பாத்திரம், நகைச்சுவையும் உடன் வரும் ? .

குண்டோதரன் ஒரு காட்சியில் நாகதந்தியை எக்கச்சக்கமாக மாட்டி விட்டு விடுவான். இந்தச் சமயத்தில் இருளில் நாகதந்தியின் முகப் பாவனைகளைக் கல்கி விவரிக்கும் விதம் அசத்தலாக இருக்கும் ? .

“திருப்பாற் கடல்” ஏரி

ஏரியின் பெயரைப் பார்த்தாலே உங்களுக்கு எப்படிப் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிந்து இருக்கும். கல்கி விவரிப்பதைப் படித்தால், எவ்வளவு முயன்றும் ஏரி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்ற முடிவுக்கு வர முடியவில்லை.

கடல் போல அலையடித்துப் பொங்கி கொண்டு இருக்கும் ஏரி உடைப்பு ஏற்பட்டால்….?! கல்கியியின் வர்ணனையைப் படித்தால் நாமே தண்ணீருக்குள் மாட்டிக்கொண்டு தத்தளித்துப் போல உள்ளது.

“திருப்பாற் கடல்” ஏரி என்று கூறப்படும் இந்த ஏரி தற்போது எந்த ஏரி என்று தெரியுமா?!

வட மொழிச் சொற்கள்

நாவலில் நிறைய வட மொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பண்டை காலத்திலேயே அரசர்கள் அதிகளவில் பயன்படுத்தினார்களா? அல்லது கல்கியின் வட மொழிச் சொற்களின் பயன்பாடா?

எது எப்படி இருந்தாலும் நாவலிலேயே என்னைக் கடுப்படித்த விசயம் இது மட்டுமே!

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழியில் கரையான் போல வட மொழிச் சொற்கள் நுழைந்ததற்குக் காரணம் நம் தமிழர்களே என்பதை நினைக்கும் போது ஆத்திரமாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக 1950 – 80 வரை வந்த தமிழ்த் திரைப்படங்கள் வட மொழிச் சொற்களைப் புகுத்தியதில் பெரும் பங்கு வகித்து இருக்கின்றன.

போர் தந்திரங்கள்

போர் தந்திரங்கள் குறித்து இதில் படிக்கும் போது நமக்குப் பிரமிப்பாக இருக்கும். காஞ்சியில் படைத் தளபதி செய்து வைத்து இருந்த ஏற்பாடுகளால் யானைகள் காயமடைந்து வெறிக் கொண்டு திரும்பி புலிகேசி படையினர் மீதே ஓடும் போது, பல நூறு வீரர்கள் அவற்றில் மாட்டி நசுங்கி இறந்து விடுவார்கள்.

சின்னக் கற்பனை. உங்கள் முன்னாள் நூறு யானைகள் நிற்கின்றன. திடீர் என்று அவை வெறிக் கொண்டு திரும்பி உங்கள் பக்கமே ஓடி வந்தால், உங்கள் நிலைமை?! நினைத்தாலே பகீர் என்று இருக்கிறதல்லவா..! இது போல உண்மையாக நடந்து இருக்கிறது என்பதை நினைத்தால்..!

பல்லவர்களின் படை பலம்

இதைப் படித்தால் உங்களுக்கு நான் இதுவரை கூறியதன் அர்த்தம் புரியும்

குன்றின் மேலேயிருந்து வடக்கே நோக்கினால் கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரே யானைகள் யானைகள் யானைகள்! உலகத்திலே இத்தனை யானைகள் இருக்க முடியாது!

இவ்வளவு யானைகளும் ஒரே இடத்தில் வந்து சேர்ந்து இருப்பதினால் பூமி நிலை பெயர்ந்து விடாதா என்றெல்லாம் பார்ப்பவர்கள் மனதில் சந்தேகத்தைக் கிளப்பும்படியாக எல்லையில்லாத தூரம் ஒரே யானை மயமாகக் காணப்பட்டது.

கிழக்கே திரும்பிப் பார்த்தால் உலகத்திலே குதிரைகளைத் தவிர வேறு ஜீவராசிகள் இல்லையென்று சொல்லத் தோன்றும். எல்லாம் உயர்ந்த ஜாதிக் குதிரைகள்; அரபு நாட்டிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் கப்பலில் வந்து மாமல்லபுரம் துறைமுகத்தில் இறங்கியவை.

போர்களத்துக்குப் போகும் இந்தப் பதினாயிரக்கணக்கான குதிரைகளில் எவ்வளவு குதிரைகள் உயிரோடு திரும்பி வருமோ என்று நினைத்துப் பார்த்தாலே கதி கலங்கும்.

தென் புறத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் குதிரைகள் பூட்டிய ரதங்களும், ரிஷபங்கள் பூட்டிய வண்டிகளும், பொதி சுமக்கும் மாடுகளும், ஒட்டகங்களும், கோவேறு கழுதைகளும் காணப்பட்டன.

மேற்கே திரும்பினால், அம்மம்மா! பூவுலகத்திலுள்ள மனிதர்கள் எல்லாம் இங்கே திரண்டு வந்திருக்கிறார்களா என்ன? அப்படிக் கணக்கிடமுடியாத வீரர்கள் ஈ மொய்ப்பது போலத் தரையை மொய்த்துக்கொண்டு நின்றார்கள்.

இதைப் படிக்கும் போது நமக்குத் திரைப்படங்களில் CG உதவியால் காட்டப்படும் படைகள், நம் கண் முன்னே இவருடைய எழுத்திலே வந்து செல்லும் ? .

மாறுபடும் தர்மம்

மகேந்திர சக்கரவர்த்தி ஒரு முறை “தர்ம, நியாயங்கள் அரசர் குலத்துக்கும் சாதாரணக் குடிமக்களுக்கும் இடையே மாறுபடும். சில நேரங்களில் நாட்டின் நலனை முன்னிட்டு தர்மத்துக்கு ஏற்றதில்லாத காரியங்களில் கூட ஈடுபட வேண்டி வரும்” என்று கூறுவார்.

இது ஏற்றுக் கொள்ளும்படியுள்ளது. அரசர்கள் படை பலம் வசதியுடன் வாழ்கிறார்கள் என்ற பொதுவான கருத்து மக்களிடையே உள்ளது ஆனால், அவர்களுக்கு இருக்கும் இன்னல்கள் நெருக்கடிகள் பொதுமக்கள் அறியாதது.

பலகணி

சிவகாமி பலகணி வழியாக எட்டிப் பார்த்தாள் என்று வருகிறது. இதில் “பலகணி” என்பது மாடமாகக் கொள்ளலாம். பலகணி தான் நாம் தற்போது கூறும் “பால்கனி” என்பதாக மருவி விட்டதா?!

யாரும் இந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியுமா?

வர்ணனை

பல்லவ சக்கரவர்த்தி மாமல்லர் வாதாபி மீது போர் தொடக்கத் தயாரான உடன் போருக்குச் செல்லும் முன்பு ஏகாம்பரேசுவரர் கோவிலில் பூசை நடைபெறும். இதில் வந்தவர்களையும் நின்று கொண்டு இருக்கும் அரசர் குலத்தவர்களையும் கல்கி விவரிப்பார் பாருங்கள்…!

அசத்தல், தாறுமாறு என்ற வார்த்தையை விட அதிகமான பாராட்டைத் தரும் வார்த்தை எதுவோ அதற்குக் கல்கி பொருத்தமாக இருப்பார். இவர் மனுசனே இல்லை. நேரிலேயே பார்ப்பது போல அவருடைய வர்ணனை இருக்கும்.

ஒருவேளை கடந்த பிறவியில் இவர் மண்டபத்தில் ஓரமாக நின்று கொண்டு பார்த்து இருப்பாரோ! என்று என்னும் அளவுக்கு இருக்கும் ? .

கல்கி ஏன் கொண்டாடப்படுகிறார் என்றால், இது போலச் சாதாரணச் சம்பவங்களில் கூட அசாதாரணமான விவரிப்பைக் கொடுத்துப் படிப்பவர்களை வேறு கட்டத்துக்குக் கொண்டு சென்று பிரம்மிப்பில் மூழ்கடித்து விடுகிறார்.

முடிவுரை

காலத்தால் அழியாத நாவல்களைக் கொடுத்த கல்கி இது போல இன்னும் சில நாவல்களை எழுதி இருக்கலாம் என்ற ஆதங்கம் கல்கியின் நாவல்களைப் படிப்பவர்களுக்கு ஏற்படும். “சிவகாமியின் சபதம்” அப்படிப்பட்ட ஏக்கத்தை ஏற்படுத்திய நாவல் என்றால் மிகையல்ல.

பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி. சில நாட்கள் சுவாரசியமான வாசிப்பனுபவத்தைத் தந்தது. இந்த அத்தியாத்தோடு முடிக்கலாம் என்று தொடர்ந்து, தொடர்ந்து  அதிகாலை 2 மணி வரை படித்து புத்தகத்தையே முடித்த பிறகு தான் படுத்தேன்.

கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலுக்கு மிகக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். என் தொலைந்து போன புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மீட்டுக் கொடுத்தது.

அவரின் மூன்று வரலாற்றுப் புதினங்களை (பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்) படித்த பிறகு இனி படிக்க இது போலப் புத்தகமில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது ? . திரும்பப் பொன்னியின் செல்வன் படிக்க நினைத்துள்ளேன்.

இது வரை நீங்கள் “பொன்னியின் செல்வன்” படிக்கவில்லையென்றால், ஒரு அசத்தலான வாசிப்பனுவத்தைத் தவறவிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று உறுதியாகக் கூறுவேன். முதல் 10 பக்கங்கள் மட்டும் படியுங்கள் மீதியை கல்கி எழுத்துப் பார்த்துக் கொள்ளும்.

நேரமில்லை, ஆர்வமில்லை என்று கூறுபவர்கள் எப்படி இவருடைய எழுத்துக்களில் சிக்கிக் கொள்கிறீர்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல, அனுபவப்பட்டவன் கூறுவது.

http://www.giriblog.com/2016/08/sivagamiyin-sabatham-book-review.html

 

 

Link to comment
Share on other sites

சிவகாமியின் சபதம் - புத்தக விமர்சனம்

 
சிறுவதில் கல்கியில் தொடராக வந்த பொன்னியின் செல்வன் நாவலை எப்போதாவது ஓரிரு பகுதியை படித்ததுண்டு அப்போதெல்லாம் அதன் மீது அந்த அளவிற்கு ஈர்ப்பு இல்லை. பலர் பொன்னியின் செல்வன் நாவலை பற்றி சொல்ல சொல்ல அப்படி என்னதான் இதில் இருக்கிறது பார்ப்போமே, என்று முடிவு செய்து புத்தகத்தை வாங்கலாம் என்று சென்று பார்த்தால் ஐந்து பாகங்கள் ஒவ்வொரு பாகமும் ஒரு புத்தகம். இது வேலைக்கு ஆவாது ... அப்படின்னு நெனைச்சி .... முதல்ல கல்கி எழுதிய பார்த்திபன் கனவு படிப்போம் பிடிசிருந்ததுன்னா பொன்னியின் செல்வன் படிக்கலாம் அப்படின்னு, பார்த்திபன் கனவு படித்தேன். விளைவு புத்தகம் ரொம்ப பிடிச்சி போயி உடனே பொன்னியின் செல்வன்  வாங்கி படித்து முடித்தேன். இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணாமாக சிவகாமியின் சபதம் படித்து முடித்தேன். பார்த்திபன் கனவு நாவலிலே சிவகாமியின் சபதத்தை படித்த பிறகு இந்த நாவலை படித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கும்.இந்த நூலுக்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை அதனால் எனக்கு தெரிந்த கதை சுக்கத்தை மட்டும் கூறுகிறேன்.

கதை சுருக்கம்:
வாதாபி(இன்றைய கர்நாடகா பகுதி)  மன்னன் புலிகேசி , பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனின் காஞ்சி கோட்டையை கைப்பற்றி பல்லவ சாம்ராஜ்யத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர படையெடுத்து வருகிறான். இதனை சற்றும் எதிர்பார்க்காத மகேந்திர பல்லவன் ஒரு சிறுபடையுடன் கிளம்பி புலிகேசியை வழியிலே இடைமறித்து வைக்கிறான். இதற்கிடையில் புலிகேசியின் அண்ணன் நாகநந்தி என்பவன் ஒற்றனாக காஞ்சி நகரில் இருந்து கொண்டு உளவு பார்த்து புலிகேசி படை தாக்குவதற்கான சரியான நேரத்தை ஓலையில் குறித்து அதை  பரஞ்சோதி(கல்வி கற்பதற்காக காஞ்சி வந்தவன்)  மூலமாக  புலிகேசியிடம் ஒப்புவிக்க அவன் அறியாமலே அவனிடம் அஜந்தா இரகசியத்தை அறிவதற்கு உரிய ஓலை இது என சொல்லி அனுப்புகிறான். நாகநந்தியின் சூழ்ச்சியை  போலவே பரஞ்சோதி புலிகேசியிடம் அகப்பட்டு கொள்கிறான் ஆனால் அதற்கு முன்னரே மாறு வேடத்தில் வரும் மகேந்திர பல்லவன் நாகநந்தியின் ஓலையை மாற்றி வைத்து விடுகிறார். மேலும் மொழி புரியாமல் புலிகேசியிடம் மாட்டிக் கொண்ட பரஞ்சோதியை மீட்டு பல்லவ படை முகாமுக்கு அழைத்து சென்று அவரை பல்லவ படையின் தளபதியாக்கி விடுகிறார். அதன் பிறகு  எட்டு மாதங்கள் புலிகேசியின் படையை முன்னேற விடாமல் தடுத்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் மகேந்திர பல்லவனின் மகன் மாமல்லனை காஞ்சி கோட்டையிலே பாதுகாப்புக்காக விட்டு விட்டு செல்கிறார். மேலும் நாட்டியகலையில் சிறந்து விளங்கும் சிவகாமி என்னும் ஆயனரின் மகளும் பல்லவ மன்னனின் மகனும் காதல் கொள்கின்றனர். நாகநந்தியும் சிவகாமியின் மேல் ஒருதலையாக காதல் கொள்கிறான், புலிகேசி எப்படியாவது பல்லவ நாட்டை வென்று இந்த சிவகாமியை எனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி ஒற்றனாக வேலைபார்க்கிறான். மகேந்திர பல்லவனுக்கும் மாமல்லன் சிவகாமியை மணந்துகொள்ளவதில் விருப்பம் இல்லை.

மறுபுறம் வேங்கி நாட்டில் இருந்து படை எடுத்து வரும் துர்வீந்திரனை அடக்க மாமல்லனை படையுடன் புறப்பட்டு போகும் படி மகேந்திர பல்லவன் ஆணை இடுகிறார். துணைக்கு தளபதி பரஞ்சோதியை அனுப்பி வைக்கிறார். அவர்கள் துர்வீந்திரனை வென்று திரும்புகின்றனர். அதன்பிறகு மகேந்திர பல்லவனின் ஆணைப்படி காஞ்சி கோட்டையை பலப்படுத்துகின்றனர். புலிகேசி கோட்டை முற்றுகைக்கு முன்னேற பல்லவ படை காஞ்சி கோட்டையை வந்தடைகிறந்து. புலிகேசி படையோ  காஞ்சி கோட்டையை எவ்வளவோ முயற்சி செய்தும் கைபற்ற முடியாமல் சமாதான  தூது அனுப்புகின்றனர். அதனை ஏற்ற பல்ல மண்ணின் கோட்டையில் சில நாட்கள் விருந்தினராய் தங்கி விட்டு புலிகேசி புறப்படுகின்றான். இதற்கிடையில் நாகநந்தி பல்லவ படையால் காது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுகிறார். அவரை விடுதலை செய்ய செய்ய மகேந்திரன் மறுப்பதனால். புலிகேசி போகும் வழியில் தென்பட்ட எல்லாவற்றையும் அழித்து விட்டு பல பல்லவ பெண்களையும் , ஆணைகளையும் கைது செய்து கொண்டு செல்கிறான். நாகநந்தியோ நய வஞ்சகமாக ஆயனரை ஏமாற்றி சிவகாமியை வாதாபிக்கு அழைத்து செல்கிறான். 
மாறுவேடத்தில் வாதாபிக்கு செல்லும் மாமல்லனிடம் சிவகாமி  "இந்த புலிகேசியை வென்று வாதாபியியை எரித்து விட்டு அதன் பிறகு  என்னை அழைத்து செல்லுங்கள் என்று சபதம் செய்கிறாள்".அதன் பிறகு மகேந்திர பல்லவர் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் மாமல்லனை வற்புறுத்தி பாண்டிய மன்னனின் மகளை மனம்முடித்து வைத்துவிட்டு வாதாபியை வென்று சிவகாமியை மீட்டு வரவேண்டும் என்று சொல்லி இறக்கிறார். ஒன்பது வருடங்களாக படையை  திரட்டி பாண்டிய படையின்  உதவியுடன் வாதாபியை அழித்து புலிகேசியை கொன்று சிவகாமியை மீட்டு வருகிறான்  மாமல்லன். ஆனால் கள்ள புத்த துறவியான நாகநந்தி சிவகாமியை கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்து தளபதி பரஞ்சோதியிடம் உயிர் பிச்சை வாங்கி தப்புகிறார்.

சிவகாமியோ மாமல்லன் திருமணமான செய்தி கேட்டு பெரும் துயருற்று சிவபெருமானையே மணந்து நாட்டிய கலையில் கவனத்தை செலுத்துகிறாள். தளபதி பரஞ்சோதியோ தளபதவியை துறந்து சிவா பக்தராகி சிவத் தொண்டு புரிகிறார். இவரே பின்னாளில் சிறுத்தொண்டர் என அழைக்கப்படுகிறார் 

http://pattisonakathai.blogspot.ch/2012/06/blog-post_28.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.