Jump to content

கோவிலின் வகைகள் 


Recommended Posts

கோவிலின் வகைகள் 


”பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்
கரக்கோவில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
  கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
  இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்  
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
  தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே”


என்ற அப்பர் பெருமானின் பாடல் வழியாக சங்க்காலத்து இறுதியில் வாழ்ந்த மன்னன் கோச்செங்கணான் சிவபெருமானுக்காக எழுப்பிய எழுபது கோவில்கள் பற்றியும், திருவாசக காலத்தில் இருந்த ஏழு வகை கோவில்கள் பற்றியும் அறிய முடிகிறது.
·         ஆலக்கோயில்,
·         இளங்கோயில்,
·         கரக்கோயில்,
·         ஞாழற்கோயில்,
·         கொகுடிக் கோயில்,
·         மணிக்கோயில்,
·         பெருங்கோயில்
என்பனவே அவ்வேழு வகை கோயில்களாகும். இவ்வேழு வகை கோவில்கள் இருந்த்து உண்மையெனிலும், அவை எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதில் பல வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இவ்வகை கோயில்கள் சிற்ப சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிரிஷ்டம், கேசரம் எனும் ஏழு வகைக் கோவில்களின் தமிழ்ப் பெயர்கள் என்றும் கூறப்படுகின்றது. எனினும் அவ்வேழு கோவில்களின் பொதுவான தோற்றங்களைக் காண்பதும் அவசியமாகும்.

ஆலக்கோவில்:
ஆலக்கோவில் என்பது ஆனைக் கோயில் என்பதன் மரூஉ என்று அனைத்து அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இக்கோவிலின் வடிவமைப்பை பற்றி மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சில அறிஞர்கள் ஹஸ்திபிரிஷ்டம் கோவில் வகையே ஆலக் கோவில் என்பர், அதாவது தூங்கும் நிலையில் இருக்கும் யானையின் பின் புறத்தைப் போன்ற தோற்றமுடைய விமானம் கொண்டது இவ்வகை கோவிலாகும். அதற்கு உதாரணமாக திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு ஆகிய கோவில்கள் கூறப்படுகின்றது. சிலர் ஆலம் என்பது நீர் சூழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல், ஆதலால் நீர் சூழ்ந்த இடத்தில் உள்ள கோயில்களே ஆலக்கோயில்கள் என்று கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக தஞ்சை வலிவலம்,திருப்புகழூர் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களைக் கூறுவர். சில அறிஞர்கள் ஆல மரத்தைச் சார்ந்த கோவில்களே ஆலக்கோவில்கள் எனக் கூறுவர். இதற்கு உதாரணமாக திருக்கச்சூர் கோவிலையும் குறிப்பிடுவர்.

இளங்கோவில்:
பழைய கோவிலை சீரமைக்கும் பொழுது அருகில் ஒரு சிறு கோவில் கட்டி அதில் இறைவனை எழுந்தருளச் செய்து, பிறகு கோவிலின் சீரமைப்பு பணியினைத் தொடங்குவர். இவ்வாறு கட்டப்படும் சிறு கோவில்களுக்கு இளங்கோவில் என்பது பெயராகும். பெரும்பாலும் இக்கோவில்கள் நான்கு பட்டையுடைய விமானங்களைக் கொண்டிருக்கும். இவ்வகையில் இளங்கோவில் கட்டும் மரபு இன்றும் வழக்கத்தில் உண்டு. இதனை பாலாலயம் செய்தல் எனக் கூறுவர். இது போன்ற இளங்கோயில்கள் திருமீயச்சூர், மற்றும் கீழைக் கடம்பூரிலும் உண்டு எனக் கூறப்படுகின்றது.

கரக்கோயில்:
கரக்கோவிலின் வடிவமைப்பில் இரண்டு வகையான விளக்கங்கள் கூறப்படுகின்றன. வட்டவடிவமான விமானம் கொண்டது கரக்கோவில் என்றும் இரு சக்கரத்துடன் தேர் போன்ற வடிவமைப்பைக் கொண்டது கரக்கோவில் எனவும் கூறப்படுகின்றது.
’தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்’ என அப்பர் பெருமான் பாடியதன் வாயிலாக இது கரக்கோவில் வகை எனக் கொள்ளப்படுகிறது. தற்போது தமிழகத்தில் இது ஒன்றே கரக்கோயில் எனக் கருதப்படுகிறது. மேலும் கேரளத்தில் இது போன்று பலக் கோவில்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஞாழற்கோயில்:
ஞாழல் எனும் மரத்தில் எழுந்தருளிய கடவுளுக்காக எழுப்பப் பெற்ற கோவில் ஞாழற்கோவில் எனக் கூறப்படுகிறது. ஒரு கல்வெட்டின் துணை கொண்டு திருப்பாதிப் புலியூர் கோவில் முக்காலத்தில் ஞாழற் கோவிலாக இருந்தது என அறியப்படுகின்றது. பொதுவாக இவ்வகை கோவில்கள் அடர்ந்த காடுகளில் கட்டப்பட்டதாகவும், இக்கோவில்களே பின் நாளில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட காரணம் எனவும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். மேலும் இவை மர நிழலில் கட்டப்படும் மேடைக் கோவில் என்றும் கூறப்படுகின்றது.

கொகுடிக்கோயில்:
ஸ்ரீபோகம், ஸ்ரீ விசாலம் என சிற்ப சாஸ்திரம் கூறும் கோவில் வகையில் ஒன்றே கொகுடிக் கோவில் எனக் கூறப்படுகிறது. வட்டமான சிகரம் கர்ண கூடத்துடன் இருந்தால் அது ஸ்ரீபோகமாகும், அதே அமைப்பில் இடையில் இலை வரிசை இருந்தால் அது ஸ்ரீவிசாலம் எனவும் கூறப்படுகின்றது. மேலும் முல்லை கொடி நிறைந்த இடத்தில் கட்டப்படும் கோவில்களும், கொகுடி எனும் மரத்தால் கட்டப்படும் கோவில்களும் கொகுடிக் கோவில் வகையைச் சார்ந்தவை எனும் கருத்தும் கூறப்படுகின்றது. வெவ்வேறு விளக்கங்கள் இருந்தாலும், திருக்கருப்பறியலில் உள்ள கோவிலே கொகுடிக் கோவில் என்று அப்பர் மற்றும் சுந்தரர் பாடியுள்ளனர்.

மணிக்கோயில்:
எட்டு அல்லது ஆறு பட்டையுடைய விமானத்தை உடைய கோவிலே மணிக்கோயில் என கூறப்படுகின்றது. மேலும் ‘ஸ்கந்தகாந்தம் எனும் வகையைச் சேர்ந்த கோவிலாக இது இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. 

பெருங்கோயில்:

பெருங்கோயில் மற்றும் மாடக்கோயில் இவை இரண்டும் ஒரே வகையான கோவிலையே குறிக்கிறது என அறிஞர் பெருமக்களால் கூறப்படுகின்றது. இவை குன்றுகளின் மேல் அமைக்கப்பட்டு யானை ஏறமுடியாதபடி வடிவமைக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.  பூமி மட்டத்திலிருந்து உயரமாக கட்டப்படுவதால் இவற்றிற்கு மலைக் கோயில் எனும் பெயரும் உண்டு. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு ஒன்பது நிலைகளைக் கொண்ட மாடி போன்ற அமைப்புடைய கோவிகள் மாடக்கோவில்கள் என சிற்ப சாஸ்திரம் கூறுகின்றது. ஆனால் பிற்காலத்தில் மூன்று, நான்கு நிலைகளையுடைய மாடக் கோவில்களும் கட்டப்பட்டன. எழுபது, செங்கலால் ஆன மாடக்கோவில்களை கோச்செங்கணான் சிவபெருமானுக்காக கட்டினான் என தேவாரப்பாடல்கள் கூறுகின்றது. இக்கோவில்கள் யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்தை உடையதால் தூங்கானை மாடக்கோவில் என ஒரு பெயரும் பெருங்கோவில்களுக்கு உண்டு. நன்னிலம், குடைவாயில், வைகல், தண்டலைச்செரி, பெண்ணாடகம் ஆகிய ஊர்களில் இவ்வகை மாடக்கோவில்கள் உள்ளன. தஞ்சை பெரிய கோவில் , திருவானைக் கோவில் ஆகியனவும் மாடக்கோவில் வகையைச் சார்ந்த்தாகும்.

இவை அனைத்தும் சங்க காலத்தில் இருந்த கோவில்களின் வகைகள் ஆகும். செங்கள் , சுண்ணம் , மரம் ஆகியன கொண்டு கட்டப்படாத கோவில்களிலும் மூன்று வகைகள் உள்ளன. அவை

குடைவரைக் கோவில்,
ஒற்றைக் கல் கோவில்,
கற்றளிகள்

குடைவரைக் கோவில்:
ஒரு மலையின் இடையில் பாறையைக் குடைந்து செய்யப்படும் கோவில் குடைவரைக் கோவிலாகும். இவ்வகை கோவில்கள் திருச்சியிலும், மகேந்திரவாடி, பல்லாவரம் மற்றும் மேலும் சில இடங்களிலும் உள்ளது.

ஒற்றைக்கல் கோவில்:
இது ஒரு பாறையினை மேலிருந்து கீழாக செதுக்கி கொண்டே வந்து கோயிலின் தோற்றத்தை உருவாக்குவது ஆகும். மாமல்லபுரத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் இரதங்கள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

கற்றளிகள்:
தனி தனி கற்களைக் கொண்டு கோவிலைக் கட்டுவது கற்றளிகளாகும் இவற்றிற்கு உதாரணம் தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் போன்றனவாகும்.

http://kovirkalaikal.blogspot.ca/2014/09/2.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.