Sign in to follow this  
நவீனன்

உணர மறுத்த உண்மைகள்

Recommended Posts

உணர மறுத்த உண்மைகள்

 

 
k2

காலிங் பெல் ஓசை ஒலிக்க, உஷா சென்று கதவைத் திறக்க, முகத்தைச் சுளிக்க வேண்டிய சூழ்நிலை. எதிரே மாமி. இவள் எதற்கு வந்து தொலைத்தாள் இந்த வேளையில்? 
"வாங்க'' என்று சொல்வதற்குள் படாத பாடு பட்டுத் தொலைத்து விட்டாள். விருப்பமே இல்லாமல் சொல்வதென்றால் எப்படி? அந்த மாமி எங்கே வரவேற்பை எல்லாம் எதிர்பார்க்கின்றது. வந்து சோபாவில் அமர்ந்து விட்டது பட்டென்று. முகத்தில் என்னவோ வருடக் கணக்கில் பழகிய பாவம். 
"இதோ வரேன்'' என்று சொல்லி விட்டு 
வெடுக்கென்று சமையற் கட்டுக்குள் சென்று வேண்டுமென்றே நின்று கொண்டிருந்தவள் மனம் நடந்ததை அசை போடத் தொடங்கியது. பத்து நாள் முன்னால் நடந்ததுதான். பழைய காலக் கதை அல்ல.
அப்பொழுதும் இதே காலிங் பெல் ஓசைதான் ஒலித்தது. சென்று திறந்தாள் உஷா. இதே லூஸ் மாமிதான் நின்றிருந்தது. அப்பொழுது இவள் பார்ப்பது முதல் தடவை. யாரென்றே இவளுக்குத் தெரியாது அப்பொழுது. இப்பொழுது மட்டும் என்ன அதன் முழு சரித்திரமா தெரியும். யாருக்கு வேண்டும் அதெல்லாம்.. ..
"நீங்க?'' இவள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கையில் "உள்ளே வரலாமா?'' என கேட்டுக் கொண்டே இவள் பதிலுக்குக் காத்திராமல் உள்ளே வந்து இதே சோபாவில் உட்கார்ந்தது இதே லூஸ் மாமி.


முதல் கேள்விக்கு பதில் வராததால் அதே கேள்வியைத் திரும்பவும் கேட்கும் கட்டாயம் இவளுக்கு. "நீங்க யாருன்னு?''
எழுந்தாள் மாமி. "நாங்க பக்கத்து "சுகுணா கார்டன்' அப்பார்ட்மெண்டுல புதுசா குடித்தனம் வந்திருக்கோம். இருபது நாள்தான் ஆகறது. என் பெயர் பார்வதி. வீட்டுல கொலு வைச்சிருக்கோம். அதான் எங்காத்து கொலு பார்க்க அழைச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.. .. ..'' முகத்தில் ஒரே பரவசத்தோடு சொன்னாள் இதே மாமி. சொன்னதோடு நின்று விடாமல் குங்குமச் சிமிழை இவள் முன்னால் நீட்ட எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள். பழகாமல் எப்படி ஒருவர் வீட்டுக்குப் போவது என்று மனதில் எண்ணம் வந்தாலும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் "வரேன்''.
"உங்காத்துல கொலு வைச்சிருக்கேளா?'' உடனே கேட்டு விட்டது இந்த மாமி. எங்கே விடுகின்றது. உள்ளே அழைத்துச் சென்றாள்.
"சிம்பிளா வைச்சிருந்தாலும், பிரமாதமா இருக்கு. நன்னா வைச்சிருக்கேள். பொம்மைகள் எல்லாம் புதுசா இருக்கே. இந்த வருஷம் வாங்கினதா? பார்க்கும் கட்டியிருக்கேள். அருமையா இருக்கு'' வர்ணனை கிரிக்கெட் விமர்சகர் அளவுக்கு நீண்டு கொண்டே போனது கொடுமை என்றால் அடுத்து இந்த மாமி செய்தது.. . படக்கென்று உட்கார்ந்து விட்டது "கொலு பார்க்க வந்தா பாடத் தெரிஞ்சா பாடிட்டுப் போகணும்னு சொல்லுவா. இல்லேன்னா தப்பு.. ..''
மாமி பாடிய பாட்டை பொறுத்துக் கொண்டு கேட்டு விட்டு அனிச்சைச் செயலாக வெற்றிலை பாக்கு குங்குமம் கொடுத்து விட, ஹாலுக்கு லூஸ் மாமி வந்ததும் கிளம்பி விடுவாள் என்ற நம்பிக்கை பிறக்க, அடுத்த விநாடி அது அழிந்து மடிந்தது. மறுபடியும் சோபாவில் உட்கார்ந்து புன்னகைக்க, இவள் அழுதே விடுவாள் போல இருந்தது. "இன்னும் என்ன வேணும் மாமி. கிளம்பித் தொலைய வேண்டியதுதானே' என்று கேட்க வேண்டும் போல இருந்தது. கேட்டுத் தொலைய முடியவில்லையே. 
"உங்க பெயர் சொல்லவே இல்லையே?'' ஆரம்பித்தது லூசு.


"உஷா'' ஒரே வார்த்தையில் பதில் அளித்தாள். பட்டென்று கிளப்பி விட வேண்டும். கிளம்புமா மாமி. ம்...ம்... தெரியவில்லை. 
"என் பெயர்தான் சொன்னேனே... பார்வதி. இதுக்கு முன்னாடி கண்ணகி நகர்ல குடித்தனம் இருந்தோம். ரெண்டு வருஷம். திடீர்னு தண்ணி ப்ராப்ளம். என்ன பண்ணறது. தண்ணி இல்லாம என்ன செய்யறது. அதான் இங்கே மாத்தி வந்துட்டோம். என் ஹஸ்பண்ட் பேரு சுந்தரேசன். பேங்குல இருக்கார். ரெண்டு பசங்க. பெரியவன் டென்த் படிக்கறான். அடுத்தது பெண். ஏழாவது படிக்கறா. நான் ஹவுஸ் 
ஒய்ப்தான் ...''
"நான் கேட்டேனா?'' கேட்க நினைத்தாள். கேட்க முடியவில்லையே. சொல்லி விட்டுக் கிளம்பி விடுவாள் என்று நினைத்தால்.. .. ..
"உங்க பேமிலி பற்றிச் சொல்லுங்கோ?'' கேள்வி கேட்டுத் தொலைத்து விட்டது லூசு. பதில் சொன்னாள் சுருக்கமாக. மாமி விட்டால்தானே? கிளைக்கேள்விகள் கேட்டு இவர்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி அக்கு வேர் ஆணி வேராகக் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் கிளம்பியது. தெரிந்து கொண்டதில் என்ன சந்தோஷம் வேண்டிக் கிடக்கிறது. கர்மம்டா சாமி. கடிகாரத்தைப் பார்க்க, அரை மணி நேரத்தை முழுசாக சாப்பிட்டுச் சென்று விட்டிருந்தது, இந்த மாமி! கோபத்தில் கத்த வேண்டும் என்று இருந்தது. "சுகுணா கார்டன்' பார்க்க இவளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த லூûஸப் பார்த்ததில் இருந்து அந்த அபார்ட்மெண்ட் என்றாலே இவளுக்கு ஏனோ வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது.

 

"யார் வந்துட்டுப் போறா உஷா. நம்ம வீட்டுக்குத்தான் வந்துட்டுப் போற மாதிரி இருக்கு?'' கேட்டுக் கொண்டே இவள் கணவர் வர, உள்ளக் குமுறலை வெளிக் கொட்ட இவளுக்கு உடனே ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது "ஐயோ எனக்கு தலையே வெடிச்சுடும் போல ஆயிடுச்சு. பரம லூசு எங்கே இருந்த வந்ததோ தெரியலைங்க. சுகுணா கார்டன்ல புதுசா குடித்தனம் வந்திருக்காங்களாம். கொலுவுக்குக் கூப்பிட வந்தாளாம். அழைச்சுட்டு உடனே கிளம்பும்னு பார்த்தா, நம்ம வீட்டு கொலுவுக்கு முன்னாடி உட்கார்ந்து பாட வேற ஆரம்பிச்சிடுச்சு. கர்மம்டா சாமி. கொலு பார்க்க வந்தா பாடணும்னு சாஸ்திரமாம். கர்ண கொடூர குரல். சரி அப்படித்தான் பாடிட்டு உடனே கிளம்பும்னு பார்த்தா... அதோட வீட்டுல யார் யாரெல்லாம் இருக்கா, நம்ம வீட்டுல யார் யார், என்ன பண்ணறாங்கன்னு கேட்டு தொளைச்சு எடுத்துடுத்து... தெரியாத வீட்டுக்கெல்லாம் கொலு பார்க்க ஏன் வரணும். ஏன் கொலுவுக்குக் கூப்பிடணும். இது வரலைன்னு யார் அழுதா. ..'' இவள் அழத் தொடங்கினாள்... வார்த்தைகள் வடிவில்.
"உனக்குப் பிடிக்கலைன்னா வேலை இருக்குன்னு சொல்லிட வேண்டியதுதானே...'' ஷூவைக் கழற்றியவாறே கேட்டார் ரமேஷ்.
"நீங்க வேற. நீங்க என் ஹஸ்பண்டுன்னு தெரிஞ்சிருந்தா உங்களைப் பார்த்ததும் இன்னும் பேச ஆரம்பிச்சிருக்கும். நல்ல வேளை அரை நிமிஷம் கழிச்சு வந்தீங்க. இல்லே தொலைஞ்சோம்...''
"நீ அவங்க வீட்டு கொலுக்கு...''
"ஏங்க என்னைப் பார்த்தா எப்படி தெரியறது. அது கிட்ட போய் இன்னொரு தடவை மாட்டிக்கணுமா. நம்ம வீட்டுக்கு வந்தே இந்த ப்ளேடு போட்டுட்டுப்
போயிருக்கு. இன்னும்
அது வீட்டுக்குப் போனா... பட்டாக்
கத்தியே போடும். ஆளை விடுங்கடா சாமி...'' கையெடுத்துக் கும்பிட்டாள்.

 

அதற்கு அடுத்து ஒரு தடவை தெருவில் இவள் எதிரே அந்த மாமி. கண்டு கொள்ளாமல் போய் விடலாம் என முகத்தைத் திருப்புவதற்குள் "உஷா மாமி...'' முகத்தில் புன்னகையோடு குரல். வேறு வழி... வழிந்து வைத்தாள். "நீங்களா...?''
"கொலுவுக்குக் கூப்பிட்டேனே வரவே இல்லையே. கட்டாயம் வரணும் என்ன? வரலேன்னா சண்டை போடுவேன்...''
"இன்னிக்கே வரேன்...'' சொல்லி விட்டு வீட்டை நோக்கி ஒரே தாவலில் பாய்ந்தாள். எங்கேயாவது தன் பின்னாலேயே வந்து கொலுவுக்கு அழைக்க வீட்டுக்கே வருமோ என திரும்பிப் பார்க்க... நல்ல வேளையாக அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. தப்பித்தோம்டா சாமி. 

 

 

இன்றைக்கு வீட்டுக்கே வந்து விட்டதே. ஐயையோ நான் என்ன செய்வேன். இதனிடம் இருந்து எப்படித் தப்பிப்பேன். இதையெல்லாம் யார் அழைத்துத் தொலைத்தார்கள் அட ஆண்டவா... வெளியே கிளம்புகிறேன் என்று சொல்லி விடலாமா. எங்கே சொல்ல விடும். இதோ சோபாவில் உட்கார்ந்து விட்டதே ஹாயாக. இன்று பார்த்து கணவர், பையன், பெண் எல்லாரும் வேறு இருக்கின்றார்களே. ப்ளேடுகள் போடாமல் போகாதே. இவள் கண்கள் இருண்டு வந்தன. தலை சுற்றத் தொடங்கியது. ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். தொடங்கடியம்மா உன் தாக்குதலை... 
"நான் அவ்வளவு கூப்பிட்டும் எங்காத்து கொலுவுக்கு நீங்க வரவே இல்லை. எனக்கு ரொம்ப வருத்தம் உஷா மாமி. ஏன் அப்படிப் பண்ணிட்டேள்? எவ்வளவு ஆசையா கூப்பிட்டேன். நீங்க வராதது எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுத்து. உங்களுக்காக ஒரு ரவிக்கைத் துண்டு கூட வாங்கி வைச்சிருக்கேன். இன்னொரு நாள் வந்தாவது வாங்கிக்குங்கோ''
"இன்னும் விடவில்லையா மாமி? கொலு முடிந்து தான் நாள் ஆகி விட்டதே? நான் என்ன பண்ணுவேன்...' ஓவென அழ வேண்டும் போல் இருக்கிறதே. பல்லைக் கடித்துக் கொள்ளவும் முடியாதே.
ஏற்கெனவே பல் வலி. 


"சரி நான் வந்த விஷயத்தைச் சொல்லிடறேன். நீங்க உங்க பிள்ளை பி.இ. படிச்சுட்டு வேலை தேடிண்டு இருக்கான்னு சொன்னேளே. என் ஹஸ்பண்டோட ப்ரண்ட் சந்துருன்னு ஒருத்தர் ஒரு கம்பனியில பெரிய போஸ்டுல இருக்கார். இஞ்ஜினியர் போஸ்டுக்கு ஆள் எடுக்கறதா சொன்னாராம். முதல்ல ஏதோ ட்ரெயினியாமே. அதுவாம். அப்புறம் பர்மனன்டா இஞ்ஜினியர் ஆக்குவாளாம். தெரிஞ்சவா இருந்தா சொல்லுன்னு இவர் கிட்டே சொல்லியிருக்கார். சாயங்காலம் எங்க வீட்டுக்கு அந்த சந்துரு வர்றாராம். நான் உடனே அவர் கிட்டயிருந்து போனை வாங்கி சந்துரு சார் கிட்ட சொல்லிட்டேன். பக்கத்து அபார்ட்மெண்டுல என் ப்ரண்ட் உஷான்னு இருக்கா. அவ பையன் இஞ்ஜினியரிங் படிச்சுட்டு வேலை தேடிண்டு இருக்கான். அவனை வந்து பார்க்கச் சொல்றேன். திறமை இருந்தா நிச்சயம் வேலை கொடுங்கோன்னு சொல்லி இருக்கேன். உங்க பையன் இருக்கான் போல இருக்கே... பாஸ்கர் இங்கே வாப்பா. நான் சொன்னதைக் கேட்டுண்டுதான் இருந்தியா. உனக்கு சம்மதமா? உனக்கு ஆட்சேபணை இல்லேன்னா சாயங்காலம் எங்காத்துக்கு வந்து அந்த சந்துரு சாரைப் பாரு. அவர் அப்ளிகேஷன் அனுப்பச் சொன்னா உடனே அனுப்பிடு... என்னப்பா பதிலே பேச மாட்டேங்கறே... உனக்கு இஷ்டம் இல்லையா...'' பேசிக் கொண்டே போனாள் பார்வதி மாமி.


"என்ன சொன்னீங்க ஆண்ட்டி. எனக்கு இஷ்டம் இல்லையா. அவருக்கு ஓகேன்னா நான் நாளைக்கே ஜாயின் பண்ண ரெடி. காத்துண்டு இருக்கேன் ஒரு வேலை கிடைக்காதான்னு. ரொம்ப தாங்க்ஸ் ஆண்ட்டி... அப்ளிகேஷன் போட்டுட்டு காத்துண்டு இருக்கேனே. ஒரு சான்ஸ் வந்தா விடுவேனா. சாயங்காலம் கட்டாயம் அவரை வந்து பார்க்கறேன்'' சொன்னவன் கண்களில் ஆனந்தம் பெருகெடுக்க ஆரம்பித்தது.
உஷாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த நேரத்தில் ரமேஷ் வீட்டிற்குள்ளிருந்து வர, பார்வதி மாமிக்கு பரம சந்தோஷம். "நீங்கதான் உஷாவோட ஹஸ்பண்டா. அன்னிக்கு நான் வந்திருந்த போது நீங்க வேலைக்குப் போயிருந்தேள் போல இருக்கு. நான் தான் பார்வதி. சுகுணா கார்டன்...''
"உஷா சொன்னா. உட்காருங்கோ. செüக்கியமா இருக்கேளா. நீங்க பேசினதை எல்லாம் கேட்டேன். ரொம்ப சந்தோஷம் மாமி. ஒரே தடவை பார்த்துட்டு உடனே ஒரு வேலை வாய்ப்பையும் கொடுக்கறேளே... என்ன சொல்றதுன்னே தெரியலை மாமி... உஷாவை உங்க ப்ரண்டுன்னு சொன்னேளே. ஒரு தடவைதான் பார்த்திருக்கேள்... ஆச்சரியம் மாமி'' 


"பின்ன. பத்து வருஷம் பழகினாதான் ப்ரண்டா... பாஸ்கரும் என் குழந்தை மாதிரி. அவனுக்கு ஒரு வேலை கிடைக்கறதுன்னா எனக்கு சந்தோஷம் இல்லையா...'' உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போனாள் மாமி.
"உஷா, மாமிக்கு ஒரு காபி கொடேன். எனக்கும்...'' ரமேஷ் சொல்ல, உஷா அடுக்களைக்குச் சென்றாள்.
"காப்பி குடிக்கறேளான்னு கேட்டா வேண்டாம்னு சொல்ல மாட்டேன் பரவாயில்லையா'' சிரித்தாள் மாமி.
"ரொம்ப சந்தோஷம் மாமி'' சந்துரு சொல்ல, உஷா நொடியில் காப்பிக் கோப்பைகளோடு வந்தாள். மாமி காப்பியைக் குடித்து முடித்தாள். "நான் அப்ப கிளம்பறேன். கொஞ்சம் அவசர வேலை இருக்கு. சாவகாசமா வந்து பேசறேன். சாயங்காலம் பாஸ்கரை எங்காத்துக்கு வரச் சொல்லுங்கோ. சந்துரு சாரைப் பார்க்கறத்துக்கு...'' வாயிற் படியைத் தொட்டாள் மாமி.


"ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் மாமி...'' உஷாவால் மனதார பார்வதி மாமிக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.
"அட இதுக்கு எதுக்கு மாமி தாங்க்ஸ்... மனுஷாளுக்கு மனுஷா செய்யறதுக்கெல்லாம் தாங்க்ஸô. நான் அன்னிக்கு உங்க வீட்டு கொலு பார்க்க வந்தேன். பாஸ்கர் வேலை தேடிண்டு இருக்கான்னு தெரிய வந்தது. எதேச்சையா ஒரு சந்தர்ப்பமும் வந்திருக்கு. அதான் தெரியப்படுத்த வந்தேன். அவ்வளவுதானே. வேற என்ன பெரிசா செஞ்சுட்டேன். ஆனா ஒண்ணு. எங்காத்துக்கு பாஸ்கர் வேலை விஷயமா வருவான். அது வேற. நீங்க கட்டாயம் வரணும் என்ன. இல்லேன்னா வருத்தப்படுவேன். அப்புறம் பயங்கர சண்டை போடுவேன் என்ன...''
பார்வதி மாமி சொல்லி விட்டுப் போனதும் சோபாவில் அமர்ந்த உஷாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 
"என்ன உஷா யோசிக்கறே...'' கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தார் ரமேஷ்.
"முன்னே பின்ன தெரியாதவங்க வீட்டுக்கு கொலுவுக்கு அழைக்க வருவாங்களான்னு கேட்டேனே. வந்ததனாலதான் இன்னிக்கு பாஸ்கருக்கு ஒரு வேலை கிடைக்கற மாதிரி சூழ்நிலை உருவாகி இருக்கு... மாமி சொன்னது... மாமி செஞ்சது எல்லாம்...''


"அந்தக் காலத்துல பண்டிகைகளை எல்லாம் முன்னோர்கள் ஏற்படுத்தினது மனுஷா ஒருத்தரை ஒருத்தர் பார்த்து உறவை, நட்பை வளர்த்துக்கறதுக்காகத்தான்னு பெரியவங்க சொல்றதைக் கேள்விப்பட்டிருக்கேன். இப்ப நாம அதையெல்லாம் மறந்துட்டோமோ. பண்டிகைகளின் உண்மையான காரணங்களை மறந்துட்டோமோ. பக்கத்து வீட்டுல யார் இருக்காங்கன்னு தெரியாமலேயே ஒரு மாதிரி அடைஞ்ச வாழ்க்கை வாழறோம்னு நினைக்கறேன் உஷா. நீ என்ன நினைக்கறே?'' கேட்டார்.
"பார்வதி மாமியை லூசு லூசுன்னு நிறைய தடவை சொல்லிட்டேனே. இப்ப நினைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க'' வருந்தினாள்.
"நீ நினைச்சது, சொன்னது சரிதான் உஷா. பார்வதி மாமி லூசுதான்''
"என்ன சொல்றீங்க நீங்க?'' திடுக்கிட்டாள் உஷா.


"ஆமாம் உஷா. நம்ம வீடு, நம்ம குழந்தைகள், என் கணவர்னு மனசை இறுக்கமா வைச்சுக்காம, அன்பா எல்லாரோடயும் பழகி உதவியும் செய்யற விதத்துல மனசை லூஸா வைச்சிருக்கா இல்லையா'' கணவர் சொல்ல, மாமிக்கு நன்றி சொல்லியபடி அமர்ந்திருந்தாள் உஷா.

 

http://www.dinamani.com

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this