Jump to content

Recommended Posts

என்னடா இது! இந்த மதுரைக்கு வந்த சோதனை!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

திருவிளையாடல் புராணத்தில் வரும் பாண்டிய மன்னன் - ஏமனாதப் புலவர் - பாணபத்திரர் - மதுரைச் சொக்கநாதர் சோமசுந்தரக் கடவுள் போன்று அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பகிரலாம் என்றிருக்கிறேன். எடுத்துக்காட்டுகள் ஒரு பொது-ஒப்புமைக்காகச் சொல்லப்பட்டதே தவிர அதை அப்படியே எடுத்து, இதில் யார் மன்னன், யார் ஏமனாதப்புலவர், யார் அவைக்களப் புலவர், யார் சொக்கநாத சோமசுந்தரக்கடவுள் என்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம் என்று அன்புடன் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இனி கதைக் களத்துக்கு வருவோம்.

கடவுட்கொள்கை சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் வடதுருவமும், தென் துருவமும் போன்று கருத்து நிலைப்பாடுகள் கொண்டவர்கள் நானும் என் கெழுதகை நண்பரும். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து கிட்டிய பட்டறிவில், என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் தைரியமாகச் சொல்வேன் - நட்பு என்னும் இலக்கணத்தின் எல்லாக் கூறுகளையும் கொண்டு ஆய்ந்தாலும், பெரும்பாலும் அனைத்துக் கூறுகளிலும் (கடவுட் கொள்கை இதில் வாராது) கருத்தொருமித்த எனது ஒரே நண்பர்.  என் கெழுதகை நண்பருடன் நான் ஒன்றாகப் பயணிக்கும் தளங்கள் மானுடம், பொதுவுடைமை, தமிழ் இலக்கியம் தமிழர் பண்பாடு உள்ளிட்ட சில இக்கதைக்களத்துக்கு பொருத்தமானவை. நான்கு தினங்கள் முன்பு, நள்ளிரவு நெருங்கும்வேளையில் நண்பர் என்னைக்  கைப்பேசியில் அழைக்க, ஒலியமர்த்தப்பட்டிருந்த எனது கைப்பேசியின் அதிர்வுணர்ந்து நான் எடுக்குமுன்னர், நண்பரின் அழைப்பு முடிந்துவிட்டிருந்தது.

நாங்கள் பின்னிரவு வேளைகளில் பேசுவது அவ்வப்போது நிகழும். உறக்கம் கண்களைத் தழுவத் தொடங்கிவிட்டதால், காலையில் பேசிக்கொள்ளலாம் என்று உறங்கத் தொடங்கினேன். வீட்டுத் தொலைபேசி மணி நண்பரின் மீள் அழைப்பைத் தெரிவிக்க, எழுந்து சென்றேன்.

"ஒன்றுமில்லை; என்னை பாதித்த ஒரு நெருடலை உங்களுடன் பகிரலாம் என்று நினைத்தேன். அதான். ஒருவர் என்னிடம் சொன்னார், "திருக்குறள் நாமெல்லாம் தலையில் தூக்கிக் கொண்டாடுமளவு அப்படி ஒன்றும் சிறந்த இலக்கியமில்லை; கூறியது கூறல் என்னும் குற்றம் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் நடுத்தர இலக்கியம்தான் திருக்குறள்; காட்டாக, 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.' என்னும் திருக்குறளை எடுத்துக்கொண்டால், முதலடியும், பின்னடியும் ஒரே பொருளைத் திரும்பத் திரும்பக் கூறும் அவலத்தைக் காணலாம்" என்று.

 "சொன்னவர் ஒன்றும் பெரிதாக இலக்கியம் படித்தவரில்லைதான்; ஆனாலும், அவருக்கு உடனடியாக என்னால் பதிலிறுக்க இயலவில்லை. நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும் திருக்குறளில் அப்படியொரு குற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று. ஆனால், உரையாசிரியர்கள் பலரும் இக்குறளை அந்நோக்கில் ஊன்றிக் கவனித்து உரையெழுதவில்லை; சொன்னவர் பெரும்பாலான உரையாசிரியர்களின் உரையை எடுத்துக்காட்டிச் சொன்னதால் , உடனடியாக என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதான் உங்களிடமும் இதைப் பகிரலாம் என்றுதான் அழைத்தேன். வேறொன்றுமில்லை", என்றார் நண்பர்.

உறக்கம் நீங்கிப் பதற்றம் தொற்றியது என்னை. சிறிதுநேரம் தொடர்புடைய சிலவற்றைப் பேசிவிட்டு விடைபெற்றோம். கண்கள் மூட இமைகள் மறுத்ததால், இணையத்தில் அமர்ந்து நெடுநேரம் தேடினேன்; ஒன்றும் வரவில்லை; மூன்றாம் முறை ஒலித்த கூர்க்காவின் விசில் காலை நான்கு மணியானதை அறிவித்து ஓய்ந்தது. அலையடிக்கும் உள்ளம் உறங்காமல் உறங்கச் சென்றேன். எனக்கென்னவே பரிமேழகர் சரியாகச் சொல்வதாகப்பட்டது. ஆனால், அதில் அக்குற்றச்சாட்டுக்கு மறுப்புச் சொல்ல வெளிப்படையாக ஒன்றும் அகப்படவில்லை.

யானைக்கும் அடி சறுக்கலாம்; ஆனால், திருவள்ளுவரின் தெய்வத்தமிழ் சறுக்காதல்லவா?  விடையை நாம் தேடவேண்டும், அவ்வளவுதான்;  'மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா' - (தொல் : சொல்லதிகாரம் - 394); ஒரு சொல்லுக்கான பொருளினை அறியமுடியும். ஆனால், அச்சொல் அப்பொருளை உணர்த்துவதற்கான காரணம் வெளிப்படையாகத் தோன்றாது என்று முதலாசான் தொல்காப்பியன் நம்பிக்கை ஊட்டினான். மீண்டும் பரிமேழகரின் உரையில் ஊன்றி விழித்தேன்;

[பரிமேலழகர் உரை பின்வருமாறு: செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)]  இக்குறளைப் பொறுத்தவரை, பரிமேழகர் மட்டுமே மெய்யியல் என்னும் தத்துவ நிலைப்பாட்டியலில் (philosophy of the poetry) நின்று உரை எழுதியுள்ளார். கலைஞர், சாலமன் பாப்பையா, அறிஞர் மு.வ., மணக்குடவர், திருக்குறள் முனுசாமி உள்ளிட்ட மற்ற அனைத்து உரையாசிரியர்களுமே மேம்போக்கான உள்ளீடற்ற உரை மட்டுமே தந்துள்ளனர். எனவே, பரிமேழகர் உரையை மீண்டும், மீண்டும் அசைபோட்டேன்; மூன்று நாட்கள் ஓடிவிட்டன.

திங்கள் அதிகாலை ஏழரை மணிக்கே நண்பரின் அழைப்பைக் கைப்பேசி  அறிவிக்கக், காலை வணக்கம் சார் என்றேன் நான். "என்ன குரல் ஒன்றும் சரியாக இல்லை; காலையிலேயே எழுப்பிவிட்டேனோ", என்றார் நண்பர்.  நள்ளிரவு தாண்டி, நடுச்சாமம் வரை வாசித்த களைப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஏழு மணிக்கே எழுந்துவிட்டேன்; இருந்தாலும், பல் துலக்காமல், திருக்குறள் பரிமேழகர் உரையின் நினைவிலேயே அசைபோட்டதால், குரல் தெளிவில்லாமல் இருந்தது போலும்.

 நண்பர் பேசிய செய்தி திருவாசகம் குறித்த ஒரு காணொளித் துணுக்கில், அருட்தந்தை சகத் கசுபர் சொன்ன "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற திருவாசகப் பொன்னெழுத்துக்களுக்கான விளக்கத்தைப் பற்றியது: "தென்னாட்டவர்களாகிய நாங்கள் உன்னைச் சிவனே என்று அழைத்துப் போற்றுகிறோம்; ஏனைய நாட்டோர் அவரவர் சமயமொழியில் உன்னை இறைவா என்றழைத்துப் போற்றுகின்றனர். இறைவன் யார் என்பதை உயர்ந்த மன முதிர்ச்சி பேரறிவு நிலையில் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளதை வியந்து போற்றியிருப்பார்" என்று  அருட்தந்தை திருவாசகத்தை அருமையாக விளக்கியிருந்ததைக் குறித்துப் பேசினார். நண்பருடன் பேசிமுடித்துவிட்டு, அக்காணொளியில் அருட்தந்தை தந்த விளக்கத்தை அசைபோட்டுக்கொண்டே குளிக்கச் சென்ற எனக்குப் பட்டென பொறிதட்டியது - "செல்வத்துள் செல்வம்  .. ." திருக்குறளுக்காக நான் தேடிய\ விளக்கம்  கிடைத்துவிட்டது.  குளிப்பதை ஒத்திவைத்துவிட்டு, மறப்பதற்குள் எழுதிவிடுவோம் என்று குளியலறையை விட்டு வெளியே வந்தேன் (தயவு செய்து ஆர்க்கிமிடிஸ் 'யுரேகா' கற்பனையெல்லாம் வேண்டாம்; நானொன்றும் சோப்புநுரையை ஆடையாக அணிந்து வெளியே வரவில்லை; நம்புங்கள்). இப்போது  பரிமேழகர் உரைக்குப் புதுவிளக்கம்  தெளிவானக் கிடைத்தது.

'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.'

 கண்ணெனத் தகும் எண்ணும், எழுத்தும் கற்கும் வாய்ப்பை இழந்துவிட்டாலும், கேட்டல் என்னும் செவிப்புலன் கொண்டு, செவிவழியாகவே ஒருவன், என்றும் அழியாத, ஏழேழு பிறவிக்கும் எடுத்துச் செல்லும் நிலையான செல்வங்களாகிய  ஞானமும் கல்வியும் ஈட்ட இயலும்; மனிதனால் ஈட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் அனைத்தும் காலத்தால் அழிபவை; ஆனால் மனிதன் தன் செவிச்செல்வத்தால் ஈட்டிய ஞானமும், கல்வியும் காலத்தால் அழியாமல் அவனுடன் ஏழேழு பிறவிகளிலும் தொடர்ந்து பயணித்து, வீடுபேறு பலனைத் தருமாகையால், மனிதன் தன் செவிச்செல்வத்தால் ஈட்டிய செல்வமே, அவனால் ஈட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் அனைத்திலும் தலைமையானதாகும் என்பதை "அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்று இரண்டாம் அடியில் கூறியுள்ளார் வள்ளுவர். மெய்ப்பொருள் உணராது, மேம்போக்காக பொருள் நோக்குவோர் சற்று அறிவைப் பயன்படுத்தட்டும் என்று நுணுக்கமான பொருள் வைத்துப் பாடியுள்ளார் தெய்வப்புலவர் என்ற தெளிவை இப்போது உணர முடிந்தது.  

 பொறி-புலன்கள் கூடிய செவி என்னும் செல்வமே, மனிதனுக்குக் கிடைத்த செல்வங்களுள் எல்லாம் சிறந்த செல்வம் என்பதைச் சொல்ல, ''செல்வத்துள் செல்வம்  செவிச்செல்வம்'   என்று முதலடியில் சொன்ன வள்ளுவர், செவிப்புலன் வழியாக ஒருவன் ஈட்டும் "என்றும் அழியாத ஞானமும் கல்வி"யுமே, இவ்வுலகில் அவன் ஈட்டிய மற்றெல்லாச் செல்வங்களையும் விடத்  தலையானதாகும் என்பதை ஈற்றடியில் 'அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்றார். எனவே 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்பது அழியும் தன்மைகொண்ட உலகியல் செல்வங்களில் முதன்மையான செல்வம் 'செவிச்செல்வம் என்றும், அதன் வழியாக அவன் பெற்ற அழியாச் செல்வமாம் 'ஞானமும், கல்வியும்' அவனிடம் உள்ள ஏனைய செல்வம் அனைத்திற்கும் முதன்மையானது என்பதை 'அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' எனபதில் குறித்தார். எனவே, வழியும், பயனுமாக முதலடியும், ஈற்றடியும் விளங்குவதால், கூறியது-கூறல் என்பது இக்குறளில் இல்லவே இல்லை என்பது தெளிவு.

Link to comment
Share on other sites

நல்லதொரு ஆக்கத்தை தந்தமைக்கு நன்றி. அருமையான நடை!

எனக்கு தமிழறிவு மற்றும் சங்க இலக்கியம் / இலக்கியம் பற்றிய பரிச்சயம் மிகக் குறைவு என்பதால் ஒரு கேள்வி. திருக்குறள் என்பது மதங்களை கடந்தது என்றும் அதில் எந்த மதத்தையும் சார்ந்த நம்பிக்கைகளை வலியுறுத்துவதில்லை என்றும் தான் அறிந்துள்ளேன். 'ஆதி பகவன்' என்று எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு இறையை தான் திருக்குறள் குறிப்பிடுகின்றது என்று தான் என் பரிதல் இருக்கின்றது. ஆனால் நீங்கள் பின் வருமாறு எழுதியுள்ளீர்கள்

 

2 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

 

 கண்ணெனத் தகும் எண்ணும், எழுத்தும் கற்கும் வாய்ப்பை இழந்துவிட்டாலும், கேட்டல் என்னும் செவிப்புலன் கொண்டு, செவிவழியாகவே ஒருவன், என்றும் அழியாத, ஏழேழு பிறவிக்கும் எடுத்துச் செல்லும் நிலையான செல்வங்களாகிய  ஞானமும் கல்வியும் ஈட்ட இயலும்; மனிதனால் ஈட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் அனைத்தும் காலத்தால் அழிபவை; ஆனால் மனிதன் தன் செவிச்செல்வத்தால் ஈட்டிய ஞானமும், கல்வியும் காலத்தால் அழியாமல் அவனுடன் ஏழேழு பிறவிகளிலும் தொடர்ந்து பயணித்து, வீடுபேறு பலனைத் தருமாகையால், மனிதன் தன் செவிச்செல்வத்தால் ஈட்டிய செல்வமே, அவனால் ஈட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் அனைத்திலும் தலைமையானதாகும் என்பதை "அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்று இரண்டாம் அடியில் கூறியுள்ளார் வள்ளுவர். மெய்ப்பொருள் உணராது, மேம்போக்காக பொருள் நோக்குவோர் சற்று அறிவைப் பயன்படுத்தட்டும் என்று நுணுக்கமான பொருள் வைத்துப் பாடியுள்ளார் தெய்வப்புலவர் என்ற தெளிவை இப்போது உணர முடிந்தது.  

 

 

' ஏழேழு பிறவிகளிலும் தொடர்ந்து பயணித்து, வீடுபேறு பலனைத் தருமாகையால்' என.

மறுபிறப்பு, ஏழேழு பிறவிகள் என்பதெல்லாம் இந்து சமயம் சார்ந்த நம்பிக்கை அல்லவா. இஸ்லாமும் சரி, கிறிஸ்தவமும் சரி, பெளத்தமும் சரி மறு பிறப்பு என்பதை வலுயுறுத்துவன அல்லவே. அப்படி இருக்க செவிச்செல்வத்தால் ஈட்டிய ஞானமும், கல்வியும் காலத்தால் அழியாமல் அவனுடன் ஏழேழு பிறவிகளிலும் தொடர்ந்து பயணித்து வரும் என குறிப்பிட்டு இருப்பது முரணாக அமைந்து இருக்கின்றது அல்லவா?

கொஞ்சம் விளக்கினால் அடியேன் தெள்வு பெறுவேன்.

Link to comment
Share on other sites

திருவள்ளுவர் பொதுமை நெறியில் நின்றே திருக்குறளை இயற்றியுள்ளார் என்பதால்தான், பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். சமயம் சாராத இலக்கியங்களில் திருக்குறளே இதில் முதலாகும். எனவே, உங்கள் கணிப்பு சரியே. கிறித்துவம், இசுலாம் சமயங்கள் தோன்றும் முன்னரே திருக்குறள் இயற்றப்பட்டுவிட்டது. மறுபிறவிக் கொள்கையும், வினைக்கொள்கையும் பாரத மண்ணின், குறிப்பாக, தமிழரின்  தத்துவங்களும் ஆகும். சமண சமயமே இக்கொள்கைகளை சமயக்கொள்கையாகவும் கைக்கொண்டது.  கிறித்துவம் வெளிப்படையாக மறுபிறப்புக் கொள்கையையும், வினைக் கொள்கையையும் கூறாவிட்டாலும், உள்ளீடாக அவற்றைக் கொண்டவை. காட்டாக, judgement Day எனப்படும் எழுப்புதல் நாளில் நியாயத் தீர்ப்பு என்பது வினைக் கொள்கையின் உள்ளீடு. மனிதர்கள் 'Sinners' அல்லது பாவிகள் என்று பிறப்பிலேயே அடையாளம் காணப்படுகிறார்கள் யூதம்,   கிறித்துவம், இசுலாம் மதங்களிலும் என்பது வினைக்கொள்கையின் நீட்சியே. இப்போது பிறந்த குழந்தை எப்படி 'Sinner' ஆக இருக்க முடியும்? முன்பே, அதாவது, முன் பிறவியில் செய்திருந்தால் அன்றி, பிறந்த குழந்தை sinner ஆகாது. மேலும், 'Special Children' எனப்படும் மூளை வளர்ச்சியடையாமல் உண்பதுவும், உறங்குவதுவும் மட்டுமே செய்யும் குழந்தைகளுக்கு 'Judgement Day' அல்லது 'எழுப்புதல் நாளில் நியாயத் தீர்ப்பு' எப்படிப் பொருந்தும்? எனவே, உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் வெளிப்படையாகவோ, அல்லது உள்ளீடாகவோ 'வினைக்கொள்கை'யையும், 'மறுபிறப்பையும்' கொண்டவையே. 'ஆதாம், ஏவாள்' செய்த பாவம் தனி மனிதனை எப்படிச் சாரும்? அதன் உள்ளீடு, ஒவ்வொரு உயிரின்  உடல் பிறவி பயணத்தின் தொடக்கத்தையே 'ஆதாம், ஏவாள்' தத்துவம் உள்ளீடாக விளக்குகின்றது.  அப்பயணங்களில், உயிர் ஈட்டிய பாவங்களை மறைமுகமாக அல்லது உள்ளீடாகக் குறிக்கும் முறையே 'sinner' என்னும் சொல். இதை நாம் விளங்கிக் கொண்டால், திருக்குறள் சமயம் கடந்த நூல் என்பது விளங்கும்.

ஏழு பிறப்பு அல்லது எழும் பல பிறவிகள் என்பது வள்ளுவரின் கருத்தேயன்றி, நானாக இட்டுக்கட்டி எழுதியது அன்று.
கல்வி அதிகாரத்தில் திருவள்ளுவர் சொல்கின்றார்:
'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.'  - குறள் 398

இக்குறளுக்கு மு.வரதராசனார் உரை:
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

தத்துவ நோக்கில் அனைத்து சமயங்களும் சொல்லும் இறைவன் ஒருவனே!

"ஓர் நாமம், ஓர் உருவம் ஒன்றுமிலா ஈசனுக்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" - மாணிக்கவாசகரின் திருவாசகம்

Link to comment
Share on other sites

தங்கள் முதல் கேள்வி "ஏழேழு பிறவி என்பது இந்து மதக் கொள்கையல்லவா?" என்பதற்கு விடை: இந்துமதம் என்று ஒரு மதம் இல்லை. 'கிறித்துவர் அல்லாத, இசுலாமியர் அல்லாத ஏனையோர் இந்துக்கள்' என்று ஆங்கிலேயன் குறித்தான். அதன் முன்பு, சிந்து நதியின் மூலம் கிடைத்த இடவாகு பெயர் இந்து. பாரத துணைக்கண்டத்தில் ஆரிய மதங்களான வைதிகம், வேதாந்தம், ஸ்மார்த்தம் போன்றவை, ஆரியமல்லாத சைவம், வைணவம் உள்ளிட்ட சமயங்களை செரித்து விழுங்க நூற்றாண்டுகள் செய்த முயற்சிக்கு, ஆங்கிலேயனின் 'இந்து' என்னும் வரையறை உதவுகின்றது. 'இந்து' என்பது ஒரு அரசியல் பண்பாடே தவிர அப்படி ஒரு சமயம் அல்லது மதம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

மறுபிறப்பு, ஏழேழு பிறவிகள் என்பதெல்லாம் இந்து சமயம் சார்ந்த நம்பிக்கை அல்லவா. இஸ்லாமும் சரி, கிறிஸ்தவமும் சரி, பெளத்தமும் சரி மறு பிறப்பு என்பதை வலுயுறுத்துவன அல்லவே. அப்படி இருக்க செவிச்செல்வத்தால் ஈட்டிய ஞானமும், கல்வியும் காலத்தால் அழியாமல் அவனுடன் ஏழேழு பிறவிகளிலும் தொடர்ந்து பயணித்து வரும் என குறிப்பிட்டு இருப்பது முரணாக அமைந்து இருக்கின்றது அல்லவா?

கொஞ்சம் விளக்கினால் அடியேன் தெள்வு பெறுவேன்.

நிழலி அவர்களுக்கு சமய உள்ளீடுகளுடன் பேரா.கிருஷ்ணன் அருமையாக விளக்கம் தந்துள்ளார்கள். நான் எனக்குள்ள இலக்கிய அறிவு மற்றும் வாசிப்பின் அடிப்படையில் என் பார்வையை முன்வைக்க விழைகிறேன் :

'அட கடவுளே ' என்பது வியப்பு, கையறு நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மக்களின் சொல்லாட்சி. இதை பயன்படுத்துவதால் நான் இறை நம்பிக்கையுள்ளவன் என்று பொருளில்லை. அதேபோல் 'நிரந்தரமாக' எனச் சொல்வதற்கு கவித்துவமாக 'ஏழேழு பிறவிகளிலும்' என மக்கள் நம்பிக்கை சார்ந்த சொல்லாட்சி பயன்பாட்டில் உண்டு. மறுபிறவிச் சிந்தனையை மறுப்பவரும் இதை பயன்படுத்தலாம். அது மொழியின் கூறு. மொழிச் சுவை கருதி மக்களின் நம்பிக்கைகளையும் மரபுகளையும் பயன்படுத்துதல் சிறப்பே. 'எழுமையும் ஏமாப் புடைத்து' எனவும் , 'இம்மைப் பிறப்பில் பிரியலம்' எனவும் வள்ளுவப் பெருந்தகை சாற்றியதை இப்பின்புலத்திலேயே பார்க்கிறேன். வள்ளுவனை விடவா ஒரு பகுத்தறிவுவாதி இவ்வுலகில் தோன்றப் போகிறார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரா.கிருஷ்ணன் அவர்களின் கருத்துக் கோவை என்னை மேலும் சிந்திக்கத் தூண்டியது. நுனிப்புல் மேய்வது போன்று என் முன் தோன்றிய ஒரு பொருளைப் பகர/பகிர எண்ணுகிறேன் :

'செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்' எனும்போது 'கேள்வி' செல்வத்துள் ஒன்றாய் சேர்க்கப்படுகிறது. பின்னர் அவற்றுள் எல்லாம் தலையாயதாய் நிறுவப் பெறுகிறது. First enlisting and then ranking. இப்போதும் 'கூறியது கூறல்' இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 

பற்றுக பற்று விடற்கு"  

என்றும் ஒரு குறள் உண்டு. இக்குறளில் கூறியது கூறல் கூறவில்லையா. நிஜமாகவே தெரியாமல்தான் வினவுகின்றேன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

மிகவும் பொருத்தமான வினா எழுப்பிய தோழர் திரு.சுவி அவர்களுக்கு மிக்க நன்றி!

'துறவு' என்னும் அதிகாரத்தில் வரும் இக்குறளில், கூறியது கூறல் இல்லை என்பதற்கு மிகுந்த முயற்சி வேண்டியதில்லை. சற்று உற்று நோக்கினால் போதுமானது. 'பற்றற்றான்' என்று குறித்தது "வேண்டுதல் வேண்டாமை" இலாது கருணையே வடிவான அன்பழகன் இறைவனை.

"பற்றுக பற்றற்றான் பற்றினை" என்ற முதலடி, "ஓ மனிதனே! நீ பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்!" என்று கட்டளையிடுகிறது. "என்னய்யா திருவள்ளுவரே! எனக்கு புத்திமதி சொல்வதே உமக்கு வழக்கமாகிப் போய்விட்டது. எதற்கு 'அவனை'ப் பற்றவேண்டும் எ'ன்று முதலில் எமக்குச் சொல்லும். நீர் விடை சொன்னால் மட்டுமே 'அவனை'ப் பற்றுவதா, வேண்டாமா என்ற சிந்தனையே எமக்கு வரும். அவ்வளவுதான்", என்று சலிப்புடன் சொல்லும் நமக்கு விடைதரும் வகையில் சொல்லப்பட்டது இரண்டாம் அடி.

"அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு." என்பதற்குப் பொருள், "அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே" என்பதாகும். 

(இறைவனின் பால் பற்றுக்கொண்டு, உலகியல் ஆசைகளை விட்டவன் மனதில் அனைவரிடமும் சமமான அன்பு பிறக்கின்றது; கருணையாக முதிர்கின்றது. அவன் 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!' என்னும் கருணை நிலையைப் பெறுகின்றான்.)

நிலையில்லாத பொருளல்லவற்றைப் 'உண்மைப்பொருள்' என நினைத்து அவைமேல் நாம் கொள்ளும் கடும்பற்றே ஆசை எனப்படும். பெரும்பாலும், இவ்வுலகியலில் ஈடுபட்டுள்ள உலகமக்கள் இறைவனிடம் பற்றுக் கொண்டு, வழிபடுவது, இவ்வுலகியல் பயன்களான பொன், பொருள், பதவி, மனை, வீடு, சொத்து, சுகம் வேண்டியே. அத்தகைய கடும்பற்றால் விளையும் வழிபாட்டினால் கிடைக்கும் பயனாக ஒருவன் பெறும் உலகியல் சார்ந்த பொருட்களால், அவனுக்கு, மீண்டும் வேறு பல இன்னல்கள் உருவாகும். இதை,
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்." என்றார் வள்ளுவர். (துறவு அதிகாரத்தின் முதற்குறள்)
அஃதாவது, எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் விளையும் துன்பத்துக்கு உள்ளாகமாட்டான் என்பது இக்குறளின் பொருள்.  

"பற்றுக பற்றற்றான் பற்றினை" என்ற முதலடியின் கட்டளைக்கு, "ஏன் இறைவன் மீது பற்றுக்கொள்ள வேண்டும்?" என்று எழும் இயல்பான வினாவிற்கு, "உலகியல் பற்றுகளை விடுவதற்கு, பற்றற்றவனாகிய இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்", என்று ஈற்றடியில் விளக்குகிறார். எனவே, இங்கு கூறியது கூறல் நேரவில்லை என்பது வெளிப்படை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிப் பருவத்திலேயே 'சுருக்கி வரைதலில் (precis writing ) எனக்கு மிகவும் பற்று (!) உண்டு என்பதால், பேரா. கிருஷ்ணனின் விளக்கத்தைப் பின்வருமாறு பார்க்கிறேன்

குறளின் முற்பகுதி -

பற்றில்லாத இறைவன் மீது பற்று கொள்க !

பிற்பகுதி - அதுவுமே ஏனைய பற்றனைத்தையும் விட்டொழிக்கவே. வேறு எந்த எதிர்பார்ப்பினாலும் அல்ல.

தெளிவாக 'கூறியது கூறல்' இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.