Sign in to follow this  
கிருபன்

குரு(தி)ஷேத்திரம் - கரும்பறவை

Recommended Posts

குரு(தி)ஷேத்திரம் - கரும்பறவை

55d6804d-b054-4074-9e5b-886dc082d1981.jp

பங்குனி, வைகாசி 1992 சிரித்திரன் இதழில் கரும்பறவை எழுதிய உண்மைச்சம்பவம் இது. மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கியவர்களில் ஒருவரும், சட்டத்தரணியும், போராளியுமான பொன்.வேணுதாசின் துணைவி ஜமுனாவின் படுகொலை பற்றிய பதிவு இது.

தனது பெயரின் முதலெழுத்தான 'P'என்பதை ஒரு தாளில் எழுதி அந்தப் பவுடர் ரின்னில் ஓட்டினான் பிரசாத். விளையாட்டாக தான் அப்படி ஒட்டிய பவுடர் ரின்தான் பின்னர் தடயப் பொருளாக அமையப்போகிறதென்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் இளைஞன் தானே அவன்? காலையிலும் மாலையிலுமாவது பவுடர் போட்டுக்கொள்ள வேண்டுமென்று அவனுக்கொரு ஆசை. ஆனால் அதற்கு வசதியில்லை. ஜமுனாக்கா வேணு அண்ணாவைச் சந்திக்க வரும்போது தனது கைப்பையில் பவுடர் கொண்டு வருவார். அப்படி வரும் சமயங்களில் அந்தப் பவுடரை இவன் எடுத்துப் பூசுவதுண்டு. அதனால் 'ஜமுனாக்கா வந்தா பவுடர் பூசலாம்' என்று இவன் அடிக்கடி கூறுவதுண்டு.     

மட்டக்களப்பு நகர மக்கள் வங்கிக் கிளையில் பணியாற்றும் ஜமுனாக்கா தனது கணவரான பொன்.வேணுதாசைச் சந்திப்பதென்றால் சுலபமான காரியமல்ல. எத்தனையோ இராணுவக் காவலரண்களைத் தாண்டி வரவேண்டியிருக்கும். சில சமயங்களில் தனது குழந்தைகள் அபராஜிதா, பிரவீனா இருவரையும் கூட்டிக்கொண்டு வந்து அவருக்குக் காட்டுவதுமுண்டு. இவ்வளவு சிக்கலுக்குள்ளால் பன்குடாவெளிக்குப் போகவேண்டுமென்பதால் அதைப் பெரும்பாலும் அவர் தவிர்த்து வந்தார். போகும் போது எதாவது விபரீதம் நடந்தால்... இதற்காகவே அதனைத் தவிர்த்து வந்தார். குழந்தைகளைக் காண தந்தை ஏங்குவார் என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் என்ன செய்வது?

மட்டக்களப்பு நகரினுள் இராணுவம் நுழைந்ததற்குப் பின்னர் வேணு அண்ணர் பன்குடாவெளிப் பகுதியிலேயே இருந்தார். போராளிகள், ஆதரவாளர்கள், இயக்கத்திலிருந்து விலகியோர், பொதுமக்கள் எல்லோருமே அப்பகுதியில் ஒன்றாகத்தான் இருந்தனர். எந்த வித்தியாசமும் இல்லை.

***

அது மழைக்காலம். 22.12.1990 அன்று இரவு ஜமுனாக்கா பன்குடாவெளிக்கு வந்தார். வழக்கமாக அவரைச் சந்திக்கும் வீட்டில் எல்லோரும் அவருடன் கதைத்துக்கொண்டிருந்தனர். நகரத்தில் உள்ள நிலமைகளை அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் பிரசாத்தின் ஆடைகளைக் கவனித்தார். 'டேய்..... பிரசாத்.. அடுத்த முறை நான் வாற போது உனக்கு  சாரனும் சேட்டும் வாங்கிற்று வாறன் ' 

***

23.12.1990 அன்று காலை ஜமுனாக்கா வீட்டுக்குப் புறப்பட்டார். 'அக்கா இரவு நான் கண்ட கனவு சரியில்ல.. கலங்கின தண்ணி, வெள்ளம் கண்டால் நல்லமில்ல எண்டு சொல்லுவாங்கள். நீங்கள் இண்டைக்கு நிண்டுத்துப் போகலாமே? என்ன அவசரம்?' என்று கேட்டான் ரொமேஷ்.

55d6804d-b054-4074-9e5b-886dc082d1984.jp

'இல்லடா வருஷக் கடைசி.... வேலை கூட. அதோட வாழைச்சேனைக்கு வேலை மாறுற சம்பந்தமாக கொஞ்ச அலுவல் இருக்கு. அதோட இன்னொரு பிரச்சினை - வருஷக் கடைசியில நேர்சறியில நடக்கிற கலை நிகழ்ச்சிக்கு எல்லாப் பெற்றோரும் போனவை. நாங்கள் தான் போகல்ல. அப்பா இல்லாத இடத்துக்கு நானாவது போயிருக்கவேணும். எனக்கு நேரம் கிடைக்கல்ல. நியூ இயருக்காவது பிள்ளைகளோட நான் இருக்கவேணும். இல்லாட்டி பிள்ளைகளுக்கு மனசில ஏக்கமாய் இருக்கும். எங்கட பிள்ளைகள் என்ன அப்பா அம்மா இல்லாத அநாதைப் பிள்ளைகளா?' என்று கேட்டார். இவ்விதம் கேட்கும் போது அவரது முகத்தில் பெருமிதம் தெரிந்தது. 

மகேந்திரன் என்பவன் அக்காவை வழியனுப்பக் கூட்டிக்கொண்டு போனான். அப்போது சற்றுத் தள்ளியிருந்த சுரேஷ் என்பவன் சொன்னான், 'மகேந்திரன் அக்காவ கொம்மைக்கு குடுக்கக் கூட்டித்துப் போறான்!¨ - அவன் மீது பிரசாத் சீறிப் பாய்ந்தான். 'டேய்.... அப்படியொண்டும் சொல்லாத!'            

***

கொடுவாமடு சந்தியில் அனைவரும் காத்திருந்தனர். செங்கலடியிலிருந்து ஒருவரும் வரவில்லை. இந்தப் பக்கமிருந்து வேறு யாரும் செல்லும் அறிகுறியும் இல்லை. மக்கள் நடமாட்டம் இருந்தால் தான் அந்தப் பாதை வழியாக அனுப்பலாம். எனவே மயிலவெட்டுவான் வழியாகச் சென்று சித்தாண்டிக்குச் செல்லத் தீர்மானித்தனர். வழியில் மூன்று வயோதிபர்கள் வந்தனர். அவர்கள் செங்கலடிப் பாதை வழியாக மட்டக்களப்புக்குச் செல்வதாகக் கூறவே அவர்களுடன் அக்காவை அனுப்பி வைத்தனர்.

பிள்ளைகளைச் சந்திக்கும் வரை அக்காவுக்கு மனதில் அமைதி இருக்காது. பிள்ளைகளை நினைக்கும் போது கூடிய நடையின் வேகம் இராணுவத்தினரின் காவலரண்களை நெருங்கும் போது படிப்படியாகக் குறைந்தது.

சிறிது நேரத்தில் வேட்டொலிகள் கேட்டன. இவர்களை அனுப்பிவிட்டுக் காத்திருந்த அனைவருமே திடுக்கிட்டனர். மகேந்திரன், சுரேஷ், பிரசாத், ரொமேஷ், வேணு அண்ணன் மனதில் அந்த வசனம் எதிரொலித்தது -  'அக்காவைக் கொம்மைக்கு குடுக்கப் போறான்!'  

***

எல்லோரும் மீண்டும் கொடுவாமடுவுக்கு ஓடி வந்தனர். ஜமுனா அக்காவுடன் போன மூன்று வயோதிபர்களில் ஒருவர் மட்டும் ஓடி வந்தார். அவருக்குச் சூடு பிடித்திருந்தது. அக்காவைக் காணவில்லை. முதலில் இவருக்கு மருந்து கட்டுவோம் என்றெண்ணி அவரைக் கூட்டிக்கொண்டு சென்றனர். விஷயத்தைக் கேட்பதற்கு முன்பே வயோதிபர் சொன்னார்,

'சுட்டுப் போட்டானுகள் தம்பி! செங்கலடி ஆஸ்பத்திரிக்குக் கிட்ட இருந்த வஸ்   கோல்டில ஆமிக்காரனுக்கள் நிண்டானுகள். எங்களைக் கண்டு திரும்பிப் போகச் சொல்லிக் கையைக் காட்டினானுகள். திரும்பி நடக்கத் துடங்க சடசட வென்று சுட்டானுகள். என்னோட வந்தரெண்டு பேரும் செத்துப் போயிற்றினம். - மகேந்திரன் அவசரப்படுத்தினான். 'அக்காவுக்கு என்ன நடந்தது?' இளைத்தபடியே அவர் சொன்னார். 'அந்தப்புள்ள எண்ட   கையைப் புடிச்சிக்கொண்டு ஓடிவந்தது. முருகா முருகா என்னைக் காப்பாத்து எண்டு சொல்லிக்கொண்டு ஓடி வந்தது.... அப்படி ஓடி வரக்குள்ள வெடிப்பட்டுத்து. என்னைத் தூக்கிக்கொண்டு போங்க என்று கத்திச்சு அந்தப்புள்ள. நான் தூக்கிறத்துக்குக் குனிஞ்சன். அப்பதான் எனக்குச் சூடுபட்டது. என்னால - முடியல்ல ஓடி வந்திட்டன்' என்றார்.       

வயோதிபரை அனுப்பிவிட்டு தொடர்ந்தும் அங்கே காத்திருந்தனர். காந்தன், வேணு அண்ணன், மகேந்திரன், பிரசாத், சுரேஷ், ரொமேஷ் உடன் வேறுசிலர்.  மழை பெய்துகொண்டிருந்தது. நனைந்தபடியே காந்தனிடம் வேணு அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார்.

'ஜமுனா எப்பிடியும் தப்பியிருக்கும். இந்த மழைக்குள்ள எதாவது ஒரு மரத்துக்கு கீழ நிக்கும். காந்தன்!... நான் கலியாணம் முடிச்சுக் குடும்பம் நடத்தினன் எண்டு பேர்தான். எனக்கு இத்தினை வயதாச்சு... கடையில உடுப்பு எடுக்கக் கூடத் தெரியாது. எல்லாமே அவள்தான். நான் சட்டத்தரணியா வந்ததே அவளால தான். எல்லாம் அவளின்ர ஆசைதான்... அவளுக்கு ஒரு முறை மச்சான் இருந்தான். அவனுக்கு இவளைத்தான் சாணக்குறி போட்டது. அவன் இவளைக் கட்டுவான் எண்டுதான் காத்திருந்தினம். ஆனா அவன் படிச்சு சட்டத்தரணியானதுக்குப் பிறகு இவளைக் கலியாணம் செய்ய விரும்பல்ல. அவனுடைய தகுதிக்கு இந்தக் குடும்பத்தில கலியாணம் செய்ய அவனுக்கு கஷ்டமா இருந்தது. அவன் வேற இடத்தில கலியாணம் செய்திட்டான். –

ஆனால் இவள் துவண்டு போகல்ல. வாழ்க்கையைச் சவாலா எடுத்துக் கொண்டாள். அந்த நிலையில அவள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டாள். தான் முடிக்கிற ஆளைக் கலியாணத்துக்குப் பிறகு சட்டத்தரணி ஆக்கிறதெண்டு. அவளின்ர விருப்பத்துக்காகத்தான் சட்டத்தரணி ஆனன். என்னுடைய விருப்பத்துக்குத் தமிழில சத்தியப்பிரமாணம் செய்தன். அண்டைக்குச் சத்தியப்பிரமாணம் செய்ததில 17 பேர் தமிழர். இதில நானும் பொன்.பூலோகசிங்கமும் தான் தமிழில சத்தியப்பிரமாணம் செய்தம். அண்டைக்கு அவள் பட்ட சந்தோசம்! அவள் என்ர மனுஷியாக நடக்கல. என்ர அம்மா மாதிரி நடந்தாள். நாங்கள் கலியாணம் முடிச்சதில இருந்து குடும்பமா இருந்த நாள்கள் மிகக் குறைவு. ஜெயிலில இருந்தும் தலைமறைவாகியும் இருந்ததால எங்கட பிள்ளைகள் கூட அப்பாட அரவணைப்பில்லாமல்தான் வளந்ததுகள். அப்படியிருந்தும் என்னுடைய போக்கை மாத்தைச் சொல்லிக் கேக்கல. இண்டைக்கு அவள் வெடிப்பட்டுக் காயத்தோட மழைக்கு நனைஞ்சு கொண்டு நிக்கிறாள்'

மழைக்கு போட்டியாக அவர் கண்களும் நீரைச் சொரிந்துகொண்டிருந்தன. 

***

அன்று முழுக்க சம்பவம் நடந்த பகுதியை நோக்கிப் போகமுடியவில்லை. அனைவரும் பன்குடா வெளிக்குத் திரும்பினர்.

இதற்கிடையில் வலையிறவுப் பக்கமாக ஒருவரை நகரத்துக்கு அனுப்பினார்கள். அக்கா போய்ச் சேர்ந்திட்டாரா என்பதை அறிந்து வரச் சொன்னார்கள். இல்லாவிடில் செஞ்சிலுவைச் சங்க மூலமாக அக்காவின் நிலையை அறியுமாறு சொல்லி அனுப்பினார்கள். அன்று காந்தன் நித்திரைக்குப் போவதற்கிடையில் ஆயிரம் தடவை வேணு அண்ணன் சொல்லி இருப்பார், 'ஜமுனா எப்படியும் தப்பியிருக்கும். ஆற்றை வீட்டிலயாவது ஒளிச்சிருந்திட்டு வரும்'. 

நகரத்தில் தகவலைத் தெரிவித்தவரிடம் வேணு அண்ணாவின் மூத்த மகள் அபராஜிதா வினவினாள். 'அப்பாவைச் சுட்டதா? அம்மாவைச் சுட்டதா? அப்பாவைத்தான ஆமி தேடினவன்? அப்ப அம்மாவை ஏன் சுட்டான்' 

குழந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை அவருக்கு.

'உன்ட அம்மாவைப்போல ஆக்களைச் சிங்களவன் சுடுறதைத் தடுக்கத்தான் அந்தக் காலத்தில தமிழ் இளைஞர் பேரவை அமைச்சவர் உன்ட அப்பா' என்று சொல்லுமளவுக்கு அரசியல் தெரிந்தவரில்லை அவர்.

***

நித்திரை செய்த நேரம் குறைவுதான். நேரத்துடன் கண்விழித்து விட்டான் காந்தன். பக்கத்தில் படுத்திருந்த வேணு அண்ணாவைக் காணவில்லை. எங்கே போயிருப்பார் என்றெல்லாம் சிந்திக்கவில்லை. நேரே கொடுவாமடுச் சந்திக்கு வந்தான்

பக்கத்தில் போன காந்தனிடம் அவர் சொன்னார்.... 'ஜமுனா செத்துப் போச்சு!   அதில சந்தேகம் இல்லை. அவளின்ர (B)பொடியை எடுக்க வேணும்' இண்டைக்கு எப்பிடியும் எடுத்திடவேணும்'- உறவால் அவருக்கு மருமகனாக இருந்தாலும் 'அண்ணன்' என்றே காந்தன் அழைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் 'ஓம் மண்ணன் .... இண்டைக்கு எப்பிடியும் எடுப்பம்' என்றான் அவன். நகரத்துக்குச் சென்றவர் ஜமுனாக்கா அங்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். நேரம் போய்க்கொண்டிருந்தது.  

அன்று செங்கலடிப் பாதை வழியாக மக்கள் பன்குடாவெளி வருவதற்கு அனுமதித்திருந்தனர் இராணுவத்தினர். அவ்வாறு வந்தவர்களிடம் ஜமுனாக்காவைப் பற்றி விசாரித்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலைச் சொன்னார்கள். 'நீலச் சீலையுடுத்த பொம்பிளை ஒண்டின்ர (B)பொடி கிடக்குது' - 'ஒரு (B)பொடிய காகம் கொத்துது' - இதற்கு மேலால்  வேணு அண்ணனால் தாங்க முடியவில்லை. 'காந்தன்.... ஜமுனாவின்ர (B)பொடியில ஒரு துண்டை எண்டாலும் எடுத்துக் கொண்டந்து எரிக்க வேணும்' என்றார்.  

ஒரு குழு தேடுதலுக்குப் புறப்பட்டது. முன்னே பிரசாத்தும் மகேந்திரனும் சென்றுகொண்டிருந்தார்கள். முதலில் வயோதிபர்கள் இருவரது உடல்களும்   அகப்பட்டன. அக்காவைப் பற்றிய தடயங்களைக் காணவில்லை. முதல் நாள் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய வயோதிபர் மீண்டும் வரவழைக்கப்பட்டார். அவர் ஜமுனாக்கா சூடு பட்டு விழுந்த இடத்தை அடையாளம் காட்டினார். அந்தப்பகுதியில் தொடர்ந்து தேடினர். அப்போது பிரசாத்தின் கண்ணில் அகப்பட்டது ஒரு பவுடர் ரின். அதைப் புரட்டிப் பார்த்தபோது அவன் ஒட்டிய 'P' என்னும் எழுத்து காணப்பட்டது.

***

நிலமட்டத்துக்குக் கிட்டத் தண்ணீர் கொண்டிருந்த கிணற்றை எட்டிப் பார்த்தான் மகேந்திரன். ஜமுனா அக்காவின் பிரேதம் மிதந்துகொண்டிருந்தது. 'பிரசாத் அண்ண!.. ஜமுனாக்காட (B)பொடி கிடக்குது' என்று கத்தினான். ஓடி வந்த பிரசாத்தும் அவனுமாக பிரேதத்தை எட்டித் தூக்கினார்கள். ஒரு சாக்கில் கிடத்தித் தூக்கிக் கொண்டு வந்தனர். காந்தனுக்குப் பக்கத்தில் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்த வேணு அண்ணன் அப்போது தான் கவனித்தார். ஜமுனா அக்காவின் கை நிலத்தில் இழுபட்டபடி வந்து கொண்டிருந்தது.  'ஜமுனா..... கை முட்டுது' உரக்கக் கத்தினார் வேணு அண்ணன். அந்தக் கணத்தில்தான் ஜமுனா அக்கா இல்லாத உலகம் தன்னெதிரில் இருப்பது புரிந்தது. 

இவ்வளவு நேரமும் அடக்கிக்கொண்டிருந்த அழுகை பீறிட்டெழுந்தது. கரத்தையொன்றில் ஜமுனா அக்காவின் சடலம் கிடத்தப்பட்டது. கொட்டும் மழைக்கிடையில் கரத்தையைப் பிடித்தபடி சென்றுகொண்டிருந்தார் வேணு அண்ணன். இந்தக் காட்சியை எப்படிச் சகிப்பது என்று திண்டாடிக்கொண்டிருந்த காந்தனிடம், 'காந்தன்... தொந்தரவு செய்யிறதா நினைக்காத. புதுச்சீலை யொண்டும் சட்டையொண்டும் வேணும் 'என்றார் அவர். பிரசாத்துக்குப் புது உடுப்பு எடுத்துக்கொண்டு வருவதாகச் சொன்ன அக்காவுக்குப் புது உடுப்பு எடுக்க வேண்டிய நிலை - சாக்கினால் சுற்றப்பட்ட அவரது உடல் - இதை நினைக்கக் காந்தனுக்குத் தலை கிறுகிறுத்தது. ஆனாலும் ரவையாய் விரைந்தான். புறப்பட்டு விட்டானேயொழிய அவன் மனதில் ஒரு கேள்வி, 'இந்த இடத்தில புதுச் சீல சட்டைக்கு எங்க போறது?'

எள் என்றால் எண்ணெயாய் நிற்பவர்கள் தானே மட்டக்களப்பு மக்கள். ஜமுனா அக்காவின் உடல் வருகின்றது என்பதை கேள்விப்பட்டவுடன் தனது மகளுக்கென வாங்கிய ஒரு புதுச் சேலையை வெளியில் எடுத்து அதற்கு ஏற்ற வகையில் சட்டை தைத்துக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.   (பங்குடாவெளியைச் சேர்ந்த பாக்கியம்பா என்ற பாக்கியவதி) காந்தனைப் பொறுத்தவரை திருப்தி.

ஜமுனா அக்காவுக்கு ஒரே ஒரு சூட்டுக்காயம். முதுகில் பட்ட ரவை வயிறு வழியாக வெளியேறியிருந்தது. வைத்தியம் செய்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். கழுத்தில் தெரிந்த காயம் காப்பு, சங்கிலி போன்ற ஆறு பவுணுக்கு மேற்பட்ட நகைகளைக் கைப்பற்றத்தான் இவரைக் கொன்றிருக்கின்றார்கள் என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது.

புகைப்படப் பிடிப்பாளனான சுரேஷ் ஜமுனா அக்காவின் சடலத்தை படமெடுக்க முயன்றான். அதனைத் தடுத்து விட்டார் வேணு அண்ணண். 'நான் உயிரோட இருக்கு மட்டும் அவளின்ர உருவம் மட்டும் எப்பவும் எனக்கு நினைவில இருக்க வேணும், அவள் இந்த உலகத்தில இப்ப இல்ல எண்டு காட்டுற ஆதாரம் எதுவும் இருக்கக்கூடாது. தயவுசெய்து படமெடுக்காதீங்க' என்றார் வேணு அண்ணண்.

காந்தனைத் தனியாக அழைத்த சுரேஷ் 'நான் அழிவுகள், உயிரிழப்புக்கள் நடந்தால் அந்த இடத்துக்குப் போய் எத்தனையோ புகைப்படங்கள் எடுத்திருக்கிறன். ஆனா இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு எங்களுக்கு ருசியாச் சமைச்சுத் தந்த ஜமுனாக்காவைப் படம் எடுக்க முடியலையே' என முணுமுணுத்தான். 

சடலம் எரிந்துகொண்டிருந்தது.   

நகரத்திலிருந்து வந்த லொறி அந்த இடத்தை வந்தடைந்தது. அதில் வேணு அண்ணருக்கு அவரது உறவினர் ஒருவர் அனுப்பிய கடிதம் வந்தது. அவர் கலங்காமலிருப்பதற்காக அது எழுதப்பட்டது. 'ஜமுனா உயிரோடதான்.  விசயத்தை வெளியில விடவேண்டாம். எப்படியும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் முயற்சித்து ஆளை வெளியில் எடுக்கலாம்'

ஓர் இரு நாட்களில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டனர் அபராஜிதாவும் பிரவினாவும். பிரவினாவுக்கு வயது நாலு. அவள் பெரிய மனிசி என்ற தோரணையில் புறுபுறுத்துக்கொண்டிருந்தாள்.

'அப்பா வேலைக்கு போவார் - ஆமிக்காரன் புடிச்சுக்கொண்டு போவான், அம்மா வேலைக்குப் போவா. ஒவ்வொரு நாளும் கொள்ளையா நேரம்  காத்திருக்க வேணும் நாங்கள்.  

இப்ப செத்துப்போயிற்றா - எரிஞ்சுபோனா - எப்ப திரும்பி வருவாவோ தெரியாது' .......

***

மேஜர் வேணு 11.12.1991. அன்று சிவப்புப் பாலத்தடியில் புளொட், டெலோ, இராணுவம் கூட்டாக மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவெய்தினார்.     

இதில் குறிப்பிடப்படும் பிரசாத் குருநாகலில் பொலிசாரால் கைதாகி இருந்தார். இவரைப் பற்றிய விபரம் அறிந்த இராணுவத்தினர் இவரைக் கையேற்க வந்த சமயத்தில் சைனட் உட்கொண்டு சாவைத் தழுவினார்.           

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=55d6804d-b054-4074-9e5b-886dc082d198

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this