கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted April 19, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted April 19, 2019 அத்தியாயம் 49 கெடில நதிக்கரை ஓரத்தில் ஆற்றோடு ஆறாக... மீனோடு மீனாக சிவகாமி கிடந்தாள்.இருள் பெரிதும் சூழ்ந்துவிட்ட இரவின் அந்த நேரத்தில் அளித்த பிரமை தட்டும் காட்சியைக் கண்ட கரிகாலனின் உள்ள உணர்ச்சிகள் ஒரு நிலையில் நில்லாமல் பெரிதும் கலங்கிவிட்டன.அடுத்தபடி என்ன செய்வது என்பதை அறியாமல் ஏதோ மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நின்ற இடத்திலேயே கற்சிலை என நின்றான். கரையோரத்தில் ஒதுக்கப்பட்டாலும் பாதி தரையிலும் பாதி நீரிலுமாகக் கிடந்த அந்தப் பாவையின் அழகிய உடலின் ஒரு பாதியை திரைகள் அவ்வப்பொழுது வந்து வந்து தழுவிப் பின்வாங்கியதாலும், நிலவின் ஒளி அந்தத் திரைகளின் மீது விழுந்து வெள்ளிப் பாளங்களாக திரை நீரை அடித்ததாலும், சிவகாமியின் உருவத்தை மறைக்க முயன்ற கெடில நதி அரசன் தன் திரைகளைக் கொண்டு வெள்ளிப் போர்வையை அவள் மீது போர்த்திப் போர்த்தி எடுப்பதுபோல் தோன்றிய அந்த மோகனக் காட்சியைக் கண்ட கரிகாலன் உள்ளத்தைப் பெரும் மாயை மூடிக் கொண்டது. அதுவரை அவன் உள்ளத்தை ஆட்கொண்டிருந்த பல்லவ மன்னரும், காஞ்சியும், ஆதுரச் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தன் தந்தையின் நிலையும், சிவகாமி குறித்த மர்மமும் கரிகாலனின் சிந்தையில் இருந்து அகன்றன. எதற்கும் அசையாத கரிகாலனின் இரும்பு நெஞ்சம் கீழே கிடந்த மோகனாஸ்திரத்தின் வசியப் பிணைப்பில் இறுகிவிட்டதையும், அப்படி இறுகிவிட்ட நெஞ்சம் எந்தப் பக்கமும் திரும்ப வழியில்லாமல் தவிப்பதையும் கண்ட விண்மீன்கள், கண்களைச் சிமிட்டி அவனை நோக்கி நகைத்தன. அந்த சமயத்தில் அவன் காலில் வந்து மோதிச் சென்ற கெடில நதி அலைகள் கூட சளக் சளக் என்று சத்தம் போட்டு தங்கள் திரை நுரைகளைக் காட்டி அவனை நோக்கிச் சிரித்தாலும், அந்தத் திரைகளின் சிரிப்பொலியைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நிலைகுலைந்து நீண்ட நேரம் நின்றுகொண்டே இருந்தான்.அதுவரையில் அவன் காதில் லேசாக விழுந்து கொண்டிருந்த கெடில நதியின் பேரிரைச்சலும், வனங்களில் ஒலித்த வண்டுகளின் ரீங்காரமும் கூட சிவகாமி கிடந்த கோலத்தைக் கண்டது முதல் அடியோடு அகன்று, உலகமே ஒலியிலிருந்து விடுபட்ட சூனியம் போலும், விழுந்து கிடந்த அந்த அழகிய உடல் பிரதிபலித்த ஒளி மட்டுமே உலகத்தில் நிலைத்த உயிர் நிலை போலும் தோன்றக் கூடிய நிலைக்கு அவனைக் கொண்டுவந்து விட்டது. அப்புறமோ இப்புறமோ நகரக் கூடிய உணர்வை கரிகாலன் இழந்தான்.உணர்விழந்து கிடந்தது, தரையில் புரண்டிருந்த மங்கையா அல்லது அவளைப் பார்த்து பிரமை பிடித்து நின்றுவிட்ட அந்த வாலிப வீரனா என்பதை ஊகிக்க முடியாத நண்டுகள் சில சிவகாமியின் மீதும் இன்னும் சில கரிகாலனின் கால்கள் மீதும் ஏறி ஏறிச் சென்று பார்த்து உண்மையை ஊகிக்க முயன்று தோற்று அப்புறம் நகர்ந்தன. மந்திரத்தை மந்திரத்தால்தான் எடுக்க முடியும். அதை எடுக்கும் நேரமும் வந்துவிட்டது என்பதை நிரூபிக்க இஷ்டப்பட்ட வானவெளி, நாண்மீன் எனப்பட்ட அசுவினி நட்சத்திரக் கூட்டத்தையும், கோண்மீன் எனப்பட்ட செவ்வாய் - புதன் முதலிய கிரகங்களையும் மெல்ல மெல்ல ஒன்று திரட்டி கரிகாலன் மனோநிலையை அந்த அழகியின் மாயா சக்தியில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தது.விண்ணின் இஷ்டப்படி விதி வகுக்கப்படுகிறது; நட்சத்திரங்களின் அசைவுக்குத் தகுந்தபடி மனித வாழ்க்கை இயங்குகிறது என்று கூறும் சோதிட சாத்திரத்தை மெய்ப்பிக்கவே நதிக்கரையோரம் ஒதுங்கினவளைப் போல் அதுவரை தரையில் அடியோடு உணர்வற்றுக் கிடந்த சிவகாமியும் அசுவினியும் செவ்வாயும் புதனும் ஒளிவிடத் தொடங்கிய அந்த நேரத்தில் கரிகாலன் மனத்தைக் கட்டுப் படுத்தி இருந்த மந்திரக் கணையை மெல்ல அவிழ்க்கவும் அவன் உணர்ச்சிகளை மெல்ல மெல்ல அவனுக்குத் திரும்ப அளிக்கவும் தன் பூவுடலை லேசாக ஒருமுறை அசைத்தாள்.அந்த ஓர் அசைவு கரிகாலன் இதயக் கட்டை அவிழ்த்து அவனை இந்த உலகத்துக்குள் கொண்டுவந்துவிட்டதால், சிவகாமிக்கு உதவாமல் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டு நேரத்தை அனாவசியமாக வீணாக்கிக் கொண்டிருந்த தன் மதியீனத்தை நினைத்துப் பெரிதும் வருந்தியவன் சட்டென்று அமர்ந்து அவள் நாசியில் விரலை வைத்துப் பார்த்தான்.சுவாசம் நிதானமாகவும் ஒரே சீராகவும் வந்து கொண்டிருந்ததால் நீரை அதிகமாக அவள் குடிக்கவில்லை என்பதைத் தீர்மானித்துக் கொண்ட கரிகாலன், அவளைத் தரையிலிருந்து தூக்கினான்.சிவகாமியின் தேகம் அவன் அறிந்ததுதான். பலமுறை புரண்ட உடல்தான். அங்கங்களின் அளவும் செழுமையும் தெரிந்ததுதான். என்றாலும் ஒவ்வொரு முறையும் நினைப்பதுபோலவே அப்போதும் எண்ணினான். அழகிய தோற்றமும் கட்டான சரீரமும் படைத்த சிவகாமி தூக்குவதற்கு எத்தனை லேசாக இருக்கிறாள்! இத்தகைய ஒரு சொர்ணச் சிலை எப்படிப் பஞ்சுபோல் இருக்க முடியும்..?வியந்தபடியே அவளைச் சுமந்தபடி வனத்துக்குள் புகுந்தான். மழை பெய்து மண்ணைக் குளிரவைக்க வேண்டிய ஆவணி மாதத்தில் மழையோ குளிரோ இல்லை என்றாலும், கைகளிலே தூக்கிச் சென்ற சிவகாமியின் நனைந்த உடையில் இருந்த தண்ணீர் அவன் இதயத்துக்கு அருகே வழிந்து ஓடியதாலும், அவன் கால்கள் நடந்த அதிர்ச்சியால் அவன் மார்பிலே புதைந்த அவள் அங்கலாவண்யங்களின் அசைவால் ஏற்பட்ட உணர்ச்சிகளின் வேகத்தாலும், சிவகாமியின் சரீரத்தின் மென்மை உள்ளத்தே கிளப்பிவிட்ட எத்தனை எத்தனையோ தடுமாற்றங்களாலும் கரிகாலனின் உறுதியான கால்கள் கூடச் சற்று தடுமாற்றத்துடனேயே நடந்து சென்றன. விசாலமான புல்தரையில் அதுகாறும் தாங்கி வந்த சிவகாமியை மெல்லக் கிடத்தினான்.மூர்ச்சை முழுதும் தெளியாமல் இருந்தாலும் கெடில நதிக்கரையில் இருந்து கரிகாலன் அவளைத் தூக்கி வந்தபோது ஏற்பட்ட அசக்கலில் சிவகாமி குடித்திருந்த கொஞ்ச நீரும் வாய் வழியாக வெளிவந்துவிட்டதால் அவள் ஓரளவு சுரணை வரப்பெற்று அப்புறமும் இப்புறமும் அசைந்தாள்.புஷ்பக் கொத்துகளுடன் காற்றிலாடும் பூஞ்செடியைப் போல் அவள் மெல்ல அசைந்தபோது ஈர உடை சற்றே நெகிழ்ந்ததால் லேசாக வெளிப்பட்ட அவள் தேக லாவண்யங்களின் நிறம் புது செம்பையும் பழிக்கும் தன்மையைப் பெற்றிருந்ததைக் கண்ட கரிகாலன், இப்படியும் ஒரு செம்பு நிறம் படைப்பில் இருக்க முடியுமா என எப்போதும் போல் அப்போதும் நினைத்து பிரமித்துப் போனான். உருக்கிய செம்பில் புஷ்பத்தையும் செவ்வரி ஓடாத அல்லி மலரின் உள்ளிதழ்களையும் கூட உவமை சொல்ல முடியாத அத்தனை நிறம் வாய்ந்த சிவகாமியின் அழகிய வதனத்தைச் சூழ்ந்த ஈரத்தால் கன்னத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கூந்தல் முழு நிலவின் பிம்பத்தை எதிரொலித்தது. புல் தரையில் கிடந்த சிவகாமியின் உடல் சிறுக்க வேண்டிய இடங்களில் சிறுத்து எழுச்சி பெற வேண்டிய இடங்களில் நன்றாக எழுச்சி பெற்றிருந்ததால் யவனத்துக்கு இலக்கணம் வகுக்கவே இயற்கை அவளை உருவாக்கியது போல் கரிகாலனுக்குத் தோன்றியது.தன் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் கெடில நதி அரசன் தன் கரங்களால் அவள் ஆடையில் விளைவித்த அலங்கோலத்தினால் மறைவு குறைந்து அழகு எழுந்து நின்றதன் விளைவாகப் பார்த்த இடங்களில் எல்லாம் தாக்கப்பட்டு புயலில் அகப்பட்ட மரக்கலம் போல அல்லாடும் மனநிலைக்கு வந்துவிட்ட கரிகாலன், அவள் வதனம் அசையத் தொடங்கியதும் முழந்தாளிட்டு சிவகாமியை நோக்கிக் குனிந்தான்.மெல்ல இமைகளைப் பிரித்தவள் தன்னருகில் தெரிந்த கரிகாலனின் முகத்தைக் கண்டதும் நிம்மதியடைந்து ‘‘இங்குதான்... இருக்கிறீர்களா..?’’ என மெல்ல உச்சரித்தாள்.‘‘இங்குதான் இருக்கிறேன்...’’ என்றபடி அவள் கொங்கையின் பிளவுக்குள் தன் முகத்தைப் பதித்தான் கரிகாலன்!‘‘ம்... எங்கு தேடியும் கரிகாலனும் சிவகாமியும் சென்ற இடம் உங்களுக்குத் தெரியவில்லை...’’ சர்ப்பமென ராமபுண்ய வல்லபர் சீறினார்.பதில் பேச முடியாமல் சாளுக்கிய வீரர்கள் தலைகுனிந்தார்கள். ‘‘போகட்டும்... சோழ மன்னரை யார் எடுத்துச் சென்றார்கள்..? எந்த ஆதுரச்சாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது..?’’முன்னிலும் அதிகமாக வீரர்கள் தரையை ஆராய்ந்தார்கள்.‘‘உங்களைச் சொல்லி குற்றமில்லை... உங்களை வைத்துக் கொண்டு பாண்டியர்களையும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறாரே நம் மன்னர்... அவரைச் சொல்ல வேண்டும்! போங்கள். எல்லாத் திசைகளிலும் அலசுங்கள்! செய்தியோடுதான் இனி என்னைச் சந்திக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் மரணமடைந்த செய்தி வாதாபியில் இருக்கும் உங்கள் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும்!’’ அழுத்தமாகச் சொல்லிவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட மாளிகைக்குள் சாளுக்கியர்களின் போர் அமைச்சர் நுழைந்தார். வாயிலில் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனின் பெரிய தாயார் எதுவும் சொல்லாமல் ராமபுண்ய வல்லபரை ஒரேயொரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார்.செல்வதற்கு முன் தன்னைப் பார்த்து அந்த அம்மையார் நகைத்ததாகவே ராமபுண்ய வல்லபருக்குத் தோன்றியது!‘‘வா ...’’ கணங்கள் யுகங்களாகக் கரைந்தபிறகு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் குரல் கொடுத்தார்.மறைவிடத்தை விட்டு வெளியே வந்த பாலகன் மரியாதையுடன் அவர் அருகில் சென்று கைகட்டி நின்றான்.‘‘செய்தியைச் சொல்...’’ மன்னரின் குரலில் கட்டளைக்குப் பதில் அன்பே நிரம்பி வழிந்தது.‘‘கெடில நதிப்பக்கம் கரிகாலனும் சிவகாமியும் சென்றிருக்கிறார்கள்...’’ பாலகன் பவ்யமாகச் சொன்னான்.‘‘ம்...’’‘‘அதன் பிறகு எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை...’’‘‘ம்...’’‘‘குறுவாள் பாய்ந்த சோழ மன்னரைக் காப்பாற்றும் பொறுப்பை காபாலிகனிடம் ஒப்படைத்திருக்கிறார் கரிகாலர்...’’‘‘ம்...’’‘‘ஆனால்...’’ பாலகன் தயங்கினான்.‘‘எந்த ஆதுரச் சாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை... அப்படித்தானே..?’’ பாலகன் தலையசைத்தான்.‘‘அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை... கவலைப்படாதே...’’ ஆறுதல் சொன்ன விக்கிரமாதித்தர், பாலகனை நெருங்கி அவன் தோளில் கைவைத்தார். ‘‘நம் பணி முடியும் வரை கடிகையில் எச்சரிக்கையாக இரு. புலவர் தண்டி மீது ஒரு கண் இருக்கட்டும்...’’தலையசைத்த பாலகன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு வந்த வழியே வெளியேறினான்.‘‘வருபவன் அந்த பாலகன்தானே..?’’ மகேந்திரவர்ம சாலையில் இருளடர்ந்த பகுதியில் இருந்த உருவம் மெல்லக் கேட்டது.‘‘ஆம்... கடிகையைச் சேர்ந்தவனேதான்!’’ மற்றொரு உருவம் பதில் சொன்னது.சந்தேகம் வராதபடி பாலகனை அவர்கள் இருவரும் பின்தொடர்ந்தார்கள். http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15220&id1=6&issue=20190419 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted May 5, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted May 5, 2019 அத்தியாயம் 50 இரவின் ஒளியை ரசித்தபடியே அந்தப் பாலகன் நடந்தான். ஒருபோதும் சாலையின் நடுவில் அவன் செல்லவில்லை. சாலையோரங்களையே தேர்வு செய்தான். குறிப்பாக இருளடர்ந்த பகுதிகளை. மாளிகைகளில் ஏற்றப்பட்டிருந்த தீபங்களின் ஒளியை விட அந்த ஒளியின் நிழல் அவனுக்கு அதிக பாதுகாப்பை அளித்தது.கடிகையில் இந்நேரம் வித்யார்த்திகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். பல்லவர்கள் போலவே சாளுக்கியர்களும் கடிகையில் காவலுக்கு எந்த வீரர்களையும் நிறுத்தவில்லை. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு வாயில்களில் மட்டும் பெயருக்கு இரண்டிரண்டு வீரர்கள் நிற்பார்கள்; பகலிலும் இரவிலும். என்ன... நேற்று பல்லவ வீரர்கள் ஈட்டியுடன் நின்றார்கள். இன்று சாளுக்கியர்கள்.மற்றபடி கடிகைக்குள் நுழையும் தகுதி எப்போதும் போல் இப்போதும் வித்யார்த்திகளுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. காஞ்சியைக் கைப்பற்றி பல்லவ நாட்டை சாளுக்கியர்கள் ஆளத் தொடங்கியபோதும் பழைய வழக்கத்தை சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் மாற்றவில்லை. எல்லாவற்றிலும் குறுக்குக் கேள்வி கேட்கும் போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் கூட இந்த விஷயத்தில் மன்னருக்கு ஆதரவாகவே நின்றார்.எனவேதான் தன்னால் நாசுக்காக அவ்வப்போது வெளியேற முடிகிறது. மன்னர் விக்கிரமாதித்தர் அந்தரங்கமாகக் கட்டளையிடும் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. அந்த வகையில் இன்றும் எவ்வித சங்கடத்தையும் யாருக்கும் ஏற்படுத்தாமல் கடிகைக்குள் சென்று தன் அறையில் உறங்கிவிட வேண்டும்.முடிவுடன் நடந்தான் அந்தப் பாலகன். இரவின் மூன்றாம் ஜாமத்திலும் வீரர்கள் நடமாட்டமும் வணிகர்களின் நடமாட்டமும் காஞ்சி முழுக்கவே இருந்தது. கருக்கல் நேரத்தில் தொடங்க வேண்டிய வணிகத்துக்காக இப்பொழுதிலிருந்தே வேலையைத் தொடங்கியிருந்தார்கள். பொருட்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக வணிக ஆட்கள் இருந்தார்கள். அதிக ஒலியை எழுப்பாமல் அதேநேரம் சைகையிலும் உரையாடாமல் தேவைக்குப் பேசியபடி தங்கள் பணிகளில் அவர்கள் ஈடுபட்ட பாங்கு அந்தப் பாலகனைக் கவர்ந்தது.மெல்ல சில கணங்களுக்குமுன் நடந்ததை அசைபோட்டான். மன்னருக்கும் ராமபுண்ய வல்லபருக்கும் இடையில் நடந்த உரையாடல் அவனை நிரம்ப யோசிக்க வைத்தது. இருவருமே அவரவர் நிலையில் தெளிவாக இருந்தார்கள். குறிப்பாக, மன்னரை விட நாடு முக்கியம் என சாளுக்கிய போர் அமைச்சர் அழுத்தம்திருத்தமாகச் சொன்னது அவன் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதற்கு மறுப்பு சொல்லாமல் சாளுக்கிய மன்னர் அமைதியாக இருந்தது அவனை நெகிழ வைத்தது.அவனையும் அறியாமல் பெருமூச்சு விட்டான். பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் விரைவில் போர் மூளப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குள் மன்னர் விக்கிரமாதித்தர் தன்னிடம் ஒப்படைத்த பணியை முடித்துவிட வேண்டும்.நிதானமாக நடந்த அந்தப் பாலகன், மகேந்திரவர்ம பல்லவ சாலையைக் கடந்து நரசிம்மவர்ம பல்லவ சாலைக்குள் நுழைந்து நேராகச் செல்லாமல் பரஞ்சோதி சந்துக்குள் நுழைந்து தோப்பை அடைந்தான்.இந்த மாந்தோப்பைக் கடந்துவிட்டால் கடிகையில் வடக்குப் பக்கம் வரும். வடமேற்குத் திசையில் வளர்ந்திருக்கும் புளியமரத்தின் மீது ஏறி மெல்ல கடிகைக்குள் குதித்தால் வாள்பயிற்சிக் கூடத்தை அடையலாம். அங்கிருந்து தன் அறைக்குச் செல்வது எளிது. காவலுக்கு நிற்கும் வீரர்களின் பார்வையில் படாமல் கடிகைக்குள் செல்லும் வழி அது மட்டும்தான்.மெல்ல தோப்புக்குள் நுழைந்தான். பாலகனுக்கு எந்த சந்தேகமும் ஏற்படாதபடி அவ்விரு உருவங்களும் பின்தொடர்ந்தார்கள். காஞ்சிக்குள் அந்தப் பாலகனைச் சிறைப்பிடிக்கக் கூடாது என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பலநாள் அந்தப் பாலகனைக் கண்காணித்து அதன் பிறகே தோப்புக்குள் அவனைச் சிறைப்பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார்கள். ம்ஹும். திட்டமிட்டது அவர்கள் இருவரும் அல்ல. அவர்களின் தலைவர்.எனவே, தங்கள் கண் பார்வையிலேயே பாலகனை அவர்கள் இருவரும் வைத்திருக்கவில்லை. எப்படியும் தோப்புக்குள்தான் நுழைவான் என்பதால், ‘‘வருபவன் அந்தப் பாலகன்தானே?’’ என ஒருவருக்கொருவர் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு மகேந்திரவர்ம சாலையின் இறுதிவரை அவனைப் பின்தொடர்ந்துவிட்டு அதன்பிறகு நரசிம்மவர்ம பல்லவ சாலைக்குள் நுழையாமல் குறுக்கு வழியாக அந்தப் பாலகனுக்கு முன்பாகவே தோப்பை அடைந்தவர்கள் நிதானித்தார்கள். கண்களாலேயே இருவரும் ஒருவருக்கொருவர் உரையாடிவிட்டு ஆளுக்கொரு திசையில் பிரிந்தார்கள். தோப்புக்குள் நுழையாமல் தோப்பின் ஓரமாகவே நடந்து புதருக்குள் மறைந்தார்கள்.எதிர்பார்த்ததுபோலவே அந்தப் பாலகன் வந்து சேர்ந்தான். தோப்புக்குள் நுழைந்தான். முழுவதுமாக அவன் மறையும் வரை காத்திருந்துவிட்டு அதன்பிறகு சத்தம் எழுப்பாமல் சருகின் ஒலி அமைதியைக் கிழிக்காதபடி தங்கள் கால் கட்டைவிரலால் ஓடி அந்தப் பாலகனை முன்னும் பின்னுமாகச் சுற்றி வளைத்தார்கள்.என்ன ஏது என அந்தப் பாலகன் சுதாரிப்பதற்குள் ஓர் உருவம் அவன் நாசியை பருத்தித் துணியால் மூடியாது. சில கணங்களில் பாலகன் உணர்விழந்து மயக்கமானான். உடனே அவனைத் தூக்கிக் கொண்டு அவ்விருவரும் நடந்தார்கள்.உறக்கம் வராததால் பஞ்சணையில் இருந்து எழுந்த கரிகாலனின் பெரிய தாயார் தன் அறையில் இருந்து சாளரத்தின் அருகில் வந்து நின்றார்.அதிக வெக்கையோ அதிக குளுமையோ இல்லாத காற்று அவர் உடலைத் தழுவியது. கண்கள் முழுக்க நிரம்பி வழிந்த சிந்தனைகளுடன் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றார். கண்கள் பார்த்த திசையில் காஞ்சி மாநகரின் நடமாட்டம் அந்த இரவிலும் தெரிந்தது. ஆனால், அவர் கவனம் எதிலும் இல்லை. கரிகாலனையும் சிவகாமியையும், காஞ்சி சிறையிலிருந்து குறுவாள் பாய்ந்த நிலையில் தப்பித்துச் சென்ற தன் மைத்துனரின் நிலை குறித்தும் யோசித்துக் கொண்டிருந்தார்.எத்தனை கணங்கள் அல்லது நாழிகைகள் கடந்ததோ... சரசரவென்று பறந்து வந்த புறா ஒன்று அவர் முகத்துக்கு நேராக தன் சிறகை அடித்துவிட்டு வந்த வழியே பறந்தது.சட்டென சுயநினைவுக்கு வந்த கரிகாலனின் பெரிய தாயார் தன் கண்களைக் கூர்மையாக்கினார். கவனத்தைக் குலைத்த முதல் புறா சென்றதுமே அடுத்த புறா வந்தது. பிறகு இன்னொன்று. பின்னர் அடுத்தது. கடைசியாக வேறொன்று.மொத்தம் ஐந்து புறாக்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அவர் நின்ற சாளரத்தின் அருகில் வந்து படபடவென தங்கள் சிறகுகளை அடித்தன. வந்த வழியே திரும்பிச் சென்றன.ஐந்து... ஆம். ஐந்து... கணக்கிட்ட கரிகாலனின் பெரிய தாயார் முகத்தில் இனம்புரியாத அமைதி பூத்தது. புன்னகையுடன் பஞ்சணைக்கு வந்தவர் நிம்மதியாக உறங்கினார்.எதிர்பார்த்த செய்தி கிடைத்துவிட்டது!‘‘அம்மா... வயதில் நான் இளையவன்தான். ஆனாலும் நான் சொல்வதைக் கேட்பீர்கள் அல்லவா..?’’ பாசத்துடன் சாளுக்கிய சக்கரவர்த்தினியின் முன் மண்டியிட்டபடி கங்க இளவரசன் கேட்டான்.‘‘எதற்கு குழந்தாய் இவ்வளவு பூடகம்..? கங்க நாட்டில் நீ வளர்ந்ததைவிட வாதாபியில் ஓடியாடி விளையாடியதுதான் அதிகம். விநயாதித்தன் போலவே நீயும் எனக்கு மைந்தன்தான். தயங்காமல் சொல்...’’ என்றபடி அவன் தலையைக் கோதினாள். ‘‘அம்மா! சிவகாமி ஆபத்தானவள்தான். ஆனால், நமக்கல்ல. பல்லவர்களுக்கு! ஏனெனில் அவள் நம்மால் தயாரான ஆயுதம். நம் சுழற்சிக்கு ஏற்ப சுழலும் பொறி. எனவே அவளால் விநயாதித்தனுக்கு சிக்கல் வந்துவிடுமோ என நீங்கள் அஞ்சவேண்டாம். சாளுக்கிய மன்னர் வந்ததும் அவரிடமே கேட்டு நீங்கள் அறியலாம். எனவே மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்...’’ மெல்ல சக்கரவர்த்தினியின் கரங்களை கங்க இளவரசன் பற்றினான். ‘‘என் ஊகம் சரியாக இருந்தால் விக்கிரமாதித்த மாமன்னர்தான் தன் மகன் விநயாதித்தனை ஏதோ ஒரு காரணத்துக்காக அஞ்ஞானவாசத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்!’’ ‘‘எதற்காக மன்னர் அப்படிச் செய்ய வேண்டும்..?’’ சாளுக்கிய அரசியின் முகத்தில் கேள்வி பூத்தது. குரல் மெல்ல தழுதழுப்புக்கு மாறியது. ‘‘நாளை நாட்டை ஆளப்போகிறவர் விநயாதித்தன்தானே..? அதற்கான பயிற்சியின் ஒரு கட்டமாக இது இருக்கலாம்...’’ ‘‘லாம்தானே குழந்தாய்... உறுதியில்லையே..?’’ ‘‘அந்த உறுதியை கண்டிப்பாக மன்னர் அளிப்பார்...’’ கங்க இளவரசன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் மேல்மாடத்துக்கு வந்து சேர்ந்தார்.மரியாதை நிமித்தமாக சக்கரவர்த்தினியும் கங்க இளவரசனும் எழுந்து நின்றார்கள்.‘‘உங்கள் உரையாடலைத் தடை செய்துவிட்டேனா..?’’ விக்கிரமாதித்தர் புன்னகைத்தார்.‘‘உரையாடலே உங்களைக் குறித்துதானே மன்னா...’’ கங்க இளவரசன் மரியாதை கலந்த பக்தியோடு சொன்னான். ‘‘விநயாதித்தன் எங்கே என்று கேட்டேன்... தனக்குத் தெரியாது என அம்மா சொன்னார்...’’மன்னர் எதுவும் சொல்லாமல் மேல்மாடத்தின் விளிம்புக்கு வந்தார். காஞ்சி மாநகரத்தின் இரவு அழகை ரசித்தார். சட்டென அவர் பார்வை கூர்மை அடைந்தது.புறா! இல்லை புறாக்கள்! மொத்தம் ஐந்து! ராமபுண்ய வல்லபரால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கரிகாலனின் பெரிய தாயார் தங்கியிருக்கும் அறையின் சாளரத்தில் படபடத்துவிட்டு அவை பறந்ததை கவனித்தார். மலர்ச்சியுடன் திரும்பி தன் பட்டத்து அரசியையும் கங்க இளவரசனையும் ஏறிட்டார். ‘‘விரைவில் விநயாதித்தன் வந்துவிடுவான்! அதற்கான வேளை நெருங்கிவிட்டது!’’பொழுது புலர்வதற்காகவே காத்திருந்ததுபோல் காஞ்சி மாநகரம் பரபரப்பானது. வழக்கத்துக்கு நேர்மாறான பரபரப்பு. ‘‘என்ன... காஞ்சி கடிகைக்குள் ஒற்றனா..?’’‘‘காஞ்சிக்குள் நுழைந்த கரிகாலனை சாளுக்கியர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிக்க வைத்தது ஒரு கடிகை மாணவனா..?’’‘‘அப்படியானால் இனி கடிகையும் சாளுக்கியர்களின் கண்காணிப்புக்குள் வருமா..?’’‘‘யாரை நம்புவது என்றே தெரியவில்லையே..?’’‘‘உண்மையில் அவன் கடிகையில் கல்வி பயில வந்தவன் இல்லையாம்...’’‘‘இரவோடு இரவாக அவனைக் கைது செய்துவிட்டார்கள். அவனிடம் மூட்டை நிறைய பொற்காசுகள் இருந்ததாம்!’’‘‘காலையிலேயே விசாரணை நடக்கும் என்கிறார்கள்...’’மக்கள் பலவாறாகக் கூடிக் கூடிப் பேசினார்கள். கேள்விப்பட்டதை, கேள்விப்படாததை, அறிந்ததை, அறியாததை... எல்லாம் ஒன்று கலந்து நேரில் பார்த்ததுபோல் எல்லோருமே ஒவ்வொரு கதையைச் சொன்னார்கள். எல்லா கதையின் மையமாகவும் கடிகையைச் சேர்ந்த அந்தப் பாலகனே இருந்தான்.வெயில் ஏற ஏற மக்கள் நடமாட்டமும் அவர்கள் கூடிக் கூடிப் பேசுவதும் அதிகரித்தது.அதற்கு ஏற்பவே சூரியோதயம் முடிந்த நான்காம் நாழிகையில் மேற்கூரை இல்லாமல் தேர் ஒன்று பவனி வந்தது. அதன் நடுவில் இருந்த தேக்கு மரத்தில் அதுவரை பேசுபொருளாக இருந்த பாலகன் கட்டப்பட்டிருந்தான்!வீரர்கள் இருபுறமும் வர அந்தத் தேர் நிதானமாக விசாரணை மண்டபத்தை நோக்கிச் சென்றது.மக்கள் வியப்பும் பரிதாபமும் கலந்த நிலையில் அத்தேருடன் நடந்து வந்தார்கள். http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15253&id1=6&issue=20190426 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted May 5, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted May 5, 2019 அத்தியாயம் 51 மன்னருக்கு உரிய எந்த ராஜரீக ஆடையும் இன்றி வீரனுக்குரிய உடையுடன் வந்த சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரைக் கண்டதும் சக்கரவர்த்தினியின் புருவம் உயர்ந்தது. வைத்த விழியை அகற்றாமல் தன் கணவரை ஏறிட்டாள். ‘‘என்ன... புதிதாகப் பார்ப்பது போல் பார்க்கிறாய்..?’’ புன்னகையுடன் மன்னர் கேட்டார்.‘‘புதிதாகத் தெரிவதால்...’’ சாளுக்கிய பட்டத்தரசி மெல்ல பதில் சொன்னாள்.‘‘புதிதா..? என்ன மாற்றம் கண்டாய் என் உடலில்..?’’ கேட்டபடி உச்சி முதல் உள்ளங்கால் வரை தன்னைத்தானே விக்கிரமாதித்தர் பார்த்துக் கொண்டார். ‘‘உடையில் என அதையே திருத்திச் சொல்லலாம்...’’ புன்னகைத்த சக்கரவர்த்தினியின் முகத்தில் வினாக்கள் பல பூத்தன. ஆனால், எதையும் அவள் வாயை விட்டுக் கேட்கவில்லை. ராஜாங்க விஷயம் என்பதால் தன் கணவராக எதுவும் சொல்லாத வரை எதையுமே அவள் என்றுமே கேட்டதில்லை. அன்றும் அதே வழக்கத்தைப் பின்பற்றினாள். ‘‘சரி கிளம்புகிறேன்...’’ சாளுக்கிய மன்னர் தன் ஆடைகளை சரிப்படுத்திக் கொண்டார். ‘‘போஜனத்துக்கு வந்துவிடுவேன்...’’ ‘‘விசாரணை நடக்கும் இடத்துக்குத்தானே..?’’ பட்டத்தரசியின் குரல் மன்னரைத் தேக்கி நிறுத்தியது. நின்று திரும்பினார். ‘‘காலை முதல் அரண்மனை முழுக்க அதுதான் பேச்சாக இருக்கிறது... கடிகையைச் சேர்ந்த ஒரு வித்யார்த்தி... பார்ப்பதற்கு பாலகன் போல் இருப்பானாம்... பல்லவர்களுக்கு உதவி புரிந்ததற்காக நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்துக்கு இன்று காலையிலேயே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள்... அதுதான் கேட்டேன்...’’ கேள்வியும் கேட்டு தானாகவே பதிலையும் சொன்ன சக்கரவர்த்தினி இறுதியாக ஒன்றை மட்டும் வினவினாள். ‘‘நம் மகன் விநயாதித்தன் விரைவில் வந்துவிடுவான் இல்லையா..?’’‘‘கூடிய விரைவில்!’’ கண்கள் மலர விடையளித்து தன் மனைவியை நெருங்கிய விக்கிரமாதித்தர் மெல்ல அவள் சிகையைக் கோதினார்.கணவரின் மார்பில் ஒன்றவேண்டும் என்று எழுந்த உணர்வை அடக்கி கலங்கிய கண்களுடன் மன்னரை ஏறிட்டாள். பேச்சு வரவில்லை. சரி என தலையசைத்தாள்.நிதானமாக தன் அந்தரங்க அறையை விட்டு வெளியே வந்த சாளுக்கிய மன்னர், உரிய ஆடைகளுடன் காத்திருந்த கங்க இளவரசனை தன் அருகில் அழைத்தார்.மரியாதையுடன் அருகே வந்து நின்றான் கங்க இளவரசன். வீரர்கள் அனைவரும் தொலைவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கங்க இளவரசனைத் தட்டிக் கொடுப்பதுபோல் அவன் இடையில் ஓலைக் குழல் ஒன்றை செருகினார்.பாசத்துடன் அவனை அணைப்பதுபோல் அவன் செவியில் சொல்ல வேண்டியதைச் சொன்னார். புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக மன்னரை ஏறிட்ட கங்க இளவரசன் தன் கண்களால் அவரிடம் விடைபெற்று புறப்பட்டான். விக்கிரமாதித்தரின் முகத்தில் புன்னகை பூத்தது!‘‘தங்களை சாளுக்கிய போர் அமைச்சர் அழைக்கிறார்..!’’ கதவைத் தட்டிவிட்டு, ‘வரலாம்...’ என அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்த சாளுக்கிய வீரன் தன் முன் கம்பீரமாக அமர்ந்திருந்த கரிகாலனின் பெரிய தாயாரை வணங்கிவிட்டு விஷயத்தைச் சொன்னான்.பதிலேதும் சொல்லாமல் இருக்கையை விட்டு எழுந்தவர் அந்த வீரனைத் தொடர்ந்தார். அவரது நடவடிக்கைகள் அனைத்தும் இதற்காகவே அவர் காத்திருப்பதை உணர்த்தியது.மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்கள். புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், காலடி ஓசை கேட்டுத் திரும்பினார். திடுக்கிட்டார். ‘‘நீங்கள் இன்னும் கிளம்பவில்லையா..?’’ ‘‘எங்கு..?’’ தன் அக உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாமல் நிதானமாகவே பதிலுக்கு வினவினார் கரிகாலனின் பெரிய தாயார். ‘‘நீதிமன்றத்துக்கு...’’‘‘எதற்கு..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் சுருங்கின. ‘‘விசாரணையை நீங்கள் காண வேண்டாமா..?’’‘‘எந்த விசாரணை..?’’‘‘பல்லவர்களுக்கு, குறிப்பாக கரிகாலனுக்கு உதவி செய்ததாக கடிகையில் படிக்கும் வித்யார்த்தி ஒருவனை நேற்றிரவு கைது செய்திருக்கிறார்கள்... அதுகுறித்த விசாரணை இன்று நடைபெறுகிறது...’’ சொல்லிவிட்டு கரிகாலனின் பெரிய தாயாரை ஊன்றிக் கவனித்தார் சாளுக்கிய போர் அமைச்சர்.அந்த அம்மையாரின் முகத்தில் சலனம் ஏதுமில்லை. ‘‘நான் வரவில்லை... நீங்கள் சென்றுவிட்டு வாருங்கள்...’’பதிலை எதிர்பார்க்காமல் கரிகாலனின் பெரிய தாயார் தன் அறையை நோக்கி நடந்தார். அவர் மனதில் நேற்றிரவு பறந்த ஐந்து புறாக்கள் வட்டமிட்டன!நீதிமண்டபம் முழுக்க மக்கள் கூட்டம் மண்டிக் கிடந்தது. அவர்களை இருபுறமும் ஈட்டிகளைக் கொண்டு அடக்கி வைத்த வீரர்களைத் தவிர யாரும் தப்ப முடியாதபடி அளவுக்குச் சற்று அதிகமாகவே காவல் இருந்தது.மண்டபத்தைச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நீதிபதி ஸ்தானத்துக்கு அருகே வந்ததும் அந்த இருக்கையின் மீது கண்களை உயர்த்திய கடிகையைச் சேர்ந்த பாலகன் சில கணங்கள் அதிர்ந்து நின்றான். அந்த இருக்கையில் அமர்ந்திருந்தது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அல்ல! அவரது மூத்த சகோதரரான ஆதித்யவர்மர்! நீதிபதி இருக்கையில் கொடூரத்துக்கும் வஞ்சகத்துக்கும் பெயர் பெற்ற ஆதித்யவர்மர் அமர்ந்திருப்பதைக் கண்டு பாலகனின் நெஞ்சில் கூடச் சிறிது அச்சம் உண்டாயிற்று. பிரேதத்தின் கண்களைப் போல் ஒளியிழந்து கிடந்தாலும், ஒளியிழந்த காரணத்தினாலேயே பயங்கரமாகத் தெரிந்த நீதிபதியின் கண்கள் தன்னை ஊடுருவிப் பார்ப்பதையும், அந்தப் பார்வையைத் தொடர்ந்து நீதிபதியுடைய வெளுத்த இதழிலே ஒரு புன்னகை விரிந்ததையும் கண்ட பாலகனுக்கு பல விஷயங்கள் குழப்பத்தை அளித்தாலும், தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் எழவில்லை. சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரோ அல்லது சாளுக்கிய நீதிபதிகளோ அமரவேண்டிய இடத்தில் எந்தப் பதவியிலும் இல்லாத ஆதித்யவர்மர் எதற்காக அமர்ந்திருக்கிறார் என்ற விவரங்கள் புரியவில்லையே தவிர, விசாரணை ஒரு கேலிக்கூத்தாகவே இருக்கும் என்பதிலோ, தன் தலையைச் சீவும்படி தீர்ப்பு கூறப்படும் என்பதிலோ எந்த ஐயமும் பாலகனுக்கு ஏற்படவில்லை.அப்படி மரணத்தை எதிர்நோக்கி நிற்கும் தருவாயில் அச்சம் காட்டுவதோ, எதிரிக்கு, தான் தாழ்ந்தவன் என்று பொருள்பட இடங்கொடுப்பதோ தகுதியற்றது என்ற காரணத்தால் தானும் ஒரு பதில் புன்முறுவலைக் கொட்டினான் பாலகன்.பல்லவர்கள் மீது அளவுக்கு அதிகமான வன்மத்தைக் கொண்டிருப்பவர் எனப் பெயர் எடுத்திருந்த ஆதித்யவர்மர், தன் உள்ளத்தில் படர்ந்திருந்த வன்மத்தை துளிக்கூட காட்டாமல் நீதியை மட்டுமே கவனிப்பவர் போல் விசாரணையை நடத்தினார்! சிறைப்பட்ட கடிகை பாலகனிடம் அனுதாபம் கொண்டவர் போல் நடித்தார்! எத்தனை கண்ணியமாக விசாரணை நடத்த முடியுமோ அத்தனை கண்ணியமாக நடத்தினார்! நீதிக்கும் நேர்மைக்கும் புறம்பாக அன்று விதித்த தண்டனைகள் அனைத்தையும் நீதியின் பெயராலும் நேர்மையின் பெயராலும் விதித்தார்.அர்த்த சாஸ்திரம் முதல் சுக்கிர நீதி, விதுர நீதி வரை அனைத்தையும் கசடறக் கற்றிருந்த பாலகன், அவர் நடத்திய விசாரணையையும் விதித்த தண்டனைகளையும் கவனித்தான். அந்த நீதி மண்டபத்தின் உயர்ந்த தூண்களையும் ஆதித்ய வர்மரையும் மாறி மாறிப் பார்த்து, ‘இங்கு தூண்கள்தான் உயர்ந்திருக்கின்றனவே தவிர நீதி தாழ்ந்துதான் கிடக்கிறது...’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.அன்று நீதிமண்டபத்தில் ஏராளமான தமிழர்கள் சிறைப்பட்டு நின்றிருந்ததால் கடிகை பாலகன் கடைசியிலேயே விசாரிக்கப்பட்டான். நடுப்பகல் வந்த பிறகே அவன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இத்தனை நேரம் கழித்து விசாரிக்க எதற்காக ஊருக்கு முன்பு தன்னை அழைத்து வந்தார்கள் என்று எண்ணிப் பார்த்த பாலகன், சாளுக்கிய விரோதிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதைத் தனக்கு உணர்த்தவே ஆதித்யவர்மர் தன் விசாரணையைத் தாமதிக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டான்.சிறிது நேரத்தில் உயிரிழக்கப் போகிறவனையும் இறுதி வரை துன்புறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர பாலகனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.இத்தகைய பல படிப்பினைகள் கடிகை பாலகனுக்கு ஏற்படுவதற்கு முன்பாக, அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைகள் எதிலும் குறை வைக்கவில்லை! தன் எதிரில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட கடிகை பாலகனை நோக்கி இளநகை புரிந்த ஆதித்யவர்மர் தன் கண்களை அவன் மீது நிலைக்கவிட்டார்.அந்த பிரேதக் கண்களின் பார்வை அளித்த சங்கடத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள அப்புறமும் இப்புறமும் பார்த்த பாலகன் மீது மீண்டும் ஒருமுறை புன்னகையை வீசிய ஆதித்யவர்மர் எதிரேயிருந்த காவலர்களைப் பார்த்து, ‘‘இந்த பாலகனுக்கு ஆசனம் போடுங்கள். கடிகையில் கற்கும் வித்யார்த்திகள் மரியாதைக்கு உரியவர்கள்...’’ என்றார்.இப்படிக் கூறியவரின் குரலில் நிதானம் இருந்ததையும், குரலும் பலவீனமாகவே வெளிவந்ததையும், அப்படி பலவீனமாக வந்த குரலிலும் ஒரு கடூரமும் கம்பீரமும் விரவி இருந்ததையும் பாலகன் கவனித்தான்.தனக்குச் செய்யப்படும் அத்தனை மரியாதையும் காவுக்கு அனுப்பப்படும் ஆட்டுக்குப் பூசாரி செய்யும் மரியாதையைப் போன்றது என்பதை சந்தேகமற உணர்ந்த பாலகன், அடுத்து நடப்பதை கவனிக்கத் தொடங்கினான்.ஆதித்யவர்மர் உத்தரவுப்படி பெரிய ஆசனம் ஒன்று பாலகனுக்கு அளிக்கப்பட்டதும் விசாரணையைத் தொடங்கியவர் வேவு பார்க்கும் குற்றங்கள் சாட்டப்பட்ட பலரை முதலில் தன் முன்பு கொண்டு வர உத்தரவிட்டார்.நீதி நிர்வாக ஸ்தானிகன் குற்றச்சாட்டுகளைப் படிக்க, ஆதித்யவர்மர் கேள்விகளைக் கேட்டு தண்டனைகளை விதித்துக்கொண்டே போனார். குற்றச்சாட்டுகள் எல்லாமே வேவு பார்ப்பது சம்பந்தமாக ஒரே மாதிரியாக இருந்ததையும், முக்கியமானவர்களுக்கு எல்லாம் மரண தண்டனையும் மற்றவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டதையும் கண்ட பாலகனுக்கு தன் நிலை தெளிவாகவே புரிந்தது. குழுமி இருந்த பல்லவ மக்களுக்கு எந்த சந்தேகமும் எழாதபடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்லவ மன்னர்களைவிட தாங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அதிக அனுதாபமும் அன்பும் கொண்டிருப்பதாக ஆதித்யவர்மர் காட்டிக் கொண்டார். வேறு வழியில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலேயே இந்தத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்ற புரிதல் அனைவருக்கும் ஏற்படும்படி அங்கு காட்சிகள் அரங்கேறின. மற்றவர்களை எல்லாம் விடுவிடு என்று விசாரித்து தீர்ப்பு வழங்கிக்கொண்டே வந்த ஆதித்யவர்மர் பாலகனின் முறை வந்ததும் சற்று நிதானித்தார். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனை எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொண்டார்! ஆம். கட்டளையிடவில்லை! ஆசனத்தை விட்டு எழுந்து ஐந்தடி நடந்து ஆத்யவர்மரின் முன்னால் நின்றான் அந்தப் பாலகன்.நீதி மண்டபத்தின் மாடியில் தூணோடு தூணாக மறைந்தபடி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண், வில்லில் நாணைப் பூட்டி அம்பை எடுத்தாள்.சரியாக பாலகனைக் குறிபார்த்தாள்.அவள், சிவகாமி! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15283&id1=6&issue=20190503 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted May 11, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted May 11, 2019 அத்தியாயம் 52 மற்றவர்களை விடுவிடுவென்று விசாரித்துக் கொண்டு போன அனந்தவர்மர், கடிகையைச் சேர்ந்த பாலகனை விசாரிக்கும் நேரம் வந்ததும் நிதானித்தார்.ஒருமுறை பாலகனைக் கூர்ந்து நோக்கினார். அதைத் தொடர்ந்து அந்தப் பிரேதக் கண்களில் சில கணங்கள் சிந்தனைகள் படர்ந்தன. கடைசியாக ஏதோ முடிவுக்கு வந்ததற்கு அறிகுறியாக தன் தலையை ஒருமுறை அசைத்துவிட்டு பாலகனை எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொண்டார். விசாரணையின் விளைவைப் பற்றி ஓரளவு கணித்துவிட்ட பாலகன், கம்பீரமாக எழுந்து நின்றான். ஐந்தடிகள் முன்னால் நகர்ந்தான். கூர்மையான தன் விழிகளால் அந்த நீதி மண்டபத்தை அலசினான். முகத்தில் படர்ந்திருந்த சாந்தம் அப்படியே இருந்தது.எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பதுபோது தன் கருவிழிகளைச் சுழலவிட்டுவிட்டு நீதிபதியின் ஆசனத்தில் அமர்ந்திருந்த அனந்தவர்மரின் மேல் தன் பார்வையைப் பதித்தான்.இரண்டு ஜோடிக் கண்களும் மீண்டும் ஒருமுறை கலந்தன. மனதுக்குள் என்னவிதமான உணர்வுகள் பொங்கி எழுந்ததோ... எதையும் வெளிப்படுத்தாமல் தன் நிதானத்தையும் கைவிடாமல் விசாரணையைத் தொடர்ந்தார் அனந்தவர்மர்.‘‘பாலகனே! நாம் இருவரும் ஒருவரையொருவர் முன்பே அறிவோம்..!’’ என்றார்.‘‘ஆம்... நன்றாக அறிவோம்...’’ அதே நிதானத்துடன் பாலகன் பதில் அளித்தான்.உடனே சலசலப்புக் குறைந்தது. கயிற்றால் கட்டிப் போட்டதுபோல் நீதி மண்டபத்தில் இருந்த மக்கள் அமைதியாக விசாரணையை கவனிக்கத் தொடங்கினார்கள். ‘‘நீதி அதிகாரி, குற்றவாளி என்ற இவ்வித உறவில் நாம் முன்பு சந்திக்கவில்லை...’’ அனந்தவர்மர் சுட்டிக் காட்டினார்.‘‘ஏற்கிறேன்...’’ கணீரென்ற குரலில் பிசிறு தட்டாமல் பாலகன் சொன்னான். ‘‘அப்பொழுது தூதுவனாக வந்தேன்...’’‘‘யாருடைய தூதுவனாக என்பதை இந்த அவைக்கு நீயே தெரிவிக்கிறாயா அல்லது...’’ அனந்தவர்மர் இழுத்தார்.‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் தூதுவனாக! இதைச் சொல்வதில் எனக்கென்ன அச்சம்..?’’ ‘‘கேட்பதில் எனக்கும் அச்சமில்லை!’’ பிரேதக் கண்களில் அலட்சியம் வழிந்தது. சற்றே கிண்டலும். ‘‘அப்படி சாளுக்கிய மன்னரின் சார்பாக என்னிடம் தூது வந்தவன் இப்பொழுது சாளுக்கியர்களின் எதிரியாக, பல்லவர்களுக்குத் துணை போனதாக, விசாரணை மண்டபத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறாய் என்பதை காஞ்சி மக்கள் அறிய வேண்டுமல்லவா..?’’‘‘கண்டிப்பாக அறிய வேண்டும்!’’ பட்டென்று பாலகன் இடைமறித்தான்.‘‘எதைக் குறிப்பால் உணர்த்த வருகிறாய்..?’’ அனந்தவர்மரின் கண்கள் இடுங்கின.‘‘உங்கள் முன்னேற்றத்தை!’’‘‘விளக்க முடியுமா..?’’‘‘தாராளமாக. பல்லவ நாட்டை... இந்த காஞ்சி மாநகரத்தை இப்பொழுது யார் ஆட்சி செய்கிறார்கள்..?’’ கேட்ட பாலகன், நிதானத்தைக் கைவிடாமல் தொடர்ந்தான். ‘‘இதை நீங்களே இந்த அவைக்கு சொல்கிறீர்களா அல்லது...’’ நிறுத்திய பாலகனின் உதட்டில் புன்னகை பூத்தது.அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் ஒரு கணம் ஒளிர்ந்தன. தான், தொடுத்த அதே வினா! கடிகையைச் சேர்ந்த பாலகன் லேசுப்பட்டவனல்ல. ‘‘அதற்கென்ன... எல்லோருக்கும் தெரிந்ததுதானே..?’’‘‘தெரிந்ததை மறுமுறை உரைப்பதில் என்ன தயக்கம்..?’’‘‘தயக்கம் என யார் சொன்னது..?’’‘‘எனில் வினாவுக்கு விடையளிக்கலாமே! பல்லவ நாட்டை... இந்த காஞ்சி மாநகரத்தை இப்பொழுது யார் ஆட்சி செய்கிறார்கள்..?’’ இம்முறை பாலகன் அதே கேள்விக்கு அழுத்தம் கொடுத்தான்.‘‘சாளுக்கியர்கள்தான்! அதில் உனக்கேதும் சந்தேகம் இருக்கிறதா..?’’‘‘இருக்கிறது!’’ சொன்ன பாலகன் தன் நெஞ்சை நிமிர்த்தினான்.‘‘இப்பொழுதே அம்பை எய்து விடலாமா..?’’ சுற்றிலும் மறைந்திருந்த வீரர்களில் ஒருவன் கேட்டான்.‘‘கூடாது!’’ தலைவன் போல் காணப்பட்டவன் குரலை உயர்த்தாமல் சீறினான். ‘‘பின் எப்பொழுது அம்புகளைத் தொடுக்க வேண்டும்..?’’‘‘அந்தப் பெண் தன் வில்லின் நாணை இழுத்ததும்!’’ என்றபடி நீதி மண்டபத்தின் மாடித் தூணோரம் மறைந்திருந்த சிவகாமியை சுட்டிக் காட்டினான் வீரர்களின் தலைவன். ‘‘அப்படித்தான் நமக்கு உத்தரவு. அதை மீறக் கூடாது. இமைக்காமல் அவளை விட்டு பார்வையை அகற்றாமல் இருங்கள்...’’‘‘அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்..? இப்பொழுதே நம் அனைவரின் அம்புகளாலும் அவளை வீழ்த்தி விடலாமே..?’’‘‘கூடாது. நமக்கு இடப்பட்ட கட்டளை வேறு...’’‘‘சரி... அவளைச் சுற்றி வளைத்து சிறைப்பிடித்து விடலாம் அல்லவா..?’’‘‘ஒருபோதும் அப்படிச் செய்யக் கூடாது என உத்தரவு!’’வீரன் ஒரு கணம் யோசித்தான். ‘‘ஒருவேளை அவள் நாணை இழுக்கவில்லை என்றால்..?’’ கேட்டவனைக் கூர்ந்து பார்த்தான் தலைவன். ‘‘நீங்களும் அவள் மீது அம்புகளைப் பொழிய வேண்டாம்!’’‘‘எதுவும் செய்யாமல் விசாரணை முடிந்து கூட்டத்தோடு கூட்டமாக அவளும் கலைந்து சென்றால்..?’’‘‘தடுக்க வேண்டாம்!’’ பட்டென்று சொன்னான் தலைவன். ‘‘அவளைப் பின்தொடரவும் வேண்டாம்! சொன்னது நினைவிருக்கட்டும்...’’ சிவகாமியை ஒரு கணம் பார்த்துவிட்டு தன் மறைவிடத்திலிருந்து அகன்றான் அந்தத் தலைவன்.வீரர்களுக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் தலைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தங்கள் வில்லில் நாண் ஏற்றினார்கள். சிவகாமியையே, அவளது அசைவையே உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார்கள். ‘‘என்ன சந்தேகமோ..?’’ குரலில் எந்த வேறுபாட்டையும் காண்பிக்காமல் நிதானமாகவே அனந்தவர்மர் கேட்டார்.‘‘சாளுக்கியர்கள்தான் இந்தப் பல்லவ நாட்டை ஆள்கிறார்களா என்று!’’ பாலகன் சொன்னான்.நீதிமன்றம் ஒரு கணம் குலுங்கியது. எதற்காக அந்தப் பாலகன் சுற்றிச் சுற்றி இந்த சந்தேகத்தைக் கிளப்புகிறான் என யாருக்கும் புரியவில்லை. அவன் மீது மக்களுக்கு பரிதாபம் அதிகரித்தது. ‘ஐயோ பாவம்...’ என தங்கள் கவலையைப் பகிர்ந்துகொண்டார்கள்.‘‘எதனால் இந்த ஐயம்..?’’ அனந்தவர்மரின் உதட்டில் புன்னகை பூத்தது.‘‘நீதிபதியின் இருக்கையில் நீங்கள் அமர்ந்திருப்பதால்!’’‘‘ஏன், நான் அமரக் கூடாதா..?’’‘‘சாஸ்திரத்தில் அதற்கு இடமில்லை!’’‘‘எந்த சாஸ்திரத்தில்..?’’‘‘நீதி சாஸ்திரத்தில்!’’ உரக்கச் சொன்னான் பாலகன். ‘‘நாட்டின் மன்னர் மட்டுமே நீதிபதியின் ஆசனத்தில் அமரலாம்!’’‘‘வேறு யாருக்கும் அந்த வாய்ப்பு இல்லையா..?’’அனந்தவர்மரின் இந்த வினா ஒரு கணம் பாலகனை நிறுத்தியது. எதையோ சொல்ல வந்தவன் தன் உதடுகளை மூடிக் கொண்டான்.‘‘சொல் பாலகனே! மன்னரைத் தவிர வேறு யார் இந்த இருக்கையில் அமரலாம்..? கடிகையில் நீ பயின்ற நீதி சாஸ்திரத்தில் அதற்கு விடை இருக்குமே..?’’‘‘பதில் இருக்கிறது! ஆனால், அது முறையான விடையா என்பதில் ஐயமும் இருக்கிறது!’’ ‘‘மீண்டும் ஐயமா..?’’ அனந்தவர்மர் வாய்விட்டு நகைத்தார். ‘‘தெளிவாகச் சொல்... காஞ்சி மக்களுக்கும் புரிய வேண்டுமல்லவா..?’’ ‘‘மன்னரைத் தவிர அந்த நாட்டில் நீதி பரிபாலனம் செய்பவர் நீதிபதியின் ஆசனத்தில் அமரலாம். அப்படி அமரும் தகுதி படைத்தவர் காஞ்சிக் கடிகையைத் தலைமையேற்று நிர்வகிப்பவராக இருக்க வேண்டும் என்பது பல்லவர்களின் வழக்கம். அதே பழக்கத்தை சாளுக்கிய மன்னரும் காஞ்சியில் கடைப்பிடிக்கிறார். எனவே, என்னை ஒன்று சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் விசாரிக்கலாம் அல்லது கடிகையின் தலைவர் விசாரிக்கலாம். இந்த இரண்டையும் சேராத நீங்கள்... சாளுக்கிய மன்னரின் அண்ணனாகவே இருந்தாலும்... நீதிமன்றத்தில் விசாரிக்க உரிமை இல்லை!’’ குரலை உயர்த்தாமல் அதேநேரம் அச்சம் என்பதே இல்லாமலும் பாலகன் அறிவித்தான்.குழுமி இருந்த மக்களால் தங்கள் செவிகளையே நம்ப முடியவில்லை. தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையிலும் எவ்வளவு தைரியமாகப் பேசுகிறான்... மக்களின் எண்ண ஓட்டம் அனந்தவர்மருக்கும் புரிந்தது. என்றாலும் அதை வெளிப்படுத்தாமல் தன் விசாரணையைத் தொடர்ந்தார்.‘‘நீ குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் நான் இல்லாததால் உன்னை விசாரிக்கும் உரிமை எனக்கு இல்லை என்கிறாய்... அப்படித்தானே..?’’‘‘ஆம்!’’‘‘அதுவே நீ குறிப்பிட்ட இரண்டு ஸ்தானங்களில் ஒன்றில் நான் அமர்ந்தால் இந்த விசாரணையை... உன்மீது சுமத்தப்பட்டுள்ள, பல்லவர்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டை நான் விசாரிக்கலாம் அல்லவா..?’’கடிகை பாலகன் அவரை வியப்புடன் பார்த்தான். அனந்தவர்மர் என்ன சொல்ல வருகிறார்..?புரவிக் கொட்டடியில் இருந்த காவலாளிக்குக் கையும் ஓடவில்லை காலும் நகரவில்லை. ஏந்திய ஓலைக்குழலையே வெறித்தான். ஐந்து புறாக்கள்... இது மட்டும்தான் குழலுக்குள் இருந்த அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த இரு சொற்களும் உணர்த்திய பொருள்...தலையை உலுக்கிக் கொண்ட புரவிக் கொட்டடியின் காவலாளி வந்த கட்டளைக்கு அடிபணிந்து செயலில் இறங்கினான்.‘‘நீங்கள் சாளுக்கிய மன்னராக முடிசூட்டிக் கொண்டீர்களா..?’’ பாலகன் வியப்புடன் கேட்டான்.‘‘இல்லை...’’ அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் நகைத்தன. ‘‘கடிகையின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறேன்!’’‘‘எப்போது..?’’‘‘இன்று காலையில்!’’‘‘விழா எதுவும் நடத்தப்படவில்லையே..?’’‘‘தவிர்த்துவிட்டேன்! ஆடம்பரங்களில் விருப்பமில்லை. இந்த விசாரணை மண்டபத்தில் அறிவிப்பதே போதும் எனக் கருதுகிறேன்...’’ அலட்சியமாகச் சொன்ன அனந்தவர்மர், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பாலகனை ஏறிட்டார். ‘‘இனி முறைப்படி விசாரணையைத் தொடங்கலாமா..?’’காஞ்சி மாநகரைக் கடந்து தோப்பினுள் கங்க இளவரசன் நுழைந்ததுமே சாளுக்கிய வீரர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.‘‘என்ன..?’’ கோபத்துடன் கேட்டான் கங்க இளவரசன்.‘‘உங்களை மீண்டும் காஞ்சிக்கு வரும்படி உத்தரவு...’’ வீரர்களில் தலைவன் போல் காணப்பட்டவன் பணிவுடன் பதில் அளித்தான்.‘‘யார் உத்தரவு..?’’கேட்ட கங்க இளவரசனிடம் பணிவுடன் முத்திரை மோதிரம் ஒன்றை எடுத்து தலைவன் கொடுத்தான். ‘‘இதைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்...’’பார்த்த கங்க இளவரசன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. உரையாடும் துணிவும் அவனுக்கு இல்லை. சாளுக்கிய மன்னராலேயே மீற முடியாத இடத்தில் இருந்து அல்லவா உத்தரவு வந்திருக்கிறது... பெருமூச்சுடன் தன் இடுப்பில் சாளுக்கிய மன்னர் செருகிய குழலைப் பார்த்தான்.எதுவும் சொல்லாமல் தன் புரவியைத் திருப்பி காஞ்சியை நோக்கிச் செலுத்தினான்.வீரர்கள் தலைவணங்கி அவனுக்கு வழிவிட்டார்கள்!‘‘சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகரத்துக்குள் பல்லவர்களின் உபசேனாதிபதியும் சோழர்களின் இளவரசனுமான கரிகாலன் யாரும் அறியாமல் வந்து சென்றிருக்கிறான். அவனுக்கு நீ உதவி புரிந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதைப்பற்றி நீ என்ன சொல்ல நினைக்கிறாய்..?’’அனந்தவர்மர் இப்படிக் கேட்டு முடித்ததும் தன் தரப்பைச் சொல்ல பாலகன் வாயைத் திறந்தான்.இதற்காகவே காத்திருந்ததுபோல் தூணோரம் மறைந்திருந்த சிவகாமி தன் கையில் இருந்த வில்லின் நாணை இழுத்தாள்.இமைக்காமல் அவளையே கவனித்துக் கொண்டிருந்த சாளுக்கிய வீரர்கள் பதிலுக்கு தங்கள் வில்லின் நாணை இழுத்தார்கள்.சிவகாமி குறிபார்த்தாள்.சாளுக்கிய வீரர்கள் குறிபார்த்தார்கள்.பிடித்த நாணை சிவகாமி செலுத்த முற்பட்டபோது -மழையென அவள் மீது அம்புகள் பெய்தன. எல்லாமே சாளுக்கிய வீரர்கள் செலுத்தியவை.கத்தவும் மறந்து, உடலில் பாய்ந்த அம்புகளுடன் தரையில் சரிந்தாள் சிவகாமி! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15311&id1=6&issue=20190510 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted May 17, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted May 17, 2019 ரத்த மகுடம்-53 சிவகாமி இருந்ததே விசாரணை மண்டபத்தின் உப்பரிகையில் இருந்த தூணின் மறைவில் என்பதாலும், மாடியில் மக்கள் அனுமதிக்கப்படாததாலும், காற்று மட்டுமே அங்கு நீக்கமற நிறைந்திருந்ததாலும் சிவகாமி சரிந்ததையோ அவள் உடலில் அம்புகள் பாய்ந்ததையோ ஒருவரும் கவனிக்கவில்லை.மழையென பொழிந்த அம்புகளால் அலறும் சக்தியை அவளும் இழந்திருந்தாள்.நியாயமாகப் பார்த்தால் சிவகாமியின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்திருக்க வேண்டும். இடைவிடாமல் அம்புகளை எய்த சாளுக்கிய வீரர்களின் நோக்கமும் அதுதான். அதனாலேயே அம்புகளைப் பாய்ச்சியதும் தங்கள் கடமை முடிந்தது என விலகவும் செய்தார்கள்.ஆனால், மனிதன் கணக்கிடும் நியாய, அநியாயங்கள் வேறு... இயற்கையின் கணிப்பு வேறு என்பதை ஒருபோதும் எந்த உயிரும் உணர்வதில்லையே! அப்படி உணரும் சக்தி இருந்திருந்தால் மனித குல வரலாறே வேறு விதமாக அல்லவா மாறியிருக்கும்! எதிர்பாராத கணத்தில் உயிரை விட்டவர்களும் உண்டு. எதிர்பார்த்த கணத்தில் பிரிய இருந்த உயிர், பிரியாமல் கெட்டிப்பட்டதும் உண்டு. சரித்திரம் என்பதே இந்த இரண்டு சாத்தியங்களாலும் நிரம்பியதுதான். உயிர் மட்டுமல்ல... வெற்றி தோல்விகள் கூட கணத்தில் தீர்மானிக்கப்படுபவைதான். மனித எத்தனங்கள் எல்லாமே இப்படி கணத்துக்கு முன் மண்டியிட்டு தாழ்பணிந்திருக்கின்றன. இந்தக் கணத்தை கடவுள் என டையாளப்படுத்துபவர்களும் உண்டு; இயற்கையின் விதி என அறிவிப்பவர்களும் உண்டு; இவை இரண்டுமல்ல என மறுத்து மூன்றாவதாக வேறு எதையாவது குறிப்பிடுபவர்களும் உண்டு.எது எப்படியிருந்தாலும் கணங்கள் மட்டும் எல்லா கணங்களிலும் யாருக்காவது கனத்தபடியே இருக்கின்றன; சரித்திரத்தை காலம்தோறும் எழுதியபடி இருக்கின்றன.அப்படியொரு கணம்தான் அந்தக் கணத்தில் சிவகாமிக்கு வாய்த்தது!அலறும் சக்தியற்று சரிந்தவளின் செவியில் மக்கள் கூக்குரலும் அங்கும் இங்கும் ஓடுவதும் துல்லியமாகவும் துல்லியமற்றும் விழுந்தது. ஒலிப்பது கனவிலா நிஜத்திலா என்பதை உணரும் சக்தி அப்போது அவளுக்கு இல்லை. ‘கரிகாலனுக்கு நீ உதவியதாக ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன... இதுகுறித்து என்ன சொல்ல நினைக்கிறாய்..?’ என நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தபடி அனந்தவர்மன் கேட்ட வினாவுக்கு அந்த கடிகை பாலகன் என்ன பதில் சொன்னான்..? ஒருவேளை அவன் சொன்ன விடையைத் தொடர்ந்துதான் இந்தக் கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறதா..? பொய்மையும் வாய்மை இடத்து என்பதை மறுத்து உண்மையையே அந்தப் பாலகன் கூறிவிட்டானா..? அவனுக்கு மரண தண்டனை அறிவித்து விட்டார்களா..? அப்படி மட்டும் நிகழ்ந்துவிட்டால் கரிகாலன் தன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாரே...மயக்கம் முற்றிலுமாகத் தன்னைத் தழுவும் முன் சிவகாமியின் உள்ளத்தில் படர்ந்த சிந்தனைகள் இவைதான்.அதன்பிறகு எண்ணங்கள் அவளை விட்டு அகன்றன. தன் நினைவை அவள் இழந்தாள்.ஒருவேளை அம்புகள் சிவகாமியின் உடலைத் தைக்காவிட்டாலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு தன் நினைவை அவள் இழந்திருப்பாள். ஏனெனில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட காட்சிகள் அடுத்தடுத்து விசாரணை மண்டபத்தில் அரங்கேறின. ‘‘சொல் பாலகனே... ஏன் மவுனமாக இருக்கிறாய்? கரிகாலனுக்கு நீ ஏன் உதவி புரிந்தாய்? இதற்குமுன் உன் வாழ்க்கையில் நீ கரிகாலனைச் சந்தித்ததும் இல்லை... உறவாடியதும் இல்லை. அப்படியிருக்க யார் சொல்லி பல்லவர்களின் உபசேனாதிபதியான அவனுக்கு உதவி செய்தாய்?’’பிரேதக் கண்கள் ஜொலிக்க அனந்தவர்மர் இப்படிக் கேட்டதும் கடிகையைச் சேர்ந்த அந்தப் பாலகன் நிமிர்ந்தான். சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டு அங்கிருந்த மக்களைப் பார்த்தான்; அலசினான். பாலகன் சொல்லவிருக்கும் பதிலுக்காக அனந்தவர்மர் காத்திருந்தாரோ இல்லையோ... பார்வையாளர்களாக வந்திருந்த மக்கள் அனைவரும் தங்கள் செவிகளைக் கூர்தீட்டிக் காத்திருந்தார்கள். பால் வடியும் அந்த முகமும் அதில் ஜொலித்த தேஜஸும் அந்தப் பாலகன் மீது அவர்களுக்கு மரியாதையையும் அன்பையும் ஏற்படுத்தி இருந்தன. இதற்குமுன் அந்தப் பாலகனை எங்குமே யாருமே சந்தித்ததில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. இனி சந்திக்கவே முடியாதோ என்ற அச்சமே அவர்கள் மனதில் விருட்சமாக வளர்ந்து நின்றது! ஏனெனில் அனந்தவர்மர் நடத்திய விசாரணையின் போக்கு எந்தத் திசையில் செல்கிறது என்பது அங்கிருந்த அனைவருக்குமே புரிந்திருந்தது. துடிக்கும் இதயத்துடன் பாலகனையே இமைக்காமல் பார்த்தார்கள். மக்களின் எண்ண ஓட்டத்தை ஸ்படிகம் போல் பாலகன் படித்தான். படிக்க மட்டுமே செய்தான். மற்றபடி அதில் தன் கவனத்தைக் குவிக்கவில்லை. யாருடைய ஆறுதலும் அன்பும் அவனுக்கு அவசியமாகவும் படவில்லை. நெஞ்சை நிமிர்த்தி அலட்சியத்துடன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல அனந்தவர்மரை நோக்கி அவன் வாயைத் திறந்தான்.ஆனால், ஒரேயொரு எழுத்து சொல் கூட அவன் உதட்டிலிருந்து பிறக்கவில்லை! பிறக்க அக்கணமும் அனுமதிக்கவில்லை! ஏனெனில் அக்கணத்தையும் அதற்கடுத்து வந்த கணங்களையும் அசுவங்கள் ஆக்கிரமித்தன!ஆம். புரவிகள்! எங்கிருந்து எப்படி வந்தன என்பதை ஒருவராலும் ஆராய முடியவில்லை. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட அசுவங்கள் விசாரணை மண்டபத்துக்குள் புகுந்தன. அவை அனைத்துமே அப்பொழுதுதான் அரபு நாட்டிலிருந்து மல்லைத் துறைமுகத்தில் வந்து இறங்கியவை. கடற்கரை மணலில் ஓடவிட்டு சரிபார்க்கப்பட்டு காஞ்சி மாநகரத்தை வந்தடைபவை. மற்றபடி இன்னமும் பழக்கப்படாதவை.எனவே மக்கள் கூட்டத்துக்குள் அவை தறிகெட்டுப் பாய்ந்தன. அவற்றை அடக்கும் வல்லமை படைத்த அசுவ சாஸ்திரிகள் அங்கு இல்லாததால் மனம்போன போக்கில் அவை பாய்ந்தன.அவற்றின் குளம்புகளில் மிதிபடாத வண்ணம் தப்பிக்க மக்கள் மட்டுமல்ல... நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்த அனந்தவர்மரும் அவருக்குக் காவலாக நின்ற சாளுக்கிய வீரர்களும் முயன்றார்கள்.எல்லோரும் எல்லா இடங்களிலும் ஓடி தப்பிக்க முயன்றார்கள். முண்டியடித்தார்கள். ஒருவர் மீது மற்றவர் மோதி விழுந்தார்கள். விழுந்தவர்கள் வெளியில் பாய்ந்தார்கள்.இந்த அமளிகள் எல்லாம் அடங்க ஒரு நாழிகையானது.தகவல் அறிவிக்கப்பட்டு வந்து சேர்ந்த சாளுக்கிய அசுவ சாஸ்திரிகள் ஒருவழியாக புரவிகளை அடக்கினார்கள். அனைத்தையும் கொட்டடிக்கு அழைத்துச் சென்றார்கள்.எல்லாம் முடிந்தபிறகுதான் அந்த உண்மை தெரிந்தது.விசாரணைக் கூண்டில் இருந்த அந்த கடிகை பாலகனைக் காணவில்லை!இது மட்டுமே அங்கிருந்த அனந்தவர்மரும் மற்றவர்களும் அறிந்தது. அவர்கள் அறியாதது, உப்பரிகையில் அம்பு பாய்ந்த நிலையில் மயக்கம் அடைந்திருந்த சிவகாமியும் அங்கு இல்லை என்பது!அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் மேலும் பிரேதத்தை பிரதிபலித்தன. கண்கள் இடுங்கின. அவரால் நடந்ததை எல்லாம் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.கடிகை பாலகன் தப்பித்துவிட்டான் என்பதை விட பாய்ந்த புரவிகள் மோதியோ அல்லது அதன் குளம்படிகளில் சிக்கியோ மக்களில் ஒருவரோ அல்லது சாளுக்கிய வீரர்களில் ஒருவரோ காயமும் படவில்லை... உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இல்லை... என்ற உண்மை அவர் முகத்தை அறைந்தது!ஒழுங்குபடுத்தப்படாத புரவிகளை அந்தளவுக்கு ஒழுங்குடன் விசாரணை மண்டபத்துக்குள் ஓட விட்டவன் யார்..? அவன் யாராக இருந்தாலும் கைதேர்ந்த அசுவ சாஸ்திரியாக இருக்க வேண்டும்...அனந்தவர்மரின் புருவங்கள் முடிச்சிட்டன. யார் அவன் என்ற கேள்வி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது.‘‘சந்தேகமென்ன... கரிகாலன்தான்!’’ வெறுப்புடன் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.‘‘எப்படி அவ்வளவு உறுதியுடன் சொல்கிறீர்கள்..?’’ அனந்தவர்மரின் பார்வை வேறு எங்கோ இருந்தது.‘‘அவனைத் தவிர வேறு யாராலும் இந்தக் காரியத்தை செய்திருக்க முடியாது! இந்தப் பகுதியில் மட்டுமல்ல... இந்த பரத கண்டத்திலேயே இரண்டே இரண்டு பேர்தான் கைதேர்ந்த அசுவ சாஸ்திரிகள். அதில் கரிகாலனும் ஒருவன்!’’ ‘‘இன்னொருவர் சிவகாமிதானே?’’ சட்டென்று திரும்பிக் கேட்டார் அனந்தவர்மர். அவர் பார்வை சாளுக்கிய போர் அமைச்சரை அம்பென துளைத்தது.எலும்புக்குள் நடுக்கம் ஊடுருவினாலும் ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் பார்வையைத் திருப்பவில்லை. அனந்தவர்மரின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தார். ‘‘ஆம்!’’‘‘அவள் எங்கே..?’’‘‘இறந்திருக்க வேண்டும்...’’‘‘அதாவது உறுதியாகத் தெரியாது. அப்படித்தானே?’’‘‘அப்படியில்லை....’’‘‘பின் வேறு எப்படி..?’’‘‘விசாரணை மண்டபத்துக்கு சிவகாமியும் வந்திருந்தாள். நம் வீரர்கள் அவள் மீது அம்புகளைப் பாய்ச்சினார்கள்...’’‘‘எனில் இறந்துவிட்டாள் என உறுதியாகச் சொல்லவேண்டியதுதானே..?’’ராமபுண்ய வல்லபர் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றார். ‘‘அவள் சடலம் கிடைத்ததா..?’’ அனந்தவர்மர் கேட்டார்.‘‘இல்லை!’’‘‘அதாவது நம் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு பாலகனையும் அவளையும் ஒருசேர கரிகாலன் அழைத்துச் சென்றிருக்கிறான்... அப்படித்தானே..?’’முதல் முறையாக ராமபுண்ய வல்லபர் தலைகுனிந்தார்.‘‘இதனால் என்னென்ன ஆபத்துகள் வரும் என கொஞ்சமாவது யோசித்தீர்களா ராமபுண்ய வல்லபரே! சிவகாமி மீது அம்புகள் பாய்ந்திருக்கின்றன. அவளைக் காப்பாற்ற கரிகாலன் சிகிச்சை அளிக்கப் போகிறான். அப்படி சிகிச்சை அளிக்கப்பட்டால் நம் திட்டம் வெளிப்பட்டு விடாதா..? சிவகாமி யார் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள மாட்டானா..? சாளுக்கிய மன்னனான என் தம்பி விக்கிரமாதித்தனுக்குக் கூடத் தெரியாமல் நாம் அரங்கேற்ற நினைத்த காதை அம்பலத்துக்கு வந்தால் நம் நிலை என்னவாகும் என கொஞ்சமாவது யோசித்தீர்களா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் உதட்டைக் கடித்தார்.‘‘போங்கள்... உடனடியாக வீரர்களையும் ஒற்றர்களையும் அனுப்பி சிவகாமிக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேடச் சொல்லுங்கள். அநேகமாக குறுவாள் பாய்ந்த சோழ மன்னருக்கு எந்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறாரோ அவரிடம்தான் சிவகாமியையும் கரிகாலன் அழைத்துச் சென்றிருப்பான்...’’புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், அனந்தவர்மருக்கு தலைவணங்கிவிட்டு வெளியே சென்றார்.பற்களைக் கடித்தபடி அந்த அறையின் சாளரத்துக்கு அனந்தவர்மர் வந்தார். காஞ்சி மாநகரம் பரந்து விரிந்திருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவரின் பார்வை சட்டென கூர்மை அடைந்து ஓர் இடத்தில் நிலைத்தது.அந்த இடத்தில் புறாக்கள் தானியங்களைக் கொத்திக் கொண்டிருந்தன! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15351&id1=6&issue=20190517 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted May 24, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted May 24, 2019 ரத்த மகுடம்-54 ‘‘வாருங்கள் அண்ணா!’’ அனந்தவர்மரை வரவேற்ற சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர், வாயில் அருகில் சங்கடத்துடன் நின்றிருந்த வீரனைக் கண்டதும் புன்னகை பூத்தார்.அவனது சங்கடத்துக்கான காரணம் விக்கிரமாதித்தருக்கு புரிந்தது. எல்லோரையும் போல் ‘மன்னரிடம் அனுமதி பெற்று உங்களை உள்ளே அனுப்புகிறேன்...’ என தன் அண்ணனிடம் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறான். மற்றவர்கள் போல் ‘மன்னரிடம் அனுமதி பெற்று வா...’ என அண்ணனும் அவனிடம் சொல்லவில்லை. மாறாக அவன் இருப்பையே அலட்சியம் செய்தபடி தன் அந்தரங்க அறைக்குள் அனந்தவர்மர் நுழைந்திருக்கிறார். இதனால் எங்கே, தான் அவனைத் தண்டிப்போமோ என அஞ்சுகிறான்...புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக வீரனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தார்.லேசான மனதுடன் அவரை வணங்கிவிட்டு அறையின் கதவை ஓசை எழுப்பாமல் இழுத்து மூடினான்.‘‘அமருங்கள்..!’’ மலர்ச்சியுடன் இருக்கையைக் காட்டினார் விக்கிரமாதித்தர்.‘‘அமர்வதற்காக நான் வரவில்லை விக்கிரமாதித்தா!’’ கர்ஜித்த அனந்தவர்மர், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையில் தீட்டப்பட்டிருந்த சிவகாமியின் உருவத்தை வெறுப்புடன் பார்த்தார்.அண்ணனின் பார்வை சென்ற திக்கையும் அவரது முகமாறுதலையும் கண்ட சாளுக்கிய மன்னர், தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் படரவிடவில்லை. சாதாரணமாகவே உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘இன்று விசாரணை மண்டபத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா..?’’‘‘நடக்க வேண்டும் என்று நீ நினைத்தவை அனைத்தும் இம்மி பிசகாமல் அரங்கேறின!’’‘‘நான் நினைத்ததா..?’’‘‘ஆம். சாளுக்கிய மன்னனான நீ நினைத்தபடியே அசம்பாவிதங்கள் நடந்தன!’’ ‘கள்’ விகுதியை அழுத்திச் சொன்ன அனந்தவர்மர், ‘‘உன்னைப் பாராட்டத்தான் வேண்டும் விக்கிரமாதித்தா! எதுவுமே தெரியாதது போல் அப்பாவியாகக் கேள்வி கேட்கிறாய் பார்..!’’ என்றார்.‘‘உண்மையிலேயே எதுவும் எனக்குத் தெரியாது அண்ணா!’’‘‘இதை நான் நம்ப வேண்டுமா..?’’‘‘உங்கள் விருப்பம். ஆனால், அண்ணனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தபிறகு அதுகுறித்து கவலையில்லாமல் இருப்பதுதான் இந்தத் தம்பியின் வழக்கம்! தாங்களும் அதை அறிவீர்கள் என நம்புகிறேன்!’’‘‘நீ சொல்வதை மட்டுமல்ல... வேறு சில விஷயங்களையும் அறிய நேர்ந்ததாலேயே இங்கு வந்திருக்கிறேன்... அதுவும் உன் மீதுள்ள நம்பிக்கையில்!’’‘‘எந்த நம்பிக்கையைக் குறிப்பிடுகிறீர்கள் அண்ணா? சாளுக்கிய மன்னன் என்ற முறையில் நம் நாட்டின் பெருமையைக் கட்டிக் காக்க நான் முற்படுவதைத்தானே?’’‘‘ஆம். சின்ன திருத்தத்துடன்!’’ அனந்தவர்மரின் உதட்டில் இகழ்ச்சி பூத்தது.‘‘என்ன திருத்தம்?’’‘‘சாளுக்கியர்களின் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் நீ இறங்கியிருக்கிறாய் என்ற நம்பிக்கையுடன்!’’‘‘உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம்..?’’‘‘இன்று விசாரணை மண்டபத்தில் அரங்கேறிய சம்பவங்கள்!’’‘‘என்ன நடந்தது அண்ணா..?’’‘‘நீ திட்டமிட்டவை அனைத்தும்! பல்லவர்களின் உபசேனாதிபதியும் சோழ இளவரசனுமான கரிகாலன் காஞ்சியில் இருந்து தப்பிக்க உதவி புரிந்ததாகக் கைது செய்யப்பட்ட கடிகையைச் சேர்ந்த பாலகன் தப்பித்துவிட்டான்!’’‘‘அடாடா... சூழ்ந்திருந்த நம் வீரர்களை மீறி எப்படி அந்தப் பாலகன் தப்பினான்..?’’கேட்ட விக்கிரமாதித்தரை சுட்டெரிக்கும் விழிகளுடன் அனந்தவர்மர் நோக்கினார். ‘‘ஐந்து புறாக்களால்!’’எதையோ சொல்ல முற்பட்ட சாளுக்கிய மன்னர் சட்டென்று மவுனமானார்.‘‘ஏன் அமைதியாகிவிட்டாய் விக்கிரமாதித்தா..? ‘ஐந்து புறாக்கள்’ என்ற தகவல் உன் வாயைக் கட்டிவிட்டதா..? காஞ்சிக்கும் பல்லவர்களுக்கும் வேண்டுமானால் இதன் அர்த்தம் புரியாமல் இருக்கலாம். ஆனால், சாளுக்கிய தேசத்தைச் சேர்ந்த ஒவ்வொருவனுக்கும் இந்த ‘ஐந்து புறாக்கள்’ என்பது மிகப்பெரிய எழுச்சியைத் தரக் கூடியது. ஏனெனில் அது நம் தந்தை இரண்டாம் புலிகேசி கண்டறிந்த போர் வியூகம். வடக்கிலிருந்து ஹர்ஷவர்த்தனர் படைகளுடன் புறப்பட்டு தெற்கு நோக்கி வந்தபோது அவரைத் தடுத்து நிறுத்திய நம் படை, முதல் முறையாக ‘ஐந்து புறாக்கள்’ தந்திரத்தைப் பயன்படுத்தியது. இதை உருவாக்கியவர் நம் தந்தை இரண்டாம் புலிகேசி. பழக்கப்படுத்தப்படாத புரவிகளை எதிரிகளின் படைக்குள் ஓடவிட்டு அவர்களது அணிவகுப்பைச் சிதைப்பதுதான் இந்த வியூகம்! அதே தந்திரத்தைப் பயன்படுத்தித்தான் இன்று விசாரணை மண்டபத்தில் குற்றம்சாட்டப்பட்டு நின்றுகொண்டிருந்த பாலகனைத் தூக்கிச் சென்றிருக்கிறான்!’’‘‘யார்..?’’‘‘யாருக்கு உதவ நீ முற்பட்டாயோ அவனேதான்! கரிகாலன்! பாரதத்திலேயே தலைசிறந்த அசுவ சாஸ்திரியாக இன்றிருப்பது அவன்தானே!’’‘‘சாளுக்கியர்களுக்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்த செய்கையையும் நான் செய்யவில்லை... செய்யவும் மாட்டேன்!’’‘‘இதை எந்த சாளுக்கியனும் நம்பத் தயாராக இல்லை!’’‘‘உண்மை வெளிப்படும்போது நிச்சயம் நம்புவான்!’’‘‘எந்த உண்மையை..?’’‘‘ஒரு மன்னனாக நாட்டின் நலத்தில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன் என்ற உண்மையை!’’‘‘இதன் ஒரு பகுதியாகத்தான் கரிகாலனுக்கும் கடிகை பாலகனுக்கும் உதவுகிறாயா..?’’ தன் தம்பியின் அருகில் வந்து நின்று கேட்டார் அனந்தவர்மர்.அண்ணனை நேருக்கு நேர் பார்த்தாரே தவிர விக்கிரமாதித்தர் பதிலேதும் சொல்லவில்லை.‘‘தம்பி! உன் நோக்கம் உயர்வாக இருக்கலாம். ஆனால், அதற்காக நீ தேர்ந்தெடுத்திருக்கும் பாதை நமக்கே குழி பறிக்கக் கூடியது. நம் தலைநகரான வாதாபியில் நரசிம்மவர்ம பல்லவன் ஆடிய வெறியாட்டத்தை நீ மறந்திருக்க மாட்டாய் என மனதார நம்புகிறேன். வடக்கில் இருக்கும் மன்னர்களை எல்லாம் நடுங்கவைத்த நம் தந்தை, இந்தப் பல்லவர்களிடம் தோற்றதாக காஞ்சிபுரத்தில் பேசிக் கொள்கிறார்கள். பட்டயங்களும் கல்வெட்டுகளும் அத்தோல்வி குறித்துப் பேசுகின்றன! இந்த அவமானத்தைத் துடைக்கத்தானே நாம் படையெடுத்து வந்திருக்கிறோம்! பழிக்குப் பழி வாங்கத்தானே தென்னகத்தையே நம் குடையின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறோம்! அப்படியிருக்க, தனிப்பட்ட உன் விருப்பம் காரணமாக ஒட்டுமொத்த தேசத்தையும் படுகுழியில் தள்ளிவிட்டாயே! இதற்காகவா உன்னை சாளுக்கியர்களின் மன்னராக்கினோம்? விக்கிரமாதித்தா... இதற்கெல்லாம் நம் அவையில் நீ பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்! உன் பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையென்றால் பதவியை விட்டு உன்னை அகற்றவும் தயங்க மாட்டோம்! நாட்டின் நலனை முன்னிட்டு, விசாரணை முடியும் வரை மன்னருக்குரிய எந்தக் கட்டளையையும் நீ இட முடியாது. உன் மனைவியை மட்டுமல்ல, யாரையுமே தற்சமயம் நீ சந்திக்க முடியாது; கூடாது. அறை வாசலில் காவலைப் பலப்படுத்தி இருக்கிறோம். விரைவில் விசாரணை நடைபெறும். இதைச் சொல்லத்தான் நேரடியாக நானே வந்தேன்!’’சொல்லிவிட்டு வெளியேற முற்பட்ட அனந்தவர்மர், மீண்டும் சிவகாமியின் ஓவியம் வரையப்பட்ட திரைச்சீலையைப் பார்த்தார்.‘‘இந்த ஆயுதமும் இப்பொழுது கரிகாலனின் வசத்தில் சிக்கி இருக்கிறது! சிவகாமி யார் என்ற உண்மை வெளிப்பட்டால் என்ன ஆகும் என கொஞ்சமாவது யோசித்தாயா..? மன்னிக்க முடியாத உன் குறித்த குற்றங்களின் பட்டியல் நீள்கிறது விக்கிரமாதித்தா!’’முகத்தைத் திருப்பிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறிய அனந்தவர்மரை சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தார் சாளுக்கிய மன்னர்.பிறகு தன் படுக்கையில் அமர்ந்து தலையணைக்குக் கீழ் கையை விட்டு ஒரு மெல்லிய ஆடையை எடுத்து தன் முன் விரித்தார்.தென்னகத்தின் வரைபடம் அதில் தீட்டப்பட்டிருந்தது.அரக்கை எடுத்து அதில் சில இடங்களில் வட்டமிடத் தொடங்கினார்!‘‘தாமதமின்றி அவையைக் கூட்டுங்கள். எல்லோரும் வர வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லுங்கள்...’’ விடுவிடுவென்று ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் கட்டளையிட்டார் அனந்தவர்மர்.‘‘மன்னரை விசாரித்துத்தான் ஆகவேண்டுமா..?’’‘‘நாட்டைவிட மன்னன் உயர்ந்தவனல்ல போர் அமைச்சரே! சொன்னதைச் செய்யுங்கள்!’’‘‘உத்தரவு...’’ வணங்கிய ராமபுண்ய வல்லபர், தன் மடியில் இருந்து ஓலைக்குழல் ஒன்றை எடுத்து அனந்தவர்மரிடம் கொடுத்தார்.‘‘என்ன இது..?’’‘‘கங்க இளவரசரிடம் இருந்து கைப்பற்றியது!’’மேலும் கீழுமாக ஓலைக் குழலை ஆராய்ந்தார் அனந்தவர்மர்.‘‘கங்க இளவரசரை என்ன செய்யலாம்..?’’‘‘அவன் வெறும் அம்புதானே? எப்பொழுதும்போல் அரண்மனையில் நடமாட விடுங்கள். ஆனால், கண்காணிப்பு இருக்கட்டும்!’’‘‘நம் இளவரசர் விநயாதித்தர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை..?’’ ராமபுண்ய வல்லபர் இழுத்தார்.இதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் அனந்தவர்மர். ‘‘பல்லவ இளவரசன் ராஜசிம்மன் எங்கு இருக்கிறான் என பல்லவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்! சாளுக்கிய இளவரசர் விநயாதித்தன் எங்கிருக்கிறார் என சாளுக்கியர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இரு நாடுகளும் போருக்குத் தயாராகிறது! வேடிக்கையாக இல்லை..?’’ நகைத்தபடி, அவர் செல்லலாம் என சைகை காட்டினார்.அதை ஏற்று ராமபுண்ய வல்லபர் வெளியேறினார்.சாளுக்கிய போர் அமைச்சர் அகன்றதும் ஓலைக் குழலில் இருந்து ஓலையை எடுத்து அனந்தவர்மர் படிக்கத் தொடங்கினார்.அவர் நெற்றியில் முத்து முத்தாக வியர்க்கத் தொடங்கின!பாய்ந்து அறையைவிட்டு வெளியே வந்தார். சென்றுகொண்டிருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரை அழைத்தார். ‘‘என்ன செய்வீர்கள் என்று தெரியாது. சிவகாமி இங்கு வந்தாக வேண்டும்! உயிருடனோ சடலமாகவோ!’’‘‘அது... அது...’’‘‘நடந்தாக வேண்டும் சாளுக்கிய போர் அமைச்சரே! சிவகாமியின் உடல் மர்மம் எக்காரணம் கொண்டும் கரிகாலன் அறிய வெளிப்படக் கூடாது!’’சிவகாமியின் உடலில் பொட்டுத் துணியில்லை. அவள் மீது பாய்ந்த அம்புகள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்தன. காயங்களுக்குக் களிம்பிடாமல் அவள் உடல் முழுக்க பச்சிலையைப் பூசத் தொடங்கினாள் மருத்துவச்சி!http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15376&id1=6&issue=20190524 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted June 1, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 1, 2019 ரத்த மகுடம்-55 மனிதனுக்கு மிதமிஞ்சிய துணிவு ஏற்படுவதற்கு பெரும் சாதனை, பெரும் பயம், பெரும் ஏமாற்றம் ஆகிய மூன்றுமே காரணமாக அமைகின்றன.பெரும் சாதனைக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் வீரன், தன் லட்சியம் பூர்த்தி அடையும் தருவாயில் எதற்கும் துணிந்து விடுகிறான். பெரும் பயம் சூழ்ந்து ஏதாவது செயலில் இறங்கினால் மட்டுமே, தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் கோழையும் துணிவு கொள்கிறான்.எதிர்பார்த்த காரியங்கள் விபரீதமாகி பெரும் ஏமாற்றம் ஏற்பட்டு உணர்ச்சிகளைத் தடுமாற வைக்கும்போது அதிலிருந்து மீள மனிதனின் துணிவு கற்பனைக்கு அப்பாற்பட்டதாகிறது.அனந்தவர்மர் துணிவு பெற்றதற்கு இந்த மூன்றுமேதான் காரணம். அதனால்தான் தன் தம்பியும் சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தரை விசாரணை செய்ய அமைச்சர் குழுவைக் கூட்ட முற்பட்டார்.எல்லா சாளுக்கிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்கும் கர்வம், அனந்தவர்மருக்கும் உண்டு. மாபெரும் சாதவாகனப் பேரரசில் சிற்றரசர்களாக, தாங்கள் அங்கம் வகித்தவர்கள்... வடக்கில் பெரும் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த மவுரியர்களின் தெற்குப் படையெடுப்பை சாதவாகனர்கள் தடுத்து நிறுத்தினார்கள். என்றாலும் அதற்கான போரில் குறுநில மன்னர்களாக இருந்த தங்கள் மூதாதையர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்ற எண்ணம் எப்பொழுதுமே சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு. ஆணாகட்டும் பெண்ணாகட்டும்... தங்கள் குழந்தையை வளர்க்கும்போது சாளுக்கிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வீரக் கதைகளைத்தான் சொல்லிச் சொல்லி வளர்ப்பார்கள்.அனந்தவர்மரின் தந்தையான இரண்டாம் புலிகேசி பிறந்து தவழ்ந்து தடுமாறி நடக்கத் தொடங்கிய காலம் வரை வீரம் செறிந்த இந்தக் கதைகள்தான் வாதாபி அரண்மனை முழுக்க சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால், அனந்தவர்மரும் சரி... அவரது தம்பியும் இப்போதைய சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தரும் சரி... வளரத் தொடங்கிய காலத்தில் சாதவாகனர்களின் ஆட்சியில் தங்கள் மூதாதையர்கள் புரிந்த வீரச் செயல்கள் மட்டுமே கதைகளாகச் சொல்லப்படவில்லை. கூடவே அவர்களது தந்தையான இரண்டாம் புலிகேசியின் வீரமும் உணர்ச்சிபூர்வமாக சொல்லப்பட்டது. பாணர்களால் அந்த வீரம் பாடலாக்கப்பட்டு சாளுக்கிய தேசம் முழுக்க எல்லா நேரங்களிலும் ஒலிக்கத் தொடங்கியது. எல்லா திருவிழாக்களிலும் இந்த வீரமே நாடகங்களாக, நாட்டியங்களாக அரங்கேற்றப்பட்டன. சாதவாகனர்களின் காலத்தில் இன்று சாளுக்கியர்களாக தலை நிமிர்ந்து தனி அரசை நிறுவியவர்கள், குறுநில மன்னர்களில் ஒருவராகத்தான் இருந்தார்கள். எனவே வடக்கிலிருந்து வந்த படையெடுப்பை தக்காணத்தில் தடுத்து நிறுத்தியதன் முழுப் பெருமையையும் அவர்கள் அடைய முடியவில்லை. சாதவாகனர்களுக்குக் கிடைத்தது போக எஞ்சிய புகழையே மற்ற குறுநில மன்னர்களுடன் சேர்ந்து சாளுக்கியர்களின் முன்னோர்களும் பங்கிட்டுக் கொண்டார்கள். ஆனால், இரண்டாம் புலிகேசியின் காலம் அப்படியல்ல. குப்த சாம்ராஜ்ஜியத்தில் படைத்தலைவர்களில் ஒருவராக இருந்து பின்னால் தனி சாம்ராஜ்ஜியம் அமைத்த புஷ்யபூதி வம்சத்தைச் சேர்ந்த ஹர்ஷவர்த்த மாமன்னரை தக்காணத்தில் படுதோல்வி அடைய வைத்து வட பகுதிக்கே ஓட ஓட விரட்டிய வீரமும் புகழும் பெருமையும் முழுக்க முழுக்க இரண்டாம் புலிகேசிக்கு மட்டுமே உரியது. வேறு யாரும் சாளுக்கியர்களின் இந்தப் புகழிலும் பெருமையிலும் பங்கு போட முடியாது என்ற எண்ணமே அளவுக்கு அதிகமான கர்வத்தை, அதுவும் நியாயமான அர்த்தத்தில் அனந்தவர்மருக்கும் விக்கிரமாதித்தருக்கும் அளித்திருந்தது.அப்படிப்பட்ட புகழையும் பெருமையையும் மங்கச் செய்யும் காரியங்கள் பல்லவ நாட்டில் அரங்கேறத் தொடங்கியபோது சாளுக்கியர்களுக்குள் சினம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. ஆம். நரசிம்மவர்ம பல்லவர் வாதாபியைத் தீக்கிரை ஆக்கி இரண்டாம் புலிகேசியைப் படுதோல்வி அடையச் செய்தார்... என கல்வெட்டில் பொறித்திருக்கிறார்கள்; சாசனம் எழுதி வைத்திருக்கிறார்கள்.இவை எல்லாம் எவ்வளவு கேவலம்... தங்கள் குலத்தை இதை விட அவமதிக்க முடியுமா..? இதற்குப் பழிவாங்கத்தான் இரண்டாம் புலிகேசிக்குப் பின் சாளுக்கியர்களின் மன்னராகப் பதவியேற்ற விக்கிரமாதித்தர் படை திரட்டிக் கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு சாளுக்கிய குடிமகனும் பெருமை கொள்ளும் தருணம் இது... ஆனால், அந்தப் பெருமைக்கே களங்கம் ஏற்படுத்தும் செயலில் அல்லவா அதே விக்கிரமாதித்தர் இறங்கியிருக்கிறார்..? நரசிம்ம வர்மர் காலத்தில் பல்லவ படைகளுக்குத் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இப்பொழுது நாயன்மார்களில் ஒருவராக அவரைத் தமிழகமே கொண்டாடுகிறது. ஆனால், அந்த சிவனடியார் வாதாபியில் புரிந்த அட்டூழியங்கள் கொஞ்சமா நஞ்சமா..? அந்தக் கொடூர செயல்களை எல்லாம் எப்படி ஒரு சாளுக்கியனால் மறக்க முடியும்..? இப்பொழுது அந்த பரஞ்சோதிக்கு நிகராக அவரைப் போன்றே சோழ நாட்டைச் சேர்ந்த கரிகாலன், அதே பல்லவப் படையின் உப சேனாதிபதியாக விளங்குகிறான். வீரத்திலும் விவேகத்திலும் பரஞ்சோதிக்கு நிகரானவன் எனக் கொண்டாடப்படுகிறான். அப்படிப்பட்டவன் சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகரத்துக்குள் வந்துவிட்டுச் சென்றிருக்கிறான்... அவனுக்கு தக்க பாதுகாப்பு அளித்து காஞ்சியை விட்டு அவன் வெளியேற சாளுக்கிய மன்னரே உதவி புரிந்திருக்கிறார் என்றால்... இதை விட கேவலம் சாளுக்கிய வம்சத்துக்கு வேறென்ன இருக்கப் போகிறது..? நினைக்க நினைக்க அனந்தவர்மருக்கு ரத்தம் கொதித்தது. தமிழ் மண்ணை ஆளத் தொடங்கியதுமே எப்படி பல்லவர்களின் குணம் சாத்வீகமாக மாறியதோ, அப்படி தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் பழிவாங்கும் வெறியும் அடங்கிவிட்டதா..?அப்படித்தான் இருக்கவேண்டும் என அனந்தவர்மர் தீர்மானமாக நம்பினார். சாதவாகனப் பேரரசில் தங்களைப் போலவே சிற்றரசர்களாக இருந்தவர்கள்தான் பின்னாளில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்கள். அதுவரை சரி. ஆனால், ஆட்சி செய்யத் தொடங்கியபிறகு மூர்க்கத்துடன் பாய்ந்திருக்க வேண்டாமா..? சிவ பக்தியில் இப்படியா சாத்வீகமாக மாற வேண்டும்..? பூர்வீகத்தை கொஞ்சமாவது நினைத்துப் பார்த்திருக்கலாமே? மாபெரும் பேரரசாகத்தான் சாதவாகனர்கள் திகழ்ந்தார்கள். தக்காணத்தையே தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தார்கள். ஆனால், தமிழகத்தில் அவர்களால் காலடி எடுத்து வைக்க முடிந்ததா..? சோழர்களும் பாண்டியர்களுமாக அல்லவா இந்த நிலப் பரப்பையே பங்கு போட்டு காலம் காலமாக ஆண்டு வருகிறார்கள்..? சாதவாகனர்கள் சார்பில் எத்தனை போர்கள் நடந்திருக்கும்..? பல்லவர்களின் மூதாதையர்களும் அல்லவா அந்த யுத்தங்களில் எல்லாம் பங்கேற்று மடிந்தார்கள்..? இதையெல்லாம் நினைத்துப் பார்த்திருந்தால் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்ததுமே தமிழகத்தை முழுமையாகத் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து சாதவாகனர்களின் காலத்து ஆசையை நிறைவேற்றியிருப்பார்களே..! எதையும் செய்யாமல், மலைகளைக் குடைந்து குடைவரைகளையும் கோயில்களையும் அல்லவா எழுப்பி வருகிறார்கள்..? இதற்கெல்லாம் பாடம் கற்பிக்கத்தானே சாளுக்கிய மன்னராக பொறுப்பேற்றதும் இரண்டாம் புலிகேசி படை திரட்டி வந்தார்..? அவருக்குக் கிடைத்தது தோல்விதானே..? அத்தோல்விக்கு பழிவாங்குவதுதானே முறை..? அதுதானே சாதவாகனர்களின் ஆன்மாவையும் சாந்தி அடைய வைக்கும்..? நினைக்க நினைக்க அனந்தவர்மருக்கு தன் தம்பியின் மீது கோபமும் ஆத்திரமும் அதிகரித்தது. மாபெரும் வீரன் என தன்னைத்தானே விக்கிரமாதித்தர் பறைசாற்றிக் கொண்டதால்தான் சாளுக்கிய தேசத்து அறிஞர்களும் அமைச்சர் பிரதானிகளும் மணிமுடியை அவனுக்கு சூட்டினார்கள். நாடகமாடி, அண்ணனான தன்னை விட அவனே ராஜ தந்திரம் அறிந்தவன் என்ற பிம்பத்தை உருவாக்கினான். இப்பொழுது அவை அனைத்தும் பொய்... வெறும் மாயை என வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. எந்த அறிஞர் குழாமும் அமைச்சர் பிரதானிகளும் அவனை மன்னராக ஏற்றார்களோ அதே குழுவினர் முன் விக்கிரமாதித்தர் வீரனல்ல... கோழை என தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். சாளுக்கிய மன்னராக, தான் முடிசூடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பல்லவர்களை வேரோடு நசுக்குவது... அதுதான் தன் தந்தையான இரண்டாம் புலிகேசிக்கு, தான் செலுத்தும் மகத்தான அஞ்சலியாக இருக்கும்... முடிவுக்கு வந்த அனந்தவர்மர், கங்க இளவரசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஓலையை திரும்பவும் எடுத்துப் படித்தார். இம்முறையும் அவர் நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்தன; படர்ந்தன; பரவின.இனம் புரியாத வெறுப்பு தன் தம்பியான விக்கிரமாதித்தர் மேல் அவருக்கு ஏற்பட்டது. என்ன காரியம் செய்துவிட்டான்... சிவகாமியின் உடல் மர்மம் வெளிப்பட்டால் சாளுக்கியர்களின் கனவே அஸ்தமித்துவிடுமே...எங்கு... என்ன நிலையில் சிவகாமி இருக்கிறாள்..? சிவகாமியின் முகத்தையே கரிகாலன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னமும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை. இப்பொழுதுதான் அவளைப் பார்க்கவே அவனுக்கு மருத்துவச்சி அனுமதி அளித்திருந்தாள். அதற்கான காரணத்தையும் அவன் அறிவான். அறிய வேண்டும் என்பதற்காகவே அவள் மார்பில் கச்சையும் இடுப்பில் துணியும் இப்பொழுது கட்டப்பட்டிருந்தன. வந்தது முதல் சிவகாமி பரிபூரணமாகப் படுத்திருந்தாள். அவள் மேனியெங்கும் பச்சிலை பூசப்பட்டு மருத்துவச்சியின் முழு கண்காணிப்பில் இருந்தாள். இன்று காலைதான் அவள் உடலில் அம்பு பாய்ந்த காயங்கள் ஓரளவு ஆறத் தொடங்கியிருப்பதாகச் சொன்னாள். கூடவே இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்றும். சிவகாமியின் கன்னங்களை மெல்ல கரிகாலன் தடவினான். ‘‘மூன்று நாழிகையாக முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே... அலுக்கவில்லையா..?’’ கேட்டபடியே வந்தாள் மருத்துவச்சி.‘‘எப்பொழுது இவள் கண் திறப்பாள்..?’’‘‘தெரியாது!’’ சட்டென மருத்துவச்சி பதில் அளித்தாள். ‘‘என்ன சொல்கிறீர்கள்..? அதுதான் அம்பு பாய்ந்த காயங்களுக்கு உரிய களிம்பை பூசியிருக்கிறீர்களே... பிறகென்ன..?’’ ‘‘பிரச்னையே அதுதான் கரிகாலா...’’ அமைதியாக அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள் அந்த மருத்துவச்சி. ‘‘புரியவில்லை அம்மா...’’‘‘கரிகாலா... உன் தாய்க்கே பிரசவம் பார்த்தவள் நான்... வாள் காயங்களுக்கும் அம்பு தைத்ததற்கும் என்ன களிம்பு, பச்சிலை பூச வேண்டும் என எனக்கு நன்றாகத் தெரியும்...’’ ‘‘அதனால்தானே இங்கு அவளைச் சுமந்து வந்தேன்..?’’ ‘‘அதனால்தானே உண்மை தெரிந்து திகைத்து நிற்கிறேன்!’’ ‘‘சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் அம்மா...’’ ‘‘கரிகாலா... உடலில் ஏற்பட்ட காயங்களுக்குத்தான் இதுவரை சிகிச்சை அளித்திருக்கிறேன்...’’ ‘‘சிவகாமியின் உடலில்தானே அம்மா அம்புகள் பாய்ந்திருக்கின்றன..?’’ ‘‘இல்லை!’’ அழுத்தமாகச் சொன்னாள் மருத்துவச்சி. கரிகாலன் அதிர்ந்தான். மருத்துவச்சி என்ன சொல்கிறாள்..? ‘‘சிவகாமி என்னும் இந்தப் பெண்ணுக்கு ஓர் உடல் அல்ல... இரு உடல்கள் இருக்கின்றன!’’ http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15404&id1=6&issue=20190531 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் 2,548 Posted June 3, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 3, 2019 தொடர்ந்து பதிவதற்கு நன்றி சதீஸ்குமார் 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted June 8, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 8, 2019 ரத்த மகுடம்-56 கரிகாலனுடன் காட்டுக்குடிசையில் தங்கிய சிவகாமிக்கு ஒவ்வொரு நாளும் பிரமை, பக்தி, அச்சம் ஆகிய மூன்றையும் விளைவிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வந்ததால், நேரம் போவது தெரியாமலும் நாழிகைக்கு நாழிகை பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு இலக்காகியும் அவள் காலத்தைக் கழித்தாள்.அவளுக்கு நினைவு திரும்பியிருந்தது. காயங்களும் ஆறியிருந்தன. உடலில் அம்புகள் பாய்ந்த இடங்கள் வடுக்களாகத் தொடங்கியிருந்தன. இதுவும் விரைவில் மறைந்துவிடும் என மருத்துவச்சி உத்தரவாதம் அளித்திருந்தாள்.சிவகாமியால் எழுந்து நடக்க முடிந்தது. கரிகாலனைப் பிடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.எல்லா காலங்களிலும் அவன் அருகில்தான் இருந்தான். நடக்கும்போது உடன் நடந்தான். தடுமாறியபோது அவன் கரங்கள் தாங்கின. தனிமையைப் போக்கும் விதத்தில் அவளுடன் பேசினான். சிரித்தான்.ஆனாலும் அவன் கண்களில் காதலோ தாபமோ வெளிப்படவில்லை. பார்வையால் எப்பொழுதும் தன் உடலை ஊடுருவும் அவன் நயனங்கள் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இருந்தன. இறுக்கமாக என்றும் சொல்லலாம். அவன் கருவிழிகளை ஏறிட்ட பொழுதெல்லாம் அவளால் அந்த இறுக்கத்தை உணர முடிந்தது.ஒருவேளை அது தன் பிரமையாக இருக்கலாம் என்ற கணிப்புகூட மறுமுறை நேருக்கு நேர் பார்க்க முற்பட்டபோது பொய்த்தது. அவள் கருவிழிகளால் அவன் நயனங்களுக்குள் ஊடுருவவே முடியவில்லை.போலவே அவன் கரங்களும். அவளைத் தொடவே செய்தான். மூலிகைக் குளிகைகளை அவனே அவளுக்குப் புகட்டினான். கஷாயத்தை குடுவையில் ஏந்தி அவனே பருகக் கொடுத்தான். எல்லா தருணங்களிலும் அவன் கரங்கள் அவளைத் தொட்டன; தாங்கின; பிடித்தன.ஆனால், அக்கரங்களில் உயிரில்லை! இடுப்பைப் பிடித்த கணங்களில் மேலேறவோ கீழ் இறங்கவோ அவை முற்படவேயில்லை. பிடித்த இடத்தில் பிடித்தபடியே நின்றன.இந்த மாற்றம் சிவகாமிக்குள் எண்ணற்ற வினாக்களை எழுப்பின. எதையும் வாய்விட்டு கேட்க முடியவில்லை.என்னவென்றுதான் அவளும் கேட்பாள்..? ஏன் உன் கைகள் கொங்கைகள் நோக்கியோ பின்புறத்தை நோக்கியோ நகரவில்லை என்றா... உன் பார்வை ஏன் சலனமற்று இருக்கிறது என்றா...?எல்லா வினாக்களுக்கும் விடையாக, ‘அப்படி ஒன்றுமில்லையே... சிகிச்சையில் இருப்பதால் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்...’ என சொல்லிவிட்டால் தன்னால் தன் முகத்தை எங்கு வைத்துக் கொள்ள முடியும்..?ஏனெனில் அவளது உடல்நலத்தைக் குறித்து அவளைவிட அவன் அதிகம் அக்கறைப்பட்டான். மருத்துவச்சி குடிசைக்குள் வரும்பொழுதெல்லாம் விசாரித்தான். லேசாக அவள் உடலில் வீசிய அனலை மறக்காமல் தெரியப்படுத்தி அதற்கென ஏதேனும் மூலிகை இருக்கிறதா என விசாரித்தான்.ஆனால், அந்த சூட்டுக்கான காரணமே அவன் அருகாமைதான் என்பதை மட்டும் அவன் புரிந்துகொள்ளவும் இல்லை; புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. அல்லது புரிந்தும் புரியாதது போல் இருக்கிறானா..? தெரியவில்லை.ஆனால், சிஷ்ருஷையில் மட்டும் ஒரு குறையும் வைக்கவில்லை! பைத்தியக்காரன்...தன்னை மீறி சிவகாமி பெருமூச்சு விட்டாள். கரிகாலன் அருகில் இருந்தும் அவன் தொலைவில் இருப்பதைப் போன்ற உணர்வு அவளை விட்டு நீங்கவேயில்லை. கணத்துக்கு கணம் இந்த எண்ணம் அதிகரிக்கவே செய்தது.போலவே மருத்துவச்சியும் அவனும் கண்களால் பேசிக் கொள்வதையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படி என்ன பரிமாறிக் கொள்கிறார்கள்..? நிச்சயமாக தன் உடல்நலம் சார்ந்து அல்ல. ஏனெனில் அதை பரஸ்பரம் இருவரும் பகிரங்கமாக வாய்விட்டே உரையாடுகிறார்கள். அதுவும் அவள் முன்பாகவே.எனவே, வேறு ஏதோ ஒன்றை, தான் அறியக் கூடாது என்பதற்காகவே சமிக்ஞையில் பேசிக்கொள்கிறார்கள். அது என்னவாக இருக்கும்..? அதற்கும், அருகில் இருந்தும் அவன் விலகி இருப்பதுபோல் தனக்குத் தோன்றுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா..?சிவகாமியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், எல்லாமே தப்புத்தப்பாக இருப்பதாக அவளுள் மலர்ந்த தீர்மானம், வேர்விட்டு வளர்ந்தது.போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் தருவாயில், பல்லவ இளவரசரான இராஜசிம்மனை அழைத்து வரக் கிளம்பிய தாங்கள் இருவரும் இப்படி காட்டிலிருக்கும் குடிசையில் எதுவும் செய்யாமல் பொழுதைக் கழிப்பது தவறெனத் தோன்றியது.‘‘கிளம்பலாமே...’’ என ஒருமுறை அவளாகக் கேட்டபோது, ‘‘இன்னும் உனக்கு சிகிச்சை முடியவில்லை...’’ என கரிகாலன் தடுத்துவிட்டான். இதற்கு மேல் என்ன சிகிச்சை தேவை என்பது சத்தியமாக அவளுக்குப் புரியவில்லை. இங்கு உண்ணும் குளிகைகளையும் கஷாயத்தையும் மற்ற இடங்களிலும் உண்ணலாமே...வழக்கம்போல் இதுவும் வினாக்களாக பதிலின்றி காற்றில் பரந்தன.அவள் தங்கியிருந்த குடிசை காட்டில் இருந்தாலும் அடிக்கடி அங்கு வந்து போய்க் கொண்டிருந்த மக்களுக்கு குறைவேயில்லாதிருந்தது. மட்டுமின்றி, வந்தவர்கள் அதிக நேரம் தங்கவுமில்லை என்பதையும் சிவகாமி கவனித்தாள்.தவிர, வந்தவர்களிடம் மருத்துவச்சி அதிகம் பேசாததையும், கண்ணசைவிலும் ஜாடையிலுமே உரையாட வேண்டியதை உணர்த்தியதையும் கண்டாள்.போலவே வந்தவர்களை, தான் தங்கியிருந்த குடிசைப் பக்கம் நெருங்கவிடாமல் மருத்துவச்சி பார்த்துக் கொண்டதையும் மனதுக்குள் குறித்துக் கொண்டாள். அதுபோன்ற சமயங்களில் கரிகாலன் சட்டென குடிசையில் இருந்து மறைவதும், ஆட்கள் அகன்றதும் தோன்றுவதுமாக இருந்ததையும் மனதில் பதித்துக் கொண்டாள். அதற்கான காரணமும் அவளுக்குத் தெரிந்தே இருந்ததால் கரிகாலன் மறைந்து தோன்றுவது அவளுக்கு வியப்பளிக்கவில்லை. சந்தேகத்தையும்.வேளை தவறாமல் அவளுக்கு சட்டியில் உணவுகள் வந்தன. மருத்துவச்சியே அவளுக்கும் கரிகாலனுக்கும் எடுத்து வந்தாள்.இனம்புரியாத உணர்வுகளின் பிடியில் சிவகாமி சிக்கி இருந்ததால் அன்றைய தினம் அவளால் சரிவர உணவை உட்கொள்ள முடியவில்லை.‘‘ஏன்... உணவு பிடிக்கவில்லையா..?’’ நிதானமாகக் கேட்டாள் மருத்துவச்சி.‘‘இல்லை... பிடிக்கவில்லை...’’ சட்டென சிவகாமி பதில் அளித்தாள்.‘‘உடம்பு சரியில்லையா..?’’ உண்பதை நிறுத்திவிட்டு அவள் நெற்றியிலும் கழுத்திலும் கரிகாலன் தன் கரங்களை வைத்தான்.‘‘இல்லை... சுரமில்லை...’’ சிவகாமி முணுமுணுத்தாள்.‘‘அச்சமும் ஒருவகை சுரம்தான்...’’ மருத்துவச்சி நகைத்தாள். ‘‘பயப்படாமல் சாப்பிடு!’’‘‘எனக்கென்ன பயம்...’’ முணுமுணுத்தபடி சிவகாமி சிரமத்துடன் சாப்பிட்டாள்.எதிர்பார்த்தது போலவே கரிகாலனும் மருத்துவச்சியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.மூண்ட கோபத்தை சிரமப்பட்டு சிவகாமி அடக்கினாள். ‘‘இன்னும் எத்தனை நாட்கள் இங்கு தங்க வேண்டியிருக்கும்..?’’இப்படியொரு கேள்வியை எதிர்பார்த்ததுபோல் மருத்துவச்சி உடனே பதிலளித்தாள். ‘‘அதிகபட்சம் இரண்டே நாட்கள்...’’அதைக் கேட்டு கரிகாலன் புன்னகைத்தான்!மறுநாள் கருக்கலில் மருத்துவச்சி அவளை எழுப்பினாள்.அரவம் கேட்டு கரிகாலன் குடிசைக்குள் வந்தான்.‘‘வெளியே இரு...’’ மருத்துவச்சி அதட்டினாள்.மறுபேச்சில்லாமல் கரிகாலன் அகன்றான்.‘‘பின்பக்கம் குடுவையில் நீர் இருக்கிறது. வாயைக் கொப்பளித்துவிட்டு வா...’’மருத்துவச்சியின் கட்டளையை ஏற்று சிவகாமி குடிசைக்கு பின்பக்கம் வந்தாள். பொழுது விடிவதற்கு இன்னும் நேரம் இருந்தது. குடுவையை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். கசந்தது. மூலிகை நீராக இருக்க வேண்டும்.குடிசைக்குள் சிவகாமி நுழைந்தாள்.‘‘ஆடைகளைக் களைந்துவிட்டு படு...’’‘‘பச்சிலைகள் பூச வேண்டுமா..?’’‘‘ஆம்...’’சொன்னபடி களைந்துவிட்டு பூரணமாகப் படுத்தாள்.இருகரம் கூப்பி பிரார்த்தனை செய்துவிட்டு தொன்னையில் இருந்த பச்சிலையை எடுத்து சிவகாமியின் உடல் முழுக்க மருத்துவச்சி பூசினாள்.‘‘நான் சொல்லும் வரை எழுந்திருக்காதே...’’ என்றபடி குடிசையைவிட்டு மருத்துவச்சி அகன்றாள்.வெளியில் கரிகாலனும் அவளும் பேசுவது தெளிவில்லாமல் கேட்டது.ஒரு நாழிகைக்குப் பின் மருத்துவச்சி மீண்டும் குடிசைக்குள் வந்தாள்.சிவகாமியின் உடலில் பூசப்பட்ட பச்சிலைகள் காய்ந்திருந்தன.பருத்தியினால் ஆன மெல்லிய கச்சையை எடுத்து அவள் மார்பில் கட்டிவிட்டு இன்னொரு மெல்லிய பருத்தி ஆடையை எடுத்து அவள் இடுப்பைச் சுற்றி முடிச்சிட்டாள்.‘‘கரிகாலா...’’மருத்துவச்சி குரல் கொடுத்ததும் அதற்காகவே காத்திருந்தது போல் அவன் குடிசைக்குள் நுழைந்தான்.‘‘ஜாக்கிரதையாக இவளை அழைத்துச் செல்...’’ அவனைப் பார்த்து சொல்லிவிட்டு சிவகாமியின் பக்கம் திரும்பினாள். ‘‘போம்மா... போய் நீராடிவிட்டு வா...’’தலையசைத்துவிட்டு கரிகாலனுடன் புறப்பட்டாள்.நீராடத்தானே செல்கிறோம்... எதற்காக கரிகாலன் உடன் வருகிறான் என்ற கேள்வி எழுந்த அதேநேரம், தன் மனம் கவர்ந்தவன் முன்னால் எப்படி, தான் நீராடுவது என்ற வெட்கமும் அவளைப் பிடுங்கி எடுத்தது.மவுனமாகவே நடந்தாள். கரிகாலனும் பேச்சு ஏதும் கொடுக்கவில்லை.கருக்கல் விலகத் தொடங்கியிருந்தது. உதயத்துக்கான ரேகைகளை வானம் படரவிட்டது. வனத்தை ஊடுருவியபடி நடந்தார்கள். கால் நாழிகை பயணத்துக்குப் பின் அருவியின் ஓசை அவள் செவியை வருடியது.ஆச்சர்யத்துடன் கரிகாலனை ஏறிட்டாள்.கண்களைச் சிமிட்டியபடி புன்னகைத்தான்.ஆனால், அந்த சிமிட்டலிலும் புன்னகையிலும் உயிர் இல்லை!இருவரும் நடக்க நடக்க அருவியின் ஓசை அதிகரித்தது.புற்களை மிதித்தபடி புதரை விலக்கியதும் அருவி அவர்களை வரவேற்றது.‘‘வா...’’ என்றபடி சிவகாமியை அழைத்துக் கொண்டு நீர் விழும் இடத்தை நோக்கி கரிகாலன் நடந்தான்.வழியெல்லாம் அருகில் நெருங்கியபடி நடந்தவன், இப்பொழுது அவளுக்குப் பின்னால் சென்றான். அவள் கரங்களை பின்னால் இருந்து பற்றியபடி மேலிருந்து விழும் நீரின் முன் அவளை நிறுத்தினான்.நீர்த்திவலைகள் அவள் மேனியில் விழ விழ பூசப்பட்ட பச்சிலைகள் விலகின.நீரில் அவள் முகம் தெரிந்தது!இதுநாள் வரை அவள் நடமாடிய முகம் அல்ல அது!‘‘யார் நீ..?’’ அழுத்தத்துடன் கரிகாலனின் குரல் அவளுக்குப் பின்னால் இருந்து ஒலித்தது!http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15440&id1=6&issue=20190607 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted June 15, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 15, 2019 (edited) ரத்த மகுடம்-57 நீள் வட்டத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.கிழக்கிலும் மேற்கிலும் மட்டும் சற்றே உயரமான இருக்கைகள். அதில் கிழக்குத் திசையைப் பார்த்து சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு நேர் எதிராக மேற்குத் திசையில் இருந்த இருக்கை சிம்மாசனம் உயரத்தில் சற்றே குறைந்த வேலைப்பாடுகளுடன் காணப்பட்டது. இவ்விரண்டுக்கும் இடையில் இருபுறங்களிலும் உயரம் குறைவான அதேநேரம் வேலைப்பாடுகளில் குறை வைக்காத இருக்கைகள் போடப்பட்டிருந்தன. சிம்மாசனத்தில் சாளுக்கிய மாமன்னரான விக்கிரமாதித்தர் வீற்றிருந்தார். அவருக்கு நேர் எதிரில் மேற்குத் திசையில் இருந்த இருக்கையில் அனந்தவர்மர் அமர்ந்திருந்தார். எஞ்சிய இருக்கைகளில் சாளுக்கிய அமைச்சர்களும் அறிஞர் பெருமக்களும். சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர், சற்றே சங்கடத்துடன் அனந்தவர்மருக்கு அருகில் அமர்ந்திருந்தார்.சொல்லப்போனால் அந்த அறையில் இருந்த அனைவருமே விவரிக்க இயலாத உணர்வுகளுடன்தான் வீற்றிருந்தார்கள். மன்னரை கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை இதுநாள்வரை ஏட்டளவில்தான் படித்திருந்தார்கள். முதல் முறையாக அதுபோன்ற ஒரு நிகழ்வை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். எனவே சங்கடமும் துக்கமும் ஒருசேர அவர்களது மனதை ஆக்கிரமித்திருந்தன. அவர்களைத் தவிர அந்த அறையில் வேறு யாரும் இல்லை. சாமரம் வீசும் பணியாளர்கள்கூட அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு இருக்கைக்குக் கீழேயும் வெள்ளிக் குடுவையில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. அறைக் கதவு தாழிடப்பட்டிருக்க... சாளரங்கள் இறுக்கமாக மூடியிருக்க... வெளியே சாளுக்கிய வீரர்கள் பல அடுக்கு காவலில் நின்றுகொண்டிருந்தார்கள். ‘‘மன்னர் அவர்கள் தவறாக நினைக்கக் கூடாது...’’ இளைய சகோதரர் என்ற முறையில் ஒருமையில் அழைக்கும் உரிமை இருந்தும் அதைத் தவிர்த்துவிட்டு அரசருக்குரிய மரியாதையை அளிக்கும் விதமாக அனந்தவர்மர் அமைதியைக் கிழித்தபடி பேச்சை ஆரம்பித்தார். ‘‘எதற்கு..?’’ இடைவெட்டினார் விக்கிரமாதித்தர். ‘‘இப்படியொரு சூழல் ஏற்பட்டதற்காக...’’‘‘எந்தச் சூழலைக் குறிப்பிடுகிறீர்கள்..?’’ சாளுக்கிய மன்னர் பிசிறில்லாமல் கேட்டார்.சுற்றிலும் இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அனந்தவர்மர் பதில் அளித்தார். ‘‘தங்களை விசாரிக்க நேர்ந்ததை...’’‘‘நான் அதைக் குறிப்பிடவில்லை...’’ என்றபடி தன் பங்குக்கு அங்கிருந்தவர்களை தனித்தனியாக உற்றுப் பார்த்தார் விக்கிரமாதித்தர். ‘‘ஏற்கனவே அறிவிக்கப்பட்டுதானே இன்று குழுமியிருக்கிறோம்..? தவிர முறைதவறி ஒருவரும் நடக்கவில்லையே... இங்கிருக்கும் அனைவருமே சாளுக்கிய தேசத்துக்காக தங்கள் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள்; அர்ப்பணித்தும் வருபவர்கள். எனவேதான் தவறாக நினைக்க இதில் என்ன இருக்கிறது என்ற பொருளில் ‘எதற்கு..?’ என வினவினேன்... நல்லது... சுற்றி வளைக்காமல் நேரடியாக விசாரணைக்குச் சென்றுவிடலாம். நான் தயாராக இருக்கிறேன்...’’ நிதானமாகச் சொன்ன சாளுக்கிய மன்னர், தன் வலக்கையை உயர்த்தி எதையோ சொல்ல வந்த அனந்தவர்மரைத் தடுத்தார். ‘‘தேவைப்பட்டாலன்றி குறிக்கிடமாட்டேன். இந்த அறைக்குள் நடப்பது நாம் அறையை விட்டு விலகியதுமே அகன்றுவிடும். எனவே சங்கடம், தயக்கங்களை உதறிவிட்டு நீங்கள் அனைவரும் உங்கள் மனதில் இருக்கும் ஐயங்கள், வினாக்கள் ஆகியவற்றைக் கேளுங்கள். மந்திராலோசனையில் நாம் எப்படி நடந்துகொள்வோமோ... வெற்றி மட்டுமே இலக்கு என்ற நிலையில் யுத்த தந்திரங்கள் குறித்து அலசி ஆராய்வோமோ... பரஸ்பரம் குரலை உயர்த்தி நாம் சொல்வதே சரி என வாதிடுவோமோ... அப்படி இங்கும் நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை... வேண்டுகோள். ஏனெனில் விக்கிரமாதித்தன் என்னும் தனி மனிதனான நான் முக்கியமல்ல... சாளுக்கிய தேசம்தான் நமக்கு முக்கியம். நம் தேசம் தென்னகம் எங்கும் பரந்து விரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் வாதாபியில் இருந்து புறப்பட்டு காஞ்சிக்கு வந்திருக்கிறோம். இதற்கு இடையூறாக மன்னனான நானே இருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள். அந்த நினைப்புக்கு வலுசேர்க்கும் விதமான ஆதாரங்களும் உங்களிடம் இருக்கின்றன எனக் கருதுகிறேன்! அவை அனைத்தையும் இங்கு மனம் திறந்து கொட்டுங்கள். உங்கள் அனைவரது கேள்விகளுக்கும் இறுதியாக பதில் அளிக்கிறேன்... ஒருவேளை எனது பதில்கள் உங்களுக்கு திருப்தியாக இல்லாவிட்டால்... மன்னர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும் என நீங்கள் முடிவெடுத்தால்... அதற்கு நான் கட்டுப்படுவேன்! நடக்கவிருக்கும் பல்லவர்களுடனான போரில் சாதாரண சாளுக்கிய வீரனாக என் பணியை குறைவில்லாமல் செய்வேன்; சாளுக்கியர்களின் வெற்றிக்காகப் பாடுபடுவேன்! ஏனெனில் உங்களைப் போலவே எனக்கும் சாளுக்கிய தேசம்தான் முக்கியம்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் சிம்மாசனத்தில் சாய்ந்து அமர்ந்தார். ‘‘எங்களைப் புரிந்துகொண்டதற்கு நன்றி மன்னா...’’ தன் இருக்கையிலிருந்து முன்னோக்கி நகர்ந்தார் அனந்தவர்மர். ‘‘முதலில் என் ஐயங்களைக் கேட்கிறேன்... ஒருவகையில் இங்கிருக்கும் அனைவர் மனதிலும் இக்கேள்விகளே ஊசலாடுகின்றன என நினைக்கிறேன்...’’ இதைக் கேட்டு விக்கிரமாதித்தரின் கண்கள் பளிச்சிடும் என அனந்தவர்மர் எதிர்பார்த்தார். ஏனெனில் சாளுக்கிய மன்னராகும் தகுதி மூத்த மகன் என்ற உரிமையில் அவருக்கே இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இளையவரான விக்கிரமாதித்தர் பட்டம் ஏறினார். எனவே, தன்னை அரியாசனத்திலிருந்து அகற்றும் வேலையை அண்ணனான, தானே செய்வோம் என விக்கிரமாதித்தர் கணித்திருக்கலாம்... அதன் ஒரு பகுதியாக இந்த விசாரணைக் கூட்டத்தை, தான் கூட்டியிருக்கலாம் என்று விக்கிரமாதித்தர் நினைக்கலாம். அப்படி நினைக்க வேண்டும் என்றுதான் ‘அனைவரது சார்பாகவும் நானே கேட்கிறேன்...’ என்ற அர்த்தத்தில் விசாரணையையும் தொடங்கினார்.ஆனால், எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் கற்சிலையென சலனமற்று விக்கிரமாதித்தர் அமர்ந்திருந்தது ஒருவகையில் அனந்தவர்மரை துணுக்குறவே செய்தது.அதை புறம்தள்ளியபடி பேச ஆரம்பித்தார்.‘‘மன்னா...’’‘‘அடைமொழிகளைத் தவிர்த்துவிடலாம்... விஷயத்துக்கு வாருங்கள்...’’ விக்கிரமாதித்தர் இடைவெட்டினார்.‘‘நல்லது...’’ தொண்டையைக் கனைத்தார் அனந்தவர்மர். ‘‘சிறந்த மதியூகியான ராமபுண்ய வல்லபரை நமது போர் அமைச்சராக நாம் பெற்றிருக்கிறோம்... இது சாளுக்கியர்கள் செய்த பாக்கியம்...’’புருவங்கள் தெறித்துவிடும் வகையில் இதைக் கேட்டு ராமபுண்ய வல்லபர் தன் புருவங்களை உயர்த்தினார்.ஆனால், அவரது ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ விக்கிரமாதித்தரும் அனந்தவர்மரும் பொருட்படுத்தவில்லை.தன் உரையாடலைத் தொடர்ந்தார் அனந்தவர்மர்: ‘‘சாளுக்கியர்களின் நலன் கருதி... பல்லவர்களை வீழ்த்த ராமபுண்ய வல்லபர் திட்டமிட்டார். பல்லவர் படையின் உபசேனாதிபதியாக கரிகாலன் இருந்தாலும் அவன் மொத்த படையையும் வழிநடத்தும் வல்லமை படைத்தவன். அவனளவுக்கு அசுவங்களைக் கையாளத் தெரிந்தவர்கள் இந்த பரத கண்டத்திலேயே இல்லை என்கிறார்கள். அப்படிப்பட்ட அவனை சாளுக்கியர்களின் பக்கம் இழுக்க நமது போர் அமைச்சர் முடிவு செய்தார். இதன் வழியாக பல்லவர்களின் பலத்தை சரி பாதிக்கும் மேலாகக் குறைக்க முடியும் என கணக்கிட்டார்.அடிப்படையில் கரிகாலன் சோழ வம்சத்தைச் சேர்ந்தவன். சிற்றரசருக்குரிய அந்தஸ்துடன் அவனது பரம்பரை பல்லவ மன்னர்களுக்கு அடங்கியிருக்கிறது. எனவே, அதே அந்தஸ்தை சோழர்களுக்கு வழங்குவதுடன் தன்னாட்சி அமைக்கும் உரிமையையும் அவர்களுக்கு வழங்கினால் கண்டிப்பாக நம் பக்கம் சோழர்கள் வருவார்கள் என நம் போர் அமைச்சர் கணித்தார். இந்த ஏற்பாட்டுக்கு சாளுக்கிய மன்னரான நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை...’’ நிறுத்திவிட்டு விக்கிரமாதித்தரை உற்றுப் பார்த்தார் அனந்தவர்மர்.மேலே சொல்லும்படி சாளுக்கிய மன்னர் சைகை செய்தார்.தொடர்ந்தார் அனந்தவர்மர்: ‘‘என்றாலும் உங்களை இணங்க வைக்க முடியும் என ராமபுண்ய வல்லபர் உறுதியாக நம்பினார். எனவே நீங்கள் ஒப்புக்கொள்ளாதபோதும் சாளுக்கியர்களின் நலனுக்காக கரிகாலனை நம் பக்கம் இழுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தார். கரிகாலனின் தந்தையை சிறைப் பிடித்தார். கரிகாலனின் பெரிய தாயாரை காஞ்சிக்கு அழைத்து வந்து மாளிகைச் சிறையில் அடைத்தார். இவ்விஷயங்களைக் கேள்விப்பட்டு கரிகாலன் காஞ்சிக்கு வருவான் என சரியாகவே ஊகித்தார். அதற்கு ஏற்பவே அவனும் வந்தான். அவனிடம் சாளுக்கியர்களின் கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். ஆனால்... அதை அவன் ஏற்கவில்லை. அத்துடன் சிறையிலிருந்த தன் தந்தையை மீட்டு அவரையும் அழைத்துக்கொண்டு தப்பிவிட்டான். காஞ்சி மாநகரம் இன்று சாளுக்கியர்களின் வசம் இருக்கிறது. நம் வீரர்கள்தான் கோட்டை முதல் எல்லா இடங்களிலும் காவலுக்கு நிற்கிறார்கள். அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கரிகாலன் தன் தந்தையுடன் தப்பித்திருக்கிறான் என்றால்... அதற்கு ஒரே காரணம்... நீங்கள்! கடிகையில் பயிலும் ஒரு பாலகனை உங்களுக்கும் கரிகாலனுக்கும் இடையில் தூது செல்ல நியமித்து அவன் வழியாக ரகசியப் பாதை வழியே கரிகாலனைத் தப்பிக்க வைத்திருக்கிறீர்கள்! இது முதல் குற்றம்!கரிகாலனுக்கு உதவிய பாலகனைக் கையும் களவுமாக ராமபுண்யவல்லபர் பிடித்துவிட்டார். பொதுமக்கள் முன்னிலையில் அவன் மீது விசாரணையும் நடைபெறத் தொடங்கியது. ஆனால், அந்த விசாரணை மண்டபத்தில் இருந்து அந்த பாலகனை மீட்டுச் சென்றிருக்கிறான் கரிகாலன். காரணம் ‘ஐந்து புறாக்கள்’! சாளுக்கியர்கள் மட்டுமே காலம் காலமாகக் கையாளும் இந்தப் போர் தந்திரத்தை பல்லவர்களின் உபசேனாதிபதியான கரிகாலன் கடைப்பிடித்திருக்கிறான் என்றால்... அந்த ரகசியத்தை நீங்கள்தான் அவனுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். இது இரண்டாவது குற்றம்! வாதாபியில் இருந்து நம்முடன் வந்த சாளுக்கிய இளவரசரும் உங்கள் மைந்தருமான விநயாதித்தர் எங்கே..? அவரை அமைச்சர்களுக்குக் கூட தெரியப்படுத்தாமல் எங்கு என்ன விஷயமாக அனுப்பி வைத்திருக்கிறீர்கள்..? ஒருவேளை விநயாதித்தர்தான் கரிகாலனுக்கு உதவிய பாலகனோ என்ற ஐயம் எங்களுக்கு எழுந்திருக்கிறது!’’அழுத்தம்திருத்தமாக அனந்தவர்மர் இப்படிச் சொன்னதும் அந்த அறையே மயான அமைதியில் ஆழ்ந்தது. ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு அனந்தவர்மர் மீண்டும் தொடங்கினார்.‘‘சிவகாமி என்பவள் நமது போர் அமைச்சரின் மகத்தான ஆயுதம். பல்லவர்களை வேருடன் அழிக்கும் ஆற்றல் அந்த ஆயுதத்துக்கு உண்டு. அப்படிப்பட்ட நம் ஆயுதத்தின் ரகசியத்தையும் கரிகாலனிடம் வெளிப்படுத்தி அவனை எச்சரிக்கை அடையச் செய்திருக்கிறீர்கள்... இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன..?’’ http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15464&id1=6&issue=20190614 Edited June 15, 2019 by பா. சதீஷ் குமார் ,. 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் 2,548 Posted June 24, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 24, 2019 எங்கே சதீஸ்குமார்???இவ்வாரக் கதையைக் காணவில்லை. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,092 Posted June 24, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 24, 2019 ரத்த மகுடம்-58 பிரமாண்டமான சரித்திரத் தொடர் ‘‘கேட்க வேண்டியவைகளை எல்லாம் கேட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்... இனி நான் பதில் சொல்லலாம் அல்லவா..?’’நிதானத்தை இழக்காமல் அதேநேரம் அழுத்தம்திருத்தமாகக் கேட்ட சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், தொண்டையைக் கனைத்தார். நீள்வட்டமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் நிமிர்ந்தார்கள்.விக்கிரமாதித்தருக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த அனந்தவர்மர், தன் கண்கள் இடுங்க சாளுக்கிய மன்னர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தார்.பொறுமையை சோதிக்காமல் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு விக்கிரமாதித்தர் பேசத் தொடங்கினார்.‘‘சாளுக்கியப் பேரரசின் அமைச்சர் பிரதானிகளாக நீங்கள் இருந்தபோதும் ஒவ்வொருவருமே சிற்றரசர்களுக்கான அந்தஸ்துடையவர்கள். சாளுக்கியப் பேரரசின் விரிவாக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். அப்படிப்பட்ட உங்கள் அனைவரது வீரத்துக்கும் தீரத்துக்கும் முதலில் தலைவணங்குகிறேன்! சாளுக்கியப் பேரரசின் நலன் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் உங்கள் செயல் உண்மையிலேயே என்னை நெகிழ வைக்கிறது; பெருமிதமாகவும் உணரச் செய்கிறது...’’நிறுத்திய விக்கிரமாதித்தர், எழுந்து அவையை வணங்கினார்.பதிலுக்கு அனந்தவர்மர் உட்பட அனைவரும் அநிச்சையாக எழுந்து மன்னரை வணங்கினர். பரஸ்பரம் இப்படி இருதரப்பும் வணங்கியபிறகு, ‘‘அமருங்கள்... உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்ற நம்பிக்கையில் நின்றபடியும் நடந்தபடியும் என் பதிலைத் தெரிவிக்கிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தர், நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.‘‘இந்த பாரத தேசத்தின் தட்சிணப் பகுதியை சாளுக்கியர்களாகிய நாம் ஆட்சி செய்து வருகிறோம். அது என்ன தட்சிணப் பகுதி..? வடக்கே விந்திய மலையும் நருமதை ஆறும்; தெற்கில் துங்கபத்திரை, கிருஷ்ணா நதிகள்... கிழக்கிலும் மேற்கிலும் கடல்... இதற்குள் இருக்கும் பகுதிதான் தட்சிணப் பிரதேசம். இந்த பீடபூமியின் கீழ்ப்பாகத்தில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கு இடையிலுள்ள பகுதி மாமன்னர் அசோகர் காலத்தில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டிருந்தது. பிறகு சாதவாகனர்களின் ஆளுகைக்குக் கீழ் அப்பகுதி வந்தது.இதன் பிறகு கூர்ஜர ராஜ வம்சத்தைச் சேர்ந்த சாளுக்கியர்களாகிய நாம் முன்னேற்றம் அடைந்து இந்த ‘தட்சிண’ப் பகுதியை ஆளத் தொடங்கினோம்...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர் மெல்ல நடந்தபடி தன் உரையைத் தொடர்ந்தார்.‘‘பாரத தேசம் பன்னெடுங்காலமாகவே நாடோடி கூட்டத்தாரின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. வடமேற்கிலுள்ள கணவாய் வழியாக சாரி சாரியாக அயலவர்கள் நம் நாட்டில் புகுந்து, இருக்கும் ராஜ்ஜியங்களை எல்லாம் கைப்பற்றி வருகிறார்கள்.ஆனால், ஒருவராலும் பாரதத்தின் தென் பகுதிக்கு வரவே முடியவில்லை. காரணம், அரணாக விளங்கும் நாம்! தட்சிணப் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் சாட்சாத் நாமேதான். நம்மை மீறி ஒருவராலும் தென் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. அதனாலேயே தனித்த நாகரீகத்துடன் தென் பகுதியானது காலம் காலமாகத் திகழ்ந்து வருகிறது.இதற்கான நன்றியை தென்பகுதி மக்கள் நமக்குத் தெரிவிக்க வேண்டும்! வரலாற்றில் நம் பெயரைப் பொறித்து நம்மை கவுரவிக்க வேண்டும்! ஆனால், அப்படி எதையும் அவர்கள் செய்யவில்லை.ஏன் என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறோமா..? நாள் முழுக்க இதுகுறித்துதான் நான் ஆலோசித்து வருகிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தர் அறையின் மூலையில் முற்றிலுமாக மூடியிருந்த சாளரத்தில் சாய்ந்தபடி நின்றார். ‘‘நமது முன்னோரான முதலாம் புலிகேசி, வேங்கியை ஜெயித்து வாதாபியில் சாளுக்கிய அரசை நிறுவினார். மகாராஜா என்னும் பட்டத்தையும் பெற்றார். நருமதை முதல் பாலாறு வரை பரந்திருக்க... மற்ற இரு பக்கங்களில் கடல் நிரம்பி வழிய... தன் ஆட்சியைத் தொடங்கினார். பிறகு முதலாம் கீர்த்திவர்மன், மங்களேசன் ஆகியோர் சாளுக்கிய அரியணையை அலங்கரித்தார்கள். ராஜ்ஜியத்தை விஸ்தரிக்காவிட்டாலும், அடைந்த பகுதியை இவர்கள் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றினர்.பின்னர் அரியணை ஏறிய என் தந்தையாரான இரண்டாம் புலிகேசி, மாமன்னரானார். வடக்கில் ஹர்ஷவர்த்தனரைத் தோற்கடித்து ஓட ஓட விரட்டினார். இதன் வழியாக வட பகுதி அரசுகள் தெற்கில் கால் பதிக்காதபடி செய்தார்.வடக்குப் பிரச்னை ஓய்ந்ததும் தென் பகுதியில் தன் கவனத்தைக் குவித்தார். இதன் ஒரு பகுதியாக தென்னக கடற்கரையோரமாக படையெடுத்து பல கோட்டைகளைக் கைப்பற்றினார். இது குறித்த விவரங்களை அய்கோலிக் கல்வெட்டில் நாம் காணலாம். அது மட்டுமா..? பல்லவ மன்னர் மகேந்திரவர்மரை காஞ்சிக் கோட்டைக்குள் பதுங்கும்படி செய்தார். பின்னர் காவிரி ஆற்றைக் கடந்து சோழர், சேரர், பாண்டியருடன் நட்புறவு பூண்டு வாதாபி திரும்பினார். என் தந்தைக் காலத்தில் பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் போர் நடைபெற்றிருக்கிறது.இவை அனைத்தும் வேங்கியை என் தந்தையும் சாளுக்கிய மாமன்னருமான இரண்டாம் புலிகேசி கைப்பற்றியபிறகே நடைபெற்றது. நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் ததும்பி வழிகிறது. எப்பேர்ப் பட்ட வீரம்...‘இரண்டாம் புலிகேசி தன்னுடைய சேனையை நடத்திச் செல்லும்போது கிளம்பிய தூசியானது எதிர்க்க வந்த பல்லவ மன்னனின் ஒளியை மங்கச் செய்தது; புலிகேசியின் பெரும் படைக்கடலைக் கண்டு காஞ்சிபுரத்தான் காஞ்சிக் கோட்டையில் ஒளிந்துகொண்டான்.... பல்லவர்களின் படையாகிய குளிர்ந்த பனிக்குக் கடுங்கதிராயுள்ள கதிரவனைப் போன்ற அவன் (புலிகேசி) சோழ, பாண்டிய, சேரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான்...’ என்ற அய்கோலிக் கல்வெட்டின் வாசகங்கள் அனைத்தும் எவ்வளவு நிஜம்! இதிலிருந்து என்ன தெரிகிறது? தன் நாட்டின் ஒரு பகுதியை சாளுக்கியர்களிடம் மகேந்திரவர்மர் பறிகொடுத்தார்... அதில் வேங்கியும் ஒன்று.இப்பகுதியை தன் இளைய சகோதரராகிய விஷ்ணுவர்த்தனர் வசம் என் தந்தை ஒப்படைத்தார். இப்போது எங்கள் சித்தப்பாவின் குடும்பம் அப்பகுதியை சீரும் சிறப்புமாக ஆண்டு வருகிறது...’’ பெருமிதத்துடன் பேசிக் கொண்டே வந்த விக்கிரமாதித்தரின் நயனங்கள் சட்டென்று சிவந்தன.‘‘ஆனால், பல்லவர்களின் காசக்குடிச் செப்பேடுகள் என்ன சொல்கின்றன? சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசியையும் அவருக்குத் துணையாக நின்ற பல அரசர்களையும் காஞ்சிக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவிலுள்ள புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரவர்மர் புறங்காணச் செய்தார் என்கிறது... அத்துடன் இந்திரனைப் போன்று கீர்த்தி வாய்ந்த மகேந்திரவர்மர் பூமண்டலத்தைப் பாதுகாத்து வந்தார் என சிலாகிக்கிறது...என்றாலும் பல்லவ நாட்டின் வடபகுதியை சாளுக்கியர்களிடம் மகேந்திரவர்மர் இழந்தார் என்ற உண்மையை மட்டும் அவர்களால் மறைக்கவே முடியவில்லை. ஏனெனில் இதன்பிறகு வடக்கே வடபெண்ணை ஆற்றிலிருந்து தெற்கே சோழ மண்டலம் வரை பல்லவ நாடு சுருங்கிவிட்டது.மகேந்திரவர்மருக்குப் பிறகு பல்லவ சிம்மாசனத்தில் அமர்ந்த நரசிம்மவர்மர் காலத்தில் மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் போர் நடைபெற்றது. நரசிம்மவர்மர் காலத்தில் மீண்டும் என் தந்தை பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார்.... ஆனால், அவர் காஞ்சியை அணுகும் முன் இருபது கல் தொலைவிலுள்ள மணிமங்கலம் என்னுமிடத்திலும், பரியளம், சூரமாரம் முதலிய இடங்களிலும் பல்லவ சேனைகள் பாய்ந்து வந்து சாளுக்கியப் படைகளைத் தாக்கி முறியடித்தன... என கூரம் செப்பேடு கூரை மீதேறி அறிவிக்கிறது. அதுவும் எப்படி..?‘இம்மரபில் உதயகிரியிலிருந்து (கிழக்கு மலையிலிருந்து) ஆதவனும் நிலவும் தோன்றுவது போல் தோன்றி தலைவணங்காத இம்மரபு மன்னர்களின் மணிமுடியில் சூடாமணி போல் விளங்கி, பகை மன்னர்களாகிய யானைக் கூட்டங்களுக்கு அரிமா போன்று நரசிம்ம மூர்த்தியே மண்ணுலகில் அரசகுமாரனாக அவதரித்ததைப் போல் நரசிம்மன் உதித்தான்...இவன் சோழர், கேரளர், களப்பிரர், பாண்டியர்களைத் திரும்பத் திரும்ப வென்று ஆயிரங் கைகளைக் கொண்டவன் (கார்த்தவீரியன்) போல் விளங்கினான்...பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய போர்களில் புறங்காட்டியோடிய புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தில் ‘வெற்றி’ என்னும் சொல்லைப் பொறித்தான்...இதற்குப் பின் கும்ப முனிவர் (அகத்தியர்), வாதாபியை (வாதாபி என்ற அசுரனை) அழித்ததைப் போல் இவன் வாதாபியை (இரண்டாம் புலிகேசியின் கோநகரை) அழித்தான்...’இப்படித்தானே கூரம் செப்பேடுகள் செப்புகின்றன..?’’ சீறினார் விக்கிரமாதித்தர்.‘‘இவை எல்லாம் உண்மைதானே மன்னா... இதன் காரணமாகத்தானே ‘வாதாபி கொண்ட நரசிம்மன்’ என்ற விருதுப் பெயரும் நரசிம்மவர்ம பல்லவருக்குக் கிட்டியது..?’’ அதுவரை அமைதியாக இருந்த ராமபுண்ய வல்லபர் இடையில் புகுந்தார்.விக்கிரமாதித்தர் பதிலேதும் சொல்லாமல் சில கணங்கள் தன் கண்களை மூடினார். ‘‘மறுக்கவில்லை சாளுக்கிய போர் அமைச்சரே...’’ தழுதழுத்தபடி சொன்னவர் தன் கண்களைத் திறந்தார். ‘‘என் சித்தப்பா நாகநந்தி அடிகள் நாட்டியக்காரியான சிவகாமியை விரும்பினார். தம்பிக்காக சிவகாமியைக் கவர்ந்தார் என் தந்தை. இதற்குப் பழிவாங்க படை திரட்டி வந்து வாதாபியை தீக்கிரையாக்கியதுடன் சிறையிலிருந்த சிவகாமியையும் நரசிம்மவர்மர் மீட்டுச் சென்றார்...இதன்பிறகு பதிமூன்று ஆண்டுகள் நம் தலைநகரான வாதாபி, பல்லவர்களின் வசம்தான் இருந்தது... இந்நிகழ்வுகளை எல்லாம் நான் எங்கே மறுத்தேன் ராமபுண்ய வல்லபரே..?இதற்கெல்லாம் சேர்த்துதானே அதே சிவகாமியின் வளர்ப்புப் பேத்தியான இளையவள் என நம்மால் அழைக்கப்படும் சிவகாமியை ஆயுதமாக்கி பல்லவர்களை பழிக்குப் பழி வாங்க திட்டமிட்டு இதோ காஞ்சிபுரத்துக்கும் வந்திருக்கிறோம்...’’ ‘‘ஆனால், அந்தத் திட்டத்தைத்தான் சாளுக்கிய மன்னரான நீங்கள் தகர்த்துவிட்டீர்களே... நம் ஆயுதமான இந்த இளைய சிவகாமி குறித்த உண்மையை கரிகாலனுக்கு அறிவித்துவிட்டீர்களே...’’ அனந்தவர்மர் பாய்ந்தார்.‘‘நம் திட்டத்தை நான் தகர்த்தேன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்..? சிவகாமி குறித்த எந்த விவரமும் கரிகாலனுக்குத் தெரியாது..!’’சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் இப்படிச் சொன்னதும் அந்த ரகசிய அவையில் இருந்த ஒவ்வொருவரும் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘என்ன சொல்கிறீர்கள் மன்னா..?’’ ராமபுண்ய வல்லபர் வியப்புடன் கேட்டார்.‘‘உண்மையை! கரிகாலனுக்கு இந்நேரம் சிவகாமி குறித்த சந்தேகம் எழுந்திருக்கும்! ஆனால், அவன் அறியப் போவது நாம் மறைத்திருக்கும் உண்மைகளை அல்ல! வேறொரு நாடகம் அங்கே அரங்கேறப் போகிறது!’’‘‘நாடகமா..?’’ அனந்தவர்மரின் குரலில் அதிர்ச்சி பூரணமாக வெளிப்பட்டது.‘‘ஆம்! நாடகமேதான். சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற ஓடி ஒளிந்திருக்கும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரின் உதவியை நீங்கள் நாட முற்பட்டிருக்கிறீர்களே... அதற்காக இப்படியொரு விசாரணை நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே... அப்படி ஒரு நாடகத்தைத்தான் கரிகாலன் முன்னால் இப்போது சிவகாமி அரங்கேற்றிக் கொண்டிருப்பாள்!’’ என்றபடி விக்கிரமாதித்தர் புன்னகைத்தார்! (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15492&id1=6&issue=20190621 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted June 29, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 29, 2019 59 ‘இதை வன்மையாக மறுக்கிறேன்!’’ சீறினார் அனந்தவர்மர். ‘‘சாளுக்கிய மன்னராக நீங்கள் தொடர்ந்து நீடிக்கவும் உங்கள் மீது இந்த அவை சுமத்திய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவும் இப்படியொரு அபாண்டமான பழியை என்மீது சுமத்துகிறீர்கள்...’’ உதடுகள் துடிக்க அனந்தவர்மர் கத்தினார். ‘‘தகுந்த ஆதாரங்களை குறுநில மன்னர்களும் அமைச்சர் பெருமக்களும் சூழ்ந்திருக்கும் இந்த அவை முன் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன்...’’ நிறுத்திய சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர், சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு தொடர்ந்தார். ‘‘முதலில் எந்த ஆதாரத்தை வைக்கட்டும்... கரிகாலன் முன்பு சிவகாமி நிகழ்த்திக் கொண்டிருக்கும் நாடகம் குறித்த தகவலா அல்லது...’’‘‘சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற ஓடி ஒளிந்திருக்கும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரின் உதவியை நான் நாடினேன் என்று இப்பொழுது பழி சுமத்தினீர்களே... அதற்கான ஆதாரத்தை முதலில் சமர்ப்பியுங்கள்!’’ அனந்தவர்மர் இடைவெட்டினார்.‘‘இதற்கு இந்த அவை ஒப்புக் கொள்கிறதா..?’’ விக்கிரமாதித்தர் பொதுவாகக் கேட்டார். அமர்ந்திருந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள். ஆனால், அனைவருக்கும் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது. சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை இந்த அவை விசாரிக்கவில்லை... மாறாக, அவர்தான் இந்த அவையை விசாரித்துக் கொண்டிருக்கிறார்!‘‘நல்லது... மவுனம் சம்மதம் என்பதால் அனந்தவர்மர் கேட்ட ஆதாரங்களை அவை முன் சமர்ப்பிக்கிறேன்... அதற்கு கொஞ்சம் பழைய வரலாற்றில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்... பொறுமையாகக் கேட்பீர்கள் என நம்புகிறேன்...’’நிதானமாக வாக்கியங்களை உதிர்த்த சாளுக்கிய மன்னர், அவையில் அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிச் சுற்றி நடந்தபடி எல்லோரின் கண்களையும் நேருக்கு நேர் பார்த்தபடி பேசத் தொடங்கினார்...‘‘தக்காணத்தைச் சேர்ந்த பாதாமி சாளுக்கியர்களாகிய நாம்... பழங்கால சோழ அரசின் எல்லை வரை ஆளும் பல்லவர்கள் மற்றும் தென் பகுதியை ஆளும் பாண்டியர்கள்... இந்த மூன்று அரசுகளும்தான் தக்காணத்தில் இருந்து தென் எல்லை வரை மிகப்பெரிய பேரரசை நிறுவ போர் புரிந்துகொண்டே இருக்கிறோம்.இப்படியொரு மகத்தான சாம்ராஜ்ஜிய கனவு மூன்று அரசுகளிடமும் இருக்கிறது. ஏனெனில் இதற்கு முன் நம் பகுதியில் இப்படி எந்த அரசும் தனித்து பேரரசானதில்லை. ஆக, வரலாற்றில் யார் முதன்முதலில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை தென்னகத்தில் ஸ்தாபிக்கப் போகிறார்கள் என்ற ஆவல் மக்களை விட வடபகுதி அரசுகளிடம் அதிகம் நிலவுகிறது. காரணம், வணிகச் சந்தை... வணிக செல்வங்கள்... சுங்க வரிகள்.தென் பகுதியைச் சேர்ந்த அனைத்து துறைமுகங்களும் இந்த மூன்று அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. யவனர்களும் பாரசீகர்களும் சீனர்களும் இந்த துறைமுகங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அனைத்து நாட்டு வணிகர்களையும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இந்த மூன்று அரசுகளும் வணிகம் செய்ய அனுமதிக்கின்றன.ஆனால், சுங்க வரியை தனித்தனியாக அவர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது. பாண்டியர்களின் துறைமுகத்தில் அவர்களுக்கு சுங்கம் செலுத்திவிட்டு மல்லை கடற்கரைக்கு வரும்போது பல்லவர்களுக்கு மீண்டும் வரி செலுத்த வேண்டியிருக்கிறது. போலவே தென்னக துறைமுகத்தில் இருந்து நம் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகத்துக்கு நாவாய்கள் வருகையில் சாளுக்கியர்களான நமக்கு சுங்கம் செலுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.எனவே, எல்லா துறைமுகங்களும் ஓர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஒரே முறையில் வரி செலுத்திவிட்டு மற்ற துறைமுகங்களில் சுதந்திரமாக பயணிக்க முடியுமே என நினைக்கிறார்கள்.இதன் பொருட்டே மூன்று அரசுகளின் தூதுக்குழுக்களையும் யவனர்களும் பாரசீகர்களும் அராபியர்களும் சந்திக்கிறார்கள்... தங்கள் நாட்டுக்கு வரவேற்று மரியாதை செலுத்துகிறார்கள். என் தந்தையும் சாளுக்கியர்களில் மாமன்னருமான இரண்டாம் புலிகேசி காலத்தில் பாரசீகத்துக்குச் சென்ற சாளுக்கிய தூதுக்குழுவும் இந்த வகையானதுதான்.இதை தவறு என்று சொல்ல முடியாது. யவனர்கள், பாரசீகர்கள், அராபியர்கள், சீனர்கள் பார்வையில் இது சரிதான். போலவே மற்ற இரு அரசுகளையும் கைப்பற்ற வேண்டும் என சாளுக்கியர்களும், பல்லவர்களும், பாண்டியர்களும் தனித்தனியே கருதுவதும் திட்டமிடுவதும், அதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதும் இயல்புதான். ஏனெனில் மின்னலைப் போல் செல்வங்கள் அரசு விட்டு அரசு கடக்கின்றன. எத்தனை கஜானாக்களை உருவாக்கினாலும் அத்தனையும் நிரம்பி வழியும் அளவுக்கு செல்வங்கள் மூன்று அரசுகளிடமும் குவிகின்றன. அதனாலேயே இன்னும் இன்னும் என்ற ஏக்கம் மூவருக்குமே கிளர்ந்து எழுகிறது.அதேநேரம் மூவராலுமே மற்ற இருவரையும் வெற்றி கொள்ள முடியாத அளவுக்கு இயற்கையாகவே பல தடைகள் நிலவுகின்றன.தக்காணத்தை ஆளும் சாளுக்கியர்களாகிய நமக்கு வடக்கில் வட அரசர்களின் தொல்லை... தெற்கிலோ பல்லவர்கள். இந்தப் பல்லவர்களை ஜெயித்தால்தான் பாண்டியர்களை நம்மால் வீழ்த்த முடியும். பாண்டிய நாட்டுப் பக்கம் நாம் செல்லும்பொழுது வடக்கில் இருக்கும் அரசுகள் நம் சாளுக்கிய தேசத்தின் மீது போர் தொடுக்காமல் இருக்க வேண்டும்!பல்லவர்களைப் பொறுத்தவரை வடக்கில் நாம்... தெற்கில் பாண்டியர்கள்! நடுவில் அவர்கள் சிக்கியிருப்பதால் இரு எல்லைகளிலும் தங்கள் படையை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம்!பாண்டியர்களின் நிலையோ வேறு. தெற்கில் அவர்களுக்கு இருப்பது கடல். வடக்கிலோ பல்லவர்கள்... அதன்பிறகே தக்காணத்தில் நாம்.ஆக, மூவருமே மற்ற இருவரை வெற்றி கொள்ள நினைத்தால் அவ்விருவரும் தங்களுக்குள் தற்காலிகமாக நண்பர்களாக மாறி மூன்றாமவரை நோக்கிப் பாய வாய்ப்பிருக்கிறது.இப்படியொரு சிக்கலில் மூன்று அரசுகளுமே சிக்கியிருக்கிறது. எனவே, எவ்வித சேதாரமும் இன்றி மூவருமே காய்களை நகர்த்தி வருகிறோம்... மற்ற இரு அரசுகளையும் கைப்பற்ற திட்டமிடுகிறோம்... ஆனால், இந்த அரசியல் மோதல்கள் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தடையாக நிற்கவில்லை; நிற்கவும் மூவரும் அனுமதிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். சமணம், பவுத்தம் ஆகிய மதங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு பன்முக வளர்ச்சியுடன் இந்து மதம் இப்பொழுது தக்காணம் முதல் தென் எல்லை வரை பரவியிருக்கிறது. பக்தி மரபுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஊடுருவிவிட்டன. இதனால் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை... என சகல கவின் கலைகளும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன.இவ்வளவும் இந்த அவையில் அமர்ந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் தெரியும்... அறிந்ததையே மீண்டும் நினைவுபடுத்தியதற்குக் காரணம் அனந்தவர்மரின் செய்கைதான்...பொறுங்கள்... இன்னமும் நான் முடிக்கவில்லை... ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன்... பிறகு நீங்கள் உங்கள் தரப்பை சொல்லுங்கள்...’’ இடையில் பேச முற்பட்ட அனந்தவர்மரை அடக்கிவிட்டு தன் சிம்மாசனத்தில் அமர்ந்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.‘‘பாதாமி சாளுக்கியர்கள் எனப்படும் நமது அரசை நிறுவியவர் முதலாம் புலிகேசி. புலிகேசன் என்றால் அரியேறு என்று அர்த்தம். அவர் பாதாமிக்கு அருகில் இருந்த குன்றை வலிமை மிக்க அரணாக மாற்றினார். அதன் பின் அவர் அசுவமேத யாகம் செய்து தன் சுயேட்சையை எட்டுத் திக்கிலும் தெரியப்படுத்தினார். அவர் அமைத்த கோட்டை மலப்பிரபா நதியில் இருந்து பல காத தூரங்களுக்கு எதிரிகளின் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஏற்ற உயர்ந்த இடத்தில் அமைந்திருந்தது. அதற்குக் கிழக்கில் இருக்கும் குன்றுகளில் மகாகூடமும் ஒன்று. அதே திசையில் இன்னும் பல காத தொலைவில் மலப்பிரபா நதி கரையில் பட்டடக்கல் இருக்கிறது. அதே நதியின் மறு கரையில் அய்கோளே... இந்த இடங்களில் எல்லாம் சாளுக்கியர்களின் கட்டட சிற்பக் கலை சிறப்பை வருங்காலத் தலைமுறையும் கண்டு களிக்கும்.இந்த முதலாம் புலிகேசிக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரது மகன் முதலாம் கீர்த்திவர்மன், பனவாசிக் கடம்பர்களோடும், கொங்கணத்து மவுரியர்களோடும், நள மரபினரோடும் போர் செய்து ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார்.கொங்கண வெற்றியால் அங்கிருந்த முக்கிய துறைமுகமான ரேவதி தீவு (இன்றைய கோவா), நம் எல்லைக்குள் வந்தது.கீர்த்திவர்மர் திடீரென காலமானபோது என் தந்தை இரண்டாம் புலிகேசிக்கு இள வயது. எனவே கீர்த்திவர்மரின் தம்பியான மங்களேசன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். காண்டேஷ், மாளவம் பகுதிகளில் ஆட்சி செய்து வந்த காலசூரி வம்ச அரசரான புத்தராஜன் மீது மங்களேசன் படையெடுத்துச் சென்றார். ஏராளமான கொள்ளைப் பொருட்கள் கிடைத்ததே தவிர நாட்டின் எல்லை விரிவுபடுத்தப்பட்டது என்று சொல்ல முடியாது.இதே காலத்தில் ரேவதித் தீவில் கலகம் மூள ஆரம்பித்தது. அதை அடக்கி மீண்டும் சாளுக்கியர்கள் அங்கு கால் பதிக்க மங்களேசன் வழிவகுத்தார்.இதற்குள் என் தந்தை இரண்டாம் புலிகேசி வளர்ந்து ஆளானார். நியாயமாக சாளுக்கிய மணிமுடியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு மங்களேசன் அகன்றிருக்க வேண்டும். ஆனால், முடிந்த வரை காலத்தைக் கடத்தி தன் மகன் அரியணை ஏற வழிவகை செய்ய ஆரம்பித்தார்.இதை அறிந்த என் தந்தை பாதாமியில், தான் இருந்தால் ஒருவேளை தன் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று நினைத்து இரவோடு இரவாக யாருக்கும் எந்த சந்தேகமும் எழாதபடி நாட்டை விட்டு வெளியேறினார்.நண்பர்களின் துணையோடு படை திரட்டி மங்களேசரோடு போரிட்டு அவரை வீழ்த்தி சாளுக்கிய மன்னரானார்...கவனிக்க... தன் உரிமையை நிலைநாட்ட என் தந்தை தன் நண்பர்களின் உதவியைத்தான் நாடினார்... பகைவர்களின் துணையை நாடவில்லை... அதாவது...’’ எழுந்த விக்கிரமாதித்தர் நேராக அனந்தவர்மரின் இருக்கைக்கு அருகில் சென்று அவர் முகத்தை உற்றுப் பார்த்தார். ‘‘உங்களைப் போல் பல்லவர்களின் உதவியை நம் தந்தை நாடவில்லை!’’‘‘பொய்...’’ அனந்தவர்மர் தன்னை மீறி கத்தினார்.‘‘உண்மை...’’ குரலை உயர்த்தாமல் அதேநேரம் அழுத்தமாகச் சொன்ன விக்கிரமாதித்தர் சட்டென தன் வாளை உருவி அனந்தவர்மரின் கழுத்தில் வைத்தார்! ‘‘ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வரை வாயே திறக்கக் கூடாது! கண்டிப்பாக உங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல வாய்ப்பு வழங்கப்படும்! அதுவரை சுவாசிக்க மட்டுமே செய்ய வேண்டும்!’’ கர்ஜித்த விக்கிரமாதித்தர், என்ன ஏது என்று மற்றவர்கள் சுதாரிப்பதற்குள் அங்கிருந்த திரைச்சீலையை இழுத்தார்.அது சிவகாமி நாட்டியமாடுவது போல் ஓவியம் தீட்டப்பட்ட திரைச்சீலை.இழுத்த இழுப்பில் அது அவர் கையோடு வந்தது.அந்த இடத்தில் கம்பீரமாக ஒருவர் அமர்ந்திருந்தார்.அவர் மாமன்னர் இரண்டாம் புலிகேசி! 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted July 7, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted July 7, 2019 அத்தியாயம் 60 சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசியை அங்கு கண்டதும் மொத்த அவையும் பக்தியுடனும் மரியாதையுடனும் எழுந்து நின்றது. ‘‘மாமன்னர் இரண்டாம் புலிகேசி வாழ்க... வாழ்க...’’‘‘சாளுக்கியர்களின் புகழ் ஓங்குக..!’’ஒரே குரலில் எல்லோரும் தங்கள் உயிருக்கு உயிரான மாமன்னருக்கு தலைவணங்கினார்கள்.அனந்தவர்மரும் தன்னை மீறி அந்த ஜெய கோஷத்தில் கலந்து கொண்டார். அவரது உள்ளமும் உடலும் கசிந்தது. குறிப்பாக நடுங்கியது! இதைக் கண்ட சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் முகத்தில் இனம்புரியாத உணர்வுகள் தாண்டவமாடின.மற்ற யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் தன் அண்ணன் அனந்தவர்மரின் நயனங்களை மட்டும் பார்த்தபடி பேசத் தொடங்கினார். கர்ஜனை குறைந்திருந்தது. அழுத்தம் கூடியிருந்தது! ‘‘இங்கு அமர்ந்திருப்பவர் என் தந்தையும் நம் அனைவரது வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியவரான இரண்டாம் புலிகேசி மாமன்னர்தான். ஆனால், இது சிலை! நம் எல்லோருக்கும் ஒரே மன்னரான இவர் போர்க்களத்தில் உயிர்துறந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்! என்றாலும் மூளைக்குத் தெரிந்தது புத்திக்கு உறைக்கவில்லை! உறைக்கவும் செய்யாது! அதனால்தான் இது சிலையா உருவமா என்றெல்லாம் நாம் ஆராயவில்லை. பார்த்ததுமே அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பி தலைவணங்குகிறோம்! ஏன்..?’’எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு விக்கிரமாதித்தர் தொடர்ந்தார்.‘‘நம் மன்னரின் வீரம் அப்படி. சாளுக்கிய சிம்மாசனத்தை யார் வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். ஆனால், பரந்துவிரிந்த சாளுக்கிய தேசத்தின் ஒரே மாமன்னர் அன்றும் இன்றும் என்றும் இரண்டாம் புலிகேசிதான்! என்ன காரணம்..?மங்களேசனுடன் போரிட்டு தனக்குரிய சாளுக்கிய தேசத்தை என் தந்தை கைப்பற்ற சில ஆண்டுகள் பிடித்தன. இந்த உள்நாட்டுப் போரின் விளைவாக நம் தேசத்தின் வலிமை குறைந்தது. பகைவர்கள் பல திசைகளிலும் கிளம்பினார்கள். இந்த நேரத்தில்தான், தான் வெறும் மன்னரல்ல... மாமன்னர் என்பதை இரண்டாம் புலிகேசி நிரூபித்தார். கலகம் செய்தவர்களுள் ஒருவரான ஆப்பாயிகன் என்பவரை பீமரதி நதிக்கரையில் வென்றார். ஆப்பாயிகனுக்கு துணை நின்ற கோவிந்தன் வேறுவழியின்றி என் தந்தையிடம் சரணடைந்தார்.பின்னர் கடம்பர் தலைநகரான பனவாசி மீது படையெடுத்து அதை இரண்டாம் புலிகேசி கைப்பற்றினார். தென் கன்னடத்தில் ஆட்சி செய்த ஆலுபர்களும் மைசூரில் இருந்த கங்கர்களும் என் தந்தையின் மேலாதிக்கத்தை உடனடியாக ஏற்றனர். கங்க மன்னர் துர்விநீதன் தன் மகளை என் தந்தைக்கு மணமுடித்துக் கொடுத்தார்!இதன் பிறகு மவுரியர்களின் தலைநகரான புரி மீது இரண்டாம் புலிகேசி படையெடுத்துச் சென்றார். உடனே அவர்கள் சாளுக்கியர்களின் மேலாதிக்கத்தை ஏற்றனர். இப்படி சாளுக்கியர்களின் புகழ் இதோ இவர் காலத்தில் வட இந்தியா முழுக்க பரவியது...’’ என்றபடி இரண்டாம் புலிகேசியின் சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் விக்கிரமாதித்தர்.இதைத் தொடர்ந்து அவையில் இருந்த ஒவ்வொருவரும் அச்சிலைக்கு தனித்தனியாக மரியாதை செலுத்தினர். இதற்காக, தான் பேசுவதை நிறுத்தாமல் தொடர்ந்தார் விக்கிரமாதித்தர்.‘‘இந்த நேரத்தில் ஹர்ஷருடைய வலிமைக்கு அஞ்சிய லாடர்களும், மாளவர்களும், கூர்ஜரர்களும் தங்கள் தற்காப்புக்காக சாளுக்கிய தேசத்துக்கு நண்பர்களானார்கள்.இதனால் சாளுக்கிய ராஜ்ஜியத்தின் வடஎல்லை ஒரே மூச்சில் மஹீநதி வரையில் சென்றுவிட்டது.ஹர்ஷன் தக்காணத்தின் மீது படையெடுத்தபோது , நர்மதை நதிக்கரையில் அவரை எதிர்த்து தீரமுடன் போரிட்டார் இரண்டாம் புலிகேசி. இந்தப் போரில் சாளுக்கியர்களே வெற்றி பெற்றார்கள். ஹர்ஷரின் ஆணவம் முற்றிலுமாக அடங்கி ஒடுங்கியது. இதன்பின் கிழக்குத் தக்காணத்தின் மீது ஒரு நீண்ட படையெடுப்பை என் தந்தை தொடங்கினார். தென் கோசலமும், கலிங்கமும் முதலில் அடிபணிந்தன. பின்னர் பீஷ்டபுரத்தை தாக்கி அடக்கிவிட்டு குனலா ஏரியின் கரையில் விஷ்ணு குண்டினர்களை படுதோல்வி அடையச் செய்தார். இதன் பிறகே பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார்... இதன் பிறகு நடந்த அனைத்தும் நம் எல்லோருக்கும் தெரியும்...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர் மெல்ல நடந்து அனந்தவர்மரின் அருகில் வந்தார்.‘‘இதுதான் நம் தந்தை... இதுவேதான் அவரது வீரம்! தனக்குரிய உரிமையைப் பெற அவர் தன் நண்பர்களின் உதவியைத்தான் பெற்றார். சாளுக்கியர்களின் பரம்பரை எதிரியான பல்லவர்களின் உதவியை அல்ல!நம் தந்தையின் மரணம் நினைவில் இருக்கிறதா என் அருமை அண்ணா! பல்லவ மன்னரான நரசிம்மவர்மர் நம் தலைநகரான வாதாபியை அழித்த போரில் நம் தந்தை இன்னுயிர் நீத்தார். இதனை அடுத்து சாளுக்கிய தேசத்துக்கு நெருக்கடி காலம் தொடங்கியது. அடங்கியிருந்த சிற்றரசர்கள் தன்னாட்சி பெற முயன்றார்கள். அரசப் பிரதிநிதிகளாக ஆட்சி செய்துவந்த நம் உறவினர்களும் சிற்றரசர்கள் போலவே கொடி தூக்க ஆரம்பித்தார்கள்.இந்தச் சூழலில்தான் சாளுக்கிய தேசத்தின் மன்னராக நான் அமர்ந்தேன். அதுவும் எப்படி..? நமது போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் உட்பட இங்கிருக்கும் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் மீண்டும் அதை சுருக்கமாகச் சொல்கிறேன்! எனக்கு சந்திராதித்தர், ஆதித்தவர்மர் என இரு மூத்த சகோதரர்கள் உண்டு. இப்படி ஒன்றுக்கு இரு மூத்தவர்கள் இருக்க இளையவனான நான் எப்படி மன்னனானேன்..? சொல்லுங்கள், சாளுக்கிய மன்னராக முடிசூட வேண்டிய ஆதித்தவர்மரே... எப்படி அப்பதவி உங்களை விட்டுப் போனது..? சாளுக்கிய மன்னராக வேண்டும் என்ற பேராசையில் கீழ்த்தரமான காரியம் ஒன்றைச் செய்தீர்கள்! அதாவது நம் தலைநகரை அழித்தவரும் நம் தந்தையும் சாளுக்கிய மாமன்னருமான இரண்டாம் புலிகேசி மரணமடையவும் காரணமாக இருந்த பல்லவ மன்னரான நரசிம்மவர்மரிடம் உதவி கேட்டீர்கள்!ஏற்கனவே சாளுக்கியர்களை வெற்றி கொண்ட மிதப்பில் இருந்த நரசிம்மவர்மர், இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள உங்களுக்கு படையுதவி செய்தார்! எப்பேர்ப்பட்ட கேவலமான விஷயம் இது! வரலாறு உங்களை மன்னிக்கவே மன்னிக்காது அனந்தவர்மரே!நீங்கள் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த செய்கையில் இறங்கியதால் சாளுக்கியர்களின் பெருமையைக் காப்பாற்ற என் தாய்வழி தாத்தாவான கங்க மன்னர் துர்விநீதன் துணையை நாடினேன். துர்விநீதருக்கும் நரசிம்மவர்மருக்கும் ஏற்கனவே பகை உண்டு. துர்விநீதன் ஆண்ட கங்க நாட்டின் ஒரு பகுதியை நரசிம்மவர்மர் முன்பே கைப்பற்றி துர்விநீதனுடைய தம்பியிடம் கொடுத்திருந்தார்.இதனால் நரசிம்மவர்மரை வீழ்த்த காத்திருந்த துர்விநீதர், எனக்கு படை உதவி அளித்ததன் மூலம் பல்லவர்கள் மீதான தன் பகையைத் தீர்த்துக் கொண்டார். பல்லவ உதவி பெற்ற உங்கள் படையை வீழ்த்தி சாளுக்கியர்களின் அரியாசனத்தில் அமர்ந்தேன். நம் மீது கறையாகப் படிந்திருக்கும் பல்லவ வெற்றியைத் துடைக்க இதோ பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்திருக்கிறேன்.இப்பொழுது பல்லவ நாடும் காஞ்சிபுரமும் நம் வசம்தான் இருக்கிறது. ஆனால், போர் புரியாமல் இந்த வெற்றியை அடைந்திருக்கிறோம். எனவே இது வெற்றி அல்ல!பல்லவர்களை நேருக்கு நேர் சந்தித்து போர்க்களத்தில் அவர்களை ஓட ஓட விரட்டவேண்டும். அப்பொழுதுதான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் ஆன்மா சாந்தியடையும்.இதற்காக சாளுக்கிய வீரன் ஒவ்வொருவனும் அல்லும் பகலும் உழைத்து வரும் நேரத்தில் நீங்கள் திரும்பவும் சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற அதே பல்லவர்களின் உதவியை நாடி இருக்கிறீர்கள்! அதுவும் யாரிடம்..? போர் புரியாமல் நாட்டை நம்மிடம் ஒப்படைத்துவிட்டு ஓடி ஒளிந்திருக்கும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரிடம்!அதற்கான அத்தாட்சி இதோ...’’ தன் மடியில் இருந்து ஒரு பொருளை எடுத்து தரையில் வீசினார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.அப்பொருளைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் பிரமை பிடித்து நின்றார்கள். அனந்தவர்மரின் கைகால் நடுங்கத் தொடங்கியது.இந்நிலையில் அடுத்த அம்பைக் குறி பார்த்து வீசினார் விக்கிரமாதித்தர்!‘‘சிவகாமி குறித்த உண்மை கரிகாலனுக்குத் தெரிந்து விடும் என்றுதானே சொன்னீர்கள்..? இந்நேரம் கரிகாலன் இறந்திருப்பான்! சிவகாமி அவனைக் கொலை செய்திருப்பாள்!’’அருவிக் கரையில் கரிகாலனும் சிவகாமியும் கட்டிப் புரண்டு மல்யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.சிவகாமி தன் கரங்களால் கரிகாலனின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினாள்! 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் 2,548 Posted July 8, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted July 8, 2019 மிக்க நன்றி சதீஸ்குமார் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted July 12, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted July 12, 2019 அத்தியாயம் 61 கரிகாலன் இதை எதிர்பார்க்கவில்லைசிவகாமியின் உடல்வாகும் கை கால் வலுவும் மற்றவர்களை விட அவனுக்கு நன்றாகவே தெரியும்! அளந்தும் உருட்டியும் தூக்கியும் சுமந்தும் தடவியும் பார்த்தவனல்லவா?!போலவே தன் உடலின் வலுவும் அவனுக்குத் தெரியும். அனு தினமும் அதை பரிசோதித்து வருகிறானே..? எனவே அருவியின் அருகில் சிவகாமியை அழைத்துச் சென்றபோதும், நீரில் பிரதிபலித்த அவள் வதனத்தை அவளிடமே காண்பித்து ‘‘யார் நீ..?’’ என வினவியபோதும் தயார் நிலையில்தான் இருந்தான். ஒருவேளை திமிறினாலும் அவளை தன்னால் அடக்க முடியும் என உறுதியாக நம்பினான்.அந்த நம்பிக்கை எக்கணத்தில் பொய்த்தது என்பதை கரிகாலனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.ஏனெனில் ‘‘யார் நீ..?’’ என அவளிடம் விசாரித்த மறுகணம் புல்தரையில் உருண்டு கொண்டிருந்தான்!இமைக்கும் பொழுதுக்குள் தன் பிடியில் இருந்து அவள் நழுவியதையும், தனக்கு முன்னால் நின்றவள் உடனடியாக மீனைப் போல் வளைந்து தன் பின்னால் வந்ததையும் அவன் உணரவேயில்லை. எனவே தன் இடுப்பில் கை வைத்து அவள் தூக்கும்போதும்... உயர்த்திய தன் உடலை அப்பால் வீசியபோதும் செய்வதறியாமலேயே திகைத்தான்.இத்தனையும் புல்தரையில் அவன் உருண்டபோது இப்படி நடந்திருக்கலாம் என ஊகித்ததுதான். மற்றபடி துல்லியமாக என்ன நடந்தது என்பதை கரிகாலனால் காட்சி வடிவில் நினைத்துப் பார்க்க முடியவில்லை.இதனை அடுத்து அவன் முகத்தில் வியப்பின் ரேகைகள் படர்ந்தன. அறிந்த தேகத்துக்குள் இருந்த அறியாத சக்தி அவனை மலைக்க வைத்தது.அதை அதிகப்படுத்தும் விதமாகவே அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறின!உருண்டவன் ஓர் எல்லைக்குப் பின் எழ முற்பட்டான். அதற்குள் பாய்ந்து வந்த சிவகாமி அவன் மீது அமர்ந்து அவன் கழுத்தை நெரிக்கத் தொடங்கினாள்.பிஞ்சு விரல்கள்... உணர்ச்சியுடன் தன் முதுகிலும் மார்பிலும் படர்ந்த விரல்கள்... அவைதான் உலோகமாக அக்கணத்தில் உருமாறியிருந்தன!கரிகாலனின் கண்கள் செருகத் தொடங்கின. அதைப் பார்த்தபடியே தன் விரலை இன்னமும் சிவகாமி அழுத்தினாள். இதே நிலை இன்னும் சில கணங்கள் நீடித்தால் அவன் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்திருக்கும். அப்படி பிரிய வேண்டும் என்றுதான் தன் அழுத்தத்தை சிவகாமியும் அதிகரித்தாள்.ஆனால், மனிதர்கள் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே... மனம் போடும் திட்டங்களை அழித்து மறுதிட்டம் தீட்டுவதுதானே இயற்கைக்கு அழகு!அப்படியொரு அழகை நோக்கித்தான் அடுத்தடுத்த கணங்கள் நகர்ந்தன. இந்த நகர்தலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது கரிகாலனுக்குள் இருந்த கரிகாலன்தான்!மல்யுத்தத்தில் மாவீரராக இருந்ததாலேயே மாமல்லன் என்று பெயர் பெற்றவர் நரசிம்மவர்ம பல்லவர். அவர் யாரிடம் மல்யுத்தக் கலையைக் கற்றாரோ அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் கரிகாலனும் இப்போதைய பல்லவ இளவரசருமான இராஜசிம்மனும் மல்யுத்தம் பயின்றார்கள்.அந்த பயிற்சியும் கலையும்தான் கரிகாலனுக்கு கைகொடுத்தன.சுவாசத்தை இழுத்துப் பிடித்தவன் ஒரே உதறலில் சிவகாமியின் பிடியிலிருந்து நழுவினான். இதனைத் தொடர்ந்து நடந்த மல்யுத்தத்தை பார்க்கும் பாக்கியம் அங்கிருந்த செடி கொடிகளுக்கே வாய்த்தன! அசுவ சாஸ்திரமும் மல்யுத்தக் கலையும் ஒன்றிணைந்த அந்த தேக விளையாட்டை அங்கிருந்த பட்சிகள் அனைத்தும் கண்டு ரசித்தன.இருவரும் கட்டி உருண்டார்கள்; புரண்டார்கள்; ஒருவர் உடலில் மற்றவர் குத்து விட்டார்கள்; ஒருவர் வியர்வையில் மற்றவர் குளித்தார்கள்.கடைசியில் இருவரது கால்களும் ஒருசேர உயர்ந்து அடுத்தவர் இடுப்பில் குத்துவிட்டன.திசைக்கு ஒருவராக இருவரும் விழுந்தார்கள். விழுந்த வேகத்தில் எழுந்து நின்றார்கள். பாய்வதற்கு தயாரானார்கள்.‘‘யார் நீ..?’’ மீண்டும் அழுத்தமாக கரிகாலன் கேட்டான்.‘‘தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறாய்..?’’ சிவகாமி சீறினாள்.‘‘ஏதாவது செய்ய முற்பட்டால்தான் உன்னை வெளிப்படுத்துவாயா..?’’‘‘ஏன்... இப்பொழுது மட்டும் வெளிப்படாமலா இருக்கிறேன்! அதுதான் நான் சிவகாமி அல்ல என்பதை கண்டுபிடித்துவிட்டாயே! பச்சிலைச் சாறு என் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி விட்டதே!’’‘‘ஆக நீ சிவகாமி அல்ல என்பதை ஒப்புக் கொள்கிறாய்!’’‘‘ஆம்...’’‘‘அப்படியானால் பல்லவர்களின் குல விளக்கும், நரசிம்மவர்ம பல்லவரின் மனம் கவர்ந்தவரும், வாதாபியை தீக்கிரை ஆக்க காரணமாக இருந்தவருமான நாட்டியப் பேரொளி சிவகாமி அம்மையாரின் வளர்ப்பு பேத்தியும்... பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர் தன் மகளாக வளர்த்து ஆளாக்கியவளும், பாட்டியின் பெயரையே தனது பெயராகக் கொண்டவளுமான சிவகாமி எங்கே..?’’‘‘சாளுக்கியர்களின் சிறையில்!’’சிவகாமியின் உருவத்தில் அதுநாள் வரையில் தன்னுடன் ஒட்டி உறவாடியவள் இப்படிச் சொன்னதும் கரிகாலன் எரிமலையானான். அதைக் கண்டு ‘சிவகாமி’ நகைத்தாள். ‘‘உன் பலத்தை பயன்படுத்தி இந்த இடத்திலேயே என்னைக் கொன்றாலும் சரி... சாளுக்கியர்களின் எந்தச் சிறையில் இராஜசிம்ம பல்லவரின் வளர்ப்பு சகோதரியான சிவகாமி இருக்கிறாள் என்பதை சொல்ல மாட்டேன்! ஏனெனில் அந்த விவரம் எனக்கே தெரியாது!’’‘‘இதை நான் நம்ப வேண்டுமா..?’’‘‘உன் விருப்பம்!’’ அலட்சியமாக சிவகாமி பதில் சொன்னாள்.‘‘சாளுக்கியர்களின் உளவாளியான உனக்கே இந்தளவு தைரியம் இருந்தால்... பல்லவ சேனையின் உபதளபதியான எனக்கு எந்தளவு துணிச்சல் இருக்கும்! உன்னை என்ன செய்கிறேன் பார்...’’‘சிவகாமி’யின் மீது கரிகாலன் பாய்ந்தான்!‘‘மன்னா... என்னை மன்னித்துவிடுங்கள்!’’ ராமபுண்ய வல்லபரின் குரல் தழுதழுத்தது.‘‘எதற்கு..?’’ புருவத்தை உயர்த்தினார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.‘‘அறையில் தங்கள் மீது நடந்த விசாரணைக்கு அடியேனும் ஒரு காரணமாக அமைந்துவிட்டேன்...’’‘‘எந்த அறையில்..? என்ன விசாரணை நடைபெற்றது..?’’கேட்ட சாளுக்கிய மன்னரை அதிர்ச்சியுடன் பார்த்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘மன்னா...’’‘‘சொல்லுங்கள் சாளுக்கியர்களின் போர் அமைச்சரே..!’’எதுவும் பேசாமல் ராமபுண்ய வல்லபர் தலைகுனிந்தார்.இந்தக் கோலத்தில் அவரைப் பார்க்கவே விக்கிரமாதித்தருக்கு பாவமாக இருந்தது. மெல்ல அருகில் வந்து அவர் தோளில் கை வைத்தார். ‘‘அங்கு நடந்ததை அங்கேயே நான் மறந்துவிட்டேன்... தென்னகம் முழுக்க சாளுக்கியர்கள் ஆளவேண்டும் என நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம்... ஏனெனில் நாம் அனைவருமே மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் வழி வந்தவர்கள். நமக்குள் ஓடுவது சாளுக்கிய ரத்தம். எனவே இதற்கு இடைஞ்சலாக யார் வந்தாலும் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு இலக்கை நோக்கி நகர நினைக்கிறோம். அவ்வளவுதான்...’’‘‘அதற்காக தங்களை நாங்கள் தவறாக நினைத்தது எந்த வகையில் சரியாகும்..? எங்களைவிட சாளுக்கியப் பேரரசு கனவு உங்களுக்கு அதிகம் என்பதை நாங்கள் உணரத் தவறியது பிழைதானே..?’’‘‘ஆம், பிழைதான். தவறல்ல! தவறுக்கும் பிழைக்கும் வித்தியாசமுண்டு சாளுக்கியர்களின் போர் அமைச்சரே! அதனால்தான் அறையில் நடந்ததை அப்படியே மறந்துவிடுங்கள் என்கிறேன்... தவிர என் மீதும் பிழை இருக்கிறது... எனது ஏற்பாடுகளை உங்களிடம் நானும் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்தக் குழப்பங்கள் நடந்திருக்காது...’’ராமபுண்ய வல்லபர் அமைதியாக நின்றார்.‘‘சரி... உடனே நம் வீரர்களையும் ஒற்றர்களையும் எல்லா திசைகளிலும் அனுப்புங்கள்... சிவகாமியின் உருவத்தில் இருப்பவள் நம்மால் அனுப்பப்பட்ட ஆயுதம் என்பது இந்நேரம் கரிகாலனுக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு ஒன்று அவன் அவளைக் கொன்றிருப்பான் அல்லது அவள் அவனைக் கொன்றிருப்பாள்... எதுவாக இருந்தாலும் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவேண்டும்...’’‘‘...’’‘‘அடுத்ததாக படைகள் புறப்பட ஆயத்தம் செய்யுங்கள்...’’‘‘எங்கு செல்கிறோம் மன்னா..?’’‘‘உறையூருக்கு! இங்கிருப்பதை விட அங்கிருந்தால் பாண்டியர்களையும் ஒரு கை பார்க்க முடியும்!’’‘‘உத்தரவு மன்னா...’’ வணங்கிவிட்டு சாளுக்கியர்களின் போர் அமைச்சர் நகர முற்பட்டார்.‘‘ராமபுண்ய வல்லபரே...’’ விக்கிரமாதித்தர் தடுத்தார்.‘‘மன்னா!’’‘‘உங்கள் மனதில் இன்னும் வினாக்கள் இருக்கின்றன என்று தெரியும். அதில் முதன்மையானது கரிகாலனை ஏன் காஞ்சியில் இருந்து தப்பிக்க வைத்தேன் என்பது... அடுத்து, என் மகனும் சாளுக்கிய இளவரசருமான விநயாதித்தன் எங்கிருக்கிறான் என்பது... மூன்றாவது, கடிகையில் இருந்த பாலகன் யார் என்பது... சரிதானே..?’’‘‘ஆம் மன்னா!’’‘‘பிறகு ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்..?’’‘‘காரணமில்லாமல் நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும் மன்னா...’’‘‘காரணத்தை அறியலாமே..?’’‘‘அறிய வேண்டிய நேரத்தில் நீங்களே அழைத்து விளக்குவீர்கள் என்று தெரியும்...’’ சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார் ராமபுண்ய வல்லபர்.அவர் செல்வதை புன்னகையுடன் பார்த்தார் விக்கிரமாதித்தர். இந்த நம்பிக்கைதான் சாளுக்கியர்களின் வெற்றிக்கான முதல் படி!தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அனந்தவர்மர். அவர் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இரண்டாவது வாய்ப்பையும் நழுவ விடப் போகிறோமா... சாளுக்கியர்களின் அரியணையில் அமரும் தகுதி மூத்தவரான தனக்குத்தானே இருக்கிறது..? எதிரிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப நட்பு பாராட்டுவது ராஜ தந்திரத்தில் அனுமதிக்கப்பட்டதுதானே? அதன்படிதானே முன்பு நரசிம்மவர்ம பல்லவருடனும் இப்பொழுது பரமேஸ்வர வர்மருடனும் நட்பு பாராட்டத் துணிந்தோம்..? அது எந்த வகையில் தவறாகும்..? முணுமுணுத்தபடியே நடந்தவர் சட்டென நின்றார். ஓசை எழுப்பாமல் சாளரத்தின் அருகில் வந்தார்.எதிர்பார்த்தது போலவே வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தார்கள்.சிறை!விக்கிரமாதித்தா... இந்த அண்ணனை இன்னமும் நீ புரிந்து கொள்ளவில்லை... சிவகாமியை ஆயுதமாக்கி இருக்கிறாய்... உருவாக்கியவர் யாராக இருந்தாலும் யார் கையில் ஆயுதம் சிக்குகிறதோ அவர்களுக்கே அது விசுவாசமாக இருக்கும்..! திரும்பி அறையின் நடுவில் வந்தவர் படுக்கையின் மீது அமர்ந்தார். இடுப்பிலிருந்து மடிக்கப்பட்ட பட்டுத் துணியை எடுத்து விரித்தார். அதன் மீது ஏராளமான சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. அதையே உன்னிப்பாக பார்க்கத் தொடங்கினார்.கரிகாலன் சட்டென புன்னகைத்தான்.அந்த சிரிப்புக்கான அர்த்தம் ‘சிவகாமி’க்குப் புரியவில்லை. அவனது கருவிழிகள் அலைபாயவில்லை; எங்கும் நகரவில்லை. சரியாக அவளது கருவிழிகளுக்குள்தான் அவன் நயனங்கள் ஊடுருவிக் கொண்டிருந்தன.ஆனாலும் கணத்துக்கும் குறைவான நேரம் அவன் கண்கள் மின்னியதாக அவளுக்குத் தோன்றியது.அது பிரமையா இல்லையா என்ற தீர்மானத்துக்கு அவள் வருவதற்கு முன் -கரிகாலன் பாய்ந்தான்.அவள் மீதல்ல. நதியாக பிரவாகம் எடுத்த அருவியில்!பார்த்தவளுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. ஆற்றில் மரக்கட்டைகள் மட்டுமே மிதந்து வந்துகொண்டிருந்தன.இதிலென்ன இருக்கிறது..?சிந்திப்பதற்கு முன்பே அவளுக்கு விடை கிடைத்தது. ஒரு மரக்கட்டையை எடுத்து மேல் நோக்கி கரிகாலன் வீசினான். அவனை நோக்கி அது கீழே வரும்போது தன் உள்ளங்கையால் அந்த மரக்கட்டையைப் பிளந்தான்.மரக்கட்டைக்குள் வாள் ஒன்று இருந்தது.அதை தன் கரத்தில் ஏந்தியபடி ‘சிவகாமி’யைப் பார்த்துச் சிரித்தான்!அரக்கை எடுத்து ஒரு சித்திரத்தைச் சுற்றிலும் அனந்தவர்மர் வட்டமிட்டார்.வட்டத்துக்குள் வாள் மின்னிக் கொண்டிருந்தது!அதுவும் அருவிக் கரையில் எந்த வாளை தன் கரத்தில் கரிகாலன் ஏந்தியிருந்தானோ... அதேபோன்ற வாள்! 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பா. சதீஷ் குமார் 77 Posted July 19, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted July 19, 2019 ரத்த மகுடம்-62 நிமிர்ந்த அனந்தவர்மர் மெல்ல எழுந்து சாளரத்தின் அருகில் சென்றார்.ஓரமாக மறைந்தபடி குனிந்து திரைச்சீலையை கீழே லேசாக விலக்கினார்.அறை வாயிலில் இரு காவலர்களும்; சற்றே தள்ளி நான்கு காவலர்களும் அசையாமல் நின்றிருந்தனர். அறுவர் கரங்களிலும் ஈட்டிகள். அனைவரது கச்சையிலும் எப்பொழுது வேண்டுமானாலும் உருவும் வகையில் வாட்கள்.இந்த அணிவகுப்புக்கு இடையில் குறிப்பிட்ட காலவெளியில் சாளுக்கிய வீரர்கள் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமுமாக நடந்துகொண்டிருந்தனர்.நடைபயின்றவரின் கண்கள் எட்டு திசைகளையும் ஊடுருவியபடியும் அலசியபடியும் இருந்ததை அனந்தவர்மரால் உணர முடிந்தது.தான் இருந்த அறைப்பக்கம் வரும்பொழுதெல்லாம் வீரர்களின் கருவிழிகள் தாழிடப்பட்ட அறைக் கதவையும், சாளரங்களையும் தவறாமல் கண்காணிப்பதை கவனித்தார்.இப்படி நடக்கும் என ஊகித்ததாலேயே அனந்தவர்மர் காற்றில் திரைச்சீலை அசைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். இதன் ஒரு பகுதியாகவே அவ்வப்போது கீழ்நோக்கி அதை உயர்த்தி வெளி நடமாட்டத்தை கவனித்தார்.காவல் பலமாகவே இருக்கிறது. அதேநேரம் காவலுக்கு நிற்கும் சாளுக்கிய வீரர்கள் உட்பட அரண்மனைப் பணியாளர்கள் வரை ஒருவருக்கும், தான் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாது என்பதை அறியவும் அனந்தவர்மருக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.தனக்குள் புன்னகைத்தார்.‘விக்கிரமாதித்தா... சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற வாரிசுகள் இருவர் மீண்டும் போட்டி போடுகின்றனர் என்ற உண்மை பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் மட்டுமல்ல... சாளுக்கிய வீரர்களுக்கும் தெரியக் கூடாது என கவனமாக காய்களை நகர்த்துகிறாய். தெரியும் பட்சத்தில் சாளுக்கியப் படைகள் இரண்டாகப் பிரியலாம்... அது எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமாகலாம்... இதனால் சாளுக்கியர்களின் சாம்ராஜ்ஜிய கனவு கரைந்து போகலாம்... ஏன், சாளுக்கிய தேசமே இருந்த இடம் தெரியாமல் மறையவும் செய்யலாம் என அஞ்சுகிறாய்.எப்படி உன் உடலில் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் ரத்தம் ஓடுகிறதோ அப்படி என் உடலிலும் அவரது குருதியேதான் பாய்கிறது!நியாயமாக எனக்குக் கிடைக்க வேண்டிய அரியணைக்காகத்தான் போராடுகிறேனே தவிர என் தாய்நாட்டைக் கூறு போட்டு விற்பனை செய்ய உரிமைக் குரலை எழுப்பவில்லை.சாம்ராஜ்ஜியமாக விரிந்து தென்னகம் முழுக்க சாளுக்கியர்கள் ஆள வேண்டும் என்ற கனவு எனக்கும் இருக்கிறது.பல்லவ மன்னனிடம் படை உதவி கேட்டது சாளுக்கியர்களின் சிம்மாசனத்தில் நான் அமர்ந்து படை திரட்டி அதே பல்லவர்களை வேரோடு அழிக்கத்தான்!அர்த்த சாஸ்திரத்தில் எதிரிகளையும் சாதகமாகப் பயன்படுத்தச் சொல்கிறார் கவுடில்யர். இந்த வழியையே நான் பின்பற்றுகிறேன்...பார்க்கலாம், நம் தந்தை இரண்டாம் புலிகேசியின் பேரரசுக் கனவை மூத்தவனான நான் நிறைவேற்றுகிறேனா அல்லது இளையவனான நீ நிறைவேற்றுகிறாயா என்று.அச்சப்படாதே... மீண்டும் நம் இருவருக்குள் அரியணைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளியில் கசிய விடமாட்டேன். படை உதவி செய்வதாகச் சொல்லியிருக்கும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரும் இந்த விஷயத்தில் ரகசியம் காப்பதாக உறுதி அளித்திருக்கிறார், அதுவும் அனுதினமும், தான் பூஜிக்கும் சிவலிங்கத்தின் மீது சத்தியம் செய்து.எனவே, உன் வழியிலேயே நானும் அமைதி காக்கிறேன். நம் இருவருக்கும் இடையிலான பிரச்னை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொள்கிறேன்.ஆனால், இறுதியில் வெற்றி பெறப்போவது நான்தான்!’மனதுக்குள் உறுமியபடியே சத்தம் எழுப்பாமல் படுக்கைக்கு வந்த அனந்தவர்மர், விரிக்கப்பட்டிருந்த பட்டையும், அரக்கினால், தான் வட்டமிட்ட வாளையும் பார்த்தார்.அவர் வதனத்தில் பெருமிதம் ஜொலித்தது.‘முட்டாள் விக்கிரமாதித்தா! காஞ்சி மாநகரத்தை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு பல்லவ மன்னன் ஓடிவிட்டான் என்றா நினைக்கிறாய்! படைகளைத் திரட்டி வருகிறானடா! அவனிடம் இப்பொழுது ஆயுதங்கள் குவிந்து வருகின்றன!’நிம்மதியுடன் அந்த பட்டை சுருட்டி தன் இடுப்பில் செருகிவிட்டு படுக்கையில் சாய்ந்தார்; உறங்கத் தொடங்கினார்...‘‘வாருங்கள் கங்க இளவரசே...” ராமபுண்ய வல்லபர் வரவேற்றார். ‘‘தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்...’’‘‘என்ன இது அமைச்சரே... நீங்கள் போய் என்னிடம்...’’ சங்கடத்துடன் பதிலளித்த கங்க இளவரசன், ராமபுண்ய வல்லபரை உற்றுப் பார்த்தான்.‘‘என்ன இளவரசே?’’‘‘ஒன்று கேட்கலாமா?’’‘‘கேளுங்கள்...’’‘‘அனந்தவர்மர் மீண்டும் பிரச்னை செய்கிறாரா? என் தந்தையிடம் இதைத் தெரிவிக்கலாமா?’’ராமபுண்ய வல்லபர் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.‘‘நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை இளவரசே... தேவைப்பட்டால் சாளுக்கிய மன்னரே உங்கள் தந்தையைத் தொடர்பு கொள்வார்...’’மேற்கொண்டு கங்க இளவரசன் பேச்சை நீட்டிக்கவில்லை. ‘’சொல்லுங்கள் அமைச்சரே... தாங்கள் என்னை அழைத்த காரணம்..?’’‘‘மன்னர் உத்தரவு...’’‘‘கட்டளை இடுங்கள்...’’‘‘முன்பே நம் மன்னர் இட்டதுதான்...’’ என்றபடி தன் மடியில் இருந்து ஓலைக் குழலை எடுத்து கங்க இளவரசரிடம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர்.அதைப் பெற்றுக் கொண்ட கங்க இளவரசனின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஏனெனில் குழல் உடைக்கப்பட்டிருந்தது!‘‘மன்னர்தான் உடைத்து, தான் எழுதியதை மீண்டும் படித்துப் பார்த்தார்!’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் சங்கடம் வழிந்தது. சிறியவர்கள் முன்னால் இப்படித் தடுமாற வேண்டிய நிலை எதிரிக்கும் வரக்கூடாது.‘‘கிளம்புகிறேன் அமைச்சரே!’’‘‘நல்லது இளவரசே... என்ன செய்யவேண்டும் என மன்னர் உங்களிடம்...’’‘‘முன்பே தெரிவித்துவிட்டார்... சாளுக்கிய வீரர்களிடம் மட்டும் இம்முறையும் எந்த முத்திரை மோதிரத்தையும் காண்பித்து தடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்!’’ கண்சிமிட்டிவிட்டு கங்க இளவரசன் அகன்றான்.ராமபுண்ய வல்லபர் நெளிந்தார்.‘‘எதற்காக யோசிக்கிறீர்கள் மன்னா?’’ கேட்ட மருத்துவருக்கு வயது 80க்கு மேல் இருக்கும். பழுத்த பழம். வெண்தாடி,ஆடைகளற்ற மார்பில் புரண்டு கொண்டிருந்தது.இடுப்பில் காவி வேஷ்டியை இறுகக் கட்டியிருந்தார். ஸ்படிக மாலையும் துளசி மாலையும் கழுத்து முதல் வயிற்றின் நாபிக் கமலத்துக்கு மேல் வரை தவழ்ந்து கொண்டிருந்தது.‘‘ஒன்றுமில்லை மருத்துவரே...’’ சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் பதிலளித்தார்.என்றாலும் அவர் கண்களில் தென்பட்ட கவலையை மருத்துவர் கவனித்தார்.‘‘ஒன்றுமில்லை என நீங்கள் சொல்வதிலேயே ஏதோ இருக்கிறதே மன்னா..?’’ வாஞ்சையுடன் சொன்ன மருத்துவர், விக்கிரமாதித்தரின் அருகில் வந்தார்.‘‘மன்னா! நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டும் என்றில்லை. இந்த பரத கண்டத்திலேயே சாளுக்கியர்களுக்கு நிகராக மூலிகை, தைல ரகசியங்களைத் தெரிந்தவர்கள் யாருமே இல்லை. இதற்கு நம் பகுதியில் இருக்கும் அஜந்தா குகை ஓவியங்களே சாட்சி. அந்த வர்ணக் குழைவின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ளத்தான் மகேந்திர வர்ம பல்லவரும் ஆயனார் சிற்பியும் தங்கள் வாழ்க்கை முழுக்க முயன்றார்கள்...’’‘‘தெரியும் மருத்துவரே...’’‘‘அறிந்துமா கவலைப்படுகிறீர்கள்? மன்னா! எனது மேற்பார்வையில் அல்ல நானே நேரடியாக இறங்கி நீங்கள் அனுப்பிய பெண்ணை ‘சிவகாமி’யின் தோற்றத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன்!’’‘‘...’’‘‘தலைமுறை தலைமுறையாக மூலிகைகளுடனும் தைலங்களுடனும் எங்கள் குடும்பம் புழங்கி வருகிறது! அனைத்து அனுபவங்களையும் ஒன்று திரட்டித்தான் ‘சிவகாமி’யை உருவாக்கி இருக்கிறோம்! எனவே, எங்கே நம் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என நீங்கள் கவலைப்படுவதில் பொருளில்லை...’’‘‘நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்கிறேன் மருத்துவரே... இயற்கைச் சீற்றங்களாலும் அழியாத மூலிகைக் கலவையை உருவாக்கும் திறன் சாளுக்கியர்களுக்கு உண்டு என்பது எனக்குத் தெரியாதா?’’‘‘அப்படியானால் என் திறமை மீது அய்யம் கொள்கிறீர்களா மன்னா?’’‘‘என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள் மருத்துவரே! என் தந்தைக்கு சமமானவர் நீங்கள். இன்று நான் உயிருடன் இருக்கவே உங்கள் சிகிச்சைதானே காரணம்?’’‘‘உங்கள் உதடுகள் இப்படிச் சொன்னாலும் உள்ளம் கவலையை வெளிப்படுத்துகிறதே... அதற்கு அர்த்தம் என்ன மன்னா?’’‘‘ராமபுண்ய வல்லபர் அவசரப்பட்டு செய்த காரியம்...’’‘‘விளங்கவில்லையே..?’’‘‘மருத்துவரே... எங்கே நாம் உருவாக்கிய சிவகாமி பல்லவர்கள் பக்கம் சாய்ந்துவிட்டாளோ என்று நினைத்து வீரர்களிடம் கட்டளையிட்டு அவள் மீது சரமாரியாக அம்பு பாய்ச்சும்படி செய்துவிட்டார்...’’‘‘அடாடா... இறந்துவிட்டாளா?’’‘‘இல்லை... கரிகாலன் காப்பாற்றி விட்டான்...’’‘‘யார்... சோழ இளவரசனா..?’’‘‘ஆம் மருத்துவரே...’’‘‘இதற்கும் உங்கள் கவலைக்கும்...’’‘‘தொடர்பிருக்கிறது மருத்துவரே... பல்லவ நாட்டின் கைதேர்ந்த மருத்துவக் குழு அவளுக்கு சிகிச்சை தரும்படி கரிகாலன் ஏற்பாடு செய்திருக்கிறான்...’’‘‘ம்...’’‘‘இதனால் எங்கே நம் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன்...’’‘‘அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம் மன்னா...’’‘‘என்ன சொல்கிறீர்கள் மருத்துவரே?’’‘‘உண்மையை மன்னா... நீங்களும் இதுவரை அறியாத உண்மை!’’‘‘சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் மருத்துவரே...’’‘‘பல்லவ மருத்துவர்கள் என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் நம் ரகசியம் வெளிப்படாது...’’‘‘எப்படி..?’’‘‘இதுபோல் நடக்கலாம் என முன்பே ஊகித்து உங்களிடம் கூட சொல்லாமல் ஒரு காரியம் செய்திருக்கிறேன் மன்னா..!’’வியப்புடன் மருத்துவரை ஏறிட்டார் விக்கிரமாதித்தர். ‘‘என்ன காரியம் மருத்துவரே?’’‘‘மூலிகைப் பூச்சுதான் மன்னா... அதுவும் இருமுறை!’’‘‘...’’‘‘சிவகாமிக்கு எந்தத் திறமையான மருத்துவர் சிகிச்சை அளித்தாலும் அவள் தோற்றம் பொய் எனக் கண்டறிவார்கள். பூசிய தைல காப்பை கவனமாக அகற்றி அதனுள் இருக்கும் உருவத்தை வெளியே கொண்டு வருவார்கள்!’’‘‘இதையேதானே மருத்துவரே நானும் சொல்கிறேன்?’’‘‘பொறுங்கள் மன்னா... சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன்... அப்படி வெளிப்படும் உருவமும் பொய்யானதுதான்!’’‘‘என்ன..?’’‘‘ஆம் மன்னா! போலியான உருவத்தையே மீண்டும் வைத்திருக்கிறேன்!’’‘‘...’’‘‘இருமுறை அல்ல, மூன்று முறை மூலிகைக் காப்பை அகற்றினால்தான் உண்மையிலேயே எந்தப் பெண்ணை சிவகாமியாக மாற்றி நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதையே பல்லவர்களால் கண்டுபிடிக்க முடியும்!’’‘‘அதுவரை..?’’‘‘யாரையோ சிவகாமியாக மாற்றியிருக்கிறோம் என கரிகாலன் தெரிந்து கொள்வானே தவிர ‘யாரை’ அனுப்பியிருக்கிறோம் என அறியவே மாட்டான்! நம் மர்மம் ஒருபோதும் வெளிப்படாது!’’கேட்க கேட்க வியப்பின் உச்சிக்கே சென்ற சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் சடாரென மருத்துவரின் கால்களில் விழுந்தார்.‘‘உங்களைப் போன்ற மகான்களைப் பெற சாளுக்கியர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!’’‘‘என்ன... இன்னும் ஆயுதங்கள் வந்து சேரவில்லையா?’’ வியப்பும் கோபமும் ஒருசேர கங்க இளவரசன் கேட்டான்.‘‘இல்லை இளவரசே... ஸ்ரீராமபுண்ய வல்லபர் சென்ற பவுர்ணமி அன்றே வந்து சேரும் என்றார்... இதோ அடுத்த பவுர்ணமியே வரப் போகிறது...’’‘‘ஏன் இந்தத் தகவலை முன்பே எங்களுக்குத் தெரிவிக்கவில்லை?’’ கோபத்துடன் கங்க இளவரசன் கேட்டான்.‘‘இல்லையே இளவரசே! இதுவரை ஐந்து தூதுவர்களை அனுப்பினோமே...’’இதைக் கேட்டு கங்க இளவரசன் அதிர்ந்தான்.வந்தவர்கள் என்ன ஆனார்கள்? எங்கே மறைந்தார்கள்? ஆயுதங்கள் எங்கே சென்றன?சங்கிலியால் சிவகாமி கட்டப்பட்டிருந்தாள்.சங்கிலியின் முனைகளை பல்லவ வீரர்கள் பிடித்திருந்தார்கள். தவறு, இழுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை.சிவகாமி நேர்கொண்ட பார்வையுடனும் தலை நிமிர்ந்தும் அலட்சியமாகவும் நடந்தாள்.அடர் கானகத்தினுள் சென்ற இந்த ஊர்வலத்தின் தலைமைப் பொறுப்பை கரிகாலன் ஏற்றிருந்தான்.அவன் முகத்தில் அவ்வளவு ஆனந்தம். உதடுகள் நிறைய புன்னகை!தன் இடுப்பைத் தடவினான்.காஞ்சி கடிகையில் இருந்து அவன் எடுத்த அர்த்த சாஸ்திர சுவடிகள் பத்திரமாக இருந்தன! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15628&id1=6&issue=20190719 1 Quote Link to post
Recommended Posts