Sign in to follow this  
நவீனன்

சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு...

Recommended Posts

சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு...

 

 
kurry_leaves

 

வேப்பிலை... கறிவேப்பிலை; அதை ஏன் சாப்பிட வேண்டும் என்று நினைத்து தினமும் சாப்பாட்டில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை உண்ணாமல் தூக்கி எறிபவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது;

000_curry_leaves.jpg

கறிவேப்பிலையின் தாவரவியல் பெயர் முர்ராயா கொயிங்கீ (Murraya Koengii)

கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் எனப் பல ரகங்கள் உள்ளன.

இந்தியச் சமயலறைகளில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமிழகச் சமையலறைகளில் தவிர்க்கவே முடியாத ஒரு பண்டம் கறிவேப்பிலை. நம்மூரில் ஒவ்வொரு வீட்டிலும் காலையில் எழுந்து வேர்க்க, விறுவிறுக்க ஒவ்வொரு பண்டத்தையும் சமைத்து முடித்து கடைசியில் தாளிதம் செய்ய ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இல்லாமல் போய்விட்டதென்றால் இல்லத்தரசிகளுக்கு தங்களது சமையல் எத்தனை சுவையானதாக அமைந்த போதிலும் கறிவேப்பிலை இல்லாது முழுமை பெற்றதான உணர்வைத் தருவதே இல்லை. 

curry-leaf-curry-15-1455523242.jpg

சரி அத்தனை அத்யாவசியமானதாகக் கருதப்படும் கறிவேப்பிலையை நாம் எல்லோருமே வீணாக்காமல் சாப்பிடுகிறோமா என்றால்... அது தான் இல்லை. தங்களது தட்டி விழும் உணவிலிருக்கும் கறிவேப்பிலையை வீணாக்காமல் உண்ணும் பழக்கம் வெகு சிலருக்கு மட்டுமே உண்டு. நம்மில் பலரும் கறிவேப்பிலை என்றால் அது வெறுமே வாசத்துக்காக மட்டுமே உணவில் சேர்க்கப்படுகிறது என்று கருதி அப்படியே தட்டில் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு குப்பையில் கொட்டுகிறோம். இது தவறு!

கறிவேப்பிலையில் குவிந்திருக்கும் சத்துக்கள்...

கறிவேப்பிலை உணவில் சேர்க்கப்படுவது வாசனைக்காக மட்டுமல்ல, அதிலிருக்கும் சத்துக்களைப் பட்டியலிட்டால் அப்புறம் எவரொருவரும் அதைத் தூக்கி எறிய மாட்டார்கள். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன.

அது மட்டுமல்ல  நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புகள், நிக்கோடினிக் அமிலம் என உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் தாராளமாக அள்ளி வழங்கக் கூடியது கறிவேப்பிலை.

இப்படிப்பட்ட கறிவேப்பிலையை சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, அசைவ கிரேவிகள் போன்றவற்றில் தாளிதம் செய்ய மட்டுமல்லாமல், தனியாகக் கறிவேப்பிலையை மட்டுமே பயன்படுத்தி துவையல், தொக்கு, ஊறுகாய், இட்லி, தோசைப்பொடி, சாதத்தில் பிசைந்துண்ண கறிவேப்பிலைப்பொடி என்று தனியாகவும் ருசித்து மகிழலாம். வாசனை பசியைத் தூண்டும் என்பதோடு உடலுக்கும் ஆரோக்யமானது.

அதோடு கறிவேப்பிலையை சமையலில் சேர்த்து தான் உண்ண வேண்டும் என்பதில்லை. பச்சையாகவும் உண்ணலாம். 

கறிவேப்பிலையின் மருத்துவப் பயன்கள்...

  • நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
  • வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். 
  • இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர். இளம்பெண்களுக்கு முடி உதிராமல் ஒரே சீராக வளரவும் கறிவேப்பிலை உதவும்.
  • சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
  • இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவேற்படும்.

இந்தியாவில் தென்னிந்தியர்கள் மட்டுமே கறிவேப்பிலை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். வட இந்திய பதார்த்தங்களில் கறிவேப்பிலை ஒரு சில பண்டங்களில் மட்டுமே சேர்க்கப்படுகிறது. தென்னிந்தியாவில் கறிவேப்பிலை இல்லாத உணவுப் பண்டமே இல்லை எனலாம். தென்னிந்தியப் பகுதிகளுடன் உணவு விஷயத்தில் நெருங்கிய தொடர்புடைய இலங்கையிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு அதிகமே! இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள தமிழர்களுடன் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பின் காரணமாக சிங்களர்களும் தங்களது அனேக பதார்த்தங்களில் கறிவேப்பிலையை அதிகம் பயன்படுத்திகிறார்கள். 

curry-leaves.jpg

 

தமிழ்நாட்டில் அபார்ட்மெண்ட் கலாச்சாரம் பரவும் முன் ஒவ்வொரு தனி வீட்டிலும் புழக்கடையில் நிச்சயம் ஒரு கறிவேப்பிலை மரம் வளர்ப்பதென்பது பாரம்பரிய பழக்கமாக இருந்தது. தற்போது அபார்ட்மெண்டுகளில் வசிப்பவர்கள் கூட மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் என்ற பெயரில் கறிவேப்பிலை மரத்தை தொட்டிகளில் வைத்து வளர்க்க பெரும் ஆர்வத்துடனே இருக்கிறார்கள். வீட்டுக்கொரு கறிவேப்பிலை மரம் வளர்ப்பது உடல் ஆரோக்யத்துக்கு மட்டுமல்ல நமது சுவாசத்துக்கும் நல்லது. 

thotti_kari_leave.jpg

அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழின் வாசகர் கடிதம் பகுதியில் வாசகர் ஒருவர் கறிவேப்பிலை தொடர்பாக தனது வருத்தமொன்றைப் பதிவு செய்திருந்தார்; அது என்னவென்றால், 

கடைக் கறிவேப்பிலை VS  வீட்டுக்கறிவேப்பிலை...

இன்று நகர்ப்புறங்களில் கறிவேப்பிலை மரம் வைத்து வளர்க்க முடியாதவர்கள் தங்களது கறிவேப்பிலைத் தேவைக்கு மளிகைக் கடைகள் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களையே பெரும்பாலும் நம்பி இருக்கிறார்கள். ஆனால், அருகிலுள்ள கிராமத் தோட்டங்களில் இருந்து கறிவேப்பிலை பறித்து மொத்தமாக சாக்குகளில் அடைத்து அதை விற்பனைக்காக கொண்டு வரும் சில்லறை வர்த்தக வியாபாரிகள் அட கறிவேப்பிலை தானே என அதை மிக எளிதாகக் கருதி மின்சார ரயிலின் கழிப்பறையோரத் தரைகளில் அசுத்தமாக ஸ்டாக் செய்து எடுத்துக் கொண்டு வந்து கடைகளுக்கு சப்ளை செய்து விடுகின்றனர். இதை அறியாத இல்லத்தரசிகளோ கறிவேப்பிலை தானே என்று பல நேரங்களில் அதைச் சரியாகச் சுத்தம் செய்யாமலே கூட தாளிதத்துக்குப் பயன்படுத்தி விடுகிறார்கள். அவர்களெல்லாம் ஒரே ஒரு முறை வெவ்வேறு பகுதிகளில் இருந்து கறிவேப்பிலை எவ்விதமாகப் பெரு நகரங்களை வந்தடைகிறது எனும் முறைகளைக் கண்டால் கொதித்துப் போய் இனிமேல் சமையலில் கறிவேப்பிலையே பயன்படுத்துவதில்லை என்ற முடிவுக்கே கூட வந்து விடுவார்கள் எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

அது நிஜம் தான், உணவில் கறிவேப்பிலையைப் பலர் தூக்கி வீசுகிறார்கள் என்பதற்காக அதை நாம் அசுத்தப்படுத்தி கொண்டு வந்து தான் விற்கவேண்டுமென்பதில்லை. அப்படி நாம் வாங்கும் கறிவேப்பிலை குறித்த அச்சம் நமக்கு இருக்குமாயின் வீட்டுத்தோட்டம் எனும் திட்டத்தின் கீழ் மண் தொட்டிகளிலோ அல்லது துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகளிலோ கறிவேப்பிலைச் செடிகளை வாங்கி வந்து வீட்டுத் தேவைக்கு மட்டுமாக வளர்த்துப் பயன்பெறலாம். மொத்தமாக பயன்படுத்தாமலே புறக்கணிப்பதைக் காட்டிலும் இது சிறந்த முறை. இந்த முறை அபார்ட்மெண்ட் வாசிகளுக்கானது.

உங்களுக்கு செடிகொடிகள் வளர்க்கத் தோதாக கையகல நிலம் வீட்டைச் சுற்றி இருப்பதாக இருந்தால் அது வாடகை வீடாக இருந்த போதிலும் நீங்கள் தாராளமாக கறிவேப்பிலை மரம் வளர்க்கலாம். மிக எளிதாக எந்த விதமான ஸ்பெஷல் உரங்களும் இன்றி நீங்கள் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தி மிஞ்சும் காய்கறிக் கழிவுகள், பழத்தோல்கள், தேங்காய் நார்க்கழிவுகள் மற்றும் சாண உரத்தில் போஷாக்காக வளரக்கூடியவை கறிவேப்பிலை மரங்கள். வீட்டிற்கு ஒரு மரம்... ஒரே ஒரு மரம் போதும். மொத்தக் குடும்பத்தின் ஆரோக்யத்துக்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடியவை இவை.

இந்தியாவில் கறிவேப்பிலை சாகுபடி...

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கறிவேப்பிலை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கறிவேப்பிலை சாகுபடி செய்யத் தோதான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பொதுவாகத் தண்ணீர் வசதியுள்ள அனைத்து இடங்களுமே கறிவேப்பிலை சாகுபடி செய்யத் தோதானவை தான் என்றாலும் எல்லாவகை மண்ணிலும் நல்லபடியாக வளரும் கறிவேப்பிலை செம்மண் நிலத்தில் மட்டும் அபிரிமிதமான சாகுபடி பலன்களைத் தரக்கூடியது என தமிழகத் தோட்டக்கலைத்துறையினர் கூறுகின்றனர்

நன்கு பாதுகாத்து வளர்க்கப்பட்ட கறிவேப்பிலை மரம் 25 வருடங்கள் வரை நல்ல மகசூல் கொடுக்கக் கூடியது.

இத்தகைய அருமையான பலன்களைக் கொண்ட கறிவேப்பிலையை சாப்பிடாமல் தூக்கி எறிவது எத்தனை அபத்தமான செயல்?!

எனவே, இனி வீட்டிற்கொரு கறிவேப்பிலை மரம் வளர்ப்பதோடு... சாப்பாட்டில் கறிவேப்பிலை கிடந்தால் நிச்சயமாகத் தூக்கி எறியவே மாட்டோம் என்றும் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

 

http://www.dinamani.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this