Jump to content

புலம்பெயர் அமைப்புகள் இயக்கப்படுவது யாரால்!! – கதிர்


Recommended Posts

புலம்பெயர் அமைப்புகள் இயக்கப்படுவது யாரால்!! – கதிர்

http://www.kaakam.com/?p=1136

kaakam-article-450x381.jpg

இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் யாரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற ஐயுறவை ஏற்கனவே காகத்தில் பதிவிட்டிருக்கிறோம். இன்று தமிழீழ மண்ணில் நிகழும் பல வழமைக்கு மாறான மிகக் கேவலமான பல செயற்பாடுகளின் பின்னணியில் சில புலம்பெயர் அமைப்புகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமையால் மீளவும் அதுபற்றி பேச வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

“தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்” மிக வலுவான அரணாக உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் இன்று “தமிழீழம் கேட்காத” அரசியல் கட்சிகளின் கொடி தூக்கிகளாக மாறியிருக்கிறார்கள் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார்கள். புலிகள் அமைப்பு இயங்கு நிலையில் இருந்த போது எடுக்கப்பட்ட முடிவுகள் போலன்றி இன்று புலம்பெயர் அமைப்புகள் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்து அது ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் முடிவுகளாக காட்ட முயலுகின்றனர். குறிப்பாக கசேந்திரகுமாருக்கு சிறிலங்கா அரசியலின் தேர்தலில் ஆதரவளிப்பதென புலம்பெயர் அமைப்புகள் எடுத்த முடிவுக்கு எதிர்மறையான முடிவுகளோடுதான் தென்தமிழீழ மக்கள், வன்னி மக்கள் மற்றும் பெரும்பாலான யாழ் மாவட்ட உழைக்கும் மக்களும் காணப்படுகிறார்கள். அதாவது ஒட்டு மொத்த தமிழீழ மக்களையும் பிரதிநிதிப்படுத்தக் கூடிய வகையில் புலம்பெயர் அமைப்புகளின் தலைமை அமைப்பு இல்லாத காரணத்தினால், இன்று இந்தியா மற்றும் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் நிகழ்ச்சி நிரலுக்கேற்றாற்போல் செயற்படும் நிலையை புலம்பெயர் அமைப்புகள் அடைந்திருக்கின்றன.

புலம்பெயர் அமைப்புகளில் தென்தமிழீழ, வன்னி பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவர்களும் உள்வாங்கப்பட்டு ஒரு தலைமைச் செயற்குழு நிறுவப்பட்டு அதனூடாக முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும். விக்கினேசுவரன் என்ற இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பை தமிழழினத்தின் தலைவன் போல் காட்டும் வேலையில் இறங்கி இறுதியில் “புலிக்கொடி ஏற்ற மாட்டோம் என்று உறுதியளித்து” விக்கினேசுவரனை லண்டனில் தமது ஒரு கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் “லண்டன் கிளை”. அது போக பல புலம்பெயர் அமைப்புகள் இந்தியாவுடன் “நெருக்கமான உறவை” பேண வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். இப்படியான தமிழீழ மக்களுக்கு இரண்டகம் செய்யக் கூடிய முடிவுகளை குறிப்பிட்ட “ஒரு சிலர்” மாத்திரமே எடுத்துவிட்டு அதை தமிழீழ மக்களின் முடிவுகளாக காட்ட நினைப்பது எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மேலும் சிக்கலான நிலைக்கு தள்ளிவிடுவதற்கான உத்தியே.

தங்களால் செய்ய முடியாமல் போனதை எப்படி புலம்பெயர் அமைப்புகளை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள் தமிழீழ மண்ணில் செய்து முடித்தனர் என்பதை இந்த பத்தியை வாசித்து முடிக்கும் போது விளங்கிக் கொள்வீர்கள்.

image_1520989715-06f09a4d49-490x315.jpgஇறுதிவரை களத்தில் நின்று போராடி தலைமையின் கட்டளைக்கு இணங்க சரணடைந்து (சரணடையும் போது தங்கள் குடும்பங்கள் எங்கு இருக்கின்றன என்றே தெரிந்திருக்காத ஏராளமான தென் தமிழீழ, வன்னி மற்றும் யாழ்க்குடாநாடு பகுதிகளைச் போராளிகள் தங்களது குடும்பங்களை விட்டுப் பிரிந்து தமிழீழ விடுதலை என்ற நோக்கத்திற்காக மட்டுமே சுடுகலன் தூக்கி மறவழியில் போராடினார்கள்), சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் வதை முகாம்களில் சித்திரவதைகளுக்குள்ளாகி (உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்) இன்று வெளியில் வந்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில் பலர் இருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைக்காக தங்கள் வாழ்வைத் தொலைத்து போராடியவர்களில் பலர் பகைவரின் பண்ணைகளில் அடிமைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் அன்றாட வாழ்வையே கொண்டு நடத்த முடியாத நிலையில் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ தொய்வடைந்திருக்கிறார்கள். ஒரு சிலர்தான் என்ன நடந்தாலும் பருவாயில்லை மக்களுடன் இணைந்து அரசியல் பணியை செய்யும் முடிவை எடுத்திருக்கிறார்கள். சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் சரியான எண்ணிக்கையை வெளியுலகிற்கு காட்டாத அரசு இந்திய மற்றும் சில வல்லாதிக்க அரசுகளின் ஆணைக்கிணங்க கண்துடைப்பிற்காக சில ஆயிரம் போராளிகளை சித்திரவதை (உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்) செய்து விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட போராளிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ மக்களின் மனங்களில் ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக ஊடக மட்டத்தில் பெரும் வதந்திகளை கிழப்பிவிட்டது சிறிலங்கா புலனாய்வுத்துறை . சரணடைந்து விடுவிக்கப்பட்டவர்களை இரண்டகர்களாக்கி (துரோகிகளாக்கி) முடக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சரணடைந்த போராளிகளை சமூகத்தில் ஓரங்கட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஆளணி ரீதியில் முழுமையாக பங்கெடுத்திருந்த வன்னி மற்றும் பெரியளவு போராட்டப் பங்களிப்பு விகிதத்தைக் கொடுத்த தென்தமிழீழப் பகுதிகளில் சரணடைந்த போராளிகளை சமூகத்தில் ஓரம்கட்டும் நடவடிக்கை தோல்வியடைந்தது. காரணம் வன்னி மற்றும் தென்தமிழீழப் பகுதிகளில் மிகப் பெருமளவிலான குடும்பங்கள் நேரடியாக போராட்டத்தில் பங்களிப்புச் செய்திருந்தன. அவர்களும் போராளிகளாக வாழ்ந்திருக்கிறார்கள். மாவீரர்களின் ஈகங்களையும் அவர்கள் சிந்திய குருதியையும் கண்கூடக் கண்டிருக்கிறார்கள். அதனால் சிங்களத்தின் “இரண்டகர் (துரோகி)” ஆக்கும் திட்டம் வன்னி மற்றும் தென்தமிழீழப் பகுதிகளில் எடுபடவில்லை.  

சமூகத்தால் ஐயுறவோடு பார்க்கப்படுவதை உளவியல் ரீதியாக தாங்கிக் கொள்ள முடியாத பல பிறமாவட்ட போராளிகள் கூட தங்கள் குடும்பங்களை மீண்டும் பிரிந்து வன்னியில் நிரந்தரமாக குடியேறியிருக்கிறார்கள். சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகள் விடுவிக்கப்பட்ட போராளிகளை “இரண்டகர்கள் (துரோகிகள்)” என ஓரம்கட்டும் வேலையை  சில ஊடகங்களினூடாக செய்ய முயற்சி செய்து வன்னி மற்றும் தென்தமிழீழப் பகுதிகளில் எடுபடாமல் போக அந்த வேலையை புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளினூடாக முயற்சி செய்து குறிப்பிட்ட அளவு வெற்றிகண்டிருக்கிறது.

32978802_532615303806829_190874085569540இன்று அரசியல் காளான்களாக முழைத்திருக்கும் சிலர் அடிக்கடி “இரண்டகர் (துரோகி)” என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் “இரண்டகர் (துரோகி)” என்பதன் பொருள் சரியாகத் தெரியவேண்டும். விடுதலைப் புலிகள் “தேசத் துரோகி”களுக்கு தண்டனை வழங்கினார்கள். முதலில் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்ட தண்டனைகளுக்கான குற்றங்கள் என்ன என்பதையும் விடுதலைப்புலிகள் “தேசத் துரோகம்” என்று வரையறை செய்தது எது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழ மக்கள் தமது உயிரை ஈகம்செய்து “தமிழீழ” விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் போது, “தமிழீழ விடுதலையை தடுக்கும் நோக்கில்” இராணுவ மற்றும் அரசியல் ரீதியில் “தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பகைவர்க்குக் காட்டிக் கொடுத்தல்” அல்லது “ “தமிழீழ விடுதலையின் சாத்தியப்பாட்டை இல்லாது செய்யும் நோக்கில் பகையின் கூலி ஆளாக  செயற்படல்” இரண்டகமாகக் கருதப்பட்டது. அதாவது தமிழீழ விடுதலைக்கு எதிராகச் செயற்படுவது தான் தேசச் துரோகத்தின் அடிப்படை மூலக்கூறு. ஆனால் இன்று “தமிழீழம் கேட்காத” கசேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியலை விமர்சிப்பவர்களும், “தமிழீழம் கேட்காத” விக்கினேசுவரனின் அரசியலை விமர்சிப்பவர்களும் மிகச் சாதாரணமாக “இரண்டகர்கள்”(துரோகிகள்) என்று வரையறை செய்து அதைப் பரப்பும்படி ஈழத்தில் இருக்கக் கூடிய இளைஞர்களை தூண்டிவிடுவதும் தூண்டப்பட்டவர்களுக்காக பொருண்மிய ரீதியிலான கவனிப்புகளையும் அவர்களுக்கான  ஊடக ஆதரவு தளத்தையும் திறந்து விடுபவர்கள் புலம்பெயர் அமைப்புக்களே.

“குடும்பப்பிரச்சினையால் தான் போராளிகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார்கள்” என்று கசேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா வில் வைத்து தெரிவித்ததற்கு “விளக்க உரையை” யாழ் ஊடக மையத்தில் செய்த செல்வராசா கசேந்திரன் அரசியலில் ஈடுபடும் முன்னாள் போராளிகளை கடுமையாக சாடியிருந்தார். கசேந்திரகுமாரை நியாயப்படுத்துவதற்காக மிக மோசமாக விளக்க உரையை செல்வராசா கசேந்திரன் வழங்கியிருந்தாலும், இடையில் அவர் சொன்ன “உண்மையில் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களோ தெரியாது” என்ற சொற் பயன்பாடு ஆழமாக நோக்கப்பட ணே்டியது. 

சிங்களத்தின் சிறையில் அல்லது முகாம்களில் இருந்து வந்த போராளிகள் ஐயுறவுடன் பார்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பொருட்பட அல்லது சிங்களத்தின் முகாம்களில் இருந்து வந்தவர்கள் முடங்கிக் கிடக்கப்பட வேண்டியவர்களே தவிர தமிழ் மக்களுக்கான அரசியல் செய்யக் கூடாது என்ற பொருளில் சொல்லப்பட்டிருப்பதானது இதற்கு பின்னால் யார் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஐயுறவை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.  (காலம் வழி சமைத்தால் செல்வராசா கசேந்திரன் மற்றும் கசேந்திரகுமாரை மக்கள் முன்னிலையில் இருத்தி 2009 காலப்பகுதிகளில் நடைபெற்ற “துரோக” நிகழ்வுகள் குறித்து சில கேள்விகளை காகம் கேட்கும்)

*******

தமிழீழ விடுதலைப் போராட்டமானது வீரியமிக்க முறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்பட வேண்டுமெனில், புலம் பெயர் அமைப்புகளின் நிருவாக கட்டமைப்பு புனரமைப்புச் செய்யப்படல் வேண்டும். தமிழீழ தலைநகர், தமிழீழ இதய பூமி என புலிகளால் மிக உன்னதமான நிலையில் வைத்து கட்டமைப்புகளை கட்டியெழுப்பியது போல், விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை குழுக்களை கட்டியமைத்தது போல் விடுதலைப்புலிகள் நிருவாக அலகுகளை கட்டியமைத்தது போல் புலம்பெயர் அமைப்புகளும் ஒட்டுமொத்த தமிழீழத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் சீரமைப்புச் செய்யப்படல் வேண்டும்.

நீண்டகால தொலைநோக்கற்று, சரியான புலனாய்வுத் தகவல்களற்று, ஆய்வு செய்யப்படாத முடிகளை வைத்துக் கொண்டு சிறிலங்காவின் அரசியல் கட்சிகளுக்கு வால்பிடிக்கும் வேலைகளையும் டெல்லியுடன் உறவாடும் வேலைகளையும் புலம்பெயர் அமைப்புகள் நிறுத்த வேண்டும்.

தமிழீழம் தான் எமது இலட்சியம். அது மட்டுமே இலக்கு. “தமிழீழம் கேட்காத” அல்லது “தமிழீழ விடுதலையை விரும்பாத” எந்த அமைப்புகளோடும் “அரசியல் ரீதியான” உறவை வைத்திருப்பதோ, அப்படிப்பட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகள் மூலம் அரசியல் செய்வதோ தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைக்காக தங்களை ஈகம் செய்த போராளிகளுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த மக்களுக்கும் செய்யும் இரண்டகமாகும்.

5-1-1120x680.jpg“பொருண்மிய நெருக்கடியால்தான் இளையோர் புலிகளுடன் இணைந்தார்கள்” என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப்படுத்திய கசேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை தமிழ்த்தேசிய தலைவராக காட்டிக் கொள்ள முடியுமென்றால்,

“கொழும்பில் இருந்து வன்னிக்குக் குடும்பமாகச் சென்று தந்தையின் மாமனிதர் கௌரவத்தை கசேந்திரகுமார் வாங்கியதையே பெரும் தியாகமாக” கருதும் செல்வராசா கசேந்திரன் தன்னை பெரும் தமிழ்த் தேசியவாதியாக காட்டிக் கொள்ள முடியுமென்றால்,

தமிழர்களின் பண்பாட்டு வழிபாட்டு முறையான ஆடு வெட்டுதலை சிறிலங்காவின் நீதி மன்றத்தினூடு தடைவாங்கிய மணிவண்ணன் தன்னை பெரும் தமிழ்த் தேசிய விரும்பியாக காட்டிக் கொள்ள முடியுமென்றால்,

இராணுவப் பயிற்சி எடுத்து வெளியில் நிற்கும் இளைஞர்களால்தான் வடக்கில் வன்முறைகள் நடக்கின்றன என்று முன்னாள் போராளிகளை குற்றவாளிகள் போல் விமர்சித்த விக்கினேசுவரனை தமிழ்த்தேசிய தலைவராக காட்ட முடியுமென்றால்,

தமிழீழ மக்களாக வாழ்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எல்லா வழிகளிலும் முற்று முழுதான பங்களிப்பை வழங்கிய மலையக அடியைக் கொண்ட தமிழீழ மக்களை, சராசரி தமிழீழ மக்களாக பார்க்காமல் தரம் தாழ்த்திப் பேசித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் களங்கப்படுத்திய சிறிதரன் மாவீரர் நாள் நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்ற முடியுமென்றால்,

போன நூற்றாண்டு தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்த நூற்றாண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்கருவிகளைப் பேசாநிலைக்குக் கொண்டுவரும் வரை முள்ளிவாய்க்கால் வரை சென்று, குண்டு மழைக்குள்ளும் குருதிச் சகதிக்குள்ளும் கந்தக புகைக்குள்ளும்  நின்று போராடிய புலிப் போராளிகளுக்கு, இந்த மக்களுக்கான, இந்த மக்களோடு  நின்று அரசியல் செய்ய எத்தனையோ ஆயிரம் மடங்கு உரிமையிருக்கிறது என்பதை இங்கிருக்கக் கூடிய அரசியல் கட்சிகளும் இந்த கட்சிகளுக்கு வால்ப்பிடிக்கும் புலம்பெயர் அமைப்புகளும் உணர்ந்தேயாக வேண்டும்.

2_4-490x315.jpg

 “தமிழீழ விடுதலையை தங்கள் இலக்காகக் கொண்டிராத” எந்தவொரு அமைப்பும் அரசியல் கட்சிகளும் “இரண்டகர் (துரோகி)” என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அவர்கள் எவரின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார்கள் என்பதை தெளிவாகப் புரிந்துவைத்திருக்க வேண்டும்.

கதிர்

26-05-2018

http://www.kaakam.com/?p=1136

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.