Jump to content

ஆண் சிங்கம் ஒன்று அழுகின்றது...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

06cpbs-hariharan-s_1079836g.jpg

 

கண் தெரியும்  தூரம் வரை…..

காலம் தின்று..துப்பிய ….,

எச்சங்களின் மிச்சங்களாய்….,

செத்துப் போன வீடுகளின்,

எலும்புக் கூடுகள் !


 

வெறுமைகளை மட்டுமே…,

வெளியே காட்டிய படி…,

உண்மைகளை ஆழப் புதைத்து..,

கண் மூடித் துயில்கின்ற…..,

வரலாறுகளின்  சுவடுகள் !

 

அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்..,

ஆளப் புதைந்திருக்கும் …..,

வைரவ சூலம் மட்டும்….,

எத்தனை வடை மாலைகளையும்,

எத்தனை தேசிகாய்களையும்,….,

தன் மீது சுமந்திருக்கும் ?

 

அந்தக் கருக்குவாச்சி மரம்,

எத்தனை காதலர்களின்,

இரவு நேரச் சந்திப்புக்களை…,

விரக தாபங்கள் சிந்தும்,

கற்பூர சத்தியங்களை….,

தன்னுள் புதைத்திருக்கும் ?

 

காவோலைச் சேலை இழந்து….,

கதியால் கரங்களால் …,

தங்கள் மானம் காத்து..,

காவிளாய்ச் செடிகளின் விரிப்பில்,

மறைந்து கிடக்கிறதே நிலம் !

 

ஒரு காலத்தில்,,

கரும் பேட்டுக் குஞ்சுகளாய்…,

வரம்புகளில் மரக்கறிகளும்,

வளவு நிறைந்த மிளகாய் மரங்களுமாய்.,

நான் செய்த தோட்டம் !

 

நத்தை பொறுக்கும் செண்பகங்களும்….,

மிளகாய் கடிக்கும் கிளிகளுமாய் …,

கல கலத்த தோட்டம்….!

 

எனது மகன் …,

உழக்கிய துலா கூட….,

இன்னும் நிமிர்ந்தே நிற்கிறது !

 

மகன் கனடாவிலும்,,,.

மகள் ஜெர்மனியிலும…..!

 

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

 

அக்கினி சாட்சியான.....,

வசிட்டர் வடக்கிலும்,

அருந்ததி தெற்கிலுமாய்....,

ஆரிட்டைப் போய் அழுகிறது ?

 

உனக்கென்னப்பா பிரச்சனை எண்டு....,

ஊரே பொறாமைப்  படுகுது !

 

எனக்கென்ன குறைச்சல் ?

ஆஸ்பத்திரி மாதிரி..,

எல்லா மருந்துகளும்...,

அலுமாரிக்குள்ள அடுக்கி இருக்கு !

ஆரோ ஒருத்தி வந்து..,

அடிக்கடி  சமைப்பாள் !,

 

பொறுங்கோ….வாறன் !

வல்லுவத்துக்குள்ள போன் சிணுங்குது !

 

ஒரு பேரனோட இங்கிலிசும்…,

மற்றப் பேரனோட ஜெர்மனும்..,

தமிழில கதைக்க வேணும் !

 

எனக்கென்ன குறைச்சல் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

 

அக்கினி சாட்சியான.....,

வசிட்டர் வடக்கிலும்,

அருந்ததி தெற்கிலுமாய்....,

ஆரிட்டைப் போய் அழுகிறது ?

 

 வெளியில் இருந்து வரும் எந்தச் சோகத்தையும் கடந்திடலாம், வயோதிபத்தில் உடல் கிடக்க ஊனை உருக்குவது இந்தச் சோகம்தான்.....!

அருமையான கவிதை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசிட்டர் வடக்கிலும் அருந்ததி தெற்கிலுமாய்... முதுமையில் தனிமையின் கொடுமையை ....அதிலும் ஆண்சிங்கங்கள் அனுபவிக்கும் தனிமை மிகக் கொடுமை. நல்லதொரு கவிதை நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

எனது மகன் …,

உழக்கிய துலா கூட….,

இன்னும் நிமிர்ந்தே நிற்கிறது !

என்ன புங்கை சிங்கம் அழவே மாட்டுது என்கிறார்கள்.நீங்கள் அழவைத்து விட்டீர்களே!

தோட்டம் செய்யும் போது ஆரம்ப காலத்தில் பட்டையில்த் தான் தண்ணி இறைப்போம்.அண்ணனுக்கு துலா மிதிப்பது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.ஆனபடியால் நான் தான் அனேகமான நேரங்களில் துலா மிதிப்பது.குத்துக்கால்களில் கைபிடிக்க தடிகள் கட்டியிருந்தும் சர்வ சாதாரணமாக ஒன்றிலும் தொடாமல் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருப்பேன்.

இப்போது நினைத்து பார்க்க கால்கள் கூசுகின்றன.என்னை பழைய காலத்துக்கு கொண்டு போய்விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

ஊரின் அழகும் அதனோடு ஒன்றிய வாழ்வுக்கும் அழைத்துச் செல்கின்றது உங்கள் ஆக்கம். . ஊரைப் பிரிவது உறவுகளை பிரிவது எம்மைச் சுற்றியிருந்த காட்சிகளை பிரிவது எல்லாம் என்றும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. என்னுமொன்றால் ஈடுசெய்ய முடியாதவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

06cpbs-hariharan-s_1079836g.jpg

-----

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

-----

எனக்கென்ன குறைச்சல் ?

ஆஸ்பத்திரி மாதிரி..,

எல்லா மருந்துகளும்...,

அலுமாரிக்குள்ள அடுக்கி இருக்கு !

ஆரோ ஒருத்தி வந்து..,

அடிக்கடி  சமைப்பாள் !,

------

எனக்கென்ன குறைச்சல் ?

பிள்ளைகள்,  பெரிதென்று... 
நோயாளி கணவனுக்கு அருகில் இருந்து... 
உதவி செய்ய வராத மனைவியை, திட்டாமல்...
எனக்கென்ன குறைச்சல்... என்று சொல்லும் வார்த்தைக்குள், 
வெளியே  சொல்ல முடியாத.... எத்தனை சோகம், மறைந்துள்ளது என்பது, அந்தப் பெரியவருக்கு மட்டும் தான் தெரியும்.

நல்லதொரு  கவிதை புங்கையூரான்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் யதார்த்தங்கள் கவிதைகளாய் ..... எமக்கு எந்த விதமான அனுபவங்கள் ஏற்படப் போகுதோ என்ற ஏக்கமும் கூடவே எழுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திக்கிற்கு ஒருவராக பிரிந்து வாழும் நிலையை நாமாகவே விரும்பினோமா? இல்லைத்தானே.

எந்தக் கண்காணாத தேசத்தில் இருந்தாலும் உயிரோடு இருந்தால் காணும் என்று வழியனுப்பிவிட்டு வீட்டு முகட்டையே பார்த்துக்கொண்டு காலம் கழித்த பெற்றோர்களை நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள்.

ஊருக்குப் போனபோது குழந்தைகள் இல்லாத குடியிருப்பாக எமது வீட்டையண்டிய பகுதி மிகவும் அமைதியான தனிமையில் இருந்தது. ஒவ்வொரு வீடுகளுக்கும் காவலாக முதியவர்கள்தான் இருக்கின்றார்கள். இன்னும் சில வருடங்களில் யாருமற்று வெறும் கூடுகளாக மாறும் என்பது புரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையின் வெளிச்சம் அழகாக காட்ட்ப்பட்டுள்ளது உறவுகள் இருந்து ஒட்டிக்கொள்ளவும் இல்லை உறவாடவும் இல்லை நரைத்த தாடியை இழுத்து பார்க்கவும் தளர்ந்த உடல்களில் ஏறி மிதித்து விளையாட பேரபிள்ளைகள் இல்லாத நிலையையும்   இயலாத சோகம் சொல்ல முடியாத  கவிதையாக நன்றாக இருக்கிறது  வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

புங்கையூரன் வணக்கம்,

மன்னிக்கவேண்டும் முதலில், பலர் அண்மைக்காலங்களில் நிறைய ஆக்கங்கள் படைத்து இருக்கின்றார்கள். ஒன்றையுமே பார்க்க/நிதானமாக இருந்து வாசித்து அறிவதற்கு முடியவில்லை. இன்று உங்கள் அற்புதமான இந்த கவிதையை வாசித்தேன். 

நீங்கள் சிறந்த கவிஞர், கதாசிரியர் என்று உங்கள் ஆக்கங்கள் மூலம் ஏற்கனவே கண்டறிந்து இருக்கின்றேன். அந்த வகையில் 'ஆண்சிங்கம் ஒன்று அழுகின்றது' உங்களின் இன்னுமோர் அழகிய படைப்பு. இந்த கவிதையின் நயங்கள், கற்பனை, வீச்சு எல்லாம் பொறுமையாய், உணர்வுடன் வாசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

நீங்கள் எடுத்துக்கொண்ட விடயம் பொதுவானதே, ஆனால் கூறிய முறை உண்மையில் அற்புதம். பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்~~~!!! :89_clap::89_clap:

வாத்திய கலைஞர் சிவமணி ஓர் இளம் கலைஞனுக்கு கூறிய அறிவுரையில் 'நாம் ரசிகர்களுக்கு வழங்கும் படைப்பு கோயிலில் பக்கதர்களுக்கு வழங்கப்படும் சுவாமியின் பிரசாதம் போன்றது' என்று குறிப்பிட்டார். உங்களின் இந்த கவிதையும் எனக்கு ஓர் பிரசாதமாகவே உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆண் சிங்கம் .... அழுவது  கொடுமை . அதிலும் ..வயதான காலத்தில்  தனிமை கொடியது . தற்கால (பெரிசுகள் ).  பெரியவர்களின்  உணர்வுகளைக் காட்டும் உங்கள் பதிவு  அருமை. அதுசரி அந்த வல்லுவம் என்பது   மடு பெட்டியா    ( மடிப்பெட்டியா ).. கடகமா ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 06/03/2018 at 11:03 PM, suvy said:

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

 

அக்கினி சாட்சியான.....,

வசிட்டர் வடக்கிலும்,

அருந்ததி தெற்கிலுமாய்....,

ஆரிட்டைப் போய் அழுகிறது ?

 

 வெளியில் இருந்து வரும் எந்தச் சோகத்தையும் கடந்திடலாம், வயோதிபத்தில் உடல் கிடக்க ஊனை உருக்குவது இந்தச் சோகம்தான்.....!

அருமையான கவிதை.....!  tw_blush:

 

On 06/03/2018 at 11:03 PM, suvy said:

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

 

அக்கினி சாட்சியான.....,

வசிட்டர் வடக்கிலும்,

அருந்ததி தெற்கிலுமாய்....,

ஆரிட்டைப் போய் அழுகிறது ?

 

 வெளியில் இருந்து வரும் எந்தச் சோகத்தையும் கடந்திடலாம், வயோதிபத்தில் உடல் கிடக்க ஊனை உருக்குவது இந்தச் சோகம்தான்.....!

அருமையான கவிதை.....!  tw_blush:

எமது சமூகத்தின் பார்வையில்....ஆண்கள் எதையும் தாங்கும் வல்லமை பெற்றவர்கள் என்ற கருத்து ஆழமாகப் புதைந்து கிடப்பதால்...அவர்களைப் பற்றி எவரும் கவலைப்படுவது குறைவு!

வெளிப்பார்வைக்கு ஒரு ஆணாதிக்க சமுதாயம் போல தோன்றினாலும்.. உண்மையில் ஆண்கள் தமது ஆதிக்கத்தை...இறுதி வரை வெளிப்படுத்துவதே இல்லை என்று கூறலாம்!

அவர்களின் சோகத்தையும் கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்ததன் விளைவு தான் இந்தக் கவிதை!

வரவுக்கும்...கருத்துக்கும் நன்றி...சுவியர்!

On 07/03/2018 at 7:03 AM, Kavallur Kanmani said:

வசிட்டர் வடக்கிலும் அருந்ததி தெற்கிலுமாய்... முதுமையில் தனிமையின் கொடுமையை ....அதிலும் ஆண்சிங்கங்கள் அனுபவிக்கும் தனிமை மிகக் கொடுமை. நல்லதொரு கவிதை நன்றிகள்

உண்மை தான்....காவலூர் கண்மணி!

ஆண்களைப் பலர் புரிந்து கொள்வதில்லை! 

அவர்களும் தங்கள் சோகங்களை வெளியே சொல்வதில்!

நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

 ஆண் சிங்கம் .... அழுவது  கொடுமை . அதிலும் ..வயதான காலத்தில்  தனிமை கொடியது . தற்கால (பெரிசுகள் ).  பெரியவர்களின்  உணர்வுகளைக் காட்டும் உங்கள் பதிவு  அருமை. அதுசரி அந்த வல்லுவம் என்பது   மடு பெட்டியா    ( மடிப்பெட்டியா ).. கடகமா ..

பொதுவாக ஆச்சி மார்....கொட்டைப் பெட்டி என்று பனையோலையால்..அல்லது புற்களினால் பின்னப்பட்ட பை கொண்டு திரிவார்கள்!

 

21.jpg

அதைப் போல அப்பு மார்.....துணியினால் தைக்கப்பட்ட...பல ...அறைகள் கொண்ட ஒரு பையைக் கொண்டு திரிவார்கள்!

அதற்குள்...வெத்திலை...பாக்கு...பாக்கு வெட்டி...சுண்ணாம்புக் கரண்டகம், சில்லறைக்காசு, தாள் காசு போன்ற பல அத்தியாவசியான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்!

அதை மடித்து....வேட்டி மடிப்புக்குள் மறைத்து வைத்த படி....நடந்து செல்ல முடியும்!

அதற்குள்...ஒரு செல்லிடத் தொலைபேசியையும் வைக்க முடியும்!

வருகைக்கும்....கருத்துக்கும்...நன்றி...நிலாக்கா!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/03/2018 at 9:00 AM, ஈழப்பிரியன் said:

என்ன புங்கை சிங்கம் அழவே மாட்டுது என்கிறார்கள்.நீங்கள் அழவைத்து விட்டீர்களே!

தோட்டம் செய்யும் போது ஆரம்ப காலத்தில் பட்டையில்த் தான் தண்ணி இறைப்போம்.அண்ணனுக்கு துலா மிதிப்பது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.ஆனபடியால் நான் தான் அனேகமான நேரங்களில் துலா மிதிப்பது.குத்துக்கால்களில் கைபிடிக்க தடிகள் கட்டியிருந்தும் சர்வ சாதாரணமாக ஒன்றிலும் தொடாமல் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருப்பேன்.

இப்போது நினைத்து பார்க்க கால்கள் கூசுகின்றன.என்னை பழைய காலத்துக்கு கொண்டு போய்விட்டீர்கள்.

நானும் கிட்டத் தட்ட உங்களைப் போலத் தான் ஈழப்பிரியன்!

நானும் தம்பியும்...மாறி..மாறித் துலா உழைக்க...அப்பா...பாத்தியைத் திருப்பித் திருப்பித் தண்ணீரை...மிளகாய்க் கண்டுகளுக்கு விடுவார்!

எங்களைப் பார்த்துத் தங்கச்சியும்....துலா மிதிக்க வெளிக்கிட்டது நடந்திருக்கு!

உண்மையான  சமத்துவம் எங்கள் வீட்டில் தான் இருக்கின்றது என்று அப்பா அப்போது சொல்லுவதுண்டு!

மனித உடல் என்பது.....ஒரு உன்னதமான....பொறியிலாளன் ஒருவனின்...அற்புதமான படைப்பு!

நாங்கள் சைக்கிள் ஓடுவது போலவே....முதுகு நாண் ...தன்பாட்டிலேயே சைக்கிளை..சமநிலை தவறாது பார்த்துக்கொள்கின்றது! எமது சிந்தனை....வேம்படி வீதியில் இருந்தாலும்....சைக்கிள் தன்ர பாட்டில போய்க் கொண்டேயிருக்கும்!

அது போலத் தான்....துலா மிதிப்பதும் என்று நினைக்கிறேன்!

வரவுக்கும்....கருத்துக்கும்....நன்றி! 

On 07/03/2018 at 11:18 AM, கந்தப்பு said:

உறவுகளைப் பிரிந்து இருப்பது கொடுமையிலும் கொடுமை. 

கொடிது...கொடிது....வறுமை...கொடிது என்றாள், ஔவைக் கிழவி...!

இனிமேல் பழமொழியை மாற்ற வேண்டும்!

கொடிது....கொடிது....உறவுகளின் பிரிவு...கொடிது..என்று..!

நன்றி....கந்தப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வரிகள் புங்கை. தனிமை பொல்லாதது, அதுவும் முதுமையில் தனிமை  அதை விட கொடிது. காலத்தின் கோலமாக நாங்களும் இந்த தலைப்புக்குள் புதைக்கப் பட்டுள்ளோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.