Sign in to follow this  
நவீனன்

பாரசீக வளைகுடாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு

Recommended Posts

பாரசீக வளைகுடாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு
 
 

 

பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு நிலையானது, நிலையற்றது. அதன் உள்ளார்ந்த அரசியல் கட்டுமானங்கள், பாதுகாப்பு நிலைமைகள், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் குறித்த பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள், மேற்கத்தேய நாடுகளின் தலையீடு, ஐ.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி நிலைமை என்பவற்றின் அடிப்படையில், மேலும் சிக்கலான ஒன்றாகவே காணப்படுகின்றது. பிராந்திய நிலைமைகளைத் தாண்டி உலக வல்லரசுகளின் வல்லரசாண்மையைப் பரீட்சிக்கும்  ஒரு தளமாக, குறித்த வளைகுடா அமைவது, அதன் பிராந்திய பாதுகாப்பு நிலைமையைச் சமநிலையில் வைத்திருக்க விடுவதில்லை.

பாரசீக வளைகுடாக் பிராந்தியத்தின் அரசியல், பாதுகாப்பு நிலைமைகள் என்பன தேசிய அரசாங்கங்கள், சமூகங்கள், தனிநபர்களுக்கிடையில் நட்பு - பகைமை ஆகியவற்றின் அடிப்படையிலான, சிக்கலான ஒரு விடயப்பொருளாகும். ஆழமான வரலாறு, தற்போதைய பொருளாதார, சமூக, கலாசார, சமய, தனிப்பட்ட விடயங்களிலிருந்து நட்பு - பகைமை என்பன, குறித்த பிராந்தியத்தின் பாதுகாப்புக் கொள்கைகளின் அமுலாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றமை அவதானிக்கத்தக்கது. உதாரணமாக, ஏனைய அரபு நாடுகளுடனும் ஈரானுடனுமான தொடர்புகள், இத்தகைய சிக்கலான தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறித்த இந்நிலையானது, வெறுமனே அதிகார விநியோகத்தின் அடிப்படையில் எளிதில் பகுப்பாய்வு செய்ய முடியாத ஒன்றாகும்.

ஈரானுடனும் ஏனைய அரபு நாடுகளுடனுமான உறவுகளின் அடிப்படையில் பழங்குடி அடையாளம், கருத்தியல் அணுகுமுறை, அரபு அல்லது அரேபியா என்ற பொது அடையாளத்தையும் தாண்டி  ஷியா, சுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான நேர்மறை அல்லது எதிர்மறைத் தொடர்புகள் என்பவையும், குறித்த பாதுகாப்பு நிரல்களின் கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகும். உண்மையில் பாரசீக வளைகுடா, மற்றைய பிராந்திய அரசாங்கங்கள் போலவே, பரஸ்பர உறவுகளையும் பாதுகாப்பு நிலைமைகளையும் கொண்டிருந்தாலும், ஈரானில் ஈராக், சவூதி அரேபியா மும்முனைப் பாதுகாப்புப் போட்டி, குறித்த பிராந்தியத்தின் ஒருமித்த பாதுகாப்புக்கு எதிர்மறையாக உள்ளது. அத்தகைய சிக்கலான நிலையில் குவைத், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் போன்ற சிறிய நாடுகள், குறித்த பாதுகாப்பு நிலைமைகள், கட்டமைப்புத் தொடர்பில்  மிகவும் குறைவான செல்வாக்கையே கொண்டுள்ளன.

அவற்றின் பாதுகாப்பு, கிட்டத்தட்ட ஈரான், ஈராக், சவூதியின் பாதுகாப்பு நிலைமைகள் சார்ந்தே அமையவேண்டியவையாக உள்ளமையும், அம்மும்முனைப் போட்டிக் களங்களில் ஏற்படும் மாற்றங்களும் பாதுகாப்பு நிலைமைகளும் அச்சூழ்நிலையில் குறித்த பிராந்தியம் முழுவதிலும் அரசியல் நகர்த்தல்களை ஏற்படுத்துகின்ற நிலைமையும் அச்சுறுத்தலானது.

குறித்த விடயங்கள் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில், கடந்த தசாப்த காலத்தில் குறித்த பிராந்திய வல்லரசுகள் தவிர்ந்த ஏனையவை, தமது பாதுகாப்பு உட்கட்டமைப்பை விருத்தி செய்யாமை, குறித்த சமநிலையற்ற தன்மைக்கு ஒரு காரணம் என கூறப்படும் போதிலும், குறித்த பிராந்தியத்தில் ஏதாவதொரு பிராந்திய வல்லரசு (ஈரான், ஈராக், சவூதி அரேபியா) தவிர்ந்த நாடுகள் பாதுகாப்பு உட்கட்டமைப்பை விருத்தி செய்ய நேர்ந்திருந்தால், அது பிராந்திய பாதுகாப்புச் சமநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் என்பதுடன், அதனை எந்தப் பிராந்திய வல்லரசும் ஏற்றிருக்காது. இந்நிலையிலேயே பாதுகாப்புச் சமநிலையைப் பேணுவதற்கு குறித்த ஏனைய நாடுகளுக்கு, மேற்குலகின் உதவி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேவைப்பட்டது எனலாம். இப்பத்தி, இரண்டு விதமான பாதுகாப்பு, போரியல்  நிலைமைகளுக்கு ஏதுவான காரணிகளை முன்வைக்கின்றது.  

முதலாவதாக ஈராக்கையும் ஈரானையும் பொறுத்தவரை, ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி, ஈரானிய மேலாதிக்கத்துக்கு எதிராக அரசியல் ரீதியாகப் போராடிவருகின்றார். இக்கொள்கையின் முகமாகவே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிரான ஈராக்கின் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சி பார்க்கப்படவேண்டியது. ஈராக் முழுவதும் 2014ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அழிக்கப்பட்டபோது, ஈரான் மீட்புக்கு விரைந்து வந்தது; ஆயுத, தந்திரோபாய ஆதரவை வழங்கியது. பின்னர் ஈராக் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக முன்னேறி வந்தபோது, ஈரானுடைய  எதிர்ப்பைச் சம்பாதித்த வேளையிலும் பிரதமர் அபாடி, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவை அழித்தல் தொடர்பிலான ஐ.அமெரிக்கா தலைமையிலான ஈராக் இணைந்த பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்தார். இதன் பொருட்டாக ஈரானின் வெளியுறவுக்கொள்கை காரணமாகவே, ஈராக் மத்திய அரசாங்கத்துக்கும் குர்திஷ்களுக்கும் இடையிலான பதற்றம் உருவாகியது என, சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மறுபுறத்தில், அதிகரித்து வரும் சவூதிக்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலையானது, பிராந்திய பாதுகாப்புக்கு நன்மை பயப்பனவன்று. அத்தகைய நிலையில் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான போர் நடவடிக்கை, முற்றுமுழுதான பிராந்தியத்தையே போர்ச்சூழ்நிலைக்குள் தள்ளிவிடும்.  எனவே, குறுகிய காலத்தில் யுத்தத்தைத் தடுக்கக்கூடிய ஒரு வகையான பாதுகாப்புக் கட்டமைப்பை  எவ்வாறு வடிவமைக்க முடியும் என்பதும், பிராந்தியத்தில் நீண்ட காலத்துக்குப் பிராந்திய ஒருங்கிணைப்புகளை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதுமே, குறித்த பிராந்தியத்தின் பாதுகாப்புப் பிரச்சினை ஆகும்.

உண்மையில், பிராந்தியத்தின் நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளும் பிராந்தியத்தின் பாதுகாப்பு பாரசீக வளைகுடா நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளின் தலையீடு இல்லாமல் நிறைவேற்றுவதற்குச் சாத்தியக்கூறுகள் இல்லை எனலாம். இதன் ஒரு பகுதியாகவே, ஆசியான் பாரசீக வளைகுடாவின் அமைதி தொடர்பில் கடந்தவருடம் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியமை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படுவதற்கு, சிறப்பு நிபுணர் நியமிக்கப்பட்டமை அவதானிக்கப்பட வேண்டியதாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பாரசீக-வளைகுடாவின்-பாதுகாப்புக்-கட்டமைப்பு/91-211455

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this