Jump to content

முத்து அக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

EF2_F8622-4_C92-4_E59-80_C6-316_E8_E2_F6

முத்து அக்கா 

 முத்து அக்காவிடம் கனக்க மஞ்சள் பைகள் இருந்தன. அழுக்கின் கறைகள் இல்லாமல் சிவப்பு நிறத்தில்முருகா முருகாஎன்ற பெரிய எழுத்துக்களுடன் பளிச்சென்று தூய்மையாக எப்போதும் ஒரு மஞ்சள் பை அவர் கையில் தொங்கிக் கொண்டிருக்கும்.

  பால் வியாபாரம்தான் முத்து அக்காவின் குடும்பத்துக்கான ஆதாரம். எங்கள் தெருவில் அநேகமான வீடுகளுக்கு முத்து அக்காதான் பால் கொண்டு வந்து கொடுப்பார். சாரயப் போத்தல் - ‘முழுப் போத்தல்’, எலிபன்ற் பிராண்ட் சோடாப் போத்தல் - அரைப் போத்தல் என்ற அளவில் அவரது  பால் வியாபாரக் கணக்கு இருக்கும்.

 காலையில் ஆறு மணிக்கே எங்கள் தெருவிலுள்ள ஒவ்வொருவர் வீட்டு அடுப்பிலும் பால் கொதிக்க ஆரம்பித்து விடும். அதிலும் எங்கள் வீட்டில்தான் முதலில் பால் பொங்க ஆரம்பிக்கும். எங்கள் வீட்டிற்குத்தான் முத்து அக்காவின் அன்றாட முதல் பால் விநியோகம். அதற்குக் காரணம் நான்தான். என்னை அவருக்கு நிறையப் பிடிக்கும்.

 முத்து அக்காவிற்கு இரண்டு பெண்பிள்ளைகள். மூத்தவள் பெயர் ராணி. இரண்டாமவள் கிளி. கிளி பிறந்த சில நாட்களில் கணவன் இறந்து போக, பிள்ளைகளை வளர்த்தெடுக்க மாடுகளை வாங்கி பால் வியாபாரத்தைத் தொடங்கினார். அந்தத் தொழிலில் அவர் காட்டிய நேர்மை அவரது வியாபாரத்தை  பெரிதாக்கி விட்டிருந்தது. யாரிடமும் தங்கியிருக்காமல் நேரடியாக அவரே எல்லா வீடுகளுக்கும் போய் பால் விநியோகித்து அளவளாவிப் போவதால் தாய்க்குலங்களுக்கு அவரை நிறையப் பிடித்துப் போயிருந்தது.

 தனக்கு ஆண்பிள்ளை இல்லாததால், என்னை அவர் மனதளவில் தன் பிள்ளையாக தத்தெடுத்திருக்க வேண்டும். அப்பொழுது எனக்கு வயது ஏழு. உரிமையோடு என்னைசின்னவன்என்றே முத்து அக்கா அழைப்பார். “சின்னவன் எழும்பிட்டானே?” என்ற அவரது குரலே பல காலைகளில் என்னைக் கண் விழிக்க வைத்திருக்கிறது. ஐஞ்சு நிமிசமாவது என்னுடன் இருந்து கதைத்து விட்டே எங்கள் வீட்டை விட்டுப்  போவார். மாதம் முடிய பால் வாங்கிய பணத்தை அம்மா கொடுக்க மறந்து போனாலும் கூட முத்து அக்கா அதைப் பற்றிக் கேட்கவே மாட்டார்.

 “நான்தான் மறந்து போனன். நீயாவது கேட்டிருக்கலாம்தானே?” என்று அம்மா முத்து அக்காவைக் கேட்டால்,

 “சின்னவன் குடிக்கிற பாலுக்கு கணக்கெதுக்கு?” என்பது அவரது பதிலாக இருக்கும்.

 ஒருநாள் முத்து அக்காவின் வரவு நின்று போய்விட்டது. வீட்டுக்கான பால் கூட வேறொரு இடத்தில் இருந்துதான் வந்தது. கூடிக் கூடிக் கதைத்தவர்களின் வாயில் இருந்துமுத்துஎன்ற வார்த்தை அடிக்கடி உதிர்ந்து கொண்டிருந்தது. கதைப்பவர்கள் நடுவேசிறுவன்என்று எனக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்கள் பேசும் போது சிலவேளைகளில் அவர்களின் குரல்கள் ஆரோகணத்தில் வரும். அப்பொழுது கிடைக்கும் வார்த்தைகளை எல்லாம் எடுத்துக் கோர்த்துப் பார்ப்பேன். “வெறி, அடி, கொலை, பொலீஸ் என்று நான்  சேர்த்த வார்த்தைகளை அந்த வயதில் என்னால் இணைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் முத்து அக்காவுக்கு ஏதோ நடந்துவிட்டது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

 என்னுடன் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த தேவராஜன் முத்து அக்கா வீட்டுக்கு அயலில்தான் இருந்தான். அவன்தான் என்ன நடந்தது என்பதை எனக்குச் சொன்னான்.

 எங்கள் நகரத்து பெரிய முதலாளிதான் முத்து அக்காவின் சகோதரியைத் திருமணம் செய்திருந்தார். பரம்பரைச் சொத்தை விற்பதில் முதலாளிக்கும் முத்து அக்காவிற்கும் இடையில் பல காலங்களாக அனுமார் வால் போல் இழுபறி நீண்டு கொண்டே இருந்தது. பிரச்சனையை முடித்து, சொத்தை விற்று, பணத்தைப் பார்க்க எல்லாவிதமான வியாபார தந்திரங்களையும் முதலாளி செய்து பார்த்தும் காரியம் நடைபெறவில்லை.

 இங்கே முதலாளியைப் பற்றி  கொஞ்சம் சொல்லிவிட்டு விசயத்துக்கு பிறகு வருவது நல்லது என்று நினைக்கிறேன்.

 முதலாளிக்கு வியாபாரம் மட்டுமல்ல அடிதடியும் நன்றாக வரும். அவருக்குசண்டியர்என்ற பட்டமும் இருந்தது. ‘அஞ்சேன்என்பது அவரது சுபாவம். `வணங்காமுடி´ என்பது அவரது இறுமாப்பு. பிரச்சனை என்று வந்தால் முதலில் பேசிப் பார்ப்பார் சரிவரவில்லை என்றால் சண்டிக்கட்டுடன் களத்தில் குதித்து விடுவார். போதிய அடியாட்கள், நகரத்தின் காலிகள் என்று ஏகப்பட்டோர்கள்அவரைச் சுற்றி ஒரு வட்டம் அமைத்திருந்ததால் அவர் தன் பாதுகாப்புக்கென்று பிரத்தியேகமாக நாய் ஒன்றும் வளர்க்க வேண்டிய தேவை இருக்கவில்லை. கொஞ்சமாக இவருடன் சத்தமாக பேசிய விதானையார்  ஒருவர் சூடு விழுந்து ஒருநாள் செத்துப் போயிருந்தார். சற்றுக் கவனியுங்கள் இது போராட்டத்துக்கு முந்திய காலம்

 சுட்டது யாரென்று மன்றில் நின்று சொல்ல எவருமே முன் வராததால் விதானையார் மரணம் சட்டத்தின் பார்வையில் மர்மமாகவே போயிற்று. இப்பொழுது முதலாளியின் தன்மை எப்படியானது என்பது ஓரளவுக்கு  உங்களுக்குப் புரிந்திருக்கும்.

 சரி இனி முத்து அக்கா விடயத்துக்கு வருவோம்.

 அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் சற்று அயரலாம் என்று படுத்திருந்த முத்து அக்காவை வீட்டின் தகரப் படலையில் இருந்து வந்த சத்தம் திடுக்கிட்டு எழ வைத்தது. தகரப் படலையை உதைத்துத் தள்ளிக் கொண்டு ஒரு நடுத்தர வயது ஆண் வீட்டு முற்றத்தில் வந்து நின்றான். வந்தவனின் தள்ளாட்டத்தை விட அவன் நிர்வாணமாக நின்றதுதான் முத்து அக்காவை அதிக திகைப்புக்குள்ளாக்கியது.

 “உங்களுக்கு அவ்வளவு திமிரோடி. இண்டைக்கு.... இண்டைக்கு இப்ப... இப்பவே உங்கடை திமிரை அடக்கிறன். வாங்கோடி வெளியாலை

 ஒலிபெருக்கி கூட அவனது சத்தத்துக்கு நேர் நிற்காது.

 சாரய வெறியோடு அம்பு ஒன்று அம்மணமாக எய்யப் பட்டிருக்கிறது என்பது முத்து அக்காவுக்கு விளங்கி விட்டது

 அநேகமான ஆண்கள் வேலைக்குப் போய்விட்டதால், அந்த மதிய நேரம் ஊரில் பெண்கள்தான்  வீடுகளில் இருந்தார்கள். வெறியில் சுதி தவறி, செந்தமிழில் வந்த ஒரு ஆணின் குரலைக் கேட்டவுடன், ஓட்டுக்குள் தலையை உள் இழுத்துக்கொண்ட ஆமைகள் போல ஊர்ப் பெண்களின்  தலைகள் காணாமல் போயின.

 முத்து அக்காவின் அயல் வீடுகள் எல்லாம் யன்னல்களை மூடி விட்டு இடுக்குகளுக்குள்ளாலே விடுப்புகள் பார்க்கத் தொடங்கி விட்டன. உதவிக்கு யாரும் வரப் போவதில்லை. குஞ்சுகளைக் காக்க தாய்க் கோழி தயாரானது.

 ராணியையும், கிளியையும் விழுந்திருந்த படலைக்குள்ளாலே  வீட்டுக்கு வெளியே ஓடச் சொல்லிவிட்டு, முத்து அக்கா வந்தவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

 “ஆரடா நீ? ஆம்பிளை இல்லாத வீட்டுக்குள்ளை வந்து சண்டிதனம் காட்டுறாய். தெரியுமடா உன்னை யார் அனுப்பினதெண்டு. தைரியம் இருந்தால் அவனை நேரே வரச் சொல்லடா

 முத்து அக்கா நினைத்தது நடந்து கொண்டிருந்தது. அவனது கவனம் முத்து அக்காவின் பக்கம் திரும்பி இருந்ததால் படலையை நோக்கி ஓடும் ராணியும், கிளியும் அவனது கண்களில் படவில்லை. ஆனால் அவர் நினைக்காத ஒன்று நடந்தது.

 ராணி படலையைத் தாண்டி ஒழுங்கைக்குள் ஓடிக் கொண்டிருந்தாள்

கிளியோ தாயைப் பார்த்து, “அம்மா வாங்கோ... நீங்களும் வாங்கோ.. ஓடிவாங்கோ.. “ என்று தன் கவனத்தை தாயில் வைத்துக் கொண்டு, பின்புறமாக ஓடியதில் நிலை தடுமாறி தரையில் விழுந்தாள்.

 விழுந்தவள் எழும்ப எத்தனிக்கும் போது அவள் முன்னாள் நிர்வாணமாக அவன் நின்றான். தள்ளாட்டத்தோடு நின்றவன் அப்படியே கிளி மீது விழுந்து விட்டான். தன் மேல் விழுந்திருந்த அவனை தள்ளிவிட்டு எழந்துவிட அவளுக்கு ஏது பலம்? நிர்வாணமாக தன் மேல் படுத்திருக்கும் ஆண், அவளை தரையை விட்டு அசையவிடாமல் அழுத்தி இருக்கும் அவனது பாரம் எல்லாம் அவளுக்கு பெரிய அதிர்ச்சியாக வே இருந்தன..

5968_F71_E-_B268-4_C9_B-8074-36_F13_ABC9

 

முத்து அக்காவின் கையில் இப்பொழுது உலக்கை இருந்தது. தன் மகளுக்கு அடி பட்டு விடக் கூடாது என்று மிகக் கவனமாகப் பார்த்துப் பார்த்து அவனை உலக்கையால் அடித்துக் கொண்டிருந்தார். அடியின் வேதனையில் கிளியை விட்டு விட்டு தரையில் அவன் உருண்ட போது அவனது முழங்காலின் சில்லை குறிவைத்து கடைசி அடியைப் போட்டுஉலக்கையை எறிந்து விட்டு,  “இனி உன்னாலை எழும்பி நடக்கேலாது. உன்னை அனுப்பினவன் வந்துதான் உன்னைத் தூக்கிக்கொண்டு  போகோணும்சொல்லிக் கொண்டே கிளியை அழைத்துக் கொண்டு ராணியைத் தேடுவதற்காக ஒழுங்கைக்குள் இறங்கினார். கிளிக்கு இன்னமும் அதிர்ச்சியாக இருந்தது. வெறித்துப் பார்ததபடியே தாயோடு நடந்து கொண்டிருந்தாள்.

 அடிபட்டவன் அன்று மாலை ஆதார வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருந்தான். அவனிடம் பொலீஸ்  வாக்கு மூலம் எடுத்துக் கொண்டிருந்தது

 “அப்பாவியான என்னை தாயும், மகளும் சேர்ந்து  உலக்கையாலை அடிச்சுப் போட்டாங்கள்என்று திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளையைப் போல் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

 அடுத்த நாள் காலையில் அவன் வைத்தியசாலைக் கட்டிலிலேயே செத்துப் போயிருந்தான்.

 பலமாகத் தாக்கப் பட்டதால் மரணம் நிகழ்ந்திருக்கிறது என வைத்திய அதிகாரி பொலிஸுக்கு அறிக்கை கொடுத்தார்.

 "காலில் அடிபட்டதுக்காக ஒருவன் செத்துப் போவானா?”  அக்கம் பக்கம் பார்த்து ஊரில்  மிக அவதானமாக பலரது கேள்வி ஒலித்தது.

 “காசு விளையாடிட்டுது. ராவோட ராவா ஊசியைப் போட்டு ஆளின்ரை கதையை முடிச்சிட்டாங்கள்இப்படியும் ஒரு கதை ரகசியமாக இருட்டுக்குள்ளே உலா வந்தது.

 மரண விசாரணை அதிகாரி விசாரணையில்  “கொலைஎன எழுதிவிட்டு, உடலை உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அன்று மாலையே அவசர அவசரமாக அவனது உடல் தகனம் செய்யப் பட்டு விட்டது.

 கொலை செய்த  குற்றத்துக்காக முத்து அக்காவும், கிளியும் கைதாகினார்கள்.

 ”தாய்க்கும் மகளுக்கும் 14 நாட்கள் றிமான்ட்நீதிபதி சொன்னார்

 ஒவ்வொரு வழக்குத்தவணையிலும் மேலும் மேலும் இரண்டு கிழமைகள் தடுப்புக்காவல் விசாரணை என அதிகரித்துக் கொண்டே போனது. வழக்கின் காலங்கள் நீண்டு கொண்டிருந்தன. முத்து அக்காவினால் துன்பங்களில் இருந்து மீண்டு வர முடியவில்லை. வழக்குச் செலவு கட்டுக்குள் அடங்காமல் அவரை தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.

 சில வருடங்கள் கழித்து நண்பன் ஒருவனோடு வீட்டு வாசலில் நின்று நான் கதைத்துக் கொண்டிருந்தேன்.

 “சின்னவா

 முத்து அக்காவின் குரல். திரும்பிப் பார்த்தேன்.

 அவர் கையில் பளிச்சென்றிருக்கும் மஞ்சள் பை இல்லை. உடையில் கூட சுத்தம் குறைந்திருந்தது. பக்கத்தில் அவரது மகள் கிளி நின்றாள். அவளது பார்வை எங்களை விடுத்து  வானத்தை நோக்கி இருந்தது. யாரையும் பார்ககவோ, பேசவோ அவள் விரும்பவில்லை என்று தெரிந்தது.

 “சின்னவா வளந்திட்டாய். மீசை எல்லாம் முளைக்க ஆரம்பிச்சிட்டுது. பெரிய ஆம்பிளை ஆயிற்றாய்.” அவரின் குரல் பாசத்தோடு ஒலித்தது.

 என்ன நினைத்தாரோ, அவரது குரல் திடீரென சோகமானது. “ஏன்டா சின்னவா இந்த முத்து அக்காவை மறந்து போட்டியே?”

 “இல்லைஎன்று வாய் திறந்து ஏனோ நான் சொல்லவில்லை. ஆனால் இல்லை என்ற அர்த்தத்தில் வேகமாக தலையை மட்டும்  ஆட்டினேன்.

 “தெரியும் நீ என்னை மறக்க மாட்டாய் எண்டு. முத்து அக்கான்ரை நிலமைதான் இப்பிடி ஆகிப் போச்சு. பார் கிளியை. அவளுக்கும் செய்யாத வைத்தியமில்லை. பேந்த பேந்த முளிச்சுக் கொண்டு இருக்கிறாள். இந்தக் கோலத்திலை இவளைப் பாத்திட்டு ஆர்தான் கலியாணம் கட்டப் போறாங்கள். எப்பிடித்தான் இவளைக் கரை சேர்க்கப் போறனோ?”

 முத்து அக்காவை நான் அரை நூற்றாண்டாக மறக்காமல் இருக்கிறேன். அதனால்தான் இதை எழுதுகிறேன்.

இன்று முத்து அக்கா உயிரோடு இல்லை. கிளியை  கல்யாணம் செய்ய எவருமே முன்வரவில்லை. அவள் தனது நாற்பதாவது வயதில் செத்துப் போனாள்.

 அந்த முதலாளி?

 சொல்கிறேன்

 

 கவி அருணாசலம் 

04.05.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில கணங்களில் நடப்பவை ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை உலுப்பி நாசமாக்கும் என்பதற்கு இந்தக்கதையும் ஓர் உதாரணம்தான். பண வசதி இல்லாதவர்களுக்கு நமது சமூகத்தில் எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இப்போதும் நிலமை அப்படித்தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • நானும் அதைத் தான் சொல்கிறேன் பணம் இருந்தால் எதையும் விலைக்கு  வாங்கலாம். அன்பு,பாசம்,நல்ல மனம் எல்லாம் அதற்கு பின்பு தான் 

     

தொடருங்கள் கவி 

 

Link to comment
Share on other sites

On 5/5/2018 at 5:09 AM, Kavi arunasalam said:

 

 அந்த முதலாளி?

 சொல்கிறேன்

 

அந்த முதலாளியும் (அண்மையில்   நீங்கள் எழுதிய) எங்க ஊர்  முதலாளியும் ஒருவரல்லதானே      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு,

நாயகனும் வில்லனும் ஒருவர்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kavi arunasalam said:

கந்தப்பு,

நாயகனும் வில்லனும் ஒருவர்தான்

அடப்பாவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முதல் குற்றவாளி முதலாளியின் மனைவி தான். சொந்த சகோதரிக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்க எப்படி அவரால் பார்த்துக் கொண்டு இருக்க முடிந்தது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவர்ச்சியான எழுத்து நடை.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதில் முதல் குற்றவாளி முதலாளியின் மனைவி தான். சொந்த சகோதரிக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்க எப்படி அவரால் பார்த்துக் கொண்டு இருக்க முடிந்தது?

 

ரதி, இந்த சம்பவம் நடந்தது அறுபதுகளில். பல வெளி விடயங்கள் வீட்டுப் பெண்களுக்கு தெரிய அப்போது வாய்ப்புகள் குறைவு.  சரி தெரிந்து விட்டது என்று வைத்துக் கொண்டாலும் முதலாளியை “ஏன்” என்று கேட்கும் துணிவு இருக்க வேண்டுமே.

10 hours ago, சுவைப்பிரியன் said:

அடப்பாவி

சுவைப்பிரியன்,

சில தமிழ்ப் படங்களில் ஒருவர் நாயகனாகவும் வில்லனாகவும் இரு வேடங்கள் போடுவதில்லையா? அப்படி நினைத்துக் கொள்ளளுங்கள்.

சத்தியராஜின் அமைதிப்படை திரைப்படத்தைப் பார்த்த போது எனக்கு நினைவுக்கு வந்தவர் இந்த முதலாளிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகள் வாழ்வு அன்றும் இன்றும் கண்ணீருடன்தான். கதை மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. பராட்டுக்கள் கவிஅருணாச்சலம்.

Link to comment
Share on other sites

15 hours ago, Kavi arunasalam said:

கந்தப்பு,

நாயகனும் வில்லனும் ஒருவர்தான்

 நாயகனின் கதையினை வாசித்தபோது அவருக்கு ஏற்பட்ட முடிவினை வாசிக்கும்போது வேதனை தந்தது.  ஆனால் வில்லன் கதையினை வாசிக்கும்போது அவர் இந்திய இராணுவ்த்துடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 

திரு  கவி அருணாசலம்    -  எல்லோருக்கும் பழைய சம்பவங்களை அழகாக விறுவிறுப்பாக எழுதத் தெரியாது. உங்களிடம் அந்த திறமை நிறைய இருக்கிறது.  உங்கள் ஆக்கங்களில் வரையப்படும் ஓவியங்களை வரைந்த  ஓவியர்  நீங்களா?  .நன்றாக இருக்கின்றன. பாராட்டுக்கள் கதைக்கும் ஓவியத்துக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.