Jump to content

காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே ! - சுப.சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                        காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே !

    பொதுவாக தும்மல் நுரையீரலில் நேர்ந்த சிறிய / பெரிய அசௌகரியத்துக்கான அடையாளமே. எனவே நான் தொடர்ச்சியாய் தும்மும் போது என் ஆச்சி ('பாட்டி'க்கான என் வட்டார வழக்கு; வட்டார வழக்கு அவரவர்க்குரிய பெருமையான அடையாளம்தானே!), அம்மா, அத்தை போன்ற மூத்தோர் நூறு, இருநூறு......என வாழ்த்துவர். அதற்குப் பொருள் 'குறையொன்றுமில்லை. நீ நூறு வருடங்கள் வாழ்வாய்! இருநூறு வருடங்கள் வாழ்வாய்!....' என்பதாம். எனது ஒவ்வாமை காரணமாய் நான் இவர்களிடம் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் ஆயுள் பெற்றுள்ளேன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தும்மல் தொடர்பாக வேறொரு நம்பிக்கையும் உண்டு. அது 'யாரோ உன்னை நினைக்கிறார்' என்பது. அது இலக்கிய மரபாகக் கூட தோன்றியிருக்கலாம். எவ்வாறாயினும் வள்ளுவத்தில் தொடர் தும்மலாய் வரும் ஒரு தும்மல் தொடர் (sneeze sequence) ஈண்டு அதன் இலக்கியச் சுவை கருதி உவந்தினிது நோக்கற்பாலது (!!).

           தலைவன்-தலைவி உறவு மேம்படுதலில் ஊடலின் பங்கினை அல்லது பாங்கினை இலக்கிய அறிமுகம் உடையோர்க்குச் சொல்ல வேண்டுவதில்லை. கற்பியலில் அதிகாரம் புலவி நுணுக்கத்தில் குறட்பாக்கள் எண் 1312,1317,1318 இப்போது நம் ரசனைக்குரியன. பரிமேலழகரின் இவ்வரிசைப்படுத்தல் காட்சியமைப்பில் சரியாக அமைந்திருந்தாலும், இவை தொடர் பாக்களாய் அமைந்திருப்பின் கூடுதல் சிறப்பாமோ எனும் எண்ணம் தவிர்க்க இயலாதது. எனினும் நாம் தொடராய் அமைத்து நாடகத்தை அரங்கேற்றலாமே!

      முதல் காட்சியில் தலைவன் தலைவி ஊடியிருக்க, தலைவி கூற்றாய், "(பொய்யாக) தும்மினார். ஏனெனில் நான் அவரை 'நீடு வாழ்க' என வாழ்த்துவேன்; அதன் மூலமாக நான் முதலில் பேசியவளாவேன்; ஊடலில் நான் தோற்றவளாவேன் என்பதை அறிந்து தும்மினார்". என்னதான் ஊடலாயினும் வாழ்த்தாமல் இருக்க முடியுமா என்ன? தன் தலைவனாயிற்றே! வாழ்த்தினாள். தோற்றாள்.

 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

 நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.

( இருந்தேமா- இருந்தேம் ஆ- இங்கு 'ஆ' அசை; வாழ்கென்பாக்கு அறிந்து- வாழ்க என்பது அறிந்து )

      இரண்டாம் காட்சியில் தலைவன் கூற்றுப்படி, அவன் முதலில் மெய்யாகத்தான் தும்மினானாம். அவள் வாழ்த்தியமை கண்டு "ஆகா! ஊடல் தணிக்க இது நல்ல வழியாய்த் தோன்றுகிறதே!" என்றெண்ணி இரண்டாம் முறை (பொய்யாக) தும்முகிறான். ஆனால் இம்முறை அவள் வாழ்த்தவில்லை. மாறாக "யார் (எவள்) நினைத்ததால் தும்மினீர்?" என்று மேலும் ஊடல் கொண்டாளாம்.

 வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

 யாருள்ளித் தும்மினீர் என்று. 

(வழுத்தினாள் - வாழ்த்தினாள்; யாருள்ளி - யார் உள்ளி - யார் நினைத்து )

        மூன்றாம் காட்சியில் மீண்டும் தலைவன் கூற்று. இப்போது மெய்யாகவே தலைவனுக்குத் தும்மல் ஏற்பட, தும்மினால் அவள்தான் சிணுங்குகிறாளே என்று தும்மலை அடக்க முற்படுகிறான். அம்முயற்சியில் இவன் முகம் அஷ்டகோணலாக, அவளிடம் மாட்டிக் கொள்கிறான். "மனதில் கள்ளமில்லை என்றால் தும்மியிருக்கலாமே? உமது (அந்த மற்றுமொரு) அவள் நினைப்பதை என்னிடம் மறைத்தீரோ? " என்று மென்மேலும் ஊடல் கொண்டாளாம்.

 தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்

 எம்மை மறைத்திரோ என்று.  

( செறுப்ப - அடக்க; நுமருள்ளல் - நுமர் உள்ளல் - உம்மைச் சார்ந்தவள் நினைத்தல்; எம்மை மறைத்திரோ - எம்மிடம் மறைத்தீரோ (உருபு மயக்கம்) )

      இனி வள்ளுவன் சொல்லாமல் விளங்கி நிற்பது:

தும்மியே ஊடல் கொண்டனர். தும்மியே ஊடலை வென்றனர். இருவரும் தோற்றனர். காதலே வென்றது. காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே !

 

                                                                                      சுப.சோமசுந்தரம்

Link to comment
Share on other sites

ஆதலினால் ஜிமிக்கித் தும்மல்
நுமர் உள்ளம் துள்ளல் உள்ளல்
வூட்டுக்காரி நுமதுள்ளங் காணல்
வேணாமே தும்மல் உள்ளல்!

அற்புதம்! ஏனோ கானாப் பாட்டு வந்து விட்டது!

வாழ்க வள்ளுவர்! வாழ்க சோமசுந்தரர்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்மலை அடக்கக் கூடாது, அடக்கவும் முடியாது.... ஆனால் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ இருக்கும் போது சமயோசிதமாக நடக்க வேண்டும்.

உதாரணமாக: தும்மின உடனே "நான்தான் பக்கத்திலேயே இருக்கிறேனே பிறகு எதற்காக நினைத்துத் தொலைக்கிறாய்" என்று கேட்டால் பார்ட்டி நழுவிக் கொண்டு போயிடும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.