Jump to content

தெய்வம் தந்த பூவே


Recommended Posts

 
 
 
 
 
 
 
 
 
தெய்வம் தந்த பூவே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1518149718.jpeg
 
 
 

''மீனாட்சி...''
''என்னம்மா?''
''குழந்தை எங்க?''
''பக்கத்து வீட்டு பசங்க கூட விளையாடிட்டு இருக்கான்.''
''நீ இங்க கொஞ்சம் வா... உன்கிட்ட பேசணும்.''
அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று புரிந்து போனது மீனாட்சிக்கு!
''நாலாவது வீட்டு பொண்ணுக்கு காலேஜ்ல பங்ஷனாம்... அவளுக்கு அர்ஜென்டா பிளவுஸ் வேணும்ன்னு சொன்னா... அதுதான் துணி வெட்டிட்டு இருக்கேன்; எதுக்கு கூப்பிடறீங்க... அங்கிருந்தே சொல்லுங்க...''
வராண்டாவில் அமர்ந்திருந்த மாமியார், ''எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்பே... உனக்குன்னு ஒரு துணை வேணாமா...''
''அதுதான் என் மகன் இருக்கானே...''
''உன் மகனுக்கும் சேர்த்துதான் சொல்றேன்; அவனையும், உன்னையும் பாத்துக்க ஒரு துணை வேணாமா...''
''அதுக்குதான் நீங்க இருக்கீங்களே...''
''நான், எத்தனை நாளைக்கு இருப்பேன்... இன்னிக்கோ, நாளைக்கோன்னு போயிடுவேன். அப்புறம், உங்களுக்கு யார் துணை,'' மாமியார் பேச்சை நிறுத்தி, மருமகளை உற்றுப் பார்த்தாள். பின்,
''உனக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ நானும் தப்பு பண்ணியிருக்கேன்; என் மகன் குடிகாரன்னு தெரிஞ்சும் உன்னை, அவனுக்கு கட்டி வெச்சு கொடுமை பண்ணிட்டேன். பாசம் என் கண்ணை மறைச்சிடுச்சு... ஒரு கால் கட்டு போட்டாலாவது அவன் திருந்துவான், குடிக்கிறத நிறுத்துவான்னு நெனைச்சுதான் அப்படி செய்தேன். ஆனா, ஆறே மாசத்தில அவன் அல்ப ஆயுசில் நெஞ்சு வெடிச்சு போவான்னு நினைக்கல,'' அவள் குரல் கரகரத்தது.
''இப்ப எதுக்கு பழசை யெல்லாம் ஞாபகப்படுத்திட்டு இருக்கீங்க?'' அவள் முகம் இறுக, கத்தரிக்கோல் விரல் நுனியை பதம் பார்த்தது.
'இஸ்ஸ்...'என்று கையை உதறினாள்.
''பாத்தும்மா... அவசரத்தில் கையை வெட்டிக்கப் போறே,'' என்றாள், மாமியார்.
வெட்டியது அவசரத்தால் அல்ல; அவள் மகன் இவளுக்குள் ஏற்படுத்திவிட்டு போன காயங்களால் என்பதை எப்படி சொல்வாள்!
அவன் இருந்த வரை, ஒருநாள் கூட நிம்மதியாக வாழ்ந்ததில்லை. எப்போது பார்த்தாலும் சந்தேகக் கேள்விகள், ஊசியாய் துளைக்கும் வார்த்தைகள், சித்திரவதைகள். ஒரு நாளும் இவளை காதலாக பார்த்ததில்லை; ஆசையாக பேசியதில்லை. மது வாசனையில் மிதந்தவனின் மூர்க்கத்துக்கு பலியானவள் தான் அவள். அந்த மூர்க்கத்துக்கு பிறந்தவன் தான் அந்தக் குழந்தை!
அவன் கெட்டவன் என்பதால், குழந்தையை அவள் வெறுக்கவில்லை. 'பிடித்தோ, பிடிக்காமலோ அந்த வாழ்க்கைக்குள் நுழைந்து, ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டோம். அப்படியான சூழலில் அந்தக் குழந்தையை நன்கு வளர்த்து ஆளாக்குவதுதான் ஒரு பெண்ணின் லட்சியமாகவும், கனவாகவும் இருக்க வேண்டும்...' என்று நினைத்தாள்.
மறுமணத்தை அவள் விரும்பவில்லை; ஒரு கல்யாணமே ஓராயிரம் வலிகளை கொடுத்திருக்கும்போது, இன்னொரு கல்யாணமா என நினைத்தாள். ஆனால், மாமியார் தான் மாசத்துக்கு ஒரு முறையாவது கல்யாண பேச்சை ஆரம்பித்து வைப்பாள்.
''என்னம்மா பேச்சையே காணோம்...'' மீனாட்சியின் சிந்தனையை கலைத்தாள், மாமியார்.
''எதுவும் பேசாமல் போய் ஆகற வேலைய பாருங்க... குழந்தை என்ன பண்றான்னு பாத்துட்டு வாங்க... அப்படியே கீழ கடைக்கு போய் ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்க,'' என்றாள், நிமிர்ந்து பார்க்காமல்!
''ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சிடுவியே...'' இடது கையை தரையில் ஊன்றி எழுந்தவள், ஹாலில் மாட்டியிருக்கும் மருமகளின் பெற்றோர் புகைப்படத்தை பார்த்தாள்.
''உங்க பொண்ணுக்கு நீங்களாவது ஒரு நல்ல வழி காட்டக் கூடாதா...'' புலம்பியபடியே எழுந்து வெளியில் சென்றாள்.
காலை நேரம் -
வாசலில் நின்று, மூன்று வயது விஷ்ணுவிற்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள், மீனாட்சி.
எதிர் வீட்டில், ஒரு குழந்தை, தன் அப்பாவுடன் பள்ளிக்கூடம் செல்ல, சீருடையில் வெளியில் வந்தது.
அச்சிறுவனை துாக்கி வண்டியின் முன்புறம் உட்கார வைத்தார், தந்தை. வண்டியை உதைத்து, 'ஸ்டார்ட்' செய்ய, அச்சிறுவனின் அம்மா அவர்களுக்கு, டாட்டா காட்டினாள்.
இதை பார்த்த விஷ்ணு, ''அம்மா... எல்லார் வீட்டுலயும் அப்பா இருக்காங்க; நம்ப அப்பா எப்ப வருவாங்க?'' என்று கேட்டான்.
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தாள். பிஞ்சு குழந்தையின் மனதில் அவன் தந்தையை பற்றிய விஷயத்தை விதைக்கவும் அவள் விரும்பவில்லை. உரிய வயது வந்தால் எல்லாவற்றையும் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.
''அப்பா வெளியூர் போயிருக்கார்; கூடிய சீக்கிரமே வந்துடுவார்.''
''ஏன் வெளியூர் போனாங்க?''
''வேலைக்கு போக...''
''எதுக்கு போகணும்?'' அவன் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான்.
அவளும் முகம் சுளிக்காமல், அதட்டாமல் பதில் சொன்னாள்...
''நாம சாப்பிடறதுக்கு அரிசி, பால், காய்கறியெல்லாம் வாங்கணும். அதுக்கு காசு வேணும்; அதுக்காக ஊருக்கு போயிருக்கார்.''
''சரி, சீக்கிரம் நான் வரச்சொன்னேன்னு சொல்லு!''
''எதுக்கு?''
''நானும் வண்டியில, ஸ்கூல் போகணும்.''
விக்கித்து போனாள்.
இல்லாத அப்பனை எங்கிருந்து வரச்சொல்வாள்!
''சரி, வரச் சொல்றேன்... இந்தா கடைசி வாய்... ஆ... வாங்கிக்கோ...''
கிண்ணத்தை வழித்து, கடைசி வாய் சோற்றை ஊட்டினாள்.
அவள் அப்பா கட்டிய பூர்வீக வீடு இருப்பதால், வருமானத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதிலிருந்து வாடகையாக மாதம், 30 ஆயிரம் ரூபாய் வருகிறது. அதுபோக, துணி தைப்பதால் கொஞ்சம் வருமானம் வருகிறது. இது போதும் குழந்தையை படிக்க வைக்கவும், அவன் எதிர்காலத்துக்கும்!
இரவு -
மோட்டு வளையை பார்த்தபடி படுத்திருந்தாள், மீனாட்சி. அருகில் படுத்திருந்த விஷ்ணு, ''அம்மா...'' என்றான்.
''என்னப்பா?''
''அப்பா எப்ப வருவாங்க?''
கொஞ்ச நாளாய் விடாது அதே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தான், விஷ்ணு.
''ஏண்டா?''
''வண்டியில உட்கார்ந்துட்டு போறதுக்கு.''
''அதான் நான் ஓட்டிட்டு போறேனே... உனக்காகத் தானே வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன்,'' என்றாள்.
''சரி, எல்லாருக்கும் அவங்க வீட்ல அப்பா இருக்காங்க; நமக்கு ஏன் இல்ல... அப்பா வேணும்,'' என, அடம்பிடித்தான்.
''இல்லாத அப்பாவுக்கு எங்க போறது...'' சட்டென்று வார்த்தைகள் வெளியில் வந்து விழுந்தது.
''நீயும், பாட்டியும், 'அப்பா வெளியூரில் இருக்கார்... வேலை செய்றார்'ன்னு சொன்னீங்களே...'' அவன் ஞாபகம் வைத்து கேட்டான்.
''இல்லேன்னு சொல்லல; இங்க இல்லேன்னுதான் சொன்னேன்,'' சமாளித்தாள், மீனாட்சி.
இன்னும் ஸ்கூல் போனால், என்னவெல்லாம் கேள்வி கேட்பானோ என்று பயந்தாள்.
''சீக்கிரம், அப்பாவ வர சொல்லு,'' கண்கள் செருக, வார்த்தைகள் குழற உறங்கிப் போனான்.
ஆனால், அவளுக்குதான் உறக்கம் வரவில்லை. விதி ஏன் தன்னை இப்படி ஒரு இக்கட்டான நிலையில் கொண்டு வந்து தள்ளியது... அதிக வருமானம் இல்லாவிட்டாலும் குடிக்காத, மனைவியை நேசிக்கிறவனா, பெண்மையை மதிக்கிறவனா இருந்தால் போதும் என்றுதான் அவள் எதிர்பார்த்தாள். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட கடவுள் நிறைவேற்றி வைக்கவில்லை. சரி, அமைந்த வாழ்க்கையாவது நிலைத்ததா என்றால், அதுவும் இல்லை. கரடு முரடான, முட்கள் நிறைந்த ஒரு வனாந்திரமாக அமைந்து விட்டது. வந்தவன் இவளை கொடுமை பண்ணுவதற்கென்றே பிறப்பெடுத்தது போல் வந்து வாய்த்தான்; வதைத்தான்; பின், செத்தும் போனான்.
கண்களில் நீர் கசிய, குழந்தையை அணைத்தபடி படுத்திருந்தாள்.
''நைட் அழுதியா...'' என்று கேட்டாள், மாமியார்.
''இல்லயே...''
''நான் எல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்; உனக்காக இல்லாவிட்டாலும் அவனுக்காகவாவது கல்யாணம் பண்ணிக்கோ... ஊர் உலகத்தை பத்தி கவலைப்படாதே... உன் அத்தை நான் சொல்றேன்... அப்புறம் மத்தவங்களை பத்தி எதுக்கு கவலைப்படறே... நான் ரெண்டு, மூணு இடத்துல சொல்லி வச்சிருக்கேன். நல்ல பதிலா செல்றேன்னு சொல்லி இருக்காங்க,'' என்று சொல்லி, அவளின் பதிலுக்கு கூட காத்திராமல், வெளியே எழுந்து சென்றாள், மாமியார்.
அன்று விஷ்ணுவுக்கு நான்காவது பிறந்த நாள் -
மாமியாரை உடன் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினாள், மீனாட்சி. ஆட்டோ நேராக, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு முன் நின்றது.
'இங்கு எதற்கு வந்தாள்...' கேள்விக்குறியுடன் மருமகளைப் பார்த்தாள், மாமியார்.
''யாரும்மா இருக்காங்க இங்க... அப்பாவா?'' என்று கேட்டான், விஷ்ணு.
''இல்ல, அதைவிட மேலானவங்க.''
உள்ளே போனாள்; இவர்களை வரவேற்றார், நிர்வாகி. ஏற்கனவே ஏற்பாடு செய்தபடி, டேபிளில் சாக்லேட், இனிப்பு, உணவு பொட்டலங்கள் இருந்தன. அந்த காப்பகத்தில், 30 குழந்தைகள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் தன் கரங்களால் இனிப்பு பொட்டலங்களை வழங்கினான், விஷ்ணு.
குழந்தைகள் நன்றி சொல்லி பெற்றுக்கொண்டனர்.
ஒரு குழந்தையிடம், ''உன் பேர் என்ன?'' என்று கேட்டாள், மீனாட்சி.
''பவித்ரா,'' என்றது, அந்த குழந்தை.
''என்ன படிக்கிறே?''
''யூ.கே.ஜி!''
''சரி, நீ போ...'' அதன் கன்னத்தை தட்டிக்கொடுத்து அனுப்பினாள்.
விஷ்ணுவிடம் திரும்பியவள், ''இங்க இருக்கிற யாருக்குமே அப்பா - அம்மா கிடையாது தெரியுமா...'' என்றாள்.
''ஏன்?'' புரியாமல் கேட்டான், விஷ்ணு.
''அது பெரிய கதை; உனக்கு வீட்டில் போய் விளக்கமாய் சொல்றேன்,'' என்றவள், மாமியாரிடம் திரும்பினாள்.
''இதோ இங்க இருக்கிற குழந்தைகளுக்கு உறவுகள்ன்னு யாரும் கிடையாது. ஆனால், விஷ்ணுவுக்கு நானும், நீங்களும் இருக்கோம். அப்புறம் என்ன வேணும் அவனுக்கு... அவன் நல்லா வளருவான்; வளர்ப்பேன்... அவனை காரணம் காட்டி இனிமேல் கல்யாண பேச்சை எடுக்காதீங்க... கல்யாணத்தை தாண்டியும் வேற ஒரு உலகம் இருக்கு,'' உறுதியாக ஒலித்தது அவள் குரல்.
மீனாட்சியின் வார்த்தைகளை புரிந்தும், புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தான், விஷ்ணு. புரிந்து அமைதியாக இருந்தாள், மாமியார்.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.