Jump to content

ஒரு இனிய உதயம்! – சிறுகதை


Recommended Posts

ஒரு இனிய உதயம்! – சிறுகதை

 

204228505214969161311719676748sirukathai.jpg

''அம்மா.... நான் கேட்க, கேட்க ஏம்மா பதிலே சொல்ல மாட்டேன்ங்கிறீங்க?''

''சுஜி... உனக்கு இன்னும் ரெண்டு பூரி வைக்கிறேன்.''

''நான் என்ன கேட்கிறேன்? நீங்க அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? நான் கேட்டது உங்களுக்கு புரியலையா என்ன?''

''புரியுது.... புரியுது... சுஜி. நீ சின்ன பெண். உனக்கு எதுக்கு இப்போ இதைப்பற்றின கவலை. சாப்பிட்டதும் போய் படி. பரீட்சை வருதுதில்லே.... இப்போ டென்த்துங்கிறதை மனசிலே வச்சுக்கிட்டு படி.''

''படிக்க புத்தகத்தை எடுத்து விரிச்சாலே அதிலே அப்பா முகம்தான் தெரியுது. படிக்க முடியல...''

''இதுல உன்னை சொல்ல குத்தமில்லே. இனிமேல் ஸ்கூல்ல வந்து உன்னை பார்க்க வேண்டாம்னு கொஞ்சம் கடுமையா பேசினால்தான் உன்னை தேடி உன் அப்பா அங்கே வரமாட்டார்.''

''ஏம்மா.... ஏன் அப்படி பண்ண போறீங்க? இப்போ வாரத்திலே ஒரு நாள் ஸ்கூல்ல வந்து பார்த்துட்டு போறார். அதையும் கெடுக்க போறீங்களே? நீங்க ரெண்டு பேரும் ஏன் பிரிஞ்சீங்கன்னு கேட்டா அதுக்கு சரியான பதிலும் சொல்லமாட்டேன்ங்கிறீங்க. உங்களுக்குள்ளே என்ன பிரச்னை? அப்பாவை பார்த்தா பாவமா இருக்கே, எப்போதுமே சந்தோஷமும் இல்லாம ஒரு கலகலப்பும் இல்லாமலேயே இருக்கிறார். நீங்க டைவர்ஸ் வாங்கிக்கிட்டதனாலேதானே நான் அப்பா கூட இருக்க முடியாம ஆச்சு? இது ஏன் உங்களுக்கு புரியலே? அப்படி அப்பா என்ன தப்பு செய்துட்டார்? மற்ற பிள்ளைகளை போல எனக்கும் அப்பாவோட இருக்கணும்ங்கிற ஆசை இருக்காதா? அப்பா இல்லாம வளர நான் என்ன பாவம் செய்தேன்?''

''சுஜி.... ரெண்டு பேக் எடுத்துக்க. ஒண்ணுலே உன் டிரஸ்ஸுகளையும் அப்புறம் உனக்கு தேவையான பேஸ்ட், பிரஷ், ஹேர் ஆயில்.... இப்படிப்பட்ட சாமான்களையும் வச்சுக்க. நானே உங்கப்பாகிட்ட இப்பவே கொண்டு போய் விட்டுட்டு வந்துடறேன். இன்னும் ரெண்டு தெரு தள்ளித்தானே இருக்குது உங்க அப்பா வீடு. சீக்கிரமாகவே போயிடலாம். அங்கே போய் உன் அப்பா கூடவே இரு. இப்போ நீ வளர்ந்துட்டே. உன் தேவைகளை நீயே கவனிச்சுக்க உன்னாலேயே முடியும். என் உதவி இனிமேல் உனக்கு தேவையில்லை. என்னை எப்போ பார்க்கணும்னு உனக்கு தோணுதோ, அப்போ இங்கே வா. என்னை வந்து பார். உடனேயே திரும்பி போய் விடு. ஏன்னா உனக்கு தாய் மேல் இருக்கும் பாசத்தை விட தந்தை மேல்தானே பாசம் கூடுதலாக இருக்குது? ''

''அம்மா உங்களை பிரிஞ்சு அப்பாகிட்டயே என்னை போக சொல்றீங்களா? அப்போ அப்பா கிடைப்பார், அம்மா உங்களை நான் இழந்திடணுமா?''

''சுஜி....  நீ நினைக்கிறதை போல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்திட முடியாதும்மா?''

''ஏன்மா? அதுதான் ஏன்னு கேக்கிறேன்? உங்க பிரிவுக்கான காரணத்தை ஏன் சொல்ல மாட்டேன்கிறீங்க? அத நான் எப்போதான் தெரிஞ்சுக்கிறது? நான் இன்னும் என்ன விபரம் தெரியாத சின்ன பொண்ணா?''

''சுஜி.... நீ மாறி மாறி கேட்கிேற? அதிலும் கொஞ்ச நாளாகவே கேட்டுக்கிட்டு இருக்கே. அதனால சொல்றேன்.''

ஒருவித தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தாள் சாந்தி.

''எனக்கும், உங்கப்பாவுக்கும் கல்யாணம்னு பெரியவங்க பேசினபோதே நான் ரெண்டு கண்டிஷன்களை சொன்னேன். அதுக்கு உங்கப்பாவும், அவங்க குடும்பத்தினரும் ஒத்துக்கிட்டாங்க. ஆனால் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அப்படியே மாறி போயிட்டாங்க.''

''அதென்னம்மா ரெண்டு கண்டிஷன்?''

''முதல் கண்டிஷன்  – எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பெண் என்பதால் என் சம்பளத்தை நான் அவங்ககிட்டதான் கொடுப்பேன். இரண்டாவது கண்டிஷன் – அப்புறம் அவங்க தனியா இருப்பாங்க. அவங்க தளர்ந்து போகும் காலம் வரை இருக்கட்டும். அதன்பிறகு அவங்களை என்னோடவே வச்சுக்குவேன். இதுதான்.... இது தப்பா?''

''இல்லையே? தாத்தாவும், பாட்டியும் உங்க வருமானத்திலேயும், உங்களை சார்ந்தும் தானே இருக்க முடியும்?''

''இந்த கண்டிஷனுக்கு எல்லாம் தலையாட்டின உங்க அப்பாவும், அவங்க அப்பாவும், அம்மாவும் எங்களுக்கு கல்யாணமான மறுமாசமே என் சம்பள பணத்தை கேட்டாங்க. நான் என்னோட அம்மா, அப்பாகிட்ட கொடுத்துட்டதா சொன்னேன். அதற்காக அவங்க என்னை கடுமையான வார்த்தைகளாலே பேசினாங்க. அன்னைக்கே எங்க வாழ்க்கையிலே பிரச்னைதான். அதை தெரிஞ்சுக்கிட்ட என்னோட அப்பாவும், அம்மாவும் நீ எங்களுக்கு ரூபாய் எதுவும் தர வேண்டாம், உன் வாழ்க்கையை நீ பாரு, எங்களால் உனக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாதுன்னு சொன்னாங்க. நான் ரூபாய் கொடுக்கலேன்னா, அவங்க வயசான காலத்திலே சாப்பாட்டு செலவுக்கும் மருத்துவ செலவுக்கும் எல்லாம் என்ன செய்வாங்க? குடியிருந்த வீடு மட்டும்தான் சொந்தம். வேற அவங்களுக்கு வருமானத்துக்கு எந்த வழியும் இல்லையே?

கொஞ்ச நாட்களாகவே யோசிச்சு நான் அந்த வீட்டை விற்க ஏற்பாடு பண்ணினேன். கொஞ்சம் பெரிய வீடு ஆனதனாலே இருபது லட்ச ரூபாய்க்கு விற்க முடிஞ்சது. வித்த பணத்தை பாங்க்கில் போட்டு அதன் வட்டியை மாசாமாசம் அவங்களுக்கு கிடைக்கும் படியான ஏற்பாடுகளை செய்தேன். என்னோட அப்பாவையும், அம்மாவையும் ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து அதிலே அவங்களை குடியமர்த்தினேன். அதன் பிறகு என் சம்பள பணத்தை உங்க அப்பாகிட்ட கொடுத்தேன். கொஞ்ச காலம் எந்த பிரச்னையும் இல்லாமல் நாட்கள் கழிஞ்சது.

திடீர்னு ஒரு நாள் எங்கப்பா மாரடைப்பிலே இறந்து போக, அவருக்கு செய்ய வேண்டியவற்றை செய்து முடிந்த நான் தனியாக இருந்த அம்மாவை என்னோடு அழைத்து வந்தேன். அப்போது உங்க அப்பா குடும்பத்தினர் பிரச்னை பண்ணினாங்க. அதை பார்த்த எங்க அம்மா, என்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்திலே சேர்த்து விட்டுடுமான்னு சொல்லி அழுதாங்க. அவங்க ஆதரவு இல்லாமல் எங்கோ தனியா தவிக்க விட எனக்கு மனமில்லை. என் தாயை என்னால் அனாதை போல் விட்டுவிட முடியாதுன்னு சொல்லி அப்போ அஞ்சு வயசான உன்னையும் அழைச்சுக்கிட்டு இங்கே வந்துட்டேன். உங்கப்பா ரெண்டு, மூணு தடவை இங்கே வந்து என்னை அழைச்சார். நான் எங்கம்மாவோடுதான் இருப்பேன், அவங்க உங்க வீட்டிலே இருக்க சம்மதம்னா சொல்லுங்க, நானும் வர்றேன்னு சொன்னேன். உங்கப்பா சம்மதிச்சார். ஆனால், அவரோட அப்பாவும், அம்மாவும் சம்மதிக்க மறுத்துட்டாங்க. கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவருக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க போறோம்னு சொல்லி உங்க தாத்தா, பாட்டி சொல்லவே அவரும் டைவர்ஸ் கேட்டார். நானும் கொடுக்க வேண்டியதா போச்சு.

எங்கம்மா இறந்து ரெண்டு வருஷம் ஆச்சு. இப்போ எனக்கு நீ துணை.... உனக்கு நான் துணை. இப்போ உன்னோட அப்பாவும், தாத்தாவும், பாட்டியும் என்னை அவங்களோடு இருக்கும்படி அடிக்கடி வந்து வற்புறுத்துறாங்க. நான் எப்படி சம்மதிப்பேன்?

உன்னோட தாத்தாவும், பாட்டியும் இப்போ தளர்ந்து போயிட்டாங்களாம். அவங்களுக்கு துணையா நான் இருக்கணுமாம். அவங்களை பராமரிக்கவும், அவங்களோட தேவைகளை நிறைவேற்றவும்தான் என்னை கூப்பிடுறாங்க. என்னால் அது முடியாது. நான் உத்தியோகத்துக்கு போய் கொண்டிருப்பவள். உங்கப்பாவே அவங்களை ஆதரித்து பார்த்துக்கட்டும், இல்லே வேலைக்கு ஆள் வச்சு பார்த்துக்கிடட்டும். என் பெற்றோரை வேண்டாம்னு சொன்னாங்க, உங்கப்பாவும் சேர்ந்துதானே சொன்னார். சட்டப்படியும் நாங்க பிரிஞ்சாச்சு. இனியும் எங்களுக்குள்ளே என்ன சொந்த பந்தம் இருக்க முடியும்? அவரோடு சேர்ந்து வாழணும்னு நான் நினைக்கலை. இத்தனை வருஷகாலம் நான் என் திறமையினாலே ஒருவரிடமும் கை ஏந்தாமல் வாழ்ந்து விட்டேன். இனிமேலும் அப்படியே வாழ்ந்துடறேன். எனக்கு நீ மட்டும்.... நீ மட்டும் போதும்'' சொன்னவள் சுஜியை கட்டிப்பிடித்து கொண்டு அழுதாள்.

சுஜியால் தன் தாய் சொன்னவற்றை கேட்டதும் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் அமைதியாக அப்படியே உட்கார்ந்திருந்தாள். சின்ன பெண் என்றாலும் கொஞ்ச நேரம் ஏதேதோ யோசித்தபடியே அமர்ந்திருந்தவள் பேச ஆரம்பித்தாள்.

''அம்மா..... நான் நல்லபடியா படிச்சு உத்தியோகத்துக்குப் போய் உங்களை நல்லபடியா பார்த்துக்குவேன்.''

''அது போதும்டி என் கண்ணே...''

''ஆனால் எனக்கு கல்யாணம் மட்டும் வேண்டாம்.''

திடுக்கிட்டாள் சாந்தி. ''என்ன சுஜி... ஏன் இப்படி சொல்றே?''

''கல்யாணம் பண்ணிக்கிட்டா, புருஷன் வீட்ல என் சம்பளத்தை கேட்பாங்க. உங்களை என்னோட வச்சுக்க விடமாட்டாங்க. என்னாலும் உங்களை தனியாக விடமுடியாது. நானும் கணவனை பிரிஞ்சு வாழணும். அதெல்லாம் எதுக்கு? கல்யாணமே வேண்டாம்னு இருந்துடுறேனே! எனக்கு துணையாக நீ இருப்பீங்க. உங்களுக்கு துணையா நான் இருப்பேன். அதற்கு பிறகு எந்த பிரச்னைக்கும் இடமில்லை அல்லவா...''

சுஜியின் பேச்சு சாந்தியின் மனதில் எங்கோ ஒரு மூலையில் தாக்கியது.

என்னை போல் இவளும் தனி மரமாகத்தான் வாழ வேண்டுமா? நினைத்தவள் எதுவும் பேசாமலேயே இருந்தாள். அன்று இரவு முழுவதும் துாக்கமே வராமல் 'சிவராத்திரி'யாகவே கழிந்தது சாந்திக்கு. இரண்டு நாட்கள் அவள் மனதில் ஏதேதோ குழப்பங்கள். மனதில் மட்டுமல்ல! குழப்பங்கள் சற்று கலங்கி தெளிந்த போது நான் ஏன் அவரோடு சேர்ந்து வாழக்கூடாது..... என்று நினைக்கத் தோன்றியது. மற்ற ஆண்களை போல் எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. அவரது பெற்றோர் இரண்டாவது கல்யாணத்திற்கு வற்புறுத்தியும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. என்னுடன் வாழ வேண்டும் என்று தானே பலமுறை வற்புறுத்தி கேட்டார். என் பிடிவாதத்தால்தான் என் வாழ்க்கையே சீரழிந்து போய் விட்டதோ...? என் மகளும் இனி தனிமரமாகத்தான் வாழ வேண்டுமோ....? மனதை குடைந்த பல கேள்விகள். அதில் அவளால் பதில் சொல்ல முடியாத கேள்விகளும் இருந்தன. தப்பு என் பக்கமா.... இல்லை அவர்கள் பக்கமா... பத்து வருடங்கள் தனியாக வாழ்ந்தாயிற்று. தாய், தந்தைக்காகத்தான் அவர்களை பிரிந்தேன். இப்போது அவர்களும் இல்லை என்றாயிற்று. இனி சுஜியின் விருப்பப்படி நான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தால் என்ன?

போன வாரம் சுஜியின் ஸ்கூலில் நடந்த 'பெற்றோர் தினவிழா'வில் அவரும் வந்திருந்தாரே..... என்னோடு நெருக்கமாக அமர்ந்தாரே.... என்னை ஏறிட்டு கூட பார்க்கவில்லையே. இன்னொருவராக இருந்தால் டைவர்ஸ் ஆனதும் வேறு பெண்ணை மணம் முடித்து இருப்பாரே.... நினைக்க நினைக்க மனதுக்குள் ஏதோ ஒரு தடுமாற்றம். இனிமேலும் நான் தனித்தேதான் வாழ்வேன் என்ற எண்ணங்களும் பிடிவாதங்களும் சற்றே தளர ஆரம்பித்தது.

''அம்மா... அப்பா இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்திருந்தார். கொஞ்ச நேரம் என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார். எதுவுமே பேசவில்லை. எழுந்து போகும் போது.... உன் அம்மாவை நல்லபடியா பார்த்துக்கம்மா... அப்படீன்னு சொன்னார்.''

''சுஜி.... இனிமேல் அவர் உன்னை பார்க்க வந்தால் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வாம்மா...'' தயக்கத்தோடு சொன்ன சாந்தியை வியப்போடு பார்த்தாள் சுஜி.

''அம்மா... என்னம்மா சொல்றீங்க? அப்பாவை இங்கே அழைச்சிட்டு வரவா!'' ஆச்சரியம் தாங்க முடியாமல் இன்னும் அதிர்ச்சியோடு கேட்டாள்.

''ஆமாம் சுஜி.... நான் அவரோடு சேர்ந்து வாழ்வதாக முடிவுக்கு வந்து விட்டேன். அதுவும் உனக்காகத்தான்.''

''அம்மா....'' என சொல்லியவாறு அப்படியே தன் தாயை கட்டி அணைத்தாள்.

''அம்மா... இனி அடுத்த வாரம்தான் அப்பா என்னை பார்க்க வருவார். அதுவரை நாம ஏன் பொறுத்திருக்கணும்? இப்போ மணி அஞ்சு. நான் என் செல்லிலேயே அப்பாவை இப்போ கூப்பிடுறேன்.'' சந்தோஷத்தோடு செல்லை ஆன் பண்ணி முருகேசனிடம் பேசினாள். இன்னும் அஞ்சே நிமிஷத்தில் வந்து விடுகிறேன் என்று அவர் சொல்ல, சுஜியின் மனதோ இறக்கை கட்டி பறந்தது. தன் தந்தை வருமுன் தாயின் மனது மாறிவிடக் கூடாதே என்று நினைத்தது.

சற்று நேரத்தில் முருகேசன் வர, சாந்தி, ''வாங்க'' என்னும் ஒற்றை சொல்லோடு தலை குனிந்தபடி நின்றாள். அவளால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.

சுஜி தன் தந்தையை வரவேற்று அமர வைத்தாள்.

சாந்தி அடுப்படிக்கு சென்றவள் ஐந்தே நிமிடத்தில் இரண்டு கப் காபியோடு வந்தாள். சுஜி ஒன்றை எடுத்து தன் தந்தை கையில் கொடுத்து விட்டு தானும் குடித்தாள்.

''அப்பா.... அம்மா உங்க கூடவும், தாத்தா – பாட்டி கூடவும் வந்து இருக்கிறதா சொல்றாங்க.''

சாந்தியின் முகத்தை கூர்ந்து பார்த்தான் முருகேசன். அவளின் மவுனமே சம்மதம் என்பதை சொல்லாமல் சொல்லியது.

''சுஜி... இப்பவே ரெண்டு பேரும் என்னோடு பைக்கிலே வாங்க. நாளைக்கு வந்து நாம எல்லா சாமான்களையும் எடுத்துக்கலாம்'' என சொன்னபடியே முருகேசன் முன்னே நடக்க, சுஜி பின்தொடர்ந்தாள். வீட்டு கதவுகளை சாத்தின சாந்தி, சுஜியின் பின்னாடி பைக்கில் அமர, பைக் கிளம்பியது. அது ஒரு இனிய வாழ்க்கையை.... ஒரு இனிய உதயத்தை தேடி விரைந்தது.

http://dinamalarnellai.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ட்ரிபிள் போனால் போலீஸ் பிடிக்காதா.... சுஜிக்கும் ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.....!  tw_blush:

நல்ல கதை....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.