சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
சுப.சோமசுந்தரம்

புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு

Recommended Posts

புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு

              

               மதுரை பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவின் முதல் பட்டமளிப்பு விழாப் பேருரை இன்றளவும் பார் போற்றும் உரை. பள்ளி மாணவப் பருவத்திலேயே அவ்வுரையை மீண்டும் மீண்டும் வாசித்து இன்புற்றிருக்கிறேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் குழுமத் தலைவராய் ( Dean, College Development Council )  பணியாற்றிய காலத்தில், கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. அறிஞர் அண்ணாவை நினைத்தேன். "நமக்குமா?" எனும் எண்ணம் தோன்றியது. சரி, புலியைப் பார்த்து பூனை போட்ட சூடாகத்தான் இருக்கட்டுமே என என்னையே தேற்றினேன்.

 

            இதில் பேசாப் பொருள் எதுவுமில்லை. மாணவர் சமூகத்திடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய பொருள் உண்டு.  இதோ !  பூனை போட்ட சூடு :

 

            நகர்ப்புறத்தினின்றும் தொலைவில் ஒரு அசல் கிராமப்புறத்தில் அமைந்து சமுதாயத்திற்குச் சிறந்த பணியாற்றும் இப்பெருமைமிகு கல்லூரியின் செயலாளர் அவர்களே ! இக்கல்லூரியின் சமூக உணர்வுமிக்க முதல்வர் அவர்களே ! ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் பெருமக்களே ! பெற்றோரே ! மாணவச் செல்வங்களே ! அனைவர்க்கும் என் அன்பு வணக்கம்.

 

            இனி இவ்வுரை பார் போற்றவுள்ள, இப்பாரினை மாற்றவுள்ள இளம் பட்டதாரிகளை நோக்கியதே.

 

                பட்டம் பெறும் உங்கள் அனவருக்கும் இது சாதனை நாள். நீங்கள் மட்டுமல்லாமல் உங்களை உருவாக்கிய பெற்றோர், உற்றோர், ஆசிரியர் அனைவரும் எதிர்பார்த்திருந்த நன்னாள். உங்கள் வாழ்வில் ஒளிரப் போகும் தீபத்தை உங்கள் கையில் எடுத்துத் தருவது நாங்கள் பெற்ற பேறு. வண்ணக் கனவுகளுடன் இவ்வாயிலை நீங்கள் கடக்கும் தருணம் உங்களை வாசல் வரை வந்து வழியனுப்புவது எமக்குப் பேரானந்தம். தீமையை வேரறுத்து நன்மையை நிலைநாட்ட வீறுகொண்டு எழுந்து நிற்கும் போராளிகளான உங்களுக்கு நாங்கள் பாடும் பரணி இது.

 

            கற்பவை அனைத்தும் ஈண்டு கசடறக் கற்றீர்கள். 'கற்ற வழி நிற்றல்' சமூகம் உங்களிடம் கொண்ட எதிர்பார்ப்பு. வாழ்வில் பூஞ்சோலையாய் அமைந்த மாணவர்ப் பருவத்தினின்று உங்களில் பெரும்பாலானோர் புறவுலகைக் காணச் செல்கிறீர்கள். இங்கே சோலையில் வாழ்ந்த நீங்கள் வெளியுலகில் கரிசல் காட்டையும் கருவேலங்களையும் காணலாம். புல்தரையிலேயே நடந்த உங்களுக்குக் கரடுமுரடான பாதை அமையலாம். நேர்மையின்மையும் கயமையும் ஊழலும் நிறைந்த இருள்சூழ் உலகில் மனிதர்க்கு நம்பிக்கை நட்சத்திரமாய் நீவீர் ஒளிர்வீர் என்பது பெருமைமிக்க இக்கல்லூரியின் எதிர்ப்பார்ப்பு.

 

            நாம் பணிசெய்யும் நிறுவனத்திலோ அலுவலகத்திலோ நம்மைச் சுற்றி அனைவரும் ஊழலில் திளைக்க, நாம் மட்டும் சீரிய வழியில் செல்வது எங்ஙனம் என வாதிடுவது கோழைத்தனம். மாந்தர் அனைவரும் நேர்வழி நின்றால், நேர்மை என்ற சொல்லே தோன்றியிராது.

            'ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

            சான்றோர் பழிக்கும் வினை'

எனும் அறம் சார்ந்த வாழ்வே வீரம் செறிந்த வாழ்வு. இதற்கான நெஞ்சுறுதி பெறாதோர் கற்றதனாலாய பயன்தான் என்ன ? எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து நீங்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ எம் வாழ்த்துக்கள்.

 

            'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா' எனும் சொல்லுக்கு இணங்க பெண்மையைப் போற்றும் பேராண்மை மிக்கவராய் இப்பூவுலகில் நீவீர் அனைவரும் வாழ்தல் வேண்டும். இன்றைய திரைப்படங்களில் கதையின் நாயகர்கள் கூட பெண்களை வக்கிரமாய்க் கிண்டல் செய்யும் வில்லத்தனம் அரங்கேறுவதை நீங்கள் கண்டிருக்கலாம். இத்தகைய பாதகங்களால் நம்மில் சிலர் பக்குவமின்மையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் பழகியிருக்கலாம். இவை சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்து, நீங்கள் பெறும் பட்டம் தரும் பொறுப்பினை உணர்ந்து இச்சீர்கேடுகளைக் களைய அனைவரும் உறுதி பூணும் தருணமிது. பாலியல் கொடுமை, வரதட்சணை, குடும்ப வன்முறை போன்ற தீவினைகளுக்கு எதிரான போர்வாளே நீங்கள் பெறும் பட்டம்.

 

            சாதியக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். சாதி ஒழிப்பு உங்கள் தாரக மந்திரமாக வேண்டும். சாதி முத்திரை நமக்கு ஒரு அவமானச் சின்னம் என இளைய சமுதாயம் எண்ணும் பொற்காலம் அமைத்திட சபதம் ஏற்க வேண்டும்.

 

            'பாரத நாடு பழம்பெரும் நாடு ; நீர் அதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்' எனும் பாரதியின் வரிகளுக்கிணங்க பண்பாட்டுச் சிறப்புமிக்க இந்தியனாய் உலக அரங்கில் நீவிர் ஒளிர வேண்டும். தமிழன் என்ற முறையில் சங்க கால வாழ்வியல் எனும் உலகின் தலைசிறந்த நாகரிகத்திற்கு நீங்கள் சொந்தக்காரர்கள் என்பதை உணர்தல் வேண்டும். ஒரு மொழியிலக்கணம் எவ்வாறு அமைதல் வேண்டும் என உலக மொழிகளுக்கே கற்பிதம் செய்த தொல்காப்பியமும், அறம் எனப்படுவது யாது என உலகிற்குப் பறைசாற்றிய வள்ளுவமும் உமக்குப் பாட்டன் சொத்து. வெளியுலகிற்கு ஆங்கிலத்தில் ஆளுமை பெற்றவராய் நீவிர் மிளிர்தல் வேண்டும். தமிழராகிய நமக்குள் அமிழ்தினும் இனிய தமிழ் விடுத்து வேற்று மொழியில் உரையாடுதல் சோரம் போதல் என்பதை உணர்தல் வேண்டும். தொன்மையான மொழியாம் நம் தமிழையும் நம் மரபுகளையும் பாசறை அமைத்துக் காத்து நிற்பது நும் தலையாய கடமை. உலகத் தமிழர்க்காகவும் புலம்பெயர் தமிழர்க்காகவும் உம் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தல் வேண்டும். தமிழினப் பற்று குறுகிய பார்வை அன்று. மானிடப் பற்றிற்கான வெள்ளோட்டமேயாம். வீட்டுப் பற்றிலிருந்துதானே நாட்டுப்பற்று !  

 

            'தன் பெண்டு, தன் பிள்ளை' என்று மட்டுமே வாழ்வதை விடுத்து சமூகத்துடன் ஒன்றிய வாழ்வு உங்கள் அனைவருக்கும் வாய்த்திட வேண்டும். நீங்கள் கற்ற கல்வி கல்லாதாரினும் உங்களை உயர்த்திக் காட்டுவதற்கு அன்று. கல்லாரோடும் இல்லாரோடும் நீவிர் இயைந்து வாழ்வதற்கே. அன்னார் அளித்த வரிப்பணமே உங்களுக்குக் கல்வியாய் உருப்பெற்றது என்று தெளிதல் வேண்டும்.

            'குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

            மானம் கருதக் கெடும்'

என்னும் பொய்யா மொழிக்கிணங்க மக்களுக்கான உங்கள் பொதுவாழ்வில் எதையும் தாங்கும் இதயம் உங்களுக்க்கு அமைந்திட வேண்டும்.

 

            மேற்கூறிய அனைத்தும் இன்ன பிற தகைசால் பண்புகளும் பெற்று, உயர்ந்தோர் ஏத்தும் உன்னத வாழ்வைப் பெற்றிட வாழ்த்துக்கள். கல்வி கேள்விகளிற் சிறந்து, அவ்வுலகிற்கு அருளும் இவ்வுலகிற்குப் பொருளும் பெற்றிட வாழ்த்துக்கள். எண்ணிய எண்ணியாங்கு எய்திட எண்ணியதில் திண்ணியராய்த் திகழ்ந்திட வாழ்த்துக்கள்.

 

            இவ்வரிய வாய்ப்புக்கு அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

                                                                                                                                                                                   -   சுப.சோமசுந்தரம்

 

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

புலியைப்பார்த்து பூனை போல அல்ல, புலி போலவே.....நன்றாக இருக்கு .....!  tw_blush:

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்