யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
அருள்மொழிவர்மன்

பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’

Recommended Posts

மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 

பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது.  

பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ பற்றிக் குறிப்பிடுவது

காதலரிடையே 'பிரிவும்பிரிதல் நிமித்தமும்ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும்.

 குறுந்தொகைப் பாடல்  எண் - 27

 ஆசிரியர் - வெள்ளிவீதியார்

 திணை - பாலைத்திணை

 தலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

 தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்துமனதில் துயரம் குடிகொண்டதோடுபொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

 ‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது  

பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமக் கவினே’’

கலம் – பால் கறக்கும் பாத்திரம்நல் ஆன் – நல்ல பசு

தீம் பால் – சுவையான பால்உக்காங்கு – சிந்துதல்/விழுதல்

என்னைக்கும் – என் ``க்கும் – காதலன்

பசலை – மேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது

உணீ இயர் – தன்னை உட்கொள்ளும்திதலை – தேமல்

அல்குல் – இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்)

மாமை – மாந்தளிர் நிறம்கவின் – அழகு 

பாடலின் பொருள்:

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானதுஅதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல்பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல்வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்துஇடையும் நிறம் வெளிறிமேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலை படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல் அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை, அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.

ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது”.

தள நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. 

  • Like 3
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

திருக்குறள் காமத்துப்பாலில் "தலைவனைப் பிரிந்து என் மேனி பொலிவிழந்து போகிறதே !" என தலைவி வருந்தும் குறட்பாக்கள் உண்டு. எடுத்துக்காட்டாக 

"கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்லியல் வாடிய தோள்" - உறுப்பு நலன் அழிதல்.

எனினும் "அவர்க்கும் உதவாது எனக்கும் உதவாது வீணாகிறதே ! " எனும் பொருளில் நான் அறிந்த வரை இல்லை - பிரிவுத் துயரில் எந்தவொரு தலைவிக்கும் தோன்றும் இயற்கையான உணர்வுதான் என்ற போதிலும். வீணாகும் வனப்பு, நிலத்தில் வீழும் நல்லாவின் தீம்பால் எனும் உவமை அருமை. இன்னும் சொல்லுங்கள் , அருள்மொழிவர்மன் !

Share this post

Link to post
Share on other sites

அருமையான பாடல். ஆனால் இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகளின் பொருள்  மிகவும் ஆழமானவை... அந்தரமானவை. 

"பசலை இனிஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே’’

இந்த வரிகளில் மூன்று தமிழ் சொல்லுக்கு நீங்கள் என்ன பொருள் கொள்ளுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இந்தப் பாடலின் சுவை/பொருள் வேறாகும்.

பசலை - பெண் உடல் மெலியும்போது ஏற்படும் நிற மாறுபாடு.
திதிலை - பெண் உடல் விரியும்போது ஏற்படும் நிற மாறுபாடு (கருவுற்ற பெண்களின் அடிவயிற்றில், அல்குலில் உருவாவது)
அல்குல் - பெண்குறி மேடு.
தீம்பால் என்பது... சீம்பால் அல்லது கன்று ஈன்ற உடன் சுரக்கும் முதல் பால் என்று கொள்ள வேண்டும்.

இப்பொழுது படியுங்கள் அதன் பொருளை......
நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலை , அதன் கன்றும் உண்ணாமல் , கலத்தையும் சேராமல் நிலம் உண்பது போல், எனது மேனி வனப்பு எனக்கும் உதவாமல் எனது தலைவனுக்கும் உதவாமல், உவகையால் வளர்ந்து விரிந்த மாந்தளிர் நிற அல்குலை தேமல் தின்று விடுகிறது.

ஜெயமோகன் இதுபற்றி விரிவாக ஒரு பதிவே இட்டுள்ளார். பதிவு இங்கே

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 1/2/2019 at 1:35 PM, ஆதித்ய இளம்பிறையன் said:

@ ஆதித்த இளம்பிறையன், தாங்கள் அளித்த விளக்கம் மிகச்சிறப்பு.

நண்பர் குறிப்பிட்ட இணைப்பை வாசித்தேன், ஆயினும் "தீம்" என்ற சொல் பொதுவாக 'இனிமையான' என்பதைக் குறிப்பதாகவே நினைக்கிறேன் (இங்கு சுவையாக என்பது பொருந்தும்), "சீம்பால்" என்பதில் ஐயமுள்ளது. வேறு ஏதேனும் குறிப்போ அல்லது விளக்கமளித்தால் இன்னும் தெளிவாகும்.

அல்குல் என்ற சொல்லின் பொருளைப் பற்றிப் பல்வேறு விவாதங்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட பொருள் சரியாகயிருக்கும்.

சீனுவிற்கு ஜெ அளித்த விளக்கம் சிறப்பு. 'காமத்தைப்பேசும்போது அவர்கள் எப்போதுமே நாலுபேர் நடுவே சொல்லத்தக்க பொருளைத்தான் தேடிக்கண்டடைந்தனர்'.

Share this post

Link to post
Share on other sites
On 5/10/2018 at 2:35 PM, சுப.சோமசுந்தரம் said:

திருக்குறள் காமத்துப்பாலில் "தலைவனைப் பிரிந்து என் மேனி பொலிவிழந்து போகிறதே !" என தலைவி வருந்தும் குறட்பாக்கள் உண்டு. எடுத்துக்காட்டாக 

"கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்லியல் வாடிய தோள்" - உறுப்பு நலன் அழிதல்.

எனினும் "அவர்க்கும் உதவாது எனக்கும் உதவாது வீணாகிறதே ! " எனும் பொருளில் நான் அறிந்த வரை இல்லை - பிரிவுத் துயரில் எந்தவொரு தலைவிக்கும் தோன்றும் இயற்கையான உணர்வுதான் என்ற போதிலும். வீணாகும் வனப்பு, நிலத்தில் வீழும் நல்லாவின் தீம்பால் எனும் உவமை அருமை. இன்னும் சொல்லுங்கள் , அருள்மொழிவர்மன் !

@ சுப. சோமசுந்தரம், தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

"அவர்க்கும் உதவாது எனக்கும் உதவாது வீணாகிறதே ! " - என்பது சரியான பொருளாகவே தெரிகிறது.

நண்பர் மேற்குறிப்பிட்ட குறளின் பொருள் இப்பாடலுடன் ஒத்துப்போகிறது.

"காதலன் விரைந்து திரும்பி வராத 'கொடிய செயலால்' தோள்கள் வாடின; தொடிகள் (கைவளை) கழன்றன என்று தலைவி இங்கு கூறுகிறாள்.

 காதலனைப் பிரிந்திருப்பது அவ்வளவு கொடுமையா 🤔? -  அனுபவமுள்ள யாழ் நண்பர்கள் யாராவது விளக்கமளிக்க முன்வர வேண்டும் !!!

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, அருள்மொழிவர்மன் said:

குறுந்தொகைப் பாடலுக்கு நீங்கள் கூறிய பொருளிலிருந்து நான் மாறுபடவில்லை. 'இருவருக்கும் பயனில்லாமல் வீணாகிறதே' என்ற பொருளில் வேறு எங்கும் (குறளில் கூட) நான் பார்த்ததில்லை. அந்த வகையில்‌ அப்பாடல் என் சிறிய வாசிப்புக்கு எட்டிய வரையில் தனித்துவமானது என்று கூற விழைந்தேன். தங்கள் கவனத்திற்கு நன்றி.

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு