Jump to content

அம்மாவும் கவிஞர் புதுவையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்.


Recommended Posts


அம்மாவும் போராளிக் கவிஞன் தோழன் புதுவை இரத்தினதுரையும்.
.
எங்கள் வீடு எப்பவும் போராளிகளுக்கு நிழலாக இருந்தது. என் அம்மாவும் அப்பாவும் போராளிகளையும் தங்கள் பிள்ளைகளாகவே அரவணைத்தார்கள். கவிதை ஈடுபாடுள்ள என் பெற்றோர் புதுவை இரத்தினதுரை மீதும் அவரது கவிதைகள்மீதும் பெருமதிப்பு வைத்திருந்தனர். போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்தபோது போராளி நண்பர்கள் பலர் என் அம்மாவைப் போய்பார்த்து நலம் விசாரித்த சேதியை தம்பி பாரதிதாசன் மூலம் அறிந்து நிமதியடைந்தேன். 
எனினும் சக கவிஞன் தோழன் 
புதுவை இரத்தினதுரை இன்னும் அம்மாவைப் போய்ப் பார்க்கவில்லை என்கிற சேதி கவலை தந்தது. 
.
அந்த நாட்க்களில் கொங்கு நாட்டு காட்டாறான கொடுங்கரை ஆற்றுக்கு ஓசை காழிதாசுடன் சென்றிருந்தேன். நிச்சயமாக பரணர், கபிலன்போன்ற மாகவிகளின் கால்கள் இந்த ஆற்றில் நனைத்திருக்குமெனத் தோன்றியது. அந்த சிற்றாறில் கால் நனைத்தபோது சங்க புலவர்களின் மனநிலை எனக்கும் வாய்த்தது. 
.
அந்த நாட்க்களில் என் தோழமைக் கவிஞன் 
புதுவை இரத்தினதுரை நோய்வாய்ப்பட்டிருக்கும் என் அம்மாவைப் போய்ப்பார்க்கவில்லையென்கிற கடுப்பு என் மனசில் நிறைந்திருந்தது. அம்மா கவிதையை அந்த கோபத்தோடுதான் எழுதினேன். கவிஞர் கருணாகரன் ஆசிரியராக பணியாற்றிய விடுதலைப் புலிகளின் உள்சுற்று இலக்கிய சஞ்சிகையான வெளிச்சம் இதழில் 2006ம் ஆண்டு என் கோபக்காரக் கவிதை வெளிவந்தது. அதனால் வன்னியில் பல போராளிகள் வாசித்த கவிதைகளில் என் அம்மா கவிதையும் ஒன்றாகியது.
,

அம்மா
- வ்.ஐ.ச.ஜெயபாலன்
.
போர் நாட்களிலும் கதவடையா நம் 
காட்டுவழி வீட்டின் வனதேவதையே 
வாழிய அம்மா. 
உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து 
அன்றுநான் நாட்டிய விதைகள் 
வானளாவத் தோகை விரித்த 
முன்றிலில் நின்று எனை நினைத்தாயா 
தும்மினேன் அம்மா. 
அன்றி என்னை வடதுருவத்தில் 
மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?
.
அம்மா 
அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் 
நம் முற்றத்து மரங்களில் 
மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? 
தம்பி எழுதினான். 
வலியது அம்மா நம்மண். 
கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள் 
வானில் ஒலித்த போதெலாம் 
உயிர் நடுங்கினையாம். 
நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.
.
இருளர் சிறுமிகள் 
மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர 
நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில் 
கன்னிமாங்கனி வாடையில் வந்த 
கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற 
கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே 
எங்கள் ஆற்றை எங்கள் காட்டை 
உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.
.
என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை 
உன்னை வந்து பார்க்கலையாமே. 
போகட்டும் விடம்மா. 
அவனும் அவனது 
பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல 
உன்னைக் காக்க 
யானையின் மதநீர் உண்டு செழித்த நம் 
காடும் உளதே
.
*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.