Jump to content

ஆணென்றும் பெண்ணென்றும்… – சி.புஷ்பராணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆணென்றும் பெண்ணென்றும்… – சி.புஷ்பராணி

       நான், எனது நாட்டில் வாழ்ந்த முறைக்கும் இப்போது ஃபிரான்சில் வாழ்வதற்கும் இருக்கின்ற வித்தியாசங்கள் ஆரம்பத்தில் பல விடயங்களில் ஒன்றிப்போக முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்தியது உண்மை. ஆனால், போகப்போக இங்குள்ளோரிடமுள்ள குணாதிசயங்கள் பல என்னை ஆட்கொண்டு மகிழ்விக்கின்றன…பாசாங்கில்லாத இங்குள்ளோரின் வாழ்க்கை முறை,மனித உணர்வுகளை மதிக்கும் மாண்பு, பாலியல் வேற்றுமையென்று பெரிதும் நோக்காது நட்புரிமை பாராட்டுதல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.


          சமுதாயம், கலாசாரம், பண்பாடு, உறவினர்கள் என்று முகம் கொடுத்துக் கொடுத்தே… என் வாழ்வின் இனிமைகள் அத்தனையையும் ஒன்றுமேயில்லாத சூனிய வெளிக்குத் தள்ளிவிட்டு இழந்தவற்றைத் திரும்பப் பெறமாட்டேனா என்ற ஏக்கத்தின் தழும்புகளை மனதெங்கும் நிறைத்து வைத்திருக்கின்றேனே. இன்றிருக்கும் தெளிவும் துணிவும் அப்போது இல்லாமல் போனது ஏனென்று என்னையே நான் திட்டித் தீர்க்கின்றேன். சின்ன வயதிலிருந்தே ஏதோவொரு விதத்தில் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ பாலுறுப்புகள் பற்றியே சுட்டிக் காட்டிக்காட்டி… நினைவுறுத்தி, அச்சுறுத்தி வளர்க்கப்பட்ட வீணாய்ப்போன நாட்களை மீட்டுப்பார்க்கின்றேன். அதுவும் எம் சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்த்த விதம் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.


           மூடி மூடியே வளர்க்கப்பட்டதால் எம்மையறியாமலே கூச்சம், தயக்கம் எல்லாம் ஒரு சேரத்தாக்கி எமது இயல்பான தன்னம்பிக்கையைத் தேய்ந்து போக வைத்ததை வெறுப்போடு திரும்பிப் பார்க்கின்றேன். நான் சிறுமியாக இருந்தபோது;  உட்காரும்போது, நடக்கும்போது,படுக்கும்போது ஆண்பிள்ளைகள் முன் நடமாடும்போது… என்று ஒவ்வொரு தருணத்திலும் ‘என் அவயங்கள் வெளியே தெரிகின்றனவா?’ என்ற அவதானத்தோடேயே காலம் கழித்ததை இப்போது எண்ணினால் கேவலாயிருக்கின்றது.


           பின்னாளில் என் தன்னம்பிக்கையை மீட்டெடுத்ததுக்குப் பக்கபலமாய் நின்றது என் சகோதரனே. பொதுவெளிக்குப் பெண்கள் வரத்தயங்குகின்ற ஒரு காலகட்டத்தில், என் சகோதரனின் அனுசரணையோடு வீட்டை மீறி நான் அரசியலில் ஈடுபட்டதோடு என் துணிச்சல் பட்டைதீட்டப்பட்டது தனிக்கதை.


             பெண்களை, ஆண்கள் ஊடுருவிப் பார்ப்பதற்கும் இந்த வளர்ப்புமுறையே வித்திட ஆரம்பித்து.இதுவே ஆண் – பெண் என்ற இடைவெளியைப் பெரிதாக்குகின்றது என்ற உண்மையை உணர்வதென்பது எம்மவர்க்குக் கைவரவே வராது. நான் படிக்கும் காலத்தில் ஆண்பிள்ளைகளோடு கலந்து உட்கார வைக்கப் பட்டதே கிடையாது. எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் தனித்தனியாகக் கலந்துகொண்டனர்.


          இப்போது வாழும் நாடான ஃபிரான்ஸில் பள்ளி வாழ்க்கைமுறையை அவதானித்துப் பார்க்கின்றேன். சின்னக் குழந்தைகளிலிருந்தே பள்ளிச்சிறார்கள் பால் பேதமின்றிக் கைகளைக் கோர்த்துக்கொண்டு வரிசையாகப் போவது எவ்வளவு மகிழ்ச்சி தருகின்றது தெரியுமா? சிறு வயதிலிருந்தே பால் பேதமின்றி பிள்ளைகள் வளரவேண்டும். அப்போது தான் ஆண் – பெண் பிள்ளைகளுக்கு அருகமர்ந்து பழகும்போது தேவையற்ற மருட்சியோ சிலிர்ப்போ தோன்ற வாய்ப்பு குறையும்.எதிர்ப்பாலார் நம் சக மனிதர் என்ற உணர்வு தோன்றும்.


         பெண்களைக் கண்டவுடன் ஊடுருவிப்பார்க்கும் அநாகாிகத்தை ஆண்கள் உணர்ந்து கொண்டால் பொது வெளியில் பெண்கள் இயல்பாய் இருக்க முடியும்.  பஸ்ஸிலோ ட்ரெயினிலோ பிரயாணம் செய்யும்போது அலட்சியமாக அமர்ந்திருக்கும் நாம், எம் தமிழர்களைக் கண்டால் மட்டும் எம்மையறியாமலே எமது ஆடைகள் சரியாக இருக்கின்றனவா என்று கவனிக்காமல் இருக்கமுடிவதில்லை. பலபெண்கள் இதுபற்றிக் குறைப்பட்டுப் பேசியதைக் கேட்டிருப்பதால் என் கருத்துடன் சேர்த்துப் பன்மையாக எழுதியுள்ளேன். எல்லா ஆண்களும் அப்படியில்லையென்று தெரிந்தும், எம்முள் ஊறிய பொதுவான எண்ணமே எம்மையும் மீறி எச்சரிக்கை  செய்கின்றது.


           பிள்ளைகள் வெய்யிலுக்கு ஏற்றவாறு ,சிறிய ஆடைகள் அணிந்து ஆண்- பெண் பேதமற்றுக் குதித்துக் குத்துக்கரணமடித்து ஓடியாடி விளையாடும் கிலேசமற்ற சுதந்திரம் எனக்குக் கிடைக்காமல் போனதன் நெருடலை உணருகின்றேன். வளரும் பருவத்திலிருந்தே… ஆண்  பெரியவன், மதிப்புக்குரியவன், முக்கியமாகப் பெறுமதி வாய்ந்தவன் என்ற மமதையுணர்வும் ஊட்டி வளர்க்கப்படும் பெரும்பாலான ஆண்களுக்கு,  தான் உயர்ந்தவன், ஆதிக்க பலம் கொண்டவன் என்ற உணர்வு இரத்தத்தோடு கலந்துவிடுவதால் தன்னை முன்னிலைப் படுத்துவதற்கு அவன் பாவிக்கும் உத்திகள் வன்முறையில் போய் முடிகின்றன. இதற்கு விதிவிலக்கான  புரிதலோடு பெண்களை மதிக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். விகிதாசாரத்தில் இப்படிப்பட்டோர் குறைவென்பதே என் கணிப்பு. ஆண்களைப் பலவழிகளில் கொடுமைப்படுத்தும் பெண்கள் பற்றியும் அறிந்திருக்கின்றேன்.இப்படிப்பட்டோரும் எண்ணிக்கையில் மிகக்குறைவே.


            பெண்கள் அதிவேகமாக முன்னேறிக் கொண்டேயிருக்கின்றார்கள் என்பது உண்மையாக இருந்தபோதிலும், உலகெங்கும் பெண்கள் கொடுமைக்குள்ளாகும் செய்திகள் எம்மை அதிரவைத்துக் கொண்டுதானிருக்கின்றன. ஆண் என்ற தடிப்போடு வளர்ந்த எம் நாட்டு ஆண்கள் பலரால் நம் பெண்கள் படும்பாடுகள் புலம்பெயர்ந்த நாடுகளில் மோசமாக இடம்பெறுகின்றன என்பது பலர் அறியாத சோகம். இப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி என்று வெளியிடுவதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.

பெற்றோர்- உறவினர்கள் மத்தியில் வாழ்ந்த பெண்ணொருத்தி தெரியாத நாட்டுக்கு,அந்நாட்டு மொழியறியாத திகைப்போடு திருமணம் என்ற பேரில் இங்கு வந்து சேர்கின்றாள். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு …தன்னை எதிர்த்துப் பேசப் பெண்ணின் உறவுகள் இங்கில்லை என்ற பலம் அதிகரிக்க, மனைவியைச் சித்திரவதைப்படுத்தும் மனோவியாதி இங்குள்ள ஆண்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது. எனக்குத் தெரிந்த சில குடும்பங்களிலேயே இவ்வாறான சம்பவங்களை நேரில் அறிந்து நொந்துபோயிருக்கின்றேன். இன்னும் வெளியில் வராமல் மறைக்கப்படும் கதைகளும் நிறையவுள்ளன. இதில் சிலவற்றை இங்கு பகிரலாம் என்று நினைக்கின்றேன்.

கேட்பதற்கு எவருமில்லை என்ற துணிவில், வக்கிரம் பிடித்த ஆண்கள் சிலர் செய்யும் அக்கிரம அடக்குமுறைகளை எதிர்க்கத் திராணியற்ற பெண்கள் பலர் அடங்கியே போகின்றார்கள். சட்டங்களும், சமூக சேவை நிறுவனங்களும் பெண்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும் பிரச்சினைகளை வெளியில் விடாத பெண்களின் தயக்கமும் அவர்களின் பயம் கலந்த மௌனமும்  மனச்சிதைவின் பிடிக்குள் தள்ளிவிடுகின்றன. சிலபெண்கள் தங்கள் உயிரையே மாய்த்திருக்கின்றனர்.


            இலண்டனில் வசிக்கும் என் உறவுப் பெண்ணொருவர் ஃபேஸ்புக்கில் புரபைல் படமாகத் தனது சொந்த முகத்தைக் கொண்ட படத்தைப் போட்டதால் கோபம்கொண்ட கணவன், அவரை அடித்ததில் அப்பெண்ணுடைய வலது கை முறிந்துவிட்டது. ‘கீழே விழுந்தேன்’ என்று பொய் சொல்லிச் சிகிச்சை பெற்றிருக்கின்றார் இந்தப்பெண். இப்போது புரபைல் படமாகத் தானும் கணவனும் சேர்ந்திருக்கும் ஒரு படத்தைப் போட்ட பின்தான் அக்கணவன் நிறைந்துபோயிருக்கின்றான். அம்முகநூல் கணக்கு,  கணவனால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றது. இதனால் பெரும் மனுவுளைச்சலுடன் முகநூல் கணக்கை மூட நினைத்த போதிலும் அதற்கும் ஏதாவது சந்தேகப்படுவான் என்ற பயத்தில் அவ்வெண்ணத்தையே கைவிட்டு விட்டதாக என்னிடம் கூறி ஆத்திரப்பட்டார் அப்பெண்.


         இன்னும் கொடுமையான இன்னொரு பெண்ணின் வாழ்வு; இதில் வரும் ஆணுக்கு வயது முப்பது. இவனும் ஊரிலிருந்தே மனைவியைக் கூப்பிட்டிருக்கின்றான். மனைவி நல்ல அழகி. இதனால்தானோ என்னவோ இவனுக்கு மனைவிமீது சந்தேகம். அது அவனுள் வியாதியாக ஊன்றிவிட்டது. மனைவியைப் படிக்கவிடவோ வேலைக்கு அனுப்பவோ அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளை வெளியில் போகவிடவே பயந்தான்.வேலைக்குப் போகும்போது கதவைப்பூட்டித் திறப்பைக் கொண்டுபோய்விடுவான்.


இன்னொன்றை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.இவர்கள் குடியிருந்த வீடு மிகச் சிறியது. கழிப்பிடம் வெளியில் இருந்தது.குழந்தைகள் மலசலம் கழிக்கும் பிளாஸ்ரிக் கழிப்பான் ஒன்றை வாங்கிவந்து மனைவியிடம் கொடுத்திருக்கின்றான் இந்த கொடுமைக்காரன். அவன் வேலை முடிந்து வந்தபின், அவனோடு சேர்ந்து போய்த்தான் வெளியிலுள்ள பொதுக்கழிப்பறையில் கழிப்பானைச் சுத்தம் செய்யவேண்டும். இதனால் அருவருப்புக் கொண்ட பெண், பல நாட்கள் தண்ணீர் அருந்தாது உணவு கொள்ளாது இருந்திருக்கின்றாள்.


       இந்தப்பெண் வீட்டுக்குள்ளேயே பூட்டப்பட்டிருப்பதை எப்படியோ உணர்ந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு அறிவிக்க அவள் மீட்கப்பட்டாள். பெரும் மனச்சிதைவுக்கு ஆளான அந்தப்பெண் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகச் சில மாதங்களின் முன் இந்தக் கொடுமையான செய்தியை அறிந்தேன். இது நடந்தது லண்டனில். இப்படி எவ்வளவோ சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.

       என் கணவனாக இருந்தவனிடமிருந்து வெளியேற நான் ஏழு வருடங்கள் அல்லாட வேண்டியிருந்தது. இதையெல்லாம் வரி பிசகாமல் புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். இயல்பாய் அமைந்த என் கம்பீரமான என் தோற்றமே அப்போது எனக்கு எதிரியாயிருந்தது. என்னை இவன் கொடுமைப்படுத்துவதை போலீசாரே நம்பவில்லை. பல தருணங்களில் பரிதாபம் வரவழைக்கும் முகபாவத்தோடு இவன் சொன்ன பொய்களே உண்மையென்று சிலர் நம்பினார்கள். ஈற்றில் நீதிமன்றமே என்னை நம்பியது. கணவனிடமிருந்து விடுதலை பெற்றபின்னரே நிம்மதியென்பது என்னவென்பதை உணர்ந்தேன். வெளியில் கொட்டிய வக்கிரம், கோபம், வன்முறை எல்லாவற்றுக்கும் என் மீது இருந்த பொறாமையும் இதன்மீது கொண்ட பயமுமே காரணங்களாகும். என் மீது அன்பு காட்டி அரவணைத்து நடந்தால் தன் கௌரவம் போய்விடும் என்ற ரீதியில் முகத்தைச் சிடுசிடுவென வைத்திருப்பதில் இந்த ஆள் காட்டிய சிரத்தை அதிகம் ‘நான் ஆண்’ என்ற மூர்க்கம்தான் இப்படியான ஆண்களை ஈவு இரக்கமில்லாதவர்களாய் ஆக்கிவிடுகின்றது.தங்களைத் தாங்களே பலிக்கடாக்களாக்கி’இதுதான் நியதி’என்று வாழும் பெண்களும் என் பார்வையில் வெறுப்புக்குரியவர்களே.

அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட காலத்தில் அன்புமிக்க பெண்களை உயர்வாக மதிக்கும் பல ஆண்களை நட்பாகக் கொண்டவள் நான். அவர்களிடம் பெண்களைச் சிறுமைப்படுத்தும் கீழான புத்தி இருந்ததை நானறியேன். ஆனாலும் தலைமை தாங்குவதற்கோ முடிவுகளை எடுப்பதற்கோ பெண் உறுப்பினர்களை அனுமதிக்காத தன்மை அவர்களிடமும் இருந்தன. போராட்டக் குணமுள்ள இளம்பெண்ணாயிருந்த நானே, ஒரு குடும்பத்தில் மனைவி என்ற பாத்திரத்தில் இவ்வளவு துன்பத்தை – அடக்குமுறையைச் சந்தித்திருக்கின்றேன் என்பது நான் எதிர்பார்க்காதது.

பேஸ்புக் , வாட்சப் போன்ற பொது ஊடகங்களையும் சில ஆண்கள் நட்புத்தாண்டி பாலுணர்வுக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பாவிப்பதை அவதானிக்க முடிகின்றது. வெறும் நட்புக்கு மட்டுமே இடம் கொடுத்து அன்பின் மகத்துவத்தை உணர்ந்து மகிழ இவர்களால் ஏன் முடியாமலிருக்கின்றது? தங்கள் இனிமையையும் தொலைத்துவிட்ட வெறுமையையும் , அன்பைக் கொடுத்து அன்பை வாங்கத்தெரியாதவர்கள் காலங்கடந்தே உணர்கின்றனர்.


      நான் முன்பு குறிப்பிட்டதுபோல பாலியல் சமத்துவமின்மை இவர்களைப் போன்றோரை முழுதாக ஆக்கிரமித்திருப்பதே காரணம் என்பேன். இந்தப் பாலியல் சமத்துவம் அற்ற மனோபாவத்திலிருந்துதான் பெண்களை உயர்வாக மதிக்க மறுக்கும் ஆணவமும் பல ஆண்களிடம் பரவலாகத் தென்படுகின்றது. அறிவுசார்ந்த பலரிடம்கூட பெண்களை மட்டமாக எண்ணும் அலட்சியம் மிகுந்திருப்பது வருத்தத்துக்குரியது. பாலியல் தேவைக்காக தங்களது சில்லறைத்தனமான பொழுது போக்குக்காகப் பெண்களை மருட்டித் தம் வசப்படுத்தும் ஆண்களது போலித்தனமும் இதை விடக் குறைந்ததல்ல.


      ஆணையும் பெண்ணையும் நிகராகக் கொண்டாடும் ஒரே பார்வை ஆணை வளர்க்கும் பெண்களுக்கும் இருக்கவேண்டும். வீட்டிலிருந்து அம்மாக்கள் மூலமே ஆண்பிள்ளைகளை உயர்வாகவும் பெண்பிள்ளைகளை கொஞ்சம் கீழேயும் வைத்துப்பார்க்கும் ஓரவஞ்சனை ஆரம்பிக்கின்றது.

ப்
         வீட்டில் தொடங்கி ; படிக்கும் பள்ளிக்கூடம், பழகும் நட்பு வட்டங்கள், வேலை பார்க்குமிடம், ஊடகங்கள், போக்குவரத்து என்று எங்கெங்கும் பாலியல் வேற்றுமையுடன் நோக்கும் குறுகிய பார்வை மாறிட வேண்டும். அன்பும் சமத்துவமும் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்கின்றன.

நன்றி : ஆக்காட்டி 15(ஒக்டோபர்-டிசம்பர்)

 

https://thoomai.wordpress.com/2017/12/10/ஆணென்றும்-பெண்ணென்றும்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.