சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
Sign in to follow this  
நவீனன்

ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்

Recommended Posts

ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்

puvitharan-696x460.jpg
 

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் நேற்று (12) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன், ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம். ஆஷிக் மற்றும் ஆண்களுக்கான 10, 000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் ஆகியோர் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.

இதில், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக தேசிய மட்ட போட்டியொன்றில் பங்குபற்றியிருந்த யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ. புவிதரன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டிக்காக தேசிய மட்டத்தில் சிறந்த உயரங்களைத் தாவியிருந்த 6 வீரர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் மற்றும் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ. புவிதரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

 

எனினும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரரும், நடப்புச் சம்பியனுமாகிய இஷார சந்தருவன் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த அனுபவமிக்க வீரரான கே. நெப்தலி ஜொய்சன் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறிமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த மாத இறுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் (4.70 மீற்றர்) புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்த ஏ. புவிதரன், முதற்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்படி, குறித்த போட்டியின் ஆரம்பத்தில் நடுவர்களால் வழங்கப்பட்டிருந்த 4.40 மீற்றர் உயரத்தை முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாகத் தாவிய புவிதரன், அதனைத் தொடர்ந்து 4.60 மீற்றர் உயரத்தையும் 2 ஆவது முயற்சியிலேயே தாவினார்.

Untitled-46-300x200.jpgஅடுத்த இலக்காக வழங்கப்பட்ட 4.70 உயரத்தை தாவுவதற்கான முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய புவிதரன், 3 ஆவது முயற்சியை வெற்றிகரமாகக் கடந்து அசத்தினார்.

இதனையடுத்து புவிதரனுக்கு அடுத்த இலக்காக 4.80 மீற்றர் உயரம் நடுவர்களினால் வழங்கப்பட்டது. எனினும், குறித்த உயரத்தை தாவுவதற்காக அவரால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய இறுதியில் 4.70 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, ஜப்பானின் கிபு நகரில் எதிர்வரும் ஜுன் மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான 12 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

 

 

எனினும், குறித்த போட்டித் தொடரில் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளும் இடம்பெற்றிருந்தாலும், இலங்கையிலிருந்து எந்தவொரு வீரர்களும் அதற்காக அறிவிக்கப்பட்ட அடைவுமட்டங்களை பூர்த்தி செய்து இருக்கவில்லை. இதில் ஆண்களுக்கான அடைவுமட்டமாக 4.90 மீற்றரும், பெண்களுக்கான அடைவுமட்டமாக 3.60 மீற்றரும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட புவிரதனுக்கு இப்போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு 0.2 மீற்றர்களினால் பறிபோனது.

எது எவ்வாறாயினும், கடைசி நேரத்தில் கிடைத்த அறிவிப்புடன், போட்டிகள் நடைபெறுகின்ற தினத்தன்று காலை தனது பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை உடற்கல்வி ஆசியருடன் கொழும்புக்கு வருகை தந்து கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்குபற்றியிருந்த புவிதரன், தேசிய மட்டத்தில் முன்னிலையில் உள்ள வீரர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

எனவே, ஒரு பாடசாலை மாணவனாக கோலூன்றிப் பாய்தலில் நாளுக்கு நாள் திறமைகளை அதிகரித்துக் கொண்டே செல்கின்ற புவிதரன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வாய்ப்பினை கடைசி நேரத்தில் தவறவிட்டாலும், மிக விரைவில் தேசிய சாதனையை முறியடித்து சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமையைப் பெற்றுக்கொடுப்பார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

அனித்தாவுக்கு உபாதை

anitha-2-1-300x200.jpgஇம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்துகொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், காலில் ஏற்பட்ட உபாதையினால் நேற்று நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றவில்லை.

கடந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டிகளில் தனது பாதணி காரணமாக அசௌகரியத்துடன் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் போட்டியிட்ட அனித்தாவால் 3.30 மீற்றர் உயரத்தையே தாவ முடிந்தது.

 

 

எனினும், அதற்கு ஒருசில தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்த அனித்தா, புதிய தேசிய சாதனையொன்றையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சண்முகேஸ்வரனுக்கு முதல் வெற்றி

shanmugeswaram-300x200.jpgஆசிய தகுதிகாண் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஹற்றன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

குறித்த போட்டியை 31 நிமிடங்கள் மற்றும் 16.84 செக்கன்களில் நிறைவு செய்த அவர் இவ்வருடத்துக்கான தனது சிறந்த நேரத்தையும் பதிவு செய்தார்.

ரொசல்ல குயில்வத்த தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான 26 வயது நிரம்பிய சண்முகேஸ்வரன், கடந்த 3 வருடங்களாக தேசிய மட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 4 வருடங்களாக இலங்கை பிரபல மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரான சஜித் ஜயலாலிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற சண்முகேஸ்வரன், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் மற்றும் முப்படை மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தட்டெறிதலில் ஆஷிக் முதலிடம்

Aashiq-discuss-1-300x200.jpgஇலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக், 42.88 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

எனினும், கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், 42.87 மீற்றர் தூரத்தை எறிந்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

இதேநேரம், முதல் கட்டப் போட்டியில் ஆஷிக்குடன் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை பல்கலைக்கழக மெய்வல்லுனர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட பி. ஜயவர்தன 40.01 மீற்றர் தூரத்தை எறிந்து இரண்டாவது இடத்தையும், இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எஸ். நிரோஷன 39.90 மீற்றர் தூரத்தை எறிந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

100 மீற்றரில் அஷ்ரப்புக்கு பின்னடைவு

ashraff-100m-300x200.jpgஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது கட்ட தகுதிகாண் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொஹமட் அஷ்ரப் மற்றும் பாசில் உடையார் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் மொஹமட் அஷ்ரப், அசௌகரியத்துக்கு மத்தியில் ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றி 4 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் குறித்த போட்டியை 10.63 செக்கன்களில் நிறைவு செய்தார். அத்துடன், இவ்வருடத்தில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அஷ்ரபினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 2 ஆவது சிறந்த நேரப் பெறுமதியாகவும் இடம்பிடித்தது.

முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 4 x 100 அஞ்லோட்ட அணிக்கான வீரர்களைத் தெரிவு செய்வதற்கான 100 மீற்றர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், முதல் சுற்றில் போட்டித் தூரத்தை 10.65 செக்கன்களில் நிறைவு செய்து 2 ஆவது இடத்தையும், இறுதி தகுதிகாண் போட்டியில் போட்டித் தூரத்தை 10.62 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், நேற்று நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளின் தகுதிச் சுற்றில் பங்குபற்றியிருந்த அஷ்ரப், போட்டியை 10.72 செக்கன்களில் நிறைவுசெய்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

இதேநேரம், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான பாசில் உடையார், 10.84 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 7 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் கலந்துகாண்ட அவர், போட்டியை 10.73 செக்கன்களில் நிறைவுசெய்து 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு மூன்றாவது இடம்

safrin-triiple-300x200.jpgஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சப்ரின் அஹமட், 16.03 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இது சப்ரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தூரமாகவும் பதிவாகியது.

எனினும், கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், 15.68 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 4 ஆவது இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015 முதல் இப்போட்டித் தொடரில் பங்குபற்றி வருகின்ற சப்ரின், குறித்த வருடத்தில் முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து 2016 இல் முப்பாய்ச்சல் மற்றும் நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியில், 16.29 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சன்ஜய ஜயசிங்க முதலிடத்தையும், 16.28 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த என். கருணாசிங்க இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

http://www.thepapare.com

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்