யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

மனைவி

Recommended Posts

மனைவி

 

 
k9

சூரியன் இன்னும் விழிக்கவில்லை. இன்னும் சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம் என நினைத்து மேகப் போர்வைக்குள் நுழைந்தது சூரியன். கட்டிலில் படுத்திருந்த நான் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை தட்டி, மணி பார்த்தேன். 5 ஆக 5 நிமிடங்கள் இருந்தன. 
பக்கத்தில் படுத்திருந்த மனைவி எப்போதோ எழுந்து போயிருந்தாள். தனித்தனி போர்வைக்குள் படுத்திருந்த பிள்ளைகள் இரண்டும் இப்போது ஒரே போர்வைக்குள் படுத்திருந்தனர். அண்ணனின் வயிற்றின் மீது காலைப் போட்டு வசதியாக படுத்திருந்தாள் எனது மகள். இதெல்லாம் காலை நேரத்து ஆச்சரியங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரைக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டும் இப்போது அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தன. படுக்கும்போது கூட போர்வைக்கு சண்டை போட்ட இதுகளா இப்படி என்றபடி எழுந்தேன். 
சமையலறையில் தனியொருவளாய் காலை நேர வேளையில் கண்ணாயிருந்தாள் என் மனைவி சங்கரி. "என்னைப் பார்த்ததும் "பல் தேய்ச்சிட்டு வாங்க காபி போட்டு வைக்கிறேன்'' என்றவாறே. பாலை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
"நீ எந்திரிக்கும் போது என்னையும் எழுப்பியிருக்கலாமே. ஏதாவது உதவி செய்வேனில்லை'' இப்படி எத்தனையோ முறை அவளிடம் கூறியும், இதுவரை அவள் என்னை எழுப்பியதில்லை. இன்றாவது அவள் எழுந்திருக்கும் முன்பே நானும் எழுந்திரித்து விட வேண்டும் என பலமுறை நினைத்தும் கூட என்னால் முழிக்க முடியவில்லை. 
"தனியா கஷ்டப்படுதியே. ஏதாவது செய்யட்டுமா?'' என கேட்டாலும், ஆண்கள் என்னவோ அதை எல்லாம் செய்யக்கூடாது என்பது போல வேண்டாம் என கண்டிப்பாக மறுத்து விடும் பெண்கள் அதிகம். இவளும் அந்த ரகம்தான். சாம்பாருக்குள் காய்கறியைப் போட்டபடி இருந்த அவளைப் பார்த்தவாறே பல் தேய்க்க சென்றேன். காபியைக் குடிக்கும் போதே அவள் சொன்னாள்.
"பிள்ளைக எழுந்திருக்கும் முன்னால நான் குளிச்சிட்டு வந்திர்றேன். குக்கர் விசில் 4 அடிச்சவுடன் ஸ்டவ்வை ஆப் செஞ்சிருங்க.'' 
ஒவ்வொரு நாளும் இது போல் அவள் சொல்வது அவள் வழக்கம். ஆனால், குக்கர் விசில் அடிப்பதற்குள்ளாகவே குளித்து விட்டு வெளியே வரும் அவள், "விசில் அடிக்கலயே'' என்பாள். 
"10 வருஷமா இதானே நடக்கு. குளிப்பதைக் கூட நிம்மதியா செய்ய மாட்டியா? அப்படி என்ன அவசரம். நான்தான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல'' என்ற என்னைப் பார்த்து சிரித்த அவள் குளிப்பாட்டுவதற்காக பிள்ளைகளை எழுப்பப் பறந்தாள். 
சரி, காபி குடித்த டம்ளரை கழுவி வைப்போமே என நினைத்து சிங்கில் டம்ளரை கழுவ முயன்ற போது கைநழுவி டம்ளர் சிங்கில் சத்தத்துடன் விழுந்தது. 
சத்தம் கேட்டு பிள்ளைகளுடன் வந்தவள் "எதுக்குங்க தேவையில்லாத வேலை எல்லாம் செய்றீங்க?'' எனச்சொல்லி "பிள்ளைகளை பாத்ரூமுல விடுங்க. நான் கழுவி வைச்சிர்றேன்'' என்றவாறே டம்ளரை கழுவினாள். 
"ஐயோ..நான் கழுவாம இருந்தா சாயங்காலமாவது கழுவியிருப்பா. நம்மாலே இப்படி சங்கடப்படுறாளே'' என நினைத்தபடி பிள்ளைகளை பாத்ரூமுக்கு அழைத்தேன். "அம்மா வந்தாதான் வருவேன்'' என்றன இரண்டும் கோரஸôக. 
"இதுக்கும் நான்தானா? எனக்கு வேலை கொட்டிக் கிடக்கு அப்பாவோட போ'' என்று சொன்னதும், அடம் பிடித்தன இரண்டும். பாத்திரம் கழுவும் படலத்தை ஒத்தி வைத்த அவள் பாத்ரூமுக்குள் தஞ்சமானாள். இனி பல் தேய்த்து, காலைக்கடன்களை முடித்து, குளிப்பாட்டி வர எப்படியும் அரை மணி நேரமாகும். அதற்குள் ஸ்கூல் பேக்கை எடுத்து வைத்து விடுவோம் என பேக்கை தேடினால் , பேக் ஒரு பக்கமும், புத்தகங்கள் ஒரு பக்கமுமாக இறைந்து கிடந்தன. அண்ணனின் பையை துவம்சம் செய்வது அவனது தங்கை திவ்யதர்ஷினியின் வழக்கான பணி. நள்ளிரவு வரை தூக்கம் தொலைத்து பொருள்களை இறைந்து விளையாடுவது மகளுக்கு பிடித்த ஒன்று. அதன் பின்தான் அவளுக்கு தூக்கம் வரும். இறைந்து கிடந்தவற்றை பைக்குள் மொத்தமாக அள்ளிப்போட்டேன். 
குளித்து வந்த பையனுக்கு தலைவாரி, யூனிபார்மை மாட்டிய மனைவியிடம் கத்தினான் எனது மகன்.
"அம்மா, அப்பாவை யாரு பைக்குள்ள எல்லாத்தையும் அள்ளி வைக்க சொன்னது. இன்னைக்கு வியாழக்கிழமை எக்ஸ்டிரா ஆக்டிவிட்டி மட்டும்தான் இன்னைக்கு. லஞ்ச் மட்டும் கொண்டு போனா போதும்கிறது தெரியாதா?'' என்றவனிடம் "அப்பா மறந்திருப்பாரு. நீ தேவையானத எடுத்து வைச்சுக்கோ. நான் லஞ்ச் பாக்ûஸ எடுத்து தர்றேன்'' என்றாள் சங்கரி. 
"எனக்கு எதுவும் தெரியலயே. பிள்ளைக, வீடு எதுவும் தெரியாமலேயே இருக்கமே' என்ற குற்ற உணர்வுடன் குளிக்க கிளம்பினேன். 
"அப்பா நான் போயிட்டு வர்றேன். நீங்க குளிச்சுட்டு வர்றதுக்குள்ளே ஸ்கூல் பஸ் வந்துரும். டாட்டா'' என்று சொன்னபடி என்னை குளிக்க வழியனுப்பி வைத்தான் எனது மகன் விசுவநாதன். 
அவன் சொன்னது போலவே நான் குளித்து விட்டு வரும்போது பஸ் அவனை அழைத்துச் சென்று விட்டிருந்தது. மனைவி வைத்த இட்லிகளைச் சாப்பிட்டவாறே நான் கிளம்பினேன். வழக்கம்போல் அவள் சாப்பிடவில்லை. காலை நேரத்து சாப்பாடு என்பது அவளுக்கு பகல் கனவு. வீட்டிலுள்ள அம்மா, நான், பிள்ளைகளுக்காக மட்டுமே காலை நேர சாப்பாடு. அவள் சாப்பிடுவது மதியம் மட்டுமே. காலை நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தால் வேலைக்கு நேரத்தில் போக முடியாது என்பதால் இது. 
அவள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு எனது வேலையைப் பார்க்க கிளம்பினேன். நான் பார்க்கும் வேலைக்கு நேரம், காலம் கிடையாது. எந்நேரத்திலும் செய்யலாம் என்பதால் பரபரப்பு என்னிடம் கிடையாது. அவளது அலுவலகத்திலிருந்து பைக்கை திருப்பிய எனது மனம் பழைய நினைவுகளுக்குள் திரும்பியது. 

கல்லூரி காலங்களில் சில பெண்கள் என்னை விரும்பியதுண்டு. சில பல காரணங்களால் நான் நிராகரித்த சிலரும் உண்டு. என்னை நிராகரித்தவர்களும் உண்டு. எதிர்பாரா நிலையில் கடைசி நேரத்தில் என்னை வேண்டாம் என ஒருத்தி நிராகரிக்க மொத்த குடும்பமும் ஆடிப்போனது. தந்தை இல்லாத எனக்கு தந்தையும், தாயுமாக இருந்த என் சகோதரி எனக்காக பார்த்தவள்தான் இந்த சங்கரி. ஒரு வகையில் தூரத்துச் சொந்தமான அவளுக்கு எனது கதை தெரியும். இருந்தும் கூட எனது வாழ்க்கைத் துணையாக வர சம்மதித்தாள் அவள். 
மணமாகி 10 வருடங்கள் ஓடிவிட்டன. திருமணத்துக்குப் பின்னால் வரும் எந்தவொரு சந்தோஷமும் அவளுக்கு கிடைக்கவில்லை என்பது எனக்கு அவ்வப்போது வருத்தத்தை தரும். ஆனால், அவளோ அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்தாலாவது அவளுக்கு ஓய்வு கிடைக்கும் என செய்தால் அதையும் கூட விடுவதில்லை. பொதுவாக பெண்கள் அனைவரும் இப்படித்தானோ? தன் கணவன் வீட்டு வேலைகளைச் செய்யக் கூடாது என பெண்கள் நினைப்பது எதற்கென்று புரியவில்லை. 
டீ குடிப்பதற்காக பைக்கை ஓரம் கட்டினேன். கைபேசியில் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. 
"மத்தியானம் வீட்டுக்கு போய் சாப்பிடுங்க. சும்மா சுத்தி உடம்ப கெடுத்துகிடாதீங்க'' என்றாள்.
"காலையில் சாப்பிடாமலேயே இருக்கியே. உன் உடம்பு கெடாதா?'' என்றவனிடம் மேற்கொண்டு பேசாமல். "சரி போய் சாப்பிட்டிருங்க. எனக்கு வேலையிருக்கு'' என்றவாறே கைபேசியை அணைத்தாள். 

 

நிலா தனது வேலையை தொடங்கிய நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தேன். மகளை மடியில் வைத்தபடி மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். "ஹை அப்பா'' என்று வந்த மகளிடம் பண்டக் கவரை கொடுத்தபடி அமர்ந்தேன். சுடச்சுட காபி வந்தது. குடித்து விட்டு முகம் கழுவி வந்த என்னிடம் "இரவு என்ன சாப்பாடு செய்வது'' என்றாள். பதில் சொல்லாமல் அவள் முகத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தேன். "என்னங்க, நான் சொல்றது கேட்கலயா?'' என்றவளிடம், "எது ஈசியா செய்ய முடியுமோ, அதைச் செய். இல்ல ஹோட்டல்ல வாங்கி வரட்டுமா?'' என்ற என்னிடம், "பிள்ளைகளுக்கு ஹோட்டல் சாப்பாடு சரிப்படாது. சப்பாத்தி செய்திர்றேன்'' என்றபடி குருமாவுக்கு காய்கறியை நறுக்கத் தொடங்கினாள். 
டிவியை ஆன் செய்த என்னிடமிருந்து ரிமோட்டை பிடுங்கிய இரண்டு பிள்ளைகளும் சேனல்களை வரிசையாக மாற்றி விளையாடத் தொடங்கின. இரவு சாப்பாடு முடிந்து படுத்த எனக்கு தூக்கம் வரவில்லை. அண்ணன் அடித்து அழுது கொண்டிருந்த தங்கையை பாத்திரம் கழுவியபடி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் மனைவி. முழு நிலவு வானத்தை ஆக்கிரமித்து வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 12 -ஐ தாண்டிய நேரத்தில் தூங்கிய குழந்தைகளைத் தோளில் சுமந்தவாறே படுக்க வந்தாள் மனைவி. 
ஓடிக் கொண்டிருந்த டிவியில் "மனைவி அமைவதெல்லாம்...' பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பக்கத்து கோயில் கொடைவிழாவில் ஆர்கெஸ்ட்ராவில் பாடியவர் "தவமின்றி கிடைத்த வரமே' பாடிக் கொண்டிருந்தார். அவை என்னவோ எனக்காக பாடுவது போலவே இருந்தது. எனது கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை பார்த்து அதிர்ச்சியுற்ற மனைவியிடம், "அடுத்த பிறவியில் நீ கணவனாகவும், நான் மனைவியாகவும் பிறக்கணும். நீ எனக்கு இப்ப செய்ற எல்லாத்தையும் உனக்கு நான் அப்ப திருப்பிச் செய்யணும்'' என்றேன். 
"அவ்வளவுதானே சரி. நிம்மதியா தூங்குங்க'' என்றபடி படுத்தாள் அவள். 
மறுநாள் அதிகாலையில் சூரியனும் விழிக்கவில்லை.நானும் விழிக்கவில்லை. அவள் மட்டுமே விழித்து தனது வேலையைத் தொடங்கியிருந்தாள். 

http://www.dinamani.com

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு