Jump to content

பூகோளவாதம் புதியதேசியவாதம் நூல் வெளியீடு


Recommended Posts

தமிழ் மூளைகள் தமிழ்த் தேசியம் சார்ந்த சமூக சிந்தனையைக் கைக்கொள்ளாது உத்தியோகம் சார்ந்த திரவியம் தேட புறப்பட்டன…

Thiru-1.jpg?resize=800%2C572

ஆய்வாளர் மு.திருநாவுகரசின் பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூல்வெளியீடு இன்று(24) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன்    மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..

 

தமிழாய்வு மையம் இலங்கை- பிரித்தானியா ஆதரவில்
திரு. மு.திருநாவுக்கரசு அவர்களால் ஆக்கப்பட்டு வெளியிடப்படுகின்ற
பூகோளவாதம் புதியதேசியவாதம்
நூல் வெளியீடு
வீரசிங்கம் மண்டபம் யாழ்ப்பாணம்
24.02.2018 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில்
பிரதம அதிதி உரை
Thiru4.jpg?resize=800%2C552

இன்றைய இந்த நிகழ்வின் தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினர் திரு.பா.செயப்பிரகாசம் அவர்களே, வாழ்த்துரை வழங்குவதற்காக வருகை தந்திருக்கும் அருட்தந்தை து.நு. ஜெயசீலன் அவர்களே, அறிமுக உரைகளை வழங்கவிருக்கும் திரு ளு.ஜேசுநேசன் மற்றும் வு. சிறிதரன் அவர்களே,வெளியீட்டு உரையை வழங்குவதற்காக வருகை தந்திருக்கும் தமிழ்த்துறை விரிவுரையாளர் க.அருந்தாகரன் அவர்களே, நூலாய்வை மேற்கொள்வதற்காக வருகை தந்திருக்கும் கலாநிதி மு.வு.கணேசலிங்கம் அவர்களே, கலாநிதி வு.கிருஷ;ணமோகன் அவர்களே, சட்டத்துறை விரிவுரையாளர் கு.குருபரன் அவர்களே, மற்றும் இங்கே வருகை தந்திருக்கின்ற சிறப்பு அதிதிகளே, சகோதர சகோதரிகளே,துறைசார் ஆர்வலர்களே!

இன்றைய தினம் தமிழாய்வு மையம் இலங்கை – பிரித்தானியா ஆதரவுடன் திரு.மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதி வெளியிடப்படுகின்ற பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற தலைப்புடன் கூடிய வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.அத்துடன் படித்தஅறிஞர்கள் மத்தியில் பேசவாய்ப்புகிடைத்ததையிட்டுமகிழ்வடைகின்றேன்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக என்னிடம் முற்கூட்டியே நேர ஒதுக்கீடு பெற்றுக்கொள்ளப்பட்ட போதும் 553 பக்கங்களைக் கொண்ட இந் நூல் எனது பார்வைக்காக நேற்று முந்தைய தினம்சேர்க்கப்பட்டுஒரு இரவு கால அவகாசம் மட்டுமே தரப்பட்டது. ஆகையால் இந் நூலைப் படிப்பதற்கு நேரம் போதவில்லை.நூலாய்வில் ஈடுபட்டிருக்கும் அறிஞர்கள் நூல் பற்றி நுணக்கமாகக் கூறுவார்கள். என்னைப் பொறுத்த வரையில் பிற அவசர கடமைகளையும் புரிய வேண்டிய சூழ்நிலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துஇந் நூலாசிரியர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்களால் குறிப்பிடப்பட்ட விடயங்களின் சாராம்சத்தை ஓரளவுக்கு புரிந்து கொண்டு பேச விழைகின்றேன்.

Thiru8.jpg?resize=800%2C547
பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற தலைப்பில் வெளியிடப்படுகின்ற இந்த நூல் ஏனைய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளைப் போன்று அமையாது மிகப் பரந்துபட்ட ஒரு பன்முகப் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கின்றது. இப் பிரபஞ்சம் உருவாகிய காலத்திலிருந்து இன்று வரை உலகளாவிய ரீதியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள், கலாசார தன்னிருப்புப் போராட்டங்கள், பூகோள அரசியல் மாற்றங்கள், உலகப் பொருளாதாரத்தின் மாறுபடுநிலை, காலனித்துவ ஆதிக்கம் அதன் மூலமான உலகமயமாக்கல் மற்றும் தற்கால அரசியல் எனப் பல விடயங்களையும் ஆராய்ந்து வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.இவ்வாறான நூல்கள் மென்மேலும் வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். காரணம் உலகமானது சென்ற நூற்றாண்டு காலத்தினுள் சிறுத்துவிட்டது. சுருங்கி விட்டது. 200 வருடங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை யாழ் கல்லூரியை நடத்திய அமெரிக்க மிஷனரிமார் அமெரிக்காவில் பொஸ்டனில் இருந்த தமது தலைமையகத்திற்குப் போய் அவர்களின் சிரேஷ;டர்களின் அறிவுரைகளைப் பெற்று வருவதென்றால் ஆறு மாதங்கள் போகவும் ஆறு மாதங்கள் திரும்பவும் காலம் வேண்டியிருந்தது.இன்று நினைத்த உடனே நேருக்கு நேர் பேசக்கூடியதாக உள்ளது. உலகம் சிறுத்துவிட்டது; சுருங்கி விட்டது.

காலத்திற்குக் காலம் இலங்கையில் வரலாற்று நூல்கள் மாற்றி மாற்றி எழுதப்படுகின்றன. இதிகாச வரலாறுகளும் பழங்குடியினரின் இருப்புக்கள் மற்றும் மத வழிபாடுகள் பற்றிய பல தவறான விடயங்களை இப்பேர்ப்பட்ட வரலாற்று நூல்கள் தாங்கி வருவதை அவதானிக்கலாம். இலங்கையின் பூர்வீகக் குடிகளைத்தமக்குப் பின்னரான வந்தேறுகுடிகளாக காட்சிப்படுத்துகின்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டுவரும் இக் காலகட்டத்தில் இன்றைய இவ்வாறான நூல்கள் பரந்துபட்ட ஆய்வுகளுடன் உசாத்துணை நூல்களின் ஆதாரங்களுடனும் பூர்வீக கல்வெட்டு அடையாளங்களுடனும் வெளிவருவது காலம் கடந்தும் எமது இருப்பை உறுதி செய்கின்ற ஒரு வரலாற்று ஆவணமாகக் கொள்ளப்படலாம்.

Thiru2.jpg?resize=800%2C533
காலனித்துவஆதிக்கத்தின் கீழ் நாகரிக மேலாண்மை கொண்ட பலாத்கார வழிமுறைகளின் வாயிலாக அரங்கேற்றப்பட்ட உலகமயமாக்கல் நிகழ்வுகளும்,சுதேச மக்களை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டு தங்கள் குடியேற்றங்களை நிறுவி அதனுடன் இணைந்து ஐரோப்பிய மொழி, மதம், கலாசாரங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றையுஞ் சேர்த்துத் திணித்த வரலாறுகள் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

மனிதனை பூமியில் முதன் முதலில் தோற்றுவித்த ஆபிரிக்கா கண்டமே உலகெங்கும் மனிதப் பரம்பலை ஏற்றுமதி செய்தது என்று கூறப்பட்டுள்ளது. குமரிக்கண்டமே முதலில் மனிதனைத் தோற்றுவித்தது என்று கூறுவாரும் உளர்.அந்தக் கருத்து வேற்றுமைக்குள் நாம் இங்கு போகவேண்டியதில்லை.

ஆத்ம ஞானிகளின் கண்டம் என்று அழைக்கப்படும் பெரும் மதங்கள் தோன்றிய ஆசியா பின்பு உலகெங்கும் மதப்பரம்பலை ஏற்றுமதி செய்தது. அதே போன்று இந்தியாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்தம் கி.மு 3 ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து கிழக்கு, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்குப் பரவியதாகக்கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பௌத்த மதம் பரவிய காலத்தில் இலங்கையின் வடபகுதியிலும் பௌத்த மத தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு வாழ்ந்த தமிழ் பௌத்தர்களின் சில அடையாளங்களையும் கல்வெட்டுக்களையும் இன்று அடையாளம் கண்டு அதற்கு தவறான ஒரு வியாக்கியானத்தின் மூலம் சிங்கள மக்கள் இப் பகுதிகளில் முன்பு வாழ்ந்துள்ளார்கள் என கூறப்படுகின்றது. இது முற்றிலுந் தவறானது. இவ்வாறான தவறான கருத்துக்களைப் பரப்ப விடுவது இன அழிப்புக்கு ஒப்பானது.

Thiru5.jpg?resize=800%2C552
அடுத்து இந்தியாவில் தோன்றிய இந்து மதம் இந்திய உபகண்டத்திற்குள்ளேயே அடங்கிவிட்டது. விதி விலக்காக சோழப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தென்கிழக்காசிய நாடுகளை நோக்கி கலாசார செல்வாக்கு வடிவில் பரவிய போதும் சோழப் பேரரசின் வீழ்ச்சியுடன் அப்போதைய இந்துமதச் செல்வாக்கு குறைந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

கிறிஸ்தவம் 16 ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து முழு உலகிற்கும் பரவியது மட்டுமன்றி தற்போது 126 நாடுகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக வாழுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அதே போன்று கி.பி 6 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவில் தோன்றிய இஸ்லாம் மதம் இன்று 46 நாடுகளில் பெரும்பான்மையினர் மதமாக உள்ளது. சனத்தொகை ரீதியில் 2 ஆவது பெரிய சனத்தொகையாக இந்தியாவில் முஸ்லிம்கள் காணப்படுவதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகோளவாதம் என்பது வெறுமனே புவிப்பரப்புப் பற்றிய விடயம் மட்டுமல்ல. மாறாகப் புவியின் இருப்போடு தொடர்புபட்ட சூரியகுடும்ப அங்கங்களுடனான தொடர்பும் மற்றும் நட்சத்திரங்கள் பிரபஞ்சம் பற்றிய சிந்தனை அறிவுகளுடன் கூடியதே பூகோளவாதம் என்பதை படைப்பாளர் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியிருப்பது இவரின் தனிச் சிறப்பாகும்.ர்ழடளைவiஉ யிpசழயஉh என்பார்கள். முற்றிலும் அவ்வாறான முழுமையான சிந்தனையுடன் அணுவையும் அகிலத்தையுஞ் சேர்த்துப் பார்க்கின்ற ஒரு கண்ணோட்டத்தை இந் நூலில் காண்கின்றோம்.

Thiru6.jpg?resize=800%2C533
அவர் கூறாத ஒரு விடயத்தை இங்கு கூறலாம் என்று எண்ணுகின்றேன். சுமார் 45 வருடங்களுக்கு முன் என்று எண்ணுகின்றேன். இந்தியாவில் இருந்து ஒரு பிரசித்தி பெற்ற சோதிடர் இலங்கை வந்தார். அப்பொழுது பிரபல்யமாய் இருந்த நாஸ்திகவாதி ஏப்ரகாம் கோவூர் அவர்கள் சோதிடரிடம் ஒரு கேள்வி கேட்டார். இவ்வளவு தூரத்தில் இருக்கும் சூரியனும் சந்திரனும் பிற கிரகங்களும் மக்களின் வாழ்க்கையை மாற்றுகின்றது என்று சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா என்று கேட்டார். கிருஷ;ணமூர்த்தி என்ற அந்த சோதிடர் பதற்றப்படாமல் ‘கோள்கள் மனிதன் வாழ்வை நிர்ணயிப்பதில்லை. கர்ம வினைப்படி ஏற்கனவே விதிக்கப்பட்ட வாழ்க்கையின் அம்சங்களை கோள்களின் இருப்பிடங்களை வைத்துக் கணித்துச் சொல்கின்றோம். என் முன் இந்தக் குடை இருக்கின்றது. தூரத்து வெளிச்சத்தில் அது தெரியாது. இங்கிருக்கும் விளக்குகள் அனைத்தையும் போட்டுவிட்டால் இங்கிருக்கும் குடை எல்லோர்க்கும் புலப்படும் என்றார். முழுமையான அறிவு பற்றிப் பேசும் போது நாம் இந்தக் கருத்தையும் உள்வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன்.

மேலும் இன்றைய நூலில் புவிப்பரப்பில் காணப்படுகின்ற இயற்கை சார்ந்த அம்சங்களையும் மூலவளங்கள், தாவரங்கள், விலங்குயிரினங்களையும் பேணிப்பாதுகாப்பது இன்னோர் அம்சமாக எடுத்துக்காட்டப்பட்டதுடன் இயற்கைக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் மனிதனுக்குமிடையே ஒரு சமநிலையை பேணுவதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

Thiru3.jpg?resize=800%2C533

தாய்மொழி கற்கை பற்றி குறிப்பிடும் போது தாய்மொழியில் கற்றுக்கொண்ட ஒருவர் தன் தாய்மொழி மூலம் கல்வியில் பெற்ற வளர்ச்சியினூடாக தன் சிந்தனையை ஸ்தாபித்த பின்னணியில் பிறமொழித் துணையோடு மேலும் தன்னையும் தன் அறிவையும் வளப்படுத்த இயலும் என்ற இவரின் வாதம் வரவேற்கத்தக்க ஒரு கருத்தாகும். இதே கருத்தையே நான் இன்றைய தினம் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ந-டநளளழளெ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் வலியுறுத்தியிருந்தேன். அதாவது தாய் மொழி கற்கையானது தனது பாட விடயப்பரப்புக்களை சொந்த மொழியில் சிறப்பாகப் புரிந்து கொண்டு கல்வி கற்கின்ற போது பல வித பலன்கள் கிட்டுகின்ற போதும் சர்வதேச மொழியாக அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழிக் கற்கை நெறியையும் சம காலத்தில் மேலோங்கச் செய்வதன் மூலமே உயர் நிலைகளை எட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்ற ஒரு குறிப்பை அங்கு முன்வைத்திருந்தேன். அதே குறிப்பையே இங்கும் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது எமது கருத்தொற்றுமையை வலியுறுத்துவதாக அமைகின்றது.

இவ்வாறு பூமி பிரபஞ்சம் பூகோளவாதம் என்ற தலைப்புக்களின் கீழ் ஆராய்ந்த ஆசிரியர் இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றியும் மிகத் தெளிவாக ஆராய்ந்து குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். சமஷ்டி என்ற வடமொழிச் சொற் பிரயோகத்தால் விளைந்த வரலாற்று நகர்வுகளும் அதனையொட்டி தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களையும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

Thiru9.jpg?resize=800%2C533

தம்மதீபக் கோட்பாட்டின் படி இலங்கைத்தீவு பௌத்த தர்மத்திற்கென புத்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது ஆசி வழங்கப்பட்ட பூமி என்ற கருத்துருவம் மேலோங்க பௌத்த மதம் – சிங்கள மொழி – அரசு என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து சிங்கள மேலாதிக்கத்தை உருவாக்கியமை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டிய சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்களை விட உயர்ந்தவர்கள் எனவும் கரையோரச் சிங்களவர்கள் இரண்டாம் பட்சமானவர்கள் என்ற நிலைப்பாட்டில் கண்டியர்கள் இருந்த காலத்திலேயே ளு.று.சு.னு பண்டாரநாயக்காவினால் சமஷ;டிக் கோரிக்கை முதன் முதலில் 1926ல் மொழியப்பட்டது. சிங்களத் தலைவர்களிடமிருந்து இவ்வாறு முன்மொழியப்பட்ட போது அவை பற்றி அக் காலத் தமிழ்த் தலைவர்கள் கண்டு கொள்ளாதது வருத்தத்திற்குரியது. அக் காலத்திலேயே தமிழ் மக்களின் இருப்புக்கான நிரந்தரத்தீர்வு ஒன்று கிட்டுவதற்கு வாய்ப்பான காலம் கனிந்த போதும் அதனைக் கருத்திற் கொள்ளாது பிரித்தானிய சாம்ராஜ்யத்திலும் மற்றும் கடல் கடந்த நாடுகளிலும் கல்வி சார் தொழில் வாய்ப்புக்களைத் தமிழ் மக்கள் பெறுவதற்கான சிந்தனைகளுக்கே தமிழ்த் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர்.

Thiru10.jpg?resize=800%2C545
அதே போன்று தமிழ் மக்களின் எழுச்சி பெற்ற கல்வி கற்ற நடுத்தர வர்க்கம் இந்த மண்ணிலிருந்து வெளியேற வளமான மூளைகளைத் தமிழ் மண் இழக்க நேர்ந்தது. இதனால் தமிழ் மூளைகள் தமிழ்த் தேசியம் சார்ந்த சமூக சிந்தனையைக் கைக்கொள்ளாது உத்தியோகம் சார்ந்த திரவியம் தேடும் வழியை நோக்கி திசை திரும்பியதன் விளைவே இன்று எமது தேசியச் சிந்தனைகளில் காணப்படக்கூடிய பின்னடைவுகளாக இருக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை உண்டு என்ற ஒரு தீர்மானத்தை 1944 ஆம் ஆண்டில் முதன் முறையாக டாக்டர் ளு.யு.விக்கிரமசிங்க நிறைவேற்றிய போதும்இந்தியாவுடன் இணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை தேசிய காங்கிரஸ் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டதன் வாயிலாக அது கைகூடாமல் போனது. ஸ்ரீ வல்லபாய் பட்டேல் அவர்கள் இந்தியாவுடன் ஒன்று சேர்க்கப்படவேண்டிய நாடாக இலங்கையை அப்போது அடையாளங்காட்டி இருந்தார். இந்தியாவுக்கு சாதகமாகப் பேசிவந்த சிங்களத் தலைவர்கள் சுதந்திரம் கிடைத்ததும் மலையக மக்கள் பத்து இலட்சம் பேரின் குடியுரிமைகளைப் பறித்தனர். இந்தியாவைப் புறக்கணித்து பிரித்தானியாவுடன் கூடிய பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

இதன் விளைவாகவே இந்தியாவிற்கு எதிரான இராணுவத் தளங்களை பிரித்தானியர் இலங்கையில் அமைக்க முடிந்ததுடன் தமிழருக்கெதிரான அரசியலமைப்புச் சட்டத்தினை சிங்களத் தலைவர்கள் பெற்றுக் கொள்வதற்கும் வழி வகுத்தது. அப்போது கூடத் தமிழ் தலைவர்கள் புவி சார் கண்ணோட்டத்தை அல்லது சிங்கள தலைவர்களுக்கும் மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் இடையேயான அரசியல் உள்நோக்கங்களைச் சந்தேகக்கண் கொண்டு நோக்காமை அவர்களின் கற்பனை நிறைந்த அரசியல் சிந்தனைகளையும் சிங்களத் தலைவர்களின் மதிநுட்பம் மிக்க அரசியல் நகர்வுகளையும் எடுத்துக் காட்டுவதற்கான சிறந்த உதாரணங்களாக இந் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகச் சிறந்த அறிவாளியாகிய பேராசிரியர் சி.சுந்தரலிங்கத்திடம் ‘நீயே சிறந்த மதியூகி’ என்றதும் அவர் தமிழர் தவிர்ந்த சிங்களவர் மட்டும் அமைச்சரவையை நியமிக்கும் வழிமுறைகளை டி.எஸ்சேனாநாயக்காவிற்கு எடுத்துக் கூறியிருந்தமை இத் தருணத்தில் நினைவிற்கு வருகின்றது.

Thiru7.jpg?resize=800%2C533

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில் திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் விலகி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து 1949ம் ஆண்டில் சமஸ்டிக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கிய போதும் கண்டிச் சிங்களவர்களும் கரையோரச் சிங்களவர்களும் கைகோர்த்து தமிழ் மக்களை ஒடுக்கத்தொடங்கிய பின்புதான் தமிழ்த் தலைவர்களுக்கு சமஸ்டி முறை பற்றிய உண்மையான ஞானோதயம் தோன்றத் தொடங்கியது என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஆசிரியர். ளு.று.சு.னு பண்டாரநாயக்க என்ற கரையோரச் சிங்களவர் சிறீமாவோ பண்டாரநாயக்க என்ற கண்டியப் பெண்ணை மணம் முடித்த போதே கண்டிய – கரையோர சிங்கள உடன்பாடு தொடங்கிவிட்டது எனலாம். அவ்வாறான மேல்மட்டப் பிணைப்பு கண்டிய சிங்களவரை சமஷ்டிக் கோரிக்கையில் இருந்து கீழிறக்க வைத்தது. இருசாராரும் சேர்ந்து எம்மை ஒதுக்கத் தலைப்பட்டார்கள்.

வெள்ளைக்காரர்கள் பிரித்து ஆள தமிழர்கள் பயன்பட்டார்கள் என்றும் தமிழர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டன என்றும் கூறி எம்மீது அநீதிகள் கட்டவிழ்க்கப்பட்டன. இவ்வாறு காலத்துக்கு காலம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் 1956ல் சிங்கள மொழி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டமை, அதனைத் தொடர்ந்து தனி ஈழம் பற்றிய சிந்தனை உருவாகிய விதம்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள், இனவாரித் தரப்படுத்தல் என்ற பல விடயங்களையும் ஆராயத் தவறாத ஆசிரியர் 1983 கறுப்பு ஜுலை, இனித் தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை செல்வநாயகத்தின் கூற்று,முள்ளி வாய்க்கால் தந்த பெரு வலிதமிழ் இனத்துக்கு ஏற்பட்டிருக்கும் மன வலிஆகிய அனைத்தையும் தொட்டுச் சென்று இறுதியாக இராஜபக்சக்களின் வழியில் அமைதியாகச் செல்லும் சிறிசேன என்ற தலைப்புடன் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கின்றார் ஆசிரியர். இந் நூல்பற்றி விலாவாரியாக ஆராய்வதற்கோ அல்லது குறிப்புகளை மேற்கொள்வதற்கோ கால அவகாசம் அற்ற நிலையில் எனது குறிப்புக்களை இந்த அளவில் நிறைவு செய்கின்றேன். ஆசிரியர் திரு.திருநாவுக்கரசரின் முழுமையான உலக நோக்கும் தமிழ் மக்கள் மீது அவருக்கிருக்கும் கரிசனையும் அவர் நூலில் நாம் வாசித்தவற்றில் இருந்து தெற்றெனப் புலப்படுகின்றன. இவ்வாறான நூல்கள் இன்றைய காலத்தின் கட்டாயம் என்று கூறி ஆசிரியரைப் பாராட்டி எனது உரையை இத்துடன் நிறைவு செய்து கொள்கின்றேன்;.
நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/2018/68272/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமானது எதுவோ அதுவே சரியானது

 

நிலாந்தன்

ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் 'பூகோளவாதம் புதிய  தேசியவாதம்' என்ற புதிய நூலுக்கு நிலாந்தன் அவர்கள் எழுதியுள்ள பதிப்புரை

***

இந்நூலுக்குரிய முகப்பு அட்டையை வடிமைப்பதற்கு ஈழத் தமிழர்களின் ஆதி வேர்களைக் குறிக்கும் ஒரு தொல்லியல் சான்றின் ஒளிப்படத்தைப் பயன்படுத்துவதென்று முடிவெடுத்தோம்.

ஆனைக்கோட்டை அகழ்வாராட்சியில் கண்டெடுக்கப்பட்ட ஆனைக்கோட்டை முத்திரையின் ஒளிப்படத்தை பிரசுரிப்பது என்று தீர்மானித்தோம். இந்நோக்கத்தோடு ஆனைக்கோட்டை முத்திரையை தேடிச்சென்றபோது ஒரு விடயம் வெளிவந்தது. அம் முத்திரை எங்கே இருக்கிறது என்பது ஒரு மர்மமாகவே பேணப்படுகிறது. இலங்கைத்தீவின் தொல்லியல் துறை மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகிறது. எனவே தொல்லியல் சான்றுகளும் மத்திய அரசாங்கத்தின் கட்டுபாட்டுக்குள்தான் வரும். வல்லிபுரச்செப்பேட்டை இலங்கைத் தொல்லியல் துறை கையாண்ட விதம் காரணமாக ஆனைக்கோட்டை முத்திரையை இரகசியமாகப் பேணவேண்டிய ஒரு தேவை ஏற்பட்டதென்று தெரியவருகின்றது. அம்முத்திரையோடு கண்டெடுக்கப்பட்ட ஆனைக்கோட்டை மனிதனின் எலும்புக்கூட்டை போர்க்காலத்தில் பாதுகாக்க முடியாது போன ஒரு பின்னணியில் அம்முத்திரையைப் பாதுகாப்பது தொடர்பில் அதிகம் எச்சரிக்கையுணர்வோடு சிந்தித்திருக்கலாம்.

இது தொடர்பில் ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். அண்மையில் யாழ் நகரப்பகுதியில் அமைந்திருக்கும் விகாரையின் அதிபதி இறந்தபோது, அவரது உடலை நகரத்தின் முற்றவெளியில் தகனம் செய்வதற்கு படைத்தரப்பு முயற்சி செய்தது. யாழ் முற்றவெளியானது யாழ் கோட்டைக்கு அருகே அமைந்திருப்பதால் அது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது. எனவே அங்கு யாருடைய உடலை தகனம் செய்வது, செய்யாது விடுவது என்று முடிவெடுக்கும் அதிகாரம் யாழ் நகரசபைக்கு இருக்கவில்லை. அதை மத்திய அரசாங்கமே தீர்மானித்தது. அதற்கெதிராக தமிழ்த்தரப்பு வழக்குத் தொடுத்தது. எனினும் வழக்கின் தீர்ப்பு அரசாங்கத்துக்கு சார்பாக அமைந்தது. பிக்குவின் உடல் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வாறானதோர் அனுபவத்தின் பின்னணியில் தமது தொல்லியல் சான்றுகளை பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் இப்பொழுதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. உலக சமுகம் இலங்கைத்தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிக்கப்போவதாகக் கூறிக்கொள்கிறது. எனினும்   சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் தமது ஆதிவேர்களை குறிக்கும் தொல்லியல் சான்றுகளை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு பயப்படும் ஒரு நிலையே தொடர்கிறது. அதாவது ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட ஓர் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று பொருள்.

அதே சமயம் மு. திருநாவுக்கரசு இந்நூலில் வரும் ஆசிரியர் குறிப்பில் பின்வருமாறு கூறுகிறார்.... 'இன-மத-மொழி-குழுவாத ஒடுக்குமுறையாளர்கள், ஆட்சியாளர்கள், அத்தகைய அதிகார வர்க்கத்தவர்கள், வெறும் நம்பிக்கைவாதிகள், மாறாவாத கோட்பாட்டாளர்கள், விசுவாசிகள், முற்கற்பிதம் கொண்டோர், வெறுப்புணர்வு கொண்டோர், காழ்ப்புணர்வு கொண்டோர் என பலதரப்பட்டவர்களும் தத்தம் நலன்களுக்குகேற்ப நீட்டும் கூரிய வாள்களுக்கு  மத்தியிற்தான் அரசியல், வரலாறு, பண்பாடு சார்ந்த சமூக விஞ்ஞான அறிவியல் பயணிக்க வேண்டியிருக்கிறது... எப்படியோ மேற்கூறப்பட்ட கூரிய வாள்களுக்கு மத்தியில் நெருப்பாற்றுக்கு ஊடாக அறிவியல் பயணிக்க வேண்டிய யதார்த்தம் உள்ளது. அத்தகைய யதார்த்தத்தை இந்நூல் கருத்திலெடுத்தே நகர வேண்டியுள்ளது. ஆதலால் யதார்த்தத்திற்கு முகங்கொடுத்து, ஆங்காங்கே வளைகோட்டில் பயணிக்க நேர்ந்ததாலும், சுயதணிக்கைக்கு உள்ளாக நேர்ந்ததாலும் சொல்லத் தவறிய விடயங்கள் உண்டு. அப்படி சொல்லத் தவறிய விடயங்கள் உண்டென்றாலும் சொல்லிய எவையும் தவறாகச் சொல்லப்படவில்லை.' 

இப்படியாக, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை, அகத்தணிக்கை ஆகிய இருதரப்பு நெருக்கடிகளுக்கும் மத்தியில் தான் ஈழத்தமிழர்களின் அறிவாராட்சித்துறை தன்னைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டாண்டுகள் ஆன பின்னரும் ஈழத்தமிழர்கள் தமது தோல்விகளைக் குறித்து போதியளவு பிரேத பரிசோதனை செய்யமுடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். செல்வச் செழிப்புமிக்க ஒரு டயாஸ்போராவை கொண்டிருந்த போதிலும் தமிழகம் என்ற பின்தளத்தைக் கொண்டிருந்த போதிலும். ஈழத்தமிழர்களால் இன்றளவும் இறந்த காலத்தை வெட்டித்திறந்து, அதிலிருந்து போதியளவு கற்றுக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறானதோர் அகப்புறச்சூழலுக்குள்தான் மு.திருநாவுக்கரசுவின் இந்நூல் வெளிவருகிறது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான அறிவியல் பங்களிப்பு என்று பார்த்தால் மு.தி. பின்வரும் காரணங்களுக்காக முதன்மையானவர் தனித்துவமானவர்.

1.1980 இல் இருந்து தொடர்ச்சியறாமல் எழுதி வரும் ஒருவர் அவர். தனது எழுத்துக்களுக்காக இரண்டு தடவைகளுக்கு மேல் அஞ்ஞாதவாசம் இருந்திருக்கிறார். அக்காலகட்டங்களிலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை.

2. சுமார் 3 தசாப்தங்களுக்கு மேலாக, ஒப்பிட்டளவில் அதிக நூல்களையும், கட்டுரைகளையும், சிறு பிரசுரங்களையும், உட்சுற்று வாசிப்புக்கான  கொள்கை ஆய்வுக் கட்டுரைகளையும், மூலோபாய ஆய்வுக்கட்டுரைகளையும், தந்திரோபாய ஆய்வுக்கட்டுரைகளையும் அதிகம் எழுதியவர் அவரே. 

3. அவர், எந்தவோர் ஆயுத போராட்ட இயக்கத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை. ஆயுதம் ஏந்திய நடவடிக்கைகள் எதிலும் சம்பந்தப்பட்டதில்லை. ஆனால் தனது மக்களின் விடுதலைக்காக தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

4. பேராசிரியர் அனஸ் கூறுவது போல அவரிடம் எப்பொழுதும் முழு உலகுதழுவிய ஒரு பார்வை இருக்கும். பூகோளவாதத்தையும் உலக மையமாதலையும் தேசியவாதத்தையும் புவிசார் அரசியலையும் அவர் அந்த உலகளாவிய நோக்குநிலையிலிருந்தே பார்ப்பார்.

5. அவருடைய எழுத்திலிருந்து அவருடைய வாழ்கையை பிரிக்கமுடியாது. அவருடைய அறிவிலிருந்து அவருடைய அரசியலைப் பிரிக்கமுடியாது. அவருடைய சொல் வேறு செயல் வேறு அல்ல. அதனால்தான் அவர் அதிகம் இழக்கவும் துறக்கவும் வேண்டி வந்தது. இரண்டு தடவைகளுக்கு மேல் அஞ்ஞாதவாசம் புகவேண்டி வந்தது. அவருக்கென்று ஓர் நிரந்தர தொழிலில்லை. வசிப்பிடமில்லை. அறிவாராய்ச்சி என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு தொழிலல்ல. ஒரு வாழ்க்கை முறை. அதன் பொருட்டாக ஈழத்தமிழ்ப் பரப்பில் அதிகம் இழந்த, துறந்த ஒரே புலமைச்செயற்பாட்டாளர் அவர்தான். அவருடைய தாயார் மரணப்படுக்கையிலிருந்தபோதும், இறந்தபோதும் இவரால் அவரைத் தரிசிக்க முடியவில்லை.

6. ஈழத்தமிழர்களின் புவிசார் அமைவிடம் தொடர்பாகவும் அவர்களுக்குள்ள புவிசார் கேந்திர முக்கியத்துவம் தொடர்பாகவும் அதிகம்  ஆராய்ந்திருப்பவர் அவர்தான்.

இது அவருடைய இரண்டாவது அஞ்ஞாதவாச காலத்தில் வெளிவரும்  இரண்டாவது நூலாகும். இது பொது வாசிப்பிற்குரியது எனினும் வரலாறு, பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், தத்துவம், புவிசார் அரசியல் போன்ற பல துறைசார் ஒழுக்கங்களின் கூட்டு ஒழுக்கமாக இந்நூல் காணப்படுகின்றது. அவரிடமுள்ள பிரபஞ்ஞப் பார்வையே அவருடை கூட்டு ஒழுக்கத்திற்கும், முழுமையாக்கப்பட்ட (Holistic) பார்வைக்கும் அடித்தளமாகும்.

வரலாறுதான் அவருடைய அடிப்படை ஒழுக்கம். வரலாறை அவர் எப்பொழுதும் 'புறவளமாக பார்ப்பதில்லை, உள்வளமாகவே பார்ப்பார்'. நீரில் அசையாது மிதந்து கொண்டிருக்கும் ஒரு வாத்தை அவர் நீருக்கடியில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் அதன் கால்களுக்கூடாகவே வியாக்கியானம் செய்வார். இவ்வாறு வரலாற்றை அதன் உள்ளோட்டங்களுக்கூடாக அவர் வாசிக்கும் பொழுது அது ஒரு கணிதமாக மாறும். நன்கு திட்டமிட்டு எழுதப்பட்ட சுவாரஸ்யமான ஒரு நாடக எழுத்துருபோல எம் முன் விரியும். இந்நூலிலும் அவர் மனித வரலாற்றை அதன் முழுநீளத்திற்கும் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறார். வரலாற்றை, அரசியல் பொருளாதாரத்தை, புவிசார் அரசியலை - எல்லாவற்றையும் அவற்றுக்கேயான கட்டமைப்புக்களுக்கூடாக ஆராயும் அவர் தன்னுடையது கட்டமைப்பு சார் (Structural analysis) ஆய்வு ஒழுக்கம் என்று கூறுகிறார்.

வரலாறே அவருடைய அடிப்படை ஒழுக்கம் என்ற போதிலும் ஒரு புவிசார் அரசியல் ஆய்வாளராகவே அவர் அதிகம் கவனிப்பைப் பெற்றார். 1980 களின் முற்கூறிலிருந்து தொடங்கி ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அதன் புவிசார் அரசியல் யதார்த்தத்திற்கூடாக அதிகம் வாசித்தவர் அவர்தான் எனலாம். 'இந்தியா ஒரு நாள் ஈழப்போராட்டத்தை தத்தெடுக்கப் பார்க்கும்' என்று அவர் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு முன்னரே எழுதியிருந்தார்

நாலாம் கட்ட ஈழப்போர் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாக அவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் 'புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்து யுத்தம் வெடிக்குமிடத்து காணப்படும் சர்வதேசச் சூழலின் கீழ் இந்துமா சமுத்திரம் ரத்த சமுத்திரமாக மாறக் கூடிய பேராபத்து உண்டு' என்று கூறினார். புரிந்துணர்வு உடன்படிக்கையை பாதுகாத்தால்தான் போராட்டத்தை, மக்களை, போராட்ட அமைப்பை பாதுகாக்கலாம் என்றும் வழியுறுத்தினார். பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் யுத்தம் ஒரு தெரிவாகக் காணப்படுவதை விளங்கப்படுத்தி, அவ்வாறு ஒரு யுத்தம் வெடிக்குமிடத்து அது ஒரு பேரழிவாக முடியும் என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசியும் எழுதியும் வந்தார்.

இதே கருத்தை போர் தொடங்கிய பின் கிளிநொச்சி நுண்கலைக் கல்லூரியில் வைத்தும் கூறினார். 2007 யூன் 01ஆம் திகதி யாழ் நூலக எரிப்பை நினைவு கூர்ந்து ஒரு கருத்தரங்கு கிளிநொச்சி நுண்கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. இதில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிகம் அதிர்வை ஏற்படுத்திய அந்த உரையில் அவர் புரிந்துணர்வு உடன்படிக்கை பாதுகாக்கப்படாவிட்டால் அந்த மண்டபத்தில்  அமர்ந்திருந்தோரில் எவருமே உயிருடன் தப்புவதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாக இருக்கும் என்று கூறினார். அத்தகைய ஒரு பின்னணியில் யுத்தத்தில்.... 'இனி வென்றாலும் தோல்விதான் தோற்றாலும் தோல்விதான்' என்றும் 'பேரழிவைத் தவிர்ப்பதற்கும் கையிலிருப்பவற்றை பாதுகாப்பதற்கும் உடனடி யுத்த நிறுத்தம் அவசியம்' என்றும் கூறினார்.

ஈழப்போர்க்களத்தில் அவருடைய எழுத்துக்களையும் அரசியல் தீர்மானங்களையும் அவற்றின் விளைவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒருவர் புவிசார் அரசியல் பரப்பில் அவருடைய தீர்க்கதரிசனங்களை விளங்கிக்கொள்ளலாம். தனது புவிசார் அரசியல் ஆராய்ச்சிகளுக்கூடாக அவர் முன்னுணரும் பல விடயங்கள் முதலில் கற்பனையோ என்று கருதத்தோன்றும். அவ்வாறு கருதிய பலரும் அவரை விமர்சித்தும் இருக்கின்றார்கள். ஆனால் வரலாறு அவருடைய எழுத்தைப் பெரும்பாலும் நிரூபித்தே வந்துள்ளது.

இந்நூலிலும் அவர் ஒரு வரலாற்றியளாளராகவும் புவிசார் அரசியல் விற்பன்னராகவும் மிளிரக்காணலாம். வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் புவிசார் அரசியலை அவர் ஒரு பிரயோக விஞ்ஞானமாகவே வாசித்துச் செல்கின்றார். அதிலும் குறிப்பாக அதை பொருத்தமான பிரயோக விஞ்ஞானமாக முன்வைக்கிறார்.

'இந்நூல் தூய சரி பற்றிப் பேசாமல் காலம், இடம், சூழல் என்பனவற்றிற்குப் பொருத்தமான வகையில் எது பொருத்தமானதோ அதையே சரியென்று கூறிப் பயணிக்கின்றது. சட்டை போட வேண்டும் என்பது சரி என்பதற்காக 3 வயதுப் பிள்ளைக்கு 30 வயது நபரின் சட்டையைப் போடமுடியாது. அப்படியே 30 வயது நபருக்கு 3 வயதுப் பிள்ளையின் சட்டையைப் போடமுடியாது. அதாவது பொருத்தமானது எதுவோ அதுவே சரியானது. இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்ட கருத்தியலையே இந்நூல் முன்னெடுத்துச் செல்கிறது. பொருந்தாத சரியென்பது எல்லாம் பிழையானது. அது வெறும் கற்பனாவாதமாகவும், தூய்மைவாதமாகவுமே அமையமுடியும். இந்த வகையில் அனைத்துவகை கற்பனாவாதிகளும், தூய்மைவாதிகளும் இறுதி அர்த்தத்தில் எதிரியின் சேவகர்களாவர் என்பதே இந்நூலின் நிலைப்பாடாகும்' என்று மு.தி. தன்னுடைய ஆசிரியர் குறிப்பில் கூறுகிறார்.

இவ்வாறு அவர் பொருத்தமென்று கருதிய தந்திரோபாய மற்றும் புவிசார் ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றைக் காலத்துக்குக் காலம், கொள்கை முடிவுகளை எடுக்க வல்ல அதிகாரத்தோடு காணப்பட்ட தரப்புக்களுக்கு அவ்வப்போது வழங்கியிருக்கிறார், உட்சுற்று வாசிப்பிற்கும் விட்டிருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு அவர் பொங்குதமிழ் இணையத்தளத்தில் ஜனாதிபதித் தேர்தலையொட்டி ஒரு கட்டுரை எழுதினார். தனபாலசிங்கம் என்னும் பெயரில் அக்கட்டுரை எழுதப்பட்டது. தமிழ் மக்கள் தமது தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் அதில் கேட்டிருந்தார். அவ்வாறு நிறுத்துமிடத்து, இரண்டு தென்னிலங்கை மைய வேட்பாளர்களும் 50 விகிதத்திற்கு மேலான வாக்குகளைப் பெறுவது கடினமாக இருக்கும்.  ஏனெனில் தமிழ்மக்களின் பெரும்பாலன முதலாவது விருப்பத்தெரிவு வாக்குகள் தமிழ் வேட்பாளருக்கே விழும். அப்பொழுது அரசுத் தலைவரைத் தெரிந்தெடுப்பதற்காக இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியிருக்கும். அப்பொழுது தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பத்தெரிவு வாக்கை எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கு அளிக்கிறார்களோ அவரே வெல்ல முடியும். எனவே யாருக்கு இரண்டாவது விருப்பத்தெரிவை அளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தலைமைகள் சிங்களத் தலைமைகளோடு பேரம் பேசலாம். அதன் மூலம் யார் அரசுத்தலைவராக வருவதென்பதை தமிழ் மக்களே அதிகபட்சமாக தீர்மானிக்கலாம் என்று மு.தி. எழுதினார்.

அக்கட்டுரையை தமிழ் தலைவர்களில் எத்தனைபேர் வாசித்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் துயரம் என்னவென்றால் அதே கட்டுரையை சிறு மாற்றங்களோடு அதே இணையத்தளத்தில், ஆனால் வேறு ஒரு பெயரில் 2015 ஆம் ஆண்டும் அவர் எழுதினார் என்பதுதான். இது தொடர்பாக நோர்வேயில் வசிக்கும் ஒரு தமிழ்ப்புலமையாளர் அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் சொன்னாராம் 'என்ன செய்வது ஐந்து ஆண்டுகளின் பின்னரும் ஈழத்தமிழர்களின் அரசியல் அப்படியேதானே இருக்கிறது' என்று

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் யாப்புருவாக்க முயற்சிகள் வெற்றிபெறத் தவறின் மறுபடியும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் 2020 இலோ 2021 இலோ தமிழ் மக்களின் முன் வந்து நிற்கும். அப்பொழுதும் மு.திருநாவுக்கரசு அதே கட்டுரையை திரும்பவும் எழுதவேண்டியிருக்குமா?

திருநாவுக்கரசுகள் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியலோ தன்போக்கில் அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் அரசியலும் தமிழ் அறிவியலும் ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்படவியலாத ஓரு பிணைப்பை எப்பொழுது அடையப்போகின்றன? தமிழ் நிதியும் தமிழ் அறிவும் இணைந்து ஆராய்ச்சி மையங்களையும், சிந்தனை குழாம்களையும் எப்பொழுது கட்டியெழுப்பப்  போகின்றன? ஆயுதப் போராட்டக் காலகட்டத்திலும் தமிழ்மக்களிடம் சிந்தனைக் குழாம்கள் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும் மிதவாத அரசியல் களத்திலும் சிந்தனைக்குழாம்கள் போதியளவு தோன்றவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நவிப்பிள்ளை அம்மையார் கனடாவில் யோர்க் பல்கலைக்கழகத்தில் பேசியபோது, 'தமிழ் மக்கள் தமது அரசியலை அறிவியல்மயப்படுத்தத் தவறிவிட்டார்கள்' என்று கூறியிருக்கிறார். தமிழ் அரசியலை இயன்றளவுக்கு அறிவியல்மயப்படுத்தும் நோக்கத்தோடு இந்நூல் முன்வைக்கப்படுகின்றது. இது திருநாவுக்கரசுவினது நரேற்றிவ். இது போல மேலும் பல நரேற்றிவ்கள் வரவேண்டும்.

ஒரு வெடிகுண்டுத் தாக்குதலுக்கு வெடி மருந்து வாங்க காசு கேட்டால் அள்ளிக் கொடுக்க பல கைகள் உண்டு. ஆனால் அறிவாராய்ச்சி மையத்திற்கோ அல்லது சிந்தனைக்குழாத்திற்கோ காசை அள்ளிவழங்க எத்தனைபேர் உண்டு? அல்ஜசீராவைப் போல ஓர் இருமொழி ஊடகத்தை ஏன் தமிழர்களால் கட்டியெழுப்ப முடியவில்லை? தமிழ் கோப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் தமிழ் ஊடகங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அடையாளம்  என்ற கொள்கை ஆய்வு மையத்தை ஒரு நல்ல தொடக்கமாக கூறலாம். அது போல பல கொள்கை ஆய்வு மையங்கள் குறிப்பாக புவிசார் அரசியலைக் குறித்து பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான தந்திரோபாய ஆய்வு மையங்கள் தாயகத்திலும் தமிழகத்திலும், தமிழ் டயஸ்போராவிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

மு.தி அடிக்கடி கூறுவார் 'ஈழத்தமிழர்களின் பேரம் எனப்படுவது அவர்களுடைய புவிசார் அரசியல் அமைவிடம் தான்' என்று. ஆனைக்கோட்டை மனிதனின் எலும்புக்கூட்டையும் விட்டுவைக்காத ஒரு பேரரசின் பலப்பிரயோக வீச்செல்லைக்குள் வாழும் மிகச்சிறிய மக்கள் கூட்டமே ஈழத்தமிழர்கள். ஆனைக்கோட்டை மனிதனோடு கண்டெடுக்கப்பட்ட ஆனைக்கோட்டை முத்திரையானது ஈழத் தமிழர்களின் வேர்களை சிந்துச் சமவெளியுடன் தொடுக்கிறது. ஒரு உபகண்டப் பண்பாட்டின் படர்சியாகக் காணப்படும், மிகச் சிறிய ஈழத்தமிழர்களின் ஆதி மனிதனின் எலும்புக்கூட்டை அதே உபகண்டப் பண்பாட்டைப் பகிரும் ஒரு பிராந்தியப் பேரரசு சிதைத்தழித்திருக்கிறது.  

எனவே பொருத்தமான புவிசார் அரசியலைக் குறித்து ஈழத் தமிழர்கள் மேலும் ஆழமாக உரையாட வேண்டும். அரை நூற்றாண்டுக்கும் மேலான பகைப் பிராந்திய யதார்த்தத்துள் ஈழத்தமிழ் அரசியல் சிக்குண்டிருக்கிறது. இச்சிக்கினை அவிழ்க்கத் தேவையான ஆய்வுப் பரப்பினை அகட்டவும் ஆழப்படுத்தவும் இது போன்ற நூல்கள் அவசியம். தமது அரசியலை இயன்றளவுக்கு அறிவியல்மயப்படுத்தும் போதே ஈழத்தழிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான வழிகளும் வெளிக்கும்.

தை - 2018

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=6&contentid=86c2b7cf-476f-4654-b3f7-22ae7796aba5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்காத மூளை செயலற்றுப் போகும் - சிந்திக்காத மனிதன் அடையாள மற்றுப் போவான்

பா. செயப்பிரகாசம்

தமிழ்மண்ணில் கால்வைக்கும் முன் இந்த வரலாற்று அரசியல் ஆய்வாளர் அவரது எழுத்துக்களால் அறியப்பட்டிருந்தார். எழுத்துக்கள் காற்றை விட வேகம் கொண்டவை. கால்களை விட உறுதியானவை.

அவர் எங்கே தமிழ்நாட்டு மண்ணில் கால்வைத்தார்? எல்லா ஏதிலியருக்கும் எது சாசுவதமோ அந்த நீர்க்கடலில், 2009- முள்ளிவாய்க்காலின் பின் தப்பிவந்து கடல்தண்ணீரில் காலூன்றினார்.

நான் பார்க்கக் கிடைத்த அவரது முதல் நூல் 'சமஸ்டியா தனிநாடா'. எழுத்துக்கள் வழி அறிந்த அவரை நேரில் தரிசித்தது 'மண்டபம்' அகதி முகாமில்.           

இந்திய சாத்தான்களின் படையெடுப்பு 1987 - ஈழத்தில் நிகழுமுன்னரே அவரது 'இந்தியாவும் ஈழவிடுதலைப் போராட்டமும்' என்ற நூல் வெளியாகியிருந்தது. (சுகந்தம் வெளியீடு, யாழ் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் -1985). இந்திய நுழைவு 'எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்'– என்ற சாணக்கியத்தைக் கொண்டுள்ளது என அப்போது கணித்திருந்தார். இச்சிறு நூலை பரவலாய்ச் சென்று சேரவேண்டுமென்ற அவாவில் டிசம்பர் 2008ல் பத்து ரூபாய் விலையிட்டு, ஈராயிரம் படிகள் அச்சிட்டு 'தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி' அமைப்பின் சார்பில் வெளியிட்டோம். அவ்வேளை நான் 'தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி' அமைப்பின் செயலராக இருந்தேன்.

'1985இல் வெளியிடப்பட்டதாயினும், ஒரு சரியான சமூக ஆய்வு காலங்கடந்து நிற்குமென்பதற்கு சான்று இந்நூல். 2008 டிசம்பர் 3-ல் ஒரு முக்கியமான நிகழ்வு பதிவு செய்யப்பட்டது. உலகின் 103 நாடுகள் கூடி, ஹிரோசிமா நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுக்கு அடுத்த நிலையில் அதிகக் கதிர் வீச்சுக் கொண்டதும், ஆபத்தானதுமான கொத்துக் குண்டுகள் வீச்சு நிறுத்தப்பட வேண்டுமென உடன்படிக்கை செய்தன. உலகத்தால் நிராகரிக்கப்பட்ட கொத்துக் குண்டுகளை இலங்கை இராணுவம் வீசி, கொத்துக் கொத்தாய் ஈழத்தமிழர் உயிர் பறிக்கிற இப்போதும், தன்இரை ஒன்றே குறியாய் அசையும் மலைப்பாம்பான இந்திய நிலையை விளக்கிட இந்நூல் இப்போதும் தேவைப்படுகிறது' என நூலின் மீள்பதிப்பில் குறிப்பிட்டிருந்தேன். 

இலங்கை ராணுவத்துக்கும் போராளிகளுக்குமான யுத்தம் உச்சத்திலிருந்த போது மு. திருநாவுக்கரசு எழுதிய, 'இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள ராஜதந்திரம்' என்ற எட்டுப்பக்க அளவுள்ள சிறு வெளியீடு – பத்தாயிரம் படிகள் அச்சிட்டு தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பாக   தமிழகமெங்கும் இலவசமாக விநியோகித்தோம்.

இவ்விரு வெளியீடுகளையும் நூலாக வெளியிட வேண்டுமென்னும் தனது விருப்பை வெளிப்படுத்தி – எனக்கு அனுப்பி, அச்சிடுதற்கான நிதி உதவி அளித்தவர் பிரான்சில் வாழ்ந்த மறைந்த போராளி கிறிஸ்டோபர் பிரான்சிஸ் என்ற கி.பி. அரவிந்தன். அவருடைய பின்புலமும் தூண்டுதலும் இல்லாதிருந்தால், இவ்விரு நூல்களையும் தமிழகம் கண்டிருக்க இயலாது. நண்பர்கள் கி.பி. அரவிந்தனும், இ. பத்மநாப அய்யரும் இந்நூல் மீள்பதிப்பாக்கிட காரணகர்த்தாக்கள்.

2002 அக்டோபரில் 'மானுடத்தின் தமிழ்க் கூடல்' மாநாட்டுக்கு நாங்கள் ஐவர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது கூட மு. திருவை நாங்கள் சந்திக்கவில்லை. நேரில் சந்திக்க இயலாதவாறு – விடுதலையை நோக்கிய நெடும்பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்! அவருடைய ஆய்வு எழுத்துக்களின் அணிவகுப்பில் எக்காலமும் சுகந்தம் பரப்பி எம்மை ஈர்த்த வாசகப் பூக்கள் இவை சில:

• ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்தி பூர்வ முன்னேற்பாடு.

• ஆய்வு – அது காலத்தை முந்தும் செயல். அது காலத்தை உந்தும் செயலும் ஆகும்.

• ஒரு பொருளில் அல்லது செயலில் காணப்படும் ஒழுங்கு அல்லது விதியைக் கண்டறிவதன் மூலம், அதனைக் கையாள அல்லது எதிர்கொள்ள நம்மை நாம் தகவமைத்துக் கொள்ளலாம் என்பது ஆய்வின் இறுதி இலக்கு.

• இயக்கக் கூட்டுக்குள் சனநாயகம், இயக்கங்களுக்குள் சனநாயகம், பொது தலைமைப் பீடத்துள் சனநாயகம் - என எங்கும் சனநாயகம் நிலவினால்தான், சனநாயக ரீதியாகத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் தான் சரியான வெற்றியை அடைய முடியும். இல்லையெனில் தோல்வியைத் தான் தழுவவேண்டி ஏற்படும்.

• ஈழத்தில் ஆயுதந்தாங்கிய இயக்கங்களை விரிவடைய வைப்பதில், இந்தியாவுக்கு இரண்டு தந்திரோபயங்கள் உண்டு. முதலாவது - இயக்கங்களின் விரிவடைவால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாதல். இரண்டாவது - இவ்வியக்கங்கள் சோசலிஸத் தமிழீழ அரசை அமைக்கக் கூடியளவு பலம் பெறாது செய்தல்.

• சிந்தனைச் சுதந்திரமே சோசலிசத்தின் ஊற்றுக்கண். முதலாளித்துவ அமைப்பிற்கும் இன ஒடுக்கு முறைக்கும் எதிரான கூரிய ஆயுதம் சிந்தனைச் சுதந்திரம்தான்.

• உலகளாவிய வாணிகத்தில் ஈடுபடுகிற எந்த ஒரு அரசும், நாடும் ஏகாதிபத்தியமே.

• சனநாயகம் என்பது கீழிருந்து மேல் நோக்கிச் செல்ல வேண்டும் -  மண்ணில் கீழிருந்து மேலேறும் கொடி போல. மேலிருந்து கட்டளையாய் கீழிறங்குவது அதிகாரம் - தூக்குக் கயிறு போல!

• தேசியம் என்பது மக்களை அரசியலில் பங்காளிகளாக்கும் ஓர் அரசியல் பண்பாட்டுச் செயல்முறை.

• எல்லாத் தொடக்கத்துக்கும் ஒரு முடிவு இருப்பது போல், எல்லாவற்றிற்கும் ஒரு மயானம் இருப்பது போல், பூமிக்கும் ஒரு மயானம் இருக்கிறது. எந்தச் சூரியன் பூமியின் உயிர் வாழ்வுக்குக் காரணமாக இருக்கிறதோ அந்த சூரியனே பூமிக்கு மயானமாகவும் அமைந்து விடுகிறது.

-2-

அவர் எழுதிய நூல்கள் எத்தனை? குடிபெயர்தல் என்னும் உள்நிகழ்வு, புலம்பெயர்தல் என்னும் புறநிகழ்வு - இரண்டின் கணிகளையும் சுவைத்து உயிர்பிழைத்தல் அஞ்ஞாதவாசம். இரு நிகழ்வின் காரணமாகவும் அங்கங்கு தன் எழுத்துக்களை அனாதைகளாக விட்டுப் போவது இவரின் இயல்பாகி விடுகிறது. எ. கா: பிரான்சிலிருந்து வெளியான 'எரிமலை' என்ற இதழில் வெளிப்பட்ட இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாய் வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த நிறுவனமயம் குறித்த கட்டுரை. இக்கட்டுரை அவருடைய எந்த நூல்களுக்குள்ளும் தொகுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

ஈழத்திலிருந்து வெளிவந்த வீரகேசரி, ஈழநாடு, உதயன், திசை போன்ற நாளிதழ்கள், வெளிச்சம், தளிர் போன்ற பருவ இதழ்கள் காரணன், உதயன், சர்மா – இன்னோரன்ன பெயர்களில் இவரின் அரசியல் எழுத்துக்களுக்கு வாகனமாகியுள்ளன.

ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியரான ஜெயராஜூடன் இணைந்து உதயன் - விஜயன் என்ற பெயரில், 'இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்' என்ற முக்கியமான ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்.

இலங்கை இனப்பிரச்சனை யுத்தத்திற்கு இந்து மகாசமுத்திரம் எத்தகைய பங்காற்றுகிறது என்பதை இந்நூல் உலகுக்கு முரசரைந்து சொல்லுகிறது.

'முதல்நிலை அர்த்தத்தில் உலகம் என்றால் வர்த்தகம். வர்த்தகம் என்றால் கப்பல். கப்பல் என்றால் கடல். கடல் என்றால் இந்து சமுத்திரம். இந்து சமுத்திரம் என்றால் இலங்கை, ஏகாதிபத்திய முற்றுகை.'

என்ற கருதுகோளை முன்னிறுத்துகிறார். சமகாலக் கருதுகோள்களை, கோட்பாடுகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய வரலாறு, சமுதாய நிலைமைகளிலிருந்து மட்டுமே தோண்டக் கூடாது. இருநூறு ஆண்டுகளுக்கும் முந்தியதிலிருந்தும் வகுக்கக் கூடாது. கடந்த 20 ஆண்டுகள் நிலைமைகளிலிருந்து கணிக்க வேண்டும். யதார்த்த நிலைகளிலிருந்து, அதாவது உண்மைநிலைகளிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்தின் கோட்பாடுகளும் விளக்கப்பட வேண்டும். புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு எந்த ரீதியில் போகிறது என்பதை அப்போது தான் தெளிவாகக் கணிக்க முடியும். மு. திருவின் அனைத்து எழுத்துக்களும் இவ்வகை அரசியல், வரலாற்று ஆய்வுகள் தாம்.

• தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் -1985

• இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும் -1987  

• புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு -1990

• இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படைகள் - இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை -1990

• ஜே ஆரால், ஜே ஆருக்காக, ஜே. ஆருடைய -1994

• சமஷ்டியா, தனிநாடா? -2005

• கொழும்பு -2007

• தேசியமும் சனநாயகமும் -2010,

• இலங்கை யாப்பு -2017

• நீங்கள் ஏந்தியிருக்கும் 'பூகோளவாதம் - சர்வதேச வாதம்- புதிய தேசிய வாதம்' -2018 

பொருண்மைகளின் ஆழத்திலிருந்தும், உலக ஞானத்தின் தொடர்ச்சியிலிருந்தும் இவருடைய எழுத்துக்கள் எழுகின்றன.

தேசியம் ஒரு நீதிக் கோட்பாடு. சனநாயகம், பண்பாடு பற்றிய நீதிநெறிதான் தேசியமாகும். ஆதலால் தேசியப் போராட்டமென்பது அநீதிக்கு எதிரான போராட்டமாக, அநாகரிகத்திற்கு எதிரான போராட்டமாக, சனநாயத்தை நிலைநாட்டுதற்கான போராட்டமாக அமைகிறது. தேசியத்தின் மிக அடிப்படையான விசயம் மக்களை அரசியல் அதிகாரத்தில் பங்காளிகளாக்குவது தான்.

தேசியவாதம், என்பது புறத்தோற்றத்தில் இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற அடிப்படையைக் கொண்டிருக்கும். இங்கு ஒரு மொழி, இன, பண்பாட்டு அம்சங்கள், வாழ்க்கை முறைகள் என்பனவற்றை அவனது வாழ்விலிருந்தும், அதற்கான அரசியலிலிருந்தும் பிரிக்க முடியாது. அது அவனது பிறப்புரிமையாகும். இனம், மொழி அவன் பிறப்புரிமை, அவனுக்குரிய பிரதேசமும் பிறப்புரிமை, வாழ்க்கை முறையும் பிறப்புரிமை, சனநாயகமும் பிறப்புரிமை, பிற மனித உரிமைகளும் பிறப்புரிமை.

அவருடைய ஆய்வு ஈழத்தமிழருக்குத் தேவையானது எதுவோ, அத்திசையில் பயணிக்கிறது. தேவை வேறு விருப்பம் வேறு. தேவை யதார்த்தம் சார்ந்து பிறப்பது. இன்றையதினத்தில் ஈழத்தமிழரின் தேவை உள்ளிழுப்பதற்கும் வெளிவிடுதற்குமான சுவாசிப்புக்கான சிறிது காற்று.   

தேசிய வாதம் - பலவகையானது எனப் பட்டியலிடுகிறார். காலனியத்தையும் தேசியவாத விவரிப்புக்குள் தொகுக்கிறார். காலனிய எதிர்ப்புத் தேசியவாதம் எழுந்து வந்த இடைமாறு காலத்தையும் குறிப்பிடுகிறார். 'காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் விடுதலையின் பின்னான தேசியவாதம் ஒரு வகையாகவும், மேற்படி அடிமைநாடுகளில் விடுதலையின் பின் காலனிய எஜமானிய நாடுகள் கைக்கொண்ட தேசியவாதம் ஒரு வகையாகவும் அமைந்தன' எனத் தெளிவுபடுத்துகிறார்.

காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தால் விடுதலை பெற்ற ஆசிய – ஆப்பிரிக்க நாடுகள் - மீண்டும் மறுவகையான காலனிய ஆதிக்கத்துக்குள் போய் முடிந்தன. இந்நாடுகளின் உள்பரப்புக்குள் காலனியநாடுகளின் நேரடி ராணுவப் பிரசன்னம் இல்லை. அவனுடைய போலிஸ் இல்லை. நேரடி ஆட்சி இல்லை. ஆனால் விடுதலையான நாடுகளின் அரசு, ஆட்சி உறுப்புக்கள், நிதிமூலதனம், வணிகம் மூலம் உள்ளிறங்கிக் கொண்டிருக்கிறான். விடுதலைபெற்ற நாடுகளின் அரசியல் தலைமைகள் மூலம், பொருளாதார அடியாட்கள் மூலம், பன்னாட்டு நிறுவனங்கள் மூலம், உலகமய வணிக உத்திகள் மூலம் இது சாத்தியமாகிறது.

கென்யாவின் கூகி -வா – தியாங்கே நோபல் விருது பெற்ற எழுத்தாளர். ஒரு எழுத்தாளன் முற்கால ஞானிபோல், சமூகத்தின் மனச்சாட்சியாகச் செயல்படவேண்டும் என்பார். விடுதலை பெற்ற கென்யா மீண்டும் பின்காலனியமாக மாற்றப்பட்டது. கென்யாவில் ஏகாதிபத்திய, பின்காலனிய அசைவுகள் குறித்து நோபல் பரிசு பெற்ற நாவலான அவரது 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' நூலிலிருந்து சில வாசகங்கள்:

• 'என் சொந்த நாட்டுக்கு முன்வாசல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டால், இந்த நாட்டின் பின்வாசல் வழியாக நுழைவேன். முன்னைக் காட்டிலும் ஆழமாக வேரூன்றக் கூடிய விதைகளை விதைப்பேன்:

• இன்றோடு என் முகத்தை மறைத்துக் கொள்வேன். நடக்கும் கூத்துக்கள் எல்லாவற்றின் திரைமறைவிலும் நானிருந்து கொள்வேன். கதவுகளிலும் சன்னல்களிலும் நீதான் நிற்பாய். உன்முகம் எப்போதும் வெளியே தெரியும்.

• உங்களுடைய சாவிகளை உங்களிடமே ஒப்படைத்த பின்னும், என்னுடைய ஆணைகளைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறீர்கள். சாவிகளை நான் வைத்திருந்த காலத்தை விட, என் மூலதனத்திலிருந்து அதிக விகிதத்தில் தருகிறீர்கள்.

• திருட்டும் கொள்ளையும் தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான அளவுகோல். திருட்டும் கொள்ளையும் இல்லையென்றால் இன்று அமெரிக்கா எங்கே இருக்கப் போகிறது? இங்கிலாந்து என்னவாக இருக்கும்?  பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான்?

• மற்றவர் விதைத்த நிலத்தில் நீ அறுவடைசெய். மற்றவர் வியர்வையில் விளைந்ததை நீ நாணயமாக்கு. இன்னொருவன் வெட்டிய கிணற்றில் நீரை எடு. மற்றவர் கட்டிய வீட்டில் நீ குடியேறு. மற்றொருவர் கஷ்டப்பட்டு நெய்த   ஆடையை நீ உடுத்து.

•  தாய்த்திருநாட்டின் வாயிலைப் பாதுகாத்து வந்த அறிவுமையங்கள் தகர்க்கப் பட்டுவிட்டன. ஞானக்கண் தானே அவியும்படி விடப்பட்டது. பண்பாட்டுக் காவல்பீடங்கள் நொறுக்கப்பட்டு விட்டன. இந்த நாட்டு இளையோர் கேடயங்களையும் ஈட்டிகளையும் பரணில் போட்டுவிட்டார்கள்.

• பண்பாட்டு ஏகாதிபத்தியம் மனரீதியான குருட்டுத் தனத்தையும் செவிட்டுத் தனத்தையும் உருவாக்குகிறது. மக்கள் சொந்த நாட்டில் என்ன செய்யவேண்டும், எப்படிச் சுவாசிக்க வேண்டுமென்பதைக் கூட வெளிநாட்டுக்காரன் வந்து சொல்லிக் கொடுக்கவேண்டுமென்கிறது.

• இன்றிலிருக்கிறது நாளையின் களஞ்சியம். நாளை என்பதோ இன்று நாம் விதைப்பதன் அறுவடையே'

விடுதலை பெற்ற ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் கதி இதுதான். ஒரு காலனிய ஆதிக்கத்தின் கீழ் அடிமையாயிருந்து விடுதலை பெற்ற நாடுகள், இப்போது பன்னாட்டு மூலதனத்துக்குள் மாட்டுப்பட்டன. 'எந்த வீட்டின் வாசலில் உரைகல் இருக்கிறதோ, அந்த வீட்டில் ஒருபோதும் மொன்னைக் கத்தி இருக்க முடியாது' என சுயமரியாதை உணர்வைத் தீட்டிக் கொண்ட தலைமைகள் இல்லை. மொன்னைக் கத்திகளாகவே இருந்தார்கள். இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும்போல் சுயநலம்காக்கும் மொன்னையாக இருக்க முடியாது, இருக்கமாட்டேன் என மு. திருநாவுக்கரசு கூர்தீட்டிக் கொண்டேயிருக்கிறார். அவர் தீட்டுவது அறிவாயுதம். அது சாக்ரடீஸ் போன்ற ஞானிகள் ஏந்திய அறிவாயுதம்.

ஒரு கிரேக்கவாசகத்தை மு. திரு. அடிக்கடி மேற்கோள் இடுவார். 'பித்தன் தன்னைப் பற்றிப் பேசுவான். அற்பன் அடுத்தவனைப் பற்றிப் பேசுவான். சாமானியன் சம்பவங்களைப் பற்றிப் பேசுவான். ஞானி பிரபஞ்சத்தைப் பற்றிப் பேசுவான்.'

மு. திரு. பிரபஞ்சத்தைப் பற்றிப் பேசுகிறார். தனது மக்களைப் பற்றி, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குள் தமிழ்ப் பிரதேசம் வாழ நேர்கிறது பற்றிப் பேசுகிறார். தமிழ்ப்பிரதேசம் தனியாய் இல்லை, இந்தப் பிரபஞ்சத்துக்குள், இந்தப் பிரபஞ்சத்துடன் இணைந்துள்ளது. இந்த நூலில் வரலாற்றியல், அரசியல், புவியியல், சர்வதேச இயல், உலகமய இயல் போன்றவைகளினூடாக தமிழர் வாழ்வியலைத் தேடுகிறார். புதுப்புதுக் கருதுகோள்களை வரையறுக்கிற போது – புதிய புதிய சொல்லாடல்களைக் கண்டடைகிறார்.

எத்தனை கடினமான, மலைப்பாறை போன்ற தத்துவார்த்த, கோட்பாட்டு விஷயங்களாயினும் எளிமையாய் எடுத்துரைக்கும் சிடுக்குகளற்ற மொழி இவரின் கைவசப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் நமது தாய்மார்கள் ஆட்டில் பால் கறப்பார்கள். ஆட்டை லாவிப் பிடித்து, பின்னத்தங் கால்களை இரு தொடைகளுக்கிடையில் இடுக்கிக் கொண்டு, கனத்த காம்புகளில் பால்கறக்கும் லாவகம் இது. அரிய, சீரிய மடி கனத்த பொருண்மையையும் புதிய சொல்லாடல்களுக்குள் இடுக்கிக் கறந்து எடுத்துரைத்து விடுகிறார்.

-3-

நவீன தேசியவாதம் - என்ற புதிய எல்லையை அடைகிறார். அந்த வெளிவட்டத்துள், 1.சமூக சனநாயக தேசியவாதம் 2.சமூக நலன் பேண் தேசியவாதம் 3.ஆக்கிரமிப்புத் தேசியவாதம் என மூன்று உள்வட்டங்களைப் போடுகிறார். புதிய வரலாற்றுக் கட்டத்தில் உண்டானவை இம்மூன்று தேசிய வாதங்களும்.

'தேசியவாதம் தோற்றம் பெற்றபின்பு தான் மார்க்சியம் தோன்றியது. மார்க்சீயம் தேசியவாதத்துடன் இணைந்து தனக்குரிய அறிவியல் பாதையில் தேசியத்தை வழிநடத்தத் தொடங்கிற்று. அந்த இடத்தில்தான் தேசியவாதம் சமூக ஜனநாயக தேசியவாதமாக உருப்பெறத் தொடங்கியது. இது இடதுசாரிப் பாதையில் தேசியவாதம் முன்னெடுக்கப்படத் தொடங்கிய பரிமாணத்தைப் பெற்றது. இதுதான் புதிய தேசியவாதம்'

இந்தச் சமூக ஜனநாயக தேசியவாதம், சமூக நலன் பேண் தேசியவாதம் தவிர மூன்றாவது தனிப் பாதையைக் கொண்டது தேசிய வெறிகொண்ட 'ஆக்கிரமிப்புத் தேசியவாதம்' - இட்லர், முசோலினி, மிலோசவிக் போன்றோரது தேசிய இனவெறி அரசியல் – ஒரு புதிய அரசியல் பதத்தின் மூலம் அர்த்தப்படுத்தப்படுகிறது. இவர்களது தேசிய இனவெறி அரசியலானது இராட்சஸ தேசியவாதம் என்கிறார். இந்த இராட்சஸ தேசியவாதப் புள்ளியில் இன்று மாட்டுப்பட்டவர்களாக நாம் நிற்கிறோம். இராட்சஸ தேசியவாதத்துக்குள் மாட்டுப்பட்ட நாடுகள் எல்லாம் விடுதலை பெற்றுவிட்டன.

'சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

நில்லென்று சொல்லி நிறுத்தி வழிபோனீரே' என்று தனித்துவிடப்பட்ட அபலையாய் நாம் மட்டும் புலம்பித் தவிக்கிறோம். ஒருபெண்ணாகப் பிறந்ததற்கு அவள் பட்ட பாட்டைப்போல் பட்டுத் தவித்துக் கொண்டுள்ளோம். 

பனிப் போரின் பின்னான காலத்தில் தேசிய இனவிடுதலை சாத்தியமாகி 23   நாடுகள் விடுதலை பெற்றன. சதத் ஹசன் மாண்டோ என்ற உருது எழுத்தாளர். பிரிவினைக்கு முன் அவர் மும்பையில் வாழ நேர்ந்தவர். இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகள் பிரிந்தன என்று எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்தான் சொன்னார்,

'இருநாடுகள் பிரிந்தன என்று எழுதாதே! இரு நாடுகள் உதயமாகின என்று எழுது' என்றார்.  தேசிய இன வரலாற்றில் அதிக அளவிலான தேசிய இனங்களின் நாடுகள் உதயமாகிய வரலாற்றுக் காலம் இது.

2009- முள்ளிவாய்க்காலின் பின் மனித உரிமை அவையில் தமிழினப் படுகொலை பற்றிய விவாதம் வந்தபோது, இலங்கைக்கு ஆதரவாய் தீர்மானத்தை முன்மொழிந்த நாடு கியூபா.

மார்க்சியம் தேசிய இன விடுதலையை ஆதரிக்கிறது. ஆனால் மார்க்சியத்தின் பெயரைக் கூறும் அல்லது அந்தப் பாரம்பரியத்தைக் கொண்ட ருசியா, சீனா, கியூபா போன்ற நாடுகள் தேசிய இன ஒடுக்குமுறையைச் செய்கிற அரசுகளுக்கு இணக்கமாய் இனவெறி ஆதிக்கத்தை ஆதரிக்கின்றன. ஓர் இனத்தை இன்னொரு இனம் ஒடுக்குவதை எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் போட்டுச் சென்ற கோடு.

பனிப்போர்க் காலம், பனிப்போரின் பின்னான காலம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய அந்தக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமானது உள்ளும், புறமும் முற்றிலும் தனிமைப்படுத்தபட்டு மிகப் பரிதாபகரமாக கிருமிகளைக் கொல்வது போல ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தமிழ் மக்கள் தரப்பிலும், 70,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. உள்ளக விசாரணை அறிக்கையின் வாயிலாகவும் தெரிய வந்தது. 21-ஆம் நூற்றாண்டில் கேட்பாரின்றி நடந்தேறிய பாரிய இனப்படுகொலையானது மிகப்பெரிய மனித அவலமாகவும், பெரும் அநீதியாகவும், பெரும் துயரமாகவும் அமைந்தது. 

இனப்படுகொலைக்கு உள்ளான இந்த அப்பாவி மக்களுக்காக நீதி கேட்க எந்தவொரு அரசும் இல்லை என்பது மட்டுமன்றி, இம்மக்களையும், அவர்களது இன்னல்களையும் பயன்படுத்தி தத்தமது தேவைகளை உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகள் பூர்த்தி செய்து கொள்ளும் கேவலம் இன்றைய துயர்தோய்ந்த யதார்த்தமாய் காணப்படுகிறது. இப்போது தான் ஏகாதிபத்திய சர்வதேசங்களைப் பார்த்து

'சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

நில்லென்றுசொல்லி நிறுத்தி வழிபோனீரே' நம் மக்கள் கேட்கிறார்கள்.

இந்த இடத்தில் உள்நாட்டுத் தலைமை ஏற்ற தேசியவாதிகள் தமது சமூக, அரசியல் ஆதாயங்களுக்கு ஏற்ப உள்வாங்கிக் கொண்டனர். அரசியல் ஆதாயம் மட்டுமல்ல, அவரவர் சார்ந்த சமூக ஆதாயம் என்ற சொல்லாடலை மு. திருநாவுக்கரசு பயன்படுத்துகிறார். சிங்களப் பிரதேசமாயினும் தமிழ்ப் பிரதேச தேசியமாயினும் 'சமூக ஆதாய அடிப்படை' இருக்கிறது. சாதி, மதம், குடும்பம், உடமை என ஆசிய சமூகத்தில் அர்த்தம் கொள்கிறது. 

சமகாலத்தில் இந்தப் புவியியலுக்குள், சர்வதேச அசைவுக்குள், நாம் எந்தப் புள்ளியல் நிற்கிறோம்? இந்தப் புள்ளியைக் கண்டடைவதும், செயல்படுத்த முன்னேறுவதும் நம் வேலை என மு. திரு கேள்வி எழுப்புகிறார்.

2009ல் அரங்கேறியது இனப்படுகொலை. அது இனப்படுகொலை அல்ல, இலங்கையை நிலைப்படுத்த மேற்கொண்ட புத்திசாதுரிய நடவடிக்கை என்ற நாடகமும் ஐ.நா. வில் அரங்கேற்றப்பட்டது. ஆனால் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற உண்மையையும் சர்வதேச சமூகத்தின் முன் ஓர் உலக அபிப்ராயமாக வடிவம் பெற்றது. இன்று சர்வதேச விசாரணை என்பதும் கானல் நீராகி தமிழருக்கான பரிகார நீதியும் குப்பைக் கூடைக்குப் போயுள்ளது. அமெரிக்கச் சதிக்கு சர்வதேசமும் உடன் போனது.

ஐ.நா. தயாரித்த அறிக்கையும், அதன்மீது பின்பு அமெரிக்கா முன்வந்து தானாகவே போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை முன்னெடுக்க முற்பட்டபோது, சர்வதேச சமூகத்தின் எங்கோ ஓர் மூலையிலாவது நீதிக்கோர் இடமுண்டு என்ற நப்பாசை சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் இலங்கை ஆட்சி மாற்றத்தோடு அமெரிக்க அரசின் தீர்மானம் தடம்மாறத் தொடங்கியதும் சர்வதேச சமூகத்தின் மீதும், நீதி, ஜனநாயம் என்பவற்றின் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை அற்றவர்களாகும் நிலை ஏற்பட்டது.

'எது எப்படி இருப்பினும், தமிழ் மக்கள் இதற்காக சீனா பக்கம் போக முடியாது. யதார்த்தத்தில் அப்படி அதற்கு ஒரு இடமுமில்லை. இந்தியாவோ, அமெரிக்காவோ தமிழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டத் தவறியிருந்தாலும், அவர்களை நோக்கி நீதியின்பால் போராடி அவர்களின் உதவியுடன்தான் நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் அரசுகளில் தங்கி நிற்காது அந்த அரசுகளின் மக்களிடம் செல்ல வேண்டும். பொருத்தமான சர்வதேச இராஜதந்திர வழிமுறைகளைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு நீதியின்பால் பற்றுறுதியும், ஆளுமையும், செயற்திறனும், தீர்க்கதரிசமும் கொண்ட தலைமை தமிழ் மக்களுக்கு அவசியம்' என வலியுறுத்துகிறார்.

தனது புவியியல் அமைவிடம் ஒன்றை வைத்து உலக அரசியலை காலத்துக்குக் காலம் தன் வசப்படுத்திவரும் இலங்கையின் இராஜதந்திரம் வல்லமை பெற்றது. அதன் இராசதந்திரத்துக்கு முன் தமிழ்த் தலைமைகளின் வீரம், விவேகம் கால் தூசு பெறாது. சிங்கள ராஜ தந்திரம் பற்றி இம்மாதிரி விரிவான ஆய்வை இவர் போல் செய்தவர் எவருமிலர். 

ஈழத்தமிழர்கள் தங்களது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு உறுதுணையானது என்பதை   எப்போதும் கருத்தில் கொண்டிருக்கவேண்டும். இதன்படி இந்தியாவின் சொந்தப் பாதுகாப்பு நலன் சார்ந்த அடிப்படையிலும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உண்டு.

இலங்கைத்தீவு இரண்டாக உடைவதுதான் இந்தியாவினதும், மேற்குலகினதும் நலனுக்கான ஒரேயொரு தவிர்க்க முடியாத மாற்று வழியென உணரப்படும் காலம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஆண்டுகளில் உருவாகும் என்பது அவரது கருத்து.

தமிழ்த் தலைமைகள் இவைபற்றிச் சிந்திக்க - மூளையைக் கசக்கிக் கொள்ளத்தான் வேண்டும். மூளையை இயக்கச் சிரமப்பட்டு சும்மா குந்தியிருந்து - காக்காய் உக்காரப் பனம் பழம் விழும் என்று காத்திருக்கப் போகிறோமோ? சிந்திக்காத மூளை துருப்பிடித்துப் போகும். சிந்திக்காத மனிதன் அடையாளமற்றுப் போவான்.

இராசபக்ஷே போட்டுத் தந்த பாதையில் நடக்கும் சிறிசேன அரசாங்கம், தேர்ந்த இராஜதந்திர நுட்பத்துடன் சீனாவை அணைத்து – ஒரு நாள் இந்தியாவை ஓரங்கட்டுவதில் முற்றிலும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இதன் வினைகளைப் பட்டு அனுபவிக்கப் போகிற நாட்களில் - இந்தியப் பாதுகாப்பு ஈழப்பிரதேசத்திலும், ஈழத் தமிழர்களிடமும் தங்கியுள்ளது என்பதை உணருகிற நாளில் - இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் தேசிய இன விடுதலைக்கு கை கொடுப்பது தவிர்க்க முடியாமல் ஆகிவிடும் என்று மு. திரு. கருதுகிறார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை மட்டுமன்றி அதற்கு பின்பு இன்று வரையுங்கூட தமிழீழப் போராட்டத்திற்கான இராஜந்திர அணியோ, அதற்கான இராஜதந்திர அமைப்புக்களோ அல்லது அதற்கான அறிஞர்குழாம், அறிஞர்படை சார்ந்த ஏற்பாடுகளோ அமைப்பு ரீதியாக எதுவும் இதுவரை (2018) இல்லை என்பது மட்டுமே தமிழ் அரசியலின் கேடுகாலத்தை உணர்த்தப் போதுமானதாகும்.

ஒரு பிரச்சனையில் உண்மையான ஈடுபாடு அவசியம். மக்களுக்கு உண்மையாக இருத்தல், மக்களுக்கு ஊழியம் செய்தல், மக்களில் கலத்தல்   மாத்திரமே ஒரு பிரச்சினையின் உண்மையான ஈடுபாட்டின் இலக்கணம்.  அர்ப்பணிப்பு மட்டும் போதாது. காலந்தோறும் மாறும் நிலைமைகள் பற்றிய ஆய்வு நோக்கு, அதனடியான இராசதந்திர முன்னெடுப்பு    முன்னோடிகளுக்கு முக்கியம்.

'கலப்புல் மேய்ந்தாலும் காடை காட்டிலே' என்பார்கள். உலகளாவிய பார்வை கொண்டு சர்வதேசமெங்கும் சுற்றி வந்தாலும், அவருடைய கால் ஈழப்பிரதேசத்தில் வந்து நிற்கிறது. அவருடைய நாக்கு விடுதலையின் புதிய பாடலை இசைக்கிறது.

இன்னொரு கதை உண்டு.

ஏழு மலை கடந்து, ஏழு வனம் கடந்து, ஏழு சத்தா சமுத்திரம் கடந்து, நடுவிலே ஒரு கடல். கடலின் நடுவில் ஒரு தீவு. தீவு நடுவில் ஒரு நாழிக் கிணறு. நாழிக்கிணற்றில் கூடு கட்டி வாழும் ஒரு கிளி. கிளியில் தங்கியிருக்கும் அந்த முனியின் உயிர் - என்றொரு தொன்மக் கதை உண்டு.  கதையில் வருவது போல் – புவியியல், அரசியல், ஆட்சியியல் என உலகெல்லாம் வலம்வந்த போதும், இந்தச் சிறுதீவின் ஈழநிலத்தில்தான் தங்கியிருக்கிறது மு. திரு என்ற குறுமுனியின் உயிர். விடுதலை உச்சரிப்பில்தான் அதன் உயிர்ப்பு.

'அதற்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்வதன் மூலம் தமிழர்கள் – தமிழ்ப்பிரதேசம் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் சிங்களவரின் அடுத்த ராசதந்திர நகர்வு இலங்கையில் தமிழினம் இடமற்று, பொருளற்று, வாழ்வற்று, நசிவுற்று, மக்கள் தொகையே இல்லாமல் செய்து விடுவதன்மூலம், இந்தியாவின் தலையீட்டை முற்றிலும் நீக்கி விடவும், மொத்த இலங்கைத் தீவையே சிங்கள இனத்தின் தீவாக மாற்றிவிடவும் உறுதி பூண்டிருக்கிறது. ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இது நடக்க சில பத்தாண்டுகள் ஆகலாம்'– என்ற மு. திருவின் எச்சரிக்கைகைய, கவலையை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உரையை நிறைவு செய்கிறேன்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=4de26b0b-4d15-4292-b0bd-14b8c5018d76

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மு.திருநாவுக்கரசு அவர்களின் «21ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், சர்வதேசவாதம், புதிய தேசியவாதம்» ஓர் அறிமுகம்! - கலாநிதி சர்வேந்திரா

 

ஈழத் தமிழர் தேசத்தின் மூத்த அரசியல் அறிஞர் மு.திருநாவுக்கரசு அவர்கள் «21ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், சர்வதேசவாதம், புதிய தேசியவாதம்» எனும் நூலை எழுதியிருக்கிறார். 500க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான ஆய்வு நூல் இது. இந் நாலின் வெளியீடு கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகமாகவே இப் பத்தி எழுதப்படுகிறது.

இந் நூல் அறிமுகத்துக்குச் செல்லுமுன்னர் இந்நூலாசிரியர் பற்றி சில வார்த்தைகளைக் குறிப்பிடுவது அவசியம். அறிவியலை ஆழமாக விசுவாசிக்கும் மு.திருநாவுக்கரசு அவர்கள், தமிழ் மக்களின் தேசிய, சமூக விடுதலைக்கான போராட்டம் பற்றியும், அதன் புவிசார், அனைத்துலகப் பரிமாணங்கள் பற்றியும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசியும் எழுதியும் வருபவர். ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அறிவுத் தளத்தில் இவரது பங்களிப்பு பாரியது. இவரது கருத்துகளும் எதிர்வுகூறல்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கவனத்துக்கெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஈழத் தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் ஓர் அவலமான சூழ்நிலை தவிர்க்கப்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. தான் தெரிவிக்கும் கருத்துகள் சில சமங்களில் உவப்பில்லாமல் இருந்தாலும் அதனைத் தெரிவிக்க வேண்டிய அறிவியல் நேர்மையை கடைப்பிடித்து அதனை உரிய இடங்களில் மு.திருநாவுக்கரசு அவர்கள் தெரிவித்தே வந்திருக்கிறார். இந்த அறிவியல் நேர்மையுடன்தான் தனது வரலாற்றுக் கடமையாகக் கருதியே அவர் இந் நூலை எழுதியுள்ளார்.

இந் நூல் பேசமுனையும் உட்கருப்பொளையும் இதனை எழுதுவதற்கு உந்துசக்தியாக அமைந்த அரசியற்சூழலையும் நூலாசிரியர் தனது மொழியில் பின்வருமாறு விபரிக்கிறார். இந்த விபரிப்பே இந் நூல் ஆக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்திவிடுகிறது. இனவழிப்புச் சூழலை எதிர்கொள்ளும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொண்டு மீண்டுவருவதற்கான அறிவியல் அறைகூவலாகவும், ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்குத் தூண்டும் ஒரு வழிகாட்டியாகவும் இந் நூலை நோக்க முடியும். நூலாசிரியர் கூறுகிறார்.

«மனித வரலாறெங்கிலும் விரவிக் கிடக்கும் தர்மம்-அதர்மம்நீதி-அநீதிநியாயம்-அநியாயம்பொறுப்புணர்வு-அலட்சியம்பற்றுறுதி-விசமத்தனம்மனிதத்துவம்-மிருகச்செயல்கள் என்பனவற்றை வரலாற்றுப் போக்கில் தொடர்வண்டிப்பாதையென இந்நூல் கோடு கீறிச் செல்கிறது

இந்நூல் தர்மத்திற்கும்அதர்மத்திற்கும் இடையேயான யுத்தத்தின் சுவாலைகளைமக்களின் நெஞ்சங்களில் பதியவைத்து உன்னதங்களை கனியவைக்க முயல்கிறதுதர்மத்தின் குரலாயும்அடிபணிய மறுக்கும் விடுதலைகளுக்கானஒளிக்கீற்றுக்களாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தின் வெளிப்பாடாய்உள்ளது.

முள்ளிவாய்க்கால் பெருந்துயரமே இந்நூலைஎழுதுமாறு எனக்கு ஆணையிட்டஆசானாகும்முள்ளிவாய்க்கால்பெருநெருப்பில் வாடா மலர்கள் பூக்கும்வசந்தங்கள் பிறக்கும்ஒரு புதியநாகரிகத்திற்கான தொட்டிலாகமுள்ளிவாய்க்கால் உலைக்களத்தை கையில்ஏந்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொருதமிழனுக்கும்தமிழிச்சிக்கும்புதல்வனுக்கும்புதல்விக்கும்உலகந் தழுவிய அனைத்துஉன்னத மனிதர்களுக்கும் உண்டு»

இந் நூலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றூக அமைவது மேலைத்தேய சிந்தனைமுறை பற்றிய அறிவுடனும் கீழைத்தேய சிந்தனைபற்றிய புரிதலுடனும் இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகும். இத்தகைய அணுகுமுறை பல எழுத்தாளர்களிடமும் அறிஞர்களிடமும் காணப்படுவதில்லை. இவ் இரண்டு சிந்தனைமுறைகளையும் கவனத்திற் கொண்டு பல்வேறு கோட்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும், சுவாரசியமான தகவல்களையும் இந்நூல் வழங்கிச் செல்கிறது. இதில் குறிப்பிடக்கூடியதொரு விடயம் தேசியவாதத்துக்கும் இனவழிப்புக்கும் உள்ள தொடர்பு பற்றியதாகும். தேசியவாதம் எவ்வாறு முகிழ்த்தெழுகிறது என்பதனைப் பொறுத்து அதன் நல்ல விளைவுகளும் தீய விளைவுகளும் அமையப் பெறும். யூதர்களை «கலாசார சிதைப்பாளர்கள்» என்று கூறி கூண்டோடு அழிக்க முயன்ற கிட்லரின் தேசியவாதத்தை இராட்சச தேசிய வாதம் (monster nationalism) என வகைப்படுத்தும் இந்நூல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு காரணமாக அமைவது சிங்களத் தேசியவாதம் «இராட்சச தேசியவாதமாக» வடிவெடுத்தமையே என அடையளாம் காண்கிறது.

பூகோளவாதம் (Globalism) என்பது ஒரு ஒரு சிந்தனைக் கோட்பாடு. இக் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்துதான் உலகமயமாக்கல் (Globalization) என்ற நடைமுறை தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது. இந் நூல் பூகோளவாதத்தின் அடிப்படைகளை பூமியின் தோற்றம், நவீன மனிதனின் தோற்றம், மனிதப்பரம்பலால் பூகோளம் இணைந்த முறை போன்ற நடைமுறைகளின் ஊடாக அடையாளம் கண்டு, பூகோளவாதத்தின் உட்கூறுகளைப் பற்றி அலசுகிறது.  காலனித்துவத்தால் வளர்ந்த உலகமயமாக்கல் பற்றியும் மதங்கள் உலகமயமாகியமை பற்றியும் அலசிச் செல்லும் இந் நூல் பூகோளவாதச் சிந்தனைமுறையின் அடிப்டைகளை தெளிவாக முன்வைக்கிறது.

சர்வதேசவாதம (Internationalism) என்பது உலகில் அரசுகள் தமக்கிடையிலிலான தொடர்புகளையும் உறவுகளையும் பேணிக்கோள்ளும் நடைமுறை தொடர்பான கோட்பாடுகளைக் கொண்டு வளர்ந்த ஓர் சிந்தனைமுறையாகும். அரசுகளுக்கிடையோன உறவுகளில் போர், வர்த்தகம், கூட்டுறவு போன்றவை முக்கியம் வாய்ந்தவை. ஆரம்பத்தில் சர்வதேசவாதமும் நாடுகடந்தவாதமும் (Transnationalism) வேறுபடுத்தப்படாத நிலை இருந்தபோதும் தற்போதய ஆய்வாளர்களில் பலர் சர்வதேசவாதத்தை அரசுகளுடனும் நாடுகடந்தவாதத்தை அரசுகள் அல்லாத மக்கள் சார்ந்த உறவுமுறையுடனும் இணைத்துச் சந்திப்பதைக் காண முடிகிறது.

மு.திருநாவுக்கரசு அவர்களின் நூலின் முக்கிய இழையாக இருப்பது பூகோளவாதம், சர்வதேசவாதம், தேசியவாதம் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பாகும். பூகோளவாதத்தையும் சர்வதேசவாதத்தையும் இணைக்கும் இழையாக புதிய தேசியவாதத்தை நூல் ஆசிரியர் நோக்குகிறார். இது சுவாரசியமானதொரு சந்திப்புப் புள்ளியாகும்.

சந்தை மற்றும் வர்த்தக வளர்ச்சி, தனியார் மூலதன வளர்ச்சி, தொழில்நுட்ட வளர்ச்சி போன்றவை பூகோளவாதத்துடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பது சமூக விஞ்ஞானிகளால் பரவலாக விவாதிக்கப்படும் ஒரு பேசுபொருளாகும். இவற்றின் வளர்ச்சி அரசுகளின் பாத்திரத்தில் எத்தகைய தாக்கத்தை எற்படுத்தியிருக்கின்றன, ஏற்படுத்தப் போகின்றன என்பது குறித்தும் விவாதங்கள் நடைபெறுகின்றன. தற்போதய பூகோளமயமாகும் உலக ஓழுங்கில் தேசியவாத்தின் நிலை என்பது குறித்தும் தீவிரமான விவாதங்கள் நடைபெறுகின்றன. இப் பின்னணியில் மு.திருநாவுக்கரசு அவர்கள் தனது நூலில் தேசியவாதம் குறித்து விரிவாக விவாதித்து, பூகோளவாதம், சர்வதேசவாதம், தேசியவாதம் ஆகியவற்றுக்கிடை யேயான தொடர்புகளை இனம் காண்கிறார். தற்போதய புதிய உலக ஒழுங்கில் தேசியவாதம் அடைந்திருக்கும் கட்டத்தை அவர் புதிய தேசியவாதம் என வரையறுக்கிறார். பூகோளவாதத்தின் வளர்ச்சி தேசியவாதத்தை வலுவிழக்கச் செய்யும் என்ற பலரது எதிர்வு கூறல்கள் தவறாகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு சூழலில், தேசியவாதம் வலுவிழந்து போகவில்லை, மாறாக ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது என நூலாசிரியர் அடையாளம் காண்பதை தேசியவாதம் குறித்த சிந்தனைமுறைக்கு வழங்கப்பட்டதொரு பங்களிப்பாக நோக்க முடியும்.

உலகப்பார்வையுடன் எழுதப்பட்ட இந்நூல் இலங்கைத்தீவின் தேசிய இனச்சிக்கல் தொடர்பாகவும் ஆழமாக வாதிக்கிறது. பூகோளவாதம், சர்வதேசவாதம் இவற்றை இணைத்து நிற்கும் புதிய தேசியவாதம் போன்றவையூடாகத் தோற்றம் பெற்றிருக்கும் புவிசார் மற்றும் பூகோள உறவுகளால் பின்னப்பட்டிருக்கும் சிலந்திவலையின் ஓரங்கமாக இலங்கைத்தீவின் தேசிய இனச்சிக்கல் இருக்கிறது இந் நூல் உணர்த்துகிறது.

அறிவுசார் அரசியலை முன்னெடுக்க விரும்பும் அனைவரும் இந் நூலைத் தவறாது படிப்பது பயனுள்ளதாகும்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=ad6d3987-7d0d-4e78-8b7d-b9f8bc38830e

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.