Sign in to follow this  
நவீனன்

அப்பவே அப்படி கதை!

Recommended Posts

7 hours ago, நவீனன் said:

வைதேகி காத்திருந்தாள் - அப்பவே அப்படி கதை!


 

 

vaidheki-kaathirundhal-appave-appadi-kadhai

வைதேகி காத்திருந்தாள்

 

காதலை மையப்படுத்தி வந்த படங்கள் ஏராளம். காதலர்களைச் சேர்த்து வைப்பதற்குப் போராடும் படங்களும் நிறைய உண்டு. அப்படி, காதலை மையப்படுத்தியும் காதலர்களைச் சேர்த்துவைக்கப் போராடவுமான படமாக அமைந்ததுதான் வைதேகி காத்திருந்தாள்.

1984ம் ஆண்டு, ஜூன் மாதம் 10ம் தேதி ரிலீசான படம், வைதேகி காத்திருந்தாள். ஜூன் மாதம் பள்ளி திறக்கும் காலம். எனவே படத்தை முன்பே ரிலீஸ் செய்யவேண்டும் என்று பரபரத்து பரபரப்பாவதெல்லாம் இந்தக் காலம். கிட்டத்தட்ட, படம் வெளியாகி, 34 வருடங்களாகிவிட்டன. நடிகர் விஜயகாந்த், திரையுலகுக்கு வந்து இது 40வது வருடம். ஆக, சினிமாவுக்கு வந்த ஆறாவது வருடத்தில் இப்படியொரு படம் கிடைத்தது விஜயகாந்திற்கு.

 

சரி... காத்திருக்கும் வைதேகியை முதலில் பார்ப்போம்.

அந்தக் கிராமத்தில், தண்ணீரை தோளில் சுமந்து ஊர்மக்களுக்குத் தரும் வெள்ளைச்சாமி. அவனுக்குக் கோயிலும் குளத்தாங்கரையுமே இருப்பிடம். அந்த ஊரில்தான் வசிக்கிறாள் வைதேகி. பரதம் தெரிந்தவள். நட்டுவனாரின் மகள். பாவம்... கல்யாணம் நடந்த அரைமணி நேரத்தில் கணவனைப் பறிகொடுத்தவள். அந்தத் துக்கத்தாலேயே அவளின் அப்பா, மதுவில் மறக்க நினைக்கிறார்.

தாகத்துக்கு தண்ணி தரும் வெள்ளைச்சாமிக்கு ஒரு பழக்கம். இரவாகிவிட்டால் பாடுவான். அது அந்த ஊரையே தாலாட்டும். மகிழப்பண்ணும். மனதை வருடும். மயக்கும்.

இந்த கிராமத்துக்கு வருகிறான் ஒருவன். வறுமை, சொந்தமில்லை, வேலையும் இல்லை. அவனுக்கு ரேஷன்கடையில் வேலை கிடைக்க, வைதேகி வீட்டு ஒரு போர்ஷனில் தங்குகிறான்.

அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் பஞ்சமில்லாத இந்த ஊரில் வெள்ளிக்கிழமை ராமசாமி என்பவன், ரவுடித்தனமும் ரவுசுத்தனமும் பண்ணுகிறான். கடைக்காரர்களிடம் மாமூல் வாங்குவதுதான், அவனது மாமூல் வாழ்க்கை. அவனுடைய தங்கை செங்கமலத்துக்கும் அந்த ரேஷன்கடை இளைஞனுக்கும் காதல் மலர்கிறது.

இதனிடையே, அந்த வெள்ளைச்சாமி, எவருடனும் வாய் திறந்து பேசாத வெள்ளைச்சாமி, சேவையும் பாடுதலும் மட்டுமே இருக்கிற வெள்ளைச்சாமி, கோயில் சுவரில் வைதேகி வைதேகி வைதேகி என எழுதிவைக்க, விஷயம் ஊரெங்கும் பரவுகிறது. இதில் ஆவேசமான வைதேகி, வெள்ளைச்சாமியிடம் வந்து, ‘ஏன் எம்பேரை எழுதினே’ என்று கேட்கிறாள். திட்டுகிறாள். அழுகிறாள். கெட்டபேர் வந்துவிட்டதே என்று கைபிசைந்து தவிக்கிறாள்.

1535188871.jpg

யார் கேட்டும் பேசாத வெள்ளைச்சாமி, வைதேகிக்காகப் பேசுகிறான். ‘நான் எழுதினது உண்மைதான். ஆனா வைதேகின்னு உங்களை நினைச்சு எழுதலை’ என்கிறான். வெள்ளைச்சாமியின் ப்ளாஷ்பேக் விரிகிறது.

வெள்ளைச்சாமியின் மாமன் மகள். அவள் பெயரும் வைதேகி. மாமனே கதியெனச் சுற்றிச் சுற்றி வருகிறாள். ஆனால் விருப்பம் இருந்தாலும், பிரியம் உண்டுதான் என்றாலும், அவளை நோகடித்துக்கொண்டே இருக்கிறான். சீண்டிக்கொண்டே ரசிக்கிறான். ஒருகட்டத்தில், தன் அம்மாவின் அண்ணன் மாப்பிள்ளை கேட்டு வர, மன்னிக்கணும். நான் வைதேகியைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என்கிறான். ஆனாலும் வைதேகியிடம் கடைசியாய் ஒரு விளையாடல். அந்த விளையாட்டுதான் வினையாகிப் போகிறது. விஷம் குடித்து, செத்துப்போகிறாள். துடித்துப் போகிறான். துவண்டுபோகிறான். சொத்துசுகம், வீடு வாசல் என சகலத்தையும் விட்டுவிட்டு, எங்கோ புறப்படுகிறான். இந்த ஊருக்கு வருகிறான். ‘ஒரு டம்ளர் தண்ணி இல்லாததால என் வைதேகி இறந்துபோனா. அதனாலதான் இந்த ஊருக்கே தண்ணி கொண்டாந்து கொடுத்துட்டிருக்கேன்’ என்று சொல்ல, பிளாஷ்பேக் முடிகிறது.

அதைக் கேட்டு இந்த வைதேகி, நட்டுவனாரின் மகள் வைதேகி, விதவை வைதேகி அழுகிறாள். ‘ஒரு சொட்டுத் தண்ணி இல்லாததால, உன் வைதேகியை நீ காப்பத்தமுடியல. ஆத்துல தண்ணி அதிகம் இருந்ததால, என் வாழ்க்கை இப்படி ஆயிருச்சு’ என்று ப்ளாஷ்பேக் சொல்கிறாள்.

இந்த வைதேகி, தன் வீட்டில் குடியிருக்கும் ரேஷன் கடை இளைஞனின் செயல்களால், தன்னை விரும்புகிறானோ என ஆவல்கொள்கிறாள். ஒருகட்டத்தில் அப்படியான ஆசையை வளர்த்துக்கொள்கிறாள். ஆனால் அவன், வைதேகியை அழைத்து ‘நானும் செங்கமலமும் காதலிக்கிறோம்’ என்று சொல்ல, இடிந்து போகிறாள். உடைந்த போன அப்பா இறந்தேபோகிறார். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை ராமசாமிக்கு விஷயம் தெரிய, தங்கையைப் பூட்டிவைக்கிறான். அவள் எப்படியோ செத்துப்போவேன் என தகவல் தருகிறாள். அவர்களைச் சேர்த்துவைக்க வெள்ளைச்சாமியை நாடுகிறாள். வெள்ளைச்சாமியின் துணையுடன் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்களா, அவளின் அண்ணனையும் ஆட்களையும் வெள்ளைச்சாமி என்ன செய்தான், வைதேகியின் நிலை என்ன என்பதை தெள்ளிய திரைக்கதையில் வடித்துத் தந்ததுதான் வைதேகி காத்திருந்தாள்.

வெள்ளைச்சாமியாக விஜயகாந்த். வைதேகியாக ரேவதி. இன்னொரு வைதேகியாக பரிமளம். வெள்ளிக்கிழமை ராமசாமியாக ராதாரவி. நட்டுவனாரும் வைதேகியும் அப்பாவுமாக டி.எஸ்.ராகவேந்தர். தைத்துப் போடப்பட்ட அழுக்கு உடையும் பரட்டைத் தலையும் தாடியுமாக விஜயகாந்த். அநேகமாக, மிக கனமான, கேரக்டர் ரோல் செய்தது இதுவே முதல்படமாக இருக்கும் அவருக்கு!

விதவைப் பெண் ரேவதி. அப்படியொரு சோகப்பொருத்தம் அவர் முகத்துக்கு உண்டு. அதைக் கொண்டு கேரக்டரை மனதில் நிறுத்தியிருப்பார். ராதாரவியின் மேனரிஸமும் நடிப்பும் அசத்தல். ஆனாலும் ஒரு ரவுடி, தங்கையைப் பூட்டிவைக்கிறார். ஆனால் அந்தப் பயலை பெரிதாக ஒண்ணுமே செய்யலியே என்று அப்போது யோசிக்கத் தோன்றவில்லை. இப்போது கேட்கத்தோன்றுகிறது.

படத்தில் ஆங்காங்கே ஆல் இன் ஆல் அழகுராஜா வருகிறார். அவர்தான் கவுண்டமணி என்பது, சொல்லாமலேயே தெரிந்திருக்கும். எப்படி? இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அத்தனை ஃபேமஸாயிற்றே!

1535188931.jpg

கவுண்டமணியும் செந்திலும் அடிக்கும் லூட்டி, மறக்கவே முடியாது. தனியே இருக்கும்போது யோசித்தாலே போதும்... களுக்கென்று சிரித்துவிடுவோம். ‘கோழி குருடா இருந்தா என்னடா. குழம்பு ருசியா இருக்காங்கறதுதான் முக்கியம்’ என்ற வசனம் ஏக பாப்புலர். ‘பொய் சொல்லாதீங்கண்ணே. இது எப்படி எரியும்ணே?’ என்று உடைத்துவிட, இருண்டுபோயிருக்கும் கவுண்டமணியிடம், ‘ஏங்க... இங்கே ஆல் இன் ஆல் அழகுராஜாங்கறது யாரு? பொண்ணுக்கு சாயந்திரம் சீரு வைக்கணும். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு வாடகைக்கு வேணும்’ என்று கேட்க... ‘ஏங்க... பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா. இந்த தீப்பந்தம்கீப்பந்தம்...’ என்று செய்வதும் சொல்வதும் கவுண்டரின் நக்கல்நையாண்டி. அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கேதான் வேணுமா? இன்றைக்கும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

விஜயகாந்த் நடிப்பு பிரமாதம். சோகமும் சரி, சண்டையும் சரி... இரண்டிலுமே மனிதர் பாய்ச்சல் காட்டியிருப்பார். கோகிலாவின் பெயர்தான் என்று நினைத்து, கோகிலாவின் பாட்டி பெயரான புஷ்பாவை, புஷ்பாபுஷ்பா என்று கூப்பிடுவதும் ‘எம் புருசன் என்னை புஷ்ஷு புஷ்ஷுன்னு செல்லமாகக் கூப்பிடுவாரு’ என்று மீனாட்சிப்பாட்டி சொல்லுவதும் செம ஹிட்டு.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கம். அவர் படமென்றால் லைட்டான கதை, வெயிட்டான திரைக்கதை, சிரிக்கவைக்கும் காட்சிகள், செண்டிமெண்ட் சீன்கள், இயற்கை எழில் ஏரியாக்கள், இசைக்கு முக்கியத்துவம் என கலந்துகட்டி இருக்கும். இதுவும் அப்படித்தான்!

அப்போது திரைக்கு முன்னே வராவிட்டாலும் இப்போது பார்க்கும் போது, அவரின் குரல் மட்டும் பல இடங்களில் நடித்திருக்கிறது.

‘ஆறு பாட்டு தரேன். ஒரு கதை ரெடிபண்ணிக்கோ’ என்று இளையராஜா, ஆர்.சுந்தர்ராஜனை அழைத்துச் சொன்னதாகவும் அதுவே இந்த வைதேகி காத்திருந்தாள் படம் என்றும் சொல்லுவார்கள். ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ, மேகம் கருக்கையிலே, அழகு மலராட, காத்திருந்து காத்திருந்து... என ஒவ்வொரு பாட்டு திரையில் வரும்போதும் கைத்தட்டினார்கள் ரசிகர்கள். அதுதான் இளையராஜா. அதுதான் அவரின் இசை. அதுதான் அவரின் கணக்கு. இன்றைக்கும் இரவுகளில் பாடல் கேட்போரின் பட்டியலுக்குள், இந்தப் பாடல்களில் ஏதேனும் இரண்டுபாடல்களாவது பதிவேற்றிவைத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ரசிகர்கள். ஜெயச்சந்திரனின் குரல் மயக்கிப்போடும்.

டி.எஸ்.ராகவேந்தரின் முதல் படம் இது. கவுண்டமணி, செந்தில், கோவைசரளாவின் கூட்டணிப்படங்களிலும் இது முதலாவதாக இருக்கலாம்.

தூயவன் தயாரித்திருப்ப, பஞ்சு அருணாசலமும் படத்தயாரிப்பில் ஏதோ உதவியிருக்கிறார் போல! வழக்கம்போலவே, ஆர்.சுந்தர்ராஜனின் இந்தப் படத்துக்கும் ராஜராஜன் ஒளிப்பதிவு. அத்தனை குளுமை.

இது 1984ன் ஸ்பெஷல் படம். படம் தவிர்த்த இன்னொரு ஸ்பெஷல். அது விஜயகாந்துக்கான ஸ்பெஷல். ஆமாம்... 1984ம் ஆண்டில், விஜயகாந்த் மொத்தம் 18 படங்களில் நடித்தார்.

ஜனவரி1, குடும்பம், இது எங்க பூமி, சத்தியம் நீயே, வைதேகி காத்திருந்தாள், வீட்டுக்கு ஒரு கண்ணகி, சபாஷ், மாமன்மச்சான், வெள்ளைப்புறா ஒன்று, நல்லநாள், குழந்தை யேசு, நூறாவது நாள், வெற்றி, மெட்ராஸ் வாத்தியார், தீர்ப்பு என் கையில், மதுரைசூரன் என்பது முதலான 18 படங்கள் நடித்தார் விஜயகாந்த். இந்த சாதனையை இதுவரை எந்த நடிகரும் நிகழ்த்தியதில்லை. இதில் பல படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் திருப்தியைக் கொடுத்தன.

பாடல்களால், பட டைட்டில் தெரிந்திருக்கும் இந்தத் தலைமுறையினருக்கு. படத்தையும் பார்த்துவிட்டால், வைதேகியையும் பிடித்துவிடும், ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு பாடலைப் போலவே!

https://www.kamadenu.in/news/cinema/5171-vaidheki-kaathirundhal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

 

இப்பொழுதுதான் சூரியன் FM இல் ராசாத்தி ஒன்ன காணாத பாட்டை கேட்டுவிட்டு யாழைத்திற‌ந்தால் வைதேகி காத்திருந்தால் படத்தின் நினைவுகள் 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this