Sign in to follow this  
நவீனன்

விராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன?

Recommended Posts

விராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன?

 
 

இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 22-ஆம் தேதி (22.05.2018) கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினருக்கு ஒரு சவாலை முன் வைத்திருந்தார். விளையாட்டுத் துறையில் உள்ள வீரர்-வீராங்கனைகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு ராஜ்யவர்தன் சிங் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, விராட் கோலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் "உங்கள் சவாலை ஏற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, இதுபோன்ற சவாலை விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விராட் கோலியின் பதிவு வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள், "உங்கள் சவாலை ஏற்கிறேன் விராட்" என்று பிரதமர் மோடி பதிலளித்தார்.

கோலிக்கு பதில் சொன்ன பிரதமர்

 

மோடி ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ மக்கள் பிரச்னைகள், சமூக அவலங்கள், மோசடிகள், ஊழல் குற்றசாட்டுகள், மதவாதம் குறித்த புகார்கள் என பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கின. ஆனால், அவை எதற்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை என்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு. விளையாட்டு வீரரின் உடற்பயிற்சி குறித்த சவாலுக்கு பதில் சொல்லும் பிரதமரே, "இந்த 20 கேள்விகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இவற்றுக்கு எப்போது பதில் கூறப்போகிறீர்கள்?"

1. தலைநகர் டெல்லி வீதிகளில் 100 நாட்களுக்கும் மேலாக எலியை வாயில் கவ்விக்கொண்டும், நிர்வாணமாக ஓடியும் கோரிக்கைகளுக்காகப் போராடிய தமிழக விவசாயிகளை ஒருமுறைகூட நேரில் சந்தித்துப் பேசாதது ஏன்?

2. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியதால், மக்கள் தவிப்புக்கு உள்ளாகி, வங்கி வாசலில் கால்கடுக்க நின்றதுடன், இந்தியா முழுவதும் வயதானவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்களே... அவர்களின் குடும்பங்களுக்கு உங்கள் பதில் என்ன?

3. காஷ்மீரில் ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே குரல் கொடுத்தார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?

4. ஒட்டுமொத்த தமிழர்களையும் 'பொறுக்கி' என உங்கள் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சனம் செய்தார். தொடர்ந்து அவரைக் கட்சியில் பாதுகாத்து வருகிறீர்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?

5. 'பெரியார் சிலையை உடைப்பேன்' என்று ட்வீட் செய்கிறார் உங்கள் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. கேட்டால் சமூக வலைதளத்தைப் பராமரிக்கும் 'அட்மின்' பதிவிட்டதாகக் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை நீங்கள் எடுக்காதது ஏன்?

6. மெரினா போராட்டத்தில் தமிழக போலீஸார் அப்பாவி இளைஞர்களை  ஓட, ஓட விரட்டியடித்தார்களே.... அந்த விவகாரம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையே ஏன்?

7. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கும் நிகழ்வு இன்றுவரை தொடர்கிறது. அந்தவகையில் தமிழக மீனவர் பிரச்னை தீர்க்கப்படாமலேயே நீடிக்கிறது. நீங்கள் இலங்கைக்கு பயணம் செய்த பிறகும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லையே... இதற்கு உங்கள் பதில் என்ன?

8. சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்ட போது கலவரம் வெடித்து பல உயிர்கள் மாண்டு போனதே. அப்போது நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை?

9. காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உத்தரவிட்ட பின்னரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்வைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க அம்மாநில அரசை நீங்கள் வலியுறுத்தவில்லையே ஏன்?

10. 'நீட்' தேர்வு விவகாரத்தில் அனிதாவின் மரணத்துக்கும், இந்தாண்டு தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களுக்கு அனுப்பியதற்கும், மாணவ, மாணவிகளை மோசமான முறையில் சோதனை நடத்தப்பட்டதற்கும் உங்களிடம் இருந்து எந்தவொரு கண்டனமும் வரவில்லையே பிரதமரே!

 

 

 

11. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் 100 நாட்களுக்கும் மேலாகப் போராடிய மக்கள் பற்றி நீங்கள் என்றுமே பேசாதது ஏன்?

12. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், தமிழக அரசையும், காவல்துறையையும் ஒரு வார்த்தைகூட கேட்காமல் மெளனம் சாதிப்பது ஏன்?

13. இந்தியாவின் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி சிலர் கொல்லப்பட்டார்களே... அவர்களைக் கொன்றவர்களைப் பற்றி ஒருமுறைகூட பேசவில்லையே ஏன்? 

14. மஹாராஷ்ட்ராவில் ஒரே இரவில் லட்சக்கணக்கில் கூடிய விவசாயிகள், காலில் வெடிப்புடன், தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடினார்களே, அந்த மக்களுக்கு உங்கள் பதில் என்ன?

15 பக்கோடா போடுவதையெல்லாம் வேலைவாய்ப்புப் பட்டியலில் இணைத்து நாடாளுமன்றத்தில் பேசினாரே உங்கள் கட்சித் தலைவர் அமித் ஷா. அவருக்கு உங்கள் பதில் என்ன?

16. கறுப்புப்பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவருவேன் என்று சொல்லி, இதுவரை ஒரு ரூபாயையோ அல்லது ஒருவர் பெயரையோகூட கொண்டு வராமல் இருப்பது ஏன்?

17. 'ஆதார் தகவல்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது' என்ற குற்றச்சாட்டு இருந்துகொண்டே இருக்கிறதே. இந்த சர்ச்சைக்கு இதுவரை பிரதமர் பதிலளிக்காதது ஏன்?

18. பெட்ரோல், டீசல் விலை உங்கள் ஆட்சிக்காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதே. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்கினாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் அதிகரிக்கிறதே. இதற்கு உங்கள் பதில் என்ன?

19. 'பொருளாதாரம் வளர்ந்துவிட்டது' என மார்தட்டிக் கொள்ளும் நீங்கள், ஆட்சிக்கு வரும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 ஆக இருந்தது. இப்போது 67 ரூபாயாக  சரிந்துள்ளதே. இதற்கு உங்கள் பதில் என்ன?

20. நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட பத்திரிக்கையாளர்களைச் சந்திக்காத பிரதமர் என்ற சாதனையை வைத்திருக்கிறீர்களே. ஏன் பதில் சொல்லத் தயங்குகிறீர்கள் பாரத பிரதமரே? 

 

ஆனால், இதுபோன்ற பிரச்னைகளையெல்லாம் விட்டுவிட்டு விராட் கோலியின் பதிவுக்கு மட்டும் 24 மணி நேரத்துக்குள் பதில் சொல்கிறீர்கள் என்றால் நீங்கள் யாருக்கான பிரதமர்? பதில் வராது என்று தெரிந்தும் கேட்கிறோம். பதில் சொல்வீர்களா?

https://www.vikatan.com/news/india/125850-20-questions-to-indian-prime-minister-modi.html

தொடர்பான செய்தி

 

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this