Sign in to follow this  
நவீனன்

``பயணங்களுக்கு பீரியட்ஸ் ஒரு தடையில்லை!" காவ்யா #PeriodsHygiene #WomenTravelers

Recommended Posts

``பயணங்களுக்கு பீரியட்ஸ் ஒரு தடையில்லை!" காவ்யா #PeriodsHygiene #WomenTravelers

 
 

நம்முடைய வீடுகளில் குடும்பத்துடன், பயணம் செல்ல முடிவுசெய்தால், காலண்டரை நோக்கியே பெரும்பாலும் பெண்களின் கைகள் போகும். காரணம், மாதவிடாய். ஆனால், `மாதவிடாய் நேரத்தில் நெடுந்தூர பயணம் போகலாம் பெண்களே' என்கிறது ஒரு வீடியோ. “ஏற்கெனவே பீரியட்ஸ் பற்றி நிறைய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளைச் செஞ்சிருக்கேன். அதையெல்லாம் வீடியோவா பண்ண நினைச்சேன். ட்ராவலுக்கு பீரியட்ஸ் ஒரு தடை கிடையாது” என்கிறார் காவ்யா. Exoticamp என்கிற ட்ராவல் ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து, பயணங்கள் மற்றும் ட்ரெக்கிங் சமயத்தில், மாதவிடாயை எப்படிச் சமாளிப்பது; மாதவிடாய் சுகாதாரத்தை எப்படிப் பேணுவது என்பது குறித்து வீடியோவாக்கி இருக்கிறார். மேலும், the red cycle மற்றும் suSTAINable MENstruation ஆகிய குழுக்கள் மூலம் தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறார், காவ்யா.

காவ்யா

 

``உங்களுக்குப் பயணத்தின்மீது ஆர்வம் வந்தது எப்படி?''

``சின்ன வயசிலிருந்தே ட்ராவலிங் ரொம்பப் பிடிக்கும். ‘பொம்பளப் புள்ளைத் தனியா ட்ராவல் செய்யறதா'னு என்னைப் போகவிடலை. அது ரொம்பவே சேலஞ்சிங் வேலையோனு எனக்கும் ஒரு சந்தேகம் வந்துடுச்சு. என் வீட்டுல கம்ப்யூட்டரும் நெட் கனெக்‌ஷனும், நான் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே இருக்கு. அதில், பயணங்கள் பற்றி நிறைய ரிசர்ச் செய்வேன். பிறகு, படிப்புக்காக சென்னைக்கு வந்ததும், வெவ்வேறு இடங்களிலிருந்து நண்பர்கள் கிடைச்சாங்க. வெவ்வேறு ஊர்களுக்குப் போக ஆரம்பிச்சேன். என் கணவரும் பயணத்தில் விருப்பமுடையவர். இந்தியா முழுக்க ஊர்கள், மலைகள் எனச் சுத்திட்டோம். அடுத்து, ஹிமாலயாஸ் போகலாம்னு இருக்கோம். ஜூலை, ஆகஸ்டில் பைக்லேயே போகலாம்னு பிளான்.''

`` வீடியோவில் மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தத்தை மரம், செடிகளுக்கு ஊற்றலாம்ன்னு சொல்லியிருந்தீங்களே...''

``ஆமாம். நம் உடலிலிருந்து வெளியேறும் ரத்தம்தானே அது. அதில், புரோட்டின், விட்டமின், மினரலுடன் நீர் சேர்ந்திருக்கும். செடி கொடிகளுக்கு உரமாக மாறும். ஆனால், நீங்க மென்ஸ்ட்ரூவல் கப் அல்லது துணி நாப்கின் பயன்படுத்தியிருந்தால்தான் அப்படி ஊற்றலாம். யூஸ் அண்டு த்ரோ நாப்கின்ல நிறைய கெமிக்கல் இருக்கும். இந்தியச் சமூகத்தில் மாதவிடாய் ரத்தம் அசுத்தமானதுன்னு கருதப்படுது. மாதவிடாய் ரத்தம் அசுத்தமானதுன்னா, நாம் எல்லாருமே அசுத்தமானவங்கதான். கருமுட்டைக்கு விந்து கிடைக்காததுதானே மாதவிடாயாக வெளியே வருது. அதனால், நாம் சிந்தும் ரத்தம் 100 சதவிகிதம் நல்ல ரத்தம்தான். இந்த மாதவிடாய் ரத்தத்தை மரம் செடிகளுக்கு உரமாக நார்வேயில் பயன்படுத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கு. இந்தியாவிலும் ஒரு காலத்தில் அப்படிச் செஞ்சிருக்காங்க. அது எழுத்துபூர்வமான ஆவணமாக இல்லை. நிறையப் பெண்களுக்கு, விழிப்புஉணர்வு வகுப்புகள் எடுத்திருக்கேன். அவர்களிடம் அந்த மாதிரி செடிகள் கருகிப்போகுதான்னு கேட்டதுக்கு, ‘அப்படியெல்லாம் ஆகலை. ஆனால், எங்களுக்கு அப்படிச் செய்யக் கூடாதுன்னு சொல்லி வளர்த்திருக்காங்களே'னு சொல்றாங்க.''

``பீரியட்ஸ் நேரத்து வலிகளை எப்படிச் சரிசெய்றது?''

``பீரியட்ஸின்போது வரும் வலிகளுக்கு மூன்று காரணங்கள் இருக்கு. கர்ப்பப்பையிலிருந்து சர்விக் வழியா ரத்தம் வர்ணும். எனவே, கர்ப்பப்பை வேகமா அதைத் தள்ளி, ரத்தத்தை வரவைக்கும். ஆனால், சர்விக் ரொம்பவே சின்ன துவாரம் உடையது. இதனால், சுவரில், ஒரு கையைவெச்சு தாங்கிட்டு, இன்னொரு கையை இடுப்புல வெச்சுக்கிட்டு, கால்களை முன்னே பின்னே நகர்த்தணும். அப்போது, சர்விக்சுக்குப் போதுமான செளகர்யம் கிடைக்கும். இந்த முறை, ‘அவிவா’ என்பவரால் 1970-களில் உருவானது. நம்ம ஊரில், ஒரு பெண் முதல் மாதவிடாயை எட்டும்போதே, வெளியே போகக் கூடாது; விளையாடக்கூடாதுன்னு சொல்லிடறாங்க. எனவே, உடற்பயிற்சியே இல்லாமல் போய்டுது. 15 நிமிடங்களுக்கு மிகாத எக்சர்சைஸ் செஞ்சாலே போதும். அதுவே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ரிவா மெத்தட்ல நிறைய உடற்பயிற்சிகள் இருக்கு. அதை, வாரம் மூன்று முறை செய்யலாம். அது ஹார்மோன்களைச் சுரக்கவைக்கும். அதனால், 18 வயதுக்குக் குறைவானவங்க செய்யக்கூடாது.

 

வலிக்கான இரண்டாவது காரணம், உடலிலிருந்து குறைவான ரத்தத்தை இழந்தபோதும், நீரை நிறைய இழக்கிறோம். நீர் அருந்தாமல் இருந்தால், வயித்து தசைப் பகுதியில் வலி வரும். யாரோ அடிக்கிற மாதிரியே இருக்கும். உடல் முழுவதுமே, ஒரு குடைச்சலான வலி இருக்கும். இது ஆண்களுக்கும் பொருந்தும். பெண்களோ கழிவறை வசதி குறைவான காரணத்தால், தண்ணீரே குடிக்க மாட்டாங்க. இது தப்பு. நிறையத் தண்ணீர் குடிக்கணும். ஒருவர், ஒவ்வொரு 15 கிலோவுக்கும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கணும். 45 கிலோ எடை உள்ள ஒருத்தர் ஒருநாளில் மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கணும்.

அடுத்து, சாப்பாடு மற்றும் சத்துக் குறைவினால் வலி வரும். இப்போ அது கொஞ்சம் மாறியிருந்தாலும், இன்னும் உடல் பராமரிப்பில் பின்தங்கியே இருக்கோம். மாதவிடாய் காலத்தில் மட்டுமன்றி, எப்போதுமே நியூட்ரிஷியன்ஸ், அயர்ன், புரோட்டின் சத்து நிறைந்த உணவைச் சாப்பிடணும். ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கணும். மன அமைதி முக்கியம். சுகாதாரமான, பீரிடியட்ஸ் அவசியம். இதையெல்லாம் பின்பற்றினால், வலிகளைக் குறைக்கலாம்.''

``சிலருக்கு மாதவிடாயின்போது வாந்தி, மயக்கம் மாதிரியான உணர்வுகள் வருமே. அந்த நேரத்தில் ட்ராவல் கஷ்டமாச்சே?''

``மாதவிடாயின்போது ஏற்படும் உடல் பிரச்னைகள் பெரும்பாலும் சைக்கோசொமேட்டிக் பிரச்னையே. டயர்ட்டா ஃபீல் பண்ணுவோம். அது மூளைக்குக் கடத்தப்படும். அதனால், இன்னும் டயர்ட்டா ஆகிடுவோம். இந்த நெகட்டிவ் எண்ணத்தை விட்டு, மனசை எனர்ஜிடிக்கா வெச்சுக்கணும். இரண்டாவது காரணம், சிலருக்கு உடலமைப்பே அப்படித்தான் இருக்கும். அவங்க ட்ராவல் செய்யாம இருக்குறதே நல்லது. நாங்க `ஆர்த்தவ யானம்’ என்கிற விழிப்புஉணர்வு நிகழ்வ, சென்ற வருடம் நவம்பர்-டிசம்பர்ல, வட கேரளா தொடங்கி திருவனந்தபுரம் வரைக்கும், எல்லா மாவட்டங்கள்லையும் செஞ்சோம். அந்தச் சமயத்துல எனக்கு பீரியட்ஸ் வந்தது. ஆனா, அது எனக்கு இன்னும் உற்சாகத்ததான் தந்தது. அந்த அளவிற்கு எனர்ஜிடிக்கா நான் இதுவரை உணர்ந்ததில்ல. என்னோட வாழ்க்கைலையே, ரொம்பவே நல்லா வந்த நிகழ்வுகள்ல அதுவும் ஒண்ணு. அதுவும் ஒவ்வொரு நாளும், மூனு நாளுன்னு வகுப்புகள் இருந்தது. ஆனாலும், எனக்குக் கஷ்டமா இல்ல''

மாதவிடாய் குறித்த வகுப்பொன்றில் - காவ்யா

``நீங்க அதிகமா துணி நாப்கின் பயன்படுத்தறதா சொல்றீங்க. அந்த வாடையை எப்படிச் சமாளிக்கிறது?''

``உண்மையைச் சொல்லணும்ன்னா, துணி நாப்கினில் மோசமான ஸ்மெல் வராது. ரத்தத்திலிருந்து சிறிய அளவில்தான் `ரா’ ஸ்மெல் வரும். நாம் பயன்படுத்தும் நறுமணமூட்டப்பட்ட நாப்கின்களில் ரத்தம் இணையும்போதுதான் அந்த மோசமான ஸ்மெல் வருது. உதாரணத்துக்கு, உடல் வியவையின் நாற்றம் தாங்கக்கூடிய அளவே இருக்கும். அதனுடன் பாடி ஸ்ப்ரே இணைந்தால்தான் மோசமா வரும். அப்படித்தான் இந்த ரத்த வாடையும். என்னிடம் கேட்கிறவங்களுக்கு, நார்மல் நாப்கின்களையே பயன்படுத்த சொல்வேன். நல்ல ரிசல்ட்டைச் சொன்னதும், துணிக்கு மாறச் சொல்லுவேன். இன்னொரு விஷயம், ஸ்ட்ரெஸ்னாலும் ரத்தத்தில் வாடை அதிகமாக வாய்ப்பிருக்கு''

``மென்ஸ்ட்ரூவல் கப், துணி நாப்கின் இரண்டையும் எப்படிச் சுத்தம் செய்வது?''

``மென்ஸ்ட்ரூவல் கப்பிலிருந்து, அந்த ரத்தத்தை டயல்யூட் செஞ்சு, செடிக்கு ஊற்றிடலாம். அதன்பின் பயன்படுத்திக்கலாம். பயணத்தின்போது ஒருவேளை தண்ணீர் கிடக்கலைன்னா, கழுவாமலேயே இரண்டு முறை பயன்படுத்தலாம். துணி நாப்கினை, குளிர்ச்சியான தண்ணீரில் போட்டு 1-2 மணி நேரம் ஊர வைக்கணும். பின்பு, கொஞ்சமா சோப் போட்டு, வாஷிங் மெஷின் அல்லது கையால் துவைச்சுடணும். பயணங்களின்போது, தண்ணீர் இல்லைன்னா, பௌச்ல போட்டுக்கிட்டு, வீட்டில் வந்து வாஷ் பண்ணிடலாம். பீரியட்ஸ் சமயத்தில் மட்டுமன்றி, எப்போதுமே ரெஸ்ட் ரூமைப் பயன்படுத்தாமல் இருக்கிறது அன்ஹைஜீனிக். அதிலும், ட்ரெக்கிங் போன்ற பயணங்களின்போது, வெட்டவெளியைப் பயன்படுத்தும் நிலை வரும். தண்ணீர் கிடைச்சால் போதும். அதுதான் முக்கியம். நான் பெரும்பாலும் துணி நாப்கினையும், ஸ்விம்மிங், ஹை ட்ரெக்கிங் செய்யும் போது மட்டும் மென்ஸ்ட்ருஅல் கப்பையும் பயன்படுத்துவேன்''

பைக் ஹேண்டிலில் காயவைக்கப்பட்டிருக்கும் துணி நாப்கின்``உங்க கணவருடைய பைக்கில், உங்க நாப்கினை காயவைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம்ல பதிவிட்டிருந்தீங்களே...''

``அந்த ஐடியா என்னோடதுதான். அந்தப் புகைப்படத்தில் காட்ட முடியாததும் நிறைய இருக்கு. அது மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் போனபோது நடந்தது. அந்தப் பயணம் முடிஞ்சதுக்குப் பிறகு வரவேண்டிய மாதவிடாய், முன்னாடியே வந்துடுச்சு. ட்ரிப்பை கேன்சல் செஞ்சிடலாமானு யோசிச்சேன். என் கணவர்தான், `நீ இந்த ட்ரிப்புக்கு எவ்வளவு ஆசைப்பட்டேனு தெரியும். அதனால் தொடர்வோம்'னு சொன்னார். நான், ‘மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்திக்கிறேன்' சொன்னதுக்கு, `உனக்குத் துணி நாப்கின்தான் வசதின்னு தெரியும். அதையே யூஸ் பண்ணு’னு சொல்லிட்டார். 18 மணி நேரம் ஒவ்வொரு நாளும் தொடர் பயணம். நாங்க ஹோட்டலில் தங்க மாட்டோம். கிடைக்கும் இடத்தில் கேம்ப் போட்டுப்போம். அப்போ, பயங்கர குளிர். தண்ணிருக்குப் பக்கத்திலே போக முடியலை. என் கணவர்தான், நாப்கினை வாஷ் பண்ணித் தந்தார். அதை பைக் மேலே காயவெச்சோம். அந்த நேரம், எனக்கு வலியும் இருந்துச்சு. ஒவ்வொரு டோல் வரும்போதும், எக்சர்சைஸ் செஞ்சேன். கணவர் ரொம்பவே உதவினார்''

``மென்ஸ்ட்ரூவல் கப் வெவ்வேறு சைஸ்களில் கிடைக்கணும். ஆனால், இந்தியாவில் இது ஒரே சைஸ்லதான் கிடைக்குது. அது எல்லாருக்கும் எப்படிப் பொருந்தும்?''

``செக்ஸுவல் இன்டர்கோர்ஸ் வைத்துக்கொள்வதைவிட கப் சிறியதுதான். நாம் பெரும்பாலும் வெஜைனாவில் எதையும் வைப்பதில்லை என்பதால், அது ஒருவித அச்சத்தை அளித்து, பெரியதாகத் தெரிகிறது. உடல் வளர்ச்சி முழுமையாக 18 வயது ஆகும் என்பதால், அதைத் தாண்டிய பெண்கள் வைத்துக்கொள்ளலாம். அல்லது அம்மாக்கள் பயன்படுத்தியிருந்தால், அவர்களின் மேற்பார்வையில், முதல் மாதவிடாயின்போதே பயன்படுத்தலாம். சில வெப்சைட்ல வெவ்வேறு சைஸ் கப்புகள் கிடைக்குது. ஆனா, இங்கு பொதுவா கிடைக்கிற மென்ஸ்ட்ரூவல் கப், எல்லோருமே பயன்படுத்தக்கூடியதுதான். பெரிய கப்புகள, நார்மல் டெலிவரி செய்த பெண்கள் பயன்படுத்திக்கலாம்''

``உங்கள் வீடியோ பதிவுக்கு மோசமான விமர்சனங்களும் வந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

 

``அதற்கு அங்கேயே பதிலும் கூறியிருக்கிறேன். ஆண்-பெண் உடல் பற்றிய அறியாமையே இதுபோன்ற கமென்டுகளுக்குக் காரணம். நாம் பெரும்பாலும் ரீபுரொடக்டிவ் சிஸ்டம் பற்றி பேச மாட்டோம். செக்ஸுவல் எஜுகேஷன் நிகழ்ச்சிக்காக நிறைய அரசுப் பள்ளிகளுக்குப் போயிருக்கேன். இதை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை என ஆசிரியர்கள் சொல்றாங்க. இப்படிப் பேசப்படாத விஷயத்தை, தவறாகப் புரிந்துகொள்கிறவர்கள் இதுமாதிரியான கமென்டுகளையே வெளிப்படுத்துவர். இந்தத் திட்டுவதற்கான வார்த்தைகள் எல்லாமே, பெண்-ஆண் உறுப்புகளையே குறிக்கிறது. இதையெல்லாம் பெரிதுப்படுத்த வேண்டாம்னு நண்பர்கள் சொன்னாங்க. நமக்கு அவார்னெஸ்தான் முக்கியம்''

https://www.vikatan.com/news/womens/119594-dont-skip-trekking-for-periods-trekking-lover-kavya-explains-how-to-manage-periods-during-travel.html

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this