Jump to content

Recommended Posts

தமிழ்நாடு ஆரியநாடே என்பது உண்மையா - குறள் ஆய்வு-2

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

குறள்ஆய்வு-2ம் அத்தியாயத்தின் பேசுபொருள், தமிழ்நாடு ஆரியநாடே என்று ஆரியனான மனு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பதை மேற்கோள் காட்டி, தொல்லியல் அறிஞர் நாகசாமி  உரிமை கொண்டாடுவது எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராய்வதாகும்.

ஆய்வறிஞர் காட்டும் தமிழ் நிலப்பகுப்பு

முனைவர் ந.சுப்ரமண்யன் அவர்கள் 1966ல் எழுதிய "சங்ககால வாழ்வியல்", (அத்தியாயம் 10,பக்கம் 330, பத்தி2,) என்னும் வரலாற்று நூலில் சங்ககாலத் தமிழகத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிக்கின்றார்: "தமிழ்நாட்டைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரிப்பது செயற்கையான இலக்கியப் பாகுபாடு அன்று; ஏனெனில் அத்தகைய நிலப்பாகுபாடு தமிழகத்தில் உண்மையாகவே இருந்தது. அங்கிருந்தவர்கள் ஒன்று வேடர் அல்லது ஆடுமாடு மேய்ப்பவர், அல்லது உழவர், அல்லது மீனவர் அல்லது கள்ளர். அவர்களது தோற்றம், உடை, உணவு, தொழில், பழக்கவழக்கங்கள் முதலியவை இயல்பாகவே வேறுபட்டன."

மானுடவியல் அடிப்படையில் ஆய்வு

ஆய்வறிஞர் சுப்ரமண்யன் ஆய்வு அடிப்படையில், தமிழக நில அமைப்பைக் கருத்தில்கொண்டு, மனிதனின் உடல், உள்ளம் இரண்டும் சார்ந்த  'Anthropology' என்னும் மானுடவியல்  சார்ந்த ஆய்வை மேற்கொண்டு, ஆரியர் தமிழ் மண்ணின் மைந்தர்களா அல்லது வந்தேறிகளா என்பதை ஆராய்ந்தால் மட்டுமே நாகசாமி அவர்களின் கூற்றில் உள்ள உண்மை புலப்படும் என்பது தெளிவு.

முனைவர் நாகசாமியின் ஆரியதேசவாதம்

முனைவர் நாகசாமி அவர்கள் எழுதிய "TIRUKKURAL - An Abridgement of Sastras" என்ற நூலின் 13ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:  "Manu has mentioned the country between the Eastern ocean and the Western ocean was called Arya desa and this  could refer only to Tamil Nadu, Andra and Karnataka (and also Kerala)". இதன் பொருள், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஆரியதேசமாகும். அப்படியானால், தமிழ்நாடு தமிழனின் தேசமன்று என்று பொருள். ஒரு வாதத்துக்காக திரு.நாகசாமி சொல்லுவதை உண்மை என்றே வைத்துக்கொண்டால், பின்வரும் கேள்விகள் எழுகின்றன.

நால்வகை நிலத்திலும் உழைத்து வாழ்ந்தவரா ஆரியர்கள்?

திரு.நாகசாமி அவர்கள் மனுசாத்திர நூலில், கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடைப்பட்ட நாடு ஆரிய தேசம் என்று  கூறுவதாகவும், அக்கூற்றினால் பெறப்படும் உண்மை யாது எனின், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாடுகள் ஆரியதேசம் என்பதாகும் என்று ஆணித்தரமாக தனது வாதத்தை முன் வைக்கின்றார்; மனுவின் காலத்திலேயே ஆரியதேசமாக தமிழ்நாடு இருந்ததென்றால், ஆதியில், தமிழகத்திலுள்ள  ஐவகை நிலங்களிலும் உழைத்து வாழ்ந்தவர்கள் ஆரியர்களே என்று பொருள். அவ்வாறானால், ஆரியர்கள் எவ்வகையான உழைப்பில் உயிர் வாழ்ந்தார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன; குறிப்பாக, தமிழகத்தின் பாலை தவிர்ந்த நால்வகை நிலங்களில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஆதி ஆரியர்களைக் குறித்துப் பின்வரும் கேள்விகள் இயல்பாக எழுகின்றன:

  •    மலையும் மலைசார்ந்த பகுதியுமான குறிஞ்சியில் வாழ்ந்த ஆரியர்கள் மலைக்கு வந்து தேனெடுத்தார்களா? தினைப்புனம் காத்தார்களா? மலை வேடர்களா? வேட்டுவத் தொழிலைச் செய்தார்களா?
  •    காடுகளும், காடுகள் சார்ந்த பகுதியுமான முல்லை நிலங்களில் வாழ்ந்த ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்தார்களா? ஆநிரைகளுக்கு நீரூற்றிப் பால் கறந்தனரா? அவர்தம் பெண்டிர் மத்தினால் ஓசையுடன் தயிரைக் கடைந்து வெண்ணெய் உண்டாக்கினரா?
  •   வயல்களும், வயல் சார்ந்த பகுதிகளான மருதநிலத்தில் ஆரியர்கள் உழவராக உழவுத் தொழிலைச் செய்தார்களா? வயலுக்கு வந்தார்களா? ஏற்றமிறைத்தார்களா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டார்களா? நாற்று நட்டார்களா? களை பறித்தார்களா? அவர்தம் பெண்கள் கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தார்களா?
  •   கடலும், கடல் சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலங்களில் வாழ்ந்திருந்த ஆரியர்கள் மீனவர்களா? கடலோடி மீன்பிடிக்கும் தொழில்களைச் செய்தார்களா?

ஒரு நாட்டின் பூர்வகுடிகள் என்று சொந்தம் கொண்டாடும் இனம், மானுடவியல் (Anthropology)  தத்துவத்தின்படி, ஆதிக்காலம் தொட்டு, அந்நாட்டில் உடலுழைப்புச் செய்து வாழ்ந்தவராக இருத்தல் வேண்டும்  என்பது  உலகோர் அனைவரும் அறிந்த உண்மை.

ஆரியர் உடலுழைப்புச் செய்ததாகத் தொல்காப்பியத்திலும் சான்று இல்லை!

ஆரியருக்குத் தொழில் யாது என்ற வினாவுக்கு விடை தொல்காப்பியத்திலும் காணப்படவில்லை; தொல்காப்பியர் காலத்தில், அந்தணர் என்போர் அறவோர் என்று பொதுவில் கூறப்பட்டுள்ள வழக்கு மட்டுமே இருந்துள்ளது. அத்தகைய அறவோர்க்கு உரியதாகப் பின்வருவனவற்றைக் குறிக்கின்றது தொல்காப்பியம்:

நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய! - தொல்காப்பியம்:பொருளதிகாரம்:மரபியல்:1560

இங்கு, தொல்காப்பியம் குறிப்பிடும் "அந்தணர்" என்னும் சொல் ஆரியர்களைக் குறிக்காமல், பொதுவாகத்  துறவிகளைக் குறித்தது என்பதே உண்மை. ஏனெனில், இல்லறத்தானாக வாழ்ந்து, வைதிகக் சடங்குகளைச் செய்த ஆரியர்கள் முக்கோல்களையோ, கரகத்தையோ பயன்படுத்தியவர்கள் அல்லர். அத்தகைய துறவியர் தமிழர், ஆரியர் என்னும் இரு தரப்பாரும் உள்ளடக்கியோர் என்பது தெளிவு. "அந்தணர்" யார் என்னும் இப்பொருள் குறித்து, அடுத்துவரும் அத்தியாயம்: "அந்தணர் என்போர் ஆரியரா: குறள் ஆய்வு-3"ல் விரிவாக விவாதிக்கலாம்.

உடலுழைப்பு இல்லாத சுகவாழ்வே ஆரியருடையது!

ஆரியர்கள் செய்த ஆறு வகைத் தொழிலாகச் சொல்லும் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல் என்று ஒரு வழக்கு சங்ககாலம் தொட்டு உண்டு. ஓதல் என்பது ஆரிய வேதம் ஓதுவது, ஓதுவித்தல் என்பது ஏனைய ஆரியருக்கு ஓதுவிப்பது, வேட்டல் என்பது ஆரியரே அவர் நலனுக்காக வேள்வி செய்வது, வேட்பித்தல் என்பது, தமிழரிடம் பெரும்பொருள் பெற்றுக்கொண்டு, பொருள் கொடுத்தவர் நலனுக்காக வேள்வி செய்வது, ஏற்றல் என்பது தானமாகப் பெரும்பொருளைத் தமிழரிடமிருந்து பெறுவது (ஒரு வேலையும் செய்யாமல், தமிழர்களை ஏமாற்றித் தானம் வாங்கிக் கேவலமாகப் பிழைப்பதைத்  தொழிலாகக் காட்டும் ஆரியர்கள் எவ்வளவு புத்திசாலிகள்), ஈதல் என்பது ஆரியர் அவர்களின் வைதீகச் சடங்குகள் செய்யும்வேளை, ஏனைய ஆரியருக்குத் தானம் கொடுத்தல் என்பதாகும்.

அண்டிப்பிழைக்கவந்த ஆரியர் நாடே எனதென்கிறார் !

ஆக, வந்தகாலம் தொட்டு, உடலுழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது தமிழரை அண்டிப்பிழைத்த வந்தேறிகளான வடஆரிய ஏமாற்றுக் கூட்டத்தின் தலைமகன் மனு தமிழ்நிலத்தை ஆரிய தேசமென்று கூசாமல் பொய்யுரைத்துள்ளார் என்பதே உண்மை. பொய் சொன்ன மனுவுக்கும், அப்பொய்யுரையையே காசாக்கப் பார்த்த முனைவர் நாகசாமிக்கும் வரலாற்றுரீதியில் தமிழ் மக்கள் தரும் விடை மேற்கண்ட வினாக்களாகத்தான் இருக்கும்.

மானுடவியல் அடிப்படையில் தமிழனே தமிழ் மண்ணுக்கு உரியவன்!

எனவே, தமிழகம் ஆரியதேசம் என்ற மனுவின் கூற்று மானுடவியல் அடிப்படையில்  துளியும் உண்மையற்ற பொய்யுரையாகும்; மனுவை மூலமாகக் காட்டி, தமிழ்மண்ணை ஆரியமண் என்று உரிமை கொண்டாடும் தொல்லியல் அறிஞர் முனைவர்.நாகசாமியின் கூற்று, "என் பாட்டன் விட்டுச்சென்ற டைரிகளில் அமெரிக்கா முழுதும் தமிழ்தேசம் என்று எழுதி வைத்திருக்கிறான்; எனவே அமெரிக்கா தமிழனுக்கே" என்று முழங்கும் அடிப்படையற்ற உரிமை முழக்கத்தை ஒத்தது; நகைப்புக்கிடமானது. "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை ஓட்டியதாம்" என்ற தமிழ் சொலவடை நினைவுக்கு வந்து வயிறு வலிக்கச் சிரித்தேன்! நீங்களும் வாய்விட்டுச் சிரியுங்கள்!!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.