Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்


Recommended Posts

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-

சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து…

பகுதி -1

Thedchana1.jpg?resize=1024%2C680

25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் ‘லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி’ஆவணப்படம், இசைத்தொகுப்பு,’தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்’ நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு வைபவங்கள் இலண்டனில் 26.04.2015 ஆம் திகதியிலும்,கனடாவில் 09.05.2015 ஆம் திகதியிலும்,சென்னையில் 20.10.2015 ஆம் திகதியிலும், சுவிஸ், பிரான்ஸ், பாரிஸ் ஆகிய நாடுகளிலும் யாழ்ப்பாணத்தில் 30.1.2016 ஆம் திகதியிலும்; மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

ஒரு படைப்பு வெளிவரும் போது அதன் வளர்ச்சி கருதி அதன் குறை நிறைகளை ஆய்வு செய்வதும் மிகவும் அவசியமாகின்றது. இந்தவகையில் தமிழ் உலகும், இசை உலகும் வியந்து போற்றிய இந்த அற்புதக் கலைஞனை அவர் வித்துவத் திறமையினை உலகம் முழுவதிற்கும் இளம் சந்ததியினருக்கும் நாற்பது வருடங்களின் பின்பு தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தி அவர் கச்சேரியை நேரிலே பார்ப்பதற்கு எமக்குக் கொடுத்து வைக்கவில்லையே! என்று ஏங்கவைத்த இசைத் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்த ஒவ்வொருவரும் சந்தேகத்திற்கு இடமின்றிப் பாராட்டுக்கு உரியவர்கள். அவை மிக மிக அற்புதமாகத் தொகுக்கப்பட்டு உள்ளன. ஆயினும்
நூலின் பின் அட்டையில்

Thedchanamoorthy-Part-1.png?resize=480%2
‘லய ஞான குபேர பூபதி’ யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் வாழ்வையும் பணியையும் சிறப்பிக்கும் இந்நூலில் அவரைப்பற்றி இதுநாள்வரை வெளிவந்துள்ள கட்டுரைகள், தகவல்கள், நறுக்குகளும் தரப்பட்டுள்ளன. என்ற குறிப்புத் தரப்பட்டுள்ளன.

அதற்கு அமைய இந்த நூல் உருவாக்கப்படவில்லை.
அதனைத் தெரியப்படுத்துவதற்காக,அந்தநூலில் இடம் பெறாத, தட்சணாமூர்த்தி பற்றி ஏற்கனவே வெளிவந்த பதிவுகளையும், அவர் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் திரிக்கபட்டுச் சொன்ன விடயங்களையும் இங்கு சுட்டிக் காட்டக் கடைமைப்பட்டுள்ளேன். வரலாறுகள் என்றைக்கும் பொய்யாகக் கூடாது அவற்றிற் புனைவுகளும் இருத்தல் கூடாது.

K.S.Nadarajah-Inuvil.png?resize=304%2C40Inuvai-appar.png?resize=418%2C601

நூலாசிரியர் –  இணுவையூர்பண்டிதர்கா.செ.நடராசா

http://noolaham.org/

 

இசைவல்லோர்
இசைவல்லார் குடும்பங்கள் பல இணுவையைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர். தவில் வித்தகர் சடையரின் குடும்பம் இசைக்கலை வளர்த்த குடும்பம். இவரின் சகோதரர் இரத்தினம் சிறந்த நாதஸ்வர வித்தகர். இசையுடன் பாடல்களைப் பாடுவதிலும் மேடைக்கூத்தினை நடிப்பதிலும் வல்லவர்.

வித்தகர் பெரிய பழனியவர்களை ஈழத்தின் கலையுலகும் – இந்தியக் கலையுலகும் நன்கறியும். தவில் அவரின் தோளில் ஏறினால் – சுவை பொருந்திய நாத ஓசை மக்களை இன்புறச் செய்யும். அவரது ஒவ்வொரு உறுப்பும் நாத ஓசைக்கு ஏற்ப அசைவதனையும் – நாத ஓசை அவரின் அசைவிற்கு ஏற்ப ஒலிப்பதனையும் கண்டு கேட்டு உற்றறிந்தவர்களே அதன் தகைமையை அறிந்து இன்புற முடியும். இவர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கலைப் பாலமாகத் திகழ்ந்தவர். இந்தியக் கலைஞர்கள் பலரை அழைத்து வந்து இணுவை ஊர்க்கும்,ஈழத்திற்கும் கலை விருந்து படைத்தவர். ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்தகர்களான திரு. ச. விஸ்வலிங்கம், திரு. பொ. சின்னப்பழனி, திரு. பொ. கந்தையா, திரு. நா. சின்னத்தம்பி, திரு இரத்தினம் ஆகியோருக்கும் கலையிற் பிதாமகராக இருந்தவர். இவர்கள் வழி வந்தவர்கள் இன்று ஈழத்தின் புகழ் பெற்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர். சடையரின் வழித் தோன்றல்களான தவில் வித்தகர் ச. சின்னத்துரை, ச. இராசகோபாலன், நாதஸ்வர வித்துவான் ச. கந்தசாமியும் ச. ஆறுமுகமும் தமது வித்தகத்திறத்தினால் வெளிநாடுகளிலும் புகழ் கொண்டவர்கள்.

ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்தகர் திரு. ச. விஸ்வலிங்கம் அவர்களின் மக்களும் – மக்களின் வழி வந்தவர்களும் இன்று இசையுலகில் நன்கு மதிக்கப்படுகின்றனர். இவரின் முதல் மைந்தன் உருத்திராபதி நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதில் வித்தகர். பல்லவி வித்துவான். இசைபயிற்றுவதில் சிறந்த ஆசானாகத் திகழ்பவர். இவரின் முதல் மைந்தன் இராதாகிருஷ்ணன் சிறந்த வயலின் வித்துவானாகத் திகழ்கின்றார். ஈழ நாடெங்கணுமே போற்றப்படுகின்றார். திரு விஸ்வலிங்கம் அவர்களின் இரண்டாவது மகனே நாதஸ்வர வித்தகர் திரு. கோதண்டபாணி. இராமனின் கோதண்டம் போன்றது திரு கோதண்டபாணியின் நாதஸ்வரம். நாதஸ்வரம் வாசிப்பதில் கோதண்டபாணியின் பாணியென ஒரு மரபை உருவாக்கியவர். பல்லவி கீர்த்தனம் என்பவற்றினை வாசிப்பதில் தன்னிகரற்றுச் சிறந்தவராக விளங்கினார். தென்னிந்திய நாதஸ்வர வித்தகர் வேதமுர்த்தியோடு நாதஸ்வரம் வாசித்துத் தன் வித்தகத் திறத்தினை நிலை நிறுத்தியவர். இவர் தமது இளம் வயதில் இயற்கை அன்னையின் அணைப்பிற் துயில் கொண்டு விட்டார். வித்தகர் ச.விஸ்வலிங்கத்தின் மூன்றாவது மைந்தன் திரு மாசிலாமணி பல்கலைப் புலவராகவும் கலைஞராகவும் திகழ்ந்தவர். மேடைக்கூத்து வளர்ச்சியிற் பங்கு கொண்டவர்களில் திரு. வி. மாசிலாமணியே சிறந்த கலைஞராகத் தன்னை உயர்த்திக்கொண்டவர். இவர் எல்லாவகை இசைக்கருவிகளையும் இசைக்கும் வித்தகத்திறன் கொண்டவர். நடிப்பிசைப் புலவராகத் திகழ்ந்த இவர் தன் வாழ்வினை இளம் வயதில் நீத்து இயற்கை எய்தியது கலையுலகின் இணுவையின் பேரிழப்பாகும். ஐந்தாம் மகன் லயஞானகுபேரபூபதி திரு. தட்சணாமூர்த்தி அவர்கள்.

ஈழத்தமிழ் அன்னையின் இசைக்கலைச் சக்கரவர்த்தி:-

திரு தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் நாதத்தினைக் கேட்காதவர்கள் இல்லை என்னும்படி தன்னிகரற்றுத் திகழ்பவர். இவர் மணவினையின் தொடர்பால் அளவெட்டியில் வாழ்வினை மேற்கொண்டவர். 1960 இல் சென்னை தமிழ் இசைச்சங்கத்தில் காரைக்குறிச்சி அருணாசலத்துடன் தவில் வாசித்து நாகஸ்வரத்திற்குத் தவில் பக்கவாத்தியம் என்றிருந்த நிலையை மாற்றி, தவில் இசைக்கு நாகஸ்வரம் பக்கவாத்தியம் என்ற நிலையையும் உருவாக்கி உயர்வடைந்தார். இவரைப் பல முறை இந்தியா அழைத்தது.

தமிழகத்தின் தலை சிறந்த வித்துவான் சின்னமௌலானா நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் குளிக்கரைப் பிச்சையப்பா சேதுராமன் பொன்னுசாமி ஆகியோருடன் தலைசிறந்த திவ்ய சேத்திரங்களாகிய திருச்செந்தூர், மதுரை, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களிலும் பிரபலமான வைபவங்களிலும் தவில் வாசித்துப் பெரும் புகழீட்டியுள்ளார். மேடையில் அமர்ந்து மடிமேல் தவிலை வைத்த மாத்திரத்தே தவிலிலே ஒன்றிவிடும் அவர் கைகளிலே சரஸ்வதிதேவி களிநடம் புரிவதைக் காணலாம். அப்படியான ஒர் தவில் வாசிப்பாளன் வேறு எவராலுமே கிட்டமுடியாத ஒப்பற்ற கலைஞன் இத்தகைய மேதை தனது 43 வது வயதில் 13. 5. 75 இல் இறைவனடி சேர்ந்தார்.

திரு ச.வி அவர்களின் மகள் வயிற்று மக்களான இ. சுந்தரமூர்த்தி இ. புண்ணியமூர்த்தி சகோதரர்களும் இசையுலகில் இரட்டையராகப் புகழ் பரப்புகின்றனர். திரு கோதண்டபாணியின் மக்களும் ( கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி) இசையுலகில் புகழ் பரப்புகின்றனர்.

வித்தகர் பொ கந்தையாவின் மருமக்களான திரு கனகசபாபதி (கனகர்) திரு. இ. சண்முகம் ஆகியோர் தமது மாமனார் வழிவந்த வித்தகர்களாகத் திகழ்கின்றனர். திரு கந்தசாமியின் மகன் வயிற்று மக்களான திரு என் ஆர். சின்னராசா திரு என் ஆர். கோவிந்தசாமி ஆகிய இரு சகோதரர்களுள் முன்னவர் நாதஸ்வரத்திலும் பின்னவர் தவிலிலும் புலமை மிக்க வித்தகராவர். வெளிநாடுகளிலும் ஈழத்தின் புகழை நிலை நிறுத்தியவர். இவர்களின் தாய் மாமன்மாரான திருவாளர்கள் க. சண்முகம், க கணேசன் என்போர் கலைச் சிறப்புப் பெற்ற வித்தகர்கள். முன்னவர் மிருதங்க வித்தகராக இலங்கை வானொலியில் பணிபுரிகின்றார். பின்னவர் தன்னை நாச்சிமார் கோவிலுடன் இணைத்துக் கொண்டு நாச்சிமார் கோயில் கணேசன் என்று தவில் வித்தகராகப் புகழ் பரப்புகின்றார். இக்கலைஞர்கள் அனைவரும் இந்தியாவில் இசை விழாக்களிற் பங்கு கொண்டு ஈழத்தின் புகழை உயர்த்திய பெருமக்களாவர். இவர்கள் அனைவரும் மரபால் ஒன்றிணைந்தவர்கள். இணுவையின் கலைக்குழந்தைகளாகப் பிறந்து ஈழமும் – இந்தியாவும் – மலேசியாவும் பாராட்டும் வித்தகர்களாக வளர்ந்துள்ளனர். ஈன்றபொழுதிலும் பெரிதுவந்து – சான்றோர் எனத் தம்மக்களை உலகு பாராட்ட அதனைக் கண்டு அவர்களை ஈன்று புறந்தந்த மண்ணவள் உளம் மகிழ்கின்றாள். அம்மண்ணிற் பிறந்த அனைவரும் பெருமிதம் அடைகின்றனர்.

சிறப்பாக இணுவிலில் தங்கியிருந்தவர்கள்

இந்தியாவில் இருந்து பிரபலமான நாதஸ்வர தவில் வித்துவான்களை வருடாவருடம் அழைப்பித்து அவர்களுடைய இசைவிருந்தை அருந்தினர். இணுவிலில் தங்கியிருந்த நாதஸ்வர வித்துவான்களில் சக்கரபாணி, நாராயணசாமி, காஞ்சிபுரம் சுப்ரமணியம் சண்முகசுந்தரம் திருச்சடை முத்துக்கிருஷ்ணன், கோவிந்தசாமி, சிதம்பரம் கதிர்வேல், சேகவ், சோமு, வேதாரண்யம் வேதமூர்த்தி, நாகூர் இராசு, அறந்தாங்கி மணியம், ஆண்டிக்கோவில் கறுப்பையா, ஆலங்குடி வேணு. பசுபதி முதலியோர் பிரதானமானவர்கள். தவில் வித்துவான்களில் மலைப்பெருமாள். பக்கிரிசாமி. திருநகரி நடேசன் பாளையங்கோட்டை வீராச்சாமி, வலங்கைமான் சண்முகசுந்தரம், திருவாளப்புத்தூர் நடேசன் என்பவர்கள் பிரதானமானவர்கள்.

சங்கீதபூஷணம் திரு. இராமநாதன் அவர்கள்

Iramanathan.png?resize=349%2C301

சங்கீத பூஷணம் திரு ஏ.எஸ் இராமநாதன் அவர்கள் 1949 ஆம் ஆண்டு நாட்டிய நிகழ்விற்குப் பாடுவதற்காகவும், மிருதங்கம் வாசிப்பதற்காகவும் தஞ்சாவூரிலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது மிருதங்க வாசிப்பினால் யாழ்ப்பாண மக்களின் பூரண ஆதரவையும் அன்பையும் பெற்று அந்த மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்ப்பாணத்திலேயே தங்கி அங்கு தமிழ் இசையை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தினை நிறுவி அந்த மன்றத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு முப்பத்தைந்து வருட காலங்கள் மிருதங்கத்தினை கற்பித்துள்ளார். யாழ்பாணம் இராமநாதன் அக்கடமியிலும் மிருதங்க விரிவுரையாளராகக் கடைமை புரிந்து ஏராளமான வாரிசுகளை உருவாக்கியுள்ளார். யாழ்பாணத்தில் மிருதங்கக் கலை நிலைகொள்வதற்கும் வளர்வதற்கும் திரு ஏ. எஸ். இராமநாதன் அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது.

Thedchanamoorthy1.png?resize=628%2C347
03.03.2013 அன்று வெளிவந்த சங்கீதபூஷணம் திரு. ஏ. எஸ் இராமநாதன் அவர்களுடைய விவரணப்படத்தில் ‘1948 ஆம் ஆண்டு நண்பர் பரம் தில்லைராசா அவர்களின் அழைப்பை ஏற்று கச்சேரி செய்வதற்காக நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அப்போது யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் பிரபல தவில் வித்துவான் யாழ்ப்பாணம் திரு. தட்சணாமூர்த்திக்கும் எனக்கும் ஒரு போட்டி மாதிரி வைத்தார்கள். அந்த கச்சேரியைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமானவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அதில் மிக நல்ல நிலையில் தட்சணாமூர்த்தியும் வாசித்தார் நானும் வாசித்தேன். நான் திரு .தட்சணாமூர்த்தியை விஞ்ச ஆசைப்பட்டேன். திரு. தட்சணாமூர்த்தி என்னை விஞ்ச ஆசைப்பட்டார். இரண்டு பேரும் ஒன்றும் பண்ணமுடியவில்லை’. என்று திரு தட்சணாமூர்த்தியுடன் வாசித்த அனுபவத்தைத் திரு இராமநாதன் அவர்கள் கூறியுள்ளார்.

Thedchanamoorthy2.png?resize=628%2C392

‘பொன்னிப் புனல் பாயும் தஞ்ஞை மாவட்டத்தைச் சேரந்த நாகஸ்வர, தவிற் கலைக் குடும்பங்கள் பல இலங்கை – யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்ந்து, அந்நாட்டவராகவே இருந்துவந்துள்ளன. இவ்விதமாக, காரைதீவு என்னும் பகுதியிற் குடியேறிய குடும்பம் ஒன்றில் விஸ்வலிங்கத் தவிற்காரர் என்பவர் இருந்து வந்தார்’. என்று ‘யாழ்ப்பாணம் தட்சணாமூரத்தி’ என்ற கட்டுரையிற் பி.எம்.சுந்தரம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்.

Thedchanamoorthy3.png?resize=625%2C402
மேலும் ‘யாழ்ப்பாணத்திலே பிறந்து வளர்ந்த காரணத்தினால் அவரை யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி என்று சொல்லுவார்கள். ஆனால் அவருடைய முன்னோர்; எல்லாம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருவாரூருக்கு அருகிலே உள்ள திருப்பயிற்றங்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் அவருடைய தந்தையார் விஸ்வலிங்கம்பிள்ளை என்ற ஒரு பெரிய தவில் வித்துவான். யாழ்ப்பாணத்திலுள்ள கோயில் திருவிழாக்களுக்குத் தவில் வாசிக்கச் சென்று அங்கு குடியேறிய குடும்பங்களில் ஒன்று தான் தவில்கார விஸ்வலிங்கம் குடும்பம். சாப்பிடுவதற்கு வழியில்லை என்ற நிலைமையில் அவர் குடும்பம் இருந்தது. பனங்கிழங்கை மட்டும் தான் சாப்பிடுவார். அதைச்சாப்பிட வைத்துத் தனது தோளிலே தூக்கிக் கொண்டு யாழ்ப்பாணத்திலே ஒவ்வொரு ஊரிலும் நடக்கின்ற ஆலயத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்று தமிழகத்திலிருந்து அங்கே வந்து மிகச் சிறப்பாக நாதஸ்வரம் தவில் வாசிக்கின்ற அத்தனை பேருடைய வாசிப்பையும் கேட்க வைப்பார். குறிப்பாகத் தவில். ஒரு பெரிய வித்துவான் தவில் வாசித்தால் உடனே வீட்டுக்கு வந்து இந்தச் சின்னக் குழந்தை தூங்கக் கூடாது. தூங்க விடமாட்டார். அவர் வாசித்ததை இவர் வாசிக்க வேண்டுமாம். அப்பொழுது எவ்வளவு கவனத்தோடு எவ்வளவு ஞாபக சக்தியோடு அந்த வித்துவான் வாசித்து இருப்பதை கேட்டிருக்கலாம். அதன் காரணமாகத்தான் இவர் வாசிக்க வேண்டும் என்றொரு நிலை’ இவ்வாறு 2015 இல் நடைபெற்ற ‘பரிவாதினி சீரிஸ்’ என்ற நிகழ்வில் திரு பி.எம் சுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (Privadini Music Series Youtube, 2015). இரண்டு இடங்களிலும் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விதமாக விஸ்வலிங்கம் அவர்களின் வதிவிடம் பற்றிக் கூறியுள்ளார். தட்சணாமூர்த்தியின் இளமைக்காலம் பற்றியும் சில கதைகள் கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன?

இணுவிலைச் சேர்ந்த தவில் வித்துவான் திரு சங்கரப்பிள்ளைக்கும் அன்னமுத்து தம்பதிகளுக்கும் மகனாக 1880 ஆம் ஆண்டு இணுவிலிற் பிறந்தவரே தவில் வித்துவான் திரு விஸ்வலிங்கம் அவர்கள். இவருக்கு தந்தை சங்கரப்பிள்ளையே ஆரம்ப குருவாக இருந்து தவிலைக் கற்பித்துள்ளார். இதன் பின் ஈழத்தின் பிரபல தவில் வித்தவானாக இருந்த பெரிய பழனி அவர்களிடம் மிகச் சிறப்பான முறையிற் தவிற் கலையைக் கற்றுக்கொண்டவர். அது மட்டுமன்றிக் குருகுலக்கல்வி மூலம் நல்ல தமிழ், சமய அறிவினையும் பெற்றுக்கொண்டவர். திரு. பெரியபழனி அவர்களுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கலைப்பாலமாகத் திகழ்ந்தவர். ஒப்பந்த அடிப்படையில் நாதஸ்வர தவில் கலைஞர்களை ஈழத்திற்கு அழைத்தவர். விஸ்வலிங்கத்தின் பாட்டன் சுப்பர் என்பவரும் இணுவிலைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

திரு. விஸ்வலிங்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஈழத்தின் மிகப் பிரபல்யமான தவில் வித்துவானாகவும் நல்ல வாழ்க்கை வளமுள்ளவராகவும் மிகவும் கண்டிப்பு நிறைந்தவராகவுமே வாழ்ந்துள்ளார். அவர் மாட்டு வண்டியிலே கச்சேரிக்குச் செல்லும்போது அவருக்கு முன்னும் பின்னும் மாட்டு வண்டியில் உதவிக்கும் ஆட்கள் செல்வார்கள். அவரது குடும்பம் மிகப் பெரியது. ஆயினும், ஒரு நாட்டாமை போன்று, வாழும் வரை கௌரவமாக வாழ்ந்த ஒரு கலைஞன். அவர் தனது வீட்டிற் பசு மாடுகளையும் வளரத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. விஸ்வலிங்கத்தின் தவில் திறமையைக் கேள்வியுற்று அந்த நாளில் அவரைச் சிங்கப்பூருக்கு அழைத்துக் அங்கு கச்சேரி செய்வித்துச் ‘சிங்கமுகச்சீலை’ போர்த்திக் கௌரவித்துள்ளனர். இந்தச் ‘சிங்கமுகச்சீலை’ படச்சட்டத்தினுட் போடப்பட்டு அவரது மூத்த மகன் திரு உருத்திராபதி அவர்களாற் பேணப்பட்டது.

யாழ்ப்பாணத்திலே அன்று நிலவிய இசை வேளாளர்களின் குருகுலவாசக் கல்வியின் அமைப்புப் பற்றி, மாவை நா.சோ.உருத்திராபதி, மாவை சு.க.இராசா, மூளாய் வை.ஆறுமுகம், இணுவில் பெரிய பழனி, இணுவில் ச.விஸ்வலிங்கம், இணுவில் சின்னத்துரை ஆகியோர் கூறிய விபரங்களைத் தனது ‘யாழ்ப்பாணத்து இசைவேளாளர்’ என்ற நூலிலும்,’இசையும் மரபும்’;,’கலையும் மரபும்’ என்பவற்றிலும் த.சண்முகசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதில்,’இசை வேளாளர்கள் சிறுவயதில் இருந்தே திண்னைப் பள்ளிக்கூடங்களிற் தமிழைக் கற்றனர். அவர்களுடைய பாடத்திட்டத்திற் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ் போன்ற சமய நூல்கள் இடம்பெற்றுள்ளன. தவில் நாதஸ்வரம் இதில் எவற்றைக் கற்றாலும் அவர்கள் வாய்ப்பாட்டையும் அவசியம் கற்கவேண்டும். மேலும் தமிழ் நாட்டில் இருந்து இளைஞர்கள் தவில் கற்பதற்தாக இணுவில் பெரியபழனி, இணுவில் சின்னத்துரை, இணுவில் விஸ்வலிங்கம் ஆகியோரிடம் வந்தனர். அப்போது இலங்கை இந்தியப் பிரயாணத்திற்குத் தடை இல்லை. அத்துடன் யாழ்ப்பாணத்து வாழ்க்கை வளமுடையதாக இருந்துள்ளது. சிட்சைக்கு வருகின்ற பிள்ளைகளுக்கு இலவச உணவு, உடை வழங்கப்படும். அவர்கள் தாளக்காரராக அல்லது ஒத்துக்காரராகப் பணிபுரிவதற்குச் சன்மானமும் வழங்கப்படும். ஆகவே தமிழ் நாட்டு இளைஞர்கள் பலர் இங்கு வருவதும் போவதுமாக இருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு வித்துவான்களும் தவில் நாதஸ்வரம் மட்டும் பயின்றவர்களாக அல்லாமற் பல்கலை வல்லுனர்களாக இருந்துள்ளனர்’;. என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் ‘இணுவில் விஸ்வலிங்கத்தின் தவில் வாசிப்புத் திறமையைப் பாராட்டிச் சிங்கமுகச் சீலை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிங்கமுகச் சீலை இவரின் குடும்பத்தவரால் விலை மதிக்க முடியாத சொத்தாகப் பாதுகாக்கப்படுகின்றது’ என்றும் யாழ்ப்பாணத்து இசை வேளாளர் என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.

திரு விஸ்வலிங்கம் அவர்களின் மூத்தமகன்; நாதஸ்வரவித்துவான். திரு. உருத்திராபதி அவர்கள் (1911 – 1983) வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய வாத்தியங்கள் வாசிப்பதிலும் வல்லவர் இவற்றைக் கச்சேரிகளிலும் வாசித்துள்ளார். பாடக்கூடியவர். மிகச் சிறந்த இசை ஆசான். இவரின் மூத்த மகனே ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் இசை ஞான திலகம் அமரர் இராதாகிருஸ்ணன் அவர்கள்.

திரு விஸ்வலிங்கம் அவர்களின் இரண்டாவது மகன் நாதஸ்வர வித்துவான் கோதண்டபாணி இவர் வாழந்த காலத்தில் (1918 – 1968) ஈழத்திற்கு வருகை தந்திருந்த இந்தியக் கலைஞர்கள் அனைவருடனும் நாதஸ்வரம் வாசித்துத் தன் புகழை நிலை நாட்டியவர். இவர் பல்லவிகளையும், தமிழ்க் கீர்த்தனைகளையும் வாசிப்பதிற் தன்னிகரற்றுத் திகழ்ந்தவர். கோதண்டபாணியின் பொருளுணர்ந்த வாசிப்பிலே அவை பாகாய்க் கரைந்தோடும். அவருடைய நாதஸ்வரத்திலிருந்து எழும் ஓசையைப் போன்று வேறு எங்கும் நான் கேட்டதில்லை இத்தகைய சிறந்த வித்துவான் தனது இளம் வயதில் வெகு சீக்கிரமே இறைவனடி சேர்ந்து விட்டது இசை உலகிற்குப் பெரும் இழப்பே. என எனது தந்தையார் கூறியுள்ளார். இவரின் புதல்வர்களே ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான்களாகிய கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள்.

விஸ்வலிங்கததின் மூன்றாவது மகன் மாசிலாமணி (1920 – 1959) இசையை வரன் முறையாகக் கற்றவர். அண்ணாவி ஏரம்புவிடம் நாட்டுக்கூத்தினையும் முறைப்படி பயின்றவர்.அற்புதமாகன குரல் வளத்தையுடைய (நாலரைக்கட்டை சுருதி) மாசிலாமணி அவர்கள் பாடியபடி நடிக்கவும், ஹார்மோனியம் வாசித்தபடி பாடவும் வல்லவர். ‘யாழ்ப்பாணத்து நாட்டுக்கூத்து, இசை, நாடகம், முதலியவற்றை ஆராயும்போது இணுவிலில் வாழ்ந்த விசுவலிங்கம் மாசிலாமணி என்ற பெரும் கலைஞரின் பங்களிப்பு தனித்துவமானதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.இக்காலப் பகுதியில் வாழ்க்கை உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட விடுதலை உந்தல், வாய்ப்பாட்டு வடிவில் மாசிலாமணி அவர்களிடத்திற் கிளர்ந்தெழுந்தது. உலக இசை மேதை பீத்தோவனிடம் காணப்பெற்ற வாழ்க்கையின் துன்பியலாகும் எதிர்மறைகளின் புலப்பாடு மாசிலாமணியிடத்தும் காணப்பட்டது. பன்முக ஆற்றல் கொண்டவராகவும் பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளைக் கையாளும் திறமை மிக்க அற்புத ஆற்றல் பெற்றவராகவும் விளங்கியுள்ளார். தவில், மத்தளம், சுத்தமத்தளம், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, சாரங்கி, வயலின், ஹார்மோனியம் முகர்சிங் ஆகிய இசைக் கருவிகளை மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் இசைத்துக் காட்டியுள்ளார்’; எனத் திரு சபா ஜெயராசா அவர்கள் தனது ‘ஈழத்தமிழர் கிராமிய நடனங்கள்’ என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வரவித்துவான் திரு சுந்தரமூர்த்தி அவர்களும்,ஈழத்தின் புகழ் பெற்ற தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி அவர்களும் திரு. விஸ்வலிங்கத்தின் மகளான திருமதி கௌரி ராஜூ அவர்களின் புதல்வர்களாவர்.

திரு விஸ்வலிங்கம் அவர்களின் எட்டாவது குழந்தையே 1933 இல் அவதரித்த எட்டாவது உலக அதிசயமான திரு தட்சணாமூர்த்தி அவர்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாகத் திரு விஸ்வலிங்கம் அவர்கள் ‘பெரியசன்னாசியார்’ என இணுவை மக்களாற் போற்றப்படும் அருட்திரு சுப்ரமணியசுவாமிகளிடம் அருளுறவு கொண்டவர். அவரின் அனுக்கத் தொண்டர்களுள் ஒருவராக விளங்கியவர். ‘1917 ஆம் ஆண்டு இறை நிலை எய்திய பெரியசன்னாசியாரின் சமாதிக் கட்டிடம் கட்டும் பணியினை இணுவை இசை வேளாளர் பரம்பரையில் வந்த தவில் வித்தகர் திரு விஸ்வலிஙகம் அவர்களே செய்தார்கள். இவர் பெரிய சன்னாசியாரிடம் கொண்ட அருளுறவே இசையுலகில் அவர் பரம்பரை புகழ் பூக்க ஏதுவாக அமைந்ததெனலாம்’. என ‘இணுவை அப்பர்’; என்ற நூலிற் பண்டிதர் இணுவையூர் கா.செ.நடராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இணுவிலின் இசைவரலாற்றில் ஈழத்தின் இசை வரலாற்றிற்; திரு. விஸ்வலிங்கம் அவர்களின் பங்களிப்பும், அவருடைய குடும்பத்தினருடைய பங்களிப்பும் மிக முக்கியமானதொரு இடத்தினை வகிக்கின்றது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

ஆகவே வாசகர்களே!!! கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் உலகின் பல பாகங்களில் வெளியிடப்பட்ட தட்சணாமூர்த்தியின் ஆவணப்பதிவுகளிற் திரு பி.எம்.சுந்தரம் அவர்களும், வேறு பலரும் குறிப்பிடுவதைப்போல தவில் வித்தகர் விஸ்வலிங்கம் காரைதீவிற் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவரோ, தஞ்சாவூரைச் சேர்ந்தவரோ அல்லது திருப்பயிற்றங் குடியைச் சேர்ந்தவரோ,புகழுக்காக ஏங்கியவரோ அல்லர். அவரும் அவர் குடும்பதத்தவர்களும் வறுமையில் வாடியவர்களும் அல்லர். தட்சணாமூர்த்தியைப் பாடசாலைக்குச் சென்று படிப்பைக் குழப்பி இடையிற் கூட்டிக்கொண்டு வரக் கூடிய அளவுக்கு அவர் கல்வியறிவு அற்றவரும் அல்லர்என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

1. திரு விஸ்வலிங்கம் அவர்கள் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைவேளாளர் பரம்பரையைச் சேர்ந்தவர்.2. அவர் நல்ல வளமான வாழ்க்கை வசதியுடன் வாழ்ந்தவர்.
3. ஈழத்தைக் தாண்டியும் அவரின் தவில் வித்தகத் திறமை பேசப்பட்டுள்ளது.
4. அவர் வரன் முறையாகக் குரு குலக் கல்வி மூலம் தமிழ் சமய அறிவினையும் பெற்றுக் கொண்டவர்.
5. திரு விஸ்வலிங்கம் மட்டுமல்ல அவர்களின் வழித் தோன்றல்கள் எல்லோருமே இணுவிலிற் சிறந்த தவில் நாதஸ்வர வித்துவான்களாகவே திகழ்ந்தனர். இன்றும் திகழ்கின்றனர். தற்போது ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்களும் புகழோடு மேற் கிழம்புகின்றனர் உதாரணம் இணுவில் பஞ்சாபிகேசனின் மகன் விபுர்ணன் தனது ஒன்பதாவது வயதிலிருந்தே தவிற் கச்சேரி செய்ய ஆரம்பித்துத் தற்போது சிறந்த வித்துவானாக வளர்ந்து வருகின்றார் (வயது 20)

தொடரும்….

 

http://globaltamilnews.net/2017/55481/

Link to post
Share on other sites

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! பகுதி 2- இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-

சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து…

Thedchanamoorthy.jpg?resize=480%2C360
தட்சணாமூர்த்தி அவர்களின் இளமைக்காலமும் தவில் உலகப் பிரவேசமும்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இசை வேளாளர்கள், அண்ணாவிமார், நடிகர்கள், பிற கலைஞர்கள் ஆகியோரையும், இணுவை மக்களையும் நெறிப்படுத்தியவர்களான, சின்னத்தம்பிப்புலவர் – இவரது புலமை பற்றி அறிஞர் மு. வரதராசனார் தனது இலக்கிய வரலாற்றிற் குறிப்பிட்டுள்ளார்.  ஸ்ரீ நடராசஐயர்- இவர் ஆறுமுகநாவலரின் பிரதம சீடர். காசிவாசி செந்திநாதையர் உட்படப் பலர் இவரிடம் பாடம் கேட்டுள்ளனர்.  அம்பிகைபாகப்புலவர்– இவருக்கும் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கும் மிகுந்த நட்புண்டு,’இவரிடத்து யாம் தணிகைப் புராணத்துக்குப் பொருள் கேட்டு அறிந்துள்ளோம்’ எனப் பிரம்மஸ்ரீ சி.கணேசையர் அவர்கள் ஈழநாட்டுத் தமிழப் புலவர் சரித்திரத்திற் குறிப்பிடுகின்றார்.

பெரியசன்னாசியார், சின்னத்தம்பிச்சட்டம்பியார், ஸ்ரீ.சடாசிவக்குருக்கள், க.வைத்திலிங்கம்பிள்ளை,வடிவேற்சுவாமியார், சேதுலிங்கச்சட்டம்பியார் போன்றோரும் இன்னும் பலரும் வாழ்ந்த மிகச் சிறந்த நீண்டதொரு குருகுல கல்விப் பாரம்பரியம் இணுவிலில் நிலைபெற்றிருந்தது. இத்தகைய சூழலில் வாழ்ந்த திரு விஸ்வலிங்கமும் அவற்றை இயல்பாகவே உள்வாங்கியதால் தமிழ், சமயக் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதனால், தான் பெற்ற கல்விச் செல்வத்தைத் தன்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுக்க விரும்பி அவர்களையும் அவ்வழியிலே நெறிப்படுத்தினார். ஆனாற் சிறுவன் தட்சணாமூர்த்திக்கோ ஒரு இடத்தில்; ஓடி விளையாடாது, சிறிது நேரம் அசையாது இருத்தல் என்பது முடியாத காரியம். ‘படிக்கப் போ’ என்றாலே அது பிடிக்காத காரியம் ஆயிற்று. நான் ‘படிக்கப் போக மாட்டேன் தவில் வாசிக்கப் போகிறேன்’ என அடம் பிடிக்க ஆரம்பித்தார் தட்சணாமூர்த்தி.

தட்சணாமூர்த்திக்கு ஐந்து வயது நிறைவடைந்த வேளை 1938 ஆம் ஆண்டு காரைநகர்ச்; சிவன் கோயிலில் நான்கு ஆண்;டுகளுக்கு ஆஸ்தான வித்துவானாக இருக்க வேண்டித் திரு விஸ்வலிங்கம் அவர்களுக்கு அழைப்பு வரவே, அதனை ஏற்றுக்கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். திரு. விஸ்வலிங்கம் அவர்கள் மிகுந்த ஒழுங்கும் கடுமையான சட்ட திட்டங்களையும் உடையவர். பாரம்பரியக் கலைகளைப் புதிதாகக் கற்பவர்களாயினும் கலைப் பின்னணியில் வந்தவர்களாயினும் அவர்களுக்கு மரபுரீதியான தமிழ் சமய அறிவுக்கான கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தியவர். தானும் வரன் முறையாக அந்தக் கல்வியைப் பெற்றுக்கொண்டவர். ஆகையாற் காரைநகர் சென்ற பின்னரும் தன் முயற்சியைக் கைவிடாத திரு.விஸ்வலிங்கம் அவர்கள் மீண்டும் தட்சணாமூர்த்திக்கு அறிவுரைகள் கூறி கல்வி கற்பிப்பதற்கு முயன்றார். ஐந்து வயதே நிரம்பிய சிறுவன் தட்சணாமூர்த்தியோ குறும்புகள் செய்வதிலும், தன் வயதை ஒத்த சிறுவர்களுடன் கிட்டியடிக்கவும், மாபிள்(போளை) விளையாடவும் காரை நகர்ச் சிவன் கோயில் வீதியில் மணலில் விளையாடவுமே ஆர்வம் காட்டினான். அந்தச் சுடுமணலில் அவனை விரட்டிப்பிடிப்பதே பெரும்பாடாய் விடும்.

ஒருநாட் காரைநகரில் உள்ள நாராயணசாமி என்பவர் கோயிலின் அருகே உள்ள தாமரைக் குளத்தில் நீராடிக் கொண்டு இருந்தார். அந்தச் சூழலில் விளையாடிக் கொண்டு இருந்த தட்சணாமூர்த்திக்குத் தாமரைக் குளத்தில் தானும் நீராட வேண்டும் என்ற ஆசை மேலிடவே உடனே ஓடிச் சென்று தாமரைக் குளத்திலே குதிக்க முயன்றபோது, நாராயணசாமி என்பவர் டேய் டேய் குதிக்காதே என்று சத்தமிட்டபடி பிடிக்க ஓடியவருக்குத் தாமரைக்குளத்தில் விழுந்து சேற்றில் அமிழப்போன தட்சணாமூர்த்தியைச் சேற்றோடு அள்ளியெடுத்து அணைக்கத்தான் முடிந்தது.

இன்னொருநாள் காரைநகர் ஆலயத் திருவிழாவின்போது கோயிற் கேணிக்கரையிற் சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த தட்சணாமூர்த்தி திடீரென்று கேணியை நோக்கி ஓடி அதன் படிகளில் மிக வேகமாக இறங்கத் தொடங்கி விட்டாராம். அதைப் பார்த்துக் கொண்டு அருகில் நின்றவர்கள் அவரைப் பிடிப்பதற்குக் கலைத்துக்கொண்டு ஓட, அதற்கிடையில் கேணியின் இறுதிப்படியிற் தட்சணாமூர்த்தி காலை வைக்க, அதில் இருந்த பாசி வழுக்க, நிலை தடுமாறிய அவர் கேணியினுள் விழக் கலைத்துக் கொண்டு ஓடியவரும் கேணியுள் விழுந்து தட்சணாமூர்த்தியையும் தூக்கிக் கொண்டு போய் விஸ்வலிங்கத்திடம் ஒப்படைத்தாராம். சுட்டித்தனமும் கூர்மையான அறிவும் குழந்தைத் தனம் நிறைந்த வசீகர அழகும் நிரம்பிய சிறுவன் தட்சணாமூர்த்தி மீது அவருடைய குடும்பத்தினர் மட்டுமன்றிக் காரைநகர் ஆலயச் சூழலிலும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்தவர்களும் அவர் மீது அன்பைப் பொழிந்ததுடன் தங்கள் கண்ணின் மணியாகவே பாதுகாத்துவந்தனர். காரைநகரில் ஒரு ஐயனார் கோயில் ஒன்று உண்டு. அந்த ஐயனாரே இரவில் வெளிக்கிட்டு நகரைக்காப்பதாகக் காரைநகர் மக்கள் சொல்வதைக்கேட்டுள்ளார். அது உண்மையா எனத் தெரிந்து கொள்ளப் பல இரவுகள் ஓசைப்படாமல் எழுந்து கோயில் வீதியைச் சுற்றி விட்டு வந்து மீண்டும் ஓசைப்படாமற் படுத்து விடுவார். பின் நித்திரையில் ஐயனார் வாறார் ஐயனார் வாறார் எனச் சத்தம் போடுவார். தந்தையார் எழுப்பி நெற்றியில் வீபூதியிட்டுவிட்டு எங்கே போயிருந்தாய் எனக் கேட்டால் ஐயனாரைப் பார்க்கப் போனேன் என்பாராம்.

Thedchanamoorthy1.jpg?resize=318%2C493

சிறுவன் தட்சணாமூர்த்தி படிக்கச் செல்லாமற்; தவில் வாசிக்கப் போகிறேன் என்று அடம்பிடித்துக்கொண்டு, செய்யும் குறும்புத்தனங்களுக்கும் எல்லையில்லாமற் போகவே திரு விஸ்வலிங்கம் அவர்கள் ஒரு நல்ல நாளில் 1939 ஆம் ஆண்டு தட்சணாமூர்த்தியின் ஆறாவது வயதிற் காரைநகர்ச் சிவன் கோவிலில் சிட்சை ஆரம்பிப்பதற்குரிய பூசைகளைச் செய்து அவரது மடியிலே தவிலைத் தூக்கி வைத்து வித்யாரம்பம் செய்து வைத்தார். தவிலிற் கைவைத்த மறுகணமே அங்குள்ள அனைவரும் வியக்கத் தவிலை வாசிக்க ஆரம்பித்து விட்டாராம். அன்றிலிருந்து தவில் கற்றுக்கொள்வதற்காகவும் தவிலை வாசிப்பதற்காகவும் தந்தையுடன் அதிக நேரம் அருகில் இருக்க ஆசைப்பட்டாராம். இதனைக் கண்டு மகிழ்வுற்ற தந்தை, தவில் சிட்சை பெறவதற்காக, இணுவில் தவில் வித்துவான் சின்னத்தம்பி என்பவரிடம் கதைத்து அவருடைய வீட்டிற்கு அனுப்பிவைத்தார். தந்தையைப் பிரிந்து இருக்க முடியாத தனையன் அழுது அடம் பிடித்து சீக்கிரமே மீண்டும் தந்தையிடமே சென்று அவருடனேயே இருந்து தவில் வாசித்து வந்துள்ளார்.

இவ்வாறு இருக்க, திரு விஸ்வலிங்கம் அவர்களின் மூத்த மகன் திரு உருத்திராபதி அவர்களுக்குத் திருமணம் கைகூடி வந்தது. திரு உருத்திராபதி அவர்களின் திருமணவைபம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள இசை வேளாளர்கள் பலரும் சமூகமளித்து இருந்தனர். அங்கு பிரபல தவில் வித்துவான் வண்ணைக் காமாட்சி சுந்தரம்பிள்ளையும் வந்திருந்தார். அவரிடம் தனது மகன் தட்சணாமூர்த்தியின் திறமைகளைப் பிரஸ்தாபித்து, தன் மகனின் ஆர்வத்தையும் கூறி முறைப்படி ஒரு குருவிடம் அமர்ந்து கலையைக் கற்றுக் கொண்டு அந்தக் குருவின் பரிபூரண ஆசிகளையும் பெற்றுக்கொள்ளும் போது தானே அந்தக் கலையும் பிரகாசிக்கும் கலைஞனும் பிரகாசிப்பான். என்று கூறிய திரு விஸ்வலிங்கம் தன் மகனுக்குக் குருவாக இருக்கும்படி திரு காமாட்சி சுந்தரம்பிள்ளையிடம் வேண்ட, அதற்கு அவரும் தமது ஒப்புதலைத் தெரிவிக்கவே, மீண்டும் ஒரு நல்ல நாளிற்; திரு காமாட்சிசுந்தரம் பிள்ளையிடம் அவரது இல்லத்திற் சிறுவன் தட்சணாமூர்த்திக்குச் சிட்சை ஆரம்பமாகியது. திரு விஸ்வலிங்கம் அவர்கள் குருவிடம் தன் பிள்ளையை ஒப்படைத்து விட்டுக் காரைநகருக்குச் சென்று விட்டார். தந்தை மகனைப் பார்க்க வரும் நேரங்களில் எல்லாம் ‘அப்பா எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. எனக்குத் தெரிந்ததையே அவர் சொல்லித் தருகிறார் என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்’ என்று அழுதபடி கெஞ்சுவார். தந்தைக்கு மட்டும் என்ன பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்திருக்க ஆசையா என்ன? மனதைத் தேற்றிக்கொண்டு தனது இல்லம் திரும்புவார்.

காரைநகரில் இருக்கும் தந்தை விஸ்வலிங்கத்திற்கு உணவு செல்லவில்லை, உறக்கமும் கொள்ளவில்லை, மகனை நினைந்து நினைந்து கண்ணீர் உகுத்தபடி நீராகாரத்தை மட்டும் அருந்தி நாற்பது நாட்கள் மகனுக்காக இறைவனை வேண்டி விரதம் அனுட்டித்தார். இந்தக் கதைகளை எல்லாம் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் சகோதரி திருமதி பவானி வேதய்யா அவர்கள் சொல்லக் கேட்டபோது, இந்த நிகழ்வுகள் என்னை ஆயர்பாடிக்கு அழைத்துச் சென்றன. அங்கே கிருஷ்ணன் தன் சக தோழர்களுடன் விளையாடச் சென்று யமுனையிற் குதிக்கின்றான். தன் வசீகர அழகால் எல்லோரையும் மயக்குகிறான். அவன் செய்யும் குறும்புகளுக்கும் ஒரு அளவே இல்லை. தாய் யசோதையும் நந்தகோபரும் கிருஷ்ணன் மீது அளவு கடந்த அன்பைச் சொரிந்தனர். கிருஷ்ணனும் அவர்களைப் பிரிந்திருக்க என்றும் விரும்பியது இல்லை. அது மட்டுமல்ல, கிருஷ்ணனை ஆயர்பாடியில் நந்தகோபர் யசோதையிடம் விட்டு விட்டு மதுராவில் உள்ள சிறைச் சாலையிற் கண்ணீருகுத்தபடி ஊனின்றி உறக்கமின்றித் தவித்திருந்த,வசுதேவரும் தேவகியுமே என் மனக் கண்ணில் நிழலாடினர். தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறந்த எட்டாவது குழந்தை கிருஷ்ணன். திரு விஸ்வலிங்கம் அவருடைய எட்டாவது குழந்தை லயஞான குபேர பூபதி தட்சணாமூர்த்தி. கண்கள் பனிக்க உடல் சிலிர்க்க ஒரு அற்புதமான உணர்வு, ஏதோ ஒரு அமானுஷ்யத் தன்மை ஒன்று சிறு வயதிலிருந்தே தட்சணாமூர்த்தியிடம் இருந்திருக்கின்றது என்ற எண்ணமே என் மனதிற் தோன்றியது.

நாற்பது நாட்கள் கழிந்ததும் திரு விஸ்வலிங்கம் அவர்கள் மீண்டும் தன் மகனைப் பார்க்கச் சென்றார். மீண்டும் அதே பல்லவி ‘அப்பா என்னை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள் எனக்கு இங்கு இருக்கப்பிடிக்கவில்லை’. என்று அழுது அடம் பிடிக்கவே நாற்பத்தியோராவது நாள் நிறைவிற் திரு விஸ்வலிங்கம் அவர்கள் திரு காமாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் அனுமதியோடு மஞ்சத்தடி கந்தசுவாமி ஆலயத்திற் பல வித்துவான்களின் முன்னிலையிற் தட்சணாமூர்த்தியின் எட்டாவது வயதில் முதலாவது கச்சேரியை நடத்தி முடித்தார். அன்றிலிருந்து எட்டே வயது நிரம்பிய பாலகனின் தவில் வாசிப்புத் திறமையைக் கேள்வியுற்ற பலர் அவரின் கச்சேரியைக் கேட்பதற்குத்; தத்தம் ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றிக் கொழும்பு, கண்டி பண்டாரவளை போன்ற இடங்களுக்கும் மக்கள் அழைத்தனர். அந்த இடங்களுக்குக் கச்சேரிக்குச் செல்லும் போதெல்லாம் இணுவிலில் இருந்து ஒரு லொறி புறப்படும். அதில் சின்னமேளக்காரர் நாடகக் கலைஞர்கள் எல்லோரும் செல்வார்கள். கச்சேரி நடைபெறும் இடத்திற்குச் சென்றதும் தன் அன்பு மகனை ஒரு கரத்திலும் மறு கரத்திற் தவிலையும் தூக்கிச் செல்வாராம் திரு விஸ்வலிங்கம். காரைநகரிற் தனது கோவிற் சேவக ஒப்பந்தத்தை நிறைவு செய்ததும் மீண்டும் தனது குடும்பத்தாருடன் இணுவிலுக்கு அவர் வந்து வந்துவிட்டார்.

இப்போ தட்சணாமூர்த்திக்குப் பரமானந்தம் அவர் விரும்பியபடியே வாழ்க்கை அமைந்து விட்டதல்லவா. சேவகத்திற்குப் போகும் நேரம், வீட்டிற் தந்தையாரோடு தவில் வாசிக்கும் நேரம் தவிர மற்றைய நேரங்களிற் தனது தோழர்களுடன் விளையாடுவதிலே அளவு கடந்த ஆனந்தம் அவருக்கு. கிட்டி அடித்தல், மரங்களின் மேலே ஏறித்தாவிக் குதித்தல் மதிலில் ஏறிப்பாய்தல் எனச் செய்யும் குழப்படிகளுக்கு ஒரு எல்லையே இல்லை. இவ்வளவு விளையாடிய பின்பும் அவருக்கு என்றுமே அலுப்போ, சலிப்போ, களைப்போ, ஏற்படுவதில்லை. மற்றைய குழந்தைகளைப்போல, சிறுவர்களைப் போல அதிக நேரம் நித்திரை கொள்ளும் பழக்கமும் சிறுவன் தட்சணாமூர்த்தியிடம் என்றைக்குமே இருந்ததில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் கோயிற் திருவிழாக்காலங்களில் மேளக்கச்சேரிகளும் கலைநிகழ்ச்சிகளும் விடிய விடிய நடைபெறுவதால் அவை நிறைவுற்று வீடு திரும்ப இரவு வெகு நேரமாகிவிடும். அந்த இரவு நேரங்களிற் பாடிக்கொண்டே வீடு திரும்புவது அவருக்குப் பிடித்தமான ஒன்று. அவர் சிறிய வயதிற் சங்கீத உருப்படிகளை மிக நன்றாகவே பாடுவார். எப்போதும் அவர் மூளையும், உடலும் வெகு சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டு இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் அவர் உறக்கத்தை என்றைக்கும் பார்த்ததில்லை. அவர் எப்போது நித்திரை கொள்வார் எப்போது எழுந்திருப்பார். என்பது திரு விஸ்வலிங்கத்தைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் எல்லோரும் பார்த்தது தட்சணாமூர்த்தியின் இறுதி உறக்கத்தைத்தான்.

thadchanamoorthi2.jpg?resize=250%2C299
ஒரு நாள் இதே போல நண்பர்களுடன் விளையாடச் சென்றபோது இணுவிலில் லொறித்தம்பிராசா என்பவரின் வீட்டுக் கிணற்றடிக்குச் சென்று கிணற்றிலே தண்ணீர் எடுப்பது போல வாளியைக் கிணற்றினுள் இறக்கி வாளி தண்ணீரைக் கோலிய பின்னர் கிணற்றினுள்ளே துலாக் கயிற்றை விட்டு விட்டுத் துலாவின் மேற் தாவியேறி அந்தத் துலாவின் மீது காலை நீட்டி ஒய்யாரமாகப் படுத்திருந்தாராம். இதைக் கண்டு விட்ட அயலவர் யாரோ சென்று திரு விஸ்வலிங்கத்தாரிடம் சொல்ல அவர் சென்று மகனைத் துலாவிலிருந்து இறக்கிச் சென்றாராம். அன்று வீட்டில் தட்சணாமூர்த்திக்கு நல்ல தடியடி அபிஷேகம் நடைபெற்றதாம்.

சாப்பாட்டு விடயத்திலும் அவருக்கு விருப்பமான உணவு தான் தர வேண்டும். பொரியல் என்றால் சாப்பிடக் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அது இல்லையேல் சாப்பிட மறுத்து விடுவார். சோறு சாப்பிடுவது என்பது சிறுவன் தட்சணாமூர்த்திக்கு அறவே பிடிக்காத விடயம். சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் போது தந்தையாரே பொரியல் செய்து சாப்பிட அழைப்பாராம்.

இப்படிப்பட்ட தந்தை தவில் வாசித்தாற் தான் உணவு என்று குழந்தையைப் பட்டினி போடுவாரா? அவர் தான் பிறவிக் கலைஞன் ஆயிற்றே. தவில் வாசிக்கப் போகிறேன் என்று தானே பாடசாலை செல்வதற்கே மறுத்தார். பிறகு இந்தப் பயமுறுத்தல்களெல்லாம் அவருக்கு எதற்கு? திரு விஸ்வலிங்கம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு இவ் உலக வாழ்க்கையை நீக்கும் வரை தந்தையும் தனயனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தது இல்லை. நாள் முழுதும் மகனைக் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பதையே அவர் தனது விரதமாகக் கைக்கொண்டார்.

‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல்’. – திருக்குறள்

தந்தை தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும் என்ற வள்ளுவன் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் திரு விஸ்வலிங்கம் அவர்கள்.

தொடரும்——–

 

http://globaltamilnews.net/2017/56500/

Link to post
Share on other sites

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாதசெய்திகளும்!! பகுதி 3- இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்.

சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து:-

Thedchanamoorthy.jpg?resize=480%2C360
இணுவில் மண்ணில் முகிழ்த்தபாரிஜாதம் லயஞானகுபேரபூபதி தட்சணாமூர்த்தி

‘தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று’ – திருவள்ளுவர்

அளவிற்கு அதிகமான குறும்புத்தனமும் குழப்படியும் நிறைந்திருந்தாலும் தட்சணாமூர்த்தியின் மடியில் அவர் தந்தை தவிலைத் தூக்கி வைத்த மறுகணமே, ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியது போல

‘அந்திப் பறவை போலே ஆட்டமெல்லாம் அடங்கி
அந்தக்கரணம் அவன் சிந்தையிலே ஒடுங்கி
வந்த வினைகளெல்லாம் சிந்தத் தவம் புரியும்
பரிசுத்த நிலை

கொண்ட ஒரு புது அவதாரம் எடுத்து, தன்னை மறந்த வாசிப்பினால் அந்தத் தவிலிசையிலேயே இரண்டறக் கலந்து, புதியதொரு தளத்திற் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவார். ‘கலைவாணியே அவர் வடிவில் வந்து தவில் வாசிப்பது போல அப்படி ஒரு அழகு! அவர் முகத்திற் தோன்றும்; பிரகாசமும்,ஆழ்ந்த அமைதியும், தவில் வாசிக்கும் அழகும் கச்சேரி கேட்ப்பவர்களை மெய் மயங்கவைக்கும் அவர் இணுவிலிற் செய்த ஒவ்வொரு கச்சேரியும் தவிற் கலையின் ஒவ்வொரு அற்புதம்!’;. என்று என் தந்தையார் கூறுவார். இந்த மாதிரி இசையுடன், இறையுடன் இரண்டறக் கலத்தல் என்பது மனம் பக்குவப்பட்ட அருளாளர்களுக்கும், ஞானிகளுக்குமே கிடைக்கக் கூடிய பெரும் பேறு. திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்கு மிகச் சிறிய வயதிலிருந்தே இந்த நிலை கைகூடி வந்துள்ளது. திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் கச்சேரி செய்ய ஆரம்பித்ததும் திரு விஸ்வலிங்கம் அவர்கள் தான் கச்சேரிகள் செய்வதையும் நிறுத்தி விட்டுத் தன் மகன்மீது முழுக் கவனத்தையும் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

‘தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது’. – திருக்குறள்

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமே அன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அகமகிழ்ச்சியைத் தருவதாகும்.

தட்சணாமூர்த்தியின் புகழ் ஒலி ஈழத்தைத் தாண்டி இந்தியாவிலும் ஒலிக்க ஆரம்பித்தது. அது உண்மை தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளத் தமிழ் நாட்டிலுள்ள தவில் வித்துவான்கள் பலருக்கு ஆசையேற்பட்டது. ஈழம் வந்தார்கள் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் வாசிப்பைப்; பார்த்தார்கள், திரு தட்சணாமூர்த்தி அவர்களுடன் வாசித்தும் பார்த்தார்கள். புரிந்து கொண்டார்கள். இவர் ஒரு மனிதப்பிறவியே அல்ல என்பதை.

‘ மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனும் சொல்’. –திருக்குறள்

‘இவனைப் பிள்ளையாகப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ?’ என்று பிறரால் ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும். என்ற வள்ளுவர் வாக்கிற்குத் தட்சணாமூர்த்தியும் உயிர் கொடுத்தார். தந்தை விஸ்வலிங்கத்திற்குச் சளைத்தவரா மகன்? சிங்கம் எட்டடி பாய்ந்தாற் குட்டி பதினாறு அடி பாயாதோ?;

இப்படிப்பட்ட தட்சணாமூர்த்தி மணிக்கணக்காக வாசித்துப் பயிற்சி பெற்றார் என்பதுவும், தந்தையார் அவரைத் தூங்க விடாது மணிக்கணக்காக வைத்துப் பயிற்சி அளித்தார் என்று சொல்வதுவும் எவ்வளவு அபத்தம்.

‘கர்நாடக சங்கீதத்தின் உயிர்த் துடிப்பு நாகஸ்வரத்திலேயே தங்கியுள்ளது. ஈழத்தில் நாகசுரம், மேளம் இரண்டும் மகோன்னத நிலையை அடைந்துள்ளன. இந்தியாவில் இசைக்கு இருப்பிடம் தஞ்சாவூர். ஈழத்தில் இசைக்கு இருப்பிடம் இணுவையம்பதியாகும். தவில்மேதை வி. தட்சணாமூர்த்திக்கு இணையாக இந்தியாவிலும் இப்போ ஒருவரும் இல்லை என்ற கோஷம் கிளம்பியுள்ளது. ஈழத்தில் கோவில்களில் திருவிழாப்பட்சம் என்றால் நாகசுரமேளக் கச்சேரிகளுக்கு அமோக வரவேற்பு. இற்றைக்குச் சில வருடங்களுக்கு முன்பு இருந்த சின்னமேளச்சதுர்க்கச்சேரிக்கு இப்போது மோகம் குன்றிவிட்டது’. என்று,’ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி’ என்ற கட்டுரையிற் சங்கீதபூஷணம். பி. சந்திரசேகரம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார். (நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலர்.)

Thedchanamoorthy2.png?resize=628%2C392
’59 இல் நாதஸ்வர வித்துவான் யாழ்ப்பாணம் இராமமூர்த்தியுடன் மூன்று மாதங்களுக்கு நான் சிலோன் சென்றிருந்தேன் அங்கு தவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரண்டு மூன்று மணி நேரத்திற்குத் தனித் தவில் வாசிக்க வைத்தார்கள். தொழிலில் முன்னேற அது எனக்கு ஒரு அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது’. என்று வலயப்பிட்டி ஏ.ஆர். சுப்ரமணியம் அவர்கள் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியிற் கூறியதைத் திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் தனது ‘யாழ்ப்பாணத்து இசைவேளாளர்’ என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நீண்ட நேரம் தனித் தவில் வாசிக்கும் முறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவரும்,நடைமுறைப்படுத்தியவரும் திரு தட்சணாமூர்த்தி அவர்களே.

இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்து யாழ்ப்பாணத்திற் திரு. தட்சணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து கச்சேரி செய்த தவில், நாதஸ்வர வித்துவான்களில் இணுவிலிற் திரு விஸ்வலிங்கம் அவர்களின் வீட்டிற் பல மாதங்கள் தங்கியிருந்த திருவாளப்புத்தூர் பசுபதிப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல், திருநகரி நடேசபிள்ளை, வேதாரண்யம் வேதமூர்த்தி, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், பந்தநல்லூர் தட்சணாமூர்த்தி, குளித்தலைப் பிச்சையப்பா, ஆலங்குடி வேணு, தர்மபுரம் கோவிந்தராசா, திருமெய்ஞானம் நடராசசுந்தரம், திருமுல்லைவாயில் முத்துவீருபிள்ளை, கோட்டூர் இராசரத்தினம்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி, இராசபாளையம் செல்லையா, அம்பல்; இராமச்சந்திரன், நல்லூர் சட்டநாதர் ஆலய நாதஸ்வர வித்துவான் திரு முருகையா அவர்களுடன் ஆறு மாதகாலம் தங்கியிருந்த நீடாமங்கலம் சண்முகவடிவேல், ஆகியோரைக் குறிப்பிடலாம். திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளை அவர்களும் இக்காலகட்டத்தில் அதாவது 1950 ஆம் ஆண்டிற்கு முன்னர் மூன்று மாதகாலம் யாழ்ப்பாணத்திற் தங்கியிருந்த போது தட்சணாமூர்த்தியுடன் வாசித்து உள்ளார். ஆனால்; யாருடன் தங்கியிருந்தார் என்பது தெரியவில்லை.

தனது பதினைந்தாவது வயதிற்கு முன்னரே இணுவிலிற் தந்தையாருடன் வாழ்ந்தபோது, தட்சணாமூர்த்தி அவர்கள் மேற் கண்ட அனைவருடனும், தனது சகோதரர்கள் திரு உருத்திராபதி, திரு கோதண்டபாணி ஆகியோருடனும் வாசித்துத் தன் திறமையை நிலைநாட்டிவிட்டார். இவர்களுள் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் தவிலிசையால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அவரின் தவிலிசைக்குப் பரம ரசிகராகிவிட்ட நாதஸ்வரமேதை கோட்டூர் இராசரத்தினம்பிள்ளை அவர்கள் திரு விஸ்வலிங்கம் அவர்கள் வீட்டிற் திரு தட்சணாமூர்த்தியுடனேயே ஒருவருட காலம் தங்கியிருந்து திரு தட்சணாமூர்த்தி அவர்களுடன் கச்சேரிகள் செய்து வந்துள்ளார். இக்கச்சேரிகளிற் பெரும்பாலானவை இணுவில் மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில், இணுவிற் சிவகாமி அம்மன் கோயில், இணுவிற் கந்தசுவாமி கோயில், இணுவிற் காரைக்காற் சிவன் கோயில் இணுவிற் பரராசசேகரப்பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்றவையாகும். இணுவிற் கந்தசாமி கோவில், இணுவிற் காரைக்காற் சிவன் கோயில் மகோற்சவ காலங்களில் நடைபெறும்; இலங்கை – இந்தியக் கலைஞர்களின் சங்கமிப்பில் உருவாகும், விசேட மேளக்கச்சேரியின் போது நடைபெறும் ‘வடக்குவீதிச்சமாவும்’இ ஆலய முன்றலில் (தென்கிழக்கில்) விசேட மேடை அமைத்து நடைபெறும் தவில், நாதஸ்வரக் கச்சேரியும், அந்தக் கச்சேரிகளில் நீண்ட நேரம் இடம் பெறும் தனித்தவிற் சமாவும் யாழ்ப்பாண இசை ரசிகர்களிடையே மிகப் பிரபல்யம். அன்று அதைப்பார்த்து ரசித்தவர்கள் யாரும் அவற்றை அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.

யாழ்ப்பாணத்திற் திரு தட்சணாமூர்த்தி அவர்கள்; தனது ஒன்று விட்ட சகோதரர் தவில் மேதை இணுவில் என்.ஆர்.சின்னராசா அவர்களுடனேயே மிக அதிகமான கச்சேரிகளைச் செய்துள்ளார். அதனாற் திரு தட்சணாமூர்த்தியின் மேதைமைத் தன்மையைத் திரு.சின்னராசா அவர்கள் புரிந்து கொண்டதோடு அவர் வாசிப்பு முறையையே பெருமுயற்சியோடு தானும் பின்பற்றி வந்துள்ளார். இணுவிற் கந்தசுவாமி கோயில், இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில், இணுவிற் சிவகாமி அம்மன் கோயில், இணுவில் காரைக்காற் சிவன் கோயில், இணுவில் மருதனார்மடம் பல்லப்பவைரவர் கோயில், அனலைதீவு ஐயனார் கோயில், நெல்லியடி மூத்த நயினார் கோயில் ஆகிய இடங்களிலும் இன்னும் யாழ்ப்பாணத்திலுள்ள பல கோயில்களிலும் திரு தட்சணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து இணுவில் திரு.கே.ஆர். புண்ணியமூர்த்தி, அவர்களும், இணுவில் திரு.ஆர்.சின்னராசா அவர்களும் கச்சேரி செய்துள்ளனர். இணுவில் ஆலயங்களில் நடைபெறும் கச்சேரிகள் எல்லாமே நள்ளிரவு தாண்டிய பின்னரும் நடைபெறுபவையாகும்.

Thedchanamoorthy1.png?resize=628%2C347
நாதஸ்வர வித்துவான் பல்லிசைக் கலைஞர் திரு வி உருத்திராபதி அவர்கள் (1911 – 1983) தட்சணாமூர்த்தியின் மூத்த சகோதரர் அவரிடம் நான் சங்கீதம் படித்துக்கொண்டு இருந்த வேளை லயம் பற்றிய விளக்கங்;களைத் தரும்போதெல்லாம் அவர் திரு தட்சணாமூர்த்;தி அவர்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்காது அந்தப் பாடம் ஒருநாளும் நிறைவு பெற்றதில்லை. திரு. உருத்திராபதி அவர்கள் கூறுவார் ‘எனது தம்பி தட்சணாமூர்த்தி படுசுட்டி. மழை பெய்து ஓய்ந்தபின் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும், அந்த மழை நீர் விழும் ஓசை, மணிக்கூட்டில் முள் அசையும் ஓசை, இப்படி அவன் காது கிரகிக்கும் ஓசைகளில் எல்லாம் அவனுக்கு லயத்தின் கணக்கே தெரியும். அந்த லயங்களுக்கு ஏற்ப அவன் தவில் வாசிக்கும் அழகு மிக மிக அற்புதம். கண்ணை மூடியபடி கேட்டால் மிக மென்மையாகக் கேட்கும் தவிலின் நாதம், அதை அவன் வாசிக்கும் அழகு மந்திர ஜாலம் போல மனதை மயக்கும். அவன் அங்கே படித்தான் இங்கே படித்தான், அவர் சொல்லிக் கொடுத்தார் இவர் சொல்லிக் கொடுத்தார்; என்று எல்லோரும் ஏதேதோ தம் இஷ்டத்திற்குக் கதைக்கிறார்கள். ஒரு நாள் எங்கள் வீட்டு அடுப்படியில் உலை கொதித்துக் கொண்டு இருந்தது. (மண்பானையில் சோறு வேகுதல்) அப்போது உலை மூடி ஆடுகின்ற சத்தமும் வந்தது. சிறிது நேரத்தில் தட்சணாமூர்த்தியின் தவிலில் உலை மூடி ஆடுகின்ற ஓசை அற்புதமாகக் கேட்கின்றது. இதை யார் அவனுக்குக் கற்றுக் கொடுத்தது? இந்த மாதிரி ஒரு அவதானத்தையும், வாசிப்பையும் யாராவது கற்றுக் கொடுக்க முடியுமா? இது கற்றுக் கொடுத்து வந்ததல்ல. அவன் பிறப்போடு கொண்டு வந்தது. அது இயற்கை.

அவன் உறங்கி நான் பார்த்தது இல்லை. கண்கள் மூடியபடி இருந்தாலும் என்னேரமும் வாய் அசைந்தபடியே இருக்கும். என்ன சொல்லிக்கொண்டு உறங்கப் போவானோ தெரியாது. அவன் எப்போது உறங்குகின்றான். எப்போது விழித்திருக்கிறான் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். ஒரு விசித்திரப் பிறவி. ஒரு இடத்தில் அவனைக் கட்டிப்போடுவது என்பது முடியாத காரியம். எத்தனைக்கெத்தனை குழப்படி செய்தாலும் அதற்கு இணையான ஒரு சாந்தமும் அவனுள் குடியிருந்தது. தன்னை மறந்து அவன் தவில் வாசிக்கும் போது அந்தப் பூரண அமைதியை அவன் முகத்திற் தரிசிக்க முடியும். அவனைச் சுற்றியுள்ள இயற்கையின் வனப்பை ரசிப்பதிலும் கிரகிப்பதிலும் அவனுக்கு இணை யாரும் இல்லை. அதுதான் அவன் இயல்பு’.என்று ஒரு சிறு புன்னகை முகத்தில் மலரச் சொல்லி முடிப்பார். திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறுதி வரை தன் தந்தையின் மீதும், மூத்த தமயனார் திரு உருத்திராபதி அவர்கள் மீதும் பயமும், மரியாதையும், பக்தியும் கலந்த அன்புள்ளவராகவே இருந்துள்ளார்.

பல வருடங்கள் கழித்து எனக்குத் திருமணமாகிச் சிட்னி வந்து குழந்தைகளும் பிறந்த பின்னர் தட்சணாமூர்த்தியின் மூத்த மைத்துணர் மிருதங்க வித்துவான் திரு.ஆ.சந்தானகிருஸ்ணன் அவர்களுடன் சங்கீதம் பற்றிய உரையாடல் ஒன்றின் போது தவில் நாதஸ்வரம் பற்றிய பேச்சு எழுந்தது. அந்தக் கணம் எதிர்பாராத விதமாகத் தட்சணாமூர்த்தி பற்றிய பேச்சும் எழுந்த போது திரு உருத்திராபதி அவர்கள் சொன்ன ‘ அவர் சொல்லிக் கொடுத்தார் இவர் சொல்லிக் கொடுத்தார்; என்று எல்லோரும் சொல்கிறார்கள் அதெல்லாம் சும்மா கதை அவர் பிறவி மேதை. அது தான் உண்மை’ என்ற அதே வார்த்தைகளை மீண்டும் சந்தானகிருஷ்ணன் வாயிலாகக் கேட்ட போது என்னுள்ளே அமிழ்ந்து இருந்த ஒலி மீண்டும் ஒரு தடைவ என் காதில் அதிர்ந்தது போல ஓருணர்வு.

எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? எத்தனை யுகங்கள் ஆனால் என்ன? உண்மைகள் ஒரு போதும் சாவது இல்லை. அது யார் குரலில் ஒலித்தாலும் ஒரே மாதிரியே ஒலிக்கும்.

‘திருமுல்லைவாயில் முத்துவீருபிள்ளை, கும்பகோணம் தங்கவேற்பிள்ளை, வடபாதிமங்கலம் தெட்சணாமூர்த்தி ஆகிய தவில் வித்வான்கள் என்னுடைய சகோதரர் வலங்கைமான் சண்முகசுந்தரத்துடன் மூளாயிலுள்ள எனது தந்தையார் ஆறுமுகம் வீட்டிற் தங்கியிருந்து ஆலயங்களிற் கச்சேரி செய்துள்ளனர். அப்போது 1945 ஆம் ஆண்டு, ஒரு நாள் பன்னிரண்டு வயதே நிரம்பியிருந்த சிறுவனாயிருந்த இணுவில் தட்சணாமூர்த்திக்கும், வயதில் மிகப் பெரியவரான வடபாதி மங்கலம் தட்சணாமூர்த்திக்கும் இடையில் நடைபெற்ற தவில் தனி ஆவர்த்தனம், போட்டியாகவே மாறிவிட்டது. இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற அந்த லயவின்னியாசத்திற் சிறுவனாகிய தட்சணாமூர்த்தி இறுதிவரை சளைக்காமல் வாசித்த வாசிப்பை,’ஆகா அற்புதம்! இதைப் போல ஒரு தவில் வாசிப்பை, கச்சேரியை நாம் வாழ்க்கையில் என்றைக்கும் பார்த்ததில்லை’, என்று அன்றைய தினம் அங்கு குழுமியிருந்த வித்துவான்கள் அனைவரும் கூறினார்கள்’ என்று மிருதங்கம் ஏ. சந்தானகிருஷ்ணன் அவர்கள் மெய்சிலிர்க்க அந்த நிகழ்வை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

‘பதினாறு பதினேழு வருடங்களுக்கு முன்னர் ஈழத்திற் கொழும்பிலுள்ள கப்பிதாவத்த பிள்ளையார் ஆலயப் பிரதம குருக்களாகிய சண்முகரத்தினக் குருக்களின் சஷ்டியப்ப பூர்த்தி விழாவிற்குத் தவில் வாசிக்க அழைக்கப்பட்டு இருந்தேன். அங்கு சங்கீதவித்துவான் கலைமாமணி ரி.என்.சேஷகோபாலன் அவர்களும் வந்திருந்தார். என்னை அடையாளம் கண்டுகொண்டு நான்கு ஐந்து மணித்தியாலம் வரை உரையாடினார். உரையாடல் முழுவதுமே தட்சணாமூர்த்தியைப் பற்றியது. ‘மனிதர்களால் எட்டமுடியாத அவருடைய கற்பனைத் திறன், கரத்தின் வேகம், லயச்சிறப்பு, தவிலின் இனிமையான நாதம், மணித்தியாலக் கணக்காக, படித்தவர் – பாமரர் என்ற பேதமின்றி அனைவரையும் தன் தனித் தவில் வாசிப்பினாற் கட்டிப்போடும் மாயம். இவை அத்தனையையும் கலந்து எப்படி ஒரு தோற்கருவியினூடே இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்த முடிந்தது? எத்தனை தடவைகள் சிந்தித்தாலும் விடைகாண முடிவதில்லை’. என்று தன்னுடைய பிரமிப்பை என்னிடம் கூறினார். அந்தக் கணம் தட்சணாமூர்த்தியின் உறவினன் என்பதை விட இத்தகைய ஒரு தவிலிசை இமயத்துடன் ஒன்றாக மேடையில் அமர்ந்து நானும் தவில் வாசித்தேனே என்ற பெருமையே எனக்கு அதிகம் இருந்தது. அவருடன் வாசிக்கப் போகிறேன் என்றால் மூன்று நாளைக்கு முதலே யோசிக்க ஆரம்பித்து விடுவேன். காரணம் ஒரு தடைவ வாசித்தது போல இன்னொரு தடவை வாசிக்கவே மாட்டார். ஆகவே ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் இன்றைக்கு என்ன புதுமை செய்யப்போகின்றாரோ? என்று திகைப்பாக இருக்கும். 1970 ஆம் ஆண்டு இணுவில் மருதனார்மடம் பல்லப்பவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற கச்சேரிதான் ஈழத்தில் நடைபெற்ற திரு தட்சணாமூர்த்தி அவர்களின் இறுதிக்கச்சேரியாகும். அன்று அவருடன் நான் தவில் வாசித்தேன். திரு பி.எஸ் ஆறுமுகம் அவர்களும் எனது மைத்துணர் செ. கந்தசாமி அவர்களும் நாதஸ்வரம் வாசித்தார்கள்’. என்று திரு தட்சணாமூர்த்தியின் மருமகன் இணுவில் தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி அவர்கள் தனது தாய் மாமனை நினைவு கூர்ந்தார்.

Thedchanamoorthy1.jpg?resize=318%2C493
இயற்கையாகவே இறையருளாற் கவி புனையும் ஆற்றல் உள்ளவர்களை ‘வரகவி’ என்று கூறுவார்கள். தமிழ் அகராதியும் அவ்வாறே குறிப்பிடுகின்றது. இத்தகைய வரகவிகளின் வரலாறுகள் பலவற்றை நாம் அறிந்திருக்கின்றோம். தட்சணாமூர்த்தியும் வரகவிகள் போலவே இயற்கையாகவே இறையருளாற் தவில் வாசிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். திருஞானசம்பந்தருக்குத் தாளம் போடக் கற்றுக் கொடுத்தது யார்? அருணகிரி நாதருக்குச் சந்தக்கவி புனையச் சொல்லிக் கொடுத்தது யார்? மகாகவி காளிதாசருக்குக் காவியம் பாடப் பயிற்றுவித்தது யார்? கிருஷ்ணனுக்குப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொடுத்தது யார்? அவர்களைப் போன்ற ஒரு அபூர்வ பிறவி தான் திரு தட்சணாமூர்த்தி அவர்கள்
அது தான் வள்ளுவர் சொல்லுகின்றார்

‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து’. – திருவள்ளுவர்

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. அற்புதமாகச் ஸ்ருதி சேரக்கப்பட்ட வீணையைத் தென்றல் வந்து தழுவினாலே அவ்வீணை உயிர் பெற்று விடும். அதுபோலத் தான் தட்சணர்மூர்த்திக்கும் அவர் பிறந்து வளர்ந்த ஊரின், குடும்பத்தின், முத்தமிழ் வளமும், தந்தையின் கலை வளமும், கருவிலே திருவாகிய உயிரிலே புகுந்து, உணர்வுகளை லயமாக மீட்டிவிட, அத்தோடு இறையருளும் கலந்து அவருட் பொங்கிப் பிரவாகமெடுக்க, அவருட் கிளர்ந்தெழுந்தது அற்புதத் தவில் நாதம். இது மனித முயற்சிகளுக்கு எட்டாதது. சாதாரண மனிதர்களாற் புரிந்து கொள்ள முடியாதது.

தவில்மேதை தட்சணாமூர்த்தியினுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவர் தன் தாய் தந்தையரிடம் எதையும் மறைத்ததில்லை. அவருடைய வாழ்க்கையில் எந்தவித ஒளிவு மறைவுகளுக்கும் இடமில்லை. பொய் என்கின்ற வார்த்தையே அவருடைய அகராதியில் இல்லை. அன்பின் மறு உருவம். கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளமும், வெளிப்படையாகப் பேசும் குணமும், தான் நினைத்த விடயங்களை யாருக்கும் அஞ்சாது செய்யும் நெஞ்சுரமும் கொண்டவர். நிறையப் பெண்களுக்கு அவர் மீது மயக்கமும் இருந்துள்ளது. அதையும் கூட யாரிடமும் மறைக்க வேண்டும் என்றோ அது பற்றிய பிறருடைய அபிப்பிராயங்கள் பற்றியோ அவர் என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. தன்னுடன் தொழில் செய்யும் கலைஞர்களை மதிக்கும் தன்மையும், அவர்களை மிகவும் கௌரவமாக நடத்தும் தன்மையும் உடையவர். திரு தட்சணாமூர்த்திக்கும் அவர் தந்தைக்கும் உள்ள உறவு தசரதனுக்கும் – இராமருக்கும், கம்பருக்கும் – அம்பிகாபதிக்கும் உள்ளதைப் போன்றது. பணத்தையோ சொத்து சுகங்களையோ என்றைக்கும் அவர் விரும்பியவரல்லர். எதிலும் பற்றற்ற ஒரு துறவியினுடையது போன்றது அவருடைய உள்ளம். அவர் நேசித்தது அவரிடம் உள்ள கலையை மட்டுமே. அவருடைய இந்தப் பற்றற்ற தன்மையைப் பயன் படுத்தி அவர் புகழிற், பணத்திற் குளிர் காய்ந்தவர்களும், குளிர் காய்கிறவர்களும் உண்டு.

திரு தட்சணாமூர்த்தி அவர்கள் தனது பதினேழாவது வயது வரை தன் தந்தையாரோடும் குடும்பத்தாரோடும் இணுவிலிலேயே வாழ்ந்தவர். இந்தப் பதினேழாவது வயதிற்குள்ளாகவே அவர் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த அனைத்து நாதஸ்வர தவில் மேதைகளுடனும் கச்சேரி செய்துள்ளார். இந்தியாவிற்கும் சென்று வாசித்து உள்ளார். 1950 இல் அவருடைய தந்தை இறந்த பின்னரும் அவருடைய மூத்த தமயனார் உருத்திராபதி அவர்களே முழுக் குடும்பப் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டு ஒரு தந்தையின் இடத்தில் இருந்து நன் முறையில் தன் சகோதர, சகோதரிகளை நெறிப்படுதி வளர்த்தவராவார். இவ்வாறு இணுவிலில் இருந்தவரைத் திரு கணேசரத்தினம் அவர்கள் அளவெட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.தனிப்பட்ட முறையில் திரு தட்சணாமூர்த்தி அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லாத போதும் தனது மூத்த தமக்கையின் மனம் நோகக் கூடாது என்ற ஒரே காரணத்தினாலேயே அவர் அளவெட்டி செல்ல உடன்பட்டார்.

Thedchana_CI.jpg?resize=400%2C300
அளவெட்டி சென்று தனது மூத்த தமக்கை திருமதி இராஜேஸ்வரி கணேசரத்தினம் அவர்களோடு வாழ்ந்து வருகையிலே, திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்து இருந்தார். இருந்தும் அப்பெண்ணிற்கு வேறு ஒருவரைப் பேசி மணம் முடித்து வைத்தார்கள். இதை அறிந்த திரு தட்சணாமூர்த்தி அவர்கள் துணிகரமாகத் திருமணத்திற்குச் சென்று, அங்கே மணமக்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு மிகப் பெரிய ‘குரங்குப்பொம்மை’ ஒன்றையும் பரிசளித்துவிட்டு வந்தாராம். அதன் பின் திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்கு அளவெட்டி செல்லத்துரையின் மகள் மனோன்மணியை 1957 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி முதற் பெண் குழந்தை 1958 ஆம் ஆண்டிற் பிறந்தது. பிறந்த பின்னரும் திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் இணுவிலிற் தனது மூத்த சதோரர் திரு. உருத்திராபதி அவர்கள் வீட்டில் அவர்களுடனேயே மூன்று வருட காலம் வாழ்ந்துள்ளார். உருத்திராபதி அவர்களின் இல்லத்திற் அவர்களுடன் தங்கியிருந்தே கச்சேரிகளுக்குச் சென்று வந்துள்ளார். இக்காலத்தில் அளவெட்டியில் மிகப்பெரிய வீடொன்றினைக் கட்டும் பணியிலும் ஈடுபட்டார். அப்பணி நிறைவுற்றதும், மீண்டும் அங்கு குடிபுகுந்து வாழ்ந்தபோது 1963 ஆம் ஆண்டு இரண்டாவது பெண்ணையும், 1964 ஆம் ஆண்டு இரட்டையர்களான ஆண்குழந்தைகளையும், 1966 ஆம் ஆண்டு தவில் வித்துவான் உதயசங்கரையும் 1969 ஆண்டு மீண்டும் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தனர். (இரட்டையர்களில் ஒருவரும் கடைசி மகனும் இவ் உலக வாழ்க்கையிலிருந்து விடைபெற்று விட்டனர்.)

அவர் இக்கால கட்டத்திற் தனது குடும்பத்தை மகிழ்வாக வைத்திருக்கவும், தொழிலைத் தான் விரும்பியபடி சுதந்திரமாகச் செய்யவும் ஆசைப்பட்டார். ஆனால் அவ்வாறு செய்யமுடியாதபடி அவருக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டன. அவரது வளர்ச்சியையும் புகழையும் கண்டு பொறாமை அடைந்தவர்கள் அவருக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தினர், அவருடைய மனதைப் புண்படுத்தும் வகையிற் கதைத்தும் செயற்பட்டும் வந்தனர்.

அதுவரை எத்தனையோ வித்துவான்கள் இந்தியாவில் வந்து தங்கும்படி கேட்டும், ஏன் தட்சணாமூர்த்தி அவர்களின் மனதைத் தன் நாதஸ்வர வாசிப்பினாற் கொள்ளை கொண்ட, அன்பினால் தனது உறவினனாகவே எண்ணவைத்த,’என் வாழ்வின் முன்னேற்றத்தில் முக்கிய பங்குகொண்ட என் மதிப்பிற்குரிய காருக்குறிச்சி’ என்று சொல்லவைத்த நாதஸ்வரமேதையின் அழைப்பையே தட்டிக்கழித்தவர். கடைசி வரை ஒரு ஈழத்துக் கலைஞராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். ஏன் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு இந்தியா செல்ல முற்பட்டார்? அந்த அளவிற்கு அவருடைய மனதைப் புண்படுத்தும் அளவிற்குச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. ஆகவே 1970 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு இந்தியா தமிழ் நாட்டிற்குச் சென்றுவிட்டார். சென்றவர் அங்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து உள்ளார். அங்கும் அவருக்கு நின்மதி கிடைக்கவில்லை.

‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்ததுவே’
– பாரதியார் –

தொடரும்….

http://globaltamilnews.net/2017/58047/

Link to post
Share on other sites

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! பகுதி 4 – இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-

 

சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து

திரு. தட்சணாமூர்த்தி அவர்களின் அந்திம காலம்

thedchanamoorty.png?resize=588%2C567

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி’ -திருக்குறள்

‘லயஞானகுபேரபூபதி’ஈழத்தமிழ் அன்னையின் தவிலிசைக் கலைச் சக்கரவர்த்தி, எட்டாவது வயதிலிருந்து நாற்பத்தியோராவது வயதுவரை தனது தவிலிசை மழையால் உலகை நனைவித்து, தான் தவில் வாசித்த காலத்தையே தட்சணாமூர்த்தி சகாப்தமாக்கி, அவர் தவில் வாசித்த காலமே தவிலிசையின் பொற்காலம் என இசை விமர்சகர்களாற் போற்றப்பட்ட, தவிலுலகத்தின் ‘அவதார புருஷர்’; ‘தெய்வப்பிறவி’ என்றெல்லாம் இசை மேதைகளாலும் இசைரசிகர்களாலும் வர்ணிக்கப்பட்ட தவில் மேதை திரு தட்சணாமூர்த்தி அவர்களின் வாழ்க்கையிலும் ஒரு தாளவொண்ணாச் சோகம் ஒன்று தலைதூக்கியது. உள்ளத் தூய்மை உடையவர்களைத்தான் இறைவன் அதிகமாகச் சோதிப்பானோ என்னவோ?
திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இந்தியாவிற்கு கச்சேரிகளுக்கு அடிக்கடி சென்று வந்தபோதும் அங்கே மாதக் கணக்காகவோ அன்றி வருடக்கணக்காகவோ தங்கியது கிடையாது. 1970 ஆம் ஆண்டு; (இந்தியா) தமிழ்நாட்டிற்குச் சென்ற திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் தன் குடும்பத்தாருடன் மூன்று வருட காலம் அங்கேயே வசித்து வந்தார். தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்திலே 1973 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுச் சிந்தை குழம்பிக் கலங்கி நின்றார். இதை அறிந்த அவரது ஒன்று விட்ட சகோதரர் இணுவிற் தவில் வித்தகர் திரு சின்னராசா அவர்கள் இந்தியா சென்று அவரையும் அவர் குடும்பத்தினரையும் யாழ்ப்பாணத்திற்கு 1974 ஆம் ஆண்டு அழைத்து வந்தார். இங்கு வந்த திரு தட்சணாமூர்த்தி அவர்கள் உறவுகளை, சொந்த பந்தங்களை, ஏன் உலகையே வெறுத்துக் கச்சேரி செய்வதையும் வெறுத்துத் தனது சொந்தங்களை நாடாது யாழ்ப்பாணம் சுன்னாகத்திலுள்ள தனது நண்பன் நடராசாவின் வீட்டிற் தஞ்சம் புகுந்தார். அங்கு அவர் வீட்டிலுள்ள ஒரு அறையினுட் சென்று அந்த அறையின் சாரளங்களையும் பூட்டிக் கதவினையும் தாளிட்டுக் கொண்டார். வெளிச்சமோ காற்றோ புகமுடியாத அந்த அறையினுள் என்னேரமும் ஒரு சிறிய அகல் விளக்கு மட்டுமே எரியும். அவர் அங்கிருந்த போது யாரையும் பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை. தனிமையில் உளம் நொந்து வாடினார். அவரது முழுத் தேவைகளையும் திரு நடராசா அவர்களே கவனித்துக் கொண்டார்.

இதனால் மிகுந்த கவலைக்குள்ளான தட்சணாமூர்த்தி அவர்களின் மூத்த சகோதரர் திரு. உருத்திராபதி அவர்கள் இணுவிலின் பிரபலமான வாதரோக வைத்தியர் திரு. சு. இராமலிங்கம், இணுவிலின் பிரபல மணிமந்திர வைத்தியரும் பில்லி சூனியம் அகற்றுபவருமாகிய அருட்திரு அம்பலவாணசுவாமிகள். (இவரை இணுவில் மக்கள் மணியப் பொடியார் என அன்புடன் அழைப்பர்). அம்பலவாண சுவாமிகளின் குருநாதரும் பிரபல சித்தவைத்தியருமான கொக்குவில் நடராசப் பரியாரியார் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு தன் அன்புத் தம்பியைப் பார்ப்பதற்குச் சென்றார். அறையின் வெளியே நின்று’ நான் உனது அண்ணா வந்திருக்கின்றேன் ஒரே ஒரு தடவை கதவைத் திறக்க மாட்டாயா?’ எனத் தன் தம்பியிடம் பல தடவைகள் இறைஞ்;சினார். வழமையாக யாராவது சென்று பார்க்க அனுமதி கேட்டால் அறையினுள்ளே இருந்தபடி கூப்பாடு போட்டு வந்தவர்களை வைது கலைக்கும் தட்சணாமூர்த்தியின் அறையில் அன்று நிசப்தமே நிலவியது. என்றும் தனது தமயனாரிடம் பயமும் பக்தியும் கொண்ட தட்சணாமூர்த்தி அன்றும் அதை நிதானத்துடன் கடைப்பிடித்தார். அண்ணனின் கேள்விக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அவர்களும் வெளியிலே மணிக்கணக்காகக் காத்திருந்தார்கள். எந்தச் சத்தமும் இல்லை. நீண்ட நேரத்தின் பின் உள்ளே எரிந்து கொண்டு இருந்த அகல் விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. பதிலை உணர்ந்து கொண்ட அவர்களும் மிகுந்த வேதனையுடன் வந்த வழியே திரும்பிவிட்டனர். இப்படியிருக்க நாம் போனோம் அவரைப் பார்த்தோம் கதைத்தோம் என்றெல்லாம் நிறையப்பேர் கதை சொல்கின்றார்கள். எப்படி என்பது எனக்குப் புரியவில்லை.

‘அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு’ – திருக்குறள்

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமற் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து அவனுக்குத் தீங்கு வரும் காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுவதே உண்மையான நட்பு.

திரு முருகையா என்பவர் அளவெட்டியைச் சேர்ந்தவர். இவர் 1940 இற் பிறந்தவர். தற்போது திருகோணமலையிற் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றார். திரு தட்சணாமூர்த்தியின் இன்பதுன்பங்களிற் பங்கெடுத்து, அவருடைய வாகனத்திற்கு சாரதியாகவும் ஆத்மார்த்த நண்பனுமாக இருந்தவர். அவர் கூறுகின்றார்.’முதன் முதலிற் தட்சணாமூர்த்தி எனக்கு அறிமுகமானபோது நான் நினைக்கின்றேன்எனக்குப் பத்து, பதினொரு வயது இருக்கும். குழந்தையைப் போன்ற சுபாவம் உடையவர். அருமையான என்னுயிர் நண்பன். அவரைப் போல அன்பான, இனிமையான, ஒரு பிறவியை நான் என் வாழ் நாளிற் கண்டது இல்லை. அவர் தவில் வாசிப்பை இந்த உலகமே மெச்சியது. அவர் ஒரு சித்தர் பின் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே அறிந்து கூறி விடுவார். நான் காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற் சாலையில் வேலை செய்தேன் அந்த வேலையை விடச் சொல்லி விட்டு என்னைத் தனது வாகனத்தின் சாரதியாக்கிக் கொண்டார். யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் அவருக்கு நல்ல பேரும் புகழும் இருந்தது. எப்போதும் கச்சேரி கச்சேரி என்று இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மாறி மாறி ஓடிக்கொண்டே இருப்பார். தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பைப் பொழிபவர். ‘என்னுடைய மனைவியை இந்த உலகத்திற் தனியாக விட்டுச் செல்லேன் நான் இல்லையேல் அவள் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடும் நான் இறந்தபின் அவளையும் என்னுடன் அழைத்துக் கொள்வேன்’ என்றார். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத, யாருடனும் எந்தச் சோலிக்கும் போகாத, வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தை போன்றவருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள். அவருடைய மரணம் இயற்கை மரணம் இல்லை. நானும் குகானந்தனும் ஒரு சிறந்த மாந்திரீகரை எனது நண்பன் தட்சணாமூர்த்தியிடம் அழைத்துச் சென்று இதை உறுதிப்படுத்தினோம். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத எனக்கு ஏன் இத்தனை துன்பங்கள் எனப் பல தடைவைகள் அவர் கண்ணீர் விட்டுள்ளார்.

உண்டான போதுகோடி உறமுறையோர்கள் வந்து
கொண்டாடி கொண்டாடிக் கொள்வர் தனம்குறைந்தால்
கண்டாலும் பேசார்இந்த கைத்தவமான பொல்லா
சண்டாள உலகத்தைத் தள்ளிநற்கதி செல்ல
பல்லவி
என்றைக்கு சிவக்ருபை வருமோ ஏழை
என்மன சஞ்சலம் ஆறுமோ

தட்சணாமூர்த்தி இறக்கும் போது என்னுடைய மனைவி கருவுற்று மூன்று மாதம் எனக்கு மூத்தவர்கள் நால்வரும் பெண்கள். தட்சணாமூர்த்தி இறந்தபின் எனக்குப் பிறந்தது. ஆண்குழந்தை அவனுக்குத் தட்சணாமூர்த்தி என்றே பெயர் சூட்டியுள்ளேன். இதைத் தவிர எனதுயிர் நண்பனுக்கு என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவர் 1970 ஆம் ஆண்டு குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு இந்தியாவிற்குப் புறப்படுவதற்கு முன்னர் என்னை மீண்டும் காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற் சாலைக்கு அழைத்துச் சென்று எனக்கு வேலையையும் பெற்றுத் தந்து விட்டார். அவர் தான் என்னுடைய கடவுள்’;. எனத் தாளமுடியாத வேதனையுடன் விம்மி விம்மியழுது தன்னுயிர் நண்பனை நினைவு கூர்ந்தார்.
கன்றின் குரலைக்கேட்டுக் கனிந்துவரும் பசுபோல்
ஒன்றுக்கும் அஞ்சாது என்னுள்ளத் துயரம்நீக்க
என்றைக்கு சிவக்ருபை வருமோ?

என்ற நீலகண்டசிவனின் கதறல் உண்மையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொதுவானதோ? தட்சணாமூர்த்தியும் தனது மனதிற்குள்ளேயே கதறினார். கலங்கினார்.சமணர்கள் ஏவிய சூலை நோய் நாவுக்கரசரைத் தாக்கியது போல, யாரிட்ட பொறாமைத்தீ தட்சணாமூர்த்தியைத் தாக்கியதோ? அவர் மீது பிரியமுள்ளவர்கள் மனம் துடிக்க, அகமுடையாள் நெஞ்சம் கதி கலங்க உடல் நலக்குறைவாற் படுக்கையில் வீழ்ந்தார் தட்சணாமூர்த்தி. தெல்லிப்பழையிலுள்ள வைத்தியர் இராசேந்திரத்தினுடைய மருத்துவமனையில் (இல்லம்) சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளையும் தன்னைப் பார்க்க யாரும் வருவதை அறவே விரும்பவில்லை. அதையும் மீறிச் சென்ற பலர் அவரிடம் அடி, உதைகளும் வாங்கியிருக்கின்றார்கள். அவருடைய அந்த இறுதிக் காலத்தில் அவருக்கு எல்லாமே வெறுத்துப் போய் இருந்தது. இந்த உலகத்திலுள்ள யாரையும் பார்க்கவோ பேசவோ அவர் பிரியப்படவில்லை. அப்படிப்பட்டவர் நடராசா என்பவரை மட்டுமே தன்னுடன் இருக்க அனுமதித்து உள்ளார்.

அங்கு இருக்கும் போது திரு தட்சணாமூர்த்தி தனது பேசும் சக்தியையும் இழந்து உடல் வலிகளுக்கும் ஆளாகியிருந்தார். இந்த வலிகளை மறந்து அவர் துயில் கொள்வதற்காக ஊசி மூலம் மருந்து செலுத்துவது வழக்கம். இவ்வாறு மருந்து செலுத்தி அவர் துயில் கொண்ட வேளை ஒரு நாள் இணுவில் தவில் வித்துவான் திரு சின்னராசா (ஒன்று விட்ட சகோதரர்) அவர்களுடைய குடும்பம் அவரைப் பார்க்கச் சென்றபோது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், திரு தட்சணாமூர்த்தியின் நெற்றியில் அவர்கள் வீபூதியைப் பூசி விட்டு வீடு திரும்பி விட்டனர். துயில் கலைந்து கண்விழித்த தட்சணாமூர்த்தி நெற்றிக் கண்திறந்த உருத்திரனாகிவிட்டார். ‘திருச்செந்தூர் வீபூதி மணக்கின்றது. யார் இங்கு வந்தது? யாருக்கும் சொல்லுவது புரியாது இங்கு யாரும் வரக்கூடாது யாரையும் இங்கு அனுமதிக்கக் கூடாது என்றால் யார் கேட்கிறார்கள்? இனி நான் இங்கு இருக்க மாட்டேன் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். அங்கு வீட்டின் முன்புறக் கேற்றில் இங்கு யாரும் வரக்கூடாது என்று எழுதி மாட்டிவிடுங்கள்’ என்று கூறி அன்றே நடராசாவின் வீட்டிற்குத் திரும்பி விட்டார். வீட்டிற்குச் சென்று அறையினுள்ளே சென்று மீண்டும் தாளிட்டுக் கொண்டு விட்டார் அந்த வீட்டை விட்டு அவர் வெளியில் இறங்குவதே இல்லை.

வீட்டுக்குச் சென்றபின் மருந்துகள் எதுவும் உட்கொள்ளாததால் சில வாரங்களில் மீண்டும் உடல் வலியெடுத்தது. நிறைய வாந்தியும் எடுக்க ஆரம்பிக்கவே உடனே மூளாயில் உள்ள அரசாங்க வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நண்பன் நடராசாவும் அவரது மூத்த தமக்கை இராஜேஸ்வரியும் தங்கை பவானியுமே அருகில் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டார்கள். அவருக்கு வாந்தி எடுப்பதற்கு முடியவில்லை. அதற்காக மிகவும் அவஸ்தைப்பட்டார். நன்றாகக் களைத்தும் விட்டார். பின்னர் அவரது வாயினுள் குழாய் ஒன்றைச் செலுத்தியே குடலினுள் இருந்தவற்றை வெளியிலே எடுத்தார்கள். அதன் பின்னர் அவர் உடல் நிலை சற்றுத் தேறத் தொடங்கியது. கதைக்கவும் ஆரம்பித்து விட்டார் இருபது நாட்கள் அவரது சகோதரிகள் இராஜேஸ்வரி, பவானி ஆகியோரின் பராமரிப்பில் குணமாகிக் கொண்டு வந்த தட்சணாமூர்த்தி இருபத்தியோராவது நாள் அவருடைய மூத்த சகோதரி வீட்டிற்குச் சென்றிருந்த வேளை இனி இங்கு இருந்தது போதும் வீட்டிற்குச் செல்வோம் எனப் புறப்பட்டுவிட்டார். அவருடைய பேச்சை மறுப்பதற்கு அவருடைய தங்கை பவானிக்குத் துணிச்சல் இல்லை. ஆகவே நடராசாவும் தங்கை பவானியும் காரில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாராகினர். காரில் பின் இருக்கையில் அமர்ந்த தட்சணாமூர்த்தி தனது தங்கையையும் பின் இருக்கைக்கு அழைத்து இருக்கும்படி கூறி அவரது மடியிற் தலைவைத்துப் படுத்தபடி வீட்டிற்குச் செல்லும்படி உத்தரவிட்டார் கார் வீட்டைச் சென்றடையும் முன்னரே திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் அவரது தங்கையின் மடியிலே நிரந்தரமான உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

திரு கேதீஸ்வரன் அவர்கள் ஆவணப்படத்திற் ‘திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறப்பதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பு எங்கேயோ இருந்து இந்தியாவால் வந்து கச்சேரி எல்லாம் வாசித்து விட்டு வேறு எங்கோ இருந்தவர் வீட்டிற்கு வந்து சாய்மனைக் கட்டிலிற் படுத்திருந்தார். என்று ஏதோ கதை எல்லாம் சொல்லுகின்றார். எப்போ யாழ்ப்பாணம் சென்றார்? எங்கே இருந்தார்? என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. பின் வீட்டிற்கு வந்தார் நான் சென்று பார்த்தேன் கைகளைக் காட்டினார் என்றெல்லாம் கண்ணீர் விடுகின்றார். தட்சணாமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவினால் அவருடைய நண்பன் நடராசாவின் வீட்டிற்குச் சென்றவர் இறக்கும் வரை அவருடைய சொந்த வீட்டிற்குச் செல்லவில்லை. நண்பன் நடராசா வீடு, வைத்தியர் இராசேந்திராவின் வீடு, மூளாய் வைத்தியசாலை ஆகிய இடங்களிலேயே மாறி மாறி இருந்துள்ளார்.

அது மட்டுமல்ல சித்தர்களின் மன ஒருமைப்பாட்டிற்கும், தட்சணாமூர்த்தி அவர்களின் மன ஒருமைப்பாட்டிற்கும், அவரின் ஒரு முகப்பட்ட தவில் வாசிப்பிற்கும் திரு கேதீஸ்வரன் அளித்த விளக்கம் ஆகா அருமை!! மிகப் பிரமாதம்!!!என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் திருமூலர் தொடங்கிப் பதினெண் சித்தர்களோ அன்றி ஈழத்துச் சித்தர்களோ இவர்களில் யாருமே கூறாத, அவர்களுக்குக் கூடத் தோன்ற முடியாத, மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு உரிய அறிவைஎங்கிருந்து பெற்றுக்கொண்டார்? தனது அனுபவத்தில் இருந்தா? அப்போ திரு தட்சணாமூர்த்தி அவர்கள் சிறுவனாக இருந்த போது தவில் வாசிக்கும் நேரங்களில் என்ன செய்தார்? யாழ்ப்பாணத்தில் ‘ஒரு சிறுவன் மிக அற்புதமாகத் தவில் வாசிக்கின்றான்”அவன் அப்படி என்ன தான் வாசிக்கின்றான்?’ என்று தவிற் கலைஞர்களைச் சிந்திக்க வைத்து, உலகையே தான் இருக்குமிடம் அழைத்தாரே! திரும்பிப் பார்க்க வைத்தாரே!! அந்தக்காலங்களில் திரு தட்சணாமூர்த்தி எப்படி இருந்தார்? என்ன செய்தார்? இது எதுவும் திரு கேதீஸ்வரன் அவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை.

திரு தட்சணாமூர்த்தி அவர்கள் ஒருவேளை இளமைக் காலத்திற் காற்றாக, மழையாக, நெருப்பாக இருந்திருப்பாரோ? அளவெட்டி மண்ணைத் தீண்டி, அளவெட்டிப் பெண்ணை மணந்த பிற்பாடுதான் தவில் வாசிக்கும் சுந்தர புருஷனாக உருவெடுத்திருப்பாரோ?

திரு தட்சணாமூர்த்தி அவர்களுக்கு (தவில்) வித்தியாரம்பம் செய்த ஈழத்துச் சிதம்பரமாகிய காரைநகர் சிவன் கோயில்.

kovil1.png?resize=530%2C398

அவரின் முதற் கச்சேரி நடைபெற்ற இணுவில் மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில்,இக்கோயில் திரு தட்சணாமூர்த்திஅவர்கள் பிறந்த வீட்டிற்கு அருகிலுள்ளது.

kovil3.png?resize=553%2C413kovil2.png?resize=396%2C421

மஞ்சத்தடி கந்தசாமி கோயிலுக்கு அருகில் இருக்கும் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் திருவுருவச்சிலை…

thedchanamoorty.png?resize=588%2C567

இவையெல்லாவற்றையும் சுனாமி அடித்துச் செல்லவும் இல்லை. யுத்தம் பாழாக்கவும் இல்லை. அது சரி அவருக்குத் தட்சணாமூர்த்தி பிறந்து தவழ்ந்து ஓடிவிளையாடி வளர்ந்த, சிறிய வயதிற் தந்தையாருடன் இருந்து தவில் வாசித்த, மஞ்சத்தடி ஓழுங்கையில் அமைந்திருந்த, இந்தியக் கலைஞர்கள் பலர் வந்து தங்கி உண்டு உறங்கி இளைப்பாறிய, கலைக் கூடமாகத் திகழ்ந்த, விஸ்வலிங்கத்தின் மூதாதையரும் அதன் பின் விஸ்வலிங்கமும் பின் அவர்களின் மூத்தமகன் உருத்திராபதியும் வாழ்ந்த அந்த மிகப்பெரிய நாச்சார் வீட்டை அவர் கண்டதுண்டோ? அந்த வீடு யுத்தத்தின் போது சிதைவுற்று விட்டதாற் தற்போது உருத்திராபதியின் மகனும், விஸ்வலிங்கத்தின் மூத்தபேரனும், தட்சணாமூர்த்தியின் பெறாமகனுமாகிய திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் கட்டிய புதிய இல்லம் அமைந்துள்ளது.

திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறப்பதற்கு முன் இருபத்தியொரு நாட்கள் மூளாய் வைத்தியசாலையில் இருந்தார். அப்போது அவருடைய அறிவும், சிந்தனையும் மிகத்தெளிவாகவே இருந்தது. அவருக்குக் கைகள் குறளவும் இல்லை. அவர் தனது ஆருயிர் நண்பன் திரு. முருகையாவிடம் தவிர வேறு யாரிடமும் தனது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டவரும் அல்லர். திரு. கேதீஸ்வரன் எப்போ வைத்தியரானார்? திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறந்த காரணத்தைக் கூறுவதற்கு? திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்குக் கால்கள் வீக்கம் கண்டிருந்தது. உடல் வலியிருந்தது. அந்த நிலையிலும் அவர் விரும்பினால் தவில் வாசிக்கக் கூடியவராகவே இருந்தார். ஆனால் அவருக்குத் தான் இந்த உலக வாழ்க்கையே வெறுத்து விட்டது. பின்பு யாருக்காகத் தவிலை வாசிப்பது? பற்றுகள் ஆசைகள் அனைத்தையும் துறந்தவர்களுக்கு இந்தச் சண்டாள உலகத்தில் என்ன வேலை? தன் வேதனைகளை இறுதிவரை தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டு, தன்னை எரித்துப் பிறருக்கு ஒளி கொடுக்கும் தீபம் போல, தன்னைச் சூழ்ந்திருந்தவர்களுக்கு மகிழச்சியை அள்ளிக் கொடுத்து விட்டு, அருணகிரிநாதரைப் போல, வள்ளளாரைப் போல இவ்வுலக வாழ்க்கையைத் துறந்துவிட்டார். அவர் கூறியபடியே மூன்று மாதங்கள் நிறைவடைய முன்பே தன் மனையாளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார். (எழுபது நாட்களில்)  தட்சணாமூர்த்தியும் அவருடைய மனைவியும் 1975 ஆம் ஆண்டு இறந்த பின்னர், மீண்டும் பிள்ளைகள் எல்லோரையும் இணுவிலிற் தன்னுடைய வீட்டிற் தங்க வைத்துத் தான் வேலைக்குச் சென்று நான்கு வருடங்கள் பாதுகாத்து வளர்த்தவர் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் சகோதரி திருமதி பவானி வேதய்யா அவர்களே. இக்காலத்;திற் திரு தட்சணாமூர்த்தியின் இரண்டாவது மகன் திரு உதயசங்கர் அவர்களைத் தன்னுடன் வைத்திருந்து தவிற் பயிற்சி அளித்துப் பின்னர் அவரைத் தமிழ் நாட்டிற்கு அழைத்துச் சென்று வலங்கைமான் சண்முகசுந்தரத்திடம் தவில் படிக்க ஏற்பாடு செய்தவர் இணுவில் திரு. புண்ணியமூர்த்தி அவர்கள். அங்கு ஆறுமாத காலம் இருந்து சிட்சை பெற்றுக்கொண்டு மீண்டும் ஒருவருடம் திரு புண்ணியமூர்த்தி அவர்களுடன் இருந்தே சேவகத்திற்குச் சென்றுள்ளார். அதன் பின் தொழில் செய்ய ஆரம்பித்ததும் சிட்டுக்குருவியின் தலைமேற் பனங்காய் வைத்தது போல பதின்மூன்று வயதேயான சிறுவன் உதயசங்கரே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. அன்று அந்தச் சிறிய வயதினிற் தோளிற் தூக்கிய குடும்பச் சுமையையும், துயரங்களையும் இன்று வரை இறக்கி வைக்க முடியாது தொடர்ந்து சுமந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தைக் காலமும் சூழலும் ஏற்படுத்தி விட்டன.இதை எத்தனை பேர் அறிவார்கள்?

‘உயிர்களைக் காப்பவனே – என்றும்
உயிர்க்கு உடையவனாம்
அயர்வு வேண்டாம் ஐயா – இதுவே
அறநூல் விதி ஐயா’

இதை நான் கூறவிலலை. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் தனது ‘ஆசியஜோதி’ என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.

திரு. தட்சணாமூர்த்தி அவர்களின் புகழிற் பணத்திற் குளிர் காய்ந்தவர்கள், குளிர் காய்கிறவர்கள், தட்சணாமூர்த்தி என்னவர், எங்களவர், எம் அயலவர், அவரோடு உண்டேன், குடித்தேன்,உறங்கினேன், விளையாடினேன், நண்பனாயிருந்தேன் என்று சொல்பவர்களெல்லோரும் அவர் விரும்பிய மண வாழ்க்கையை அமைத்துத் தருவதற்கும், அவர் மனம் உடைந்து தனிமையில் வாடியபோது ஆறுதல் சொல்வதற்கும், அவர் பிணியினால் நொந்து படுக்கையில் வீழ்ந்த போது நல்லதொரு வைத்தியரிடம் காட்டி ஆலோசனை பெறுவதற்கும், திரு தட்சணாமூர்த்தி அவர்களும், அவரது மனைவியும் இறந்தபின் அன்னையையும் தந்தையையும் இழந்து குழந்தைகள் அனாதைகளான போது உடனே அவர்களைப் பொறுப்பேற்றுக் காப்பதற்கும், தங்கள் துயரங்களைக் கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஆதரவற்ற அந்தக் குழந்தைகளை நெறிப்படுத்தி வளர்ப்பதற்கும், அதன் பின்னரும் கூட அவர்களின் கஷ்ட துன்பங்களிற் பங்கெடுப்பதற்கும் எங்கே போயிருந்தார்கள்?

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு’- திருக்குறள்

தவில் மேதை தட்சணாமூர்த்தி இவ் உலக வாழ்க்கையைத் துறந்து விட்டார். என்கின்ற செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவி விட்டது. தவில் மேதை தட்சணாமூர்த்தியின் வசீகரமான குழந்தை முகத்தை இறுதியாக ஓரு தடைவ பார்க்க மாட்டோமா? என்ற ஏக்கத்தோடு அளவெட்டியிலுள்ள அவரின் இல்லம் நோக்கி மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து படையெடுத்தனர். தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு செல்வநாயகம் தலைமையிலே திரு.அமிர்தலிங்கம், திரு.தர்மலிங்கம், திரு.பொன்னம்பலம் உட்படப் பல அரசியற் பிரமுகர்களும் சென்று தட்சணாமூர்த்திக்கு இரங்கலுரை வழங்கி, அஞ்சலி செலுத்த, கலைஞர்களும் அவருடைய இரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்த, வெள்ளம் போற் பெருக்கெடுத்த மக்கள் கூட்டம் பின் தொடர, வரலாறு காணமுடியாத ஓரு மா மேதையின் இறுதி யாத்திரை அளவெட்டி கேணிப்பிட்டிச் சுடலையைச் சென்றடைந்தது. அங்கே அவரது பூத உடலுக்கு அவரது அன்புச் செல்வங்கள் வற்றாத கண்ணீருடன் தீமூட்டினர்.

‘அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி யிரு
கைத்தல மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே’.

என்று பட்டினத்தார் பாடியது போல 1975 ஆம் ஆண்டு அவர் பூத உடல் மறைந்தது. ஆயினும் அவர் செய்த புண்ணியம் தவிலிசையின் வடிவிலே கால் நூற்றாண்டைத் தாண்டிய பின்னரும் ஒலிக்கின்றது. தவில் என்கின்ற வாத்தியம் இருக்கும் வரை திரு. தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் நாதமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

‘மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயான மட்டே, வழிக்கேது துணை
தினையா மளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே’.
– பட்டினத்தார் பாடல்
—————————————————————————————————————————————————————–குறிப்பு
எங்களுடைய குடும்பம் திரு விஸ்வலிங்கம் குடும்பத்துடன் என்னுடைய பாட்டன் காலத்திலிருந்து மூன்று தலைமுறையாக நெருங்கிய நட்புடைய குடும்பம். அந்தக் குடும்ப உறவினாற் தெரிந்து கொண்ட விடயங்களும், திரு. விஸ்வலிங்கத்தின் மூத்தமகன் திரு. உருத்திராபதி அவர்களிடம் எனது தந்தை (இணுவையூர் பண்டிதர். கா.செ.நடராசா) வாய்ப்பாட்டினைக் கற்றவர், நானும் அவரிடம் வாய்ப்பாட்டையும், வயலினையும் கற்றவள். பின்னர் திரு உருத்திராபதி அவர்களின் மகன் தட்சணாமூர்த்தியின் பெறாமகன் திரு இராதாகிருஸ்ணன் அவர்களிடமும் நான் வயலின் கற்றுள்ளேன். சிறு வயதிலிருந்து எனது தந்தையிடமும் எனது குருவினரிடமும் இருந்து அறிந்து கொண்டவற்றில் என் மனதிற் பதிந்த ஏராளமான விடயங்களும் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. மேலும் இக்கட்டுரை சிறப்பாக அமைவதற்கு மிகுந்த உள்ளன்போடு தகவல்களைத் தந்து உதவிய இணுவில் திரு கே.ஆர். புண்ணியமூர்த்தி (தட்சணாமூர்த்தியின் சகோதரியின் மகன்) அவர்களுக்கும், இணுவில் திருமதி பவானி அம்மா (தட்சணாமூர்த்தி அவர்களின் சகோதரி) அவர்களுக்கும் அளவெட்டி திரு முருகையா (தட்சணாமூர்த்தி அவர்களின் வாகனச் சாரதி ஆருயிர்த் தோழன்) அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

உசாத்துணை
நடராசா கா.செ,இணுவை அப்பர்.
ஜெயராசா .சபா,ஈழத்தமிழர் கிராமிய நடனங்கள்.
சண்முகசுந்தரம் .த,யாழ்ப்பாணத்து இசைவேளாளர்.
சண்முகசுந்தரம் .த,இசையும் மரபும்
இராமநாதன் ஏ.எஸ, விவரணப்படம்
சந்திரசேகரம்.பி,’ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி’ கட்டுரை
நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர்.
இணுவில் கே. ஆர்.புண்ணியமூர்த்தி (திரு.தட்சணாமூர்த்தியின் மருமகன் வயது 76 ) – செவ்வி
இணுவில் திருமதி. பவானி. வேதையா (திரு.தட்சணாமூர்த்தியின் சகோதரி வயது 83) – செவ்வி
அளவெட்டி திரு . முருகையா (திரு.தட்சணாமூர்த்தியின் ஆருயிர்த்தோழன் வயது 78 ) – செவ்வி

Karthikayini.png?resize=285%2C196

இக்கட்டுரையை உலகம் முழுவதும் உள்ள தமிழ் இசைப்பிரியர்களிடம் கொண்டு சென்ற குளோபல் தமிழ் செய்திய்திகள் ஊடக நிறுவனத்திற்கும், இக்கட்டுரையைத் தொடர்ந்து வாசித்துத் தங்கள் கருத்துக்களையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கும் தங்கள் முகநூலில் இக்கட்டுரையைப் பகிர்ந்து கொண்டஅனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்

‘பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்’
– திருக்குறள்.

பண்புடையவர்கள் – நீதி, அறம், உள்ளத்தில் உண்மை உடையவர்கள் வாழ்வதாற்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கின்றது. அவர்கள் மட்டும்வாழாது போவார் என்றால், மனித வாழ்க்கை மண்ணுள் புகுந்து மடிந்து போகும்.

http://globaltamilnews.net/2018/59612/

Link to post
Share on other sites
  • 1 month later...

தவில் தெட்சணாமூர்த்தியின் ஆவணப்படம் தொடர்பிலான விமர்சனம் குறித்த மறுதலிப்பு: பி எம். சுந்தரம்:-

Thedchanamoorthy.jpg?resize=480%2C360

தவில் மேதை, யாழ்ப்பாணம் திரு தக்ஷிணாமுர்த்தி அவரகளைப்பற்றிய ஆவணப்படப்பதிவில் சில தவறான செய்திகள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அதில், குறிப்பாக நான் கூறிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை, என்றும் இணுவையூர் கார்த்தியாயினி (நடராஜா) கதிர்காமநாதன் என்பவர் கூறியிருந்தவற்றைப் படித்தேன்.

 

வரலாறு திரிக்கப்பட்டதாக இருக்ககூடாது என்பதில் கருத்து வேற்றுமை இருக்கமூடியாது. இசைவேளாளர் என்ற சொல்லாட்சியே தமிழகத்தில் பிறந்தது. மாதோட்டபுரம் (மாவட்டபுரம்) கோவிலைக் கட்டியவனே சோழமன்னன் கட்டிய கோவிலில் பணி புரியத் தமிழகத்திலிருந்து பல நாகஸ்வரத்-தவில் விற்பன்னரகளை மன்னன் ஈழத்திற்கு அனுப்பிக் கோவில்களில் நியமித்தான் என்பதும் வரலாறு காட்டும் உண்மை. அவ்விதம் சென்றவர்கள்தாம் அந்நாட்டில் பல கோவில்களில் பணி புரிந்து அந்நாட்டவரகளாக ஆனார்கள். திரு சடையரின் குடும்பமும் அவற்றில் ஒன்று. விஸ்வலிங்கம் பிள்ளை சிறந்த தவில் வித்துவானாக விளங்கியவர். நான் திரு கோதண்டபாணிப் பிள்ளையைச் சந்தித்திருக்கிறேன். இணுவையூர் (விசர்) ராஜகோபால பிள்ளை, சின்னபழனி பிள்ளை, பி.எஸ். ஆறுமுகம் பிள்ளை, கோவிந்தஸ்வாமி பிள்ளை, அவருடைய தம்பி, என்.ஆர்.சின்னராஜா போன்றொர் தஞ்சையில் என் வீட்டில் பல நாட்கள் தங்கியிருந்தனர். திரு உத்திராபதி பிள்ளையின் குமாரர் ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு கல்லூரியில் வயலின் பயிற்சிக்கு சேர்த்துவிட்டதே நான்தான். இன்னும் யாழ்ப்பாணத்திலிருந்து பலர் என் வீட்டுக்கு வந்து தங்கியிருந்ததுண்டு. கார்த்தியாயினி, கோவிந்தஸ்வாமி சின்னராஜா இருவரையும் குறிப்பிட்டு, முன்னவர் தவிலிலும், பின்னவர்,நாகஸ்வரத்திலும் சிறந்தவர்கள் என்று தவறாகக் கொடுத்துள்ளார்.

Thedchana_CI.jpg?resize=400%2C300

கோவிந்தஸ்வாமி நாகஸ்வரக்கலையிலும், சின்னராஜா தவிலிலும் வல்லவர்கள். பல நாகஸ்வர விற்பன்னர்களைக் குறிப்பிட்டுள்ள கார்த்தியாயினி, நல்லூர் முருகய்யா பிள்ளை, சீர்காழி திருநாவுக்கரசு பிள்ளை போன்றோரை ஏனோ குறிப்பிடவில்லை..ஒருகால் அவர்களைப்பற்றி அவர் கேள்விப்பட்டதுகூட இல்லை போலும் திருச்சடை முத்துகிருஷ்ணன் அல்ல திருச்சேறை முதுக்கிருஷ்ணன் ஆண்டிக்கோவில் அல்ல;ஆண்டாங்கோவில். தக்ஷிணாமூர்த்தி என் வீட்டில், தன் குடும்பத்துடன் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். தன் தந்தையைப் பற்றியும் உறவினரகளைபற்றியும் அவர் கூறிய செய்திகளையே நான் குறிப்பிட்டேன். தன் தந்தை தனக்கு பனம்கிழங்கு கொடுத்து உண்ணசெய்ததும், தோளிலே வைத்துக்கொண்டு பல தவில் வித்துவான்கள் வாசிப்பதைக் கேட்கச்செய்தார் என்றும் என்னிடம் கூறியவர் அவர் மட்டுமல்ல; இணுவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை, சின்னராஜா, நாச்சிமார்கோவிலடி கணேச பிள்ளை (தக்ஷிணாமூர்த்தியின் தாய் மாமன்), சின்னப்பழனிப் பிள்ளை போன்றோருமே.. தன் பூர்விகர்கள் திருப்பயற்றங்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை எனக்குச்சொன்னவர் தக்ஷிணாமூர்த்திஅவர்களே.

தனது பூர்விகர்கள் மன்னார்குடிக்கருகேயுள்ள, திருமக்கோட்டையைச்சேர்ந்தவர்கள் என்று சின்னராஜாவும், கோவிந்தஸ்வாமி பிள்ளையும். என்னிடம் கூறியிருக்கிறார்கள். வளமான் தொழில் நிமித்தமே, விஸ்வலிங்கம் பிள்ளாஈ, காரைத்தீவிiல் குடியேறி வாழ்ந்தார் என்று சின்னப்பழனிபிள்ளையும், தக்ஷிணாமூர்த்தியும் என்னிடம் கூரியிருந்தனர். அதன் பொருட்டே, தக்ஷிணாமூர்த்தி, திருப்பயற்றங்குடிக்கு என்னை அழைத்துக்கொண்டு போனார், இதை வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளையும் எனக்குக் கூறியிருக்கிறார். பரிவாதினியில் நான் முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னதுஎன்ன என்பதைக் கார்த்தியாயினி ஏன் குறிபிடவில்லையோ !

தக்ஷிணாமூர்த்தி தவில் பயின்றது,சின்னப்பழனி பிள்ளை, காமாக்ஷிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடம்; மேற்பயிற்சி பெற்றது,என் அக்காவின் கணவர், நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையிடம். தமிழிசைக்கச்சேரியில், காருக்குரிச்சி அருணாசலம் அவர்களின் நாகஸ்வரத்துக்கு, தக்ஷிணாமூர்த்தியையும் தன்னோடு வாசிக்க ஏற்பாடு செய்தவர், என் சஹோதரன், நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் ஆவர். சேதுராமன் சஹோதர்ர்கள், சின்னமௌலா, போன்றோருக்குத் தக்ஷிணாமூர்த்தி வாசித்ததைக் கூறும் கார்த்தியாயினி, பல்லவி யமன் என்று பெயர் பெற்ற திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை பெயரை மறந்துவிட்டிருக்கிறார். எவ்வாறேனும் இன்னும் எவ்வளவோ எழுதலாம்; தேவையில்லை என்று விடுகிறேன் இந்த ஆவணப்படம் பற்றியும் அதில் நாங்கள் இடம் பெற்றிருப்பதையும் கார்த்தியாயினி குறிப்பிட்டிருப்பதறகு என் நன்றி. தக்ஷிணாமூர்த்தி காலமானது, 13.5.1975 என்று கார்த்தியாயினி கூறிப் பிழை செய்திருக்கிறார். சரியானதேதி 15.5.1975 ஆகும்.

–பி எம். சுந்தரம்

http://globaltamilnews.net/2018/68727/

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.